Tuesday, June 9, 2020

சோதனையில் சாதனை



சோதனையில் சாதனை

-- கௌதம சன்னா

            கொரோனா காலம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத  அளவிற்கு உலகளாவிய மனித குலத்தின் ஒரு பொது முடக்க நிலையாக அமைந்துவிட்டது சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு.   வல்லரசுகளும் இறுமாப்பைக் கைவிட்டு தங்களின் போர்க்கருவிகள் அனைத்தும்  வைரஸ்களின் முன்  பயனற்றுப் போனதை உணர்ந்த நிலையில், உலகில் அனைவரும்  உலகப்போர் என்ற ஒரு அச்சுறுத்தல் இல்லாமல்,  தாங்களே  தங்களது  உயிருக்குப் பயந்து வீட்டில் பதுங்கிவிட்ட சூழ்நிலை.  ஆனால்  சோதனையிலும் ஒரு  வரமாக,  பேரிடர் காலத்தில்  உலகின் பல்வேறு மூலைகளிலும் இருந்த மக்களைத் தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் ஒருங்கிணைத்தது. இக்காலத்தில் மக்கள் உடல் நலம் பேணவும், மனவளம் காக்கவும் இணையவழிச்  செய்திப்  பகிரல் முறை  கைகொடுத்தது.  தொடர்ந்து  பேரிடர் செய்திகள் படித்துத் துவண்டு போனவரும் உள்ளனர், அவற்றை அளவோடு அறிந்து கொண்டு பேரிடர் காலத்தைப் பயனுள்ள வழியில் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முற்பட்டவரும் உள்ளனர். அத்தகையோரை  ஒருங்கிணைத்து வளர்ச்சி நோக்கி முன்னேறத் திட்டமிட்ட அமைப்புகளில் ஒன்று முனைவர் க. சுபாஷிணியின் தலைமையில் ஜெர்மனியில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டு அமைப்பு.  
            தமிழ் மரபு அறக்கட்டளையின் குறிக்கோளான தமிழ்  மரபு பாதுகாக்கும் செயல்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது கொரோனா பேரிடர் காலம்  எனலாம்.  உலக அளவில் செயலிழந்து இருந்த  பலதுறை  வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து  அவர்களது நெடுநாள் ஆய்வின், பணியின், செயல்பாடுகளின் வழியாக  நாம் பெறக்கூடிய   தமிழரின் கருவூலங்கள் குறித்து  அறியவும்,  ஆவணப்படுத்தவும்,  அவற்றை வளர்ச்சி நோக்கில் அனைவரிடம் கொண்டு செல்லவும்   திட்டமிடப்பட்டது.  தமிழர்களின் வரலாறு, சமூகவியல், அறிவியல், தத்துவம், மானுடவியல்,  சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கல்வியிலும் ஆய்விலும்  ஈடுபட்டுள்ள அறிஞர்கள் ஒருங்கிணைக்கப் பட்டனர்.  இணைய வழித் தொடர்பு சிறந்த முறையில் பயனுக்குக் கொண்டு வரப்பட்டது. அறிஞர்களின் அறிவுக்களஞ்சியங்கள்  ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் உரைகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளையால்  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி.  டாக்டர் க.சுபாஷிணி அவர்களின் தலைமையில் செயல்படும் இக்குழுவின் பல்துறை அறிஞர்கள் இணைந்து செயல்பட்டு பெரும் அறிவுக்கருவூலத்தினை இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். 
            இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் மே மாதம் 31 வரை இரு மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் இடைவிடாது இணைய வழி கருத்தரங்குகளை நிகழ்த்தியது இவ்வமைப்பு. அதன்படி நூறு தலைப்புகளில் அறிஞர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் ஆய்வுரைகளை நிகழ்த்தினார்கள். உரைகள் முடிந்த உடன் விவாதங்கள் நடைபெற்றன. கேள்விகளுக்கு ஆய்வாளர்கள்  பதிலளித்தார்கள். இணையவழி நேரலை உரைத்தொடரில் வழங்கப்பட்ட உரைகள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு,  அவை உடனுக்குடன் யூடியூப் தளத்தில் [https://www.youtube.com/Thfi-Channel]    காணொளிகளாக அனைவருக்கும் எந்நாளும் பயனளிக்கும் வகையில் சேமிக்கப்பட்டுள்ளன.    இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் அறியப்பட்டிருந்த பல ஆய்வாளர்கள் சர்வதேச தளத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தினைப் பெற்றார்கள் என்பது சிறப்புக்குரியதாகும். இந்த நிகழ்ச்சித் தொடரில் உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்தும் அமைப்புகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு தமிழகத்திற்கு ஒரு பண்பாட்டுப் பாலமும்  அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
            அதுமட்டுமன்றி, உலக அருங்காட்சியகங்கள் நாளை முன்னிட்டு,  மே மாதம் 19ம் நாள்   தமிழக அருங்காட்சியகங்கள் வாரமும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியினைத் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.  தமிழகத்தில் உள்ள அனைத்து அருங்காட்சியக இயக்குநர்களும் கலந்து கொள்ளும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்தது. அருங்காட்சியகங்கள் தொடர்பான சிறப்புரைகளும் அந்த வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்வுத் தொடரின் முத்தாய்ப்பாகக் "கடிகை" என்னும் இணையக் கல்விக்கழகமும் தொடங்கப்பட்டது.  இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் பல்வேறு அறிஞர்கள் அதில் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த முன்வந்திருக்கிறார்கள்.
            ஏற்கெனவே தமிழ் மரபு மற்றும் வரலாறு தொடர்பான பல்வேறு ஆய்வுகளிலும், மரபு பாதுகாப்புகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இவ்வமைப்பு இந்தக் கொரானா காலத்தில் இணையத் தொழில்நுட்பத்தைப் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு முன்னோடியாக நிற்கிறது.  இப்படி சோதனைக் காலத்தில் சோர்ந்து போகாமல் அதனைச் சாதனைக் காலமாக மாற்றி தமிழின் பெருமையினை உலகறியச் செய்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் அதன் நிர்வாகிகளும் பாராட்டுக்குரியவர்கள். அது மட்டுமின்றி தமிழகத்திற்கு அவர்கள் முன்மாதிரியினை உருவாக்கியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment