Saturday, June 27, 2020

கடிகை வழங்கிய "சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்" பயிலரங்கம்

கடிகை வழங்கிய "சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்"  பயிலரங்கம்

--முனைவர் தேமொழி



            தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்,  `கடிகை` - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்,   ஜூன் 2020இன்  மூன்றாம் வார இறுதியில் ( ஜூன் 19-21, 2020 ஆகிய நாட்களில் ) ஏற்பாடு செய்திருந்த "சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்" என்ற இணையவழிக் கல்வெட்டுப் பயிலரங்கம் (Webinar) பொது முடக்கக் காலத்தில்  சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்  குறித்து அறிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக உலகத் தமிழர்களுக்கு அமைந்தது. 

பயிலரங்கின் நோக்கம்: 
சோழர்காலக் கல்வெட்டுகள்  குறித்த தொல்லியல் தரவுகளை அறிவது,
சோழர்கால கல்வெட்டுத் தமிழ் எழுத்துகளை அடையாளம் தெரிந்து கொள்வது,
சோழர்காலம் குறித்து அறிய உதவும் முக்கியமான கல்வெட்டுகளையும் அவை தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளையும் அறிந்து கொள்வது, 
சோழர்களுக்குப் புகழ் சேர்த்த சோழர்கால  கோயில்களின் செயல்பாடு, கட்டடக் கலை, ஓவியங்கள் குறித்துத் தெரிந்து கொள்வது,
கோயில் கல்வெட்டுகள் தரும் சோழ மன்னர்கள் குறித்த செய்தி, சோழர் கால அரசியல், வணிகம், சமூக நிலை முதலியவற்றை அறிந்து கொள்வது
எனத் தமிழர் வரலாற்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ள அனைவரும் முறையான கற்றல் என்பது வரலாற்றை அறிந்துகொள்ள மிக அவசியம் என்ற குறிக்கோளில் சோழர் கால தொல்லியல் தடயங்கள் குறித்து அறிந்து கொள்வது.

            நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினர்களான  முனைவர் க. சுபாஷிணி அவர்களின் வழிகாட்டலில், திரு. கதிரவன், தமிழ் மரபு அறக்கட்டளை பயிலரங்கம்  ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு. கிரிஷ், நிகழ்ச்சி தொகுப்பாளர்  ஆகியோர்  பயிலரங்கம் நடந்த நாட்களில் மாணவர்களை வரவேற்றுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.  பயிற்சி செயல்திறன் மதிப்பீட்டைத் திரு. பாலா லெனின் அவர்களும்  நிகழ்ச்சியின் நெறியாள்கையை திரு. பிரபாகரன்  அவர்களும் முன்னின்று சிறப்பாக  நெறிப்படுத்தினர். கருத்தரங்க தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியைத் திரு. மு. விவேகானந்தன்  அவர்களும் மாணவர்களின் பதிவு மற்றும் சான்றிதழ் ஏற்பாடுகளை சிவக. மணிவண்ணன் அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். 


முதல்  நாள் பயிலரங்கம்:
(ஜூன் 19, 2020 - வெள்ளிக்கிழமை) 
            நிகழ்ச்சியின் முதல்நாள் பொது  அறிமுகமாகச் சோழர்களையும், அவர்கள் செயல்பாடுகளையும், சோழர்காலக் கல்வெட்டுகளையும் குறித்த ஒரு  நிகழ்ச்சியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவரும்,  அதன் கடிகை தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநருமான  டாக்டர் க.சுபாஷிணி "சோழர்கள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் அறிமுக உரையாற்றி நிகழ்வைத் துவக்கி வைத்தார்.  அவரைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் டாக்டர். சிவராமகிருஷ்ணன்   சோழர் கால கல்வெட்டுக்களின் பன்முகத் தன்மைகள்  குறித்த சிறப்புரையை ஆற்றினார்.  பங்கேற்பாளர்களின் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடலுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவுற்றது.


இரண்டாம் நாள் பயிலரங்கம்: 
             (ஜூன் 20, 2020 - சனிக்கிழமை)
இரண்டாம் நாள் பயிலரங்கம்  "சோழர்காலத் தமிழ்  கல்வெட்டுப் பயிற்சி" என்ற நோக்குடன் தொல்லியல் அறிஞர் டாக்டர் சு.ராஜவேலு (மேனாள் துறைத் தலைவர், கடல் தொல்பொருள் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், சிறப்புப் பேராசிரியர் , வரலாற்றுத் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்) அவர்களின் உரை, இரு நீண்ட அமர்வுகளாகச் சோழர்கால கல்வெட்டுகள் குறித்து சோழர்கால கல்வெட்டு எழுதத்தின் வரலாற்றில் துவங்கி, தமிழக வரலாறு அறிவதில் அக்கல்வெட்டுகளின் பங்களிப்பு என்று  எண்ணிறைந்த தகவல்களை அள்ளித் தந்தது . பங்கேற்பாளர்களின் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடலுடனும் மற்றும் திரு. பிரபாகரன் சிறப்பான நெறியாள்கையுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவுற்றது.


நிறைவுநாள் பயிலரங்கம்:
(ஜூன் 21 , 2020 - ஞாயிற்றுக் கிழமை)
            நிறைவுநாள் பயிலரங்கம் சோழர்களுக்குப் புகழ் சேர்த்த சோழர்கால  கோயில்களின் செயல்பாடு, கட்டடக் கலை, ஓவியங்கள் குறித்தும்;  கோயில் கல்வெட்டுகள் தரும் சோழ மன்னர்கள் குறித்த செய்தி, சோழர் கால அரசியல், வணிகம், சமூக நிலை முதலியவற்றைக் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் டாக்டர் சு.ராஜவேலு அவர்களால் இரு நீண்ட அமர்வுகள்  கொண்ட உரைகளாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டாக்டர் க.சுபாஷிணி அவர்கள்  பாராட்டி நன்றி கூறும் உரையுடனும், வெற்றிகரமாகப் பயிலரங்கை முடித்த மாணவர்களுக்கு இணையம் வழி எண்ணிமச் சான்றிதழ் வழங்கலுடன் இனிதே நிறைவுற்றது.

 

            நிகழ்ச்சி குறித்துக் குறிப்பிட்ட டாக்டர் சுபாஷிணி, "19ம் தேதி தொடங்கி 21 வரை, 3 நாட்களும் ஒவ்வொரு நாளும் 4லிருந்து 5 மணி நேரங்கள் பொறுமையாகப் பாடத்தைக் கேட்டு பயிலரங்கில் பயின்று கொண்ட மாணவர்களின் ஆர்வம் தமிழ் வரலாற்றை அறிந்து கொள்வதில் உலகத் தமிழர்களுக்கு இருக்கும் உறுதியான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மேலும் பல பயிலரங்கங்களை நிகழ்த்துவதற்கான ஆர்வத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.  உலகத் தமிழர்களின் வரலாற்றுத் தேடலுக்குத் தரமான கல்வியை வழங்கும் முயற்சியில் நிச்சயம் தமிழ் மரபு அறக்கட்டளை பங்களிப்போம்" என்று உறுதியளித்தார்.

            "கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இப்பயிலரங்கம் சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டுகளைப் பற்றிய மிகச் சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கியது. அனுபவக் கல்வியே சிறந்தது என்ற வகையில் ஆய்வாளர் தன்னுடைய ஆராய்ச்சி அனுபவத்தை எங்களுக்கு வழங்கிக் கற்பித்துள்ளார். தங்களின் அயராத உழைப்புக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.  --- நாகை கா. சுகுமாரன் (இயக்குநர், ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை, வள்ளுவர் அறக்கட்டளை, மெல்பேர்ன் ஆஸ்திரேலியா) பங்கேற்பாளரும் பயிலரங்கம் குறித்த தனது மதிப்பீட்டை நல்கினார்.

            தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 'கடிகை' - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில்  முதல் இணையவழி பயிலரங்கம் -'சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்` பயிலரங்கிற்குக் குறைந்த அளவு 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் பயிலரங்கத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டனர். பயிலரங்க வகுப்புகள் இந்திய நேரம்  மாலை 6:30க்குத் தொடங்கி  இரவு 9:30 வரை சொற்பொழிவுகள், கேள்விகள், கலந்துரையாடல்கள்  என்று தொடர்ந்தது.  மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.  உலகெங்கிலுமிருந்தும்  169 மாணவர்கள் பதிந்து பயன்பெற்றனர். இவர்களில் மூன்று செயல் குழு உறுப்பினர்களும்,  பொதுப்பிரிவில் 96 ஆர்வலர்களும், மாணவர்கள் பிரிவில் 70 மாணவர்களும் பயிலரங்கில் பங்கு பெற்றனர்.  இதில் 16 கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை இலவச பயிற்சியாகப்  பயிலரங்கை வழங்கியது சிறப்பினும் சிறப்பு. மாணவர்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றி.




Monday, June 15, 2020

தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை பெண்கள் தொடர்பான அச்சம்



  ——   முனைவர் ஜ.பிரேமலதா


            ஒன்றின் மீதான பற்றே அச்சத்திற்குக் காரணமாக இருக்கிறது. இயல்பான வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற அச்சம் தான், ஆதிகால மனிதனிடம் இயற்கை, விலங்கு போன்றவற்றை வணங்குவதற்குக் காரணமாக இருந்தது. பாதுகாப்பான வாழ்க்கை பற்றிய சிந்தனையே இன்றைய கண்டுபிடிப்புகளுக்குக் காரணம். 

            ஆதிகால மனிதன் வேட்டையாடி வாழ்க்கை நடத்திய காலத்தில், பெண்ணும் வேட்டையாடி வாழ்ந்து வந்தாள். அவளுக்கான மக்கட்பேறு அவளுக்கு வேட்டையாடுதலில் தடையாக இல்லை. மாறாக அவள் குழுவாக வாழ்வதற்கு உறுதுணையாக இருந்தது. தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வதிலும், தலைமைப் பண்பைப் பெற்றிருந்தாள். எனவே அக்காலச் சமுதாயம் தாயாண்மைச் சமூகமாக விளங்கியது.பின் வேட்டையாடும் விலங்குகளை வளர்த்து அதைப் பாதுகாத்து உணவு தேவையை ஈடு செய்யக் கற்றுக் கொண்டார்கள். விலங்குகளுக்காகவும், தம் குழுவுக்காகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டது அச்சமுதாயம். வேட்டையாடல், உணவு உற்பத்தி இரண்டிலும் இருபாலரும் சம அளவில் ஈடுபட்டார்கள். பின் ஆண் வேட்டையாடலிலும், பெண் உணவு உற்பத்தியிலும் ஈடுபட்ட நிலையில் வளப்படுத்தப்பட்ட நிலமும், பாதுகாக்கப்பட்ட விலங்குகளும் தனி உடைமையாக்கப்பட வேண்டிய சூழலில் பெண் மக்கட் பேற்றின் பொருட்டும் வளர்க்கும் பொருட்டும் வேட்டையாடலில் ஈடுபடாமல், உணவு உற்பத்தியில் மட்டும் ஈடுபட்டாள்.
            தனி உடைமைச் சமுதாயத்தில் பெண்ணும் உடைமைப் பொருளாக்கப்பட்டு ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அவன் உடைமைப் பொருள்கள் சென்று சேர்ந்தன. இதனால் திருமண முறை தோற்றம் பெற்று, கற்பு நெறி வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஆண் கற்பு நெறி  உடைமை ஆதிக்கத்தின் காரணமாகப் பின்பற்றவில்லை.உடைமையும், ஆதிக்கமும் ஆண் தரப்பிலிருந்தாலும், மக்கட் பேறின் எதிர்காலம் கருதியும் பெண் கற்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டாள். வேட்டையாடலினால் ஏற்படும் உயிர் இழப்பும், பாதுகாப்பற்ற நிலையும் அவளை உடைமை சமூகத்திற்குள் தள்ளி முடக்கியது.அச்சமின்றி வேட்டையாடிய காலத்தில் அவள் போர்த் தெய்வமாக விளங்கினாள். குடும்ப அமைப்பும், நில உடைமைச் சமுதாய வாழ்வும் நிலைபெற்ற நிலையில் அவளிடமிருந்த தலைமைத்துவமும், குழு வாழ்வும் பறிக்கப்பட்டது.

கற்புக் கோட்பாடு:
            தாய வாழ்வு முறையிலிருந்து மாறிய தந்தை மைய சமூகத்தில், அவள் தன் பேராற்றலை உணர முடியாத வகையில் கற்புக் கோட்பாடு அவள் மீது வலுவாகத் திணிக்கப்பட்டது. மீண்டும் அச்சமற்ற நிலையைப் பெறாமலிருக்கும் பொருட்டு, பல கருத்தாக்கங்கள் அவள் மீது திணிக்கப்பட்டன. தாயாண்மைச் சமூகம் ஆதி குடிகளுடையதாகவும், தந்தை மைய சமூகம் நடப்பியலான சமூகமாகவும் மாற்றம் பெறத் தொடங்கிய கால கட்டத்தை மகாபாரதத்தில் பார்க்கலாம். சத்தியவதி மற்றும் திரௌபதி போன்றவர்கள் தாயாண்மைச் சமூகத்தின் எச்சங்கள். உடைமைச் சமூகம், இனக்குழு சமூகமாகவும், பின் அரசாகவும், பேரரசாகவும் உருமாற்றம் பெறத் தொடங்கிய நிலையில் பெண்ணின் நிலை இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆண் பிறப்பு உயர்வாகவும், பெண் பிறப்பு இழிவாகவும் பார்க்கப்பட்டது. பெண் என்பவள் உடைமைப் பொருளாகவும், போகப் பொருளாகவும் மாற்றப்பட்டாள்.

            போர்த் தெய்வமாக, வேட்டையாடியவளாக, தலைமைப் பண்பு மிக்கவளாக விளங்கிய பெண் வீட்டிற்குள் முடக்கப்பட்டாள். அவளைச் சுற்றி ‘பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்பது போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து மீளாமல் வாழப் பழக்கப்படுத்தப்பட்டாள். எனவே, கட்டுப்பாடுகளும், அச்சுறுத்தல்களும் அவளைச் சிந்தனையற்றவளாக மாற்றின. இதிலிருந்து மீள நினைத்த பெண்கள் ஔவையாரைப் போல வெகு சிலரே. ஒளவையும் ஆண்மையச் சமூகம் கட்டமைத்த வட்டத்திற்குள்ளாகவே இருந்து தனக்கான வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டார். ஆண் மைய சமூகத்தை எங்கும் எதிர்க்கவில்லை.

            தமிழில் முதலில் கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம். இத்தொல்காப்பியம் ஆண் மைய சமூகம் நன்கு வேரூன்றி பேரரசுகள் மக்களை தங்கள் அதிகாரத்திற்கேற்ப பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் எழுதப்பட்ட நூல்.  அச்சம்தான் இனக்குழு உருவாகவும், அரசு உருவாகவும், பேரரசு உருவாகவும் காரணமாக இருந்துள்ளது. பேரரசை நிலை நிறுத்திக் கொள்ளவும் அச்சமே உதவியுள்ளது. தொல்காப்பியம் காட்டுகின்ற சமூகத்தில், பெண் என்பவள் எல்லாவற்றிற்கும் அச்சப்பட வேண்டும். ஆண் எதற்கும் அச்சப்படக்கூடாது. 

            ஆண் அச்சப்பட்டால் என்னவாகும்? போர் வீரர்களை உருவாக்க முடியாது. போரில் ஈடுபட முடியாது. நாட்டை காக்க முடியாது. இதனடிப்படையில்;
            "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
            சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே"
            என்ற கடமைகள் கட்டமைக்கப்பட்டன.

            இங்கு சங்க காலத்தில் மக்கட்பேறு உற்பத்திக்கு அடிப்படையாகப் பெண் விளங்கியிருக்கிறாள். போருக்குத் தந்தையை, கணவனை, மகனை அனுப்பும் பெண் போற்றப்பட்டிருக்கிறாள்.
அச்சம் என்பது தேவையா? தேவையற்றதா? அச்சம் ஆக்கத்திற்கும், அச்சமின்மை அழிவிற்கும் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் இவை பெண் வாழ்வில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.“வள்ளுவர் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்“ என்கிறார். எதற்கு அஞ்ச வேண்டும், எதற்கு அஞ்சக்கூடாது என்பதில் சமூகம் ஆணுக்கு வேறு மாதிரியாகவும், பெண்ணுக்கு வேறு மாதிரியாகவும் அச்சத்தைக் கட்டமைப்பு செய்துள்ளது.
            "பெண் எல்லாவற்றிற்கும் அச்சப்பட வேண்டும்"
            "ஆண் எதற்கும் அச்சப்படக் கூடாது"

            தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரை இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில்தான் ஆணுக்கும், பெண்ணுக்குமான கட்டுப்பாடுகள், வளர்ப்பு வேறுபாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 
அச்சம், பே, நாம், உரூம், வெரு, உட்கு எனத் தொல்காப்பியத்தில் அச்சம் குறித்தான பல சொற்கள் பயின்று வருகின்றன.
            1.  இயல்பாகத் தோன்றும் அச்சம் - அச்சம்
            2.  உள்ள நடுக்கத்தை ஏற்படுத்தும் தோற்றம் அல்லது ஓசை உட்கு
            3.  மிரட்சியைத் தரும் தோற்றம் உரு
            4.  பே - மனிதர் அல்லாத தோற்றம்

            என்வகை மெய்ப்பாடுகள் – “அச்சம், அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை எனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே“ (மெய்ப்) என்ற தொல்காப்பியம் குறிப்பிடும், இந்த நான்கு வகை அச்சங்களும் பெண்களுக்குத்தான் ஆண்களுக்குக் கிடையாது.
            1)  ஆரிடை வந்தாய் நீ - கலித்தொகை - ஆண்களின் அச்சமின்மை
            2)  குக்கூ என்றது கோழி - குறுந்தொகை - உட்கு சென்றது 157/1-2 –பெண்ணின் அச்சம்.

தொல் -கற்பியல் – “அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்“
(தலைவனுக்கு அச்ச வருமிடம் இது ஒன்றுதான்.)

நீதி இலக்கியங்கள்:
            தெய்வந்தொழாள் கணவனைத் தொழுதெழும் பெண்ணாக மாற்றப்படுகிறாள்.
            கணவனே கண்கண்ட தெய்வமாக நினைத்து வாழும், பெண் 
            1)  கணவனைப் பிரிந்து விடுவோமோ என அஞ்சுகிறாள். 
            2)  காதலரைச் சுடு உணவு சுடுமோ (களவியல்)
            3)  கண் மை காதலர் முகத்தைக் கருப்பாக்கி விடுமோ என அஞ்சுகிறாள்.
            (தன் நிலை பற்றி எங்கும் அச்சப்படவில்லை)

ஆணுக்கான அச்சம்:
அச்சப்பட வேண்டியது -- 
            1.  தீயவைக் கண்டு
            2.  பகை, பாவம், பழி வரும் என
            3.  கொலை வரும்
            4.  வஞ்சிப்பதற்கு
            (வெருவந்த செய்யாமை (அரசன் அச்சப்படுத்தும் தோற்றமுடையவனாக இருக்கக் கூடாது)

அச்சப்படக் கூடாதது - அஞ்சாமை -- 
            அவை அச்சம் - (729, 726, 727 )
            உயிர் அச்சம் - (244), (50)
            உறுப்பு அச்சம் (585)

காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் - கண்ணகி:
            எந்தச் சூழலிலும் கலங்காத, தெளிவான துணிச்சலான பெண்ணாகக் கண்ணகி விளங்குகிறாள். புகார் காண்டத்தில் தேவந்தி, கண்ணகியிடம் மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ பாசண்ட சாத்தன் என்ற கடவுளை வணங்க வேண்டும் என்று கூறுகிறாள். கண்ணகி ‘பீடன்று’ என மறுத்து விடுகிறாள். கோவலன் மாதவியோடு சேர்ந்து வாழ்ந்து மணிமேகலை எனும் மகளைப் பெற்றிருக்கிறாள். கண்ணகி, அந்தணர் ஓம்பலும், அறவோர்க்களித்தலும், செய்ய இயலவில்லை என வருத்தப்படுகிறாள்.தன் வாழ்க்கை இப்படியே கழிந்து விடுமோ எனக் கண்ணகி அச்சப்பட்டிருந்தாள் அவள் தேவந்தி சொன்னதை நம்பி சாத்தன் வழிபாட்டை மேற்கொண்டிருப்பாள்.   அச்சமே கீழ் மக்களது ஆச்சாரம். அச்சம் இருப்பவர்கள் தான் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றி எதையாவது பற்றிக் கொள்கிறார்கள். கையில் கயிறு கட்டுதல், ஊர் தோறும் தல வழிபாடு மேற்கொள்ளுதல், எந்தக் கடவுளையும் வணங்குவது என்று தன்னை மாற்றிக் கொண்டேயிருக்கிறாள் பெண் . கண்ணகி திடமான அச்சமற்ற பெண்ணாக இருப்பதால் தான் தேவந்தி கூறுவதை மறுத்து விடுகிறாள். கோவலன் யானையை அடக்கிய மாவீரன்தான். பெரும் பொருளிருந்த காலத்தில் பலருக்கு வாரிக் கொடுத்த வள்ளல் தான். ஆனால், பொருளிழந்த நிலையில் அவனுக்குள் ஏற்படுகிற அச்சம் தான் மாதவியைச் சந்தேகப்பட வைத்தது, ஊரை விட்டுச் செல்லக் காரணமாயிற்று. சிலம்பு விற்கச் செல்லும் போது ஒற்றைச் சிலம்பை மட்டும் எடுத்துச் செல்லக் காரணமாயிற்று.

            வணிகம் செய்பவர்களுக்குத் தெரியும், ஒற்றைச் சிலம்பை, ஒற்றை வளையலை, ஒற்றை கம்மலை யாரும் வாங்க மாட்டார்கள். அது திருட்டுப் பொருளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். உடைமையாளர்கள் பெரும்பாலும் இவற்றைத் தனியாக விற்க மாட்டார்கள். அச்சம் கோவலனுக்குள் ஏற்படுத்திய பதட்டத்தினால்தான் மாதவி தவறாகத் தெரிகிறாள். பெற்றோரை, உறவுகளைச் சந்திக்கத் தயங்குகிறான். ஒற்றைச் சிலம்பை விற்கச் செல்கிறான்.

            இதிலிருந்து மாறுபட்ட நிலையில், கண்ணகி தென்படுகிறாள். கணவன் மாதவியின்பால் இருந்த நிலையில் நிலை கலங்காமல், பிற தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாமல் உறுதியாக இருக்கிறாள். புகாரை விட்டு, மதுரையில் வாழ வேண்டிய சூழலிலும், அச்சமற்றவளாக இருக்கிறாள். நம்பி வந்த கணவன் இறந்த நிலையில் உற்றார், உறவு, ஊர், நாடு அனைத்தும் அந்நியமான சூழலிலும் நிலை கலங்காதவளாக தங்களுக்கான நீதி கேட்டு தனியொருவளாகக் களமிறங்குகிறாள்.

            அஞ்சாமல் எந்நிலையிலும் நிலை கலங்காதவளாக இருக்கின்ற காரணத்தினால் தான் அவளால் தெளிவாகச் சிந்திக்க முடிகிறது. ஒரு வணிகனின் மகளாகப் பிறந்து, வணிகக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, ஒரு வணிகனுக்கு மனைவியாக விளங்கும் கண்ணகி, வணிக மரபை அறிந்தவளாக இருக்கிறாள். பாண்டிய நாட்டு அரசியின் காற்சிலம்பில் இருப்பது முத்து பரல்கள் எனத் துல்லியமாகக் கணிக்கிறாள்.

            மன்னனை அச்சமில்லாமல் சந்தித்து நீதி கேட்கிறாள். யாரும் எதிர்பாராத விதத்தில் மன்னன் சிலம்பிலிருப்பது மாணிக்கப் பரல்கள் எனத் தெரிய வருவதற்கு முன்னரே மன்னனை, ‘தேரா மன்னா’ என்கிறாள். அறிவில் தெளிவும் , அச்சமின்மையும் உடையவளாகக் கண்ணகி விளங்குகிறாள். அவளுடைய அச்சமின்மை தான் மன்னனைக் கள்வன் என நிரூபிக்கக் காரணமாயிற்று. அரசாட்சிக் கவிழவும் காரணமாயிற்று. காப்பியம் முழுமையும் கண்ணகி உறுதியான நிலைப்பாட்டினை உடையவளாக விளங்குகிறாள்.

மணிமேகலை:
            மணிமேகலைக் காப்பியத்தில் மாதவி, மணிமேகலை இருவரும் கண்ணகிக்கு நிகரான பாத்திரங்களாகக் காணப்படுகின்றனர்.மாதவி கோவலன் இறந்த பின், சித்ராபதி போல் ஊராரின் அலருக்குப் பயப்படாமல் துறவு மேற்கொள்கிறாள். தன் மகளைக் கண்ணகியின் மகளெனக் கணிகை குலத்திலிருந்து கொண்டே கூறுகிறாள். சித்ராபதிக்கும், அரச குலத்திற்கும் அஞ்சாமல் மணிமேகலையைத் துறவு மேற்கொள்ளச் செய்கிறாள். மணிமேகலை தொடக்கத்தில் குழப்ப நிலையில் இருப்பதால், அவளுக்கு எதைக் கண்டாலும் அச்சம் தோன்றுகிறது. உதயகுமரனின் மீதான ஈர்ப்பு ஒரு புறம், தாய் மாதவியின் துறவு தூண்டல் ஒரு புறம், பாட்டி சித்ராபதியின் சூழ்ச்சி ஒரு புறம் அவளை அலைக் கழிக்கிறது. இந்நிலையில் உறங்கிக் கொண்டிருக்கும் மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்று விடுகிறது. தெய்வத்தின் துணை கொண்டு மணிமேகலை தெளிகிறாள். மணிமேகலா தெய்வம், தீவதிலகை, கந்திற் பாவை என்ற மூன்று பெண் தெய்வங்களும் அவளுடைய பரிணாம வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன.

            நமக்குப் பேராபத்து வரும் காலத்தில் உதவி செய்பவர்களை நாம் தெய்வமாக வணங்குவது இயல்பு. இங்குத் தெய்வங்களே உதவி செய்திருக்கின்றன.  அதிலும் மூன்றுமே பெண் தெய்வங்கள்தான் என்பது சிந்தித்தற்குரியது.  அறவண அடிகள் போன்றவர்கள் வழிகாட்டுகிறார்கள். இப்படி வாழலாம் என்று வழிகாட்டுவது வேறு. உதவி செய்வது வேறு. மாதவியும் மணிமேகலையும் அறவண அடிகளைத் தேடிச் சென்றுதான் வழிகாட்டுதலைப் பெறுகிறார்கள். ஆனால் மணிமேகலா தெய்வம், தீவதிலகை, கந்திற்பாவை மூன்றும் தானாகவே முன்வந்து உதவி செய்கின்றன. பெண்கள் தங்கள் அச்சத்திலிருந்து விடுதலை பெற்று, தன்னம்பிக்கையோடு வாழ, பெண்கள் தான் முன் வந்து உதவ வேண்டும் என்பதை இந்த தெய்வங்கள் வழி சாத்தனார் காட்டுகிறார்.  மணிமேகலா தெய்வம் கொடுக்கின்ற மூன்று வரங்கள் கிடைத்தால் மணிமேகலை ஆளுமை பெறுகிறாள்.
            1.  வானில் பறக்கும் மந்திரம் - பயணம்
            2.  உரு மாற்றம் - அச்சம் - ஆளுமை
            3.  பசியற்ற நிலை - பற்றற்ற நிலை
இம்மூன்றையும் எந்த மனிதரும் சிந்தனை மாற்றத்தினால் பெற முடியும் என்பதைத்தான் மணிமேகலை பாத்திரம் நமக்குக் காட்டுகிறது.

சமய இலக்கியங்கள்:
            சமயங்கள் என்ற நிலை வரும் போது, பன்னிரு திருமுறைகளில் சிவனை முன்னிலைப் படுத்த உமையை அஞ்சி நடுங்குபவளாகக் காட்டியிருக்கிறார்கள். சங்க காலத்தில் போர்த் தெய்வமாக விளங்கும் கொற்றவை, பக்தி இலக்கிய காலகட்டத்தில் போரைக் கண்டு நடுங்குபவளாக, சிவனின் போர்க்கோலத்தைக் கண்டு அஞ்சுபவளாகக் காட்டப்பட்டிருக்கின்றாள்.
            வெருவமதயானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள்
விடையினான் (தேவாரம் - சம் - 35285/3)
            வேனல்ஆனை உரித்து உமை அஞ்சவே
கான ஆனை காண்டீர் கடவூரரே - தேவா- (அப்: 1439/3,4)
            மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் (தேவா - சுந்.83/1)

எனும் போது இந்த தேவார அடிகள் கேள்விக்குள்ளாகிறது. "ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சு வித்து அருளுதல் பொருட்டால்" (தேவா சம்.2472/3) 
சிவனாகிய இறைவன் கூட போர்த் தெய்வமாக விளங்கும் கொற்றவையை அஞ்சுவிப்பது எதற்கென்றால், பின் அவளுக்கு அருளைத்தந்து, தான் அவளினும் மேம்பட்டவன் என்பதைக் காட்டவே என்று இந்த வரிகள் கூறுகின்றன.  

            ஆண்கள் தங்களின் ஆளுமையை, தெய்வக் கதைகளின் (புராணம்) வழி கட்டமைத்துக் கொள்ளும் நிலையை இங்கு பார்க்க முடிகிறது. காரைக்காலம்மையார் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அச்சம் தரும் சுடுகாட்டை தன் வாழிடமாகத் தேர்ந்து கொள்கிறார். பேய் போலத் தோற்றம் தரும் சுடுகாட்டில் வசிக்கும் மக்களோடு தானும் பேய்க்கோலம் கொண்டு வாழப் பழகுகிறார். பெண்களை அவர்களின் ஆளுமை நிலையில் அப்படியே ஏற்றுக் கொள்ளாத மக்கள் வாழும் நாட்டை விடச் சுடுகாடே மேலானது என்ற அவருடைய தெளிவு அவருடைய அச்சமற்ற தன்மையினாலே தான் நிகழ்ந்துள்ளது.

            ஆண்டாள், விஷ்ணு சித்தரின் வளர்ப்பு மகள். தொல்காப்பியர் காலத்திலேயே வேரூன்றி விட்ட வருணாசிரம, சாதி நிலைப்பாடுகள் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளின் காலத்தில் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கும் என நினைத்துப் பார்த்தால், ஆண்டாளின் நிலை புரிந்து விடும்.  அறிவும், ஆற்றலும், ஆளுமையும் உடைய பெண்களிடம் அச்சமென்பது இருக்காது. இப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் அச்சத்தோடு பார்த்து மிரளும் நிலையில், வருணாசிரம, சாதிப் பாகுபாடும் சேர்ந்து கொண்டால் ஒரு பெண்ணின் நிலை என்னவாக இருக்கும் என்பதை ஆண்டாள் வாழ்க்கை காட்டுகிறது. இவையெல்லாம் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கைக்குப் பெரும் தடைக்கற்களாக நிற்கும்போது, மனிதர்களையே வெறுக்கும் நிலைக்கு அப்பெண் தள்ளப்படுகிறாள். "மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்" என்ற ஆண்டாளின் வரிகள் அவள் சூழலைத் தெளிவாக விளக்குகிறது. இச்சமூகத்திற்கு எதிராக அவள் உரம் கொள்கிறாள். துணிந்து நிற்கிறாள். அவளுடைய அச்சமற்ற துணிவு அவளுக்கான பாதையைக் காட்டுகிறது. கண்ணனைக் கனவில் மணக்கிறாள். சாதாரண மானுடர்களிடமிருந்து விலகி, கண்ணனைக் கைப்பிடித்து வாழ்ந்து, மேலான நிலையடைகிறாள்.

            காரைக்காலம்மையார், கண்ணகி, மாதவி ஆளுமையுள்ள, அச்சமற்ற பெண்களைக் கண்டு ஆண்கள் அச்சப்படுகிறார்கள்.

சிற்றிலக்கியம்:
            சிற்றிலக்கிய காலகட்டங்களில் பெண் போகப் பொருளாகவும், ஆளுமையற்றவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். பரணி நூல்கள் தான் போர்த்தெய்வமான கொற்றவையைப் பேய்களின் தெய்வமாக முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், அவள் பேய்களுக்கு உணவு கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததன் காரணமாகப் போற்றப்படுகிறாள்.

முடிவுரை:
            இன்று கொரானா எனும் வைரஸ் உலகை ஆட்டிப் படைக்கும் நிலையில், உலகிலுள்ள ஐந்து பெண் பிரதமர்கள் தான் அதை அச்சமின்றி எதிர்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ள, அச்சப்பட்டு வாழ வேண்டும் என்பதை விடவும், அச்சமின்றி தன்னம்பிக்கையோடு அதை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பெண் மீண்டும் வலிமை பெற இவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


தொடர்பு:
முனைவர் ஜ.பிரேமலதா
தமிழ் இணைப் பேராசிரியர், 
அரசு கலைக்கல்லூரி (த), சேலம் -7
மின்னஞ்சல்: piyupremsurya90@gmail.com 
தொலைபேசி: 99488417411
வலைத்தளம்:  http://vjpremalatha.blogspot.in



Tuesday, June 9, 2020

சோதனையில் சாதனை



சோதனையில் சாதனை

-- கௌதம சன்னா

            கொரோனா காலம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத  அளவிற்கு உலகளாவிய மனித குலத்தின் ஒரு பொது முடக்க நிலையாக அமைந்துவிட்டது சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு.   வல்லரசுகளும் இறுமாப்பைக் கைவிட்டு தங்களின் போர்க்கருவிகள் அனைத்தும்  வைரஸ்களின் முன்  பயனற்றுப் போனதை உணர்ந்த நிலையில், உலகில் அனைவரும்  உலகப்போர் என்ற ஒரு அச்சுறுத்தல் இல்லாமல்,  தாங்களே  தங்களது  உயிருக்குப் பயந்து வீட்டில் பதுங்கிவிட்ட சூழ்நிலை.  ஆனால்  சோதனையிலும் ஒரு  வரமாக,  பேரிடர் காலத்தில்  உலகின் பல்வேறு மூலைகளிலும் இருந்த மக்களைத் தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் ஒருங்கிணைத்தது. இக்காலத்தில் மக்கள் உடல் நலம் பேணவும், மனவளம் காக்கவும் இணையவழிச்  செய்திப்  பகிரல் முறை  கைகொடுத்தது.  தொடர்ந்து  பேரிடர் செய்திகள் படித்துத் துவண்டு போனவரும் உள்ளனர், அவற்றை அளவோடு அறிந்து கொண்டு பேரிடர் காலத்தைப் பயனுள்ள வழியில் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முற்பட்டவரும் உள்ளனர். அத்தகையோரை  ஒருங்கிணைத்து வளர்ச்சி நோக்கி முன்னேறத் திட்டமிட்ட அமைப்புகளில் ஒன்று முனைவர் க. சுபாஷிணியின் தலைமையில் ஜெர்மனியில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டு அமைப்பு.  
            தமிழ் மரபு அறக்கட்டளையின் குறிக்கோளான தமிழ்  மரபு பாதுகாக்கும் செயல்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது கொரோனா பேரிடர் காலம்  எனலாம்.  உலக அளவில் செயலிழந்து இருந்த  பலதுறை  வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து  அவர்களது நெடுநாள் ஆய்வின், பணியின், செயல்பாடுகளின் வழியாக  நாம் பெறக்கூடிய   தமிழரின் கருவூலங்கள் குறித்து  அறியவும்,  ஆவணப்படுத்தவும்,  அவற்றை வளர்ச்சி நோக்கில் அனைவரிடம் கொண்டு செல்லவும்   திட்டமிடப்பட்டது.  தமிழர்களின் வரலாறு, சமூகவியல், அறிவியல், தத்துவம், மானுடவியல்,  சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கல்வியிலும் ஆய்விலும்  ஈடுபட்டுள்ள அறிஞர்கள் ஒருங்கிணைக்கப் பட்டனர்.  இணைய வழித் தொடர்பு சிறந்த முறையில் பயனுக்குக் கொண்டு வரப்பட்டது. அறிஞர்களின் அறிவுக்களஞ்சியங்கள்  ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் உரைகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளையால்  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி.  டாக்டர் க.சுபாஷிணி அவர்களின் தலைமையில் செயல்படும் இக்குழுவின் பல்துறை அறிஞர்கள் இணைந்து செயல்பட்டு பெரும் அறிவுக்கருவூலத்தினை இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். 
            இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் மே மாதம் 31 வரை இரு மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் இடைவிடாது இணைய வழி கருத்தரங்குகளை நிகழ்த்தியது இவ்வமைப்பு. அதன்படி நூறு தலைப்புகளில் அறிஞர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் ஆய்வுரைகளை நிகழ்த்தினார்கள். உரைகள் முடிந்த உடன் விவாதங்கள் நடைபெற்றன. கேள்விகளுக்கு ஆய்வாளர்கள்  பதிலளித்தார்கள். இணையவழி நேரலை உரைத்தொடரில் வழங்கப்பட்ட உரைகள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு,  அவை உடனுக்குடன் யூடியூப் தளத்தில் [https://www.youtube.com/Thfi-Channel]    காணொளிகளாக அனைவருக்கும் எந்நாளும் பயனளிக்கும் வகையில் சேமிக்கப்பட்டுள்ளன.    இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் அறியப்பட்டிருந்த பல ஆய்வாளர்கள் சர்வதேச தளத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தினைப் பெற்றார்கள் என்பது சிறப்புக்குரியதாகும். இந்த நிகழ்ச்சித் தொடரில் உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்தும் அமைப்புகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு தமிழகத்திற்கு ஒரு பண்பாட்டுப் பாலமும்  அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
            அதுமட்டுமன்றி, உலக அருங்காட்சியகங்கள் நாளை முன்னிட்டு,  மே மாதம் 19ம் நாள்   தமிழக அருங்காட்சியகங்கள் வாரமும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியினைத் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.  தமிழகத்தில் உள்ள அனைத்து அருங்காட்சியக இயக்குநர்களும் கலந்து கொள்ளும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்தது. அருங்காட்சியகங்கள் தொடர்பான சிறப்புரைகளும் அந்த வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்வுத் தொடரின் முத்தாய்ப்பாகக் "கடிகை" என்னும் இணையக் கல்விக்கழகமும் தொடங்கப்பட்டது.  இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் பல்வேறு அறிஞர்கள் அதில் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த முன்வந்திருக்கிறார்கள்.
            ஏற்கெனவே தமிழ் மரபு மற்றும் வரலாறு தொடர்பான பல்வேறு ஆய்வுகளிலும், மரபு பாதுகாப்புகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இவ்வமைப்பு இந்தக் கொரானா காலத்தில் இணையத் தொழில்நுட்பத்தைப் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு முன்னோடியாக நிற்கிறது.  இப்படி சோதனைக் காலத்தில் சோர்ந்து போகாமல் அதனைச் சாதனைக் காலமாக மாற்றி தமிழின் பெருமையினை உலகறியச் செய்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் அதன் நிர்வாகிகளும் பாராட்டுக்குரியவர்கள். அது மட்டுமின்றி தமிழகத்திற்கு அவர்கள் முன்மாதிரியினை உருவாக்கியிருக்கிறார்கள்.