"சொல்லாக்கியன்"
இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி போன்ற பிரிவினைகளால், உலக மக்கள் முரண்பட்டு நிற்கின்றனர். இத்தகைய சமூக முரண்பாடுகள், பெரும்பாலான பொதுமக்களின் அன்றாட வாழ்வை வலிமையாக ஆக்கிரமிக்கின்றன. எனவே, சிறுபான்மையான மக்கள், அரசு அதிகாரங்களைக் கொண்டு, வெளிப்படையாக நிகழ்த்தும் சுயநல பொருளாதார கொள்ளைகளைக்கூட, பெருவாரியான மக்களால் முழுமையாக காணமுடிவதில்லை. ஒருசிலர் கண்டு, கத்திப்பேசினாலும், சமூகச்சந்தைக் கூச்சலில், தெளிவாகக் கேட்க முடிவதில்லை. சமூகம் முழுமையும் தன்னலமே ஆட்சி செய்கின்ற இக்காலத்தில், பொதுநலம்கூட, சந்தேகக் கண்ணாலேயே பார்க்கப்படுகின்றது.
உலகின் பல்வேறு மனித இனங்கள் அனைத்தும், ஒரே மனிதக்குழுவின் பரந்து விரிந்தத் தன்மையின் விளைவுதான் என்றும், பல்வேறு மொழிக்குடும்பங்களும், மொழிகளும், ஒரு தாய்மொழியின் தங்கைகளாகத் தோன்றி, நிலத்தின் சூழல் மற்றும் வாழ்க்கைமுறை வேறுபாடுகளுக்கு இணங்க, திரிந்து மாறுபட்டு வந்துள்ளன என்றும், எல்லா மதங்களும், சாரத்தில், அகநிலையில் அல்லது புறநிலையில், இறைமையை அடைவதைப் பற்றியே கூறுகின்றன என்றும், எந்த ஒரு நிலப்பகுதியிலும், வர்க்கத்திலும், சாதியிலும், மக்கள் பிறப்பதோ, வளர்வதோ, வாழ்வதோ, குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்டிருப்பதோ, அவர்களின் சொந்த விருப்பத்தினால் அல்ல, சூழலும் வழக்கமும்தான் என்று மானிடவியல் மூலம் அறிகின்ற போதிலும் இம்முரண்பாடுகள் தொடர்கின்றன, உச்சக் கட்டமாக, பிற இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி ஆகியனவற்றிற்கு எதிரான வன்முறைக்கும், ஏன், அழித்தொழிப்புக்கும்கூட இட்டுச் செல்கின்றன.
இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் யாவும் தன்னிச்சையாக நிகழ்வன அல்ல. அவ்வமைப்புகளின் தலைமைகள், தங்கள் அடுத்த கட்ட அரசியல் அதிகார இலக்குகளுக்காக, மோதல்களுக்கான கருக்களை உருவாக்கி, வளர்த்து, ஏவிவிடுகின்றன. இம்முரண்பாடுகளில், சாதிய முரண்பாடுகள், தமிழகச் சூழலில், மிகவும் கூர்மையாக உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை, சாரத்தில் தனிப்பட்ட சாதிய அமைப்புகளாக இயங்கி, சாதிய முரண்பாடுகளை உக்கிரப்படுத்துகின்றன. வழக்கம் போல, எல்லா முரண்பாடுகளையும் வளரவிட்டு, பொதுமக்களுக்கு வேடிக்கை காண்பித்துவிட்டு, அதிகார வர்க்கம், தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை, யாரும் கண்டும் காணாதவாறு, முன்னெடுத்துச் செல்கின்றன.
சாதி எங்கு, எப்பொழுது தோன்றியது? அதன் அடிப்படை என்ன? அது எப்படி நிலைபெற்றது? அது உளவியல் தன்னியக்கமாய் தொடர்ந்தது எப்படி? சாதியத்தின் அமைப்பு மற்றும் இயங்கியல் என்ன? அதன் தகவமைப்புகள் எவ்வாறு நிகழ்ந்தன? அதன் இன்றைய நிலை என்ன? இவ்வாறு, சாதியத்தின் முந்தைய வரலாற்றையும் இயக்கத்தையும் அறியாமல், அதை எப்படி எதிர்கொள்வது மற்றும் தீர்ப்பது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.
வரலாறு தானாக உருவாவதில்லை, அது உருவாக்கப்படுகின்றது. ஆக்கமும், ஊக்கமும், இடைவிடாத பல்முனை முயற்சிகளைக் கொண்டே, ஒவ்வொரு வரலாறும் கட்டமைக்கப்படுகின்றது. எதிர்கால வரலாறும், அதற்கு விதிவிலக்கல்ல. சரியான நோக்கமும், திட்டமும், செயல்பாடுகளுமே, புதிய சமுதாய வரலாற்றை நிலையாகவும், உறுதியாகவும் உருவாக்குகின்றன. மீளாய்வும், விமர்சனமும், பொதுநலமும் மாற்றுப் பாதையை நிர்ணயிக்கின்றன. பல்வேறு சாதிய சக்திகளின் இயக்க திசைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளாமல், அவற்றை மாற்றும் முயற்சிகளை உடனடியாகவும் தொடர்ந்தும் பலமுனைகளில் மேற்கொள்ளாமல், சாதிய விடுதலை என்பது சாத்தியமில்லை.
சாதி எங்கு, எப்பொழுது தோன்றியது?
தமிழகம் மற்றும் தமிழர்களின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு, தொல்காப்பியத்தில் இருந்தே துவங்குகின்றது. தொல்காப்பியத்தின் காலம் மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டு. அதற்கு முன்பே, சிலபல நூற்றாண்டுகள், எழுத்தும் படைப்பும் தமிழில், தமிழகத்திலிருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை என்றாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சி, அங்கு வாழ்ந்தவர்களின் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும், அது நகர நாகரிகமாக இருப்பதாலும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஒத்து இருப்பதாலும், அதன் தொன்மை மிகவும் முற்பட்டதாய் இருக்க வேண்டும்.
தொல்காப்பியத்தின் எந்த பகுதியிலும், சாதிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. சமூக உறுப்பினர்களைப் பற்றிக் கூறுகையில்;
1. அந்தணர். அவர்களுக்குரிய பொருட்களைக் கொண்டே, அவர்களின் கடமைகள் என்னவாக இருந்திருக்கும் என்று அறியமுடிகின்றது. தொல்காப்பியம், பொருள் அதிகாரம், மரபியல் நூற்பா:
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய. [615]
அந்தணரின் முதன்மையான கடமை பழம்நூல்களைக் கற்பதும், புது நூல்களை யாப்பதும், சமூகத்தின் பிற அங்கத்தினருக்கு கற்பிப்பதும் ஆகும். அவர்களின் எளிமையான உடைமைகளாக, தண்ணீர் பாத்திரமும், மூன்று கால்களைக் கொண்ட கைதாங்கியும், தரையிலிருந்து சற்று உயரத்தில் அமர்வதற்கு ஏற்ற மணையும்தான்.
2. அரசர். நேர்மையான அரசாட்சி செய்பவர். அரசரும் அந்தணரைப் போன்று, கல்வி கற்று, யாத்து, கற்பிப்பர்.
3. ஊரின் பெயர், தந்தையின் பெயர், இயற்பெயர், செய்யும் தொழிற்கருவியின் பெயரைக் கொண்டு, எவரும் அத்தொழிலுக்குரியவராய் அறியப்படுவர். சான்றாக, வேலூர் சிவனார் மகன் கந்தன் தச்சர், மேலூர் மாரியின் மகன் காரி கருமார், மாங்காடு கண்ணன் மகன் குமரன் கொல்லர் போன்றோர். போர், இவரது கடமை.
4. தலைமைப் பண்பிற்கு ஏற்றவாறும், செய்யும் சேவைகளுக்கு ஏற்றவாறும், பெயரிடப்படுவோர். சான்றாக, தலையாரி, சேர்வை போன்றோர். ஊர்காவல், போர், இவரது கடமை.
5. வைசியன். உணவுப் பண்டங்களை விற்பவர்.
6. வேளாண் மாந்தர். உழுவதும், பிறர்க்கு உணவளிப்பதும் இவர்தம் பணி. தூது செல்வதும், போர் செய்வதும் இவருக்கும் கடமை
7. இழிந்தோர், அதாவது, முற்கூறிய ஆறு அங்கத்தினரின் வழிவந்திருப்பினும், அவரவர்களுக்குரிய கடமைகளை ஆற்றாதவர், சோம்பித் திரிந்தோர் என ஏழு வகைப்படுத்துகின்றார்.
இவ்வகைப்பாட்டில், சாதியக்கூறுகள் ஏதுமில்லை. திறமை மற்றும் பண்புக்கேற்ற தொழில் மற்றும் சேவையும், அதற்கேற்ற அங்கீகாரமும் கிடைப்பதாய் உள்ளது. பணியோ, கடமையோ அற்று, சோம்பித் திரிந்த இழிந்தோர் மட்டும் சமுதாயத்தில் மதிக்கப்படாதவர்களாய் இருந்துள்ளனர்.
தொல்காப்பியம் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல், கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள், தமிழகம் மற்றும் தமிழரின் வரலாறு, இருட்டடிக்கப் பட்டிருந்தது. அதன் பெரும்பகுதியானது, களப்பிரர் காலம் எனப்பட்டது. களப்பிரர் ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் எதுவும் இல்லாதபடி, வேரறுக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கல்வெட்டின் மூலம், அந்த இருண்ட காலத்தின் மீது ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.
பௌத்தர்களும், சமணர்களும் மேலோங்கிய காலம் களப்பிரர் காலம். அதனால்தான், அக்காலத்தில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை அம்மதங்களின் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளன. திருக்குறளும், இருண்ட காலம் எனப்படும் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியதுதான். தமிழைப் பொறுத்து, களப்பிரர் காலம், பொற்காலம். களப்பிரர் காலம், தமிழுக்குப் பொற்காலம் என்றால், தமிழருக்கும் பொற்காலமாகவே இருந்திருக்கும். ஏனெனில், களப்பிரர் காலத்தில் பிரம்மதேய நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் அடிமை வாழ்வே வாழ்ந்துள்ளனர்.
களப்பிரர்கள் யார்? பிரம்மதேய நிலங்களைக் கைக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் எப்படி வலிமை பெற்று இருந்தனர்? கலிங்கப் போரில் வென்றாலும், அழிவின் கொடுமையைக் கண்டு, அசோகன் பௌத்தம் தழுவினான். தன்னுடைய பெரும்படையைக் கலைத்தான். விரிந்து பரந்து பௌத்தத்தை பரப்பச் செய்தான். ஒரு அணி தெற்கு நோக்கி வந்தது போலும். ஏற்கனவே, சங்கமித்திரையும், மகிந்தனும் இலங்கை சென்றிருப்பர். இலங்கைக்கு நெருக்கமான தமிழகமும், பௌத்தத்தின் ஆளுமையில் இருப்பது சிறந்தது என எண்ணி இருக்கலாம்.
ஆனால், வடக்கில் போலவே தெற்கிலும், ஆரியர் தம்மைப் பிராமணர்கள் அல்லது அந்தணர்கள் என அழைத்துக் கொண்டு, குறுநில மன்னர்களை தம்வசப்படுத்தி விட்டு, எளிமையாக வாழ்ந்த திணை நில அந்தணர்களைப் புறந்தள்ளினர். மன்னனின் இல்லற சுகத்திற்காக, போர் வெற்றிக்காக, சுவர்க்கப் பதவிக்காக, யாகம், வேள்வி செய்வதாய் கூறி, தாம் வசதியாய் வாழ, பிறர் உழைப்பில் வாழ, பிரம்மதேய நிலங்களை தானமாய் பெற்றனர். அந்நிலங்களில் உழைத்த மக்கள் சுரண்டப்பட்டனர். கல்வி மறுக்கப்பட்டது. வறுமையில் வாடினர். இதைக்கண்ட முன்னாள் கலிங்கத்துப் படையினர், பின்னாள் பௌத்த துறவிகள், மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க முனைந்தனர். அதன் மூலம் தம் மதக்கொள்கைகளையும் பரப்ப முடியும் என்று முடிவு செய்தனர். வடக்கில், ஏற்கனவே, வைதிக மரபிற்கும் பௌத்தத்திற்கும் பெரிய முரண்பாடுகள் இருந்த வரலாறு உண்டு. எனவே, பிரம்மதேய நிலங்கள் அந்தணரிடம் இருந்து பிடுங்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டன. பௌத்த துறவிகளுக்கு பாதுகாப்பாக மாமன்னன் அசோகன் இருப்பதை அறிந்த பிராமணர்களும், குறுநில மன்னர்களும், அவர்களை எதிர்க்கத் துணியவில்லை.
சுதந்திர உழைப்பு பெருகியது, வளமும் கொழித்தது, வாணிபம் செழித்தது, செல்வம் மிகுந்தது, வாழ்வு இனித்தது, கல்வி பரவலாகியது, உபரியால் கலை, இலக்கியம் பல்கியது. ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின. பௌத்த மடங்களும், சமண மடங்களும் பெருகின. மதங்களின் அரசு கோலோச்சியது. கேட்பாரற்ற எந்த அதிகாரமும் கேடு என்பதால், பௌத்த சமண மடங்கள் சீரழிந்தன. பெரும்பகுதியான மக்கள் உழைப்பை விடுத்து, துறவு மேற்கொண்டு, நோகாமல், சிறு அளவிலான உழைப்பவர்களைச் சார்ந்து வாழ்ந்தனர். சமுதாய உற்பத்தி குறைந்தது, பகிர்வும் அருகியது. துறவு வாழ்வு விதைத்த, விளைத்த சோம்பலால், வறுமையும், ஏழ்மையும், துன்பமும், குற்றங்களும் மிகுந்தன. திருவள்ளுவம் தோன்றியது. குடும்ப வாழ்வின் மூலமே, துறவின் இலக்கை அடையும் வழியைக் காட்டியது. உழைப்பின் அருமையைப் போற்றியது. அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர், வேளாண் மாந்தர் ஆகியோரின் கடமைகளை வரையறுத்தது. அறம் என்பதன் வடிவத்தையும், அன்பெனும் சாரத்தையும், அனைத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தியது. சமூக இணக்கத்திற்கான பண்புகளையும் ஒழுக்கங்களையும், சமூக அங்கத்தினர்களுக்கு முன்மொழிந்தது. சமநிலைப்படுத்திய, ஒரு புதிய, மாதிரி சமுதாய வாழ்வியலை உருவாக்கினார்.
பிரம்மதேயங்களை இழந்த அந்தணர்களோ, வடக்கு அல்லது மேற்கு நோக்கிச் சென்றனர். "உறுமீன் வருமளவு காத்த" அந்தணர், தமிழகத்தின் அகநிலை தமக்குச் சாதகமாய் இருப்பதை அறிந்து, வடக்கு மன்னர்களைக் கொண்டு போர் தொடுத்தனர். பௌத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்தனர். சமணர்களில் சிலர் கழுமரம் ஏறினர். அந்தணர்கள் மீண்டும் அதிகாரம் பெற்றனர், சமூக அரசாக மாறினர். பிரம்மதேயங்களை மீட்டுக் கொண்டனர். நிலமிழந்து எதிர்த்தவரை எல்லாம் சண்டாளர் என்றனர், பள்ளர், பறையர் என முத்திரை குத்தினர். பின்பும் எதிர்த்தவர்களை, சக்கிலியர் என்றனர், அருந்ததியர் என்றனர். மனுவின் சட்டம், எப்படிப்பட்ட சூழலுக்கும் பலபடி நிலைகளைத் தயாராய் வைத்திருந்தது. திணை நிலங்களில், தொழிலாலும், சேவையாலும் பெயரிடப்பட்டவர்கள் எல்லாம், சாதியின் படிநிலையில் பொருத்தப்பட்டனர், சாதிகளாக்கப்பட்டனர். அகமணமுறை சாதியத்தின் கருவாக்கப்பட்டது. அது, சமுதாயத்தைச் சங்கிலித் தொடராய் பிளவுபடுத்தியது. பெண்களின் இயங்கு வெளி, வீட்டோடு சுருங்கியது. இயங்குகின்ற சமுதாயத்தில் எழுகின்ற மீறல்கள், சிக்கல்களால், புதுப்புது விதிகள் இயற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, சாதியம், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் உளவியல் இயக்கமாய் தொடர்ந்தது. நியாயம், நீதி என்பன, ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறாய் உருவாகின. சாதியப் பிரிவுகளின் சமூக முரண்பாடுகள், மக்களின் பெரும்பாலான வாழ்வு நேரத்தையும், சமூக உறவுத் தளங்களையும் ஆக்கிரமித்தன.
சமூகப் படிநிலையின் ஏற்றம் மற்றும் இறக்கம் தந்த அற்ப, மாயையான, கற்பிதம் செய்யப்பட்ட உயர்வு மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையுமே அவர்களை இயக்கப் போதுமான உந்துசக்தியாக இருந்தது, வாழ்வின் இலக்காய் தெரிந்தது. எனவே, சமூகம் முழுமையையும் ஆட்டிப்படைத்த, சுரண்டிய சமூகப் பொருளாதார அரசான அந்தணரை எதிர்த்தோ, அரசியல் பொருளாதார அரசான மன்னனை எதிர்த்தோ எந்த செயல்பாடும் நிகழவில்லை. ஒருசில தலைமுறைகளின் இத்தகைய சாதியம் அடிப்படையிலான வாழ்வியல் இறுகி, எல்லா தலைமுறைகளுக்கும், எல்லா படிநிலைகளுக்கும் அதாவது எல்லா சாதியினருக்கும் தொடர்ச்சியான வாழ்வியலாய் மாறிவிட்டது. இதைத் தாண்டிய சிந்தனையே எழவிடாதவாறு, ஒவ்வொரு மனமும் தன் உள்ளழுத்தத்திற்கு ஆட்படுகின்றது. போதாதென்று, தன் மற்றும் பிற சாதியினரின் சமூக அழுத்தமும் சேர்ந்து, சாதியத்தைத் தன்னிச்சையாக இயக்கி வருகின்றது. அந்தணர்கள் சமூகத்தில் வேறு இடங்களுக்கும், உயரத்திற்கும் பெயர்ந்து விட்டனர். ஆனால், சாதிய வன்கொடுமை, அந்தந்த உள்ளூர் சமுதாயத்தில் உள்ள மேல்சாதி மக்களால், கீழ்சாதியினருக்கு எதிராகத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றது. படிக்காமலிருந்தாலும் பரவாயில்லை, உழைக்காமல் சோம்பித் திரிந்தாலும் பரவாயில்லை, சாதியின் படிநிலையில் மாற்றம் வராதவாறு பார்த்துக் கொள்வதே, வாழ்வின் இலட்சியமாகவும், செயல்பாடாகவும், சில உதிரிகளுக்கு இருக்கின்றது. மரபணுவே மாற்றமாகியது போலும். ஒவ்வொரு சமூக உறுப்பினரும், தான் சமூகப்பார்வையில் சிறுமைப்பட்டுவிடுவோமோ எனப் பயந்து, தயங்கி, வெளிப்படைத் தன்மையின்றி வாழ்கின்றார்.
எப்பொழுதெல்லாம், மக்கள் சாதிப்பிரிவினைகளை மறந்து ஒன்று சேர முயல்கிறார்களோ, அப்பொழுதெல்லாம், செயற்கையான பிரச்சனைகளை உருவாக்கி, வளர்த்து, குழப்பத்தை ஏற்படுத்தி, மோதலை ஏற்படுத்தி, அவ்வொற்றுமை குலைத்துவிடப்பட்டது. இதனால், அரசு அதிகாரம் என்பது மக்களை விட்டு வெகு உயரத்தில் நின்றுகொண்டது. திணைநிலங்களில், மன்னனுக்கும் மக்களுக்குமான உறவு நேரிடையாக, நெருக்கமாக இருந்தது. மக்களே மன்னனைக் கேள்விக்குள்ளாக்கினர். மக்களுக்காக, பாதுகாப்பாக, உதவியாக மன்னன் இருந்தான். சாதிய சமூக வாழ்வில், மன்னன் தூரத்தில், உயரத்தில் நிறுத்தப்பட்டான், மக்களும் அந்நியமாக்கப்பட்டார்கள். மன்னனுக்காக, வரிகளுக்காக, வன்முறைகளைத் தாங்கி மக்கள் இருந்தனர், பல நூற்றாண்டுகளாய்.
பதினேழாம் நூற்றாண்டில் துவங்கிய ஆங்கிலேயர் ஆட்சியில், சாதியம் சற்று தளர்ந்தது. ஆனால், சிறுபான்மையாக இருந்த அவர்களுக்குச் சாதிகளைத் தாண்டிய ஒற்றுமை, அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என எளிதில், விரைவில் அறிந்து கொண்டனர். அவர்கள் நினைத்திருந்தால், விரும்பியிருந்தால், விரைவில் சாதிகளை ஒழித்திருக்கலாம். தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ள, சாதிய அமைப்பை அப்படியே தொடரச் செய்தனர். ஆனால், கல்வி பரவலாக்கப்பட்டது. அது, ஒரு சிலருக்கு விழிப்பைத் தந்தது. சமூக நீதிக்கான போராட்டம் தொடங்கியது. சாதிய வாழ்வில், கூனிக் குறுகிக் குமைந்த உடல்கள், நிமிரத் தொடங்கின. பிறப்பால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை மறுக்கத் தொடங்கினர். கல்வியாலும், செல்வத்தாலும், சமூக மதிப்பு உயர்வதையும் கண்டனர். மக்கள் தொகையில் பாதியான பெண்களும், கல்வி கற்கத் துவங்கினர். சமூக உழைப்பில் பெரும் பங்காற்றத் தொடங்கினர். பெண்கள் உளவியல் அடிப்படையில் விடுதலை அடைந்தனர்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகும், சாதியை ஒழிப்பதற்கான சட்டங்கள் தேசிய அளவில் இயற்றப்படவில்லை. தமிழ்நாட்டில், பெரியாரின் சமூக மற்றும் சுயமரியாதை இயக்கத்தின்வழி வந்த, திராவிட முன்னேற்றக் கழகம், சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகளை முழுமையாக முன்னெடுத்துச் செல்லவில்லை. சாதிய ஓட்டுகளைச் சார்ந்து வாழும் அரசியல்வாதிகள், சாதியைச் சங்கங்கள் மூலம் வளர்க்கிறார்களே தவிர, அதை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயாராய் இல்லை. சாதிய தலைவர்கள், தங்கள் நலனையும், தங்களுக்கு மிக நெருக்கமானவர்களின் நலன்களையும் முன்னெடுத்துச் செல்லவே, சாதியச் சங்கங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். தனித்தனி சாதியச் சங்கங்களாய் இருந்து, தங்களை காத்துக் கொள்ள முடியாது. அரசின் ஆதரவு எச்சங்கத்தினருக்கு இருக்கின்றதோ, அவர்களே வலிமை பெறுகின்றனர். தங்களின் இருப்பையும், தலைமையையும், அதிகாரத்தையும் காத்துக்கொள்வதற்காகப் பிரச்சனை எதுவும் இல்லாத காலத்திலும், எப்படியாவது ஒரு மோதலை உருவாக்கி விடுகின்றனர். ஒரு வார்த்தையேகூட, சாதிய மோதலுக்குக் காரணமாகி விடும்போது, எந்த அற்ப காரணம் கொண்டும், சாதியச் சண்டைகளை உருவாக்கி விடமுடியும். ஒற்றைப் பிரச்சனையே பல பிரச்சனைகளாக மாறவும், சங்கிலித் தொடராக நீளவும் முடியும். சாதிய வன்மம், வெடிகுண்டைப் போல் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும்.
தீர்வு:
எந்த ஒரு முரண்பாடுள்ள சமூகத்திலும், ஒற்றை தத்துவம் மட்டுமே நிலவுவதில்லை. ஒரு சமூகத்தின் பல்வேறு இயக்கங்களுக்கும், அதன் பன்மையான தத்துவங்களே பின்புலக் காரணிகளாய் அமைகின்றன. அரசின் வலிமை கொண்ட ஆளுமைமிக்க தத்துவத்தின் முன்பு, பிற தத்துவங்கள் தற்காலிகமாக அடங்கி இருக்கும். ஆனால், சமூக முரண்பாடுகள் முற்றும்போது, அடங்கி இருந்த தத்துவங்கள் வலிமை பெற்று, வீறுகொண்டு எழும். தத்துவம் தன்னுடைய முகத்தை நேரடியாகக் காட்டுவதில்லை. அது அருவத்தன்மை கொண்டதால், கற்றவர்கள் மட்டுமே அதைக் கையாள்கின்றனர். தத்துவமே வெளிப்படையான கொள்கைகளாகவும், அவற்றை அடைவதற்கான பருண்மையான செயல்பாடுகளாகவும் மாறுகின்றது.
தத்துவம் = த் + அத்து + அம். "த்" என்றால் இருத்தல் அல்லது தேகம். உலகின் இருப்பு அல்லது மெய்யும் மனமும் ஒன்றிய மனிதன். "அத்து" என்பது, "அதன்" எனும் பொருண்மையைக் குறிக்கும், ஒரு சொல்லைச் சார்ந்து இணையும், சாரியை. "அம்" என்றால் தன்மை. எனவே, தத்துவம் என்றால், "உலகின் தன்மை" அல்லது "மனிதனின் தன்மை / இயல்பு" எனப் பொருள் கொள்ளும். உலகின் தோற்றம், அமைப்பு, மாற்றம் ஆகியவற்றைப்பற்றியும், மனிதனின் இயற்கையான இயல்பு என்பதுடன், அவன் அடைய வேண்டிய உன்னத இயல்பைப் பற்றியும், இலக்கை பற்றியும், அதை அடைவதற்கு அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும் தத்துவங்கள் விரித்துரைக்கின்றன.
வெளி, தீ, காற்று, நீர், நிலம் ஆகிய ஐந்து மூலங்களின் கலவைதான், இவ்வுலகம் என தொல்காப்பியம்கூட கூறியுள்ளது. இது, எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்மொழிவுதான். இவற்றுள் முதன்மையான மூலம், வெளி. வெளியின்றி, எந்த மூலமும் இருக்கக்கூட முடியாது. வெளி என்பது வெற்றிடமா அல்லது வெளிப்படாத நுண்மைப் பொருளின் இருப்பிடமா என்பதுதான் கேள்வி. இன்றைய அறிவியலின் கூற்றுப்படி, இருண்ட ஆற்றல் அல்லது கண்ணுக்குப் புலப்படாத நுண்ணியப் பொருள்தான், அண்டம் முழுமையும் ஊடுருவி உள்ளது. அதுவே வெளியாக உள்ளது. அந்த வெளிதான், புலனாகும் நுண்ணணுத் துகள்களாய் மாறி, கருகொண்ட பொருட்களாய் மாறி, பல பொருட்கள் கலந்து சிக்கலான கருவைக் கொண்டு நுண்ணுயிராக மாறி, பல நுண்ணுயிர்கள் ஒன்று சேர்ந்து, ஐந்து அறிவுகள் வரை கொண்ட விலங்குகளாய் மாறி, ஐந்து புலன்களால் பெறும் அறிவுகளின் முரண்பாட்டைத் தீர்க்க, கருவாக உருவான, ஆறாவது அறிவெனும் மனமுடைய மனிதராயும், பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. திருவள்ளுவரும், அகரம் எனும் எழுத்தே எல்லா எழுத்துகளுமாகி, சொற்களுமாகி பொருண்மை தருவது போல், வெளியை அகமாகக் கொண்ட இறைவனே, முதல் நுண்ணியப் பொருளாகத் தோன்றி, அண்டத்தில் உள்ள எல்லா பொருட்களாயும் மாறி, உயிர்களாயும் தோன்றி, வாழ்வாகவும் உள்ளான் எனக் கூறுகின்றார், தன் முதல் குறளில்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இறைமையே எல்லாமானதால், இறைமைக்குள்தான், இறைமையாகவே, எல்லாமும், எல்லாரும் இருக்கின்றோம். மனித இனம், அண்ட இயக்கத்தின் ஒரு சிறிய பகுதியே. அண்டம், சூரிய மண்டலம், உலகச்சூழல் ஆகியவற்றைச் சார்ந்தே மனித இனம் தன் இருப்பை கொள்கின்றது. உலகமோ, சூரிய மண்டலமோ அழிந்தால், மனித இனமும் சேர்ந்து அழிய வேண்டியதுதான். உலகம் தானாக அழிந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையால், ஆத்திரத்தால் அழிக்காமலிருந்தால் சரி. இன்றைய நிலைமை, நாளை நிலையாமை ஆகிவிடலாம். நேற்று இருந்தது, இன்று இருக்கின்றது என்பதால், நாளையும் இருக்கும் என்ற அனுமானத்தில்தான் மனிதன் வாழ்கிறான். இறப்பு என்பது இயல்பு என அறிந்தும், இறவாமையை எண்ணுகிறான். தான், பிற உயிர்களைவிட, விலங்குகளைவிட தனிச்சிறப்புடையவன் எனக் கருதுகிறான். இயற்கையை தனக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்துக் கொள்வதுபோல், இறப்பு எனும் இயல்பையும் தன்னால் மாற்றிவிட முடியும் என முனைகிறான்.
மனிதன் தன் அறிவாலும், சிந்தனையாலும், நிலைத்த தன்மையுடையது எதுவென தேடுகிறான். அதுவாகத் தான் மாறினால், தானும் நிலைபெற்று, அழிவின்றி, நிரந்தரமாக இருக்கலாம் என நினைக்கிறான். உடலின் இயக்கத்தையும், புலன்களின் உள்ளீட்டையும், மனத்தின் சலனத்தையும், உயிரின் துடிப்பையும் கடந்த, அப்படிப்பட்ட அகத்தேடலில், முழுமையான அசையாமையில், நுண்ணிய பொருண்மையின் இடையறாத பொழிவை, ஊடுருவுதலை, மெய்யுணர்வாய் உணர்ந்தான். அது அவனுக்கு அனந்தமாய் இருந்தது, ஆனந்தமாயும் இருந்தது. அந்த உணர்வையும் இழந்தவன், பொருண்மையும் ஆற்றலும் சலனமற்று, ஒருமையாய் உறைந்த, நிலைபேறு எய்தினான். புற உலகின் துவக்க நிலையும், இத்தகைய நிலைத்த தன்மையே எனத் துணிந்தான். இதை இறவாமை என்றான், அதை இறைமை என்றான். இறவாமையும் இறைமையும் ஒன்றே என்றான். தானும் இறைமை என்றான்.
இந்தியாவில் தோன்றிய தத்துவ மரபுகள், சித்தரியம், பௌத்தம், சமணம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலிய அனைத்தும், இதையே ஒப்பீட்டளவில், காலத்திற்கும், கேட்போருக்கும் ஏற்றவாறு, வடிவங்களை மாற்றி மொழிகின்றன. சாரம் ஒன்றே!
மேற்கத்திய தத்துவ தேடுதலில், ஜெர்மானியர்கள் தலைமை வகித்தனர். குறிப்பாக, பிரடெரிக் ஹெகல், தத்துவப் புலமையில் தலைசிறந்து விளங்கினார். "பிரபஞ்ச இருப்பின் காரணம், மனிதனின் மூலம், இறைவன் தன்னைத் தானே உணர்ந்து கொள்கிறான்" என்று ஹெகல் கூறினார். மனிதன் தன்னை உணர்வதன் மூலமே, இறைமை தன்னை உணரமுடியும் என்றால், முதலில், மனிதன் தன்னை உணர்வதற்கான சூழல்களை உருவாக்க வேண்டும். அவனுக்கு ஓய்வு நேரம் ஒன்று இருந்தால்தான், அதற்கான முயற்சிகளை அவன் எடுக்க முடியும். அவனுடைய அடிப்படையான வாழ்வுத் தேவைகள் நிறைவேறினால்தான், அவன் மனம் ஒன்ற முடியும். அதனால்தான் காரல் மார்க்சும், உழைப்பாளர்களின், தொழிலாளர்களின் வேலை நேரத்தை, எட்டு மணியாக வரையறுக்கப் போராடினார். விவசாய உற்பத்தியிலும், தொழில் உற்பத்தியிலும், உழைப்பாளர்கள் உயிர்பிழைக்கக்கூட போதாத அளவே கூலிகள் தரப்பட்டது. விளைச்சலும் இலாபமும் இருந்தும், தங்கள் மூலதனத்தைப் பெருக்குவதிலேயே முதலாளிகள் நாட்டம் கொண்டனர். அதற்காக, தொழிலை இயந்திரமயமாக்கி கூலியைக் குறைத்துக் கொண்டே வந்தனர். விற்பனைச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல், உழைப்பாளர்களின் ஊதியத்தை மட்டுமே மேன்மேலும் சுரண்டினர். இவ்வாறு கிட்டும் பெரும் உபரி மதிப்பை, முதலாளிகள், ஆடம்பர வாழ்க்கை வாழ்வும், தொழிலை மேலும் இயந்திரமயமாக்கி உழைப்பாளர்களை மேன்மேலும் சுரண்டவுமே பயன்படுத்தினர். எனவே, உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் வேண்டி முன்வைத்துப் போராடினர், உழைப்பாளிகள்.
நீண்ட நெடிய போராட்டங்கள் மூலம், பல நாடுகளில், எட்டு மணி நேர பணிக்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கனடா உள்பட, பல நாடுகளில், பணிநேரம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை நீடிக்கப்படுகின்றது. ஒரு ஆறுதல், ஒன்றரை மடங்கு ஊதியத்தைத் தந்து, ஈடு செய்து விடுகிறார்கள் அல்லது நீண்ட ஓய்வை அளிக்கிறார்கள். இன்றும் பல நாடுகளில், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் சில நாடுகளில், முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இல்லை. உழைப்பாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான போராட்டம் நீண்டது, தொடர்வது.
எப்படி இருந்த போதிலும், உழைத்து உயிர்வாழ்வது மட்டுமே மனித இலக்கு அல்ல, தன்னை உணர்வது மட்டுமே மனித வாழ்வல்ல. குடும்ப, சமூக வாழ்வையும், துறவு, ஆன்மீக வாழ்வையும் இணைத்து, ஒரு சமநிலைப்படுத்தப்பட்ட வாழ்வியலைத் தருகிறார், திருவள்ளுவர். வாழ்வையும் வாழலாம், தன்னையும் உணரலாம். இதைவிட ஒரு முழுமையான வாழ்வியல் தத்துவம், உலகில் வேறெதுவும் இல்லை.
இவ்வாறு, வரலாற்றையும், தத்துவத்தையும் அறிந்து கொள்வதன் மூலம், தமக்கு நேர்ந்த சமூகப்படிநிலை செயற்கையானது என்றும், எவரும் எவரையும்விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ பிறப்பில் இல்லையென்றும், பிறப்பின் பயன் வாழவும், தன்னை உணர்தலுமே என்றும் உணரலாம்.
கல்லாதவரையும், உழைக்காதவரையும் மட்டுமே கீழானவராக உரைக்கின்றார், வள்ளுவர். எனவே, சமூகப் படிநிலையில், கீழானவராக நிறுத்தப்பட்டோர், வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர், கல்வியில் சிறந்து விளங்கி, விவசாயம் மற்றும் தொழில்களில் உழைத்து, செல்வம் பெருக்கி, மனிதப் பண்புகளிலும், குணங்களிலும் சிறந்து, அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்து, நேர்மையாக நடந்து, தேவையெனில் இடங்கள் பெயர்ந்து, ஒழுக்கமுள்ள குடும்ப சமூக வாழ்வை வாழ்ந்து, தன்னை உணர முயல வேண்டும். இதுவே, சாதிய கட்டமைப்பு உதிர்வதற்கான சூழல்கள். இதை நோக்கிய செயல்பாடுகளே, சாதியம் ஒழிவதற்கான முன்னெடுப்புகளாக இருக்க வேண்டும்.
-----