Monday, February 24, 2020

கல்லில் தமிழிசை

கல்லில் தமிழிசை

 ——   S.A.விஜய்



      உலகிலேயே மிகப்பழமையானதும் தனித்துவமானதும் எனச் சொல்லப்படுவது, 3000 ஆண்டுகள் தொன்மை உடைய நம்முடைய தமிழிசை. தொல் தமிழர் தமக்கென அப்போதே ஒரு தனி இசைக்கோட்பாட்டு முறைமைகளைக் கொண்டிருந்தனர் என்பதே நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் உண்மை. அவ்வகையில், தமிழர் தம்முடைய இசையறிவை, அவர்கள் வகுத்த இசைக்கோட்பாடுகளை இலக்கிய வடிவில் ஓலைச்சுவடிகளில் மட்டும் எழுதிப் பதிப்பிக்கவில்லை, கல்லிலும் பலவாறு பதிப்பித்துள்ளனர். உலகிலேயே இசைக்கு இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா என அதிசயிக்கும் வண்ணம் தமிழர்கள் கல்லைப் பயன்படுத்தி ஒரு இசை/அறிவியல் சாதனையே படைத்தனர் என்றால் அது சற்றும் மிகையல்ல. அவ்வகையில், தமிழர் கல்லில் வடித்த இசைத்தகவல்கள், ஓசை/இசை எழுப்பும் அமைப்புகளைப் பற்றியதே இக்கட்டுரை.

(I) அரச்சலூர் கல்வெட்டு – கிபி 1 ஆம் நூற்றாண்டு:
      தமிழர், ஆதி முதல் தமிழ்நாடெங்கிலும் உள்ள பல்வேறு கோயில்களிலும் உள்ள கற்களில் சிற்பங்களும் உருவங்களும் அமைத்து சாதித்துள்ளனர். அவ்வகையில், பன்னெடுங்காலம் அழியாத்தன்மை கொண்ட கல்லை ஒரு கருவியாகக் கொண்டு, இசைக்கோட்பாடுகளையும், இசைக்கருவிகளையும் பல்வேறு கோவில்களில் அமைத்துள்ளனர். அவற்றில், மிகவும் தொன்மையான இசைக்கல்வெட்டு எனில் அது அரச்சலூரில் 1ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற இசைக்கல்வெட்டு ஆகும்.
“எழுத்தும் புணருத்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்”
என எழுதப்பட்டிருக்கும் அந்தக் கல்வெட்டின் கீழ் த, தா, தை, தே ஆகிய எழுத்துக்களின் கலவையில் சில வரிகள் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை தாள எழுத்துக்கள், நடனத்துக்கு உரியன என்பது அறிஞர்கள் கருத்தாகும். இந்த கல்வெட்டு உள்ள இடத்தில் ஒரு சமண இசைப்பள்ளி இருந்திருக்கக் கூடும் என தொல்லியல் அறிஞர் டாக்டர் ஆ. பத்மாவதி (அவரது களப்பிரர் ஆய்வு உரை காணொளிகளில்) குறிப்பிட்டுள்ளார்.

      மேலுள்ள கட்டத்தில், கல்வெட்டின் வட்டெழுத்தின் இன்றைய வடிவம் தரப்பட்டுள்ளது. வலது பக்க கல்வெட்டில் 2 & 5ஆவது வரி சிதைந்துள்ளது. நாம் இடப்பக்க கல்வெட்டை மட்டும் பார்ப்போம். ஐந்தைந்துக் கட்டங்களில்(5x5) இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இதுபற்றி மேலும் விரிவாக, அடுத்து உள்ள கம்பைநல்லூர் கல்வெட்டைக் கண்ட பின் அலசுவோம்.

(II) கம்பைநல்லூர் கல்வெட்டு – 12ஆம் நூற்றாண்டு:
      தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பைநல்லூர் என்ற சிற்றூரில் உள்ள சிவன் கோவிலில், அரச்சலூர் கல்வெட்டைப் போலவே நான்கு ஐந்தைந்துக் கட்டக் கல்வெட்டுகள்(5x5) காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதல் கல்வெட்டு தான் கீழுள்ள நமசிவாய கல்வெட்டு. இதில் நமசிவாய என்ற சொல் வெவ்வேறு வரிசையில் எழுதப்பட்டுள்ளது.


      இந்த நமசிவாய கல்வெட்டை ஆராய்ந்த டாக்டர் ஆ. பத்மாவதியும், முனைவர் வீரபாண்டியனும், இது மோகனம் பண்ணை குறிப்பது எனவும், இக்கல்வெட்டின் நோக்கம், மோகனப்பண்ணின் மிகச்சரியான சுர வரிசையைக் கூறுவதாகும் என்று ஆய்ந்து கூறியுள்ளனர். அதன்படி, ஐந்துசுரப் பண்ணான முல்லைத்தீம்பாணி எனும் இக்கால மோகனத்தின் சரியான சுர வரிசைகள் ”சபரிகத” ஆகும். இக்கல்வெட்டின் அமைப்பைப் படித்து அதன் உதவியால் தான் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை, முல்லைத்தீம்பாணி பற்றிக் கூறும் செய்தியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது என்பதும் இவர்களின் ஆய்வு முடிவாகும். மட்டுமின்றி, சிலம்பின் உதவியால் தான் இக்கல்வெட்டைப் படிக்கவும் முடிந்தது என்பதும் கூடுதல் தகவல்.

      இக்கல்வெட்டை விலங்காமொழி எனும் 11ஆம் நூற்றாண்டு மன்னன் அமைத்திருக்கக்கூடும் எனக்கூறுதற்கேற்ப, இக்கோவிலில், அவன் பெயரான ’விலங்காமொழி’ என்பதையும் ‘நமசிவாய’ கல்வெட்டைப் போலவே, எழுத்துக்களைச் செதுக்கி அமைத்துள்ளதைக் கண்டு தெரிந்துகொள்ளலாம் 


      இதே கம்பைநல்லூர் கோவிலில், இதுபோல், இன்னும் இரண்டு ஐந்தைந்துக் (5x5) எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் உள்ளன, ஆனால் அவை, கட்டமிடப்படாமல் எழுத்துக்கள் மட்டும் உள்ளன. அவற்றின் எழுத்துக்கள் மேலுள்ள இரண்டைப்போல் சிலம்பின் செய்யுள் கோட்பாட்டுடன் ஒத்துவரவில்லை. அவை தவறான கல்வெட்டாய் இருக்கக்கூடும் எனவேதான் அவற்றைக் கட்டம் போடாமல் விட்டிருக்கக்கூடும்.

      மேலுள்ள கம்பைநல்லூர் கல்வெட்டும் சரி, அரச்சலூர் கல்வெட்டும் சரி, ஐந்தைந்துக் கட்டங்கள்(5x5) கொண்டிருப்பதைக் கண்டால், அக்காலத் தமிழர், தாளங்களை வகுக்கவும், பண்களின் சுர வரிசை கணக்கிடவும் இதுபோன்ற கட்டங்களைப் பயன்படுத்தினர் என முடிவுக்கு வரலாம். இவ்விரண்டு கல்வெட்டுக்களுமே இன்னும் ஆழமான ஆய்வுக்குரியன.  


      புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குடுமியான்மலை என்ற சிறு மலைமேலுள்ள 7ஆம் நூற்றாண்டு கோவிலின் வெளியே ஒரு மிகப்பெரிய இசைக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதற்கு ஒரு கூரை அமைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இக்கல்வெட்டு 38 வரிகளைக்கொண்டு சமஸ்கிருத கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. இது பல்லவ அரசனான மகேந்திரவர்மன் காலத்தது என்பது பல அறிஞர்களின் கணிப்பு. முழுவதும் கிரந்த எழுத்தில் உள்ள இக்கல்வெட்டின் முடிவில் “இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய” என எழுதி முடிக்கப்பட்டுள்ளது. இதை “இவை யாழிற்கும் பாட்டிற்கும் உரிய” எனக்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர். இக்கல்வெட்டு செய்திகளுக்கு ஸ்வராகமா (சுவர ஆகமம் எனப் பெயரிடப்பட்டுள்ளது, காந்தர்வ இசை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ருத்ராச்சாரியார் எனும் இசையோன், இசை மாணவர்களுக்காக இக்கல்வெட்டை வடித்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த 38 வரிகளில், எழுத்துக்களை இசை vowels  ஆகப் பாவித்து, பல்வேறு விதமான கிராம மூர்ச்சனைகள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாகக் கடைசியாக 1) மத்தியம, 2) ஷட்ஜ, 3) ஷாடவ, 4) சாதாரித, 5) பஞ்சம, 6) கைசிக மத்தியம, 7) கைசிக கிராமங்கள் என ஏழு ராக முறைகள் கிடைக்கின்றன. இவற்றை முறையே ஏழ்பெரும் பண்களுடன் ஒப்பிடலாம் என, இசையறிஞர் வி.பா.க சுந்தரம், தனது 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' தொகுதி இரண்டு பக்கம் 145இல் கூறியுள்ளார். 



      இக்கல்வெட்டினால் அறியக்கூடிய இறுதிச் செய்தி என்பது சற்றே குழப்பமாக இருந்தாலும், இந்தியாவிலேயே இத்துணை பெரிய இசைக்கல்வெட்டு வேறெங்கும் இல்லை என்பது இதன் தனிச்சிறப்பாகும். இக்கல்வெட்டு மேலும் ஆழமாக ஆராய்வதற்குரியது.


      குடுமியான்மலைக்கு அருகிலேயே உள்ள திருமயம் எனும் இடத்திலுள்ள குடைவரைக் கோவிலில் மற்றுமொரு இசைக்கல்வெட்டு கிடைக்கின்றது. ஆனால் இதன் சில பகுதிகள் அழிந்துபட்டுள்ளன, ஆனால் கிட்டத்தட்ட இதே வரிகள் கொண்ட மற்றொரு கல்வெட்டு, இதே திருமயத்திற்கு அருகே உள்ள மலையக்கோவிலில் அழியா நிலையில் காணக்கிடைக்கிறது.

      இரண்டிலுமே ‘பரிவாதிநிதா’ என்ற வரி முதலில் உள்ளது. முழுமையாக
“பரிவாதிநிதா
“குணஸேண ப்ரமாணஞ்
செய்த வித்யா பரிவாதிநிகற்
கற்பிக்கப்படுவது காண்
ஞ் சொல்லிய புகிற்பருக்கும் நிமி
முக்கந் நிருவத்துக்கும் உரித்து”
என்று இக்கல்வெட்டு உள்ளது. இதிலுள்ள பரிவாதிநி என்பது ப என்ற இளிச்சுரம் மற்றும் ரி2 வன் துத்தம் இணைச்சுரமாகக் கொண்டு உருவாகும் மேற்செம்பாலை பண்ணை குறிக்கிறது என்பது, வி.பா.க சுந்தரம் அவர்களின் கருத்து. இதனால் இதை ஏழ்நரம்புடைய வீணை என்று சொல்லலாம் என்கிறார் அவர். 


      மேலே காணப்படுவது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஒரு மிக அரிதான தாளச்சக்கரக் கல்வெட்டு. இது 17ஆம் நூற்றாண்டு எனச் சிலரும், 12ஆம் நூற்றாண்டு எனச் சிலரும் கூறுகின்றனர். இது, தற்கால கர்நாடக சங்கீதம் வழங்கும் 35 தாளங்களை அதன் பெயர் அங்கங்களுடன் விளக்கும் ஒரு விரிவான சக்கரம். இதன் மையப்பகுதியில் ஒரு சிறு மயில் செதுக்கப்பட்டு அதைச்சுற்றி 5 அடிப்படைத் தாளங்களைக் குறிக்கும் வகையில் ஒரு தாமரையின் ஐந்து இதழ்களும், அவை, 7 ஜாதிகளாகப் பெருகுவதை, வெளிச்சக்கரத்தில் 7 தாமரை இதழ்களாகவும் விரிவதை மேலுள்ள படத்தில் காணலாம். அந்த 5 தாளம் மற்றும் 7 சாதிகளும் சேர்ந்து மொத்தம் 35 தாளங்கள் உருவாவதை, அதற்கும் வெளியிலுள்ள இரு சக்கரங்களில் காணலாம், முதல் சக்கரத்தில், 35இல் ஒவ்வொரு தாளத்தின் குறியீடுகளையும், அதற்கும் வெளியே அதாவது இக்கல்வெட்டின் கடைசி, வெளிப்புற சக்கரத்தில் ஒவ்வொரு தாளத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவும், இந்தியாவில் (மதுரையைத் தவிர) வேறெங்கும் இல்லாத ஒரு தாளச்சக்கர அமைப்பாகும். தற்கால தாளங்களின் சில பெயர்களும் அங்கங்களும் இக்கல்வெட்டில் மாறியுள்ளது.



      அதே நெல்லையப்பர் கோவிலில், மிகவும் புகழ்பெற்ற நான்கு இசைத்தூண் தொகுப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு தூண் தொகுப்பிலும், 48 தனித்தூண்கள் சுற்றி உள்ளன, நடுவில், மையமாக, கையால் தொடமுடியாத அளவு உள்ளே ஒரு பெரிய தூண், தாங்குவதற்காக உள்ளன. வெளிப்புறத்தில் உள்ள தூண்களுக்கும் மையத்தூணுக்கும் இடையிலும், சில கையால் அணுகித் தொட்டு அசைக்கமுடியாத தூண்களும் உள்ளன. இத்தூண்கள் இன்றளவும் இயங்குகின்றன, கையால் மென்மையாகத் தூணின் நடுவில் தட்டினால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுரங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கொண்டு சில முழு ராகங்களை வாசிக்கமுடியும் எனச் சொல்லப்படுகின்றது ஆனால் இத்தூண்களின் இசைப்பண்புகளை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலை உள்ளது. கீழே, இத்தூண் தொகுப்புகளில் ஒன்றின், மேல்நோக்கிய குறுக்குவெட்டு அமைப்பு படமாகக் காட்டப்பட்டுள்ளது. இதை நோக்கினால், சில தூண்கள் வட்டமாகவும் சில சதுரமாக, சாய்சதுரமாக, 8 முக வட்டமாக, அலைவரிசை வடிவாக என இத் தூண்கள் வெவ்வேறு வடிவில் உள்ளது தெரியவரும். எந்த தூண் வெளியே உள்ளது, எது உள்ளே வாசிக்க இயலா நிலையில் உள்ளது என்பதும் தெரியவரும்.



      இத்தூண்களின் இசைப்பண்புகளை முழுமையாக ஆராய்ந்தால், கீழ்க்கண்ட தகவல்களை அறியலாம்:
தூண்களின் சுரம் மற்றும் அதிர்வெண்,
எத்தனை மண்டிலம் / கோவை ஒரு தூண் தொகுப்பில் உள்ளது,
ஒரு மண்டிலம்/கோவையில் அலகுகள் 24ஆ 22ஆ,
ஒரு தூணின் அதிர்வு அருகாமைத்தூண்களில் அதிர்வு ஏற்படுத்துகிறதா(sympathetic resonance),
அதனால் இத்தூண்களுக்கிடையே இணை கிளை நட்பு பகை உறவு உள்ளதா என ஆராயலாம்,
தூண்களின் வடிவங்கள் வெவ்வேறு, அதனால் அதன் ஒலிப்பண்பு Timbre மாறுகிறதா,
நூற்றாண்டுகளாக நிற்கும் இசைத்தூண்கள் இன்று சற்றே மாறியிருக்கும், அன்று எப்படி ஒலித்திருக்கும்,


      இத்தகைய இசைத்தூண்கள், நெல்லை அருகே உள்ள ஆழ்வார்திருநகரி கோவில் மற்றும் சுசீந்தரம் கோவிலிலும், கர்நாடக மாநில ஹம்ப்பியிலும் உள்ளன, ஆனால் அவை நெல்லை கோவில் அளவுக்கு விரிவான தூண்கள் இல்லை.

(III) மதுரை மீனாட்சியம்மன் கோவில் தாளச்சக்கரங்கள் – 17ஆம் நூற்றாண்டு:
      மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இரண்டு அரிதான தாளச்சக்கரங்கள் உள்ளன. அவற்றில் முதல் சக்கரம் கீழே உள்ள சிம்மநந்தன தாளச் சக்கரம். 35 தாளங்களில் அடங்காத தனித்துவமான தாளமான சிம்மநந்தன தாளம் மிகச்சிக்கலான, மிக நீண்டதாக 128 அட்சரங்களைக் கொண்டுள்ளது. அதைக் குறிக்கும் விதமாகக் கீழுள்ள சக்கரம் உள்ளது. 



      மதுரைக் கோவிலிலுள்ள மற்றொரு தாளச்சக்கரம், கீழுள்ள சப்த சூழாதி தாளம் என்ற 35 தாளங்களின் அங்கங்களைக் குறிக்கும் சக்கரம். இது நெல்லை கோவிலின் தாளச்சக்கரத்தை ஒத்தது எனினும் அதனளவு விரிவானது அல்ல.



      இதே மதுரைக் கோவிலிலும் இசைத்தூண்கள் உள்ளன எனவும், அவையும் நெல்லை கோவில் போல் பல சுரங்களை எழுப்ப வல்லன என்றும் செய்தி உண்டு. அது உண்மையே, ஆனால், அத்தகைய தூண்கள் இருப்பதே இக்காலத்தில் பலருக்கும் தெரியா வண்ணம் அவற்றைத் தடுப்புகள் போட்டு வைத்துள்ளனர், காரணம், மக்கள் கூட்டம் அதை இயக்கி தூண்களை பாழ்ப்படுத்திவிடாமல் பாதுகாக்கவே. இத்தூண்களும் விரிவான ஆராய்ச்சிக்கு உள்ளான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

      இவை அனைத்தும் நமக்குக் கூறுவது என்னவென்றால், தமிழர்கள் தமிழ் இசையை எவ்வளவு நுட்பமாக வளர்த்திருந்தனர், அதைக் கல்வெட்டுக்களில் எவ்வளவு புதுமையாகப் பதிவு செய்துள்ளனர் என்பதே. இவற்றில்; 
ராகம்/பண்களை வகுத்துக்கூற ஒரு வழி சொல்லும் குடுமியான்மலை இசைக்கல்வெட்டு,
அங்கு திருமயத்தில் வாசிக்கப்பட்ட பரிவாதிநி வீணை, 
மதுரையிலும் நெல்லையிலும் கோவில்களில் உள்ள மூன்று வெவ்வேறு விதமான தாளச் சக்கரங்கள், 
நெல்லை, ஆழ்வார்திருநகரி, சுசீந்திரத்தில் உள்ள பல்வேறு அம்சங்களைக் கொண்ட இசைத்தூண்கள்,
பாடலுக்கும் ஆடலுக்கும் உரிய தாளங்களை வகுக்கும் அரச்சலூர் கல்வெட்டு,
இசைக்கலை மிக உயர்ந்த நிலையிலிருந்தது என மகேந்திரவர்மன் பெருமையுடன் சொல்லும் மாமண்டூர் பல்லவர் காலக் கல்வெட்டு,
கல்லில் காற்றைச் செலுத்தி ஊதி வாசிக்கக்கூடிய கல் நாகசுரம்-ஆழ்வார்திருநகரி,
ஒரு கல் பந்தை உருட்டினால் ஏழு சுரங்களை வாசிக்கும் இசைப்படிகள்(தாராசுரம்),
வெள்ளம் வந்தால், வெள்ள நீர் வடியும் வரை விடாமல் ஓசை எழுப்பும் அபாயக் கல் சங்கு – தாமிரபரணி ஆறு.

      இப்படி, வெறும் கல்லைக்கொண்டு, தமிழன், ராகம், தாளம், சுரம் இசைக்கருவிகள் ஓசை, இவற்றை உருவாக்கினர். இதுவரை இக்கட்டுரையில் கூறியுள்ள கற்படைப்புகள் போக, இசைக்கலைஞர்கள் இசைக்கருவி வாசித்து நடனமாடும் சிற்பங்களும், இன்னும் இசைப்பாடல்களைத் தாங்கிய கல்வெட்டுக்களும் தமிழகத்தில் இன்றளவும் ஆங்காங்கே உள்ளன. மறைந்த இசை அறிஞர் திரு.தண்டபாணி அவர்கள் எழுதிய ‘திராவிடர் இசை’ எனும் நூலிலும், இன்னும் சில தமிழிசை நூல்களிலும், இங்குக் கூறப்படாத இசைக் கற்படைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்படியெனில், 3000 ஆண்டு பழமையான தமிழிசை, அக்காலத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தது என்று எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை. 

      உலகிலேயே வேறெந்த இசைப்பண்பாட்டிலும் கல்லை இப்படி பலவிதமாகவும் பயன்படுத்தியதில்லை எனுமளவுக்கு, கல்லில் இத்துணை இசையறிவை வடித்த தமிழன், அதைவிடப் பன்மடங்கு சொல்லில், அதாவது ஓலைச்சுவடி எழுத்தில் வடித்திருக்கிறான், அதைவிடப் பன்மடங்கு, இசையை வில்லில்(வில் யாழ் முதலிய யாழ் வகைகள்) வாசித்துள்ளான்! எனவே, அக்காலத்தமிழன் இசையில் மிகவும் உயர்ந்திருந்தான் என்பதை, தொழில்நுட்பத்தைக் கையில் வைத்துள்ள இக்காலத் தலைமுறையினராகிய நாம் உணரவேண்டும். பலப்பல ஆழமான ஆய்வுகள் பல செய்து, நம் தமிழிசையின் இசையியல் கோட்பாட்டுத்துறையை மீட்டெடுத்து உலவ விடுவதே நாம், இளங்கோ முதலான நம் இசைமேதைகளுக்குச் செய்யக்கூடிய கைமாறு ஆகும்.


References:
1) 2015.180704. Epigraphia-Indica Vol12
2) ஆய்வுப்பேழை – கா.ம.வேங்கடராமையா (1987) பக்கம் 138
3) தமிழிசையில் புதிய வெளிச்சம் – டாக்டர் ஆ. பத்மாவதி
4) The Musical Dimension of Shiva - A New Discovery – Dr. S.A.Veerapandian
5) The Ragas of Early Indian Music – Richard Widdess
6) தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுதி 2, பக்கம் 145 – வி.பா.க. சுந்தரம்
7) தமிழிசை இலக்கண வரலாறு – மு.அருணாசலம். பக்கம் 90 & 255
8) The Music Academy Journal 1943 – Piano in Stone, page109
9) Mridangam – Shreejayanthi Gopal – Pages 73 & 81
10) திராவிடர் இசை – ப. தண்டபாணி, பக்கம் 80



குறிப்பு:
ஆபிரகாம் பண்டிதர் 6 இசை  மாநாடுகளை நடத்தியபின்பு விழுந்த 100 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் முதன்முறை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் மீண்டும் இசை மாநாடுகள் நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. இது அந்த மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய  "முதலாவது உலகத் தமிழிசை மாநாடு – 2019"(14 & 15 டிசம்பர் 2019) படிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.  

தொடர்பு: இசை ஆய்வாளர் S.A.விஜய், சென்னை (vijeeth@gmail.com)








No comments:

Post a Comment