Wednesday, December 25, 2019

கல்வெட்டில் தனிப்பாடல் திரட்டு

கல்வெட்டில் தனிப்பாடல் திரட்டு

——   மா.மாரிராஜன்


          சங்க இலக்கிய தமிழ்ப் பாடல் வரிகள் கல்வெட்டுகளில் இடம் பெறுவது சற்று அபூர்வமான ஒன்றாகும். சிற்றிலக்கியத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டில் இடம்பெறுவது  சிறப்பு. அப்பாடல் வரலாற்றுச் செய்திகளை ஒட்டி இருந்தால் அது இன்னும் சுவாரசியம். 

          பிற்காலச்சோழ இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தரின் பங்கு அபரிதமானது. விக்ரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் என்று மூன்று சோழ அரசர்களின் காலத்திலும் இருந்தவர். இவர் எழுதிய மூவருலா, தக்காயப்பரணி போன்ற நூல்கள் தனித்தமிழ் இலக்கியச்சுவை வாய்ந்தவை. சோழர் குலப் பெருமையைப் போற்றி பாடுவதில் வல்லவர்.

          ஒட்டக்கூத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் புகழேந்திப்புலவர். பாண்டியனது அவைப்புலவர். ஒட்டிப் பாடுவதிலும் வெட்டிப்பாடுவதிலும் இவரது தனிச்சிறப்பு. பாண்டிய குலப் பெருமையைப் போற்றிப் பாடுவதில் புகழேந்திப்புலவர் பெரும் சமர்த்தர்.

          சோழர்களின் பெருமையை ஒட்டக்கூத்தர் பாட, அதை வெட்டி பாண்டியர் பெருமையைப் புகழேந்தி பாட என அமைந்த பாடல்கள் வெகு பிரசித்தம். இருவரியும்  விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்பார்கள்.

          ஒருபாடலைப்பாருங்கள்;  ஒட்டக்கூத்தர் இவ்வாறு பாடுகிறார், 
                    “இன்னம் கலிங்கத்தில் வேந்தர் உண்டென்றோ
                    தென்னவன் தமிழ்நாட்டை சீறியோ - சென்னி
                    அகளங்கா உன் தன் அயிராவதத்தின்
                    நிகளங்கால் விட்ட நினைவு”

          புகழேந்திப் புலவர் இப்பாடலை அப்படியே வெட்டிப்பாடுகிறார்.
                    “தென்னவன் தென்னர்பெருமாள் திறல்மதுரை
                    மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் - பொன்னிநா
                    டாலிக்கும் வேந்தாம் அபய குலமகளிர்
                    தாலிக்கும் ஒன்றே தளை”

          அதாவது, சோழனது பட்டத்து யானையின் காலில் கட்டியுள்ள சங்கிலி அவிழ்க்கப்பட இரண்டு காரணம் உண்டு. கலிங்கத்தில் பகை இன்னும் மிச்சமிருக்கலாம் அல்லது பாண்டிய நாட்டை சீரழிக்கும் முடிவாக இருக்கலாம் என்று ஒட்டக்கூத்தர் பாட;

          இதற்குப் பதிலாகப் புகழேந்தி, தெற்குப் பகுதி மக்களின் தலைவனான பாண்டியனது மதுரையில் இருக்கும் பாண்டிய பட்டத்து யானையின் காலில் உள்ள கயிற்று முடிச்சும், பொன்னி நாட்டில் இருக்கும் கற்புடைய சோழ மகளிரின் கழுத்தில் உள்ள தாலி முடிச்சும் ஒன்றேயாகும் (பாண்டியனது யானையின் காலில் உள்ள முடிச்சு அவிழ்ந்தால், சோழப் பெண்களின் தாலி முடிச்சு அவிழும் என்பது இப்பாட்டின் பொருள் ஆகும்) அதாவது, போரில் சோழ வீரர்கள் இறந்து அவர்களது தேவியர் தாலியை இழப்பார்களாம்.

          இம்மாதிரியான பாடல்கள் ஏராளம். இப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் சிற்றிலக்கியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள புகழேந்தியின் பாடல்கள், அப்படியே குடுமியான் மலையில் கல்வெட்டாகவும் உள்ளது. தென்னவன் செய்யப் பெருமாள் என்று தொடங்கும் புகழேந்தியின் பாடலை கல்வெட்டில் காணலாம்.






நன்றி:  படம் உதவி - திருச்சி பார்த்தி. 



தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)

Sunday, December 22, 2019

செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி


செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி 

——    தேமொழி


          பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும்,  வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும்  உள்ளனர்.  அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று  நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர். 

          தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் 'செம்பியன் மாதேவி - வாழ்வும் பணியும்' என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது.  பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் 2019  வெளியீடு கண்டது  இந்நூல். இதன் வெளியீட்டிற்கு உதவிய புரவலர் மேனாள் தமிழக கல்வி அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள். 

          நூலின் முன்னுரையைத் தொடர்ந்து செம்பியன் மாதேவியை அறிமுகப்படுத்திய பின்னர், அவர் அறப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றுக்குச் சான்றுகளாகத் திகழும் 1. கோனேரிராஜபுரம், 2. திருக்கோடிக்காவல், 3. ஆடுதுறை, 4. குத்தாலம், 5. செம்பியன்மாதேவி, 6. ஆனாங்கூர், 7. திருவாரூர், 8. மயிலாடுதுறை, 9. திருவக்கரை, 10. திருமுல்லைவாயில், 11. திருமுதுகுன்றம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களையும் அவற்றின் கட்டமைப்பையும், சிலைகளையும், கல்வெட்டுகள் தரும் வரலாற்றுச் செய்திகளையும், அவற்றில்  இணைந்துள்ள செம்பியன் மாதேவியின் அறப்பணிகளையும் கலைப்பணிகளையும் விரிவாக நூல் எடுத்துரைக்கிறது. இச்செய்திகள் நூலின் முதல் பாகமாக 50 பக்கங்களில் கொடுக்கப்பட்ட பிறகு, இரண்டாம் பகுதியில் செம்பியன்மாதேவியின் பிற கோயில் பணிகள், அன்னாரின் கலைப்பணி, அவர் வழங்கிய செப்புத் திருமேனிகள், சோழ அரசர்க்கும் அவர்தம் தேவியரும் குறித்து இரண்டாம் பாகத்தில் 25 பக்கங்களுக்கு விளக்கப்படுகிறது. மூன்றாம் பாகமாகச் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் இணைக்கப்பட்டுள்ளது. 

          கோயில்களில்  எந்தெந்த பகுதியில் எந்தெந்த  திருவுருவங்கள் அமைக்கப்பட்டன என்ற செய்திகளைத் தரும் அட்டவணை நூலின் இரண்டாம் பகுதியில் இணைத்திருப்பது சிறப்பு.  சோழர்கால கோயில் கட்டுமான கலை வளர்ச்சியையும் மாற்றத்தையும்  அறிய இப்பகுதி உதவுகிறது. இப்பகுதிக்கு உதவும் வகையில் அவை பற்றியும்,  சிலைகள் குறித்த  படங்களும் கொடுக்கப்பட்டால் கோயில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியையும்  அறிந்து கொள்ள உதவும். செப்புச் சிலைகள் குறித்த  பட்டியல் நூலின் இரண்டாம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறந்த இணைப்பு.  செம்பியன் மாதேவியின்  கவின்மிகு இச்செப்புச் சிலையே இந்த நூலின் அட்டையிலும் இடம்பெற்றுள்ளது. 



          வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படுபவர் மதிக்கப்படுபவர் செம்பியன் மாதேவி.  இவர் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சில நூல்களும் முன்னரே வெளிவந்துள்ளன.  நூலின் முன்னுரைச் செய்தியானது, இந்நூலை வெளியிட்ட பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் முன்னர் அவர்கள் வெளியிட்ட வரலாற்று நூல்கள் விரைவில் விற்றுத் தீர்ந்தன என்கிறது . அவ்வாறே இந்நூலும் வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படும் வகையிலேயே அமைந்துள்ளது, அதனால் மறுபதிப்பு வெளியிடும் தேவையும் ஏற்படலாம்.  மேற்கொண்டு அடுத்த பதிப்புக்கு எடுத்துச் செல்கையில் நூலில் சிற்சில மாற்றங்கள் செய்யலாம். முதலாவதாக நூலில் ஆங்காங்கே தலைகாட்டும் தட்டுப்பிழைகளைச் சீர் செய்யலாம். செம்பியன்மாதேவி வரலாற்றுக்கு எவ்வகையிலும் தொடர்பு இருப்பதாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்திருக்கும்,  நூலின் மூன்றாம் பாகமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் பகுதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நூலில் இடம் பெறும் கோயில்கள், அவற்றின் சிலைகள், கல்வெட்டுகள்  போன்றவற்றின் படங்களை இணைக்கலாம். அவை நூலின் செய்தியை விளக்கமாக அறிந்து கொள்ளவும் களத்திற்குப் பார்வையிடச் செல்வோருக்கு ஒரு கையேடாகவும் துணைபுரியும்.

செம்பியன் மாதேவியார்
          "செம்பியன் மாதேவி" (கி.பி 910 – 1001) சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூர் என அறியப்படும் செம்பியன் கிழானடி நல்லூரில் அமைந்துள்ளது.   'மழவரையர் மகளார் கண்டராதித்தர் தேவியார் உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த  பராந்தகன் மாதேவடிகளார் செம்பியன் மாதேவியார்' என்று கல்வெட்டுகளில் செம்பியன் மாதேவியார் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். மழவர் நாட்டின் திருக்கோயிலூரில் மழவர் குலப்பெண்ணாகப்  பிறந்து,  மிக இளம் வயதில் (முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகனான) கண்டராதித்த சோழரின்  இரண்டாவது மனைவியானவர் செம்பியன் மாதேவியார். இவர் குறித்த முதல் கல்வெட்டு 941 ஆம் ஆண்டில் பராந்தகச்  சோழனின் காலத்தைய கல்வெட்டாகத்  திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில்  கிடைத்துள்ளது. அதில் இவர் நந்தா விளக்கெரிக்க ஆடுகளைக் கொடையாக அளித்துள்ளார் என்ற செய்தி உள்ளது.  

          இவரை மணந்த கண்டராதித்தர் 949 ஆம் ஆண்டில் முடிசூடி எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்து 956 ஆம் ஆண்டில் மறைந்துவிடுகிறார்.  பதினைந்து ஆண்டுகளே நீடித்த இவரது திருமண வாழ்விற்குப் பிறகு சிறுவனான தமது மகன் மதுராந்தகன் என்ற உத்தமசோழனை  வளர்த்து அவன் முடிசூட்டி  ஆண்ட பொழுதும், அவனும் மறைந்து அவனுக்குப் பிறகு ராஜ ராஜ சோழன் முடி  சூட்டி ஆளத் துவங்கிய பிறகும் என 60 ஆண்டுகள் இவர் இறைப்பணியில் ஈடுபட்டதைக் குறித்து ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தைய  1001 ஆம் ஆண்டின் கல்வெட்டும் கிடைத்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆக, இவர் முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், தமது மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன், இராஜ இராஜ சோழன் எனச் சோழ அரசர்கள் பலரின்  அரசாட்சிக்  காலங்களைக் கண்ட சோழ அரசகுல முதுபெரும் தேவியாவார்.   செம்பியன் மாதேவி என்பது இவருடைய பட்டப் பெயராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பிற்காலத்தில் 'மதுராந்தகன் மாதேவடிகள் ஆன செம்பியன் மாதேவியார்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். 

          இவர் ஆற்றிய இறைப்பணிகள்;  
                    1. செம்பியன் மாதேவியார் புதியதாகக் கட்டிய கோயில்கள், முன்னர் செங்கல் தளிகளாக (கோயில்களாக) இருந்தவற்றை அவர் கற்றளிகளாக மாற்றியவை,
                    2. முன்னர் இருந்த கோயில்களில் செய்த திருப்பணிகள், அவற்றில் புதியதாக இணைத்த பகுதிகள் மற்றும் சிற்பங்கள், 
                    3. அவர் தான் எடுப்பித்த கோயில்களுக்கும் முன்னர் இருந்த கோயில்களுக்கும் வழங்கிய பொருட்கொடைகள்  
என மூன்று வகையில் பிரித்தறியப்படுகிறது.

          செங்கல் தளியிலிருந்து செம்பியன் மாதேவியரால் முதலில் கற்றளியாக மாற்றப்பட்ட கோயில் கோனேரிராஜபுரம் கோயில். அவரது மகன் உத்தம சோழனின் மூன்றாம் (கிபி 972 இல்) ஆட்சி யாண்டில் அவரது தந்தை  கண்டராதித்தர் நினைவாகக் கட்டப்பட்டது.  இக்கோயிலில் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியும் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்புச் சிற்பமும் அதுகுறித்த கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில் கண்டராதித்தர் லிங்கம் முன் அமர்ந்து வணங்க, அவருக்குப் பின்னர் இருவர் வெண்சாமரமும், வெண் கொற்றக்குடையும் ஏந்த, லிங்கத்தின் அருகாமையில் அதற்கு மாலை சூடும் வகையில் செம்பியன் மாதேவி வணங்கியபடி நிற்பார் (பார்க்க: பக்கம் 14). 


          தரையில் அமர்ந்து வணங்கும் கண்டராதித்தரைத் தவிரச் சிற்பத்தில் இடம் பெற்றுள்ள மற்றவர் குறித்து அடையாளம் காணுவதில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வெட்டில் காணப்படும் செய்தி: 
                    "ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளார் ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழன்  திரு ராஜ்ஜியம் செய்தருளா நிற்கத் தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லம்  உடையாற்கு திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத் திருக்கற்றளியிலேயே திருநல்லம் உடையாரை திருவடித் தொழுகின்றாராக எழுந்தருளுவித்த கண்டராதித்த தேவர் இவர்" 
என்று கல்வெட்டு கூறுகின்றது. திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் கோயிலின் கருவறையின் தென்சுவரில் இச்சிற்பத் தொகுதியும் கல்வெட்டும் காணப்படுகிறது. கோனேரிராஜபுரம் கோயில் கட்டிய சிற்பிக்கு 'இராசகேசரி மூவேந்த வேளாண்' என்ற பட்டமும் கொடுத்து  கருவறைச் சுவரிலேயே சிற்பம் அமைத்தும் பெருமை செய்துள்ளார் செம்பியன் மாதேவி. செம்பியன் மாதேவியாரின்  பணிகளைப் போற்றும் வகையில் நாகபட்டினம் அருகிருக்கும் ஊர் ஒன்றுக்கு செம்பியன்மாதேவி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. 

          சோழர் கால கட்டிடக்கலை முற்காலச் சோழர், இடைக்காலச் சோழர், பிற்காலச் சோழர் என மூன்று கட்டங்களில் அறியப்படுகிறது;  இடைக்காலமான  செம்பியன் மாதேவி காலத்தில் கருவறை அர்த்த மண்டபங்களில் உள்ள தேவகோட்டங்களின் (மாடங்கள்) எண்ணிக்கை அதிகரிக்கும் முறை துவங்கியது. பத்தாம் நூற்றாண்டில் தமிழக கோயில் கட்டிடக்கலையில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் செம்பியன் மாதேவி.  உயர்ந்த எண்ணிக்கையில், 16 தேவகோட்டங்கள் வரை விரிவாக்கப்பட்டுள்ளது.  உத்தம சோழர் காலத்திற்குப் பிறகு கோயில் சிற்பங்களின் எண்ணிக்கையும் வகைகளும் அதிகரித்தாலும், அவற்றின் எழிலும் நளினமும் முந்தைய கால சிலைகளின் தோற்றத்துடன் ஒப்பிடுகையில் குறைந்து விட்டது என்பதும் சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இதற்குக் கற்களைத் தேர்வு செய்த முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் என்றும் ஐயுறுகிறார்கள். 

          சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.  இவர் காலத்தில் செப்புத் திருமேனிகள் வடிக்கும் கலை மிதமிஞ்சிய வேகத்தில் வளர்ச்சியடைந்தது. பலவகை தெய்வங்களின் உருவங்களும் செப்பு வடிவம் பெற்றனர். கோயிலில் மூலவர் சிற்பங்கள் கருங்கற்களால் ஆன நிலையான சிற்பங்கள் என்பதால், விழாக் காலங்களில் இறைவனைப் பல்லக்கிலும்,  வீதியுலாவிற்காகக் கொண்டு செல்ல பஞ்சமூர்த்திகள் (ஐந்து இறைவர்கள் - சிவன், உமை, பிள்ளையார், முருகன், சண்டிகேசுவரர் என்று குடும்பமாக) தனித்தனியாகத்  தேர்களிலும் எடுத்துச் செல்லும் வழக்கம் தோன்றியதால் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம் ஆகிய ஐம்பொன்களின் உலோகக் கலவைகளில் சிலைகள் உருவாக்கப்பட்டன.  ஒவ்வொரு கோயிலும் குறைந்த அளவு இந்த ஐவர் செப்புச் சிலைகளையாவது  கொண்டிருப்பது வழக்கம்.  



          நெடிய ஒடிசலான உருவத்துடன்,  குறைந்த அணிகலன்களும், இடையில் மட்டும் உடையணிந்து திறந்த மார்புடன், தலையில் உயர்த்தி முடியப்பட்ட கொண்டையுடன், நீண்ட துளையுள்ள காதுகளுடன் கையில் தாமரை மலர் பிடிப்பது போன்ற முத்திரையுடன் உடைய புகழ் பெற்ற செப்புச் சிலை செம்பியன் மாதேவிக்கும் உண்டு. அது அவரது மகன் உத்தமசோழனால் தனது தாய் பிறந்த சித்திரைத் திங்கள் கேட்டை நட்சத்திர நாள் விழாவில் வீதியுலா செல்ல உருவாக்கப்பட்ட சிலை எனப்படுகிறது. இச்சிலையின்  அமைப்பில்தான்  இறைவி பார்வதியின் சிலைகளும் வடிக்கப்படுவது வழக்கம். இறைவிக்கு இணையாக இவர் கருதப்பட்டிருப்பதை இதனால் அறிய முடிகிறது. சோழர்கால செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்றும் கருதப்படுகிறது. 

          கோயில்களைப் புதிதாகக் கட்டுவதையும் புதுப்பித்துக் கட்டுவதையும் கடந்து;  அக்கோயில்களில் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், விழாக்கள் நடக்கவும், விளக்குகள் தொடர்ந்து எறியவும் என எண்ணிறைந்த கொடைகளையும், செல்வங்களையும், பொற்கழஞ்சுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும், செப்புச் சிலைகளையும், அணிமணிகளையும் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார்  செம்பியன் மாதேவி.  மங்கலநாண் அல்லது தாலி அணிவது தமிழர் மரபிலிருந்ததா என்ற வினா சென்ற நூற்றாண்டில் ம.பொ.சி., மற்றும் மா. இராசமாணிக்கனார் போன்ற பெரும் தமிழறிஞர்களை இரு பிரிவுகளாக விவாதத்தில் இறக்கியது.  மா. இராசமாணிக்கனார் பிரிவினர் தாலி திருமணத்தில் மரபு வழக்கானது  பிற்காலமே என்ற கருத்தை முன்வைத்தனர். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோனேரிராஜபுரம்  கோயிலின் துர்கை சிலையில் கழுத்தில் மங்கலநாண் அணிந்துள்ளவராகக் காட்டப்படுகிறார். அதுமட்டுமின்றி, விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றத்தின் பழமலைநாதர் கோயிலின் இறைவிக்கு அரைகழஞ்சு எடையுள்ள பொற்றாலி, மூன்று  குண்டுமணிகள் ஆகியவற்றைக் கூரைப்புடவையுடன் செம்பியன் மாதேவி கொடையளித்த கல்வெட்டுச் செய்தியும் கிடைக்கிறது. இதிலிருந்து நாம்  உறுதியாக 10 ஆம் நூற்றாண்டில் திருமணமான பெண்கள் தாலி அணிந்தனர் எனவும்  அறிய முடிகிறது. 

          சோழர் காலத்தில் அரச மகளிரின் ஆளுமை, கொடைத்தன்மை, செல்வ நிலை ஆகியன எந்த அளவு உயர்ந்த நிலையிலிருந்தது என்பதற்குச் சான்று செம்பியன் மாதேவியின் வாழ்வு.   அறப்பணி மற்றும் கலைப்பணிகளுடன், செம்பியன் மாதேவியின் சிறப்பாக நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியது அவருடைய வரலாறு காக்கும் செயல்கள்.  அதன் காரணமாகவே இவர் ஒரு வரலாற்று நாயகி என அழைக்கப்பட வேண்டியவர். இவர் தாம் புதுப்பித்த செங்கற் கோயில்களின் பழைய கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றைப் புதுப்பிக்கப்பட்ட கற்றளிகளின் கட்டுமானங்களில் இடம் பெறச் செய்தார். அவ்வாறு  (26 கல்வெட்டுப் படிகள்) பொறிக்கப்படுகையில் இது 'ஒரு பழங்கல்படி' என்ற வரியையும் அவற்றில்  வெட்டுவித்தார்.  அவ்வாறு பழங்கல்படி எடுக்கையில் ஆடுதுறைக் கோயிலிலிருந்த வரகுணபாண்டியனின் கல்வெட்டையும், அவர் ஓர் எதிரி நாட்டு அரசனான பாண்டியனாக இருந்தாலும் கூட அவரது கல்வெட்டையும் படியெடுத்துப் பாதுகாத்து வரலாற்றை ஆவணப்படுத்துவதில் அவர் காட்டிய அக்கறைக்காகவே செம்பியன் மாதேவி போற்றப்படவேண்டிய ஒரு வரலாற்று ஆளுமை என்றால் அது மிகையல்ல. 




நூல் விவரம்:
செம்பியன் மாதேவி (வாழ்வும் பணியும்)
பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்
பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு 
செப்டெம்பர் 2019 
பக்கங்கள்:120
விலை: ரூ. 100/-
ISBN: 978-93-89146-75-2

நன்றி: கண்டராதித்தர் சிற்பம் - கல்வெட்டு பட உதவி, திரு. மாரிராஜன், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்

 
நன்றி:  "சிறகு" மின்னிதழ் 





தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)







Tuesday, December 17, 2019

கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் ஆ.பத்மாவதி அளிக்கும் வரலாற்று விளக்கங்கள்




கேள்வி: 
திருப்புறம்பியம் போர்  பற்றிய தரவுகள் எங்கெங்கு உள்ளது? யார் யாருடன் கூட்டணி?  ஆதித்தன் அபராஜிதனைக் கொன்றது அப்போரிலா? அல்லது வேறு எங்காவதா? முழுமையான விவரங்கள் என்ன?

விளக்கம்:
திருப்புறம்பியம் போர் பற்றிய நேரடித்தரவுகள், முதலாம் பராந்தகன் ஆணைப்படி இரண்டாம் பிரித்வீ வழங்கிய உதயேந்திரம் செப்பேடு சமஸ்க்ருதப்பகுதியில் 18 ம் சுலோகமாக உள்ளது.

இவ்விவரத்தை அறிவதற்கு முன்பாக;  இப்போர் நடைபெற்ற காலத்திய அரசர்கள் மற்றும் அப்போதைய சூழ்நிலை  பற்றிய ஒரு தெளிவு தேவையாகிறது.

இக்காலத்திய அரசர்கள்:
பல்லவன் நிருபதுங்கன்
நிருபதுங்கனின் சகோதரர் கம்பவர்மன்
கம்பவர்மனின் மகன் அபராஜிதன்
இக்காலத்தைய பாண்டிய வேந்தன் இரண்டாம் வரகுணவர்மன். இவன் ஆட்சிக்கு வந்த ஆண்டு ஐவர் மலையில் உள்ள சக ஆண்டு கல்வெட்டுச் சான்றுபடி கி.பி.862.
சோழர்கள், முத்தரையர்கள் மற்றும் குறுநில சிற்றரசர்கள்.

சோழநாட்டின் சிற்றரசர்களான முத்தரையர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களை மாறி மாறி ஆதரித்தனர்.

இரண்டாம் வரகுணபாண்டியனின் கல்வெட்டுகள் சோழதேசப்பகுதிகளான திருக்கோடிக்கா, திருச்சாத்துறை, நியமம் போன்ற பகுதியில் இருப்பதால் சோழ நாட்டில் வரகுணனது ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டதை அறியலாம்.  திருவதிகையில் உள்ள நிருபதுங்கனுடைய 18 ம் ஆட்சி யாண்டு கல்வெட்டு ஒன்றில், வரகுணபாண்டியன் தானம் அளிக்கிறான். ஆக இவ்விருவரும் பகைமை இல்லாமல் இருந்துள்ளனர் (S.i.i. vol 13 no 71).

அபராஜிதனின் வேலஞ்சேரி செப்பேட்டில் சில தரவுகள்:
கம்பவர்மனின் சகோதரனான நிருபதுங்கனை விரட்டிவிட்டு, கம்பவர்மனின் மகனான அபராஜிதன் ஆட்சிக்கு வருகிறான். ஆகவே, அபராஜிதனுக்கும் நிருபதுங்கனுக்கும் வாரிசுரிமைப் போட்டி இருந்தது. இதே செப்பேட்டில் அபராஜிதன் யானைகளின் துணை கொண்டு  தான் ஒரு சோழனை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளான். காலக்கணக்கின்படி அபராஜிதன் வென்ற சோழன் முதலாம் ஆதித்தனாக இருக்கலாம்.

திண்டுக்கல் அருகே உள்ள கல்வெட்டு ஒன்றில், வரகுணபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று இடவை என்னும் நகரைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது (Vol 14 no.26). சின்னமனூர் செப்பேட்டில் கங்க சோழ பல்லவர்களை வென்றேன் என்கிறான்.

இவை எல்லாம் திருப்புறம்பியம் போர் நடைபெறுவதற்குச் சற்று முன்பு நடந்த சம்பவங்கள்.

இனி..
திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி, முன்னமே கூறியபடி உதயேந்திரம் செப்பேட்டில் உள்ளது.

கங்கமன்னனான இரண்டாம் பிரித்வீபதி, அபராஜிதனுக்காக பாண்டிய வரகுணனை வென்றான். பிறகு அப்போர்க்களத்திலேயே பிரித்வீபதி உயிர்நீத்தான்.

Having defeated by  force the pandya lord varaguna at the head of the great battle of Sripurambiya, and having (thus) made(his) title aprajita (ie, unconquared) significant. This hero entered heaven of (his) friend by sacrificing his own life.

Udayandram plates of prithivipati 2
S.i.i. vol. 2. No 76
P.381 . & 387 .V.18

ஆக, இப்போர் அபராஜிதனுக்கும், வரகுணபாண்டியனுக்கும் நடந்ததாகத் தெரிகிறது. இதில் ஆதித்தச் சோழனோ, நிருபதுங்கனோ குறிப்பிடவில்லை. இச்செப்பேடு பராந்தகனின் அனுமதியுடன், இரண்டாம் பிரித்வீபதியால் வெளியிடப்படுகிறது. இச் செப்பேட்டில்  இப்போர் நடைபெற்ற செய்தி இருப்பதால், இப்போர் சோழர்களுக்குச் சாதகமான ஒன்று. 

உயிர்நீத்த முதலாம் பிரித்வீபதியின் பேரன் இரண்டாம் பிரித்வீபதி, பராந்தகனுடன் இணைந்து பாணர்களை வென்று செம்பியன் மாவலிவாணராயன் என்னும் பட்டமும் பெறுகிறான். ஆக, திருப்புறம்பியம் போரில் சோழர்கள் பாண்டியர்களுக்கு எதிராகவே இருந்திருப்பர்.

திருப்புறம்பியம் போர் நடைபெற்ற காலத்திற்கு பிறகான, கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் உள்ள கல்வெட்டு;  கன்னரன் என்பவன் பழையாறை, ஸ்ரீபுறம்பியத்தில் பாண்டியனை வென்று, பல்லவனை வென்று கங்கனைக் கொன்றேன் என்கிறான்.

இது நம் திருப்புறம்பியம்தானா? கன்னரன் என்பது யார்? முதலாம் ஆதித்தனுக்குப் பெண் கொடுத்த மாமனாரா?  திருப்புறம்பியம் போரில் ஆதித்தனுக்கு உதவினானா? பாண்டியனை வென்றது வரகுணனை என்றால், பல்லவனை வென்றேன் என்பது யார்? அபராஜிதனையா? சோழர்கள் பக்கம் நின்ற கங்கனை வென்றது ஏன்? கங்கனைக்கொன்று பூவல்லபனுக்கு உதவிசெய்தேன் என்பதால், இக்கல்வெட்டிற்கும் திருப்புறம்பியம்  போருக்கும் யாதொரு தொடர்பும் இல்லையோ?

தெளிவான முடிவு யாதெனில்;  திருப்புறம்பியம் போரில், அபராஜிதன் வெல்கிறான். வரகுணபாண்டியன் தோற்று பின் வாங்குகிறான். சோழநாட்டின் மீது இருந்த பாண்டியர்களின் ஆதிக்கம் விடுபட்டது. அபராஜிதன் கூட்டணியில் இருத்த முதலாம் பிரித்வீபதி உயிர்நீத்தான். சோழர்கள் அபராஜிதன் பக்கம் இருந்து பாண்டியனை எதிர்த்தார்கள்.

இப்போரின் விளைவாகச் சோழர்கள் தன்னாட்சி உரிமை பெற்றிருக்கலாம். சில காலத்திற்குப்பிறகு முதலாம் ஆதித்தன் தொண்டை நாட்டின் மேல் படையெடுத்தான். அபராஜிதனைக் கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றுகிறான். தொண்டை நாடு பரவின சோழன் என்னும் பெயர் பெற்றான். 

தில்லைஸ்தானம் கல்வெட்டு, தொண்டைநாடு பரவின சோழன் பல் யானை கொக்கண்டனான ராஜகேசரி பர்மனான (S.i.i. vol 3 no 89) என்கிறது. திருவலங்காடு செப்பேடும் (49 ) ஆதித்தன் அபராஜிதனை வென்றதைக் கூறுகிறது. திருப்புறம்பியம் போரில் பெரு வெற்றி பெற்ற அபராஜிதனின் எந்த ஒரு கல்வெட்டும் இப்போர் நிகழ்வைப் பதிவு செய்யவில்லை. மிக விரைவாகவே அபராஜிதனை, ஆதித்தன் வென்றிருக்கிறான்.

இதனைத் தொடர்புப் படுத்தும் மேலும் ஒரு தொல்லியல் சான்று. திருவிந்தளூர் செப்பேடு. விஜயாலயன் தஞ்சாபுரியை கம்பவர்மனிடமிருந்து கைப்பற்றினேன் என்கிறான். ஆதித்தனின் தந்தை விஜயாலயன். அபராஜிதனின் தந்தை கம்பவர்மன். திருப்புறம்பியம் போர் நடைபெற்ற ஆண்டு கி.பி. 880 என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு.


கேள்வி:
ஆதித்த கரிகாலன் திருமணம் ஆனவரா?

விளக்கம்:
நேரடியான தரவுகள் இல்லை, என்றாலும்; ஆதித்த கரிகாலன் இளவரசனாக முடிசூட்டப்பட்டவர். மணம் செய்தவரே அரசனாக முடிசூடும் மரபு இருப்பதால் ஆதித்த கரிகாலன் திருமணம் ஆனவரே.


கேள்வி:
பல்லவ அரசர்கள் சிம்மவிஷ்ணு முதல் அபராஜிதன் வரை ஆட்சிசெய்த சரியான காலம் எது?

விளக்கம்:
ஒவ்வொரு அரசரின் ஆட்சிக்காலத்தை நிறையத் தரவுகள், கணக்கீடுகள் செய்து தீர்மானிக்க வேண்டும்.
இப்போதைக்கு...
சிம்மவிஷ்ணுவின் தந்தை சிம்மவர்மன் --  கி.பி.540 - 556.
அபராஜிதன் -- கி.பி.870 - 888.
ஆகவே,  பிற்காலப் பல்லவர்களின் காலம் -- கி.பி. 540 - 888.


கேள்வி:
இதுவரை இந்தியாவில் வெளியிடப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?  மற்ற மொழிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

விளக்கம்:
துறை சார்ந்த, நெருக்கமான எண்ணிக்கை இது:
தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 66,500
தெலுங்கு மொழிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 10,000
கன்னட மொழிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 13,000
சமஸ்கிருத  கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 7,500 - 10,000
மற்றவை --  500


கேள்வி:
திருமுறைகண்ட சோழன் என்னும் இராஜராஜனின் விருதுப் பெயர் கல்வெட்டுகளில் உள்ளதா?

விளக்கம்:
கல்வெட்டுகளில் இல்லை.  கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறைகண்ட புராணம் சொல்கிறது. இது ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.


கேள்வி:
களப்பிரர் பற்றிய தங்கள் பார்வை என்ன?  குறிப்பாய் அவர்கள் பின்பற்றிய சமயம் எது?

விளக்கம்:
களப்பிரர்கள் என்பவர் தமிழர்கள் கூட்டணி. இதில் கர்நாடகத் தலைவர்களும் உள்ளனர். களப்பிரர் ஆட்சி என்பது தமிழர் ஆட்சி. வைதீகத்திற்கு எதிரானவர்கள். பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள். (விரிவாக எனது களப்பிரர் பற்றிய நூலில் எழுதியுள்ளேன். விரைவில் அந்நூல் வெளிவரவிருக்கிறது)


கேள்வி:
இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் காணப்படும் அவர் வெற்றி கொண்ட நாடுகளின் இன்றைய பெயர் என்ன?

விளக்கம்:
மிகுந்த ஆய்வுக்குரிய ஒன்று. அவரது மெய்க்கீர்த்தியில் உள்ள ஒரு சில இடங்கள் எங்குள்ளன என்பதை அறிவது மிகுந்த சிரமமாய் உள்ளது. பல தொல்லியல் அறிஞர்களிடம்  பல்வேறு கருத்துகள் உள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாஸ்திரி அவர்கள் தனது சோழர்கள் நூலில் விரிவாக எழுதியுள்ளார். இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி அழகான ஒன்று. தான் வென்ற நாடுகளைக் கூறும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விருதுப்பெயருடன் அழகான தமிழில் கூறுவது சிறப்பானது.

சில வரிகளைப்பாருங்கள்;
தொடர்வன வேலி படர் வனவாசி (காடுகள் சூழ்ந்த வனவாசி)
நண்ணற் கருமுரன் மண்ணைக் கடகம் (உடைக்க முடியாத அரண்களைக் கொண்ட மண்ணைக்கடகம்)
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலை தொல் பெருங் காவற் பல் பழந்தீவு
மேவருஞ் சாந்திமத்தீவு (எவரும் நெருங்க அஞ்சும் சாந்திமத்தீவு)
விக்கிரம வீரர் சக்கரக்கோட்டம் (வீரம் கொண்ட வீரர்கள் நிரம்பிய சக்கரக்கோட்டம்)
வெஞ்சின வீரர் பஞ்சப்பள்ளி.
வண்டுறை சோலை தண்டபுத்தி.
தங்காத சாரல் வங்காள தேசம் (எப்போதும் மழை பொழிந்துகொண்டிருக்கும் வங்காளம்)
நிறை சீர் விசயமுந் துறைநீர் பண்ணை.
ஆழ்கடலகழ் சூழ் மாயிருடிங்கம்.
தொடு கடற் காவற் கடு முரட் கடாரம்.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் அழகான காரணத்துடன் முன்னொட்டாக உள்ளது. அழகான தமிழ். எதுகை மோனை வரிகள். தமிழனின் வீரம் சொல்லும் சாதனைப் பட்டியல்.   மெய்க்கீர்த்தி முழுவதையும் வாசித்துப்பாருங்கள். அனைத்தும் தக்கத் தொல்லியல் சான்றுகளுடன் கூடிய உண்மை.  தமிழரின் வீரவரலாறு.

இனி; இராஜேந்திரன் வெற்றி கண்ட நாடுகளின் இன்றைய பெயர்கள். சாஸ்திரி தொகுத்தபடி, சாஸ்திரியின் நூலில் விரிவாகக் காணலாம்..

இடைதுறை நாடு: கிருஷ்ணா ஆற்றுக்கும் துங்கபத்திரா ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி. இப்போதைய ரெய்ச்சூர் மாவட்டம்.
கொள்ளிப்பாக்கை: ஹைதராபாத் அடுத்துள்ள இப்போதைய குல்பர்கா.
மண்ணை கடகம்: இன்றைய மால்கேட்
ஈழம்: இலங்கை.
கேரளம்: இன்றைய கேரளம்.
சாந்திமத் தீவு: அரபிக்கடலில் உள்ள ஒரு தீவு.
முயங்கி: பெல்லாரி மாவட்டத்தில் உள்ள உச்சங்கிதுர்க்.
இரட்டபாடி, ஏழரை இலக்கம்: பெல்லாரி, மைசூர்
சக்கரக்கோட்டம்: விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் என்னும் நகரம். இது சித்திரக்கொட்டா என்றும் அழைக்கப்படுகிறது.
ஒட்டதேசம்: இன்றைய ஒரிஸா.
மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம், ஆதிநகர், உதய்பூர், கோசல நாடு ஆகியனவும்...
தண்ட புத்தி: ஒரிஸாவிற்கும் வங்காளத்திற்கும் இடைப்பட்ட ஒரு பகுதி.
தக்கண லாடம்: மேற்கு வங்காளத்தில் உள்ள ஹௌரா.
உத்ரலாடம்: வங்காளத்தின் மையப்பகுதி.
ஸ்ரீ விஜயம்: சுமத்ரா தீவு.
பண்ணை: சுமத்ராவின் கீழக்கரையில் உள்ள பன்னெய் என்று அழைக்கப்படும் ஊர்.
மலையூர்: மலேயா தீபகற்பத்தின் வடக்கே மலாயூர் ஆற்றப்பகுதி இடம்.
மாயிருடிங்கம்: மலேயாவில் உள்ள ஜையா.
இலங்கா சோகம்: மலேயா, விங்யாசென்கியா.
பப்பாளம்: கீழைப் பர்மாவில் உள்ள ஒரு ஊர்.
மேவிலம் பங்கம், வளைப்பந்தூரு: இவ்விரண்டு இடம் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெறவில்லை
தலைத்தக்கோலம்: மலேயாவின் கீழக்கரையில் உள்ள தெமிலிங் என்னும் நகரம்.
இலாமுரிதேசம்: சுமத்ராவின் வடபகுதி.
மானக்கவாரம்: நிக்கோபார் தீவுகள்.
கடாரம்: மலேசியாவில் உள்ள கெடா.


கேள்வி:
சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாக எங்கெங்கு உள்ளன?

விளக்கம்:
1.  கண்டராதித்தர்:


இடம் - திருநல்லம் என்ற கோனேரிராஜபுரம் மற்றும் ஆடுதுறை.  கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம். இவ்வூரில் செம்பியன் மாதேவியார் தனது கணவர் கண்டராதித்தர் பெயரில் கண்டராதித்தம் என்னும் ஒரு கோவில் எழுப்பியுள்ளார். கோவில் கருவறையின் தென்புறச்சுவற்றில் ஒரு சிற்பமும் அதன் கீழ் ஒரு கல்வெட்டும் உள்ளது.
கல்வெட்டின் இறுதிப்பகுதி;
"ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருள்வித்து இத்திருக்கற்றளியிலே திருநல்லமுடையாரைத் திருவடி தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீ கண்டராதித்த தேவர் இவர்..." (S.i.i. vol 3. No 146).
என்று குறிப்பிடுகிறது. இச்சிற்பத்தில்  இறைவனை வணங்குபவராக இருப்பவர் கண்டராதித்தர் என்று கல்வெட்டு கூறுகிறது. இச்சிற்பத்தில் லிங்கத்திற்குச் சிவாச்சாரியார் ஒருவர் ஆடை சுற்ற, லிங்கத்தின் எதிரே கால்களை மடித்து அமர்ந்து வணங்குகிறார் கண்டராதித்தர்.

2.  முதலாம் ஆதித்தன்:
இடம் - திருக்கருகாவூர். பாபநாசம் அருகே அமைந்த திருக்கருகாவூர். கோவிலின் கருவறை ஆதித்தன் காலம். கருவறையின் பின்புறம் தேவ கோட்டத்தின் இருபுறமும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிற்பம் உள்ளது. இது முதலாம் ஆதித்தன் மற்றும் அவரது தேவியர் என்று திரு.பட்டாபிராமன் குறிப்பிட்டுள்ளார்.

3.  முதலாம் பராந்தகன்:

இடம் - கரந்தை. தஞ்சாவூர், கருந்தட்டாங்குடி வசிட்டேஸ்வரர் ஆலய கருவறை  அதிட்டானத்தில் ஒரு அரசன் சிவலிங்கத்தை வணங்குவது போல் உள்ள ஒரு சிற்பம். இந்த அதிட்டான பட்டிகை பராந்தகன் கலையமைதி  என்பதால் இவர் முதலாம் பராந்தகனாக இருக்கக்கூடும்.

4.  இராஜராஜன்:

இடம் - திருவிசலூர்.  கும்பகோணம் அருகே உள்ள திருவிசலூர் யோகநந்தீஸ்வரர் ஆலயம்.  இக்கோவிலில் முதலாம் இராஜராஜன் தனது தேவியார் லோகமாதேவியாருடன் துலாபாரம் செய்து இரணியகர்ப்பம் புகுந்த செய்தி கல்வெட்டாக உள்ளது.  கருவறையின் தென்புறச்சுவற்றில் இராசராசனும் அவனது தேவியும் லிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது.  இச்சிற்பம் பழுதுபட்டுத் தேய்ந்து போனதால், இப்போது நாம் பார்ப்பது பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றாகும்.

5.  செம்பியன் மாதேவி:
இடம் - சக்கரப்பள்ளி மற்றும் செம்பியன் மாதேவி.

அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கரப்பள்ளி. அர்த்தமண்டபச் சுவரின் வெளிப்பக்கம் கோட்டங்களுக்கு நடுவில் ஒரு சிற்பத்தொகுதியும் ஒரு கல்வெட்டும் உள்ளது. இக்கோவில் செம்பியன் மாதேவியரால் திருப்பணி செய்யப்பட்ட ஒன்று.  ஒரு மேடைமீது ஒரு சிவலிங்கத்திற்கு மாலை சூட்டப்பட்டு, இருபுறமும் குத்துவிளக்குகளும், லிங்கத்தின் மேல் ஒரு குடையும் இரண்டு சாமரங்களும் காட்டப்பட்டுள்ளது. எதிரே செம்பியன் மாதேவியார் இரு கரம் கூப்பி இறைவனை வணங்குகிறார். அவரின் பின்னே பணிப்பெண் ஒருவர் கையில் மாலையைப் பிடித்தவாறு உள்ளார்.


நாகை அருகே உள்ள செம்பியன் மாதேவி என்னும் ஒரு கிராமம். இவ்வூர் அம்மையின் பெயரிலேயே அமைந்த ஊர். இங்கு நின்ற நிலையில் கரம் கூப்பி வணங்குவதுபோல் செம்பியன் மாதேவியின் சிற்பம் உள்ளது.

6.  இராஜேந்திரன்:
இடம் - திருவாரூர், பனையாவரம், மானம்பாடி.

திருவாரூர் கோயிலின் இரண்டாம் திருச்சுற்று வடமேற்கு மூலையில் உள்ள ஒரு சிற்பம் இராஜேந்திரன் மற்றும் பரவை நங்கையின் படிமமாக உள்ளது.  விழுப்புரம் அருகே உள்ள பனையாவரம் என்னும் பரவைபுரம். இக்கோவிலில் இராஜேந்திரசோழனுக்கும் பரவை நங்கைக்கும் சிலைகள் எடுத்து வணங்கியதாக இராஜேந்திரசோழனின் புதல்வர்களான இராசாதிராசனும், இரண்டாம் இராஜேந்திரனும் கூறும் கல்வெட்டு உள்ளது.


கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி கோவிலின் தென்புறத்தில் ஆடவல்லானை வணங்கும் தோற்றத்தில் இராஜேந்திரனும் அவனது தேவியர்களும் உள்ளனர்.

7.  மூன்றாம் குலோத்துங்கன்:

இடம் - குடவாயில், திருநள்ளாறு, திருவலங்காடு.  குடந்தை திரிபுவனம் அருகே உள்ள திருவலங்காடு கோயிலில் இருகரங்களும் கூப்பிய நிலையில் உள்ள ஒருவர்  வாள் ஒன்றை மார்போடு அணைத்துள்ள  அழகிய கற்படிமம் உள்ளது.  இவர் தலையின் மேல் திருவடிகள் இரண்டைச் சுமப்பதுபோல் அமைந்துள்ளது. இப்படிமம் மூன்றாம் குலோத்துங்கனின் உருவம் என்று குடந்தை சேதுராமன், S.R.பாலசுப்ரமணியன் மற்றும் நாகசாமி ஆகியோர் சான்றுகளுடன் விளக்கம் அளிக்கின்றனர்.

8.  இரண்டாம் ராஜராஜன்:

இடம் - உடையாளூர் மற்றும் தாராசுரம் (தற்போது தஞ்சை அருங்காட்சியகம்).  தாராசுரம் கோவிலை எழுப்பிய இராஜகம்பீரன் என்னும் இரண்டாம் இராசராசன் தனது தேவி புவனமுழுதுடையாளுடன் இருக்கும் படிமம் தாராசுரத்திலிருந்தது. தற்போது அச்சிற்பம் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது.  இதனை இவனது மகன் மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியில் காணப்படும் செய்திகளைக் கொண்டு உறுதி செய்யலாம். இதே அமைப்புடைய சிற்பத்தொகுதி ஒன்று உடையாளூர் கைலாசநாதர் ஆலய கருவறையின் முன்பாகவும்  உள்ளது.

9.  மும்முடிச்சோழனான கிருஷ்ணன் பிரம்மராயன்:

இடம் - திருவெண்காடு ( தற்போது தஞ்சை அருங்காட்சியகம்). திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவிலில் ஒரு செப்பு படிமம் ஒன்று பூமிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிமம் மும்முடிச்சோழன் பிரம்மராயன் கிருஷ்ணன் ராமன் என்பதாக ஒரு யூகம்.

10.  விக்ரமச்சோழன்:
இடம் - சிதம்பரம்.

11.  பாண்டியன் ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன்:
இடம் - திருப்பரங்குன்றம் துர்க்கை குடவரை.

12.  சடாவர்மன் சுந்தரபாண்டியன்:
இடம் - தஞ்சை பெரியகோவில் அம்மன் கோவில்.


13.  மாமல்லபுரம் ஆதிவராகர் (பரமேசுவர மகாவராக விஷ்ணு கிரகம்)  குடவரையில் இரண்டு பல்லவ மன்னர்களின் சிற்பங்கள் உள்ளன.  இச்சிற்பங்களில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.




குடவரையின் வடக்குச் சுவரில் காணப்படும் ஒரு  சிற்பத்தில் மன்னன் ஒருவன் அரியணையில் அமர்ந்துள்ளான். இடது கையை தோளின் மீது வைத்து, வலக்கை முத்திரை ஒன்றை அமைக்கிறது. மகுடம் சூடி, காதணிகளை அணிந்துள்ளான். இருபுறமும் அவனது இரு தேவியர் நிற்கின்றனர். இச்சிற்பத்தின் மேலே "சிம்ம விண்ணப் போத்திராதிராசன்" என்ற பெயர் கிரந்த கல்வெட்டாக உள்ளது.



தென்புறச் சுவரிலும்  ஒரு சிற்பத்தில் மன்னன் ஒருவனும் அவனது இரு தேவியருடன் நிற்கின்றனர். மன்னன் தனது  இடது கையில் தனது தேவியின் கரம் பற்றியவாறு உள்ளார். அவற்றின் தோற்றம், அழகு, அணிகலன் என்று யாவும் ஒரு அரசனுக்குரியத் தோற்றம். இச்சிற்பத்தின் மேலே "மகேந்திர போத்திராதிராசன் " என்று எழுதப்பட்டுள்ளது.
(Archaeological Report  1922 - 3 p.94)

இவர்கள் இருவரும் சிம்மவிஷ்ணு மற்றும் முதலாம் மகேந்திரன் என்பதாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தை வலியுறுத்தி டாக்டர்.மீனாட்சி  தனது Administration and social life under pallavas என்னும் நூலில் இது முதலாம் நரசிம்மன் எடுத்த குடவரை. அச்சிற்பத்தில் இருப்பது சிம்மவிஷ்ணு மற்றும் முதலாம் மகேந்திரன் என்கிறார்.

இச்சிற்பத்தில் இருப்பது முதலாம் நரசிம்மன் மற்றும் அவரது மகன் இரண்டாம் மகேந்திரன் என்பதும்  ஒரு முடிவு (S.i.i. vol 12 no 17). சிலைகளின் மேல் உள்ள கல்வெட்டுகளை நன்கு ஆராய்ந்து இவர்கள் இராசசிம்மன் மற்றும் அவரது மகன் மூன்றாம் மகேந்திரன் என்ற நாகசாமியின் கூற்று சரியாக இருக்கலாம்.

மேலும் பல கோவில்களில் பல மன்னர்களின் சிற்பங்கள் உள்ளது. மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள விஜயநகர மன்னர்கள் மற்றும் சிற்றரசர்களின் உருவங்கள் என்று ஏராளமாய் உள்ளன.


கேள்வி:
புதுக்கோட்டை பரிவாதிநி கல்வெட்டு யாருடையது? அதன் காலம் என்ன?

விளக்கம்:
குடுமியான்மலை கருவறையின் வலப்பக்கம் மற்றும் திருமய்யம் குடவரைக் கோவில் வடசுவரிலும் இக்கல்வெட்டு காணப்படுகிறது. புதுக்கோட்டை அருகே உள்ள மலையக்கோவிலிலும் தெளிவாக அழகான ஒரு செவ்வகக் கட்டத்தினுள் பரிவாதிநி கல்வெட்டு இருக்கிறது.

கட்டத்தினுள் பரிவாதிநிதா என்ற பல்லவ கிரந்தத்திலும், அதன் கீழே தமிழ் மற்றும் கிரந்தத்தில்...

என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற்
( கிரந்தம்)

“கற்கப்படுவது காண்
ஞ்சொல்லிய புகிற்பர்க்கும் திமி
ழக் கந்திருவத்துக்கும் உரித்து”

என்ற வாசகங்களுடன் உள்ளது.

எழுத்தமைதி 7 ம் நூற்றாண்டு ஆகும். இக்கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் மகேந்திர வர்மனின் மற்ற குடவரையில் காணப்படும் எழுத்துக்களுடன் ஒத்துப்போவதால் இந்த பரிவாதிநி கல்வெட்டும் மகேந்திரனின் காலமே. பரிவாதிநி என்றால் ஒரு வீணை என்றும், இது ஒரு இசை சம்பந்தமுடைய செய்தி என்பதும் பெரும்பாலான அறிஞர்கள் முடிவு.


கேள்வி:
கருவூர்த்தேவர் பற்றிய சரியான தரவுகள் என்ன? அவர் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவரா?

விளக்கம்:
கருவூர்த்தேவர் ஒரு மிகச்சிறந்த சைவ சிவனடியார். தீந்தமிழ் பாடல்களால் 10 சிவதலங்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் 9 ஆம் திருமுறையில் தொகுக்கப்பட்டு பதிகங்களின் இறுதியில் கருவூரானேன் என்று தன் பெயரைக் கையொப்பமாக இட்டுள்ளார். இவரது காலம் கி.பி. 11 ம் நூற்றாண்டு.

ஆனால், இவர் இராஜராஜர் காலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கோ, பெரியகோவிலில் பல அற்புதங்களை நடத்தினார் என்பதற்கோ எவ்வித தொல்லியல் சான்றுகளும் இல்லை. கி.பி. 16 ம் நூற்றாண்டில், நாயக்கர் காலத்தில், வடமொழியில் எழுதப்பட்ட கருவூர் மான்மியம் என்னும் ஒரு நூல் கருவூர் புராணம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலில் கருவூர்த் தேவர் தஞ்சை பெரியகோவிலில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த நிகழ்வுகள் இதில் உள்ளன.  இந்நிகழ்வுகளுக்குச் சான்றுகள் இல்லை.  கருவூர்த்தேவரின் பெயர் எந்தக் கல்வெட்டிலும் இல்லை. மேலும், பெரியகோவில் ஓவியத்தில் இருப்பது கருவூர்த்தேவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் இராஜராஜரின் குரு என்றால் நிச்சயம் கல்வெட்டில் இடம்பெற்றிருப்பார்.

பெரியகோவிலில் இருக்கும் கருவூரர் சன்னிதி மிகவும் பிற்காலத்தில் எடுக்கப்பட்டது. ஆக, கற்பனைப் புனைவு (Myth) எனப்படும் கதைகளைத் தவிர்த்து சான்றுகள் அடிப்படையிலான உண்மை (Fact) எனப்படும் தரவுகளை அறிவோம். ஏற்கனவே கூறியது போல் இவர் ஒரு சிவனடியார். தில்லை திருச்சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேஸ்வரம், திருமுகத்தலை, திரைலோக்கியசுந்தரம், கங்கைகொண்ட சோழேச்சரம், தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர் ஆகிய இந்த பத்து சிவதலங்களைக் கருவூரர்  பாடியுள்ளார். இவ்வூர் அமைப்புகளையும், கோவில்களையும், நேரடியாகப் பார்த்து உணர்ந்து அனுபவித்துப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடலில் உள்ள செய்திகளை தொல்லியல் சான்றுகளாகக் கொள்ளலாம்.

படைகள் நிறைந்த மதிற்சுவர், அதனுள் நெடுநிலைமாடங்கள், மதிற் சுவரைச் சுற்றி அகழிகள், அகழியில் முதலைகள், எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் தஞ்சாவூர் மாளிகையில் வசிக்கும் பெண்கள்  இசைக்கும் யாழின் ஒலி, ஒலித்துக்கொண்டேயிருக்கும் களிறுகளின் பிளிறும் ஒலியும் என மதில் சுவர்கள் சூழ்ந்திருக்கும் தஞ்சை நகர்  என்று தஞ்சாவூர் பற்றி இவ்வாறு கூறுகிறார். அழகிய இளம் பெண்கள் நடனம் செய்யும் நாடகசாலை மதில் சூழ்ந்த தஞ்சைக் கோவில்தான் இராசராசேச்சரம். அன்றைய தஞ்சை, அதன் பெரியகோவில் பற்றி இவர் அழகுத்தமிழில் மிகுந்த ரசனையுடன் பாடியுள்ளார்.

கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்று வடமொழி கலப்பில் இருக்கிறது. ஆனால், கருவூர்த்தேவரோ 'இராசராசேச்சரம்' என்று கூறுகிறார். அற்புதமான தமிழ் மொழி பற்றாளர்.கங்கை கொண்ட சோழபுர இறைவனை 'கன்னலே தேனே அமுதமே' என்கிறார். இவருடைய அனைத்து திருமுறைப் பாடல் செய்திகளையும் வரலாற்றுத் தரவுகளாக, சான்றுகளாக எடுத்துக்கொள்க. புனைவுகளைத் தவிர்த்து உண்மைகள் உதவியுடன் தேடல்களைத் தொடருங்கள்.


கேள்வி:
மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவர் உத்தமசோழனின் மகன்தானா?

விளக்கம்:
ஆம்; மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவர் ஒரு அரசகுலத் தோன்றலாக உத்தமசோழனின் ஒரு சில கல்வெட்டுகளிலும், இராஜராஜனது கல்வெட்டுகளிலும் வருகிறார். இவரது பெயர் அமைப்பை வைத்து  இவர் உத்தமசோழனின் மகன்தான் என உறுதி செய்கின்றனர்.

இராஜராஜனின் 7 ஆம் ஆட்சி யாண்டு குறித்துக் கூறும் திருவல்லம் கல்வெட்டில் மதுராந்தகன் கண்டராதித்தனார் என்பவர் இறைவனை வணங்கி அங்கு நடந்த சில தவறுகளைக் கண்டறிந்தார் என்ற செய்தி உள்ளது. திருவல்லம் கல்வெட்டு (S.i.i. vol 3 no 59.)

இக்கல்வெட்டைக் கொண்டு தொல்லியல் அறிஞர்கள்,
Maduranthkan kandaradittan i.e., Gandaraditya the son of Madurantaka, must have been a person of high standing and influence. He can not be identical with the chola king Gandaraditiya Varman, because the latter had died before the region of Arinjaya, the grand father of Rajaraja I. Perhaps he was in (otherwise unknown) son of Madurandthka the son of Gandratyaavarman and immediate predecessor of Rajaraja I.
என்பர்.   இதை நன்கு ஆய்வு செய்த நீலகண்ட சாஸ்திரியும் தனது நூலில் 'We find accordingly Maduranthkan Ganaradittan who must have been a son of Madurantaka Uttama chola occupying high officer under Rajaraja'  ('The cholas' - Page:1 58) எனக் கூறுகிறார்.


கேள்வி:
சுந்தரச் சோழனின் சரியான ஆட்சி யாண்டு காலம் என்ன?

விளக்கம்:
கி.பி. 957 - 975


கேள்வி:
இரண்டாம் இராசாதிராசனின் மகன்தான் மூன்றாம் குலோத்துங்கனா?

விளக்கம்:
மூன்றாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராசனின் மகன் அல்ல. அவன் இரண்டாம் இராஜராஜனின் மகன். பல்லவராயன் பேட்டை கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. இரண்டாம் இராஜராஜன் மகனுக்கு முடி கவிழ்த்த செய்தியும் உள்ளது.


கேள்வி:
இராஜமகேந்திரன் யார்?

விளக்கம்:
இரண்டாம் இராஜேந்திரன் ஆட்சிக்கு வந்தபின் தன் தம்பி மும்முடிச்சோழனை சோழபாண்டியன் ஆக்கினான். இரண்டாம் இராஜேந்திரனே ஜடாவர்மன் சுந்தரசோழபாண்டியனாக பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.முதலாம் இராஜாதிராஜன் இறந்தபிறகு சுந்தரசோழபாண்டியன் இரண்டாம் ராஜேந்திரனாகச் சோழ நாட்டு மன்னனாகிய பின் அவனது தம்பி மும்முடிச்சோழனை சோழபாண்டியனாக்கி மாறவர்மன் பராக்கிரம சோழபாண்டியன் என்ற பெயரில் பாண்டி நாட்டை ஆட்சி செய்யுமாறு அமர்த்தினான். இரண்டாம் இராஜேந்திரனுடன் முடக்காற்றுப்போரில் இந்த சோழபாண்டியனும் கலந்து கொண்டான். பெலவோலா பகுதியில் உள்ள கவர்வாட் என்ற இடத்தில் உள்ள கன்னடக் கல்வெட்டில் அங்கு கங்கனுடன் நடந்த போரில் சோழபாண்டியன் என்ற பெயர்கொண்ட சோழன் ஒருவன் இறந்துவிட்டதைக் கூறுகிறது. ஸ்ரீரங்கத்தில் இராஜமகேந்திரனின் திருப்பணி பற்றிய தகவல் கிடைக்கிறது. இராஜமகேந்திரன் என்பவர் முதலாம் இராஜேந்திரனின் மூன்றாம் மகன் ஆவார்.


கேள்வி:
பெரியகோவில் கட்டுமானம் ஆரம்பமான காலம் எது?

விளக்கம்:
தெரியாது.


கேள்வி:
இராஜேந்திரசோழனின் தாய் வானவன்மாதேவியார் எந்த வம்சம்? அவர் கொடும்பாளூர் வம்சம் என்பதற்குச் சான்றுகள் உண்டா?

விளக்கம்:
எனக்குத்தெரிந்து எந்தக் கல்வெட்டிலும் தரவுகள் இல்லை. பின்னர் தெரியவருகிறதா என்று பார்ப்போம்.


கேள்வி:
இராசாதிராசன் கல்வெட்டில் வரும் சிறியதாதை எறிவலிச்சோழன் என்பவர் முதலாம் இராஜேந்திரனின் சகோதரனா?

விளக்கம்:
முதலாம் இராஜாதிராஜனின் கல்வெட்டில் சிறியதாதை என்று மட்டும் உள்ளது. பெயர் கூறப்படவில்லை. இரண்டாம் இராஜேந்திரனின் மணிமங்கலம், திருமழபாடி கல்வெட்டுகளில் சிறியதாதை கங்கை கொண்டான் என்று காணப்படுகிறது.


கேள்வி:
பல்லவச்சிற்பிகளின் பெயர் ஏதேனும் கல்வெட்டில் உள்ளதா.?

விளக்கம்:
மாமல்லபுரம் செல்கிற வழியில் பூஞ்சேரி என்ற ஊரின் அருகே உள்ள சிறு சிறு பாறைகளில் சில சிற்பிகளின் பெயர்கள் காணப்படுகிறது.
1. கே ( வா) த பெருந்தச்சன்.
2. குணமல்லன்.
3. பைய்ய மிழிப்பான்.
4. சாதமுக்கியன்.
5. கலியா ( னி)
6. நமோ திருவொற்றியூர் அ( பா)ஜர்.
7. கொல்லன் (சே) மகன்.
(Are 1932 - 33 / 105 - 107)


கேள்வி:
செப்பேடுகளில் காணப்படும் புராண இதிகாச செய்திகளை வரலாற்றுத் தரவுகளாகக் கொள்ளலாமா?

விளக்கம்:
ஒரு வரலாற்று ஆய்வாளர்க்கு, செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளும் தரவுகள்தாம். அக்காலத்தில் சமூக அரசியல் தளங்களில் நிலவிய நம்பிக்கைகளையும் கருத்துகளையும் அச்செய்திகள் பிரதிபலிக்கிறன.

நடைமுறைப்படுத்திய தரவுகளை மட்டும்தான் ஆவணங்கள் தருகிறது. அச்சமூகமக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் நமக்குத் தெரியவேண்டுமல்லவா? அதையும் சேர்த்து நாம் தெரிந்துகொள்ளும்போதுதான் வரலாறு நிறைவு பெறும். ஆகவே வரலாற்றுத்தரவுகளோடு மக்களின் வாழ்வியலில் திகழும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் ஊடகமாகத்தான் இந்த புராண இதிகாச செய்திகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக,  மனுநீதிச்சோழன், சிபிச் சக்கரவர்த்தி கதைகள். இவர்கள் கதைகள் மூலம் சொல்லப்படும் செய்திகள் அன்றைய மன்னர்கள் எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் சட்டதிட்டங்களையே தங்கள் ஆட்சியில் கொண்டிருந்த செய்தியும், நடைமுறைப்படுத்திய செய்தியையும், தாங்கள் செங்கோல் பிறழாமல் ஆட்சி செய்வதையும் ஆவணப்படுத்தியுள்ளனர். அன்றைய அரசர்களின் சமூக மக்களின் எண்ணவோட்டத்தையும், உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், பிரதிபலிக்கும் தரவுகளே புராண இதிகாச செய்திகள்.


கேள்வி:
சோழன் தலைகொண்ட வீரபாண்டியன். வீரபாண்டியன் தலைகொண்ட சோழன் யார்? உத்தமசீலிதான் என்னும் கூற்றுக்குச் சான்றுகள் உண்டா?

விளக்கம்:
நேரடியான சான்றுகள் ஏதும் இல்லை. ராஜாதித்தன் போல பராந்தகனின் மற்றொரு மகனாக உத்தமசீலியின் பெயரும் காணப்படுகிறது. அரசனாகும் முன் இறந்துபோன இளவரசன். ராஜாதித்தன் ராஷ்டிரக்கூடப்போரில் இறந்தது போல் உத்தமசீலியும் பாண்டியப்போரில் இறந்திருக்கலாம். வீரபாண்டியனை வென்ற சோழன் ஒரு அரசனுக்கு நிகரானவன் என்பதால் அந்த சோழன் உத்தமசீலியாக இருக்கலாம் என்று யூகமாக முடிவு செய்யலாம்.


கேள்வி:
உத்தமசீலியின் கல்வெட்டுகள் பாண்டிய நாட்டில் கிடைக்கிறதா?

விளக்கம்:
இல்லை.


கேள்வி:
மதுரைகொண்ட இராசகேசரி சுந்தரச்சோழனின் கல்வெட்டுகள் மதுரையில் உண்டா?

விளக்கம்:
இல்லை.


கேள்வி:
ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றிய புதுத்தரவுகள் ஏதேனும் உள்ளதா? கொலையைப் பற்றிய தங்கள் பார்வை என்ன?

விளக்கம்:
புதுத்தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. உடையார்குடி கல்வெட்டு மட்டும்தான். ஆதித்தகரிகாலன் கொல்லப்பட்டதாகவும், அதில் ஈடுபட்டவர்களாக நிரூபணம் ஆனவர்களது நிலம் பறிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நடைமுறைச் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை இது. பிரம்மாதிராயர்கள் என்போர், சட்டம் நீதி நிர்வாகம் போன்றவற்றைப் படித்துத் தேர்ச்சி பெற்று மன்னவனால் பிரம்மாதிராயர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டவர்கள். நாட்டில் சட்டத்திற்கும் நீதிக்கும் நிர்வாகத்திற்கும் துணையாய் நிற்பவர்கள். இவை பாதிக்கப்படும்போது சரி செய்யும் பொறுப்பு இவர்களுக்குண்டு. திட்டமிட்டோ, திட்டமிடாமலோ கொலை செய்யும் சந்தர்ப்பம் அமையப் பெறாதவர்கள். இக்கொலை, இவர்களாலே நிகழ்ந்தது என்றால், அரசகுடும்பத்து வாரிசு பிரச்சனையில் தலையிட்டு நடைமுறைப்படுத்த முற்பட்டபோது, ஏதோ நிகழ்ந்திருக்கிறது. இது விவாதிக்கப்படவேண்டியது.


கேள்வி:
வீராணம் ஏரியை வெட்டியவர் இராஜதித்தர் என்பதற்குச் சான்றுகள் உண்டா?

விளக்கம்:
காட்டுமன்னார்குடி என்ற அன்றைய உடையார்குடி வீரநாரயண சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. வீரநாரயணன் என்பது முதலாம் பராந்தகனின் பெயர்களுள் ஒன்று. அந்த ஏரியும் பராந்தகன் பெயராலேயே அமைந்திருந்தது. அந்த ஏரியை வெட்டியவர் பெயர் எங்கும் காணப்படவில்லை.


கேள்வி:
உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் இராசராசனைப்பற்றிய தரவுகள் உண்டா?

விளக்கம்:
எனக்குத் தெரிந்து இல்லை.


கேள்வி:
இராஜராஜன், சத்யாச்சரனுடன் மேற்கொண்ட போரில் வெற்றி பெற்றாரா? முதலாம் இராஜேந்திரனின் மகன் ஒருவன் மேலைச் சாளுக்கியப்போரில் கொல்லப்பட்டாரா?

விளக்கம்:
இராஜராஜன், சாளுக்கியன் சத்யாச்சரனை வென்ற செய்தி கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மூலம் உறுதிசெய்யப்படுகிறது. கவர்வாட் கல்வெட்டு, சாளுக்கியருடன் நடந்த போரில் சோழபாண்டியன் என்ற பெயரைக்கொண்ட ஒரு சோழ அரசன் இறந்தான். அவன் அங்குள்ள சமணத்தலங்களை அழித்த பாவத்திற்காக இறந்துவிட்டான் என்று கல்வெட்டு செய்தி உள்ளது. (Ep.ind.vol 15 no 23. & Early chola. N.sethuraman Pa.59 - 63). இவன்தான் ராஜமகேந்திரன் என்று முன்பே கண்டோம். இறக்கும்போது அவன் சோழகங்கன்.


கேள்வி:
ஐயனார் அல்லது சாத்தன் எந்த மதம்? சமணமா? பௌத்தமா? ஆசீவகமா?

விளக்கம்:
இன்னொன்றையும் விட்டுவிட்டீர்களே. வைதீகமா என்றும் கேட்டிருக்கலாம். இவற்றில் எதுவுமில்லை. அவர் தமிழ்க் கடவுள். சங்க இலக்கியங்களிலும் சரி, கல்வெட்டிலும் சரி, அய்யன், சாத்தன் என்ற பெயர்கள் மிக அதிகம். அய்யன் கோவில் இல்லாத ஊர்களே இல்லை. இன்றும் அன்றும். எடுத்துக்காட்டாக, தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகளில் ( Vol 2 , part 3 ,4 ,5 p.572) சாத்தன் என்ற பெயரில் ஏராளமானவர்களைக் காணலாம்.

தமிழ்நாட்டில் நுழைந்த சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற மதங்கள் புகழ்பெற்ற தமிழ்க் கடவுளைத் தங்கள் மதங்களில் இணைத்துக்கொண்டன.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களுக்குரிய தெய்வங்கள் பற்றி தொல்காப்பியர் கூறுகிறார். மருதநிலத்தின் கடவுளாக, "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்"  எனப்படும். இந்த வேந்தன்தான் அரசக்கடவுள் சாத்தன். தமிழர்தம் இந்திரன். இந்திரன் மழைக்கடவுள். வளம் தரும் கடவுள். அதனால் மருத நிலக்கடவுளாக வணங்கப்பட்டார். அதனால் நம் தமிழர்தம் மதங்களாகச் சைவம், வைதீகம்  சாத்தனைக் கொண்டாடியிருக்கின்றன.
சைவம் காமாட்சி அம்மன் கோவில் - சாத்தன்.
பிடவூர் சாத்தன் - சேரமான் பெருமாள் நாயனார்.(திருக்கயிலாய ஞான உலா).
வைதீக சதுர்வேத மங்கலங்களில்,
உத்திரமேரூர் - அய்யன் மஹா சாஸ்தா.
ஐயூர் அகரம் - சாஸ்தா.
உக்கல் - அய்யனார் (மஹாவிஷ்ணுக்கருகில் சிறப்பான வழிபாடு).
கேரள  கொடுந்திரப்பள்ளி அக்கிரகாரம் -அய்யனார் (Tvs vol 1. - வேதிய அய்யனார்).


கேள்வி:
தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு எப்போது துவங்கியது? வாதாபியிலிருந்து வந்ததா? அல்லது  அதற்கு முன்னரே இருந்ததா?

விளக்கம்:
வாதாபியிலிருந்து வரவில்லை.  சேக்கிழார், பெரிய புராணத்தில் பரஞ்சோதி வாதாபியிலிருந்து என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார் என்று கூறியுள்ளார். அதில் கணபதி இல்லை. பரஞ்சோதி காலத்திற்கு முன்பே பிள்ளையார் பட்டி கணபதி வழிபாடு ( கி.பி. 4 - 6 இல்) நம்மிடையே இருந்தது.


கேள்வி:
சோழர் காலத்தில் சாதியப் பிரிவு எவ்வாறு இருந்தது? வேறுபாடு மற்றும் தீண்டாமை இருந்ததா?

விளக்கம்:
செய்யும் தொழில் அடிப்படையில் நம் சமூக மக்கள் சேர்ந்து சேர்ந்து வாழ்ந்தனர். சேர்ந்து வாழுமிடங்கள் சேரி எனப்பட்டது. கம்மாளச்சேரி, பறைச்சேரி, பார்ப்பனச்சேரி, வண்ணாரச்சேரி, என்ற பல பகுதிகள் உள்ள குறிப்புகள் உள்ளனவே தவிர அதை ஜாதியாகக் கருத்தாக்கம் செய்யவில்லை. தீண்டாச்சேரி என்று ஒன்றும் இருந்தது. அதுவும் தொழில் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும்.


கேள்வி:
விஜயாலயன் தந்தையைப்பற்றியத் தரவுகள் உண்டா?

விளக்கம்:
பள்ளன்கோவில் செப்பேடு - சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு என்னும் பெயர் கொண்ட சோழனை வென்றான் என்கிறது.
வேலூர் பாளையச் செப்பேடு - குமாரங்குசன் என்ற சோழனைக் கூறுகிறது.
சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு - கரிகாலன், செங்கணான், நல்லடிக்கோன் ஆகியோரைக் கூறிவிட்டு பின்னர் பொதுவாக வளவன், ஸ்ரீ கண்டன் என்ற பெயர்களைக் கூறுகிறது, என்றாலும் விஜயாலயனின் முன்னோன் அல்லது தந்தைப்பெயர் குறிப்பிடப்படவில்லை.

வேலஞ்சேரி முதலாம் பராந்தகன் செப்பேடு -  சோழர் வம்சத்தைப் பற்றிக் கூறும்போது, பிரம்மா - மரீசி - உசீநரா - சிபி - கரிகாலச் சோளேந்திரன் - கோச்செங்கணான்- ஒற்றியூரன். பிறகு; ஒற்றியூரன் மகனுக்குக் குபேரனை ஒத்த ஆதித்தியன் பிறந்தான். ஆதித்தனுக்கு மகனாகப் பராந்தகன் பிறந்தான் என்கிறது.
ஒற்றியூரன் மகனும், ஆதித்தனின் தந்தையும் விஜயாலயன் தானே,  ஆகவே, விஜயாலயனின் தந்தை ஒற்றியூரன் எனலாம்.  (REF: Thiruthani and velanjeri copper plates, by Dr. R. Nagaswamy).


கேள்வி:
பார்த்திபேந்திரனின் ஒரு கல்வெட்டு (திருவிடந்தை) மட்டும்  அவரை கோபரகேசரி என்கிறது. இக்கல்வெட்டில் பிழையேதும் உள்ளதா? பார்த்திபேந்திரன் யார்? அவர் பல்லவ வம்சமா? சோழனா? அல்லது வேறு யாரேனுமா? இவன் ராஜராஜனாக இருக்கலாமா?

விளக்கம்:
திருவிடந்தைக் கல்வெட்டு (S.i.i. vol 3 no 180) சொல்லும் செய்தியில் பிழையேதும் இல்லை. அது 'கோப்பரகேசரி வேந்திராதிபந்மர்க்கு யாண்டு ஆறாவது' எனத்தொடங்குகிறது. இவனது 6 மற்றும் 7 ம் ஆட்சி யாண்டுகளில் பாண்டியன் தலைகொண்ட விருது இணைத்தும் விடுத்தும் உள்ளது (Vol 3. 181 , 182 , 183 , 184).

கோபரகேசரி என்பதால், இவன் ஒரு சோழ அரசனாக இருக்க வேண்டும். இல்லையேல் சோழர்களது சிற்றரசர்களில் ஒருவனாக இருக்கவேண்டும் (ஆங்கிலச்சுருக்கம் - S.i.i. vol 3 no 180). இவன் பல்லவனா, சோழனா அல்லது வேறு மரபினனா என்பதற்கு உறுதியான ஆதாரமில்லை. சோழன் பெயரில் பல்லவநாட்டில் ஆட்சிபுரிந்தான்.சோழருக்கும் பாண்டியருக்கும் நடந்த போரில் கலந்துகொண்டு வெற்றியிலும் பங்குபெற்றவன். 'வீரபாண்டியன் தலைகொண்ட கோபரகேசரி' என்று ஆதித்த கரிகாலனும், 'வீரபாண்டியன் தலைகொண்ட கோபார்த்திவேந்திராதிபதி வர்மன்' என்று இவனும் விருதுப் பெயர் கொண்டனர்.

இவன் சோழவம்சத்தைச் சேர்ந்த தொண்டைமண்டலத்தின் பொறுப்பாளனாக ஆட்சிபுரிந்தான் என ஊகிக்கலாம். கோபரகேசரி என்பதால் இவன் பல்லவ வம்சத்தவன் இல்லை எனலாம். இவன் இராஜராஜனாக இருக்கலாமோ என்பதைப் போதியத் தரவுகள் கிடைத்தால் உறுதிசெய்வோம்.


கேள்வி:
தஞ்சை பெரியகோவில் கட்டுமானத்திற்குக் கற்கள் எங்கிருந்து வந்தது?

விளக்கம்:
ஸ்தபதிகளும், நிலவியலாளரும்தான்  இதற்கு விடை கூற வேண்டும். எந்த ஊர் மலையிலுள்ள கற்களும், ராஜராஜீஸ்வரமுடையார் கோவில் கற்களும் ஒரே வகையைச்சார்ந்தவை என்பதைக் கண்டறிந்து கூறவேண்டும்.


கேள்வி:
குலோத்துங்கனின் தளபதி கருணாகரத் தொண்டைமான் இலங்கையை ஆட்சி செய்தாரா?

விளக்கம்:
இல்லை.


கேள்வி:
இராஜராஜனின் மகன் வழி வாரிசு ஆளவந்தான் சோழபாண்டியன் என்பவர் முதலாம் குலோத்துங்கனுடன் வாரிசுரிமைப் போட்டியில் ஈடுபட்டாரா?

விளக்கம்:
முதலாம் இராஜேந்திரன் தனது மூத்தமகன் இராசாதிராசனுக்கு இளவரசு பட்டம் கட்டி, தனது இரண்டாம் மகன் சுந்தரச்சோழன் என்பவனை சுந்தரசோழபாண்டியன் என்ற பெயரில் பாண்டியநாட்டுப் பிரதிநிதியாக ஆளச் செய்ததுபோல, அவனது புதல்வர்களும் இம்முறையைப் பின்பற்றினார்கள்.

முதலாம் இராசாதிராசன் தனது சகோதரர்களையும், தனது தந்தையின் சகோதரர்களையும் தாங்கள் வெற்றிபெற்ற பல்வேறு நாடுகளுக்குப் பிரதிநிதிகளாக அனுப்பி ஆளும்படி செய்ததை மணிமங்கலம் கல்வெட்டும் கூழம்பந்தல் கல்வெட்டும் உறுதி செய்கின்றன (S.i.i.vol 3 no 28 & S.i.i. vol 7).

முதலாம் இராசாதிராசனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் இராஜேந்திரனும் அவ்வாறே நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டான். அவனுடைய திருமழபாடி கல்வெட்டு (S.i.i. vol 5 no 647) தன் தந்தையின் சகோதரர் மகன் ஆளவந்தானையும் குறிப்பிடுகிறது. திருவெண்காடு கல்வெட்டும் ஆளவந்தான் பற்றிக் கூறுகிறது. இவனுக்கு இராசாதிராசன் என்ற சிறப்புப் பெயரும் இருந்தது (S.i.i.vol 5 no 976).  இவன் முதலாம் குலோத்துங்கனுடன் வாரிசுரிமைப்போரில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை..


கேள்வி:
முதலாம் ஆதித்தன் மகனான கன்னரத்தேவனுக்கும், முதலாம் பராந்தகனுக்கும் வாரிசுரிமைப் போட்டி இருந்ததா?

விளக்கம்:
முதலாம் ஆதித்தனின் மூத்த அரசி இளங்கோன் பிச்சி. இவர் வல்லவரைய இராஷ்டிரகூடர் இரண்டாம் கிருஷ்ணனின் மகள். இச்செய்தியை ஆதித்தனின் 27 ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது ( A.r.e. 14 of 1920).  ஆதித்தனுக்குப் பராந்தகன் தவிர கன்னரதேவன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்துள்ளான் (38/ 1895). இவன் இளங்கோன் பிச்சியின் மகன் என்பதும் அதனால் அவரது தந்தை கன்னரதேவன் பெயரை அவர் மகன் பெற்றிருந்தான் என்பதும் பெறப்படுகிறது.  இச்செய்தி தவிர இந்த கன்னரதேவன் பற்றி வேறு எந்த செய்தியும் இல்லை.


கேள்வி:
மேற்கெழுந்தருளிய தேவர் என்பதன் சரியான பொருள் என்ன?

விளக்கம்:
கண்டராதித்தச் சோழன் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். துறவறம் மேற்கொண்டார் என்ற ஒரு கருத்தும் பொதுவாகக் கூறப்படுகிறது. மேற்கே சூரியன் மறைவதுபோல் கண்டராதித்தர் என்ற சோழவம்சத்து சூரியன் மறைந்துவிட்டது என்பது பொருள். இதைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை.







துணை நின்ற நூல்கள்: 
முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், S.R. பாலசுப்ரமணியன்.
சோழமண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், குடவாயில் பாலசுப்ரமணியன்.
கல்லும் சொல்லும், இரா.நாகசாமி & Article  by R. Nagasamy





_____________________________________________

குறிப்பு:
சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் நடத்திய கருத்தரங்கில் வரலாற்று ஆர்வலர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முனைவர் ஆ.பத்மாவதி அளித்த விளக்கங்கள்.
(நன்றி - பகிர்வு திரு. மாரிராஜன்)




Monday, December 16, 2019

உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி


 -- முனைவர் விஜய் அசோகன் 


          நோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்து தேர்வெழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வெழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாடத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம்/பொறியியல் சேர்க்கைக்கான கூட்டுமதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப்பாட மதிப்பெண்ணைச் சேர்த்துக்கொள்ளலாம்.

          அதாவது, நோர்வே நாட்டினில் தமிழ் மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், நோர்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது.

          சரி, அடுத்ததாகச் சுவீடன் பற்றிப் பார்ப்போம்!

          சுவீடனில் பிறந்து வளரும் பிற மொழி குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழியில் பேசி, கற்று, தொடர்ந்து தாய் மொழியின் அறிவினை குழந்தை பெற்றுச் சிறக்க, சுவீடன் கல்வித் துறை செயலாற்றிக் கொண்டிருக்கிறது. பிற மொழிக் குழந்தைகளுக்கான தாய் மொழிக் கல்வியின் அவசியம் பற்றி சுவீடன் கல்வித்துறை இணையத்தில், “The mother tongue will help the child to develop their knowledge of the language. It will also help your child feel confident that belong to several cultures” என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

          குழந்தைகள் தங்கள் வீட்டில் பேசும் மொழியிலேயே மழலையர் கல்வி அமைய, பயிற்றுவிக்க, ஊக்குவிக்க, சுவீடன் அரசு விரும்புவதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்திய மொழிகளில் தமிழ், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிகளுக்குக் கல்வித் துறையில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதே போன்று, பிற நாட்டு மொழிகளுக்கும் அலுவலர்களும் அலுவலகமும் இயங்கி வருகிறது. சுவீடன் நாட்டுத் தம்பதியர், வேறு ஒரு நாட்டிலிருந்து குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்தாலும், அக்குழந்தை தன் தாய் மொழியை வீட்டில் பேசாமல் இருந்தாலும் கூட, அக்குழந்தை தாய் மொழியில் பேச, பயில, கற்க இத்திட்டம் துணை நிற்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்கள்.

          சுவீடனில் பிறந்து வளரும் பிற மொழிக் குழந்தைகள், பெற்றோர்களின் வாழ்வு சார்ந்த இடப்பெயர்வின் காரணமாகச் சுவீடனில் வளரும் குழந்தைகள், அகதியாகத் தஞ்சம் புகுந்தவர்களின் குழந்தைகள் என அனைவருக்கும் அவரவர் தாய் மொழியைக் கற்க சுவீடன் அரசு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?

          பல பண்பாட்டுச் சூழலில் வளரும் குழந்தைகளுக்கும், தன் நாடல்லாத, தன் மொழி பேசாத நாட்டில் வளரும் குழந்தைகளுக்கும், கல்வியில் சிறந்த விளங்கவும், புது மொழி, புது பண்பாடு, புது வாழ்வை ஏற்று அனைவரோடும் ஒன்றிணைந்து சிறப்பாக வாழவும், அக்குழந்தைகளுக்குத் தாய் மொழி தெரிந்திருத்தல் அவசியம் என்ற ஆய்வுகளின் அடிப்படையிலான அறிவியல் உண்மையைக் கல்வியாளர்களும் குழந்தை மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரலை இந்த அரசுகள் பிரதிபலிக்கிறது. அவரவர் தாய் மொழியில் கற்க வைப்பதன் மூலம், குழந்தைகளின் மனநல வளர்ச்சியும்,பள்ளிக்கல்வியில் கற்பதில் கூர்மையும், அவர்கள் பிற மொழியினை கற்கும் திறனும் கிடைக்கப்பெறுகிறார்கள்.

          ஆக, சுவீடனில் வளரும் பிற மொழிக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க அவரவர் தாய் மொழியினை கற்பது மிக முக்கியம் எனக் கருதுவதால், பெரும் பொருளாதாரத்தைச் சுவீடன் அரசு செலவழிக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, அது செலவு அல்ல! சமூக முதலீடு. தன் நாட்டில் வளரும் குழந்தைகளை, அறிவில் சிறந்தவர்களாக மாற்றுவதன் மூலம், அவர்களின் வருங்காலத்தைச் சுவீடனின் வளர்ச்சிக்கு உள்வாங்கிக்கொள்வார்கள்.

          இப்படித்தான் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும், தன் நாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழி கல்வியை வழங்கி வருகிறார்கள். அதனினும் கூடுதலான, மகிழ்வான செய்தி என்னவென்றால், ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவற்றில், முழுமையான தனித்துவமான தமிழ்ப் பள்ளிக்கூடங்களே தனி மனிதர்களாலும் தனி அமைப்புகளாலும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தமிழர் அமைப்புகளாலும், அந்தந்த நாட்டு அரசின் பொருளாதார, அலுவலக ஒத்துழைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல, பல மொழியினருக்கும் அவரவர் தாய் மொழி கல்விக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் வழங்குகின்றன.

          ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான், கொரியா, சீனா என அனைத்து நாடுகளிலும் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி, முனைவர் பட்டப் படிப்பு வரை அவரவர் தாய் மொழியிலேயே கற்கும் கல்விக் கொள்கையே இருக்கிறது.

          சரி, எங்கெல்லாம் தாய் மொழி இல்லாத பிற மொழி வழியிலான கல்வி இருக்கிறது? எந்தெந்த நாடுகளெல்லாம் காலனியாதிக்கத்தில் இருந்தனவோ, எந்தெந்த நாடுகளிலெல்லாம் பல மொழிகள் பேசப்படுகின்றனவோ, அங்கெல்லாம் பிற மொழி வழியிலான கல்வியே இருக்கிறது. குறிப்பாக, ஆங்கிலமோ, பிரஞ்சோ, ஸ்பானிய மொழியிலான கல்வி. அதிலும் குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளில்.

          தாய் மொழி இல்லாத பிற மொழியோ, அல்லது அந்நாட்டின் ஆதிக்க மொழியோ கல்வி மொழியாக இருக்கும் நாடுகளின் குழந்தைகளின் கற்கும் திறன், கல்வி பயிலும் காலங்கள், அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தான ஆய்வுகளைப் பல ஆண்டுகளாக கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மூளை, நரம்பியல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். வருகின்றனர்.

          முக்கியமாக சில அடிப்படை முடிவுகள் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 -    குழந்தையின் 5-8 வயது வரையில் தாய் மொழிக் கல்வி மிக அவசியம். அதுவே, அக்குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும், சிந்தனைத் திறனுக்கும், செயல்திறனுக்கும் வழிவகுக்கும். எந்த மொழியோடு ஒரு குழந்தை குடும்பத்தோடும் சமூகத்தோடும் உறவாடுகிறதோ, அதுவே தாய் மொழி அல்லது முதன்மை மொழி என வரையறுக்கப்படுகிறது.

 -    தாய் மொழியோடு அக்குழந்தை பிற மொழிகளையும் கற்கலாம். பல மொழிகளை ஒரு சேர கற்பதும் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உகந்த செயல்பாடுதான். ஆனால், தாய் மொழியினை முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்கும் பொழுதே, பிற மொழியினை சீராக கற்கவும் முடியும், மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாகவும் இருக்கும். அனைத்திற்கும் அடிப்படையே தாய் மொழிதான்.

 -    முதன்மை மொழி அல்லது தாய் மொழியில் ஒரு குழந்தை முழுமையான அடிப்படை அறிவினை பெறக் குறைந்தது 12 ஆண்டுகள் எடுக்கும். 12 வயதிற்கு முன்பே, பிற மொழிக் கல்வி பெறும் சூழல் உருவாகும்பட்சத்தில், அக்குழந்தைக்கு முறையான, நிலையான தாய் மொழிக் கல்வியையும் பெறும் சூழலை உருவாக்க வேண்டும். அத்தகைய சூழலினாலே, அக்குழந்தை, பிறநாடுகளிலோ, பிற மொழி பிரதேசங்களிலோ வளரும்பொழுது, ஆரோக்கியமான கல்வித்திறனைப் பெறும்.

 -    அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளைப் பிற மொழியில் கற்க வேண்டுமாயின், குழந்தை அந்த மொழியினை தொடர்ச்சியாக 5-6 ஆண்டுகள் கற்க வேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தை ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் கற்றுச் சிறந்து விளங்க, 5 வருடங்கள் ஆங்கிலத்தை மொழிப் பாடமாகப் படித்திருக்க வேண்டும். அதற்கு முன்பும், இணையாகவும் தமிழைப் படிக்க வேண்டும். தமிழில் அறிவியல், கணிதம் இருக்க வேண்டும். ஆங்கிலம் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்குத் துணை மொழிப்பாடமாக இருக்கலாம்.

          1955 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஆங்கில வழிக் கல்வியோ அல்லது நிலத்தோடும் மக்களோடும் தொடர்பில்லாத ஆப்பிரிக்க மொழிக் கல்வியோ இருந்தது. இதே காலகட்டத்தில், தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபிய நாடுகளில் அனைத்து பிரதேசங்களிலும் பேசப்பட்டு வந்த ஆப்பிரிக்க மொழியே கல்வி மொழியாக இருந்தது. தாய் மொழிக் கல்வித் திட்டத்தால், பள்ளி இறுதியாண்டை நிறைவு செய்யும் மாணாக்கர் எண்ணிக்கை 83%மாக உயர்ந்தது. ஏனைய ஆப்பிரிக்க நாடுகள், பிற மொழிக் கல்வித் திட்டத்திற்குச் செய்த செலவுகளைக் காட்டிலும் தென் ஆப்பிரிக்க மற்றும் நமீபியா பாதியளவு பொருளாதாரத்தையே கல்விக்குச் செலவிட்டிருந்தது.

          1990களில் தென் ஆப்பிரிக்க நாடு தன் கல்விக் கொள்கையாக ஆங்கில மொழியைப் பின்பற்றத் தொடங்கியதும், பள்ளி இறுதியாண்டை நிறைவு செய்யும் மாணாக்கர் வீதம் 44%ஆகக் குறைந்தது. தாய் மொழிக் கல்வி நடைமுறையிலிருந்த காலகட்டத்தை விட, ஆங்கில வழிக் கல்வியில் ஆங்கில மொழி கற்கும் திறனும் குறைந்திருந்தது.

          2011 ஆம் ஆண்டு, நமீபியா நாட்டு அரசாங்கம் தன் நாட்டுக் கல்விக் கொள்கை குறித்து ஆய்வினை நடத்தியது. 1990 வரையில் 13 ஆப்பிரிக்க மொழிகளில் வழங்கப்பட்டு வந்த கல்வியை, ஆங்கில வழிக்கு மாற்றியது அன்றைய நமீபியா அரசாங்கம். 1990ஆம் ஆண்டுக்கு முன்பு செலவிட்ட பொருளாதாரத்தை விட 4 மடங்கு அதிகரித்துச் செலவிட்டது நமீபியா அரசாங்கம். 20 ஆண்டுகளுக்கு பிறகான ஆய்வில், 98% ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் புலமை பெறாதவர்களாகவும் அவர்கள் ஆங்கில வழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்ல அக்கறை அற்றவர்களாகவும் இருந்தனர். அதோடு, பள்ளித் தேர்ச்சி விகிதம் 36% வீதமாகவும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றது.

          இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 96% மாணவ, மாணவியர்களால் பாடங்களைக் கவனிக்கவோ கற்கவோ முடியவில்லை. காரணம், அம்மாநிலத்தில் 4% பேர் பேசும் இந்தி மொழியினை கல்வி மொழியாகத் திணித்திருக்கிறார்கள்.

          அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம், 22 நாடுகளில் 160 மொழிக் குழுக்களிடம் செய்த கல்விக் குறித்த ஆராய்ச்சியில், பெரும் எண்ணிக்கையிலான மாணாக்கர்களின் பள்ளிக்கூட கல்வி முழுமை பெறாததற்கும் பிற மொழியினை கற்கும் திறன் இழந்ததற்கும் தாய் மொழி அல்லாத பிற மொழிக் கல்வியே காரணம் என உறுதி செய்தார்கள்.

          அவர்களின், ஆய்வு முடிவுகளின் படி தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஐநாவின் அங்க அமைப்பான யுனெஸ்கோவுடன் இணைந்து பல அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தாய் மொழிக் கல்வி வழியே பிற மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே உயர்கல்வி என்ற முழக்கத்துடன் 2008 முதல் களப்பணியில் இறங்கினர். அதன் முடிவுகள் எதனைத் தெரிவிக்கின்றன எனப் பார்ப்போம்.

          எத்தியோப்பாவில், தாய் மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, கற்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு ஒரே வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

          பெரு நாட்டில், தாய் மொழி வழியே இருமொழிக் கல்விக் கொள்கை 1952 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1972இல் வேலஸ்கோ தலைமையிலான புரட்சிகர அரசு அமைந்தபிறகுதான் அரசின் முழுமையான நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது எனலாம். 1975 ஆம் ஆண்டு, அமேசான் காட்டு பூர்வக்குடிகளின் மொழியினையும் ஆந்தீயான் பூர்வக்குடிகளின் கோயுச்சா மொழியினையும் முதன்முறையாகத் தேசத்தினுள் பேசப்படும் மொழியாக அறிவித்தார். 1994 இல் தாய்மொழிக் கல்விக்கென தனி அமைச்சகம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பானிய மொழி மட்டுமே கற்று வந்த பெரு நாட்டு பூர்வக்குடிகள் அவரவர் தாய் மொழிக் கல்வியினை பள்ளி முதன் நிலை வகுப்புகளிலும், பள்ளி உயர்வகுப்புகளில் தாய் மொழியோடு ஸ்பானிய மொழியையும் கற்றுச் சிறந்து விளங்குகின்றனர்.

          கோத்தமாலா நாட்டில், தாய் மொழி வழியே இரு மொழிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 15% மக்கள் தொகையினை இத்திட்டம் உள்ளடக்கியது. ஏனைய பள்ளிக்கூடங்களை ஒப்பிடும்பொழுது, இப்பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதமும் அதிகரித்தது, கல்வி இடை நிறுத்தமும் வெகுவாக குறைந்தது. தாய் மொழி வழியிலான இரு மொழிக் கல்வித் திட்டத்திற்கு கோத்தமாலா நாடு மாறிய பொழுது பெரும் பொருளாதாரத்தைக் கல்விக்கு ஒதுக்கினாலும், காலப்போக்கில் அந்நாடு, 5.6 மில்லியன் அமெரிக்கன் டாலரை வருடந்தோறும் சேமிக்கத் தொடங்கியது.

          பாப்பூ நியூ கினியா என்னும் நாட்டில் உள்ள 800 மொழியில் 450 மொழியினை கல்வி மொழியாக அந்நாடு பின்பற்றுகிறது. அனைத்து மொழிக்குமான பாடத்திட்டம் கணினி மையப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரும் பொருளாதாரத்தை அந்நாடு மிச்சப்படுத்துகிறது.

          பிலிப்பைன்ஸ் நாட்டின் லுபுவோகன் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக, 2002 ஆண்டு, தாய் மொழி வழியே இரு மொழிக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து, வெற்றிகரமாகக் கருதப்படுவதால், அனைத்து பூர்வக்குடி மக்களும் அவரவர் தாய் மொழி வழியே கல்வி கற்க, 2012 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கொள்கை முடிவாக எடுத்தது. இதன் வழியே, பள்ளிக் கல்வியின் முதல் மூன்றாம் ஆண்டு, அவரவர் தாய் மொழியிலும், அதன்பின்னர், ஆங்கிலமும் துணைப்பாட மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது.

          சீனா நாடும் இந்தியா போன்று பல்வேறு மாநிலங்களும் பல்வேறு மொழிகளும் கொண்ட நாடுதான். ஆனால், அனைத்து மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தையும் எழுத்து நடைகளையும் கொண்டவை. இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழியில் பள்ளியின் 5 ஆண்டுகள் கல்வியும், பிறகு மாண்டரின் மொழிக் கல்வியும் நடைமுறையில் உள்ளது.

          மேற்கூறிய செய்திகள் வழியே, தாய் மொழிக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதனையும், பிற மொழியில் சிறந்து விளங்கவும் கூட தாய் மொழி வழி கற்றலே சரியானது என்றும் புரிந்திருக்கும்.




தரவுகள்:
http://www.campaignforeducation.org/docs/reports/GCE%20Mother%20Tongue_EN.pdf
https://www.globalpartnership.org/blog/children-learn-better-their-mother-tongue
http://unesdoc.unesco.org/images/0017/001777/177738e.pdf
https://www.adb.org/sites/default/files/publication/176282/ino-mother-tongue-multilingual-education.pdf
https://www.sil.org/sites/default/files/files/mtbmle_implications_for_policy.pdf
https://economictimes.indiatimes.com/swaminathan-s-a-aiyar/what-does-the-mother-tongue-mean/articleshow/5529727.cms


நன்றி: https://thamilinchelvan.com/2018/07/22/உலக-நாடுகளில்-தாய்மொழிக்/





Sunday, December 15, 2019

தமிழிலக்கியம் காட்டும் மாஸ்லோவின் 'தேவை படியமைப்பு கோட்பாட்டுக்' கருத்துகள்


 -- சொ.வினைதீர்த்தான்


          தன்முனைப்பு, ஊக்கமூட்டும் கோட்பாடுகள் (Motivational theories) பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் ஆப்ரஹாம் மாஸ்லோவின் தேவைகள் பற்றிய கொள்கைகளைத் தொடாமல் இருக்க முடியாது. மனிதன் தேவைகள் பூர்த்தியாகிறபோது ஊக்குவிக்கப்படுகிறான் என்பதும் மனிதனின் ஒரு தேவை பூர்த்தியானதும் அடுத்த தேவைக்கு மனிதமனம் ஏங்குகிறது என்பதும்  'மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு'(Maslow's Hierarchy of Needs).

மாஸ்லோவின் 'தேவை படியமைப்பு கோட்பாட்டுக்' கருத்துகள்:
          மாஸ்லோவின் கொள்கைப்படி முதல் தேவை உடல் சார்ந்த தேவை, 'உடலியற் தேவைகள்' (Physiological needs). உணவு ,உடை, உறையுள் ஆகியவை.  நேற்று வந்த பசி 'இன்றும் வருங்கொல்லோ ' என்றது குறள்.

          அடுத்த தேவை 'பாதுகாப்புத் தேவைகள்' (Safety needs). இன்றைக்குக் கிடைத்த உணவு நாளைக்கும் கிடைக்கவேண்டும். முன்னோர் காடு வெட்டி போட்டுக் கடிய நிலம் திருத்தி வீடுகட்டிக்கொண்டு இருந்ததும் சேமிப்பும் இத்தேவையின் பூர்த்தி கருதியே!

          அடுத்தது தோழமையுணர்வு, 'சமூகத் தேவைகள்' (Love and belongingness needs). ஒருவனுக்கு வேலை கிடைத்து அவ்வேலை நிரந்தரமாகவும் சமுதாயம் அவனுக்குத் திருமணம் செய்துவைக்கிறது. தனியாக வாழமுடியாததால் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்ததாகப் பைபிள் சொல்லிற்று. பாரதிதாசன் 'என்ன இன்பம் எனக்கு நல்கும்' எனக் கேட்டு 'இருக்கின்றாள் என்பது ஒன்றே' என்று பதிலளித்தார்.

          பிறகு 'கௌரவத்தேவைகள்' (Esteem needs). மனிதர்கள் கவனிக்கப்படுவதற்கும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் ஏங்குகிறார்கள். இது தீராத ஏக்கம்! எனவே இது உயரிய தேவை. மனிதர்களை வயப்படுத்த, மனித உறவுகள் மேம்பட நாம் மற்றவரின் இத்தேவையை என்றும் பூர்த்திசெய்து கொண்டே இருக்க வேண்டும்!

          இதற்கும் மேலே உச்சபட்சத் தேவை 'தன்னலத் தேவைகள்' (Self-actualization needs). தன்னை அறிதல், தன் உயரிய உள்ளக்கிடக்கை நிறைவேறல் எனக் குறிக்கலாம். காந்தியடிகளுக்கு இந்நாட்டின் விடுதலையே உயரிய குறிக்கோளாக இருந்தது.



தேவாரப்பாடல் காட்டும் தேவைக்கோட்பாடு:
           இந்த தேவைக்கொள்கையும், அப்பர் அடிகளின் - திருவிடைமருதூர் தேவாரப்பாடல் ஒன்றும் அப்படியே ஒத்துப் போவதைக்கண்டேன். இன்றைக்குப் பிரபலமான கோட்பாட்டை எவ்வளவு துல்லியமாக நம்முடைய பெரியோர்கள் யோசித்திருக்கிறார்கள்!

         நாவுக்கரசர் தேவாரத்தில் இதே படிநிலைச் சட்டகத்தைக் காணலாம்!
                    "கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
                    பனிமலர்க் குழல்பாவை நல்லாரினும்
                    தனிமுடி கவித்தாலும் அரசினும் 
                    இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே"

          முதல் அடிப்படைத் தேவை உணவுக்கான கனி. கனியாக இருந்தால் அதிக நாள் வைத்திருக்க முடியாது. அதுவே கட்டிபட்டு வெல்லமாக மாற்றி இருந்தால் பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். இரண்டாவது தேவை நிறைவேறும். 

          அடுத்து மலர்க் குழல் பாவை நல்லாள் தொடர்பு தோழமை நல்கிறது. 

          அடுத்து அரசனைப் பற்றிப் பாடல் சொல்கிறது. அதுவும் அரசர்க்கு அரசன். தனி முடி தரித்தவன். கௌரவத்தேவை எவ்வளவு பூர்த்தியாகும். 

          அதற்கும் மேலே அப்பரின் உச்சமான தேவை தொண்டின் மூலம் இனிய இறைவனை அடைவதே. 

          அடிநிலைத் தேவைக் கட்டமைப்பு போன்ற சிந்தனைகளை அன்றையத் தமிழ்ச் சான்றோர் உணர்ந்து எண்ணிப்பார்த்து வரிசை மாறாது அடுக்கிச் சொல்லியிருப்பது போற்றத்தக்கது.

மணிமேகலை காப்பியமும் தேவைக்கோட்பாடும்:
          ஆபிரகாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவைக்கட்டமைப்புச் சிந்தனைகளை மணிமேகலை வாழ்க்கையோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மாஸ்லோவின் ‘தேவைக்கோட்பாடு’ கட்டமைப்பு கூறும்  உடலியற் தேவைகள், பாதுகாப்புத் தேவைகள், சமூகத் தேவைகள், கௌரவத்தேவைகள், தன்னலத் தேவைகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு தேவை நிறைவேறியதும் அடுத்த தேவைக்கு மனிதன் ஏங்குகிறான்; அடைய முயல்கிறான் என்ற  உளவியல் கொள்கை மணிமேகலை வாழ்க்கையோடும்  பொருந்திப்போவதைக் காணலாம்.

          முதல் உடலியற் அடிப்படைத்தேவையான பசிப்பிணியைத் தீர்க்க வேண்டும் என்ற மணிமேகலையின் எண்ணத்தின் வலுவானது அவள் கைகளில் அமுதசுரபியை மணிமேகலா தெய்வம், தீவதிலகை வழியாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.  தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அரசன் கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.

                    “ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
                    ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
                    மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;
                    மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
                    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.இவ்வாறு மனிதவாழ்வின் முதல் தேவையான பசிப்பிணியறுத்தல் குறித்துக் காப்பியம் பேசுகிறது.

          மாதவி மணிமேகலைக்குக் காட்டுகிற துறவற நெறி ஆடல் மகளிர் வாழ்க்கையை மணிமேகலை தவிர்க்க உதவும் பாதுகாப்புத் தேவை அரணாகிறது.

          அடுத்த தேவையான தோழமை சமூகத் தேவை குறித்துப் பார்க்கலாம். மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான். உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.

                    “புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
                    இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
                    இதுவே ஆயின் கெடுக தன் திறம்... ”
என்று. அவ்வெண்ணத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். துறவோர் சங்கம் தோழமை ஏற்கிறாள்.

          அவள் கைகளில் அமுதசுரபி கிடைக்கிறது. “காணார், கேளார், கால் முடமானோர், பசிநோய் நோற்றார், பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதி” என்று அருந்தினோர்க்கெல்லாம் ஆர் உயிர் மருந்தாய் பெருவளம் அமுதசுரபி வழியாகச் சுரந்து நல்குகிறாள் மணிமேகலை. “பசிப்பிணி தீர்த்த பாவை”யாக யாவரும் போற்றுகிறார்கள். இதனால் அவளது  கௌரவத்தேவை நிறைவேறுகிறது.

          போற்றிய பின்னரும், யாவரும் அங்கீகரித்துக் கொண்டாடிய பின்னரும் மணிமேகலையின் தேவையடங்கவில்லை. அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை.  அவள் தேவை உச்சபட்சத்தேவையான தன்னை அறிதல், தன் நோக்கம் அறிதல், அதனை அடைதல் என்ற தன்னலத் தேவை என்பதிலேயே நிலை கொண்டிருக்கிறது அறவண அடிகளிடம்  “அடிகள் மெய்ப்பொருள் அருளுக” எனத் தருமம் கேட்கிறாள். புத்த சங்கத்தில் சரண் புகுகிறாள். இறுதியில் மனத்து இருள் நீங்க நோன்பு நோற்கிறாள்.

          பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்று உன்னதம் அடைகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.






தொடர்பு: சொ.வினைதீர்த்தான் (karuannam@gmail.com)



சங்க இலக்கியத்தில் மிதவை

சங்க இலக்கியத்தில் மிதவை

 
—   முனைவர்.ப.பாண்டியராஜா


          மிதவை என்பதற்கு மிதப்பு அல்லது சோறு, கூழ், கும்மாயம் என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி. மிதப்பு என்பது நீரில் மிதந்து செல்வது. அதாவது தெப்பம் (float, raft) என்று சொல்லலாம். சோறு,கூழ், கும்மாயம்  என்பன உணவுப்பொருள்கள். கும்மாயம் என்பது  குழைய வைத்த பருப்பு.  ஓர் உணவுப்பொருள் மிதவை அல்லது மிதக்கின்ற ஒன்று என்று குறிப்பிடப்படுவது ஏன் என்று ஆராய முனைகிறது இக்கட்டுரை.

                    வெண் கிடை மிதவையர்  நன் கிடை தேரினர் - பரி 6/35

என்ற பரிபாடல் அடியில் வரும் மிதவை என்பதற்குத் தெப்பம் என்றே உரையாசிரியர்கள் பொருள்கொள்கின்றனர். இந்த ஓர் இடத்தைத் தவிர மிதவை என்ற சொல் வருமிடங்களில் அது ஓர் உணவுப்பொருளாகவே கொள்ளப்படுகிறது. அவற்றைப் பார்ப்போம்.

                    செ வீ வேங்கை பூவின் அன்ன
                    வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த
                    சுவல் விளை நெல்லின் அவரை அம் புளியங்கூழ் - மலை 434-436

இதனைப் பலவாறாகத் திரித்தும், மாற்றி எழுதியும் நச்சினார்க்கினியர் பொருள்கொள்வார்.
செ வீ வேங்கை பூவின் அன்ன அவரை - சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினையொத்த நிறத்தையுடைய அவரை விதை
வேய் கொள் அரிசி - மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி
சுவல் விளை நெல்லின் அரிசி - மேட்டுநிலத்தே விளைந்த நெல்லின் அரிசி
சொரிந்த மிதவை புளியங்கூழ் - இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழை
          இவர் மிதவை என்பதற்குக் குழைவான (சோறு) என்று பொருள்கொள்கிறார்.

இதனை ஆற்றொழுக்காகவே, அதாவது, இருக்கிறபடியே, பொருள்கொள்வார் பொ.வே.சோமசுந்தரனார்.
சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த
மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசியினாலாய சோற்றின்கண் சொரிந்த
மேட்டு நிலத்தின் விளைந்த நெல்லின் அரிசியை விரவி அவரை விதையினாற் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழை
          இவர் மிதவை என்பதற்குச் சோறு என்று பொருள்கொள்கிறார்

சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினைப்போன்ற மூங்கில் அரிசிச் சோற்றில், மேட்டு நிலத்தில் விளைந்த
நெல்லின் அரிசியை விரவி அவரை விதையாற் புளியைக் கரைத்துச் செய்த புளியங்கூழை - இது ச.வே.சு - உரை
          இவரும் மிதவை என்பதற்குச் சோறு என்றே பொருள்கொள்கிறார்.

          இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்தப்பகுதி, 'புல் வேய் குரம்பை'-களில், அதாவது குடிசைகளில் வாழும் முல்லைநில மக்களின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக்கூறும் வகையில் அவர்களின் வீட்டுக்கு இரவில் சென்றால் கிடைக்கக்கூடியது என்று புலவர் குறிப்பிடுவது.
இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


                    கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
                    கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
                    வாங்கு கை தடுத்த பின்றை - அகம் 37/12-14

கொள்ளும் பயறும் அழகு பொருந்தப் பாலுடன் கலந்து ஆக்கிய, வெள்ளிக்
கம்பியை ஓர் அளவாக நறுக்கிய வெள்ளிய அவிழ்க் கஞ்சியை
வளைத்துண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர் - ந.மு.வே.நாட்டார் உரை.
          இவர் மிதவை என்பதற்குக் கஞ்சி என்று பொருள்கொள்வார். பின்னர் மிதவை - கூழ் என்று விளக்குவார்.

கொள்ளும் பயறும் பாலோடு விரவிச் சமைத்த,
வெள்ளிக்கம்பியை ஓரளவாகத் துணித்துப்போட்டாற் போன்ற வெள்ளிய பருக்கைகளைக் கொண்ட கூழையும்
வயிறாரப் பருகி, இனி வேண்டா என்று வளைந்த கையால் தடுத்த பின்றை
- பொ.வே.சோமசுந்தரனார் உரை
          இவரும் மிதவை என்பதற்குக் கூழ் என்று பொருள்கொள்வார்.

          இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இது பாலைத்திணைப் பாடலாயினும், உழவர்கள் 'வைகு புலர் விடியலாகிய' அதிகாலையில் நெல் கதிரடிக்கும் களத்தில் வேலை செய்கையில், இந்தக் கஞ்சியை வாங்கிக் குடித்துவிட்டுத் தம் பணியைத் தொடர்வர் என்று பாடல் கூறுகிறது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
          பெரும் சோற்று அமலை நிற்ப - அகம் 86/1,2

உழுத்தம் பருப்புடன் கூட்டிச்சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு
பெரிய சோற்றுத் திரளையுடைய உண்டல் இடையறாது நிகழ
- ந.மு.வே.நாட்டார் உரை

உழுத்தம் பருப்புப் பெய்து சமைத்த கொழுவிய களியாகிய மிதவையோடு மிக்க சோற்றினையும் சுற்றத்தாரும்
பிறரும் உண்ணுதலாலே உண்டாகும் ஆரவாரமும் இடையறாது நிற்பவும்
- பொ.வே.சோமசுந்தரனார் உரை
விளக்கம் - உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை என்பது ஒருவகைத் துணை உணவு; அஃதாவது உழுத்தம் பருப்புப் பொங்கல் என்றவாறு.

          எனவே இருவரும் மிதவை என்பதற்குப் பொங்கல் என்றே பொருள் கொண்டிருக்கின்றனர்.

          இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்த நிகழ்ச்சி, பாடலில், ’கனை இருள் அகன்ற கவின்பெறு காலை’-யில் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
          தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே - அகம் 340/14,15

பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மாவைத்
தயிரிட்டுப் பிசைந்த கூழினைக் கொடுப்போம் உனக்கு
- ந.மு.வே.நாட்டார் உரை
இங்கு, தயிர் மிதி மிதவை மா ஆர்குநவே என்று பாடங்கொண்டு, கூழினை உன் குதிரைகள் உண்பனவாகும் என்று இவர் பொருள்கொள்கிறார்.

தயிர் மிதி மிதவை - gruel mixed with curds - வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

பச்சையான மீனை விற்றுப் பெற்ற வெண் நெல்லினது மாவைத் தயிர்விட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை உன் குதிரைகள் உண்ணத் தருவோம்.ச.வே.சு - உரை.
இவர், தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே என்று பாடங்கொண்டும் ,குதிரைகளுக்கு என்று வலிந்து பொருள்கொள்கிறார்.
இங்கும் மிதவை என்பதற்குக் கூழ் என்றே பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது.

          இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, தலைவன் இரவில் தங்கினால் இரவு உணவாகத் தலைவன் தனக்கோ, தன் குதிரைக்கோ தலைவியிடம் பெறும் உணவாகவே இந்த நெய்தல் திணைப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல்
          தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
          வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
          ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
          அவரை கொய்யுநர் ஆர மாந்தும் - புறம் 215/1-5

கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்
தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த
வேளையினது வெள்ளிய பூவை வெள்ளிய தயிரின்கண் பெய்து,
இடைமகள் அடப்பட்ட அழகிய புளியங்கூழையும்
அவரை கொய்வார் நிறைய உண்ணும்  - ஔவை.சு.து. உரை
விளக்கம் - வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத் தாளிதம் செய்யப்பட்ட புளியங்கூழ் ஈண்டு அம்புளி மிதவை யெனப்பட்டது.

பிளவைக் கொண்ட வரகுக் கதிரின் அரிசியைக் குற்றி வடிக்கப்பெற்ற சோற்றையும் பூப்பொடி எருப்போலக் கிடக்கும் தெருவில் புழுதியில் மலர்ந்த வேளைப் பூவினைத் தயிரில் கலந்து ஆயர்மகள் ஆக்கிய இனிய  புளியங்கூழையும் அவரை பறிப்பார் நிரம்ப உண்ணும் - ச.வே.சு - உரை.

          இங்கும் நாம் கவனிக்கவேண்டியது இந்த மிதவை ’ஆய்மகள்’ சமைத்தது, அதாவது, இடையர் வீட்டு மக்கள் உண்ணுவது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் - மலை 416,417

பல ஆட்டினங்களையுடைய திரள்களிலே இராக்காலத்தையுடையிராய்ச் செல்லின்
பாலும் பாற்சோறும் நுமக்கு என்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவீர் -  நச்சினார்க்கினியர் உரை.

பொ.வே.சோமசுந்தரனாரும் இதனையே பொருளாகக் கொள்வார்.
பின்னர், விளக்கத்தில், மிதவை - பாற்சோறு, இனி, மிதவை வெண்ணெயுமாம் என்பார் அவர்.

          இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, இந்த மிதவை இடைக்குல மக்களின் இரவு உணவு என்பதை. இரவில் திடீரென்று அவர்கள் வீட்டுக்குப் போனாலும், உடனே கிடைப்பது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட குறிப்புகளினின்றும் நாம் பெறுவது :
1. மிதவை என்ற உணவுப்பொருள் குறிப்பது: 1) சோறு, 2) கூழ் அல்லது கஞ்சி, 3) பொங்கல், 4)  பால்சோறு,    5) வெண்ணெய்.
2. இது 1) அரிசியினால் செய்யப்படுவது, 2) கொள்ளும் பயறும் கலந்து செய்வது, 3) உழுந்தங்களியினால் ஆனது,   4) அரிசிமாவினால் ஆனது, 5) வரகுச்சோறு, வேளைப்பூ கடைந்தது ஆகியவை கலந்தது.
3. இது உழைப்பாளிகளான நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் (middle/lower middle class people) உணவு.
4. இந்த உணவு காலையிலோ, இரவிலோ உண்ணப்படுகிறது.
5. எதிர்பாராமல் திடீரென்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகட்கு உடனடியாக எடுத்து உண்ணக்கொடுப்பது.

          எந்தவோர் உரையாசிரியரும் இந்த உணவுப் பொருள் ஏன் மிதவை எனப்படுகிறது என்பதற்கான விளக்கம் அளிக்கவில்லை. மிதவை என்பதன் அடிச் சொல் ’மித’ (float).  மிதப்பது மிதவை என்ற பொருளில் நீரின் மேல் மிதக்கும் தெப்பம் போன்றவற்றை மிதவை எனலாம். பரிபாடலில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதைக் கண்டோம்.


ஆனால் இந்த உணவுப்பொருள் எதன் மீது மிதக்கிறது?
          பொதுவாகச் சிற்றூர்களில் உள்ள உழைப்பாளிகள் வீட்டில் ஒருநேரம் மட்டும்தான் சமையல் நடக்கும். அவரவர் தொழிலைப் பொருத்து, காலையிலோ, மாலையிலோ ஒருநேரம் சமைப்பார்கள். அவ்வாறு காலையில் சமைத்து மீந்ததை மாலையிலோ, மாலையில் சமைத்து மீந்ததைக் காலையிலோ உண்பார்கள். ஆக்கிய சோறு கெட்டுவிடாமல் இருக்க அதன்மேல் நீர் ஊற்றி வைப்பார்கள். சில இடங்களில் இதனை வெந்நிப்பழசு என்பார்கள். சில சமயங்களில் இந்தப் பழைய சோறும் நொசநொசத்துப்போய்விடும். எனவே சோற்றைக் குழைவாக ஆக்கி, கைச்சூட்டில் உள்ளங்கையில் உருட்டி, உருண்டைகளாக ஆக்கி, ஒரு பெரிய சட்டியில் மோரிலோ, புளிச்சதண்ணி எனப்படும் புளித்த நீரிலோ போட்டுவிடுவார்கள். தேவைப்படும்போது ஒரு உருண்டை அல்லது ஒரு மிதவையை எடுத்து, பால், தயிர், மோர், புளிச்சதண்ணி அல்லது புளிப்பாகக் கடைந்த கீரை ஆகியவற்றை ஊற்றி, கூழாகப் பிசைந்துகொண்டு உண்பார்கள்.

          அந்தக் காலத்தில் மிகவும் ஏழைமக்கள் கேப்பைக் களியைக் கிண்டி, இவ்வாறு உருண்டைகளாக்கி ஏதாவது ஒரு நீர்மப்பொருளில் மிதக்கவிட்டு வைத்திருப்பார்கள். அதுவும் இடையர் வீடுகளில் பாலுக்கா பஞ்சம்? திடீரென்று இரவில் விருந்தாளிகள் வந்துவிட்டால், அந்த நேரத்தில் அடுப்புப் பற்றவைக்க மாட்டார்கள். இருக்கிறது பால், மிதக்கிறது களி மிதவை. பாலும், மிதவையும் பண்ணாது கொடுத்துவிடுவார்கள்.


          பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் என்ற மலைபடுகடாம் வரிக்கு இதுதான் சிறந்த பொருளாகலாம்.

          நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற ஒரு பாடல் உண்டு. நெல்லை யாராவது சோறாக ஆக்குவார்களா? நெல்லைக் குற்றி அரிசியாக்கி, அதனை நீரிலிட்டு வேகவைத்த சோறுதான் நெல்லுச்சோறு.

          கேப்பைக்களி என்கிறோம்.  கேப்பையைத் (கேழ்வரகு) திரித்து,மாவாக்கி, நீரில் கரைத்து, கிண்டிவிட்டு வேகவைத்து, சற்று இறுகிய பின்னர் உருண்டையாக்கினால் அது கேப்பைக்களி. அதை மோரில் மிதக்கவிட்டால் களி மிதவை.

          வெண்ணெல் மாஅ தயிர் மிதி மிதவை’ என்ற அகநானூறு அடிக்கு இவ்வாறுதான் பொருள்கொள்ளவேண்டும்.

          எனவே, பச்சரிசிச் சோற்றைக் குழைய ஆக்கியோ, அரிசி அல்லது பயறுகளின் மாவைக் களியாகக் கிண்டியோ,  சூடாக முதலில் உண்டுவிட்டு, மீந்ததை உருண்டைகளாக்கி ஒரு நீர்ப்பொருளில் மிதக்கவிடுவதே மிதவை.

          எனவே இது உருண்டைச் சோறு அல்லது களியுருண்டை. பின்னர் இதனைப்  பாலிலோ, தயிரிலோ, புளித்தநீரிலோ, புளிப்பான கீரைக்கடைசலிலோ கரைத்துக் கூழாகக் குடிப்பது வழக்கம்.

          இன்றைக்கும் இந்தப் பழக்கம் சிற்றூர்களில் ஏழைபாழைகளின் மனைகளில் நடப்பதைக் காணலாம்.

          இந்தப் பொருளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மிதவை என்றசொல் வரும் பாடல்வரிகளைப் படித்துப்பாருங்கள். கூழின் சுவையையும், அதைக் கூறும் தமிழின் இனிமையையும் ருசிக்கவும், ரசிக்கவும் செய்யலாம்.




தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/