Saturday, August 10, 2019

ஆவணம் விழா – 2019——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            தொல்லியல் கழகம் தோன்றி இருபத்தெட்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதன் இருபத்தொன்பதாம் ஆண்டின் கருத்தரங்கம், 2019, ஆகஸ்டு 3,4 தேதிகளில் கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்கழகம் ஆண்டுதோறும் வெளியிடும் “ஆவணம்” இதழ், முப்பதாவது இதழாக மலர்ந்தது. தமிழகத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொல்லெச்சங்கள் மற்றும் முன்னர் பதிவு செய்யப்படாத கல்வெட்டுகள், ஓலை/செப்பேடுகள் ஆகியன இந்த இதழில் முறையான வடிவத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகளுக்கு இதில் இடமில்லை. உலகின் பல பகுதிகளிலும் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த நிறுவனங்கள் இந்நூலை ஒரு பார்வை நூலாக ஏற்றுக்கொண்டுள்ளன. கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்னும் முறையில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுவருவதோடு, புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து இந்த ஆவணம் இதழில் பதிவு செய்துகொண்டும் வருகின்ற சூழலில், நான் “இருந்து வாழும்”  கோவை நகரிலேயே விழா நடைபெறுகையில் அந்நிகழ்வில் நான் அறிந்துகொண்ட தொல்லியல், வரலாறு தொடர்பான செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளும் விழைவே இப்பதிவு.

(குறிப்பு :  மேலே, நான் “இருந்து வாழும்”  கோவை நகர் என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. கோவையில்  “வசித்து வருகிறேன்” என்று சொல்வதற்கும், “இருந்து வாழும்”  என்பதற்கும் ஓர் அழகிய வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளில், ஒருவர் பெயரைக் குறிப்பிடுகையில், அவர் இன்ன ஊரினர் என்னும் குறிப்பு தவறாமல் இடம் பெறுதல் வழக்கு. குளத்தூருடையான், நல்லூருடையான் என்று ஊர்ப்பெயரை முன்னொட்டாகச் சொல்லிய பின்னரே அவருடைய இயற்பெயர் குறிக்கப்பெறும். இறைவரின் பெயரும் அவர் உறைகின்ற ஊர்ப்பெயரை இணைத்தே சுட்டப்பெறும். அவிநாசி ஆளுடையார், மன்னியூராண்டார் என வருவதை நோக்குக. நான் அண்மையில் கண்டறிந்த ஒரு கல்வெட்டு குட்டகம் என்னும் ஊரில் உள்ள ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு. அதில், எறுளங்கோதை என்னும் அழகியதொரு பெயர் ஒரு பெண்மணிக்கு அமைந்ததும், அவள் குடவோடு என்னும் ஊரில் “இருந்து வாழும்” ஒருவரின் மனைக்கிழத்தி என்று குறிப்பிடப்படுவதும் மிகவும் கவர்ந்தவை. எனவே, ”வசிக்கும்”  என்பதன் அழகிய தமிழ் வடிவமான “இருந்து வாழும்”  என்னும் சொல்லைப் பயன்படுத்தினேன்.)


முதல் நாள் நிகழ்வுகள்:
தலைமையுரை: செயலர் திரு. கண்ணையன் --
            தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் தொடங்கின. கழகத்தின் செயலரான முனைவர். சு. இராசவேலு அவர்கள் அனைவரையும் வரவேற்ற பின்னர், நிகழ்ச்சியின் களமான பூ.சா.கோ. கலைக்கல்லூரியின் செயலர் முனைவர். தி. கண்ணையன் (இவர் ஒரு பொறியாளர்) தம் தலைமை உரையில்,  பழமை மீட்டெடுக்கப்பட்டுப் போற்றப்படுகின்ற நிலை வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். உணவு முறையில் பழமை திரும்பியுள்ளது. மதிப்பு உணரப்பட்டுள்ளது. முற்காலத்து மனிதன் மணலில் எழுதிப்பார்த்திருக்கவேண்டும். அவன் எழுதிய முறை X,Y – GRAPHICAL WAY வடிவில் அமைந்திருக்கவேண்டும். கல்லூரி மாணாக்கர், உலா செல்கையில் மரங்களில் தம் பெயரைச் செதுக்கி வைத்துச் செல்கின்றனர்.  இதுவும் பழங்கால மனிதனின் வெளிப்பாட்டெச்சம் எனலாம். பண்டு, கல்வெட்டுகளைப் பொறித்துவைத்த சிற்பக் கலைஞர்கள் எத்துணை ஈடுபாட்டுடனும் எவ்வளவு நேரமெடுத்தும் எழுதியிருப்பர் என வியந்தெண்ணத் தோன்றுகிறது.

நோக்கவுரை: திரு. எ.சுப்பராயலு --
            கழகம் தோற்றம் பெறச் செய்த முதல் நிலை அமைப்பாளரான முனைவர் திரு. எ. சுப்பராயலு அவர்கள் தம் நோக்கவுரையில் கழகத்தின் நோக்கம் பற்றிக் கூறினார். இருபத்தொன்பது ஆண்டுகள் இயங்கிவிட்ட இந்நிலையில் கழகத்தின் இயக்கத்தில் எங்கு தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்னும் ஐயம் எழுந்தது. காரணம் வயது முதிர்ந்தவர்களின் ஓய்வு. ஆனால், அவ்வாறில்லை. கழகத்தின் தொடர்ந்த இயக்கம் குறித்து நம்பிக்கை உள்ளது. கல்லூரியின் செயலர் குறிப்பிட்ட X,Y – GRAPHICAL WAY வடிவம் தொல்லியலில் குறிப்பிடப்பெறுகின்ற குறியீடுகளே (GRAFFITI).  1700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துகள் பொறிக்கப்பட்ட செக்குக் கல்வெட்டு அண்மையில் கண்டறியப்பட்டு இந்த ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அறச்சலூர்த் தமிழிக் கல்வெட்டை ஒத்த காலம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

            முறையான தொல்லியல் அறிவு பரவலாகப் போகவேண்டும். வரலாற்றுக்குப் பயன்படுகின்ற செய்திகள் மட்டுமே மக்களைச் சென்றடையவேண்டும். நாளிதழ்களில் பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாளிதழில் மிகைப்படுத்தப்பட்ட  செய்திகள் விரும்பப்படுதல் இயல்பு. ஆகவே, வரலாற்றுச் செய்திகள் இடம்பெறும்போது மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், நல்ல செய்திகள் என வேறுபடுத்திப் பிரித்துப்பார்க்கவேண்டும். முடியுமட்டும் நம்பக்கூடிய வரலாற்றுச் செய்திகளையே பிரித்தெடுத்து ஆவணம் இதழில் பதிவு செய்கிறோம். வரலாற்றாளர் செய்திகளை அணுகும்போது முதலில், செய்தி நம்பக்கூடியதா என்றும், வரலாற்று உண்மை (HISTORICAL FACT) அதில் இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் (CORROBORATION). தொல்லியல் கழகம் வரலாற்றாளர்களுக்கு உதவும் பணியில் முப்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

            பழைய சின்னங்களைக் காப்பாற்றுவதும் போற்றுவதும் வேண்டும். ஆர்வலர்கள் இதற்கு உதவ வேண்டும். நேற்றிருந்த கல்வெட்டுகள் இன்றில்லை. கருநாடகத்தின் வடக்கு கனரா மாவட்டத்தில் அசோகனின் கல்வெட்டு ஒன்று கிடைத்துப் பிறகு உடைத்தெறியப்பட்ட செய்தியைச் செவியுறுகிறோம். கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளையும் சிறிது சிறிதாக அழித்துவருகிறார்கள். பொதுமக்களின் ஒத்துழைப்போடு கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் செயலில் ஈடுபடவேண்டும். தற்போது, மரபு நடைப் பயணங்கள் பெருகி வருகின்றன. அவற்றை வரலாற்று மையங்கள் பல நடத்துகின்றன. இம்மையங்களுக்குள் நட்பில்லை; பகைமை வளர்கிறது என்று கேள்விப்படுகிறோம். WHATS APP போன்ற ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் செய்திகள் பகிரப்படுகின்றன. இது போன்ற பகிர்வுகளில் ஆரோக்கியமான நோக்கும், ஒத்துழைப்பும் இருக்கவேண்டும்.

ஆவணம் இதழ் மற்றும் நூல்கள் வெளியீடு:
            ஆவணம் முப்பதாவது இதழ் கழகத்தின் தலைவர் திரு. செந்தீ நடராசன் அவர்களால் வெளியிடப்பெற்றது. அடுத்து,  சென்னைப் பல்கலையில் தொல்லியல் துறையில் பணி நிறைவு செய்த பேராசிரியர் ப. சண்முகம் அவர்கள் எழுதிய ”பெரிய பட்டினம் காசுகள்”  என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் பேசுகையில்,  ”கீழக்கரை அருகில் அமைந்த இவ்வூரில் சங்க காலக் காசுகளும், இடைக்காலச் சோழர் காசுகளும் கிடைத்துள்ளன. சீன அறிஞர் நொபுரு கரசிமா அவர்களும் சுப்பராயலு அவர்களும் இணைந்து எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஆய்வு செய்கையில் ஊர் மக்கள் இவ்விருவரிடமும் நிறையக் காசுகளைத் தந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். சுப்பராயலு அவர்கள் நூலாசிரியரிடம் இக்காசுகளைக் கொடுத்துள்ளார். காசுகளை ஆய்வது அத்துணை எளியதல்ல. அவற்றைத் தூய்மைப் படுத்தவேண்டும். நீண்ட காலம் சென்று தற்போது தம் ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி நூலை வெளியிட்டுள்ளார். சங்ககாலக் காசுகளாகச் சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும் சோழர் காலக் காசுகளும் கிடைத்துள்ளன. எனவே, பெரிய பட்டினம் சங்ககால ஊராகவும், இடைக்காலச் சோழர் காலத்தில் ஒரு துறைமுகமாகவும் விளங்கியதையும் அறிகிறோம். வணிகப்பகுதியாக  இருந்த ஊர். நூற்றைம்பது காசுகளை ஆய்ந்து ஆசிரியர் இந்நூலில் எழுதியுள்ளார். NUMISMATICS  என்னும் நாணயவியலாளர்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும். எழுத்துகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்யும் வரலாற்றாளர்களுக்கும் இந்நூல் பயன்படும். 

            அடுத்து, வில்லியனூர் வெங்கடேசன் அவர்கள் எழுதிய “காரைக்கால் கல்வெட்டுகள்”  நூல் வெளியிடப்பெற்றது.   பின்னர் வாழ்த்துரை நிகழ்ச்சியில் (கோவை) சிரவை ஆதீனம் அவர்களும், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரான முனைவர் பத்மாவதி அவர்களும் உரையாற்றினர். ஆதீனம் அவர்கள், தம் உரையில், கோயில்களின் தொன்மை குறித்தும், தஞ்சைக் கோயிலின் நுழைவாயிலின் அகலம் சார்ந்த சிறப்பு குறித்தும் பேசினார். திருப்பெருந்துறைக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகச் சிறப்பானவை என்றும், சிற்பக் கட்டுமானத்தில் குறைகள் ஏற்படின் அக்கற்களை அகற்றிச் செம்மைப்படுத்த மாற்றுக்கற்களும் இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.            சீனாவில் கிடைத்த தமிழ்க்கல்வெட்டு பற்றி திரு. சுப்பராயலு அவர்களின் விளக்கம்:
அண்மையில், முனைவர் சு.இராசகோபால் அவர்கள் சீனாவில்-தமிழ்க்கல்வெட்டு பற்றிய முக நூல் பதிவினை சுப்பராயலு அவர்களின் ஆய்வுப்பார்வைக்கு அனுப்பியிருந்தார். கல்வெட்டில் ஒரு சைவப்பாடல் இருக்கிறது. 
பாடல் வரிகள் வருமாறு :
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறுசிறக்கவே

            கல்வெட்டில் பாடலுக்கு முன் இரண்டு கிரந்த எழுத்துகள் உள்ளன. அவை “ஹர:” பாடல் சிவ மதத்தைப் போற்றுவதாக அமைந்துள்ளது. சீனாவில் குவான் ஜோ (QUANZHOU) என்னுமிடத்தில் கிடைத்துள்ளது.

குப்ளாய் கான்  காலக் கல்வெட்டு:
            இதே ஊரில், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு கல்வெட்டு கிடைத்தது. அது பற்றி SOUTH INDIAN STUDIES பதிப்பில் நீண்டதொரு கட்டுரையைத் தி.நா.சுப்பிரமணியன் எழுதினார். அதிலும் கல்வெட்டு முதலில் “ஹர”  என்னும் இறை வாழ்த்துடன் தொடங்குகிறது. மங்கோல் (MONGOL) அரசன் செங்கிஸ்கானின் (GENGHIS KHAN) பேரன் குப்ளாய்கான் (KUBLAI KHAN) என்பவன். குப்ளாய் கான் என்பது எல்லாருக்கும் தெரிந்த பெயர். அவனுக்குச் “செகசை கான்”  என்னும் பெயரும் உண்டு. இது சடங்குக்காக வைத்த பெயர். அவன் ” திருமேனிக்கு நன்றாக” என்று கல்வெட்டில் வருவது அவனுடைய உடல் நலத்துக்காக எனப் பொருள் படும்.  “திருக்கானீசுவரம்”  என்னும் கோயில் எடுப்பித்த செய்தி. அரசனின் பின்னொட்டுப் பெயரான கான் (KHAN) என்பதன் அடிப்படையில் கோயிலின் பெயர் கானீசுவரம் என்று வழங்கப்பட்டது. கல்வெட்டில் வரும் “பர்மான்”  என்பது அரசனின் ஆணை (உத்தரவு) எனப்பொருள்படும் பாரசீகச் (PERSIAN) சொல்லாகும். (பின்னூட்டமாகக் கருத்துத் தெரிவித்த ஒருவர் “பர்மான்” என்பது “ப்ரமாண்” என்பதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்). கல்வெட்டு கிடைத்த இடத்தில் சிற்பங்கள் இருந்தன. ஆனந்த குமாரசாமி இதைப்பற்றி எழுதியுள்ளார். குப்ளாய் கானின் தூதுவர் பாண்டி நாட்டுக்கு வந்ததாகவும், பாண்டிநாட்டிலிருந்து தூதுவர் சீனத்துக்குச் சென்றதாகவும் செய்தி உள்ளது. கல்வெட்டில், சீன எழுத்துகள் பன்னிரண்டு உள்ளன. கரஷிமாவின் மாணவர் இதைக் கரஷிமாவுக்குக் காட்டியுள்ளார். ஆனால், சீன எழுத்துகள் இதுவரை படிக்கப்படவில்லை. சீனப் பேராசிரியர்களுக்கே படித்தல் கடினம். காரணம், பிற மொழிச் சொற்கள் சீனத்துக்கு மாறும்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் பெறும்.

            தற்போதைய சீனக் கல்வெட்டில் வரும் பாடல் பெரியபுராணம் நூலில் காணப்படுகிறது. இப்பாடல் சேக்கிழார் இயற்றியது அல்ல. இது, கே. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பில் சேர்க்கப்பட்ட ஒரு தனிப்பாடலாகும். ஓம்படைக்கிளவி போன்ற கருத்தில் சேர்க்கப்பட்ட தனிப்பாடல் எனலாம். திருக்குறள் நூலின் பதிப்பின் இறுதியில் அமையும் திருவள்ளுவ மாலை போன்ற பாடல் பகுதி எனலாம். (தமிழ் நாட்டில் வேறொரு கல்வெட்டிலும் இப்பாடல் வருகின்றது). இரு சீனக் கல்வெட்டுகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை.  மேற்படி குவான் ஜோ (QUANZHOU) நகரில் கோயில் இடிபாடுகள், துண்டுச் சிதறல்கள் முந்நூற்றுக்கும் மேலாகக் கிடைத்துள்ளன. தமிழகத்திலிருந்து கல்தச்சர்கள் சீனாவுக்குச் சென்று கோயில் சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள் கலைப் பண்பாட்டுப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இப்பணியில் பல ஆண்டுகள் அவர்கள் சீனாவில் தங்கியிருத்தல் வேண்டும். 12-13 –ஆம் நூற்றாண்டுகளில் இந்நகரம் சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்கிறது. பல நாட்டு வணிகர்களும், பல மதத்தவர்களும் இந்நகரின் தெற்குப்பகுதியில் குடியிருப்பு அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர் கட்டிய சிவன் கோயிலின் கட்டுமானத் துண்டுகள் -  தூண்கள், சிற்பங்கள் ஆகியவை - இங்குள்ள புத்தக் கோயில்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பல தற்போது இந்நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

            ஊடகங்களில் அரைகுறையாகவும், வேகமாகவும் பல செய்திகள் (முழுப்புரிதலின்றி ?)  வெளியாகின்றன.

            15-ஆம் நூற்றாண்டில் சீனக்கப்பல்கள் இந்தியப் பகுதிக்கு வந்து போயுள்ளன. இந்தியக் கப்பல் தலைவர் பொறித்த சில கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன. இவை யாவும் மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். தமிழ், சீனம், பாரசீகம் ஆகியவை அம்மொழிகள். ஒரு கல்வெட்டு கோழிக்கோட்டில் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தூண் கிடைக்கவில்லை. இலங்கையில், தெற்கு கல்லெ (GALLE)  என்னுமிடத்தில் மற்றொரு கல்வெட்டு கிடைத்துள்ளது. 

கட்டுரை வாசித்தல் – அமர்வு:
            அடுத்து, கட்டுரை வாசித்தலுக்கான அமர்வு தொடங்கியது. அமர்வுக்குத் தலைவர் திரு. பூங்குன்றன் அவர்கள்.

அ) மணிகண்டன் -  நாணயவியல் ஆய்வாளர், சென்னை.
            இவர் தமக்குக் கிடைத்த ஒரு தங்க நாணயப்படத்தைக் காட்சிப்படுத்தி, அது முதலாம் இராசராசனின் நாணயம் என்னும் கருத்தை முன்வைத்தார். அதில் உள்ள புலியின் தோற்றம் இதுவரை மற்ற நாணயங்களில் கண்டிராத தோற்றம் என்பதும், நாணயத்தில் எழுதப்பட்டுள்ள “ ராஜ – உ டை “  என்னும் எழுத்துகளே என்பதும் அவர் சுட்டிய காரணங்கள். ஆனால், இவரது கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ”உடையார்”   என்னும் முழுச் சொல் நாணயத்தில் காணப்படவில்லை.  மேலும், “ உ டை “  என்று கட்டுரையாளர் படித்த இரு எழுத்துகள் எழுத்துகளாகத் தோன்றவில்லை.  எண்களின் குறியீடாகத் தோன்றுகிறது என்பதாக ஐயங்கள் எழுந்தன. புலியின் உருவமும் சிங்கத்தையே நினைவூட்டியது. அதன் வாலின் நுனியில் காணப்படுகின்ற சிறு குஞ்சம் போன்ற அமைப்பு, சிங்கத்துக்கு அமைவதும், புலிக்கு இவ்வமைப்பு இல்லாததும் ஆய்வுக்குரியது.   

“ராஜ உ  டை”  

ஆ) முத்து பழனியப்பன் – அறநிலையத்துறை அலுவலர் (பணி நிறைவு)
            இவர், கல்வெட்டில் வருகின்ற குடி நீங்கா தேவதானம் பற்றிய தம் கருத்துகளை முன்வைத்தார். தேவதானம் என்பது கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படும் நிலம் ஆகும். இந்நிலக்கொடை இறையிலியாக அளிக்கப்படும். அதாவது அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரிகளிலிருந்து நீக்கம் பெற்ற நிலம். சில போது, இவ்வகை நிலக்கொடை “குடி நீங்காத் தேவதானம்”  என்று குறிப்பிடப்பெறும். நிலங்களைச் சார்ந்து உழுகுடிகள் இருப்பர்.  இவர்கள் உழுது பயிரிட்டு அவ்வுழைப்பு தரும் வருவாயில் வாழ்பவர்கள். தேவதானமாக ஒரு நிலம் கோயிலுக்கு அளிக்கப்படுகையில், அந்நிலத்தைச் சார்ந்த உழுகுடிகளை மாற்றாமல் தொடர விடுகின்ற நிலையில் அந்நிலம் குடி நீங்காத் தேவதானம் எனப்படும். ஆனால் கட்டுரையாளர், குடி நீங்காத் தேவதானம் என்பது குடிவாரம் என்னும் சொல் குறிக்கும் நிலம் என்னும் பார்வையில் கருத்து வைத்தார்.  RIGHT TO PERMANENT OCCUPANCY என்னும் கருதுகோளை ஒட்டிப் பேசினார். இக்கருத்தும் ஏற்கப்படாமல் முரண் கருத்துகள் வெளிப்பட்டன.

இ) சுபாஷ் சந்திரபோஸ் -  குறியீடுகள் மற்றும் சிந்து முத்திரைகள் – ஆய்வாளர்
            இவர் தமது ஆய்வுகளை “தொ(ல்)லியல்”  என்னும் பெயரில் காட்சிப்படுத்தினார். சிந்து சமவெளி முத்திரைக் குறியீடுகளைத் தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கும் பானைக் குறியீடுகளோடு ஒப்பிடுதல், சிந்துக் குறியீடுகளைப் படித்தல் ஆகிய தம் செயல்பாடுகளை எடுத்துச் சொன்னார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  “தொலியல்” ,  உமி நீங்கிய அரிசி என்று சில தொடர்களைக் கையாண்டு ஆய்வுக்கட்டுரையாளர் கூறியவை இக்கட்டுரை ஆசிரியருக்கு விளங்கவில்லை) 


            கடந்த 25 ஆண்டுகளாக அவர் செய்துவந்துள்ளதைக் குறிப்பிட்டார். சிந்துக் குறியீடுகள் எந்த மொழியைச் சார்ந்தவை என்பது நூறு ஆண்டுகளாகச் ‘சர்ச்சை’யாக இருந்து வருகின்றது. ”மோ” , “ச”  எழுத்துகளை அவர் அடையாளம் கண்டதும்,  எகிப்து நாட்டில் கிடைத்த குறியீடுகளுக்கும், சிந்துக் குறியீடுகளுக்கும் உள்ள ஒப்புமையைக் கண்டறிந்ததையும் அவர் காட்டியவாறு கீழுள்ள படங்களில் காணலாம்.

            அவருடைய ஆய்வில் படித்தறிந்த சில தரவுகளின் படங்களை , அவர் காட்சிப்படுத்தினார்.  அவை  பார்வைக்கு:


ஈ)  முனைவர் செல்வகுமார் - நாங்கூர் அகழாய்வு
            இவர், சீர்காழி அருகில் உள்ள நாங்கூரில் செய்த அகழாய்வு பற்றி விளக்கினார்.  காவிரிப்படுகையில் அமைந்த ஊர்ப் பெயர்களின் ஆய்வினையும் செய்துள்ளார்.  நாங்கூர் சங்ககால ஊராக அறியப்படுகிறது. இது ஒரு வைணவத் திருத்தலம். திருமங்கையாழ்வாரோடு தொடர்புப் படுத்தப்படுகிறது. கரிகாலச் சோழன் நாங்கூர் வேளிரின் மகளை மணமுடிக்கக் கேட்டான் என்றொரு செவிவழிச் செய்தி  நிலவுகிறது. மூன்று குழிகளில் நடந்த அகழாய்வின்போது சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் இங்குக் கிடைத்தன.  மற்றும், செங்கற்கள், சுடுமண் பொம்மைகள், வளையல்கள் ஆகியனவும் கிடைத்துள்ளன.  இங்கு கிடைத்த வளையல்கள் மாந்தையில் கிடைத்த வளையல்கள் போன்றுள்ளன.  மீன், ஸ்வஸ்திகா ஆகிய குறியீடுகளும் இங்கு கிடைத்தன. 

உ) முனைவர். கே. பன்னீர்செல்வம் – இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI)
            கல்வெட்டுகளில் இயற்கைச் சீற்றங்கள்.
இவர் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய தம் செய்திகளை முன்வைத்தார். வரலாற்றுக் காலத்திலிருந்து இயற்கைச் சீற்றங்கள்,  பெருங்காற்று, பெரும் நெருப்பு, பெரும் வறட்சி,  பூகம்பம் ஆகிய பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. இலக்கியங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.

            விண்டு முன்னிய புயனெடங்காலக்…..கல்சேர்ப்பு மாமழை
                        -  பதிற்றுப்பத்து 84-22

            புயல்மேகம்போற்றிருமேனியம்மான்
                        -  திருவாய்- 8,10,2

            மாமேகம் பெய்த புயல்    
                        -  சீவக சிந்தாமணி 2476

            கல்வெட்டுகளிலும் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கஞ்சி ஊர்க்கோயில் கல்வெட்டில் (AR No.215/1919),
“திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஏரி நிறையேரியிலே பெருங்காற்றடித்துக் குலையழிந்து கெட்டமையில்”
என்று கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனின் 40-ஆம் ஆட்சியாண்டில் – கி.பி. 1110 -  பொறிக்கப்பட்டது. இதே ஊர்க்கோயிலின் மற்றுமொரு கல்வெட்டில் (AR No.216/1919) ,

“ கற்படையின்றியே நிறை ஏரியிலே பெருங்காற்றடித்து கரையழிந்து கெட்டமையில் இவ்வேரி குலோத்துங்க சோழந் கற்படையுஞ்செய்து மண்கல்லிக் கரையூட்டுகைக்கும் ஏரி மாவிரைக்குஞ் சிலவாக நிலநிமந்தமாக விடுக…”
என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1114. ஒரே ஏரி நான்கு ஆண்டுகளுக்குள் இரு முறை பெருங்காற்றினால் கரை அழிந்துபோனமை அறிகிறோம். இதேபோல், கிளிவளநல்லூரில் (இன்றைய தென் ஆர்க்காடு மாவட்டத்துக் கிளியனூர்), பெருங்காற்று, பெருமழை காரணமாக ஊரின் பெரிய ஏரி, பெரிய மதகு, சிற்றேரி ஆகியவற்றின் கரை அழிந்துபோன செய்தியைக் கல்வெட்டு (AR No. 154/1919) தெரிவிக்கிறது. காலம் விசயநகர அரசர் மல்லிகார்ச்சுனர் ஆட்சி. கி.பி. 1450.

            தஞ்சை மயிலாடுதுறை பரசலூர் கிராமத்துக் கோயிலில் நெருப்புப்பட்டு பழந்தேவதான நிலங்களின் ஆவணங்கள் அழிந்துபோனதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

“இது துரித காலங்களிலே நெருப்புப்பட்டு அழிந்து போகயில்”  என்பது கல்வெட்டு வரி.

            மழையின்றிப் பெரும் வறட்சி ஏற்பட்டபோது, வேளாண்நிலம் பாக்குத் தோட்டமாக மாற்றப்பட்டதாக அரியலூர் பெரியதிருக்கோணக்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை புஞ்சை என்னும் கிராமத்துக் கோயில் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டின் காலம் கி.பி. 1127. அரசன் விக்கிரம சோழன். இரண்டாம் கல்வெட்டின் காலம் 1162. அரசன் இரண்டாம் இராசராசன்.

            பெருமழையால் அழிவு நேர்ந்ததைக் குடமூக்கு (குடந்தை) நாகேசுவரர் கோயில் கல்வெட்டும், வந்தவாசி மருதாடு ஊர்க்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை வழுவூர்க் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன.  கல்வெட்டுகளின் காலம் முறையே 1014, 1345, 1402 ஆகும். அரசர்கள் முறையே முதலாம் இராசேந்திரன், இராசநாராயண சம்புவராயர், இரண்டாம் வீரபுக்கண உடையார் ஆவர்.

            “வெண்ணாட்டு நாகக்கோட்டகம் வதி வாய்க்கால் கண்ணாற்றுச் சதிரவாறு சுற்றுக்குலையுமின்றி வெள்ளங்கொண்டநமையில்ச் சேதமாய் வருகையில்”   என்பது திருநாகேசுவரம் கோயில் கல்வெட்டின் வரிகள்.

            “பெருவெள்ளத்திலே உடைந்து இன்னாள்வரையும் அடைக்க முதலில்லாமற் கிடக்கையில் இவ்வேரி அடைக்க..”   என்பது மருதாடு ஊர்க்கோயிலின் கல்வெட்டு வரிகள்.

            திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டு அவ்வூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைப் பற்றிக்கூறுகிறது.

            “பிறபவ வருஷம் ஆடி மீ 16-ஆந்தேதி பூகம்பம்மாகையில் மதிள் அடிமட்டிராக விழுந்து போகையில்…”    என்பது கல்வெட்டு வரி.

ஊ) முனைவர் இரமேஷ் – ஜம்பை பள்ளிச் சந்தல் கல்வெட்டு பற்றி.
            ஜம்பையில் சமணப்பள்ளி இருந்துள்ளதன் காரணமாக இங்குள்ள ஒரு பகுதிக்குப் பள்ளிச் சந்தல் என்னும் பெயர் அமைந்தது. இங்கு ஏரியை அடுத்துள்ள வயற்பகுதியில் தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஆறு பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. சக்கன் வைரி என்பவன் ஏரி வெட்டிக்கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஏரியைப் பாதுகாக்க நிலக்கொடையும் அளிக்கிறான். இவ்வகை நிலக்கொடை “ஏரிப்பட்டி”  எனப்படும்.  “காடு வெட்டி  கட்டைகொண்டு புத்தறை அறுத்து”   என்பது கல்வெட்டு வரிகள். காடு அழித்துப் புதிய தரை நிலம் (புத்தரை) உருவாக்குகின்றனர். கட்டை என்பது மரத்தின் வேர்ப்பாகம். ”கட்டைகொண்டு”   என்பது மரத்தின் வேரோடு காடு அழிக்கப்பட்டதைக் குறிக்கும். கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டு விசயாலய சோழன் காலத்தது எனக் கருதலாம். விசயாலயனின் ஆட்சிக்காலம் கி.பி. 848-871 எனவும் கி.பி. 850-871 எனவும் இரு வகையான கருத்துள்ளது. கல்வெட்டில் ஆட்சியாண்டு இருபத்திரண்டு என்றிருப்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 871 என்று கொள்ளலாம். கல்வெட்டில், குறிப்பாக  ”அ” எழுத்து மிகவும் பழமையான வடிவத்தில் உள்ளது. எனவே, முதலாம் பராந்தகனின் காலத்துக்கும் முன்னர் கருதுமாறுள்ளது. கல்வெட்டு ஜம்பையின் பழம்பெயராக  வாளையூர் எனக்குறிக்கிறது.  

ஏரிக் கல்வெட்டு

கல்வெட்டுப் பாடம் :
1  (ஸ்வஸ்தி)ஸ்ரீ  கோப்பரகேசரி ப
2  (ன்) மற்க்கு  யாண்டு இருபத்
3  .....ன்றாவது வாணகோப்பாடி
4  ....னையூர் நாட்டார் பெரும்பள்ளி 
5  பள்ளிச் சந்தத்து சக்கன் வயிரி ....
6  ...ந்த ஏரிக்கீழ்ச் சக்கன்  காடுவெட்டி
7  க்கட்டை கொண்டு புத்தறை அறுத்து அவ்வே
8  .....ஏரிப்பட்டியாகச் செய்த நிலம் எல்லை
9  ..........சா0ஸநம்  வெட்டின அருகிற்
10  ...............  ம்  வடக்கெல்லை ஏரி கரையடி
11  ...மேல்பாற்கெல்லை வெம்பொ(ற்/டு) குழியு...
12  .... பாற்கெல்லை கீழ்க்கடைக்கொம்பில் ....
13  ..................... கு வருந்திசையிலும் நடுவு
14  (பட்ட நில)ம்  உண்ணிலமொழிவின்றி ...
15  (டிக) ........ சந்தமுடைய பூமிய 
16  ........ பெற்று இவ்வேரிப்(பட்டி)...
17  ...............  க்கடி வயிர ....(ணன்) இ(து)
18  ...............  தலைமேலன.....
19  .......     க ம  ..... ந  உ-

            கல்வெட்டின் பாடத்தைக் கொண்டு, சக்கன் வயிரி என்பவன் ஏரி வெட்டியதாகப் பொருள் கொள்ளமுடியவில்லை. ஏரியைப் பேணுவதற்காக ஏரிக்கீழ் இருக்கும் நிலத்தில் காடு வெட்டித் திருத்திய நிலத்தை “ஏரிப்பட்டி”யாகக் கொடை அளித்தான் என்றே தோன்றுகிறது. கல்வெட்டை ஆய்ந்த இரமேஷ் அவர்களைத் தொடர்புகொண்டு ஐயம் தீர்க்கவேண்டும். ஐயம் தீர்க்கும் முயற்சியில் கல்வெட்டின் தெளிவான ஒளிப்படத்தை அவரிடமிருந்து பெற்றேன்.  ஏரியைச் சக்கன் வயிரி வெட்டினான் என்பது உறுதியாகவில்லை என்றே கருதுகிறேன். ”புத்தறை அறுத்து” என்று கல்வெட்டில் வருகிறது. இது, புல் முளைத்த தரைப்பகுதியைச் சீராக்கியதையே குறிக்கும் என்பது கல்வெட்டு அறிஞர் திரு. பூங்குன்றன் அவர்களின் கருத்து. ஆட்சியாண்டு இருபத்திரண்டு அல்ல என்றும் தோன்றுகிறது. ஐயங்கள் பற்றிய விளக்கம் திரு.இரமேஷிடமிருந்து கிடைத்த பின் சரியான கருத்து தெரியவரலாம்).

            அடுத்து இன்னொரு கல்வெட்டு இரண்டாம் இராசராசனின் ஆறாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஜம்பையில் உள்ள சமணப்பள்ளியில் அஞ்சினான் புகலிடம் அமைத்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. நேமிநாதன் என்பவன் (துரவு) கிணறு அமைத்ததையும் கல்வெட்டு குறிக்கிறது.

அஞ்சினான் புகலிடம் 

கல்வெட்டின் பாடம்:   
1.  ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு ஆறாவது சம்பையாந வீரராஜேந்த்ர பு
2.  ரத்து ஸ்ரீகண்டராதித்தப் பெரும்பள்ளிப் பள்ளிச் சந்தத்து ஸ்ரீகண்டராதித்தப்
3.  பெரும்பள்ளி பள்ளியுடையாந் நேமிநாதந் இட்ட துரவு சோளதுங்கந் ஆளவந்
4.  தாந் அஞ்சிநாந் புகலிடம்  

தி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு:
            முதல் நாள் நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக, தி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அறக்கட்டளையை நிறுவியவர் மறைந்த கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

            சொற்பொழிவினை ஆற்றியவர்,  தமிழகத்தின் புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் திரு. ஆறுமுக சீதாராமன் அவர்கள். நிறைய நாணயங்களின் படங்களைக் காட்சிப்படுத்தி அவற்றிலுள்ள எழுத்துகளைப் பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் படித்துக்காட்டினார். நாணயங்களைப் பற்றிய புலமை கைவரப்பெறுதல் எளிதல்ல.  அவர் காட்சிப்படுத்தி விளக்கிய காசுகளின் எண்ணிக்கை மிகுதி. தனிக்கட்டுரையாக விரியும் தன்மையது. இங்கே ஒரு சில காசுகளைப் பற்றி மட்டும் குறிப்புகளைத் தந்து இக்கட்டுரையைக் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியோடு முடிக்கின்றேன். கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி மற்றுமொரு கட்டுரையாக அமையும். 

1.   பாண்டியர் காசு -  பெருவழுதி
இக்காசு, சங்ககாலப் பாண்டியர் காசு. எழுத்து பிராமி எழுத்து. பட்டிபுரோலு வகைப் பிராமி எழுத்தைச் சேர்ந்தது. அதாவது நெடிலுக்குரிய குறியீடு கொண்டிருக்கும்; குறிலாகப் படிக்கவேண்டும். இதில் “பெருவாழுதி” என்றே எழுதப்பட்டுள்ளது.

2.   சேரர் காசு - குட்டுவன் கோதை
சேரர் காசு. பிராமி எழுத்து. “கு” எழுத்தில் உகரத்தைக் குறிக்கும் குறியீடு வலப்புறமாக எழுதப்படுவதற்கு மாறாக இடப்புறமாக எழுதப்பட்டுள்ளது.

3.   பல்லவன் காசு - மாமல்லன்
காசின் முன்பக்கம் காளை உருவம்; பின்பக்கம் சங்கு உருவம்.  கிரந்த எழுத்துகளில் ”மாமல்ல”   என்று எழுதப்பட்டுள்ளது. “ல்ல”  என்பது கூட்டெழுத்து. 

4.   சோழர் காசு -  ராஜேந்திர சோழன்
சோழ கிரந்தத்தில்  ”ராஜேந்த்ர சோழந்”   என்று எழுதப்பட்டுள்ளது.  இரண்டு மீன்கள், அமர்ந்த புலி, வில்  ஆகியவை உள்ளன.

5.   பாண்டியர் காசு  (13-ஆம் நூற்றாண்டு )  -  சோணாடுகொண்டான்
காசின் முன்பக்கம் நிற்கும் மனிதன். பின் பக்கம் “சோணாடுகொண்டான்”  தமிழில்.


6.   கோனேரிராயன் காசு -  15-ஆம் நூற்றாண்டு
முன்பக்கம் காளையும், குத்து வாளும்.  குத்துவாளுக்கு மாலை அணிவிக்கப்பட்டுளது. பின்பக்கம் “கோனேரிராயன்”  தமிழில்.

7.   தஞ்சை நாயக்கர் காசு -  விசையரகுனாத
காசின் முன்பக்கத்தில் நின்ற கோலத்தில் திருமகள்; பின்பக்கத்தில் தமிழில் “விசையரகுனாத”.

8.   மதுரை நாயக்கர்  காசு  -   மங்கம்மா
காசின் முன்பக்கத்தில் வீணையுடன் கலைமகள்;  பின் பக்கத்தில் “மங்கம” என்று தெலுங்கு எழுத்தில். 
(கட்டுரை ஆசிரியர் குறிப்பு :   மூன்றாவது எழுத்து  ஆய்வுக்கட்டுரையாளர் சற்றுப் பிழையாகக் காட்டியுள்ளார் என்பது கருத்து. தெலுங்கு எழுத்தில் “க”  [GA]  எழுத்து , படத்தில் காண்பிக்கப்பட்ட ஆங்கில "A"  வடிவத்தில் இடைக்கோடு  இன்றித் தலைகீழ் "U"  வடிவில் எழுதப்படும்.)

9.   சேதுபதி காசு
காசின் முன்பக்கம் மயிலின் மேல் ஆறுமுகம்; பின்பக்கம் தமிழில் “சேதுபதி”.

10.   ஆங்கிலேயர் காசு -   யிது னாற்பது காசு
காசின் முன்பக்கம் , தெலுங்கிலும் தமிழிலும். பின் பக்கம்  பாரசீகம், ஆங்கிலம்.

தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.

                 


No comments:

Post a Comment