Wednesday, April 24, 2019

"எம்.ஜி.ஆர். என்றொரு தேவதூதன்"

——    கதிரவன் 

          1987-88 ம் வருடம், நான்  8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இயல்பாகவே ஓவியம் வரைவதில் அதிக நாட்டம் காட்டியதால் வகுப்பு ஆசிரியர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டேன், "மெட்ராசுல ஓவியக்கல்லூரி இருக்கு, அங்க போயி படிச்சா பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆயிடுவ " என்று உசுப்பேற்றி விட்டனர்,

          அதன்  பிறகு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை, ஓவியக்கல்லூரி கனவிலேயே வாழ்ந்துகொண்டிருந்தேன். வீட்டில் சூழ்நிலையே வேறு,பெரிய படிப்பாளி குடும்பம், அப்பா தமிழாசிரியர், திராவிட இயக்கங்களில் தீவிரமாக  இயங்கிக்கொண்டிருந்தவர், அக்காவும் தம்பியும் புத்தகப்புழுக்கள், கணக்குப்புலிகள்! வீட்டில் நான்  எப்பொழுதுமே குற்றவாளிக் கூண்டில்தான் !      “அவங்களைப்பாரு! எல்லா பாடத்துலயும் 85 % மதிப்பெண்கள்! ஆனா  நீ?!" என்ற சாட்சிகளில்லாத விசாரணைக்குப்பின் பிரம்படி தண்டனை என்பது வழக்கமான ஒன்று !

          எனது இலட்சியத்தை அடைய உதவும் ஒரு "divine intervention" க்காக அனுதினமும் வேண்டிக்கொண்டிருந்த காலம் அது!

          இந்த சூழ்நிலையில், எங்கள் தெருவில் ஒரு அண்ணா பெயர்ப்பலகைகள் எழுதும் கடை வைத்திருந்தார். எனக்கு அந்த  கடை தான் தப்பிக்கும் புகலிடம்.  அந்த  அண்ணா என்னை நிறைய வரையச் சொல்லி ஊக்கப்படுத்துவார் !  அதற்காக அப்பாவால் கண்டிக்கப்பட்டும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

          அரையாண்டு தேர்வு விடுமுறையில் நான் ஏறக்குறைய அந்த  கடையின் ஊழியனாகவே மாறிவிட்டேன்.

          அந்த சமயத்தில் கோவையில் அதிமுக சொந்த கட்டிடம் வாங்கி அதிமுக  மாவட்ட தலைமையகம் திறக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அந்த  கட்டிடத்தில்  சுவரோவியம் மற்றும் பேனர்கள் வரையும் பணியை அந்த  அண்ணா பெற்றிருந்தார், கட்டிடத்தைத்   திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் திறப்பதாக ஏற்பாடு, அப்பொழுது அவர் முதலமைச்சர், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியிருந்தார்.

          விழாவிற்குக் கடைசி மூன்று நாட்கள்  நாங்கள் இரவு பகலாக வேலை செய்துகொண்டிருந்தோம், விழாவிற்கு முதல் நாள் மாலை, எம்.ஜி.ஆர் அவர்கள் விழா ஏற்பாடுகளைப் பார்வையிட அந்த  கட்டிடத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.  ஒரே பரபரப்பு, பெரிய கூட்டம் கூடிவிட்டது, எங்களுக்கு விரைந்து வேலையே முடிக்கச்சொல்லி நெருக்கடி. 

          இரவு சுமார் ஒன்பது மணியளவில் எம்.ஜி.ஆர். அவர்களும் ஜானகி அம்மா அவர்களும் பெரிய மந்திரிமார் படையுடன் விழா கட்டிடத்திற்கு வந்தார்கள். எம்.ஜி.ஆர்  அவர்கள் விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டுக்கொண்டே மெதுவாக நடந்து வந்தார், சிகிச்சைக்குப்பின் உடல் தளர்ந்திருந்தது. 

          நான் திரு அண்ணாதுரை அவர்களின் படத்தை வரைந்துகொண்டிருந்தேன்.  என் அருகே வந்ததும் சற்று நின்றார், நான் வரைவதை விட்டுவிட்டு "ஆ" வென அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். திரையில் பார்த்த அந்த உருவம் நேரில் அதுவும் மிக அருகில் நிற்பதை என்னால் நம்ப முடியவில்லை, கனவு போல இருந்தது! ,

          அப்பொழுது, விழா ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான ஒருவர் என்னைக்காட்டி,    “இந்த பையன் ஸ்கூல் படிச்சிட்டே வேலையும் செய்யிறான்! நல்ல வரையிறான் " என்று அறிமுகப்படுத்தினார்,

          எம்.ஜி.ஆர். அவர்கள் என் தோளைத்தட்டி, கைகளை ஆட்டி ஏதோ சைகை செய்தார். பேச்சு வரவில்லை, எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால்  அறையிலிருந்த அனைவரும்  என்னைப் பார்த்து  "என்ன வேணுமுன்னு கேக்கறார் ! சொல்லு" என்று கத்தினார்கள்! உடனே நான்  சுதாரித்துக்கொண்டு  “மெட்ராசுல ஓவியக்கல்லூரியில் படிக்கணும்" என்றேன். சிரித்தபடி தட்டிக்கொடுத்துவிட்டு ஜிப்பா பாக்கட்டில்  கையை விட்டு சில நூறு ரூபாய்த் தாள்களை எடுத்துச் சுருட்டி என் கையில் வைத்து அழுத்தினார்.  பணத்தைக் கொடுத்ததும் அருகில் நின்றிருந்த  தனது தனிச்செயலரை (திரு.பரமசிவம் ஐ.ஏ.எஸ்.) அழைத்து சைகையில் ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்! தனிச்செயலர் என்னை அழைத்து எனது பெயர், முகவரி ஆகியவற்றைக் கேட்டுக் குறித்துக்கொண்டார். நடந்ததெல்லாம் ஏதோ பிரமை போல இருந்தது எனக்கு!

          ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. சென்னை ஓவியக்கல்லூரி முதல்வரிடமிருந்து, "உடனே வந்து முதல்வரைச் சந்திக்கவும்" என்று குறிப்பிட்டிருந்தது. அப்பா தன்  சக்தியையும்  மீறி ஏதோ நடக்கிறது என்று எண்ணி மௌனமாக இருந்துவிட்டார். நான் அவரிடம் காசு கூட கேட்கவில்லை, எம்.ஜி.ஆர். அவர்கள்  கொடுத்த காசு என்னிடம் இருந்தது. அம்மா சென்னையிலிருந்த ஒரு மாமாவுக்குத்  தகவல் அனுப்பிவிட்டார்கள். நான் தனியாக ரயிலேறி சென்னை சென்று நேரே ஓவியக்கல்லூரி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். கோவையிலிருந்து நான்  வந்திருக்கிறேன் என்று கூறி கடிதத்தைக் காண்பித்தேன். அங்கேயும் பரபரப்பு, அப்பொழுது கல்லூரி முதல்வர் திரு.சந்தானராஜ் அவர்கள், அவரும் பிற ஆசிரியர்களும் அலுவலகத்தில் கூடிவிட்டனர். என்னை உள்ளே அழைத்தனர். முதல்வர் என்னைப் பார்த்து  "தம்பி முதல்வர் ஆபிசிலிருந்து எங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு, உனக்கு உடனே காலேஜில ஒரு சீட் கொடுக்கச்சொல்லி கேட்டிருக்காங்க, முதல்வரே   கையெழுத்து போட்டிருக்காருயாரப்பா நீ? என்ன நடந்தது " என்று கேட்டார். 

          நான் நடந்ததைக் கூறினேன், வியப்புடன் அனைத்தையும் கேட்டுவிட்டு, "சரி, சர்டிபிகேட் எல்லாம் சப்மிட் பண்ணிடு, நீ இன்னைக்கே காலேஜில சேர்ந்துக்கலாம், உனக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் கிடையாது" என்று கூறினார். நான் மெதுவாக  "சார் சர்டிபிகேட் எல்லாம் ஸ்கூல்ல  இருக்கு, நான் 8ம் வகுப்பு படிச்சிட்டிருக்கேன்" என்று கூறினேன்! அவர்களுக்கு அதிர்ச்சி!  " என்னது இப்பதான் 8  ஆவது படிக்கிறாயா" என்று கேட்டார்கள் (ஓவியக்கல்லூரி பட்டப்படிப்பு, பத்தாவது முடித்தபின் ஐந்து  வருடங்கள்) "ஆமாம் சார்" என்று தலையாட்டினேன்! சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு "சரி தம்பி கொஞ்சம் வெளியில் நில்லு , மறுபடியும் கூப்பிடறோம்" என்றார்கள், சற்று நேரம் கழித்து மீண்டும் உள்ளே அழைத்தார்கள். முதல்வர் பேசினார் "தம்பி உனக்கு சீட் கன்பார்ம், ஆன  எப்படியாவது பத்தாவது முடிச்சிட்டு வந்துடு" என்று கூறினார்!

அதன்  பின் எல்லாம் புயல் வேகத்தில் நடந்தது;   
கோவை திரும்பி நடந்ததைக் கூறியதும் அப்பா வருத்தத்துடன்  தலையாட்டிவிட்டார். நேரே பள்ளி சென்றேன். தலைமையாசிரியரிடம் விஷயத்தைக் கூறியதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேண்டியதைச் செய்வதாகக் கூறினார், மார்ச் மாதம்  நடக்கும் பத்தாம்  வகுப்பு  பொதுத்தேர்வில் தனித்தேர்வராக எழுதத் தயாரிக்கத்துவங்கிவிட்டேன். மார்ச் மாத தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! ( வழக்கம் போல ஜஸ்ட் பாஸ்!) ஜூன் மாதத்தில் கல்லூரியிலும் சேர்ந்துவிட்டேன்!

          டிசம்பர் மாதத்தில் எம்.ஜி.ஆர்.  இறந்துவிட்டார். நான்  அப்பொழுது  கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாட்களிலேயே அப்பாவின் திராவிட இயக்க செயல்பாடுகளைக்  கவனித்து வளர்ந்ததாலும்  அப்பொழுதே சில புத்தகங்கள் படிக்கத் துவங்கியிருந்ததாலும், எம்.ஜி.ஆர் அவர்களின் மேல் அவருடைய திரை சாகசங்களை ரசித்ததைத் தவிரப் பெரிய ஈடுபாடு இருந்தது கிடையாது. ஆனால் அவருடைய வள்ளல் தன்மையும், வேண்டி  வருவோர்க்கு இல்லையெனாது வழங்கும் குணத்தையும் எதிர்க்கருத்து கொண்டவர்களே பாராட்டிப்பேசவும் கேட்டிருக்கிறேன். 

          தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, ஆசைப்பட்ட ஒரு இலக்கை எண்ணி கனவு மட்டும் கண்டுகொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு,  அது கைகூடச் சாத்தியமில்லாத சூழ்நிலையிலும், அவன் முன் திடீரென ஒரு தேவதைபோல  தோன்றி, அவனுடைய நியாயமான ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த திரு எம்.ஜி.ஆர்.  அவர்கள்  என்னைப் பொறுத்தவரையில் ஒரு தேவதூதன் தான் !


__________________

கதிரவன் கோவையைச் சேர்ந்தவர்.   சென்னை ஓவியக்கல்லூரியில் "வடிவமைப்பு மற்றும் காட்சிவழித்தொடர்பு " (Design & visual communication) பட்டப்படிப்பு முடித்தவர். கல்லூரி முடித்தபின் அனிமேஷன் துறையில் 10 ஆண்டுகள் பணியும், இந்தியாவில் தயாரித்த அணைத்து அனிமேஷன் திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அடுத்த 10 ஆண்டுகள் பொழுது போக்கு பூங்காக்கள் வடிவமைத்தல் மற்றும் கட்டமைத்தல் (designing  and Developing Theme parks and amusement parks) துறையில் பணியாற்றுகிறார். தற்பொழுது, தனி நிறுவனம் துவக்கி (www.mustudios.net), அந்தமான் - நிக்கோபார் தீவுகளிலும் , லட்சத் தீவுகளிலும் அரசின் சுற்றுலா வளர்ச்சி பணிகளின் ஆலோசகராக (Consultant) பணியாற்றி வருகிறார். மலைப் பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள்  போன்ற  சூழல் உணர்திறன் மண்டல (Eco Sensitive Zones) சுற்றுலா வளர்ச்சி திட்டங்களின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். 
 
              

No comments:

Post a Comment