Monday, February 9, 2015

வாதாபி கொண்டான்

கிபி 600 முதல் 900 வரை தென்னக வரலாறு மூன்று பேரரசுகளின் வரலாறாக இருந்தது. சாளுக்கியர், பல்லவர் மற்றும் பாண்டியர்.

சாளுக்கிய வரலாறு புலிகேசியுடன் துவங்குகிறது. சாளுக்கியர் வடகர்நாடகத்தின் வாதாபியை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள். பாதாமி மராட்டியத்துக்கு பக்கமாக இருப்பதால் சாளுக்கியரை மராட்டியர் என கூறுவோர் உண்டு. இருந்தாலும் சாளுக்கியர் கர்நாடகாவை சேர்ந்த க்ஷத்திரிய வம்சத்தவர்கள். கல்வெட்டுக்களை கன்னடமொழியிலும், சமஸ்கிருதத்திலும் எழுதினார்கள். கர்நாடகத்தைசேர்ந்த கடம்ப அரசின் சிற்றரர்களாக இருந்த சாளுக்கியர்கள் முதலாம் புலிகேசி காலத்தில் கடம்பர்களை அடித்துவிரட்டிவிட்டு ஆட்சியைப்பிடித்தார்கள். கிபி 540ம் ஆண்டு புலிகேசி மன்னர் ஆட்சிக்கு வருகிறார்.

ஆட்சிக்கு வந்த புலிகேசி செய்த முதல் வேலை அஸ்வமேத யாகம் செய்தது. அஸ்வமேத யாகம் செய்தால் அவர் மாபெரும் சக்ரவர்த்தி எனப்பொருள். அந்த யாகத்தைசெய்து முடித்து சுற்றுவட்ட சிற்றரசுகளை எல்லாம் தன் ஆட்சியில் சேர்த்துவிட்டு நிமிர்ந்தால் வடக்கே வலிமையான ஹர்ஷரின் ராஜ்யமும், தெற்கே பல்லவரின் ராஜ்ஜியமும் தான் இருக்கிறது. இப்படி ஒரு பேரரசை உருவாக்கிவிட்டு அவர் இறக்க அவர் மகன் இரன்டாம் புலிகேசி ஆட்சிக்கு வருகிறார். இரண்டாம் புலிகேசி மன்னர் சாளுக்கிய வரலாற்றில் மிகபுகழ் பெற்றவர். அவர் ஆட்சிக்கு வந்ததும் தெற்கே தன்பார்வையைத்திருப்புகிறார்.

கோசலம், கலிங்கம் எல்லாம் எதிர்ப்பின்றிசரணடைகின்றன. ஆந்திராவில் வெங்கிபகுதியில் தன் தம்பி விஷ்ணுவர்த்தனை ஆட்சியில் அமர்த்தி கீழசாளுக்கிய ஆட்சியை ஏற்படுத்துகிறார். அதன்பின் பல்லவர்கள் மேல் படைஎடுக்கிறார். காஞ்சிக்கு அருகே 15 மைல் தூரத்தில் உள்ள புள்லலூரில் நடந்தபோரில் மகேந்திரவர்மன் தோற்றுப்போய் காஞ்சிகோட்டைக்குள் பதுங்கிகொள்கிறார். கோட்டையை முற்றுகையிட்டு அது வீழும் சமயத்தில் வடக்கே நர்மதை ஆற்றைகடந்து ஹர்ஷரின் படைகள் வருவதாக தகவல் கிடைக்க முற்றுகையை முடித்துகொண்டு புலிகேசி வடக்கே விரைகிறார். பெரும்போருக்குபின் வடக்கே நர்மதை நதிக்கரையில் கிபி 620ம் ஆன்டுவாக்கில் ஹர்ஷரை தோற்கடிக்கிறார்.அதன்பின் குஜராத், மராட்டியம்,கோவா எல்லாம் அவர் ஆட்சியின்கீழ் வருகிறது. தெற்கே மகேந்திரவர்மர் தப்பிபிழைத்த போதும், அது பல்லவர்களுக்கு தீராத அவமானமாக மாறுகிறது

புலிகேசி இப்படி ஹர்ஷர் முதல் பல்லவர் வரை இந்தியாவில் அனைத்து மன்னர்களையும் வென்று ஈடியணையற்ற மன்னராக விளங்குகிறார். பாரசிக மன்னர் குஸ்ரு அரண்மனைக்கு தூதர்களை அனுப்புகிறார். அவர்களும் புலிகேசி மன்னரின் அரண்மனைக்கு தூதர்களை அனுப்புகிறார்கள். இந்த சூழலில் பல்லவ நாட்டில் கிபி 630 வாக்கில் நரசிம்மவர்மர் ஆட்சிக்கு வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் புலிகேசி படை எடுக்கிறார். ஆனால் இம்முறை பல்லவர்கள் மணிமங்கலத்தில் நடந்த போரில் வெற்றி பெறுகிறார்கள். சாளுக்கியர் படை தோற்று ஓடவும், விடாத நரசிம்மவர்மர் அவர்களை வாதாபி வரை துரத்திச்செல்கிறார். கிபி 642 வாக்கில் நடந்த கோர யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. புலிகேசி மன்னர் போரில் இறக்கிறார். பல்லவர்கள் வாதாபியில் நிகழ்த்திய அழிவால் அந்த நகர் அதன்பின் சாளுக்கியர் தலைநகர் ஆகவே இல்லை.

அதன்பின் நரசிம்மவர்மர் சேரர்கள், பாண்டியர்கள், சிங்களளர்கள், களப்பிரர் என பலரை வென்று தென்னகத்தின் இணையற்ற மன்னர் ஆகிறார். அழிவின் விழிம்பில் நின்ற சாளுக்கியபேரரசில் சிற்ரரசர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. இந்த சூழலில் இரண்டாம் புலிகேசியின் மகன் சாளுக்கிய விக்கிரமாதித்தன் தன் தாய்வழிப்பாட்டன் கங்கமன்னர் துர்வினீதன் உதவியுடன் எதிரிகளை முறியடித்து சாளுக்கிய அரசை தன் கட்டுபாட்டில் கொண்டுவருகிறார்.

இப்போது நரசிம்மவர்மர் இறந்து அவரது மகன் இரன்டாம் மகேந்திரவர்மன் ஆட்சியில் இருக்கிறார். போர் மூள்கிறது. பான்டியர் மாறவர்மனுடன் கூட்டணி ஏற்படுத்தி பல்லவர் மேல் படை எடுக்கிரார் விக்கிரமாதித்தர். கங்கநாடு அருகே நடந்தபோரில் பல்லவர்கள் தோற்க பல்லவமன்னர் இரன்டாம் மகேந்திரவர்மர் உயிர்துறக்கிறார். அவர் மகன் பரமேச்வரவர்மன் ஆட்சிக்கு வருகிறார். ஆனால் விக்கிரமாதித்தர் படை காஞ்சியை நெருங்க பரமேஸ்வரவர்மர் உறையூருக்கு ஓடுகிறார். உறையூர வரை அவரை விரட்டிசெல்கிறார் விக்கிரமாதித்தர். திருச்சி அருகே பெருவளநல்லூரில் பாண்டியர்- சாளுக்கியர் கூட்டணி அணிதிரண்டு பல்லவரை எதிர்கொள்கிறது.

மாபெரும் இக்கூட்டணியை எதிர்கொன்ட பல்லவர் படை பேரதிசயமாக வெற்றி அடைகிறது. இந்த வெற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கு வியப்பை அளிப்பதாகும். பெரும்தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த பல்லவர்கள் பெருவெற்றி அடைகிறார்கள். இப்போரின் இறுதியில் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படுதோல்வி அடைந்து நிர்வானமாகதப்பி ஓடியதாக பல்லவரின் கல்வெட்டு குறிக்கிறது.

இதன்பின் விக்கிரமாதித்தனின் மகன் வினயாதித்தன், பேரன் விஜயாதித்தன் ஆட்சி நடக்கிறது. இவர்கள் தெற்கே படைஎடுக்கவில்லை. அதன்பின் கிபி 733ம் ஆன்டுவாக்கில் இரண்டாம் விக்கிரமதித்தன் ஆட்சிக்கு வருகிறார்.இவரது ஆட்சியின் போது சிந்து பகுதியில் அரபியர்கள் ஆட்சி ஏற்படுகிறது. அவர்கள் தென்னகத்தின் மேல் படை எடுக்கையில் சாளுக்கிய விக்கிரமாதித்தர் அவர்களை முறியடிக்கிறார்.

அப்போது பல்லவநாட்டை இரண்டாம் பரமேஸ்வரமர்வர் ஆள்கிறார். இம்முறை கங்கமன்னர் எரியப்பர் உதவியுடன் சாளுக்கியர் பல்லவர்கள் மேல் படை எடுக்கிரார்கள். போரில் பரமேச்வரவர்ம கொல்லபட காஞ்சி சாளுக்கியர் வசமாகிறது. முதல்முறையாக சாளுக்கியர் படை காஞ்சியில் நுழைகிறது

வாதாபியை எரியூட்டியதற்கு பழிவாங்குவார் என கருதபட்ட நிலையில் காஞ்சியின் கோயில்கள், சிற்ப அழகுகள் விக்கிரமாதித்த மன்னரின் மனதைகொள்ளைகொள்கிறது. நகரேஷு காஞ்சி என அழைக்காப்ட்ட சிறப்பு மிகுந்த நகர் காஞ்சி. அதை எரியூட்ட மனம் வராது கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட காஞ்சிமாநகர கோயில்களுக்கு ஏராளமான பொன்னை வழங்கி, காஞ்சி மக்களுக்கும் ஏராளமான தானதருமங்களை செய்து அதை கைலாசநாதர் கோயிலில் அதை ஒரு கன்னடகல்வெட்டிலும் பதித்துவிட்டு வாதாபியை எரித்தற்கான பழியை இப்படி அன்பால் தீர்த்துவிட்டு பல்லவநாட்டை விட்டு அகன்றார் சாளுக்கிய விக்கிரமாதித்தர்.Authored by: செல்வன்


No comments:

Post a Comment