Wednesday, September 10, 2014

பஞ்சலோக விக்ரஹம் செய்வது எப்படி?

எனக்கும் என் துணைவியாருக்கும் திருமணமாகி 40 ஆண்டுகள் ஆயிற்று, அதைக் கொண்டாட எங்கள் குல தெய்வமான ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீ ஆதி வினாயகரையும், ஶ்ரீலக்‌ஷ்மி சமேத ஶ்ரீனிவாசனையும் தரிசிக்க சென்றோம்.
அங்கிருந்து ராமநாதபுரம் சென்று ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்த பஞ்சலோக விக்ரகம் செய்யும் இடத்தைப் பார்வையிட்டு அங்கே உரிமையாளரிடம் பேட்டி எடுத்து அதைக் காணொளியாக அளித்திருக்கிறேன்.

“ விஸ்வகர்மா “

மஹாசக்தி என்பது விஸ்வரூபம் ,அதிலிருந்து பிரிந்து இப்புவனத்தில் ஜீவராசிகளாகப் பிறந்து நீந்துவன, பறப்பன, தவழ்வன, ஓடுவன, நடப்பன என்று பலரூபங்களாகப் பிரிந்து அதிலிருந்து சற்றே அறிவை மேம்படுத்திக் கொண்டு பரிணாம வளர்ச்சியால் மனிதன் என்னும் உருக்கொண்டு மானுடராக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம் . பல கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் நாம் .

நம் முன்னோர்கள் முதலில் பஞ்ச பூதங்களின் வழியாகத்தான் இறைவனை உணர்ந்தனர், அதன் பின்னே ஆத்ம யோகம், ஆழ்ந்த பக்தி, தியானம், தவம் போன்றவைகளால் இறைவனை அடைய முயற்சித்தனர்.

அப்படி அவர்கள் கண்டு பிடித்த பல வழிகளில் கலை பிறந்தது. அவை ஆய கலைகள் அறுபத்தி நான்காக பரிமளித்தது. இசை வடிவமாகவும், நாட்டியம் நடனம் மூலமாகவும், கல்லினால் சிற்பங்கள் வடித்து அவற்றை மூல விக்ரகமாகவும் பஞ்ச லோகத்தை வைத்து விக்ரகங்கள் செய்து அவற்றை உற்சவ மூர்த்தியாகவும் ஆவிர்பவித்து அவற்றை வணங்குதல் மூலமாகவும் மொத்தத்தில் கலைகளின் மூலமாகவும்

இறைவனையே துதிக்கவும் நம் முன்னோர்கள் பலவிதமான பயிற்சிகளையும், நல்ல உற்சவங்களையும், நல்ல பண்டிகைகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
நம் முன்னோர்கள் கற்றுவைத்திருந்த பல கலைகளை, அவைகளின் நுணுக்கத்தை பாரம்பரியமாகப் போற்றி நாமும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும், ஆனால் தவறிவிட்டோம்.
ஆயினும் இக்காலத்திலும் சிலராவது பாரம்பரியமாக

தங்களின் ஆதி கலைகளை மறக்காமல் கற்றுக் கொண்டு முறையாக பராமரித்து கடைப்பிடிப்பதால்தான் இன்னமும் பல கலைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட கலைகளில் சிற்ப சாஸ்திரத்தைக் கைக்கொண்டு கல் விக்ரகங்கள் வடித்தல், உலோக விக்ரகங்கள் வடித்தல் என்னும் கலை அபூர்வக் கலையாகும்.

கல்லிலே விக்ரகங்களை வடிப்பவர்களை சிற்பிகள் என்று அழைக்கிறோம். உலோகங்களில் முறையாக சிற்பங்களை வடிப்பவர்களை விஸ்வகர்மா என்றழைக்கிறோம்.
இந்த விஸ்வகர்மா என்னும் பாரம்பரியத் தொழில் கலைஞர்கள், இன்றளவும் பஞ்ச லோகங்களை உருக்கி அவற்றின் கலவையால் விக்ரகங்களை வடிக்கிறார்கள்.
ராமநாதபுரத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டத்திலே ஸ்வாமிமலையருகே திம்மக்குடி என்னும் ஊரிலே உள்ள ராஜன் இண்டஸ்ட்ரீஸ் என்னும் இடத்திலே பஞ்சலோக விக்ரகங்களை சிற்ப சாஸ்திர முறைப்படி முறையாகக் கற்றுக் கொண்டு வம்சாவழியாக செய்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு அந்த விக்ரக ஆலையினுள் ஆர்வத்துடன் நுழைந்தோம்.

அங்கே அந்த ஆலையின் நிறுவனராக திரு சுரேஷ் என்பவர் எங்கள் ஆர்வத்தைக் கண்டு மரியாதையாக உள்ளே அழைத்து அவர்கள் எப்படி பஞ்சலோக சிற்பங்களைத் தயாரிக்கிறார்கள் என்று இதமாக பதமாக பொறுமையாக விளக்கினார்
அங்கே முதன்மையாக இருக்கும் திரு ஶ்ரீனிவாசன் என்பவர் பஞ்சலோக விக்ரகங்களை வடிக்கும் முறையை எங்களுக்கு தெளிவாக விளக்கினார்.

இந்தப் பஞ்சலோகங்களை . எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் கூறினார். இந்தப் பஞ்ச லோகங்களுக்கு அடிப்படை பஞ்ச பூதங்கள் என்றும்
பிரிதிவி ---- அப்பு ---- தேயு ---- வாயு ---- ஆகாயம்
மண் ---- நீர் ---- நெருப்பு – காற்று ---- வெளி ஆகியவையே என்று குறிப்பிட்டார்.
உலகில் இவை ஐந்தும் குறிப்பிட்ட சதவிகித அளவிலேதான் இருக்கின்றன
பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்
உலோகங்கள்
கி.பி. 9ம் நூற்றாண்டு கி.பி. 10-11ம் நூற்றாண்டு கி.பி. 13ம் நூற்றாண்டு கி.பி. 15ம் நூற்றாண்டு கி.பி. 17ம் நூற்றாண்டு
செம்பு
Copper 83 - 39 86 - 88 91 - 05 96 - 29 91 - 25
தகரம்
Tin 16 - 61 10 - 44 2 - 86 2 - 58 6 - 66
ஆர்செனிக்
Arsenic Tr Tr Tr Tr Tr
ஈயம்
Lead Tr 1 - 48 6 - 09 1 - 9 2
இரும்பு
Iron Tr 1 - 19 Tr 0 - 06 0 - 07
நன்றி விக்கிபீடியா
ஆகவே இந்த மண் ---- நீர் ---- நெருப்பு – காற்று ---- வெளி என்கிற பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய உலோகங்களைக் கொண்டு அவைகளை உருக்கிக் கலந்தே இந்தப் பஞ்சலோக விக்ரகங்கள் வடிக்கப் படுகின்றன.
மண், நீர்,நெருப்பு,காற்று, ஆகாயவெளி ஆகிய ஐந்துமே நம் வாழ்க்கையில் ப்ரதான இடம் வகிக்கிறது.இந்த ஐந்தும்தான் நாம் நோயற்று வாழ உதவும் சாதனங்கள்.

இவற்றை நன்கு உணர்ந்த சித்தர்கள், யோகிகள், தவஸ்ரேஷ்டர்கள் இந்த ஐந்தையும் நம் வாழ்க்கையில் இன்றியமையாமல் நாம் முறையாக உபயோகித்து நலமுடன் வாழ வழிகாட்டுகிறார்கள்.

இந்த ஐந்தையும் கலந்தே வியாதிகள் நீக்கும் மருந்துகளாக்கி நமக்களிக்கிறார்கள், ஆயினும் இப்பிறவியில் நம் ஆயுள் முடிந்து போகுமானால் ஜீவராசிகள் எல்லாமே மீண்டும் பிரிந்து பஞ்ச பூதங்கள் என்னும் இந்த ஐந்துடன் மறுபடியும் ஒன்றிப் போகிறது.

ஆகவே ஆதியும் அந்தமும் , தொடக்கமும் முடிவும் இந்தப் பஞ்ச பூதங்களிலேதான் உருவாகிறது , அடங்குகிறது
இப்படி பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஐந்து உலோகங்களைக் கொண்டு வடிக்கப்படும் விக்ரகங்கள்தான் சக்தி பெற்று ஆலயங்களில் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றன.

இப்படி பஞ்ச பூதங்களை அடிப்படியாகக் கொண்டு இந்த விக்ரகங்களை வடிப்பதால் இயற்கையான அடிப்படை சக்தி இந்த பஞ்ச லோக விக்ரகங்களுக்கு கிடைத்துவிடுகிறது, அதன் பின்னர் ஆகம முறைப்படி அந்த விக்ரகங்களுக்கு தேவையான அபிஷேக ஆராதனைகள், பூஜை புனஸ்காரங்கள் மேலும் சக்தியை ஊட்டுகின்றன.

ஆலயங்களுக்கு வந்து கர்பக்கிருஹ கடவுளை வணங்க இயலாத பெரும்பாலான மக்களின் குறைதீர்க்க இந்தப் பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் மாடவீதிகளில் உலாவந்து ஜீவராசிகளுக்கு அருள் தரவே திருமாடவீதி புறப்பாடு என்பது நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பஞ்சலோக தயாரிப்பு முறையைக் கண்ணால் கண்டு இன்புற்ற நாங்கள் “ நாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டுமே” என்று அங்கே நடந்த எங்கள் சந்திப்பை ஒளி,ஒலிப்படமாக ஆக்கி அந்தக் காணொளியை கணிணியிலே செதுக்கி அளித்திருக்கிறேன். கண்டு களியுங்கள்.

இந்தத் தொடுப்பை உபயோகித்து என்னுடைய வலைப்பூவான http://thamizthenee.blogspot.com தளத்திலும் காணொளியைக் காணலாம்

https://www.youtube.com/watch?v=nYL_YBnM0pQ&list=UUVfKwpJPdHKd-FAQFSNG8lA

அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments:

Post a Comment