Thursday, September 4, 2014

இல்லாளுக்கு ஒரு இனிய கவிதை!

அன்புள்ள நண்பர்களுக்கு   வணக்கம்

எனக்கும்  என்னுடைய  இல்லத்தரசிக்கும் திருமணம் நடைபெற்று இந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி  40 வருடங்கள்  நிறைகிறது

எங்களை விட  வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள்  எங்களை ஆசீர்வதிக்கலாம்
வயதில்   சிறியவர்கள்    வாழ்த்தலாம்

இந்த நன்நாளை ஒட்டி  எங்கள் குலதெய்வமான  ஶ்ரீவில்லிபுத்தூர்  திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும்   ஆதி வினாயகரையும்  மஹாலக்‌ஷ்மி சமேத  ஶ்ரீனிவாசனையும் தரிசிக்க  நாளை 4 ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி ஶ்ரீரங்கம் சென்று  அங்கிருந்து  ஶ்ரீவில்லி புத்தூர்  செல்கிறோம்

  மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்கோயிலுக்கும்   சென்று வினாயகரை தரிசிக்க இருக்கிறோம் ,ஶ்ரீரங்கநாதனையும் தரிசித்துவிட்டு

ஆண்டாள் ரங்கமன்னாரையும்  ஶ்ரீவில்லி புத்தூரில் தரிக்க இருக்கிறோம்

அங்கிருந்து ராமநாதபுரம் சென்று   ரகுவீர்தயாள் அவர்களை சந்தித்து  திருப்புல்லாணி பெருமானையும்  சேவிக்கப் போகிறோம்.

இத்துணை வருடங்கள்  எனக்கு உற்ற துணைவியாய் இருந்து   என்னுடன்  இல்லறம் நடத்திய  என் மனைவி  ஆனந்தவல்லிக்கு  நன்றி சொல்லும் விதமாய்

இந்தக் கவிதையை வடிக்கிறேன்

                          “ இல்லறம்  “
உன்னைக் கரம் பிடித்த நாள் முதலாய் ஆதரவாய் கைகொடுத்துஎன்னைக்
கைவிடாமல் எப்போதும் காக்கின்றாய் என் தாயாய்.மனமிறங்கி உன்சுற்ற
வயல்தனிலே நாற்றாய் நீ இருக்க கருணை கொண்டு சுற்றமெல்லாம்-
என் வயலில் நட்டார்கள்  வந்தாய்நீ  வயல்செழிக்க எம்குலம் தழைக்க
முன்னைச் செய்த பயன் முழுமையாய்க் கிடைத்தாற்போல் முன்னிருந்து
நடத்துகிறாய் முழுவாழ்வை செழிப்பாக்கி   பண்பால் ஆளுகிறாய் அன்பை
முன்னிறுத்தி அருங்குணங்கள் அத்தனையும் அணுக்கி உள்ளே தெம்பாய்
உள்ளடக்கி தெள்ளிய அமுதாய்  தேனடைத் தேனாய் ஆனாய் நீ
பொன் பொருளென்று சொத்துக்கள் யாதுமிலை எனக்கென்று சொந்தமென்று
வந்த பின்னே அத்தனையும் சேர்த்துவிட்டாய் என் வாழ்வில் தானாய்
சேர்ந்ததெல்லாம் சிக்கனமாய் முடிந்து வைத்து மொத்தமாய் என்னிடத்தே சோர்ந்த
போதெல்லாம் முன்கூட்டி அளிக்கின்றாய் தேவைதனையறிந்து
சேர்த்துவைக்கும் குணமறியேன் எனக்கும் சேர்த்து சேர்த்துவைத்து குணக்குன்றாய்
இணைந்தே வாழுகிறாய்  எனக்கும் சேர்த்து பொன் கொடுத்தாய் பொருள் கொடுத்தாய்
போதாது போதாது என்றே நீயும் இளந் தளிராய் என்குலம் தழைத்திடவே  வாரிசுகளும்
எமக்களித்தாய் கண்ணிமைக்கும் நேரத்திலே கடின்மிகு சுமைகளெல்லாம் காணாமல் ஆக்குகிறாய்
களிப்பே ஊட்டுகிறாய்  கலைகளெல்லாம் ஊட்டுகிறாய் கவிஞனாய் ஆக்குகிறாய் கலையெல்லாம்
எனை நோக்கி களிப்புடனே ஓடிவந்து  கருணைகொண்டு சேர்ந்திடவே வகை செய்து
எனைப்பட்டை தீட்டுகிறாய் சாணைக் கல்லாய் நீயிருந்து சாத்திரமாய் தீட்டி என்னை
கலைமகள் கைப்பொருளாய் மீட்டுகிறாய் கவின் மிகு சுவையூட்டி களிப்பாக மாற்றுகிறாய்
.கவலை போக்குகிறாய் சொக்கவைத்து சுழலவைத்து  எக்கட்டு ஆனாலும் இக்கட்டுதனைக்
களையும் இயந்திரமாய் ஆனவள்  நீ
அடகுவைத்த அத்தனையும் மீட்டுகிறாய் அன்பான வட்டி தந்து அருமையாய் கட்டுக்குள்ளே
கட்டியெனை ஆட்படுத்தி  ஆளுகின்றாய் பரிவுடனே பலநூல் கற்றேன் பல்கலைக் கழக பட்டங்கள்
நான் பெற்றேன்-பட்டையங்கள் பல பெற்றேன்  மதிப்பார் யாருமில்லை மறந்தே போகின்றார்.
ஒரு நூலெடுத்து உறுளி மஞ்சள் உரைத்தே தடவி உன் கழுத்தில் நாண் இட்டேன் மங்கலமாய்
முடிச்சிட்டேன்  அது முதலாய் , ஆண்மகனாய் ஆனேன் நான் மாப்பிள்ளையாய் ஆனேன் நான்
குடும்பஸ்தன், தந்தை,  பெரியப்பா, சித்தப்பா, அத்தான், என்றெல்லாம் பலபட்டம் பெற்றேன் நான்
எல்லோரும் துதிக்கின்றார் நினைவில் என்னை மதிக்கின்றார். வேறென்ன வேண்டுவது இத்தனையும்
உன்னாலே வந்ததென்று நானறிவேன் உனையன்றி வேறு துணை  வேண்ட மாட்டேன்
இல்லறத்தின் மாற்று வழி போகமாட்டேன் பிணைக் கைதிபோலாகி  பிணைப்பால் நான் மனிதனானேன்
எப்பிறவி எடுத்தாலும் உன்தனையே நாடிடுவேன்  உன் துணையாய் ஆகிடுவேன் உயிர் அளித்த என்தாயின்
உற்ற துணையானவளே -தாய்க்குப் பின்தாரமென்று பெரியோர்கள் சொல்லிவைத்தார் இன்றுணர்ந்தேன்
அதிசியத்தை நான் சேயான ரகசியத்தை ஒரு  கணமும் மறக்க மாட்டேன் இத்தனையும் செய்தாய்
இன்றளவும் என் நலமே நாடி நாடி-உருகாத வெண்ணையும் ஓரடையும் செய்து வைத்தே வேன்டுகின்றாய்
என் நலம் நாடுகின்றாய் உனக்கோர் நன்றி  சொல்ல நாவெடுத்தேன் ஆணென்ற கர்வமது அடக்கியே
ஆண்டதம்மா சொல்ல வேறு வழியில்லை- எழுத்தாணி ஏந்தியே நன்றியினை நானெழுத நானெழுத
நானெழுத  முடிப்பதற்கோர் வழியுமிலை முடித்திடவே  வழியுமிலை உன் பெருமை உணர்ந்ததனால்
இலக்கணங்கள் ஏதுமில்லா இக்கவிதை எம் தமிழால் நானெழுதி நன்றி உரையாய் உன்னிடத்தே அளிக்கின்றேன்
எம்போன்றோர் தலைக்கனமும் தானிறங்கி நன்றி சொல்ல ஒரு வாய்ப்பாய்  உன்னிடம் அளித்துவிட்டு
மறைந்து நின்று  பார்க்கின்றேன்  உன் முகவிகசிப்பை தானியங்கி கருவியான  தாய்மையது போற்றுகின்றேன்
-ஆட்பட்டேன் ஆட்பட்டேன் ஆட்கொண்டாய்  தாயாய் நீ-முத்தாய்ப்பாய் ஒரு முத்தம் அளித்தே மகிழ்கின்றேன்
வேறு வழி தெரியவில்லை ஓரடையும் வெண்ணையும் சுசிருசியாய் நெஞ்சினிலே சுவையாய்
இறங்குதம்மா  நோன்பெல்லாம் உன்னுடனே  இணைந்தே செய்திடுவேன்
உன்நலமும் வேண்டிநின்று நன்றியுடன் நானும் சேர்ந்து
 அன்புடன்
தமிழ்த்தேனீ

திரு தமிழ்த் தேனீ அவர்களின் 40 ஆவது திருமண நாள் நிறைவு விழாவில் அவர் தன் மனைவிக்காக எழுதிய கவிதை!

No comments:

Post a Comment