Saturday, August 30, 2014

பல்லாங்குழி விளையாட்டு! முன்னோர்கள் வகுத்த வழி!

 காரைக்குடி,The King of Chettinad
‪#‎பல்லாங்குழி‬:

கொஞ்சம் நெதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு புரியும் ..

பல்லாங்குழிங்குறது வெளையாட்டா சொல்லிக் குடுத்த குடும்ப நிர்வாகம்.

மொதல்ல எப்படி வெளையாடணும்னு பாப்போம்.

ஒரு பக்கத்துக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்து (பண்ணெண்டு முத்து போட்டும் வெளையாடுவாக)ஒரு குழில இருந்து எடுத்து அடுத்து வார குழிக்கு ஒன்னொன்னா போடுவாக. முத்து முடிஞ்சதும் அடுத்த குழில இருந்து முத்துகள எடுத்து அதே மாதிரி போடணும். ஒரு வேள, அடுத்த குழி காலியா. இருந்தா, அதுக்கு அடுத்த குழில எம்புட்டு முத்து இருக்கோ அம்புட்டும் முத்தும் போட்டு வந்தவுகளுக்குச் சொந்தம். (செல சமயம் அது நெறையாவும் இருக்கும் செல சமயம் ஒன்னுமில்லாமையும் கூட போகலாம்.)

காலியான குழியில, அடுத்து சேந்து வார முத்துகள் மொத்தமா நாலு சேந்துருச்சுனா, அதுக்குப் பேரு “பசு” அது ஆரு பக்கம் இருக்கோ அவுகளுக்குச் சொந்தம்.
வெளையாட்டுல ஒரு பக்கம் செயிக்கச் செயிக்க இன்னொரு பக்கம் தெக்கம்(தொக்கம், தக்கம், பற்று) விழும். கடைசில தோத்தவுகட்ட அஞ்சு முத்துக்கும் கொறவா இருந்தா, அஞ்சு முத்துக்குப் பதிலா, ஒரு ஒரு முத்தா போட்டு கஞ்சி காச்சி வெளயாடுவாக.

சரி இத எதுக்கு வெளையாண்டாக?
சடங்காயிட்டா பொம்பளப்புள்ளைக்கு வெளையாட கொடுக்குறது இதத்தேன்.
ஒடலளவுல சமைஞ்சதும், அடுத்து மனசளவுல சமையணும்ல? அப்பதான முழு பொம்பளையா இருக்க முடியும்? அதேன்!
சடங்கான புள்ளையோட சோட்டுப்புள்ளைக மாத்தி மாத்தி வந்து ஒக்காந்து வெளையாடுங்க. இது முழுக்க முழுக்க மூளைய வச்சு வெளயாடுறதுதேன். இது சூது கெடையாது, ராசி அதிர்ஷ்டங் கெடையாது. புத்தி நுணுக்கமிருந்தா செயிச்சுக்கலாம்.

எப்படி செயிக்கிறது...?
தன்கிட்ட இருக்குற பொருள எப்படி பெருக்கணுங்குறதுதேன் இந்த வெளையாட்டோட சூச்சுமம்.
எந்தக் குழில ஆரம்பிச்சா எந்தக் குழில எம்புட்டு சேருங்குறது, வெளையாட வெளையாட நெனவுல சேத்துக்கிட்டே போகணும்.
“பசு” சேர்க்கணும் (அதுக்கேத்தாப்ல வெளையாடணும்) பசுங்குறது நாலு முத்துதேன்னு சாதாரணமா நெனைக்கக் கூடாது. “பசு”னா செல்வம்னு அர்த்தம். அதச் சிறுகச் சிறுக சேர்த்துப் பழக்குறதுதேன் நோக்கம்.
கடைசில கஞ்சி காச்சுறதுனு ஒரு வாய்ப்பிருக்கு. தான் செயிச்சா எதிராளிக்கு கஞ்சி காச்சுற வாய்ப்பு குடுக்கணும். எல்லாம் தோத்துப்புட்டானு மிதப்பா வெளையாண்டா, அடி மட்டத்துல இருந்து கூட எதிராளி செயிச்சு வந்துரலாம். ஒரு வேள நம்ம கஞ்சி காச்சுற நெலைக்கு வந்துட்டாலும் சோர்ந்து போயிறக் கூடாது. அங்கன இருந்து கூட (வறுமையில இருந்து கூட) மேடேறிடலாம். மேடேறிடணும். அதேன் ஒரு குடும்பத்தக் காக்கப் போறவளுக்கு அழகு.

இது வாழ்க்கைக்கான வெளையாட்டு. அதுனாலதேன். சடங்குக்குச் சீரா, தன் வீட்டுக்கு வரப் போற பொண்ணுக்கு பல்லாங்குழி வாங்கிக் குடுக்குறது தாய்மாமன் வழமையா வச்சிருந்தாக. கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போறப்ப கட்டாயம் பல்லாங்குழிய சீர் வரிசைல சேத்துக் குடுத்தாக.

ஒன்னொன்னா தொலைச்சுக்கிட்டு வாரோம்.

நன்றி : காரைக்குடி,The King of Chettinad 

நன்றி திரு வினைதீர்த்தான் அவர்கள்  

Friday, August 8, 2014

ஸோரா சேகல்

--ரஞ்சனி நாராயணன் 






 ஸோரா சேகல் (Zohra Sehgal)




கனவுத் தொழிற்சாலை எனப்படும் திரை வானில் நீண்ட நாட்கள் மின்னுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. அதுவும் நடிகைகளுக்கு இளமை இருக்கும் வரை மட்டுமே மதிப்பும், பெயரும், புகழும், கூடவே கதாநாயகி அந்தஸ்த்தும் கிடைக்கும். சற்று வயதாகிவிட்டால் அக்கா, அண்ணி பாத்திரம் ஏற்க வேண்டியதுதான்.  அதையும் ஒரு சிலர் மட்டுமே பெருந்தன்மையுடன் ஏற்று தங்கள் வாழ்க்கையை முன் நடத்திச் செல்லுகிறார்கள். தங்கள் வயதுக்கேற்ற பாத்திரம் ஏற்று திரைத் துறையிலும் எப்போதும் மின்னுபவர்கள் சிலர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களில் மறக்க முடியாதவர் திருமதி ஸோரா சேகல். சுமார் 80 ஆண்டுகள் கலைச்சேவையில் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

கடந்த ஜூலை மாதம் தனது 102வது வயதில் இயற்கை எய்திய முதுபெரும் நாடகக் கலைஞர் ஸோரா சேகலின் முழு பெயர் சாஹிப்சதி ஸோரா பேகம் மும்தாஜ்-உல்லாகான். உத்திரப்பிரதேசத்தில் சுன்னி முஸ்லிம் பதான் குடும்பத்தில் 1912 ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்தவர் திருமதி ஸோரா. இவரது பெற்றோருக்கு பிறந்த 7 குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் இவர்.

சிறு வயதிலேயே சற்று  வித்தியாசமாகத்தான் வளர்ந்து வந்தார் ஸோரா. தங்கள் குல வழக்கங்களை விடாப்பிடியாக கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்த போதிலும், இவரது வயதை ஒத்த மற்ற பெண் குழந்தைகளைப் போல பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடாமல் ஆண் பிள்ளைகளைப் போல மரம் ஏறுதல், வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடுதல் இவருக்கு பிடித்தமான செயல்கள்.

இளம் வயதிலேயே தாயை இழந்த ஸோராவுக்கு பயணம் செய்வது மிகவும் பிடித்த ஒன்று. பலவிதமான கலாசாரங்களையும், பழக்கவழக்கங்களையும் அறியும் ஆசையும் சேர்ந்து கொள்ள, தனது மாமாவுடன், இந்தியா முழுக்க பிரயாணம் செய்தார். மேற்கு ஆசியா, ஐரோப்பா என்று பல இடங்களுக்கு அவருடன் சென்று வந்தார். தனது தாயின் விருப்பப்படி லாகூரிலுள்ள  க்வீன் மேரி கல்லூரியில் படித்தார்.

சிறுவயதில் இவர் பார்த்த நடனக் கலைஞர் உதயஷங்கர் அவர்களின் நடன அசைவுகள், நடிப்புத் திறமை ஆகியவை இவரது வாழ்க்கையின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. இளங்கலை முடித்தபின் உதயஷங்கரின் நடனக் குழுவில் சேர்ந்து நிறைய வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகளை அளித்தார். அந்த நடன குழுவிலேயே ஆசிரியை ஆகவும் சேர்ந்தார்.

அங்குதான் காமேஷ்வர் சேகலை சந்தித்தார். காமேஷ்வர் சேகல் இளம் விஞ்ஞானி; ஓவியராகவும் நடனக் கலைஞர் ஆகவும் இருந்தார். தன்னைவிட 8 வருடங்கள் இளையவரான சேகலை காதலித்து கைப்பிடித்தார் ஸோரா. முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த இரு குடும்பத்தினரும் பிறகு இவர்களை ஏற்றுக் கொண்டனர். சேகல் தம்பதியினருக்கு இரு குழந்தைகள்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து இருவரும் உதயஷங்கர் குழுவில் ஆடி வந்தனர். இந்தக் குழு கலைக்கப்பட்டவுடன் இருவரும் லாகூர் வந்தனர். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இருவரும் பம்பாய் வந்தனர். திருமதி சேகல் பிரிதிவிராஜ் கபூரின் நாடகக் குழுவில் நடிக்கத் துவங்கினார். இந்தக் குழுவில் சுமார் 14 வருடங்கள் நடித்தார். முதன் முதலில் 1946 ஆண்டு தர்தி கே லால் என்ற வங்காளத்தில் நிலவிய பஞ்சத்தைப் பற்றிய படத்தில் தோன்றினார். நடனக் கலைஞராக இருந்த போதிலும், நடன அமைப்பாளராகவும் சில திரைப்படங்களில் பணியாற்றினார்.

நாடக ஸ்காலர்ஷிப் மூலம் 1962 இல் லண்டன் சென்ற இவர் அங்கு ‘தி ஜ்வல் இன் தி கிரௌன்’, ‘தந்தூரி நைட்ஸ்’ முதலிய தொலைக்காட்சி தொடர்களில்  நடித்தார்.

2012 ஆண்டு இவரது நூறாவது பிறந்த நாளன்று இவரது மகள் திருமதி கிரண் (பிரபல ஒடிசி நடனக் கலைஞர் இவர்) இவரது வாழ்க்கை வரலாற்றை Zohra Sehgal: Fatty என்ற பெயரில் எழுதி வெளியிட்டார்.

தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி திருமதி கிரண் சேகல் கூறுகிறார்: ‘என் அம்மாவின் வாழ்க்கை பயணத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தில் அவர் ஏறிய உயரங்களும், இறங்கிய பள்ளங்களும் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறேன். எனக்கும் அம்மாவிற்கும் இடையே இருந்த உறவைப் பற்றி எழுதியிருக்கிறேன். அம்மாவிற்கு தனது எடை பற்றிய கவலை அதிகம். நானும் என் பெண்களும் அவரை வேடிக்கையாக fatty என்றே கூப்பிடுவோம். அதனாலேயே புத்தகத்திற்கு இந்தப் பெயர் வைத்தேன். ஆனால் என் அம்மாவை குறையில்லாத பெண்மணியாக நான் இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கவில்லை. சிறு வயதில் புரியாத சில விஷயங்கள் வளர்ந்ததும் புரிய ஆரம்பித்தன. இதன் காரணமாகவே அம்மியை (தன் அம்மாவை இவர் அப்படித்தான் குறிப்பிடுகிறார்) சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே என் பெற்றோரின் சண்டைகள் பற்றியும், சங்கடமான விஷயங்கள் பற்றியும் எழுத முடிந்தது’.

திருமதி சேகலின் மறைவுக்குப் பிறகு கிரண் கூறினார்: ‘நான் இப்போது ஒரு வித்தியாசமான மனநிலையில் இருக்கிறேன். அம்மி எப்போதும் உயிர்த் துடிப்புடன் இருப்பார். அவர்தான் எங்களின் ஆதர்ஷம். எப்படியும் அம்மி எங்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அது நிகழ்ந்தவுடன் மனம் கனத்துவிட்டது’.

திருமதி சேகலின் இத்தனை வருட வாழ்க்கையின் ரகசியம் என்ன? கட்டுப்பாடான வாழ்க்கைமுறைகள், எதையும் நகைச்சுவையுடன் பார்ப்பது இரண்டும் தான். சமீபத்தில் காது கேட்கும் கருவி ஒன்றிற்கு விளம்பரம் கொடுத்த போது இவர் வேடிக்கையாகச் சொன்னது: ‘இந்த வயதில் இதற்குத் தான் நான் விளம்பரம் செய்யமுடியும். என்னுடைய கோணல் வாயை வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் விளம்பரம் செய்ய முடியுமா? இந்தக் கருவியை அணிந்து கொண்டால் நடிக்கும்போது திரைக்குப் பின்னாலிருந்து எனக்கு அவர்கள் வசனத்தை எடுத்துக் கொடுப்பது நன்றாகக் காதில் விழும்.....!’ சிரிக்கும்போது இவர் கண்களில் ஒளிரும் குறும்பு எல்லோரையும் கவரும்.



வாழ்க்கையின் மீது தீராத பற்றும், செய்யும் தொழிலில் நேர்மையும், அசாத்தியமான கடின உழைப்பும் தான் இவரை பாலிவுட்டின் மாபெரும் மூதாட்டியாக இத்தனை வருடங்கள் நிலைத்திருக்க வைத்திருந்தது.






நன்றி: சினேகிதி ஆகஸ்ட் இதழ்
ரஞ்சனி நாராயணன்
ranjanidoraiswamy@gmail.com

Friday, August 1, 2014

சிம்ம சொப்பனம்


பவள சங்கரி

தீரன் சின்னமலை

images (1)
நம் பாரத நாட்டில் கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நியரின் தலையீடு துவங்கியது. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வந்தவர்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் கண்ணை உறுத்த, அன்றிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட  குழப்ப நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்கள் பலர். இவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவன் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை. தன்னைப் போன்ற  சுதந்திர வேட்கை கொண்டோரை ஒன்று திரட்டி, மும்முறை படையை வழிநடத்தி எதிரிகளை நடுநடுங்கச் செய்தவன். எவரையும் வியக்கவைக்கும் வீர வரலாறு.  தம்பாக் கவுண்டர், தீர்த்தகிரி சின்னமலை என்ற பெயர்கள் கொண்ட இவர் பிறந்தது, 07.04.1756. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805). வட தமிழ்நாட்டின் சுதந்திர வேள்வியின் நாயகனாகத் தலைநிமிர்ந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அட்டூழியமான வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை.
 18-ஆம் நூற்றாண்டு இறுதியில்  கொங்கு நாட்டில்,காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைத்  தடுத்து நிறுத்துவதற்காக கடும்போர் புரிந்து அதனால் வெள்ளையரால் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.
 images
போர்வீரர்கட்குப் பயிற்சி கொடுக்கவும், போர் ஆயுதங்கள் செய்யவும் சிவன்மலை காட்டுப் பகுதியில் போர்ப் பாசறை அமைத்தார். சிவன்மலையின் வடமேற்குப்புறம் அடிவாரத்தில் அடர்ந்த காட்டிற்குள் சின்னமலை அமைத்த அனுமந்தராயன் கோயிலின் வடபுறம் போர்ப்பாசறை அமைத்திருந்த இடம் இன்றும் அடையாளச் சின்னங்களுடன் காணமுடிகிறது.
 சின்னமலையின் இளம்பருவத்திலேயே, சிலம்பப் பயிற்சி, தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் முதலிய கலைகளைக் கற்று, வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். கொங்குநாடு மைசூர் உடையார்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லில் குதிரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த மாவீரன் ஐதர் அலி. தம் அறிவுக் கூர்மை மற்றும் ஆற்றலால், மைசூர் உடையார் மரபு அரசரிடம் ஆளும் உரிமையைப் பெற்றான். கொங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரி வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சீரங்கப்பட்டணம் ஐதர் கருவூலத்திற்குச் சென்று சேரும். சின்னமலை வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் ஐதர் அலியின் ஆட்கள் வரிப்பணம் வசூல் செய்து கொண்டு போவதைக் கண்டு வெகுண்டு, ’மைசூரார் நம்மை ஏன் ஆள வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பணத்தைப் பெற்று வந்து ஏழை எளியோருக்குப் பிரித்துக்கொடுத்துவிடுகிறான். இப்படி பலமுறை நடந்தது. சங்ககிரி திவான் மீரா சாகிப் சின்னமலையை கைது செய்து கொண்டுவருவதற்காக 100 குதிரை வீரர்களை அனுப்பினான். ஊர் பொது மக்கள் மற்றும் சிலம்பக்கூட வீரர்கள் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்தனர்.
தீரன்07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடகத்தின் தலைமைப் பொறுப்பேற்று  கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரை  தீவிரப்படுத்தினார். கொங்குநாடு அப்போது  மைசூர் உடையார்களின் ஆட்சிக்குட்பட்ட திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படையில் சேர கொங்கு வீரர்கள் அழைக்கப்பட்டனர். சின்னமலையின் ஆற்றல் மற்றும் வீரம் மைசூர் முழுதும் பரவியிருந்தது. திவான் கிரிமிரே சாயபுவிடமிருந்து சின்னமலைக்கு உதவி வேண்டி ஓலை வந்தது அதனால் சின்னமலையின்  ஊக்குவிப்பினால் கொங்கு வீரர்கள் பலரும் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.  1799 இல் நடந்த நான்காம் மைசூர் போரின்போது,  சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது. குறிப்பாக மழவல்லிப் போரில் 40000 வீரர்களுடன் போரிட்டு, ஆங்கிலேயருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது இந்த கொங்குப்படை.
’கன்னட நாட்டின் போர்வாள்’ திப்பு, 04.05.1799ல் போர் முனையில் வீரமரணமடைந்ததால்,  அந்த பேரிழப்பினால் வேதனை கொண்ட சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது. திப்புவின் மைசூர் ஆங்கிலேயரின் உடமையானது.   அதற்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டி அதில் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கிவிட்டனர். திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் கோவை மண்டலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்ததாக சீரங்கப்பட்டணம் உடன்படிக்கை அறிவித்தது. அதன்படி  கொங்கு நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி அவர்கள்  வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலுமே  இருந்தது. ஆனால்  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.
திப்பு சுல்தானின் வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் ஆங்கிலேயரின்  எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல்  மிக்கவராக விளங்கினார். காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு தூண்டாஜி வாக் பணித்ததை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்க உதவி பெற விரும்பியது. திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர். மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார். இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது.
கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்ததால்,  கோவைக் கோட்டையை மீட்டாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது. கோவைப் புரட்சி,  ஜூன் 3.1800 அன்று நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். அதே நாளில் மொகரம்  நோன்பும் வந்ததால், முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக கோட்டையை மீட்டு விடலாம்  என்று கருதினர்.  விடுதலை  வீரர்கள் பலர் சில நாட்களுக்கு முன்னரே கோவை  சென்று மக்களின் ஆதரவுடன், மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடமிருந்து எல்லாவகையான உதவிகளையும் பெற முடிந்தது.
ஆனால் சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் தவறான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால், நடைபெறாமலே தோல்வி அடைந்தது. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். ஒரு வேளை இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின்  ஒரு  திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கோவைப்புரட்சிக்குப் பின்னரும் அந்த மாவீரன் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினான். இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மூன்று பெரும் போர்கள் நடைபெற்றுள்ளன. பலம் வாய்ந்த கிழக்கிந்தியப் படையை சின்னமலை சிறுபடை கொண்டும், தன்னந்தனியனாகவும் போரிட்டு வெற்றி பெற்றது வரலாறு. காவிரிப் போர் – 1801, ஓடாநிலைப் போர் – 1802, அறச்சலூர்ப் போர் – 1804, ஆகியன. இப்படி மூன்று முறை ஆங்கிலேயர் சின்னமலையிடம் படுதோல்வியுற்ற அவமானம் தாங்கமுடியாமல், அவனை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்று உறுதிபூண்டு, படைபலத்தை மேலும் அதிகரித்தனர். ஐதர், திப்புவை வெற்றி பெற்று, நிஜாமைப் பணியவைத்ததைக் காட்டிலும், ஆர்க்காடு, தஞ்சை அரசர்களை அடிமைகளாக்கியும், தீரன் சின்னமலை மட்டும் சவாலாகவே இருந்து வந்தான். தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவனாகவேக் கருதப்பட்டான்.
1805ம் ஆண்டில் ஒரு நாள் சின்னமலையில் ரகசிய உளவாளியான, ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்த வேலப்பனிடமிருந்து வந்த இரகசியத் தகவல் மூலமாக, 2 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாகவும், அதை எதிர்ப்பது சாத்தியமற்றது என்று கிடைத்த தகவலால், ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில், சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துக்கொண்டு மறைந்து வாழ முடிவு செய்தார். குறிப்பிட்ட நாளில் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து காத்திருந்தபோது,  சின்னமலை தப்பிய செய்தி அறிந்து கோட்டைக்குள் தேடல் நடத்தியபோது, ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டதோடு,  பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையை மண் மேடாகும் அளவிற்குத் தகர்த்தெரிந்தன.  செய்தி அறிந்த , கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். வேலப்பனின் இழப்பு பெரும் வேதனையானாலும், அங்கேயே தங்கி , கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் உதவியுடன் பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார்.
தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த சின்னமலையின் வீர வரலாற்றில் விதி விளையாடியது. ஆம், பணத்தாசையால் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக்கொடுத்துவிட்டான்.  கொங்கு நாடே கதறியழ, முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் புடைசூழ,  சின்னமலையும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் கூறிய ஆசை வார்த்தையை துச்சமென மதித்து , காரித்துப்பி கடுமையாக மறுத்தான்.
ஆடிப் பதினெட்டுப் பண்டிகை நாளான ஜூலை மாதம் 31ம் நாள் 1805ம் ஆண்டு கொங்கு நாட்டு வரலாற்றின் மோசமான நாள் என்பது போல, சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  சங்ககிரி மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வருக்காகக் காத்திருந்தது. அங்கு மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள்.  வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர். கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி அழிந்தது.
 நன்றி : புதிய தலைமுறை, வல்லமை


பவள சங்கரி: coraled@gmail.com

கால காலேசுவரர் சன்னதி

பவள சங்கரி

1
நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே
_ மத் சிதம்பர சுவாமிகள்
2

பூமாதேவி செய்த தவம்



4
3
avRyBTlPmXDDsMri6FN1YlZC7b3aLOFuWSB8Ecs4uZE,af3F0NtqlJGUJMRoxBVR5Fi3re3dp0db8wrAoyrfJS4
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளதுதான், கால காலேசுவரர் சன்னதி. இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் அற நிலையத்துறையின் பொறுப்பில் ரூ. 45 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுகிறது. ஆளுயர நடராசர் திருவுருவம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர் அல்லாத, தேசிகர் வகுப்பைச் சேர்ந்த ஒரு 90 வயது மூதாட்டியே இக்கோவிலுக்குத் தன்னால் இயன்ற வகையில், அவ்வப்போது வரும் பக்தர்களின் சிறு காணிக்கைகள் மூலம் பூசைகள் செய்து வந்திருக்கிறார். மழையும் பொய்த்துப்போனதால் ஊரில் விவசாயமும் நலிந்து போய், மக்கள் தங்கள் பாடே திண்டாட்டம் என்கிற நிலையில், சுவாமியை கவனிக்க முடியாமல் விட்டிருக்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள, அனந்தமங்கலம் ஆஞ்சேநேயர் சுவாமி கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கால காலேஸ்வரர் சன்னதி.
என்றும் பதினாறு என்று வரம் பெற்ற மார்கண்டேயனைக் காக்கும் பொருட்டு, சிவபெருமான் எமனை வதம் செய்து காலசம்கார மூர்த்தியாக விளங்கும் திருத்தலமே, திருக்கடவூர். அப்படி வதம் செய்தபோது எமனின் தலை தெரித்து விழுந்த இடம்தான் எருக்கட்டாஞ்சேரி என்கிறார்கள். ஐயனின் திருவருளால் அந்தத் தலை மீண்டும் உயிர் பெற்று எழுந்த இத்தலம் ‘எழுப்பி விட்டான் சேரி’ எனப் பெயர் பெற்று பின்னர் மருவி ‘எருக்கட்டாஞ்சேரி’ என ஆகியுள்ளது.
சிவபெருமானார் எமனை வதம் செய்ததால், மக்களுக்கு எமபயம் முற்றிலும் நீங்கிவிட்டது. அதனால் இறைபக்தி குறைந்ததோடு அதர்மங்கள் பெருகியுள்ளன. நாட்டில் அக்கிரமங்களும் அதிகரித்துள்ளன. பூமித்தாய் பாரம் தாங்காமல் மனம் நொந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற வரத்தின் மூலமாக மீண்டும் எமனுக்கு உயிர் பெற்றுத் தருகிறாள். சினம் தணிந்த சிவபெருமான் எமனுடைய தலையை இத்தலத்தில் பொருந்தச் செய்து உயிர் கொடுத்தார்.எமனுக்கே உயிர் கொடுத்த இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு, மரணபயம் நீங்கி, நோய், நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம். திருக்கடவூர் சென்று வழிபடும் பக்தர்கள் எருக்கட்டாஞ்சேரி கால காலேசுவரரையும் அன்னை கருத்தடக்கன்னியையும் வழிபட்டு வருவது வழக்கம். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளுடனும் வாழலாம் என்ற நம்பிக்கையும் மக்களிடம் பரவலாக இருக்கிறது. விரைவில் இக்கோவிலின் திருப்பணி நிறைவேறி ஐயனின் அருளொலி பூரணமாக பிரகாசிக்க நம்மால் ஆனதையும் செய்யலாமே..


நன்றி: வல்லமை
பவள சங்கரி: coraled@gmail.com

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

-- பவள சங்கரி

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

DSC00268

மூலவர்   : முத்து மாரியம்மன், துர்க்கை
தல விருட்சம் : வேம்பு மரம்
தீர்த்தம் : வெல்லகுளம்
பழமை : 500 ஆண்டுகள்
புராணப் பெயர் : புன்னைவனம்
ஊர் : புன்னைநல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
தல சிறப்பு :  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார்.
DSC00277
தல வரலாறு : நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.
DSC00287
தண்ணளி வீசும் பசும் வயல்வெளிகளுக்கிடையே புன்னைநல்லூர் மாரியம்மன் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் தென்படுவது, மராத்திய மன்னர்களின் தனிப்பட்ட பாணியில் அமைந்த பரந்த மண்டபம். கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் இரண்டாம் பெரும் சுற்றுச்சுவர் போன்றவை சரபோஜி மன்னர் தஞ்சை மண்ணை ஆட்சி செய்த காலத்தில், கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. இந்த ஆலயத்தின் மூன்றாவது சுற்றுச்சுவர் மராட்டிய மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் அவர்களால் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
DSC00297
இத்தலம் அமைந்த வரலாறு சுவையானது. வெறும் புற்று வடிவமாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருந்த சமயம் அது. மகான் சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் கனவில் அம்மன் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்ப வேண்டி கட்டளை பிறப்பிக்கிறாள். இவரே அம்மனுக்கு மாரியன்னை வடிவமும் கொடுத்து ஸ்ரீசக்கரமும் உருவாக்கம் செய்தார். பின் ராஜஸ்ரீ சிவாஜி மகாராஜாவின் மூலம் ஆலயம் அற்புதமாக எழும்பியது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் முக்கியமான எண்பத்தி எட்டு திருக்கோவில்களில் புன்னை மாரியம்மன் கோவிலும் ஒன்று. கோவிலின் உட்பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் அழகே உருவாக அமைக்கப்பட்டுள்ளன.

சதாசிவ பிரமேந்திரர்
சதாசிவ பிரமேந்திரர்
DSC00282
கீர்த்தி சோழன் என்னும் மன்னன் அம்மனின் அருளால் பெற்ற ஆண்மகவிற்கு தேவசோழன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். அவன் நன்முறையில் வளர்ந்து பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அப்போது தஞ்சையை ஆண்டுவந்த வெங்கோஜி மகாராஜா 1680 ம் ஆண்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்மன் அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் எழுந்தருளியுள்ள தன்னை தரிசிக்க வருமாறு கட்டளையிடவும், அரசனும் தம் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து அங்கிருந்து புன்னைக் காட்டிற்குச் செல்ல வழியமைத்து, அம்மனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சிறிய கூரையும் வேய்ந்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டதோடு அந்த கிராமத்தையே ஆலயத்திற்காக வழங்கினார். மேலும் 1728 -1735 ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளஜா என்ற மன்னனின் புதல்வி வைசூரி நோயால் கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாள். அச்சமயம் அம்மனின் கீர்த்தியை அறிந்து ஆழ்ந்து வழிபட்டதால் பூரண குணம் பெற்றாள். இதனால் அம்மனின் திருவருளை எண்ணி பெரிதும் வியந்த அம்மன்னன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார். காலப்போக்கில் அது பெரும் கோவிலாக மாறியுள்ளது என்று வரலாறு கூறுகிறது.
சண்டி
சண்டி
ஆறடி உயரமுள்ள அம்மனின் முகத்திலும், சிரசிலும் கோடைக்காலத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்படுவதைக் காணலாம். இதன் காரணமாகவே ஆலயத்தின் அருகில் உள்ள, உள்தொட்டி என்று அழைக்கப்படும் தொட்டியிலும், வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படும் பிரகாரத்தைச் சுற்றி உள்ள தொட்டிகளிலும் , அம்மை நோய்கண்டவர்கள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது. மனம் குளிர்ந்த அம்மன் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறாள். அதனால் அம்மை நோய் முதல், தோல் வியாதி, கண் நோய் , வயிற்று வலி, உடம்பில் சொறி, சிரங்கு, கட்டிகள் ஏற்படுதல், போன்றவற்றால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இந்த அம்மனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் கட்டாயம் குணமடைவதாக நம்பிக்கை வலுவாக இருக்கிறது. மேலும் வேலை வாய்ப்பு, பணியிடம் மாற்றம் , தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் அதனை நிறைவேற்றி கொடுக்கிறார் என்பதால் கோவிலில் எந்த நேரமும், குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அதிகமாக பக்தர்கள் வந்து வழிபடுவதைக் காண முடிகிறது.
DSC00271
அம்மனுக்கு மாவிளக்குப் போடுதல் என்பதே இங்கு முக்கியமான பிரார்த்தனையாக உள்ளது. அம்மை நோய் கண்டு குணமடைந்தவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். உடம்பில் கட்டிகளால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போட்டும், சொரி சிரங்கினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உப்பு வாங்கிப் போட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். கணவரின் நலனுக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலையும் நேர்த்திகடனாக செய்கின்றனர். அம்மனுக்கு நிலைமாலை சாத்துவதால் தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடப்பதாகவும் நம்பிக்கை உள்ளது. பால்குடம் எடுத்தல், பால்காவடி, அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும்.
DSC00278
அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருவதால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிடேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது. விட்டிணு துர்க்கை அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக்கும் அன்றாடம் அபிசேகம் நடைபெறுகிறது. 5 ஆண்டிற்கு ஒரு முறை, ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஒரு மண்டலத்திற்கு அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து, அதில் ஆவாகனம் செய்து, அந்த அம்மனுக்கே அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. அப்போது கருவறையில் உள்ள அம்மனுக்கு 48 நாட்களிலும் அன்றாடம் இரு வேளைகளிலும் சாம்பிராணி தைலம், புணுகு, போன்ற வாசனை பொருட்களால் அபிசேகம் நடைபெறுகிறது.
DSC00273
தைலாபிடேகம் செய்யும் காலங்களில் அம்மன் அதிகமான உக்கிரத்துடன் இருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு அம்மனுக்கு தயிர் பள்ளயம், இளநீர் போன்றவைகள் வைத்து நைவேத்தியம் நடைபெறுகிறது. ஆகம விதிப்படி அம்மனுக்கு நான்கு காலங்களும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் , முத்துப்பல்லக்கு ஆவணி மாதம் , கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் , தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா போன்றவைகள் வெகு சிறப்பாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மாசிமகத்தன்று 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று உற்சவ மூர்த்திக்கு அபிசேகம் செய்கிறார்கள். ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று மிகச் சிறப்பான பூச்சொரிதல் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோவில் இருக்கும் ஊரின் பெயரே ‘மாரியம்மன் கோவில்’தான்.
இங்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்றாடம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501,  தஞ்சாவூர் மாவட்டம்.



நன்றி: வல்லமை
பவள சங்கரி: coraled@gmail.com

ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்


 -- தேமொழி


நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது  நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும்  ஒப்பிட இயலாது.
- ஸ்டெப்ஃபெனி கோலக்
seyarkai ilai6
ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை  31, 1923 – ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார்.
உலகப்புகழ் பெற்ற நிறுவனமான  ‘டூபாண்ட்’ (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை  ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில்  முதலீடு செய்து,  பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக  டாலர்களில்  பொருள் ஈட்டியது.  அதற்கு அடிப்படைக் காரணம் ஸ்டெப்ஃபெனி கோலக்  கண்டுபிடித்த  ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின்  உயிர்களைக் கவசமாக இருந்து காப்பாற்றியது இந்த ஆடைகளில் இருக்கும் குண்டு துளைக்காத இழை (bulletproof fiber)தான். உயிர் காக்கும்  இந்த செயற்கை  இழையின் பெயர்  கெவ்லர் (Kevlar®).
seyarkai ilai1
குறைந்த எரிபொருள் பயன்படுத்தி ஓடும் கார்களைத் தயாரிக்க 1970 களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு காரணம் அக்காலத்தில் இருந்த  பெட்ரோல் பற்றாக்குறையாகும். அதனால் இரும்புக் கம்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கார் சக்கரங்களில் (car tires) அவற்றிற்கு மாற்றாக  எடை குறைந்த, ஆனால் உறுதியான செயற்கை இழைகளைப் பயன்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
seyarkai ilai2
நைலான் போன்ற செயற்கை இழைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த டூபாண்ட்  நிறுவனமும் இந்த முயற்சியில் ஈடுபட்டது. டூபாண்ட் நிறுவனத்தின் வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் ஸ்டெப்ஃபெனி கோலக்கும் அங்கு ஒரு ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பலபடி சேர்ம ஆராய்ச்சி ( polymer research) முறையில் நீளமான கரிம சங்கிலியால் ஆன இழைகளைத் தயாரிக்க விரும்பிய ஆய்வாளர்கள் பல வேதிப்பொருட்களை ஒன்றுடன் ஒன்றாகக் கலந்தனர்.  பின்னர் அக்கலவையை ஒரு திரவத்தில் கரைத்து, அந்த  திரவக் கரைசலை  செயற்கை இழை செய்யும் சுழலும் கருவியில் ஊற்றி (பஞ்சு மிட்டாய் செய்வது போலவே),  கருவியைச்  சுழற்றி இழைகளாக உருவாக்கினர். உருவாக்கிய இழைகளின் பண்புகளையும், உறுதியையும் அறிய அவற்றை அடுத்த படியாக பலவகைச் சோதனைகளுக்கு   உட்படுத்தி ஆராய்ந்தனர்.
seyarkai ilai3
ஸ்டெப்ஃபெனி கோலக்கும்  இதே முறையில் திட நிலையில் இருந்த வேதிப் பொருள்களின் கலவையை, திரவக் கரைசலாக மாற்றினார்.  பொதுவாக இவ்வாறு கிடைக்கும் கரைசல் அடர்த்தி நிறைந்த பாகு போலவும், தெளிந்தும் இருந்தால் (அதாவது பார்ப்பதற்கு தேன் அல்லது சர்க்கரைப் பாகு போன்ற தோற்றத்தை ஒத்திருந்தால்) செயற்கை இழைகளை உருவாக்க சிறந்த கரைசலாக ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்படும்.  ஆனால் ஸ்டெப்ஃபெனி கோலக் உருவாக்கிய கரைசல் துகள்கள் நிறைந்து, கலங்கலாக மிகவும் நீர்த்துப் போன தோற்றம்  (மோர் போன்ற தோற்றம்) கொண்டதாக இருந்தது.
அவருடன் பணிபுரியும் ஆய்வாளர்கள் அக்கரைசலைத்  தூக்கி எறிந்துவிட்டு மீண்டும்  ஆராய்ச்சியை துவக்க ஆலோசனை சொன்னார்கள்.  கரைசலில் உள்ள திரவத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு இழைகளை விட்டுவிடும் இழை தயாரிக்கும் கருவியை (laboratory spinneret machine) இயக்கும் ஆராய்ச்சியாளரும் அந்தக் கரைசலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஸ்டெப்ஃபெனி கோலக் அந்தக் கரைசலை வடிகட்டி துகள்களை நீக்கிய பிறகு,  மீண்டும் மிகவும் விடாப்பிடியாக அவரை வற்புறுத்தி செயற்கை இழை  தயாரிக்கச் செய்தார்.
இந்த இழையை அழுத்தம் கொடுத்து சிதைக்கும்  சோதனைக்குட்படுத்திய பொழுது,  கொடுக்கப்படும் அழுத்தத்தினால் பெரும்பாலான இழைகள் நொறுங்கிவிடும் ஓர் அழுத்த நிலையையும் தாண்டி இந்த இழை  மிகவும் விரைப்பாகவும் நொருங்காமலும் சிதையாமலும் இருந்தது.  இந்த பண்பை நன்கு உறுதி செய்து கொண்ட பின்னர், ஸ்டெப்ஃபெனி கோலக் நிர்வாகத்தினரிடம் இந்தத் தகவலை அளித்தார்.  டூபாண்ட்  நிர்வாகத்தினர்  உடனே ஒரு ஆராய்ச்சிக் குழுவையே இதற்காக உருவாக்கி இழையின் பல்வேறு பண்புகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
பாலி – பாரஃபைனைலீன்  டெட்ரிஃப்தாலமைட் (poly-paraphenylene terephthalamide) என்ற இந்த இழைக்கு ஆய்வகத்தில் “ஃபைபர் பி” (“Fiber B”) எனப் பெயரிட்டு ஆய்வுகள் நடத்தப் பட்டன.  அச்சோதனைகளின் மூலம் இந்த செயற்கை இழை எஃகை விட ஐந்து மடங்கு மிகவும் உறுதியானதாகவும், அதேசமயம் எடை குறைவானதாகவும்  இருப்பதும், தீயெதிர்ப்பு   திறன் கொண்டிருப்பதும் அறியப்பட்டது.  சந்தையில் ‘கெவ்லர் ‘ என்ற பெயரில் இந்த இழை  அறிமுகப்படுத்தப்பட்டது.  இழை கண்டுபிடிக்கப்பட்ட  1965 ஆம் ஆண்டிற்குப் பிறகு கார் சக்கரங்களில் மட்டுமின்றி, அதன் உறுதியான மற்றும் எடை குறைவான பண்புகளின் காரணாமாக உயிர்காக்கும் கவச ஆடைகளிலும், தலைக்கவசங்களிலும் 1975 ஆம் ஆண்டு முதல் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
குண்டு துளைக்காத கவச ஆடை தயாரிப்பில் பெரும்பங்கு இடம் பெற்று அதனால் உலகப் புகழ் பெற்று பலரால் அறியப்பட்டாலும், கெவ்லர் செயற்கை இழை மேலும் பல வகைகளில் நம் அன்றாட வாழ்வில் இடம் பெற்றுள்ளது. சில எடுத்துக் காட்டுகள்: எடைகுறைவான உறுதியான கருவிகள், கார் டயர்கள், தீயணைப்பு வீரர்களின் காலணிகள்,  ஹாக்கி மட்டைகள், கிழியாத  கையுறைகள், கண்ணாடியிழை கம்பிவடம்  (fiber-optic cables), தீப்பற்றாப் படுக்கைகள், ஓடங்கள், விமானங்கள், கவச ஊர்திகள், தீப்பற்றாக் கட்டிடப் பொருட்கள், சூறாவளியாலும், குண்டுகளாலும்  சிதைவுறா பாதுகாப்பு  அறைகள், தேய்வுற்ற பாலங்களின் சீரமைப்பு, கைபேசிகள் எனப் பலப்பல வழிகளிலும் பலப்பல பொருட்களிலும் பற்பல வகைகளில் கெவ்லர் இழை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
seyarkai ilai7
பின்நாளில் இந்த இழையைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்டெப்ஃபெனி கோலக் , கெவ்லர் உருவானது  ஒரு தற்காலிக விளைவுதான், ‘யுரேகா’ கண்டுபிடித்துவிட்டேன் என்பது போன்ற  பிரிவில் இந்த நிகழ்வு அடங்காது.  அவசரப்பட்டு உடனே அறிவித்து, பிழையானால் நகைப்புக்குள்ளாக நேரும் என்பதால், நானும் பொறுமைகாக இழையின் பண்புகளை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே நிர்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், உழைப்பை முதன்மையாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டெப்ஃபெனி கோலக். இவர்  பெற்றோர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள்.  ஸ்டெப்ஃபெனி கோலக் ஆடைகளை வடிவமைப்பது உட்பட,  சிறு வயதில் பல துறைகளிலும் ஆர்வமுடையவராக விளங்கினார்.  ஆசிரியராக, மருத்துவராக பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளும் கொண்டிருந்தார்.  இவரது கலைப் பின்னணியையும், ஆடைகளுக்கு  வடிவமைக்கும் திறனையும்  இவர் அன்னை ஊக்கப்படுத்தினார்.  இயற்கையை விரும்பும் இவரது தந்தை இவரை வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காக்களுக்கும், காடுகளுக்கும், நீர்நிலைகளுக்கும் அழைத்துச் சென்று மரம் செடி கொடிகள், விலங்குகள் இவற்றைக்காட்டியும்  அறிவியல் கணிதம் போன்றவற்றில் இவருக்கு ஆர்வமூட்டினார்.
இவரது தந்தை இவரது  பத்தாவது வயதில் மரணமடைந்துவிட தாயார் பராமரிப்பில் வளர்ந்தார்.  அமெரிக்காவின் பஞ்ச காலமான 1930 களில் இவரது அன்னை மிகவும் சிரமப்பட்டு இவரை வளர்த்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கார்னகி மிலான் (Carnegie-Mellon Univeristy)பல்கலைக் கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.  மேற்கொண்டு மருத்துவம் படிக்க பணம் சேர்ப்பதற்காக தற்காலிகமாக ஒரு பணியில் சேர விரும்பி கல்ஃப் ஆயில் (Gulf Oil), டூபாண்ட் நிறுவனகளுக்கு விண்ணப்பித்தார்.  பொதுவாக பெண்கள் அதிகம் பணிபுரியாத காலம் அது.  அத்துடன் நிறுவனங்களும் பெண்களை பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டியதில்லை.  ஆனால் இரண்டாம் உலகப் போரின் காரணமாக, ஆண்கள் பலர் போருக்குச் சென்றுவிட்ட காரணத்தினால்,  வேறு வழியற்ற நிலையில் பெண்களுக்கு பணிபுரியும் வாய்புகள் அமைந்தன.  அதனால்  ஸ்டெப்ஃபெனி கோலக்கிற்கும்   டூபாண்ட் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு  கிடைத்தது.
கெவ்லர் இழை கண்டுபிடிப்பிற்குப் பிறகு, ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டதன்  விளைவாக மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்டெப்ஃபெனி கோலக்  கைவிட்டார்.  இளங்கலை பட்டத்தைத் தவிர்த்து மேற்படிப்பிற்கான  முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இழை கண்டுபிடிப்பின் காப்புரிமையை டூபாண்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்துவிட்டார்.  இழை கண்டுபிடிப்பு மட்டுமே  தனக்கு உரிமை, ஆனால் அதை பலவிதப் பயன்பாட்டிற்கும் பதப்படுத்தி சந்தைக்கு ஏற்றவாறு வெளியிட்டதில் அவர் பங்கு கொள்வது முறையல்ல என்ற எண்ணம் கொண்டிருந்தார். கெவ்லர் இழையை மேன்மைப்படுத்த தொடர்ந்து உழைத்தார். நிறுவனம் இவருக்கு என ஒரு தனி ஆய்வுக் கூடத்தை வழங்கியது, பலபடி சேர்ம ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கல்விக்குப் பணம் சேர்க்க ஒரு தற்காலிகப் பணி என்று ஏற்றுக் கொண்ட பணியில்  40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து 1986 ல் பணிஓய்வு பெற்றார்.
“பெண்களில் ஓர்அறிவியல்  முன்னோடி” என்றும் “கண்டுபிடித்தலின் தாய் ” என்றும்  பாராட்டப்பட்டார்  ஸ்டெப்ஃபெனி கோலக். அறிவியலில் இவர் ஆற்றிய பங்கிற்காக  பற்பல விருதுகளும் பரிசுகளும் பெற்றார். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி, ” நேஷனல் மெடல் ஆஃப்  டெக்னாலஜி ( National Medal of Technology) விருது  1996 ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப் பட்டது.  பின்நாளில் ஓய்வு பெற்ற பிறகும்  பள்ளிகளில் இளம்பெண்களை சந்தித்து பெண்களை அறிவியல் துறையில் பங்காற்றும்படி ஆலோசனை கூறும் தன்னார்வப் பணியினை தொடர்ந்து செய்து வந்தார்.
இதுவரை ஒரு மில்லியன் குண்டுதுளைக்காத கவச ஆடைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன  என டூபாண்ட் நிறுவனம் ஜூன் 2014 இல் அறிவித்தது. அறிவிப்பு நிகழ்ந்த பின்னர் அதற்கு மறுவாரத்தில், உடல் நலமற்று இருந்த 90 வயதான ஸ்டெப்ஃபெனி கோலக் உயிர்நீத்தார்.
seyarkai ilai8
அமெரிக்க இராணுவம் “கெவ்லரைக் கண்டுபிடித்ததற்கு மிக்க நன்றி ஸ்டெப்ஃபெனி கோலக், உங்கள் கண்டுபிடிப்பின் மூலம் பல வீர்களின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது, உங்கள் ஆன்மா அமைதி பெறட்டுமாக” என்று அவரது மறைவிற்கு ட்விட்டர் சமூக வலைதளத்தின் மூலம் இராணுவம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.  துப்பாக்கி சூட்டில் கவசஉடை அணிந்திருந்ததன் காரணமாக உயிர்பிழைத்தோர் ஒரு கழகம் துவக்கியுள்ளனர். அக்கழகத்தில் இதுவரை உயிர்பிழைத்த மூவாயிரத்திற்கும் அதிகமானவர் உறுப்பினர்களாக உள்ளனர்.  தனது உயிர் துப்பாக்கி சூட்டில் இருந்து கவச உடையால் காப்ற்றப்பட்ட பின்னர் உயிர்பிழைத்தோர், அம்மையாரை தொடர்பு கொண்டு நன்றி கூறும் பொழுதெல்லாம் அதைக் கேட்டு மனம் மிக மகிழ்வாராம் ஸ்டெப்ஃபெனி கோலக்.  “நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது  நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும்  ஒப்பிட இயலாது”,   என்று அவர் கூறியது அவர் அந்த செய்திகள் மூலம் கிடைத்த மனநிறைவினால்தான்.




themozhi@yahoo.com
இக்கட்டுரைக்கு காப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. 
License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)