Friday, August 8, 2014

ஸோரா சேகல்

--ரஞ்சனி நாராயணன் 






 ஸோரா சேகல் (Zohra Sehgal)




கனவுத் தொழிற்சாலை எனப்படும் திரை வானில் நீண்ட நாட்கள் மின்னுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. அதுவும் நடிகைகளுக்கு இளமை இருக்கும் வரை மட்டுமே மதிப்பும், பெயரும், புகழும், கூடவே கதாநாயகி அந்தஸ்த்தும் கிடைக்கும். சற்று வயதாகிவிட்டால் அக்கா, அண்ணி பாத்திரம் ஏற்க வேண்டியதுதான்.  அதையும் ஒரு சிலர் மட்டுமே பெருந்தன்மையுடன் ஏற்று தங்கள் வாழ்க்கையை முன் நடத்திச் செல்லுகிறார்கள். தங்கள் வயதுக்கேற்ற பாத்திரம் ஏற்று திரைத் துறையிலும் எப்போதும் மின்னுபவர்கள் சிலர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களில் மறக்க முடியாதவர் திருமதி ஸோரா சேகல். சுமார் 80 ஆண்டுகள் கலைச்சேவையில் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

கடந்த ஜூலை மாதம் தனது 102வது வயதில் இயற்கை எய்திய முதுபெரும் நாடகக் கலைஞர் ஸோரா சேகலின் முழு பெயர் சாஹிப்சதி ஸோரா பேகம் மும்தாஜ்-உல்லாகான். உத்திரப்பிரதேசத்தில் சுன்னி முஸ்லிம் பதான் குடும்பத்தில் 1912 ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்தவர் திருமதி ஸோரா. இவரது பெற்றோருக்கு பிறந்த 7 குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் இவர்.

சிறு வயதிலேயே சற்று  வித்தியாசமாகத்தான் வளர்ந்து வந்தார் ஸோரா. தங்கள் குல வழக்கங்களை விடாப்பிடியாக கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்த போதிலும், இவரது வயதை ஒத்த மற்ற பெண் குழந்தைகளைப் போல பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடாமல் ஆண் பிள்ளைகளைப் போல மரம் ஏறுதல், வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடுதல் இவருக்கு பிடித்தமான செயல்கள்.

இளம் வயதிலேயே தாயை இழந்த ஸோராவுக்கு பயணம் செய்வது மிகவும் பிடித்த ஒன்று. பலவிதமான கலாசாரங்களையும், பழக்கவழக்கங்களையும் அறியும் ஆசையும் சேர்ந்து கொள்ள, தனது மாமாவுடன், இந்தியா முழுக்க பிரயாணம் செய்தார். மேற்கு ஆசியா, ஐரோப்பா என்று பல இடங்களுக்கு அவருடன் சென்று வந்தார். தனது தாயின் விருப்பப்படி லாகூரிலுள்ள  க்வீன் மேரி கல்லூரியில் படித்தார்.

சிறுவயதில் இவர் பார்த்த நடனக் கலைஞர் உதயஷங்கர் அவர்களின் நடன அசைவுகள், நடிப்புத் திறமை ஆகியவை இவரது வாழ்க்கையின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. இளங்கலை முடித்தபின் உதயஷங்கரின் நடனக் குழுவில் சேர்ந்து நிறைய வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகளை அளித்தார். அந்த நடன குழுவிலேயே ஆசிரியை ஆகவும் சேர்ந்தார்.

அங்குதான் காமேஷ்வர் சேகலை சந்தித்தார். காமேஷ்வர் சேகல் இளம் விஞ்ஞானி; ஓவியராகவும் நடனக் கலைஞர் ஆகவும் இருந்தார். தன்னைவிட 8 வருடங்கள் இளையவரான சேகலை காதலித்து கைப்பிடித்தார் ஸோரா. முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த இரு குடும்பத்தினரும் பிறகு இவர்களை ஏற்றுக் கொண்டனர். சேகல் தம்பதியினருக்கு இரு குழந்தைகள்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து இருவரும் உதயஷங்கர் குழுவில் ஆடி வந்தனர். இந்தக் குழு கலைக்கப்பட்டவுடன் இருவரும் லாகூர் வந்தனர். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இருவரும் பம்பாய் வந்தனர். திருமதி சேகல் பிரிதிவிராஜ் கபூரின் நாடகக் குழுவில் நடிக்கத் துவங்கினார். இந்தக் குழுவில் சுமார் 14 வருடங்கள் நடித்தார். முதன் முதலில் 1946 ஆண்டு தர்தி கே லால் என்ற வங்காளத்தில் நிலவிய பஞ்சத்தைப் பற்றிய படத்தில் தோன்றினார். நடனக் கலைஞராக இருந்த போதிலும், நடன அமைப்பாளராகவும் சில திரைப்படங்களில் பணியாற்றினார்.

நாடக ஸ்காலர்ஷிப் மூலம் 1962 இல் லண்டன் சென்ற இவர் அங்கு ‘தி ஜ்வல் இன் தி கிரௌன்’, ‘தந்தூரி நைட்ஸ்’ முதலிய தொலைக்காட்சி தொடர்களில்  நடித்தார்.

2012 ஆண்டு இவரது நூறாவது பிறந்த நாளன்று இவரது மகள் திருமதி கிரண் (பிரபல ஒடிசி நடனக் கலைஞர் இவர்) இவரது வாழ்க்கை வரலாற்றை Zohra Sehgal: Fatty என்ற பெயரில் எழுதி வெளியிட்டார்.

தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி திருமதி கிரண் சேகல் கூறுகிறார்: ‘என் அம்மாவின் வாழ்க்கை பயணத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தில் அவர் ஏறிய உயரங்களும், இறங்கிய பள்ளங்களும் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறேன். எனக்கும் அம்மாவிற்கும் இடையே இருந்த உறவைப் பற்றி எழுதியிருக்கிறேன். அம்மாவிற்கு தனது எடை பற்றிய கவலை அதிகம். நானும் என் பெண்களும் அவரை வேடிக்கையாக fatty என்றே கூப்பிடுவோம். அதனாலேயே புத்தகத்திற்கு இந்தப் பெயர் வைத்தேன். ஆனால் என் அம்மாவை குறையில்லாத பெண்மணியாக நான் இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கவில்லை. சிறு வயதில் புரியாத சில விஷயங்கள் வளர்ந்ததும் புரிய ஆரம்பித்தன. இதன் காரணமாகவே அம்மியை (தன் அம்மாவை இவர் அப்படித்தான் குறிப்பிடுகிறார்) சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே என் பெற்றோரின் சண்டைகள் பற்றியும், சங்கடமான விஷயங்கள் பற்றியும் எழுத முடிந்தது’.

திருமதி சேகலின் மறைவுக்குப் பிறகு கிரண் கூறினார்: ‘நான் இப்போது ஒரு வித்தியாசமான மனநிலையில் இருக்கிறேன். அம்மி எப்போதும் உயிர்த் துடிப்புடன் இருப்பார். அவர்தான் எங்களின் ஆதர்ஷம். எப்படியும் அம்மி எங்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அது நிகழ்ந்தவுடன் மனம் கனத்துவிட்டது’.

திருமதி சேகலின் இத்தனை வருட வாழ்க்கையின் ரகசியம் என்ன? கட்டுப்பாடான வாழ்க்கைமுறைகள், எதையும் நகைச்சுவையுடன் பார்ப்பது இரண்டும் தான். சமீபத்தில் காது கேட்கும் கருவி ஒன்றிற்கு விளம்பரம் கொடுத்த போது இவர் வேடிக்கையாகச் சொன்னது: ‘இந்த வயதில் இதற்குத் தான் நான் விளம்பரம் செய்யமுடியும். என்னுடைய கோணல் வாயை வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் விளம்பரம் செய்ய முடியுமா? இந்தக் கருவியை அணிந்து கொண்டால் நடிக்கும்போது திரைக்குப் பின்னாலிருந்து எனக்கு அவர்கள் வசனத்தை எடுத்துக் கொடுப்பது நன்றாகக் காதில் விழும்.....!’ சிரிக்கும்போது இவர் கண்களில் ஒளிரும் குறும்பு எல்லோரையும் கவரும்.



வாழ்க்கையின் மீது தீராத பற்றும், செய்யும் தொழிலில் நேர்மையும், அசாத்தியமான கடின உழைப்பும் தான் இவரை பாலிவுட்டின் மாபெரும் மூதாட்டியாக இத்தனை வருடங்கள் நிலைத்திருக்க வைத்திருந்தது.






நன்றி: சினேகிதி ஆகஸ்ட் இதழ்
ரஞ்சனி நாராயணன்
ranjanidoraiswamy@gmail.com

No comments:

Post a Comment