Sunday, July 6, 2014

யானை வலசை.. நிகழ்வின் பதிவு


--பிரகாஷ் சுகுமாரன்   
 ” ஆனை மலை “ - தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடர்ந்த வனம் சூழ்ந்த மலைகள் இப்பெயரில் வழங்கப்படுகின்றன.  இன்றைக்கு அந்த மலைகள் எல்லாம் யானையின் வடிவை பிரதிபலிக்கிறது என்பது மட்டும்தான் பெயருக்கு சுட்டி காட்டப்படும் ஒரே காரணம். ஆனால் வடிவத்தை கடந்து இன்னும் ஒரு ஒற்றுமை உள்ளது. எங்கெல்லாம் ஆனை மலை உள்ளதோ, அந்த வனப்பகுதிகள் எல்லாம் ஒரு காலத்தில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்த வனச்சரணாலயங்களாக இருந்தவை என்பதுதான்.

 பரந்த பாரதத்தின் பல்வேறு வனங்களையும், மலைகளையும், ஆறுகளையும் கடந்து சென்ற தமிழர்கள் பல நாடுகளை வெற்றி கொள்ள உதவிய 94 யானை பாதைகள் கண்டறியப்பட்டு உள்ளன. பிற்காலத்தில் இந்த பாதைகள் பெரு வழிப்பாதைகளாகவும், ராஜபாட்டைகளாகவும் மாறிய பிறகு மறையத் தொடங்கிய யானைகளின் வழித்தடங்களுடன், யானைகளும் அழியத் தொடங்கின. தற்போது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள தேசிய - மாநில நெடுஞ்சாலைகளும், நான்கு கரச் சாலைகளும், யானை வலசை செல்லும் பாதைகளை முற்றிலும் ஆக்கிரமித்து விட்டதால், யானைகளின் வாழ்வியல் கேள்விக்குறியதாகி, அருகி வரும் இனமாக, விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன, “ காட்டு யானைகள் ”.

 மனித இனப்பரவலுக்கும், நாகரீக வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவை ஆற்றங்கரைகள். அதற்கு அடுத்தபடியாக பல்வேறு குழுக்களாக, சமூகங்களாக வாழ்ந்த மனிதர்கள் பல நாடுகளுக்கும், தொலைதூர பகுதிகளுக்கும் இடப்பெயர்ச்சி செய்யவும், பரந்த நிலப்பகுதிகளில் ஆங்காங்கே வசித்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்புகளுக்கும் அதி முக்கிய காரணமாக இருந்தது, “ யானை வலசை “ எனப்படும் யானை பாதைகள். கடல் சூழ்ந்த கண்டங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை கடக்க, மனிதர்களின் கடல் வழி பயணத்துக்கு எப்படி ஆமைகள் வழிகாட்டி உதவி செய்தனவோ, அதேபோல மனிதர்கள் உருவாக்கிய நாடுகளுக்கு இடையிலான அடர்ந்த காடுகளை கடந்து, வேற்று நாட்டு எல்லைகளை சென்றடைய யானைகளின் வழித்தடங்கள் உதவி செய்தன. இயற்கையில் பிறந்து, இயற்கையோடே வளர்ந்த மனித இனம், நாகரீக வளர்ச்சியின் வேகத்தில் தங்களின் இயல்புகளையும், இயற்கையையும் மறந்து போனதால், சக உயிரினங்களுடன் மட்டுமல்ல, சக மனிதர்களுடன் ஒருமித்து வசிக்கும் சகிப்புத் தன்மையை கூட இழந்து வருகிறார்கள்.

 திருவண்ணாமலையின் அருகே தண்டராம்பட்டை ஒட்டி, சேலம் செல்லும் பாதையில் ஒரு ஆனை மலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதியாகவும், வன உயிரினங்களுக்கு தேவையான உணவும், நீர்வளமும் நிறைந்த, யானைகளுக்கு சிறந்த மறை-உறைவிடமாகவும் இருப்பது இந்த ஆனைமலை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த ஆனைமலை, மத்திய - மாநில அரசுகளின் ” ஆப்பரேஷன் மலை “ என்ற செயல்திட்டத்தின்கீழ், கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. காரணம், ஏப்ரல் மாதம் ஜவ்வாது மலையில் இருந்து வலசை கிளம்பிய யானை கூட்டம் ஒன்று திரும்ப வரும்போது அவற்றை உயிரோடு பிடித்து முதுமலை மற்றும் ஆனைமலை வனச்சரணாலயங்களுக்கு கொண்டு செல்வது அரசாங்கத்தின் திட்டம். சுதந்திரமாக தாங்கள் வசிக்க யானைகளே தேர்ந்தெடுத்து கொண்டுள்ள, இயற்கையான இந்த ஆனைமலையில் இருந்து யானைகளை பிடித்து சென்று, வன விலங்குகளின் வதை முகாமாக மாற்றப்பட்டு விட்ட வேறொரு ஆனைமலைக்கு கொண்டு செல்வது என்பது அப்படியொரு சிறப்பான திட்டமா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. இப்படியொரு முடிவை அரசாங்கம் எடுப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முன்பாக, வலசை சென்ற யானைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

 தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில், தற்போது 4000 யானைகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இடப்பெயர்ச்சி என்பதை தங்கள் வாழ்வியல் பாதையாக கொண்டுள்ள யானைகள், காவேரி, பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை ஆகிய ஆறுகள் உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தின், நந்திமலை, குடகு மலை ஆகிய மலைகள் அமைந்துள்ள மைசூர் வனப்பகுதியில் இருந்து, வடபெண்ணை ஆற்றையொட்டிய வனப்பகுதிகள் வழியாக தங்கள் வலசையை தொடங்கும். ஆந்திர மாநிலத்துக்குள் நுழைந்து, அங்கிருந்து பாலாற்றங்கரையில் பயணித்து தமிழக எல்லையில் உள்ள வேலூர் மாவட்டத்துக்குள் நுழையும் யானைகள், அங்கு பிரியும் இரு யானை பாதைகளில் ஒன்றான கிருஷ்ணகிரி - தர்மபுரி வனங்களின் வழியாக பயணித்து, ஜவ்வாது மலையை அடைந்து அங்கே சில காலம் தங்குவது வழக்கம். பிறகு விழுப்புரம் அருகே கல்வராயன் மலை - சேலத்தின் அருகே உள்ள சேர்வராயன் மலை - கோவை வழியாக பயணித்து மீண்டும் மைசூர் வனப்பகுதியை சென்றடையும். இதில் கோவை வழியாக பயணிக்கும் யானைகள் அங்குள்ள ஆனைமலை, நீலகிரியை கடந்து கேரளாவுக்குள் சென்று திரும்புவது, யானைகளின் வேறொரு வலசை பாதை.

 ஒருகாலத்தில் முதுமலை வனச்சரணாலயம் என்பது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த யானை கூட்டங்கள் சந்தித்து, தங்கி, ஒன்றையொன்று அளவளாவி செல்லும் உண்மையான வனச்சரணாலயமாக விளங்கியது. யானை பாதைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யானை கூட்டங்களையும், வன உயிர்களையும் வாழ்வித்த அந்த முதுபெரும் மலை, இன்று யானைகளை அடைத்து வைக்கும் முகாமாகி விட்டது.


 
கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து வரும் யானைகள் வேலூரில் பிரியும் மற்றொரு வலசை பாதை வழியாக பேரணாம்பட்டை கடந்து, ஆந்திர மாநிலத்தின் குப்பம் - சித்தூர் வனப்பகுதியில் பயணித்து, திருப்பதி மலையை சூழ்ந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் தங்கும். பிறகு அங்கிருந்து வலசை தொடங்கி, சென்ற வழியிலேயே திரும்பி வந்து ஜவ்வாது மலையில் தங்கும். அங்கிருந்து விழுப்புரம் - அரூர் - தர்மபுரி - கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக பேரணாம்பட்டு அருகே ஆந்திரத்துக்குள் திரும்ப செல்லும். ஜவ்வாது மலை, சேஷாசலம் வனப்பகுதிகள் இரண்டுமே சந்தன மரங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற பகுதிகள். கடந்த 30 ஆண்டுகளில் இந்த யானை பாதைகள் சிறிது, சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது முற்றிலுமாக மறைந்து விட்டதால், அந்தந்த வனப்பகுதிகளில் இருந்த யானைகள் மற்ற பகுதிகளுக்கு வலசை செல்ல முடியாமல் ஆங்காங்கே தங்கிவிட்டன.

 கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக ஜவ்வாது மலையை வந்தடைந்த யானை கூட்டம் ஒன்று மீண்டும் தங்கள் வனத்தை சென்றடைய முடியாததால், ஜவ்வாது மலையிலேயே தங்கி அங்கிருந்து விழுப்புரம் - சேலம் - தர்மபுரி - கிருஷ்ணகிரி - வேலூர், மீண்டும் ஜவ்வாது மலை என தங்கள் பாதையை புதிதாக மாற்றி அமைத்து கொண்டன.

 வன உயிரின சங்கிலியின் முக்கிய இடத்தை பெற்றுள்ள யானைகள் வலசை செல்வதன் முக்கிய நோக்கம் இனப்பெருக்கம். கோடைக்காலம் தொடங்கியதும் தங்களின் வசிப்பிடத்தை விட்டு கூட்டமாக கிளம்பும் யானைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான இடத்தை தேடி செல்லும். காலாகாலமாக சென்று வரும் வழித்தடங்கள் அவற்றின் நினைவில் பதிந்து இருப்பதால், அதே வழிகளில் தடம் மாறாமல் வலசை செல்லும். யானை கூட்டங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை நிறைந்திருக்கும் வழித்தடங்களை சிறிதும் மாற்றாமல், மிகச்சரியாக அதே பாதைகளில் பயணிப்பதாலேயே, அவை ” யானை பாதைகள் “, என அழைக்கப்படுகின்றன.

தற்போது மனிதர்களின் பெருக்கத்தாலும், பேராசையாலும் காடுகளின் எல்லைகள் குறுகி வருவதுடன், யானைகள் வலசை செல்லும் பாதைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி கிராமங்களாகவும், ஊர்களாகவும் மாறி விட்டன. அடர்ந்த வனப்பகுதிகளையும் நிரவி உருவாக்கப்பட்டு வரும் ரிசார்ட்டுகள், கேலிக்கை விடுதிகள் ஆகியவை யானைகளின் வழித்தடங்களை முற்றிலுமாக அழித்து விட்டன. எனவே வலசை செல்லும் யானைகள் தங்களின் குடியிருப்புகளையும், வயல்வெளிகளையும் சேதப்படுத்துவதாக மனிதர்கள் எழுப்பிய கூக்குரல், யானைகளின் உயிர்களுக்கு சேதம் விளைவிக்கத் தொடங்கியது.

 கடந்த 8 ஆண்டுகளில் ஜவ்வாது மலையில் இருந்து வலசை சென்ற யானைகளின் வழியில் எதிர்பட்டும், விரட்ட முயன்றும் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 15. அதே காலகட்டத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய மின்சார வேலிகளிலும், ரயில் விபத்து, சாலை விபத்துகளிலும் சிக்கி இறந்த யானைகளின் எண்ணிக்கை 30ஐ தாண்டி விட்டது. தந்தங்களுக்காகவும், வீர தீர விளையாட்டுக்களுக்காகவும் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை அரசாங்கத்தின் தாள்களில் இடம் பெறுவதில்லை என்பதால், எண்ணிக்கை தெரியாமல் போனது.

 யானைகளால் மனிதர்களுக்கும் - மனிதர்களால் யானைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிவதற்கு முன்பாக, யானைகளின் வாழ்வியலை அறிந்து கொள்வது ஆறறிவு படைத்ததன் அடிப்படை என்பதால், கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் சொந்த வனங்களுக்கு செல்ல முடியாமல் தவித்த யானை கூட்டம், மக்கள் கூட்டத்திடம் பிடிபடுவதற்கு முன் உணர்த்திய வாழ்வியல் தகவல்களை பதிவு செய்வது அவசியம்.

 பெரும் எண்ணிக்கை கொண்ட கூட்டமாக வந்த யானைகள் சிறிது சிறிதாக குறைந்து 8 ஆண்டுகளுக்கு முன் 34 யானைகள் கொண்டதாக சுருங்கியது. ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் உணவு, நீர் தேவைக்காகவும், இயற்கையான தங்கள் இயல்பின்படி இனப்பெருக்கத்துக்காகவும் இந்த யானைகள் வலசை கிளம்பும். யானைகளை பொறுத்தவரையில், ஆண்டுதோறும் அந்த கூட்டத்தின் தலைவனாக ஒரு ஆண் யானை தேர்வு செய்யப்பட்டு, அந்த கூட்டத்தில் உள்ள பெண் யானைகள் அதற்கு உரியவையாக மாறி இனப்பெருக்கம் செய்வது வழக்கம். எனவே ஆண் யானைகளுக்குள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்படுவதுடன், பெண் யானைகளின் நம்பிக்கைக்கும், நேசத்துக்கும் உரிய ஆண் யானை தலைவனாக தேர்ந்தெடுக்கப்படும். கிட்டதட்ட 2-3 டன் எடையுடன், பருத்த உடல் கொண்ட யானைகள், இயல்பாக இனப்பெருக்கம் கொள்வது எளிதான காரியமல்ல. யானைகளின் கூட்டத்தில் உள்ள பெண் யானைகளில் மூத்தது, அந்த கூட்டத்தை வழி நடத்துவதாக ஒரு கருத்து காலாகாலமாக உள்ளது. ஆனால் கூட்டத்தின் வரிசையில் முதலில் செல்லும் அந்த பெண் யானை, தனது கூட்டம் செல்ல வேண்டிய பாதையை நினைவில் வைத்து செல்லுமே தவிர கூட்டத்துக்கு தலைவியாக இருப்பதில்லை. யானைகளின் இயல்புகளை அறிந்தவர்களால் டஸ்கர், டரிக்கி, ஒத்த கொம்பன் என பல பெயர்களில் குறிப்பிடப்படும் ஆண் யானையின் தலைமையில்தான் மற்ற யானைகளும், குட்டிகளும் வலசை செல்லும். தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் யானை எப்போதும் வரிசையாக செல்லும் யானை கூட்டத்தின் கடைசியில் வரும். அந்த யானைகளுக்கு ஆபத்து வரும் நேரங்களில் மட்டும், இந்த டரிக்கி முன்னால் சென்று மற்ற யானைகளை பாதுகாப்பான வனப்பகுதிகளுக்குள் விரட்டி விட்டு, ஆபத்துகளை தனியாக எதிர்கொள்ளும்.

 கூட்டத்தின் தலைவனாக உள்ள ஆண் யானை தங்களை காப்பாற்ற தவறும் நிலையில், அந்த கூட்டத்தில் உள்ள பலசாலியான, புத்திசாலியான வேறொரு ஆண் யானையை தங்கள் தலைவனாக ஏற்று கொண்டு, மற்ற யானைகள் வலசையை தொடரும். இனப்பெருக்கத்துக்கு உகந்த சூழல் அமையும் போதெல்லாம் பெண் யானைகளுடன் தலைவனாக உள்ள ஆண் யானை கூடத் தொடங்கும். வலசை முடிந்து தங்கள் சொந்த வனத்துக்கு திரும்பியதும் பெண் யானை குட்டிகளை ஈனும். வலசை முடிந்து திரும்பும் வரை கூட்டத்தில் உள்ள யானைகளை, குறிப்பாக குட்டிகளை, தனது உயிரை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும் என்பது தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட யானையின் முக்கிய கடமை. அதில் தவறினால், அந்த ஆண் யானை கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, தனித்து விடப்படும். இப்படி தனித்து விடப்படும் யானைகளே, ஒத்தை யானைகள் என்ற பெயரில் மதம் பிடித்து அலைந்து, காட்டை துவம்சம் செய்யும்.

 பொதுவாகவே கூச்ச சுபாவமும், வெட்கமும் கொண்ட காட்டு யானைகள், காட்டை விட்டு வெளிப்படவே அச்சப்படும். வனங்களுக்குள் அவை செல்லும் பாதையில் மனிதர்கள் தென்பட்டால், உடனே அருகில் உள்ள மரங்கள், புதர்கள், பாறைகளுக்கு பின் சென்று மறைந்து கொள்ளும் வழக்கம் கொண்டவை. இதையெல்லாம் மீறி அவை வழக்கத்துக்கு மாறாக வெளிப்படுவதே அபூர்வம். அப்படி வெளிப்படுகிறது எனில் அவற்றின் வாழ்வியல் தன்மையில், பாதையில் தடை, மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

 கடந்த ஆண்டு 9 யானைகள் கொண்ட கூட்டமாக வலசை செல்ல தொடங்கிய யானைகள், ஜவ்வாது மலையை விட்டு இறங்கும்போது, கூட்டத்தின் பாதுகாப்பில் ஓடியாடி விளையாடிய குட்டி யானை ஒன்று, அத்திப்பட்டு என்ற கிராமத்தில் வயல்வெளியை பாதுகாக்க போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதனால் வருத்தத்தில் ஆழ்ந்த யானைகள் குட்டி யானையின் உடலுக்கு பாதுகாப்பாக 3 நாட்கள் உணவருந்தாமல் நின்றன. பிறகு வலசை செல்வதை கைவிட்டு மீண்டும் ஜவ்வாது வனப்பகுதிக்கு திரும்பும் வழியில் இருந்த 3 மின்கம்பங்களை முட்டி தள்ளி சாய்த்தன.

 கடுமையான கோடையில் வறண்டிருந்த வனத்திற்குள் இரண்டு வார கால துக்கம் கழிந்து, மீண்டும் வலசை கிளம்பியபோது, ஜவ்வாது மலை - அத்திப்பட்டு - கலசபாக்கம் - புதுப்பாளையம் - ஆனைமலை என்று இருந்த தங்கள் வழக்கமான பாதையை மாற்றி, மேல்பட்டு - பரமனந்தல் - செங்கம் வழியாக ஜவ்வாது மலையிலிருந்து செங்குத்தான, ஆபத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத மலைப்பாதையில் கீழிறங்கிய யானைகள், பெங்களூர் நெடுஞ்சாலையை கடந்து தண்டராம்பட்டு வனத்தில் புகுந்து ஆனைமலையை சென்று அடைவதற்குள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு வெடிகளும், ராக்கெட்களும், பட்டாசு சரங்களும் அவற்றின் உடலை பதம் பார்த்தன. நீர் நிலைகளின் அருகில் வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்களையும், வயல்வெளிகளை சுற்றி அமைக்கப்பட்ட மின்சார வேலிகளையும் கண்டு காட்டு யானைகள் மிரண்டு ஓடின. அப்படி ஓடிய யானை கூட்டத்தின் வழக்கமான பாதையில் உருவாகியிருந்த குடியிருப்புகளில் ஓரிரு வீடுகள் யானைகளின் கால்களில் சிக்கி சின்னாபின்னமாகின. இதன் எதிரொலியாக காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு என ஊடகங்கள் பெரிதாக கொளுத்தி, தங்களை சுற்றி உருவாக்கிய காட்டுத்தீயை பாவம் அந்த யானைகள் படித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கத்துக்கு மாறாக 20 நாட்களுக்கும் மேல் ஆனைமலையை விட்டு வெளிப்படாமல் தங்கியிருந்த யானைகள் மீண்டும் வலசை கிளம்பி, சேலம் நெடுஞ்சாலையை கடந்து சாத்தனூர் வனத்தை அடைந்து, சில நாட்களுக்கு பிறகு விழுப்புரம் மார்க்கத்தில் அரூர், தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரியை சென்று அடைந்தன.

 பல வருடங்களாக ஆந்திரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற கோபமோ, ஏக்கமோ ஏற்பட்டதால், அங்கிருந்து நான்கு கரச் சாலையை கடக்க முயன்றபோது, வனத்துறை மற்றும் காவல்துறையினரின் கைகளில் இருந்து வெடித்த துப்பாக்கி தோட்டாக்கள் அவற்றின் கால்களில் காயங்களை ஏற்படுத்தின. அந்த இடி சத்தத்தில் இருந்து தப்பி பிழைக்க ஓடிய யானைகளின் கூட்டம் கலைந்து, சேலம் மார்க்கத்தில் வனத்தை தேடி ஒரு கூட்டம், தர்மபுரி மார்க்கத்தில் ஒரு கூட்டம் என இரண்டு பிரிவாக பிரிந்தன. இதில் சேலம் நோக்கி விரைந்த கூட்டத்தில் ஒரு யானை மீது துப்பாக்கி மூலம் பொருத்தப்பட்ட ஜிபிஆர்எஸ் கருவி, அவற்றின் நடமாட்டத்தை தெரிவித்ததால், நின்று நிதானிக்க கூட நேரமில்லாமல், அந்த யானைகள் தொடர்ந்து விரட்டப்பட்டன.

 தடம் தெரியாமல் ஓடிய யானைகள் அரூரை கடந்தபோது, தங்கள் வழித்தடத்தை உணர்ந்து மீண்டும் தர்மபுரிக்கு திரும்பத் தொடங்கின. அங்கு ஏற்கனவே பிரிந்து சென்ற யானைகளை கண்டுபிடித்து சென்றடைந்தபோது, சில நாட்களுக்கு முன் 9 யானைகளாக இருந்த கூட்டம் ஏழாக குறைந்திருந்தது. இதனால், யானைகளை பாதுகாக்க தவறிய, கூட்டத்தின் தலைவனான டரிக்கி யானையை விட்டு பிரிந்த மற்ற 6 யானைகள் மீண்டும் ஜவ்வாது மலைக்கு திரும்பின. இப்படி ஓராண்டுக்கு முன் தனது கூட்டத்தில் இருந்து விரட்டப்பட்டு, தனித்து விடப்பட்ட ஆண் யானை இப்போதும் தர்மபுரி வனத்தில் ஒத்தை யானையாக திரிந்து வருகிறது. மீண்டும் இதனால் தன் கூட்டத்துடன் இணைய முடியாது.

 இந்த ஆண்டு புதிய தலைவனாக தேர்வான டரிக்கி யானை, வலசை கிளம்பியதில் இருந்து, திரும்பும் வரை ஒரே ஒரு மனிதனை கூட தாக்காமல் கவனமாக கூட்டத்தை வழி நடத்தியது. மீறி அருகில் வந்து தாக்க முயன்றவர்களை விரட்டியதுடன் சரி, யாரையும் தாக்கவில்லை. குட்டிகளின் மீது வெடிகள் விழாமல் வழிமாற்றி நடத்தியபோது, தன் மீது விழுந்த வெடிகள் ஏற்படுத்திய பெருங்காயங்கள், கடுமையான வலியை ஏற்படுத்திய நேரங்களில் மட்டும், ஆத்திரமடைந்தது. அப்போதும் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை மட்டும் தாக்கி கொன்று தன் கோபத்தை வெளிப்படுத்தியது. மாலை 6 மணிக்கு மேல் உணவு - நீர் தேடி, காட்டை விட்டு வெளிப்பட்டு அதிகாலையில் திரும்பி காட்டுக்குள் சென்று விடும் தங்கள் வழக்கத்தை கூட மாற்றி கொண்டு, பிற்பகல் 3 மணிக்கு வெளிவந்து, 6 மணிக்கு யானைகள் திரும்பி செல்ல தொடங்கின. சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாளைக்கு சராசரியாக 140 கிலோ உணவும், 30 லிட்டர் தண்ணீரும் குடித்து வந்த இந்த யானைகள், இதற்காக தாங்கள் படும் காயங்களுக்கு பயந்து, இப்போது சராசரியாக 10 கிலோ உணவும், 5 லிட்டர் நீரும் மட்டுமே உட்கொள்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே கூடுதல் உணவு தேடுகின்றன. அப்போது தங்கள் வழியில் குறுக்கிட்டவர்களையும், விரட்டியவர்களையும் கண்டு அஞ்சி, ஒதுங்கி சென்றன.
 
 நெடுஞ்சாலையில் யானைகளை விட பெரிய உருவில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் நவீன ரக துப்பாக்கிகளுடனும், மயக்க மருந்து நிரம்பிய தோட்டாக்களுடனும் காத்திருந்த வேட்டைக்காரர்கள், வாகனங்களில் இருந்த சிறு துவாரங்களில் கண் பதித்திருந்தனர். யானைகள் வழக்கமாக வந்து செல்லும் அந்த பாதையில் கரும்பு கட்டுகளும், கம்பு, கேழ்வரகு, வெல்லம், மரக்கிளைகள் உள்ளிட்ட யானைகளுக்கு பிடித்தமான உணவுகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு உள்ளன. சொகுசு வாகனங்களில் அமர்ந்திருந்த உயரதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட சிலரை யானை வேட்டையை பார்க்க அழைத்து வந்திருந்தனர். தண்டராம்பட்டு முதல் தானிப்பாடி வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அரசு - தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. சுற்றுவட்டாரத்தில் 48 பஞ்சாயத்துகளில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வெளியேறாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

 அதையெல்லாம் மீறி கிட்டதட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் இருந்த குன்றுகள், மின்தடை செய்யப்பட்ட டிரான்ஸ்பாரங்கள், உயர்ந்த கட்டிடங்களில் நின்றபடி நடப்பதை ஆவலுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். உயர்ந்த கோபுரங்களில், குன்றுகளில் ஏராளமான சீருடை பணியாளர்கள் சப்தமெழுப்பிய பொதுமக்களை அதட்டி விட்டு, பைனாகுலரில் வனத்தையே உற்று பார்க்கின்றனர். ஆனைமலை பகுதிக்கு வரும் சாலைகள் 5 கட்டங்களாக முழுவதுமாக சுற்றி வளைக்கப்பட்டு, போக்குவரத்து அடைக்கப்பட்டு இருந்தது. காட்டுக்குள் கும்கி யானைகள் மீதேறி சென்ற பாகர்கள், யானைகளின் நடமாட்டத்தை அவ்வப்போது உயரதிகாரிகளுக்கு வாக்கி டாக்கிகளில் சொன்னபடி இருந்தனர். உயரதிகாரிகள் தவிர்த்து சுமார் 400 வனத்துறை ஊழியர்கள், 1400 காவல்துறையினர், 300 அதிரடி படையினர், 150 வருவாய் துறையினர், 120 பாகர்கள், 6 கும்கி யானைகள், 800 பேர் கொண்ட தன்னார்வலர்கள் ஆகியோர் யானை வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

 மூன்றாவது நாளாக யானைகளின் வேட்டைக்காக காத்து கொண்டுள்ளனர். காட்டுக்குள் சென்று அந்த யானைகளை பிடிக்க வாய்ப்பில்லை என்பதால், அவை காட்டை விட்டு வெளியேறும் அத்தனை வழிகளிலும் இதுபோன்ற ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் மனிதர்களின் தந்திரங்களை உணர்ந்து, யானைகள் தங்கள் பாதைகளை மாற்றி கொள்வதால் அவற்றை பிடிக்க முடியாத நிலை நீடிக்கிறது. கும்கி யானைகளுடன் காட்டுக்குள் செல்லும் பாகர்கள், காட்டு யானைகளை நெருங்கும்போதெல்லாம், டரிக்கி யானை முன்வந்து விரட்டுவதும், பெண் யானை மற்ற யானைகளை அடர்ந்த வனத்துக்குள் அழைத்து சென்று விடுவதும் தொடர்ந்ததால், முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. டரிக்கி யானை மிகவும் சாமர்த்தியமாக மற்ற யானைகளை விரட்டி, வழிநடத்தி காப்பாற்றியது. எனவே இந்தமுறை காட்டை விட்டு வெளியேறும் யானைகளை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பது உயரதிகாரிகளின் கண்டிப்பான உத்தரவு. எனவே வேட்டைக்காரர்களை போலவே யானை பாகர்களுக்கும் நவீன ரக துப்பாக்கிகள் வழங்கி, அவற்றை கையாளும் முறைகளை சொல்லி கொடுத்திருந்தனர்.

 கடந்த வாரம் வலசை முடித்து விழுப்புரம் அருகே கல்வராயன் மலை வழியாக திரும்பி வந்த காட்டு யானைகள் மீண்டும் காட்டுக்குள் சென்று விட முடியாதபடி, 5 குழுவாக வனத்துறை மற்றும் காவல்துறையை சேர்ந்த சுமார் 1500 பேர், மணலூர்பேட்டையில் இருந்து சாலை வழியாகவே சுமார் 40 கிலோமீட்டர் தூரம் விரட்டி வந்தனர். இம்முறை வலசை சென்றதன் சாட்சியாக, அந்த கூட்டத்தில் பெரிதாக இருந்த பெண் யானை கர்ப்பமாகி இருந்தது. அதன் கால் உயரம் கூட இல்லாத குட்டி யானை உட்பட ஐந்து யானைகளும், கர்ப்பிணி யானையை வரிசையின் நடுவில் நிறுத்தி முன்பின்னாக பாதுகாப்பு அளித்து நடந்தன. சாலையை விட்டு இறங்க முயன்ற போதெல்லாம் யானைகளின் அருகில் வெடிகள் வீசப்பட்டன.  சுற்றி நடப்பதை புரிந்து கொள்ள முடியாத யானைகள், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற எண்ணத்தில் பலமாக ஒலித்த முரசுகளின் சத்தத்தில், தார் சாலையில் வரிசையாக நடைபோட்டன. தலையாம்பள்ளம் என்ற இடத்தை நெருங்கியதும் வட்டமாக சிறிது நேரம் நின்று சுற்றுமுற்றும் பார்த்த யானைகள், சட்டென ஓட்டமெடுத்து, அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் சாலையை விட்டு இறங்கி, கரும்பு தோட்டங்களுக்கு இடையில் ஓடி, அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விட்டன. ஆட்களை, வெடிகளை திரட்டி சுற்றி வளைப்பதற்குள், பிரம்மாண்டமான உடல்களுடன் காணாமல் போன யானைகள், இரு தினங்களுக்கு பிறகு சாத்தனூர் அணை அருகே திரிவதாக தகவல் கிடைத்தது. அத்தனை கிராம மக்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு, 50 கிலோமீட்டர் தொலைவை எந்த தடமும் இல்லாமல் எப்படி கடந்தன என்பது அத்தனை பேருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
சாத்தனூர் வனத்தில் இருந்து ஆனைமலை வழியாக செங்கம் சென்று அங்கிருந்து ஜவ்வாது மலைக்கு செல்வது யானைகளின் வழக்கம். எனவே அவற்றின் பாதையில் குறுக்கிடாமல் ஆனை மலைக்கு வரும்போது, மீண்டும் சாலை வழியாகவே செங்கம் வரை ஓட்டி சென்று, அங்குள்ள 14000 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணையில் வைத்து யானைகளை மயக்கமடைய செய்து, கொண்டு செல்வது அதிகாரிகளின் முதல் திட்டம். இதை புரிந்து கொண்டதாலோ என்னவோ, இரவு நேரத்தில் கண்காணிப்பு வளையத்தை மீறி வேறு வழியில் ஆனைமலை வனத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்து வெளியேறாமல் நின்று விட்டதால், அவற்றை வேட்டையாட வந்தவர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. தங்களை பிடிக்கவென்றே போடப்பட்டிருந்த உணவையும் உட்கொள்ளாமல், வறண்ட காடுகளிலும் உணவு கிடைக்காமல் தவித்த யானைகள், வேறு வழியில்லாமல் வெளியேறும் போது, அவற்றை அங்கேயே சுட்டு பிடிக்க புதிய திட்டம் உருவானது. குறிப்பாக கர்ப்பிணியான பெண் யானைக்கு உணவு உட்கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 மாலை 5 மணியளவில் குன்றுகளில் இருந்த உயர் கோபுரங்களின் மீதமர்ந்த ஊழியர்கள் யானைகள் கூட்டம் இருந்த திசையை சுட்டி காட்டியதும், அந்த திசையில் கும்கி யானைகள் விரைந்தன. ஏற்கனவே முந்தைய தினம் இந்த முயற்சியில் ஈடுபட்ட ” கபில் “ என்ற யானை, திடீரென மதம் பிடித்து மற்ற கும்கி யானைகளை தாக்கி விட்டு காட்டுக்குள் தப்பியோடியது. அதனை பின் தொடர்ந்து மடக்க விரைந்த ” சுஜை ” என்ற பெண் யானையும் காட்டுக்குள் காணாமல் போனது. மீதமிருந்த 4 கும்கிகளின் உதவியுடன் தேடிய பாகர்கள், அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கத்தில், இரு யானைகளையும் பிடித்து, கட்டி போட வேண்டி வந்தது.

 எனவே இம்முறை காட்டு யானைகளை அதிகம் நெருங்காமல், தூரத்திலிருந்து பின் தொடர்ந்தனர். யானைகள் காட்டை விட்டு வெளியேறும் பாதையை பாகர்கள் தெரிவித்ததும் துப்பாக்கிகளுடன் வேட்டைக்காரர்கள் தயாராகினர். வரிசையாக காட்டுக்குள் இருந்து வந்த யானைகள், சாலையை ஒட்டி இருந்த மரங்களுக்கு இடையில் நின்றன. முதலில் வெளிப்பட்ட டரிக்கி யானை சாலையில் இருந்த வாகனங்களை பார்த்து விட்டு, மற்ற யானைகளை காட்டுக்குள் விரட்டியது. அவை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்த பிறகு டரிக்கியும், பெண் யானையும் மட்டும் காட்டிலிருந்து வெளிப்பட்டு, வேட்டைக்காரர்கள் வைத்திருந்த உணவை நெருங்கி முகர்ந்து பார்த்தன. சுற்றிலும் வழக்கத்துக்கு மாறான அமைதியை உணர்ந்த ஆண் யானை, பெண் யானையை பின் நோக்கி விரட்டியபடி, தானும் ஓட முயன்றது. ஆனால் அதே நேரத்தில் அடுத்தடுத்து வெளிப்பட்ட தோட்டாக்களில் சில ஆண் யானை மீது தைத்து விட்டது. அலறியபடி ஓடிய ஆண் யானை, பெண் யானையை மறைத்தபடி காட்டுக்குள் விரைந்தது.

 ஒரு மயக்க மருந்தின் வீரியம் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என தெரிவித்த அதிகாரிகள், சில நிமிடங்களில் யானை மயக்கமடையும் என காத்திருந்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு கும்கி யானைகளின் மீதேறிய பாகர்கள், யானைகளை தேடி காட்டுக்குள் சென்றனர். சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த வனத்தில் நின்ற நிலையில் மயக்கமடைந்த ஆண் யானையை சுற்றி நின்ற மற்ற காட்டு யானைகள், கும்கிகளை நெருங்க விடாமல் விரட்டியடித்தன. மயக்க மருந்தின் வீரியம் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும் என கணித்த அதிகாரிகள், கும்கி யானைகளின் பாதுகாப்புடன்     துப்பாக்கி ஏந்திய வீரர்களை அனுப்பி, யானைகளை நோக்கி சுட செய்தனர். ஆண் யானையை அப்படியே விட்டு விட்டு தப்பியோடிய மற்ற யானைகள் அடர்ந்த வனத்தில் மறைந்தன. இவற்றில் ஒரு யானை மலையடிவாரப் பாறைகளுக்கு இடையே சிக்கியது. அதனை மீட்க கடும் போராட்டத்தை நடத்திய யானைகள், காயமடைந்த யானையுடன் தப்பி சென்றன. பெண் யானை மட்டும், அவ்வப்போது மயங்கியிருந்த ஆண் யானை இருந்த பகுதிக்கு வந்து, கும்கிகளை விரட்ட முயன்றது.

கடும் இருட்டில் அடர்ந்த வனத்துக்குள் ஜேசிபிக்களை கொண்டு, மரங்களை வெட்டி பாதை அமைத்த அதிகாரிகள், மயக்கத்தில் இருந்த ஆண் யானையின் இருபுறங்களிலும் இரு கும்கிகளை நிறுத்தி, வேறொரு கும்கியை, அதன் பின்புறம் முட்டச்செய்து, இரவு முழுவதும் நடந்த பெரும் போராட்டத்துக்கு இடையில் லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். இயந்திரங்களின் ஓசை கேட்டு, மரங்களின் மறைவில் தூரவே நின்ற 5 யானைகள் ஒன்றும் செய்ய முடியாமல் அனைத்தையும் அமைதியாக பார்த்து விட்டு விலகி சென்றன. அவற்றில் 4 யானைகள் சிறியவை. மூன்று நாள் போராட்டத்தில் ஒரு யானை பிடிபட்டதற்கு பலதரப்பில் இருந்து கிடைத்த பாரட்டு அளித்த உற்சாகம், ஒரே நாளில் மொத்த யானைகளையும் பிடித்து புதிய சாதனை நிகழ்த்தும் ஆவலை தூண்டியது. பலதுறை அதிகாரிகள் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அன்று பகலிலேயே யானைகளை பிடிக்க திட்டமிட்டனர். 120 பாகர்கள் வழிநடத்திய 4 கும்கிகளின் உதவியுடன், 600 பணியாளர்கள் 4 குழுக்களாக பிரிந்து சென்று காடு முழுவதும் தேடியதில், காயமடைந்த சிறிய யானை மட்டும் பிடிபட்டது. அதற்கு மயக்க மருந்து செலுத்தி பிடித்த பிறகு, சாலையோர மரத்தில் கட்டி வைக்கப்பட்டது.

 காட்டுக்குள்  இனி உணவும், நீருமில்லை - மறைவும், பாதுகாப்புமில்லை என்ற நிலையில் எப்படியும் மாலையில் யானைகள் வெளிவந்து விடும் என்று, அவை வெளியேறக்கூடிய அனைத்து வழிகளிலும் வேட்டைக்காரர்களும், யானை பாகர்களும், பாதுகாப்பு வீரர்களும் வனத்தையே உற்று பார்த்தபடி காத்திருந்தனர். வனத்தை சுற்றியிருந்த சாலைகளில் 10 அடிக்கு 30 பேர் கொண்ட குழு கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் மாலை வெளிச்சம் மறைந்து இருள் சூழ தொடங்கிய 7 மணி கடந்தும் இருண்ட பிறகும் யானைகள் வெளிப்படவில்லை. காவலுக்கு நின்ற கும்கி யானை ஒன்று தும்பிக்கையை காற்றில் வீசியபடி, வித்தியாசமாக குரலெழுப்புவதை உணர்ந்த பாகன், சந்தேகமடைந்து சாலையின் மறுபுறத்தில் இருந்த வயல்வெளியை நோக்கி கும்கியை விரட்டினார். கும்கியை தொடர்ந்த ஏராளமான பணியாளர்கள் பரவலாக பிரிந்து பல ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியை அலசியதில், யானைகளின் கால் சுவடுகளை மட்டுமே கண்டறிய முடிந்தது. அவற்றை பின்பற்றி பெரும்படை விரைந்தது.

 
 ஆங்கிலேயர் அடிமைப்படுத்திய பரந்த பாரதத்தை, அதற்கு முன்பு வெல்ல முயன்ற கிரேக்கர், பாரசீகர், இரானியர், ரோமர், முகலாயர் உட்பட பல தேசத்தை சேர்ந்தவர்கள், பல நூற்றாண்டுகள் போராடியும், முழுமையான பாரதத்தை வெல்ல முடியாமல், அடிமை படுத்த முடியாத மக்கள் நிறைந்த தேசமாக பாரதம் பெருமையுடன் விளங்க காரணம், வேற்று நாட்டு படைகளை எல்லைக்குள் நுழைய விடாமல், மதில் போல நின்று, பாதுகாத்த பாரத தேசத்தவரின் யானைப்படைகள் என்பது வியக்கத்தக்க உண்மை. அப்படிப்பட்ட யானைகளை தெய்வமாக உருவகப்படுத்தி வணங்கி வரும் அதே மக்கள், அவற்றின் வாழ்வை ஒடுக்கி, இன்று ஒட்டுமொத்தமாக யானைகளை அழிக்கும் செயலில் இறங்கி வருவது வேடிக்கையானது.

 அடிக்கு அடி போடப்பட்டு இருந்த காவலையும், பல கிலோமீட்டர் தூரத்துக்கு இரவை - பகலாக்கும் விளக்குகளையும் மீறி காட்டில் இருந்து குட்டிகளுடன் வெளிப்பட்ட பெண் யானை, இருட்டின் துணையுடன் சிறு ஓடை வழியாக சாலையை  கடந்து, காவலுக்கு நின்றிருந்த பெரும் கூட்டத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு, செங்கம் செல்லும் வனப் பாதையை தவிர்த்து, எதிர்திசையில் விழுப்புரம் செல்லும் சாலையை ஒட்டியிருந்த வயல்வெளிகளின் வழியாக, கல்வராயன் மலையை நோக்கி அதி வேகத்தில் தப்பி சென்றது. யானையின் நோக்கத்தை அறிந்து கொண்ட மாவுத்தர்கள் அளித்த தகவலின்படி, சாலை வழியாக விரைந்த வேட்டைக்காரர்கள், யானைகள் மீது மயக்க மருந்துகள் நிரம்பிய தோட்டாக்களை செலுத்தினர். இதில் ஒரு குட்டி யானையின் மீது 2 தோட்டாக்கள் பாய்ந்ததும் அது சிலையானது. நான்கைந்து முறை சுடப்பட்ட மயக்க மருந்தின் வீரியத்தையும் மீறி, மீதமிருந்த இரு குட்டிகளை காலால் உதைத்து விரட்டியபடி விரைந்த பெண் யானையின் பிளிறல் சத்தம், அந்த பகுதியை உறைய செய்தது.

 ஒரு லட்சம் விளக்குகளை ஒரே நேரத்தில் போட்டது போல, திடீரென வானத்தை கீறியபடி, சரம் சரமாக வெளிப்பட்ட மின்னல்கள், எட்டு திக்குகளை பொய்யாக்கி எட்டாயிரம் திக்குகளில் பாய்ந்தன. ஒட்டுமொத்த உலகமும் ஒரே ஒரு மனித தலையாகி, அதற்குள் பலாயிரம் குண்டுகள் வெடித்தது போல எழுந்த அடுத்தடுத்த இடிகளின் ஓசை பல்லாயிரம் காதுகளுக்குள் புகுந்து அடங்கி, ஒடுங்கின. மாலை வரை மேக மூட்டமில்லாமல் இருந்த தெளிந்த வானத்தில் இருந்த ஒட்டுமொத்த நீரும் ஒரே நேரத்தில் கொட்டியதை அந்த இரவில் அனைவரும் கண்ணெதிரில் கண்டு அதிசயமடைந்தனர்.

 
 
 கர்ப்பிணியான அந்த பெண் யானையின் ஓலம் வானத்தை எட்டிய அளவுக்கு, அந்த காட்டில் இருந்தவர்களின் செவிகளை எட்ட முடியாமல், இடிகளின் சத்தத்தில் செவிகள் பழுதடைந்திருந்தன. அடுத்த இரு தோட்டாக்களையும் தாங்கியபடி பல கிலோமீட்டர்களை கடந்த அந்த பெண் யானை, சிறிது நேரத்தில் கண்களில் நீர் வழியும் சிலையாக மாறியது. அதன் கால்களுக்கு இடையில் புகுந்து, அவற்றை அசைக்க முயன்ற இரு குட்டி யானைகளும், தங்கள் முயற்சியில் தோல்வியுற்று, கால்களை ஒட்டியபடி ஓலமிட்டு நின்றன. இந்த ஆனைமலையை உயிரற்றதாக மாற்றி விட்ட பெருமிதம் அரசுக்கு. இனி வரும் காலங்களில் தன்னிச்சையாக சுற்றி திரியும் காட்டு யானைகளை கண்டு குதூகலிக்கவும், கூச்சலிடவும் மனிதர்கள் இல்லை என்பதே நிதர்சனம்.


பிரகாஷ் சுகுமாரன்
prakashvlr@gmail.com

2 comments:

 1. nicely u have written sir............... i feel some pain in my mind when i read out ur version
  by p.veeramani brte ssa veppur block perambalur district

  ReplyDelete
 2. இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விலங்குகளின் வாழ்வியலை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல் செயல்படும் வனத்துறையினரின் செயல்கள் வருத்தத்தை தருகிறது.
  இங்கு கோவையில் எங்கள் பகுதியில் அடிக்கடி யானைகள் நீருக்காகவும் உணவுக்காகவும் இறங்குவது வழக்கம். கடந்த வாரம் ஒற்றை யானை சுந்தராபுரம் அருகில் நான்கு பேரை கொன்றுவிட்டது. அதை டாப் ஸ்லிப் கொண்டு விட்டதாக தகவல் வந்தது.

  அவைகளின் வலசை பாதைகளை நாம் அடைத்துவிட்டு, யானை நாசம் செய்வதாக ஊரெல்லாம் கூக்குரலிடுகிறோம். குளங்களை வீடுகள் கொண்டு நிரப்பிய மனிதர்கள்தானே நாம்.
  அருமையான பதிவு தங்களுடையது.

  ReplyDelete