Friday, July 4, 2014

மழை நீர் சேமித்தல்

-நடராஜன் கல்பட்டு

மழை நீர் சேமித்தல் என்ற உடன் என் நினைவுக்கு வருவது டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற தினசரியில் வந்த ஒரு கார்டூன்,


இது சிரிப்பை வரவழிக்கப் போடப் பட்ட சித்திரமானாலும் இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது.

“வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று”


மழை உலகின் எல்லா உயிர்க்கும் சாகா மருந்து என்றார் வள்ளுவர்.  அந்த சாகா மருந்தினை எந்த அளவுக்கு நாம் சாக்கடை வழியோடி வீணாகாது காத்து உபயோகிக்கிறோம்?

தமிழ் நாட்டின் ஒரு முதன் மந்திரி ஒரு சட்டம் கொண்டு வந்தார்.  ஒவ்வொருவரும் கட்டாயமாக மழை நீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரை படத்தில் காட்டினால் தான் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்திரவிட்டார் அவர்.

அந்த உத்திரவினை ஒரு சதவிகித மக்கள்கூட ஒழுங்காகக் கடை பிடிக்க வில்லை என்பது என் கணிப்பு.  அந்த உத்திரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக சென்னை வாசிகள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள்.  இந்த வேலை செய்து தந்தவர்களின் காட்டில் நல்ல பண மழை பெய்தது.

ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத் தான் சென்றடைந்தது.

மழை நீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல் படலாம்.  ஒன்று மழை நீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது.  மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.

நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிறப்பிப் பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க் குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும்.  இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.  வீட்டில் கிணறு உள்ளவர்கள் இந்தக் குழியின் அடியில் இருந்து ஒரு குழாய் மூலம் நீரைக் கிணற்றுக் குள்ளும் விட்டுக் கொள்ளலாம்.

ஆனால் நடை முறையில் செய்யப்படுவதெல்லாம் ஒரு கண் துடைபு தான்.

இப்படிச் செய்யாமல் நேரடியாகவே மழை நீரைத் தொட்டிகளில் சேமித்து வைக்கலாம்.  எல்லா உபயோகத்திற்காகவும் சேமித்து வைக்க வேண்டும் என்றால் இரு நபர்கள் உள்ள குடும்பத்திற்குக் குறைந்த பட்சம் 1,10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி தேவைப்படும், ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு 150 லிட்டர் நீர் என்ற கணக்கில்.

இது நடை முறையில் சாத்தியமாகாத ஒன்று நமக்கு.  ஆனால் வேறு வழி இல்லை என்னும் போது இதைச் செய்பவர்களும் உண்டு.

வேதாரண்யத்தில் கோடியக்கரையில் ஒரு கலங்கரை விளக்கு.  இது சமுத்திரக் கரையில் உள்ளது.  சுற்றிலும் கடற்கரை மணலும், என்றுமே பசுமையாக இருக்கும் கடற்கரை காடும்.  மணல் வெளியில் ஆங்காங்கே புல் திட்டுகள், தண்ணீர் திட்டுகள்.
ஆனால் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்.  கலங்கரை விளக்கினைப் பராமரிக்க ஒரு ஊழியர்.  அவருக்கு அங்கேயே வீடு.  குளிக்க, குடிக்க, உணவு சமைக்க தண்ணிருக் கெங்கே போவார் அவர்?  அவர் வீட்டை ஒட்டி ஒரு பெரிய திறந்த தொட்டி.
சுமார் 40,000 லிட்டர் அளவு இருக்கும்.  வீட்டுக் கூரையில் விழும் நீர் பூராவும் அந்தத் தொட்டியைச் சென்றடைகிறது.  தொட்டிக் குள்ளே தவளைகளும், மீன்களும் சர்வ சுதந்திரமாக நீந்திக் கொண்டிருக்கின்றன.  அவை இலை என்றால் கொசு வளர்ப்புக்கு உதவும் அந்தத் தொட்டி.

ஆஸ்திரேலியாவில் மலைக் காட்டில் நிலம் வாங்கி வசித்து வந்த ஒரு நண்பரை காணச் சென்றேன்.  அவர் வீட்டிலும் இதே முறையில் நீர் சேமிப்பு ஆனால் மூடிய இரும்புத் தொட்டிகளில்.

நாம் செய்யக் கூடியது இரண்டு.  ஒன்று மழை நீரை நிலத்தடி நீரோடோ, கிணற்று நீரோடோ சேர்ப்பது.  மற்றொன்றும் நமக்கு வருடம் பூராவுக்கும் தேவையான குடி நீர் சேமித்து வைத்தல்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்து எங்கள் வீட்டில் மழை நீர்தான் குடி நீர்.

குடி நீருக்காக மழை நீரை சேமிப்பதில் இரண்டு தொந்திரவுகள் உண்டு.  ஒன்று முதல் மழையில் வரும் நீர் குப்பை கூளத்தோடு இருக்கும்.  அதன் பின் வரும் மழை நீரில் கொசு முட்டை இருக்கும்.  பிடித்து வைத்த பத்தே நாட்களில் தொட்டி பூராவும் கொசுப் புழுக்களாக இருக்கும்.  இதைத் தவிர்க்க மழை நீரை ஒரு பில்டர் தொட்டி வழியே செலுத்திப் பிடிக்க வேண்டும்.  அப்படிப் பட்ட ஒரு பில்டர் தொட்டியின் அமைப்பை கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.

சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஹெச்,டி.பி.இ. டேங்க் போதும்.  வருடம் பூராவும் யார் கையையும் எதிர் பார்க்க வேண்டாம் குடி நீருக்கு.  முதலீடு செய்யும் பணம் மூன்று நான்கு வருடங்களில் திரும்பி விடும் உங்களுக்கு.

(குறிப்பு – 1. வடிகட்டிய நீர் வெளியேரும் குழாய்க்குள்ளே நீர் செல்வதற்கான துளைகள் கீழ்ப்புறம் இருப்பதைக் காணவும்.  இது தப்பித் தவறி சிறு மணல் துகள்கள் மேலிருந்து வந்தாலும் அது குழாய் வழியே வெளியேறி வால்வுகளை பழுதடையச் செய்திடாமல் இருப்பதற்காகவே.

2.  இப்படி சேகரித்த தண்ணீரரை கிண்டியில் உள்ள கிங்க் இன்ஸ்டிட்யூட்டில் பரிசோதனை செய்து பார்த்து இது மிக பரிசுத்தமான குடிநீர் என்று சொல்லியுள்ளனர்.)

பில்டர் தொட்டியினை சுமார் ஏழடி உயரத்தில் அமைத்து விட்டால் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை நேரடியாக ஹெச்டிபியி தொட்டிகளில் சேமித்து வைத்திடலாம்.


நடராஜன் கல்பட்டு
knn1929@gmail.com

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……
http://kalpattaarpakkangkal.blogspot.in/No comments:

Post a Comment