Thursday, January 10, 2019

ஓட்டு

—  ருத்ரா இ.பரமசிவன்


உன் நிறம் என்ன?
உன் திறம் என்ன?
அதர்மத்தை வெட்டும்போது
நீ
கூர்மழுங்கிப் போகிறாய்.
தர்மத்தை நிலை நாட்ட‌
வந்தேன் என்கிறாய்.
நிலை தடுமாறி நிற்கிறாய்.
நீதியை நிறுவ‌
வந்தேன் என்கிறாய்.
பார்.
இங்கே தராசு தட்டுகளே
களவு போய்விட்டனவே.
யானையை
தடவிப்பார்த்தவர்களைப் போலவே
நாங்களும் உன்னைத்
தடவிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உன் முகம் எங்கே?
உன் கண்கள் எங்கே?
எங்கள் விழியின்றி
உந்தன் விழி தேடுகிறோம்.
நீ தட்டுப்படுவாய் என்று
கைகளை
காற்றில் அளைகின்றோம்.
நீ கனவா? இல்லை நனவா?
தெரியவில்லை.
இருந்தாலும்
போடுகிறோம்.போடுகிறோம்.
உன்னைப் போட்டுக்கொண்டே இருக்கிறோம்.
போட்டுப் போட்டுக்
குவித்துக்கொண்டேயிருக்கிறோம்.
ஏன்? எதற்கு? எங்கே? எனும்
கேள்விகளே இங்கு மிச்சம்.




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





குருச்சேத்திரப் போரில் !

——   சி. ஜெயபாரதன்




செக்கு மாடுகளை வாங்கித்
தேரில் மாட்டினேன் !
திக்குத் தெரியாமல்
வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி
வந்தது என் தேர்
கொடை ராட்டினம் போல் !
தலை சுற்றி வீழ்ந்தேன் !

கீதையை உபதேசிக்க
தேரோட்டி கிடைக்க வில்லை !
திணறித் தேடினேன்
மனமுடைந்து !
சினமுற்று விரட்டிய எனது
செக்கு மாடுகளை
எண்ணிக்
கண்ணீர் விடுகிறேன் !

இப்போது செக்கு மாடுகளைப்
பயிற்றுவிக்க
குப்பை வண்டிக் காரனை
நியமித்தேன் !
போருக்குப் போகையில்
துடித்தேன் !
நேராகப் போனது
தேரானது,
நின்று நின்று !



தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)



கோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா

——    துரை.சுந்தரம்


முன்னுரை:
கோவை அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் எனக்கு அக்கல்லூரியுடன் தொடர்பு உண்டு. குறிப்பாக வரலாற்றுத்துறையுடன். முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள், வரலாற்றுத் தொடர்புள்ள இடங்களுக்குச் செல்லுதல் மூலம் அவர்கள் நூற்சூழலோடு களச்சூழல் உணர்வையும் பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று பேராசிரியர்களிடம் உரையாடுவது வழக்கம். அவ்வாறான களப்பயணங்கள் ஏனோ பெரும்பாலும் நிகழுவதில்லை. கல்லூரிகளின் நிருவாக முறையில் ஏதேனும் நடைமுறை இடர்ப்பாடுகள் இருக்கக் கூடும். எனவே, அண்மையில், அக்கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜூலியானா அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, கோவையின் சுற்றுப்பகுதியில் வரலாற்றுத் தடயங்கள் உள்ள ஒரு சில இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம்; நீங்களும் உடன் வாருங்கள் என அழைத்தபோது மகிழ்ச்சியுற்றேன்.

தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம்:
மேற்படிப் பயணத்தில் பார்க்கவேண்டிய இடங்களைத் தெரிவு செய்து, வழிகாட்டி அழைத்துப்போனது  கோவையில் உள்ள தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம் என்னும் ஓர் அமைப்பு. இது, தமிழக மரபிலும், கோவை வரலாற்றிலும் ஆர்வமுள்ள ஓர் இளைஞர் அணி.  அண்மையில் வரலாற்றுத் தேடல் மூலம் சில தொல்லியல் கண்டுபிடிப்புகளை இவர்கள் இனம் கண்டுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை இது போன்ற பயணங்களில் ஈடுபடுத்தி வரலாறு, தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும், அறிமுக அறிவையும் வழங்கி வருகின்றனர்.

பயணம் தொடங்கியது:
பயண நாளன்று காலை, அரசு கலைக்கல்லூரியிலிருந்து ஒரு சிற்றுந்தில் புறப்பட்டோம். இருபது மாணவர்களுடன் பேராசிரியரும் நானும்.  பார்வையிடவேண்டிய இடங்களில் முதலாவது உக்கடம் பகுதியில் அமைந்துள்ள புலிகுத்திக்கல். உக்கடம் புறவழிச்சாலையோரத்தில் இந்தப்புலிகுத்திக்கல் அமைந்துள்ளது.  சிற்றுந்து அந்த இடத்தை அணுகும் முன்பே அங்கு நமது மரபுசார் சங்கத்து இளைஞர் அணி வந்திருந்தது. நான்கு பேர் கொண்ட அணி. இரு சக்கர வண்டிகள் இரண்டு. அமைப்பின் பொறுப்பில் செயல்படும் விஜயகுமார், ஆனந்தகுமார் ஆகிய இருவர்; மற்றுமிருவர் உறுப்பினர்.  அனைவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளையர். விடுமுறை நாள்களில் வரலாற்றைத் தேடும் பயணர்கள்.

உக்கடம் புலிகுத்திக்கல்:
கொங்குநாட்டின் கோவைப்பகுதி பண்டைய நாள்களில், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை அரணாகக் கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத்தால், கால்நடை வளர்ப்புச் சமுதாயமே மேலோங்கியிருந்தது. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட காலங்களில், கால்நடைகளைக் காத்தல் பெரும்பணியாயிருந்தது. கால்நடைகளைக் கவர்வதிலும், அவற்றைக் காத்தலிலும் வீரர்கள் போரிடுதல் இயல்பான சமூக நிகழ்வாயிருந்தது. அது போலவே, கால்நடைகளைக் காட்டு விலங்குகளினின்றும் காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குளைக் கொல்லுதலும், சண்டையின்போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்து வழிபடுதல் நாட்டார் மரபு.

உக்கடம் -புலிகுத்திக்கல் கோயில்

இவ்வகை நடுகற்கள், கோவைப்பகுதியில் புலிகுத்திக்கல் என்னும் பெயரில் வழங்கும். இடைக்காலக் கொங்குச் சோழரின் ஆட்சியின் கீழ் கொங்குப்பகுதி வந்த பின்னர் வேளாண்மை செழிப்புற்றது. கொங்குச் சோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி முன்னிலையில் ஒரு நகரப்பகுதியாக இருந்திருக்கவில்லை. கோவைக்கருகில் அமைந்துள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது. கொங்குநாட்டின் இருபத்து நாலு நாட்டுப்பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது. கோவைப்பகுதி, காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கால்நடை வளர்ப்புப் பகுதியாகவும் இருந்துள்ளது. பின்னரே, கொங்குச்சோழர்காலக் கல்வெட்டுகளின்படி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கோவன்புத்தூர் என்று புதியதாக ஓர் ஊர் அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது. காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும், காடுகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே, மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாகும்.

புலிகுத்திக்கல் சிற்பம்-முழுத்தோற்றம்

அண்மைத் தோற்றம்

உக்கடம் நடுகல் ”மதுரை வீரன் சாமி” என்னும் பெயரில் வழிபடப்பட்டுவருகிறது. ஒரு வகையில், வழிபாடு காரணமாகவே இந்த நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது எனலாம்.

ஒத்தக்கால் மண்டபம்:
அடுத்து நாங்கள் சென்ற இடம். ஒத்தக்கால் மண்டபம். கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். நூறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பல மண்டபங்கள் இருக்கையில், இங்கே, ஒற்றைக்கால் கொண்ட மண்டபம் எவ்வாறு இருக்கமுடியும்? ஊர்ப்பெயருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும். இங்குள்ள நவகோடி நாராயணப் பெருமாள் கோயில்தான் எங்கள் வரலாற்றிலக்கு. கோயிலைச் சுற்றியுள்ள இடம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த (MEGA LITHIC PERIOD) ஓரிடம். இவ்வகை இடங்கள் “சாம்பல் மேடு” என்று மக்கள் வழக்காற்றில் வழங்கும். இங்கு, பழங்கால மக்களின் வாழ்விடமும், ஈமக்காடும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக, முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்புச் சிறு பானைகள் ஆகியவற்றின் துண்டுப்பகுதிகள் எச்சங்களாக மண்மேடுகளில் காணப்படுகின்றன.  இங்குள்ள மற்றுமொரு சிறப்பு, இம்மண்மேடுகளில் உள்ள மண்ணைக் கொண்டே கோட்டைச் சுவர் போல எழுப்பப்பட்ட, இடிந்த நிலையில் உள்ள சுவர்ப்பகுதிகள். இச்சுவர், திப்பு சுல்தான் காலத்தில் ஏதோ ஒரு பாதுகாப்புக் கருதி இப்பகுதி மக்கள் எழுப்பியது எனக் கருதப்படுகிறது. சுவர்க் கட்டுமானத்தின் சரியான பின்னணிக்காரணம்  தெரியவில்லை.

ஒத்தக்கால் மண்டபம் - பெருமாள் கோயில்-முன்புறத்தோற்றம்

சாம்பல் மேடும் கோட்டை மண் சுவரும்

இங்குள்ள பெருமாள் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட பல பலகைக் கற்கள் முன்பு இருந்துள்ளன.  தற்போது இரண்டு கல்வெட்டுப்பலகைகளைக் கோயில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். தொல்லியல் துறையினர் வெளியிட்ட கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் இவை பதிக்கப்படவில்லை. ஆனால், பேராசிரியர் அவிநாசி மா.கணேசன் அவர்கள், முனைவர் சூலூர் இரா.ஜெகதீசன் அவர்களோடு இணைந்து வெளியிட்ட ”கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்”  என்னும் நூலில் ஒரே ஒரு கல்வெட்டு பதிவாகியுள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்துள்ளது; கல்வெட்டில் அரசர் காலக் குறிப்பு இல்லை; கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற சக ஆண்டும், தமிழ் ஆண்டும் பொருந்தி வரவில்லை என்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எங்களது பயணத்தில் பார்த்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதாலும், இக்கல்வெட்டின் பாடம் தொல்லியல் துறையின் நூலில் இடம்பெறாததாலும் அதன் பாடத்தையும் செய்தியையும் இங்கு தந்துள்ளேன்.

ஒத்தக்கால் மண்டபம் பெருமாள் கோயிலின் கல்வெட்டின் பாடம்:
1     ஸ்வஸ்திஸ்ரீ செகாப்த்தம் 1410
2     1410 இதன்மேல் செ
3     ல்லாய் நின்ற பார்த்திப
4     வருஷம் அற்பசி மாதம்
5     15 நவகோடி நாரா
6     யணப் பெருமாளுக்கு அ
7     ன பத்த வதொ.................
8     ருமம் ..........மை மு.........ஆளுக்கட்டி
9     ..................விட்டபடிக்கு வழக்கப்பட்டு
10     தங்காரிக்கன் சந்தனம்
11     12 மா பாக்குமிழகும் அரை மா ..........
12     ப்பறுசே வெல்லம் மாகாணி எ
13     பேற்பட்ட தீர்வையில்
14     ட்டன் அரை மாவரை
15     யால் கூடி வருகையில் விரப
16     .............யக் கரையல்வர்களு
17     ..............ம்மக் கையிலாசப்
18     ..................ல்ல பட
19     நாயகன் ...........யந்கட
20     காயிந
21     மாதநட்டார் மாந்தான்
22     மம் பாபால .........நடத்த வரு
23     வதாகளு செல் பாகம் .....முட்
24     டாமல்த் தேவக் காரியத்தை 
25     விலக்கினவன் கெங்கை கரையில்


கல்வெட்டின் தோற்றங்கள்

நவகோடி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காகக் கொடை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுச் செய்தி. பாக்கு, மிளகு, வெல்லம், சந்தனம் ஆகியவை கொடைப்பொருள்கள். கல்வெட்டில் குறிக்கப்பெறும் காலக் கணக்கு சரியில்லை. சக ஆண்டு 1410-க்கு இணையான ஆங்கில ஆண்டு 1488. பார்த்திப ஆண்டு தொடங்குவது 1405-இல். இரண்டும் பொருந்திவரவில்லை. நேரில் கல்வெட்டைப் பார்க்கும்போது 12-ஆவது வரியில் உள்ள “வெல்லம்” என்னும் சொல் தெளிவாகத் தெரிந்தது. ஒளிப்படத்தைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தாலும் கல்வெட்டைப் படிக்க இயலவில்லை. வரி 22-இல் வருகின்ற “பாபால”  என்ற சொல் கணினியில் “பரிபால”  என்பதாகப் புலப்பட்டது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட தன்மம் காக்கப்படவேண்டும் என்பதைக் குறிக்கப் “பரிபாலனம்”  என்னும் வடசொல் எழுதப்படும். எனவே “பாபால”  என்பது “பரிபால(னம்)”  என்பதாகவே இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் (25-ஆவது வரியில்) உள்ள “கெங்கை” என்னும் சொல், தன்மத்துக்கு அழிவு செய்வோர் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்பதைக் குறித்து வருகின்ற கல்வெட்டுத் தொடரின் ஒரு பகுதியாகும்.

குமுட்டிபதிப் பாறை ஓவியம்:
அடுத்து நாங்கள் செல்லவேண்டிய இடம் குமுட்டிபதி. தொல்லியல் தடயங்களில் ஒன்றான பாறை ஓவியங்கள் அமைந்த பகுதி. ஒத்தக்கால் மண்டபத்திலிருந்து பிரியும் சாலை ஒன்று அவ்வூருக்குச் செல்கிறது. சிறிது தொலைவு சென்றதுமே, சாலையோரத்தில், மீண்டும் ஒரு புலிகுத்திக்கல் கண்டோம். மேலும் சற்றுத்தொலைவு சென்றதுமே சாலையோரத்தில் கருப்பராயன் கோயில் வீதி முனையில், எழுத்துகள் உள்ள ஒரு கல்லைப் பார்த்தோம். சிற்றுந்திலிருந்து இறங்கி நெருங்கிப் பார்க்கையில், எழுத்துகள் மிகத் தேய்ந்துபோன நிலையில் கல்வெட்டு இருந்ததை அறிந்தோம். மூன்று வரிகள் இருந்தன. ”குமரன்” , “முருகன்”  போன்ற சொற்கள் காணப்பட்டன. மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு. அருகில் ஊர் மக்களும் சூழ்ந்துகொண்டு கல்வெட்டுச் செய்தியை அறியும் ஆவலைத்தெரிவித்தார்கள். ஆனால், கல்வெட்டு படிக்கும்படியாயில்லை என்பதில் அனைவர்க்குமே ஏமாற்றம்தான். மேலே பயணம் தொடர்ந்தது. குமுட்டிபதி ஊரை அடைந்து, அங்கிருக்கும் குன்றை நெருங்கினோம். குன்றின் அடிவாரத்திலேயே தரைப்பகுதியிலிருந்து சற்றே பாறையின்மீது ஏறியவுடன், எதிரே பெரும் சுவர் போலச் சரிந்த ஒரு பாறைப்பரப்பு. பாறைப்பரப்பு முடியும் இடத்தில் பாறை கவிந்து இயற்கையாக ஒரு பெரிய குகைத்தளத்தை உருவாக்கியிருந்ததைக் கண்டோம். குகைக்குள் கூரைப்பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு காலகட்டத்தில் இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியலாளரின் கணிப்பு. ஓவியங்கள், வெள்ளை நிறக்கோடுகளால் அமைந்தவை. White Ochre என ஆங்கிலத்தில் சொல்வார்கள். செங்காவி வண்ணத்திலும் பாறை ஓவியங்கள் வரையப்படுவது உண்டு. குமுட்டிபதியில் உள்ள ஓவியங்களில் ஒரு யானை உருவமும், தேர் போன்ற ஒரு உருவமும் காணப்படுகின்றன.  தேரைப் பலர் கூடி இழுத்துச் செல்வதைப்போல் ஓவியம் காணப்படுகிறது. அருகிலேயே உள்ள மற்றொரு பாறையில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் எச்சங்களும் கோவை நகரின் அருகிலேயே இருப்பது சிறப்பு.

குமுட்டிபதிப் பாறை ஓவியங்களைப் பார்த்து முடியும்போது பகலுணவு நேரம் நெருங்கியிருந்தது. அன்று முழுதுமே கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. களைப்போடு பசியும் சேர்ந்து கொண்டபோது, கல்லூரிப் பேராசிரியரின் ஏற்பாட்டில் சுவையான உணவு உண்டதும் களைப்பு கலைந்து புத்துணர்வோடு தொல்லியல் பயணத்தின் அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம். இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மரபு சார் சங்கத்து இளைஞர்கள், கடும் வெயிலிலும் இரு சக்கர வண்டிகளில் தொடர்ந்து சிற்றுந்துக்கு வழிகாட்டியவாறே பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பதுதான் அது. வரலாற்றின்மீது உள்ள ஆர்வமும், சேவைப்பண்பும்.

சுண்டக்காமுத்தூர்-நாயக்கர்காலக் கிணறு:
குமுட்டிபதியை அடுத்து நாங்கள் சென்ற இடம் சுண்டக்காமுத்தூர். குமுட்டிபதியிலிருந்து ஒரு குறுக்குச்சாலை வழியே கோவைப்புதூரைக் கடந்ததும் வருகின்ற ஊர். அங்கே, “பிளேக்” மாரியம்மன் கோயிலின் பின்புறம் ஒரு பழங்காலக் கிணறு. இக்கிணறு, நீண்ட காலமாகத் தூர்ந்து போய் மண்ணும், புதர்களும் மூடிய நிலையில் இருந்துள்ளது. நமது மரபுச் சங்கத்து இளைஞர் குழு, நீண்ட உழைப்புக்குப்பின்னர் இக்கிணற்றைத் தூர் நீக்கிப் பலரும் பார்த்து மகிழுமாறு வெளிப்படுத்தியுள்ளார்கள். இது போன்ற தன்னார்வலரின் பணிகளாலேயே தொல்லியல் தடயங்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஊத்துக்குளியில், நாயக்கர் காலப் படிக்கிணறு ஒன்று ”இயல் வாகை” என்னும் இளைஞர் அமைப்பினரால் இவ்வாறு வெளிப்பட்டதும், அதைச் சென்று பார்த்ததும் நினைவுக்கு வந்தது. 

நாயக்கர் காலக் கிணறு

மீன் - புடைப்புச் சிற்பமும், வரிச் செதுக்கலும்

தோரணச் சிற்பம்-மனித முகத்துடன்

தலை உடைந்த நந்திச் சிற்பம் 

சுண்டக்காமுத்தூர் கிணறும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. சதுரமாக வெட்டப்பட்ட ஆழமான கிணற்றுப் பகுதியின் சுற்றுச் சுவரும், கிணற்றுப்பகுதிக்குக் கீழிறங்கிச் செல்லும் படிகளைக்கொண்ட குறுகலான நீள் வழியும் அதன் சுற்றுச் சுவரும் ஆகிய அனைத்தும் கல் கட்டுமானங்கள். கற்கள் செம்மையான நிறத்தில் அமைந்து அழகான தோற்றத்தை அளித்தன. கட்டுமானச் சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே புடைப்புச் சிற்பங்கள். அவற்றில் பெரும்பாலானவை மீன் உருவங்கள். வளமைச் சின்னங்களைக் குறிப்பதான குறியீடாக மீன் உருவங்களைப் படைப்பது மரபு. சுவர்ப்பகுதியின் மேல் பகுதியில் வரி வரியாகச் செதுக்கல்கள். இந்தச் செதுக்கல்களைப் பல மண்டபங்களில் காணலாம். கிணற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில் உடைந்த நிலையில் ஒரு சிறிய நந்திசிலையும், கோயில்களில் காணப்படும் கோட்டம் என்னும் பகுதியில் அமைந்த ஒரு தோரணச் சிற்பக்கல்லும் இருந்தன. இத்தோரணச் சிற்பத்தில் பேரூர்க் கோயிலில் உள்ளதுபோல மனித முகம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நந்தியும், தோரணமும், வேறெங்கோ இருந்த ஒரு கோயிலின் துண்டுச் சிற்பங்களாக இருக்கக்கூடும்.

வேடபட்டிக் குளம்:
சுண்டக்காமுத்தூர் நாயக்கர்காலக் கிணற்றைப் பார்த்துவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் வேடபட்டிக் குளம். இது கோவைக்கருகிலுள்ள பெரிய குளங்களுள் ஒன்று. இதன் ஒரு பகுதி கோளராம்பதிக் குளம் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. குளம் முழுதும் கருவேல மரங்களின் தொகுப்பு. ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் மண்மேடு. மற்ற இடங்கள் யாவும் பள்ளம். கடந்த சில மாதங்களாகக் குளத்தில் தூர் எடுக்கப்பட்டு, அதன் காரணமாகக் குவிந்த மண் முழுதும் குளத்தின் கரையிலேயே கொட்டப்பட்டதன் மூலம் குளத்தின் கரை நன்கு உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது.  மரங்களின் அண்மையைத் தவிர்த்து மற்ற இடங்களில் மண்ணைத் தோண்டியதாலேயே பள்ளமும் மேடும். குளத்துள் இறங்கிச் சற்று நடந்ததுமே, மரபுச் சங்க இளைஞர்குழு ஓரிடத்தில் எங்களை நிறுத்தி, ஒரு மரத்தடி மண்மேட்டைக் காண்பித்தார்கள். அங்கே, மண் தாழிகளின் சிறு சிறு துண்டு ஓடுகள். அவை தடித்துக் காணப்பட்டன. தொல்லியல் எச்சங்களான முதுமக்கள் தாழிகளின் ஓடுகளே அவை. இந்த இடத்தில்தான், அண்மையில் இந்த மரபு சார் சங்கக் குழுவினர், தொல்லெழுத்தான ‘தமிழ் பிராமி” எழுத்துப் பொறிப்புக் கொண்ட தாழிப்பகுதியைக் கண்டெடுத்தார்கள். கொங்குப்பகுதியில் கிடைத்த தமிழ் பிராமிப் பொறிப்புகளில் இக்கண்டுபிடிப்பு சிறப்புக்குரியது. இதற்கு முன்னர் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளில் ஆள் ஒருவரின் பெயர் மட்டுமே காணப்பெறும். ஆனால், இங்கே கிடைத்த தாழித்துண்டில்,  “ஈமத்தாழி”   என்னும் சொல்லே இருந்தமை இதற்கு முன்னர் கண்டிராத புதுமை. இந்தச் சொல்லைத் தொடர்ந்து “ன”  என்னும் எழுத்தும் உள்ளது. இப்பகுதியை முறையாகத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவேண்டும். தொல்லியல் ஆய்வுகளுக்கு ஏனோ அரசு முன்னுரிமை அளிப்பதில்லை.

வேடபட்டிக் குளம்

மண்மேட்டில் தாழி புதைந்திருந்த இடம்

”ஈமத்தாழி” - பொறிப்பு

வேடபட்டித் தூம்பு (மதகு):
வேடபட்டிக் குளத்தின் இன்னொரு பகுதியில், அண்மையில் நமது மரபுசார் சங்கக் குழுவினர் கண்டுபிடித்த ஒரு மதகைப் (தூம்பு) பார்வையிட்டோம். தென் மாவட்டங்களில் மதகு, தூம்பு, கலிங்கு என்னும் பெயர்களில் வழங்கும் நீர்ப்பாசன அமைப்புகளின் எண்ணிக்கை மிகுதி. கோவைப்பகுதியில் மதகுகளின் எண்ணிக்கை குறைவே.  எனவே, வேடபட்டிக் குளத்தில் மதகு கண்டுபிடிக்கப்பட்டதும் சிறப்பானதே. இந்த மதகில் சில புடைப்புச் சிற்பங்கள் உள்ளமை, வழக்கமாகக் காணும் மதகுகளினின்றும் இதை வேறுபடுத்துகிறது. ஒட்டகம், பாண்டியரின் இலச்சினை, கத்தி ஆகிய மூன்று சிறு புடைப்புச் சிற்பங்கள் ஒருசேர இதில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று வேறுபட்ட பொருள்கள். ஒட்டகம், ஒரு சில கோயில்களில் காணப்படும் வளமைச் சின்னங்களான மீன், முதலை ஆகியவற்றோடு தொடர்புடையது. எனவே, ஒட்டகம் வளமைச் சின்னத்தைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. ஒட்டகம், அரேபிய வணிகர்களோடு தொடர்புடையது எனக் கொள்வோமானால் அரேபிய வணிகர்கள் இந்த மதகினை அமைப்பதில் பங்கேற்றனர் எனலாம். பாண்டியரின் மீன் இலச்சினை உள்ளதால் 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டை ஆண்ட கொங்குப் பாண்டியரோடு இந்த மதகு தொடர்புடையது எனலாம்.

தூம்பு

இவற்றுக்கு முற்றிலும் வேறான கத்தியின் உருவம் எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை. இது ஆய்வுக்குரியது. மதகைக் கண்டுபிடித்த மரபுச் சங்கத்தவரான விஜயகுமார், இது ஒரு “ஆண்டெனா”  (ANTENNA) கத்தி என்று கருதுவதாக நம்மிடம் கூறினார். “ஆண்டெனா”  (ANTENNA) கத்தி என்பது பின்-வெண்கலக் காலக் கருவி என்று அறிகிறோம். 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த HALLSTATT காலத்ததான ஒரு “ஆண்டெனா”  கத்தியின் படத்தையும், இந்திய “ஆண்டெனா”  கத்தி என்று ஒரு செப்புக் கத்தியின் படத்தையும் இங்கே பார்க்க. பின்னதன் காலம் கி.மு.1500-500 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படங்கள் யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வேடபட்டி மதகுச் சிற்பத்திலுள்ள கத்தி, “ஆண்டெனா” வகைக் கத்தியா என்பது ஆய்வுக்குரியது. இம்மதகைத் தொல்லியல் துறையினர் வந்து பார்வையிட்டுள்ளனர் என அறிகிறோம். அத்துறையின் ஆய்வு முடிவுகள் என்ன என்பது தெரியவில்லை.

”ஆண்டெனா”  கத்தி

ஆண்டெனா கத்தி - விக்கிப்பீடியா

ஆண்டெனா கத்தி-இந்தியா-கி.மு.1500-500
 
                                                  
பாண்டியர் இலச்சினை

ஒட்டகம்

குளத்துள் அனைவரும் குழுமி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் வழக்கமாகத் தங்களின் இயல்புக் கல்விச் சூழலில், வரலாற்றுப் பாடம் என்னும் வலைப்பின்னலில் நிலைத்திருப்பர் எனலாம். அந்தச் சூழலிலிருந்து அவர்கள் வெளியே வந்து மகிழ்ந்ததை இப்பயணத்தின்போது நேரில் கண்டேன். வரலாற்றறிவும் சிறிது பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில், கோவை மரபு சார் ஆர்வலர் சங்கத்தவர் பெரும் தூண்டுகோலாக இருந்தனர் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில் மாணவர்கள் வரலாற்றுப் பயணம் பற்றிய தங்கள் கருத்துகளை விழியப் பதிவு செய்தமையே சான்று. வேடபட்டிக் குளத்துடன், மரபுச் சங்கத்தினர் தம் பங்களிப்பை முடித்துக்கொண்டு விடைபெற்றனர். இதுபோன்ற களப்பணி தொடரவேண்டும் என்பதான எண்ண முடிவு இரு சாரரிடமும் ஏற்பட்டது.

பயணத்தின் இறுதியில் பேரூர்க் கோயில்:
பயணத்தின் இறுதிக்கட்டத்தில், பேரூர்க் கோயிலைப் பார்த்து ஓரிரு கல்வெட்டுகளைக் கண்டறிதலும் ஒரு நிகழ்வாக இருந்தது. கோயிலின் தென்புறச் சுவர்களில் ஒன்றிரண்டு கல்வெட்டுகளைப் படித்துக்காண்பித்து சில எழுத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். வடபுறச் சுவரில், நீர்மேலாண்மை பற்றிய சிறப்பு வாய்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது. அதை, ஆர்வமுள்ள சில மாணவர்க்குக் காண்பித்துச் செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்.

தேவி சிறை என்றோர் அணை:
13-ஆம் நூற்றாண்டில், கி.பி. 1224-ஆம் ஆண்டு. கொங்குச் சோழன் வீரராசேந்திரன் கொங்குநாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அது அவனது பதினேழாவது ஆட்சியாண்டு. நொய்யல் நீர் பெருகி வளமாக ஓடிக்கொண்டிருந்ததில் வியப்பில்லை. நொய்யலின் குறுக்கே ஏற்கெனவே கோளூர் அணை என்றோர் அணை இருக்கின்றது. இந்நிலையில், வேளாண்மைத் தேவைக்கென இன்னொரு அணை தேவைப்பட்டதன் காரணமாகத் தேவிசிறை என்னும் பெயரில் புதியதோர் அணை கட்டப்பெற்றது. இதுவும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அரசன் ஆணையிட்ட பின்னரே நிகழ்ந்தது. புதிய அணை, கோளூர் அணைப்பகுதியின் மேற்பகுதியில் கட்டப்பெற்றதால் தேவி சிறை அணை மேட்டிலும், கோளூர் அணை பள்ளத்திலும் அமைந்தன. தேவி சிறை அணையில் நீர் தேக்கினால் கோளூர் அணைக்கு நீர் வராது. ஆனால், அரசன் தன் ஆணையில், கோளூரணைக்குச் சேதம் வாராதபடிப் புது அணை கட்டப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றான். தேவி சிறையில் நீரைத் தேக்கும்போது கீழுள்ள கோளூர் அணை நீர் நிரம்பிய பின்னரே தேக்கவேண்டும் என்று அரசன் ஆணையிடுகிறான். நீர் மேலாண்மையில் மன்னர் காலத்தில் இருந்த அறமும், அறிவும், அக்கறையும் தற்காலத்தே சற்றும் கற்பனையிலும் காண இயலா.

கல்வெட்டின் பொன் வரிகள்:      (க.வெ.எண்: 116/2004-கோவை மா. கல்வெட்டுகள்)
1   ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை
2   கொண்டான் பேரூர் நாட்டு புகலிடங் குடுத்த சோ
3   ழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாற்கும்
4   பேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா
5   வது  இவர்கள் தங்களூற்கு நீர்த்தட்டப் பெறவே
6   நமக்கு வந்தறிவித்தமையிலிவர்கள் தங்களூரெல்
7   லையில் தேவி சிறையென்கிற அணையடைத்து வாய்க்காலும்
8   வெட்டிக் கோளூரணைக்குச் சேதம் வாராதபடி யவ்வணைக்கு
9   ப்பின்பாக நீர் விட்டுக்கொள்ளப்பெறுவார்களாகவும்........

முடிவுரை:
பேரூர்க் கோயிலும் கல்வெட்டும் பார்த்த, படித்த நல்ல நினைவுகளோடு பயணம் நிறைவு பெற்றது. மாணவப் பருவத்தை நினைவூட்டும் வகையில், நான் பயின்ற கல்லூரியின் நிகழ்காலப் பேராசிரியர், மாணவர் ஆகியோருடன் பயணம் நிகழ்ந்தமை மறக்கவியலாப் பொழுது. 









தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.








முகங்களின் ‘ஒரு ஊர்ல…!?’ நாடகப்பதிவு

  கோ. பழனி




வண்ணங்கள் குழைத்து
வானில் ‘வில்’ தீட்ட எத்தனிக்கிறோம்
எங்கள் கைகள் முடக்கப்படுகின்றன.

குதித்து குதித்து குதித்து
எல்லைத் தாண்டி பறக்க
முயல்கிறோம் – எங்கள்
கால்கள் தறிக்கப்படுகின்றன.

‘ஓ’ வென்று ஓசையிட்டு வீதிதொரும்
ஓட்டமெடுக்கும் எங்களுக்கு
‘இந்த சனியனுங்க ஏன் இப்படிக் கத்துதுங்க….!?’
என்கிற எதிர்க்குரல்கள்
கடிவாளங்கள் இடுகின்றன.

ஏன் இப்படி? ஆடிப்பாடி, ஓடி, மண்ணில் உருண்டு புரண்டு, கதை கேட்டு, கதை பேசி, சண்டையிட்டு, சுவற்றில் வரைந்து, பொம்மைகள் செய்து விளையாடி, கூச்சலிட்டு கொண்டாட்டத்தோடும் குதூகலத்தோடும் நேரம் மறந்து, பெரிய புத்தி மனிதர் இல்லாத வனங்களில் பறவைகளோடு பறவைகளாய், மரங்களோடு மரங்களாய், செடிகளோடு செடிகளாய் எங்கள் உலகில் வாழ ஆசை.

“இந்தப் போட்டி உலகத்தில் நீ எப்படித்தான் பொழைக்கப் போறீயோ?”

என்று சொல்லும் பெரியவங்களுக்கு, ‘நீங்களும் எங்களைப்போல இருந்து, சில காலம் கழித்த பிறகு தானே, இந்தப் போட்டி உலகத்துல வாழுறீங்க? அந்த வயதில், இப்போது எங்களுக்கான ஏக்கங்களை நீங்களும் அடைந்திருப்பீர்கள் தானே!’ இப்படிப் பேசிவிட்டால், ‘என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேசுறே! வயசுக்கு ஏத்தமாதிரி பேசு’ என்கிற அதட்டல் குரலோ, குட்டலோ, அடியோ எங்களை அடக்குகிறது.

ஒழுக்கம், நீதி, அறம், மரியாதை, சரி, தப்பு என்று எத்தனையோ நெறிகளை நீங்கள் எங்களுக்காகவே உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. ‘வளர்ந்துவிட்டால் எல்லோரும் இப்படி ஆகிப்போகிறார்களே…! நாங்களும் சில காலத்திற்குப் பிறகு உங்களைப் போலவே ஆகிப்போவோமோ!’ என்கிற அச்சம் எங்களுக்கு மேலெழுகிறது.

‘வேண்டவே வேண்டாம்…   இப்படியே இருந்துவிடலாம்’

என்பது போன்ற எண்ணம் எங்களுக்கு எழுகிறது. அது சாத்தியமில்லை தான்.

எங்கள் வயதிற்கேற்ப எங்களை வாழ அனுமதியுங்கள். ஆண் – பெண் வேறுபாடுகள், சாதி  – மத பேதங்கள், ஏழை – பணக்காரன், வேலைச்சுமை, முதல் மதிப்பெண் என்று எந்த விஷ விதைகளையும் எங்கள் நெஞ்சில் விதைக்காதீர்கள்.

‘எனக்குக் கிடைக்காத அனைத்தையும் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்கிற உங்களது உயரிய எண்ணத்தில் தயைகூர்ந்து எங்களது குதூகலமான, கொண்டாட்டமான, சுதந்திரமான உலகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… நாங்கள் நாங்களாகக் கொஞ்ச காலமாவது, எங்கள் உலகத்தோடு வாழ வழிவிடுங்கள்.

ஒரு ஊர்ல…!? சிறார்களின் மேற்கண்ட எண்ணங்களை, ஆதங்கங்களை, வேண்டுகோள்களை முன் வைத்து நகர்கின்றது. சிறார்களின் உள்வெளியில் பொதிந்து கிடக்கும் படைப்புலகம் பெரியோர்களால் (அறிந்தோ அறியாமலோ) நிராகரிக்கப்படுவதையும் அவர்களின் அத்துமீறிய செயல்களால் சிறார்கள் சிதைவுறுவதையும் சித்திரிக்கிறது ஒரு ஊர்ல…!?







அன்பான அய்யப்ப பக்தர்களே!

—  ருத்ரா இ.பரமசிவன்



இப்போதெல்லாம்
அந்த பக்தர்களின் இருமுடியில்
இருப்பதெல்லாம்
அந்த நீதிமன்ற தீர்ப்பும்
அதை வைத்து
கேரள ஆட்சிக்கலைப்பும் தானோ
என்ற "ஐயங்கள்" தான்
ஐயன் ஐய்யப்பன் மலை மீது
தவழும் மேகங்களாய்
தோற்றம் தருகின்றன.
ஒரு ஆத்மீக பூமி
என்று மார்தட்டிக்கொள்ளும்
இந்த தேசத்தில்
இப்படியொரு தீர்ப்பு
வரவழைத்திருப்பதிலும்
ஒரு விஷமத்தனமான‌
சாணக்கியத்தனம் இருந்திருக்குமோ
என்று
அச்சமும் திகிலும்
கொள்ளவேண்டியிருக்கிறது.
தேவதுவேஷமும்
ராஜதுவேஷமும்
சிரச்சேதத்துக்குரிய செயல்கள்
என்ற‌
"பாசிச யாகம்" வளர்க்க‌
என்ன தந்திரம் வேண்டுமானாலும்
இங்கே செயல் படுத்தப்படலாம்.

சுதந்திர வேட்கைக்குக் கூட‌
கபாலமாலை போட்டுக்கொண்டு
கோரப்பல் காட்டும்
காளியை முன் நிறுத்தி
பலி கேட்ட கட்சியினரின்
ஆட்சி அல்லவா இது!
அன்பான அய்யப்ப பக்தர்களே
ஐயப்பன் என்பது
புராணக்கதைகளின்
வெறும் உருவம் அல்ல.
அந்த மகர ஜோதி
தூய நெருப்பு.
ஏதோ ஒரு ரிஷியை
ஏதோ ஒரு நடனக்காரி
ரிக்கார்ட் டான்ஸ் ஆடி
மயக்கிவிட்டாள்
என்ற கட்டுக்கதை

அய்யப்பன்  என்ற
பிரபஞ்சப் பிழம்பிடம் பலிக்குமா?
நாம் நம்பும் இறைவனையே
இப்படியா
கொச்சைப்படுத்துவது?
பக்தர்கள் சஞ்சலப்படுவார்கள்
என்ற வாதம் இன்னும் அசிங்கமானது.
லட்சக்கணக்கான பக்தர்களின்
உருண்டு திரண்ட
அந்த "விரதத்தின்"கனபரிமாணம்
வெறும் பஞ்சுமிட்டாயா?
சிந்திப்பீர்.
வசதி வாய்ப்புகள்
மலையேறும் ஆபத்துகள்
என்பதெல்லாம் கூட
வெறும் கதை.

பெண்  சக்தி அவதாரம் எடுத்து
இப்போது தான்
அந்த அசுரர் கூட்டங்களை
வதம் செய்த நவராத்திரியை
பத்து நாளாய் கொண்டாடி விட்டு
வந்திருக்கிறீர்கள்.
நினைத்தால் நம்
"சக்தி பாரதத்துக்கு"
மோடி அவர்கள்
ஒரு மூவாயிரம் நாலாயிரம் கோடிகள்
ஒதுக்கலாமே
கங்கையை தூய்மைப்படுத்த
அத்தனை கோடிகளை
அள்ளிக்கொடுத்தது போல.
அன்பான அய்யப்ப பக்தர்களே !
அந்த இருமுடிகள்
வெறி கிளப்பும் காழ்ப்புணர்ச்சிகளின்
மூட்டை இல்லை என்று
நீங்கள் நிறுவ எண்ணினால்
உங்களுடன்
இந்த தாய்க்குலங்களையும்
அழைத்துச்செல்வதே
உங்கள்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு.







தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)







Wednesday, January 9, 2019

சங்கரன்கோயில் இலந்தைக்குளம் – மடைக்கல்வெட்டு


——    துரை.சுந்தரம்



முன்னுரை:
அண்மையில், இணைய அன்பர் சேஷாத்திரி அவர்கள் வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு ஒன்றின் ஒளிப்படத்தை அனுப்பி கல்வெட்டு என்ன கூறுகிறது எனக்கேட்டிருந்தார். அந்தப்படத்தில், பின்னணியாக ஏரி அல்லது குளம் ஒன்று காட்சியளித்தது. முன்னணியில், கல்லால் கட்டுவிக்கப்பட்ட ஒரு தூம்பு அல்லது மடையின் தோற்றம். இரு கல் தூண்களும் அவற்றின் இடையே கிடந்த நிலையில் ஒரு கல்லும் கொண்ட அமைப்பு.  மூன்று கற்களிலும் எழுத்துகள். வட்டெழுத்து வகை எழுத்து. பார்வைக்கு அழகு. கி.பி. 8-9 –ஆம் நூற்றாண்டுக் காலத்தை ஒட்டிய எழுத்து வடிவமாகத் தோன்றியது.




படிக்கும் ஆர்வம் எழுந்தாலும், அக்கல்வெட்டுக் கிடைத்த பகுதியைத் தெரிந்துகொண்டால், கல்வெட்டைப் படிக்கும்போது பாடத்தின் சூழலைக்கொண்டு  (CONTEXT) கல்வெட்டுச் செய்தியை எளிதில் அறியமுடியும் என்னும் எண்ணத்தில் மேற்கொண்டு கல்வெட்டைப் பற்றிய பின்னணியை அறிந்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன், நண்பரும், தேடுதலில் இறங்கிக் கல்வெட்டு எங்குக் கிடைத்தது, அதில் கூறப்பட்ட செய்தி என்ன என்று சுட்டுகின்ற நாளிதழ்ச் செய்தியை அனுப்பிவைத்தார்.



கல்வெட்டு எழுத்துகள், மடைத்தூணின் கிடைமட்டக் கல் ஒன்று, நிலைக்கற்கள் இரண்டு என மூன்று பகுதிகளில் எழுதப்பட்டுள்ளன.  கல்வெட்டின் பாடம் – நான் படித்த அளவில் – கீழ்வருமாறு:


கல்வெட்டின் பாடம்:
கிடைமட்டக்கல்:
1 சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியற்கு யாண்டு பதினஞ்சு 
2 இதனெதிர் இரண்டு இவ்வாண்டு நெச்சுற நாட்டு பிரமதேயம் 
3 நீலி நல்லூர் நம்பிராட்டியார் செம்பியன் கிழாலடிகள் தி
4 (ரு)வடிக்கா(*) ( ஊர்)(**)ச்செல்கின்ற அள்ளூர்க் குளக்கீழ்க் க(லா)
5 வகப்பாடி ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற]

இடப்புற நிலைக்கல்:
ஸ்வஸ்திஸ்ரீ
1  சோலை திருப்
2 பாச்(சே)ற்றி
3 ( ன்) பொன்மறை
4 யோன் (தெ)ன் (க)
5 லவை ஆலவா
6 ய் சிலம்ப
7 ன் பியரால்
8 நீலிந[ல்]லூ
9 ர் ஏரிப்பெ
10 ருமடையைக்
11 கல்லால் நி
12 லை அமைத்தா
13 ன் சிரி றங்
14 க (முவளா)ச்
15 செய்து

வலப்புற நிலைக்கல்:
1 ஆண்மர் நா
2 ட்டு தேவதா
3 னப்பிர
4 மதேயம்
5 தேவியம்ம
6 ச்சருப்பே
7 தி மங்கல
8 த்து சிவ
9 ப்ராஹ்மண
10 ன் மாதேவ
11 ஞ்சோலை அ
12 ம்பலவ
13 னில் நிலை
14 கால் ஆல
15 வாய் சீல
16 த்தின் பேரா
17 ல் நிறுத்து
18 விச்ச நிலை


கல்வெட்டுச் செய்திகள்:
மங்கலத்தொடக்கம்:
கல்வெட்டின் மங்கலத் தொடக்கச் சொல்லான ”ஸ்வஸ்திஸ்ரீ”  தனித்துப் பொறிக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு ஓலைச் சுவடிகளில் எழுதும் முறையை நினைவூட்டுகிறது. முதல் மூன்று வரிகளில், கல்வெட்டு எழுதப்பெற்ற அரசன் பெயர், அவனது ஆட்சியாண்டு, கல்வெட்டுத் தொடர்பான அமைவிடம் (நாட்டுப் பிரிவு, ஊர்ப்பெயர்) குறிக்கப்பெறுகிறது.

அரசன் பெயர்:
அரசன் பெயர் “சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியன்”  என உள்ளது.  இவன் சடையவர்மன் பராந்தக வீரநாராயணனின் பேரனும், இராசசிம்மனின் மகனுமான வீரபாண்டியன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 946-966. இவன் பாண்டி நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவன்; பராந்தக சோழனின் ஆட்சியில் சோழப்பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாண்டி நாட்டுப்பகுதிகளை மீட்டுக்கொண்டவன் என்றும், இவன் கொண்டது சோழ இளவரசருள் ஒருவனது தலையே போலும் என்றும் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார். முதலாம் இராசராசனின் தமையனாகிய ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் முடியைக்கொண்டிருக்கவேண்டும் என்று சோழர் கல்வெட்டுகளிலிருந்து விளங்குகிறது.  தென்னிந்தியக் கல்வெட்டுகள் ஐந்தாம் தொகுதியில், நெல்லை, நெல்லையப்பர் கோயிலில் வீரபாண்டியனின் ஐந்து கல்வெட்டுகள் (க.வெ.எண்: 451-455)  காணப்படுகின்றன. இவை அனைத்திலும் ”சோழன்றலை கொண்ட வீரபாண்டியன்” என்னும் சிறப்புப் பெயர் உள்ளது.

அரசனின் ஆட்சியாண்டு:
அரசனின் ஆட்சியாண்டு, யாண்டு பதினஞ்சு இதனெதிர் இரண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது 15+2 ;  17-ஆம் ஆண்டு. கி.பி. 963.

நாட்டுப்பிரிவு:
கல்வெட்டில் நெச்சுற நாடு, ஆண்மர் நாடு ஆகிய இரண்டு நாட்டுப்பெயர்கள் குறிக்கப்பெறுகின்றன. “இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்” என்னும் தலைப்பில் தொல்லியல் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தொகுத்த நூலில் நெச்சுற நாடும், ஆண்மர் நாடும் குறிக்கப்பட்டுள்ளன. நெச்சுற நாடு தற்போதைய சங்கரன்கோயில் பகுதியாகும். ஆண்மர் நாடு, தற்போதைய இராஜபாளையம் பகுதியாகலாம். மேற்படி நூலில்,  நெச்சுற நாட்டுப்பிரிவில் நெச்சுறம், ஊற்றத்தூர், நீலிநல்லூர் ஆகிய ஊர்கள் காட்டப்பெற்றுள்ளன. நமது கல்வெட்டிலும், நீலிநல்லூர் சுட்டப்பெறுகிறது. இவ்வூர் ஒரு பிரமதேயமாக -  பிராமண ஊராக – இருந்துள்ளது. கல்வெட்டில் நீலிநல்லூர் என்னும் ஊர்ப்பெயரை அடுத்து அரசியின் பெயர் சுட்டுகின்ற “நம்பிராட்டியார் செம்பியன் கிழானடிகள் திருவடிக்கா”  என்னும் தொடர்  அமைகின்றதால் அரசியின் பெயரால் ஒரு வாய்க்கால் நீலிநல்லூர் ஊர்வழி சென்றிருக்கக் கூடும் என்று கருத வாய்ப்புண்டு. இக்கருத்துக்கேற்ப, கல்வெட்டிலும் ”செல்கின்ற” என்னும் தொடர் உள்ளது. அரசன், அரசி ஆகியோர் பெயரில் வதி, வாய்க்கால், ஆறு ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன. ”கிழானடிகள்” என்னும் சொல் பிழையாகக் கல்வெட்டில் “கிழாலடிகள்” என உள்ளது. கல்வெட்டில் அள்ளூர்க்குளம் பற்றிய குறிப்புள்ளது. கிடைமட்டக்கல்லின் ஐந்தாம் வரியில் ”ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற”   என்றிருப்பதால், நீலிநல்லூர் வழியே ஒரு வாய்க்கால் சென்றதாகவும்,  அது ஆலவா(ய்)சீலம் என்னும் ஊரில் முடிவதாகவும் கருத இடமளிக்கிறது.

அடுத்து, ஆண்மர் நாட்டுப்பிரிவில் சேற்றூர், தேவியம்மச் சதுர்வேதி மங்கலம், கொல்லம் கொண்டான், சோழகுலாந்தகபுரம், புனல் வேலி ஆகிய ஊர்கள் இருந்தன என மேற்படி நூல் குறிக்கிறது. நமது கல்வெட்டிலும் தேவியம்மச் சதுர்வேதி மங்கலம் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டில் “சருப்பேதி மங்கலம்” என்றுள்ளது. சதுர்வேதி, சருப்பேதி ஆகிய இருவகையான வழக்கும் கல்வெட்டுகளில் பயில்கிறது. இந்தத் தேவியம்மச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த பிராமணன் மாதேவன் சோலை அம்பலவன் என்பவன் மடையின் நிலையைச் செய்தளித்தான் என்று கல்வெட்டு கூறுகிறது.  ஆலவாய்சீலத்தின் பேரால் இந்தக் கொடை அளிக்கப்பட்டது என்னும் குறிப்பு, ஆலவாய் சீலம் என்பது ஊர்ப்பெயராகவும், ஆள் பெயராகவும் வந்துள்ளதை உணர்த்துகிறது.

கல்வெட்டின் இன்னொரு பகுதி, சோலை திருப்பாச்சேறு என்னும் ஊரைச் சேர்ந்த பொன்மறையோன் என்பவன், தென்கலவையைச் சேர்ந்த ஆலவாய் சிலம்பன் பெயரால் நீலிநல்லூர் ஏரிக்குப் பெரு மடையை அமைத்தான் என்று கூறுவதாகவும்,  மாறாகத் திருப்பாச்சேற்றுப் பொன்மறையோனான ஆலவாய் சிலம்பன் பெயரால் ஸ்ரீரங்க மூவேளான் என்பவன் பெருமடையை அமைத்தான் என்று கூறுவதாகவும் இரு வகையாகப் பொருள் கொள்ளுமாறு உள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிக்கையில் எழுத்துகள் ஏற்படுத்தும் மயக்கம் பல்வேறு பாடபேதங்களைத் தருவது வழக்கம். ”ஸ்ரீரங்க(ம்)” என்பது “சிரி றங்க(ம்)”  எனக் கல்வெட்டில் உள்ளது.

முடிவுரை:
தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்ட  கல்வெட்டின் மிகச் சரியான பாடமும், துறையினர் கொண்டுள்ள சரியான கல்வெட்டுச் செய்தியும் தெரியவந்தால்தான் நமது யூகங்கள்  தெளிவாகும். நாளிதழ்ச் செய்தியில் காணப்படும் “ஆன்மா நாட்டு”,  “தேவியம் சதுர்வேதி மங்கலம்” ,  “அம்பலவாணால்”  ஆகிய சொற்றொடர்கள் பிழையானவை.





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.




கண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் தமிழர்கள்)

——    வித்யாசாகர்


கூடுகளைத் தேடாமல் சிறகுகளுக்குள் அடங்கிக்கொண்டவர்கள் நாங்கள். கதகதப்பிற்கு மாறாக நெருக்கத்தின் வெப்பத்தால் தகித்தாலும் ஒற்றுமையெனும் வலிமைக்காய் கைகால் முடங்கிக்கொண்டு லட்சிய முழக்கத்தை நிறுத்திக்கொள்ளாத நெறியுள்ள வானம்பாடிகள் நாங்கள். எங்களுக்கு கனவு பறப்பதாக இல்லை வாழ்வதாக இருக்கிறது, ஆம் அது எல்லோருக்குமான வாழ்வு.

சிக்கித் தவித்து துடித்து பசியில் வாடி, ஏழ்மையில் நலிந்து, எதற்கும் விலைபோனவர்களாய் வாழும் இலவச விரும்பிகளான எம் சமுதாயத்திற்கு ஓர் விடிவு வேண்டும். நாங்கள் சிறகடித்து பறக்கும் வானத்தைப் பற்றி பேசுவதேயில்லை, பசியை எல்லோருக்கும் போக்கிடாத கனவுதனை தீதென்று எண்ணி அஞ்சுகிறோம்.

ஆதி மனிதர்களான நம்மிடம் எல்லையற்ற பலமும் அறிவும் இருக்கிறது, மரபூரிய மாண்பும் மறமும் விஞ்சியிருக்கிறது, ஆயினும் ஏன் எங்குக் காணினும் இரண்டாம் பட்சமாய் எட்டித் தள்ளப்படுகிறோம்? எட்டித் தள்ளியபின்னும் எதற்கு அஞ்சி நிற்கிறோம்? யார் எம் சிறகுகளை உடைப்பவர்? கனவுக்குத் துயிலும் தூக்கத்தை எம் விடுதலையோடுச் சேர்த்து, கொண்டுபோனவர் எவர்? எமக்குத் தெரியும்’ யாருமில.

ஆம்; யாருமில எமை வஞ்சித்தவர். எங்களை எம்மினத்தை யாராலும் தோற்கடிக்கவோ ஏமாற்றவோ முடியாது, ஆனால் தோற்க எங்கோ பிசகி எப்படியோ நாம் தயாராகிவிட்டோம். ஏமாற ஏனோ சம்மதித்து சம்மதித்து பெரியதொரு சதியின் பள்ளத்தில் விழத் தானே பழகிக்கொண்டோம். அதிலிருந்து நாமெல்லாம் வெளியே வருகையில், தம் எண்ணத்துள் தாம் வென்றுநிற்கையில் எமது அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் நாளை விண்ணில் தானே பறக்கத் துவங்கிவிடும்.

எனவே நாங்கள் எங்கள் தூக்கத்தைத் தொலைத்து எமது தலைமுறையின் கனவுகளுக்கு விடைதனை  தேடி கடல் தாண்டி அலைகிறோம். எமது விடுதலை இதோ எங்களின் சட்டைப்பையில் உண்டென்று எங்களின் பிள்ளைகள் நம்பும் புள்ளியில் எங்களின் ஏக்கங்களுக்கும் நாளை சிறகு முளைத்துவிடும்.

அதற்குச் சான்றாகத்தான் நாங்கள் கூடுகளாய்ப் பிரிந்துகொள்வதில்லை. மாறாக ஒற்றைக் கூட்டிற்குள் அடங்கிப் போகிறோம். ஏதோவொரு நாட்டிற்குள்ளும் தமிழர்களாக மட்டுமே அடையாளப் படுகிறோம். அந்தத் தமிழரெனும் கூட்டிற்குக் குச்சிகளை தேடியலைந்து தங்கக் கம்பிகளை முடைந்துவிட்ட எங்களின் சேர சோழ பாண்டிய மன்னர்களான பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நன்றி.

ஏதோ முடிந்தது வாழ்வென ஓய்ந்துவிடாமல் எப்பொழுதும் உழைப்பு உழைப்பு வெற்றி வெற்றி என்று  நாடு நாடாகத் தேசம் தேசமாக ஓடி ஓடி எங்கும் எப்பொழுதும் எதற்கும் தளர்ந்து நின்றுவிடாமல் உழைத்து உழைத்து முன்சென்ற எங்களின் கனவுத் தொழிற்சாலைகளுக்கும், அனைத்து வியர்வை வைரங்களுக்கும், எங்களன்பு உழைப்பாளிகளான மொத்த வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கும்  இந்த மழைநேரத்து உதவிக்கான மாண்பு சொறிந்த நன்றி. வெறும் குச்சிகளை தங்கக் கம்பிகளாக்கிய பல தொழிலாளர்களுக்கும்  முதலாளிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் நன்றி. 

வெறும் நன்றியோடு நிற்பதெங்கே, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமைத் தேரிழுப்போம். மழை வெள்ளம் இடி மின்னல் எது வரினும் நாம் ஒன்றே என கூடி நிற்போம். நம்மில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளெல்லாம் இடிந்துபோகட்டும் இனி. அன்புத் தீயிட்டு எரிப்போம் தீயெண்ணத்தை. அதில் சாதித் திமிரது இருந்தாலும் பொசுங்கிப்போகட்டும். வானத்து விண்மீன்களை இழுத்து எம் வரிகளுள் கட்டிவைப்போம். காதலர்கள் கைகோர்த்துச்செல்கையில் பின்னே வண்ணங்களாய் மின்னட்டுமந்த விண்மீன்களெல்லாம். வாழ்க்கையை மிக அழகியலோடு வாழ்வோம், வருங்காலத்திற்கு நல்லதாக நம் வரலாறு மிஞ்சட்டும் தோழர்களே..

வாய்மையையும் உழைப்பையும் அறத்தையும் ஒவ்வொரு சொல்லுக்கும் போற்றுவோம்; வாழ்ந்தவர் தமிழரென்று இந்த உலகம் தானே நமை அடையாளங் கண்டுகொள்ளட்டும். அன்று பறக்கும் தமிழரின் வெற்றிக் கோடிக்கு மகிழ்ச்சியின் வண்ணங்களும், இனி நாம் ஒற்றுமையில் தோற்காத ஒற்றை நிறமுமே பூசப்பட்டிருக்கட்டும்.

வாழ்க எந் தமிழர்தம் நாடு; வளர்க எம்மக்கள்..



தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)