Tuesday, July 4, 2017

தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசே - அமெரிக்க தமிழ்த்திருவிழா 2017

-- பழமைபேசி, மக்கள் தொடர்புக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

 


கொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இன்னபிற இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா, குறித்த நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தோடும் அமெரிக்க நாட்டுப்பண்ணோடும் மின்னசோட்டாவின் மினியாபொலிசு நகரில் எழுச்சியுடன் துவங்கியது. அதனையடுத்து, மங்கல இசையினை மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த நுண்ணிசைக் கருவி மாணவர்கள், தத்தம் ஆசான்களான வாத்தியகலாமணி சிலம்பரசன் கஜேந்திரன், நாகசுரக்கலைஞர் இராமச்சந்திரன் வெங்கடசாமி ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றம் செய்தனர். நிமிர்வு பறையிசைக் கலைஞர் சக்தி பறையிசையை அதிரவிட, சிலம்பம், கரகாட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.



நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில் வெளிப்பட எழும் கதிரேயென்கிற தமிழ்ப் போற்றுதலுடனான திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, விழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களோடு பெருமுரசுப் பெருமுழக்கம் இசைக்கப்பட்டுச் சிறப்புத் தோற்றமளித்தார் கயானா நாட்டுத் தலைமையமைச்சரான மாண்புமிகு நாகமுத்து அவர்கள்.
 

பேரவைத்தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவை விழா மலரினை எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர், ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் நாட்டியநாடகம் நிகழ்ச்சியை அளித்தனர். கயானா நாட்டுத் தலைமை அமைச்சர் உரையாற்றும் போது, கயானா நாட்டுத் தமிழர்களின் பின்புலம், தமிழர்களின் மேம்பட்ட ஒருங்கிணைப்பின் தேவை, பெண்டிர் உரிமை குறித்தான விழிப்புணர்வு முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் தயாரித்த விபுலாநந்தர் ஆவணப்படம் கயானா நாட்டுப் பிரதமரால் வெளியிடப்பட்டது.



 
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு திரைக்கலைஞரும் பலகுரல் பேசுகலைஞருமான சின்னிஜெயந்த் அவர்களின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி இடம் பெற்றது. ‘தமிழ்மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா??” எனும் தலைப்பில் திரைப்படக்கலைஞர் ரோகிணி அவர்களின் நெறியாள்கையில் இடம் பெற்ற கருத்துக்களம் நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கிடையே விறுவிறுப்பைக் கூட்டியது. தொடர்ந்து கடல்வழி ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் உடை இடம் பெற்றது.
 


கவிஞர் சுகிர்தராணி அவர்கள் தலைமை வகிக்க, “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?” எனும் தலைப்பில் அமெரிக்கத் தமிழ்க்கவிஞர்கள் தம் கவிதையால் அரங்கத்தைச் சிந்தனைக்காட்படுத்தினர். கவிதைகள் மிகக்கூர்மையாகவும் பெருத்த வரவேற்பையும் பெற்றன.




விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சிக்கு கிழக்கே நான்கு மைல்தூரம் சென்றால், வெள்ளாற்றங்கரையின் இருக்கிறது கார்மாங்குடி. இப்பகுதியை மன்னன் நரேந்திரன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் சாரங்கதாரன். இளவயதுச் சாரங்கதாரனை, மன்னனின் இளவயது மனைவியான சித்திராங்கி என்பவள் விரும்புகிறாள். சிற்றன்னையின் விபரீதமான ஆசையைத் தெரிந்து கொண்ட சாரங்கதாரன் இசைவளிக்காது மறுக்கிறான். ஏமாற்றமுற்ற சித்திராங்கி, சாரங்கதாரனைப் பற்றிப் புறங்கூறி தண்டனைக்குள்ளாக்குகிறாள். அதன் விளைவாக, சாரங்கதாரனுக்கு கால் வெட்டப்படுகிறது. இத்தகு பின்னணியைக் கொண்ட ‘சாரங்கதாரன்’ நாடகமானது சிகாகோ தமிழ்ச்சங்கத்தினரால் நடத்தப்பட்டது.
 

தொடர்ந்து மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரின் மரபுக்கலைகளை வெளிப்படுத்துமுகமாக பல கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக இடம் பெற்று, அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது. ஐந்திணை பரதம், சதிராட்டம் எனச் சுட்டப்பட்ட நிகழ்ச்சி அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து படைப்பாளியும் இயக்குநருமான மிஷ்கின் உரைநிகழ்த்தினார்.




தொடர்ந்து, இவ்வாண்டுக்கான அமெரிக்கத் தமிழ் முன்னோடி விருது, காங்கிரசுமேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் கிளாரன்சு ஜெய், தகவற்தொழில்நுட்ப வல்லுநர் பழநி குமணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரால் நேர்த்தியாகத் தமிழில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட அமெரிக்கநாட்டுப்பண் பாடப்பட, அஃது எல்லோரது வரவேற்பையும் பெற்றது. பண்ணிசை ஆய்வாளர் முனைவர் கோ.ப. நல்லசிவம் அவர்களது தமிழிசையில் பல பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்தன.




இரவு உணவுக்குப் பின்னர் அரங்கம் ஆர்த்தெழுந்து அதிர்ந்தது. மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி அவர்களின் இயக்கத்தில் பல கிராமிய, இனமான உணர்வுப் பாடல்களுக்கு பலதரப்பட்ட தமிழ்ச்சங்கத்தினர் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற கூத்துகளாட, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்நிகழ்ச்சி இடம் பெற்றது. அடுத்து வந்த அமெரிக்கக் காங்கிரசுமேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி, தமக்களிக்கப்பட்ட விருதையேற்றுச் சிறப்புரையாற்றினார்.




அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவின் முதல் நாளினுடைய இறுதி நிகழ்ச்சியாக, பேராசிரியர் முனைவர் இராஜு அவர்களின் நெறியாள்கையில் ‘மருதநாயகம்’ மரபுநாடகம் இடம் பெற்றது. நிகழ்த்துகலை வல்லுநர்கள்  பலர் பங்களிப்புச் செய்த இந்நிகழ்ச்சி வெகுநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தது. இத்தோடு, தமிழ்த்தேனீ, குறள்தேனீ, அமெரிக்கத் தமிழ் முனைவோர் மாநாடு உள்ளிட்ட பல நிகழ்வுகள், இணையரங்குகளில் இடம் பெற்றன.



திருவிழா வளாகம் முழுமைக்கும் மரபுக்கலைகளைப் பறைசாற்றுமுகமாக, வடிவான பதாகைகளும் இலச்சினைகளும் இடம் பெற்றிருந்தமை வந்திருந்தோரைக் கவர்ந்தது. முதல்நாள் நிகழ்ச்சியைக் கண்டு களித்த ஆர்வலர்கள், அரங்கை விட்டுப் பிரிய மனமில்லாது விடுதிகளுக்குச் சென்றமை நிகழ்ச்சிகளின் தரத்தை எடுத்துக்காட்டியது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளும் குறித்த நேரத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண், மின்னசோட்டா தமிழ் நுண்கலை மாணவர்களின் தவில், நாகசுரம், பறை உள்ளிட்ட மங்கலயிசை, திருக்குறள் மறையோதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மருத்துவர் அருளமுதன் அவர்கள் தமிழ் மரபின் வழியில் சித்தமருத்துவம் குறித்து எளிமையாகப் பேசியமை தமிழ் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றது.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் நடத்திய இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி, பல்லூடக நிகழ்ச்சியாக, ஒலி, ஒளி, இசை, காட்சி எனப் பல பரிமாணத்துடன் நடந்தேறியது. பார்ப்போருக்கு இலக்கியத்தின் மீதான ஆவலையும் ஈர்ப்பையும் ஊட்டியது.

அறிஞர், குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளராகவும் மக்கள்நலப் பணியாளருமான வெ.பொன்ராஜ் அவர்கள், தம் கடந்த கால அனுபவங்கள், தமிழரின் வளர்ச்சி குறித்துப் பேசினார். 2017ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டி முடிவுகளை, குழுவினர் அறிவித்தனர். முதற்பரிசு ’திரள்’ பட இயக்குநர் குரு சுப்ரமணியத்துக்கும், இரண்டாம் பரிசு ’பகல் நட்சத்திரம்’ படத்திற்காக பிரவீன் ராஜனுக்கும், மூன்றாம் பரிசு ‘சத்தமாக ஒரு நிசப்தம்’, ‘பொழுது புலர்ந்தது’ ஆகிய படங்களுக்காக முறையே ஜெய் சீனிவாசன், ஹரிஹரன் சுவாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. சிறப்பு பரிசாக, 'கறை கேட்டது', 'திமில்', 'சாத்திரம் ஏதுக்கடி' ஆகியவற்றின் இயக்குநர்கள் சூர்ய நாராயணன், பிரவீன் குமார், சேஷங் கல்வலா ஆகியோர் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பெற்றுக் கொண்டனர். குறும்படப் போட்டி நடுவர்களாக திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின் , சிம்பு தேவன், பேராசிரியர் சுவர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர்.

கவிஞர் சுகுமாரன், வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து நண்பகல் உணவுக்கு இடைவேளை விடப்பட்டது. இடைவேளைக்குப் பின்னர், நகைச்சுவை மற்றும் பலகுரல் கலைஞர் சின்னி ஜெய்ந்த் உரையாற்றி அவையில் கலகலப்பை உண்டாக்கினார். தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கிடையேயான நாடளாவிய தமிழ்த்தேனீப் போட்டியின் இறுதிக்கட்ட போட்டிகள், முக்கிய அரங்கின் மேடையிலேயே இடம் பெற்றுப் பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்களான கவிஞர் சுகுமாரன், முனைவர் மு.இளங்கோவன் முதலானோர் பரிசளித்தனர். “உணவும் உழவரும்” என்ற நாடகத்தை கான்சாசு நகரத் தமிழ்ச்சங்கத்தினர் வழங்கினர். இதற்கிடையே பேரவையும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் உருவாக்கிய மாதங்காட்டி வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற தமிழ்மரபுசார்க் கலைநயமிகு படங்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன.




உயர்கல்விக்கூடத்தில் தமிழ்மொழிக்கான மதிப்பீடுகளைப் பெறுவது குறித்தான வழிமுறை உரையினை அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமர்வது குறித்த அறிவிப்பும் வேண்டுதலும் இடம் பெற்றது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ஒரிசா பாலு, ரோகிணி, கார்த்திகேய சிவசேனாபதி, தொழில் முனைவரும் நடிப்புக்கலைஞருமான கிட்டி, பேராசிரியர் ஓபர்ஸ்ட் முதலானோர் தோன்றிப் பேசினர். நிமிர்வு நிறுவனர் பறையிசைக் கலைஞர் சக்தியின் வழிகாட்டுதலில் இடம் பெற்ற நூற்று முப்பத்து மூன்று அதிகாரப் பறைமுழக்கம் அரங்கத்தை அதிரச் செய்தது.





அதே ஊக்கமும் குதூகலத்துடன் பேரவையின் உறுப்புச் சங்கங்களின் ‘சங்கங்களின் சங்கமம்’ நிகழ்ச்சி, ஒவ்வொரு சங்கமும் பதாகைகள் ஆட்டப்பாட்டங்களுடன்  அணிவகுத்து வர இனிதே நடைபெற்றது. அறுசுவை உணவுடன் கூடிய உணவு இடைவேளைக்குப் பின்னர், மக்களிசைக் கலைஞர் ஜெய்மூர்த்தி, நிகழ்த்துகலை வல்லுநர் முனைவர் குமணராஜா, சூப்பர் சிங்கர்கள் ஸ்ரதா, நிரஞ்சனா, ராஜகணபதி, நெருப்புடா புகழ் அருண்ராஜா முதலானோர் பங்குபெற்ற மெல்லிசை நிகழ்ச்சி கோலாகலமாக இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, ஜெய்மூர்த்தி, குமணராஜா ஆகியோரின் பாடலை மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டு ஆர்ப்பரித்தனர் தமிழர்கள். மண்ணின் கலைக்கு மயங்காதவர் எவரோயெனும் விதமாக இருந்தது அக்காட்சிகள்.

மெல்லிசைக்கு நடுவே, திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் மேடையில் தோன்றி, விழாவுக்கு உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களையும் குறிப்பிட்டு மனமார்ந்து நன்றி கூறினார். கலைநயமிகு விழா முடிந்துவிட்டதேயெனப் பிரிய மனமின்றி நகரத்து வீதிகளில் சென்ற தமிழரின் மனத்தில் தோய்ந்திருந்த மெல்லிய சோகம், விழாவின் வெற்றியையும் விழுமியத்தையும் போற்றுவதற்கு அடையாளமாய் இருந்தது.



படங்கள்:




_________________________________________________________ 
பழமைபேசி
pazamaipesi@gmail.com
_________________________________________________________

Sunday, July 2, 2017

பாண்டியன் நெடுமாறனின் இளையான்புத்தூர்ச் செப்பேடு

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

இச்செப்பேட்டைப் பற்றி ஆவணம்-2007 இதழில் வெளியான விரிவான ஆய்வுக்கட்டுரையில் உள்ள முதன்மைச் செய்திகள் இங்கு குறுக்கமாகத் தரப்படுகின்றன.

1 .  அழகிய செய்யுள் நடையுடன் தொடக்கத்திலும் முடிவிலும் வடமொழிச்  சுலோகங்கள். நடுவில் தமிழ்ப்பகுதி. சுலோகங்கள் கிரந்த எழுத்துகளாலும், தமிழ்ப்பகுதி வட்டெழுத்துகளாலும் எழுதப்பட்டுள்ளன.

2.  செப்பேடு நெடுமாறன் ஆட்சிபுரிந்து நூறாண்டுகள் கழித்து எழுதப்பட்டது.

3.  மன்னனின் வேறு பெயர்கள்: மாறவர்மன் அரிகேசரி, சேந்தன் மாறன் அரிகேசரி, பராங்குசன், நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன், கூன்பாண்டியன்.

4.  திருஞானசம்பந்தரின் காலத்தவன்.

5.  செப்பேட்டின் காலம் கி.பி. 676 ஆகலாம். நெடுமாறனின் 36-ஆம் ஆட்சியாண்டு.

6.  செப்பேட்டில் இவ்வரசனின் தந்தை பெயர் “ஜயந்தவர்மன்” என்றுள்ளது. கட்டுரை ஆசிரியர்கள் இப்பெயரைச் “செழியன் சேந்தன்”  என்று குறிப்பிடுகிறார்கள்.

(இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  ஜயந்தன் என்னும் வடமொழிப்பெயர் தமிழில் சேந்தன் என்று மருவி வழங்குவது கருதத்தக்கது.  இது போன்ற மற்றொரு அரசன் பெயர் நினைவுக்கு வருகிறது. தொல்லியல் துறையின் “கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்” நூலில், கொங்குநாட்டை ஆண்ட வீரகேரளர் அரசர்களில் ஒருவனாக அதிசய சோழன் வீரநாராயணன் என்பவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. அரசனின் பெயரில் “அதிசயம்” எப்படி வந்தது? இந்த ஐயம், இக்கட்டுரை ஆசிரியர், உடுமலை-மூணாறு சாலைக்கருகில் அமைந்துள்ள தளிஞ்சி என்னும் ஓரூரில் பார்த்த கல்வெட்டில், இவ்வரசனின் பெயர், கிரந்த எழுத்தான “ஜ”  கலந்து “அதிஜெயசோழன் வீரநாராயணன்”   என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்தபோது நீங்கியது.)

7.  இச்செப்பேட்டில், பாண்டியர் கால உக்கிரன்கோட்டைப்பகுதியில் உள்ள களக்குடி என்னும் ஊர் குறிப்பிடப்படுகிறது.

8.  சோழநாட்டுப் பிராமணன் நாராயணபட்ட சோமயாஜி என்பவனுக்குப் பாண்டியன் பிரமதேயமாக அளித்த ஊர் ஆசி நாடு என்னும் சிறு நாட்டுப்பிரிவில் இருந்தது. ஆசி நாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த கம்பலை என்னும் மறக்குடித் தலைவனை வென்று அவனுடைய நிலத்தைக் கொடையாக அளித்தான்.

9.  மேற்சொன்ன ஆசிநாடு இன்றைய கோவில்பட்டி, சங்கரன்கோயில் வட்டப் பகுதியாகும். இளையான்புத்தூர் இப்பகுதியில் இருந்திருக்கலாம்.

10.  மறக்குடி மக்களின் நிலங்களை அரசனின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள ஊர்களாக மாற்றிப் பிராமணர்க்கு வழங்கியபோது அதற்கு மறக்குடித் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புத் தோன்றியது. அதனை முறியடித்து நெடுமாறன் பிரமதேயத்தை ஏற்படுத்தியுள்ளான். மறக்குடி மக்கள் பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து பிரமதேயங்களுக்குரிய அரச ஆவணங்களை அழிக்கிறார்கள். இந்தக்கிளர்ச்சி, தளவாய்புரச் செப்பேட்டில் “மறக்கேடு”  என்று குறிப்பிடப்பெறுகிறது. இத்தகைய மறக்கேட்டினால் ஆவணங்களை இழந்தவர்கள் மீண்டும் உரிமை கோரி எழுதியதன் காரணமாகவே, அரசனின் ஆட்சிக்கு நூறாண்டுகள் கழித்து இந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளது.

11.  ஆவணத்தைச் செப்பேட்டில் பொறித்து நிறைவேற்றும் “ஆணத்தி”  (அதிகாரி)யின் பெயர் அண்டநாட்டுக் குண்டூர்க் கூற்றத்துச் குமரன் தாயன் வடதரன் ஆகும். குண்டூர்க் கூற்றம் இன்றைய ஒட்டன்சத்திரம் பகுதியாகும்.











ஆவணம்-2007 இதழ் - கட்டுரை  ஒளிப்படங்கள் பகிர்வு
கல்வெட்டுப் படங்கள்: திருவாளர்கள் து. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை;  மயிலை நூ.த.லோக சுந்தரம்; 

___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

அம்மூவனாரின் அழகிய தமிழ்நடை

-- ருத்ரா இ பரமசிவன்


அம்மூவனார் எழுதிய "நெய்தல் செய்யுட்"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை"..


என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் "செத்த" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் "செத்தவன் கையில் வெத்தலை பாக்கு "இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த "செத்த நிலையை" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை எனக் குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்தத் தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம். இன்னமும் நமக்குப் புரியவேண்டுமென்றால் "தங்கப்பதக்கம்" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

"செத்தென" என்ற சொல் மிகவும் அழகானது; நுண்மையானது.

ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் "மடநடை"அவ்வளவு செறிவு மிக்கது. தலைவியின் காதல் "மடம்" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார். மற்ற பாடல்களில் "போல" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் "போல" என்று வழங்கப்படுவதில் "சங்கத்தமிழின் சொல்லியல் முறை" ஒரு அறிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.  இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படியென்ன வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்குப் புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்தப் பயனும் இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் "செத்தையாருக்குள் வைக்கப்படும்" என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி "நடைப்பிணங்களாய்"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்சினைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே "செத்த" "போல" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே "வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.



"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."

பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
வெண்ணிப்பறந்தலை ததையநூறி
குருதி பொத்திய அகல் அறை மன்று
ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.








______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

மனத்தின் ஈரம் வற்றிய சமூகம்


--கௌதம சன்னா



காலத்தின் தனிமையை
கடந்து போக நீ வெறும் காற்றல்ல
கொதிக்கும் மனங்களின் வடிகாலில்
வெந்து மிதப்பது வேதனைகள் மட்டுமல்ல
குமுறும் இதயங்கள் எப்போதும்
ஓய்வறிவதில்லை.

மனம் திரிந்து அலையும்
பெருங்கூட்டத்தின் ஆயுதங்கள்
வெறும் கத்தியில் மட்டும் செய்யப்படவில்லை.
அதற்குச் சாதியும் மதமும் கத்திகள்தான்..
அதன் மனமே கொலைக்கான ஆயுதங்கள்தான்.

கொடுங்கனவுகளை மாய்க்கும்
மந்திரக்கோல் இனி வாய்க்காது.
தரையில் காலூன்றி மேகங்களைக் கவரும்
எத்தனத்தை எக்காலமும் செய்
காற்று உன்னைக் களவாடும்முன்.

மனத்தின் ஈரம் வற்றிய
ஒரு சமூகத்தின் கோரத்தினை
இம்மண்ணில் விதைத்த மூத்தோர்களை
தேடிப் பிடித்து அழி
தடுக்கவரும் நிகழ்கால கொடூரக்
கரங்களைக் கழுவேற்று.

சாதியின் ரத்த நெடியினையுன்
கைகளில் பூச வரும்
குருதித் தோய்ந்த மனநோயாளியின் மீது
இரக்கம் கொள்ளாதே…
அவன் மனநோயாளி மட்டுமல்ல...



___________________________________________________________
 
 
கௌதம சன்னா
 g.sannah@gmail.com
___________________________________________________________