Saturday, April 20, 2019

ஜபல்பூர்க் கல்லறையில் தமிழ்க்கல்வெட்டுகள்



——    துரை.சுந்தரம்



இந்தியக் கல்வெட்டியல் ஆண்டறிக்கை 1950-51:
            1945 – 1952 ஆண்டுகளுக்கான கல்வெட்டியல் அறிக்கைகள் அடங்கிய தொகுதி நூலைப்படித்துக் கொண்டிருக்கையில், 1950-51 ஆண்டுக்குரிய பகுதியில் ஒரு செய்தி கருத்தை ஈர்த்தது. இப்பகுதியின் பதிப்பாசிரியரான என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள், 1857-ஆம் ஆண்டில் இந்திய நாட்டில் எழுச்சியுற்ற சிப்பாய்க் கலகத்துடன் தொடர்புள்ள இராணுவ நடவடிக்கைகளுக்குச் சான்று பகரும் வகையில் அமைந்த இரு கல்வெட்டுகளைக் குறித்துச் செல்கிறார்.  மத்தியப் பிரதேசத்து மாநில ஜபல்பூர் (JABALPUR) மாவட்டத்தில் ஸ்லீமனாபாத் (SLEEMANABAD) நகரில் இருக்கும் இரண்டு கல்லறைகளில் தமிழ்க் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன எனப்பதிவு செய்கிறார். தமிழ்ச் சிப்பாய்கள் இருவர் இறந்துவிட்ட நிகழ்வைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கல்லறைகள் அவை. அவை பற்றிய விரிவான செய்தியை அறிந்துகொள்ளத் துணையாக, இவ்விரண்டு கல்வெட்டுகளும் INDIAN HISTORICAL QUARTERLY  என்னும் இந்திய வரலாற்றைக் கூறும் காலாண்டு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் இந்தியா முழுமைக்குமான தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வாளராக (GOVERNMENT EPIGRAPHIST FOR INDIA) இந்தக் காலகட்டத்தில் (1947-1951) பணியாற்றியுள்ளார். மேற்படிக் குறிப்பை வைத்து வரலாற்றுக் காலாண்டிதழை இணையத்தில் தேடிப் படித்ததில் அறியவரும் செய்திகளின் பதிவு இங்கே.  

கல்லறைக் கல்வெட்டுகள்:
            இந்தியக் கல்வெட்டு ஆய்வாளரான மேற்குறித்த என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள், தம் பணிப் பொறுப்பில், 1951-ஆம் ஆண்டு துறையின் களப்பணிப் பயணத்தின்போது ஸ்லீமனாபாத் (SLEEMANABAD) நகரில் இவ்விரு கல்வெட்டுகளையும் படியெடுத்துள்ளார். அது பற்றி இந்திய வரலாற்றுக் காலாண்டிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கல்லறைக் கல்வெட்டுகள் இரண்டையும் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார்.

ஸ்லீமனாபாத் (SLEEMANABAD):
            மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் (JABALPUR) மாவட்டம்  சிஹோரா (SIHORA)  வட்டத்தில் அமைந்துள்ள ஊரே ஸ்லீமனாபாத் (SLEEMANABAD). லக்னோவில் (LUCKNOW)  பிரிட்டிஷாரின் சார்பில் 1849-1856 காலப்பகுதியில் இருந்து வாழ்ந்த SIR WILLIAM SLEEMAN என்பவரின் பெயரால் அமைந்த ஊர் ஸ்லீமனாபாத் (SLEEMANABAD). இந்த ஊரில்,  ஜபல்பூர் (JABALPUR) -  கத்னி (KATNI)  சாலையில் 39/5  எண்ணிட்ட மைல் கல்லின் அமைவிடப்பகுதியில் இவ்விரு கல்லறைக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளைப் பற்றித் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தியவர் முனி காந்தி சாகர் (MUNI KANTI SAGAR) என்னும் பெயருடைய ஒரு ஜைனத் துறவியர்.  பனாரஸ் (BANARAS)  என்னும் காசியிலிருந்து ”ஞானோதயா”  என்னும் பெயரில் இந்தி மொழியில் ஓர் இதழை வெளியிட்டுவந்தவர். இந்தியத் தொல் பொருள்களைத் (ANTIQUITIES) தேடிக்கண்டுபிடிப்பதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்.

1857-ஆம் ஆண்டுச் சிப்பாய்க்கலகம்:
            கல்வெட்டுகள் அமைந்துள்ள இப்பகுதி இந்திய நாட்டின் “மஹாகோஷல்”  (MAHAKOSHAL)  என்றழைக்கப்பட்ட பகுதி.  நாடு முழுதும் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தோடு தொடர்புள்ள, இப்பகுதிக்கான இராணுவச் செயல்பாடுகளுக்குச் சான்றாக இக்கல்வெட்டுகள் திகழ்கின்றன என்கிறார் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள்.  இரு கல்வெட்டுகளும் கல்லறைகளில் காணப்படுபவை எனினும், முதல் கல்வெட்டு, கல்லறைக் கட்டுமானத்தின் மீது  எழுதப்பட்டுள்ளது. மற்றது கல்லறையின் சிலுவைப்பகுதியின் மீது எழுதப்பட்டுள்ளது. இறந்துபோன இரு சிப்பாய்களும் தமிழர்கள்; இரு கல்வெட்டுகளும் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டு:
            முதல் கல்வெட்டு எழுதப்பட்டது 1857-ஆம் ஆண்டு, நவம்பர் 6-ஆம் தேதி. இராமசாமி என்னும் சிப்பாயின் இறப்பைக் குறிப்பது. இவர், மதராஸ் பீரங்கிப்படையின் (MADRAS ARTILLERY) மூன்றாவது படைப்பிரிவில் பணியாற்றியவர்;   பீரங்கியை இயக்கும் சிப்பாய்ப் பணியாளருள் (GUN LASCAR) ஒருவர்.  முருவாடா என்னுமிடத்தில் நிகழ்ந்த போரில், நெற்றியில் குண்டடி பட்டு இறந்தவர்.  

கல்வெட்டின் பாடம்    (ஆங்கில எழுத்துகளில் தமிழ் ஒலிப்பில்)
            1      1857 வரு. நவ
            2      ம்பற் மீ 6 தி  மதறாஸ்
            3      ஆட்டில்லெறி 3 ணா(ம்)
            4      பட்டாளம் டி கம்ப[னி]
            5      கன் லஸ்கற் ராமசாமி
            6      முருவாடா சண்ட
            7      யில் குண்டு நெத்தி
            8      யில் பட்டு வெள்ளி
            9      கிழமை காலம்பர
            10    6 1/2 மணிக்கி மறண
            11    ம் அடந்தார் சிலமான்
            12    பாதையில் கொண்டுவந்
            13    து  அடக்கிலம் செய்தா
            14    [ர்]கள் யிது அறியவும்
            15    யிவருடைய தம்பி வேம்பிலி செய்[தார்]

கல்வெட்டு, எழுத்து நடைத் தமிழில் எழுதப்படாமல் பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்பட்டமையால் சில பிழைகளைக் கொண்டுள்ளது.  இராணுவத்தின்  பீரங்கிப்படையைக் குறிக்கும் ARTILLERY என்னும் சொல், ஆட்டில்லெறி என்றும்,  ஸ்லீமனாபாத் (SLEEMANABAD)  என்னும் ஊர்ப்பெயர்  சிலமான்பாதை என்றும் தமிழ்ச் சாயலில் எழுதப்பட்டுள்ளன.  கல்வெட்டின் இறுதி வரி (வரி 15), இடப்பற்றாக்குறையின் காரணமாகக் கல்லறையின்  பக்கவாட்டுப் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.  கல்லறையைக் கட்டி அமைத்தவர், இறந்துபோன வீரரின் தம்பி வேம்பிலி என்பவர் ஆவார்.  தமிழகத்திலிருந்து நீண்ட தொலைவில் இருக்கும் வடநாட்டு ஊர் ஒன்றில் போரில் இறந்துபட்ட தம் அண்ணனுக்கு நினைவுக் கல்லறை எழுப்ப அவருடைய தம்பி முனைந்து செயல்பட்டமை ஒரு பெருஞ்செயல் எனில், கல்லறையில் தமிழ் மொழியில் எழுதிவைத்தமை தமிழ் மொழியின்பால் அவரும் அவருடைய தமையனும் கொண்டிருந்த பற்றுக்குச் சான்று.

இரண்டாம் கல்வெட்டு:
            இரண்டாம் கல்வெட்டு குறிப்பிடும் தேதி 1858 நவம்பர் 29.  முதல் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்லறைக்கு அருகிலேயே இருக்கும் இன்னொரு கல்லறையின் சிலுவையில் எழுதப்பட்ட கல்வெட்டு.  28-ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த FIRST MARTIN MADRAS NATIVE INFANTRY  என்றழைக்கப்பட்ட தரைப்படையின் மூன்றாவது ’கம்பெனியில் பணியாற்றிய டேனியல் (DANIEL)  என்னும் சிப்பாய் இறந்துபோன நினைவுக்கு எழுப்பப்பட்ட கல்லறையின் கல்வெட்டு. இவர் இறந்தது போரில் அல்ல; படை முகாமில் இருந்தபோது காய்ச்சல் கண்டு ஜன்னியால் இறந்துபோனதாகக் கல்வெட்டு குறிக்கிறது.

கல்வெட்டின் பாடம்       (ஆங்கில எழுத்துகளில் தமிழ் ஒலிப்பில்)
            1      1858
            2      வரு. 28 வ
            3      து றிசிமெண்
            4      று மதறாஸ் நே
            5      ற்றிவ் இன்பெ
            6      ற்றி பஸ்ட்டு மாட்டின் 3 கம்
            7      பனி சிலமான்பாத்துக்கு தவு
            8      டு வந்து யிருக்கும்போது 3 கம்ப்
            9      பனி சிப்பாயி டேனியலுக்கு காச்
            10     சல் கண்டு ஜன்னி புறந்து மே மீ
            11     29 தேதி சனிக்கிழமைக் கால
            12     மே 5 1/2 மணிக்கி ஆ
            13     ண்டவருடைய பர
            14     கதி அடைந்தார்
            15     அதே 3 கம்ப்ப
            16     னியில் யிருந்த கி
            17     றிஸ்த்தவர்களு
            18     ம் டென்ற்று லாஸ்
            19     க்கர் கிறாம்ம் மெக்க
            20     ஏல் என்பவ
            21     ரும் எல்லாரும் யே
            22     கோப்பித்துக் கூ
            23     [டி] யிந்தக் கல்ல
            24     ரை கட்டி வை
            25     த்தோம்

            இக்கல்வெட்டும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. இவர் கிறித்தவர் என்பதால் முகாமில் உடனிருந்த கிறித்தவச் சிப்பாய்களும், ‘டெண்ட்’  லஸ்கர் கிரஹாம் மைக்கேல் என்பவரும் ஒன்று கூடிக் கலந்து பேசிக் கல்லறை எழுப்பியுள்ளனர். இக்கல்வெட்டில் டேனியலின் உறவினர் யாரும் தமிழகத்திலிருந்து வந்த செய்தி குறிக்கப்படவில்லை. கிறித்தவர் அனைவரும் ஒன்றுகூடிக் கல்லறை எழுப்பியது பற்றிக் கல்வெட்டில் குறிப்பிட்டாலும், தனியே ஒரு கிறித்தவர், கிரஹாம் மைக்கேல் என்பவர் சுட்டப்படுவதால், அவரை இறந்துபட்ட  டேனியலுக்கு நெருங்கியவராகவோ  ஊர்க்காரராகவோ கருத வாய்ப்புண்டு.  இரண்டு கல்வெட்டுகளிலும், சொல்லின் முதலில் வருகின்ற  “இ”கர உயிர் எழுத்து, “யி” என்னும் எழுத்தால் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.  

முதல் கல்வெட்டில்:
வந்து யிருக்கும்போது 3 கம்ப்
[ர்]கள் யிது அறியவும்
யிவருடைய தம்பி வேம்பிலி செய்[தார்]

இரண்டாம் கல்வெட்டில்:
னியில் யிருந்த கி
[டி] யிந்தக் கல்ல

இது போல் எழுதும் மரபு 16-17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகரக் காலத்துக் கல்வெட்டுகளில் தொடங்கிப் பிற்காலக் கல்வெட்டிகளிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.  எடுத்துக்காட்டாகச் சென்னை பார்த்தசாரதிக் கோயில் கல்வெட்டு ஒன்றில் (க.வெ.எண் : 535, தெ.இ.க. தொகுதி-8  காலம் கி.பி. 1603 – விஜய நகர அரசர் வீர வெங்கடபதி தேவ மகாராயர்),

“. . . . . . . .    தளிகை அமுது செயிறத்துக்காக . . . . சமைப்பித்த கெட்டி வராகன்
20  யிந்த வராகன் இருவதும்  . . . .     “

“ . . . . .   தான சமையமும் யிப்படி  யிவர்கள்  சொன்னபடி  . . . “
என எழுதப்பட்டுள்ளதைக் காண்க.

இரண்டாம் கல்வெட்டில், ஏழாம் வரியில், “சிலமான்பாத்துக்கு தவுடு வந்து யிருக்கும்போது”  என்னும் தொடரில் உள்ள ”தவுடு”  என்னும் சொல் தமிழ்ச் சொல்லா இல்லையா என்னும் ஐயம் எழுகிறது.  ”தவுடு” என்னும் சொல், படை முகாமைக் குறிக்கும் ”தண்டு”  என்னும் சொல்லுடன் தொடர்புள்ளதாக இருக்குமோ? அன்றி , “தவுடு”  என்னும் இந்திச் சொல்லுடன் தொடர்புள்ளதாக இருக்குமோ? மொத்தக் கல்வெட்டு எழுத்துகளையும், மேற்படி நூலில், என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் தமிழ் எழுத்தின் அச்சு வடிவத்தில் காண்பிக்கவில்லை;  ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழ் ஒலி பெயர்ப்பில் (TRANSLITERATION) காட்டியுள்ளார்.  கல்வெட்டின் படத்தை நூலில் பதிவு செய்யாததால் தமிழ்க் கல்வெட்டின் மூலப்பாடம் அறியப்படவில்லை.

செய்தியின் நம்பகத்தன்மை:
            கல்வெட்டுகளில் உள்ள செய்திகளின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மைக்கு லெப்கர்னல் இ. ஜி. பிதியன் ஆடம்ஸ்  (Lt. COLONEL E.G. PHYTHIAN ADAMS) என்பவரின் கூற்று உறுதி பகர்கிறது. இவர், “THE MADRAS SOLDIER 1746-1946”  என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலினை எழுதுவதற்காக இவர், இராணுவத் துறையின் ஆவணங்களை முழுதும் ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேற்குறித்த கல்வெட்டுகளைக் குறித்து இவரிடம் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் தொடர்புகொண்டதையும், ஆடம்ஸ் அவர்கள் கடிதம் மூலம் சில விளக்கக்கள் அளித்ததையும் என். லக்ஷ்மிநாராயண் ராவ் அவர்கள் குறிப்பிடுகிறார்.  ஆடம்ஸ் அவர்களின் குறிப்பிலிருந்து :

            “மதராசைச் சேர்ந்த “FOOT ARTILLERY”  பீரங்கிப் படைப்பிரிவுகள் மொத்தம் நான்கில் மூன்று ஆங்கிலேயர் பிரிவுகள்; ஒன்று இந்தியப் பிரிவு. முன்னதில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கம்பனிகள் என்னும் கணக்கில் பன்னிரண்டு கம்பனிகளும் பின்னதில் (இந்தியப் பிரிவு) பத்துக் கம்பனிகளும் ஆக மொத்தம் இருபத்திரண்டு கம்பனிகள்.  இப் பீரங்கிப்படைப்பிரிவுகள் ஜெனரல் விட்லாக் (GENL. WHITLOCK) தலைமையில் “மஹாகோஷல்”  பகுதியில் இயங்கின. ”கன் லஸ்கர்”  இராமசாமி  இக்கம்பனிகளுள் ஒன்றில் பணியாற்றியவர் என்பதில் ஐயமில்லை. A முதலான ஆங்கில எழுத்துகளின் வரிசையால் பெயர் சூட்டப்பெற்ற கம்பனிகள் மொத்தம் இருபத்திரண்டும் T என்னும் எழுத்துகளுக்குள் அடங்கும்.  இராமசாமி “டி”  கம்பனியில் பணியாற்றியதாகக் கல்வெட்டு குறிப்பதால், அவர் “D”  கம்பனியிலோ “T” கம்பனியிலோ பணியாற்றினார் என்பது தெளிவு. கன் லஸ்கர் பதவியில் இருப்போர் ஐரோப்பியராயினும் இந்தியராயினும் பீரங்கிப் படைப்பிரிவைச் (ARTILLERY) சேர்ந்தவர் கணக்கிலேயே அமைவர்.

            THE 28th MADRAS NATIVE INFANTRY என்னும் படைப்பிரிவானது MARTIN-KE-PALTAN என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது. கல்வெட்டில் 2-6 வரிகளில் குறிக்கப்பட்ட ‘28வது றிஜிமெண்று மதறாஸ் நேற்றிவ் இன்பெற்றி பஸ்ட்டு மாட்டின்’ என்பது மேற்குறித்த  THE 28th MADRAS NATIVE INFANTRY - MARTIN-KE-PALTAN  என்பதையே சுட்டுகிறது என்பது தெளிவு.”

முடிவுரை:
            மேற்படிக் கல்வெட்டுகள் மூலம் இறந்துபட்ட இரு வீரர்களும் தாம் பணியாற்றிய படையின் நம்பிக்கைக்குரிய வீரர்களாகத் திகழ்ந்தனர் என்றோ, அல்லது, தாம் சார்ந்த நாட்டின் மேல் பற்றுக்கொண்டவராய்த் திகழவில்லை என்றோ இரு வேறு கோணங்களில் பேசப்படலாம். ஆனால், கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டமை,  சொந்த மண்ணை விட்டு எவ்வளவு தொலைவைக் கடந்து சென்றாலும் ஒரு தமிழ்ச் சிப்பாயின் உள்ளத்தில் தாய்த்தமிழின்பால் தீயாய்க் கனன்று நிற்கும் காதலை மெய்ப்பிக்கும் செயலெனவே நிலைத்து நிற்கும்.





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.





Monday, April 15, 2019

மரபுப் பயணம்: பாரம்பரியம் மிக்க தமிழ் மரபை அறிந்து கொள்வோம்


வணக்கம்.

          வரலாற்று நோக்கில் ஆராய முற்படும்போது தமிழகம் ஆய்வாளர்களுக்குப் புதிய சவால்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கின்றது. எத்தனை எத்தனையோ மரபுகள் செழித்து வளர்ந்த நிலம் தமிழ் பூமி. கிராமங்களாகட்டும்... சிறு நகரங்களாகட்டும்.. பெரிய நகரங்கள் ஆகட்டும்.. சாலைகள், தெருக்கள் என எல்லா பகுதிகளிலும்  புராதனச் சின்னங்கள் பல, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நிறைந்து காணப்படுகின்றன. 

          மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு, இறந்தோர் வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு என்று மனித இனத்தோடு நெருக்கமான உறவு கொண்ட உளவியல் ரீதியான இறை நம்பிக்கைகள் ஒருபுறம். பண்டைய வழிபாட்டுக் குறியீடுகளாக அமைகின்ற கொற்றவை வழிபாடு, நவகண்ட வழிபாடு, வீரர்கள் வழிபாடு, தாந்திரீக வழிபாடு என்பது ஒரு புறம். அமைப்பாக்கப்பட்ட வழிபாடுகளாகத் தத்துவ அடிப்படைகளோடு இணைந்து வருகின்ற சாக்தம், பௌத்தம், சமணம், வைணவம், சைவம், கிருத்துவம், இஸ்லாம் மற்றும் ஏனைய பல வழிபாடுகள் என இவை ஒரு புறம். இவையெல்லாம் தமிழகத்தின் பன்முகத்தன்மையை விளக்க நம் முன்னே சான்றுகளாக இருப்பவை.

          இந்த பன்முகத் தன்மை தான் தமிழக வரலாற்றின் வளம். தமிழ் நிலத்தின் சொத்து! 

          சடங்குகள்,  நாட்டார் இலக்கியங்கள், கூத்துக்கள், நாடகங்கள் இவை அனைத்தும் தொன்றுதொட்டு தமிழர் மரபின் தொடர்ச்சியாக, தமிழ் நிலத்தில் வாழ் மக்களின் சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகப் பரிணாமம் பெற்று மக்கள் வாழ்வியலில் அங்கத்துவம் பெற்றுத் தொடர்கின்றன. இந்தப் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை உருவாக்க முற்பட்டால் தமிழ் நிலத்தின் வளமான மரபு இறந்து போகும். ஒற்றை தெய்வ மரபு தமிழக நிலப்பரப்பின் அடையாளமல்ல. தமிழ் நிலத்தின் அடையாளம் இந்தப் பன்முகத்தன்மையே. 

          தமிழக வரலாற்றையும், தமிழ்மொழியின் தொன்மையையும், நூல்களின் வாசிப்பின் வழி அறிந்து கொள்ளும் அதே நேரம், நேரடியாகச் சென்று, புராதன சின்னங்களைப் பார்த்து அனுபவித்து அறிந்து கொள்வது சிறந்த அனுபவமாக அமையும்.  அவை தரும் அனுபவங்கள் மனதில் பசுமையாகப் படிந்திருக்கும்.  இந்தக் கருத்தின் அடிப்படையில் தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு ஒரு வரலாற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. 

          மார்ச் மாதம் 17ஆம் தேதி தமிழகத்தின் சென்னைக்கு அருகாமையில், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட புராதன சின்னங்கள் சிலவற்றை தொல்லியல் ஆய்வாளர்களுடன் இணைந்து சென்று அவற்றை நேரில் பார்த்து ஆராய்ந்து வர இந்தப் பயணம் அடிப்படையை வகுத்திருந்தது. 35 தன்னார்வலர்கள் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டனர். மகேந்திரவாடிதிருவல்லம்மேல்பாடி, ஆற்காடு, மாமண்டூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த பயணத்தின் போது நேரடியாகச் சென்று காணும் வாய்ப்பு அமைந்தது. மனதில் ஆழமாகப் பதியும் வகையில் வரலாற்றுத் தகவல்களை இப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல்வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கியது. 

          இத்தகைய வரலாற்றுப் பயணங்களும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் பணிகளில் ஒன்றாக இவ்வாண்டு தொடக்கம் இணைக்கப்படுகின்றது என்பதை வாசகர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றோம். முதலாம் மரபுப் பயணம் தந்த வெற்றியின் அடிப்படையில் இவ்வாண்டு மேலும் ஒரு மரபுப் பயணம் இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறும். அது தொடர்பான செய்திகளை அறிய  தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கங்களையும், அறிவிப்புச் செய்திகளையும் தொடர்ந்து வாசித்து வாருங்கள். 

          சீரிய ஆய்வுகளின் வழி பன்முகத்தன்மை கொண்ட பெரும் பாரம்பரியம் மிக்க தமிழ் மரபை அறிந்து கொள்வோம்.  தமிழர் மரபைப் பேணிக்காப்போம்.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

காணக்கிடைத்த செப்பேடுகள்



——    முனைவர் வீ.ரேணுகாதேவி


அச்சு இயந்திரங்களின் வருகைக்கு முன்னர் எழுதப்படும் பொருள்களாகக் கல், ஓலை, உலோகம், மரம், சங்கு, துணி, சுடுமண் என பலவகைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் கல், ஓலை, செம்பு ஆகியவற்றின் பயன்பாடு மிகுதியாகும்.

கல்லில் எழுதப்பட்ட செய்திகள் கல்வெட்டாகவும், ஓலையில் எழுதப்பட்டவை சுவடிகளாகவும், செம்பில் எழுதப்பட்ட செய்திகள் செப்பேடுகளாகவும் இன்றளவும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. இவை எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் வெளிப்படுத்தும் வரலாறு, பண்பாடு, கலை, சமயம். சமுதாயம் மற்றும் பொருளாதாரம் பற்றிய செய்திகளும் வளமானவை. அவை ஒரு மொழியின், சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன் உடையதாக உள்ளன.

தமிழகத்தில் முதலில் கல்வெட்டுக்களைத் தொகுக்க ஆரம்பித்த ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் கள ஆய்வுகளில் செப்பேடுகளையும் புதையல்களாகக் கண்டறிந்தனர். வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக ஆங்கிலேய அரசு பழைய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு புதிய வடிவில் தாள் ஆவணங்கள் வழங்கியபோது ஏராளமான செப்பேடுகள் அரசின் கருவூலங்களைச் சென்றடைந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 செப்பேடுகள் இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் ஆங்கிலக் குறிப்புகளுடன் பதிவாகியுள்ளன. பல செப்பேடுகள் படங்கள், வாசகங்கள், எழுத்துப் பெயர்ப்பு, மொழி பெயர்ப்பு ஆய்வுக்குறிப்புகளுடன் எபிகிராபிகா இண்டிகா தொகுதிகளில் வெளிவந்துள்ளன. இந்தியன் ஆன்டிகுவரி, தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவற்றிலும் சில வெளிவந்துள்ளன. தமிழகச் செப்பேடுகள் தொகுதி-1 இல் 40 செப்பேடுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஒன்று வெள்ளிப் பட்டயம், இரண்டு தெலுங்கு மொழியில் உள்ளவை.

சிதறல்களாக ஆங்காங்கே வெளியிடப்பட்டுள்ள செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில்கொண்டு தி.நா.சுப்பிரமணியன் பல்லவர் செப்பேடுகள் 30, பாண்டியர் செப்பேடுகள் 10 என்ற இரு தொகுதிகளை தமிழ் வரலாற்றுக் கழகம் வாயிலாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார்.

இராமேசுரம் கும்பாபிஷேக மலர் தொகுத்த சோம. லெ. இராமநாதபுரம் அரண்மனையிலிருந்த செப்பேடுகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துணை கல்வெட்டுப் பயிற்சி நிறுவன மாணவர்களைக் கொண்டு படித்து அவற்றின் 30 வாசகங்களை வெளியிட்டார். இதன் காரணமாக ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு பலரும் செப்பேடுகளைத் தேடி இதழ்களில் வெளியிடும் போக்கு முனைப்பு பெற்றது. மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், கொங்கு நாட்டுச்  சமூக ஆவணங்கள், திருவாடுதுறை ஆதீனச் செப்பேடுகள், திருப்பனந்தாள் ஆதீனச் செப்பேடுகள் எனப் பல்வேறு  தொகுதிகளாகச் செப்பேடுகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வேளஞ்சேரி திருத்தணி செப்பேடுகள், திருமலை நாயக்கர் செப்பேடுகள் ஆகிய இரு தொகுதிகளை வெளியிட்டதோடு, கல்வெட்டு காலாண்டிதழ் கருத்தரங்கு கட்டுரைத் தொகுதி, மாவட்டக் கையேடு ஆகியவற்றில் அவ்வப்போது செப்பேட்டு வாசகங்களை வெளியிட்டுள்ளது. இதன் தொல்லியல் செய்தி மடலில் ஐந்து செப்பேடுகள் பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதுவரை அச்சில் வெளிவந்த செப்பேடுகள் அனைத்தையும் பற்றிய செய்திகளை விவரிக்க இயலாமையால் தமிழகச் செப்பேடுகள் என்ற தொகுதியில் வெளிவந்த 40 செப்பேடுகள் பற்றிய செய்திகள் விரித்துரைக்கப்படுகின்றன

தமிழகச் செப்பேடுகள் தொகுதி – 1ல் மதுரை நாயக்க மன்னர் தொடர்பான செப்பேடுகள் பத்தும், சேதுபதிகள் தொடர்பானவை ஐந்தும், உள்ளன. நத்தம் பாளையப் பட்டுகள் - 3,  கூளப்ப நாயக்கர்-2, அரியலூர் மழவராயர் -2, தென்காசிப் பாண்டியர் -1, வீரபாண்டிய கட்டபொம்மன்-1, விஜயநகர நாயக்கர்-1, ஆங்கிலேயர்-2 என மொத்தம் 27 செப்பேடுகளில் ஆட்சியாளர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஏனைய 13 செப்பேடுகளில் ஆட்சியாளர்கள் பற்றிய குறிப்புகள், பெயர்கள் இல்லாதவை.

இச்செப்பேடுகள் அனைத்தும் ஒரு ஏட்டில் மட்டும் வாசகம் உடையவை. மயிலாடுதுறை, சேடபட்டிமேல்சேவூர் ஆகிய செப்பேடுகள் வார்ப்பு முறையில் செய்யப்பட்டவை. ஏனையவை செப்புத் தகடுகளாக உள்ளவை. முன்னதில் உருவங்கள் வார்ப்பு முறையில் புடைப்பாக உள்ளன.  தகடுகளாக உள்ள பலவற்றில் உருவங்கள் கோட்டுருவங்களாக உள்ளன.

பெரும்பாலான செப்பேடுகள் தமிழகத்தின் தென்பகுதியைச் சேர்ந்தவை. திருவண்ணாமலை, மேல்சேவூர், நெய்வேலிச் செப்பேடுகள் வட பகுதியைச் சேர்ந்தவை. இச்செப்பேடுகள் பலவும் தமிழ்ச் சமூகங்கள் தொடர்பானவை. சமூகங்களின் தோற்றம் பற்றிய விரிவான புராணங்கள் நெய்வேலி, மானூர், திருவண்ணாமலை செப்பேடுகளில் காணப்படுகின்றன. 

திருமானூர், அரியலூர், நத்தம், மேல்சேவூர்திருவாடுதுறை, செங்கல்பட்டு (வெள்ளிப் பட்டயம்) திருநெல்வேலி 1, 2, மானூர், இராமநாதபுரம், மூலைக்கொத்தளம் -2, முசிறி ஆகியச் செப்பேடுகள் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய செய்திகளைத் தருகின்றன.

அரியலூர், நத்தம் செப்பேடுகள் சந்தைகளில் பெறப்பட்ட வரி வருமானம் கோயில்களுக்குக் கொடுக்கப் பட்டதைச் சொல்கின்றன.

நத்தம் செப்பேடு பேட்டைகளில் உள்ள வணிகர்களில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியரும் வரி வருமானத்தைக் கோயில்களுக்குத் தர ஒப்புதல் அளித்ததாகக் காட்டுகின்றன.

இந்து கோயில்களுக்கான இஸ்லாமியர் பங்களிப்பு பற்றி உத்திர கோசமங்கைதிருநாகேஸ்வரம், நயினார் குப்பம் கல்வெட்டுக்கள் வழியாக அறிய முடிகின்றது. இவற்றின் வழியாகப் பெறப்படும் செய்திகள் சமயப் பூசல்களைக் குறைத்துச் சமயப் பொறையை ஏற்படுத்தக்கூடியவை.

மேல்சேவூர் செப்பேடு செட்டிகள் தங்கள் சமூக மக்களிடையே நிகழும் நன்மை நிகழ்வுகளில் விதிக்கப்படும் கட்டணங்களைக் கோயில் வழிபாட்டிற்கு வருவாய் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது.

இவ்வாறு பல சாதி சமூகங்கள் தங்களுக்கான மடங்களை ஏற்படுத்திக் கொள்வதையும், அவற்றின் நடவடிக்கைகளையும், திருவண்ணாமலை 24 மனை செட்டிகள் செப்பேடு, சேடப்பட்டி அம்பலக்காரர் செப்பேடு, மதுரை ஆரப்பாளையம் குயவர் - செட்டியார் செப்பேடு ஆகிய செப்பேடுகள் வெளிப்படுத்துகின்றன.

அரசனால் பாராட்டப்பட்டு நாட்டாண்மை; தலைமை பெறுவதை சந்தையூர், தாருகாபுரம்பாலக்கோப்பை செப்பேடுகளும், சமயத் தலைவர் ஒருவரால் நாட்டாண்மைச் சிறப்புப் பெற்றதை பள்ளப்பட்டிச் செப்பேடும் காட்டுகின்றன.

கைக்கோளர் சமூகத்தைப் புகழ்ந்து பாடியவருக்குக் கொடுத்த மரியாதைச் சிறப்புகளை மயிலாடுதுறைச் செப்பேடு காட்டுகிறது. இடங்கை, வலங்கை பிணக்கில் இடங்கையினருக்குச் சாதகமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவரைப் பாராட்டி மரியாதைகள் செய்யப்பட்டதை நெய்வேலி பண்ணாட்டார் செப்பேடு கூறுகின்றது.

சந்தையூர் செப்பேடு சந்தையூர்  சலுப்ப பெத்தண்ண செட்டி அதிகாரம் செய்து வந்தபோது அவனிடம் மாதம் 9 கலம் தானியக் கூலிக்கு வீரண்ண சேர்வை காவல் பணி செய்து வந்தான், சந்தையில் இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு வீரண்ணன் சேர்வை சலுப்ப பெத்தண்ணனின் தலையை வெட்டி ரத்தக்கைகளோடு நடுச் சாமத்தில் கூளப்ப நாயக்கர் முன்கொண்டு வந்து வைத்து சந்தையூரை கூளப்ப நாயக்கரின் பாளையப்பட்டு ஊராக்கினான். கூளப்ப நாயக்கரும் ராணுவரும் மகிழ்ந்து அவனுக்கு சந்தையூரைச் சேர்ந்த 18 பட்டி காவல் நாட்டாண்மை அளித்தனர்.  அவனது சாதியை அவனை கம்பளக்காரனாகவும், தென் மலை குத்தகைக்காரனாகவும் அங்கீகரித்து பட்டயம் எழுதிக் கொடுத்தனர். கூளப்ப நாயக்கர் பாளையப்பட்டு ஏரிகள் பாசனத்தில் 30 கலம் விதைப்பாடு நஞ்சை நிலமும், 60 சங்கிலி புஞ்சை நிலமும் தரப்பட்டது. 18 பட்டி கிராமத்து வீடுகள் ஒவ்வொன்றும் 1 பணம் 3 குறுணி தானியம் தருவதென்றும், ஆடு உள்ளவர்கள் 1 கிடாய் தருவதென்றும், அரண்மனைக்கு அடுத்து இரண்டாவதாக இவனுக்குக் கோயில்களில் தீர்த்தம் திருமாலை தருவதென்று முடிவாயிற்று என்று செப்புகின்றது.

சாட்சிகள், பட்டயம் எழுதியவர் பெயர்களும் ஓம்படைக்கிளவியில் சதுரகிரி சிவன் பெருமாள் கோயில்களும் சொல்லப்பட்டுள்ளன.

பஞ்சமா சப்த வாத்தியக் கருவியை இயக்குபவர்களான நாகாபாசத்தார் தங்களுக்கென்று தலைவரைத் தேர்வு செய்து அவருக்கு மரியாதைச் சிறப்புகள் செய்ததை ஆழ்வார்பேட்டை செப்பேடு-1 பதிவு செய்துள்ளது.

பாளையப்பட்டுப் பாளையக்காரர்கள் பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை நத்தம், வேலன்பட்டி, பழனிச் செப்பேடுகள் காட்டுகின்றன. திருச்செந்தூர்க் கோயில் திருப்பணிக்கு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தன் ஆளுகைப் பகுதி வரி வருமானத்தை அளித்ததைப் பற்றி திருவாடுதுறை செப்பேடு காட்டுகிறது.

பாளையப்பட்டுக்களை அடக்கி ஆங்கிலேயர் கம்பெனி ஆட்சியை நிறுவிய அரசியல் நிகழ்வுகளை எட்டயபுரம் விளம்பிச் செப்பேடு செப்புகின்றது.


ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதும் கடல் கடந்து வெகு தொலைவிலிருந்த அரசுத் தலைமையைப் போற்றித் தமிழகத்தில் அன்னதானம் இலவச ஆடைகள் மற்றும் தெய்வத்திற்கு அணிகலன் வழங்கியதைச் செங்கல்பட்டு வெள்ளிச் செப்பேடு வெளிப்படுத்துகின்றது.

மீனாட்சிபுரம் செப்பேடு குரும்பர் சமுதாயப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றிய “தீண்குலச் சமயத்தைச்” சேர்ந்த இஸ்லாமியரைப் போற்றுவதைப் பார்க்கலாம். சமயங்களிடையே சமயப்பொறை மட்டுமின்றி இடருற்ற காலங்களில் உதவும் சகோதரத்துவமும் இருந்தமைக்கு இச்செப்பேடு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பண்டைய காலத்தில் வழக்கிலிருந்த வராகன், பணம் முதலிய செலவாணிகளிலும் பேட்டைகளிலும் துறைமுகங்களிலும் வந்து சென்ற சரக்குகள் அவற்றிற்கான வரி விதிப்புகள் சமூக மக்கள் ஒவ்வொரு நிகழ்விற்கும் விதித்துக் கொண்ட கட்டணங்களும் பொருளாதாரச் செய்திகளை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவுபவையாக உள்ளன.

வெம்பக் கோட்டைச் செப்பேடு அரசின் ஆதரவோடு எப்படி வரிவிதிப்பு உண்டாக்கப்பட்டது அது மக்களால் எதிர்க்கப்பட்டது, பின்னர் அது தவிர்க்கப்பட்டது போன்ற செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வெள்ளிக்குறிஞ்சி செப்பேடு பண்டாரம் உறவின் முறையார் தங்களிடையே உள்ள மண உறவுகள் பற்றிய நெறிமுறை ஏற்படுத்திக் கொண்டதை வெளிப்படுத்துகின்றது.

பழனிச் செப்பேடு குமார லிங்கைய நாயக்கர் தனது தந்தை ஏறுதாது லிங்கைய நாயக்கர் மற்றும் தாயார் தாதம்மாள் அவர்கள் பெயரில் இரண்டு சத்திரங்கள் கட்டி நிர்வாகச் செலவுக்காக ஏற்கப்பட்டி கிராமம், காரைக்குண்டு, அம்மாபட்டி ஆகிய ஊர்களைக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் உள்ள நிலங்களில் எல்லைகளின் திசைகள் ஈசானிய, அக்னி, நிருதி, வாயு என்று திரை பாலகர்களின் பெயரில் சொல்லப்பட்டுள்ளது. நிலத்தின் ஒவ்வொருத் திருப்பத்திலும் எல்லைக் கல்லாகச் சூலக்கல் நடப்பட்டதால் ‘சூலக்கல் 11க்குள் சேர்ந்த’, ‘சூலக்கல் 14க்குள் சேர்ந்த’ என்று நிலங்கள் குறிக்கப்படுகின்றன.

இச் செப்பேட்டில் உள்ள வாசகம் அப்படியே நத்தம் அருகில் உள்ள சத்திரம் ஊராளிப் பட்டியில் கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொள்க என்று வரும் கல்வெட்டுச் சொற்றொடர்க்கு இச்செப்பேடு நல்ல காட்டாக உள்ளது. இதனில் சொல்லப்படும் சத்திரங்கள் இன்றுப் பழனிக்குப் பாதயாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ளன.

தாருகாபுரம் செப்பேடு தென்காசிப் பாண்டியர் எல்லைக்குட்பட்ட மலையங்காட்டுப் பகுதியில் தீயவனும், மிருகத்தன்மை உடையவனுமான சந்திரன் என்ற ஒரு எதிரி இருந்ததாகவும் அவன் பல அரசர்களைக் கொன்று வந்ததாகவும் அவனை கொண்டையன்கோட்டை  மறவரில் ஒருவனான திருவண்ணாத் தேவர் வெட்டி வெற்றி கொண்டான். ஆதலால் திருவண்ணாத் தேவர்க்கு இந்திரத் தலைவன் என்று பட்டம் தரப்பட்ட செய்தி சொல்லப்பட்டுள்ளது. இவருக்கு நிலமை காணி ஆட்சியாக, உம்பளச் சர்வமானியமாக 22க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழங்கப்பட்டன. இவ் கிராமங்களின் பெயரும் அவை உள்ளடக்கிய பகுதியின் எல்லையும் இச் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இவர் தமக்குப் பல்லக்கு, தீவட்டி, குடை, கொடி, சாமரம் முதலிய பரிவாரங்கள் வைத்துக் கொள்ளத் தேங்காய் தொட்டு உரிமை வழங்கியதும், கோயில் மரியாதை வழங்கியதையும் சொல்வதாக உள்ளது.

அரித்துவாரமங்கலச் செப்பேடு தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கருக்கு வெள்ளாளர்கள் அனைவரும் ஒன்று கூடி கோயில்களுக்கு நிவந்தம் அளித்ததைப் பதிவு செய்து அளித்ததைக் குறிப்பதாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்த பல்வேறு பிரிவு வெள்ளாளர்களைப் பற்றியும் அவர்கள் கோயில்களுக்கு அளித்த, கொடைகள் பற்றியும் கூறுவதாக இச் செப்பேட்டுச் செய்திகள் உள்ளன.

செப்பேடுகளின் பொதுவாகக் கோயில் கொடைகள், மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள், வசூல்கள், அரசர்களின் மெய்தீர்த்திகள் பற்றிய செய்திகளையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.

ஒன்பது கம்பளம், கவுண்டர்கள், செங்குந்தர், பண்டாரம், பள்ளு, செட்டி, வெள்ளாளர், நாயக்கர், தேவர் எனச் சாதீயப் பெயர்களும் செப்பேடுகளில் காணக் கிடைக்கின்றன.

பழைய அளவு முறைகள் பற்றிய செய்திகளும் காணக் கிடைக்கின்றன.

கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் ஒரு மொழியின் தொன்மையைப் பறைசாற்றுபவை. அவை மொழி வரலாறு, மொழி அமைப்பு, மொழி நடை, சமூக வரலாறு, அமைப்பு, பண்பாடு, கோயில் வழிபாடு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள், நி;நிலக்கொடைகள், வரி விதிப்பு, வரி வசூல், அரசியல் அமைப்பு, பொருளாதாரம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணையாக அமைந்துள்ளன. அவற்றை எரியூட்டி மகிழாது போற்றிப் பாதுகாப்பது நமது தலையாயக் கடமையாகும்.




தொடர்பு:
முனைவர் வீ.ரேணுகாதேவி
(prof.renuga@gmail.com)
தகைசால் பேராசிரியர்
மேனாள் துறைத்தலைவர்
மொழியியல் துறை
மேனாள் புலத்தலைவர்
மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 625 021.









Saturday, April 13, 2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - திருஅமுது படையல்


——    மா. மாரிராஜன்


கோவிலுள்ள இறைவனுக்கும், கோஷ்டத்தில் உள்ள இறைவடிவங்களுக்கும்,  எடுப்பித்த செப்புத் திருமேனிகளுக்கும், தினசரி நெய்வேத்தியம், பூஜை, திருஅமுது படையல், தினசரி நடக்கும் ஒரு அன்றாட
நிகழ்வாகும்..

அமுது படையலுக்குப் பயன்படுத்தப்பட்ட உணவு வகைகளை, பக்தர்களுக்கும், அடியார்களுக்கும் தானமாக வழங்குவார்கள். அடியார்களுக்கு வழங்கப்படும் உணவை ஒரு சட்டியில் இட்டுத் தருவார்கள்..இதில் என்ன சிறப்பு? உணவு இடப்பட்டுள்ளச் சட்டியை ஒரு வாழை இலையால் மூடி தந்துள்ளார்கள். அந்த வாலை இலை வாங்குவதற்குக் கூட நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகா.. என்னவொரு உயர்ந்த நாகரீகம்.



இராஜேந்திரரின் 19 ம் ஆட்சியாண்டு. 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். அரசனின் வேலையாள் உதயதிவாகரன் என்பவர்  கார்த்திகை திருநாள்போது இறைவனுக்கு அமுது படைக்க, பொன்நிவந்தம் வழங்குகிறார்.

இதைக்கொண்டு அமுது படையலுக்குத் தேவையான உணவு வகைகள்,  அதற்குத் தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.  தயாரிக்கும் உணவை இருபது அடியார்களுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
உணவு தருவதற்குச் சட்டியும்,  அதைமூடித்தருவதற்கு வாழை இலைகளும் வழங்கப்பட்டன.

இனி கல்வெட்டுச்செய்தி. முதல் பகுதி இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி. தொடரும் பகுதியில் மேற்கண்ட திருஅமுது படையல் செய்தி.

மாரி-ராஜேந்திரன்1.jpeg
மாரி-ராஜேந்திரன்2.jpeg
தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி 8.
எண் 66.

S.I.I vol. 8. No 66.





தொடர்பு:  மா. மாரிராஜன் (marirajan016@gmail.com)






தஞ்சை பெரிய கோவிலில் இராஜராஜரின் பிரபல வாழைப்பழ வாய்ப்பாடு


——    மா. மாரிராஜன்




இக்கல்வெட்டு இராஜராஜனின் தொலைநோக்குப் பார்வை, நிதி மேலாண்மை, என்று பல ஆய்வாளர்கள் சிலாகித்துக் கூறுவர்.

பெருவுடையார் கோவிலின் மேற்குப்புற திருச்சுற்றுமாளிகையின் உட்புறத்தில் உள்ள சிறு பிள்ளையார் முகப்பில் கீழ்க்கண்ட கல் வெட்டு உள்ளது.

இக்கோவில் பிள்ளையாருக்கு தினசரி அமுது படைத்தல் வேண்டும்.!

தினம் ஒன்றுக்கு 150 வாழைப்பழங்கள் வேண்டும். இந்த அமுது படையல் நிகழ்வானது வருடம் முழுவதும் தடையின்றி நடக்க அரசர் ஒரு ஏற்பாட்டை நிறுவினார்.

ஒரு வைப்புத்தொகை உருவாக்கப்பட்டது. வாழைப்பழம் வாங்குவதற்காக வைப்புத் தொகை அளிக்க, தஞ்சையின் முக்கிய நான்கு தெருக்களைச் சேர்ந்த நகரத்தார்கள் முன் வந்தார்கள். அவர்கள் முறையே 60 காசு., 120 காசு., 120 காசு., 60காசு என  மொத்தம் 360 காசுகள் நிவந்தனம் அளித்தனர். இந்த வைப்புத்தொகை 360 காசுகள் தஞ்சை வணிகர்களுக்கு ஆண்டுக்கு 12.5 % என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டது.! வருட வட்டியாக 45 காசுகள் ( 360 ÷12.5% = 45) பெறப்பட்டது.!

பிள்ளையாருக்கு அமுத படைக்க நாளொன்றுக்கு 150 வாழைப்பழங்கள் தேவை. ஆண்டுக்கு 360 நாட்கள் எனத் தெரிகிறது. ஆக... ஒரு வருடத்திற்குத் தேவைப்படும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை 360 × 150 = 54000. அன்றைய நாளில் ஒரு காசுக்கு 1200 வாழைப்பழங்கள் கிடைத்தன!

வட்டித்தொகையாக கிடைத்தது 45 காசுகள்! எனவே 45 ×1200 =54000 வாழைப்பழங்கள் கிடைத்தன! பிள்ளையாருக்கும் தடையின்றி வருடம் முழுவதும் படையல் தொடர்ந்தது.! இச் செய்தியினை விரிவாகக் கூறும். கல் வெட்டு  வரிகளைப் படித்துப் பாருங்கள்.!

சமுத்திரம் போல் இருக்கும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு சிறு துளிபோல் காணப்படும் பிள்ளையார் கோவிலுக்கு தினசரி நெய்வேத்தியம் செய்ய இவ்வளவு ஏற்பாடுகள் என்றால், தஞ்சை பெருவுடையாருக்கு பூஜைகள் நடக்க எவ்வளவு , எவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.? ஒட்டு மொத்த சோழ தேசத்துக் கோவில்களின் நிர்வாகம் எப்படி இருந்திருக்கும்.?

ஒட்டுமொத்த சோழநாட்டின் நிர்வாகம்..! ராஜராஜ சோழனின் சிறப்பை எவ்வாறு விவரிக்க முடியும் !!!!



இராசராசனின் ‘வாழைப்பழ வாய்ப்பாட்டு’க் கல்வெட்டு 
“ஸ்வாதிஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு வாழைப்பழம் அமுது செய்தருள உடையார் பண்டாரத்துப் பொலிசையூட்டுக்கு வைத்தருளின காசும் இக்காசு பொலிசையூட்டுக்கு கொண்ட அங்காடிகளும் கல்லில் வெட்டியது.
ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள நிசதம் வாழைப்பழம் நூற்றைம்பதாக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் ஆயிரத்திருநூறாக வந்த காசு நாற்பத்து ஐஞ்சுக்கு காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைகாற் காசு பொலிசையூட்டாக
செல்லவைத்த காசு முன்னூற்று அறுபது
இக்காசில் தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி நித்த விநோதகப் பெருந்தெருவில் நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு அறுபதினாற் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு ஏழரைக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் இருபத்தைஞ்சு
தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி மும்முடிச் சோழப் பெருந்தெருவில் நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு நூற்றிரு பதினாற் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு பதினைஞ்சுக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் ஐம்பது
தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி வீரசிகாமனிப் பெருந்தெருவில் நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு நூற்றிரு பதினால் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையூட்டாக ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு பதினைஞ்சுக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் ஐம்பது
தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி திரிபுவன மாதவிப் பேரங்காடி நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு அறுபதினாற் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு ஏழரைக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் இருபத்தைஞ்சு”
மாரி-ராஜராஜன் கல்வெட்டு.jpeg
மாரி-ராஜராஜன் கல்வெட்டு2.jpeg

தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி 2.
எண் 37.

S.I.I vol. 2. No 37.



தொடர்பு:  மா. மாரிராஜன் (marirajan016@gmail.com)







அறிவும் உணர்ச்சியும்



——    ரவி அண்ணாசாமி 




அறிவொருபுறமு ணர்ச்சியோர்புறம்
அடிதடிஎன்னுள்ளும் அன்றாடம் நிகழும்
உணர்ச்சியோர் பேதையென் றறிவு கூறும்
அறிவே நீ பேடியெனுணர்ச்சி கூவும்
அந்தந்த நொடிகளில் ஒன்றே வெல்லும்

அறிவதுவும் உணர்ச்சியதும் பொருள்வேறல்ல
அடித்தளத்தில் இருபொருளும் ஒன்றாம் உணர்வாம்
தெரியும் பொருள் தெளிந்தபின்பே அறிவாய் மாறும்
அறியப்படா நிகழ்வு தோன்றில் உணர்ச்சி ஓங்கும்
ஆண்பெண்ணாய்க் கூடுமிவை ஆக்கம் சேர்க்கும்
அடக்குமுறை ஆட்சி பெற்றால் அழிவே மிஞ்சும்

இரண்டிலும் உணர்ச்சியே அறிவிலும் மேலாம்
நிகழுணர்வின் வெளிப்பாடாம் பயனும் நேராம் - அறிவை
அடக்குதலும் அனுமதிப்பும் அதனின் செயலாம்
உணர்ச்சியை உள்வாங்கி உணர்வில் நின்றால்
உண்மைப்பொருள் உணர்வாகி அறிவாய்த் தோன்றும்
உணர்ச்சியும் காதல்கொண்டறிவை நோக்கும்






தொடர்பு:  ரவி அண்ணாசாமி  (ravi.annaswamy@gmail.com)