Tuesday, January 8, 2019

வீரகேரளர் ஆட்சியில் கொங்குநாடு

—    துரை.சுந்தரம்


முன்னுரை:
கோவையில் இயங்கிவரும் வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வுகளில், 2018-ஜூன் மாதச் சொற்பொழிவு மேற்கண்ட தலைப்பில் நிகழ்ந்தது. உரையாற்றியவர் முனைவர் இரா.ஜெகதீசன் அவர்கள். அச் சொற்பொழிவில் கேட்ட வரலாற்றுச் செய்திகளின் பகிர்வு இங்கே:

கொங்கு நாட்டின் வரலாறு:
தமிழக வரலாற்றில் கொங்குநாட்டு வரலாறு மிகக் குறைவான ஒன்றாகவே உள்ளது.  வரலாற்றுக் காலம் தொட்டு, கொங்குநாடு சிறப்பான பண்பாட்டைக் கொண்டது எனினும் முற்றான வரலாறு அறியப்படாததற்கு வரலாற்றை வெளிப்படுத்தும் முதன்மைச் சான்றுகளான  (மூலச் சான்றுகள்) பல கல்வெட்டுச் சான்றுகள் வெளிவராமையே காரணமாகும். தென்னிந்தியக் கல்வெட்டுகளின் இருபத்தாறாம் தொகுதியில் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. கொங்கு நாட்டில், ஈரோட்டுக்கருகில் அமைந்துள்ள கொடுமணலில் நடந்த அகழாய்வு பற்றிய அறிக்கை வெளிவரவில்லை; தொல்லியலாளர் கா.ராஜன் அவர்களுக்குப் பின்னரே அகழாய்வுச் செய்திகள் வெளியாயின. கொங்கு நாட்டு வரலாற்றுக்குச்  சமூகத்தில் சிறப்பிடம் அல்லது முதன்மையிடம் ஏற்படவில்லை. கல்லூரிகளிலும் வரலாற்றுத்துறைக்கு முதன்மை அளிக்கப்படவில்லை. கோவை கிழார் தொடங்கிப் பலர் எழுதியுள்ள நூல்களில் கொங்குநாட்டு வரலாறு முழுதாக எழுதப்படவில்லை. கோவை கிழாரின் நூலில், கொங்கு நாட்டின் அரசியல் வரலாறு மட்டுமே காணலாம். கோவை கிழார், வீரகேரளரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆரோக்கியசாமி அவர்களின் நூல் ஆங்கிலத்தில் அமைந்து விட்டதால் கொங்குநாட்டின் பொதுக்குடிகளுக்கு அது எட்டவில்லை. புதுக்கோட்டைப் பேராசிரியர் மாணிக்கம் அவர்கள் தமிழில் எழுதியுள்ள நூல் குறிப்பிடத்தக்கது.

வீரகேரளர்:
வீரகேரளர் கொங்கு நாடு முழுவதையும் ஆட்சி செய்யவில்லை. கொங்கு நாட்டின் இரு பிரிவுகளுள் ஒன்றான  தென் கொங்குப்பகுதியை ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள வீரகேரளரைப் பற்றி ஆய்வுகள் நடைபெறவில்லை. தென்கொங்குப்பகுதி ஒரு சிறிய நிலப்பகுதியே. கொங்கு நாட்டின் அடிப்படை வரலாற்றை அறிய, வீரகேரளரின் கொடி வழி, ஆட்சிப் பரப்பு ஆகிய செய்திகளும் தேவை. வீரகேரளரின் கல்வெட்டுகளில் சக ஆண்டுக் குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில கல்வெட்டுகளில் காணப்படுகின்ற வானிலைக் குறிப்புகளைக் கொண்டே வீரகேரளரின் ஆட்சிக்காலம் வரையறை செய்யப்படுகின்றது. பழநிக் கல்வெட்டொன்று, மகாமகத் திருவிழாவுக்கு வீரகேரளர் வழங்கிய கொடையைப் பற்றிக் கூறுகிறது. வீரகேரள அரசன் இவ்விழாவினை நடத்தியுள்ளான். கோவைக் கருகில் உள்ள முட்டம் என்னும் ஊர்க் கோயில் கல்வெட்டு ஒன்றின் துணையுடனும், பழநிக் கல்வெட்டின் துணையுடனும், மற்ற கொங்குச் சோழர் வரலாற்றையும் இணைத்து ஒப்பாய்வு செய்தே வீரகேரளர் வரலாற்றை அறிய முடிகின்றது. சோழர்களின் கரூர்ப் பகுதி வரை சோழர்களின் நேரடி ஆட்சி இருந்தது. நாமக்கல் பகுதி மழகொங்கு என அழைக்கப்பட்டது.  இப்பகுதியும் சோழர்களின் நேரடி ஆட்சியில் இருந்தது சோழர்களின் நேரடி ஆட்சி இருந்த பகுதியைச் சோழர்கள், வீரசோழ மண்டலம் என்னும் பெயரில் அழைத்தனர்.

தென்கொங்கு:
கோவை, பேரூர், பொள்ளாச்சி, ஆனைமலை, கொழுமம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தென்கொங்குப் பகுதியாகும். தென்கொங்குப்பகுதியையே வீரகேரளர் ஆட்சி செய்தனர் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இப்பகுதி, பெரும்பாலும் மலைகளை ஒட்டிய பகுதியாகும். மேலும், இது வணிகப்பகுதியாகவும் இருந்துள்ளது. பாலக்காட்டுக் கணவாயில் அமைந்திருந்த பெருவழியின் வழியாகத் தமிழகத்தின் உள் பகுதிகளில்  உரோமானியர் வணிகம் செய்தமை நாம் அறிந்த ஒரு செய்தியாகும். உரோமானிய நாணயங்கள் மிகுதியும் கிடைத்த பகுதியும் தென்கொங்கேயாகும். நொய்யலாறும், அதன் கிளை ஆறுகளான பெரியாறு, சின்னாறு, காஞ்சியாறு, நல்லாறு ஆகிய  ஆறுகளும், அமராவதி மற்றும் அதன் துணை ஆறுகளான சண்முகா நதி, பாம்பாறு, தேனாறு, குதிரையாறு, உப்பாறு, நற்காஞ்சியாறு ஆகிய ஆறுகளும் வளப்படுத்திய பகுதி தென்கொங்குப் பகுதியாகும். அமராவதிக்கரைப் படுகைப் பகுதி கரைவழி நாடு என்னும் நாட்டுப்பிரிவாக இருந்தது. இது தவிர வைகாவி நாடு, நல்லூர்க்கா நாடு, பேரூர் நாடு, வாயறைக்கா நாடு, வீரகேரள வளநாடு  ஆகிய நாட்டுப் பிரிவுகள் பண்டு இருந்தன.

வீரகேரளர்-தோற்றம்:
வீரகேரளர் எந்த மரபைச் சேர்ந்தவர் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. கேரள மரபினர் என்பதாகத் தொல்லியல் அறிஞர் கே.வி. சுப்பிரமணிய ஐயர் கருதுகிறார். தமிழகத் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த நடன காசிநாதன், வீரகேரளர் களப்பிரர் மரபினர் எனக் கருதுகிறார். வரலாற்று ஆசிரியர் வீ.மாணிக்கம், வீர கேரளர், கோக்கண்டன் மரபினர் என்று கருதுகிறார். கொங்கு மண்டலச் சதகம் வீரகேரளரைப் பாண்டியர் என்று குறிப்பிடுகிறது. முற்காலப் பாண்டிய மன்னன் மானாபரணனின் மகன் வீரபாண்டியனுக்கு வீரகேரளன் என்னும் பெயர் இருந்ததையும், இவன் (வீரகேரளன்)  மதுரை அருகே இருக்கும் சோழவந்தானில் கட்டுவித்த விண்ணகரத்துக்கு (பெருமாள் கோயிலுக்கு) வீரகேரள விண்ணகரம் என்று பெயர் சூட்டியதையும் கொங்குமண்டலச் சதகம் கூறுகிறது. வீரகேரளரின் தலை நகராக முதலில் கடத்தூரும், பின்னர்க் கொழுமமும் இருந்துள்ளன. வீரகேரளரின் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை இவ்வூர்களின் கோயில்களிலேயே காணப்படுகின்றன. வீரகேரளர் கல்வெட்டுகள் வட்டெழுத்துக் கல்வெட்டுகளாக அமைந்தன. வீரகேரளர் கல்வெட்டுகளில் இறைவனை “மகாதேவர்” எனக் குறிப்பிடும் மரபைக் காணலாம். இந்த மரபு 10-ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது.

வீரகேரள அரசர்கள்:
வீரகேரளன் என்னும் ஓர் அரசன் முதல் அரசனாக அறியப்படுபவன். அவனது இரு மகன்கள் வீரகேரளன் அமரபுயங்கனும் வீரகேரள வீரநாராயணனும் ஆவர். அமரபுயங்கனின் ஆட்சிக்காலம் 986-1009. வீரநாராயணனின் ஆட்சிக்காலம் 1009-1015.  அமரபுயங்கன், சோழப்பேரரசன் இராசராசன் காலத்தவன். மலை நாட்டுடன் போர் செய்யமுனைந்த இராசராசன், அமரபுயங்கனை வெற்றிகொண்ட பின்னரே மலை நாட்டின்மேல் போர் தொடுத்தான். இந்த அமரபுயங்கன் பாண்டியன் ஆவான். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  மேலே சொன்ன சொற்பொழிவாளரின் கருத்து, தமிழகத் தொல்லியல் துறையின் “கோவை மாவட்டக் கல்வெட்டுகள்” நூலில் சுட்டபெற்ற செய்தியிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்நூலில், வீரநாராயணன் மூத்தவனாகவும், அமரபுயங்கன் இளையவனாகவும் குறிக்கப்பெறுகிறார்கள். ஆட்சிக் காலமும் முறையே 957-968, 967-990 எனத் தரப்பட்டுள்ளது. தந்தையின் பெயர் வீரகேரளன் என்பதில் முரண்பாடு இல்லை. சொற்பொழிவாளரும், நூலின் பதிப்பாசிரியர்களும் தனித்தனியே சான்றாதாரங்களின் அடிப்படையிலேயே இக்கருத்துகளைச் சொல்லியிருக்கவேண்டும்.)

சொற்பொழிவாளர் கூற்றுப்படி வீரகேரள அரசர்கள் வரிசை:
வீரகேரளன்
வீரகேரளன் அமரபுயங்கன்    986-1009
வீரகேரள வீரநாராயணன்     1009-1015
வீரநாராயணன் வீரகேரளன்   1015-1044   
                இவன் பெயரால் கோவை, வீரகேரளநல்லூர் என அழைக்கப்பெற்றது.
                இவன், 1044-இல் சோழன் முதலாம் இராசாதித்தனால் கொல்லப்படுகிறான்.
வீரநாராயணன் அதிசய சோழன் 1044-1076
அதிசய சோழன் வீரநாராயணன் 1076-1093
வீரகேரளன் அதிராஜராஜன் 1093-1116 
                மேற்படி வீரநாராயணன் வீரகேரளனின்  மகன்.
அதிராஜராஜன் ஸ்ரீ ராஜராஜன்  1116-1153
ராஜராஜன் கரிகாலன்           1153-1165

வீரகேரளன் அதிராஜராஜனின்   (1093-1116) கல்வெட்டு ஒன்றில் காணப்படுகின்ற  வானிலைக் குறிப்பின் அடிப்படையில், இவன் ஆட்சியிலமர்ந்த ஆண்டைக் கணித்துள்ளனர். இவனும் சோழன் முதலாம் குலோத்துங்கனும் நண்பர்கள். இவன், திருக்கண்ணபுரம் கோயிலுக்கு 1104, 1106 ஆகிய ஆண்டுகளில் இருமுறை கொடையளித்துள்ளான். இவனுடைய மகன் அதிராஜராஜ ஸ்ரீ ராஜராஜன் (1116-1153), இருகூர்ச் செப்பேடு வழங்கியவன். இவனுடைய இருபத்தேழாம் ஆட்சியாண்டு வரை இவனது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இருகூர்ச் செப்பேட்டினைப் படித்துச் செய்தியை வெளியிட்டவர் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் ஆவார். இந்த ஏட்டில் பள்ளிப்படை பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

வீரகேரளர் ஆட்சியில் அரசு நிருவாகம்:
வேள் எனப்பட்ட தலைவர்கள் இருந்தனர். வஞ்சி வேளான் என்பவனின் பெயர் கடத்தூர், கொங்கூர், ஆனைமலை ஆகிய ஊர்க் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஊர்களின் தலைவர்கள் காமுண்டன் அல்லது காமிண்டன் என அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு ஊருக்கும் ஊரவை ஒன்றும் இருந்தது. ஊரவையின் உறுப்பினர் ஊராளி என்றழைக்கப்பட்டார். மன்றாடிகள் என்போர் இருந்துள்ளனர். மன்றுக்குரியவர் மன்றாடி. (கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், பதிப்பாசிரியர்கள் மன்றாடி என்பதற்குத் தரும் விளக்கம்:  மன்றாட்டு, மன்றாட்டுக் காணி, மன்றாட்டுப்பேறு ஆகியன கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து வந்த ஊர் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட பங்கு முறையாகும். கால்நடை வளர்ப்புச் சமூகத்தோடு தொடர்புடைய மன்றம் என்ற சொல்லிலிருந்து மன்றாட்டு வந்தது. மன்றாட்டை நிருவகிப்பவன் மன்றாடி எனப்பெற்றான்.) வீரகேரளர் ஆட்சியில், கடத்தூரில் நிலைப்படை ஒன்று இருந்துள்ளது. இது, நிலைநின்ற ஆயிரவர் படை என்னும் பெயர் கொண்டிருந்தது. படைத் தலைவர்கள் “படைவளவஞ் செய்வார்”  என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறுகிறார்கள். வீரகேரளர் காலத்திலிருந்து கடத்தூர்க் கோயிலில் தேவரடியார் இருந்துள்ளனர்.

மேற்படிச் செய்திகளைச் சுட்டும் கல்வெட்டு வரிகள் கீழே:
1                ஸ்வஸ்திஸ்ரீ கோ அதிராஜராஜ தேவற்கு …………………வீரகேரள வலநாட்டு நன்னனூர் ஆளுடையார் நக்காண்டாற்கு மேற்படியூரில் வெள்ளாளந் வட்டமணியனான அதிராசராச வஞ்சி வேளாந்……..
                 ஆனைமலைக் கல்வெட்டு (AR 214 / 1927-28)

2                ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது கடற்றூ[ர்] இருக்கும் வதிளார் சந்தந் போத்தநாந மருதக்காமிண்டந் ………
                 கடத்தூர்க் கல்வெட்டு

3                ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது கடற்றூர்மந்றாடிகளில் காவன் சொக்கனான…..
                 கடத்தூர்க் கல்வெட்டு

4                ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது கடற்றூர்
                 நிலை நின்ற ஆயிரவற்கு நாயகஞ் செய்வார்களில்…..
                கடத்தூர்க் கல்வெட்டு

5               ஸ்வஸ்திஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு மூந்றாவது திரு
                 மருதுடையார் தேவரடியாரில் சொக்கந் வெம்பியேந் …
                கடத்தூர்க் கல்வெட்டு

கொங்கு நாட்டில் வீரகேரளர்தாம் வேளாண்மைக்கு அடித்தளம் அமைத்தவர்கள். தென்கொங்கில் இரு பூ (இரண்டு போகம்) நெல் விளைந்ததாகக் கல்வெட்டுக்குறிப்பு உள்ளது. மன்னறை என்று கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. இது, சோழ நாட்டுக் கல்வெட்டுகளில் பயிலும் மயக்கல் அல்லது வயக்கல் என்னும் சொல்லுக்கு நேரானது என்று கருதப்படுகிறது. வேளாண்மைக்குத் தகுதியாக்கும் வகையில் புன்செய் நிலங்களைத் திருத்துதலும் திருத்தப்பட்ட நிலமுமே மயக்கல் எனப்பட்டது. இவ்வகை மயக்கல் நிலங்கள் கொங்குநாட்டில் மன்னறை என வழங்கப்பட்டன. கோயம்புத்தூர், பேரூர், கொழிஞ்சிவாடி, கரைப்பாடி, ஆனைமலை ஆகிய ஊர்களில் மன்னறைகள் இருந்துள்ளனவாகக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். வீரகேரளர் ஆட்சியின்போது, பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு வேளாண் தொழில் வளம் பெற்றது. இவ்வாய்க்கால்கள் வதிகள் என அழைக்கப்பெற்றன. இவை சிறு வாய்க்கால்கள். பேரூர், கொழுமம், கரைப்பாடி, ஆனைமலை ஆகிய ஊர்க்கல்வெட்டுகளில் வதிகள் பல இருந்தமையை அறிகிறோம். பழநிக்கருகில் போடுவார்பட்டியில் 10-11-ஆம் நூற்றாண்டுத் தூம்பு கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குள வாய்க்கால், பெருந்தூம்பு ஆகிய பெயருடைய இடங்கள் பழநிப் பகுதியில் இன்றும் உள்ளன.

வணிகம்:
வீரகேரளர் ஆட்சியின்போது, வணிகமும் சிறப்பான நிலையில் நிலையில் இருந்துள்ளது. பழநி, சோமவார்ப்பட்டிக் கல்வெட்டுகளில் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர் பற்றிய குறிப்புகளையும், ஆனைமலைக் கல்வெட்டில் மடிகை என்னும் வணிகக் கடைத்தெருக்கள் பற்றிய குறிப்பினையும் காண்கிறோம். வியாபாரி என்னும் சொல்லும் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கிறது.  வெள்ளலூர் பகுதியில் வெற்றிலை ஏற்றுமதி நடைபெற்றது. வெள்ளலூர் வணிகர் ஒருவர் வெற்றிலையைச் சோழ நாட்டுக்குச் சென்று சேர்ப்பித்ததற்காக அவருக்கு வீரகேரள அரசன் காணித் தன்மமும், வீட்டில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளில் சங்கு ஊதிக்கொள்ளவும், பச்சைப் பிடாம் (பட்டாடை?) போர்த்துக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டாம் நிலை (மாடி) எடுத்துக்கொள்ளவும் உரிமைகளை வழங்குகிறான்.  இந்த உரிமைகள் மக்களுக்கும், மருமக்களுக்கும் சேர்த்து அளிக்கப்படுகின்றன. இச்செய்தி இருகூர்ச் செப்பேட்டில் உள்ளது. 

இருகூர்ச் செப்பேட்டின் சில வரிகள்:
                . . . . . அமரபயங்கரப் பெருமாள்ளுக்கும் இவர் பாட்டந்மார் செய்த பணி   வெள்ளலூர் வெற்றிலை கொளுப்ப[சு]ங்காய் இவைய் உள்படச்   சோழநாட்டு[க்]கு  போய் குடுத்த பணிக்கு . . . . . . . . . . . . . . . .

இவந்நுக்கு குடுத்த வரிசை ஆண் வழிக்கு ஒற்றைச் சங்கு ஊதி வருவிதாகவும் பெண் வழிக்கு  இரட்டைச் சங்கு ஊதி வருவிதாகவும் ....../.பச்சைப்          பிடாம் போற்பாநாகவும் இவந் அகம்      இரண்டாநிலை எடுத்து சாந்து இட்டுக்கொள்ளப் பெறுவாநாகவும் . . .      நம் ஓலை குடுத்தோம்

நாணயங்களும், முகத்தல் அளவுகளும்:
வீரகேரளர் அவர்களின் ஆட்சிக்க்காலத்தில் அச்சு, பொன் என்னும் நாணய வகைகளைப் பயன்படுத்தினர். இந்த அச்சு, பின்னர்க் கொங்குச்சோழர் காலத்தில் பழஞ்சலாகை அச்சு என்னும் பெயர் பெற்றது. நெல்லை அளக்க முகத்தல் அளவைகளான மா, கலம், தூணி ஆகியனவும்,  கருவிகளாகப் பரகேசரிக்கால், சூலக்கால் ஆகியனவும் பயன்பாட்டிலிருந்தன.

நகரங்கள்:
வீரகேரளர் ஆட்சியின்போது, பழநி, பேரூர் ஆகிய மாநகர்களும், முப்பது சிறு நகரங்களும் இருந்தன.

சமயம்:
சோமவார்ப்பட்டியில் இருக்கும் அமரபுயங்கீசுவரர் கோயிலும், முட்டமான அமரபுயங்க நல்லூரில் (தற்போதைய பெயர் போளுவாம்பட்டி) இருக்கும் நாகீசுவரர் கோயிலும், கடத்தூரில் இருக்கும் மருதீசர் கோயிலும் வீரகேரளர் கட்டுவித்ததாகக் கருதப்படுகின்றன. கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் அமராவதி ஆற்றங்கரையிலேயே கட்டப்பெற்றுள்ளது. கருவறையிலிருக்கும் இலிங்கத்திருமேனி மரத்தாலானது. 13-ஆம் நூற்றாண்டில், கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் சமணக்கோயில்கள் பல சைவக்கோயில்களாக மாற்றப்பட்டன. எனவே, வீரகேரளர் ஆட்சியின்போது சமணம் சேதமுறவில்லை எனலாம்.





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.



பண்டைய மதுரையின் இருபெரு நியமங்கள்

— முனைவர் ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
மாங்குடிமருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியில் அவர் சுட்டிச் செல்லும்
               “ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்து“
என்ற தொடர் அறிவுறுத்தும் இரண்டு நியமங்கள் எவை என்பதை வரலாற்றியல் நோக்கில் காண்பதே இவ் ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

மதுரைக்காஞ்சி ஆய்வுக்குரிய முதன்மை ஆதாரமாக அமைகிறது. பிற செவ்வியல் இலக்கியங்களும், கள ஆய்வும் துணைமை ஆதாரங்களாகும்.

மதுரைக்காஞ்சிக்கு உரை எழுதிய பெருமழைப்புலவர் பொ.வே.சோம சுந்தரனார், ‘ஓவியத்தைக் கண்டாலொத்த காட்சியினை உடைய இரண்டாய பெரிய அங்காடித்தெருவின் கண்’ என்று பதவுரையும், ‘இருவகைப்பட்ட அங்காடித்தெருவின் கண்’ என்று கருத்துரையும் (பத்துப்.-2ம் பாகம்-ப.- 129&130) கூறுகிறார். முனைவர் வி. நாகராசன், ‘ஓவியத்தைக் காண்பது போல் கண்ணுக்கு இனிமையைத் தரும் நாளங்காடி, அல்லங்காடி என்ற இரு கூற்றினை உடைய பெரிய அங்காடித்தெரு’ (பத்துப்.-2ம் பகுதி-ப.-99) என்கிறார். ‘ஓவியத்தைக் கண்டாற்போன்ற காட்சியை உடைய இரு அங்காடித் தெருவில்’, என்கிறார்  (பத்துப்.-பகுதி-2-ப.-133) புலவர் அ.மாணிக்கனார். இந்த உரைகள் சிலப்பதிகாரச் செய்தியோடு ஒத்துப் போகாமையே இந்த ஆய்விற்குக் காரணமாக அமைகிறது.


மாங்குடி மருதனார் பேசும் இருபெரு நியமங்கள் மதுரையிலிருந்த இரண்டு பெரிய ஆலயங்களையே சுட்டுகின்றன.

பாடற்செய்திகள் பின்வரும் வரிசைமுறையில் அமைகின்றன. பாண்டியர் குடி, செங்கோன்மை, வெற்றி, நால்வகைப் படைகள், நெடுஞ்செழியனின் போர்வேட்கை, அவனது முன்னோர் பெருமை, பாண்டிய நாட்டு ஊர்கள், கொடைத்தன்மை, குறுநில மன்னர் இருக்கை, தலையாலங்கானத்துப் போர், கொற்கை, பரதவரை அடக்கல், சான்றாண்மை,போன்ற சிறப்புகளைப், பாடியபின்னர் காஞ்சித்திணைப்பொருளை வலியுறுத்துகிறார்.

தொடர்ந்து ஐந்து நிலவளங்களை அணுகக் கொண்டு இருக்கும் வையை, ஆற்றங்கரைப் பாண்சேரி, அதையொட்டிய அகழி, கோட்டைவாயில், உள்ளே  எழுந்த பேரொலி,என்று அமையும் வருணனையில் அடுத்து வருவதே  இருபெரு நியமமும், திருவிழாக் கொடிகளும் ஆகும்.

அதையடுத்து  நாற்படைகள் வந்து போகும் மதுரைத் தெருக்களில்  ஏழாம் நாள் புனித நீராட்டின் போது எழுந்த நாளங்காடி ஆரவாரம் பேசப்படுகிறது.

தொடர்வது பெருநிதிக்கிழவர் வழிபாடு, மாலையில் தெய்வங்கட்குப் பலியிட்ட விழா ஆரவாரம், பௌத்த சமண அந்தணர் பள்ளிகள், அறங்கூறு   அவையத்தார் தெரு, காவிதி மாக்கள் தெரு, வணிகர் தெருக்களில் எழுந்த அல்லங்காடி ஆரவாரம் முதலியனவாம்.

இவ்வாறு நாளங்காடியையும், அல்லங்காடியையும் விரிவாக விதந்து ஓதுவதால் ‘இருபெருநியமம்’ என்பது இரண்டு ஆலயங்கள் என்பதும், அந்த ஆலயங்களில் திருவிழா குறித்த கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன என்பதும் புலனாகிறது. இரண்டு அங்காடிகள் என்று பொருள் கொண்டால் கூறியது கூறல்  குறையோடு பொருள் தொடர்நிலை தெளிவுற அமையவும் வழியில்லை.

பிங்கல நிகண்டு ‘நியமம்’ என்ற சொல்லுக்கு ‘கடைத்தெரு’ என்னும் பொருள் மட்டுமின்றி ‘தெய்வம் வழிபடல்’ என்றும் பொருள் தருகிறது.

பிற சங்கஇலக்கியங்களிலும் நியமம் என்ற சொல் ஆலயம் என்ற பொருளில் வழங்குகிறது. கோசர் மதுரையை அடுத்த செல்லூரின் கிழக்கே ஒரு நியமத்தை நிறுவினர். அங்கே கடவுள்மங்கலம் செய்ய வேள்வி நிகழ்த்தினர் என்பது மருதனிளநாகனாரின் அகநானூற்றுப் பாடல்கள் (90&220) மூலம் தெரிகிறது.

பண்டைத் தமிழகத்தில் கோயில், நகர், நியமம், கோட்டம், பள்ளி என ஐந்து வகை வழிபாட்டிடங்கள் இருந்தன என்று சிலப்பதிகார ஊர்காண்காதையில் இளங்கோவடிகள் வரிசைப்படுத்தி உள்ளார்.(அடி-7-11)

கோயில் என்பது வேதநெறிப்படி தீமுறை வழிபாடு நிகழ்ந்த இடமாகும்.
நகர் என்பது அரசுக்குச் சொந்தமான நிலத்தில் மக்களுக்காக மன்னன் அமைத்த ஆலயம் ஆகும்.
நியமம் என்பது அரசரும் அந்தணரும் அல்லாத பிற மக்கட்சமூகத்தார் நிறுவிய வழிபாட்டிடம் ஆகும். (‘சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள்’- மின்தமிழ் மேடை- ஜூலை- 2018- ப- 70-82)
கோட்டம் என்பது வேதநெறி அல்லாத வழிபாட்டு முறையைப் பின்பற்றும் இடமாகும். கோட்டத்தில் வேள்விச்சாந்தி நிகழ்த்தும்போது அது கோயில் என்று அழைக்கப்பட்டது.
அறச் சாலையாகவும் கல்விச் சாலையாகவும் அமைந்த வழிபாட்டிடமே பள்ளி என்று அழைக்கப்பட்டது.

மதுரை வருணனையில் இளங்கோ,  திருமாலுக்குரிய வழிபாட்டிடத்தை,
               “உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்”(மேலது-அடி-8) என்கிறார்.


மதுரைக்காஞ்சி சுட்டும் இருபெரு நியமங்களுள்; சுயம்புலிங்கத்தைக் கருவறையில் கொண்டு இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் ‘மழுவாள் நெடியோனி’ன் நியமம் ஒன்று; இன்னொன்று பண்டு உவணச்சேவல் உயர்த்தோன் நியமம் என்று அழைக்கப்பட்டு இன்று பன்னிரண்டு துண்டுகள் ஆக்கப்பட்டிருக்கும் கூடல் அழகர் கோயில் எனலாம்.

சங்ககாலத்தில் ‘மழுவாள் நெடியோன்’ நியமத்தை வடகிழக்கிலும், திருமால் நியமத்தை மேற்கெல்லையிலும் கொண்டிருந்த மதுரை பின்னர் மழுவேந்திய சிவனுக்குரிய ஆலவாய் என்று பெயர் பெற்ற கோவிலை ஊரின் நடுவிடமாகக் கொண்டு விரிந்துள்ளது. இடைக்காலத்தில் ஆவணி மூலவீதியை அடுத்துக் கோட்டையுடன் கூடிய மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நாலாபுறமும் விரிந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அங்ஙனமே விரிந்தது. அப்படி விரியும்போது இருபெரு நியமங்களுள்  ஒன்றான திருமால் ஆலயம் துண்டாடப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழகத்தில் ஊர்கள் கீழ், மேல் என்று இருகூறுபட்டிருந்தன. (கீழக்குயில்குடி,மேலக்குயில்குடி; கீழ்மாத்தூர், மேல்மாத்தூர்; கீழ்ப்பனங்குடி, மேல்பனங்குடி முதலியன சான்றாகும்.) கீழ்ப்பகுதியிலேயே பெரும்பாலும் இறந்தோரைப் புதைக்கும் இடங்கள், தவ வாழ்க்கை மேற்கொள்வோர்க்குரிய இருப்பிடங்கள் இருந்தன என்பது அகழ்வாய்வு மூலம் புலப்படுவதை ஆய்வாளர் கூறியுள்ளனர் (தேவகுஞ்சரி- Madurai Through The Ages- p.-16). இன்றைய மதுரையின்  மையப்பகுதியை ஒட்டித் தென்கிழக்கில் கீழ்மதுரை உள்ளது.

இக்கீழ்மதுரைக்கும் இன்றைய மதுரை தெற்குவெளிவீதியின் கிழக்கு மூலைக்கும் இடையே உள்ள தூரம் நடைப்பயண தூரமே ஆகும். கீழ்மதுரையை அடுத்துள்ள அனுப்பானடியில் வரலாற்றுக்கு முந்திய காலத் தாழிகளும் பிற எச்சங்களும் கிடைத்துள்ளன (B.S.Baliga-Gazetteers Of India-p.393). இதனால் கீழ்மதுரைக்கு நேர்மேற்கிலேயே பண்டைய மதுரை இருந்திருக்க வேண்டும் எனலாம். அவ்வாறு கொண்டால் ஆலவாய்க்கோயில் நகரின் வடகிழக்குத் திசையில் அமைகிறது.

இன்றைய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கருவறையில் உள்ள லிங்கம் சுயம்புலிங்கம் எனவும், அது பல ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு கடம்பமரத்தின் படிமம் என்றும் கூறுகின்றனர். (P.V.Jeyachandran-The Madurai Temple Complex-Madurai Kamaraj University- Ph.D.thesis-1979-p.-255&261) மரங்கள் இவ்வாறு காலப்போக்கில் கார்பன் சேர்க்கையால் கல்மரங்களாவது உண்டு என அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் (சு.கி.செயகரன்- ”பாசில்கள்- பூமகளின் காலச் சுவடுகள்- கலைக்கதிர்- செப்டம்பர் 1977-ப.-63). எனவே சங்ககாலம் தொட்டு இக்கோயிலின் கருவறையிலுள்ள லிங்கம் வழிபடுபொருளாக இருக்கக் கூடியது சாத்தியமே. திருவிளையாடற் புராணக்கதையும் தேவர்களெல்லாம் வழிபாடு செய்துகொண்டு  இருந்த லிங்கம் கடம்பவனக் காட்டில் இருந்ததாகவே கூறுகிறது (திருநகரம் கண்ட படலம்-பா-3-12). ஏற்கெனவே வழிபாடு நிகழ்ந்த இடத்தைக் குலசேகர  பாண்டியன் கற்கோயில் எடுத்து விரித்துள்ளான்.

சங்ககால மதுரை இன்றைய மதுரை மையப்பகுதியின் தென்கூறை  மட்டும் உள்ளடக்கியது என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில் மயமதம் கூறும் நகரமைப்பு விதிகளும் உள்ளன. பண்டு தமிழகத்தில் மயமதமே பெரிதும் போற்றப்பட்டது. சாத்தனார்,

               ”மிக்க மயனால் இழைக்கப்பட்ட
               சக்கரவாளக் கோட்டைமீங் கிதுகாண்“ (மணி.- சக்கர.- அ.-201-202)
என மயனின் மரபு போற்றப்பட்டமையைக் குறிப்பிட்டுள்ளார். திருத்தக்கதேவர்,

               “மயனிழைத்த அம்பாவையின் வைகினாள்“(சீவக சிந்தாமணி-   பதுமையார் இலம்பகம்- பா-145)என்று மயமதத்தின்  பெருமையை உவமையில் எடுத்தாள்கிறார். வில்லிபுத்தூராரும்,

               “சிற்ப வல்லபத்தின் மயன் முதலுள்ள தெய்வ வான் தபதியர்“ (பாரதம்- ஆதிபருவம்- இந்திரப்பிரத்தச் சருக்கம்- பா-18) என்று மயனை முதன்மைப்  படுத்துகிறார். கம்பரும், இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த மண்டபம் மயனால் நிருமிக்கப்பட்டது என்கிறார். (இராமாயணம்- பால காண்டம்- கடிமணப் படலம்- பா-45) தெய்வத் தச்சர்களில் மயனே தமிழகத்தோரால் பெருமைப்படுத்தப் படுகிறான்.   

மயமதம் சிவன்கோயில் நகரின் ஈசான்ய திசையில் அமைய வேண்டும்  என்று கூறுகிறது. (பாகம்- 1-ப.-76).  இதனால் சங்ககால மதுரையில் மழுவேந்திய சிவபெருமானின் கோயில் மயன் விதித்தபடி வடகிழக்குத் திசையில் அமைந்திருந்தது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகிறது. அத்துடன் திருமால் கோயில் ஊரை நோக்கி இருப்பது சுபபலனை அளிக்கும் என்றும் மயமதம் கூறுகிறது (பாகம்-1-ப.-82). இன்றைய கூடலழகர் கோயிலே மதுரையின் பழைய வைணவ ஆலயம் என்பது பரிபாடல் திரட்டு மூலம் தெளிவாகிறது. இக்கோயில் தெற்குமாசி வீதியும், மேற்குமாசி வீதியும் சந்திக்கும் மூலையில் கிழக்கு முகமாக உள்ளது. பண்டு இக்கோயில் நேர்மேற்கில் அமைந்ததாதல் வேண்டும்.         
சிவன் கோயிலை மையமாக வைத்து, அதைச் சுற்றி நாற்புறமும் வீதிகள் இணையாகச் செல்லும் அமைப்பு பரிபாடல் திரட்டு காலத்திலேயே உருவாகி  இருக்க வேண்டும் என்பது,

               ”மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
               பூவோடு புரையும் சீறூர் பூவின்
               இதழகத் தனைய தெருவம் இதழகத்து
               அரும்பொகுட்  டனைத்தே அண்ணல் கோயில் “(பரி.- திரட்டு- பா-7)
என்ற பாடலடிகள் மூலமாகத் தெளிவாகிறது. மதுரையின் அருகில் இருந்தையூர் என்ற குடியிருப்புப் பகுதி இருந்தமையும்,

               “நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனாது
               மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
               இருந்தையூர் அமர்ந்த செல்வ “(மேலது-பா-1)
என்ற பரிபாடல் திரட்டு அடிகள் மூலம் தெரிய வருகின்றது. அத்துடன் வையையின் போக்கில் மதுரைக்கு முன்னரே இருந்தையூர் இருந்ததென்பதும் புலனாகிறது.

இவ்வூரின் சுற்றுப்புறமும் சூழலும் குறித்து இதே பாடல் மேலும் உரைப்பதாவது:

               “ஒருசார் அணிமலர் வேங்கை மராஅ மகிழும்
               ……………………………………………………………..
               மணிநிறங் கொண்ட மலை
               ஒருசார் தண்ணறுந் தாமரைப் பூவின் இடையிடை
               ………………………………………………………………..
               கண் வீற்றிருக்கும் கயம்
               ஒருசார் சாறுகொள் ஒதத்து இசையொடு மாறுற்று
               …………………………………………………………………
               திருநயத்தக்க வயல்
               ஒருசார் அறத்தொடு வேதம்
               ……………………………………………………………………
               அறத்தில் திரியாப் பதி “. இவ்வாறு ஒருபுறம் மலையும்,

ஒருபுறம் குளமும், ஒருபுறம் வயலும், ஒருபுறம் ஊரும் கொண்டிருந்த திருமால் கோயில் இன்றைய கூடலழகர் கோயிலின் இருப்பிடத்தோடு பொருந்தியுள்ளது.  ஒருபுறம் பசுமலையும், ஒருபுறம் ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டை, அகழியுடன் கூடிய மதுரை ஊரும், ஒருபுறம் மாடக்குளமும், ஒருபுறம் பசுமையான வயற்புறமும் கொண்டது இன்றைய கூடலழகர் கோயில். (1980 வரை இருந்த வயற்புறங்களில் இன்று T.V.S.நகர் வரை பல புறநகர்ப் பகுதிகள் தோன்றி விட்டன.)

கூடலழகர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமால் இருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவருக்கு இருந்தவளமுடையார் என்றும் பெயர். இருந்த வளமுடையார் கோயில் கொண்டிருக்கும் பகுதி இருந்தையூர் ஆகும். இன்றைய கூடலழகர் கோயிலின் இருப்பிடம் மதுரையின் தென்மேற்குப் பகுதியாதலால் வையை இப்பகுதியைக் கடந்த பின்னரே மதுரை நகர்க் கோட்டையின் வடக்கு வாயிலை அடைய முடியும். மேற்கூறிய பாடல் கருத்துக்கள் முற்றிலும் இக்கோயிலுடன் பொருந்தி வருகின்றன. இந்த ஆலயம் பாண்டியப் பேரரசுக்காலத்தில் மதுரையின் புறநகர்ப் பகுதியாக இருந்தது.

இடைக்கால இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலக் கோட்டை இன்றைய ஆவணிமூல வீதிகளுக்கும் மாசிவீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்தது. கோட்டைச் சுவரை அடுத்து வெளியே அகழியும், புறநகர்ப் பகுதிகளும் இருந்தன. (பார்க்க - படம் 1) .


விஸ்வநாத நாயக்கர் மாசிவீதிகளை உருவாக்கும் போது இருந்தையூர், நடுவூர், கரியான் திருவுறை, காளிகோயில், ஹரிஹரபுத்திரர் கோயில், தென்திரு ஆலவாய், சப்தகன்னியர் கோயில் முதலிய புறநகர்ப் பகுதிகளை இணைத்தார். (W.Francis- The Madras District Gazetteers- p.-266& B.S.Baliga- மு.நூ.-p.-48&63)

கி.பி.1559ம் ஆண்டு அரியநாதமுதலியின் துணையோடு விஸ்வநாத நாயக்கர் பாண்டியர்களின் கோட்டையை இடித்து அகழியைத் தூர்த்துவிட்டுப் புதிதாக 72 கொத்தளங்களோடு கூடிய உட்கோட்டைச் சுவரையும், புறக் கோட்டைச் சுவரையும் எழுப்பித் திசைமாணியின் நான்கு மூலைகளிலும் நான்கு வாயில்களை நிறுவினார். இவ்வமைப்பு ஆற்றின் போக்கினை அடுத்த குறுங்கோணத்தில் இருந்தது. சுற்றிலும் நான்கு திசைகளிலும் அகழி இருந்தது என்று மதுரை மாவட்ட கெசட் கூறுகிறது. இன்றைய வெளிவீதிகளே அகழிகளாக இருந்தன. ஆய்வாளரும் இக்கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். (J.P.L.Shenoy- Madurai The Temple City- p.10) அப்போது திருமாலுக்குரிய பெருநியமத்தின் வாயில்  உட்கோட்டைச் சுவரில் பொருந்தி, கோயிற்பகுதி முழுமையும் உட்கோட்டைச் சுவருக்கும், வெளிக்கோட்டைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய
               1)கண்ணன் கோயில்
               2) ஹயக்ரீவர் கோயில்
               3) இராமர் கோயில்
               4)சோனையார் கோயில் (காவல் தெய்வம்- கருப்பசாமி)
               5) வைகுண்ட ஏகாதசி இராப்பத்து பல்லாண்டு பாடும் மண்டபம்
               6)வீரராகவப்பெருமாள் கோயில்
               7) பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்
               8) சீனிவாசப் பெருமாள் கோயில்
               9) ஆஞ்சநேயர் கோயில்
               10) கூடலழகர் கோயில்
               11)சக்கரத் தாழ்வார் கோயில்
               12) மதனகோபாலசாமி கோயில்
முதலிய அத்தனை வழிபாட்டு இடங்களும் மாசிவீதிக்கும் வெளிவீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் உள்ளன.

கி.பி.1837ம் ஆண்டு ஆளுநர் பிளாக்பர்ன் நாயக்கர்காலக் கோட்டையை இடித்து பெருமாள் மேஸ்திரி வீதிகளையும், மாரட் வீதிகளையும் உருவாக்கிய போது (B.S.Baliga- மு.நூ.- ப.395-396) திருமாலுக்குரிய பெருநியமம் 12 கூறுகளாகப் பிரிந்து விட்டது. (பார்க்க - படம் 2&3)




இன்றைய கூடலழகர் கோயிலுக்கும் மதனகோபாலசாமி கோயிலுக்கும் இடையே ஒரே ஒரு வீதி மட்டுமே கிழக்கு மேற்காகச் செல்கிறது. இவ்வீதியில் தான் சக்கரத்தாழ்வார் கோயில் வாசலும் உள்ளது. இவ்வீதி மாசிவீதியை பெருமாள் மேஸ்திரி, மாரட் வீதிகளுடன் இணைக்கிறது. மேற்கூறிய மூன்று வீதிகளும் உருவாகும் முன்னர் இருகோயில்களும் அடுத்தடுத்து ஒரு கோயிலின் இரு கூறுகளாக இருந்திருக்க வேண்டும். கண்ணன், ஹயக்ரீவர், ராமர் கோயில்கள் கூடலழகர் கோயிலின் எதிரிலேயே உள்ளன. அங்கிருந்து கூப்பிடு தூரத்திலேயே வீரராகவப்பெருமாள் கோயில் தென்னழகுக்காரத் தெருவில் உள்ளது. சீனிவாசப் பெருமாள் கோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும் தெற்கு மாரட் வீதியருகில் எதிரெதிரே உள்ளன. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் இன்று சௌராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் என்று வழங்கப்படுவதன் காரணம் அது அந்த இனத்தவரால் புரக்கப்படுவதாகும்.

கள ஆய்வின்போது இக்கோயில்கள் அனைத்தும் நடந்து சென்று தரிசிக்கும் படியே உள்ளன. குறுக்குமறுக்காகச் செல்லும் குடியிருப்புச் சிறுவீதிகளும், கடை வீதிகளும், மக்கட்பெருக்கமும், நகர விரிவாக்கமும் கோயிலைத் துண்டாடி உள்ளன.                           

முடிவுரை:
மாங்குடி மருதனார் பேசும் இருபெரு நியமங்கள் மதுரையிலிருந்த இரண்டு பெரிய ஆலயங்களையே சுட்டுகின்றன.அவை முறையே  சுயம்புலிங்கத்தைக் கருவறையில் கொண்டு இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் ‘மழுவாள் நெடியோனி’ன் நியமம் ஒன்று; இன்னொன்று பண்டு உவணச்சேவல் உயர்த்தோன் நியமம் என்று அழைக்கப்பட்டு இன்று பன்னிரண்டு துண்டுகள் ஆக்கப்பட்டிருக்கும் கூடல் அழகர் கோயில் எனலாம்.


துணைநூற்பட்டியல்:
1)    பத்துப்பாட்டு -வர்த்தமானன் பதிப்பகம்- முதல் பதிப்பு - 1999
2)    பத்துப்பாட்டு- பகுதி 2- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - முதல் பதிப்பு - 2004
3)    பத்துப்பாட்டு -பகுதி 2- கழக வெளியீடு- 2008
4)    மயமதம்-1&2ம் பாகம்- மயமுனிவர்- K.S.S.சுப்பிரமணிய சாஸ்திரி (மொ.பெ.ஆ.)- தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு- 113
5)    சு.கி.செயகரன்- ”பாசில்கள்- பூமகளின் காலச் சுவடுகள்- கலைக்கதிர்- செப்டம்பர் 1977
6)    B.S.Baliga- Gazetteers Of India- Government of Madras- Madurai
7)    Devakunjari,D- Madurai Through The Ages- 1st edition- 1970- National book stall,kottayam
8)    W.Francis- Madras District Gazetteers- Madurai-1906- Government press, Madras.
9)    J.P.L.Shenoy- Madurai The Temple City- 2nd edition- 1955- Associated printers ltd.,Madras,Bangalore.
10)    P.V.Jeyachandran-The Madurai Temple Complex-Madurai Kamaraj University- Ph.D.thesis-1979   




தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)







நவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்

  கோ. பழனி




தமிழில் நவீன நாடகம், வீச்சாக முன்னெடுக்கப்பட்டதென்பது நாடகப் பயிற்சிப் பட்டறைகளிலிருந்தே தொடங்குகிறது. தேசிய நாடகப்பள்ளியில் கற்று வந்த பேரா. சே. இராமானுஜம் அவர்களின் தன்முனைப்பால், காந்தி கிராமம் கலாச்சார ‘அகாதமி’ சார்பில் முதல் பயிற்சிப்பட்டறை ஜீன் 20 – 26, 1977இல் நடந்தது. இரண்டாவது, 01.11.1978 முதல் 10.01.1979 வரை 70 நாட்கள் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இப்பட்டறையின் இயக்குனராக இருந்தவர் காஷ்மீரத்துக்காரரான பன்ஸிகௌல். மூன்றாவதாக 1980இல் செப்டம்பர் 01ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சென்னையில் பாதல்சர்க்கார் நடத்திய பயிற்சிப் பட்டறை. இம்மூன்று பயிற்சிப் பட்டறைகளும் தமிழில் நவீன நாடக முயற்சிகள், நாடகக் குழுக்கள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தவை. குறிப்பாக, 1978இல் மதுரை நிஜநாடக இயக்கம், சென்னை பரிக்ஷா, வீதிநாடக இயக்கம் ஆகிய குழுக்கள் உருவாயின. அதற்கும் முன்பே 1977இல் கூத்துப்பட்டறை என்கிற முழுநேர நாடக இயக்கம் ந. முத்துசாமி மற்றும் பிரக்ஞை வீராசாமி போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1984இல் நிஜநாடக இயக்கத்தின் ‘துர்க்கிர அவலம்’ நாடகம் தென்மண்டல நாடக விழாவில் கலந்துகொண்டு பிறமொழி நாடகங்களுடன் போட்டியிட்டு தேசிய நாடக விழாவிற்குத் தேர்வு செய்யப்பெறுகையில் ‘தமிழ் நாடகம்’ என்பதான கருத்துருவின் தேவை உணரப் பட்டதாக (1988: 67) பேரா.மு.இராமசுவாமி குறிப்பிடுகிறார். மேலும் “நம் பாரம்பரியக் கலை மரபைப் பின்பற்றி ஒரு தமிழ் நாடகம் உருவாக வேண்டும். ஆனால், நாடகம் சொல்லும் கருத்து, உலகத்து மனிதனுக்கும் சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும்” (மேற்படி) என்பதான கருத்து அழுத்தம் பெற்றதாகவும் அவர் கூறுகிறார். அது மட்டுமல்லாது எழுபது, எண்பதுகள் காலகட்டமானது பல்வேறு தேசிய இனங்கள் தத்தம் இனப்பிரச்னைகளுக்காக உரத்து குரல் எழுப்பிய காலகட்டம் என்பதையும் நவீனநாடக உருவாக்கத்தோடு ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டும்.

ஆடல், பாடல் ஆகியன நமது மரபு வழியான நிகழ்த்துமுறையாகவும் கதை தழுவிய கூத்தே நாடகமாகவும் எண்ணப்பட்டு வந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் ஆடலும் பாடலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்பது மறுக்கமுடியாது. பாடல், ஆடல் மரபிலிருந்து தங்கள் கருத்தை அடுக்குமொழி, கவித்துவ மொழி வழியாக திராவிடர் இயக்க நாடகங்கள் எடுத்துப்பேசின. குறிப்பாக, இந்நாடகங்கள் சமூக உணர்வுகளையும் பகுத்தறிவு சிந்தனைகளையும் வெளிப்படுத்தின என்று கூறலாம்.

தொன்மையான, திராவிட அடுக்குமொழி நாடகப் போக்குகளிலிருந்து மாறுபட்டு, சமகாலத்திற்கான நவீன நாடகங்கள் மேற்சுட்டிய நாடகப் பயிற்சிப் பட்டறைகளிலிருந்தே உருவாக்கம் பெறுகின்றன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற நவீன நாடகங்கள் மேடைகளிலும் மக்கள் மத்தியிலும் நிகழ்த்தப்பட்டன. மரபு வழியான உள்ளீடுகளிலிருந்தும் நிகழ்த்து முறைகளிலிருந்தும் மாறுபட்டன. இந்தப் பின்புலத்தில் பல நவீன நாடகக்காரர்கள் உருவாகி, செயல்படத் தொடங்கினர். நான் சந்தித்த – செயலாற்றிய சில நாடகக்காரர்கள், அவர்கள் உருவாக்கிய நாடகங்கள், அவற்றின் சமூகத் தேவைகள் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரையில் விவாதிக்க விழைகிறேன்.

பேரா. சே. இராமானுஜம்:
நவீன நாடகத்தின் பன்முகங்களை நுட்பமாக அறிந்தவர் பேரா. சே. இராமானுஜம். பள்ளி நாடகங்கள் – சிறுவர் அரங்கம் என்பதைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு தனது நாடகப் படிப்பைத் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் முடித்தவர். திருச்சூர் நாடகப் பள்ளியில் உதவி இயக்குநராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது நெறியாள்கையில் புறஞ்சேரி, வெறியாட்டம், நாற்காலிக்காரர், மௌனக்குறம், அண்டோரா, செம்பவளக்காளி, தங்கக் குடம் போன்ற பல்வேறு தமிழ் நாடகங்களும் பல மலையாள நாடகங்களும் உருவாக்கம் பெற்றுள்ளன. நாடக உருவாக்கம், பயிற்சிப் பட்டறை, நாடகப் பனுவல் உருவாக்கம், நாடக ஆய்வுகள் என தன்வாழ்நாள் முழுவதும் பயணப்பட்டவர் பேராசிரியர். இவரின் நாடகப் படைப்புகள் எளிமையும் நேர்த்தியும் கொண்டவை. தன் படைப்புகளில் வலிந்து அரசியலைப் புகுத்துவது இவரிடம் இல்லை. இருப்பினும் இவரது படைப்புகள் சமகால அரசியலையும் கலை நேர்த்தியையும் வெளிப்படுத்தி நிற்கும். இவரின் நெறியாள்கையில் உருவான நாடகங்கள் அனைத்துமே மற்ற நாடகக்காரர்களுக்குப் பாடங்களாக விளங்குபவை. அந்த வரிசையில் வெறியாட்டம், நாற்காலிக்காரர், மௌனக் குறம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

வெறியாட்டம், கி.மு. 400களில் வாழ்ந்த கிரேக்க நாடகக்காரர் யூரிபிடிசின் ‘ட்ரோஜன் விமன்’ (ட்ராய் நகரத்துப் பெண்கள்) என்கிற நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது. ட்ராய் நகரத்துப் பெண்கள் பெலெப்பொனேஷிய யுத்தத்தில் கணவர்களையும் உடைமைகளையும் இழந்த அவலத்தை மையமிட்டது இந்நாடகம்.

பேரா. இராமானுஜம் இந்நாடகத்தின் அடியிழையாக ஒப்பாரியை இணைத்து, ட்ராய் நகரத்துப் பெண்களின் அவலத்தை வெளிக்காட்டி இருப்பார். இது, அந்நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் பார்வையாளர்களால் ஒரு குறியீடாகப் பார்க்கப்பட்டது.

பெண் 1:     மூத்தவளே பேரரசி

முதியவளே எம்மரசி

எல்லோரும்: பெருந்தேவி நாச்சியாரே

பெண்களுமே தெண்டனிட்டோம்

பெண் 2:     சேதியென்ன சொல்லுமம்மா?

சோர்ந்தழவும் காரணமேன்?

பெண் 3:     புலம்பித் தவித்திடவும்

புதிதாகச் சேதியுண்டோ?

பெண் 4:     அழுது தவித்திடவும்

அடுத்தேதும் சேதியுண்டோ?

பெண் 5:     தோல்விக்கு நம்நாடு

தோரணங்கள் கட்டியதும்,

பெண் 6:     வீழ்ச்சிக்கே நம்நாடு

வாசல் தெளித்ததுவும்

பெண் 1:     ஓலமிட்டு அழுதிடவே

கோலமிட்டு நின்றதுவும்

எல்லோரும்: தஞ்சம் புகுந்திடவே

தரையேது மில்லாது

நெஞ்சங்கள் விம்முவதும்

நெடுமூச்சு வளர்வதுவும்

பெருந்தேவி கதையாச்சு

பெண்டிர் எங்கள் கதையாச்சு

நடந்தகதை இவையெல்லாம்

நாங்கள் அறிந்த கதை

பிறந்த துண்டோ ஏதேனும்

புலம்பலுக்குப் புதுக்கதைகள்?

(சி.அண்ணாமலை (தொ.ஆ); 2003: 245)

போர் நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்பதும் போரின் விளைவு என்னவாக இருக்கும் என்பதும் ஈழத்தை – ஈழத்தின் நிகழ்வுகளை உற்று நோக்கியவர்கள் நன்கு அறிவர். உலகம் முழுவதும் போரின் கோரமுகம் பலரின் கண்முன் இன்றும் வந்துபோய்க் கொண்டே இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் வெறியாட்டம் நாடகத்தின் ஒப்பாரி, ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளையும் அதன் விளைவுகளையும் பார்வையாளர்களின் மனவெளியில் திரையிட்டுக் காட்டியது. கி.மு. 400இல் எழுதப்பட்ட ட்ராய் நகரத்துப் பெண்கள் நாடகத்தை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழும் மக்களுக்கும் பொருந்துவதாக பேரா. சே. இராமானுஜம் வாசித்து உருவாக்கியுள்ளார்.

ந. முத்துசாமி எழுதிய நாற்காலிக்காரர் நாடகத்தை நெறியாள்கை செய்த சே. இராமானுஜம், அந்நாடகத்தில் வரும் சீட்டுக்கட்டு, கோலிக்குண்டு குழுக்களை முதல் உருவாக்கத்தில் சிறுவர்களாகவும் பிறிதொரு உருவாக்கத்தில் முதியவர்களாகவும் காட்சிப்படுத்தி இருந்தார்.

இந்நாடகத்தில் விளையாட்டு என்பது ஒரு குறியீடாகக் கொள்ளப்பட்டது. அதாவது, விளையாட்டு என்பது ஓட்டு அரசியல். நாடகத்தில் வரும் இரு குழுவினரும் விளையாடும் ஆட்டங்கள் மாறிக்கொண்டே வந்து வாழ்க, ஒழிக விளையாட்டாக மாறி, காக்கைக் குடுவையில் கல் போட்டு தண்ணீரை மேலெழுப்பும் விளையாட்டாக நகர்ந்து, அது கலவரமாக மாறி, அதனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்த நாற்காலிக்காரர் பாதிக்கப்படுவது வரை அத்தனையும் குறியீடுகளாகப் பார்வையாளர்களை வந்தடைகின்றன. ஓட்டு அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் வெகுமக்களாகவே இருக்கின்றனர் என்பதையும் இந்நாடகம் உணர்த்துகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வாழும் நமக்கு எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இந்நாடகம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பெண்களை சகஉயிரியாகப் பார்க்காத மனோநிலையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் காலம் காலமாக இச்சமூகத்தில் இருந்து வருகிறது. வேட்டையாடி உணவு சேகரித்து, பகிர்ந்து உண்டு வாழ்ந்த – வாழும் சமூகங்களிடையே இந்தப் போக்குகள் மிகமிகக் குறைவே. குற்றாலக் குறவஞ்சியில் வரும் சிங்கன் – சிங்கி, குறவஞ்சி தெருக்கூத்தில் வரும் குறத்தி, சமகாலத்துப் பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், மக்கள் கூடுகின்ற இடங்கள், ஆற்றங்கரை, மலை, சந்திரமதி, திரௌபதை, சீதை ஆகியோரின் காலங்கள் எனப் பல சூழல்களை காட்சிகளாக்கி மௌனக்குறம் நாடகத்தை நெறியாள்கை செய்துள்ளார் பேரா. இராமானுஜம்.

காலம் காலமாக பெண் எவ்வாறு பார்க்கப்பட்டாள், இன்று எவ்வாறு பார்க்கப்படுகிறாள் என்பதை மலையின சிங்கன் – சிங்கி பாத்திரங்கள் வழி எடுத்துக்காட்டுகிறது மௌனக்குறம். ‘பெண்ணினத்தை பண்டமாக, அடிமையாகப் பார்க்கும் இந்தச் சமவெளிச் சமூகமே வேண்டாம்’ என்று சிங்கனும் சிங்கியும் மலைக்கே திரும்பிச் செல்வதாக இந்நாடகத்தை நிறைவு செய்கிறார் பேராசிரியர்.

மாற்றுப் பாலினரும் பெண்ணும் ஆணும் சரிநிகர் சமம் என்று எப்போது இந்தச் சமூகம் மாறுகிறதோ, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எப்போது இல்லாமல் போகிறதோ அக்காலம் வரை மௌனக்குறம் போன்ற நாடகங்களின் தேவை இருக்கவே செய்யும்.

மேலே குறிப்பிட்டதுப் போல பேரா. சே. இராமானுஜம் தம் நாடகங்களில் நேரடியாக அரசியல் பேசுவதில்லை. கலைத்துவத்தோடு நுட்பமாக அரசியலைப் பொதித்து வைப்பது அவரின் தனித்தன்மை என்பதற்கு மேலே சுட்டிய நாடகங்கள் துளி சான்று.

பேரா. மு. இராமசுவாமி:
தொடக்க கால நவீன நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு தனது ஆளுமையை வளப்படுத்தக் கொண்டவர் பேரா. மு. இராமசுவாமி (முரா). இவர் நாடகத்தின் பால் தீராப் பற்றுக் கொண்டவர். மதுரையில் 1978ஆம் ஆண்டு நிஜநாடக இயக்கம் இவரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கிய பிறகு ஒவ்வொரு ஆண்டும் நாடக விழாக்களை மதுரையில் நடத்திய பெருமைக்குரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் செயலாற்றியவர். நாடக நெறியாள்கை, நடிப்பு, நாடகப் பயிற்சிப் பட்டறைகள், ஆய்வு என இவரது நாடக வெளி சார்ந்த பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வீதி நாடகத்தில் தொடங்கிய முராவின் தமிழ் நாடக வெளிச் செயற்பாடுகள் அழுத்தமான அரசியல் உள்ளீடுகளைக் கொண்டவை. துர்க்கிர அவலம், ஸ்பார்ட்டகஸ், சாபம்? விமோசனம்!, முனி, கலிலியோ, கட்டுண்ட பிராமிதியஸ், கலகக்காரர் தோழர் பெரியார் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இருபந்தைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை முரா நெறியாள்கை செய்துள்ளார்.

நடுவணரசின் சங்கீத நாடக அகாதமி நடத்திய தென் மண்டல நாடக விழாவில் 1984ஆம் ஆண்டு இவரின் துர்க்கிர அவலம் என்கிற நாடகம் நிகழ்த்தப்பட்டபோது, அந்நாடகம் அனைத்து மொழியினரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நாடகம் கிரேக்க நாடகமான ஆண்டிகனியைத் தழுவியது.

வானியல், அறிவியல் உண்மைகளை உலகிற்குச் சொன்ன கலிலியோ நாடகத்தை பல பள்ளிகளிலும் நடத்தியது நிஜநாடக இயக்கம். மத அடிப்படைவாதத்திற்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான அறிவுச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களுள் கலிலியோவும் ஒருவர். அவரைப் பற்றியும் அவரது கண்டுபிடிப்புகள் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தேவையை நிறைவு செய்தது இந்நாடகம். இதில் கலிலியோவாக நடித்த முரா அவர்களின் வேடப்பொருத்தம் குறிப்பிடத்தக்கது.

முனி, சங்கீத நாடக அகாதமியின் நிதி உதவித் திட்டத்தில் உருவாக்கம் பெற்ற நாடகம். கவிஞர் மலைச்சாமி இந்நாடகப் பனுவலை உருவாக்கினார். இந்நாடகம், உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறையின் வழியாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1995ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. முனி நாடகத்தின் மேடை அமைப்பு இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று. மகாபாரத – அர்ச்சுனன் தபசு தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் தபசு மரத்தின் சிறு வடிவம் இந்நாடகத்தில் கையாளப்பட்டது. அர்ச்சுனன் தபசு மரம், ஆணாதிக்கத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. அதே பொருண்மையில் முனியில் பயன்படுத்தப்பட்ட தபசு மரம், பெண்ணிய அரசியலை பளிச்சென வெளிப்படுத்தியது.

பலரைப் போலவே, தொப்புளான் ராஜாவால் பாதிப்புக்குள்ளான ஒருத்தி முனி. தொப்புளான் ராசாவின் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்ல, முனி தன் நாக்காலேயே ராசாவைச் சுழற்றி இறுக்கிக் கொன்று விடுகிறது. பழமரபுக் கதையை அடியொற்றி, மலைச்சாமியால் உருவாக்கப்பட்ட இந்நாடகப் பனுவலை பல்வேறு பரிமாணங்களோடு பெண்ணிய அரசியல் பேசும் நாடகமாக உருவாக்கினார் முரா. தொப்புளான் ராசாவைப் போன்றோர் இந்த மண்ணில் இருக்கும் வரை முனி தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பாள்.

கிரேக்க நாடகக்காரன் ஈஸ்கைலஸ் கி.மு. வில் எழுதிய ‘புராமிதியஸ் பவுண்ட்’ என்கிற நாடகத்தை 2002ஆம் ஆண்டு இவர் நெறியாள்கை செய்தார். புராமிதியஸ் அதிகாரத்திற்கு மட்டுமே சொந்தமாக இருந்த நெருப்பை, அனைத்து மக்களும் பயன்கொள்ளும் வகையில் பரவலாக்கி விடுகிறான். அதனால் அதிகாரம் அவனை மலையுச்சியில் சிலுவையில் அறைந்து, நரிகளுக்கும் கழுகுகளுக்கும் இரையாக்குகிறது. இந்நாடகத்தில் நெருப்பு ஒரு குறியீடு. நெருப்பு என்பதை அறிவாகவும் செல்வமாகவும் கொள்ளலாம். உலக மக்கள் அனைவரும் பயன்கொள்ள வேண்டிய ஒன்றை, ஓரிடத்தில் குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராகப் போராடி மாண்டு போனவர்களை மக்கள் இன்றளவும் போற்றி வருகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவனாகத்தான் புராமிதியஸ் திகழ்கிறான். இந்நாடகத்தின் தேவை, என்றென்றைக்கும் உண்டு என்றே தோன்றுகிறது.

கலக்காரர் தோழர் பெரியார் தமிழகத்தின் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்ட நாடகம். பெரியாரின் கருத்துக்களை இந்த மண் அறியும். ஆனால், பெரியார் கம்யூனிச சித்தாந்தத்தை உள்வாங்கிய ஒரு தோழர் என்பதை இந்நாடகம் வெளிப்படுத்துகிறது. கறுப்புச் சட்டை பெரியாரை சிவப்புச் சட்டைப் பெரியாராக, தன் அரசியல் பார்வை சார்ந்து மேடையேற்றியவர் முரா.

பெரியாரின் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை ஒரு கதையைப் போல காட்சிப்படுத்தியது இந்நாடகம். எளிமையான மேடைப் பொருட்களைப் பயன்படுத்தி இந்நாடகத்தைப் பல இடங்களில் மேடையேற்றுவதற்கு ஏற்ப உருவாக்கியிருந்தார் பேராசிரியர். பெரியார் இந்த மண்ணை விட்டுப் பிரிந்து பல ஆண்டுகள் ஆகிப்போன சூழலிலும் சாதி மத வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் போன்றன இன்றும் குறைந்தபாடில்லை. இவை பெரியாரின் காலத்தைக் காட்டிலும் மேலும் வீச்சாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆக, பெரியாரின் கொள்கைகளை இன்னும் வீச்சாக முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது.

இளைய பத்மநாதன்:
ஈழத்தைச் சார்ந்த நாடகக்காரர் இளைய பத்மநாதன் (பத்தண்ணா). இவர், போர்ச்சூழல் காரணமாகத் தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்தவர். தமிழகத்திற்கு வந்தவர் ஆங்காங்கே நடக்கும் கூட்டங்கள், நாடக நிகழ்வுகள், நாடக விழாக்கள் ஆகியவற்றில் கலந்துகொண்டு விவாதங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு சூழலில் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வீ. அரசு அவர்களுக்கும் நாடகக்காரர் அ. மங்கை அவர்களுக்கும் அறிமுகம் ஆகியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, நாடக ஆர்வலர்களையும் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத் துறை மாணவர்களையும் இணைத்து உருவாகியிருந்த பல்கலை அரங்கத்தோடு 1989 முதல் பத்தண்ணா செயல்படத் தொடங்குகிறார்.

பத்தண்ணா நாடக நெறியாளுனராகவும் பனுவல் ஆசிரியராகவும் செயல்படுபவர். இடதுசாரி அரசியல் பின்புலம் உள்ள இவர், தமிழகத்திற்கு வருவதற்கு முன் ஈழத்தில் நாடகங்கள் செய்து கொண்டிருந்தவர். நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி பங்கேற்பாளர்களுக்கு ஆடல், பாடல், நடிப்புப் பயிற்சிகள் அளித்து நடிகர்களாக உருவாக்கிய பிறகு பனுவலுக்குள் செல்வது பத்தண்ணாவின் முறை. தமிழ் மரபு சார்ந்த ஆடல், பாடல் உத்திகளை நவீன நாடகத்திற்கு உந்துதலாக இருக்க வேண்டும் என்பது பத்தண்ணாவின் கருத்து. அவ்வாறு உருவாக்கப்படும் நாடகமே தமிழ் அடையாளம் சார்ந்த நாடகமாக இருக்க முடியும் என நம்பிச் செயல்படுபவர். அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “உலகின் எந்த மூலையிலிருந்தும் நாடகப் பனுவல்களை எடுத்து நாடகமாக உருவாக்கத் தயார். ஆனால், அந்தப் பனுவலை தமிழ் அடையாளம் சார்ந்த நாடகமாக உருவாக்கவே நான் முனைவேன்” என்பார். அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு கண்களுக்கு அப்பால் என்கிற ஈழத்துப் படைப்பாளி நந்தியின் பனுவலை வீதி நாடக வடிவில் உருவாக்கினார். கண்ணப்ப நாயனார் கதையை அடியொற்றிய இந்நாடகம், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை எழுப்பியது.

ஜெர்மன் நாட்டு நாடகக்காரன் பெர்ட்ரோல்ட் பிரெக்ட் எழுதிய விதியும் விதிவிலக்கும் (Exception and the Riule) என்கிற நாடகப் பனுவலைத் தழுவி, பல்கலை அரங்கத்தினர் உருவாக்கிய ஒரு பயணத்தின் கதையை 1990ஆம் ஆண்டு நெறியாள்கை செய்தார் பத்தண்ணா. இந்நாடகத்தில் புதையல் தேடிச் செல்லும் முதலாளிக்கு வழிகாட்டியும் சுமைகளைத் தூக்கிச் செல்லும் கூலியும் முதன்மையான பாத்திரங்கள். பயணத்தின் போது முதலாளி ஓய்வெடுக்கத் தங்கிய அறைக்குக் கூலி செல்கிறான். அப்போது சந்தேகித்த முதலாளி கூலியை கொலை செய்து விடுகிறான். அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. நீதியரசர் ‘முதலாளி குற்றவாளி அல்ல’ என்று தீர்ப்பளிக்கிறார்.

உழைக்கும் மக்களின் நிலையும் இடைத்தரகர்களின் நிலையும் முதலாளி வர்க்கத்தின் பண்புகளும் இந்நாடகத்தில் வெளிப்படுகின்றன. ஆடல், பாடலோடு நிகழ்த்தப்பட்ட ஒரு பயணத்தின் கதை வர்க்க அரசியலை அழுத்தமாகப் பேசியது.

பத்தண்ணா எழுதிய தீனிப்போர் நாடகப் பனுவலை அ. மங்கை நடுவணரசின் சங்கீத நாடக அகாதமியின் நிதி உதவியுடன் நெறியாள்கை செய்தார். இந்நாடகம் 1992ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. நாட்டு விலங்குகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர், உணவு இடைவேளையின் போது தாவர உணவு ஙீ புலால் உணவு என்பதாக உருமாறி நாடகம் நிறைவுறுகிறது. பேரா. சே. இராமானுஜம் அவர்களின் வெறியாட்டம் ஈழத்துப் போர்ச் சூழலோடு இணைத்துப் பார்க்கப்பட்டது போலவே, தீனிப்போரும் பார்க்கப்பட்டது.

1993ஆம் ஆண்டு ஏகலைவன் நாடகத்தை நெறியாள்கை செய்தார் பத்தண்ணா. மகாபாரதக் கதையில் குருபக்தியை வலியுறுத்தச் சொல்லப்பட்ட ஏகலைவன் கதையின் மறுவாசிப்பு இந்நாடகம். தெருக்கூத்தின் ஒப்பனையை இந்நாடகத்தில் இடம்பெற்ற பாண்டவர்கள் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தினார் பத்தண்ணா.

மற்ற நாடகங்களைப் போலவே இதுவும் ஆடல், பாடல் சார்ந்தே உருவாக்கப்பட்டது. போர்ப்பயிற்சி பெற்ற அரசர்களைக் காட்டிலும் வில்வித்தையில் சிறந்திருந்த வேடன் ஏகலைவனின் ஆற்றலைப் பொறுக்காத அரச குலம், சூழ்ச்சியால் அவனது திறமைகளை அழிக்கும் அரசியலைப் பேசுகிறது இந்நாடகம். ஆற்றல் சுரண்டல்கள் இருக்கும் வரை ஏகலைவனின் தந்தையைப் போன்றோரின் கேள்விக் குரல்கள் ஒலிக்கத்தான் வேண்டும்.

கோ. பழனி:
1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலை அரங்கில் செயல்படத் தொடங்கிய கோ. பழனி நடிகராக, இசைஞராக, நெறியாளுனராக தமிழ் நாடக வெளியில் இயங்கிக் கொண்டிருப்பவர். டிசம்பர் – 6 (வீதி நாடகம் – 1993), பாஞ்சாலி (1995), தடி (1998) ஆகிய நாடகங்களை பல்கலை அரங்கின் வாயிலாகவும் அந்நியர்கள் (1999), கத்திரிக்கா ராஜா (2004), விளக்குகள் (2005) ஆகிய சிறார் நாடகங்களையும் ஒத்திகை (தஞ்சாவூர்) நாடகக் குழுவின் வழி சாம்பான், ஒத்தல்லோ (2000 – 2001) ஆகிய நாடகங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முகங்கள் நாடகக் குழுவின் வழி வியூகம் (2014), ஒரு ஊர்ல…!? (2016) ஆகிய நாடகங்களையும் நெறியாள்கை செய்துள்ளார். பயிற்சிப் பட்டறைகள் (பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சீர்திருத்தப் பள்ளி சிறார்கள்), நாடக ஆய்வுகள் என்று தமிழ் நாடக வெளியில் இயங்குபவர்.

மதச் சார்பற்ற நாடான இந்தியாவில் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேள்வி எழுப்பும் கதையம்சத்தை எடுத்துக்கொண்டு மசூதி இடிக்கப்பட்டது சரியா? தவறா? என்று விவாதித்தது டிசம்பர்-6. மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதநேயம் மிக்கவர்கள் இத்தகைய போக்குகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய கடமையை இந்நாடகம் வலியுறுத்துகிறது.

தடி, சாம்பான் ஆகிய நாடகங்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலை எழுப்பியவை. தடி, சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலைச் செய்பவரின் பின்புலம் சார்ந்தது. சாம்பான், ‘குடித்தொழிலாக பறையடிக்க முடியாது’ என்று மறுத்த தஞ்சைப் பகுதியைச் சார்ந்த குருமூர்த்தி என்பவரின் வலதுகைக் கட்டைவிரல் வெட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. சாம்பான் நாடகத்தை இந்தியாவின் வீதிநாடக பிதாமகன் என்று அறியப்பட்ட பாதல் சர்க்கார் அவர்கள் பார்த்து, மகிழ்ந்து பாராட்டினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட நாடகம் ஒத்தல்லோ. இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களின் பண்புகளுக்கு ஏற்ப, விலங்குகளின் முகங்கள் தலைக்கிரீடங்களாக அணிவிக்கப்பட்டன. விக்டோரியன் அரங்கைப் போன்றே பிரம்மாண்டமான தூண்களும் கேடயங்களும் பயன்படுத்தப்பட்டன. ஒத்தல்லோ, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குறியீடாக இந்நாடகத்தில் உருவகிக்கப்பட்டான்.

பாஞ்சாலி மராட்டி மொழி நாடகப் பனுவலைத் தழுவி தமிழில் நிகழ்த்தப்பட்ட நாடகம். இந்நாடகத்திற்கான நிதி உதவியை தில்லி ‘கதா’ அமைப்பு வழங்கியது. இந்நாடகம் மகாபாரதக் கதையில் வரும் திரௌபதை பாத்திரத்தை மறுவாசிப்பு செய்து, மராட்டியில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் அடையாளம் சார்ந்த ஆடல், பாடலை உள்வாங்கி பெண்ணிய அரசியலை முன்வைத்து நிகழ்த்தப்பட்டது. இந்நாடகத்தை விமர்சனம் செய்த ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், Colour Full Faces என்று பாராட்டி இருந்தது.

பூர்வகுடி மக்களை, மண்ணிற்கு அந்நியமான மாற்றார்கள் – ஆள்பவர்களை வளைத்துப்போட்டு – எவ்வாறெல்லாம் அழித்தொழித்து, வளங்களையும் வனங்களையும் அபகரித்துச் செல்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் நாடகம் வியூகம்.

காடுகள் அழித்தொழிப்பு
கனிம வளங்கள் அழித்தொழிப்பு
காற்று அழித்தொழிப்பு
நீர் வளங்கள் அழித்தொழிப்பு
மலைகள், மனித இனங்கள் அழித்தொழிப்பு
அழித்தொழிப்புகள் தொடர்கின்றன.  மனிதரைத் தவிர வேறு எந்த உயிரியும் அழித்தொழிப்புகளில் ஈடுபடுவதில்லை. மனிதருள் எவர் இவ்வகைச்செயல்களில் ஈடுபடுகின்றனர்? யாருக்காக?

அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, நகர வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி… என்பன போன்றவை எல்லாம் யாருக்கானவை? யாரை நோக்கியவை? இயற்கை வளங்கள் மனித இனத்தால் தம்வயப்படுத்திக் கொள்ளப்பட்ட காலம்தொடங்கி, மாபெரும் அழிவுகளைச் சந்தித்த காலம் என்பது இம்மாதிரியான ‘வளர்ச்சி’ ஏற்பட்ட காலத்தில்தான்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மனிதர்கள், இயற்கையை வளைத்துக் கொண்டது போய், அதி உற்பத்திக்காக வியூகங்கள் தீட்டி, தங்கள் ‘விஸ்வரூப’க்கைகளை விரித்துச் சுருட்டிய – ஆக்கிரமித்த இயற்கை வளங்கள் எத்தனை எத்தனை?! வளர்ச்சி என்ற பெயரில் மண்ணையும் மலையையும் காட்டையும் கடலையும் அவற்றை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரிகளையும் இராட்சத எந்திரங்களால் அழித்து மனித உடல்கள்மீது ஆலைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர் இந்த வியூக‘மனிதர்கள்’ என்பதை உரத்துப் பேசிய நாடகம் இது.

இலாப நோக்கத்திற்காக மட்டுமே மண்ணின் நலனையும் மைந்தர்களின் நலன்களையும் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாது அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனம் உள்ளவரை இதுபோன்ற நாடகங்கள் அவசியமாகின்றன.

சிறார்கள், நாட்டின் வருங்காலத் தூண்கள். அவர்களது உலகம் கற்பனை ஆற்றலும் படைப்பாளுமையும் மிக்கது. எதிர்க்க வலுவற்ற இந்தப் பிஞ்சுகள் பெரியோர்களால் பல்வேறு வதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவற்றை முன்வைத்து நகர்கிறது ஒரு ஊர்ல…!?

சிறார்கள் ஆடிப்பாடி, ஓடி, மண்ணில் உருண்டு புரண்டு, கதை கேட்டு, கதை பேசி, சண்டையிட்டு, சுவற்றில் வரைந்து, பொம்மைகள் செய்து, விளையாடி, கூச்சலிட்டு கொண்டாட்டத்தோடும் குதூகலத்தோடும் நேரம் மறந்து, பெரிய புத்தி மனிதர் இல்லாத வனங்களில் பறவைகளோடு பறவைகளாய், மரங்களோடு மரங்களாய், செடிகளோடு செடிகளாய் வாழ ஆசை கொள்கின்றனர்.

ஆனால் ஒழுக்கம், நீதி, அறம், மரியாதை, சரி, தப்பு என்று எத்தனையோ நெறிகளை பெரியோர்கள் குழந்தைகளுக்காகவே உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. வயதிற்கேற்ப சிறார்களை வாழ அனுமதியுங்கள். ஆண் – பெண் வேறுபாடுகள், சாதி மத பேதங்கள், ஏழை – பணக்காரன், வேலைச்சுமை, முதல் மதிப்பெண் என்று எந்த விஷ விதைகளையும் அவர்கள் நெஞ்சில் விதைக்காமல் குழந்தைகளாகவே கொஞ்ச காலமாவது, படைப்பு உலகத்தோடு வாழ வழிவிடுங்கள் பெரியோர்களே! என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நாடகம்.

தமிழ் நாடக வெளிக்கு பல்வேறு நவீன நாடகப் பனுவல்களை வழங்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ந. முத்துசாமி. இவரது பனுவல்கள் பலராலும் ஆற்றுகைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திரா பார்த்தசாரதி, பரிக்ஷா ஞாநி, கே. ஏ. குணசேகரன், பிரளயன், இரா. ராஜு, அ. மங்கை, அ. ராமசாமி, கருஞ்சுழி ஆறுமுகம், கே. எஸ். இராஜேந்திரன்,  ஆடுகளம் ராமாநுஜம், வெளி ரெங்கராஜன், கருணா பிரசாத், முருகபூபதி, வேலு சரவணன், பார்த்திபராஜா… எனப் பலரும் தமிழ் நாடக வெளியில் காத்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரையின் எல்லை கருதி முதலிலேயே குறிப்பிட்டது போல, என் அனுபவம் சார்ந்து சில நவீன நாடகக்காரர்கள், அவர்களின் நாடக உருவாக்கம், எனது நாடக உருவாக்கம், அவற்றின் உள்ளீடுகள் ஆகியன பற்றி இங்கு விவரித்துள்ளேன். விரிவாகப் பதிவாக்க வேறொரு களம் காத்திருக்கிறது. அதில் சந்திக்கலாம்.

 

துணை நின்ற நூல்கள்: 
அண்ணாமலை சி., நாடகம் பதிவும் பார்வையும், காவ்யா, சென்னை, 2003.
இராமசுவாமி மு., தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை, ருத்ரா.  தஞ்சாவூர், 1998.
———–, ‘சாபம், விமோசனம்?’ ருத்ரா பதிப்பகம், தஞ்சாவூர். 2000.
———– (பதி)., இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகங்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1999.
இராமானுஜம் சே., ‘மௌனக்குறம்’ சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1996.
குணசேகரன் கே. ஏ., இன்றைய தமிழ் நாடகச் சூழல், தன்னானே, பாண்டிச்சேரி, 1999.
————-., கே. ஏ. குணசேகரன் நாடகங்கள், என். சி. பி. எச்., சென்னை, 2004.
பகவதி கு., (பதி) தமிழ் நாடகம் – நேற்றும் இன்றும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.
பழனி கோ., வியூகம், கனலி பதிப்பகம், சென்னை, 2015.
மங்கை அ., பெண்-அரங்கம்- தமிழ்ச்சூழல், ஸ்நேகா, சென்னை, 2001.

பொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர்

— முனைவர் ச.கண்மணி கணேசன்




முன்னுரை: 
பண்டைத் தமிழர் விளையாட்டுக்களில் பொம்மைக் கல்யாணமும் ஒன்று. இவ்விளையாட்டு பற்றிய செய்திகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன? என்னென்ன பெயர்கள் பெறுகின்றன? எந்தக் காலத்தில் கொண்டாட்டம் தொடங்கியது? காலமாற்றம் ஏற்பட்டதா? போன்ற வினாக்களின்  விடை காணும் முகமாக இக்கட்டுரைச் செய்திகள் அமைகின்றன.

பொம்மைக் கல்யாணம் பற்றிய முதற்செய்தி:
கபிலரின் குறிஞ்சிக்கலிப் பாடலில் பொம்மைக் கல்யாணம் பற்றிய செய்தி இடம் பெறுகிறது.

               ”சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும் 
               விளையாட ………………………………………..
               ………………………………………………………….
               தையில் நீராடிய தவந்தலைப் படுவாளோ 
               …………………………………………………………..
               பொய்தல் மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ 
               எய்திய பிறர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ
               …………………………………………………………..
               சிறுமுத்தனைப் பேணிச் சிறுசோறு மடுத்துநீ 
               நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ   “(பா- 59-அடி-5-21)

என்று தலைவன் தைந்நீராடிய தலைவியைப் பார்த்துக் கேட்கிறான். என் காதலை ஏற்றுக் கொள்வதே நீ நோற்றதன் பயன் ஆகும் என்பது அவன் கருத்து. 

அவள் சிறுவயதில் வேலைப்பாடு  அமைந்த ஒளி வீசும் பாவையை வைத்து விளையாடினாள். அத்துடன் பாவை நோன்பிற்காக பிறர் மனைக்கட் சென்று ஐயமேற்றாள். பின்னர் அதைச் சமைத்து ஆயத்தார்க்கும் கொடுத்துத் தன்னுடைய பாவைக்கும் ஊட்டினாள். தன்னொத்த தோழியரோடு அவள் இந்நோன்பை விளையாடிச் செய்ததே தலைவன் இங்கு நகைப்புக்குரியது என்கிறான். விரும்பியபடி மணமுடித்து வாழ்வதற்காக நோற்கும் பாவை நோன்பில் சிறுமுத்தனையும் புனைந்து; பேணி வளர்த்து; அவனுக்கு வேறொருத்தியின் மகளைக் கோடற்கு; விருந்து சமைத்துச் செய்த விளையாட்டு பொம்மைக் கல்யாணம் என்பது குறிப்பாகப் புலப்படுகிறது. இச் சிறுமுத்தனைக் குழமகன் என்கிறார் நச்சினார்க்கினியர்.

நீலகேசியில் இடம்பெறும் பாடல்(பா-408) இத்தகு பாவையைக் குழமணர் என்கிறது. அதற்கு கை, கால் முதலியன இரா என்றும் பொ.வே.சோமசுந்தரனார் விளக்கம் தருகிறார்.

அம்பாவாடல்; பாவை நோன்பு; தைந்நீராடல்:
பரிபாடலில் இந்நோன்பை நல்லந்துவனார் அம்பாவாடல் என்கிறார். அது   மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்து முழுமதி நாளில் தொடங்கியமை. 

               “பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
               ஞாயிறு காயா நளிமாரிப் [பிற்குளத்து   
               மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை 
               விரிநூல் அந்தணர் விழவு தொடங்க 
                ……………………………………………….
               அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர்
               ……………………………………………………...
               தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல்  “(பா-11அடி- 75-91)

என்ற பாடலடிகளில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. குளிரால் நடுங்குகின்ற முன்பனிப் பருவத்தில் சூரியனின் வெம்மை தாக்காத கடைமாரியை உடைய மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்து முழுமதிநாளில் அந்தணர் விழாவைத் தொடங்கினர். அவ்விழா தைமாதம் முழுவதும் தொடர்ந்ததால் தைந்நீராடல் என்றும் அழைக்கப்பட்டது. அம்பாவாடும் பெண்கள் தம் தாயரின் அருகில் இருந்து தைந்நீராடுவதைத் தவம் என்றே சொல்வதால் அதுவே பாவை நோன்பாகிறது.

மார்கழி மாதத்து மதிநிறைந்த நன்னாளிலேயே ஆண்டாள் பெண்களை நீராட அழைக்கிறாள் என்பதும் நோக்கத்தக்கது (திருப்பாவை-பா-1)

அழகிய பாவை செய்து நீராடி வழிபட்டமையே அம்பாவாடல் என்னும் பெயர் அமையக் காரணம் எனலாம். அம்+பாவையாடல் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வழியுள்ளது. ‘பாவையாடல்’ என்னும் தொடர் சங்க காலத்திலேயே  தமிழரின் முயற்சிச் சுருக்கம் காரணமாக ‘பாவாடல்’ என்று சுருங்கி இருக்க வேண்டும்.

திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்தும் ‘ஏலோரெம்பாவாய்‘ என்று விளித்துப் பாடியுள்ளமை; பார்வதிதேவியைப் பாவையாக்கி அவர்கள் வழிபட்ட செயலைப் புலப்படுத்துகிறது. வழிபாட்டிற்கு அமைந்த திருவுருவையே ‘பாவை’ என்று அழைத்ததாக ப.இராமநாதபிள்ளை தன் விளக்கவுரையில் கூறியுள்ளார். 

வைணவத்திலும் பெண்கள் நீராடி சக்திக்குப் பாவை செய்து நோற்றுக் கொண்டாடினர். திருப்பாவைப் பாடல்கள் அனைத்தும் ‘ஏலோரெம்பாவாய்‘ என்று முடிவது பாவை வழிபாட்டின் எதிரொலியே ஆகும். பாகவதமும் ராதை முதலிய கோகுலத்துப் பெண்கள் சக்தியின் பாவை செய்து வழிபட்டமையைப் பேசுகிறது.

               “நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ”(பா-2) 

என்னும் திருப்பாவைப் பாடலடி ஆண்டாள் பாவை செய்து வழிபட்ட மரபைச் சுட்டுகிறது.

மார்கழி நீராடல்: 
பக்தி இயக்க காலத்தில் அம்பாவாடல் மார்கழி நீராடல் என்று பெயர் மாற்றம் பெற்றதுடன்; தைந்நீராடல் தனிப்பொருளும் சிறப்பும் பெற்றது. ஆண்டாளின் திருப்பாவை, 

               ”மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”(பா-4);

என்கையில் ‘மார்கழி நீராடல்’ என்னும் புதுப்பெயர் வழக்கு தோன்றியமை தெளிவு. பின்னர் தையொரு திங்களும் தரைவிளக்கித் தன்மண்டலமிட்டு மாசி முன்னாள் வரை ‘வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே’ என்று தொழுவதாக நாச்சியார் திருமொழி அமைந்துள்ளது. வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து நோற்றாலும் அது பாவை வழிபாடாகச் சுட்டப்படவில்லை. காமனை வழிபட்டுத் திருமாலைச் சேர நோற்பதாகவே அமைகிறது. 

மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் பெண்கள் கூடி நீராடுவதைப் பன்னிப் பன்னிப்  பல பாடல்களில் பாடிய பிறகு இறுதியில்,

               “போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்”(பா-20) என முடிகிறது.

மார்கழி நீராடல், தைந்நீராடல் என்று இருவேறு கொண்டாட்டமாகத் திரிந்தமையால் பக்தி இயக்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில்; பாவைநோன்பு  திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடங்கியமை மாறி; மார்கழி முதலிலிருந்தே தொடங்கியமை புலனாகிறது. இதனால் அம்பாவாடல் என்ற தைந்நீராடல் மார்கழி நீராடலாகச் சுருங்கி மாறிய பாவைநோன்பின் வரலாறு தெளிவாகிறது.

அம்பாவாடல் நிகழ்ச்சிகள்:
விழா தொடங்கியவுடன் முப்புரி நூலணிந்த வேதியர் பொற்கலங்களில் பலிப்பொருளை ஏந்தி வேதநெறிப்படி நீர்க்கரையிலே முள்ளும் இல்லாச் சுள்ளி எரிமடுத்துத் தீ வளர்த்தனர். பெண்கள் வைகறையில் நீராடினர்.

               “புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப 
               …………………………………………………..
               ……………………..உறைசிறை வேதியர் 
               நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பில் 
               தையல் மகளிர் ஈரணி புலர்த்தர... “(பரிபாடல்-பா-11-அடி-79-86)

என்று அம்பாவாடல் நிகழ்ச்சிகள் நல்லந்துவனார் பாடலில் விரித்துச் சொல்லப்படுகின்றன. வைகைக்கரையில் தைந்நீராடிய பெண்கள் வேதியர் வளர்த்த தீயின் அருகில் வந்து தம் ஆடைபுலர்த்தி நின்றனர் என்று காட்சி தொடர்கிறது. பூதந்தேவனாரின்,     

               “பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து 
               தழையும் தாரும் தந்தான் இவனென 
               இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத் 
               தைஇத்  திங்கள் தண்கயம் படியும் 
               பெருந்தோட் குறுமகள் …………”(பா-80)  நற்றிணை

எனும் பாடல் தனக்குத் தழையும், தாரும் தந்த தலைவனை எண்ணித் தைந்நீராடிய தலைவியைக் காட்சிப்படுத்துகிறது.

எருமை மாடுகளை மேய்ச்சலுக்குக் கிளம்பும் விடிகாலைப் பொழுதில் தலைவி தன் தோழியரோடு குளத்தில் படிந்து நோன்பாற்றினாளாம். பெண்கள் பலரும் தைமாதத்தில் ஒருங்கு நீராடும் குளிர்ந்த குளத்தை ஐங்குறுநூறு பரத்தமை மேற்கொண்ட தலைவன் மார்புக்கு உவமை ஆக்குகிறது.

               “நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் 
               தைஇத் தண்கயம் போலப் 
               பலர் படிந்துண்ணும் நின் பரத்தை மார்பே “(பா-84) 

எனும் பாடலடிகள் நீராடும் குளத்திற்குச் சிறப்பளிப்பதன் மூலம் நோன்பியற்றும் பெண்களின் பெருக்கத்தையும், நோன்புக்காலத்தையும் நமக்குத் தெளிவாகத் தருகின்றன.  

பாவை நோன்பின் போது தானத்தையும், பிச்சையையும் குறையின்றிக் கூடியமட்டும் செய்து நோற்றனர்.

               “ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
               உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்”(பா-2)

எனும் திருப்பாவை அடிகள் நோக்குக.

இறைவியைப் பாவையாகச்செய்து; அவளிடம் விரும்பும் கணவரைப் பெறவேண்டும் என்றும், நிலவுலகிற்கு மழை வேண்டும் என்றும் வேண்டினர்.

               “உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
               அன்னவரே என்கணவ ராவார் அவருகந்து 
               சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்”

என்று திருவெம்பாவை நோன்பிகள் பாவையைத் துதிக்கின்றனர்.   

               “.......................................நந்தம்மை ஆளுடையாள் 
               தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு 
               முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே 
               என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் “

என்பது மாணிக்கவாசகரின்  திருவெம்பாவை. இறைவனுக்கு முன்னர் இறைவியின் அருள் வந்து சேர்வது போல் மழைவந்து சேர வேண்டுகின்றனர். ஆண்டாளும்,

               “ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி 
               ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்து 
               ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து 
               தாழாதே சாரங்க முதைத்த சரமழை போல் 
               வாழ உலகினில் பெய்திடாய்... “ 
என்று மழை வேண்டுகிறாள்.

பரிபாடலும் அம்பாவாடும் போது,   ”வெம்பாதாக வியனில வரைப்பென“ (பா-11-அடி-80) பெண்கள்  வேண்டியதாகச் சொல்கிறது.

அம்பாவாடலும் சமயமும்:
மார்கழி மாதத்துத் திருவாதிரையன்று தொடங்கிய விழாவிற்குரிய தெய்வம் சிவபெருமான் என்று பொ.வே.சோமசுந்தரனார் பரிபாடல் உரையில்  கூறியிருப்பினும்; பாவை நோன்பிற்குரிய தெய்வமாகிய பார்வதிக்குப் பாவை செய்து நோற்றார்கள் என்று பாடலடிகள் உணர்த்துவது கண்டோம். 

திருவெம்பாவைக்கு விளக்கவுரை கூறும் ப.இராமநாதப்பிள்ளை இது ‘மாதிருக்கும் பாதியன் விழா’ என்று சொல்லித் தொடர்ந்து சிவசக்திக்கு உரியதென்கிறார். சக்தியைப் பாவையாகக் கொண்டு வழிபட்டமையை ஆண்டாளிடமும் காண்கிறோம். இங்கு சைவ வைணவப் போட்டியால் தான் திருவாதிரையன்று தொடங்கிய விழா மார்கழி முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டதோ என்னும் ஐயம் எழுகிறது.

முடிவுரை:
திருவாதிரை முழுமதிநாளில் தொடங்கி அம்பாவாடல் என்று அழைக்கப் பட்ட தைந்நீராடலின் போது பெண்கள் விடியுமுன் நீர்த்துறைக்குச் சென்று நீராடிப் பாவை செய்து வழிபட்டனர். அந்தணர்கள் வேதமந்திரம் கூறித் தீமுறை வழிபாடும் செய்தனர். பெண்கள் ஐயமேற்று நோன்பிருந்தனர். பாவை நோன்பு தைமாத இறுதிவரை தொடர்ந்தது. பக்திஇயக்கக் காலத்தில் மார்கழி நீராட்டு என்று பாவைநோன்பு சுருங்கியது. தைந்நீராடல் தனியொரு போக்கில் காமனை நோக்கி வழிபடுவதாய் அமைந்தது. சிறுபிராயப் பெண்கள் சேர்ந்து பாவைநோன்பின் போது சிறுமுத்தன் என்று சீராட்டிப் பாராட்டி விருந்தயர்ந்து தன் குழமகனுக்குப் பெண்கேட்டு விளையாடிய போக்கிலிருந்தே பொம்மைக் கல்யாணம் தோன்றியது.





தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)









Saturday, January 5, 2019

சிந்துவெளி கொற்றவை





படைப்பில் தன்னை
பார்வையாளனாக மட்டும்
ஆண் உணர்ந்து
பயந்திருந்த காலம்.
வேட்டையாடித்
திரிந்தவன்..
பிறப்பின் ‌ரகசியம்
புரிந்தவன் அல்ல.
காட்டில் "இனிஷியல்"
வைத்துத் திரிந்தது
எந்தப் புலி...?
பெண்ணே
ஆணையும் பெற்றாள்
என்பதில்
ஆரம்பித்தது அவன் அச்சம்.
மாதக்குருதி
அவனை‌ மட்டுமல்ல
அவளையும் கூட
பயமுறுத்தியது..
அது ஒரு மாயம் போல
வந்து மறைந்தது.
கர்ப்பிணிகளின்
பெருத்த வயிறு
படைப்பு நிகழ்த்தும்
பானையாய்..
பனிக்குடம் உடைத்து
ரத்தச் சகதியில்
விழித்து அழுதது
தொப்புள் கொடி தாங்கி
இன்னொரு தலை...
கொற்றவையாய்
கொல்லிப்பாவையாய்
அணங்காய் துணங்காய்
ஆடித்தீர்த்தாள் அன்னை.
சிந்துவெளியில்
அவள்
எதைத் தொலைத்தாள்
கீழடியில் எதை மீட்டாள்?
கண்ணகி முலை அறுத்தாள்
காரைக்கால்
முலை தொலைய
வரம் கேட்டாள்.
கேரளத்தில்
இன்னொருத்தி
முலையறுத்துக் கொடுத்தாள்
வரித்தொகையாய்.
இவை.
ஆறும் சினம் அல்ல
என்று
அடிக்கோடிட்ட
ஆறாச் சினம்.
இதோ..
சேரர் பூமியில்
மகளிர் எழுப்பிய
மதிலில்
யுகங்களுக்கான
கேள்விகளும் ‌பதில்களும்..
கொற்றவை சிரித்தாள்
கொல்லிமலையில்...
பால் கொடுத்த புலியின்
பக்கத்தில் நின்று...
ஆர்.பாலகிருஷ்ணன்
05/ 01/ 2019