Wednesday, August 10, 2016

கோண்ட்வானா

-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

“கோண்ட்வானா லேண்ட்”, “குமரிக் கண்டம்”  இரண்டும் ஒன்றா? கேள்விக் கணையுடன் என் அறையில் நுழைந்த நண்பர் கையில் ஆங்கிலப் புத்தகம் ஒன்று இருந்தது. அதில் GONDWANA LAND (KUMARIK KANDAM) என்றிருந்தது.. முன்பெல்லாம் லெமூரியா  அல்லது குமரிக் கண்டம் என்று எழுதி வந்தனர். லெமூரியா கருத்து கைவிடப்பட்டதால் இப்போது கோண்ட்வானாவைப் பிடித்துக் கொண்டனர். அவ்வளவுதான்.

சரி, கோண்ட்வானா என்றால்  என்ன?  “ கோண்ட்” என அழைக்கப்படும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி / வனப் பகுதி கோண்ட்வானா என்று அழைக்கப் பட்டது. இதில், வங்கத்தின் மேற்குப் பகுதி, ஜார்கண்ட் , சத்தீஸ்கரின் கிழக்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகள் (பஸ்தார்), விதர்பாவின் கிழக்குப் பகுதி மற்றும் தெலுங்கானாவின் வடக்குப் பகுதி ஆகியவை அடங்கும். இவர்கள் தனித்தனி குழுக்களாக இருந்து வருவதால் இதுதான் எல்லை என்று கோண்ட்வானா லேண்டை வரைப்படுத்த இயலாது.

இனி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரயில் வண்டி , 1850 களில் நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. நீராவி என்ஜினை இயக்க நிலக்கரி வேண்டுமே, அதற்காக 1851 இல் எங்கள் “ GEOLOGICAL SURVEY OF INDIA  ( GSI) ( ஜி.எஸ்.ஐ ) துவக்கப் பட்டது..  இவர்களின் முதல் வேலை , நிலக்கரிப் படிவங்களைக் கண்டு பிடிப்பதுதான். நிலக்கரிப் படிவங்கள் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் உருவான படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும். அத்தகைய படிவப் பாறைகளை அவற்றில் உள்ள தொல்லுயிர் எச்சங்கள், குறிப்பாக தொல் தாவர எச்சங்களைக் (படம்)கொண்டு  இனம் கண்டுகொள்ள இயலும். 


ஜார்கண்ட் , சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டம், ஓடிஷாவின் டால்சிர் பகுதி, வங்கத்தின் மேற்குப் பகுதி, விதர்பாவின் கிழக்குப் பகுதி  இங்கெல்லாம் நிலக்கரிப்படிவங்களை (படம்) உள்ளடக்கிய படிவப்பாறைகள் கண்டறியப்பட்டன.


இந்தப் படிவப்பாறைகள் கோண்ட் பழங்குடிகள் வாழும் பகுதியில் அதிகம் கிடைத்ததால், இந்தப் பாறைத் தொகுப்புக்கு, ஜி.எஸ்.ஐ.  புவியியலாளர்  HENRY BENEDICT MEDLICOTT,1872 ஆம் ஆண்டு “கோண்ட்வானா பாறைகள்” எனப் பெயரிட்டார். (இது மரபு. தமிழகத்தின் கிழக்குக் கரையோரம் அதிக  அளவில் காணப்படும் “கடலூர் மணற்பாறைகள்” முதன்  முதலில் கடலூர் திருவந்திபுரம் அருகே கண்டறியப்பட்டதால் அவை அப்பெயரில்  அறியப்படுகின்றன. புதுக்கோட்டையிலும் இருந்தாலும்  சரி , புதுச்சேரியிலும் இருந்தாலும் சரி அவை “கடலூர் மணற்பாறைகள்” என்றே அழைக்கப் படுகின்றன.).

இந்த “கோண்ட்வானா பாறைகள்’ உருவான காலம் “கோண்ட்வானா காலம்” என்று அறியப்படுகிறது (இன்றைக்கு முன் சுமார் முப்பது கோடி ஆண்டுகளுக்கும் பதினான்கு கோடி ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட  காலம்).

 

இந்த கோண்ட்வானா பாறைகள் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் பெருமளவில் காணப் படுகின்றன. இதன் காரணமாகவே முதலில் “லெமூரியா” , பின் “கண்டப் பெயர்ச்சி”. தொடர்ந்து “கடல் தரை பரவுதல்” போன்ற கருத்துகள் தோன்றின. பின் கூறிய இரண்டு கருத்துகளும், எல்லாக் கண்டங்களும் சேர்ந்து  ஒரே அகண்டமாக இருந்திருக்க வேண்டும் எனும் புவியியல் உண்மையை வலியுறுத்தின.

புவிக்கோளின் தென்பகுதியில் உள்ள கண்டங்கள் சேர்ந்திருந்த அகண்டம் .“கோண்ட்வானா லேண்ட் “ என்று பெயரிடப்பட்டது.  இந்தியாவில் அறியப்பட்ட .“கோண்ட்வானா பாறைகள்” எல்லா தென்கண்டங்களிலும் காணப் படுவதால் , ஆஸ்திரியாவை சேர்ந்த அறிவியலாளர் எட்வர்ட் சூயெஸ் என்பவர், இந்தத் தென் அகண்டத்திற்கு இந்தப் பெயரை சூட்டினார். 



இந்த “கோண்ட்வானா லேண்ட், வட கண்டங்களை உள்ளடக்கிய “லவ்ரேஷியா” அகண்டத்துடன் சுமார் முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் இணைந்து “பேன்ஜியா” (PANGEA ) என்றழைக்கப்படும் பேரகண்டம் உருவானது. பின்னர் சுமார் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன் .“கோண்ட்வானா லேண்ட் அகண்டம்” பிரிந்து, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகிய கண்டங்கள்  வெவ்வேறு திசைகளில் நகர்ந்து இன்றைய நிலையில் உள்ளன. “புவிதட்டுகளின் கட்டமைப்பு” கோட்பாடு கண்டப் பெயர்ச்சி மட்டுமல்லாமல் புவியியலின் தீர்க்க முடியாத புதிர்கள் பலவற்றிற்கும் விடை காண்கிறது.





 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
 ________________________________________________________ 

Tuesday, August 9, 2016

கச்சத்தீவு – ஒரு மீள்பார்வை – மூன்று ஆங்கில நூல்கள் மூலம்

-- கே.ஆர்.ஏ. நரசய்யா







  
  நூல்கள்:
1. KACHCHTIVU and the PROBLEMS of INDIAN FISHERMEN in the PALK BAY     REGION - T R Publications. Chennai
2. Conflict Over Fisheries In The Palk Bay Region – Lancer Publishers and Distributors
3. CONTESTED TERRITORY OR COMMON HERITAGE? Thinking Out Of The Box – Imprint of Productivity and Quality Publishing Pvt., Ltd Chennai.



முதல் இரண்டு நூல்களும் பேராசிரியர் வெ. சூரியநாராயணனாலும் மூன்றாவது வெ. சூரியநாராயணன் மற்றும் ஆர். ஸ்வாமிநாதன் என்பவர்களாலும் எழுதப்பட்டவை.

பேரா. சூரியநாராயணன் தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளைப் பற்றிய சிறந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தெற்கு மற்றும் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் முதுநிலைப் படிப்பில் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முக்கியமாக பாக் நீரிணையின் வரலாற்றைச் சிறந்த முறையில் ஆய்ந்தவர். இவ்விரு முதல் நூல்களிலும் கச்சத்தீவு பிரச்சினையை அதன் ஆரம்பக்காலத்திலிருந்து திறம்பட விவரித்துள்ளார். காலத்தால் முதல் நூல் முன்னரே எழுதப்பட்டதாயினும் இன்றைய நிலைக்கும் அது சரியாக இருப்பதால் இம்மூன்று நூல்களையும் கலந்து பார்ப்பதே பொருத்தமாகும்.

முதல்நூலிலேயே ஆசிரியரின் நோக்கு தெளிவாகிறது. ஆரம்பக் காலத்திலிருந்தே பாக் நீரிணை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலேயான ஒரு வழியாகவும் அதே நேரத்தில் ஒரு பெரும் தடையாகவும் இருந்துள்ளது. அவ்விடம் மீன் பிடிப்பதற்கான ஒரு முக்கியமான இடமென்பது கீழ்க்கண்ட புள்ளி விவரங்களால் தெரியும். 1980 ஆம் வருடத்து மக்கள் தொகை விவரத்தின் படி, தமிழ்நாட்டு மீனவர் 3,95,903 ஆவர். இந்தியாவின் மொத்த மீனவர் தொகையில் தமிழ்நாட்டு மூன்றில் ஒரு பங்காவார்   உலகில் மீனவர் சமுதாயம் வாழும் எவ்விடத்தை நோக்கினும் ஒன்று தெளிவாகும்; அதாவது சாதாரணமாக மீனவர்கள் கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவேக் கருதுகின்றனர். ஆகையால் அவர்களுக்குக் கடல் எல்லைகள் ஒரு பொருட்டல்ல; கடல் அவர்களது பிரதேசம்.

பாக் நீரிணை ராபர்ட் பால்க் என்ற அக்கால (1755-1763) மெட்ராஸ் கவர்னராக இருந்தவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்நீரிணையும் மன்னார் வளைகுடாவும் பாம்பன் கால்வாயால் இணைக்கப்படுகின்றன. இங்கு மீன்கள்  வாழ்வதற்கும் பெருகுவதற்கும் இயற்கைச் சூழ்நிலை வழி வகுக்கின்றது. ஆகையால் தொன்றுதொட்டே இவ்விடம் மீனவர்கள் விரும்பிய கடலாகும்.

இன்றைய பிரச்சினைகளுக்கு ஆரம்பம் இந்திய இலங்கை அரசுகள் அரசியல் ரீதியாக எடுத்த சில முக்கிய முடிவுகள் என்றே கூறலாம். 1974 மற்றும் 1976 வருடங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தமிழ் நாட்டு மீனவர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை.

இரண்டாவது நூலில் ஆசிரியர் முக்கியமான புள்ளி விவரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். அது  படிப்பவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளமாகக் காணப்படுகிறது. 

1950களில் இறால் மீன் வகை அதிகமாக  இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. முக்கியமாக  அமெரிக்காவும் ஜப்பானும் இவ்வகை மீனை வாங்கத் தொடங்கியது. வணிக நிலை கருதி அரசும் இதற்காக அது வரை இல்லாத அளவில் மீன் பிடி வசதிகளை அதிகரித்தது. முதல் கட்டமாகச் சாதாரண படகுகளிலிருந்து விசைப்படகுகளுக்கும் சாதாரண வலைகளுக்குப் பதிலாக இழுவலைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. மீன் ஏற்றுமதிக்காக மத்திய அரசு Marine Exports Development Authority (MPEDA)  என்ற ஒரு அமைப்பைத் தொடங்கியது. இதன் மூலம் மீன் ஏற்றுமதி 1961ல் இருந்த 17,295 டன்னிலிருந்து 2001 ஆம் ஆண்டில் 4,24,320 டன்னாக உயர்ந்தது. இதே போல இலங்கையிலும் ஏற்றுமதி பெருகிற்று. இவ்வணிக உயர்வும் இலாபமும், , இந்த பாரம்பரியத் தொழிலை மீனவர்கள் கைகளிலிருந்து மற்ற வணிகர்கள் கைகளுக்கு மாற்றியது! பல  தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் விசைப் படகுகளின் மகிமையைத் தெரிந்து கொண்டு அவற்றில் மூலதனமிட்டனர். இழுவலைகள் தற்காலிகமாகப் பெரும் இலாபத்தை அளித்தாலும் காலப்போக்கில் மீன் இனத்திற்குப் பெரும் பங்கத்தை விளைவிக்கும் என்பது மீனவச் சமூகத்திற்குத் தெரிந்த விஷயம். ஆனால் இத்தொழில்  வணிகர்களுக்கு ஒரு வியாபாரமே.

285.2 ஏக்கர் அளவிலான கச்சத்தீவு ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கில் பத்து மைல் தொலைவில் உள்ளது. இது மனிதர்கள் வாழும் பகுதியல்ல. பழங்காலத்தில் தமிழக மீனவர்கள் அக்காலத்திய வலைகளைக் காயப்போடுவதற்குப் பயன் படுத்தி வந்தனர்.  புனித அந்தோணியாரின் சர்ச் ஒன்று அங்குள்ளது.  மார்ச் மாதத்தில் இங்கு நடைபெறும் திருவிழாவில் தமிழக, இலங்கை மீனவர்கள் பங்கு கொள்வர். 1972 ராமநாதபுரம் கெசட் பதிவின் படி, இத்திருவிழாவின் போது, தங்கச்சிமடத்து கத்தோலிக்க குரு ஒருவர் அங்கு பூஜைக்காகச் செல்வது வழக்கம்.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் இராமநாதபுரத்து மீனவரான சீனிக்குப்பன் படையாச்சி என்பவரால் கட்டப்பட்டது என நம்பப் படுகிறது. இந்த சர்ச் ஒரு இராமனாதப்புரத்துப் படையாச்சியால் கட்டப்பட்டதன் காரணமாக, பொதுவாக இது  தமிழ் நாட்டுக் கத்தோலிக்க ஆளுமைக்குக் கீழ் வந்திருக்க வேண்டும்.  ஆனால், இந்த சர்ச்  அப்போதே கொழும்பு டயோசீஸ்  ஆளுமைக்குக்  கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இலங்கை சொந்தம் கொண்டாட மற்றொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இந்நூலில் சூரியநாராயணன் நேரு 1960 செப்டம்பரில் ராஜ்ய சபையில் குறிப்பிட்டதைச் சுட்டுகிறார். நேரு சொன்னது: “ஒரு ஜமீன்தாரால் இத்தீவு சொந்தம் கொண்டாடப்பட்டது. இப்போதோ ஜமீன்தாரி முறை கிடையாது. ஆகையால் சொந்தம் குறித்துத் தெளிவாகச் சொல்ல முடியாது”    திருமதி இந்திரா காந்தி மார்ச் 1968ல், “நாம் இலங்கை அரசுடனும் மக்களுடனும் நல்லுறவு கொண்டுள்ளோம். இப்போது இத்தீவைப் பற்றிப் பேசினால் தொந்தரவுகள் உண்டாகலாம்”  என்றதையும் காட்டுகிறார். அது மட்டுமின்றி அன்றைய வெளி விவகாரத்துறையின் அமைச்சரான பி. ஆர். பகத் ஜி. ஜி. ஸ்வெல் கேட்ட கேள்விக்கு குழப்பமுண்டாக்கும் வகையிலான பதிலை அளித்தாரெனவும் குறிப்பிடுகிறார். ஆகையால் ஆரம்பத்திலிருந்தே  கச்சத்தீவு விவகாரம் இந்திய அரசால் சரியாகக் கையாளப்படவில்லை என்கிறார்.

அதே நேரத்தில் இலங்கையிலோ அவ்வரசு தீர்க்கமான முடிவைத் தொடக்கத்திலிருந்தே கொண்டிருந்தது என்றும் கூறுகிறார்.

1974 தொடக்கத்திலேயே இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளித்து விட நினைத்து விட்டது என்கிறார். ஜனவரி 1974 ல் சிரிமாவோ பண்டாரநாயகா இந்தியா வந்த போது இந்திரா காந்தியுடன் எடுத்துக் கொண்ட முடிவில் இரண்டு ஷரத்துகள் இருந்தன நாடின்றி  இருப்பவர்களை இருநாடுகளும் சமமாகப் பங்கேற்று குடியுரிமை தலா 75,000 நபர்களுக்கும் பின்னர் பெருகும் அவர்களது சந்ததியர்களுக்கும் வழங்கவேண்டும்.
கடல்சார் எல்லையை  இருநாடுகளும் கலந்து முடிவெடுக்கவேண்டும்.

இந்த முடிவு ஜூன் 28 1974 அன்று செய்கைக்கு வந்தது. கச்சத்தீவைப் பொறுத்த மட்டில், அது இலங்கைக்குச் சொந்தமானதென ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் “இந்திய இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு செல்ல பயண பத்திரங்கள் வேண்டியிருக்காது என்றும் கூறியது.  இந்நூலில் பல பழைய ஆவணங்களும் குறிக்கப்பட்டுள்ளதால் இது முக்கியமாகப் படிக்கவேண்டிய நூலாகிறது. உதாரணமாக 1921 ஆம் ஆண்டு ஆவணம் எல்லைகளைக் குறித்துப் பேசுகிறதைச் சுட்டுகிறது.

அன்றைய ஜனசங்கம் (பின்னர் பா ஜ க) 1974 முடிவு குறித்துப் பிரச்சினை எழுப்பலாம் என்று அன்றைய காங்கிரஸ் அரசு மிகவும் இரகசியமாகக் கையாண்ட விதத்தையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 




அதே போல 1976 ஆம் ஆண்டு முடிவு குறித்தும் விளக்கியிருக்கப் பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டின் தமிழ் நாடு  கெசட்டில் கச்சத்தீவு பற்றிக் குறிப்பு ஒன்றுமே இல்லாதது குறித்தும் சொல்லப்படுகிறது.   ஒரு முறை இலங்கையில் நடந்த  பேச்சு வார்த்தைகள் குறித்து எழுதுகையில் இந்தியாவின் மெத்தனப் போக்கு குறிப்பிடப்படுகிறது “சாஸ்திரி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் போது தமிழ் நாட்டுப் பிரதிநிதி வாயே திறக்கவில்லை” என்பதை ஒரு பத்திரிகையாளர் சொல்லக்கேட்டதையும் குறிப்பிடுகிறார்.
இந்த மூன்று நூல்களில் முக்கியமானது மூன்றாவதாகும்.

சர்வதேச கடல்சார் விதி முறைகளில் சரியாக விவரிக்கப்படாதது Right Of Innocent Passage என்பதாகும். பழங்காலத்து விதி முறைகளின் படி, கடல் எல்லோருக்கும் பொதுவானது.. UNCLOS எனப்படும் ஐக்கிய நாடுகளின் கடல் சார் விதிகள், குற்றமற்ற பாதை என்பது எங்கேயும் வரையறுக்கப்படவில்லை. கடலில் எல்லைகள் பாதுகாப்பிற்காக நிர்ணயிக்கப்பட்டதுவேயன்றி தமது தொழில் சார்ந்து மீனவர்கள் கடல் எல்லையைக் கடப்பது  குற்றமற்ற ஒரு செய்கையேயாகும். ஆகையால் அவர்களைக் கைது செய்வது சரியல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆகையால் இது பற்றிய உணர்வு பூரணமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை இந்நூல் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பன்னாட்டு விவகாரங்கள் உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன.
ஒரு அழகான கதை இறுதியில் சொல்லப்படுகிறது. அது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொருந்தும்.

ஒரு ஆதிவாசிக் கிராமத்துப் பள்ளியில் ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. ஒரு  பையன் எல்லோருக்கும் முன்னர் ஓடிக் கொண்டிருந்தான். ஆனால் பந்தயம் முடிவுக்கு முன்னால் சற்றே நின்று கொண்டான். ஏனெனக் கேட்ட போது ”பின்னால் வருபவர்களும் வரட்டும். எல்லோரும் சேர்ந்தே ஓடலாம்” என்றானாம்.
கடல் பொதுவானது. எல்லோரும் சேர்ந்து செயல் பட்டால் அனைவருக்கும் பயனாகும்.


நன்றி: தினமலர் 

___________________________________________________________
  

Mr. K R A Narasiah
narasiah267@gmail.com 
___________________________________________________________

Saturday, August 6, 2016

கபாலியும் மலேசியர்களும்

– நிர்மலா ராகவன்.

கபாலியும் மலேசியர்களும்

`இப்போ யாரைக் கேட்டாலும், மலேசியாவிலதான் வேலை பாக்கிறதாச் சொல்றாங்க!’ சமீபத்தில் தமிழ்நாட்டில் நான் கேட்டது இந்த விமரிசனம்.

இங்கு வேலை பார்க்க வருகிறவர்கள் பன்னிரண்டிலிருந்து ஐம்பது பேர் ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு, குடும்பத்துடன் இருக்க வாய்ப்பில்லாது (இந்தோனீசியர்களைத் தவிரப் பிற ஆண்கள் தம் மனைவியரை அழைத்து வர அனுமதி கிடையாது), விடுமுறை நாட்களில்கூட வெளியூருக்கு எங்காவது போகாது, முடிந்தவரை காசைச் சேமித்துக்கொண்டு தாய்நாடு திரும்பும்போது, தாம் அனுபவித்த இன்னல்கள் பிறருக்குத் தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்வார்கள். அப்போதுதானே மிதப்பாக நடக்கலாம்!

இதனால், மலேசியாவில் எல்லாத் தமிழர்களும் கோடீசுவரர்கள், பணத்தை வாரி இறைப்பவர்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைக்கும் இந்த நம்பிக்கைக்கும் வெகு தூரம் என்பதுதான் சரியான நிலவரம்.

இருபதாம் நூற்றாண்டில் எஸ். ஏ. கணபதி என்ற ஒருவர் கபாலிக்கு முன்னோடி எனலாம். மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவராக இருந்த அவர், ஒரே வேலையைச் செய்தாலும், ஒரு நாளைக்கு சீனர்களுக்கு அறுபது காசு, இந்தியர்களுக்கு நாற்பது காசு என்று ஆங்கிலேய முதலாளிகள் நிர்ணயித்ததை எதிர்த்தார்  (1940). தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுகோலாக அமைந்தார். பல வேலை மறியல் போராட்டங்கள். இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார். (ஆதாரம்: மலேசிய நண்பன், ஜூலை 31)


நான் ஐம்பது வருடங்களுக்குமுன் கோலாலம்பூருக்கு வந்தேன். அப்போது தமிழர்கள் பெரும்பாலும் தோட்டப்புறம், அதாவது ரப்பர் எஸ்டேட்டுகளில்தான் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை முதலிய நகரங்களுக்கு அருகே இருந்த கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள். அனேகருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பெரிய நகரங்களிலோ தெருக்கூட்டுவது போன்ற கடைநிலை ஊழியங்களைத்தான் செய்துவந்தார்கள்.

`இங்குள்ள இந்தியர்களுக்குள் ஒற்றுமையே இல்லையே!’ என்று நான் என் குடும்பத்தினரிடம் பலமுறை சொல்லி அங்கலாய்த்ததுண்டு. இதனாலேயே இவர்களைக் கீழ்நிலையிலேயே வைத்திருப்பது பிறருக்குச் சாத்தியமாயிற்று.

கல்வி கற்றால் உயரலாம் என்று சிலருக்குப் புரிந்து போயிற்று. ஆனால், அதுவும் கடினமாகத்தான் இருந்தது. ஏழ்மை நிலையில் புத்தகம், சீருடை என்று வாங்கக் காசில்லை.

நான் கற்பித்த  முதல் பள்ளியில், சீன, ஆங்கில-சீன ஆசிரியைகள் ஒரு தமிழ்ப் பையனைப்பற்றி ஆசிரியைகளின் பொது அறையில் ஓயாது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவன் செல்வந்தர் வீட்டுப் பையன். அதனால், இவர்கள் மட்டம் தட்டிப்பேசுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முடிந்தவரை மரியாதையுடன் எதிர்த்திருப்பான்.

ஒரு முறை, `நீ அவனைப்பற்றி எதுவுமே சொல்வதில்லேயே!’ என்று அதிசயப்பட்டு என்னிடம் கேட்டபோது, நான் யோசிக்காது, “Indian boys are no problem in my class!” (இந்திய மாணவர்கள் என் வகுப்பில் பிரச்சினைகள் அளிப்பதே கிடையாது!) என்றுவிட்டேன். அவர்கள் முகம் அவமானத்தால் சுருங்கியது. அப்போதுதான் RACISM என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு.

(சீனப்பையன்கள் அதைவிட அதிகமாக, மரியாதைகெட்டதனமாக நடக்கலாம். ஆனால், `இந்தச் சீனர்களே இப்படித்தான்!’ என்று அவர்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். மாட்டிக்கொள்வதெல்லாம் சாதுவான தமிழர்கள்தாம். அதுவும், அழகாகவோ, திறமைசாலியாகவோ இருந்தால் போயிற்று!).

இன்னொரு பள்ளியில், ஒரு வகுப்பறையில் ஆசிரியை கணக்குப்பாடம் நடத்திக்கொண்டிருக்க, தமிழ் மாணவிகள் ஆறு பேர் கும்பலாக உட்கார்ந்துகொண்டு, தம்பாட்டில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைத் தனியே அழைத்துக் கேட்டபோது, `உங்களுக்கு இதெல்லாம் புரியாது. என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள்!’ என்று ஆசிரியை சொல்லிவிட்டதாக அறிந்தேன். அதிர்ந்தேன்.

நான் தினமும் மிக கவனமாக அலங்கரித்துக்கொண்டு போவேன். உதட்டுச்சாயம், எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட காலணி (இரண்டு, மூன்று நிறங்களில்கூட இருக்கும்), வளையல், கைக்கடிகாரப்பட்டை எல்லாமே என் புடவை நிறத்தில்தான் இருக்கும். எனக்கு அலங்காரத்தில் பிரியம் என்பதால் மட்டுமில்லை, `உங்களாலும் உயர முடியும். ஏழ்மையைக் கண்டு அஞ்சாதீர்கள்! அது நிலையானதில்லை!’ என்று மாணவிகளுக்கு நான் மறைமுகமாக அளிக்க விரும்பிய போதனை அது.

தொலைக்காட்சிக்கு என்னைப் பேச அழைக்கும்போது, `ஒரு நிபந்தனை. ஒரு நிமிடத்துக்கு ஒரு புடவை மாற்றுவேன்,’ என்றுவிடுவேன். அது வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பார்கள் இயக்குநர்கள். ஒரு நிகழ்ச்சிக்குப்பின், நான் வேறு ஒரு ஊருக்குப் போயிருந்தபோது, `உங்களை டி.வியில பாத்தேன். Very nice saris!’ என்று கிறங்கினார், வசதி குறைந்த நிலையிலிருந்த ஒரு ஆண்!

கபாலி படத்தில் ரஜினி விடாப்பிடியாகக் கோட்டு அணிந்து வருவதும் இதைப்போல்தான் என்றே தோன்றுகிறது. 

படத்தின் இறுதியில், கல்லூரியில் படிக்கும் பெண்கள் கபாலியிடம் முறையிடுவதுபோல் வருகிறதே, அதுவும் இன்றைய நடப்பைக் காட்டுகிறது.

ஒரு சில இந்திய வம்சாவளியினர் (ஆரம்பத்தில்  வந்தவர்களில் 92% தமிழர்கள்தாம்) நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைக்காது, உபகாரச் சம்பளம் கிடைப்பதும் துர்லபம்தான் என்ற நிலை. எப்படியோ படித்துத் தேர்ச்சி பெற்றாலும், அரசாங்க வேலை கிடைப்பது கடினம். பிற இடங்களில் அனுமதிக்கப்பட்டதைவிடப் பாதி சம்பளத்திற்கு வேலை செய்யவென ஆப்பிரிக்கா, நேபால், பங்களாதேஷ், மியன்மார், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து என்று உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆட்கள்தாம் வந்து  குவிகிறார்களே!

இதெல்லாம் புரியாது, `இவ்வளவு பணக்கார நாட்டில் நாம் ஏன் ஏழைகளாக இருக்கவேண்டும்?’ என்ற ஆத்திரத்துடன் சிலர் குண்டர் கும்பலில் சேருகிறார்கள். இல்லை, சேர்க்கப்படுகிறார்கள். இதனால் பணத்துடன், அந்தஸ்தும் கிடைக்கிறது. இவர்கள் பிறரைப் பார்த்துப் பயந்தது போக, பிறர் இவர்களைப் பார்த்துப் பயப்படுகிறார்களே, போதாதா?

சட்ட விரோதமான செயல்களால் பொருளீட்டுபவர்களில் பலர் தம் பழைய நிலையை மறப்பதில்லை. வசதிகுறைந்த இந்தியர்களுக்கும், விதவைகளுக்கும் பலவாறாக பொருளுதவி செய்கிறார்கள். இப்படி ஒருவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அவருடைய இறுதி ஊர்வலத்தில் பலர் ஆழ்ந்த வருத்தத்துடன் கலந்துகொண்டனர். அவருடைய படத்தைத் தாங்கிய பெரிய, பெரிய போஸ்டர்கள் எங்கும் காணப்பட்டது என்கிறது ஒரு செய்தி.

திரைப்படம் என்றால் சும்மா பொழுதுபோக்கிற்குத்தான் என்று தியேட்டருக்குப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் கபாலி ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால் மறைக்கப்பட்டிருந்த பல உண்மைகளை (ஊழல்களை?) கபாலி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது -- படத்தில் வரும் பாத்திரங்கள் எவரையும் குறிப்பன அல்ல என்ற முன்னுரையுடன்!


குறிப்பு: இக்கட்டுரை சில மாற்றங்களுடன் வல்லமை இதழில் வெளிவந்தது





________________________________________________________ 

நிர்மலா ராகவன்
எழுத்தாளர், சமூக ஆர்வலர், மலேசியா
nirurag@gmail.com
________________________________________________________  

Friday, August 5, 2016

கருப்பும் கறுப்பும்!


-- நூ.த.லோக சுந்தரம்


எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் 18 கீழ்க்கணக்கு எனவரும் சங்கநூல்களில் (8=10=18) வல்லின உகர 'றகரம்' வரும் "கறுப்பு" எனும் சொல்லிற்கு  இருபொருள்கள் காணப்படுகின்றன. 

(1) கார் = கரிய நிறம்
(2) சினம்   கோபம் கொள்ளும் மனநிலை

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்                 
கருங்கால் வரகின் இருங்குரல் புலர   [மதுரைக் காஞ்சி - 272]   
/= நிறம்/
(கவ்வை-எள்ளின் இளங்காய் = நிகண்டு)
("கருங்கால் வரகின்" என்பதில் கரியநிறமும்  காணலாம்)
                                                                                        
வானமாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்                                                                               
கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்ப  [குறிஞ்சிப்பாட்டு - 227]
/= நிறம்/               

தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த                       
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்    [மதுரைக் காஞ்சி - 347]
/=சினம் /

கறுவுகொள் நெஞ்சமொடு
களம்வேட் டன்றேஒருமுகம்   [திருமுருகாற்றுப்படை - 100]
/=சினம் /                        

செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்  [அகநானுறு - 81]
/=சினம் /               

உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் [அகநானுறு - 111]
/=சினம் /            

நம் உயர்வு உள்ளினர் காதலர்  கறுத்தோர் [அகநானுறு - 187]
/=சினம் /

அரும்பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் [அகநானுறு - 389]
/=சினம் /           

அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர் [புறநானூறு - 210]
/=சினம் /     

கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்           
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக  [புறநானூறு - 220] 
/= நிறம்/                     
(கவ்வை-எள்ளின் இளங்காய்)

கல் உறின், அவ்வடி கறுக்குந அல்லவோ [கலித்தொகை - 13]
/= நிறம்/               

கறுவுகொண்டுஅதன்முதல்குத்தியமதயானை [கலித்தொகை - 36] 
/=சினம் /      

முரு(கு)உடன்று கறுத்த கலிஅழி மூதூர்  [பதிற்றுப்பத்து - 26]
/ = நிறம்/               

கறுத்த தெவ்வர் கடிமுனை அலற [பதிற்றுப்பத்து - 39]
/=சினம் /                             

ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறுமுரண் தாங்கிய தார்அரும் தகைப்பின் [பதிற்றுப்பத்து - 66]
/=சினம் /           

காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்  [பதிற்றுப்பத்து - 72]
/=சினம் /                         

மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் [ஐங்குறுநூறு - 474] 
/=சினம் /              

கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்   
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் 'முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு'   [பழமொழி நானூறு - 16]   
 /=சினம் /                                                

மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்    
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்
தம்மேலே வீழப் பனை [பழமொழி நானூறு - 280]  
/=சினம் /                                                     

கறுத்து இன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்  [குறள் - 312]
/=சினம் /                          

கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்துறுத்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்  [திரிகடுகம் - 46]
/=சினம் /                                          

ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து   [திணைமாலை  நூற்றைம்பது - 120]
/= நிறம்/                                      
                                                                                                     
இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
'சிறுகுரங்கின் கையால் துழா' [பழமொழி - 400]                                     
/= ????/

கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும் [ஆசாரக்கோவை - 55]
/=சினம் /

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து [நாலடியார் - 62]
 /=சினம் /                         

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து  [நாலடியார் - 334]                           
/=சினம் / 

வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை [அகநானுறு -  286] 
/= ????/

என ஒரே ஒரு இடம் தவிர  'கருப்பு' எனும் சொல் வேறெங்கும் காணவில்லை.
இதனில் கருப்பின்னுக்கு  மென் எனும்  பண்பு முன்னொட்டு சேர்ந்துள்ளதால் சுவடி பாடமே  சரிதானா என பெரியதொரு  ஐயமும் எழுகின்றது. 

அதான்று; 
'கரு' எனும் உரி வரும் பற்பல இடங்களில் 'சினை' எனும் பொருளில்  '6' வரிகளில்  கருப்பை எனும் பொருளில்தான் காண்கின்றன

ஆனால்;
கருப்பு வில்லி  என காமனைக் குறிக்கும் சொல் உள்ளது;   அதாவது கரும்பினை   வில்லாக ஏந்தியவன் எனும் பொருளில்

கருப்பு எனும் சொல் நாம் இப்போது   கரும்பு எனும் பயிரினமாவதை வருவதை  ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுகளால்  காட்டலாம்

வெளுத்த நிறத்தில் கரும்பு வளர்ந்தாலும் பெரும்பாலும் கரிய நிறத்தில்தான் காணலாம் அல்லவா?
எனவே கரியநிறத்துக்கும் கரும்பிற்கும் தொடர்பு முற்றிலும் இருக்கின்றது.

தேவாரம் போன்ற 7-10 நூற்றாண்டு நூல்களில்
'கண்டங்கறுத்தான் கறுப்புஅழ காய்உடையான்' என  சிவபெருமான் கழுத்து கறுத்தது ( கரிய நிறம் ) எ ன வல்லின உகரம் ஏறிய றகரத்தால் எழுதி உள்ளமைக் காணலாம்.

ஆனால்;  திருமாலின் நிறம் 'கரி'யது என வரும் போது  'கரு' என இடையின ரகரம் மட்டும்தான் காணலாம். 

கரிய நிற யானையைக்குறிக்க இடையின ரகரம்தான் வரும் அல்லவா!!
எனவே; கரிய நிறம் தனக்கு ரகரம் றகரம் என இரண்டும் போலியாவது நீண்டநாள்  பயன்பாடாகின்றது எனலாம்.




________________________________________________________ 








நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________