Wednesday, October 28, 2015

ஈழத் தமிழர் மறைந்த அறப்போராளி டேவிட் ஐயாவிற்கான அஞ்சலி


-- இ. பு. ஞானப்பிரகாசன்.

david02david04

   அறப்போராளி தாவீது (டேவிட்) ஐயாவுக்கு

நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி

  ஈழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது.
  காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் விடையாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் தாவீது(டேவிட்) ஐயா கடந்த ஐப்பசி 24 [௧௧-௧௦-௨௦௧௫ (11.10.2015)] அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார்.
  ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என அன்பொழுக அழைக்கப்படும் சாலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் எழுபதுகளில், அன்றைய ஈழத் தமிழ் மண்ணிலே காந்திய வழியில் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். “தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தகுதியானவர்களாக மாறுவதுதான் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வின் முதல் படி” என்று நம்பியவர். விடுதலை, தனி ஈழம் போன்ற எந்த நோக்கமும் இன்றி வெறுமே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் நண்பர்கள் மருத்துவர் இராசசுந்தரம், அவர்தம் மனைவியார் முதலான சிலருடன் சேர்ந்து வேளாண் கல்விப் பண்ணை அமைத்தார்; நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கினார்; கல்விக் குடில்கள் திறந்தார்; காந்தியையும் காந்தியத்தையும் முதன்மையாகக் கொண்டு பாடத்திட்டம் வகுத்தார்; பெண்களுக்கும் சிறாருக்கும் அந்த காந்தியக் கல்வியைப் புகட்டினார்; இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பும் படிப்பும் அளித்தார்; குழந்தைகளுக்குப் பாலும் பால் மாவும் இலவசமாக வழங்கினார்; ஒவ்வோர் ஊரிலும் ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்துக் கல்வி கற்பித்து அவர்கள் மூலம் அந்தந்த ஊர்களில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் எல்லா ஊர்களிலும் கல்வித்தரத்தை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டம் தீட்டினார்.
  ஆனால், இப்படி முழுவதும் மக்கள் தொண்டினை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிய இந்த மாமனிதரை சிங்கள அரசு, ஈழ விடுதலைப் போராளிகளைச் சந்தித்ததை ஒரு சாக்காக வைத்து வன்கொடுமையாளர் (terrorist) முத்திரை குத்திச் சிறையில் தள்ளியது. சிறையில் தானும் மற்ற தமிழர்களும் நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி இவர் கூறுவதைப் படித்தால் தமிழர் அல்லாதவர்க்கும் கடும் சீற்றம் பிறக்கும். (படிக்க: டேவிட் ஐயா – தமிழ் மக்களின் துயர் தீர்க்க காந்திய வழியில் போராடிய அறப் போராளி).
 குமுகச் (சமூகச்) சேவை செய்த ஒரே குற்றத்துக்காக மேற்படியெல்லாம் இழிவுபடுத்தப்பட்ட இந்தப் பெருமனிதர் அன்று இடப்பட்ட அந்த வன்கொடுமையாளர் எனும் முத்திரை கடைசி வரை மங்காமல் மறையாமல் ௯௦ (90) அகவையிலும் ‘பேரிடர் (அபாயம்) விளைவிப்போர் பட்டியலிலேயே வைக்கப்பட்டிருந்து, அந்த அடையாளம் மாறாமலே இதோ நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
  இந்த மனிதர் செய்த குற்றம்தான் என்ன? தன் மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டதா? படிக்காத மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் அளித்ததா? காந்தியத்தைப் பரப்ப முயன்றதா? காந்திய வழியில் தன் மக்களை முன்னேற்ற முடியும் என்று நம்பியதா? “ஈழத் தமிழர்கள் என்ன காந்திய வழியிலா போராடினார்கள்” என்று மீண்டும் மீண்டும் கேட்டு, வயிற்றிலிருந்த தளிர் முதல் தலை நரைத்த கிழம் வரை எந்தப் பாகுபாடும் இல்லாமல் துள்ளத் துடிக்கக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இனப்படுகொலையின் குற்றச்சாட்டை நீர்க்கச் முயல்பவர்களே! இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? இவர் என்ன தனிநாடு கேட்டாரா? தன்னாட்சி கோரினாரா? அரசுக்கு எதிராகக் கலகங்கள் தூண்டினாரா? புரட்சி செய்தாரா? போர்க்கொடி தூக்கினாரா? ஒன்றுமே இல்லை!
  குற்றம் எனச் சொல்ல வேண்டுமானால், காந்தியரான இவர், கூடவே ஆயுதப் போராளிகளோடும் தொடர்பு கொண்டிருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவியதைச் சொல்லலாம். ஆனால், அது கூட மனிதநேயத்தின் அடிப்படையில் அவர் செய்த ஓர் உதவிதானே தவிர, மற்றபடி ஆயுதப் போராளிகளை அவர் தாங்கவோ அவர்கள் வழியைப் பின்பற்றவோ இல்லை. தன்னளவில் அவர் எப்பொழுதும் காந்தியராகவே இருந்தார். ஆனால், அப்படிப்பட்டவருக்கு இலங்கை-சிங்கள அரசு அளித்த அடையாளம்! இதற்கே இவருக்கு இந்த நிலைமை எனில், இன்னும் காந்திய வழியில் விடுதலை வேறு கேட்டுப் போராடியிருந்தால் இவர் நிலை என்ன?
  மற்றவர்களைப் பொறுத்த வரை வேண்டுமானால், தாவீது(டேவிட்) ஐயா ஈழத் தமிழர்களின் காந்திய முகமாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை, அவர் சிங்களர்களின் ஈவிரக்கமற்ற குணத்துக்கு முன்னால் காந்தியம் எப்பேர்ப்பட்ட தோல்வியைத் தழுவும் என்பதற்கான நடமாடிய எடுத்துக்காட்டு!
  இப்படி, ஈழத்து காந்தி செல்வநாயகம் அவர்கள் முதல் காந்தியம் தாவீது (டேவிட்) அவர்கள் வரை இலங்கையில் தமிழர்களுக்காகக் காந்திய வழியில் போராடிய தலைவர்கள் அனைவரும் தோல்வியாளர்களாகவே வரலாற்றில் நிலைபெற்றிருக்க, நாம் மறுபடியும் மறுபடியும் விடுதலைப்புலிகளின், ஈழத் தமிழர்களின் போராட்ட முறையை “என்ன இருந்தாலும் ஆயுதப் போராட்டம்தானே?” எனப் போகிற போக்கில் இழிவுபடுத்திப் பேசுவது எந்த வகையிலான காந்தியம், அறம் என எனக்குப் புரியவே இல்லை.
  ஈழப் போராட்டம் பற்றி ஓரளவாவது அறிந்த யாருமே இரண்டு சிறை நிகழ்வுகளைப் பற்றிக் கண்டிப்பாய்க் கேள்விப்பட்டிருப்பார்கள்.
  முதலாவது, வெலிக்கடைச் சிறை இனவெறித் தாக்குதல்!
  தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிட்டே தொடுக்கப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதலில்தான் குட்டிமணி, தங்கத்துரை, செகன் முதலான ஏராளமானோர் மிகக் கொடுமையான முறையில் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டனர். பிறர் சொல்லக் கேட்டால் கூட உள்ளத்தை நடுங்கச் செய்யும் இந்தக் கொடிய நிகழ்வில் தானும் கொல்லப்பட இருந்தபொழுது கடைசி நொடியில் நல்லவேளையாகத் தப்பிய தாவீது (டேவிட்) ஐயா, அங்கிருந்து மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
  அப்பொழுதுதான் நடந்தது, ஈழ வரலாற்றின் அடுத்த முதன்மைச் சிறை நிகழ்வான மட்டக்களப்புச் சிறை உடைப்பு!
  தமிழர்கள் மீது அன்றைய சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலையால் எங்கெங்கும் தமிழரின் உயிர் ஓலம் எதிரொலித்த அந்த நேரத்தில், அதுவரை சிங்களர்கள் அடித்தாலும் மிதித்தாலும் கொன்றாலும் கொளுத்தினாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே முயன்று வந்த தமிழர் கரங்கள் முதன் முறையாக வேறு வழி இல்லாமல் திருப்பி அடித்தன! அதன் ஒரு பகுதியாக, வெலிக்கடையில் நடந்தது போலவே மட்டக்களப்பிலும் தமிழர் குருதி மீண்டும் பெருக்கெடுக்காதிருக்க அந்தச் சிறை தமிழ்ப் போராளிகளால் தகர்க்கப்பட்டுக் கைதிகள் தப்ப வைக்கப்பட்டனர். அதில் உயிர் பிழைத்தவர்களில் ஐயாவும் ஒருவர்.
இவ்வாறு, ஈழ விடுதலைப் போராட்டத்தில் காந்தியத்தின் தோல்வி, இலங்கை ஆட்சியாளர்கள் அந்தக் காலத்திலேயே எப்பேர்ப்பட்ட இனவெறி கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சான்றான வெலிக்கடைச் சிறைத் தாக்குதல், எப்படிப்பட்ட கையறு நிலையில் வேறு வழியேயில்லாமல் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள் என்பதற்குச் சான்றான மட்டக்களப்புச் சிறையுடைப்பு எனத் தமிழீழ வரலாற்றின் தலையாய மூன்று திருப்புமுனைகளுக்குக் கண்கூடான சான்றாளராய் நம்மிடையே இத்தனை ஆண்டுக் காலமாக வாழ்ந்து வந்த தாவீது(டேவிட்) ஐயா, இவையெல்லாம் முறைப்படி உசாவப்பட்டு உலகக் குமுகாயத்தின் (சமுதாயத்தின்) முன்னால் உறுதிப்படுத்தப்படும் முன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது பெரும் வேதனை!
  ஐயா அவர்களைப் பற்றி நான் முதன் முதலில் அறிந்தது ஆனந்த விகடன் மூலமாகத்தான். செய்தியாளர் அருள் எழிலன் அவர்கள் மேற்கொண்ட நேர்காணலில் கேட்போர் உளம் உருகும் தன் வரலாற்றை எடுத்துரைத்த ஐயா அவர்கள், நடந்து முடிந்த அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தன்னிடமிருந்த நூல்களைப் பற்றித்தான் கவலையுடன் குறிப்பிட்டார். ஒன்றில்லை இரண்டில்லை, ஆயிரத்து ஐந்நூறு தமிழ் நூல்களை அவர் பாதுகாத்து வந்தார்.
  விடுதலை பெற்ற தமிழீழ நூலகத்தில் தன் நூல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் விடுதலையடைந்த ஈழத் தமிழ் மண்ணில் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதும்தாம் அவருடைய கடைசி விருப்பங்களாக இருந்தன. ஆனால், இதோ வரலாறு காணாத தமிழினப் பெரும்படுகொலையால் சிவந்து போயிருக்கும் இலங்கை மண்ணின் நிறம் மாறும் முன்பே கிளிநொச்சியில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது! மிஞ்சியிருப்பது தன் நூல்கள் பற்றிய அவருடைய விருப்பம் மட்டும்தான். அதையாவது நாம் நிறைவேற்றி வைக்கலாமே?
  தற்பொழுது தமிழ்நாடு அரசின் ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ ௨௦௧௬ (2016) – பொங்கல் திருநாளுக்குள் நூறாயிரம் (இலட்சம்) நூல்களை மின்னுருவாக்கும் அரும்பெரும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காகத் தமிழ்நாடெங்கும் அரிய நூல்களை எல்லோரிடமிருந்தும் தேடிச் சேகரிக்கும் பெருமுயற்சியை அந்நிறுவனம் முடுக்கி விட்டிருப்பதாக அண்மையில் ‘வலைப்பதிவர் திருவிழா – ௨௦௧௫ (2015)’இல் பேசிய அந்நிறுவன உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அறிவித்தார். முறைப்படி அரசு அறிவிப்பாகவும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  தமிழ் நூல்கள் நிலைபேறு அடைய இப்படியொரு சிறப்பான முயற்சியில் இறங்கியிருக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம், ஈழத் தமிழர்களுக்காக அறவழியில் பாடுபட்ட காந்தியர் தாவீது (டேவிட்) ஐயாவின் அரிய நூல்களையும் தங்கள் திட்டத்தின் கீழ்ச் சேர்த்துக் கொண்டு அந்த நூல்களை அழியாமல் பாதுகாக்க முன் வர வேண்டும் என மிகவும் பணிவன்போடு வேண்டுகிறேன்! தமிழர் வரலாற்றிலேயே மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுவது ‘யாழ் நூலக எரிப்பு’. ஈழத்திலிருந்து வந்தவர் என்பதால் ஒருவேளை அந்தப் பேரழிப்பில் நாம் இழந்த அரிய நூல்கள் கூட ஐயா அவர்களின் சேகரிப்பில் இருக்கலாம். அப்படி இருந்தால், அவற்றை மின்னுருவாக்கம் செய்வது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வரலாற்றிலேயே ஈடு இணையற்ற புகழாக இருக்கும். எனவே, நிறுவனத்தினர் உடனே இதற்கான முயற்சியில் இறங்க முன்வர வேண்டும்!
  அவருடைய இறுதி விருப்பங்கள் இரண்டில் ஒன்றைத்தான் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. நம்மால் இயன்ற இந்த இன்னொன்றையாவது நிறைவேற்றலாமே? கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதை விட ஒரு மனிதருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி வேறென்ன இருக்க முடியும்? எனவே தமிழ்நாடு அரசே! தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரே! தமிழ்த் தலைவர்களே! அருள் கூர்ந்து இதற்கு ஆவன செய்யுங்கள்!
david03
 நன்றி:  
அகரமுதல -  http://www.akaramuthala.in/modernliterature/katturai/அறப்போராளி-டேவிட்-ஐயாவிற/


 

  


 
 
இ. பு. ஞானப்பிரகாசன்

e.bhu.gnaanapragaasan@gmail.com

தொலைபேசி:  9043585723

 
 

Sunday, October 25, 2015

தமிழ்நாட்டை தனி நாடாக்க குரல் கொடுத்த “விழுப்புரம் கோவிந்தராஜுலு நாயுடு காரு”


- கோ.செங்குட்டுவன்.


விழுப்புரம் என்.கோவிந்தராஜுலு நாயுடு காரு


திராவிட இயக்க வேர்களில் ஒருவர்.

1922இல் நீதிக்கட்சியைச் சேர்ந்த என்.சுப்புராயப் பிள்ளையை தலைவராகக் கொண்டு விழுப்புரத்தின் முதல் நகர மன்றம் அமைந்தது.

இதில் இடம்பெற்ற 16 உறுப்பினர்களில் கோவிந்தராஜுலு நாயுடு காருவும் ஒருவராவார்.

02.11.1927 - 30.11.1931, 17.04.1941 - 30.03.1947 ஆகிய காலங்களில் விழுப்புரம் நகர மன்றத்தின் தலைவராகவும், 20 ஆண்டுகளுக்கும் மேல் நகரமன்ற உறுப்பினராகவும் கோவிந்தராஜுலு நாயுடுகாரு பதவி வகித்துள்ளார்.

10.01.1953 அன்று நடந்த விழுப்புரம் நகரமன்றக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர் ஏ.பக்தவச்சலு நாயுடு, சென்னை நகரில் தமக்கு உரிமை கொண்டாடி பேராசைக் கிளர்ச்சியில் ஈடுபடும் ஆந்திரத் தலைவர்களைக் கண்டித்தார்.

இதற்கும் ஒருபடி மேலே சென்ற மூத்த உறுப்பினர் என்.கோவிந்தராஜுலு நாயுடுகாரு “வடக்கே திருப்பதி மலையில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டை ஒன்றாக்கி தனி நாடாக்க வேண்டும்” என்று சென்னை முதன் மந்திரியை வலியுறுத்தினார்.   

விழுப்புரம் பகுதியில் திராவிட இயக்கத்தைப் பரவச் செய்த முன்னோடி கோவிந்த ராஜுலு நாயுடுகாரு. பெரியாரின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்.

இவர், விழுப்புரம் நகரமன்றத்தின் தலைவர் பதவியினை வகித்தபோது, நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் நாடகங்களை, நகராட்சியின் சார்பிலேயே நடத்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

என்.எஸ்.கே. மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோது இவர்களை விடுதலை செய்ய அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக,  கீழ்க்காணும் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஈ.வெ.ரா.பெரியார், தி.பொ.வேதாசலம் (திருச்சி வழக்கறிஞர்), முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ராவ்பகதூர் ஏ.ஒய்.அருளானந்தசாமி நாடார் (தஞ்சை நகரசபை தலைவர்), டி.சண்முகம் (தஞ்சை ஜில்லா போர்டு தலைவர்), பி.இரத்தினசாமி பிள்ளை (சேலம் நகரசபை தலைவர்), வி.எஸ்.வீரபத்திரன் (திருப்பத்தூர் நகரசபை தலைவர்), கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் (திருப்பூர் நகரசபை தலைவர்), ஆர்.கே. வெங்கடசாமி (ஈரோடு நகரசபை தலைவர்), கே.முத்துகிருஷ்ண நாயுடு (தாராபுரம் நகரசபை தலைவர்), எஸ்.சின்னசாமி முதலியார் (கரூர் நகரசபை தலைவர்), சி.என்.நாராயணன் செட்டியார் (காரைக்குடி நகரசபை தலைவர்), திருவாங்கூர் வி.எஸ்.கிருஷ்ணப்பிள்ளை எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.நாயுடு, பார் அட் லா (மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி), எம்.எஸ்.எம்.ராஜன் (இலங்கை) உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவில் விழுப்புரம் நகரசபை தலைவர் என்.கோவிந்தராஜுலு நாயுடுகாருவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் (பழைய) பேருந்து நிலையத்தில் 01.05.1955 அன்று நகராட்சி சார்பில் உந்து வண்டி நிலையம் திறக்கப்பட்டது, நகரமன்றத் தலைவராக எம்.சண்முகம் இருக்கிறார். ஆனாலும் உந்து வண்டி நிலையத்தைத் திறந்து வைத்தவர் முன்னாள் தலைவரான எம்.கோவிந்தராஜுலு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்றைய அரசியலில் நாயுடு பெற்றிருந்த முக்கியத்துவத்தை இவை நமக்கு உணர்த்துகின்றன.

கோவிந்தராஜுலு நாயுடுவின் நினைவைப் போற்றும் நினைவுச் சின்னங்கள் எதுவும் விழுப்புரத்தில் இல்லை.

கிழக்குப் பாண்டி ரோடில் அவருக்குச் சொந்தமான மிகப்பெரிய பங்களா இருந்தது. “நாயுடு பங்களா” என்றழைக்கப்பட்ட அந்த பங்களா, 20 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த இடத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் நின்று கொண்டிருக்கிறது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் காணப்படும் அடிக்கல் மட்டுமே கோவிந்தராஜுலு நாயுடு காருவின் நினைவாய் இருந்து கொண்டிருக்கிறது.


இந்த அடிக்கல்லும் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்குமோ யாருக்குத் தெரியும்?



துணை நின்றவை:
திராவிட இயக்க வரலாறு - நாவலர் நெடுஞ்செழியன்
ஏழிசை மன்னர் எம்.கே.டி.பாகவதர் - மாலதி பாலன்
விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் - கோ.செங்குட்டுவன்
விழுப்புரம் நகரமன்ற நடவடிக்கைக் குறிப்புகள் 1919 -2010

 


கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com

Friday, October 23, 2015

வீணை

-- கவிஞர் ருத்ரா.





நரம்புகள்
காஷ்மீரிலிருந்து குமரிவரை
பின்னல் இட்டதில்
ஒரு வீணை செய்து
மீட்டுகின்றோம்.
பல மொழி
பல இனம்
பல மதம்
பல ராகங்கள் முழங்கினாலும்
நமக்கு கேட்பது
ஒரே வர்ண மெட்டு.
கல்வி எனும் ஆதார சுருதி
எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
மண்ணாங்கட்டியையும்
மாணிக்கக் கதிர் வீசச்செய்யும்.
ஒரு எருமை மாட்டை கொல்வதற்கா
அந்த வெற்றித்திருமகள்
பவனி வந்தாள்?
பள்ளிக்கூடங்கள்
வறுமையின் வெறும்
எலும்புகூடுகளாய்
இற்று விடாதிருக்க‌
இங்கே சீற்றம் கொண்டாள்.
லஞ்சமும் ஊழலும் தான்
அந்த எருமை மாட்டின் இரு கொம்புகள்
என்று அவள் புரிந்து கொண்டாள்.
இந்த‌
சுதந்திர தேவி சீற்றம் கொள்ளட்டும்.
கேவலம் சுண்டல் பொரி கூட‌
ஓட்டின் மின்னணு பொறிகளை
விலைக்கு வாங்கி விடும்
அவலங்கள் மீது
அவள் சூலம்
சீற்றம் கொள்ளட்டும்.
ஆம்!
சீற்றம் கொள்ளட்டும்.

 
 
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்

ruthraasivan@gmail.com


பல்லவர் வெட்டிய பனைமலை ஏரி

- கோ.செங்குட்டுவன்.


ஒவ்வொரு முறையும் சென்னைக்குச் செல்லும் போதும் மாமண்டூரில், பரந்து விரிந்து காணப்படும், அந்த ஏரியைப் பார்த்துப் பெருமூச்சு விடுவேன்.

பல்லவரின் நீர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் ஏரி அது.

அப்போது என் உள்மனம் சொல்லும், “உன் மாவட்டத்திலும் பல்லவர் வெட்டிய ஏரி இருக்கிறதே.“

அப்படியா? எங்கு? பனைமலையில்...!


பனைமலை ஏரியைப் பார்க்கும் வாய்ப்பு 2001இல் தான் எனக்குக் கிடைத்தது.


“நந்தன் கால்வாய்த் திட்டம்” தொடர்பான விவரங்கள் சேகரிப்பதாக, நண்பர் அன்னியூர் சிவா அவர்களின் துணையுடன் பனைமலை கிராமத்துக்குச் சென்றேன்.

குன்றின் அருகே மேற்கில், வானையும் நிலத்தையும் இணைப்பதுப் போன்று பிரம்மாண்டாகக் காட்சியளித்தது பனைமலை ஏரி.



நானும் சிவாவும் ஏரியில் இறங்கி சில அடிகள் நடந்தோம். பாளம் பாளமாக வெடித்திருந்தது. மழைத் துளியைப் பார்த்து வருடங்கள் பலவாகின்றதாம்!

2011இல் “நந்தன் கால்வாய்” நூலுக்காக மீண்டும் பனைமலை ஏரிக்குச் சென்றேன்.

இப்போது நிலைமை மாறியிருந்தது. அப்போதுதான் மழை பெய்திருந்ததால் ஏரி முழுக்கத் தண்ணீர் நிரம்பி, கண்களுக்கு விருந்தாகவும், புகைப்படம் எடுக்கவும் அழகாக இருந்தது.

பொறியாளரும் மூத்த ஆய்வாளருமான காலஞ்சென்ற கொடுமுடி ச.சண்முகன் பனைமலை ஏரி குறித்து இப்படி விவரிப்பார்:

“80 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி 30 அடி ஆழம் உள்ளது. இதன் தொழில்நுட்பம் பார்த்து வியக்கத்தகுந்தது. தொடர்ச்சியாக பல மலைக் கரடுகளை இணைத்து இடையில் சிறுசிறு நீளத்திற்கு மட்டும் கரை அமைக்கப் பட்டுள்ளது. 30 அடி ஆழ மதகும் கால்வாயும் உள்ளன. ஒரு கோடியில் உள்ள பாறையே கழிங்கலாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானச் சிக்கனத்திற்கு இது எடுத்துக் காட்டு. இன்றைய மேட்டூர் அணையோடு, பனைமலை ஏரி பல வகையில் ஒப்பிடத்தகுந்தது.”


பல்லவர் கால கட்டட, ஓவியக் கலைக்குச் சான்றாதாரமாக இன்றும் நின்றிருக்கும் தாளகிரீசுவரர்க் கோயில், பனைமலை ஏரிக்கு அருகிலேயே குன்றின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“இந்த ஏரி அமைத்து வளம் பெருகிய பின்னரோ அல்லது சமகாலத்திலோ தாளகிரீசுவரர் ஆலயம் அமைந்திருக்கலாம்” என்பதும் கொடுமுடியாரின் கருத்தாகும்.


திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சல் ஆற்றில் இருந்துத் தொடங்கும் நந்தன் கால்வாய், பனைமலை ஏரியில் சேர்கிறது.

இந்த ஏரியின் மூலம் 1079.24 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் நங்காத்தூர், முட்டத்தூர், நகர், பிரம்மதேசம், எசாலம், பெருங்கலம்பூண்டி, அன்னியூர், வெள்ளேரிப்பட்டு, வீரமூர், வெங்கந்தூர், ஆரியூர் ஆகிய ஊர்களுக்கான ஏரிகளுக்கும் இங்கிருந்து தான் தண்ணீர் செல்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.

பனைமலை ஏரியின் கிழக்கில் நந்தன் கால்வாய்த் திட்டத்தின் கதாநாயகரான, மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது.


பல ஏரி கல்வெட்டுகளில் அதை வெட்டுவித்தவர்கள் “ஏரியை காப்பவர் அடி என் முடி (தலை) மேலன” என்று சொல்லியிருப்பார்கள்.

இந்தச் சொல்லை சிரமேற் கொண்டவர்கள்தான், பனைமலை ஏரியை இன்னமும் ஏரியாகவே வைத்திருக்கின்றனர்.

இன்று, ஏரிகள் பலவும் பேருந்து நிலையங்களாகவும், பெருந்திட்ட வளாகங்களாகவும்,  மருத்துவக் கல்லூரிகளாகவும் மாறிவருகின்றன. இன்னும் சில ஏரிகளை பழைய வரைபடங்களில் மட்டுமே பார்க்க முடிகின்றது.

மிச்சம் மீதியிருக்கும் போரூர் ஏரி போன்றவற்றைக் காப்பாற்றுவதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

இந்தச் சூழலில், வரலாறுப் பண்பாட்டுக் கூறுகளின் எச்சமாகவும், விவசாயத்துக்கும் நிலத்தடி நீராதாரத்திற்கும் நிலைக்களனாகவும் பனைமலை ஏரி எஞ்சி நிற்பது மகிழ்ச்சியைத் தருகிறது...!


பனைமலை:
விழுப்புரம்-செஞ்சி சாலையில் சூரப்பட்டு சென்று, அங்கிருந்து வடக்கே 7ஆவது கி.மீ.இல் அமைந்துள்ளது. செஞ்சி-அனந்தபுரம் வழியாகவும் இங்கு வரலாம். 


கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com