Thursday, October 15, 2015

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து. சுந்தரம்

-- தேமொழி








கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து. சுந்தரம் அவர்கள் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால், நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர், கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். அத்துடன் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடரின் வழியாகக் கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்று கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியை வழங்கும் பாடங்களையும் மின்தமிழ் குழுமத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழக வரலாற்றில், கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ள எவரும் அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

“கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற அவரது வலைத்தளத்தில் தான் மேற்கொண்ட கல்வெட்டு பயணத்தை விவரித்து, கல்வெட்டு பற்றி சேகரித்த செய்திகளை படங்களுடனும் விளக்கங்களுடனும் இவரது கட்டுரைகளின் முதற்பகுதியில் அறியத் தரும் திரு. து.சுந்தரம் அவர்கள், கட்டுரைகளின் பிற்பகுதியை கல்வெட்டுப் பாடத்திற்காக ஒதுக்கி, அவற்றில் கல்வெட்டின் வரிகளைக் கொடுத்து, அவற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டு விளக்கமும் தருகிறார். காட்டாகப் பின் வரும்; கல்வெட்டு எழுத்துகள் கற்போம், இராசகேசரிப்பெருவழி கல்வெட்டு, பெள்ளாதி – நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் கல்வெட்டு, மதுரை அரண்மனை, சுமை தாங்கிபோன்ற பதிவுகள் சுவையான வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியவை.

தொல்லியல்துறை சொற்பொழிவுகளுக்கு சென்று அங்கு அத்துறை அறிஞர்களின் உரையில் கிடைக்கும் தகவல்களையும் திரு. சுந்தரம் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் அவர்களின் தன்னார்வப் பணி தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவும் என்றால் அது மிகையன்று. திரு. சுந்தரம் அவர்களது மயிலாடும்பாறைக் கல்வெட்டு, கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்: ஜார்ஜ் மன்னர் பெயரில் ஒரு விநாயகர், கொங்கவிடங்கீசுவரர் கோவில், சோழர் ஆட்சியில் தென்னிந்தியா: முனைவர் எ.சுப்பராயலு அவர்களின் சொற்பொழிவு ஆகிய அவரது தொல்லியல், கல்வெட்டுப் பாடம் கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன.

________________________________________________________


தேமொழி 
themozhi@yahoo.com
________________________________________________________

கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்: ஜார்ஜ் மன்னர் பெயரில் ஒரு வினாயகர்

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


ஜார்ஜ் மன்னர் பெயரில் ஒரு வினாயகர்


விழுப்புரம் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சி.வீரராகவன், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் ஆகியோர், அண்மையில் தாராபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது அலங்கியம் ஊரில் பேருந்து நிறுத்தம் மற்றும் காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த  ஒரு சிறிய பிள்ளையார் கோவில் மேடையில் ஒரு கல்வெட்டைப்பார்த்தனர். நெடுஞ்சாலைகளில் காணப்படும் மைல்கல்லின் வடிவத்தில் அக்கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. அகலமான அதன் முன்பக்கத்துப்பரப்பில் ஆங்கிலத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகலம் குறைவாயுள்ள அதனுடைய பக்கவாட்டு முகங்கள் இரண்டிலும் தமிழில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.


ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பெரிய அளவில் தெளிவாகக் காணப்படுகின்றன. கல்லின் மேற்புற வளைவுப்பகுதியில் “ சக்கரவர்த்தி வி நாயகர் “ என்னும் தலைப்பு உள்ளது. தலைப்பில் இருக்கும் ”நாயகர்”என்னும் பகுதி, வளைவை அடுத்துக்கீழே எழுதப்பட்டுள்ள முதல் வரியில் அமைகின்றது. இதனைத்தொடர்ந்து அமைந்துள்ள எட்டு வரிகளில், 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதியன்று (இவ்வூர்) இந்துக்கள், நமது சக்கரவர்த்தி ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் முடிசூட்டு விழாவின் நினைவாக இந்த விநாயகரை  நிறுவியுள்ளனர் என்னும் செய்தி எழுதப்பட்டுள்ளது.


தமிழில் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு பக்கங்களில் ஒன்றில்,



”கலியுகாதி 5013 வரு. காத்திகை மீ 27 தேதி
சார்சு சக்கரவர்த்திக்கி டில்”


என்றும், மற்றொரு பக்கத்தில்,





“பிசேகஞ்செய்த ஞாபகத்திற்கு இந்தவூர்
இந்துக்கள் செய்து வைத்த பிரஸ்டை
சக்கிரவர்த்தி வினாயகன்”


என்றும் எழுதப்பட்டுள்ளது. அதாவது, கலியுக ஆண்டு 5013-இல் கார்த்திகை மாதம், (இங்கிலாந்து) ஜர்ர்ஜ் சக்கரவர்த்தியவர்களின் முடிசூட்டு விழா (பட்டாபிஷேகம்) தில்லியில் நடைபெற்றதன் நினைவாக அலங்கியம் ஊர் இந்துக்கள் விநாயகரை எழுந்தருளிவித்து (பிரதிஷ்டை செய்து)) அந்த விநாயகருக்கு ”சக்கரவர்த்தி விநாயகன்”  என்று பெயர் சூட்டியிருந்திருக்கிறார்கள்.

ஆங்கிலமொழியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டின் பாடத்தின்படி, விநாயகரைப் பிரதிஷ்டை செய்தது டிசம்பர், 12, 1911. இந்தத் தேதியோடு, கல்வெட்டின் தமிழ்ப்பகுதியில் குறிப்பிடப்பெறும் கலியுக ஆண்டு கார்த்திகை இருபத்தேழாம் தேதி சரியாகப் பொருந்திவருகிறது. ஆங்கிலப்பகுதியில், முடிசூட்டு விழா எங்கு நடைபெற்றது என்னும் குறிப்பு இல்லை. ஆனால், தமிழ்ப்பகுதியில், விழா டில்லியில் நடைபெற்றது என்னும் குறிப்பு காணப்படுகிறது. “ஜார்ஜ்”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ சார்சு “ என்றும், “பிரதிஷ்டை”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ பிரஸ்டை “ என்றும், ” பட்டாபிஷேகம்”  என்னும் வடமொழி உச்சரிப்பு “ (பட்டா)பிசேகம் “ என்றும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலப்பகுதி “ கடவுள் மன்னரைக் காப்பாற்றுவாராக “ என்னும் பொருள் அமைந்த ஆங்கிலத்தொடருடன் முடிகின்றது.

மற்ற கடவுளர்க்கும் பிள்ளையார் என மக்களால் வழங்கப்படும் விநாயகருக்கும்  ஒரு வேறுபாடு உள்ளது. மக்கள் நடுவில் எளிமையாக எங்கு வேண்டுமென்றாலும், கூரையே இல்லாமலும் கோவில் எழுப்ப இடங்கொடுக்கும் கடவுள் விநாயகர்தான். அதே போல், மக்கள் அவரவர்க்குத் தோன்றியவாறு புதுமையான பெயரிட்டு அழைக்கும் உரிமையும் பிள்ளையார்மேல்தான் உண்டு. விநாயக சதுர்த்தியின் போது, வெவ்வேறு வடிவக்காட்சிகளில் பிள்ளையார் சிலைகளை அமைப்பதைப்பார்க்கிறோம். அதேபோல், பல்வேறு பெயர்களையும் பிள்ளையாருக்குச் சூட்டிமகிழ்கிறார்கள்.
மேலே கண்ட அலங்கியம் விநாயகர் “சக்கரவர்த்தி விநாயகர்” என்னும் பெயரில் இங்கிலாந்துச்சக்கரவர்த்தி ஜார்ஜ் மன்னரை நினைவூட்டுகிறார்.

இனி, கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா பற்றிச் சில செய்திகளைக்குறிப்பிட வேண்டியுள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், லண்டனில் “வெஸ்ட் மினிஸ்டர் அப்பே”  என்னும் வளாகத்தில் 1911-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முடிசூட்டிக்கொண்டார். இந்தியா போன்ற சில நாடுகள் இங்கிலாந்துச் சக்கரவர்த்தியின் ஆளுகைக்கீழ் இருந்தமையால், இந்தியச் சக்கரவர்த்தி என்னும் நிலையை வெளிப்படுத்திக்கொள்ள அவர் தில்லி அரசர்கள் நடத்திவந்த “தர்பார்”  மரபுப்படி, தில்லியில் மீண்டும் முடி சூட்டும் விழாவினை நடத்த விருப்பங்கொண்டு, விழா தில்லியில் ”காரனேஷன்”பூங்காவில் நடத்தப்பட்டது. விழாவில் மேரி அரசியாரும் கலந்துகொண்டார். இதில் சிறப்பு என்னவெனில், இங்கிலாந்தில் சூடிய முடியை இங்கிலாந்தைவிட்டு வெளியில் கொண்டு செல்ல உரிமையில்லை என்னும் காரணத்தால் இந்திய முடிசூட்டு விழாவுக்குத் தனிப்பட ஒரு முடி ( IMPERIAL CROWN OF INDIA )  செய்யப்பட்டது.

ஆனால், அது இந்தியாவில் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அரச மரபினர்க்கென அணிகலன்கள் செய்து தரும் ” GARRARDS & CO. ” என்னும் வணிக நிறுவனம் செய்து தந்தது. விழா 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதியன்று நடைபெற்றது. மரபுப்படி, இந்திய சமஸ்தான மன்னர்கள் தர்பாரில் மன்னர்முன் நின்று வணங்கிச்சென்றனர். இவ்வாறு இங்கிலாந்துக்கு வெளியில் நடைபெற்ற விழாவில் நேரில் அரசர்,அரசியார் கலந்துகொண்ட விழா இது ஒன்றே எனக்கூறப்படுகிறது.

நாட்டு விடுதலை  பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்பிருந்த காலகட்டமாகையால். ராஜமரியாதையைக்காட்டுவது வழக்கத்தில் இருந்திருக்கவேண்டும். இது போன்ற நினைவுச்சின்னங்கள் நாட்டில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன எனத்தெரிகிறது. சென்னையில் உள்ள கல்வெட்டு அறிஞரான சு.இராசகோபால் அவர்கள் கொடுத்த சில செய்திகளாவன:
மதுரை அருகே திருவாதவூரில், மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசியார் மேரி இருவரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு விளக்குத்தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நகரத்தார் ஊரான கோட்டையூரில், ஒரு வீட்டு நுழைவாயில் வளைவுகளில் இங்கிலாந்து அரசர் மற்றும் அரசியரின் சுதை உருவங்களும், வீட்டினுள் வண்ணப்படங்களும் காணப்படுகின்றன.

புதுமையான பெயரில் பிள்ளையார் கோவில் எழுப்பப்படுவது உண்டு. அவ்வகையில், சென்னையில் உள்ள அறுபடை முருகன் கோவிலின் நடுவில், அமெரிக்கா வாழ் நகரத்தார் எழுப்பிய ” நியூயார்க் பிள்ளையார் “ கோவில் அமைந்துள்ளது.

மேற்படி அலங்கியம் விநாயகர் கோவில் கல்வெட்டு, தமிழகத்தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டு 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற “திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள்”  நூலில் தொகுக்கப்பட்டிருப்பினும், அலங்கியம் ஊர் மக்கள் தம் ஊரில் இருக்கும் கல்வெட்டினை அறியாதிருக்கலாம். அறிந்திருப்பவர்களிலும் பலருக்கு அதன் வரலாற்றுப்பின்னணியும், செய்தியும் தெரியாதிருக்கலாம். ”பண்டைய அரசியல், வரலாறு, சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிய முதன்மைச்சான்றுகளாக அமையும் கல்வெட்டுகளின்” செய்திகள் மக்களை எட்டவேண்டும் என்பதற்காகவே இக்கல்வெட்டுச்செய்தி வெளியிடப்பெறுகிறது.


 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு

-- சேசாத்திரி சிறீதரன். 



நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக  அறிவித்தது.

இதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை உடைய  இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்1904 இல் சென்னையில் இருந்து செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு  தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது இதாவது, கி.பி. 575 ஆம்  நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்கு சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர்.

ரேநாடு என்பது இற்றைய இராயல்சீமையின் கடப்பை மாவட்டத்தைச் சுற்றி அமைந்த நாட்டுப் பகுதியாகும். இதை ஆண்ட தெலுங்கு சோழர்கள் ரேநாட்டுச் சோழர்கள் எனப்பட்டனர். யுவான் சுவாங்கின்  பயணக் குறிப்பில் உள்ள "சுளியர்" என்பதை மேற்கோளாகக் கொண்டு சிலர் தெலுங்கு சோழர்களை கி.பி  7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கூறுவது உண்டு.

இக்கல்வெட்டு கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூணின் இரண்டு பக்கங்களில்17 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 - 15) சிதைந்து உள்ளன. அதை சென்னைக்கு கொண்டுவந்து தொல்பொருள் சேமிப்பில் வைத்திருந்துள்ளனர். ஆனால் இப்போது அக்கல்வெட்டு காணாமல் தொலைக்கப் பட்ட நிகழ்வு தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும் வருத்தமுறச் செய்துள்ளது. இனி, இக் கல்வெட்டு பாடமும்  விளக்கமும்.



​​

1. ...................
2. కల్ముతురా           kalmutura                கல்முத்துரா   
3. జు ధనంజ            ju dananja               ஜு தனன்ஜ  
4. య ఱు రేనా         ya ru raena               ய று ரேனா
5. ణ్డు ఏళన్             ndu elen                  ண்டு ஏளன் 
6. చిఱుంబూరి          chirumburi               சிறும்பூரி
7. రేవణకాలు (పం)    raevanakalu (pam)   ரேவண காலு(பம்)
8. పు చెనూరు కాజు   pu chenuru kaju      பு செனூரு காஜு
9. ఆఱికాశా ఊరి        arikasa ori               அறிகாசா0 ஊரி
10. ణ్డవారు ఊరి        ndavaru ori              ண்டவாரு ஊரி
11. న వారు ఊరిస...  na vaaru orisa         னவாரு ஊரிச
12.
13.
14.
15.
16. హాపాతకస           hapatakasa                  ஹபாதகச 
17. కు.                     ku                               கு 

கல்வெட்டு பாடம்: 
......../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి /  న వారు ఊరిస.../  హాపాతకస / కు
... / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரைனா / ண்டு ஏலன் / சிறும்பூரி /ரைவணகாலு (பம்) / பு செனூரு காஜு / அரிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச .... /   ஹபாத கச / கு

 ..... / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi /    raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa.... /  hapatakasa /  ku   


Dhananjaya - செல்வத்தை வென்றவன், அருச்சுனனின் மற்றொரு பெயர்: இலக்கிய பதிவு: Srimad Bhagavatam 1.9.3; ரேவண்த - இந்த கல்பத்தின் 5 ஆவது மனுவின் பெயர் , சூரியனின் ஒரு மகனுக்கு பெயர்; ஏலன் - to oppose, battle ; காலு (கால்) - மகன், கால்வழி, காலாட்படை; ஆரிகாசா - கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு எழுந்து வெளியேவந்தான்; இண்டு + அர் = இண்டர் - இடையர், இழிகுலத்தோர் "இண்டக்குலத்தை" திவ். திருப்பல் 5; pata kasaku - (கசகுதல்) -  பின்வாங்குதல்.  


கல்வெட்டுப் பொருள்:
எரிகல் முத்துராஜு தனஞ்சயருடைய ரைநாட்டை எதிர்த்து போரிட சிறும்பூர் ரேவண்ணன் காலாட்படையை அனுப்பிட செனூர் காஜு கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு கிளம்பினான். அப்போது ஊர்ப்புறத்தே வாழும் இழிகுலத்தோரும் (ஏழை எளியவர்), ஊரகத்தோரும் ஊரின் ( ஒரு பகுதியில் குழுமினர்) - - - - நடையை பின்வாங்கினர்.

தமிழின் "அவன்" என்ற ஆண் பால் ஒருமை கோண்டி மொழியில் "அவண்டு" என வழங்குகிறது. கோண்டி மொழியின் தாக்குறுத்தம் காரணமாக அவண்டு > வ+அ+ண்டு > "வாண்டு" என மொழி முதல் அகரம் இரண்டாம் இடம் பெயர்ந்து தெலுங்கில் வழங்குகிறது. அதுவே ரேவண்டு என்று பெயரோடு இக்கல்வெட்டில் வாங்குகிறது. அதே போல் தமிழில் "அவர்" என்ற பலர் பால் படர்க்கை சொல்லின்  மொழி முதல் அகரம் இரண்டாம் இடம் பெயர்ந்து வ+அ+ர் = வார் > "வாரு" என தெலுங்கில் வழங்குகிறது. இக்கல்வெட்டில் ஊரிண்டவாரு, ஊரினவாரு ஆகியசொற்களில் பயில்கிறது.  இச்சொல்லாட்சிகள் இக்கல்வெட்டை தெலுங்கு என உறுதி செய்கின்றன.  
      

கல்வெட்டை வெட்டியோர் யாவர்?
ரைநாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல. கல்வெட்டில் ஆள் பெயர்கள் தவிர சமற்கிருத சொற்கள் ஏதும் இல்லை. பிராமணர்கள் வெட்டியிருந்தால் தமது சமற்கிருத அறிவை வெளிக்காட்ட சில சமற்கிருத  சொற்களையேனும் திணித்திருப்பார் அப்படியில்லாததால் இக்கல்வெட்டை பிராமணர்களும் வெட்டியிருக்க முடியாது. கல்வெட்டில் மக்கள் மொழி அதிகம் ஆளப்படுவதாலும் இதில்  ஐயம் திரிபற தெலுங்கு மொழி வீறுநடை போடுவதாலும் படையெடுப்பின்  காரணமாக பெருந்துன்பத்திற்கு ஆளான ஊர் மக்கள் படை நடத்தி வந்தோர் தம்நடையைப் பின்வாங்கியதை அடுத்து துயர் நீங்கியவராக கோவிலில் இக்கல்வெட்டை வெட்டியிருக்கவேண்டும்.


கல்வெட்டின் காலம்: 
தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும்  இல்லை. கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும்  இல்லை. 

(South Indian Inscriptions Vol.  X  Early Cholas of Renadu
No. 607. (A. R. No. 380  of  1904.)
On two faces of a broken pillar lying in the court-yard of the temple of Chennakesavasvami at Kalamalla, Kamalapuram Taluk, same District. Undated.
Damaged and unintelligible.  Mentions Dhananjaya and Rena[ndu].)
அப்படியிருக்க இக்கல்வெட்டே தெலுங்கு மொழியின் முதல் பழமையான கல்வெட்டு என்று எதன் அடிப்படையில் முடிவு கொண்டனர் என்று விளங்கவில்லை. எரிகல் முத்துராஜு என்ற பெயருடன் தனஞ்சயன் பெயர் இடம் பெறுவதாலேயே இது மிகப் பழமையானது கி.பி. 575 ஆண்டினது என்று முடிவு கொண்டிருந்தால் அது பிழையானது. ஏனெனில் எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில்  இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல்முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி. சிலர் தனஞ்சயன் என்பது எரிகல் முத்துராஜுவின் பட்டப் பெயர்களுள் ஒன்று என்று கதை அளக்கின்றனர். இதுவும்  தவறே.  

தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள்.   தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு  முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை. அதோடு இக்கல்வெட்டு கலமல்லா ஸ்ரீ லக்ஷ்மி சென்னகேசவ பெருமாள் கோவிலின் திறந்தமுற்றத் தரையில் கிடத்தப் பட்டிருந்த உடைந்த தூணின் இரு பக்கங்களில் வெட்டப்பட்டிருந்தது என்று தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 இல் பதியப்பட்டுள்ளது.

பாறைகளை செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாக கற்றளியின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பட்ட கல்வெட்டாகத் தான் இருக்க முடியும். மேலும் கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை இன்னும்  பின்னுக்கு தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்படிருக்க வேண்டும் என்று கருதவே  இடம் தருகிறது. எனவே தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்கு சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன.  

1904 இல் இக்கல்வெட்டு முதன் முதலாக அறியப்பட்ட போது அதைப் படித்தவர்களுக்கு அக்கால் போதிய தரவுகள் இல்லாமையால் இதன் காலத்தை தவறாகவே குறித்திருந்தாலும் செம்மொழிக்கு தகுதிச் சான்றாக இக்கல்வெட்டை பரிந்துரைக்கும் முன் அறிஞர்கள் இதன் காலத்தை மீள்பார்வை செய்திருந்தால் தவறு நேராமல் தவிர்த்திருக்க இயலும். மேலும், கன்னட தெலுங்கு கல்வெட்டுகளை படிக்கின்ற போது சமற்கிருத அகராதிகளை மட்டும் பார்வையிடுகின்ற கல்வெட்டு அறிஞர்கள் தமிழ்ச் சொற்களுக்கு தமிழ் அகராதிகளை நாடுவதில்லை என்பது தவறான புரிதலைத்தான் தரும். இக்கல்வெட்டில்  உள்ள தமிழ்ச் சொற்களின் பொருள் அறிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரரகரமுதலி  http://www.tamilvu.org/library/ldpam/ldpam00/html/ldpam00hom.htm  உதவியது.   

இக்கல்வெட்டில் நான்கு (12 - 15) வரிகள் சிதைந்து போனதால் கல்வெட்டின் முழுப் பொருளையும் தெளிவாக  அறியமுடியவில்லை. செனூர் காஜு தனஞ்சயன் சார்பில் போரில் பங்கு கொண்டானா அல்லது ரேவண்ணன் சார்பில் போரில் கலந்து கொண்டானா என்று தெரியவில்லை. நடை பின்வாங்கிய படை யாருடையது என்பதும் விளங்கவில்லை. 


கால் காலாட்படையை குறிப்பதை  காட்டும் கல்வெட்டு சான்று:
பிரையகம் யெறிந்த / க் கால்லப் போருட்ப / ட்டான் தெருக்கால்லா / ரு மகன் நீலகண்ட(ரைச) / ன் கல்

கால்லர் - காலாட்படையர் (Infantry); தெருக்கால்லார் - தெருக் காவல் மேற்கொள்ளும் காலாட்படை தலைவர்
பிரையகம் என்ற இடத்தை அழித்த காலாட்படையர் போரில் தெருக்காவல் மேற்கொள்ளும் காலாட்படைத் தலைவரின் மகன் நீலகண்ட அரைசன் வீரசாவடைந்தான். அவன் நினைவில் நட்ட நடுகல் இது. பண்டு நகரங்களின் தெருக்காவலுக்கு காலாட்படையே ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு படை பிரையகம் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டு அதை அழித்து உள்ளது. இது நகர் முற்றுகைப் போர் ஆகலாம். அப்போரில் அப்படையின் ஒரு ஆள், இதாவது, அரைசர் பொறுப்பில் இருந்த நீலகண்டன், படைத் தலைவரின் மகன் இறந்துள்ளான். எளியோரும் அரைசர் ஆகி உள்ளனர் என்பதற்கு நீலகண்டன் ஒரு சான்று. கல்வெட்டில் அரசன் பெயர், ஆட்சி ஆண்டு குறிப்பிடாமல் உள்ளது. இக்கல்வெட்டு தமிழ் பிராமியில் இருந்து வட்டெழுத்து பிரியும் காலகட்டத்து எழுத்து பொறிப்பில் உள்ளது, மெய்எழுத்து புள்ளிகளுடன் உள்ளன. எனவே விஷ்ணு வர்மனின் இருளப்பட்டி கல்வெட்டிற்கும் முந்தையது இது எனலாம். இதை 3 - 4 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம்.


Inline image 1                     Inline image 1                Inline image 1



தொடர்புடைய தொடுப்புகள்:


 ________________________________________________________



சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
________________________________________________________