Wednesday, October 7, 2015

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு

-- சேசாத்திரி சிறீதரன். 

ஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் 

ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ்  2) சமற்கிருதம்  3) கன்னடம்   4) தெலுங்கு   5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின் கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வெட்டு இக்கால் மைசூர் அருங்காட்சியக பாதுகாப்பில் உள்ளது.

இக்கல்வெட்டு 2.5 அடி உயரமும் 1 அடி அகலமும் மேலே விஷ்ணு சக்கரமும் கொண்ட செவ்வக மணற்கல்லில் 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது.

இக்கல்வெட்டு முதலில், கன்னடத்திற்கே உரித்தான பகர > ஹகர திரிபின்படி பல்மடியம் என அழைக்கப்பட்டு ஹல்மிடி எனத் திரிந்த ஊரின் மேற்கு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது அல்லது ஹல்மிடி மண் கோட்டையின் முன் வைக்கப்பட்டு இருந்தது எனவும் பின்பு வீரபத்திரன் கோவில் முன் வைக்கப்பட்டது என்றும் இருவேறு வகையில் சொல்லப்படுகிறது.

இனி, அக்கல்வெட்டின் பாடம்:

   
​​
1. jayati śri-pariṣvāṅga-śārṅga vyānatir-acytāḥ dānav-akṣṇōr-yugānt-āgniḥ śiṣṭānān=tu sudarśanaḥ
    ஜயதி ஸ்ரீ பரிஸ்வாங்க ஸாரங்க வ்யானதிர் அச்ய்தாதானவக்ஷ்னோர் யுகாந்தாக்னி சிஸ்தானான் து ஸுதர்ஸ 
    जयति श्री परिस्वाङ्ग स्यार्ङ्ग व्यानतिर् अच्युतः दानवक्स्नोर् युगान्तग्निः सिस्टान्तु सिस्टानान्तु सुदर्सनः 
   ಜಯತಿ ಶ್ರೀ ಪರಿಷ್ವರ್ಙ್ಗ ಶ್ಯಾರ್ಙ್ಗ [ವ್ಯಾ]ನತಿರ್ ಅಚ್ಯುತಃ ದಾನಕ್ಷೆರ್ ಯುಗಾನ್ತಾಗ್ನಿಃ [ಶಿಷ್ಟಾನಾನ್ತು ಸುದರ್ಶನಃ 
    jayati -  வெற்றி;  pariga - சங்கு; śārga - வில்; vyānatir - நீர்மேல் ஓய்வு; acytā-  திருமால்; dānav-akṣṇōr - அரக்கரை அழித்து தாக்கிyugānt-āgni - ஊழிமுடிவுத்தீ; śiṣṭānān=tu - நன்மை காத்து தீமை அழித்து முறை வழங்குதற்கோ 

2. namaḥ śrīmat=kadaṁbapan=tyāga-saṁpannan kalabhōranā ari ka-
     நமஸ்ரீமத் கதம்பபன் த்யாக ஸம்பன்னன்  கலபோரனா அரி கா  
    नमः श्रीमत् कदंबपन त्याग सम्पन्नन् कलभोरना अरि  
   ನಮಃ ಶ್ರೀಮತ್ ಕದಂಬಪನ್ ತ್ಯಾಗ ಸಂಪನ್ನನ್ ಕಲಭೋ[ನಾಅರಿ ಕ 
   nama - சரணம்śrīmat - of high rank or dignitykadabapan - கதம்பர் போற்றும்; tyāga-sapannan - ஈகை நிறைந்kalabhōranā ari - கலக்கம் நிகழ்த்துவோர்க்கு பகை  

3. kustha-bhaṭṭōran=āḷe naridāviḷe-nāḍuḷ mṛgēśa-nā  
  குஸ்த பட்டூரன் ஆளி நரிதாவிலே நாடுள் ம்ருகேச நா  
   ककुस्थ भटटोरन आशि नरिदाविशि नाडुल्  म्र्गेस  
   ಕುಸ್ಥಭಟ್ಟೋರನ್ ಆಳೆ ನರಿದಾವಿ[ಳೆ] ನಾಡುಳ್ 
  Bhat́t́ōran - மற்கிருத அறிஞர்ஆளி - பணியாள்; naridāvie nāu -  நரி கடக்கும், வாழும் சிற்றூருள் 

4. gēndr-ābhiḷar=bhbhaṭahar=appor śrī mṛgēśa-nāgāhvaya-
  கேந்த்ராபிலர் பட்டகர் அப்போர் ஸ்ரீ மிரிகேச நாகாஹ்வயர்  
   नागेन्द्राभीळर् भ्भटहरप्पोर श्री म्र्गेस नागाह्व्यर    
  ಗೇನ್ದ್ರಾಭೀಳರ್ ಭ್ಭಟಹರಪ್ಪೋರ್ ಶ್ರೀ ಮೃಗೇಶ ನಾಗಾಹ್ವಯ 
   appor - அப்பனார்;

5. r=irrvar=ā baṭari-kul-āmala-vyōma-tārādhi-nāthann=aḷapa-
  இர்வர்  பட்டரி குலாமல வ்யோம தாராதி நாதன்  அளப்ப   
   इर्व्वरा बटरि कुलामल व्योम तारादि  नाथन  अळप   
  ರ್ ಇರ್ವ್ವರಾ ಬಟರಿ ಕುಲಾಮಲ ವ್ಯೋಮತಾರಾಧಿನಾಥನ್ ಅಳಪ  
   irrvar-  இருவர்;  - அந்தkul-āmala - குலவிளக்கு;  vyoma - வானத்து  tara மீன்நிலா  ஆகியவற்றின் தலைவன், அளபகண -அளப்பறிய கூட்டம்   


6. gaṇa-paśupatiy=ā dakṣiṇāpatha-bahu-śata-havan=ā-
   கண பசுபதி  தக்ஷிணாபத பஹு சத ஹவனா 
     गण  पसुपतिया दक्षिणापथ बहुसतहवना 
    ಗಣ ಪಶುಪತಿಯಾ ದಕ್ಷಿಣಾಪಥ ಬಹುಶತಹವನಾ  
    gana - group; paśupatiy- உயிர்களின் புகலிடத் தலைவன்dakiāpatha - தக்கணம்bahu - மிகப்பலśata-havan - நூறு வேள்வி 

7. havuduḷ paśupradāna-śauryyōdyama-bharitōn=dāna pa-
  ஹவுதுள் பசுப்ரதான சௌர்யோத்யம ரிதோன் தான   
   हव्दुऴ  पसुप्रदान सौर्योदयम  दान 
   ಹವದು[ಳ್ಪಶುಪ್ರದಾನ ಶೌರ್ಯ್ಯೋದ್ಯಮ ಭರಿತೋ [ನ್ದಾನ
    havdul - வேள்விஅவியுள்; pasupradana - உயிர்களின் ஓம்பலை முதன்மையாக; śauryyōdyama - பகலொளி; bharitōn வரை 

8. śupatiyendu pogaḷeppoṭṭaṇa paśupati-
   சுபதியெந்து  பொகளிப்பொட்டனா பசுபதி 
    पसुपतियेन्दु पोगलेप्पोट्टन पशुपति    
   ಪಶುಪತಿಯೆನ್ದು ಪೊಗೞೆಪ್ಪೊಟ್ಟಣ ಪತಿ 
    pa-śupatiyendu -  தானப் பசுபதி என்று; pogaḷeppoṭṭaṇa - புகழப்பட்டவனான பசுபதி  

9. nāmadhēyan=āsarakk=ella-bhaṭariyā prēmālaya-
  நாமதேயன் ஆசரக்கெல்லா பட்டரிய பிரேமாலய  
    नामदेयन आसरक्केल्ल भटरिया प्रेमालय  
   ನಾಮಧೇಯನ್ ಆಸರಕ್ಕೆಲ್ಲಭಟರಿಯಾ ಪ್ರೇಮಾಲಯ 
   nāmadhēyan - பெயரோன்; āsarak - வந்துபோகின்ற எல்லா பட்டர்கும்prēmālaya -அன்பின் உறைவிடமான

10. sutange sēndraka-bāṇ=ōbhayadēśad=ā vīra-puruṣa-samakṣa- 
    சுதன்கே ஸேந்தரக  பாணோபயதேசத்  வீர புருஷ சமக்ஷ 
      सुतन्गे सेन्द्रक बणोभयदेसदा वीर पुरुष समक्षदे    
    ಸುತನ್ಗೆ ಸೇನ್ದ್ರಕ ಬಣೋಭಯದೇಶದಾ ವೀರಪುರುಷ ಸಮಕ್ಷದೆ 
     sutange - மகனுக்கு, இளவரசனுக்கு; sēndraka - of  a family; samakṣa - மன்னித்து  

11. de kēkaya-pallavaraṁ kād=eṟidu pettajayan=ā vija
   தே கேகய  பல்லவரம் காட் எறிது பெத்தஜயன்  விஜ  
     केकय पल्लवरं कादेर्दु  पेत्तजयना विजय  
   ಕೇಕಯ ಪಲ್ಲವರಂ ಕಾದೆಱದು ಪೆತ್ತಜಯನಾ ವಿಜ 
     de - காத்து; kād eidu (காடுஎறிந்து) - சிற்றூர் அழித்துpettajayan - பெற்ற வெற்றி 


12. arasange bāḷgaḻcu palmaḍiuṁ mūḷivaḷuṁ ko-
   அரசன்கே பால்கள்சு பல்மடியம் ுழிவளும் கொ    
     अरसन्गे बाल्गश्चु पल्मडीउम् मुशुवल्लिउम्  
    ಅರಸಂಗೆ ಬಾಳ್ಗೞ್ಚು ಪಲ್ಮಡಿಉಂ ಮೂೞುವಳ್ಳಿಉಂ 
     vijaarasange - வெற்றி அரசனுக்கு; bāgacu - (மணம்செய்வித்து) வாழ்க்கை அளித்து;  palmaiu - ஹல்மிடியின்  முன்னைப் பெயர்; ivau - முழுவதும்;  


13. ṭṭār baṭāri-kuladōn=āḷa-kadamban kaḷadōn mahāpātakan
      ட்டர் பட்டாரி குலத்தோன் ஆள தம்பன் களத்தோன் மஹாபாதகன்    
      कोट्टार बटारी कुल दोनाल कदंबन कलदोन महापातकन्  
    ಕೊಟ್ಟಾರ್  ಬಟಾರಿ ಕುಲದೊನಳ ಕದಂಬನ್ ಕೞ್ದೋನ್ ಮಹಾಪಾತಕನ್ 
     koṭṭār - கொடுத்தார்; āa - ஆளும்; kaḷadōn - அரசகுடியோன், of a  royal family 


14. irvvaruṁ saḻbaṅgadar vijārasaruṁ palmaḍige kuṟu-
     இர்வ்வரும் சள்பகந்தார்  விஜாரசரும்  பல்மடிகே குறு 
     इर्व्वरुम् सऴबङ्गदर्  विजारसरुम् पल्मडीगे कुरु 
   ಇರ್ವ್ವರುಂ   ಳ್ಬಙ್ಗದರ್‌ ವಿಜಾರರಂ  ಲ್ಮಡಿಗೆ  ಕುರು 
     irvvaru-  தந்தை மகனாகிய மிருகேசர் இருவரும்sabagadar - பொய் (சள்) பகன்றார்vijārasaru - வெற்றியரசர் பசுபதியும்; kuumbii - கைப்பிடி நீர்அட்டி;   


15. mbiḍi viṭṭār adān aḻivornge mahāpatakam svasti
   ம்பிடி விட்டார் அதான் அழிவோர்கே மகாபாதகம் ஸ்வஸ்தி  
       म्पिडी विट्टार अधान अश्हिवोर्गे महापातकं स्वस्ति 
    ಮ್ಬಿಡಿ ವಿಟ್ಟಾರ್ ದಾ  ಳಿವೊನ್ಗೆ ಮಹಾಪಾತಕಂ ಸ್ವಸ್ತಿ  
    viṭṭār - தானம் கொடுத்தார்; அதான் - அதைaivornge - அழிப்போர்க்கு;  mahāpatakam - மாபாவம்svasti - பிணிக்கும், embed.  
 

The following line is carved on the pillar's left face: 
16. bhaṭṭarg=ī gaḻde oḍḍali ā pattondi viṭṭārakara
     பட்டர்க்  கழதே ஒட்டலி  பத்தொண்டி விட்டாரகர 
     भट्टर्गिगशिदे ओद्दलि आ पत्तोन्दी विट्टारकर   
    ಭಟ್ಟರ್ಗ್ಗೀಗೞ್ದೆ ಒಡ್ಡಲಿ  ಪತ್ತೊನ್ದಿ ವಿಟ್ಟಾರಕರ
    bhaṭṭarg - பட்டருக்கு;  - இந்த, gade (களத்தை) - வேள்விச்சாலை, கொட்டகை, வீடு;  oḍḍali -முழுவதும்ā - அந்த, viṭṭārakara - தானம் கொடுத்தார் 

கல்வெட்டு பாடப் பொருள்: 
வெற்றித் திரு விளங்க சங்கும் வில்லும் ஏந்திடும், அரக்கரைக் கொன்றும், நல்லோரைக் காத்து தீயோரை அழித்து முறைசெய்கிற சுதர்சன சக்கரத்தை ஏந்தியும்  ஆழியில் ஓய்வு கொள்ளும் அச்சுதன் எனும் திருமாலே சரணம் என பாகவத புராணத்தை அடியொற்றி கடவுள் வாழ்த்து தொடங்குகிறது. உயர்மிகுபெருமை உடையவரும், கதம்பர் போற்றலுக்கு உரியவரும், ஈகை நிறைந்தவரும்,போர் என முழங்குவார்க்கு பகையென விளங்குபவருமான ககுஸ்த பட்டூரனின் பணியாளும் நரிஉலாவும் (நரித்தாவு) எனும் சிற்றூர் வாழ்நருமான மிருகேச நாகேந்திர அபிலரும், அவர் தந்தை பட்டகர் மிருகேச நாகஹவ்யரும் ஆகிய இருவரும் அந்த பட்டர் குலஒளியும், வானத்து உடுக்களின்  நாயகனும், அளப்பறிய பெருங் குழுவுடையவரும், உயிர்களின் புகலிடத் தலைவனும், தக்கணத்தில் பல நூறு வேள்வி இயற்றி அவ்வேள்வியில் உயிர்களின் ஓம்பலையே முதன்மையாக வைத்து பகலொளிக் காலம் வரை கொடை தந்து தானப்பசுபதி என்று புகழப்பட்டவனான பசுபதி என்னும் பெயரினன்; தன்னை நாடிவந்து போகின்ற எல்லா பட்டர்க்கும் அன்பின் உறைவிடமான இளவரசனுக்கு அரச குடும்பத்து அம்பு எய்யும் விற்பயிற்சியை கொடுத்தனர். அதனால் அந்த வீரமகன் கேகய பல்லவரின் சிற்றூரை அழித்து பெற்ற வெற்றிக்குப் பிறகு அவனை மன்னித்துக் காத்தார். அதற்காக வெற்றி அரசர் பசுபதிக்கு மணம் முடித்துவைத்து வாழ்க்கையை ஏற்டுத்திக் கொடுத்து பல்மடியம் என்னும் ஊர் முழுவதையும் வெற்றிப் பரிசாய் தந்தார் அந்த பட்டர் குலத்தோன், ஆளும்  கதம்பனான அரசக்குடியோன். மாபாவியர்களான தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் வெற்றியரசரிடத்தில் பொய் பகன்றதால் வெற்றியரசர் பசுபதியும் பல்மடியத்தை நீர்அட்டி தானம் கொடுத்தார். அந்த தானத்தை அழிப்பவரை மாபாவம் பிணிக்கும் என்பது கல்வெட்டின் நிறைவானச் செய்தி. தூணின் இடப்பக்கக் கல்வெட்டு வரி மேலுள்ள 15 வரிகளோடு சற்றும் தொடர்பு இல்லாத வகையில் "பட்டருக்கு இந்த வேள்விச்சாலையை முழுவதுமாக அந்த பத்தொந்தி தானம் கொடுத்தார்" எனக் இயம்புகிறது.       

கல்வெட்டை வடித்தவர் யார்?
பல்மடியமாம் ஹல்மிடியை தானம் கொடுத்த வெற்றியரசர் இக்கல்வெட்டை வெட்டியிருந்தால் அவருடைய மெய்க்கீர்த்தி அதில் இடம்பெற்றிருக்கும். அப்படி எந்த அரசருடைய மெய்க்கீர்த்தியும் இக்கல்வெட்டில்  இடம்பெறவில்லை. மேலும், மன்னன் என்பவன் தன் அதிகாரத்தின் மீதும் படையின் மீதும் முழு நம்பிக்கை உடையவன் ஆதலின் இந்த அறத்தை அழித்தவர் மாபாவி ஆவார் என்று சாவித்து தன் இயலாமையை காட்டிக்கொள்ள  மாட்டான்.  தூணின் இடப்பக்கம் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் 16 ஆம் வரிச் செய்தி மேல் உள்ள மற்ற செய்தியோடு தொடர்புடையதாக இல்லாமல் யாரோ பத்தொந்தி என்பவர் பட்டருக்கு வேள்விச் சாலையை தானம் கொடுத்ததாகக்  குறிப்பிடுகிறது.  இக்கல்வெட்டில் அதிக அளவு சமற்கிருத சொற்கள் ஆளப்பட்டுள்ளன என்பதும் இதனை வெட்டியவர்கள் அவ்வூர் பிராமணரே என்பதை உறுதிப் படுத்துகிறது. எனவே இக்கல்வெட்டு முதன் முதலில் மண் கோட்டை அல்லது மேற்கு வாயிலில் இருந்தது பின்னர் ஒருகாலத்தில் வீரபத்திரன் கோவில் முன் கொண்டுவந்து  வைக்கப்பட்டது என்பது உண்மைக்கு மாறானது.  உண்மையில், பிராமணரால் வெட்டப்பட்ட  இக்கல்வெட்டு பிராமணர் ஆளுகை செலுத்தும் வீரபத்திரன் கோவில் முன்பு தான் தொடக்கம்முதலே வைக்கப்பட்டு இருந்திருக்க முடியும். மண் கோட்டை பிராமணர் ஆளுகைக்கு உட்படுவ்தல்ல ஆதலால் அங்கு இக்கல்வெட்டை முதன்முதலாக வைத்திருந்திருக்க முடியாது.
கல்வெட்டை ஆழ்ந்து படிக்குங்கால் இதில் குறிக்கப்படும் கதம்ப மன்னன் ககுஸ்தனுக்கும் வெற்றியரசன் பசுபதிக்கும் எவ்வகை உறவு இருந்தது என்பதை அறிய இயலவில்லை. வெற்றியரசன் பசுபதி தான்வெற்றிப் பரிசாகப் பெற்ற பல்மடியத்தை தானம் செய்துவிடும் அளவிற்கு தந்தையும் மகனுமான மிருகேசர் இருவரும் அவன்பால் அளவிறந்த செல்வாக்கு கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. முத்தாய்ப்பாக பல்மடியத்தின் மீது ஒருகாலத்தே அளவற்ற உரிமை பெற்றிருந்த பிராமணர்கள் அந்த உரிமைக்கு அதுபோது இடர் ஏற்படுவதை உணர்ந்து என்றோ எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வைச சான்றாகக் காட்டி அதன் மூலம் இந்த பல்மடியம் தமக்குக் முன்னமேயே சொந்தமாகியது என்று கல்வெட்டு வடித்து தம் உரிமையை வலுப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளனர் என எண்ணத் தோன்றுகிறது. 
பல்மடிய தானநிகழ்வைக் குறிக்கமுடிந்த பிராமணரால் மிருகேசர் இருவரது ஊரின் பெயரை மட்டும் தெளிவாகக் குறிப்பிட முடியாமல் நரிஉலாவும் இடம் என்கின்றனர். இந்த இருவர் வெற்றியரசரிடம் சொன்ன பொய் என்ன என்பதும் குறிக்கப்படவில்லை. கல்வெட்டில் உள்ள அத்தனைக் கன்னடச் சொற்களும் தமிழின் திரிபுச் சொற்களே. அதனால் தமிழ் அகராதியின் துணை வேண்டப்படுகிறது.   

கல்வெட்டின் காலம் எது? 
கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே  கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்றுஅறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை. இதில் இடம்பெறும் பிற செய்திகளையும், மொழிநடையையும், மக்கள்  நம்பிக்கைகளையும் நோக்கித் துலக்கமாக இக்கல்வெட்டின் காலத்தை குறித்ிருக்க இயலும். கல்வெட்டறிஞர்கோவிந்த சுவாமி கய் என்பவர் இக்கல்வெட்டில் இடம்பெறும் கதம்பன் ககுஸ்தன் என்பவன் கதம்ப ஆள்குடியின் அரசன் ககுஸ்தவர்மன் அல்லன் மாறாக இவன் பட்டாரி குலத்தைச் சேர்ந்த வேறு ஒரு அரசன், ஏனெனில் கல்வெட்டில் மானவ்ய கோத்திர, ஹாரிதீ புத்திர அதோடு முகாமையாக தரும மகாராஜ போன்ற கதம்ப மன்னர் பட்டப்பெயர்கள்   குறிக்கப்படவில்லை என்கிறார். இக்கல்வெட்டில் கன்னடம் பீடுநடை போடுவதால் இது கன்னடக் கல்வெட்டு என்பதில் ஒருசிறிதும் ஐயம் இல்லை. அதே நேரம் இக்கல்வெட்டில் மக்கள் மொழியில் இடம் பெறாத சமற்கிருதச் சொற்கள் பேரளவில் இடம் பெறுகின்றன. தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது, அரசமொழியானது என்பதை நோக்க இக்கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது. 
மேலும்,  இக்கல்வெட்டின் தொடக்கத்தில் இலக்கித்துள்ள விஷ்ணுவின் பெருமைகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்தை உள்வாங்கி சமற்கிருத மொழியில்  எழுதப்பட்டதாகும். பாகவத புராணம் தென்னகத்தில் பரவிய பிறகே கி.பி. 8 ஆம் நூற்றாண்டிளவில்  ஆழ்வார்கள் தோன்றி திருமாலைப் பாடிப்பரவினர். உண்மையில், புராணங்கள் வெகு காலத்திற்கு முன்னமேயே இயற்றப்பட்டிருந்தால் ஆழ்வார்கள் இன்னும் முன்னமேயே தோன்றியிருப்பர் என்பதே உண்மை. அதோடு, கற்றளிக் கோவில் இயக்கமும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது என்ற கருத்தை பொருத்ப் பார்த்தால் வீரபத்திரன் கோவிலும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் பின்னேயே தோன்றியிருக்க முடியும். அதனால் இக்கல்வெட்டும் அதன் பிற்பாடு தான் வெட்டப்பட்டிருக்க முடியும்.
பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டளவில் தென்னகத்தில் புராணங்கள் வழியே  பரவிய பின்பு தான் மக்கள் நெஞ்சில் இடம் கொண்டன. அதற்கு முன் பாவம், புண்ணியம் ஆகிய கருத்துகள் மக்களிடையே இருந்ததில்லை. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இல்லாத ஒரு கருத்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டின்  கல்வெட்டில் இடம்பெற்றிருக்க முடியாது. முதன் முதலாக அரசர் அல்லாத பிறவோரால் வெட்டப்பட்ட கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளின் எழுத்து நடை அமைப்பில் தான் இந்த பாவம்,  புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் இடம்பெறுகின்றன. காட்டாக, இந்த அறம் அழித்தார் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், கங்கைக் கரையை இடித்த பாவத்தை அடைவர், இந்த அறம் காத்தார் கால்மேல் என் தலை ஆகிய கருத்துகளை காணவியல்கிறது. இதே போல் இக்கல்வெட்டிலும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் ஆளப்படுவது இந்த கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது. இதற்கு சான்றாக கீழே இரு கல்வெட்டுகள் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன.   
மேற்காணும் காரணங்களால் இந்த ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்கு செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது. இதே போல தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தற்கு பழமைச் சான்றாக காட்டப்பட்ட கடப்பை மாவட்ட கமலாபுரம் வட்டத்தில் அமைந்த எர்றகுடிபாலேம் என்ற ஊரின் கண் அமைந்த சென்னகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 575 இல் ஆட்சிபுரிந்த எரிகல் முத்துராஜனின் காலத்தது என்று சொல்லப்பட்டுள்ளது. தென்னகத்தில் கற்றளிகள் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக கட்டப்பட்டன எனும் போது இக்கல்வெட்டும் அந்த கோவிலும் எவ்வாறு கி.பி  6 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்க முடியும்  என்ற வலுவான கேள்வி எழுகிறது.   

எடுத்துக் காட்டு கல்வெட்டுகள் :
1. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்பெறுகிறான். ஒளகண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான். கல் தூம்பை காத்தவர் பாதம் என் தலைமேல் இருப்பதாகக் கடவது என்றும் அழித்தார் கங்கை குமரியிடை வாழும்  மக்கள் யாவரும் செய்த பாவத்தை அடைவர் என்றும் குறித்துள்ளார். ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும். கல்வெட்டுப்பாடம் பின்வருமாறு.

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை / கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு / ............வது மிலாடுக்குறுக்கைக் /கூற்றத்து ..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க / ....னேன்  இவூர்க்கு நஞ்செயரை / ..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு) / தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா / தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ /
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய் /தார் செய்த பாவமெல்லாங்கொள்வான் மேலை கற்றூபும் இட்டாருமிவரே

2. மேலை கங்க அரசன் நரசிம்ம வர்மனுக்கு பதினெட்டாவது ஆட்சியாண்டில் சன்மதூரன் அதிவாரண்டர சாத்தையன் தன் முக்கூடுர் புன்செய், நன்செய் நிலத்தையும் குடியிருந்த வீட்டையும் கைநீரட்டி தானமாக கொடுத்தோம் இதைக்  காத்தார் கால்மேல் என் தலையை வைத்ததாகக் கடவது என்று குறிப்பிட்டு தான் செய்த அறத்தை மறத்தல் வேண்டாம் என்று கல்வெட்டில் இலக்கித்துள்ளார்...


ஸ்ரீ கோ விசிய நரசிங்க பருமற்கு / யாண்டு பதினெட்டாவது சன்மதூ  / ரண்டாம் அதிவாரண்டர சாத்தைய னார்க்கு முக் / கூடூர்  அவருடைய புன் புலமும்  நன் புலமும் /  அவர் இருந்த மனையும் பரபு  / செய்த ஒன்று கை நீற்றீர் பெய் / து பிரமதாயன் கொடுத்தோம்  இ / து காத்தார் கால் மேல் என் / றலை      அறம(றவர்க)    கீழ் முட்டுகூர், குடியாத்தம் வட்டம் கல்வெட்டு SII XX  பக் 178 






 ________________________________________________________





சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
________________________________________________________





WHILE RULERS CHANGED, TRADE THRIVED

-- K R A Narasiah
 
With A System Of Merchant Guilds, Levies, Tamil Traders Did Roaring Business With Rome, Far East
N umismatic evidence shows that Roman-Tamil trade in ancient times thrived for centu ries without break, though now and then there was slackness. An important point is that intermodal transportation was well known then. Cargo came to the Indian west coast, moved to east coast by land and river, and left through the eastern ports. After emperor Nero's passing away in Rome there was a lull in sea trade, which recovered later though the currency changed from gold to silver and copper coins.History has it that Karur was at various times under Chera, Chola or Pandyas. But trade in the river port flourished irrespective of who ruled.Epigraphical, literary and numismatic evidence show that Karur was an emporium of trade. Ptolemy mentions it as early as 2nd century .
Apart from a strong merchant fleet and a sailing community, ancient Tamils had supporting organizations called by various names -largely independent of whoever was ruling at that point of time -but controlling the trade in an efficient manner.
The ruler of the day did not interfere with the trading communities.Merchant guilds known by various names such as “Anjuvannam“, “AinnuRRuvar“, “Manigramam“ and “Padinenvishayam“ had well established trade practices. They had their own methods of collecting levies for cargo imported and exported along with fees for port security and efficient cargo handling.
These traders created an atmosphere of goodwill among the local population by constructing water tanks and places of worship -a corporate social responsibility initiative of those days. This ensured that trade was smooth in spite of changing regimes. The rulers, however, did ensure safe transit of ships and provided various supporting facilities, in addition to collecting custom duties for imported articles.The classic case is that of Rajendra Chola who with one of the best known navies of the world ensured that traders were well protected and ensured easy passage for them.
According to well-known historians Noboru Karashima and Y Subbarayulu, Padinenvishayam was an organization of high order, which controlled other guilds such as Manigramam, Senamugam etc. These names have been found in various countries with whom the merchants of the Chola period carried on trade.
Padinenvishayam means eighteen countries. In a gloss on grammar treatise “Nannul“, Mayilainathar names the eighteen countries. Guilds must have operated as an organized network between various countries for good logistics support.
The craftsmen who went out in the ships to countries in the far east continued their profession there supported by the merchant guilds. A 3rd or 4th century inscription that says “Perumpatan Kal“ in Brahmi script, meaning “the touchstone of the chief goldsmith“, has been preserved in a Thailand museum. A tank was constructed and put under the protection of a merchant guild -Manigramam.
Karashima has observed two more Tamil inscriptions now kept in a Bud dhist temple and says one of them mentions the name of a donor “Dhanmasenapathi“ who made a grant to brahmins. In Pagan (Myanmar), a 13th century inscription shows a Vaishnavite mantra and also says that a hall was built by “Irayiran Kulasekhara Nambi“.
But the most amazing inscription is the one recorded by T N Subramaniam. This was from Quanzhou, a medieval port of south China. The text reveals that one Champanda Perumal, also known as Thava-Chakravarthigal, having got a grant of land from the then King Khan, built a temple there and called it ThiruKhaneeswaram after the Khan.
An inscription found in the Vishnu temple of Ponneri states that to make Mylapore a protected harbor levy was laid on goods imported and exported. A voluntary levy of the trade guilds was denoted by the term “Pattinapakudi“. Pakudi is a share for the betterment of the “pattinam“ (a port) given by the trade guilds.
(The author is a former marine chief engineer, Tamil writer and heritage enthusiast)


 
Source: Times of India  - 
http://epaperbeta.timesofindia.com//Article.aspx?eid=31807&articlexml=WHILE-RULERS-CHANGED-TRADE-THRIVED-07102015006006&Mode=1 


 ________________________________________________________

Mr. K R A Narasiah
narasiah267@gmail.com
________________________________________________________

Saturday, September 26, 2015

மயிலாடும்பாறைக் கல்வெட்டு

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பொ. மெய்யூர்

என்னும் சிற்றூரில்  மயிலாடும்பாறை என ஊர் மக்கள் குறிப்பிடும் பாறையில் ஒரு கல்வெட்டைக் கண்டிருக்கிறார் அவ்வூரைச் சேர்ந்த ச.குப்பன் என்பவர். அக்கல்வெட்டின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார்.

அது ஓர் அருமையான கல்வெட்டு. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு. கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக்குறிப்பிடப்பெறுகிறான்.

ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு  ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்.  ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை

“ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது.  ”பட்டி” என்பது நிலத்தைக்குறிக்கும். சில நடுகற்களில் வருகின்ற “உதிரப்பட்டி” என்னும் சொல்லை ஒப்பிடுக. இறந்த வீரனின் குடும்பத்தாருக்கு (இரத்த உறவு உள்ளவர்) நிலம் கொடையாக அளிக்கப்படுவதை “உதிரப்பட்டி” என்பார்கள். கல்வெட்டுப்பாடமும் கல்வெட்டுப்படமும் கீழே தரப்பட்டுள்ளன.



ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை
கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு
............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து
..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க
....னேன்  இவூர்க்கு நஞ்செயரை
..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)
தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா
தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்
தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்
மேலை கற்றூபும் இட்டாருமிவரே


”கற்றூபும்” எனப்பிழையாகப் பொறித்திருக்கிறார்கள். “கற்றூம்பும்” என்பதே சரி. கல்+தூம்பு=கற்றூம்பு.

 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________


சோழர் ஆட்சியில் தென்னிந்தியா: முனைவர் எ.சுப்பராயலு அவர்களின் சொற்பொழிவு





சோழர் ஆட்சியில் தென்னிந்தியா
முனைவர் எ.சுப்பராயலு அவர்களின் சொற்பொழிவு



கலை மற்றும் பண்பாட்டு மரபுக்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (Indian National Trust for Arts and Cultural Heritage) சார்பில் கோவை அன்னலட்சுமி ஓட்டல் அரங்கில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் முனைவர் எ.சுப்பராயலு அவர்கள் 11.09.2015 அன்று நிகழ்த்திய சொற்பொழிவின் உரை வடிவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

 ”சோழர் ஆட்சியில் தென்னிந்தியா”  என்னும் நூலின் தலைப்பையே இங்கு பேசுவதற்கும் தந்துள்ளார்கள். இந்தத் தலைப்பு பெரியதொரு தலைப்பு; விரிவாகப் பேசவேண்டியதொன்று. அது இயலாது என்பதால், சோழர் ஆட்சியில் மக்கள் பண்பாடு, கலை, நிருவாகம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சோழருக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் இங்கே காணவிருக்கிறோம்.

 சங்கச்சோழர்கள்:
 தென்னிந்திய வரலாற்றில்-குறிப்பாகத் தமிழக வரலாற்றில்- சோழர் பங்கு பெரிது. சங்ககாலச் சோழரைப்பற்றி நம் அனைவர்க்கும் நன்கு தெரியும். புகழ்மிக்க கரிகால் வளவனைத் தெரியாதார் இரார். பின்னால் வந்த இடைக்காலச் சோழர்கள், சங்ககாலத்துச் சோழர்களைத் தங்கள் முன்னோர் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். அதேபோல, சங்ககாலச் சோழரின் வழிவந்தவர்கள் தமிழகத்திலிருந்து இடம் பெயர்ந்து வடக்கே சென்று இராயலசீமா பகுதியை ஆட்சிசெய்தார்கள் என்றும் அவர்களுடைய நாடு  ரேணாடு என்னும் பெயர்கொண்டது என்றும் வரலாற்றுக் கருத்து உண்டு. ரேணாடு, ரேணாண்டு என்றும் வழங்கியது. கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டில் இவர்களது செப்பேடுகளில் முதன் முதலாகச் சங்ககாலக் கரிகாலன் பற்றிய குறிப்பு வருகின்றது. அதில் காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த கரிகாலன் காவிரியின் கரையை உயர்த்தினான் என்னும் குறிப்பு காணப்படுகிறது. இச்செப்பேடுகள் தெலுங்கு மொழியில் அமைந்தவை.

 இடைக்காலச்சோழர் – சோழர் கலைப்பாணி:

 சங்ககாலச் சோழர்களை அடுத்து இரண்டாவது சோழர் ஆட்சியைத் தொடங்கியவன் விசயாலயச்சோழன் ஆவான். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. அவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 850-870. அவனது ஆட்சியில் தொடங்கிய சோழர் ஆட்சி கி.பி.1250 வரை ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த வரலாறு. சோழர் ஆட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பண்பாடு, கலை, இலக்கியம், நிருவாகம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள். சோழர் விட்டுச் சென்றது என்ன என்றொரு கேள்வி எழுந்தால், விடை சோழர்களுக்கே உரிய கோயில்கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பதாகும். சோழர்கலைப்பாணி என்பது அவர்களின் அரிய அடையாளம். குறிப்பாக, சோழர்களின் செப்புத்திருமேனிகள் அவர்களது கலைப்பாணியைப் பறைசாற்றும். உலகின் பல நாடுகளுக்கும் அவை சென்றுள்ளன. திருட்டு வழியாகச் சென்றவை மிகுதி.

1992-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் அமெரிக்கச் செல்வரான ராக்கபெல்லர் தம்முடைய சேர்ப்பாகக் (collection)  காட்சியில் வெண்கலத்தால் ஆன புத்தர் படிமம் ஒன்றையும் வைத்திருந்தார். இப்படிமம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தது; கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்னும் குறிப்பும் இருந்தது. படிமத்தின் பதுமப்பீடத்தில் தமிழ் எழுத்துகள் காணப்படவே, அதனை ஒளிப்படம் எடுத்து ஆய்வு செய்ததில் அது கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இராசேந்திரப்பெரும்பள்ளியைச் சேர்ந்த அக்கசாலைப்பெரும்பள்ளி கோயிலுக்கு திருவுத்சவத்துக்காகச் செய்த அக்கசாலை ஆழ்வார் என்னும் பெயரமைந்த திருமேனி என்றும் தெரிய வந்தது.  தொல்லியல் ஆவணங்களை ( சிலைகள், செப்பேடுகள் போன்றவை ) நம்முடைய அருங்காட்சியகங்களை விட வெளி நாடுகளில் நல்லமுறையில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். தமிழ்நாட்டில் நம் அரசும், அருங்காட்சியகங்களும் தொல்லியல் ஆவணங்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள ஈடுபாடு குறைவு.

 முதலாம் இராசேந்திரனின் கரந்தைச்செப்பேட்டை (இருபத்திரண்டு ஏடுகளைக்கொண்டது) தமிழ் நாட்டு அருங்காட்சியகத்தில் கிடங்கில் குப்பையோடு குப்பையாகப் போட்டுவைத்திருக்கிறாகள். பழம்பொருளுக்கும் நல்லபல ஆவணங்களுக்கும் நாம் கொடுக்கும் மதிப்பு இதுதான். லெய்டன் செப்பேடு நன்கு பாதுகாக்கப்பட்டுவருகிறது. காரணம், அது டச்சுக்காரர்கள் மூலம் லெய்டன் சென்றது. லெய்டன் பல்கலை நூலகத்தில் அது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதைப்பார்வையிட விருப்பம் தெரிவித்தபோது, தேர் போன்ற ஒரு வண்டியில் பட்டுத்துணியின் மீது அழகாக வைத்துக் கொண்டுவந்து காண்பித்தனர். இந்த நிலை, இந்திய அருங்காட்சியகங்களுக்கு இல்லாமல் போனது. அவற்றுக்குப் போதிய அரசுப்பண உதவி மற்றும் அரசு ஊழியர் கிடைப்பதில்லை.

 சோழர் கல்வெட்டுகள்:
 இந்தியாவில் ஏறத்தாழ 60,000 கல்வெட்டுகள்  படியெடுக்கப்பட்டு தொல்லியல் அலுவலகங்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன.. அவற்றில் பாதி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ளன. இவற்றில் பாதி தமிழகத்தில் உள்ளன. இவற்றில் பாதி (15000 கல்வெட்டுகள்) சோழருடையவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய அளவில் சோழருடைய கல்வெட்டுகளே மிகுதி. அடுத்து எண்ணிக்கையில் இருப்பவை விஜயநகர அரசர் கல்வெட்டுகளாகும். அவை மூன்று மொழிகளில் அமைந்துள்ளன.

 சோழர் கல்வெட்டுகளைப் பல கோணங்களில் ஆராயலாம். முதலில் அவற்றை ஆராய்ந்தவர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்களே. 1940-இல் “The Cholas” என்னும் ஆய்வு நூலை எழுதினார். அப்போதிருந்த ஆய்வு முறை, தற்போதுள்ள ஆய்வு முறைகளினின்றும் வேறானது. அவர், ”குடிவழி வரலாறு” என்னும் Dynastic History  முறையை நன்றாகச் செய்திருக்கிறார். தற்போது சமூகப்பொருளாதார வரலாற்று முறையில் (Socio Economic History – Statistical Methodology) ஆய்வுகள் செய்யப்படுகின்றன. முடிவுகளும் ஒரு பொதுப்படையான நிலையில் (Generalisations) இருப்பன. ஆராய்ச்சி வளர்ந்துகொண்டே உள்ளது.

 கல்வெட்டுகள், பெரும்பாலும் கோயில் சுவர்களில் உள்ளவை, கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை பற்றியவையே. எல்லாவகைச் சமூகத்தாரும் கொடை அளித்துள்ளார்கள் என்பதால் கோடாமை (bias) இன்றி சமூகப்பொருளாதார வரலாறு அறியப்படாது. கொடைகள், தொடக்கத்தில் பொருளாதாரம் சார்ந்து பணம், தங்கம், கால் நடைகள் ஆகிய வடிவங்களிலேயே கொடுக்கப்பட்டன. போகப்போக நிலத்தை அல்லது நிலவருவாயைக் கொடுப்பது நடைமுறைக்கு வந்தது. பின்னர், நிலம் முழு உரிமையாகக் கொடுக்கப்பட்டது. இதைத் திருநாமக்காணி என்பர். கோயில் இறைவர்தாம் நில உடைமையாளர். கோயில் “டிரஸ்டி”கள்  இவ்வகைக் கொடைகளை நிருவாகம் செய்தனர். நிலங்களைப்பற்றி நிறையச் செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. நிலத்தின் வகை, விளை திறன் போன்ற ஊர்ப்புறப் பொருளாதாரம் பற்றிய செய்திகள் உள்ளன. நிலங்கள் இருக்கும் ஊர்கள் ஆராயப்பட்டதில், நிலவியல் அடிப்படையில் ஊர்கள் அவற்றின் இருக்கைகள் சேர்ந்தது நாடு என அழைக்கப்பட்டதை அறிகிறோம். கி.பி. 6 முதல் கி.பி. 10 நூற்றாண்டுவரை ஊர் மற்றும் நாடு என்னும் பிரிவுகள் இருந்துள்ளன.

 இராசராசனின் நிலச்சீர்திருத்தங்கள் – நில அளவீடு:
 முதலாம் இராசராசன் இந்த நிலப்பிரிவுகளில் மாற்றத்தை எற்படுத்துகிறான். சில நாடுகளை இணைத்து வளநாடு எனப்பிரிக்கிறான். அதுவரையில், நாடு என்னும் பிரிவிலிருந்த நாட்டு நிலக்கிழார்கள் சேர்ந்த அமைப்பான நாட்டார் என்போரது தன்னாதிக்கம் அல்லது தன்னாட்சி என்பது மேலோங்கியிருந்த நிலை மாறியது. அவர்கள் அரசுக்கு வரி செலுத்தினாலும் அவர்களுக்கென்று உரிமைகள் இருந்தன. வளநாடு உருவானதும் அவர்களது தனி உரிமைகள் குறைந்தன. வளநாட்டில், நீர் வாய்க்கால்களின் இருபுற நிலங்கள் கூறாக்கப்பட்டு இரு புறமும் இரு வளநாடுகள் ஆக்கப்பட்டன. இராசராசனின் ஆட்சிக்காலத்தில்தான் முதன் முதலில் நிலங்கள் அளக்கப்பட்டன. இது நிகழ்ந்தது அவனது 16-ஆம் ஆட்சியாண்டில்; அதாவது கி.பி. 1001-இல். அப்போது சில மாற்றங்களைச் செய்கிறான். சோழ நாட்டின் மையப்பகுதியான காவிரி “டெல்டா”  பகுதியில் நிறைய ஊர்களும், பிரமதேயங்களும் உருவாக்கப்பட்டன. பிரமதேயங்கள் என்பவை பிராமண ஊர்களாகும். காவிரி “டெல்டா”வில் 1300 ஊர்கள் இருந்தன; 70 நாடுகள் இருந்தன. 250 ஊர்களில் பிராமணக்குடியிருப்புகள் இருந்தன. எல்லா ஊர்களிலும் கல்வெட்டுகள் இருக்கின்றன.

இந்த ஊர்களில் நிலங்கள் அளக்கப்பட்டன. அளவையில் (Survey) , ஊர்களில் இருந்த மொத்த நிலங்களும் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் உரிமையாக இருந்தது என்பது கணிக்கப்பட்டது. ஊர் நத்தமும் கணக்கிடப்பட்டது. விளைச்சலை அடிப்படையாக வைத்து ஒரு பூ நிலம், இரு பூ நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. நில அளவையில் வேலி, மா, காணி, மாகாணி, முந்திரி என்பவை முக்கியமானவை. ஒரு வேலி நிலம் இன்றைய அளவீட்டில் 6.6 ஏக்கர் அல்லது 2.25 ஹெக்டேர் பரப்புடையதாகலாம்.

 நிலங்கள் தரம் வாரியாக நிர்ணயம் (Standardisation) செய்யப்பட்டன. மொத்தம் பதினாறு தரங்கள் இருந்தன. நிலங்களின் தரத்தை மாற்றும்போது “மடக்கு” என்று குறித்தார்கள். ஒரு தரத்து நிலத்துக்கு வரியாக வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல் என வரையறை செய்யப்படுகிறது. தோராயமாக ஓர் ஊர் என்பது 40 வேலிகள் கொண்டதாகவும் 3000 கலம் நெல் விளைச்சலைக் கொண்டதாகவும் கொள்ளலாம். இந்த வளமிக்க காவிரி டெல்டா நிலப்பகுதிதான் சோழர்களின் பெருமைக்கும் அவர்களின் படையெடுப்புகளுக்கும் பெருந்துணையாக நின்றது. இப்பகுதியின் 1000 ஊர்களிலிருந்து 87000 மெட்ரிக் டன் நெல் அரசனுக்கு வரியாகச் சென்றது எனக்கொள்ளலாம். நெல் பணமாக மாற்றப்பட்டும் அரசனின் கருவூலம் சென்றது. கி.பி. 1000 முதல் கி.பி. 1100 வரையிலான காலம் சோழரின் உயர்வான காலம். இக்காலகட்டத்தில், ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி பெரியது. இராசராசன் காலத்தில் வென்ற பகுதிகளை நேரடி ஆட்சிக்குக் கொணர்தல் பெரிய பணி. இப்பணியால் மண்டலங்கள் உண்டாயின. குறுநில அரசுகளின் நிலப்பகுதிகள் கையகப்படுத்தப்பெற்று மண்டலங்களாக மாற்றப்பட்டன.

 மண்டலங்களின் பெயரில் சோழ மண்டலம் என்ற பின்னொட்டு இணைந்தது. தொண்டை நாடு, ஜெயங்கொண்ட சோழமண்டலம் ஆனது. ஈழம் (ஈழத்தின் வடபகுதி), ஈழமான மும்முடிச்சோழமண்டலம் என்றாயிற்று. வேங்கிச் சாளுக்கியர் நாடு (ஆந்திரப்பகுதி), உத்தமச்சோழமண்டலம் ஆனது. ஆனால், பாண்டிய நாடு மட்டும் சோழமண்டலம் என்னும் பின்னொட்டைப் பெறவில்லை. அது, இராஜராஜப் பாண்டிநாடு என்று அழைக்கப்பட்டது. சோழமண்டலம் என்னும் பெயரே வெளியுலகத்தினருக்கு அறிமுகமாயிற்று. எனவே, போர்த்துகீசியர், இத்தாலியர் ஆகியோர் ”கோரமண்டல்” என்று குறிப்பிடலாயினர். சோழமண்டலம் என்னும் பெயரே “ச்சோரமண்டல்” என்றும் பின்னர் “கோரமண்டல்” என்றும் திரிந்தது. போர் எனில், கூடவே அழிவும் அங்குண்டு. சோழர்களின் போர்களாலும் நிறைய அழிவுகள் ஏற்பட்டன. எனவே, நிலப்பகுதிகள் மறு சீரமைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் உட்படுத்தப்பட்டன. இந்திய விடுதலைக்குப்பின் வல்லப பாய் படேல் சமஸ்தானங்களை இணைத்தது போன்றதொரு பணி.

 கடாரப்படையெடுப்பு:
 தமிழ்நாட்டுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் நீண்ட காலமாகத் தொடர்பு இருந்துவந்துள்ளது. பர்மா, கம்போடியா, வியட்நாம், மலேசியா, சுமத்திரா (இந்தோனேசியா), பிலிப்பைன்ஸ் ஆகிய இந்நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் இப்பகுதியுடன் தொடர்பு இருந்தது. ஸ்வர்ணபூமி என்னும் இப்பகுதிக்கு வங்காளம், குஜராத், தமிழகம் ஆகிய இடங்களிலிருந்து குடி பெயர்ந்திருக்கின்றனர். ஜாவா என்னும் கடாரப்பகுதி காழகம் என்று குறிப்பிடப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த புத்த யாத்திரிகர்கள் - கடல் வழியாக வந்தவர்கள் – நிறையக்குறிப்புகள் இட்டுச்சென்றிருக்கிறார்கள். பல குறிப்புகள் பழைய பிராகிருத எழுத்துகளில் உள்ளன. தாய்லாந்தில் ஒரே ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. தமிழி அல்லது பிராமி எழுத்தில் அமைந்த இக்கல்வெட்டு கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. “பெரும் பதன் கல்” என்னும் பொறிப்பு அதில் உள்ளது. பொன்னை உறைத்துப்பார்க்கும் உறைகல்லாக அது இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. “பதன்” என்பது “பத்தன்” என்பதைக்குறிக்கலாம். “பத்தன்” என்பது பொற்கொல்லனைக் குறிப்பதாகும். ”தமராக்” என்னுமிடத்தில் உள்ள விஷ்ணு கோயில் அருகில் குளம் வெட்டியது பற்றிய ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில், மணிக்கிராமத்தார் என்ற வணிகக்குழு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. சுமத்திராவின் மேற்குக்கரையில் இருக்கும் பாரூஸ் துறைமுக நகரில் சில கோயில்கள் உள்ளன. அங்குள்ள கல்வெட்டில் “வாரோசான தேசிப்பட்டணம்” என்னும் குறிப்புள்ளது. கற்பூரம் போன்ற வாசனைப்பொருள்கள் தமிழகத்திலிருந்து இங்கு இறக்குமதி ஆகியுள்ளன. ஜாகார்த்தா அருங்காட்சியகத்தில் உள்ள  தமிழ்க்கல்வெட்டு, நானாதேசிகள் என்ற வணிகர்கள் அங்கு தங்கியிருந்தமை பற்றிக் கூறுகிறது.

 பர்மாவில் உள்ள 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு  ஒன்று மலைமண்டலத்து வணிகரின் கொடையைப்பற்றிக் கூறுகிறது. மலைமண்டலம் என்பது கேரளப்பகுதியைக் குறிக்கும். நானாதேசிகள் என்னும் வணிகக்குழுவினர் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசிவந்துள்ளனர். ஆனால், கல்வெட்டுகளைத் தமிழ் மொழியிலேயே பொறித்துள்ளனர். ஜாவாவில் உள்ள ஒரு கல்வெட்டில் ஜாவா, தமிழ் ஆகிய இரு மொழிகளும் காணப்படுகின்றன. அக்கல்வெட்டில், தென்னிந்திய வணிகர் பற்றிய செய்தியும் அஞ்சுவண்ணத்தார் எழுவர் பெயரும் காணப்படுகின்றன.

 கி.பி. 1005-இல் ஸ்ரீவிஜயத்து அரசன் சூளாமணிவர்மன் தமிழகதின் நாகப்பட்டினத்தில் புத்தவிகாரை ஒன்றைக்கட்டினான். ஸ்ரீவிஜயம் என்பது சுமத்திரா, மலேசியா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். லெய்டன் செப்பேடு என்னும் ஆனைமங்கலச்செப்பேட்டில் இச்செய்தி உள்ளது. இராசராசன் இந்தப் புத்தவிகாரைக்கு ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாகக் கொடை அளித்துள்ளான். செப்பேட்டில், ஸ்ரீவிஜய அரசன், கிடாரத்தரையன் சூளாமணி பந்மன் என்று குறிப்பிடப்பெறுகிறான். புத்த விகாரை, சூளாமணி பந்ம விஹாரத்துப்பள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. இராசேந்திரன் இந்தக்கொடை பற்றிய செப்பேட்டை முழுமையாக்கி கி.பி. 1014-இல் தந்துள்ளான். கி.பி. 1021 வரை சோழருக்கும் ஸ்ரீவிஜயத்துக்கும் இடையில் நட்பு நிலவியது.

கி.பி. 1025-இல் இராசேந்திரன் தென்கிழக்காசிய நாடுகளின்மேல் படையெடுப்பு நிகழ்த்தியது எதற்காக என்பதும் அப்படையெடுப்பின் விளைவுகள் யாவை என்பதும் எண்ணிப்பார்க்கத்தக்கவை. மரக்கலங்களைக்கொண்டு கடல் வழியே  தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வணிகம்  செய்த வணிகர்களுக்கும் மலாய் கடலோடி மக்களுக்கும் (Maritime people) எதோவொருவகை உரசல் அல்லது பூசல் ஏற்பட்டுள்ளது எனத்தெரிகிறது. இந்தச் சிக்கலால் இராசேந்திரன் படையெடுப்பு நிகழ்த்தியிருக்கிறான். ஆனால், இது பற்றி அங்கு கல்வெட்டுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிக்கல் இராசேந்திரனின் தம்பியான வீரராசேந்திரன் காலத்திலும் தொடர்ந்திருக்கக்கூடும்; வீரராசேந்திரன் காலத்திலும் இப்படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. மலாய் மொழியில் கப்பல், வங்கம் ஆகிய சொற்கள் வழங்குகின்றன. இராசேந்திரனின் மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயம், கடாரம் எனவும், அஜே என்னும் பகுதி இலாமுரி தேசம் எனவும், நிகோபார் தீவுகள் நக்கவாரம் எனவும் குறிப்பிடப்பெறுகின்றன. இவற்றில், ஸ்ரீவிஜயம் 1000 கி.மீ. தொலைவும், நிகோபார் 1500 கி.மீ. தொலைவும், அஜே 300 கி.மீ. தொலைவும் கொண்டவை. மற்ற பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 6000 கி.மீ. தொலைவு படையெடுப்பின்போது கடல்வழிப்பயணம் நிகழ்ந்துள்ளது.

எந்தவகைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன, கப்பல்கள் எங்கு கட்டப்பட்டன என்பது போன்ற செய்திகளுக்குப் போதுமான சான்றாதாரங்கள் இல்லை. ஒரு சில குறிப்புகளே கிடைக்கின்றன. மரக்கலம், தோணி ஆகியவை பற்றிய குறிப்புகள் கிருஷ்ணபட்டினத் துறைமுகத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. பாரூஸ் கல்வெட்டில், மரக்கலநாயன் என்னும் குறிப்புள்ளது. மரக்கலங்களை இயக்கிய கப்பல் தலைவனுக்கு இப்பெயர் வழங்கியது எனலாம். மரக்கலநாயன் என்னும் இச்சொல் பின்னர் மரக்கலராயர் எனவும், மரைக்காயர் எனவும் திரிந்தன. மங்களூரிலிருந்து தொடங்கி, கேரளக் கடற்கரையில் பல இடங்களில் படகு கட்டுமிடங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் மன்னார் பகுதியில் படகு கட்டுமிடங்கள் இருப்பதாகத்தெரியவில்லை. கோயில்களில் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளை எழுதிவைத்தவர்கள், இராசேந்திரனின் படையெடுப்பு பற்றியோ மரக்கலங்கள் மூலம் சென்ற கடல்வழிப் பயணத்தைப்பற்றியோ எழுதவில்லை என்பது வியப்பானது. ஆனால், Manuscripts எனப்படும் ஓலை ஆவணங்களில் இது பற்றித் தகவல் கிடைக்ககூடும். ஓலை ஆவணங்கள் முந்நூறு, நானூறு ஆண்டுகள் நிலைத்து நிற்பவை. நிறையத் தகவல்கள் கொண்டவை. இவை ஆராயப்படவேண்டும். ஆனால், ஓலைச்சுவடிகள் இங்கே நன்கு பாதுகாக்கப்படுவதில்லை. அழிவை எதிர்கொண்டிருப்பவற்றுள் (Endangered species) ஓலைச்சுவடிகளும் அடங்கும்.

இங்கிலாந்தில், ஓலைச்சுவடிகள் போன்றவை ஒளிப்பட ஆவணங்களாக (Photo documentation) மாற்றப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. சீன, ஜப்பான் நாடுகளில் கி.பி. 500-இலிருந்து கிடைக்கும் ஓலை ஆவணங்களைப் பாதுகாக்கின்றார்கள். தமிழகத்தில், கி.பி. 1700 முதல் கி.பி. 1900 வரையிலான இருநூறு ஆண்டுகாலகட்டத்தைச் சேர்ந்த மோடி ஆவணங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் படிக்க ஆள்கள் இல்லை. எனவே, ஓலை ஆவணங்களுக்கு முதன்மை அளித்து ஆவன செய்யவேண்டிய பணி உள்ளது.

 







சொற்பொழிவுக்கருத்துகளைக் கட்டுரை ஆக்கம் செய்தவர்:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.




 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________