Saturday, September 19, 2015

கொங்கவிடங்கீசுவரர் கோவில்

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

உடுமலை அருகே ஒரு சிற்றூர். அங்கே ஒரு சிவன் கோவில். ஏறத்தாழ இன்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது உறுதி. ஏனெனில், கி.பி. 1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் காணப்படுகிறது. கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரன், கொங்கு நாட்டில் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளையும் ஆண்ட அரசன் ஆவான். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை என வரலாற்று அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இவன் காலத்துக் கி.பி.1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் இருப்பதனால், இக்கோவில் எண்ணூறு ஆண்டுப்பழமையானது என்பதை உறுதி செய்ய இயலுகிறது.



கொங்கவிடங்கீசுவரர் கோவில்:

முற்றிலும் கற்களால் ஆன கற்றளியாகக் கட்டப்பட்ட இக்கோவில், சோழர் காலத்துப்பாணியில் அமைந்த கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. கருவறையில் குடி கொண்டுள்ள இறைவர் லிங்கத்திருமேனியர். இந்த லிங்கத்திருமேனிக்கு ஒரு சிறப்புண்டு. தானாய்த் தோன்றிய இறைத்திருமேனி. உளி கொண்டு செதுக்கப்படாத லிங்கத்திருமேனியை “விடங்கர்”  என அழைப்பது மரபு. அந்த மரபில் இவ் இறைவரும் ” விடங்கீசுவரர் “ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கொங்கு நாட்டில் அமையப்பெற்ற சிவன் கோவில்களில் “ கொங்கு “ என்னும்  நிலத்தின் பெயரைத் தாங்கியுள்ள கோவிலைக்காண்பது அரிது. இந்தக் கோவில் அத்தகைய அருமையை உடையது. இறைவர், இந்த அருமையைத் தாங்கி, “ கொங்கவிடங்கீசுவரர் “  என்று அழைக்கப்படுகிறார்.


பழங்காலத்தில் கோவில்களின் நிலை:

பழங்காலத்தில் கோவில்களின் நிலை என்ன, சிறப்பும் பயன்பாடும் என்ன என்பதைச் சற்றுக் காண்போம். கோவில்கள் அரசர்களால் கட்டுவிக்கப்பட்டன. அரசர்கள், மக்களிடமிருந்து பெற்ற வரி வருமானங்களையும், போர் மூலம் கவர்ந்த பொன்னையும் பொருளையும் கோவில்களைப் பேணுவதில் செலவிட்டனர். அரசர்கள், கோவிலுக்கு நிலங்களைத் தானமாக அளித்ததோடல்லாமல் அந்நிலங்களின் வரிகளை நீக்கி னர். இவை இறையிலி நிலங்கள் எனப்பட்டன. அரசியரும் தனிப்பட்ட முறையில் கோவில்கள் எழுப்பினர்; கொடைகள் வழங்கினர்; திருப்பணிகள் செய்தனர்.

குடிமக்களும் கோவில்களுக்குக் கொடைகள் பல அளித்தனர்.  குடிமக்களில் பலவகைப் பிரிவினரும் இதில் அடங்குவர். வேளாண்குடிகள், சிறு வியாபாரிகள், பெரு வணிகர்கள், தேவரடியார்கள் போன்ற பலரும் கோவில் பணிகளுக்காகக் கொடைகள் வழங்கியுள்ளனர். அரசு அதிகாரிகளும் பெருமளவில் தானங்கள் வழங்கியுள்ளனர். கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் வழிபாட்டுக்காகவும், சந்தியாதீபம் எனப்படும் விளக்கெரிக்கவும் மற்றும் பல்வேறு பணிகளுக்காகவும் இக்கொடைகள் பயன்பட்டன.

வழக்கமாக ஒவ்வொரு கோவிலும் கருவறை, அர்த்தமண்டபம் என்னும் நடுமண்டபம், முன்மண்டபம் இவற்றைக் கொண்டிருக்கும். கோவிலைச் சுற்றிலும் ஒரு திருச்சுற்றும் (பிராகாரம்) மதிலும் இருக்கும். பெரிய கோவில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திருச்சுற்றுகள் அமைவதுண்டு. இத்திருச்சுற்றுகளில் அரசர், அரசரைச் சார்ந்தோர் முதலியோர் எடுப்பித்த சிறிய கோவில்கள் இடம்பெறும். பெரிய கோவில்களை நிருவாகம் செய்யத் தனிக்குழுவினர் இருந்தனர். ஸ்ரீ காரியம் செய்வார், கோவில் தானத்தார், ஊர்ச்சபையினர், மாகேசுவரர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். வழிபாட்டுப்பொறுப்பில் சிவப்பிராமணர்களும் கோவிலின் பிற பணிகளுக்குப் பணியாளர்களும் இருந்தனர். கோவிலுக்கென்று தனியே கருவூலம் இருந்தது. இது ஸ்ரீ பண்டாரம் என்று அழைக்கப்பட்டது. கோவிலின் வரவு செலவு கணக்குகள் கோவில் கணக்கர் பொறுப்பில் இருந்தன.

கோவிலின் பல்வேறு பணிகளுக்குப் பணியாளர்கள் இருந்தனர் என்று மேலே குறிப்பிட்டோம். அப்பணியாளர்கள் திருஅலகிடுதல், திருமெழுக்கிடுதல், பூத்தொடுத்தல், மடைப்பள்ளிப்பணி ஆகிய பணிகளைச் செய்தனர். அலகிடுதல் என்பது துடைப்பம் கொண்டு கோவிலைத் தூய்மை செய்தலைக்குறிக்கும். மெழுகிடுதல் என்பது சாணத்தால் தரையை மெழுகித் தூய்மை செய்தலைக்குறிக்கும். இவ்வகைப்பணிகளுக்கும் பிற பணிகளுக்கும் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் பணியமர்த்தப்பட்டிருப்பினும், குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவரடியார் என்று அழைக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். அலகிடுதல், மெழுக்கிடுதல், பூத்தொடுத்தல் ஆகியவை தவிர தேவாரம், திருவாசகம் ஓதுதல்(திருப்பதியம் பாடுதல்), நடனம் ஆடுதல், அம்மனை எழுந்தருளுவிக்கும்போது அம்மனுக்குக் கவரி வீசுதல் ஆகியவற்றை இந்தத் தேவரடியார்கள் செய்தனர். இவர்கள் பதியிலார், தளிச்சேரிப்பெண்டுகள் என்று அழைக்கப்பட்டனர். ஏறக்குறைய எல்லாக்கோயில்களிலுமே தேவரடியார்கள் தொண்டு செய்து வந்தனர் எனத் தெரிகின்றது.

கோயில்களில் நாள்தோறும் ஆறு சந்திப் பூசை வழிபாடு நிகழ்ந்தது.  விழாக்கள் பல கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு மாதத்திலும் மாத விழாக்களும், ஆண்டுக்கொருமுறை பெருவிழாவும் (பிரம்மோத்சவம்) நடைபெற்றன. சிவராத்திரி, சங்கராந்தி, உத்தராயணம், மற்றும் கிரகணங்கள் நிகழ்ந்த நாள்கள் ஆகிய சிறப்பு நாள்களிலும் விழாக்கள் எடுக்கப்பட்டன. மன்னர்கள் பிறந்த நட்சத்திரங்களிலும் விழா எடுக்கப்பட்டது. விழாக்களின்போது தேவரடியார்கள்  சாந்திக்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து ஆகிய கூத்துகள் நிகழ்த்தினர். (கூத்து நிகழ்த்தும் ஆண்களும் இருந்தனர்.) சமய நூல்கள் கோயில்களில் படிக்கப்பட்டன. அரசர்களும் கோயில் விழாக்களை நேரில் கண்டு களித்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

கோயில்கள் இறைவழிபாட்டு இடங்களாக மட்டுமன்றி சமுதாயப்பணிகள் நடைபெற்ற இடங்களாகவும், பொருளாதார மையங்களாகவும் விளங்கின. இன்னலுற்ற மக்களுக்குப் புகலிடங்களாகவும் பயன்பட்டன. வறட்சியிலும், பஞ்சத்திலும் குடிமக்களுக்குக் கோயில்களிடமிருந்து பொருளுதவி கிடைத்தது. பஞ்சம் தீர்ந்தபிறகு கடன் திருப்பித் தரப்பட்டது. கோயில்களில் நந்தா விளக்கு, சந்தியா தீபம் ஆகிய நிவந்தங்களுக்காக விடப்படும் ஆடுகள் (ஒவ்வொரு விளக்குக்கும் தொண்ணூறு ஆடுகள் என்ற கணக்கில்) இடையர்களுக்குத் தரப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களாக அமைந்தன. விளக்குகளுக்கான எண்ணையைக் கோயிலுக்கு வழங்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.

மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றண்டிலேயே காணப்படுகிறது. மக்களில் ஒரு சிலர், கோயில் பணிகளுக்காகத் தம்மையே கோயிலுக்கு அடிமையாக விற்றுக்கொண்டமையும் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகிறது.

கொங்கவிடங்கீசுவரர் கோவில் கல்வெட்டுகள்:

கோயில்களைப்பற்றிய சிறப்புகளையும் செயல்பாடுகளையும் மேலே விளக்கமாக உரைத்ததன் நோக்கம் இச்செயல்பாடுகளில் ஒரு சிலவேனும்  கொங்கவிடங்கீசுவரர் கோயிலிலும் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நம் எண்ணத்தில் பதியவேண்டும் என்பதுதான். ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக எத்துணை ஆயிரம் மக்கள் இக்கோயிலினுள்ளே நடமாடி இறைவனை வழிபட்டிருப்பர். வழிபாடும் விழாவுமாக எத்துணை உயிர்ப்புடன் கோயில் விளங்கியிருக்கும். ஆனால், அந்த உயிர்ப்பு காணாமல் ஒழிந்து போய் கோயில் தற்போது சிதைந்து அதன் சீர்மை இழந்து, கருவறையும் அர்த்தமண்டபமும் மட்டிலுமே இடிந்துவிட்ட கட்டுமானங்களாய் எஞ்சியிருப்பதைக்காண்போர் நெஞ்சம்  கலக்கமுறும். திருச்சுற்று இல்லை; சுற்று மதில் இல்லை; திருச்சுற்றில் எழுந்தருளப்பெற்ற சிறு கோவில்கள் (சன்னதிகள்) இல்லை. வெற்றுப் பாழும் இடிந்த கூரையும் ஆங்காங்கே எறிந்து கிடக்கும் கட்டுமானக் கற்களும் அழிவுக் கோலம் காட்டுகின்றன. கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் என்பார் கூறுவதை நோக்குங்கள்:

“நான் ஒரு பழமைப்பித்தன். அருமையான ஆலயங்களைக் கண்டால் ஆனந்தக் கண்ணீர் விடுவேன். இடிந்த கோயில்களைக் கண்டால் நானும் இடிந்து போய்விடுவேன். பாழடைந்து இடிந்து கிடக்கும் ஆலயங்களுக்குச் சென்று அப்பிரகாரங்களில் சிறிதாவது படுத்துப்புரளுவதில் ஒரு ஆனந்தம்.”

இத்தகைய அழிவின் விளிம்பிலும் கோயிலின் கருவறைச் சுவர்கள் மற்றும் அர்த்தமண்டபச் சுவர்கள் ஆகியன கல்வெட்டுகளின் கருவூலங்களாய்த் திகழ்கின்றன. தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமய வரலாற்றையும், சமுதாய வரலாற்றையும்  அறிய உதவும் மூலப்பொருள்களுள் ஒன்றாய் விளங்குவன கல்வெட்டுகளே. அத்தகு கல்வெட்டுகள் பத்து இங்குள்ளன. முதல் கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து அஞ்சாதகண்ட பிரமாராயன் என்பவர் இக்கோயிலில் சுப்பிரமணியப் பிள்ளையாரை எழுந்தருளிவித்தார் என்னும் செய்தியைக் கூறுகிறது. பிரமாராயன் (பிரமமாராயன் எனவும் கூறப்படுவர்) என்பது அரசு அதிகாரிகளில் மிக உயர்ந்த பதவியைக் குறிக்கும் சொல். படைத்தளபதியாகவும் மந்திரியாகவும் பொறுப்புடையவர். இவர் வடுகக்கொத்து என்னும் படைப்பிரிவில் ஒரு படைத்தளபதியாக இருந்தார் என்று கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் தென்கொங்கு நாட்டில் உடுமலை அருகில் கடத்தூரில் அமைந்துள்ளது; ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது தொண்டை நாடு. முதன்மைச் சோழரின் (தஞ்சைச் சோழரின்) படைத்தளபதி ஒருவர் இக்கோயிலுக்குச் செய்திருக்கிறாரென்றால் கோயிலின் சிறப்பான நிலையை உணரலாம்.



அடுத்த கல்வெட்டு, தாராபுரத்துக் கீரனூர் ஊரைச்சேர்ந்த அரசு அதிகாரிகள் இருவர் கீரனூர் வாகீசுவரமுடையார் சிவன் கோயிலுக்கு நிலம் கொடையாக அளித்ததைக் குறிப்பிடுகிறது. கீரனூர் கோயிலுக்கு அளித்த கொடை கடத்தூர் கோயிலில் காணப்படுவது ஏன் என்னும் கேள்வி எழலாம். கொடையாகக் கொடுத்த நிலம் கடத்தூரில் அமைந்திருந்தது என்பதுதான் செய்தி. கோயிலுக்கு அளித்த நிவந்தங்களை அக்காலத்தே முறையாக ஆவணப்படுத்தியமைக்கு இக்கல்வெட்டும் ஒரு சான்று. கடத்தூர் கொங்கு நாட்டின் ஒரு பிரிவான கரைவழி நாட்டில் அமைந்திருந்தது எனக் கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் கல்வெட்டு, கொங்கவிடங்கீசுவரர் கோயிலுக்கு சந்தியா தீபம் எரிப்பதற்காகக் காசு இரண்டு அச்சு ஒருவர் கொடையாக அளித்ததைக் கூறுகிறது. காசு கோயில் பண்டாரத்தில் ஒடுக்கப்பட்டது. அக்காசினைக்கொண்டு காரைத்தொழு என்னும் ஊரில் நிலம் வாங்கப்பட்டு அந்நிலதின் விளைச்சலில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆண்டு முழுதும் சந்தியா தீபம் எரிக்கப்பட்டது.  கோயிலுக்கென்று தனியே கருவூலம் (பண்டாரம்) இருந்ததைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். அடுத்த கல்வெட்டிலும் இதுபோலவே சந்தியா தீபத்துக்காகக் காசு கொடுக்கப்பட்டு நிலம் வாங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. ஐந்தாவது கல்வெட்டு, சோழமாதேவி ஊரில் நிலம் கொடையாகத் தந்து, கொங்கவிடங்கீசுவரர் கோயிலில் அவிநாசிக்கூத்தரையும் நாச்சியாரையும் எழுந்தருளச்செய்துள்ளனர் என்னும் செய்தியைச் சொல்லுகிறது. கூத்தர் என்பது நடராசரையும், நாச்சியார் என்பது அம்மனையும் குறிப்பதாகும். எனவே, கொங்கவிடங்கர் கோயிலில், கோயில் நடைமுறைகளை நாம் மேலே விவரித்ததற்கிணங்க அம்மன் சன்னதி, முருகன் சன்னதி, நடராசர் சன்னதி ஆகிய சன்னதிகள் எழுப்பப்பட்ட செய்தியினை அறிகிறோம்.

அடுத்து ஆறாம் கல்வெட்டு மிகவும் சிறப்புடைய ஒன்று. மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்துள்ளதை மேலே குறிப்பிட்டோம். அது போன்ற ஒரு நிகழ்வுக்குச் சான்றாக இக்கல்வெட்டு உள்ளது. கி.பி. 1233-ஆம் ஆண்டுக்குரிய இக்கல்வெட்டு, அரசன் வீரராசேந்திரனின் கிரகதோஷம் நீங்க வேணும் என்று அரசனின் அதிகாரிகளுள் ஒருவனான அணுத்திரப்பல்லவரையன் என்பான் இறைவர் அமுதுபடிக்கு அமுதுபடிப்புறமாகக் கண்ணாடிப்புத்தூரில் நிலம் கொடையாக வழங்கினான் என்று தெரிவிக்கிறது. அதனால் அரசன் வீரராசேந்திரனுக்குக் கிரக தோஷம் பிடித்திருந்தது என்பதும் அக்கால மக்கள் சோதிடத்தையும் வான சாத்திரத்தையும் அறிந்திருந்தார்கள் என்பதும் புலப்படும். அடுத்த கல்வெட்டு, ”கோட்டையில் சேனாபதிகளில் அவிமானராமப் பல்லவரையன்” என்பான் விரதம் முடித்த வினாயகப் பிள்ளையாருக்கு அமுதுபடிக்காக அரசனின் சரக்கில் (கருவூலத்தில்) பொன் முதலாக வைக்கிறான். இப்பொன்னுக்கு அரசன் நிலம் ஒதுக்கி இந்த நிலத்துக்கு வரிவிலக்கும் அளிக்கிறான். இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் பிள்ளையார் கோயில் வழிபாட்டுக்குச் செலவிடப்படுகிறது. இந்தக் கல்வெட்டிலும் ஒரு சிறப்பான பகுதி உள்ளது. ”கோட்டையில் தெற்கில் அரசின் கீழ் நம் பேரால் விரதமுடித்த வினாயகப்பிள்ளையாற்கு அமுது படிக்கு”  என்று கல்வெட்டுவரி இருப்பதால் இந்தப்பகுதியில் “கோட்டை” ஒன்று அமைந்திருந்தது என்பது அறியப்படுகிறது. தற்பொழுதும்கூட இவ்வூர் மக்கள் ஊரில் ஒரு பகுதியைக் கோட்டை என்று அழைக்கிறார்கள்.

அடுத்துவரும் ஏழாவது கல்வெட்டு சமுதாய வரலாற்றைச் சொல்லும் சிறப்பான கல்வெட்டாகும். தென்கொங்கில் கம்மாளர்களுக்கு அரசன் வழங்கிய சிறப்புரிமைகளை இக்கல்வெட்டு கூறுகிறது. உழவுத்தொழிலை மேற்கொண்ட வெள்ளாளர்களுக்கும், தொழில் வினைக்கலைஞர்களுக்கும் இடையில் சமுதாய வேறுபாடும் பகைமையும்  கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் காலகட்டத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதாக தொல்லியல் வரலாறு கூறுகிறது. கம்மாளர்கள்  சமுதாயச் சூழ்நிலையில் உரிமைக் குறைபாடுகளைச் (Social disadvantages) சந்தித்தார்கள் எனத்தெரியவருகிறது. உழவருக்கு வேண்டிய தொழிற்கருவிகளைச் செய்து கொடுக்கும் நிலையில் கம்மாளர் இருந்ததால், கம்மாளர் என்போர் உழவர்களின் பணிமகன்களே என்று உழவர் எண்ணித் தம் மேலாதிக்கத்தைக் காட்டியிருக்கவேண்டும் எனலாம். வெள்ளாளர்களுக்கிருந்த உரிமைகள் கம்மாளர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் செருப்பணிந்து வெளியே செல்ல முடியாது. தங்கள் வீடுகளுக்குச் சாந்து (காரை) இட்டுக்கொள்ள இயலாது. தங்கள் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதுவதற்கில்லை. பேரிகை (drums) என்னும் இசைக்கருவி கொட்டுவிக்க முடியாது. தம் வீடுகளுக்கு இரண்டு வாசல்கள் அமைத்துக்கொள்ள முடியாது. இவ்வகையான ஏற்றத் தாழ்வு உரிமைக்குறைகளைக் களைய கம்மாளர்களின் முறையீட்டின்மேல் அரசனுடைய சிறப்பு ஆணையால்தான் முடிந்தது. அத்தகைய சிறப்புரிமைகளைக் கம்மாளர்க்கு அரசன் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

மிகுதியுள்ள இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று, திருமடை வளாகத்தில் இருக்கும் தபசி சுந்தர நன்னெறி காட்டினான் என்பவர் கொங்கவிடங்கர் கோயிலுக்கு நந்தாவிளக்கு ஒன்றுக்காகப் பதினாறு காசு கொடை அளித்துள்ளான் என்றும், மற்றொன்று, கடத்தூரிலிருந்த மன்றாடிகளில் காவன் சோழன் என்பான் இறைவற்கு மகுடம் சாத்தினான் என்றும் கூறுகின்றன. திருமடை வளாகம் என்பது கோயிலைச் சுற்றியிருக்கும் வசிப்பிடத்தையும், மன்றாடி என்பது கால்நடை வளர்ப்போரையும், தபசி என்பது துறவிகளான சிவனடியார்களையும் குறிப்பன.

இவ்வாறு, அரிய வரலாற்றுச் செய்திகளைத் தம்முள் கொண்டிருக்கும் கல்வெட்டுகள் இன்றும் நல்ல நிலையில் சிதைந்து போகாமல் படிக்கும் அளவுக்கு உள்ளன என்பது பெரிய பேறு. ஆனால், அழிவைத் தொட்டுக் கொண்டிருக்கும் கட்டுமானங்கள் சிதைந்து விழத்தொடங்குமானால் அரிய கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கும் கற்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகும் அச்சமான சூழ்நிலை உள்ளது. மீண்டும் கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் அவர்கள் கூறுவதை இங்கே தந்துள்ளேன்:

“ நான் ஒரு கல்வெட்டுப் பித்தன். கல்வெட்டுகளைப் படிக்கும்போதெல்லாம் என்னை மறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் அம்மன்னர்கள் வாழ்ந்த காலத்திற்கே சென்றுவிடுவேன். “

கொங்கவிடங்கீசுவரர் கோவிலும் அதன் கல்வெட்டுகளும் நம்மைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்றாலும் கோவில் அதன் உயிர்ப்பு இன்றிப் பாழ்பட்டு நிற்பதைக் காண்கையில் நாமும் இடிந்து போகாமல் கோயில் அதன் பழைய கட்டுமானத்துக்கு மீட்சி பெற என்ன செய்யலாம் என்பதில் எண்ணம், செயல் இரண்டினாலும் முயலவேண்டும். கோயில்களைப்பேணும்  அரசுத்துறை, தொல்லியல் துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஆவன செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

குறிப்பு : REACH FOUNDATION , சென்னைக்கு (ஆகஸ்டு,2014-இல்) இக்கட்டுரையை அனுப்பிவைத்து, கோயிலுக்குப் புத்துயிர் அளிக்க எதேனும் செய்ய இயலுமா எனக்கேட்டிருக்கிறேன். 


துணை நின்ற நூல்கள் :
◆ கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
◆ தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை.
◆ தமிழக கலைகளும் கல்வெட்டுகளும் – டாக்டர் மா. இராசமாணிக்கனார்.

 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________


 

Thursday, September 17, 2015

வினாயக சதுர்த்தி

--தமிழ்த்தேனீ.


வினாயக சதுர்த்தி என்றாலே என் நினைவுக்கு வருவது, நாம் வினாயக சதுர்த்தி கொண்டாட உதவி செய்யும் வியாபாரிகள் தான்.

ஒரு வியாபாரி களிமண்ணை எடுத்து வந்து கற்கள், வேண்டாத கழிவுகள் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து பிள்ளையார் உருவம் செய்ய அச்சுகள் தயாரித்து அந்தக் களிமண்ணால் பிள்ளையார் சிலைகளைச் செய்து, வாங்குபவர்களின் மனநிலையை நன்கு கவனித்து, அவர்களுக்கு வினாயகரின் உருவம் எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படி பார்த்துப் பார்த்து கவனமாகச் செய்து, குந்து மணியால் கண்களை அமைத்து, ஒரு தெய்வீகக் களையை அந்தப் பிள்ளையாருக்கு அளிப்பதில் கவனம் காட்டி,மிக நேர்த்தியாக வடிவமைத்து, கூடவே நாம் பூஜை செய்வதற்கென்று, அருகம்புல்லையும் தேடி எடுத்து வந்து, தென்னங்குருத்தில் வரும் மெலிதான ஓலையால் வேயப்பட்ட தோரணங்களை செய்து, பிள்ளையாருக்கு வண்ணக் காகிதங்களை வைத்து, சிறு குச்சிகள் மூலம் கொடையும் செய்து, நமக்கு அளிக்கிறார்களே,

அது மட்டுமல்ல வினாயகருக்கு மிகவும் பிடித்தமான எருக்கம் பூ மாலைகளை நூலில் கட்டி, பெரப்பம் பழம், கொய்யாப்பழம்,மஞ்சள் வாழைப்பழம், பேரிக்காய், ஆப்பிள், கரும்பு, போன்றவைகளையும், வாழை இலை, வெற்றிலை, களிப்பாக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள், திருநீறு பொட்டலங்கள், போன்றவற்றையும், இன்னும் நுணுக்கமாக யோசித்து வைணவர்களும் சைவர்களும் வினாயகருக்கு முப்புரிநூல் அளித்து மகிழும் வண்ணம் அந்தச் சிறு சிலைகளுக்கு போடுமாறு சிறியதாக பூணூல், போன்றவற்றைத் தயாரித்து, பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான அவல், பொரி, கடலை, நாட்டுச் சக்கரை, போன்றவைகளையும் கொண்டு வந்து தங்கள் கடைகளில் பரப்பி வைத்து, அவைகளை மிக எளிதாக நமக்கு கிடைக்குமாறு செய்கிறார்களே, அந்த வியாபாரிகளுக்கு நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டும், ஏன் என்று சொல்கிறேன்!

”என்னை நிந்தித்தால் கூட பொறுத்துக்கொள்வேன், ஆனால் என் அடியார்களை நிந்திப்பவர்களை, என் அடியார்களுக்கு நன்றி நினையாதவரை, நான் மன்னிக்க மாட்டேன், என்னால் படைக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்பவர்கள் எனக்கு சேவை செய்பவர்களே, அவர்களை மதியாதவர்களை நானும் மதிக்க மாட்டேன் என்று இறைவனே கூறுவதாக நம் வேதங்கள் கூறுகின்றன”  வியாபார நோக்கம் இருந்தாலும், வியாபார நோக்கிலேதான் அவர்கள் செய்கிறார்கள் என்றாலும், அவர்கள் அவ்விதமாக நமக்கு வேண்டிய பொருட்களைக் கொண்டுவந்து விற்காவிடின், அல்லது ஏதேனும் போக்குவரத்து இடையூறுகளினால் நேரத்துக்கு பொருட்கள் வராமல் போவதன் காரணமாக, சரியான நேரத்துக்கு நாம் பூஜை செய்வதற்கு பொருட்கள் கிடைக்காமல் போகுமேயானால் அப்போது நம் மன நிலமை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் இந்த வியாபாரிகளுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர முடியும்.

நம் வினாயகர் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லும் வண்ணம் வினாயகர் உலகமெங்கும் நிறைந்திருக்கிறார், ஆகவே இந்த வினாயக சதுர்த்தியை ஜாதி மத, மொழி,இனம் வேறுபாடுகளைக் களைந்து, மனம் ஒன்றி வழிபட்டு, நமக்கு உதவி செய்யும் யாவரும் நலமாக, வளமாக ஆனந்தமாக வாழ நாமும் வழிபட்டு, நம்முடைய உறவுகள்,நண்பர்கள், அனைவருடனும் கலந்து நம்முடைய வினாயகரை வழிபட்டு மகிழ்வோம்.

 https://upload.wikimedia.org/wikipedia/commons/c/cb/Anant_Chaturdashi.jpg


ஒவ்வொரு பண்டிகைகளும் நமக்கு ஒரு நல்ல அறிவை போதிக்கட்டும்,ஒற்றுமையை வளர்க்கட்டும், நல்லறிவையும், ஞானத்தையும், அமைதியையும், ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும், சகோதர உணர்வையும் வளர்க்கட்டும். ஒவ்வொரு வினாயகரும் ஒரு போதி மரமே. ஆம், விநாயகர் மிக விரும்பி வசிக்கும் அரசமரம் தான் புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம்.





________________________________________________________

தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com

________________________________________________________


Friday, September 11, 2015

கரிசல்பூமி தந்த கனித்தமிழ்க்கவிஞன்!


--ஷைலஜா.


கார்த்திகைமாதக்கடைசிநாள் ஒன்றில்  கரிசல்பூமி, கவிபூமிக்கு  ஒரு பரிசினைக்கொடுத்தது.   நெல்லைஜில்லா கொள்ளைப்பெருமை கொண்டது!கோவில்பட்டி கொடுத்துவைத்தது.! எட்டயபுரம் ஏற்றம் கொண்டது.

சுப்பையாவின்  திறமையை  சொல்லுவதும் எப்படி ஐயா! முண்டாசுக்கவிஞன் பெருமையை  தண்டோரோ போட்டுத்தானா சொல்லவேண்டும்!  மல்லிகைமணத்திற்கு விளம்பரமா தேவை?  இல்லை இல்லை  .. அவனை நினைக்காத நாள் இல்லை.ஆனால்.நினைவுநாளில் சற்று கூடுதலாய் நினைக்கவைக்கிறது ,அவன் விட்டுச்சென்ற பாக்கள் என்னும் பூக்களின் வாசம்!

கல்வடிவக்கடவுளைபோல் அவன் சொல்வடிவத்தமிழ் சிற்பம் காலத்தால் அழியுமா என்ன!வெறும் தமிழ் வண்ணத்தமிழ் ஆனது அவன் கைவண்ணத்தில்! அணையா ஜோதியாக அவன் அறிவு விளக்கு எரிந்துகொண்டே இருந்ததினால்  அளவில்லா கவிதைகளை அள்ளி வழங்கிவிட்டான்! அவனே மரபுக்கும் புதுமைக்கும் நடுவே நின்ற  நெருப்பு! 

முன்னைப்பழமையும் பின்னைப்புதுமையும் அவன் அடிமுடியைக்காணமுடியாமல் இன்னமும் அலைந்துகொண்டிருக்க ஓர் அதிசியமாக  ஓங்கி நிற்கிறான் சுப்ரமண்யபாரதி! இந்த எட்டயபுரத்து சிவகாசிப்பட்டாசின் கவிதைகள் ஒவ்வொன்றும் கந்தகக்கடுதாசி!

தமிழ் அவனுக்குத்தோழி. நஞ்சுதமிழ்தனை ஒழித்து நல்லதமிழில் அவன் எழுதும்  பாட்டினை ரசிக்க உடன் இருப்பாள் பல நாழி.

முப்பத்தி ஒன்பதுவயதிற்குள்  தன் முழுத்திறமையையும் காட்டிவிட்டு மறைந்த மகாகவிஞனின்  நினைவுதினம் இன்று.

பாரதியின் பன்முக ஆளுமை பலரும் அறிந்ததே ஆயினும் அவனது  பிறந்த ஊர் நேசம் பலபாடல்களில்  பழகிய சொற்களில்  தெறிக்கும்.  பிறந்துவளர்ந்த  ஊரின் மீது பற்று இல்லாதவர்  யார்?

பிறந்த ஊருக்குப்போய்ப்பாருங்கள்அங்கு வீசும் காற்றும் காதோரத்தில் கதைபலபேசும். பாரதியின் நினைவுநாளில் அவனது  பிறந்த மண் வாசம் வீசும்  சிலபாடல்களைப்பார்க்கலாம்.

தமிழகத்தில்  தமிழின் அழகு  ஊருக்கு ஊர்  வித்தியாசப்படும். பாட்டுப்பாடுதல் என்பதை பாட்டு படித்தல் என்பார்கள் நெல்லையில்.

பாரதியும், தனது தீராதவிளையாட்டுப்பிள்ளை  என்ற பாடலில்,

"புல்லாங்குழல்கொண்டுவருவான்
அமுது பொங்கித்ததும்பு நல்
கீதம் படிப்பான்..."
என்று சொல்லி இருப்பார்.

இந்தப்பாடலை தனது முப்பதாவது வயதில் பாடி இருக்கிறார். அதாவது  பிரந்தமண்ணைவிட்டு  வந்தபலகாலம்  கழித்து!  கீதம் பாடுவான் என்றில்லாமல் கீதம் படிப்பான் என்கிறார்.

படித்தல் வாசித்தல் என்ற இரண்டுமே ஒரேபொருளை வழங்குகிறது. குழல் வாசித்தல்  வீணை வாசித்தல் என்கிறோம். இந்த வழக்கம்  இன்னமும் நம்மிடையே இருக்கிறது.

கண்ணன் என் காதலன் பாட்டில்  ஓர் இடம் பார்க்கலாம்,

"கனவுகண்டதிலே  ஒருநாள்
கண்ணுக்குத்தோன்றாமல்
இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டுவிட்டான்"

இதில் இனம்  என்பதற்கு அடையாளம் என்று பொருள். இன்றும் கோவில்பட்டிபகுதிகளில் இந்த  இனம்  எனும் சொல்லாட்சி இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் அடையாளம் என்றே சொல்கிறோம்.

பாரதியின் சந்திரிகையின் கதை  கடைசிப்பக்கத்தில்  இப்படி  எழுதியிருக்கிறார்.

“….இவர் எத்தனைக்கெத்தனை  அவள் உறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத்தொடங்கினாரோ அத்தனைக்கும்அத்தனை இவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். அவளை நாம் காதலிக்கும் யோக்கியதை இல்லாத மனையடிமைப் புகழ்ச்சியாகவும் குழந்தைவளர்க்கும் செவிலியாகவும் நடத்திவந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்துவந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக்கருதி அதனைவேண்டிச்  சருவப்புகுந்தபோது இவள்பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும்  பொறுக்கமுடியவில்லையே…”

சோமநாதய்யர் என்ற கதாபாத்திரம் இவ்வாறு ஆலோசித்ததாக எழுதியிருக்கிறார் பாரதி. இதில்  முதலில்வரும் ஊடாட்டம் என்ற சொல்லைபார்க்கலாம்.

ஊடாட்டம் என்றால்  கலத்தல் அடிகலந்து பழகுதல் என்று அர்த்தம். மலையாளமொழியிலும் இந்த சொல் உண்டு.  ஊடாட்டம் ஊடுதட்டு ஊடு பாய்ச்சல் ஊடு புகுதல் என்ற வெவ்வேறு பொருள்கொண்ட சொற்களும் நெல்லைப்பகுதியில் சகஜம்.

ஊடாடும் எனும் சொல்லை  ஆரண்யகாண்டத்தில் மாரீசன் வதைப்படலத்தில் சூர்ப்பனகை தன்  அண்ணன் இராவணனிடம் பேசும்போது ‘சீதை என்னும் மானைவைத்துக்கொண்டு நீ இன்பம் துய்ப்பாயாக நான் அனுபவிப்பதற்கு ராமனை அடையும்படி செய்’என்று வேண்டுகிறாள்.

"மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த,
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ, உன் வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும்வண்ணம் இராமனைத் தருதி என்பால்"

 ’ஊடாடும்’ என்ற சொல் எத்தனை அழகாக கையாளப்பட்டிருக்கிறது! இந்த சொல் ராமாயணத்தில் கையாளப்பட்டிருப்பதால் அன்றே  தமிழ்நாடெங்கும் வழங்கிவந்த சொல் என்பது தெளிவு ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் நாவில் இந்த சொல் பயின்றுவரப்பார்க்கிறோம்.

அடுத்து சருவுதல் என்ற சொல்லைப்பார்ப்போம்,

இதற்குப்பழகுதல் கொஞ்சிக்குலாவுதல் என்று பொருள். கொஞ்சிப்பழகுவதற்காக நெருங்கிஉறவாடுதல் இன்னும் பொருத்தமாக இருக்கலாம்.

சருவுதல் என்னும் சொல் கோவில்பட்டிப்பகுதியில் தான் அதிகம்புழக்கத்தில் இருக்கிறது போலும்!

மோடி  என்னும் சொல் செருக்கு கம்பீரம் ஆடம்பரம் ஸ்டைல் என்றெல்லாம் பொருள்தருகிறது(பிரதமரை  நினைக்கவேண்டாமே?:) மோடி  அதிகம் கம்பராமாயணத்தில் வரும்!!.....”…நிந்தன் மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளைப்போலே… என்கிறார்  திக்குத்தெரியாத காட்டில்  பாட்டில்!!

ஆத்திரம் என்ற சொல்லை நாம் கோபமென நினைக்கிறோம் அது அசல்பொருள் அல்லவாம்   அவசரம் என்பதே சரியாம். பணம்  மிகுந்திருந்தால் ஆத்திர அவசரத்துக்கு உதவும் என்றபழமொழி உண்டே.  ஆதுரம் எனும் வடசொல்லே ஆத்திரமாம் ஆதுரம் என்றால் அவசரம் என்றே பெயர். கோபம் அவசரம் என்பவைகளுடன் ஆவல் கடமை என்னும் பொருள்களும் கோவில்பட்டிவழக்கில் இந்த சொல்லுக்கு உண்டு.  ‘அவருக்கு உன்னைப்பார்க்கவேண்டுமென ரொம்பவும் ஆத்திரம்’என்றால்  இங்கே ஆத்திரம் ஆவல் ஆகிறது. பாரதி ‘ஆத்திரம்’ என்னும் சொல்லை அழகாகப்பயன்படுத்திய பாடல்களை மறக்கமுடியுமா என்ன!

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி

ஏதுக்கித்தனை மோடிதானோ? பிரபலபாடல் நினைவுக்குவருகிறது இது திரைப்படப்பாடலா என்ன?

இப்படிப்பலப்பல  பிறந்த மண்ணின்  வாசமிகு வார்த்தைகளை பாரதி தன்கவிதைகளில்  அள்ளித்தெளித்திருப்பார்!...

எழுத்துக்களைத்  தீப்பந்தங்களாக  ஏந்தியபாரதி,தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதத்தில் பிறந்ததாலோ என்னவோ இப்படிச்சொன்னான்,

 தீ இனிது !

ஆம் ஐம்பொறிகளும் தீப்பொறிகளாக  வாழ்ந்துகாட்டிவிட்டு வானமேறிவிட்டான் அந்த வரகவி! நமக்கு  இனி வாராகவி!

________________________________________________________

ஷைலஜா
shylaja01@gmail.com
________________________________________________________

 

விழுப்புரத்தில் பாரதியின் மகளார் தங்கம்மாள் பாரதி

--கோ.செங்குட்டுவன்.



“காக்கைச் சிறகினிலே பாரதி – நின்றன்
சிவந்த நிறம் தோன்றுதையே பாரதி!
பார்க்கு மரங்களெல்லாம் பாரதி – நின்றன்
நேர் கொண்ட பார்வை தோன்றுதையே பாரதி!
கேட்கு மொலியிலெல்லாம் பாரதி – நின்றன்
கீத மிசைக்குதடா பாரதி!
தீக்குள் விரலை வைத்தால் பாரதி – நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா பாரதி.”




பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நெருக்கடி, நண்பர்களின் ஆலோசனையின்படி 1908இல் பாண்டிச்சேரி சென்றடைந்தார் பாரதி. அதிலிருந்து விழுப்புரத்துடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.பாரதியின் “பாஞ்சாலி சபதத்”தின் சில பகுதிகள் விழுப்புரம் இரயில் நிலையம் அருகில் இயங்கி வந்த சரஸ்வதி பிரசில் அச்சிடப்பட்டன.

நினைவில் வாழும் பாரதி ஆய்வாளர் திரு.ரா.அ.பத்மநாபன் அவர்களை 19.08.2010 அன்று, சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது இல்லத்தில் நான் சந்தித்தபோது, மேற்காணும் தகவலை அவர் உறுதி செய்தார்.

1917இல் பாரதியார் தன் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்புகைப்படத்தை எடுத்தக் கலைஞர் சி.கிருஷ்ண ராஜு. இவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.

சுதேசிப் பத்திரிகைகள் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால், பாரதியின் இந்தியா மற்றும் சூரியோதயம், விஜயா உள்ளிட்டப் பத்திரிகைகள், பிரெஞ்சுப் பகுதியானப் பாண்டிச்சேரியில் இருந்து இரகசியமாக சென்னை மாகாணத்துக்குள் கொண்டு வரப்பட்டன. பாண்டிச்சேரியில் இருந்து இரகசியமாக இந்த இதழ்கள் சங்கர நாராயணன் (கடையநல்லூர்), நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோரால் இரயில் மூலம் விழுப்புரம் கொண்டு வரப்பட்டன. விழுப்புரம் வந்ததும் இருவரும் விடுதி ஒன்றில் தங்குவார்கள். பின்னர் உள்நாட்டு தபால் கவர்களில் போடப்பட்டு, சுதேசி அன்பர்களுக்கு அஞ்சல் செய்யப்பட்டது. இந்நிகழ்வு 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 1911ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை தொடர்ந்தது.


பாரதி மறைவுக்குப் பின்னும் அவரதுக் குடும்பத்தினரின் தொடர்பு விழுப்புரம் மண்ணுடன் தொடர்ந்தது. 10.09.1952இல் விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலையில் பாரதி விழா நடந்தது. இதன் சிறப்பு அழைப்பாளர், பாரதியின் மகளார் தங்கம்மாள் பாரதி.

இவ்விழாவில், சிவாஜி பத்திரிகையின் ஆசிரியர் திருலோகம் சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த இடத்தில் நினைவில் வாழும் ரா.அ.பத்பநாபன் (ஆர்.ஏ.பி.) அவர்கள் குறித்துச் சொல்ல வேண்டும்.விழுப்புரம் இரயில் நிலையத்தையொட்டியுள்ள பஜனைக் கோயில் தெருவில் இவர் வசித்து வந்த வீடு, உலகம் முழுவதும் இருக்கும் பாரதி அன்பர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு பெரும் புதையலாக இருந்தது.பாரதி தொடர்பான அரிய சேகரிப்புகள் ஆர்.ஏ.பி. அவர்களின் ஈடுபாட்டினாலும் கடும் உழைப்பினாலும் இங்கு இடம்பெற்றிருந்தன.


பாரதி நினைவுநாளில் இவரது நினைவையும் போற்றுவோம்.


________________________________________________________
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________

Tuesday, September 8, 2015

வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி!

– இன்னம்பூரான்.



‘வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி…!’
-பளிக்கறை புக்க காதை: 112-121: மணிமேகலை



மணிமேகலை காப்பியத்தில் ‘செயல் திறனுடையவனே! கேட்பாயாக’ என்று விளித்த சொற்றொடரே, நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை உணர்த்த, பொருத்தமான தலைப்பு. அசகாய சூரர்கள் நமது மக்கள், துயில் கலைந்துவிட்டால்!

அன்றாட வாழ்க்கையில் நாம் தூய்மையுடன் இயங்கினால் நோய்கள் பல அணுகா. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பற்பல கிருமிகளை அண்ட விடாது. கை கால் கழுவுவதின் முக்கியத்துவத்தை செம்மல்வைஸ் 1847 லேயே நிறுவி விட்டார். இல்லம் தோறும் தங்கு தடையில்லாமல் கொழிக்கும் குப்பையையும், கூளத்தையும் அகற்றி சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. மகட்பேறு காலத்து கவனிப்பு, மழலைகளுக்கு தடுப்பூசி, வளரும் பருவத்திலிருந்து உடற்பயிற்சி, உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் கவனம், நடை, உடை, பாவனைகளில் பண்பு, லாகிரி விலக்கு, பாவேந்தரின் ‘குடும்ப விளக்கு’ இல்லறம், முதியோர் சேவை ஆகியவற்றை கற்றுத்தரக்கூடிய விழிப்புணர்ச்சி, ‘வரப்புயர…குடி உயர்வது’ போல, வாழ்க்கைப் பயணத்தின் தரமுயர்த்தும். பட்டி, தொட்டி தோறும், மக்களை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். விழிப்புணர்ச்சி, திருமூலர் ‘உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்’ என்று அருளிய ஆலயத்தின், அடித்தளம்.

சுகாதாரத்தை பள்ளிகளில் ஆசிரியர்கள் அனுபவக்கூறாக, சுயநடத்தை மூலம், படிப்படியாக பயிற்சியுடன் கற்றுக்கொடுக்கவேண்டும். காந்தீயத்தின் அடிப்படையில் கழிவறை சுத்தம் செய்வது முதல் உறுப்பு தானம் வரை கற்பிக்கப்படவேண்டும். விடலைப்பருவம் வருமுன் மென்மையான பாலியல் பாதுகாப்புப்பாடங்களை பெற்றோர் உதவியுடன் அளிப்பது போன்ற ‘வருமுன் காப்போன்’ செயல்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். அறியாமையினாலும், அசட்டையினாலும், புற்று நோய், நீரழிவு, இதய பாதிப்புகள், இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மக்கள் மிகவும் தாமதித்து வருவதால், உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. பசுமரத்தாணி போல் மனதில் படியும் முறையில், எச்சரிக்கைகளை சித்தரித்து விளக்குவது எளிது. சான்றாக,எதிராஜ் கல்லூரியும் மதராஸ் மருத்துவ கல்லூரியும் இணைந்து, காய்ச்சிய எண்ணையில் திரும்பத்திரும்ப சமைப்பதின் அபாயத்தை நிரூபித்துள்ளன. உள்ளூர் ஆர்வலர்கள் மூலம் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து, ஆலோசனை வழங்கி, சிறுநீரகம் திறன் இழப்பத்தை தடுத்தாட் கொள்ளமுடியும் என்பதை சென்னைக்கு அருகே நிரூபித்ததை, ‘நேச்சர்’ என்ற பிரபல மருத்துவ இதழ் பாராட்டியிருக்கிறது. உடனடியாக, திறந்த மனதுடன், இத்தகைய பணிகளுக்கு அரசும் வடம் பிடித்தால், கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்; செலவு கணிசமாகக் குறையும். மக்களே நோயற்ற வாழ்வை அமைத்துக்கொள்வார்கள். வருங்கால சந்ததிகள் நீடூழி வாழ்வார்கள். மருத்துவ படிப்பில் சமுதாய நலன் பொருட்டு இயங்கும் ‘வருமுன் காப்போன்’ துறை மேலும் பிரகாசப்படுத்தப்படவேண்டும்.

சித்தம், யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் குறை காணத் தேவையில்லை. அவற்றின் மேன்மையை ஆய்வு மூலம் கண்டறிவது, அரசின் கடமை. எனினும்,பாமரர்களுக்கு உகந்த நிவாரணம் பற்றியும், போலி வைத்தியர்களை தவிர்க்கவும் ஆலோசனை தரும் மையங்கள் பெருகவேண்டும். உதாரணமாக, நீரழிவு நோய்க்கு பூரண நிவாரணம் எந்த முறையிலும் கிடையாது. ஆராய்ச்சி மூலம் அலோபதி அந்த வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. புற்று நோய் தீவிரமானது; உயிர் கொல்லி. இன்றே அறுவை சிகிச்சை அவசரம் என்ற நிலையில் மற்ற முறைகள் உதவா. தற்காலம், இந்த சிக்கல்களை அவிழ்க்க முடியாமல் பாமரன் திண்டாடுகிறான்; இறந்தும் போகிறான், சொத்துப்பத்துக்களை இழந்தபின். பணம் பறிக்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் பெருகி விட்டன. வைத்தியம் சம்பந்தமான காப்புரிமை திட்டங்களை தணிக்கை செய்யும் அளவுக்கு மக்கள் மன்றங்கள் உருவாக வேண்டும்.

அறுவை சிகிச்சைகள் மிகவும் முன்னேறிவிட்டன. வயறு அதிசயங்கள் நிறைந்த ஆலயம் என்றொரு மருத்துவ பழமொழி. தற்காலம், செரிமான வியாதிகள் பொருட்டு இயங்கும் அறுவை சிகிச்சைத்துறை அவற்றை விட அதிசய நிவாரணங்கள் தருகிறது. மற்ற அவயவங்கள் பொருட்டும் அத்தகைய முன்னேற்றம் காண்கிறோம். அரசு நடத்தும் ஆஸ்பத்திரிகளில் ஏழைபாழைகளுக்கு இலவசமாகவே நிவாரணம் கிடைக்கிறது. கடினமான, சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சைகள் அன்றாடம், வாகை சூடி, நிறைவேறுகின்றன. இவற்றை பன்மடங்கு பெருக்குவதும், நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் இவை எளிதில் கிடைப்பதும் அவசரத்தேவை. மக்கள் முடிந்தவரை நற்பெயர் பெற்ற அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வது சாலத்தகும்.தொலைநோக்கில் பார்த்தால், இது தான் சிக்கனம், மக்கள் சேவை, மருத்துவ சாத்திரத்தின் இலக்கு.

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் மருத்துவத்தின் தேவை ஏறி வருகிறது. பெற்றெடுத்த செல்வங்களும், சமுதாயமும், அரசும், முதியோர்களுக்காக, இணைந்து பயணிப்பது உசிதம். கவனத்துடன் செயல் பட்டால், குறைந்த செலவில் அதிக பயன் காண முடியும். உளவியல் இங்கு கை கொடுக்கும். அன்பு அருமருந்தாக நிவாரணம் தரும்.

இறந்தவர்களின் உறுப்புக்கள் மற்றவர்கள் உடலில் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு இறவாவரம். தமிழகத்தில் நடக்கும் உறுப்பு தானம் பற்றிய அதிசய செய்திகளே விழிப்புணர்ச்சியின் அடித்தளம். முடிவாக கூறப்போனால், உறுப்புகளுக்கு ஒரு மறுவாழ்வு திண்ணம். அதைப்பற்றி இடை விடாத பிரசாரமும், சட்டத்திருத்தங்களும் தேவை.

நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை விளக்க ஒரு நூலே தேவை. எனவே, இந்த கட்டுரை ரத்னசுருக்கமான ஒரு அறிமுகமே. [497]

ஆசிரியர் குறிப்பு:
சென்னை மாநகரத்தின் பழம்பெருமை வாய்ந்த மருத்துவ மையம்: General Hospital,Madras & Madras Medical College. நானூறு வருடங்களுக்கு மேலான பாரம்பரியம். அங்குள்ள செரிமான வியாதிகளுக்கு அறுவை மூலம் தீர்வு காணும் துறை சுதந்திரதினம் பொருட்டு, மக்களிடையே குறுகிய காலகட்டத்துக்குள் ஒரு கட்டுரை போட்டி (500 சொற்களுக்குள்) நடத்துவதாகவும், ஜூலை 31, 2015 கெடு என்றும் அறிவித்தார்கள். நான் அறிவிப்பு வந்த அன்றே கட்டுரையை அனுப்பிவிட்டு, ஆகஸ்ட் 2 அன்று வெளியூர் சென்று விட்டேன். இதை மறந்தும் விட்டேன். ஆகஸ்ட் 14 மாலை ஒரு குறும் தகவல். உங்கள் கட்டுரைக்கான மெடலை நாளை வந்து பெற்றுக்கொள்ளவும். உம்மை சிறப்பிப்போம். [‘எல்லாரும் காத்திருப்பார்கள், உடனே வர’ என்று நினைத்திருப்பார்கள் போல!] நான் போக இயலவில்லை. என் தம்பி மூலமாக கொடுத்து அனுப்பினார்கள்.




இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com



________________________________________________________
இன்னம்பூரான்
Innamburan S.Soundararajan
innamburan@gmail.com

________________________________________________________