Thursday, April 17, 2014

லால்குடி அருகே புத்தர்!

சுமார் 20-22 வருடங்களுக்கு முன்பு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளி வந்த புத்தர் சிலை பற்றிய ஒரு செய்தியை இங்கு பங்கிடுவதில் மகிழ்ச்சி. திருச்சி சிதம்பரம் நெடும் சாலையில் லால்குடி அருகே உள்ள இந்த சிலையை தொல்லியல் துறை தன வசம் எடுக்க முயன்ற பொது அங்குள்ள கிராம மக்கள் தங்களுக்கு எதாவது இன்னல் நேரும் என எண்ணி அம்முயற்சியை தடுத்து விட்டனர். மேலும் ஒரு நாள் ஒரு விவசாயின் கனவில் சிலை அருகே உள்ள தன நிலத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த விளைச்சல்களை திருடர்கள் அறுத்து கொண்டு இருப்பதாக கனவு கண்ட உடன் திடுக்கிட்டு ஆட்களுடன் அங்கு சென்ற போது உண்மையிலேயே திருடர்கள் அவ்வாறு செய்வது கண்டு விரட்டி அடித்துள்ளனர். தனக்கு புத்தரே உதவி செய்ததாக நினைத்த நில உரிமையாளர் கோயில் கட்ட நினைத்து கற்களை மாட்டு வண்டியில் சுமந்து வந்த போது வண்டியின் அச்சு முறிந்து கவிழ்த்தது. புத்தர் தனக்கு வேலி போடுவதை விரும்ப வில்லை என அறிந்து அப்படியே பஞ்ச பூதங்களுக்கு உட்பட்ட இயற்கை நிலையிலேயே விட்டு விட்டு வழி படுகின்றனர்! Lord Buddha Never wanted to be trapped inside. He is open to all. FOLLOWING IS THE NEWS ITEM THAT APPEARED nearly 22 years AGO IN THE INDIAN EXPRESS Tamil Nadu Edition The contents of the news item I give hereunder, under the caption 'GUARDIAN OF THE FIELDS'
"The Stone Buddha sits calmly on the border of a farm near the road about four km from Lalgudi on the Tiruchi- Chidambaram highway near here. To the Passerby, it looks like any old statue found in ruined temples. But to the locals, the statue, said to be over a thousand years old, is more than that. It is their guardian diety. Some years ago, the owner of the land on which the statue sits, had it carried to the roadside, so that farming in his land would not be hampered But that year, the crops in the entire area failed. The villagers believed that this was a curse for shifting the statue, and made haste to shift it back to its original position. People from the Archaeological Department, and the then District Collector wanted to take the statue to the Tiruchi, but the villagers resisted their efforts fearing serious repercussions. A few years ago, the statue gave evidence of its godly powers. The owner of the land dreamt one night that thieves were harvesting the cumbu crop in his fields. He woke up with a start, collected some villages, and rushed to his fields. When the group got there, there were indeed thieves harvesting the crop! The villages decided to construct the temple for the statue, some time back. Accordingly, they put up a big platform. Carved pillars were brought to the spot in a new bullock cart built for the purpose. But, when it reached the venue, the cart collapsed and fell into pieces. The villagers thought this was the Lord’s way of showing that He did not want the trappings of a temple. So they let the statue be. And so He sits there, braving the elements, guarding the crops."




தகவல்கள் உதவி:  திரு ராம் சந்திரசேகரன்

Monday, April 14, 2014

ஆறகழூர்-தியாகனூர் புத்தர் பற்றி சில தகவல்கள்







அமைவிடம்
தியாகனூர் கிராமம் (ஆத்தூர் அருகில்), தலைவாசல் தாலுக்க, சேலம் மாவட்டம்.

தியாகனூரில் இரு புத்தர் சிலைகள் உள்ளது.
01. தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலை (மேலே குறிப்பிட்டுள்ள சிலை)
02. திறந்த வெளியில் உள்ள புத்தர் சிலை

தியாகனூர் பெயர் காரணம்
இப்புத்தரை தியாகன் என்றே அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குறிப்பிட்டு வந்தனர். அதற்கு காரணம் புத்தர் பெருமானின் துறவு வாழ்க்கை. ஞானம் பெறுவதற்காக தம்முடைய மனைவி, மக்கள், உறவினர்கள், அரச வாழ்க்கை ஆகிய அனைத்தையும் தியாகம் செய்ததால் தியாகன் என அழைக்கப்பட்டார். எனவே இவ்வூர் தியாகன் + ஊர் = தியகனூர் எனப் பெயர் பெற்றது.

உட்பொதிக்கும் படங்கள் 1


01. தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலை

சிலையமைப்பு
கை - சிந்தனை கை
கால் - அரை தாமரை அமர்வு
ஞான முடி தீப்பிழம்பாக இல்லாமல் ஞான முடி சற்று புடைப்புடன் இருக்கிறது
தலைமுடி - சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள் -மூன்று
உயரம் 8 அடி
அகலம் 4 ½ அடி
நூற்றாண்டு 5 ஆம் நூற்றாண்டு




இச்சிலையின் மூக்கு மற்றும் வலது கையில் உள்ள பெருவிரல் சிதைவுற்று காணப்படுகிறது. இப்புத்தர் சிலை புகைபடத்தை தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி தமிழும் பௌத்தமும் என்ற நூலில் குறிபிட்டுள்ளார். பக்கம் 325

இச்சிலை கோவிலில் உள்ளது. இக்கோயிலின் முன் பெரிய அரசமரம் உள்ளது. இக்கோவில் 100 வருடத்திற்கு முன்பாக அவ்வூர் மக்களால் கட்டப்பட்டது. இது 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது. கோயிலின் மேலுள்ள கோபுரத்தில் நான்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
தெற்கு : கண்ணனின் உருவம்
மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
வடக்கு :கிருஷ்ண அவதாரம்

புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது

02. திறந்த வெளியில் உள்ள சிலை
தியாகனூரின் தென்பகுதியில் உள்ள வயல்பகுதியில் உள்ள வேப்பமரத்தடியில் ஒரு புத்தர் சிலை உள்ளது.

சிலையமைப்பு
கை - சிந்தனை கை
கால் - அரை தாமரை அமர்வு
ஞான முடி தீப்பிழம்பாக
தலைமுடி சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள் மூன்று
பீடத்தின் உயரம் மிக சிறியது
உயரம் 5 அடி
அகலம் 3 அடி
நூற்றாண்டு 5 ஆம் நூற்றாண்டு
~*~மூக்கு சிதைந்து காணப்படுகிறது


நிலத்த்தின் உரிமையாளர் இச்சிலையை பாதிக்காத வண்ணம், இச்சிலையை சுற்றி உள்ள நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்து இருக்கின்றார். விவசாயி கே துரைசாமி புத்த விகார் அமைக்க 1955 இல் 20 சென்ட் நிலம் தனமாக வழங்கினார்.



பெங்களூரில் உள்ள பௌத்த பிக்குகள் இக்கிராம மக்களுக்கு முறையான வழிமுறையை பயிற்சி அளிக்க விரும்பினர். இதற்கு ஆகும் செலவினங்கள் அனைத்தும் அவர்கள் ஏற்பதாக உறுதியளித்தும் மக்கள் விருப்பம் இல்லாததால் தமக்கு தெரிந்த முறையில் இன்றும் வணங்கி வருகின்றனர்.


பல நூற்றாண்டுகளாக திறந்த வெளியில் இருந்த இச்சிலைக்கு 50 இலட்சம் ரூபாயில் ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இத்தியான மண்டபத்தை சேலம் மாவட்ட ஆட்சியாளர் மகரபூஷணம் போதி கன்று ஒன்றை நட்டு 28 ஜூன் 2013ல் திறந்து வைத்தார்.100 பேர் அமரும் அளவிற்கு இத்தியான மண்டபம் உள்ளது. - தினமலர் நாளிதழ் 28/06/2013

தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலைக்கான காணொளி
http://www.youtube.com/watch?v=MsJXY8D7uEY&list=UUppaK1uqALtjRqhta8L0EKw
http://www.youtube.com/watch?v=-Hba3p2Pd_c&list=UUppaK1uqALtjRqhta8L0EKw

தியாகனூர் திறந்த வெளியில் இருந்த புத்தர் சிலைக்கான காணொளி
http://www.youtube.com/watch?v=ovn2BfjBq_8&list=UUppaK1uqALtjRqhta8L0EKw
http://www.youtube.com/watch?v=t9ctlkVo8Xk
தகவல் பெற்ற இணைய பக்கம்
http://elambodhi.blogspot.


தகவல்கள் அளித்தவர் ஆறகழூர் திரு பொன்.வெங்கடேசன் அவர்கள்

2014 சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இச்சித்திரை நாளின் சிறப்பு வெளியீடுகளாக நமது சேகரத்தில் இணையும் ஆவணங்களை அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன்.

1. கர்னல் காலின் மெக்கன்சி பற்றிய ஒரு விழியப் பதிவும் அவரது ஆவணச் சேகரிப்புக்கள் தமிழகத்தில் பாதுகாக்கப்படும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பற்றிய ஒரு விழியப் பதிவு காலையில் வெளியிடப்பட்டது. இதனை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு - கர்னல் காலின் மெக்கன்சி என்ற தலைப்பிலான பதிவில் காணலாம்.


2. தமிழ் மரபு நூலகம்  தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பிரத்தியேக வலைப்பூ தமிழ் நூல்கள், தமிழ் இலக்கியச் சேகரிப்புக்கள் ஆகியவற்றிற்கு இணையத்தில் கிடைக்கும் தகவல் சேகரிப்புக் களஞ்சியம் என்ற வகையில் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் முழு பொறுப்பையும் ஏற்று நடத்தும் முனைவர்.தேமொழியும் திருமதி கீதா சாம்பசிவமும்  இதுவரை குறிப்பிடத்தக்க பதிவுகளை இணைத்துள்ளனர். இதனைhttp://thfreferencelibrary.blogspot.com/ என்ற சுட்டியில் காணலாம். நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களின் தகவல்கள், நூல்கள் பற்றிய செய்திகள் ஆகியவை இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இதுமட்டுமன்று இணைய நூல்கள் இதுவரை இப்பதிவில் இடம்பெற்றிருப்பனவற்றில் சில..

  • திரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • தாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • டாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.சக்திதாசன் சுப்பிரமணியன் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • புலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • குன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • புலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • காழிசிவகண்ணுசாமிபிள்ளை அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு விந்தன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • காசி ஆனந்தன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு சா.விஸ்வநாதனின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கவிஞர் வெள்ளியங்காட்டன் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு ஏ.கே.வேலன் அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பேராசிரியர் வெள்ளை வாரணனாரின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கி.வா.ஜகந்நாதனின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பரிதிமாற்கலைஞரின் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • எஸ்.எம்.கமால் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • ஜலகண்டபுரம் ப.கண்ணன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • உடுமலை நாராயண கவி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.இராய சொக்கலிங்கம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • அவ்வை தி.க.சண்முகம்  அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பண்டிதர் க.அயோத்திதாசர் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • "கல்கி" யின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்
இந்த வலைப்பூவை இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டில் வெளியிடுவதில் மகிழ்கின்றோம்.


3. ஓலைச்சுவடி வெளியீடு - திருக்குறள். - சுவடி வெளியீடு.
இதனைக் காண THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் - ஓலைச்சுவடி* என்ற தலைப்பில் அமைந்த இழையைக் காணலாம்.

இந்தச் சிறப்பு வெளியீடுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இவ்வாண்டு சித்திரை வருடப் பிறப்பின் சிறப்பு அம்சங்களாக நமது சேகரத்தில் இணைகின்றன. 


வாசித்து மகிழுங்கள்!!

​அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Tuesday, December 31, 2013

ஜபம் - பார்வதி ராமச்சந்திரன்


கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியில், மன அமைதி என்பது பலருக்கும் கிட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்தப் புனித பாரத மண்ணில் தோன்றிய ஞானியரும், யோகியரும், மஹான்களும், மன அமைதி, நிம்மதி மட்டுமல்லாது, இறைவனின் சந்நிதியையும் சாயுஜ்யத்தையும் அருளும் மிக எளிமையானதொரு வழியை, நமக்குக் காட்டிச் சென்றுள்ளனர். அற்புதமான மார்க்கம் அது. 'ஜபம்' என்ற இந்த ஒற்றை வார்த்தையின் பொருளை முழுமையாகப் புரிந்து கொண்டு, பயன்படுத்துபவர் நிச்சயம் பேறு பெற்றவர்களே!! இது சாமானியர்களும் மனிதப் பிறவியின் பயனை அடைவதற்காக அருளப்பட்ட உன்னத சாதனம்.

பொதுவாகவே ஒலி வடிவங்கள் ஒருவரது மனதிலும் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திறனுடையவை. நேர்மறை மற்றும் எதிர்மறையான  சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று. இசையின் மகத்துவம் அறியாதவர் யார்?. இறை நாமம் அல்லது மந்திரம் சொல்வது, நம் உடலில் நேர்மறையான விளைவுகளைத் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

ஜபம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சின்ன விளக்கம். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை அல்லது  மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்வதே ஜபம்.
 மனதுக்குள் இதைச் செய்வது மானசீக ஜபம் என்றும், தனக்கு மட்டுமே கேட்கும்படி மிக மெதுவாக இதைச் செய்வது 'உபாம்சு' என்றும் பிறருக்குக் கேட்கும்படியான ஜபம், 'உச்சாடனம்' என்றும் கூறப்படுகிறது. லிகித ஜபம் என்பது, நம் இஷ்டதெய்வத்தின் திருநாமத்தை எழுத்தால் எழுதுவது. எழுதும் போது, மௌனம் அனுசரிப்பதும், முழு மன ஈடுபாட்டுடன் செய்வதும் மிக முக்கியம்.

இதில் இறைவனின் திருநாமத்தைச் சொல்வது 'நாம ஜபம்'. குறிப்பாக, ஒரு தெய்வத்துக்கு உரிய மந்திரத்தை, முறையாக, குருவிடம் இருந்து உபதேசம் பெற்று, அவர் காட்டிய வழியில் ஜபிப்பது 'மந்திர ஜபம்'. நாம ஜபத்திற்கு கட்டாயமான நியமங்கள் அவசியமில்லை.   ஆனால், மந்திர ஜபத்திற்கென்று நியமங்கள் உண்டு.

ஜபமானது, யோகத்தில் ஓர் அங்கமாதலால் ஜபயோகம் என்றே அழைக்கப்படுகின்றது. மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், 'ஜபயக்ஞம்' என்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, 'யக்ஞங்களில் நான்  ஜப யக்ஞமாக இருக்கிறேன்'  (யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ) என்று அருளுகிறார்.
சுவாமி சிவானந்தர், 'பகவானையும், பக்தனையும் இணைக்கும் பாலமே ஜபம்' என்கிறார்.

ஜபம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை விவரித்துச் சொல்ல ஒரு ஆயுள் போதாது!!!.  மனம் ஒருமுகப்படுதல் என்பது ஒவ்வொரு செயலின் வெற்றிக்கும் இன்றியமையாதது. அதுவும் ஆன்மீகப் பாதையில் செல்ல விழைவோருக்கு மனமே மூலதனம். ஸ்ரீசாரதா தேவியார், 'ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு, ஒருவரது மனமே அவருக்கு அருள் புரிவதாக இருக்க வேண்டும்' என்று அருளுகிறார். தியானம், தவம், யோகம் அனைத்தும், தூய மனம் வாய்த்தோருக்கு மட்டுமே தனக்கான பாதைகளைத் திறந்து விடுகின்றன. மனம் தூய்மைப்படுவதற்கு, ஒருமைப்பட்ட மனதோடு ஜபம் செய்வது அவசியம்.
தியானம், முதலில் ஜபத்தோடு கூடியதாகச் செய்யப்படுகின்றது. அதன் பின், மெல்ல மெல்ல ஜபம் தானே நின்று, தியான நிலை, நிலைபெறுகிறது.
ஆன்மீக வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வுக்குப் புறம்பானதன்று. தீவிரமான ஒரு எண்ணமோ சிந்தனையோ மனதில் எழுமாயின், மனம் திரும்பத் திரும்ப அதிலேயே அலைபாயாது நிலைபெற்றிருக்கும். அதைப் போல, இயல்பாகவே அலைபாயும் மனது, இறைநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதால்,   மெல்ல மெல்ல அடங்கி, ஒரு புள்ளியில் ஒடுங்குகிறது. மனதில் தோன்றும் எண்ணங்கள், செயல்கள் அனைத்தையும் மனம் உற்று நோக்கத் துவங்குகிறது. இதன் காரணமாக, எண்ணங்கள், செயல்பாடுகள் இவற்றில் ஒரு ஒழுங்குமுறை செயல்படுத்தப்படுகின்றது. அநாவசியமான எண்ணங்களோ, செயல்பாடுகளோ நிகழ்வதில்லை. சாந்தமான, தூய மனமானது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் நேர்மறை சக்தியை வியாபிக்கச் செய்கிறது. இதன்  மிக உச்ச நிலையில், 'தன்னையறிதல்' மிக இயல்பாக நிகழ்கிறது.
தொடர்ந்த ஜபம், ஒருவர், தமது உலகக் கடமைகளை, எவ்விதப் பற்றுதலுமின்றி, அமைதியான முறையில் நிறைவேற்ற நிச்சயம் உதவுகிறது.
நெருப்புக்கு எப்படி தன்னைச் சார்ந்தவற்றை எரிக்கும் தன்மை இருக்கிறதோ அப்படியே இறை திருநாமங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதலுக்கும் ஒருவரது பாவங்களை, கர்ம வினைகளை பஸ்மமாக்கும் தன்மை இருக்கிறது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், " தெரிந்தோ, தெரியாமலோ, தன்னறிவுடனோ, அறிவில்லாமலேயோ எந்த ஸ்திதியிலாகட்டும், ஒருவன் பகவந்நாமத்தை சொல்வானானால் அவனுக்கு அதன் பலன் கிட்டும். தானாகவே விரும்பி ஆற்றுக்குப் போய்க் குளிப்பவனுக்கும், வேறொருவனால் ஆற்றில் தள்ளப்படுபவனுக்கும் அல்லது தூங்கும்போது வேறொருவன் கொட்டிய தண்ணீரில் நனைபவனுக்கும் ஸ்நான பலன் ஒருங்கே ஏற்படுகிறது அல்லவா?" என்று நாம ஜபத்தின் மகிமையைச் சொல்கிறார்.
ஜபம் செய்வோர், அது நாம ஜபமாயினும் சரி,மந்திர ஜபமாயினும் சரி, தமக்கு மட்டுமல்லாது பிரபஞ்சத்துக்கே நன்மை செய்பவர்களாகிறார்கள். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், 'பணம் இருப்பவர், பணத்தின் மூலம் சேவை செய்யட்டும், இல்லாதவர், ஜப தவங்களின் மூலம் சேவை செய்யட்டும்' என்று அருளியிருக்கிறார்.   ஒருவர் தொடர்ந்து ஜபம் செய்யும் போது, அந்த ஜபமானது, மிக அற்புதமான அதிர்வலைகளை அவரிடத்திலிருந்து வெளிப்படச்செய்து, அவரைச் சுற்றிலும் தெய்வீகமான, அவரைக் காண்பவருக்கு அமைதியை ஏற்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குகிறது.
ஸ்ரீமத் பாகவதம் கூறும் அஜாமிள சரிதமும், இறைநாமம் சொல்லுதலின் மகிமையையே பேசுகிறது. இறக்கும் தருவாயில், தன் குழந்தையின் பெயரை, 'நாராயணா' என்று உச்சரித்தவாறே இறந்ததால், அஜாமிளனுக்கு அவன் கர்மவினைகளிலிருந்து விடுதலை கிடைத்தது. ஒரு  முறை , இறைநாமத்தை உச்சரித்ததற்கே இத்தகைய பலன் என்றால், ஜபத்தின் மகிமையை நாம் தெளிவாக அறியலாம்.
'மரா, மரா' என்று உச்சரிக்க ஆரம்பித்த வேடன், வால்மீகி முனிவரானது  இறைநாமத்தின் மகிமையை விளக்கும்  ஒரு உதாரணம்!!..
காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியாரின் திவ்ய சரிதம், ஜபத்தின் மகிமையை விளக்கும் ஒரு நிகழ்வை எடுத்துக் காட்டுகிறது. மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மனின் ஆலயம் பெரும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த போதிலும், ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மஹா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்த்த மேருவுடன் கூடியதாக இருந்த போதிலும், அங்கு, அந்த நற்பலன்களை அடைய வருவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகராகிய மறைதிரு. ஏகாம்பர சிவாச்சாரியார், ஸ்ரீமஹாபெரியவரின் ஆலோசனைப்படி, ஆலயத்தினுள் தீவிரமான ஜப யோக சாதனையில் ஈடுபடலானார். இன்று ஸ்ரீமாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம், கோடிக்கணக்கான பக்தர்களால்  கொண்டாடப்படும்  தலமாகத் திகழ்கிறது. இந்த நிகழ்வு, ஆசுகவி வேலனாரின், 'மாங்காடு காமாட்சி மகிமை' நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறைநாமத்தைச் சொல்வது மட்டுமல்ல, யாரேனும் சொல்வதைக் கேட்பதாலேயே ஒருவர் தமது கர்மவினைகளிலிருந்து விடுபடுகிறார். இதை விளக்கும் ஒரு கதை பிருஹதாரணிய புராணத்திலிருந்து..
பிங்களா என்னும் பெண், முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்தாள். ஒரு நாள், ஒரு திருடன், தான் திருடிய ஒரு கிளியை அவளுக்குப் பரிசளித்தான். அந்தக் கிளி, ஒரு பக்தரின் வீட்டில் வளர்ந்து வந்த கிளி. அது,'ராம ராம' என்று சொல்லப் பழகியிருந்தது. இடைவிடாது, தன் ராம நாம ஜபத்தால் அந்த இல்லத்தையும் பிங்களையையும் புனிதப்படுத்தியது அந்தக் கிளி. இறைநாமத்தின் மகிமையை அறியாதவளாயினும், தன்னை அறியாமல், தன் பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தாள் பிங்களை.
 “எல்லாம் சரி!!!... நாம ஜபத்தின் மகிமை அளப்பரியது. மனதைத் தூய்மைப்படுத்தி, கர்ம வினைத் தளைகளிலிருந்து விடுபட உதவுகிறது. அமைதியான முறையில் நம் கடமைகளைச் செய்தவாறே, இவ்வுலகப் பிரச்னைகளினூடாக நம் வாழ்க்கைப் படகைச் செலுத்த உதவுகிறது. ஆனால் நேரம் வேண்டுமே!!!” என்பவர்களுக்கு, அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் ஒரு அமுத வாக்கே நல்லதொரு பதிலாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு முறை, அன்னையின் ஜபத்திற்கான நேரம் குறித்து, சுவாமி மாதவானந்தர் அன்னையிடம் கேட்ட போது, அன்னை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்..
'என்ன செய்வது மகனே!. நாங்கள் பெண்கள். வீட்டு வேலைகள் எப்போதும் இருக்கின்றன. இவற்றை விடுத்துத் தனியாக ஜபம் செய்ய முடியாதே!.  சமைப்பதற்காக உலை வைக்கிறேன். அரிசி கொதித்து சாதம் ஆகும் வரை ஜபம் செய்கிறேன். பிறகு குழம்பு தயாரிக்க வேண்டும். அது பதமாகும் வரை மீண்டும் ஜபம் செய்கிறேன். சமையல் முடிந்ததும் மீண்டும் ஜபம் செய்கிறேன். இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். நான் வேறு பெரிதாக என்ன ஆன்மீக சாதனை செய்துவிட  முடியும்?' என்ற அன்னையின் மொழிகளே 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'  என்பதை  அழகாக விளக்குகிறது.
தினம் மிகக் குறைந்த அளவு, மிகக் குறைந்த நேரத்தில் செய்யப்படும் ஜபத்தின் மகிமையை, எவ்வளவு சொன்னாலும் அனுபவத்தின்  மூலமே உணர முடியும். நம் தினசரிக் கடமைகளுள் ஒன்றாக ஜபம் செய்வதைச் சேர்க்க‌ முடியுமெனில், நமக்குள்ளும் அற்புதங்களை உணரலாம்!!!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!


புத்தாண்டு பிறக்குது !

சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டு பிறக்குது ! நமக்கு
புத்தாண்டு பிறக்குது !
கடந்த ஆண்டு ஓடுது, ஆயினும்
தடம் இன்னும் இருக்குது !
வித்தைகள் சிறக்கணும் !
வேலைகள் பெருகணும் !
வீணர்கள் தேறணும் !
சித்தர்கள் பிறக்கணும் !
பித்தர்கள் தெளியணும் !
யுக்திகள் கூர்மை ஆகணும் !
சண்டைகள் குறையணும் !
சாதிகள் சேர்ந்து வாழணும் ! ​
சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !
பொ ரி​ உருண்டை ஆச்சு பூத உலகம் !
திறமைகள் ஒன்றாய் வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருகணும்.
மின்சக்தி பெருகி யந்திரம் ஓடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊறணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,  
கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்
பொறுப்புகள் ஏற்கணும் !  

முப்பாலும் கலந்து - துரை.ந.உ.

அறம்



1.
தாண்டவம் வென்றழித்தல்; ஆணவம் கொன்றொழித்தல்;
ஆண்டவம் காணும் வழி
2.
மாத்திரைப் பையோ(டு) இறைதேடிச் செல்லுமந்த
யாத்திரையால் என்ன பயன்

பொருள் 



3.
எதுவும் இணையில்லை என்போர் அறியார்
அதுவும் நிலையில்லை என்று

4.
புரியும் வரைச்சொல் வதைவிடவும் ஒன்றைப்
புரியும் படிச்சொல்லல் நன்று

5.
கரையானைக் கண்டால் உடன்ஒதுக்கு; ஆற்றங்
கரையானைக் கண்டால் ஒதுங்கு

6.
கூட்டல் வகுத்தல் கழித்தல் அறி;அது
காட்டும்;உன் வாழ்வின் வழி

இன்பம் 

மன்னவளே!


7.
​இல்லாமை இல்லாமால் போக்குமோர் மந்திரமுண்(டு);
இல்லாள் எனும்பேர் அதற்கு

​8.
​இணைதுணை யானால் மருந்து;வந்(து) அமைந்த
துணைஇணை யானால் விருந்து


என்னவனே!​

​9.
​மலைபோல் எழுவான்; மழைபோல் பொழிவான்;
அலைபோல்
​இழுப்பான் அவன்

10.
​பாயும் அவன்வேகம் கண்​டால் ​புரளுமாம்
பாயும் பயந்து
​மிரண்டு

பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம் - திவாகர்


திவாகர்

இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோதும் சரி, அதற்குப் பிறகு சுதந்திரமடைந்த இந்தியாவிலும் சரி, வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒன்று மக்களைப் பாடாய்ப் படுத்தியதால் எங்கெல்லாம் வேலை இருக்கின்றதோ எங்கெல்லாம் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றனவோ எங்கெல்லாம் சென்றால் உழைப்பால் பசியை வெல்லலாம் என்று தோன்றியதோ அங்கெல்லாம் மக்கள் மொழி பேதமில்லாமல் குவியத் தொடங்கினர் என்பதை யாரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் இக்கட்டுரை இப்படி சமீபகாலங்களில் நடைபெற்ற மாற்றங்களை விட்டு சற்று ஆழமாக திரும்பிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. முக்கியமாக தமிழர்கள் இடமாற்றம் அதுவும் தமிழ் பேசப்படும் தமிழ் மாநிலத்தை விட்டு பாரதத்தில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் குடியேற்றம் எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆராயப்பட்டு எழுதப்பட்டதாகும்.

உலகிலுள்ள பண்டைய குடி இனங்களில் காலம் காலங்களாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றத்தை தன்னுள் வாங்கிக்கொண்டு அதனால் புத்துணர்ச்சி பெற்று மென்மேலும் பெருமை பெற்று வாழும் குடி தமிழ்க்குடி ஒன்றுதான் என்று மிகத் தைரியமாக சொல்லவேண்டும். தமிழர்களின் தோற்றத்தைக் காலக் கணக்குக் கொண்டு நிச்சயமாகக் கணக்கிடமுடியாது. அவர்கள் எந்தப் பகுதியில் முதலில் தோன்றினார்கள் என்பதையும் நம்மால் இன்னமும் நேர்த்தியாக விளக்கமுடியவில்லை. கடலால் அழிந்த குமரிக்கண்டத்தில் தமிழர்கள் தோன்றினார்கள் என்று பொதுவாக நிறுவப்பட்டாலும், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் மத்தியில் இந்தோனிஷியாவையும் இணைத்துக் காணப்பட்ட பூமி என்று பல தன்னார்வக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும் நிறுவப்படாத செய்திகளை நாம் இக்கட்டுரையில் கொண்டு வரப்போவதில்லை. தற்போதுள்ள தமிழக-கேரள  பூமியே தமிழர்கள் தோன்றிய பூர்வ நிலம் என்ற வழக்கையே தமிழர் சொந்த பூமியாக ஏற்றுக்கொண்டு, இப்படி தம் சொந்த பூமியிலிருந்து பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்த வரலாற்றை மட்டும் கவனிப்போம்.

சங்கத் தமிழ் சொல்லும் குமரிமுனையிலிருந்து திருவேங்கடம் வரை உள்ள நிலப்பரப்பில் ஆதியில் நிலங்களின் தன்மைக்கு ஏற்ப தமிழர்கள் வாழ்ந்தாலும், தங்கள் நாகரீகத்தை தங்கள் சொந்த பூமியிலிருந்து கொண்டே வளர்த்துக்கொண்டும் மேன்மைப்படுத்திக் கொண்டும் வாழ்ந்தாலும் இன்றைய பாரதத்தில் பிற இடங்களிலும் சங்ககாலம் தொட்டே தங்கள் இனப்பெருக்கத்தைக் கொண்டு சென்றார்கள் என்றே சொல்லலாம். அதே போல இன்றைய தென்னக மொழிகளான கன்னடம், தெலுங்கு, துளு (மலையாளத்தையும் தமிழையும் தற்போதைக்குப் பிரித்துப் பார்க்கவில்லை. காரணம் தமிழின் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்ட மொழியாக மலையாளம் உள்ளது) ஆகியவைகளில் தமிழின் வழக்கமான அளவில் பேசப்படும் சாதாரணச் சொற்கள் கலந்து மக்கள் வாயால் பேசப்படும்போதுதான் தமிழர்கள் இங்கெல்லாம் குடியேறி இருக்கிறார்கள் என்பது விளங்கும். இந்தச் சொற்களைப் பற்றி அதிகமான அளவில் கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, துளு நாட்டிலும் (மேற்குக் கடையோர மங்களூர் உடுப்பி போன்ற இடங்கள்) அதே போல தென் கலிங்கநாட்டில் (இன்றைய வடகிழக்கு ஆந்திரா) மக்களால் பேசப்படும் சாதாரண பேச்சு வழக்கில் கூட தமிழுக்கே தனிப்பட்ட உரிமையான பல சொற்கள் அந்தந்த மொழிகளோடு கலந்து விட்டதையும் அவர்களிடத்தில் நாம் பேசும்போது சாதாரணமாகவே அறியலாம். உதாரணத்துக்காக உயரமான மலைக்குடியேற்றத்துக்காக செல்லும் ஆரம்பப்பகுதியை தமிழில் அடிவாரம் என்றழைப்பது சகஜம்தான். இன்றைக்கும் தென் கலிங்கத்து மலைகளின் கீழ்ப்பகுதியை அடிவாரம் அல்லது அடவிவரம் என்றே அழைக்கிறார்கள். இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்டதுதான். தமிழர்கள் எந்தந்த சமயங்களில் இப்படி குடியேற்றம் மாறினார்கள் என்பதை சற்று விளக்கமாகக் கவனிக்கலாம்.

தமிழர்கள், பற்பல ஆண்டுகளாகவே கடும்  உழைப்பாளிகளாகத்தான் இருந்ததாக தமிழர் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன். இன்றைக்கும் கூட கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் கிரானைட் குவாரிகளில் ஏராளமான அளவில் தமிழர் குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இன்றைக்கும் கூட கிரானைட் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கும் கீழை ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது என்பதும் அந்த ஏற்றுமதி பெரிய அளவில் நடைபெற தமிழர்கள்தாம் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதும் எத்தனை பேர் அறிந்தார்களோ நாம் அறியோம். (ஒருவேளை பழைய நாளேடுகளில் கொத்தடிமை மீட்கப்பட்டனர் என்ற சிறு செய்திகள் படித்திருப்போருக்கு இவை ஞாபகம் இருக்கவாய்ப்புண்டுதான்.)
தமிழர்கள் மூன்றுவிதமாக செயல்திறன்களில் சிறந்து விளங்கினார்கள். பண்டைய காலத்தில் இரும்பு உற்பத்தி மிக அதிக அளவில் சக்கரக்கோட்டம் (இன்றைய பல்சார் மாவட்டம், சட்டிஸ்கர் மாநிலம்) என்ற நகரத்தைச் சூழந்த காடுகளில் நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலும் மத்தியிலும் இந்த சக்கரகோட்டத்தில் மிகப் பெரிய இரண்டு யுத்தங்கள் நடைபெற்றன. ராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி 1012-1042) நடைபெற்ற ஒரு யுத்தம் அங்குள்ள இரும்புச் சுரங்கங்கள் சோழர்கள் வசம் முழுமையாக சிக்குவதற்குக் காரணமாக இருந்தது. இரும்பு என்பது மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாக அமைந்து விட்ட காலகட்டத்தில் இந்த இரும்புச் சுரங்கங்களை சோழ அரசே தங்கள் வசம் வைத்திருந்ததற்கான பல ஆதாரங்களை சரித்திர ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகவே கண்டறிந்துள்ளனர். இரும்புச் சுரங்கங்களில் தமிழர்களே வேலை செய்தனர். தமிழர்களே காவல் காத்தனர். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு குலோத்துங்க சோழன் (கி.பி 1070-1120) காலத்திலும் இந்த இரும்புச் சுரங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள இன்னொரு முறை ஒரு யுத்தம் நடந்ததாக  குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியில் ஒரு வரி உள்ளது. ஆனால் காலம் செல்ல செல்ல இந்தச் சுரங்கங்கள் மத்திய இந்தியாவின் உள்ள வேறு பல அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், பிறகு தில்லி சுல்தான்களின் கட்டுப்பாட்டிலும் வந்து விட்டது. ஆனால் பத்து, பதினோராம் நூற்றாண்டில் குடியேறிய தமிழ்த் தொழிலாளக்குடும்பங்கள் நிலையாக அங்கேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்துள்ளனர். வீரர்களுக்குத்தான் எப்போதுமே இடமாற்றம் உண்டாகுமே தவிர தொழிலாளப் பெருமக்களுக்கு ஏது இடமாற்றம். மேலும் ஒரு தொழிலில் தம் திறமையைக் காண்பிக்க முற்பட்டுவிட்டால், அதன் சிறப்புத் தன்மையால் எந்த இடத்தில் தங்கள் தொழிலைச் செய்கிறோமோ அங்கேயே தங்கிவிடும் பழக்கம் எல்லாக் குடியினரிடத்திலும் உண்டு. இப்படியாக கூட்டம் கூட்டமாக அனுப்பப்பட்ட தமிழ்க்குடும்பங்கள்தாம் இன்றைக்கும் பிஜித்தீவி கரும்புத் தோட்டங்களிலும், மலேஷிய ரப்பர் தோட்டங்களிலும், இலங்கை தேயிலைத் தோட்டங்களிலும் வேர்விட்டு மரமாகி ஆலமாகி நின்று விட்டதை யார்தாம் மறுக்கமுடியும். அதே போலத்தான் அன்றைக்கு சக்கரக்கோட்டக் காடுகளிலும் மேலும் வடக்கே நீண்ட கனிமச் சுரங்களிலும் வேலைக்காகச் சென்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

ஆனால் காலம் கொடுமையானது. பின் வந்த காலங்கள் இரும்புக்காக எத்தனையோ போர்களை சந்தித்தன. போர்களை நடத்தியவர்கள் இந்திய சிற்றரசர்கள் மட்டுமல்ல, துருக்கியில் இருந்து வந்து நம்மை ஆண்ட துருக்கர்களும் அதற்குப் பின்னர் வந்த ஐரோப்பியர்களும் கூட. சுரங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் பிழைப்பு அவ்வளவாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அவர்களது பரம்பரை பழக்கவழக்கங்கள் காலத்தால் மாறுபட ஆரம்பித்தன. இந்தக் கலாசார மாற்றம் தமிழனின் வாழ்க்கை முறையையும், மொழியையும் பாதித்தது என்று கூட சொல்லலாம்.

பீஹார், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் தமிழ்க்கடவுளான முருகர் வழிபாடுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. பின்னால் வந்த கதைகள் முருகனை வடநாட்டுக் குமாரசுவாமியாக ஆக்கினாலும் தமிழனின் தலைக் கடவுள் முருகனை என்றும் தமிழர்களின் வாரிசுகள் மறக்கவில்லை என்பதற்கான சான்றுதான் இது. இன்று அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களாக மாறிப்போனாலும் முருக வழிபாடு ஒன்றே அவர்களை இன்னமும் தமிழகத்தின் வேரை மிகப் பலமாக அவர்கள் மனதில் ஊன்றியிருக்கிறது என்று சொன்னாலும் மிகை அல்ல.

அதே போல ஆந்திரத்தில் வேறு வகையான நிலையில் தமிழர்கள் குடிபெயர்ந்தனர். கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஆந்திரம் முழுவதும் போயர்கள் எனும் மலைவாழ் இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்த போயர்கள் மிகவும் உன்னத நிலையில் இருந்ததாக அவர்களைப் பற்றிய சரித்திரம் சொல்கிறது. மேலும் இவர்கள் வடநாட்டில் உள்ள காசியில் வேதம் பயின்று, புரிநூல் தரித்து அவர்கள் வேதக் கொள்கைகளை ஏற்று அவைகளை மலைவாழ் மக்களிடம் பரப்புவதற்குக் காரணமாக இருந்தனர். மடிபோயா என்பவர் மடிசர்மா என்று பெயர் மாறியதற்கான ஆதாரங்களும் ஆந்திர சரித்திரத்தில் உள்ளன. ஆனால் எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளில் வந்த சாளுக்கிய வம்சத்தினர் ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து கீழைச் சாளுக்கியம் என ஆந்திரக் கிழக்குப் பகுதியையும் மேலைச் சாளுக்கியம் என இன்றைய மேற்கு ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரத்தின் தென்பகுதியையும் ஆள ஆரம்பித்தனர். இவர்கள் வேத மதத்தை முறையாகப் பரப்ப கோவில்களை அதிகம் கட்ட ஆரம்பித்தனர். 9ஆம் நூற்றாண்டில் ஐந்து பெரும் சிவன் கோவில்கள் ஆந்திரத்தில் எழுப்பப்பட்டு இன்றும் பஞ்சராமம் ஸ்தலங்கள் என்ற பெயருடன் சிறப்பாக போற்றப்படுகின்றன.

சரி, இவை எதற்காக சொல்கிறோம் என்றால் வேதபாடங்கள் சொல்வதற்கு போயர்கள் ஏற்கத்தக்கவர் இல்லை என்று கீழைச் சாளுக்கிய ராஜாக்கள் அந்த இனத்து மக்களோடு யுத்தம் செய்ததாகவும் கலிங்கம் முதல் இன்றைய ஓங்கோல் வரை நீண்ட நாட்களாக நடந்த சண்டைகளில் போயர்கள் வீழ்த்தப்பட்டதையும் ஏகப்பட்ட செப்புப்பட்டயங்கள் பறைசாற்றுகின்றன. இந்த சமயத்தில் தமிழகம் மட்டுமே கல்வி கேள்விகளில் சிறந்து விள்ங்கியதால் கல்வியறிவு பெற்ற வேத விற்பன்னர்கள் பலர் குடும்பம் குடும்பங்களாக ஆந்திர தேசத்துக்கு அனுப்பப்பட்டனர், என்றும் அவர்களுக்குத் தோதாக ஆங்காங்கே கோவிலக்ள் கட்டப்பட்டு அவர்கள் பராமரிப்பில் நிலங்கள் நிவந்தமாகவும் விடப்பட்டதற்கு செப்புப்பட்டயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.. இன்றைய குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டண  மாவட்டங்களில் இந்தத் தமிழ் அந்தணர்கள் குடியேற்றம் நடந்ததையும் குலோத்துங்கனின் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர்கள் வடநாட்டைச் சேர்ந்த அந்தணர்கள் இல்லை என்றும் சாமவேதம் கற்ற தமிழ் அந்தணர்கள்தாம் என்றும் உறுதி செய்கின்றார். இன்றைக்கும் இந்தத் தமிழர்கள் தங்கள் குடிப்பெயராக ’திராவிட’ என்ற பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழை திராவிடமொழி என்று வடநாட்டார் பல்லாண்டுகளாக எழுதி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த திராவிட குடும்பத்தார் பல்லாயிரக்கணக்கில் ஆந்திராவில் இருந்தும், தம் முன்னோர் அனைவரும் தமிழர்களே என அறிந்தும் தம் மொழியை மட்டும் மறந்துபோயினர்.. இன்று அதற்காக வருத்தப்படும் பல குடும்பங்கள் இங்கு உள்ளன என்றாலும் காலம் எனும் காலன் செய்த கோலம் இது என்று சொல்லலாமா அல்லது முன்னோர்கள் முயலாததால்  காலத்தின் மாற்றத்தில் தமிழ்மொழியை நழுவவிட்டக் கொடுமையை என்று நம் முன்னோர்கள் மீது பழியைப் போடுவோமா?
அதே போல வைணவத்தைப் பரப்புவதற்காக நாதமுனி எனும் வைணவப்பெரியார் – 10ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர், இவர் வைணவமதத்தின் ஆதி குரு எனப்போற்றப்ப்படுபவர். அவர் வைணவ மதத்தைத் தனிப்பட்ட வகையில் பரப்புவதற்காக பல வைணவக் குடும்பங்களை தமிழகத்திலிருந்து ஆந்திரா முழுவதும் அனுப்பி வைத்தார். இப்படி ஒரு வைணவக் குடும்பத்துக்கு நிலம் நிவந்தம செய்யப்பட்டதற்கான இன்றைய பிரகாசம் மாவட்டம் காரம்சேடு வேணுகோபாலசுவாமி கோயிலில் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று எடுத்துக் காட்டுகிறது, இன்றும் ஆந்திரத்தின் கடைக்கோடியில் உள்ள ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் கோயில்களில் கூட இந்த வைணவக்குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களால் தமிழ் பேசமுடியவில்லை என்றாலும், கோயில்களில் தமிழ்ப்பிரபந்தங்கள் பாடுவதை வழக்கத்தில் இன்னமும் வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே போல ஜெயங்கொண்டார் தான் பாடிய கலிங்கத்துப் பரணியில் இன்றைய ஒடிஷா-ஆந்திர எல்லையில் தமிழ்வீரர்கள் கலிங்கத்தோடு நடைபெற்ற போரில் வெற்றி கிடைத்ததும், கலிங்க வீரர்களைத் தேடித் தேடிப் பிடிக்கையில் கலிங்க வீரர்கள் மாறு வேடம் பூண்டு தாம் புத்தர்கள், தாம் தெலுங்கர்கள், தாம் அரவமொழி பேசும் தமிழர்கள் என்று சொல்லித் தப்பித்தனராம். அரவம் என்றால் தமிழ்மொழி என்பதும் அவர்கள் அந்த மண்ணின் மைந்தராக மாறினாலும் அரவமொழியைப் பேசியதால் அரவர்கள் என்றே அழைக்கப்பட்டதாக அந்தச் செய்தி சொல்கிறது. இது பதினொன்றாம் நூற்றாண்டுச் செய்தியாகும்.

வடநாடுகளில் தமிழர் குடியேற்றம் பல நூறாண்டுகளாகவே வணிக நிமித்தமாக நடைபெற்று வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கன்னோசி நகரத்துக்கு ராஜேந்திர சோழர் காலத்தில் சில சிங்களக்குடும்பங்களும், தமிழ்க்குடும்பங்களும் அனுப்பப்பட்டன என்று இலங்கை மஹாவம்சத்தினர் எழுதியுள்ளார்கள். இதற்கு ஆதாரத்தகவல்கள் சோழநாட்டில் உண்டு. ராஜேந்திரர் இலங்கையை முழுவதும் தங்கள் ஆட்சியில் கொண்டு வந்த போது, இலங்கைக்கு கன்னோசி மன்னர் உதவியதாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளன.  இன்றைக்கும் தமிழே அறியாத பீஹார் தமிழர்கள் பாடலிபுத்திரம் என்கிற பாட்னாவிலும் ராஞ்சியிலும் ஏராளமான அளவில் வசித்து வருகிறார்கள்.
வணிகர்கள் குடியேறுவது என்பது காலம் காலமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்தான். தமிழ் வணிகர்கள் ஆந்திரத்தின் வடபகுதியில் குடும்பஙளோடு வசித்ததையும், அப்படி ஒரு குடும்பம் சிம்மாசலம் கோயிலுக்காக ஒரு பெரு நிலத்தில் தோட்டத்தை வளர்த்து, அந்த நந்தவனத்தை நிவந்தமாக (தானம்) அளித்ததையும் ஒரு தமிழ்க்கல்வெட்டு பேசுகிறது. எங்கோ ஆந்திராவில் வடகோடியில் உள்ள இந்தக் கோயில் பற்றிய முதல் கல்வெட்டு கூட தமிழ்தான் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அத்தோடு பெருநிலம் ஒன்றினை ஒரு தமிழ் வணிகன் தானம் செய்தான் என்றால் அவன் இன்னும் எத்தனை பெரிய இடங்களை அந்தச் சமயத்தில் தன் வசத்தில் வைத்திருந்தானோ.. அவனைப் போல பல தமிழ் வணிகர்களும் அங்கு இருந்ததாக திரு பி.சுந்தரம், ஆந்திர பல்கலைக் கழகப் பேராசிரியர் 1963 இல் ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் ஒரு பெரிய கட்டுரையாகவே வடித்திருக்கிறார்.

தமிழர் குடியேற்றம் குழுமங்களாகத்தான் நடைபெற்றன. இந்தக் குழுமங்கள் வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் சங்கங்கள் வைத்து தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டதற்கான உதாரணங்கள் வெகுவாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் தமிழ் வணிகர்கள் கடல்கடந்த வெளிநாடுகளில் எண்பேராயம், ஐந்நூற்றவர் என்று தங்கள் சமூகத்துக்காகவே சங்கங்கள் அமைத்தவை பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் அந்தந்த நாடுகளில் கிடைத்துள்ளன. இந்தியத் திருநாட்டில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ள சங்கங்களைப் பற்றிய பழைய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய பெரிய நகரங்களில் உள்ள தமிழர்கள் எப்போதுமே சங்கம் வைத்துக் கொண்டு காலத்துக்கு ஏதுவாக செயல்பட்டது தெரியவருகிறது.

ஆனாலும் இப்படி பழையகாலத்தில் குடியேறிய தமிழ் மக்கள் தங்கள் வாரிசுகளைப் பற்றியோ, அவர்களுக்கு மொழிப்பற்று கொடுக்காமல் மறைந்தது பற்றியோ நாம் இனியும் பேசிக் கொண்டிராமல் தற்காலத்தில் இப்படி குடியேறும் தமிழ்க் குடும்பங்கள் மறவாமல் தம் பிள்ளைகளுக்கு தேனினும் இனிய தமிழறிவை எப்பாடுபட்டாவது புகட்டவேண்டும். அன்று அப்படிக் குடியேறிய தமிழர்கள் செய்த பிழையை நாமும் செய்யலாமா.. இன்று முனோர்களைச் சுட்டிக்காட்டி தவறு செய்துவிட்டார்களே என்று நாம் சுமத்தும் அவப்பெயர் நாளைய இளையதலைமுறையினரால் நமக்கும் ஏற்படக்கூடாது அல்லவா..

நாவுக்கினிய நம் இனிய தமிழ் மொழியை நம் செல்வங்களுக்குத் தந்து நாம் பெருமை கொள்வோம். இதை இந்தப் புத்தாண்டு உறுதிமொழியாக ஒவ்வொரு தமிழ்க்குடியின் தலைவனும் தலைவியும் மேற்கொண்டால் அதுவே அவர்கள் தம் வாழ்நாளில் மொழிக்குச் செய்த பெரும் சேவையாகும்..