Showing posts with label சு.ரவிக்குமார். Show all posts
Showing posts with label சு.ரவிக்குமார். Show all posts

Friday, June 24, 2016

தமிழகத்தில் அரிதான 1000 ஆண்டுகள் பழைமையான நந்தி சிற்பம் தமிழ் எழுத்துக்களுடன் கண்டுபிடிப்பு

-- சு.ரவிக்குமார்

திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த க.பொன்னுச்சாமி, ச.ரஞ்சித், ரா.செந்தில்குமார் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் திருப்பூர் - காங்கேயம் சாலையில் பண்டைய காலத்தில் கல் மணிகள் அதிகம் கிடைத்து ரோம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட படியூரில் இருந்து தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ள சின்னாரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் கம்பத்தீஸ்வர்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது,

திருவள்ளுவர் பெருந்தகை உழவர் உலகத்துக்கு அச்சாணி என்பார். அந்த உழவர்க்கே அச்சாணியாக விளங்குபவை காளைகள். தமிழர்களின் 3000 ஆண்டுப் பாரம்பரிய வாழ்வுடன் பசுவும்,காளைகளும் கலந்து உயர்வு பெற்றன. சிந்து சமவெளி நாகரிக இடங்களில் இருந்து கிடைக்கும் சுடு மண்ணாலான காளை உருவங்கள், காளைச் சின்னம் பொறித்த முத்திரைகள் இவற்றை மெய்ப்பிக்கின்றன. காளைகள் தமிழர் தம் பண்பாட்டையும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பறை சாற்றி நிற்கின்றன. தமிழ் மக்களின் விழுமியங்களைப் பிரதிபலிக்கின்றன. தமிழர்கள் வாழ்க்கையை எப்படி நோக்கினர் என்பதை எடுத்துக்கூறுவது காளைகள் தியாகத்தை வலியுறுத்துவது காளை நல்ல சிந்தனைகளையும் ஆன்மீக எழுச்சியினையும் ஊட்ட வல்லது காளை. மனித குலமேம்பாட்டுக்கான தமிழ்நெறி விழுமியங்களைச் சுட்டி நிற்பது காளையாகும். எனவே தான் காளையும் கவியும் தமிழ் பேசும் மக்களை ஐக்கியப்படுத்தும் தன்மை வாய்ந்தவை ஆயின. அதனால் தான் தமிழர்கள் தாம் வணங்கிய இறைவனையும் ஆவினத்தோடு தொடர்பு படுத்தினார்கள். தாங்கள் ஊர்தியாகப் பயன்படுத்தியது போல் தூய வெண்ணிற நந்தியைத் தாம் வணங்கிய இறைவனுக்கும் ஊர்தியாக அமைத்தனர்.அதனையே கொடியாகவும் கொடுத்து வணங்கி வழிபட்டனர். இதனைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் புறம் கடவுள் வாழ்த்துப் பாடலில்

“ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப“

எனச் சுட்டுகிறார். நந்திக் கொடியாகவும் ஊர்தியாகவும் அமைவது போன்று அதன் துணையினமாகிய பசுவும் இறைவனை முழுக்காட்டப் பால், தயிர், நெய், அநீர், ஆப்பி என்று அனைத்தினையும் அளிக்கிறது. பெரும்பசுக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் ஒருவன் மக்கள் கூட்டத்தின் தலைவனாகக் கருதப்பட்டான். இவ்வாறு பசுக்கூட்டத்தின் தலைவன் என்ற பொருளில் முன் வழங்கப்பட்ட “பசுபதி“ என்ற சொல் ஒப்புமை காரணமாக மனிதப் பசுக்கூட்டத் தலைவனாகிய இறைவனுக்கும் வழங்கி வரலாயிற்று. இச்சிறப்பினை மேலும் பறைசாற்றும் வண்ணம் சிவன் கோவில்களில் இலிங்கத்தின் திருமுன்பும், அம்மையின் திருமுன்பும் நந்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. சிவனுக்கு வாகனமும் நந்தியே கொடிச் சின்னமும் நந்தியேயாகும். அதேபோல் முல்லைத் தினைக் கடவுளாம் மாடுகள் மேய்த்திடும் கண்ணன்  “ஆநிரைகள் சூழப்பெற்ற சாயலிலேயே காட்சியளிக்கிறான். அவ்விறைவனை தமிழ்மக்கள் தொன்று தொட்டு பசுக் கூட்டங்களினிடையே வைத்துத்தான் வழிபாட்டு வருகின்றனர். அதேபோல் சென்ற திசை எல்லாம் வெற்றிக்கொடி பறக்கவிடப்பட்ட பல்லவ மன்னர்களும் நந்தியைத் தங்கள் தேசிய கொடியாகக் கொண்டிருந்தனர். பண்டைய தமிழ் இலக்கியத்தில் “கோ“ என்ற சொல் நாட்டுத் தலைவனைக் குறிக்கும் அதே சொல் பசுவுக்கும் காளைகளுக்கும் வழங்கும் பொதுச் சொல்லாகும். இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற நந்தியின் சிற்பம் கொங்கு மண்டலத்தில் “பட்டி“ எனும் சொல் “அடைப்பு“ எனும் பொருளில் கால்நடைகளை அடைக்கும் இடத்தைக் குறிப்பதாகும். இவ்வாறு பட்டி என்று முடியும் கிராமத்தில் நமக்குத் தமிழ் எழுத்துக்களுடன் நந்தி சிற்பம்  கிடைத்திருப்பது மிக மிகச் சிறப்பான ஒன்று. இச்சிற்பம்  90செ.மீ நீளமும்  50செ.மீ உயரமும் 8 வரி எழுத்துக்களைக் கொண்டதாகும்.


இவ்வெழுத்துக்களை வாசித்த உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர். எ.சுப்பராயலு அவர்களும் தமிழக  தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ரா. பூங்குன்றனார் அவர்களும் “ஸ்வஸ்தி ஸ்ரீ“ என்று தொடங்கும் இக்கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட பெரும்பாலகுறிச்சல்லியை சேர்ந்த காமிண்டன் தேவ நக்கனேன் என்ற அதிகாரியால் எடுக்கப்பட்டதாகும் என்றும், இது அவருடைய அல்லது அந்தக் கிராமத்திலுள்ள கால்நடைகள் நோய் வாய்ப்பட்ட போது அந்த நோய் குணமானவுடன்  அதற்கு உருவாரமாகச் செய்து வைத்ததாகும் என்றும் இந்நடைமுறை இன்றும் கொங்குப்பகுதியில் நீடிப்பதாகவும் இன்று மக்கள் மண்ணால் உருவாரம் செய்துவைப்பதாகவும் கூறினர். அரிதான இந்நந்தி சிற்பம் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்றனர்.


______________________________________________________
பொறியாளர் சு.ரவிக்குமார் BE.,M.I.E.,D.E.G.,
வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுமையம்
இயக்குநர்
9842255118
verarajendran1206@yahoo.in    
______________________________________________________



Monday, June 20, 2016

800 ஆண்டுகள் பழைமையான குதிரை குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

-- சு.ரவிக்குமார்

திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆசிரியர் கி.திருநாவுக்கரசு, க.பொன்னுச்சாமி, ரா.செந்தில்குமார் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரடிப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றங்கரையில் தமிழகத்தில் மிக அரிதாகக் காணப்படும் குதிரைகுத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது : குதிரைப் படை தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்த நாற்படைகளில் ஒன்று. குதிரை அரபு நாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அரப்பா அழிபாடுகளில் குதிரை இந்தியாவில் இருந்தது என்பதற்குரிய அறிய அகச்சான்றுகள் அகப்பட்டுள்ளன தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் குதிரைகளைப் பயன்படுத்தி இருந்தனர் என்று கூறமுடியும். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் குதிரை வண்டிகளில் ஊர்ந்து வந்தனர் ; தமிழர்கள் கண்ட நான்கு விதப் படைகளில் குதிரைப்படையும் ஒன்று என்று இன்றும் சான்று காட்ட முடியும்.

"தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப" (தொல்.பொ.புற.12)

"தானை யானை குதிரை என்ற
 கோனார் உட்கும் மூவகை நிலையும்" (தொல்.பொ.புற.14)

என்ற தொல்காப்பியச் சூத்திரங்கள் மூலம் குதிரை ஊர்தியும், குதிரைப் படையும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்து வருகின்றன  என்பது நன்கு தெரிகிறது. மேலும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களிலும் குதிரை பற்றிய குறிப்பு உள்ளது.

தமிழர்கள் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். குதிரைகளுக்கு இலக்கணங் கண்டுள்ளார்கள். குதிரைகளை வளர்க்கும் முறைகளையும் அவற்றைப் பயன்படுத்தும் முறையையும் நன்கு தெரிந்துள்ளார்கள். அவர்கள் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் அசுவ சாத்திரமும் ஒன்றெனப் போற்றப்படுகிறது. அது தமிழர்கள் குதிரைகளைப் பற்றி நன்கறிந்திருந்தனர் என்பதை மெய்ப்பிக்கும். மேலும் கூடலில் இறைவன் நடத்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலும் ஒன்றாக இருப்பது இதை உறுதிப்படுத்தும். குதிரைகள் பரிநூலில் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை (1).பாடலம், (2).கோடகம், (3).இவுளி, (4).வன்னி, (5).குதிரை,(6).பரி, (7).கந்துகம், (8).புரவி எனப்படும். மேலும் குதிரைகள் நான்கு நிறங்களில் உள்ளன, அவை  (1).வெள்ளைக் குதிரை, (2).சிவப்புக் குதிரை, (3).கருப்புக் குதிரை, (4).பொன்னிறக் குதிரை. இந்த நான்கு நிறமும் கலந்திருப்பது மிசிரக் குதிரை எனப்படும்.

உயரத்தின் அடிப்படியில் குதிரைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். அவை (1).உத்தமக் குதிரை, (2).மத்திமக் குதிரை, (3).அதமக் குதிரை. குதிரை ஒட்டம் நாகபந்தம், விருத்தம், நெடு வீதி எனப்படும் இவற்றின் சுழிகளின் இலக்கணங்களும் பலவுள்ளன.அரசர்கள் அசுவலட்சணம் அணுவளவும் குறையாத நல்ல குதிரையைப் பட்டத்துக் குதிரையாகத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். அதைப் பேணி வளர்த்து ஆடைகளும், அணிகலன்களும் அணிவித்து அதன் மீது அரசர்கள் பவனி வருவர். அதற்கென்று தனியாக ஆட்கள் வைத்து உணவு, குளிப்பு, நோய் முதலியவை கவனித்து வரப்பட்டன. நல்ல மணமும், வாழைப்பூ மடல் போன்ற அழகிய காதும், கால், மார்பு, கழுத்து, முதுகு ஆகிய உறுப்புகளில் வெள்ளையும் 82 அங்குலம் உயரமும் உள்ள செங்குதிரை அரச குதிரையாவதற்குத் தக்கது. இதனைப் பஞ்சகல்யாணி என்று கூறுவர். தமிழ் நாட்டுக் குதிரைப் படைக்கு எல்லா இலட்சணங்களும் பொருந்திய செங்குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டுக் குதிரைப்படை இந்தியாவிலேயே இணையற்றது, ஒப்பற்றது ; சிறந்த குதிரைகளுக்குச் சிறப்புப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. மலையமான் நாட்டை ஆட்சி புரிந்தவனாகிய திருமுடிக்காரி, காரி என்னும் பெயரிய தன் குதிரையோடு  கொல்லிமலையை ஆண்ட வள்ளல் வல்வில் ஓரியின், ஓரிக்குதிரையுடன் புரவிப் போர் புரிந்தனன் என நத்தத்தனார் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில் அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றங்கரையில் நமக்குக் கிடைத்துள்ள குதிரை வீரன் நடுகல் எதிரிப்படையின் குதிரையைத் தாக்கி வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக எழுப்பிக்கப்பட்ட நடுகல் ஆகும். இந்நடுகல் 80செ.மீ அகலமும், 135 செ.மீ உயரமும் உடையதாகும். இதில் வீரனின் தலை வலதுபுறம் சாய்ந்துள்ளது. தலையில் மகுடமும், காதில் காதணிகளும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிகலன்களும் கையில் வீரக்காப்பும், இடையில் நல்ல வேலைப்பாடுகளுடன் ஆடையும்,குறுவாளும் வைத்துள்ளான். வீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் தன்னைத் தாக்கும் குதிரையைக்குத்தும் வண்ணமும், இடது கையால் தன்னைத் தாக்கும் குதிரையைத் தடுக்கும் வண்ணமும் நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குதிரையின் முன்னங்கால் இரண்டும் வீரனின் இடுப்புப் பகுதியை தாக்கும் வண்ணமும், பின்னங்கால் இரண்டும் நிலத்தில் ஊன்றிய வண்ணமும் உள்ளது. குதிரையின் மேற் பகுதியில் வீரன் அமர்ந்து செல்லும் இருக்கை (சேடல்-Saddle) அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரும் தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான முனைவர். ர.பூங்குன்றனாரிடம் கருத்துக் கேட்ட போது தமிழகத்தில் எண்ணற்ற புலிக்குத்திக் கற்கள் உள்ளன. ஆனால் குதிரை குத்திப்பட்டான் நடுகல் மிகச்சிலவே உள்ளன. இந்த வகையில் இது மிகவும் சிறப்புடையதாகும். சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இச்சிலை 800 ஆண்டுகள் பழைமையானதாகும் என்றார்


______________________________________________________
பொறியாளர் சு.ரவிக்குமார் BE.,M.I.E.,D.E.G.,
வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுமையம்
இயக்குநர்
9842255118
verarajendran1206@yahoo.in      
______________________________________________________