தொல்காப்பியம் கூறும் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம்
— முனைவர் ஜோதி எஸ். தேமொழி
முன்னுரை:
தமிழரின் தொன்மையான நூலாகக் கிடைக்கப் பெறுவது தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம். தொல்காப்பியர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர் என்பது பொதுவாக அறிஞர்கள் ஏற்கும் ஒரு கருத்து. தொல்காப்பியம் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டதாக பனம்பாரனார் யாத்த தொல்காப்பியப் பாயிரம் வழி அறிகிறோம். தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்கும் தொல்காப்பியம் உரைவளம் கொண்ட ஒரு பெரும்நூல் மட்டுமன்றி, தொல்காப்பியத்திற்குப் பின்னர் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு முன்னோடியாக அமைந்த நூல் என்ற சிறப்பும் கொண்டது. ஏனைய மொழி நூல்கள் மொழியின் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த பொழுது தொல்காப்பியம் தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து அதைப் பொருளதிகாரமாக வழங்கிய முறை சீர் சால் தமிழுக்கே உரிய தனிச் சிறப்பு.
இத்தகைய சிறப்புமிக்க தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், காலங்களை வரிசைப்படுத்தும் நூற்பா "காரும் மாலையும் முல்லை" (அகத்திணையியல் நூற்பாக்கள் வரிசை: 6 — 12) என்று தொடங்குகிறது. கார் காலத்தின் தொடக்கம் ஆவணி. இன்றைய நாட்களில் இளவேனில் காலத்துச் சித்திரைத் திங்கள் ஆண்டின் தொடக்கமாகத் தமிழரால் அறியப்படுகையில் ஏன் இவ்வாறு தொல்காப்பியர் கார் காலத்தில் தொடங்குகிறார் என்பது ஐயத்திற்கும் ஆய்வுக்கும் உரிய ஒரு கேள்வி. பழந்தமிழர் ஆண்டின் தொடக்கமாக எத்திங்களைக் கணக்கில் கொண்டிருந்தனர் என்பதற்குத் தொல்காப்பியமும் அதன் உரை ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கங்கள் மூலமும் விடை அறியும் முயற்சியே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
தொல்காப்பியமும் அதன் உரை நூல்களும்:
அக்காலத் தமிழரின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்தவை பழந்தமிழ் இலக்கியங்கள். அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட வாழ்வியலைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விளக்குகிறது. தாம் வாழும் காலத்து மக்களின் வாழ்வியல், பண்பாடு, மரபு ஆகியவற்றை உரைகளின் வழியே நூலை விளக்கும் நோக்கில் ஆங்காங்கு சுட்டிச் செல்வது உரையாசிரியர்கள் வழக்கம்.
"தமிழ்நாட்டு வரலாறு எழுதுவோர், பழைய உரைகள் வாயிலாகக் காலத்தின் குரலைக் கேட்கலாம்; வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். வரலாற்று ஆசிரியர்கள் பழைய உரைகளைச் சிறந்த வரலாற்று மூலங்களாகக் கருதி அவற்றைக் கற்றுத் தெளிந்து, தமிழக வரலாற்றை உருவாக்க வேண்டும்"
என்கிறார் 'உரையாசிரியர்கள்' நூலின் ஆசிரியர் மு.வை.அரவிந்தன் (பக்கம்.62-63). உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும் விளக்கமும் தந்து உதவும் பொழுது ஐயத்திற்கு இடமாக இருக்கும் பாடல் கருத்தை அவ்வுரைகள் தெளிவுபடுத்தும் என்பது இவர் கருத்து.
தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவரும் நூலின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் உரை தந்தவரும் 'உரையாசிரியர்' என்று சிறப்புடன் சுட்டப்பெறும் இளம்பூரணர் ஆவார். ஆனால் இவருக்கும் முற்பட்டோர் உரைகளும் இருந்தன என்று இவர் நூலின் மேற்கோள்கள் மூலம் அறிய முடிகிறது. நாம் அறியும் உரையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர். இவரைத் தொடர்ந்து சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோர் எழுதிய உரைகள் யாவும் தொல்காப்பியத்திற்குப் பழங்காலத்தில் தோன்றிய உரைகள் என அறியப்படுகிறது. இவற்றோடு பழைய உரை என்று அறியப்படும் உரை ஒன்றும் உள்ளது. இந்த உரைநூலில் காணப்படும் மேற்கோள்கள் மூலம் இது மேற்கூறப்பட்ட ஆசிரியர்கள் யாத்த உரைகளுக்கும் பிற்பட்டது என்று அறிகிறோம். பழங்காலத்தில் தோன்றிய உரைகள் என்று கூறப்பட்டாலும் இவை எழுதப்பட்டது பதினொன்றாம் நூற்றாண்டு காலத்திற்கும் பதினைந்தாம் நூற்றாண்டு காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திலாகும். ஒரு சில நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிற்காலத்தில் தொல்காப்பியத்திற்கு பதினேழாம் நூற்றாண்டு முதற்கொண்டு உரைகள் எழுதுவது தொடர்ந்தது.
எழுத்து, சொல், பொருள் என்ற முப்பகுப்புடைய தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகமும், புறமும், மரபுகளும் தெற்றென விளக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். நூலின் முதல் பகுதியான அகத்திணையியல் காதலர் வாழ்க்கை தொடங்கும் நிலப்பாகுபாடு காட்டி முதல், கரு, உரிப்பொருள்களை விளக்கிக் காட்டுகிறது. 1. அகத்திணையியல், 2. புறத்திணையியல், 3. களவியல், 4. கற்பியல், 5. பொருளியல், 6. மெய்ப்பாட்டியல், 7. உவமையியல், 8. செய்யுளியல், 9. மரபியல் என்ற ஒன்பது இயல்கள் கொண்டது தொல்காப்பியத்தின் பொருளதிகாரம். பழங்காலத்தில் தோன்றிய உரைகளில் எழுத்து, சொல், பொருள், அதிகாரங்களில் சொல்லதிகாரத்திற்கே பலர் வழங்கிய உரைகள் கிடைக்கப் பெறுகின்றன. பொருளதிகாரத்திற்கு உரை வழங்கியவர்கள் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவர் மட்டுமே. நம் ஆய்வுக்குரிய தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் 6 — 12 நூற்பாக்களுக்கு நாம் பொருள் அறிய விரும்பினால் இவர்கள் உரைகள் மட்டுமே நமக்கு உதவக்கூடியவை. இவற்றுள்;
• தொல்காப்பியத்திற்குப் பழங்காலத்தில் தோன்றிய உரைகளுள் இளம்பூரணர் எழுதிய உரை மட்டுமே இது வரை முழுமையாகக் கிடைத்துள்ளது. இது தொல்காப்பியத்திற்கு எழுந்த முதல் உரை மட்டும் அன்று, மற்ற உரைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்தது என்ற சிறப்பையும் கொண்டது.
• பேராசிரியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் முதலாக மரபியல் இறுதியாக உள்ள இயல்களுக்கு மட்டும் உரை எழுதியுள்ளார். பேராசிரியர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதினார் என்ற குறிப்புகள் நூலின் மூலமே அறிய முடிந்தாலும் நூல் முழுமையும் நமக்குக் கிட்டாதது ஒரு கெடுவாய்ப்பே. அகத்திணையியல் உரை நமக்குக் கிடைத்திலது.
• நச்சினார்க்கினியர் நூல் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களுக்கும் என தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர். அகத்திணையியல் முதலாக பொருளியல் இறுதியாக ஐந்தியல்களுக்கும், செய்யுள் இயலுக்கும் உரை கிடைக்கிறது. ஆக இங்கு நமக்கோர் நல்வாய்ப்பாக பொருளதிகாரம் அகத்திணையியல் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை கிடைக்கப் பெற்றுள்ளோம்.
“ காரும் மாலையும் முல்லை” - அகத்திணையியல், நூ. 6
“ குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்” - அகத்திணையியல், நூ. 7
“பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப” - அகத்திணையியல், நூ. 8
“வைகறை விடியல் மருதம் - அகத்திணையியல், நூ. 9
“எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்” - அகத்திணையியல், நூ. 10
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே” - அகத்திணையியல், நூ. 11
“பின்பனிதானும் உரித்து என மொழிப” - அகத்திணையியல், நூ. 12
பொருளதிகாரம் கற்போர் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளை ஒப்பிட்டு பொருள் கொள்வது வழக்கம். அம்முறையில் தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் நூற்பாக்கள்: 6 — 12க்கு நாம் பழங்கால உரைகளின் உதவியுடன் பொருளறிய விரும்பினால் அகத்திணையியலுக்கு உரைகண்ட இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியர் ஆகியோர் இருவர் விளக்கங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. அகத்திணையியல் உரை விளக்கம் பேராசிரியர் எழுதிய உரை நூலில் இல்லாமையால் நாம் இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியர் வழங்கிய உரைகளை ஒப்புநோக்கலாம்.
இளம்பூரணர் உரை:
இளம்பூரணர் உரையின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு இந்த நூற்பாக்களுக்கு நாம் பொருள் கொள்ள இயலும்.
ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களுமாகிய கார்காலமும், மாலைப் பொழுதும் முறையே முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதும் சிறு பொழுதும் ஆகும். [அகத்திணையியல், நூ. 6]
ஐப்பசித் திங்களும் கார்த்திகைத் திங்களுமாகிய கூதிர்க் காலமும், நள்ளிரவும் முறையே குறிஞ்சித் திணைக்குரிய பெரும் பொழுதும் சிறு பொழுதுமாகும் என்பர் புலவர். [அகத்திணையியல், நூ. 7]
மார்கழித் திங்களும் தைத்திங்களும் கூடிய முன்பனிக் காலமும் குறிஞ்சித் திணைக்கு உரியது என்று கூறுவர். [அகத்திணையியல், நூ. 8]
இராப்பொழுதின் பின்பகுதியான வைகறையும், பகற் பொழுதின் முன்பகுதியான விடியலும் மருதத் திணைக்குரிய சிறுபொழுதுகளாகும். [அகத்திணையியல், நூ. 9]
நெய்தல் திணைக்குரிய சிறு பொழுது பகற்பொழுதின் பிற்பகுதியான எற்பாடாகும். [அகத்திணையியல், நூ. 10]
ஐந்திணையின் நடுவணதாகிய பாலைத்திணைக்கு வேனிற் காலமும் நண்பகலும் முறையே உரிய பெரும்பொழுதும் சிறு பொழுதுமாகும். சித்திரை, வைகாசி என்னும் இரு திங்களும் கொண்டது இளவேனில். ஆனியும் ஆடியும் கொண்டது முதுவேனில். நண்பகலாவது பகற்பொழுதின் நடுப்பகுதி. பாலைக்கெனத் தனியே நிலம் ஒன்றைக் கூறாமையால், இப்பெரும்பொழுதும் சிறுபொழுதும் எந்த நிலத்தில் அல்லது எத்திணையில் நிகழ்ந்தாலும் அது பாலையாகக் கருதப்படும். அதாவது, முதற்பொருள்கள் இரண்டனுள் பொழுதால் குறிக்கப்படுவது பாலைத்திணை என்றவாறு. [11]
மாசித்திங்களும் பங்குனித்திங்களும் சேர்ந்த பின்பனிப் பருவமாகிய பெரும்பொழுதும் பாலைத்திணைக்கு உரியது என்று கூறுவர்.[12] பொதுவாக, கால அளவீட்டின் கூறுகளை நாம் பயன்படுத்தும் வரிசையில் முதலிலிருந்து இறுதிவரை கூறுவது மரபு.
“வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.”
- ( சம்பந்தர் - கோளறு பதிகம்)
என்று திருஞான சம்பந்தர் தான் பாடிய கோளறு பதிகத்தில் வார நாட்கள் அனைத்தும் நல்ல நாட்களே. தீமை கொடுக்கும் நாட்கள் என எவையும் இல்லை என்று குறிப்பிடுகிறார். அதில் வழக்கத்தில் இருக்கும் முறையாக வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றில் தொடங்கி வாரத்தின் இறுதி நாளான சனியில், நாம் இன்றும் பயன் கொள்ளும் அதே வரிசையில் கூறிச் செல்வதைக் காணலாம். இப்பாடலின் பொருள்; கங்கையையும் பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்த சிவன், என் உள்ளத்திலும் குடிபுகுந்து இருப்பதால், ஒரு வாரத்தின் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களும் ராகு கேது என்பனவும் ஒரு தீமையும் செய்யமாட்டா. அவை எல்லாம் நல்லவையே; அடியார்களுக்கு மிக நல்லவை என்பதாகும்.
கால அளவீட்டின் கூறுகளை நாம் பயன்படுத்தும் வரிசையில் முதலிலிருந்து இறுதிவரை கூறுவது மரபு என்பது இப்பாடல் மூலம் விளங்கும். இது இவ்வாறு வழக்கத்தில் இருக்க, தமிழர் சித்திரையை ஆண்டின் தொடக்கம் என்று இன்றைய நாட்களில் கொண்டாடுவது வழக்கத்தில் இருக்கும்பொழுது ஏன் தொல்காப்பியர் கார்காலம் என்று ஆவணியில் இருந்து தொடங்குகிறார் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அதற்கான விடையைப் பழங்கால உரைகளில் இளம்பூரணர் காலத்திற்குப் பிறகு பதினான்காம் நூற்றாண்டில் அகத்திணையியலுக்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.
மிகச் சுருக்கமாகக் கூறி எளிய வகையில் தெளிவான விளக்கக் கருத்தைக் கூறுபவர் இளம்பூரணர் என்று பாராட்டும் 'உரையாசிரியர்கள்' நூலின் ஆசிரியர் மு.வை.அரவிந்தன், நச்சினார்க்கினியர் உரையை மதிப்பீடு செய்யும் பொழுது நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர் என்று நச்சினார்க்கினியரைப் பாராட்டுகிறார். “நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பல்வேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு இவற்றை அறிந்தவர். தமிழில் உள்ள இலக்கணம் இலக்கியம் நிகண்டு காவியப் புராணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் போதிய அறிவு இவரிடம் உண்டு. பயிர்வகையும் உயிர்வகையும் பற்றி நிறைய அறிந்தவர்" என்று நச்சினார்க்கினியர் அருளிய உரைவளத்தை மு.வை.அரவிந்தன் சிறப்பித்துக் கூறுகிறார். இனி இலக்கியச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை என்று அறியப்படும் நச்சினார்க்கினியர் உரை விளக்கத்தை நோக்கலாம்.
நச்சினார்க்கினியர் உரை:
“காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்” – அகத்திணையியல், நூ. 6
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் . . .
"இக்காலங்கட்கு விதந்து ஓர் பெயர் கூறாது வாளா கூறினார். அப்பெயர் உலக வழக்காய் அப்பொருள் உணர நிற்றலின். காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று உரை எழுதியுள்ளார்.
இதன் பொருள்; உலக வழக்காக யாவரும் அறிந்த செய்தி என்பதால் தொல்காப்பியர் சிறப்பாகப் பொருள் கூறமுற்படாமல் வழக்காற்றை அவ்வாறே நூற்பாவாகச் சொல்லிச் சென்றுள்ளார். இதன் விளக்கம் யாதெனில், ஞாயிற்றின் ஆட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (ஆவணித் திங்கள்), திங்களின் ஆட்சி வீடாகிய கற்கடகவோரையின் இறுதி (ஆடித்திங்கள்) வந்து முடியும்வரை ஓர் ஆண்டாகும். இதனை முறையாக ஆறு பருவங்களாகப் பகுத்து ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்கள் உரியதாக்கினார் என்று நச்சினார்க்கினியர் மிகத் தெளிவாக விளக்கம் உரைக்கிறார். அத்துடன் ஞாயிற்றைக் கொண்டே காலம் வரையறுக்கப்பட்டதால் 'காலவுரிமை எய்திய ஞாயிறு' என்றும் குறிப்பிடுகிறார்.
(குறிப்பு: வானியல் துணை கொண்டு கணிக்கும் முறையில் 'ஓரை' என்பது வானில் ஒரு குறிப்பிட்ட விண்மீன் கூட்டம் உள்ள காலம் கொண்ட ஒரு பகுதி. அதாவது, இன்றைய நாளில் நாம் கூறும் இராசி மண்டலத்தின் 12 பிரிவுகளில் 30 பாகை கொண்ட ஒரு பிரிவு. சிங்க ஓரை என்பது சூரியன் ஆட்சி செய்யும் இடமாக ஆரூடத்தில் கூறப்படும் சிம்ம இராசி. அவ்வாறே கற்கடக ஓரை என்பது சந்திரனின் ஆட்சி இடமாகக் கூறப்படும் கடக இராசி. காலப் பகுப்பைக் குறிக்கும் ஓரை என்பது காலம் என்ற பொருள் குறிக்கும் ஹோரா (ஹோரா/hṓrā) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான கலைச்சொல் என்று கூறுவர் என்பதை அறிக. இலத்தீன்hōra, ஆங்கில Hour யாவற்றுக்கும் கிரேக்கச் சொல்தான் மூலம்)
சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியரே இது முன்னர் இருந்த வழக்கம் என்பதை 'என்மனார் புலவர்' என்பதன் மூலம் சுட்டுகிறார். நச்சினார்க்கினியர் காலம் 14ஆம் நூற்றாண்டு என்பதால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் உரை எழுதிய நச்சினார்க்கினியர், ஆவணி ஆண்டின் தொடக்கம் என்பது யாவரும் அறிந்த ஒரு வழக்கம், தன் ஆட்சி வீடான சிம்ம ராசியில் சூரியன் நுழையும் ஆவணியில் ஆண்டு தொடங்கி, சந்திரனின் ஆட்சி வீடாகிய கடக ராசியில் சூரியன் ஒரு சுற்றை நிறைவு செய்யும் ஆடித் திங்கள் இறுதியில் ஓர் ஆண்டு முடியும், இந்த ஓர் ஆண்டுக் காலத்தை, கார் காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்களாக வரையறுத்து பருவங்கள் கீழ்வருமாறு கணக்கிடப்படும் என்று ஐயமற விளக்குகிறார்.
கார் காலம்: ஆவணி, புரட்டாசி;
கூதிர் காலம்: ஐப்பசி, கார்த்திகை;
முன்பனிக் காலம்: மார்கழி, தை;
பின்பனிக் காலம்: மாசி, பங்குனி;
இளவேனில் காலம்: சித்திரை, வைகாசி;
முதுவேனில் காலம்: ஆனி, ஆடி
மேற்கண்டவாறு நச்சினார்க்கினியர் வழங்கும் இந்த உரை விளக்க முறைமையே நமக்குப் பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம் ஆவணித் திங்கள் என்பத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றாக உண்மையை நிலை நிறுத்த உதவுகிறது.
சற்றொப்ப பொது ஆண்டிற்கு முன் (பொ. ஆ. மு.) 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்யும் வேளாண் தொழில் நுட்பம் நடைமுறைக்கு வருகிறது. வேளாண்மை செய்து வாழும் சமுதாயமாக மனிதகுலம் முன்னேறியபொழுது காலத்தே பயிர் செய்து உழைப்பிற்கான பலனைப் பெறுவது அவர்களின் முதன்மை நோக்கமாக மாறியது. ஆறு பருவங்களும் ஒரு சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்று காலத்தின் சுழற்சி முறையைக் கவனித்திருந்த அவர்கள் அதைத் துல்லியமாகக் கணக்கிட வானியல் நிகழ்வுகளைத் துணைகொண்டு காலத்தைக் கணக்கிட்டனர். வானில் கதிரவன் மற்றும் நிலவின் இருப்பையும், விண்மீன்கள் கூட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தற்காலத்தில் ராசி மண்டலம் என்று ஆரூடம் கணிக்கப் பயன்படும் வானியல் மாற்றங்கள் இதிலிருந்து வளர்ச்சி அடைந்த ஒரு பிற்கால முறை. விண்மீன்கள் கூட்டத்தில் கண்ட ஒரு கற்பனை உருவத்திற்கு ஒரு பெயர் சூட்டி வானத்தைப் பகுதிகளாக அல்லது ஓரைகளாகப் பிரித்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட விண்மீன் கூட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் நிலையைக் கொண்டு அதன் அடிப்படையில் காலத்தை 12 மாதங்களாகப் பிரித்துக் கணக்கிட்டுக் கொண்டனர். பின்னர் இதன் அடிப்படையில் பருவங்களை அடையாளம் கண்டு கொண்ட பொழுது சரியான பருவத்தில் உழவுத் தொழிலை மேற்கொண்டு பலன் பெற முடிந்தது.
இந்த வழக்கில் தமிழர் பன்னெடுங்காலமாக சிம்ம ஓரையில் சூரியன் செல்லும் காலத்தை (ஆவணித் திங்களை) ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதையும், 14ஆம் நூற்றாண்டினாரான நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் அடிப்படையில் இந்த வழக்கம் 14ஆம் நூற்றாண்டு வரை தமிழரிடம் இருந்தது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
இந்தத் தகவலை வலியுறுத்தும் சான்றுகளாக நிகண்டுகள் தரும் குறிப்புகளும் அணி சேர்கின்றன. இதே காலகட்டத்தில் 9ஆம் நூற்றாண்டில் இருந்து 16ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் நிகண்டுகளின் மூலமும் ஆவணி ஆண்டின் தொடக்கம் என்ற தகவலைப் பெறமுடியும்.
9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர நிகண்டு - "ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே"
[சேந்தன் திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]
10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிங்கல நிகண்டு - "ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவிய திங்கள் எண்ணினர் கொளலே"
[பிங்கல முனிவர் இயற்றிய பிங்கலந்தை-'வான்வகை' - சூத்திரங்கள்:210]
16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூடாமணி நிகண்டு - "ஆவணியே ஆதி மற்று இரண்டு இரண்டு மாதம் பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்."
[மண்டல புருடர் எழுதிய சூடாமணி நிகண்டு: 95]
இச்சான்றுகள் மூலம் 16 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் ஆவணித் திங்களை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.
அதுமட்டுமின்றி, வைதீகர்களின் சமஸ்கிருத வழக்கப்படி பருவம் என்பது 'இருது'(Ritu) என்று அழைக்கப் பெறும் (பருவமும் இருதுவும் பகரில் ஒன்றே - 208) என பிங்கல நிகண்டு கூறுகிறது;
வசந்தம், இரீடம், வருடம், சரமே, ஏமந்தம், சிசிரம், என இருது ஆறு ஆகும். (பிங்கல நிகண்டு - 211)
அவை தாம் சித்திரை முதலாச் செல் மாதம் இரண்டா வைத்தன எண்ணிக் கொள்க என்ப. (பிங்கல நிகண்டு - 212)
ஆக, ஆரிய வழக்கப்படி இருதுகளின் வரிசை வசந்த இருதுவில் அல்லது இளவேனில் பருவத்துச் சித்திரைத் திங்களில் தொடங்கி, இருதுவுக்கு இரண்டிரண்டு திங்களாக ஆண்டின் கால அளவீடு கணக்கிடப்படும் என்பதையும் பிங்கல நிகண்டு மூலமாகவே அறிந்து கொள்ளவும் முடிகிறது. தமிழகக் கோயில் கல்வெட்டுகளில் வைதீக சமய ஆதரவு நிலைகொண்ட அந்நியர்களான விஜயநகர அரசர்கள் ஆட்சிக் காலத்திலேயே வசந்த இருதுவில் சித்திரையை முதல் திங்களாகக் கொண்டு ஆண்டைக் கணக்கிடும் ஆரிய வழக்கம் நுழைந்ததுள்ளது என்பது தெரிகிறது. விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில்தான் கோயில் கல்வெட்டுகளில் 'பிரபவ' என்பதில் தொடங்கி 'அட்சய' என்பதில் முடியும் சமஸ்கிருத பெயர்கள் கொண்ட 60 வியாழ வட்ட ஆண்டுக் கணக்கீடு கல்வெட்டுகளில் பதிவாகத் தொடங்குவதையும் காண முடிகிறது.
நாம் இதுகாறும் அறிந்த வரலாற்றுக் காலம் தொடங்கி ஆவணங்களில் பதியப்பட்ட குறிப்பில் இருந்து மட்டுமே ஆராய்ந்தால் 16ஆம் நூற்றாண்டுவரை ஆவணியை தமிழர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, பழந்தமிழரின் ஆண்டின் தொடக்கம் எது என்ற கேள்விக்கு தொல்காப்பிய நூற்பா, அதற்கான நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணியே தமிழரின் புத்தாண்டு தொடக்கம் என்றே விடை அளிக்க இயலும். அதுமட்டுமன்றி, தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட காலத்தில் இருந்து இவ்வழக்கம் தமிழரிடம் இருந்தது என்பதற்கும் தொல்காப்பியத்தில் குறிப்பு இருக்கிறது.
முடிவுரை:
ஒரு கருதுகோளை நிறுவ உதவும் சான்றுகளை முதன்மை நிலைச் சான்றுகள் எனவும், இரண்டாம் நிலை மூன்றாம் நிலைச் சான்றுகள் எனவும் வரையறுத்து ஆய்வு நெறி வகுக்கப்பட்டுள்ளது[1]. இந்த வழிகாட்டுதலில் எழுத்தாளர் இயற்றியது முதன்மை நிலைச் சான்றாக அமையும். அதற்கு எழுதப்படும் உரை இரண்டாம் நிலைச் சான்றாகவும், வழக்காற்றில் உள்ள அத்தகவலைக் குறிப்பிடும் அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாகவும் ஆய்வாளர்களால் கையாளப்படும் என அறிக. இம்முறையை அடியொற்றி,
தொல்காப்பியர் குறிப்பிடும் "காரும் மாலையும் முல்லை குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்" என்பது தமிழர் கார்காலத்தை அல்லது ஆவணியை ஆண்டின் தொடக்கமாகக் கணக்கிட்டனர் என்பதை முதன்மை நிலைச் சான்றாகவும்;
அதனை விரித்து " காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம்" என நச்சினார்க்கினியர் வழங்கிய உரை இரண்டாம் நிலைச்சான்றாகவும்,
"ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே" என்றும் "ஆவணியே ஆதி மற்று இரண்டு இரண்டு மாதம் பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்" என்று இடைக்காலத்தில் எழுதப்பட்ட நிகண்டுகள் தரும் செய்திகள் மூன்றாம் நிலைக்க சான்றுகளாகவும் அமைந்து ஆவணித் திங்களை பழந்தமிழர்கள் ஆண்டின் தொடக்கமாகக் கணக்கிட்டனர் என்பதை நிறுவ இயலுகிறது.
மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள் நூலிற்குச் சிறப்புரை தந்த கி. வா. ஜகந்நாதன் அவர்கள் "நூலாசிரியர்களின் உள்ளக் கிடக்கையை நன்கு தெரிந்துகொண்டு கருத்தை விளக்குவதோடு, உவமை மேற்கோள் முதலியவற்றையும் கட்டித் தெளிவிக்க வேண்டும். இதுவோ அதுவோ என்று ஐயுறுவதற்குரிய இடங்களில் தக்க காரணங்களைக் காட்டி இன்னதுதான் என்று தெளிவுபடுத்த வேண்டும். செய்யுள் வழக்கு, உலக வழக்கு இரண்டிலிருந்தும் மேற்கோள்களும் ஒப்புமைகளும் காட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டு மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே என வலியுறுத்துகிறார். இக்கருத்து தொல்காப்பியர் தன் நூலில் "காரும் மாலையும் முல்லை" என்று கார்காலத்தை ஏன் முதலில் வைத்தார் என்பதற்கான காரணத்தை நச்சினார்க்கினியர் எழுதிய உரை விவரித்துக் கூறியதன் மூலம் தமிழரின் ஆண்டின் தொடக்கம் குறித்து கொண்டிருந்த ஐயத்தை நீக்கி நாம் உண்மை அறிய உதவியுள்ளது.
............................................................................
பார்வை நூல்கள்:
௧. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையுடன், கழக வெளியீடு (1969)
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017098_%20தொல்காப்பியம்_பொருளதிகாரம்.pdf
௨. தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2007)
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdluhy.TVA_BOK_0006010/page/20/mode/2up
௩. உரையாசிரியர்கள், மு.வை.அரவிந்தன்
https://www.tamilvu.org/ta/library-lA476-html-lA476ind-115089
அடிக்குறிப்புகள்:
1. Primary, Secondary and Tertiary Sources. University of Maryland Libraries
https://web.archive.org/web/20130726061349/http://www.lib.umd.edu/ues/guides/primary-sources
............................................................................
முனைவர் ஜோதி எஸ். தேமொழி; “மின்தமிழ்” இதழின் பொறுப்பாசிரியர், “தமிழணங்கு” இதழின் ஆசிரியர் குழு அங்கத்தவர், “தமிழ் மரபு அறக்கட்டளை” பன்னாட்டு அமைப்பின் செயலாளர், “அறிவியல் தமிழ் மன்றம்” இயக்குனர் குழுவின் புறக்குழு உறுப்பினர்.
............................................................................
கனடா தொல்காப்பிய மன்றத்தின் 8 ஆம் ஆண்டு (செப்டெம்பர் 23, 2023 அன்று ஒன்டோரியோ நகரில் நடைபெற்ற) விழாவின், தொல்காப்பிய மன்றக் கலைவிழா மலரில் வெளியான கட்டுரை.
நன்றி: கனடா தொல்காப்பிய மன்றம்
............................................................................
No comments:
Post a Comment