Saturday, June 22, 2019

அறவாழி அந்தணன்

அறவாழி அந்தணன்

பேரா. Dr. கனக. அஜிததாஸ், M.Sc., M.Phil., D.H.Ed., Ph.D.,


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


                          திருக்குறள் என்ற ஒப்பிலா நூல் மெய்ப்பொருள் காட்டி உயிர்களனைத்துக்கும் அரண் செய்து வழிகாட்டும் ஓர் உயிர்த்துணை நூல். துன்பங்களின்று விடுதலை காண வழிகள் கூறும் உபாய நூல்; மனிதனை எவர்க்கும் - ஏன்? இறைவர்க்கும் அடிமையில்லை என்று சிந்திக்க வைத்துத் தன்முயற்சி யாளனாக்கும்  உறுதி உரைக்கும் நூல். இத்தகு சிறப்பு வாய்ந்த திருக்குறள் போற்றும் நெறி எது? போற்றும் கடவுள் யார்? என்பதை அறிய கடவுள் வாழ்த்தில் முதலில் புகுவதைத் தவிர்த்து உட்புகுதல் வேண்டும். ஏனெனில் திருக்குறள் வாழ்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய பெயர்களில் திருக்குறள் போற்றும் நெறிகள் அடங்கியுள்ளன. திருக்குறள் நெறியை உள்ளவாறு அறியாதவர்களுக்கு இப்பெயர்களில் அடங்கியுள்ள மறைபொருள் அறியப்படாத ஒன்றே! 

                          கொல்லாமை, வாய்மை, புலால் உண்ணாமை, உயிர்ப்பலி ஓம்பாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, அவாவறுத்தல்,  மிகுபொருள் விரும்பாமை, உழவின் மேன்மை, இருவினை, தவத்தின் மாட்சி, தீவினையஞ்சுதல், தவமுடையார்க்கு உடம்பும் மிகை என்ற திகம்பரத் துறவு முதலானவற்றையெல்லாம் பட்டியலிட்டுப் பரத கண்டத்தின் சமயங்களில் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு மேற்குறிப்பிட்ட கொள்கைகளை முன்னுக்குப்  பின் முரண் என்பதே இல்லாமல் முக்காலத்தும்,  எவ்விடத்தும் முழுதுமாகத் தம் நெறியின் அடிப்படை-அச்சு இவை என உறுதிபடக்கூறும் தகுதி படைத்த சமயம் எது என வினவினால் ஒரே ஒரு நெறியினர்-அருகர் நெறியினர் மட்டுமே-இக்கொள்கைகள் எமது எனக் கூறமுடியும். அஃது அறவாழி அண்ணலாகிய ஆதிபகவன் காட்டிய நெறியாகும்.

                          திருக்குறளின் சுவடுகள், திருக்குறளார் வழி வந்த நூல்களில் - சிலம்பில், சிந்தாமணியில், சூளாமணியில், நாலடியில், அநநெறிச் சாரத்தில், அருங்கலச் செப்பில், ஏலாதியில், சிறுபஞ்ச மூலத்தில், வளையாபதியில், மேருமந்தரத்தில், ஸ்ரீபுராணத்தில்,  மகாபுராணத்தில், இரத்தினகரண்ட சிராவகாசாரத்தில்,  சமயசாரத்தில், தத்வார்த்த சூத்திரத்தில் என எல்லாவற்றிலும் அருக-நெறி நூல்கள் அனைத்திலும் மிகத் தெளிவாக உள்ளன. சிலவற்றில் திருக்குறளின் அதிகாரங்கள் அப்படியே உள்ளன! அருக நெறியினர்க்கு இதுவியப்பல்ல! திருக்குறளின் சுவடுகள்-திருக்குறளின் பிரதி பிம்பங்கள் பின்னரெழுந்த சமண நூல்கள் அனைத்தும். அப்படியெனில் திருக்குறள்? ஆம்! ஆதிபகவன், அறவாழி அந்தணன் உரைத்த அறநெறிகளின் பிரதிபிம்பமே திருக்குறள்! எனவேதான் திருக்குறளின் ஆசிரியர் - தம் பெயர் குந்தர் குந்தர் என்றபோதிலும், ஆக்கியோன் தான் எனத் தன் பெயரிடாது பேரறம் புரிந்தார்! என்னை? ஆம்! ஆதிபகவனே; அறவாழி அந்தணனே திருக்குறளின் மூலாசிரியன்! பேராசிரியன்!

                          இனி, ‘அறவாழி அந்தணன்’ என்ற பெயரின் மறை பொருளையும், இப்பெயருக்குரிய பெரியோன் யார்? என்பதையும் காண்போம். திருக்குறள் போற்றும் இறைவனது பெயர்கள் அருகநெறியினர் நன்கு அறிந்தவையாகும். நாள்தோறும் செய்யப்படும் வழிபாட்டில் கையாளப்படும் சொற்களே இவை. ஜினாலயங்கள் சிலவற்றில் எழுந்தருளியிருக்கும் அருகப் பெருமானது பெயர்களில் (ஆதிபகவன், ஆதிபட்டாரகன், ஆதிநாதன் எண்குண இறைவன்), தத்தம் குழந்தைகளுக்கு சூட்டி மகிழும் பெயர்களில் திருக்குறள் பெயர்களும் (ஆதிநாதன், அறவாழி) உள்ளன. திருக்குறள் இறைவன் பெயர்கள் சமணர் நூல்களில் எல்லா மொழி நூல்களிலும் மிகவும் சரளமாகக் கையாளப்படும் பெயர்களே.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

                          என்பது அருகப் பெருமானை நன்றியின் பொருட்டுத் தேவர் பெருமான் போற்றி வணங்கும் பாடலாகும். 

                          அறவாழி என்பது யாது? அறவாழி என்பதற்கு அறக்கடல் என்றும் அருட்சக்கரம், தரும சக்கரம் என்றும் இருபொருள்கள் தரப்படுகின்றன. திருக்குறளாசிரியர், இங்குக் குறிப்பிட்டுள்ளது அருட்சக்கரத்தையே என்பது கீழ்க்கண்ட பலகாரணங்களால் தெளிவாகிறது. இச்சான்றுகளை அறிந்து கொள்ள ஊகமோ, ஆழ்ந்த சிந்தனையோ, பிறர்கூறுவதில் நம்பிக்கையோ தேவையில்லை. நேரடியாக, தம் கண்களால் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம்! என்னதாம் அச்சான்றுகள்? இந்த அறவாழி என்பது எல்லா ஜிளாலயங்களிலும் (அருகப்பெருமான் ஆலயங்களில்) உலோக பிம்பமாக சமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தரும சக்கரம் என்பர். இது ஜிநதருமமத்தின், அருக நெறியின் பிரதி பிம்பமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஜினாலயத்திலும் நவதேவதை (அ) உயரிய ஒன்பது என்ற வழிபாடியற்றப்படும் படிமங்கள் உள்ளன. இந்த உயரிய ஒன்பதாவன:   அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள் ஆகிய பஞ்ச பரமேஷ்டிகள், ஜிநதருமம் (தருமசக்கரம்) ஜிந ஆகமம், ஜிநர் படிமம், ஜினாலயம் என்பனவாகும். இவற்றில் ஜிநதருமம் என்பது தரும சக்கரமாகவே உருவகப்படுத்தப் பட்டுள்ளதை நேரடியாக, கண்களாற் கண்டு அறிந்து கொள்ளலாம். வழிபட ஓதும் மந்திரங்களைக் கேட்டு உண்மையைத் தெளியலாம். எனவே அறவாழி என்பது தருமசக்கரம். அருகர் நெறியின் பிரதி பிம்பம் என்பதே உண்மை. இதுமட்டுமன்றி, தரும சக்கரம் என்பது தனிப்படிமமாகவே உருவாக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுவதையும் இன்றும் ஜினாலயங்களில் காணலாம். 

                          ஜினாலயங்களில் உள்ள கொடித்தூண் (துவஜஸ்தம்பம்) அடிப்பாகத்தில் பொறிக்கப்படும் திருஉருவங்களில் அறவாழியும் ஒன்றாகும். ஜினாலயங்களில் உள்ள அருகர் படிமைகளின் வலப்புறத்தில், அப்பெருமான் பக்கத்தில் அறவாழி நிறுவப்பட்டுள்ளதைக் கண்கூடாகக காணலாம். அருகப் பெருமான் திருவுருவம் உள்ள பீடத்தில் அறவாழி பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

வழிபடும் ஓவியத்தில் அறவாழி:
                          தீர்த்தங்கரர் ஆகக் கூடிய வினை பெற்ற மாபெரும் துறவி, வாலறிவு பெற்றவுடன் அருகப் பெருமான் எனப் போற்றப்படுகிறார். அப்போது அவர் அறமுரைத்திட சமவசரணம் என்னும் ஒப்பரிய திருநிலையம் ஏற்படுத்தப்படுகிறது. ஆங்கே அந்தத் திருநிலையத்தின் மையத்தில் அமைந்துள்ள மூன்று மேடைகளில் உச்சி மேடையில் தாமரை மலர் மீது நான்கு விறற்கடை விட்டு மேலே அருகப் பெருமான் எழுந்தருளி அறவுரைபகர்வார். இத்தகு சிறப்பு வாய்ந்த மூன்று மேடைகளில் - அடியில் உள்ள முதல் மேடையின் நான்கு புறங்களிலும், தர்ம சக்கரங்கள் பக்கத்திற்கு ஒன்றாக இருக்கும். இதனைத் தேவர்கள் தாங்கி நிற்பர் (மஹாபுராணம், ஸ்ரீபுராணம், கிரியாகலாபம், மேருமந்தரபுராணம்). இந்தச் சமவசரண அமைப்பு ஜைனர்களின் இல்லங்களிலும்,  ஜினாலயங்களிலும், திருமலை போன்ற மலையில் உள்ள குகை ஓவியங்களிலும் காணலாம். சமவசரணம் வழிபாடு செய்யப்படுவதை, வணங்கப்படுவதைத் திருக்குறள் ஆராய்ச்சி அறிஞர்கள் தம் கண்களால் கண்டு மகிழலாம். மேலும், அருகப்பெருமானாகிய அறவாழி அந்தணன், ஆதிபகவன் அறஉரை பகர பல இடங்களுக்கும் எழுந்தருளும்போது அவர்முன் அறவாழி செல்லும்  என்பதைச் சமண சமய சமஸ்க்ருத, தமிழ் நூல்கள் விவரிக்கின்றன. 

                          இவ்வாறு அறவாழி என்பது தருமசக்கரமாக, அருட்சக்கரமாக, அருகப் பெருமானுடைய மங்கலச் சின்னங்களில் ஒன்றாக, பொருள் கொள்ள அழுத்தந்திருத்தமாக ஆதாரங்கள் பல உள்ளன. ஊகத்துக்கு இடமின்றி, நேரடியாகக் கண்டு அறிந்து கொள்ளக் கூடிய ஆதாரங்கள் இவை. எனவே அறவாழி என்பது அருட்கடல் அறக்கடல் என்று உரைப்பது. இங்கு, திருக்குறளில் பொருத்தமாக இல்லை. ‘கௌ’ என்றபதத்திற்கு நீர், வாக்கு, பூமி, பசு, திக்கு, மயிர், வஜ்ரம், ஆகாசம், அம்பு, கிரணம் ஆகிய பல பொருள்கள் இருப்பினும் வழக்கத்தில், பழக்கத்தில் இருப்பதைக் கொண்டு ‘பசு’ என்று பொருள் கொள்வதுதானே சிறப்பு; உயிரின் குணங்கள் பலவாயினும் அதனைக் குறிப்பிடும்போது ‘அறிவுள்ளது’ என்று கூறுவது தானே சாலப் பொருந்தும். எனவே திருக்குறளில் ஆளப்பட்டுள்ள அறவாழி என்ற சொல் தருமசக்கரத்தையே குறிக்கும் என்பதில் ஊகத்திற்கு சிறிதும் இடமில்லை.  திருக்குறளாசிரியர் அருகநெறியாளர். அவர் முன்னோர் அருகப் பெருமானை எவ்வாறு கண்டனரோ, சிறப்பித்தனரோ, வியந்து வாழ்த்தினரோ அவ்வாறே இவரும் தன் ஒப்பற்ற ஞானத்தினால் அருகப் பெருமானை காண்கிறார்-சிறப்பிக்கிறார் -வாழ்த்துகிறார்.  திருக்குறளாசிரியர் பின் வந்த அருகநெறியினரும் இவர் போன்றே இன்றும் ஆதிபகவனை அறவாழி அண்ணலாகவே காண்கின்றனர். சிறப்பிக்கின்றனர், விதந்து போற்றுகின்றனர். பரிமேலழகரும், பிற சான்றோர்களும் அறவாழி என்பதற்கு வேறு பொருள் உரைக்கிறார்களெனில் அது ‘அறிபவருடைய அபிப்ராய’மாகும்.

                          திருமால் கரத்தில் ஆழி உள்ளதே! அது அறவாழியாகாதோ? என்று கருதுவது இயற்கையே ! திருக்குறள் கூறும் நெறி ‘தவத்தோர்க்கு உடம்பும் மிகை’ என்ற முழுத்துறவு நெறி! இப்படியிருக்க, பகையாக எண்ணும் சில உயிர்களை வதை செய்யவே திருமால் கையிலேந்தப்பட்ட ஆழியைத் திருக்குறளார் குறிப்பிடுவது எங்ஙனம்? எனவே திருக்குறளாசிரியர் குறிப்பிடும் ஆழி ஆதிபகவனுடைய -அருகப் பெருமானுடைய அறவாழியே. 

                          அடுத்து, அந்தணன் என்ற சொல் மிகச்சிறந்த உயரிய நெறிகளைக் கைக்கொண்டொழுகும் பெரியோனைக் குறிக்கும். அந்தணன் என்போன் அறவோன்; செந்தண்மை பூண்டொழுகுபவன்; இங்குத் திருக்குறளிள் குறிப்பிடப்பட்டுள்ள அந்தணன், பெரியோர்க்கும் பெரியோன்; அறிவினாலறியாத அறிவன்; அறவேந்தன்; ஏனெனில் இவன் அறவாழியை உடையோன் ஆதலால்; அறவாழி உடைய சிறப்பு அருகப் பெருமான் ஒருவர்க்கே உண்டு. வாலறிவு பெற்ற அந்தணர் ஒருவர்க்கே அறவாழி சிறப்பு உண்டு. ‘ஆதிக்காலத்து அந்தணன்’ என ஆதிபகவனைத் திருத்தக்கதேவர் போற்றி மகிழ்வதை சிந்தாமணியில் காணலாம். அடுத்து பிறவாழி என்பது பிறவிக்கடல் என்றும் பொருள் மற்றும் இன்பக்கடல் என்றும் விளக்கப்படுகின்றது. பிறவிக்கடல் என்று பொருள் கொண்டாலும், பிறவியை ஏற்படுத்தக் கூடிய பொருளும், உலகவியல் இன்பமும் என்றும் பொருள் கொண்டாலும் இக்குறளுக்கு ஒப்ப அமைகிறது. எனினும் கடவுள் வாழ்த்துப் பாக்களில் இறுதிப் பாவாகிய பிறவிக்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்பதில் பிறவிக்கடல் என்ற ஆளுகை இருப்பதால், அறவாழி அந்தணன் என்ற குறளில் இதே கருத்தை முன்கூறி பின்னரும் குறிப்பிடுவாரோ ஒப்பற்ற ஞானியாகிய குந்தகுந்தப் பெருமான் என்று வினா எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இரண்டு இடங்களில் ஒருபொருளை விளக்கினார் என்பதைவிட, ஒவ்வொரு குறளிலும் வெவ்வேறு அறநெறிகளைக் குறிப்பிட்டுள்ளார் என்பது சிறப்பான சிந்தனையன்றோ? நல்வினையையே ஒரு கட்டத்தில் விலக்கும்போது பொருள், இன்பம் இவற்றை விட்டொழிக்க வேண்டுமன்றோ? பொருள் மற்றும் இன்பக் கடலினின்றும் தப்பி வெளியேறிட அற வேந்தன்தாள் துணையாம். அதன்பின் எய்துவது வீடன்றோ?

அறவாழியும் அருகனும், பிறகடவுளர்களும்: ஓர் ஒப்பாய்வு  
                          தமிழில் இலக்கணம், இலக்கியம் போன்றே முக்கியமான அங்கமாக இடம்பெறுவன நிகண்டுகளாகும். அறவாழி அண்ணல் என்பது அருகன் திருநாமங்களில் ஒன்றென நிகண்டுகளில் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கண்டபின் வேறெந்தக் கடவுளர்க்கு ஆழி உள்ளதென்பதையும், அது அறவாழியா மறவாழியா என்பதையும் திருக்குறள் நெறிநின்று காண்போம். சொற்களின் பொருள்களை அறிய தெளிவுபெறத் துணையாய் நிற்பவை, நிகண்டுகள் ஆகும்.

நிகண்டுகளில் ‘அறவாழி’ என்ற பெயர் யாருக்கு?     
                          திவாகரத்தில் 43 பெயர்கள் அருகனுக்குக் குறிப்பிடப் பட்டுள்ளன. குறட்பெயர்கள் பலவும் உள்ளன. அவற்றில் அறவாழி அந்தணன் என்ற பெயரும் உண்டு.
அருகன் பெயராக
                          அறவாழி அந்தணன் (திவாகரம்)
                          அருளாழிவேந்தன் (திவாகரம்)
                          அறவாழி வேந்தன் (பிங்கலம், சூடாமணி நிகண்டு)
                          அறவாழி அண்ணல் (கயாதரம்)
                          அறத்தினாழியன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          படையிலி (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          கொல்லாவேதன் (சூடாமணி நிகண்டு)
                          சாது (சூடாமணி நிகண்டு)
                          தருமராசன் (சூடாமணி நிகண்டு)
                          அருட்கொடையாளன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          அறத்தின் மன்னன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          ஆழியன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          கொல்லா மறையோன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          பொறையன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)

                          இதுவரை அருகனுக்கு அறவாழியந்தணன் என்ற பெயர் எந்தெந்த நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளன என்று பார்த்தோம்.

                          பிறநெறிக் கடவுளர்க்கு இந்தப் பெயர் எந்தெந்த நிகண்டுகளில் உள்ளதென்பதைக் காண்போம்.

சிவபெருமானுக்கு பொருந்துமா?                          
                          சிவபெருமான் குறித்து அறவாழி அந்தணன் என்ற பெயர் திவாகரத்தில் - ஒன்றுமேயில்லை.

                          ஆனால் அரவாபரணன், அழலாடி, அழலேந்தி, ஆனையுரித்தோன், ஈமத்தாடி, கபாலமூர்த்தி, கறைமிடற்று அண்ணல், சடையோன், சுடலையாடி, நாரிபாகன், நீறணிகடவுள், பரசுபாணி, பிறைசூடி, பினாகபபாணி, புலித்தோலுடையோன், பேயோடாடி, மழுவாளி என்ற நாமங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகின்றன. சிவனார் நெறியின் தத்துவத்தை உணர்த்தும் பெயர்களாக இவை இருக்கும் நிலையில், குறள் நெறிக்கு குறள் அதிகாரங்கள் பலவற்றிற்கு மாறானவை இப்பெயர்கள் என்பதும் வெள்ளிடைமலை. இதுபோன்றே பிற நிகண்டுகளிலும் பிறைசூடிய பெருமானுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன.

திருமாலுக்குப் பொருந்துமா?
                          சக்ராயுதன், ஆழிப்படை உடையவன் என திருமால், திவாகர நிகண்டில் குறிக்கப்படுவதால் அறவாழி அந்தணன் என்ற பெயரை இது குறிப்பிடாதோ என எண்ணுவது இயல்பே. திருமால் தன் கையில் தரித்திருப்பது அறவாழியன்று, அறத்தை நிலைநாட்ட பிறரைக் கொல்வதற்குத் தரித்த மறவாழி என்றே திருமாலின் திருத்தொண்டர்கள் கூறியுள்ளனர் என்பதை அறிஞர் மயிலை சீனி, வேங்கடசாமி அவர்கள் தமது அறவாழி அந்தணன் என்ற கட்டுரையில் தெளிவுபட விளக்கியுள்ளார்.

                          “அடலாழி ஏந்தி அசுரர் வன்குலம் வேர் மருங்கறுத்தாய்” என்றும், “அமர்கொள் ஆழி” என்றும், “கனலாழிப் படையுடையவன்” என்றும், “கொலை ஆழி” என்றும், “கூர் ஆழி” என்றுத் “கனலாழிப் படையுடையவன்” என்றும் “பேராழி கொண்ட பிரான்” என்றும் “ஊன்திகழ் நேமி” என்றும், “ஈர்க்கின்ற சக்கரத்தெம்மான்” என்றும் திருமாலின் ஆழி (சக்கரம்) படை என்றே வர்ணிக்கப்படுகிறது” என்பதை மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். எனவே அறவாழி யந்தணன் என்ற பெயர் சிவபெருமானுக்குப் பொருந்தாமை போன்றே திருமாலுக்கும் பொருந்தாமை தெளிவாகிறதன்றோ? 

புத்த பிரானுக்குப் பொருந்துமா?
                          புத்த பிரானுக்கு நிகண்டுகளில் அறவாழியன் என்ற பெயரேதுமில்லை யெனினும் மணிமேகலைக் காப்பியத்தில் அறக்கதிராழியுருட்டுவோன் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புத்த தேவன் எனும் போதே அருள் வடிவம் தோன்றுவது குறித்து அருள் நெறி சுரக்கும் செல்வன், அருளிடுவோன், அருளின் படிவன், அறத்தின் வேந்தன், தருமன், தருமராசன் என நிகண்டுகள் போற்றுகின்றன. ஆனால் புலால் மறுத்தலை கொல்லாமையை, வினைக் கொள்கையைப் போற்றாமையால், குறள் நெறியும், குறளின் இறைவனது பெயர்களும் இப்பெருமானுக்குப் பொருந்தாமை வெள்ளிடைமலை.

                          எனவே, பழைய நிகண்டுகளில் குறள் வாழ்த்தும் இறைவனது பெயர்கள் அருகதேவனுக்குக் குறிக்கப்பட்டிருப்பதையும், இதே நிகண்டுகளில் குறள் கூறும் இறைவனது பெயர்கள் பிறகடவுளர்க்குக் குறிப்பிடப்படாமையும், அதுமட்டுமன்றிக் குறளின் நெறிக்கு மாறான பொருள் உடைய திருப்பெயர்கள் அருகனல்லா பிற கடவுளர்க்கு அக்காலத்திலேயே வழங்கி வந்துள்ளமையும் திருக்குறள் அருகநெறி நூல் என்பதற்கு அழுத்தமான சான்றாகும்.

                          திருக்குறள் கடவுள் வாழ்த்து அருகக் கடவுளைச் சார்ந்த தென்பதையும் மற்ற அதிகாரங்களில் உள்ளவை அருகநெறிகள் என்பதையும் விளக்கும் பொருட்டே இதர சமயங்களை ஒப்பிட வேண்டியதாயிற்று. இது தெளிவு கொள்ளவே யன்றிப் பிற சமயங்களையோ, பிற கடவுளர் களையோ குறை கூற அல்ல என்பதை உளத்தூய்மையோடு கூறுவதில் மனநிறைவேற்படுவது உண்மை.

                          இப்போது, அறவாழி அந்தணன், அறம் அருளியவன் என்பவை சமண சமய தமிழ், சமஸ்கிருத, பிராக்ருத இலக்கியங்களில், தத்துவ நூல்களில், சரளமாகக் கையாளப்பட்டுள்ளதை காணலாம்.

சீவக சிந்தாமணியில்;
                          ஆதிக்காலத்து அந்தணன் (சீவக. 366)
                          கொலையிலாழி வலனுயர்த்த குளிர் முக்குடையினிழலோய்நீ   (சீவக. 1244)
                          மறுவற வுணர்ந்தனை மலம் அறு திகிரியை (சீவக. 2563)
                          அறவாழி யண்ணல் இவனென்பர் (சீவக.1611)
                          அருமறை தாங்கியி அந்தணர் தாதையை (சீவக.2561)
                          தண்மதிபோல் நேமி அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீயே  (சீவக. 1246)
                          திருவறம் வளர்க (சீவக. இறுதி வாழ்த்து
                          ஆதிவேதம் பயந்தோய்நீ (சீவக. 1242)
                          உலகமிருள் கெடவிழிக்கும் ஒண்மணி அறவாழி 
                          அலகையிலாக் குணக்கடலை (சீவக. முக்தி 425)

சூளாமணியில்; 
                          ஆதிநாள் அறக்கதிர் ஆழி தாங்கிய சோதியான்                          (சூளா.மந்திர 147)
                          அழல் அணங்கு தாமரை ஓர் அருளாழி உடையகோன் (சூளா-1039)
                          ஆழி அறவரசே (சூளா-1913)
                          ஆர் அழல் அம்சோதி வாய்சூழ்ந்த அருள் ஆழியானை  (சூளா-1907)
                          ஓர் அருள் ஆழியை (சூளா-216)
                          அறவாழி (சூளா-156-158)
                          அருமறையை விரித்தாயை (சூளா-184)
                          விளியாத மெய்ப் பொருளை நீவிரித்தாள் (சூளா-1906)
                          ஊழி மூன்றாவது ஓய்ந்து இறுதி மன்னுயிர்
                          சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
                          ஏழ்உயர் உலகுடன்பரவ ஈண்டு அருள் 
                          ஆழியாங் கிழமையெம் அடிகள் தோன்றினார்  (சூளா394)
                          ஆதி பகவன் குறித்த அற்புத வர்ணனை). இதன் வரலாறு அருகநெறியாளரே அறிகுவர்.
                          அருள்புரி அழலஞ்சோதி ஆழியான் (சூளா.துறவு. (27))
                          அருளாழிமுன் செல்லப் பின் செல்வதென்னோ
                          வடிப்படாதாய் நின்ற வகன் ஞால முண்டோ (சூளா-துறவு-68)
                          தாமரையி னங்கணடி வைத்தருளு மாதியா யாழி
                          யறவரசே யென்று நின் னடிபணிவ தல்லால் (சூளா. துறவு 73)
                          பகைநாறும் அயிற் படைகள் பயிலாத திருமூர்த்தி (சூளா.183)

மேருமந்தர புராணத்தில்; 
                          அறவேந்தனே (மே.பு.634)
                          அறிவன் நீயே (மே.பு.999)
                          மறமிலிவிலாழியுடை மன்னவன் (மே.பு.1042)
                          சம்பவன் முன்பு நின்ற தருமச் சக்கரத்தினும்பர் (மே.பு.1189)
                          பெருமையொடு மங்கலங்களறவாழி (மே.பு.1195)

அப்பாண்டை நாதர் உலாவில்; 
                          சினதர்மசக்கரத்தன் (10)
                          அருட்கடலுமாயினோன் (19)
                          அருளாழியான் (24)
                          அறவாழியான் (24)
                          தருமக்கடலான் (58)
                          நன்மையறவாழி நடக்க (444)
                          அறவாழி வேந்தன் (635)
                          அறவாழி சேர்த்தீசன் (943)
                          அறவாழி முத்தன் (993)
                          படைவாளும் இலான்

திருமேற்றிசை அந்தாதியில்;
                          திருவருளாழி நடாத்தும் குடதிசைச் செங்கனி (347)

திருநறுங்கொண்டை மலைப்பதிகம்; 
                          இடர்திசை நீங்கநின்றார்க்கு அறமாயுதம் (151)
                          படைகளொன்றின்றி இருவினையெனும் பண்டை  முதுபகைபுறங் கண்டவன் 

திருக்கலம்பகத்தில்;
                          சயங்கொள் ஆழியங்கடவுளே (திருக்கல.35)
                          பேரறங்க ணேமி கொண்டு வென்ற சோதி யெங்களாதியே  (திருக்கல.24)
                          உலகமேழும் வந்திறைஞ்ச அருளாழி வலங்கொண்டு
                                                    ஏத்துஞ் சிகர மணிநீல வண்ண (திருக்கல.31)

திருநூற்றந்தாதியில்; 
                          அருளோடெழும் அறவாழி அப்பா (திருநூற்.5)
                          அற ஆழிகொண்டே வென்ற அந்தணனே (திருநூற்.27)
                          அருட்சக்கரம் ஏந்திய சங்கரன் (திருநூற்.67)

திருநறுங்கொண்டைத் தோத்திரமாலை-மந்திரப்பத்து; 
                          தரும சக்கரா (53)
                          தரும சாரணன் (60)
                          மறுவிலா அறவாழி அந்தணனே (68)

நீலகேசியில்;
                          உயிர்கட்கு இடர்தீர்த்து உயிர் இன்பம் ஆக்கும் சொல்லான் தருமச்சுடரான்
                          அங்கம் பயந்தான் அறைந்தசுதக்கடல் (நீல.660)
                          தீதுஇல் நன்னெறி பயந்து (நீல.155)
                          அங்க பூவமது அறைந்தாய் அறிவர்தம் அறிவர்க்கும் அறிவா  (நீல. 157)                                                     
                          அன்னான் பயந்த அறஆர் அமிர்து (நீல. 2)
                          அறங்கூர்மாரி பொழிந்தோய் (நீல.139)

திருவெம்பாவையில்;
                          பள்ளியுணர்ந்திலையோ பாவாய் நீ முன்வந்தென்
                          வள்ள லறவாழி நாதன் மலரடியை

உரைமேற்கோள்;
                          அருள்நெறி நடத்திய ஆதி தன் 
                          திருவடிபரவுதும் சித்தி பெறற் பொருட்டே (உ.மே.44)
                          ஈர்அறம் பயந்த ஓர் அருள் ஆழியை (உ.மே.11)
                          அறவாழியினான் (உ.மே.20)
                          அறவாழியனே (உ.மே.29)
                          படை ஒன்றிலான் (உ.மே.31)
                          அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரைஏறி
                          இறப்பு இலநின் அருள் புரிந்தாங்கு எமக்கு எல்லாம் அருளினையாய்
                          மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும்
                          அறவாழி வலன்உயரி அருள் நெறியே அருளியோய்  (உ.மே. 138)

அறவாழியின் அமைப்பு;
                          கனல்வயிரம் குறடு ஆகக் கனல்பைம்பொன் சூட்டுஆக
                          இனமணி ஆரமா இயன்று இருள் இரிந்து ஓட
                          அந்தரத்து உருளும் நின்அலர்கதிர் அறவாழி
                          இந்திரனும் பணிந்து ஏத்த, இருவிசும்பில் திகழ்ந்தன்றே (உ.மே. 39)
                          அல்லல் நீக்கற்கு அறப்புணை ஆயினை (உ.மே. 37)
                          அருளினை நீ (உ.மே. 37)
                          நனைஇல்காட்சி நல்லறத்தலைவ (உ.மே.41)
                          அறமும் நீ (உ.மே.37)
                          அறவன்நீ (உ.மே.40)

சிலப்பதிகாரத்தில்;
                          அருண்முனி
                          அருளறம் பூண்டோன்
                          தரும முதல்வன்
                          தருமன்

யசோதர காவியத்தில்;
                          திருமொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பர்  (ய.சோ.53)

                          தர்மசக்ரம் குறித்து கிரியாகலாபம்-நந்தீஸ்வரபக்தியில் (சமஸ்கிருதத்தில் ஆசார்யர் பூஜ்யபாதர் அருளியது)
                          ஸ்புரதர ஸஹஸ்ரருசிரம் விமலமஹா
                                                    ரத்ந கிரண நிகர பரீதம்
                          ப்ரஹஸித ஸஹஸ்ர கிரணத்யுதி மண்டல
                                                    மக்ரகாமி தர்மஸுசக்ரம் (கிரியாகலாபம் -192- நந்தீஸ்வர பக்தி) 

                          ஜோதி மயமானதும், ஆயிரம் ஆரக்கால்களை உடையதும், மனோகரமானதும், நிர்மலமானதுமான மிகச்சிறந்த மணிகளாலாம் வட்டைகளால் சூழ்ந்துள்ளதும். சூரியன் ஒளியை மிஞ்சத்தக்க காந்தியோடு விளங்குவதும், (சமவ சரணத்தின்)  நாற்புரமும் உள்ளனவுமாகிய சிறந்த தர்மசக்கரம் பகவான் முன் தொடர்ந்து செல்லும்.

இதுவே மேருமந்திரத்தில்;
                          சக்கரன் சாபம் போலத் தனுவில்லை யுமிழச் சென்னி
                          மிக்கமா மணிசெ யாரம் விளங்குமா யிரத்த தாகித்
                          திக்குலாம் பொழுது காத நான்கதாய்ச் செறிந்திருந்தால்
                          விற்கண்மூன்றாய அறப்பேராழி  தான் விளங்கு நின்றே  (மே.பு.1171)     

                          சமவசரணத்தில் மூன்று வில், உயரமுடைய அறவாழி அருகப்பெருமான் ஆங்காங்கே எழுந்தருளும் போது அவருக்கு முன்னே நான்குகாதம் என்னும் தொலைவில் செல்லும்.

அறவாழி அருளட்டும் 
(கிரியாகலாபம்-சாந்தி பக்தி-9)  
                          ஷேமம் சர்வப்ராஜாநாம் ப்ரபவது
                               ...........................................
                          ஜைநேந்த்ரம் தர்மசக்ரம் ப்ரபவது ஸததம்
                                                    ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி-
                          .................இவ்வுலக உயிர்களனைத்திற்கும்
இன்பத்தைத் தருகின்ற ஜிநேந்திரர்களின் அறவாழி எப்போதும் நிலைப்ப தாகுக.

                          தர்மசக்கரம். அருகத்பரமேஷ்டிக்கு வாலறிவு தோன்றிய உடன் ஏற்பட்ட 24 அதிசயங்களுள் ஒன்றாகும். சமவசரணத்தின் நாற்றிசைகளிலும், பூதங்களால் தரிக்கப்பட்ட ரத்ன மயமான தர்மசக்ரம் நான்கும் திசைக்கு ஒன்றாக விளங்கும். 
 -கிரியாகலாபம்.  

மஹாபுராணத்தில்
                          ஸ்ரீமதே ஸகலக்ஞான சாம்ராஜ்ய பதமீயுஷெ!
                          தர்மசக்ரப்ரதே பத்திரதே நம: சம்சார பீமஷெ!! 
 -மகாபுராணம்-கடவுள் வணக்கம். 

                          சகல ஐஸ்வர்யத்தோடும் கூடி கேவல ஞானப் பேரரசினைப் பெற்றவரும், பிறவித்துன்பத்தினை விலக்குபவரும் தர்மசக்ரத்தை உடையவரும் ஆகிய அருக பகவானை நான் வணங்குகிறேன்.

அமரசிம்மம் அருகன் நாமமாலை
                          அமரசிம்மம் அருகன்பேர்வழி ஸ்லோகத்தில் தர்மசக்ரம், அருள்சக்ரம், அசாதாரணசக்ரம், சித்த சக்ரம், சார்வசக்கரம் கூறப்பட்டுள்ளன.

மஹாபுராணத்தில் 
(மாமுனிவர் ஜினசேனாசாரியாரால் அருளப்பட்டது) 
                          சமஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட மஹாபுராணத்தில் அருகப்பெருமானைப் போற்றும் 1008 திருநாமங்கள் உள்ளன. இதில் 64 ஆவது திருநாமம் தர்மசக்ரினே, 840 ஆவது தர்மசக்ராயுதனே! 1008 ஆவது திருநாமம் தர்மசாம்ராஜ்ய நாயகன் என்பனவாகும்.

                          அறவாழி அந்தணன் அருகனைக் குறித்தது என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. இந்நூல் அறவாழி அந்தணன் என்ற பெயருடன் திருக்குறள் கடவுள் வாழ்த்து இறைவன் பெயர்கள் அனைத்தையும் ஆய்வதற்கு உருவாக்கப்படும் நூல் என்பதால் விரிவஞ்சி நிறைவு செய்யப்படுகிறது.

                          “தெருளாமையால் வினவற்பால தொன்றுண்டு
                                                    திருவடிகள் செம்பொனார் அரவிந்தம் ஏந்த
                          இருளாழி ஏழுலகும் சூமொழியின் மூழ்க
                                                    இமையாத ரெங்கண்ணின் இமையோர் வந்தேத்த
                          உருளாழியானும் ஒளிமணி முடிமேற் கைவைத்(து)
                                                    ஒருபாலில்வர, உலகம் நின்றுழைபதாக
                          அருளாழி முன்செல்லப் பின்செல்வகென்னோ?
                                                    அடிப்படாதாய் நின்ற அகன் ஞாலம் உண்டோ? 
 - சூளாமணி                                                        

              அறவாழி அந்தணன்தாள் போற்றி! போற்றி!
******************


தொடர்பு:   பேரா. Dr. கனக. அஜிததாஸ், M.Sc., M.Phil., D.H.Ed., Ph.D., (ajithadoss@gmail.com)


No comments:

Post a Comment