Tuesday, June 25, 2019

கானடா நாடென்னும் போதினிலே



——   சி. ஜெயபாரதன்

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தோதும் நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததும் எம் யோகமடா

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசும் பனிப்புயல் வீடுகளாம், குளிரும்
வெப்பமும் மாறிடும் பருவங் களாம்.

ஈரேழு மாநிலப் பனிநாடு, சீராய்
இரட்டை மொழியாளும் தனிநாடு
நீர்வளம், நிலவளம் மிக்கதடா, பயிர்
நிறைய விளைந்திடத் தக்கதடா

முப்புறம் ஆழ்கடல் சூழுமடா, பனி
மூடும் துருவம் வடக்கிலடா
கப்பல் புகும்நீள் நீர் மார்க்கமடா, தென்
காவலாய் அமெரிக்கத் தேசமடா

மேப்பிள் சிவப்பிலைக் கொடிபறக்கும், அருள்
மேவிப் பிறர்க்குக் கொடையளிக்கும்
ஆப்பிளும் பீச்சுக்கனி பழுக்கும், பல்
ஆயிரம் தக்காளிக் காய் தழைக்கும்

தாமிர வைரத் தளங்களடா, ஆயில்
தங்கம் வெள்ளி பெறும் சுரங்கமடா
பூமியில் புதிய காண்டமடா, இதைப்
போற்றிப் புகழ்ந்திட வேண்டுமடா



தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)





Saturday, June 22, 2019

அசோகனுக்கு முன் இலங்கையில் பௌத்தம்

——    ப. முகுந்தன்


               இந்தக்கட்டுரையின் நோக்கம் இலங்கையில் பௌத்தத்தின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்களைப் பற்றிய ஒரு அறிமுக உரையாடலாகும்.

உரையாடப்படும் விடயங்கள்:
1. அசோக மன்னன் காலத்தில் மகிந்த தேரரால் அனுராதபுர மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்தத்திற்கு மாற்றப்பட்டமை.
2. புத்தரின் மும்முறை இலங்கை வருகை.
3. புத்தர் ஞானம் பெற்ற காலத்தில் அவரது கேசதாதுவை வைத்து நாக அரசுக்குட்பட்ட கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது பௌத்த தூபி.

               மகாவம்சம் கூறும் பௌத்த வரலாறு பொ.மு 3ம் நூற்றாண்டில் இந்தியாவில் பேரரசினை நிறுவிய மௌரியச் சக்கரவர்த்தி அசோகனின் மகன் மகிந்த தேரருடன் ஆரம்பமாகிறது. அசோகச் சக்கரவர்த்தி பௌத்த மதத்தைத் தழுவி, பின்னர் மூன்றாவது பௌத்த மகா நாட்டினை நடாத்தி பௌத்த மதத்தை உலகெங்கும் பரப்புவதற்காகத் தூதுக்குழுக்களை அனுப்பினான். அதன்படி அசோகரின் மகன் மகிந்தரும் குழுவினரும் இலங்கை மிகிந்தலை மலையை வந்தடைந்தனர்.

               அனுராதபுரத்தை ஆண்ட தீச மன்னன் வேட்டையாடுவதற்காக மிகிந்தலை மலையை வந்தடைந்தான். அங்கே தீச மன்னனைச் சந்தித்த மகிந்ததேரர், மன்னனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் சூளகதிபதூபம சூத்திரத்தை உபதேசித்து பௌத்தத்திற்கு மாற்றிக்கொண்டார். இது நிகழ்ந்தது புனித பொசன் முழுமதி தினத்திலாகும்.


               மகாவம்சத்தின் முதலாம் அத்தியாயம் புத்தரின் மும்முறை இலங்கை வருகையைப் பற்றி விவரிக்கின்றது. தனது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப்போகும் இடம் இலங்கை எனத் தெரிந்திருந்த புத்தர் இலங்கையில் நிரம்பியிருந்த இயக்கர்களை விரட்டுவதற்கு முதன்முறை இலங்கைக்கு வந்தார். அவர் 'ஞானம் பெற்று 9ம் மாதத்தில்' தைப்பூச முழுமதி தினத்தில் இலங்கை வந்தார். தற்போதைய மகியங்கனை ரஜ மகா விகாரை அமைந்துள்ள மகாநாகவனம் என்னும் இடத்தில் எல்லா இயக்கர்களும் கலந்துகொள்ளும் இயக்கர்களின் பேரவைக் கூட்டம் நடைபெறும்போது புத்தர் அங்கே சென்றார். மழையையும் புயலையும் இருளையும் உண்டாக்கச் செய்து இயக்கர்களை அச்சமடைய வைத்த புத்தர் கேட்டதற்கிணங்க இயக்கர்கள் மகாமேகவனத்தை விட்டு கிரித்துவீபத்திற்குச் சென்றனர். அதன்பின் புத்தர் தேவர்களை அங்கே வரவழைத்தார்.

               தேவ வம்ச அரசன் மகா சுமணன் சமந்தகூட மலையை (சிவனொளிபாதமலை) ஆண்டுவந்தான். புத்தரின் போதனைக்குப் பின் அனைத்துத் தேவர்களும் பௌத்தத்தைத் தழுவினர். வணங்கத்தக்க எதையாவது தரும்படி மகா சுமணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க புத்தர் கொடுத்த தலைமுடியை, புத்தர் அமர்ந்திருந்த இடத்தில் நவரத்தினங்களைக் குவித்து அதன்மீது வைத்து மகியங்கனை தூபி தாபிக்கப்பட்டது. அதன்பின் அவர்  இந்தியாவின் மகத நாட்டு உருவெலவுக்குத் திரும்பிச் சென்றார்.


               புத்தரின் இரண்டாவது வருகை அவர் 'ஞானம் பெற்ற 5ம் ஆண்டில்' சித்திரை முழுமதி தினத்தில் நிகழ்ந்தது. அக்காலத்தில் நாகதீபத்தை (யாழ்ப்பாணக் குடாநாடு) ஆண்டவன் மகோதர நாகன். அவன் சகோதரி கண்ணவர்த்தமானம் எனும் நாட்டை ஆண்ட நாக மன்னனை மணமுடித்திருந்தாள். அவர்களது மகன் சூலோதரன். மகோதரனின் தந்தையால் மகோதரனின் சகோதரிக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரத்தின சிம்மாசனத்தை யார் வைத்திருப்பது என்ற போட்டியில் மகோதரனுக்கும் அவனது மருமகன் சூலோதரனுக்கும் போர் நிகழும் சூழல் ஏற்பட்டது.

               அங்கு வந்த புத்தர் நாகர்கள் மீது இருள் கவியச் செய்தார். அச்சமுற்ற நாகர்களின் அச்சத்தைப் போக்கி ஒளி ஏற்பட வழிசெய்து சமாதானத்தைப் போதித்தார். போருக்குத் தயாரான இரு நாகப் பிரிவுகளும் ஒன்றுபட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாயிருந்த இரத்தின சிம்மாசனத்தைப் புத்தருக்கு அளித்து அவரைச் சரணடைந்தனர். அவர்கள் அளித்த அமுதை உண்டுவிட்டு புத்தர் அவர்களைப் பௌத்தத்திற்கு மாற்றினார். அப்போரில் கலந்துகொள்ள கல்யாணி (களனி) நாக மன்னன் மணியக்கிகனும் வந்திருந்தான். அவன் மகோதரனின் தாய்மாமனாவான். அவன் மீண்டும் ஒருமுறை தமது நாட்டுக்கு வரும்படி புத்தரை வேண்டிக்கொண்டான். அதற்குச் சம்மதித்த புத்தர் மகத நாட்டு ஜேதவனத்திற்குத் திரும்பினார்.

               இச் சம்பவத்தை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை “வேக வெந் திறல் நாக நாட்டு அரசர் சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி” என்று குறிப்பிடுகின்றது. (மணிமேகலை - பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை)


               புத்தரின் மூன்றாவது வருகை அவர் 'ஞானம்பெற்ற 8ஆம் ஆண்டில்' நடந்தது. மணியக்கிகன் அவரைச் சந்தித்து தமது நாட்டிற்கு வரும்படி அழைத்தான். வைகாசி முழுமதி தினத்தன்று ஐந்நூறு பிக்குகள் புடைசூழக் கல்யாணி நாட்டிற்கு அவர் சென்றார். அங்கு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் பிக்குகளுடன் அமர்ந்தார். அவர் அமர்ந்த இடத்தில் பிற்காலத்தில் களனி ரஜமகா விகாரை கட்டப்பட்டது. நாகமன்னனின் உபசரிப்பிற்குப் பின்னர் அவர்களுக்கு உபதேசம் செய்தபின் சுமணகூட மலைக்குப் புறப்பட்டார். அங்கே தனது பாதச்சுவடுகளைப் பதித்தபின்னர் ஜேதவனத்திற்குத் திரும்பினார்.


               மேற்குறிப்பிட்ட சம்பவங்களைக் கூறும் மகாவம்சம் பொ.பி 5ம் நூற்றாண்டில் தாதுசேன மன்னன் காலத்தில் மகாநாம தேரரால் எழுதப்பட்டது. தேவநம்பிய தீசனால் ஸ்தாபிக்கப்பட்ட மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குகளால் காலத்துக்குக்காலம் நடைபெற்று வந்த நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுப் பேணப்பட்டுவந்தன. அவை அட்டகதா என அழைக்கப்பட்டன. இதனை மூலமாகக் கொண்டு மகாவம்சம் எழுதப்பட்டது.

               மகாவம்சத்தில் புத்தரின் மும்முறை இலங்கை வருகையைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் புத்தரின் போதனைகளின் தொகுப்பான திரிபிடகத்தில் அது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

               மகாவம்சத்தைப் பாளி மொழியிலிருந்து ஜெர்மன் மொழிக்கு 1908ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புச் செய்தவர் வில்லியம் கெய்கர் என்னும் ஜெர்மன் அறிஞராவார். அவர் மகாவம்சம் மொழிபெயர்ப்புக்கு வழங்கிய அறிமுகவுரையில் மகிந்தருக்கு முன்பும் பலர் இலங்கைக்குப் புத்தமதத்தைப் பரப்புவதற்கு முயன்றுள்ளனர் எனக் கூறியுள்ளார். மகிந்தர் அனுராதபுர மன்னனை வெற்றிகரமாக மதம்மாற்றியதாலேயே அவரது பெயர் நிலைத்திருப்பதாகக் கூறுகின்றார்.
(But at what result do we arrive if we put together these established facts and the mention of Ceylon in the earlier Asoka Inscriptions? Simply and solely that which is self- evident, namely, that before Mahinda relations existed between continental India and Ceylon and efforts were made to trans- plant the Buddhist doctrine to Ceylon. But with Mahinda this process comes to a successful end. We can understand therefore that all the interest became con- centrated in his person, and that tradition wrought together in dramatic fashion that which was a thing of slow con- tinuous development. But it shows us that, even from the point of view of the Chronicles of Ceylon, Buddhism was not quite unknown in that country already before Mahinda's time. - Mahavamsa : the great chronicle of Ceylon , Wilhelm Geiger, 1912)
               மகாவம்சம் குறிப்பிடும் புத்தரின் வருகை மற்றும் மகிந்தரின் வருகை காலத்திற்கு முன்பு பௌத்தத்தின் இலங்கை வருகை நிகழ்ந்திருக்கின்றது. புத்தரின் புனித கேசதாதுவை வைத்துக் கிழக்கிலங்கையில் ஒரு தூபியும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

               கௌதம புத்தர் நேபாளத்தில் சாக்கிய குல மன்னர் சுத்தோதனுக்கும் மாயாவுக்கும் சித்தார்த்தர் என்ற பெயரில் பிறந்தார். தனது 16ஆவது வயதில் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனைப் பெற்றார். தனது 29ம் வயதில் வாழ்க்கையின் துன்பங்களைப் பற்றி யோசிக்கவைக்கும் சம்பவங்களைக் கண்டார். குடும்பத்தையும் அரச சுகபோகங்களையும் விட்டு வாழ்வின் இரகசியத்தைத் தேடிக் கானகம் சென்ற சித்தார்த்தர் கடும்பட்டினியுடன் உடலை வருத்தித் தியானம் செய்தார். உடலை இறுக்கிக் கடுமையாக இருப்பதால் தான் தேடுவது கிடைக்காது என்று உணர்ந்துகொண்ட அவர், சுஜாதா எனும் சிறுமி கொடுத்த பாற்சோறு வாங்கி உண்டுவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார். 49 நாட்கள் தொடர்ந்த தியானத்தின் பின் வாழ்வின் உண்மையை உணர்ந்து ததாகரானார். அந்நிகழ்வே புத்தர் ஞானம் பெற்ற நிகழ்வாகக் கூறப்படுகின்றது. அவர் ஞானம் பெற்றபின் உண்ட முதலாவது உணவை வழங்கியவர்கள் தபுஸ்ஸ மற்றும் பல்லுக என்னும் இரு சகோதரர்கள்.

               தபுஸ்ஸ மற்றும் பல்லுக இருவரும் வர்த்தகத்திற்காக இந்தியா வந்த சகோதரர்கள். பல்வேறு நாடுகளுக்கும் பயணித்துவிட்டு மகத நாட்டின் தலைநகரம் ராஜகிருகத்திற்குச் செல்லும் வழியில் புத்தரைக் கண்டார்கள். போதிமரத்தடியில் ஞானம் பெற்ற நிலையிலிருந்த புத்தர் அவர்கள் வழங்கிய தேன் கலந்த அரிசி உணவை உண்டார். சகோதரர்கள் இருவரும் அவரின் சீடரானார்கள்.

               சிறிது காலத்தின் பின் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார்கள். தங்களுக்கு வணங்குவதற்காக ஏதாவது தரும்படி அவர்கள் கேட்க புத்தர் தனது தலையிலிருந்து எட்டுத் தலைமுடிகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.

               தங்கள் நாட்டிற்குத் திரும்பும் வழியில் அவர்கள் கிழக்கிலங்கையிலுள்ள திரியாய் என்ற இடத்தை அடைந்தனர். திரியாய் பிரசித்திபெற்ற நாகர் குடியிருப்பாகும். பண்டைய வர்த்தகத் துறைமுகத்துடன் குடியிருப்புக்களையும் கொண்டிருந்த திரியாயில் கந்தசாமிமலை என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குன்றில் அவர்கள் தங்கியிருந்து தமது வர்த்தக நடவடிக்கைகளைச் செய்தனர். வர்த்தகம் முடிந்தபின்னர் நாடு திரும்ப விரும்பிய சகோதரர்கள் புத்தரின் கேசதாது வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றபோது அதனை வைக்கப்பட்ட இடத்திலிருந்து தூக்க முடியவில்லை. அதன்பின்னர் அங்கே ஒரு சிறிய ஒரு தூபி கட்டப்பட்டு கேசதாதுவில் ஒருபகுதி அங்கே வைக்கப்பட்ட பின் அவர்கள் மீதியைக் கொண்டு தம்நாடு திரும்பினார்கள்.

கிரிகண்டிக சைத்தியம் எனும் அவ்விகாரை பொ.பி 8ம் நூற்றாண்டளவில் பெரிதாக்கிக் கட்டப்பட்டது. பல்லவர் பாணியில் அமைக்கப்பட்ட துவாரபாலகர் மற்றும் மகாயான பௌத்தத்தின் சுவடுகளை இன்றும் அங்கே காணலாம். ( அவலோகிதேஸ்வரர் - Icongraphy of Avalok Itesvara in Mainland South East Asia, Nandana Cūṭivoṅgs, 1984)
திரியாய் கிரிகண்டி சைத்தியம் (பட உதவி : Vathsala Karunanayake)

               பொ.பி 8ம் நூற்றாண்டில் ஆறாம் அக்கபோதி மன்னன் காலத்தில் பல்லவ கிரந்தத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டொன்று கிரிகண்டி சைத்தியத்தில் காணப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட தபுஸ்ஸ மற்றும் பல்லுக சகோதர்களால் இத் தூபி ஸ்தாபிக்கப்பட்டதை அக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. 


Tiriyay rock  inscription  - Epigraphia Zeylanica 4 - H. W. Codrington &   Paranavitana, S.

               இக்கதையின் ஒரு வடிவம் பர்மா ஷ்வேடகோன் தூபிக் கல்வெட்டில் காணப்படுகின்றது. (Ephigraphia Birmanica Vol I Part I) அதன்படி தபுஸ்ஸ மற்றும் பல்லுக பர்மிய வர்த்தகர்கள். புத்தரிடமிருந்து பெற்ற 8 முடிகளில் இரண்டை மகத மன்னன் அஜாத சத்ருவின் வேண்டுகோளிற்கிணங்க அவரிடம் கொடுத்தனர். அஜாத சத்ரு புத்தரின் நண்பரான பிம்பிசார மன்னனின் மகன். அதன்பின் கப்பலில் பயணம் செய்த அவர்கள் நாகநாட்டு மன்னன் ஜெயசேனனிடம் இன்னும் இரண்டை இழந்துவிட்டு பர்மா திரும்பினார்கள்.

               அங்கு ஆட்சிபுரிந்த ஓகலப்ப மன்னரின்(யாங்கன்) உதவியுடன் சிங்குட்தரா மலையில் எஞ்சிய முடிகளை வைத்துத் தங்கத் தூபி எனப்படும் ஷ்வேடகோன் தூபி கட்டப்பட்டது.

ஷ்வேடகோன்  தூபி

               பர்மிய அரசர்களின் வரலாறான The Glass Palace Chronicle கிரிகண்டி பற்றி இன்னொரு வரலாற்றைக் கூறுகின்றது. ( Glass Palace Chronicle Of The Kings Of Burma ,1924, Page 94) தபுஸ்ஸ மற்றும் பல்லுக வுக்குத் தெரியாமல் நாக அரசன் ஜெயசேனன் புனித கேசதாதுவைத் திருடியதாகவும் , அது பின்னர் காவந்தீச மன்னன் காலத்தில் (பொ.பி 2ம் நூற்றாண்டு) அது தோண்டியெடுக்கப்பட்டு சேருவில் மங்கள மகா விகாரை கட்டப்பட்டதாகவும் கூறுகின்றது. உருகுணையை ஆண்ட காவந்தீச மன்னன் புகழ்பெற்ற துட்டகைமுனு மன்னனின் தந்தையாவான். இதன்படி கிரிகண்டிக சைத்தியம் கட்டப்பட்ட காலத்தில் திரியாய் நாக மன்னன் ஜெயசேனனால் ஆளப்பட்டிருக்கின்றது.

               திரிபிடகத்தின் விநயபிடகம் - மகாவிபங்க பகுதியிலும் தபுஸ்ஸ மற்றும் பல்லுக சகோதரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். (The Book of the discipline (Vinaya-pitaka) Vol iv ( Mahavagga) - Horner, I. B , 1962 - Page 5)

               பொ.பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங் தபுஸ்ஸ மற்றும் பல்லுக சகோதரர்கள் பற்றிக் குறிப்பிடும் போது கேசதாதுவைக் கொடுத்த புத்தர் தனது ஆடையைச் சதுரமாக மடித்து அதன் மேல் பிச்சைப்பாத்திரத்தைத் தலைகீழாக வைத்து ஸ்தூபி உருவாக்கும் மாதிரி உருவையும் அவர்களுக்குப் போதித்தாகக் குறிப்பிடுகின்றார். (Relics of the Buddha - By John S. Strong, Stephen Teiser , 2004)

               இலங்கையில் மட்டுமல்ல உலகத்திலேயே முதன்முதலில் கட்டப்பட்ட புத்த ஸ்தூபி மற்றும் புத்தரால் அதன் வடிவமைப்புக் கூறப்பட்டு அதன்படி கட்டப்பட்டது என்ற பெருமையும் திரியாய் கிரிகண்டி சைத்தியத்தையே சாருகின்றது என்று John S. Strong தனது Relics of the Buddha புத்தகத்தில் குறிப்பிடுகின்றார் .

               திரியாய் கந்தசாமி மலையில் வேறு இரண்டு பிராமிக் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று பேராசிரியர் செ.பரணவிதான Epigraphia Zeylanica 4இல் கூறுகின்றார். அதில் ஒன்று கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தையது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு மற்றும் அவலோகிதேஸ்வரர் வழிபாடு நிலவியிருந்ததை வைத்து மகாயான பௌத்தத் தலமாக கிரிகண்டிக விகாரையைக் குறிப்பிடுகின்றார். 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பூஜாவளியவும் இச்சம்பவத்தைக் குறிப்பிடுவதாக அவர் மேலும் கூறுகின்றார்.

(பொது யுகத்திற்கு முன்(கிறிஸ்துவுக்கு முன்) எழுதப்பட்ட பிராமிக் கல்வெட்டில் ”உதியனின் மகளின் குகையும் பிகல அனுதியின் குகையும் சங்கத்தாருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டதைக்” கூறுகின்றது எனப் பேராசிரியர் செ.பரணவிதான குறிப்பிடுகின்றார். - Ceylon Journal of Science Section G Vol 2 Page 117)

               மகாவம்சத்தின் படி இலங்கையின் அரச வம்சம் விஜயன் வருகையுடனே ஆரம்பிக்கின்றது. புத்தர் தனது 80 ஆவது வயதில் இரட்டைச் சாலமரத்தடியில் பரிநிர்வாணம் அடைந்த நாளில் இலங்கைக்கு விஜயன் வந்ததாக மகாவம்சம் 7ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (விஜயன் வரும்போது இலங்கையை காளிசேன நாகன் ஆண்டதாக மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடுகின்றது. ) புத்தர் ஞானம் பெற்றுச் சில ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மேற்குறிப்பிட்ட சம்பவங்களைத் தொகுத்துப்பார்க்கும் போது விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இயக்க, நாக, தேவ வம்சங்களால் பௌத்தம் பின்பற்றப்பட்டமை தெளிவாகின்றது.

முடிவுரை:
               இலங்கையில் பிரபலமாகக் காணப்பட்ட பௌத்த பிரிவுகள் தேரவாத மற்றும் மகாயானமாகும். தென்னிந்தியாவிலிருந்து பரவிய மகாயான பௌத்தம் மகாசேனன்(பொ.பி 325-352) காலத்தில் வலுவாகக் காணப்பட்டது. ( மட்டக்களப்பு மான்மியம் மகாயான பௌத்தத்தை வைதூலிக சைவம் எனக் கூறுகின்றது ) . மகாசேனனின் தேரவாத எதிர் நடவடிக்கைகளால் தேரவாத – மகாயான பூசல் உச்சத்தை எட்டியது. பின்னர் பொ.பி 12 ம் நூற்றாண்டளவில் மகா பராக்கிரமபாகுவினால் இலங்கையில் தேரவாதம் மீண்டும் முக்கியத்துவம் பெற்று மகாயானம் வலுவிழந்துவிடுகின்றது .

               வடக்கு மற்றும் கிழக்கிலங்கைக் கந்தரோடை, வல்லிபுரம், திரியாய் , குச்சவெளி போன்ற பிரதேசங்களில் கிடைத்த சாசன ஆதாரங்களின்படி இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களில் பொ.பி 10 ம் நூற்றாண்டு வரை மகாயான பௌத்தம் பரவலாகக் காணப்பட்டுள்ளது.

               மகாவம்சம் எழுதப்பட்டது தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றும் பிக்குகளின் பிரதான தலமான மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குவான மகாநாமதேரரால் ஆகும். மகாயான- தேரவாதப் பூசலின் விளைவாக மகாயானப் பௌத்த முக்கிய தலங்களை முன்னிலைப்படுத்தாமல் தேரவாதத் தலங்களை முன்னிலைப்படுத்தும் போக்கு மகாவம்சத்தில் காணப்படுகின்றது. கிரிகண்டி சைத்தியம் ஸ்தாபிக்கபட்ட நிகழ்வும் மகாவம்சத்தில் காணப்படவில்லை.

               இலங்கையில் அசோகனுக்கு வெகுகாலம் முன்பே பௌத்தத்தின் அறிமுகம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான கிரிகண்டிக சைத்தியம் ஸ்தாபிக்கப்பட்ட நிகழ்வு இலங்கை வரலாற்றில் மகாவம்சத்தின் ஒளியின் முன் மங்கியே காணப்படுகின்றது. 




உசாத்துணை நூல்கள்:
1. Mahavamsa : the great chronicle of Ceylon , Wilhelm Geiger, 1912
2. மகாவம்சம் எஸ். சங்கரன்,  1962
3. Epigraphia Zeylanica 4 1904-1934,  H. W. Codrington &   Paranavitana, S. 
4. Glass Palace Chronicle Of The Kings Of Burma ,1924
5. Ephigraphia Birmanica Vol I Part I
6. The Book of the discipline  (Vinaya-pitaka) Vol iv ( Mahavagga) - Horner, I. B , 1962
7. மட்டக்களப்பு மான்மியம்  , எவ். எக்ஸ். சி. நடராசா - 1998


தொடர்பு: ப. முகுந்தன் (mukunthan@gmail.com)







எங்கோ ஒரு பெண்


——    பழமைபேசி


எங்கோ ஒரு பெண், 
குடத்தை எடுத்து வருகையில் 
கால் இடறிக் கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
குழாயடியில் வேசிப்பட்டம் சுமந்தபடி 
குடத்தைத் தூக்கித் தலையில் 
வைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,  
பனிக்குடம் உடைந்து நீரொழுக நீரொழுக 
குடம் தண்ணீரைச் சுமந்தபடியே 
வந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்
முறைவிட்டுக் கொடுக்காததில்
படுத்தெழுந்ததாய்ப் பட்டங்கள் சூட்டப்பட்டு
மகனின் முகம் பார்க்கவியலாமல்
குமைந்து குறுகிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
மணிக்கணக்கில் குடம் தூக்கியபடி இருக்க 
ஊட்டமின்றிச் சுருண்டு 
கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
மூச்சடக்கி மூச்சடக்கிச் சுமந்ததில்
நெஞ்சுதூர்ந்து செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
தண்ணீரெனக் கடன் ஒத்திப்போட்டத்தில் 
நஞ்சேறிப் பிணியேறிச் செத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
உறக்கமின்றி எழுந்தெழுந்து எதிர்நோக்கி
குழாயும் கண்ணுமாய்ச் செத்துச் செத்து 
பிழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
சிந்திய நீரில் கால்வழுக்கி 
குடத்தோடு விழுந்ததில் 
விலா எலும்பை முறித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
தண்ணீர்ப் பணியால்
கல்வி சறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ச் சிந்தையினால்
வேலையிடத்தில் கவனமிழந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
ஊட்டமும் சத்துமின்றி 
தண்ணீர் சுமந்து 
தண்ணீர் சுமந்து கொண்டிருந்ததில் 
பார்வையைத் துறந்து கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண்,
தண்ணீர் வருமெனச் சொல்லி
உறவுக்காரர் கடைசிமுகம்
பார்க்காமற் தவித்துக் கொண்டிருக்கக்கூடும்!

எங்கோ ஒரு பெண், 
ஒரு வண்டித் தண்ணீரைக்காட்டி 
அத்துமீறும் ஆடவனிடத்தில் 
தன் மகளையே இழந்து கொண்டிருக்கக்கூடும்! 

எங்கோ ஒரு பெண், 
ஊர்வம்பு இழுத்துட்டு வராம இருக்கமாட்டியாவென
யாருக்கு வேண்டுமெனச் சுமந்தாளோ அவனிடமே
அறைபட்டு அழுத கொண்டிருக்கக்கூடும்!

அந்தப் பெண்
உன் வீட்டவளாகவும் இருக்கலாம்!!




தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)




அறவாழி அந்தணன்

அறவாழி அந்தணன்

பேரா. Dr. கனக. அஜிததாஸ், M.Sc., M.Phil., D.H.Ed., Ph.D.,


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


                          திருக்குறள் என்ற ஒப்பிலா நூல் மெய்ப்பொருள் காட்டி உயிர்களனைத்துக்கும் அரண் செய்து வழிகாட்டும் ஓர் உயிர்த்துணை நூல். துன்பங்களின்று விடுதலை காண வழிகள் கூறும் உபாய நூல்; மனிதனை எவர்க்கும் - ஏன்? இறைவர்க்கும் அடிமையில்லை என்று சிந்திக்க வைத்துத் தன்முயற்சி யாளனாக்கும்  உறுதி உரைக்கும் நூல். இத்தகு சிறப்பு வாய்ந்த திருக்குறள் போற்றும் நெறி எது? போற்றும் கடவுள் யார்? என்பதை அறிய கடவுள் வாழ்த்தில் முதலில் புகுவதைத் தவிர்த்து உட்புகுதல் வேண்டும். ஏனெனில் திருக்குறள் வாழ்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய பெயர்களில் திருக்குறள் போற்றும் நெறிகள் அடங்கியுள்ளன. திருக்குறள் நெறியை உள்ளவாறு அறியாதவர்களுக்கு இப்பெயர்களில் அடங்கியுள்ள மறைபொருள் அறியப்படாத ஒன்றே! 

                          கொல்லாமை, வாய்மை, புலால் உண்ணாமை, உயிர்ப்பலி ஓம்பாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, அவாவறுத்தல்,  மிகுபொருள் விரும்பாமை, உழவின் மேன்மை, இருவினை, தவத்தின் மாட்சி, தீவினையஞ்சுதல், தவமுடையார்க்கு உடம்பும் மிகை என்ற திகம்பரத் துறவு முதலானவற்றையெல்லாம் பட்டியலிட்டுப் பரத கண்டத்தின் சமயங்களில் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு மேற்குறிப்பிட்ட கொள்கைகளை முன்னுக்குப்  பின் முரண் என்பதே இல்லாமல் முக்காலத்தும்,  எவ்விடத்தும் முழுதுமாகத் தம் நெறியின் அடிப்படை-அச்சு இவை என உறுதிபடக்கூறும் தகுதி படைத்த சமயம் எது என வினவினால் ஒரே ஒரு நெறியினர்-அருகர் நெறியினர் மட்டுமே-இக்கொள்கைகள் எமது எனக் கூறமுடியும். அஃது அறவாழி அண்ணலாகிய ஆதிபகவன் காட்டிய நெறியாகும்.

                          திருக்குறளின் சுவடுகள், திருக்குறளார் வழி வந்த நூல்களில் - சிலம்பில், சிந்தாமணியில், சூளாமணியில், நாலடியில், அநநெறிச் சாரத்தில், அருங்கலச் செப்பில், ஏலாதியில், சிறுபஞ்ச மூலத்தில், வளையாபதியில், மேருமந்தரத்தில், ஸ்ரீபுராணத்தில்,  மகாபுராணத்தில், இரத்தினகரண்ட சிராவகாசாரத்தில்,  சமயசாரத்தில், தத்வார்த்த சூத்திரத்தில் என எல்லாவற்றிலும் அருக-நெறி நூல்கள் அனைத்திலும் மிகத் தெளிவாக உள்ளன. சிலவற்றில் திருக்குறளின் அதிகாரங்கள் அப்படியே உள்ளன! அருக நெறியினர்க்கு இதுவியப்பல்ல! திருக்குறளின் சுவடுகள்-திருக்குறளின் பிரதி பிம்பங்கள் பின்னரெழுந்த சமண நூல்கள் அனைத்தும். அப்படியெனில் திருக்குறள்? ஆம்! ஆதிபகவன், அறவாழி அந்தணன் உரைத்த அறநெறிகளின் பிரதிபிம்பமே திருக்குறள்! எனவேதான் திருக்குறளின் ஆசிரியர் - தம் பெயர் குந்தர் குந்தர் என்றபோதிலும், ஆக்கியோன் தான் எனத் தன் பெயரிடாது பேரறம் புரிந்தார்! என்னை? ஆம்! ஆதிபகவனே; அறவாழி அந்தணனே திருக்குறளின் மூலாசிரியன்! பேராசிரியன்!

                          இனி, ‘அறவாழி அந்தணன்’ என்ற பெயரின் மறை பொருளையும், இப்பெயருக்குரிய பெரியோன் யார்? என்பதையும் காண்போம். திருக்குறள் போற்றும் இறைவனது பெயர்கள் அருகநெறியினர் நன்கு அறிந்தவையாகும். நாள்தோறும் செய்யப்படும் வழிபாட்டில் கையாளப்படும் சொற்களே இவை. ஜினாலயங்கள் சிலவற்றில் எழுந்தருளியிருக்கும் அருகப் பெருமானது பெயர்களில் (ஆதிபகவன், ஆதிபட்டாரகன், ஆதிநாதன் எண்குண இறைவன்), தத்தம் குழந்தைகளுக்கு சூட்டி மகிழும் பெயர்களில் திருக்குறள் பெயர்களும் (ஆதிநாதன், அறவாழி) உள்ளன. திருக்குறள் இறைவன் பெயர்கள் சமணர் நூல்களில் எல்லா மொழி நூல்களிலும் மிகவும் சரளமாகக் கையாளப்படும் பெயர்களே.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

                          என்பது அருகப் பெருமானை நன்றியின் பொருட்டுத் தேவர் பெருமான் போற்றி வணங்கும் பாடலாகும். 

                          அறவாழி என்பது யாது? அறவாழி என்பதற்கு அறக்கடல் என்றும் அருட்சக்கரம், தரும சக்கரம் என்றும் இருபொருள்கள் தரப்படுகின்றன. திருக்குறளாசிரியர், இங்குக் குறிப்பிட்டுள்ளது அருட்சக்கரத்தையே என்பது கீழ்க்கண்ட பலகாரணங்களால் தெளிவாகிறது. இச்சான்றுகளை அறிந்து கொள்ள ஊகமோ, ஆழ்ந்த சிந்தனையோ, பிறர்கூறுவதில் நம்பிக்கையோ தேவையில்லை. நேரடியாக, தம் கண்களால் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம்! என்னதாம் அச்சான்றுகள்? இந்த அறவாழி என்பது எல்லா ஜிளாலயங்களிலும் (அருகப்பெருமான் ஆலயங்களில்) உலோக பிம்பமாக சமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தரும சக்கரம் என்பர். இது ஜிநதருமமத்தின், அருக நெறியின் பிரதி பிம்பமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஜினாலயத்திலும் நவதேவதை (அ) உயரிய ஒன்பது என்ற வழிபாடியற்றப்படும் படிமங்கள் உள்ளன. இந்த உயரிய ஒன்பதாவன:   அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள் ஆகிய பஞ்ச பரமேஷ்டிகள், ஜிநதருமம் (தருமசக்கரம்) ஜிந ஆகமம், ஜிநர் படிமம், ஜினாலயம் என்பனவாகும். இவற்றில் ஜிநதருமம் என்பது தரும சக்கரமாகவே உருவகப்படுத்தப் பட்டுள்ளதை நேரடியாக, கண்களாற் கண்டு அறிந்து கொள்ளலாம். வழிபட ஓதும் மந்திரங்களைக் கேட்டு உண்மையைத் தெளியலாம். எனவே அறவாழி என்பது தருமசக்கரம். அருகர் நெறியின் பிரதி பிம்பம் என்பதே உண்மை. இதுமட்டுமன்றி, தரும சக்கரம் என்பது தனிப்படிமமாகவே உருவாக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுவதையும் இன்றும் ஜினாலயங்களில் காணலாம். 

                          ஜினாலயங்களில் உள்ள கொடித்தூண் (துவஜஸ்தம்பம்) அடிப்பாகத்தில் பொறிக்கப்படும் திருஉருவங்களில் அறவாழியும் ஒன்றாகும். ஜினாலயங்களில் உள்ள அருகர் படிமைகளின் வலப்புறத்தில், அப்பெருமான் பக்கத்தில் அறவாழி நிறுவப்பட்டுள்ளதைக் கண்கூடாகக காணலாம். அருகப் பெருமான் திருவுருவம் உள்ள பீடத்தில் அறவாழி பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

வழிபடும் ஓவியத்தில் அறவாழி:
                          தீர்த்தங்கரர் ஆகக் கூடிய வினை பெற்ற மாபெரும் துறவி, வாலறிவு பெற்றவுடன் அருகப் பெருமான் எனப் போற்றப்படுகிறார். அப்போது அவர் அறமுரைத்திட சமவசரணம் என்னும் ஒப்பரிய திருநிலையம் ஏற்படுத்தப்படுகிறது. ஆங்கே அந்தத் திருநிலையத்தின் மையத்தில் அமைந்துள்ள மூன்று மேடைகளில் உச்சி மேடையில் தாமரை மலர் மீது நான்கு விறற்கடை விட்டு மேலே அருகப் பெருமான் எழுந்தருளி அறவுரைபகர்வார். இத்தகு சிறப்பு வாய்ந்த மூன்று மேடைகளில் - அடியில் உள்ள முதல் மேடையின் நான்கு புறங்களிலும், தர்ம சக்கரங்கள் பக்கத்திற்கு ஒன்றாக இருக்கும். இதனைத் தேவர்கள் தாங்கி நிற்பர் (மஹாபுராணம், ஸ்ரீபுராணம், கிரியாகலாபம், மேருமந்தரபுராணம்). இந்தச் சமவசரண அமைப்பு ஜைனர்களின் இல்லங்களிலும்,  ஜினாலயங்களிலும், திருமலை போன்ற மலையில் உள்ள குகை ஓவியங்களிலும் காணலாம். சமவசரணம் வழிபாடு செய்யப்படுவதை, வணங்கப்படுவதைத் திருக்குறள் ஆராய்ச்சி அறிஞர்கள் தம் கண்களால் கண்டு மகிழலாம். மேலும், அருகப்பெருமானாகிய அறவாழி அந்தணன், ஆதிபகவன் அறஉரை பகர பல இடங்களுக்கும் எழுந்தருளும்போது அவர்முன் அறவாழி செல்லும்  என்பதைச் சமண சமய சமஸ்க்ருத, தமிழ் நூல்கள் விவரிக்கின்றன. 

                          இவ்வாறு அறவாழி என்பது தருமசக்கரமாக, அருட்சக்கரமாக, அருகப் பெருமானுடைய மங்கலச் சின்னங்களில் ஒன்றாக, பொருள் கொள்ள அழுத்தந்திருத்தமாக ஆதாரங்கள் பல உள்ளன. ஊகத்துக்கு இடமின்றி, நேரடியாகக் கண்டு அறிந்து கொள்ளக் கூடிய ஆதாரங்கள் இவை. எனவே அறவாழி என்பது அருட்கடல் அறக்கடல் என்று உரைப்பது. இங்கு, திருக்குறளில் பொருத்தமாக இல்லை. ‘கௌ’ என்றபதத்திற்கு நீர், வாக்கு, பூமி, பசு, திக்கு, மயிர், வஜ்ரம், ஆகாசம், அம்பு, கிரணம் ஆகிய பல பொருள்கள் இருப்பினும் வழக்கத்தில், பழக்கத்தில் இருப்பதைக் கொண்டு ‘பசு’ என்று பொருள் கொள்வதுதானே சிறப்பு; உயிரின் குணங்கள் பலவாயினும் அதனைக் குறிப்பிடும்போது ‘அறிவுள்ளது’ என்று கூறுவது தானே சாலப் பொருந்தும். எனவே திருக்குறளில் ஆளப்பட்டுள்ள அறவாழி என்ற சொல் தருமசக்கரத்தையே குறிக்கும் என்பதில் ஊகத்திற்கு சிறிதும் இடமில்லை.  திருக்குறளாசிரியர் அருகநெறியாளர். அவர் முன்னோர் அருகப் பெருமானை எவ்வாறு கண்டனரோ, சிறப்பித்தனரோ, வியந்து வாழ்த்தினரோ அவ்வாறே இவரும் தன் ஒப்பற்ற ஞானத்தினால் அருகப் பெருமானை காண்கிறார்-சிறப்பிக்கிறார் -வாழ்த்துகிறார்.  திருக்குறளாசிரியர் பின் வந்த அருகநெறியினரும் இவர் போன்றே இன்றும் ஆதிபகவனை அறவாழி அண்ணலாகவே காண்கின்றனர். சிறப்பிக்கின்றனர், விதந்து போற்றுகின்றனர். பரிமேலழகரும், பிற சான்றோர்களும் அறவாழி என்பதற்கு வேறு பொருள் உரைக்கிறார்களெனில் அது ‘அறிபவருடைய அபிப்ராய’மாகும்.

                          திருமால் கரத்தில் ஆழி உள்ளதே! அது அறவாழியாகாதோ? என்று கருதுவது இயற்கையே ! திருக்குறள் கூறும் நெறி ‘தவத்தோர்க்கு உடம்பும் மிகை’ என்ற முழுத்துறவு நெறி! இப்படியிருக்க, பகையாக எண்ணும் சில உயிர்களை வதை செய்யவே திருமால் கையிலேந்தப்பட்ட ஆழியைத் திருக்குறளார் குறிப்பிடுவது எங்ஙனம்? எனவே திருக்குறளாசிரியர் குறிப்பிடும் ஆழி ஆதிபகவனுடைய -அருகப் பெருமானுடைய அறவாழியே. 

                          அடுத்து, அந்தணன் என்ற சொல் மிகச்சிறந்த உயரிய நெறிகளைக் கைக்கொண்டொழுகும் பெரியோனைக் குறிக்கும். அந்தணன் என்போன் அறவோன்; செந்தண்மை பூண்டொழுகுபவன்; இங்குத் திருக்குறளிள் குறிப்பிடப்பட்டுள்ள அந்தணன், பெரியோர்க்கும் பெரியோன்; அறிவினாலறியாத அறிவன்; அறவேந்தன்; ஏனெனில் இவன் அறவாழியை உடையோன் ஆதலால்; அறவாழி உடைய சிறப்பு அருகப் பெருமான் ஒருவர்க்கே உண்டு. வாலறிவு பெற்ற அந்தணர் ஒருவர்க்கே அறவாழி சிறப்பு உண்டு. ‘ஆதிக்காலத்து அந்தணன்’ என ஆதிபகவனைத் திருத்தக்கதேவர் போற்றி மகிழ்வதை சிந்தாமணியில் காணலாம். அடுத்து பிறவாழி என்பது பிறவிக்கடல் என்றும் பொருள் மற்றும் இன்பக்கடல் என்றும் விளக்கப்படுகின்றது. பிறவிக்கடல் என்று பொருள் கொண்டாலும், பிறவியை ஏற்படுத்தக் கூடிய பொருளும், உலகவியல் இன்பமும் என்றும் பொருள் கொண்டாலும் இக்குறளுக்கு ஒப்ப அமைகிறது. எனினும் கடவுள் வாழ்த்துப் பாக்களில் இறுதிப் பாவாகிய பிறவிக்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்பதில் பிறவிக்கடல் என்ற ஆளுகை இருப்பதால், அறவாழி அந்தணன் என்ற குறளில் இதே கருத்தை முன்கூறி பின்னரும் குறிப்பிடுவாரோ ஒப்பற்ற ஞானியாகிய குந்தகுந்தப் பெருமான் என்று வினா எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இரண்டு இடங்களில் ஒருபொருளை விளக்கினார் என்பதைவிட, ஒவ்வொரு குறளிலும் வெவ்வேறு அறநெறிகளைக் குறிப்பிட்டுள்ளார் என்பது சிறப்பான சிந்தனையன்றோ? நல்வினையையே ஒரு கட்டத்தில் விலக்கும்போது பொருள், இன்பம் இவற்றை விட்டொழிக்க வேண்டுமன்றோ? பொருள் மற்றும் இன்பக் கடலினின்றும் தப்பி வெளியேறிட அற வேந்தன்தாள் துணையாம். அதன்பின் எய்துவது வீடன்றோ?

அறவாழியும் அருகனும், பிறகடவுளர்களும்: ஓர் ஒப்பாய்வு  
                          தமிழில் இலக்கணம், இலக்கியம் போன்றே முக்கியமான அங்கமாக இடம்பெறுவன நிகண்டுகளாகும். அறவாழி அண்ணல் என்பது அருகன் திருநாமங்களில் ஒன்றென நிகண்டுகளில் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கண்டபின் வேறெந்தக் கடவுளர்க்கு ஆழி உள்ளதென்பதையும், அது அறவாழியா மறவாழியா என்பதையும் திருக்குறள் நெறிநின்று காண்போம். சொற்களின் பொருள்களை அறிய தெளிவுபெறத் துணையாய் நிற்பவை, நிகண்டுகள் ஆகும்.

நிகண்டுகளில் ‘அறவாழி’ என்ற பெயர் யாருக்கு?     
                          திவாகரத்தில் 43 பெயர்கள் அருகனுக்குக் குறிப்பிடப் பட்டுள்ளன. குறட்பெயர்கள் பலவும் உள்ளன. அவற்றில் அறவாழி அந்தணன் என்ற பெயரும் உண்டு.
அருகன் பெயராக
                          அறவாழி அந்தணன் (திவாகரம்)
                          அருளாழிவேந்தன் (திவாகரம்)
                          அறவாழி வேந்தன் (பிங்கலம், சூடாமணி நிகண்டு)
                          அறவாழி அண்ணல் (கயாதரம்)
                          அறத்தினாழியன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          படையிலி (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          கொல்லாவேதன் (சூடாமணி நிகண்டு)
                          சாது (சூடாமணி நிகண்டு)
                          தருமராசன் (சூடாமணி நிகண்டு)
                          அருட்கொடையாளன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          அறத்தின் மன்னன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          ஆழியன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          கொல்லா மறையோன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          பொறையன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)

                          இதுவரை அருகனுக்கு அறவாழியந்தணன் என்ற பெயர் எந்தெந்த நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளன என்று பார்த்தோம்.

                          பிறநெறிக் கடவுளர்க்கு இந்தப் பெயர் எந்தெந்த நிகண்டுகளில் உள்ளதென்பதைக் காண்போம்.

சிவபெருமானுக்கு பொருந்துமா?                          
                          சிவபெருமான் குறித்து அறவாழி அந்தணன் என்ற பெயர் திவாகரத்தில் - ஒன்றுமேயில்லை.

                          ஆனால் அரவாபரணன், அழலாடி, அழலேந்தி, ஆனையுரித்தோன், ஈமத்தாடி, கபாலமூர்த்தி, கறைமிடற்று அண்ணல், சடையோன், சுடலையாடி, நாரிபாகன், நீறணிகடவுள், பரசுபாணி, பிறைசூடி, பினாகபபாணி, புலித்தோலுடையோன், பேயோடாடி, மழுவாளி என்ற நாமங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகின்றன. சிவனார் நெறியின் தத்துவத்தை உணர்த்தும் பெயர்களாக இவை இருக்கும் நிலையில், குறள் நெறிக்கு குறள் அதிகாரங்கள் பலவற்றிற்கு மாறானவை இப்பெயர்கள் என்பதும் வெள்ளிடைமலை. இதுபோன்றே பிற நிகண்டுகளிலும் பிறைசூடிய பெருமானுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன.

திருமாலுக்குப் பொருந்துமா?
                          சக்ராயுதன், ஆழிப்படை உடையவன் என திருமால், திவாகர நிகண்டில் குறிக்கப்படுவதால் அறவாழி அந்தணன் என்ற பெயரை இது குறிப்பிடாதோ என எண்ணுவது இயல்பே. திருமால் தன் கையில் தரித்திருப்பது அறவாழியன்று, அறத்தை நிலைநாட்ட பிறரைக் கொல்வதற்குத் தரித்த மறவாழி என்றே திருமாலின் திருத்தொண்டர்கள் கூறியுள்ளனர் என்பதை அறிஞர் மயிலை சீனி, வேங்கடசாமி அவர்கள் தமது அறவாழி அந்தணன் என்ற கட்டுரையில் தெளிவுபட விளக்கியுள்ளார்.

                          “அடலாழி ஏந்தி அசுரர் வன்குலம் வேர் மருங்கறுத்தாய்” என்றும், “அமர்கொள் ஆழி” என்றும், “கனலாழிப் படையுடையவன்” என்றும், “கொலை ஆழி” என்றும், “கூர் ஆழி” என்றுத் “கனலாழிப் படையுடையவன்” என்றும் “பேராழி கொண்ட பிரான்” என்றும் “ஊன்திகழ் நேமி” என்றும், “ஈர்க்கின்ற சக்கரத்தெம்மான்” என்றும் திருமாலின் ஆழி (சக்கரம்) படை என்றே வர்ணிக்கப்படுகிறது” என்பதை மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். எனவே அறவாழி யந்தணன் என்ற பெயர் சிவபெருமானுக்குப் பொருந்தாமை போன்றே திருமாலுக்கும் பொருந்தாமை தெளிவாகிறதன்றோ? 

புத்த பிரானுக்குப் பொருந்துமா?
                          புத்த பிரானுக்கு நிகண்டுகளில் அறவாழியன் என்ற பெயரேதுமில்லை யெனினும் மணிமேகலைக் காப்பியத்தில் அறக்கதிராழியுருட்டுவோன் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புத்த தேவன் எனும் போதே அருள் வடிவம் தோன்றுவது குறித்து அருள் நெறி சுரக்கும் செல்வன், அருளிடுவோன், அருளின் படிவன், அறத்தின் வேந்தன், தருமன், தருமராசன் என நிகண்டுகள் போற்றுகின்றன. ஆனால் புலால் மறுத்தலை கொல்லாமையை, வினைக் கொள்கையைப் போற்றாமையால், குறள் நெறியும், குறளின் இறைவனது பெயர்களும் இப்பெருமானுக்குப் பொருந்தாமை வெள்ளிடைமலை.

                          எனவே, பழைய நிகண்டுகளில் குறள் வாழ்த்தும் இறைவனது பெயர்கள் அருகதேவனுக்குக் குறிக்கப்பட்டிருப்பதையும், இதே நிகண்டுகளில் குறள் கூறும் இறைவனது பெயர்கள் பிறகடவுளர்க்குக் குறிப்பிடப்படாமையும், அதுமட்டுமன்றிக் குறளின் நெறிக்கு மாறான பொருள் உடைய திருப்பெயர்கள் அருகனல்லா பிற கடவுளர்க்கு அக்காலத்திலேயே வழங்கி வந்துள்ளமையும் திருக்குறள் அருகநெறி நூல் என்பதற்கு அழுத்தமான சான்றாகும்.

                          திருக்குறள் கடவுள் வாழ்த்து அருகக் கடவுளைச் சார்ந்த தென்பதையும் மற்ற அதிகாரங்களில் உள்ளவை அருகநெறிகள் என்பதையும் விளக்கும் பொருட்டே இதர சமயங்களை ஒப்பிட வேண்டியதாயிற்று. இது தெளிவு கொள்ளவே யன்றிப் பிற சமயங்களையோ, பிற கடவுளர் களையோ குறை கூற அல்ல என்பதை உளத்தூய்மையோடு கூறுவதில் மனநிறைவேற்படுவது உண்மை.

                          இப்போது, அறவாழி அந்தணன், அறம் அருளியவன் என்பவை சமண சமய தமிழ், சமஸ்கிருத, பிராக்ருத இலக்கியங்களில், தத்துவ நூல்களில், சரளமாகக் கையாளப்பட்டுள்ளதை காணலாம்.

சீவக சிந்தாமணியில்;
                          ஆதிக்காலத்து அந்தணன் (சீவக. 366)
                          கொலையிலாழி வலனுயர்த்த குளிர் முக்குடையினிழலோய்நீ   (சீவக. 1244)
                          மறுவற வுணர்ந்தனை மலம் அறு திகிரியை (சீவக. 2563)
                          அறவாழி யண்ணல் இவனென்பர் (சீவக.1611)
                          அருமறை தாங்கியி அந்தணர் தாதையை (சீவக.2561)
                          தண்மதிபோல் நேமி அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீயே  (சீவக. 1246)
                          திருவறம் வளர்க (சீவக. இறுதி வாழ்த்து
                          ஆதிவேதம் பயந்தோய்நீ (சீவக. 1242)
                          உலகமிருள் கெடவிழிக்கும் ஒண்மணி அறவாழி 
                          அலகையிலாக் குணக்கடலை (சீவக. முக்தி 425)

சூளாமணியில்; 
                          ஆதிநாள் அறக்கதிர் ஆழி தாங்கிய சோதியான்                          (சூளா.மந்திர 147)
                          அழல் அணங்கு தாமரை ஓர் அருளாழி உடையகோன் (சூளா-1039)
                          ஆழி அறவரசே (சூளா-1913)
                          ஆர் அழல் அம்சோதி வாய்சூழ்ந்த அருள் ஆழியானை  (சூளா-1907)
                          ஓர் அருள் ஆழியை (சூளா-216)
                          அறவாழி (சூளா-156-158)
                          அருமறையை விரித்தாயை (சூளா-184)
                          விளியாத மெய்ப் பொருளை நீவிரித்தாள் (சூளா-1906)
                          ஊழி மூன்றாவது ஓய்ந்து இறுதி மன்னுயிர்
                          சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
                          ஏழ்உயர் உலகுடன்பரவ ஈண்டு அருள் 
                          ஆழியாங் கிழமையெம் அடிகள் தோன்றினார்  (சூளா394)
                          ஆதி பகவன் குறித்த அற்புத வர்ணனை). இதன் வரலாறு அருகநெறியாளரே அறிகுவர்.
                          அருள்புரி அழலஞ்சோதி ஆழியான் (சூளா.துறவு. (27))
                          அருளாழிமுன் செல்லப் பின் செல்வதென்னோ
                          வடிப்படாதாய் நின்ற வகன் ஞால முண்டோ (சூளா-துறவு-68)
                          தாமரையி னங்கணடி வைத்தருளு மாதியா யாழி
                          யறவரசே யென்று நின் னடிபணிவ தல்லால் (சூளா. துறவு 73)
                          பகைநாறும் அயிற் படைகள் பயிலாத திருமூர்த்தி (சூளா.183)

மேருமந்தர புராணத்தில்; 
                          அறவேந்தனே (மே.பு.634)
                          அறிவன் நீயே (மே.பு.999)
                          மறமிலிவிலாழியுடை மன்னவன் (மே.பு.1042)
                          சம்பவன் முன்பு நின்ற தருமச் சக்கரத்தினும்பர் (மே.பு.1189)
                          பெருமையொடு மங்கலங்களறவாழி (மே.பு.1195)

அப்பாண்டை நாதர் உலாவில்; 
                          சினதர்மசக்கரத்தன் (10)
                          அருட்கடலுமாயினோன் (19)
                          அருளாழியான் (24)
                          அறவாழியான் (24)
                          தருமக்கடலான் (58)
                          நன்மையறவாழி நடக்க (444)
                          அறவாழி வேந்தன் (635)
                          அறவாழி சேர்த்தீசன் (943)
                          அறவாழி முத்தன் (993)
                          படைவாளும் இலான்

திருமேற்றிசை அந்தாதியில்;
                          திருவருளாழி நடாத்தும் குடதிசைச் செங்கனி (347)

திருநறுங்கொண்டை மலைப்பதிகம்; 
                          இடர்திசை நீங்கநின்றார்க்கு அறமாயுதம் (151)
                          படைகளொன்றின்றி இருவினையெனும் பண்டை  முதுபகைபுறங் கண்டவன் 

திருக்கலம்பகத்தில்;
                          சயங்கொள் ஆழியங்கடவுளே (திருக்கல.35)
                          பேரறங்க ணேமி கொண்டு வென்ற சோதி யெங்களாதியே  (திருக்கல.24)
                          உலகமேழும் வந்திறைஞ்ச அருளாழி வலங்கொண்டு
                                                    ஏத்துஞ் சிகர மணிநீல வண்ண (திருக்கல.31)

திருநூற்றந்தாதியில்; 
                          அருளோடெழும் அறவாழி அப்பா (திருநூற்.5)
                          அற ஆழிகொண்டே வென்ற அந்தணனே (திருநூற்.27)
                          அருட்சக்கரம் ஏந்திய சங்கரன் (திருநூற்.67)

திருநறுங்கொண்டைத் தோத்திரமாலை-மந்திரப்பத்து; 
                          தரும சக்கரா (53)
                          தரும சாரணன் (60)
                          மறுவிலா அறவாழி அந்தணனே (68)

நீலகேசியில்;
                          உயிர்கட்கு இடர்தீர்த்து உயிர் இன்பம் ஆக்கும் சொல்லான் தருமச்சுடரான்
                          அங்கம் பயந்தான் அறைந்தசுதக்கடல் (நீல.660)
                          தீதுஇல் நன்னெறி பயந்து (நீல.155)
                          அங்க பூவமது அறைந்தாய் அறிவர்தம் அறிவர்க்கும் அறிவா  (நீல. 157)                                                     
                          அன்னான் பயந்த அறஆர் அமிர்து (நீல. 2)
                          அறங்கூர்மாரி பொழிந்தோய் (நீல.139)

திருவெம்பாவையில்;
                          பள்ளியுணர்ந்திலையோ பாவாய் நீ முன்வந்தென்
                          வள்ள லறவாழி நாதன் மலரடியை

உரைமேற்கோள்;
                          அருள்நெறி நடத்திய ஆதி தன் 
                          திருவடிபரவுதும் சித்தி பெறற் பொருட்டே (உ.மே.44)
                          ஈர்அறம் பயந்த ஓர் அருள் ஆழியை (உ.மே.11)
                          அறவாழியினான் (உ.மே.20)
                          அறவாழியனே (உ.மே.29)
                          படை ஒன்றிலான் (உ.மே.31)
                          அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரைஏறி
                          இறப்பு இலநின் அருள் புரிந்தாங்கு எமக்கு எல்லாம் அருளினையாய்
                          மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும்
                          அறவாழி வலன்உயரி அருள் நெறியே அருளியோய்  (உ.மே. 138)

அறவாழியின் அமைப்பு;
                          கனல்வயிரம் குறடு ஆகக் கனல்பைம்பொன் சூட்டுஆக
                          இனமணி ஆரமா இயன்று இருள் இரிந்து ஓட
                          அந்தரத்து உருளும் நின்அலர்கதிர் அறவாழி
                          இந்திரனும் பணிந்து ஏத்த, இருவிசும்பில் திகழ்ந்தன்றே (உ.மே. 39)
                          அல்லல் நீக்கற்கு அறப்புணை ஆயினை (உ.மே. 37)
                          அருளினை நீ (உ.மே. 37)
                          நனைஇல்காட்சி நல்லறத்தலைவ (உ.மே.41)
                          அறமும் நீ (உ.மே.37)
                          அறவன்நீ (உ.மே.40)

சிலப்பதிகாரத்தில்;
                          அருண்முனி
                          அருளறம் பூண்டோன்
                          தரும முதல்வன்
                          தருமன்

யசோதர காவியத்தில்;
                          திருமொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பர்  (ய.சோ.53)

                          தர்மசக்ரம் குறித்து கிரியாகலாபம்-நந்தீஸ்வரபக்தியில் (சமஸ்கிருதத்தில் ஆசார்யர் பூஜ்யபாதர் அருளியது)
                          ஸ்புரதர ஸஹஸ்ரருசிரம் விமலமஹா
                                                    ரத்ந கிரண நிகர பரீதம்
                          ப்ரஹஸித ஸஹஸ்ர கிரணத்யுதி மண்டல
                                                    மக்ரகாமி தர்மஸுசக்ரம் (கிரியாகலாபம் -192- நந்தீஸ்வர பக்தி) 

                          ஜோதி மயமானதும், ஆயிரம் ஆரக்கால்களை உடையதும், மனோகரமானதும், நிர்மலமானதுமான மிகச்சிறந்த மணிகளாலாம் வட்டைகளால் சூழ்ந்துள்ளதும். சூரியன் ஒளியை மிஞ்சத்தக்க காந்தியோடு விளங்குவதும், (சமவ சரணத்தின்)  நாற்புரமும் உள்ளனவுமாகிய சிறந்த தர்மசக்கரம் பகவான் முன் தொடர்ந்து செல்லும்.

இதுவே மேருமந்திரத்தில்;
                          சக்கரன் சாபம் போலத் தனுவில்லை யுமிழச் சென்னி
                          மிக்கமா மணிசெ யாரம் விளங்குமா யிரத்த தாகித்
                          திக்குலாம் பொழுது காத நான்கதாய்ச் செறிந்திருந்தால்
                          விற்கண்மூன்றாய அறப்பேராழி  தான் விளங்கு நின்றே  (மே.பு.1171)     

                          சமவசரணத்தில் மூன்று வில், உயரமுடைய அறவாழி அருகப்பெருமான் ஆங்காங்கே எழுந்தருளும் போது அவருக்கு முன்னே நான்குகாதம் என்னும் தொலைவில் செல்லும்.

அறவாழி அருளட்டும் 
(கிரியாகலாபம்-சாந்தி பக்தி-9)  
                          ஷேமம் சர்வப்ராஜாநாம் ப்ரபவது
                               ...........................................
                          ஜைநேந்த்ரம் தர்மசக்ரம் ப்ரபவது ஸததம்
                                                    ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி-
                          .................இவ்வுலக உயிர்களனைத்திற்கும்
இன்பத்தைத் தருகின்ற ஜிநேந்திரர்களின் அறவாழி எப்போதும் நிலைப்ப தாகுக.

                          தர்மசக்கரம். அருகத்பரமேஷ்டிக்கு வாலறிவு தோன்றிய உடன் ஏற்பட்ட 24 அதிசயங்களுள் ஒன்றாகும். சமவசரணத்தின் நாற்றிசைகளிலும், பூதங்களால் தரிக்கப்பட்ட ரத்ன மயமான தர்மசக்ரம் நான்கும் திசைக்கு ஒன்றாக விளங்கும். 
 -கிரியாகலாபம்.  

மஹாபுராணத்தில்
                          ஸ்ரீமதே ஸகலக்ஞான சாம்ராஜ்ய பதமீயுஷெ!
                          தர்மசக்ரப்ரதே பத்திரதே நம: சம்சார பீமஷெ!! 
 -மகாபுராணம்-கடவுள் வணக்கம். 

                          சகல ஐஸ்வர்யத்தோடும் கூடி கேவல ஞானப் பேரரசினைப் பெற்றவரும், பிறவித்துன்பத்தினை விலக்குபவரும் தர்மசக்ரத்தை உடையவரும் ஆகிய அருக பகவானை நான் வணங்குகிறேன்.

அமரசிம்மம் அருகன் நாமமாலை
                          அமரசிம்மம் அருகன்பேர்வழி ஸ்லோகத்தில் தர்மசக்ரம், அருள்சக்ரம், அசாதாரணசக்ரம், சித்த சக்ரம், சார்வசக்கரம் கூறப்பட்டுள்ளன.

மஹாபுராணத்தில் 
(மாமுனிவர் ஜினசேனாசாரியாரால் அருளப்பட்டது) 
                          சமஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட மஹாபுராணத்தில் அருகப்பெருமானைப் போற்றும் 1008 திருநாமங்கள் உள்ளன. இதில் 64 ஆவது திருநாமம் தர்மசக்ரினே, 840 ஆவது தர்மசக்ராயுதனே! 1008 ஆவது திருநாமம் தர்மசாம்ராஜ்ய நாயகன் என்பனவாகும்.

                          அறவாழி அந்தணன் அருகனைக் குறித்தது என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. இந்நூல் அறவாழி அந்தணன் என்ற பெயருடன் திருக்குறள் கடவுள் வாழ்த்து இறைவன் பெயர்கள் அனைத்தையும் ஆய்வதற்கு உருவாக்கப்படும் நூல் என்பதால் விரிவஞ்சி நிறைவு செய்யப்படுகிறது.

                          “தெருளாமையால் வினவற்பால தொன்றுண்டு
                                                    திருவடிகள் செம்பொனார் அரவிந்தம் ஏந்த
                          இருளாழி ஏழுலகும் சூமொழியின் மூழ்க
                                                    இமையாத ரெங்கண்ணின் இமையோர் வந்தேத்த
                          உருளாழியானும் ஒளிமணி முடிமேற் கைவைத்(து)
                                                    ஒருபாலில்வர, உலகம் நின்றுழைபதாக
                          அருளாழி முன்செல்லப் பின்செல்வகென்னோ?
                                                    அடிப்படாதாய் நின்ற அகன் ஞாலம் உண்டோ? 
 - சூளாமணி                                                        

              அறவாழி அந்தணன்தாள் போற்றி! போற்றி!




******************


தொடர்பு:   பேரா. Dr. கனக. அஜிததாஸ், M.Sc., M.Phil., D.H.Ed., Ph.D., (ajithadoss@gmail.com)






Saturday, June 8, 2019

தொன்மையான எழுது கருவிகள்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


தற்பொழுது  நம்மிடம் காகித தாளும், பேனாவும் எழுது கருவிகளாகப் பயன்பாட்டில் உள்ளன.  இவற்றின் பாட்டன், முப்பாட்டன் யார் என்பதைப் பார்ப்போம்.


1. களிமண் சுவடிகள்:
களிமண்ணைப் பிசைந்து சிறு சிறு பலகை போல் அமைத்து, பலகை காய்ந்து போவதற்கு முன்னமே அவற்றின் மீது கூர்மையான கருவியால் எழுதி உலரவைத்து, புத்தகமாக உபயோகித்தார்கள்.

பயன்படுத்தியோர்:  யூப்ரடீஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கின்ற இடத்திலிருந்த கால் டியா, சிரியா  பகுதி மக்கள்.  அந்த எழுத்திற்கு கூனிபார்ம் எழுத்து என்று பெயர். 

2. பேப்பரைஸ்:
'பேப்பரைஸ்' என்பது எகிப்து தேசத்தின் சதுப்புநிலங்களிலும், தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களிலும் வளர்ந்த ஒரு வகை செடியின் பெயர். இக் கோரை ஆனது 10லிருந்து 15 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டும், அதன் ஒவ்வொரு தாளும் ஓர் ஆளின் கை பருமன் கொண்டதாகவும் இருக்கும். இதனை வெட்டி பட்டையை உரித்து, ஒரே அளவாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி, பயன்படுத்தி உள்ளனர்.  இதன் மேல் நாணர் செடியின் தண்டினால் செய்த பேனாவை வைத்து எழுதி உள்ளனர். அதாவது நாணற் குழாய்களை 6 அங்குல நீளத்திற்கு வெட்டி, ஒரு முனையைக் கூர்மையாகச் சீவி, கூரின் நடுவே சிறிது பிளந்து, அதில் கறுத்த மை கொண்டு நிரப்பி எழுதி உள்ளனர்.

பயன்படுத்தியோர்: எகிப்து, பாலஸ்தீனம், கிரேக்கர்கள், உரோமர்கள்.

3. கோடெக்ஸ் புத்தகம்:
'கோடெக்ஸ்' புத்தகம் என்றால் லத்தின் மொழியில் மரப்பலகை ஆகும். சிறிய பலகையை நன்றாக இழைத்து அதன் மீது மெழுகு பூசி, அதற்கு மேல் கூரிய பொருள் கொண்டு எழுதுவது கோடெக்ஸ் ஆகும்.

பயன்படுத்தியோர்: உரோமர்களது பண்டைக்கால வழக்கம்.

4. தோல் புத்தகம்:
வெள்ளாடு அல்லது செம்மறியாட்டுக் குட்டியின் தோலைச் சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து மயிர்களைக் களைந்து விட்டு, சதை பற்றுக்களையும் நீக்கி, மரச் சட்டத்தின் மேல் உலரவைத்து, சீமைச் சுண்ணாம்பு மற்றும் கல்லினால் தேய்த்து மெருகேற்றி இருபுறமும் எழுதக்கூடியதாக மாற்றுவார்கள். இதற்கு 'மெம்ரெனா' என்று பெயர். கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்ட எழுது கருவிக்கு 'வெல்லம்' என்று பெயர்.

பயன்படுத்தியோர்: மத்தியதரைக்கடல் ஓரத்தில் உள்ள நாடுகள் மற்றும் இத்தாலி பகுதியினர்.

5. பட்டு மற்றும் மூங்கில்:
பட்டுத்துணி மற்றும் மூங்கிலின் மேல் துகிலிகையினால் மையைத் தொட்டு எழுதியுள்ளனர்.

பயன்படுத்தியோர்: சீனா மக்கள் 

6. எலும்பும் ஓடுகளும்:
அகலமான எலும்புகளிலும் ஓடுகளிலும் எழுதிப் பயன்படுத்தியுள்ளனர்

பயன்படுத்தியோர்: அரேபியர்கள்

7. காகிதம்:
மரக் கூழிலிருந்து இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும். தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

பயன்படுத்தியோர்:  சீனா மற்றும் உலகெங்கும் வாழும் மக்கள்.

8. ஓலைச் சுவடிகள்:
ஒருவகை பனைமரத்தின் முற்றிய, இலேசான ஓலைகளைத் தவிர்த்து நடுத்தர ஓலையை எடுத்து மணல் பூசி, தண்ணீரில் வேகவைத்து,மஞ்சள்  மற்றும் எண்ணை பூசி, இவ்வாறாகப்  பலவகையில் ஓலைகளைப்   பதப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, துளையிட்டு, அடுக்கி, கம்பியோ கயிறு கொண்டு அவற்றை இணைத்து மேலும் கீழும் பலகையிட்டு கயிற்றால் பிணைத்த சுவடிகளாக்கப்படும்.  இந்த ஓலையின் மீது  எழுத ஆணி  பயன்படுத்தினர்.

பயன்படுத்தியோர்: இந்தியா, பர்மா, இலங்கை பகுதியில் வாழ்ந்த மக்கள். 



நன்றி: 
'பழங்காலத்து எழுது கருவிகள்', நுண் கலைகள், மயிலை. சீனிவேங்கடசாமி,  பக்கம்: 132-144, இரண்டாம் பதிப்பு - 1972, மணிவாசகர் நூலகம்.   
http://www.tamildigitallibrary.com/admin/assets/book/TVA_BOK_0008143_நுண்கலைகள்.pdf




தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm




சங்ககாலக் கலைகள்



——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            கோவையில்  மாதந்தோறும் நடைபெறும் கோவை வாணவராயர் அறக்கட்டளைச்  சொற்பொழிவுத் தொடரில் 2019, மே மாதச் சொற்பொழிவை ஆற்றியவர் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் பெ. மாதையன் அவர்கள். இவரது “சங்ககால இனக்குழுச் சமூகமும் அரசு உருவாக்கமும்”, ”சங்க இலக்கியத்தில் குடும்பம்” ஆகிய ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தக்கன.  சங்ககாலக் கலைகள் என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் ஒரு சுருக்கப் பதிவு இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

சங்க இலக்கியங்களும் தமிழின் பழமையும்:
            சங்க இலக்கியங்கள் பல்வேறு பார்வைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  மொழியியல், வாழ்வியல், மானுடவியல் எனப்பல. தொல்காப்பியம் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வாழ்வியல், மானுடவியல் நோக்கில் தொல்காப்பியம் பல செய்திகளைச் சொல்கிறது. சங்ககாலத்தைக் கி.மு. 200 – கி.பி. 250  காலகட்டத்தில் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் சேர்ப்பார். தொல்லியல் அகழாய்வுகள் இம்முடிவினை மாற்றியுள்ளன.  கொடுமணல் அகழாய்வு, பொருந்தல் அகழாய்வு , மயிலாடும்பாறை (தர்மபுரி) ஆய்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கொடுமணல் ஆய்வில் சங்ககாலக் குடியிருப்புகள் இருந்தமை தெரியவந்துள்ளது. பொருந்தல் ஆய்வின்போது கிடைத்த நெல், காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டபோது சங்ககாலம் கி.மு. 490 எனப் பதிவாகியுள்ளது. புலிமான் கோம்பை நடுகல்-தமிழிக் கல்வெட்டும் சங்ககாலப் பழமைக்குச் சான்றாய்த் திகழ்கிறது. ஏறத்தாழ அறுநூறு  ஆண்டுகள் எனச் சங்ககாலத்தை வரையறுக்கலாம்.

            தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பு, கலைகள். இசைக்கருவிகள், இசைத்த பாணர்கள் எனத் தமிழரின் இனக்குழுச் சமூகத்தில் தொடங்கி,  இறைவழிபாட்டுச் சமூகம் வரை சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இடையில் சீறூர்ச் சமூகம் என மூவகைச் சமூகங்களாகத் தமிழ்ச்சமூகத்தைப் பார்க்கலாம்.

கலை எவ்வாறு தோன்றியது?
            மனத்துள் தோன்றும் கற்பனைகள் ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றன. இக்கட்டமைப்பு பின்னர் கலையாக உருவெடுக்கிறது. கற்பனைக் கட்டமைப்பை எளிதாக இப்படிச் சொல்லலாம். நாற்காலி ஒன்றைக் கற்பனை செய்தால்,  அது வெறும் நாற்காலியில் அமரும் நிலையை மட்டுமே குறிப்பதாகாது.  தற்காலச் சூழலில் நாற்காலி என்றதும் ‘பதவி’  என்னும் ஒரு கற்பனை விளைகிறது.  எனவேதான், கலைஞர்களின் படைப்பில் உட்பொருள் உண்டு என்பதை உணரவேண்டும்.  ”போலச் செய்தல்”  என்னும் ஒரு பண்புதான் எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை.  எடுத்துக் காட்டாக, இனக்குழுச் சமூகத்தில் -  வேட்டைச் சமூகத்தில் – வேட்டைத் தொழிலுக்குச் செல்லுமுன்னர் வேட்டை பற்றிய கற்பனைக் காட்சியை ‘போலச் செய்தல்”  முறையில் நிகழ்த்திப் பார்க்கிறார்கள். வேட்டைப் பலனை மனத்துள் கற்பனை மூலம் மந்திர ஒலிப்பாக ஒலிக்கிறார்கள். உடல் அசைவுகளால் நடனம் ஆக்கிச் செயல்படுத்தும்போது அது சடங்காகிறது.  இவ்வாறு நிகழும் – நிகழ்த்தும் – மந்திரங்களும் சடங்குகளுமே பின்னாளில் கலையாக உருப்பெறுகின்றன. இந்தக் கொள்கையைப் பாறை ஓவியங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.  பாறை ஓவியங்களில் காணப்பெறும் ”கைகள்”  ஓவியங்கள், சடங்கு-மந்திரம் ஆகியவற்றின் வெளிப்பாடே.  பாறை ஓவியங்களில் ‘கைகள்’ வரையப்பெற்றமை உலகம் முழுக்கக் காணலாம். தொன்மங்கள் என்னும் கற்பனைகளிலிருந்து கலைகள் தோன்றியிருக்கின்றன.

சீறூர்ச் சமூகம்-கலைஞர்களும், இசைக்கருவிகளும்:
            சீறூர்ச் சமூகம் நில உடைமைச் சமூகம். சீறூர்ச் சமூகத்தில் கலைஞர்கள் போற்றப்பட்டனர். இது குறுநில மன்னர்கள் கலைஞர்களைப் போற்றிய காலம். குறிப்பாகக் கடையெழு வள்ளல்களைச் சொல்லலாம். ஔவை, அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின் அவனைக் குறித்துப் பாடுகையில்,

“ சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணு மன்னே
இனிப் பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லை
  ………………………………………………… பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே”
            எனக்கூறுவதைக் காண்க.

அடுத்து, குமணனை வாழ்த்திப்பாடும் பெருஞ்சித்திரனார்,

”பறம்பிற் கோமான் பாரியும்.....
கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்
கெழுவர் மாய்ந்த பின்றை …”
இரவலரின் இன்மையைத் தீர்க்கவந்தவன் குமணன் எனக் கூறுவதையும் காண்க.

            குன்றக்குறவன் பற்றி ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. பாணர், பாடுநர், பரிசிலர் ஆகியோர் பற்றிச் செய்திகள் உள்ளன.

            ஓர் இலக்கியத்தில், குருவிக் கூடுகளில் யாழ் நரம்பு காணப்பட்டது என்னும் குறிப்பு வருகின்றது. யாழ் போன்ற இசைக்கருவிகள் அளவில் மலிந்திருந்தன என்பதையும் இசைக்கலைஞர்களும் நிறைய இருந்தனர் என்பதையும் இந்தச் செய்யுள் வரிகள் உணர்த்துகின்றன. சமூகம், இசைக்குழுச் சமூகமாக இருந்தது எனலாம்.

            சங்கச் சமுதாயத்தில் பெண்ணுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று,
”குன்றக்குறவன் கடவுட் பேணி
யிரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்”
என்று கூறுவதினின்று சங்க காலம் பெண்ணைப் போற்றியதுணரலாம்.

            சங்ககாலத்தில் பறையன், துடியன், பாணன், கடம்பன் என நான்கு குடிகள் மட்டுமே இருந்ததாக ஒரு பாடல் கூறுகிறது.

வேந்தர் சமூகம்:
            வேந்தர் சமூகத்தில் பெண்களுக்கு இடமில்லை. செல்வத்துப் பயனே ஈதல் என்னும் கருத்து நிலவியது. பாணர்கள் போன்றோர் பேணப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியிருப்புகள் அமைக்கப்பெற்றன. வேந்தர் சமுதாயத்தில், பாணர், கலைஞர்களாக மாறுகிறார்கள்; அதற்கு முன்னர் அவர்கள் அலை குடிகளாக உணவு தேடும் நிலையிலிருந்துள்ளனர்.  உணவும் பரிசிலும் பெற்ற பாணன் பிற பாணரை ஆற்றுப்படுத்துகிறான். வேந்தர் சமூகத்தில் பாணர், அரசனின் ஏவலாளராகவும், கூற்றர் என்னும் தூதுவராகவும் மாறியுள்ளமையையும் காண்கிறோம்.

இசை-இசைக்கலைஞர்-இசைக் கருவிகள்:
            திணைச்சமூகம் பற்றிக் கூறும் தொல்காப்பியத்தில் இசை நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அச்சமூகத்தில் கல்வி முறை இருந்தது. (”கீழ்ப்பால் ஒருவன் கற்பின்”-ஒரு பாடல் வரி)  பறை, பாண், யாழ், துடி, தண்ணுமை, குழல், முழவு  ஆகிய பல்வேறு இசைக்கருவிகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. யாழ் மிக முதன்மையான ஓர் இசைக்கருவியாக இருந்தது. சங்கப்பாடல்களில் அறுபத்தொன்பது இடங்களில் குறிக்கப்பெறும் ஓர் இசைக்கருவி யாழ். யாழை இசைத்தவன் பாணன். பாணன், பாண்மகன், யாழ் மகன், பாடினி ஆகிய பெயர்கள் பாணரைக் குறிக்கும் ஒருபொருட் பன்மொழி. பறையை இசைத்தவன் பறையன். துடி இசைத்தவன் துடையன். தண்ணுமைக் கருவி, உழவுச் சூழல், போர்ச்சூழல் ஆகிய சூழல்களில் இசைக்கப்பட்டது. பூக்கோள் நிலை என்பது போர்ச்சூழலில் அமையும் ஒரு நிலை. போரை மேற்கொள்ளும்போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் குறிக்கும் புறத்துறை. பாசறையில், அரசனிடமிருந்து போர்க்குரிய பூவைப் பெறுகையில் புலையன் தண்ணுமை இசைக்கிறான் (புறம்-289).

            பாணனின் மனைவியாக விறலி பேசப்படுகிறாள். விறலி மற்றும் பாடினி இருவரும் ஆடல், பாடல், கருவி இசைத்தல் ஆகிய மூன்றிலும் வல்லவராக இருந்தனர். இருவரும் அரசரைப் பாடுதல் மரபாக இருந்தது. பாணர் சமூகத்தின் தலைவியாக விறலி கருதப்பட்டாள்.  தொல்காப்பியம், விறலியாற்றுப்படையைக் குறிப்பிடுகிறது. விறலியின் பெருமைக்குரிய நிலை இனக்குழுச் சமூகமான சீறூர்ச் சமூகத்தில்தான். பின்னர், விறலியர் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். மலைபடுகடாம், கலைஞர்கள் ஒரு குழுவாக வாழ்ந்ததைச் சொல்கிறது. பொருநராற்றுப்படை, யாழ் பற்றிய நீண்ட வர்ணனையைக் கூறும். குறிப்பிட்ட இசைக்கருவிகளை இசைத்தவர் இழிவாக மதிக்கப்பட்டனர்.

ஆடல் கலை-கலைஞர்:
            ஆடல்(ஆட்டம்) என்றும் கூத்து என்றும் நடனக்கலை குறிக்கப்பட்டது. பயிர் விளைவது போலவும், வேட்டை ஆடுவது போலவும் நடனம் ஆடினர். ஆடலுக்குத் தனியே அவையும், ஆடுகளமும் இருந்தன. அரசர்களும் ஆடியிருக்கின்றனர் என்னும் குறிப்பு உண்டு. பதிற்றுப்பத்து நூலின் ஆறாம் பத்து, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியதாகும். அதிலுள்ள 56-ஆம் பாடல், அரசன் சேரலாதன், போர்க்களத்தில் முரசு ஒலிக்கப் பொன்னாற்செய்த உழிஞைப் பூவைச் சூடி ஆடுகின்றவன் எனக்கூறுகிறது.

”வலம்படு முரசந்துவைப்ப ………
…………………………………………. பொலங்கொடி யுழிஞையன்
………………………………..
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே”
            -       பதிற்றுப்பத்து-56

ஆதி மந்தி-ஆட்டனத்தி ஆகியோரின் ஆட்டமும் நாம் அறிந்ததே. குரவை, துணங்கை ஆகிய ஆட்ட வகைகள் இருந்தன.

குரவையாட்டம்:
            குரவையாட்டம் என்றும் குரவைக்கூத்து என்றும் கூறப்படுகின்ற இந்த ஆட்டம் குழுவாக ஆடும் ஆட்டவகையைச் சேர்ந்தது. குரவைக் கூத்தில் முதலில் பெண்களே ஆடுவர்; பின்னர் ஆண்களும் இணைந்துகொள்வர். குரவையாட்டத்தில் கள்ளுக்கு முதன்மை இடம் உண்டு. கள்ளை உணவாக உண்ணும் சமூகமாதலால், பெண்களும் கள்ளுண்டனர். பெண்கள் கள்ளுண்டு குரவையாட்டம் ஆடினர். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  சங்ககால மரபை இன்றும் பேணுதலைக் காணுமாறு இன்றைய சமூகமும் கள்ளுண்ணும் சமூகமாக மாறிவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது!)

            போர்ப்பாசறையில், சினத்தை உடைய வீரர் வெறியாடும் குரவைக்கூத்தின் ஒலி கடலொலி போலக் கிளர்ந்தொலித்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல் (புறம்-22) கூறுகிறது.  மலை மக்களாகிய குறவர் கள்ளுண்டு, தம் பெண்டிரொடு சிறுபறை ஒலிக்கக் குரவையாடினர் என்று மலைபடுகடாம் கூறுகிறது.

“ நறவு நாள் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்தோல் சிறுபறை கறங்கக் கல்லென
வான்தோய் மீமிசை அயரும் குரவை”
            -       மலைபடுகடாம் 320-322
            பொழுதுபோக்காகக் குரவையாட்டம் ஆடப்பெற்றது எனவும் அறிகிறோம். அரசன் பிறந்த நாளில் குரவையாட்டம் ஆடும் வழக்கம் இருந்தது. மதுரைக்காஞ்சியில் குரவை ஆட்டம் பற்றியும் அரசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டமை பற்றியும்  குறிப்பு உள்ளது (மதுரைக் காஞ்சி-614-619). மதுரை நகரில் விழாக்காலத்தே,  திங்கள் தோன்றி இரவு வந்த பின்னர் எழுந்த பல்வேறு ஓசைகள் பற்றிக் குறிப்பிடும் மதுரைக்காஞ்சி, வெறியாடும் வேலன் முருகக் கடவுளை வழிபட்டு நிற்கும்போது மன்றம் தோறும் குரவைக் கூத்து நிகழும் என்று கூறுகிறது. சேரிகள் தோறும் புனைந்துரைகள், பாட்டுகள், கூத்துகள் ஆகிய மகிழ்ச்சி ஆரவாரங்கள், புகழ்படைத்த நன்னனுடைய பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தில் எழுந்த ஆரவாரம் போன்று முழங்குமாம்.  ”மன்றுதொறும் நின்ற குரவை”, “பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பு”  என்பவை பாடல் வரிகள்.

துணங்கை:
            துணங்கையாட்டம் மகளிர் குழுவாக ஆடும் கூத்து. (தொல்காப்பியத்தில் துணங்கை பற்றிய குறிப்பில்லை என்பார் கலைக்கோவன்.) போர்க்களத்தின்கண் வீரர்களும் ஆடினர்.  போர்க்களத்தில் ஆடும் இவ்வாட்டத்தைப் பேய்த்துணங்கை என்பர். அரசனும் வீரர்களோடு சேர்ந்து துணங்கை ஆடியதாகக் குறிப்புள்ளது.

இறைவழிபாட்டுச் சமூகத்தில் கலையும், கலைஞரும்:
            இறைவழிபாட்டுச் சமூகத்தில் வேலன் வெறியாடுதல் என்னும் வெறியாட்டம் இருந்தது.  தொடக்கத்தில் சடங்காக இருந்த இது பின்னர் ஆட்டமாக மாறியது. வெறியாட்டத்தில், ஆண் தலைமையும் இருந்தது; பெண் தலைமையும் இருந்தது. ”வெறியாடு மகளிர்”,  “முதுவாய்ப் பெண்டிர்”  ஆகியன இலக்கியங்களில் காணப்பெறும் பெயர்கள். முதுபெண்டிர், இளம்பெண்கள் ஆகிய இரு நிலையும் வெறியாடலிலிருந்தன. இச்சமூகத்தில், குறிகேட்டலும், குறிசொல்லலும் இருந்தன. குறி சொல்லும் மகளிர் “அகவன் மகள்”  எனப்பட்டனர். சங்ககாலத்தில், ஒரு தார மணமுடித்தல் என்பது பண்பாட்டுக் களமாக ஆக்கப்பட்டபோதுதான் காதல் என்பது உருவானது. காதல் காரணமாகப் பெண்டிர் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படுதலும், அதன் விளைவாக உடன்போக்கும் நிகழ்ந்தன. காதல் வயப்பட்ட பெண்களை ”அணங்கு”  என்னும் பேய் பிடித்த பெண்களாகக் கருதினார்கள்.  வெறியாடும் வேலனிடமும், அகவன் மகளிடமும் குறி கேட்டல் நிகழ்ந்தது.  வெறியாடும் வேலன் ஒரு தலைவிக்கு அணங்கினால் நோய் வந்ததாகச் சொல்லியபோது, தலைவி, தனக்கு நோய் வந்தது அணங்கினால் அல்ல; தலைவனால் வந்தது என்று கூறுவதாக ஒரு சங்கப்பாடல் கூறுகிறது. வெறியாடல் வாயிலாகப் பெண்களோடு தெய்வம் இணைக்கப்பட்டது  பெண்வழிச் சமூகத்துக்குச் சான்றாக வெறியாடலைக் கருதலாம். பெண் வெறியாடலைப் புறநானூறு,  “முருகு மெய்ப்பட்ட  புலைத்தி”  எனக் குறிப்பிடுகிறது(புறம்-259).

சங்ககாலத்தில் சிற்பக்கலை:
            சிற்பக்கலையின் தொடக்கம் தச்சுக்கலை ஆகும். வண்டிச் சக்கரம் செய்யத்தான் முதலில் தச்சுக்கலை ஏற்பட்டது. வணிகர்களின் வண்டிகள் (எடுத்துக்காட்டாக வணிகர்களின் உப்பு வண்டி), தேர்ப்படை ஆகியவற்றுக்காகத் தச்சர் வண்டி செய்தனர். வணிகர்களின்  வாகனமாகவும் தேர் இருந்தது. சங்ககாலத்தில் கட்டில் முதன்மையாகக் கருதப்பட்டது. நெடுநல்வாடையில், கட்டில் பற்றிய வண்ணனை உண்டு. தச்சர் செய்த கதவு “வளிமறை”  எனப்பட்டது. வளி=காற்று; காற்றை மறைத்து நிற்கும் கதவு “வளிமறை” என்றாயிற்று.  பின்னர், கதவு அமைந்த வீட்டுக்கும் அதுவே பெயராயிற்று. செல்வர்க்கே மரக்கதவுகள் இருந்தன.  எளிய மக்களுக்குப் படல் கதவுகள் இருந்தன.

பொதுச் செய்திகள்:
            தொல்பழங்காலத்தில் பெண்வழிச் சமூகம் இருந்தது. பொருளாதாரத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு பெண்களுக்கு இருந்தது. மீன் பிடி தொழிலை விறலியர் மேற்கொண்டதைக் காண்கிறோம். சங்ககாலத்தின் தொடக்கக் காலத்தில் பெண்கள் தலைமைதான் இருந்தது. இனக்குழு வாழ்வு உடைமையைப் பொதுவில் வைத்தது. திணை வாழ்வு தனியுடைமை பற்றியது. உலகம் முழுதும் வேளாண்மைக் காலத்தில் மந்திரங்களின் நம்பிக்கை இருந்துள்ளது. வேளாண்மையைக் கண்டறிந்தவர் பெண்களே. எனவே, மந்திரச் சடங்குகள் நடத்தும் உரிமையும் பெண்களுக்கே இருந்துள்ளது. உலகம் முழுக்கப் பெண்ணுடை அணிந்தே ஆண்கள் பூசாரிகளாக இயங்கினர். தினைப்புனத்திலும் பெண்களே தலைமை ஏற்றனர்.






தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.