Tuesday, April 26, 2016

காவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு


-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

சேலம் மாநகரிலிருந்து எட்டு கி.மீ. தென்மேற்கே உள்ள கஞ்ச மலைக்கு யார் அந்தப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே கஞ்சமலை, கஞ்ச-மலை அல்ல. சேலம் மாவட்டம் கனிவளத்திற்கு, அதாவது மாங்கனி வளத்திற்குப் பெயர் பெற்றதென்றால், நம் சேலம் நகரம் கனிம வளத்திற்கு, அதாவது மேக்னடைட் மற்றும் மேக்னசைட் கனிம வளங்களுக்குப் புகழ் பெற்றது. கஞ்சமலையில் மேக்னடைட் எனும் இரும்புத்தாது பெருமளவில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான இரும்புத்தாது - ஹெமடைட். அது இங்கே அதிகம் இல்லை. இந்த மேக்னடைட் தாது Banded Magnetite Quartzite (நம் தமிழில், “பட்டை இரும்புக் கல்”) எனும் பாறையிலிருந்து கிடைக்கிறது.கஞ்சமலையின் நீளம் சுமார் எட்டு கி.மீ., அகலம் சுமார் மூன்றரை கி.மீ., உயரம்  அங்குள்ள தரைமட்டத்திலிருந்து சுமார் அறுநூறு மீ.  இந்த  மலை முழுவதுமே,  பட்டை இரும்புக் கல்லால் ஆனது அல்ல. வேறு பலவிதமான பாறைகளும் கலந்தே இருக்கின்றன.புவியியல் அமைப்புப்படி , கஞ்சமலை ஒரு குழிமுக மடிப்பு மலை, அதாவது பாறைகளின் பரப்பு எல்லா மலைகளையும் போல் வெளிப்புறம் சரிந்திருந்தாலும், பாறை அமைப்புகள் உட்புறமாகச் சரிந்துள்ளன, ஒரு தோணியைப் போல. (கூகுள் படத்தில் இரு முனைகளிலும் மடிப்பைப் பார்க்கலாம்). பட்டை இரும்புப் பாறை, மூன்று பெரும் கிடைகளாக மலையின் எல்லாப்பக்கத்திலும்  காணப்படுகிறது  ( கூகுள் படத்தில் கரும் பச்சை நிறத்தில் உள்ளவை).


நம் நாட்டை  ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் முதன்முதலில் பறங்கிப்பேட்டை எனும் இடத்தில்தான் இரும்பு உருக்காலை துவங்கப்பட்டது. பறங்கிப்பேட்டைக்கு போர்ட்டோ நோவோ எனும்  பெயரும் உண்டு. போர்த்துகீசிய  மொழியில் புதிய துறைமுகம் என்று பொருள். இசுலாமியர்கள் முகம்மது பந்தர் என்று அழைப்பார்கள். அங்கே JOSHUA MARSHALL HEATH  எனும் வெள்ளையரின் பெரும்  முயற்சியால்  1830ஆம் ஆண்டு துவங்கப்பட்டு   பின்  1877 ஆம் ஆண்டு வரை POTONOVO IRON WORKS  எனும் பெயரில் இரும்பு  ஆலை நடத்தப்பட்டது. அந்த  ஆலைக்கு வேண்டிய இரும்புத் தாது சேலத்திலிருந்துதான்  கொண்டு செல்லப்பட்டது. மலையைச் சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப் பட்டிருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாகத் தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை.  கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில்  வசதி  இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை எப்படிக் கொண்டு  செல்வது.


ஆச்சரியப்படாதீர்கள். காவேரி-கொள்ளிடம்- வெள்ளாறு  வழியே  பரிசல்களில் கொண்டு  சென்றிருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது ( கே.ஆர். சாகர், கபினி அணை , மேட்டூர் எதுவும் இல்லை அல்லவா.).  ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முந்நூறு கி.மீ. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது, கஞ்சமலை இரும்புத் தாது.  

சேலத்தில் தரத்தில் உயர்ந்த இரும்புத் தாது ஏராளமாக உள்ளது என அக்காலக் குறிப்புகளில் காணப்படுகிறது. பறங்கிப் பேட்டையில் தயாரான இரும்பு இங்கிலாந்தில் மிகவும் விரும்பி வாங்கப் பட்டதாம். இப்போதும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் “ MADE IN PORTO NOVO” என எழுதப்பட்ட இரும்புத்தூண்கள் உள்ளதாகக்  கூறுகிறார்கள். இதை விட முக்கியம் என்னவெனில்,சேலம் இரும்புத் தாதுவிலிருந்து, பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR  மற்றும்   STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில்  பயன் படுத்தப்பட்டது- மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில்  பயன் படுத்தப்பட்டது என்று S.B. JOSHI  எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (pp97)தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

சரி, முடிவாக சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு  சுமார் 75 மில்லியன் டன்கள். மலையைச் சுற்றியும் கீழே விழுந்த தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. 1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து  ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல; உருட்டாலை. இங்கே எந்தக்  கனிமமும் உருக்கப்படுவதில்லை. மாறாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு உருட்டி அனுப்பப் படுகின்றன.


 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 

No comments:

Post a Comment