Friday, April 29, 2016

கூகுள் மேப் சேவை

--உதயன் 


நாம் நிறைய பயணங்கள் செய்வோம், ஒவ்வொரு பயணம் நமக்கு நல்ல அனுபவத்தையும் ஒரு புத்துணர்ச்சியையும் தரும்,  நமது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பயண கட்டுரைகள் எழுதுவோம், நம் கட்டுரையை வாசிப்பவர்களுக்கும் உங்களது பயண இடங்கள் புது விஷயமாக இருந்தால் வாசிப்பவர்களுக்கும் அந்த இடத்திற்க்கு சென்று வர ஆர்வத்தை தூண்டும்.  நாம் பயணத்தை எழுத்துக்களாக மட்டும் அல்லாமல் சில மேப் சர்விஸ்களின் உதவியால் நாம் போய்வந்த இடங்களை சுட்டிகாட்டினால் மற்றவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். அப்படி சுட்டிகாட்டும் போது அந்த இடங்கள் மேப்பில் பெயரிடப்படாமல் இருந்தால் எப்படி இடங்கள் சுட்டுவது, எவ்வாறு அந்த பாதை சென்று கொண்டிருக்கிறது என்பதை மேப்பில் குறிக்கலாம். இதனால் நம்மை தொடந்து செல்பவர்களுக்கும் உதவுவதற்க்காக இந்த தொடர்.

கூகுள் மேப்தான் பரவலாக உபயோகிக்கின்றனர் அதனால் அதையே நாம் மாதிரியாக எடுத்து பார்ப்போம்.


முதலில் கூகுள் மேப் பற்றி பார்ப்போம்

கூகுள் கம்பெனியால் கூகுள் மேப் (Google Maps) புவியியல் தகவல்களுக்காக உருவாக்கப்பட்டது, முன்னர் பள்ளி படிக்கும் போது மேப், அல்லது ஏதேனும் வெளியூர் செல்லும் போது மேப் உபயோகித்திருப்போம், இன்று இருக்கும் வளர்ச்சியில் தினம் புது ரோடுகளும் நகர்களும் உருவாகி கொண்டிருக்கிறது, இதை எல்லாம் கருத்தில் கொண்டு கூகுள் சாட்டிலைட் மூலம் படம் எடுத்து மேப்களாக உருவாக்கி வைத்துள்ளது, உட்கார்ந்த இடத்தில் உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இடங்களை நம் கையில் இருக்கும் மவுஸ் முலம் சுற்றி வரலாம், இடங்கள், சாலைவசதி, தூரங்கள் என அறிந்து பயணத்திட்டங்களை வகுக்க உதவுகிறது. சாட்டிலைட் மற்றும் மேப் என இரு வகையில் பார்க்கலாம், இணையதள வசதியுடன் தான் பார்க்க முடியும், இதன் முகவரி : https://maps.google.co.in/

”கூகுள் எர்த்”ம் இதே போன்ற சேவையை தான் அளித்து வருகிறது, http://www.google.com/earth/index.html இந்த  பக்கத்துக்கு சென்று கூகுள் எர்த் சாப்ட்வேரை டவுண்லோட் செய்து கொள்ளலாம். லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் இருந்து உலகைச் சுற்றிப் பார்வையிட உதவுகின்றது.

கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி?

முதலில் இணையதளவேகம் ஒரளவு வேகமாக உள்ள கணிணியில் ப்ரவுசர்களில்  (https://maps.google.co.in/) கூகுள் மேப் முகவரி தந்து அந்த பக்கத்துக்கு சென்றால், நாம் ஜிமெயில் ப்ரோபைல் செட்டிங்கில் நாம் வசிக்கும்  இடங்களை தந்ததை வைத்தோ அல்லது நம் கணிணி ஐபி அட்ரஸில் உள்ள முகவரி வைத்து அந்த மாநிலத்தையோ அல்லது நாட்டையோ காமிக்கும்.

அந்த பக்கத்தில் மேலே தட்டச்சி தேடும் வசதி இருக்கும் அதில் நாம் வேண்டிய முகவரிய முகவரி தந்து தேட சொல்லலாம், உதாரணமாக நான் Madurai யை தேடினேன்.

நேரடியாக கூகுள் சர்ச்சில் வேண்டிய முகவரி தந்தும், ப்ரவுசரின் Mapsயை கிள்க் செய்தாலும் மேப்பில் அந்த இடத்தை நாம் காணலாம்.


இந்த மேப்பில் குறிப்பிட்டுள்ள இடங்கள் பற்றி விலாவரியாக பார்ப்போம்
  1.  நாம் தேடும் இடங்களை தட்டச்சும் இடம். (Type the location.)
  2. தேடிய இடங்களுக்கான மேப். (Map Viewer)
  3. மேப் / சாட்டிலைட் வீயூ காண.
  4. மேப் ஜூம் செய்து பார்க்க. (மவுஸ் ஸ்குரோல் செய்தும் பார்க்கலாம்)
  5. இடம் வலம், மேல் கீழ் என நகர்த்தி பார்க்க. (கீ போர்ட் ஆரோ கீ யையும் உபயோகித்து நகர்த்தி பார்க்கலாம்)
  6. நாம் தேடிய இடங்களை பற்றி தெரிந்து கொள்ள (More About this places we were looking for )
இந்த 6வது பாய்ண்ட் பற்றி கொஞ்சம் விலாவரியாக பார்ப்போம்.

Get Directions கிளிக்

நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு செல்ல  வேண்டிய பாதையை காமிக்கும், மாற்று பாதை இருந்தாலும் அதையும் தெரிவிக்கும்.


  1. A - B என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் மதுரையில் இருக்கும் சிம்மக்கல் A என்ற இடத்திலும் பெரியார் பேருந்து நிலையம் B என்ற இடத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.
  2. A சிம்மக்கல் - B பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பாதைகளை மட்டும்  நீல வண்ணத்தில் காமிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் தொடர வேண்டிய இடங்களை Add Destination கொடுத்து உங்களது இலக்குகளை தொடரலாம்,
  3. மாற்று பாதைகள் இருந்தால் அறிவுறுத்தும் போகும் தூரம் உட்பட. (Suggest Alternate Route)
  4. A - B பாதை செல்லும் திசை எங்கே எவ்வழி திரும்ப வேண்டும் உட்பட அறிவுறுத்தும். (Driving Direction)

 இந்த Direction மூலம் நாம் போகும் இடத்திர்க்கு செல்ல ஏற்ற சாலைகள், சுருக்கு பாதை, மாற்று பாதைகள் அறியலாம் உங்களுக்கு வேறு வழிகள் இருக்கலாம் என்று தெரிந்தால் அந்த நிலக்கலர் கோட்டினை பிடித்து நகர்த்தி பார்க்கலாம். (Drag To Change Route) மேலும் எவ்வளவு தூரம், நேரம் ஆகியவற்றையும் அறியலாம்.

My Places:
முன்னர் நாம் தேடிய இடங்கள், போன பாதைகளை சேமித்து வைத்திருக்கும் இடம் (History)

Printer:
நாம் தேடிய இடங்கள் மேப் மற்றும் Directionனை பிரிண்டு எடுக்கலாம், PDF ஆக மாற்றலாம்.

நாம் தேடிய மேப்பின் இணைய முகவரி லிங்காக (URL) கிடைக்கும், படங்களாகவும், எழுத்தாகவும் பகிர வசதியாக இருக்கும்.


1. லிங்க் பட்டன்
2. நாம் தேடிய, அல்லது பாதைகளை இணையவழி முகவரியாக (URL) கிடைக்கும், இந்த லிங்கை பகிரலாம், பயனரும் இந்த லிங்கை கிள்க் செய்தால் போதும் நீங்கள் பகிர நினைத்த மேப் அவர்களுக்கு கிடைக்கும்.
(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)
https://maps.google.co.in/maps?saddr=Simmakkal,+Madurai+-+Main,+Madurai,+Tamil+Nadu&daddr=9.9243965,78.1163839+to:Periyar+Bus+Stand,+Madurai,+Tamil+Nadu&hl=en&ll=9.920958,78.115582&spn=0.023969,0.042272&sll=9.923579,78.112364&sspn=0.023969,0.042272&geocode=FYV1lwAdnwSoBCnzU6CNj8UAOzGWxiYaincepw%3BFSxvlwAdH_anBClbFg-tiMUAOzGDf5RojJlgXQ%3BFRJOlwAdHuGnBCmLmCGCgMUAOzGrrPP_zkw21A&t=h&via=1&z=15
3. இதுவும் 2 வது சொன்னது போல் தான், இந்த லிங்கை இணையதளத்திலும், ப்ளாக்கிலும் பகிர வசதியாக இருக்கும்.
(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)
<iframe width="425" height="350" frameborder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0" src="https://maps.google.co.in/maps?saddr=Simmakkal,+Madurai+-+Main,+Madurai,+Tamil+Nadu&amp;daddr=9.9243965,78.1163839+to:Periyar+Bus+Stand,+Madurai,+Tamil+Nadu&amp;hl=en&amp;sll=9.923579,78.112364&amp;sspn=0.023969,0.042272&amp;geocode=FYV1lwAdnwSoBCnzU6CNj8UAOzGWxiYaincepw%3BFSxvlwAdH_anBClbFg-tiMUAOzGDf5RojJlgXQ%3BFRJOlwAdHuGnBCmLmCGCgMUAOzGrrPP_zkw21A&amp;t=h&amp;via=1&amp;ie=UTF8&amp;ll=9.920965,78.115565&amp;spn=0.01009,0.00917&amp;output=embed"></iframe><br /><small><a href="https://maps.google.co.in/maps?saddr=Simmakkal,+Madurai+-+Main,+Madurai,+Tamil+Nadu&amp;daddr=9.9243965,78.1163839+to:Periyar+Bus+Stand,+Madurai,+Tamil+Nadu&amp;hl=en&amp;sll=9.923579,78.112364&amp;sspn=0.023969,0.042272&amp;geocode=FYV1lwAdnwSoBCnzU6CNj8UAOzGWxiYaincepw%3BFSxvlwAdH_anBClbFg-tiMUAOzGDf5RojJlgXQ%3BFRJOlwAdHuGnBCmLmCGCgMUAOzGrrPP_zkw21A&amp;t=h&amp;via=1&amp;ie=UTF8&amp;ll=9.920965,78.115565&amp;spn=0.01009,0.00917&amp;source=embed" style="color:#0000FF;text-align:left">View Larger Map</a></small>


இன்னும் Google Street view,Google Map Maker விலாவரியாக பார்ப்போம்.

_____________________________________________________


உதயன்
udhayan.chn@gmail.com
_____________________________________________________

Wednesday, April 27, 2016

வெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்

இன்று  பிட்டி தியாகராயரின்   பிறந்த நாள்.
-suba


வெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்
                    (திரு.சிங்க நெஞ்சன், சென்னை, தமிழகம்)


                                  
சென்னை என்றதும் நம்மில் பலருக்கு, குறிப்பாக நம் பெண்மணிகளுக்கு நினைவிற்கு வருவது, ‘டீ நகர்’ தான். “இந்த டீ நகரில் உள்ள ‘டீ’ யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்று பலரைக் கேட்டுப் பார்த்தேன். படித்தவர்களுக்குக்கூட, சரியான விடை தெரியவில்லை. ‘தியாகராய நகர்’ என்று சரியாக சொன்னவர்களிடம், “யார் இந்த தியாகராயர்” எனக் கேட்டபோது பெரும்பாலானோர் ‘நடிகர் தியாகராஜ  பாகவதராயிருக்கலாம்’ என்றார்கள். சரியான விடையை சொன்னவர்கள் மிகச் சிலரே.
சென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் கட்டிடத்தின் (மாநகராட்சி வளாகம்) முன்னே, சிலை வடிவில்  நிற்கும் வெள்ளாடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர்தான், டீ. நகருக்குப் பெயர் தந்த பெருமான். இந்த சிலை 1937ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் அப்போதைய சென்னை மாகாண ஆளுனர் ஸ்டான்லி அவர்களால் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் அடியில் பீடத்தை சுற்றி, பள்ளிச் சிறுவர்கள் கையில் புத்தகங்களோடு இருப்பதை போல் சிறு சிறு சிலைகள் உள்ளன. சென்னை கடற்கரை சாலையில்  உள்ள காமராஜர் சிலையில் கூட அவருக்கு இருபுறமும் பள்ளிச் சிறுவர்கள் சிலைகளைக் காணலாம். தமிழகத்தில் ஏழைச் சிறார்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து வைத்த பெருமை. இந்த பெருமக்களையே சாரும். குறிப்பாக 1897ஆம் ஆண்டு வட சென்னையில் தான்  வசித்து வந்த வண்ணாரப்பேட்டைப் பகுதியில் தம் சொந்த செலவில் துவக்கப் பள்ளி ஒன்றைத் துவங்கி, அதில் படிக்க வந்த மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் வழங்கியிருக்கிறார் தியாகராயர். இந்தப் பள்ளியே பின்னாளில் தியாகராயர் கல்லூரியாக மலர்ந்தது.1917இல் தம் சொத்தில் ஒரு பகுதியை கல்விக்காக தானம் செய்தார் இவர். 1920ஆம் ஆண்டு பெப்ரவரி ஆம் நாள், சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத்  தேர்ந்தெ டுக்கப்பட்டார்.. உடன், சென்னையில், எல்லோரும்-குறிப்பாக ஏழை மக்கள், கல்வி அறிவு பெறுவதற்காக, ஐந்து  இடங்களில் நகராட்சிப் பள்ளிகள் திறந்தார். அவற்றுள் ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்த நகராட்சிப் பள்ளியில் முதன்முறையாக இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் இப்பெருமகனார். நெசவாளர் சமூகத்தை சேர்ந்த இவர் , அந்தக் குலத்தில் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் எனும் பெருமை பெற்றார். -1920இல் ஐந்தாக இருந்த மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 1923இல்45ஆக உயர்ந்தது..இப்போதுள்ள சத்துணவு திட்டத்திற்கு முன்னோடி ,1960களில் காமராஜர் கொண்டு வந்த ‘மதிய உணவுதிட்டம்’ என்பர்.அந்த மதிய உணவு திட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இவற்றுக்கெல்லாம் வழிகோலியவர் வள்ளல் தியாகராயர்.

           ‘வாடிய பயிரைக்  கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார்.  1876ஆம் ஆண்டு தாது வருடத்திய பஞ்சத்தின் போது பசியில் வாடிய பாமர மக்களுக்கு மூன்று மாத காலம் உணவளித்து அவர்களின் துயரைப் போக்கினார் பசிப்பிணி மருத்துவர் தியாகராயர். இதற்காக அன்றைய ஆங்கில அரசின் பாராட்டையும் பெற்றார்.

1885ஆம் ஆண்டு முதலே, காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தியகராயர்1916ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி, திருவாளர்கள் நடேச முதலியார், டி.எம். நாயர் இவர்களுடன் இணைந்து “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்“ எனும் அமைப்பை நிறுவினார். 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில்  நீதிக் கட்சி வெற்றி அடைந்த போது தலைவர் தியகராயர்தான் சென்னை மாகாணத்தின் தலைமை அமைச்சராக பதவி ஏற்பார் என அனைவரும் எதிர் பார்த்தனர். ஆளுநரும் அழைத்தார். ஆனால் அவரோ, கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை (கடலூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள ‘சுப்பராயலு நகர்’ இவர் பெயரில் அமைந்துள்ளது) பரிந்துரைத்தார். தலைமை அமைச்சராக பதவியேற்ற சுப்பராயலு ரெட்டியார் ஆறேழு மாதங்களில் உடல் நலக்குறைவால் பதவியை ராஜினமா செய்தார். இப்போதாவது தியாகராயர் அரசுக்கு தலைமை ஏற்பார் என அனைவரும் எதிர் பார்த்தனர். இம்முறையும் பதவியை நாடி ஓடாமல், தியாகராயர், பனகல் அரசரின் பெயரைப் பரிந்துரைக்க (பனகல் பூங்கா இவர் பெயரில் தான் உள்ளது), தலைமை அமைச்சரானார் பனகல் அரசர்.

1923ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்  காங்கிரசைத் தோற்கடித்து , நீதிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்த முறையாவது தலைமை அமைச்சராவார் தியாகராயர் என எண்ணியோரின் எண்ணங்களுக்கு மாறாக, உடல்நலத்தைக் காரணம் காட்டி மீண்டும் பனகல் அரசரைப் பதவியில் அமர்த்தினார் தியாகராயர். மும்முறை தன்னைத் தேடி வந்த தலைமை அமைச்சர் பதவியை ‘வேண்டாம்’ என ஒதுக்கிய இவர் உண்மையிலேயே “தியாக” - ராயர்தான். இவரின் இந்த செயலை, அன்றைய சென்னை மாகாண ஆளுநர் வெல்லிங்டன்  பிரபு வியந்து பாராட்டினாராம்.

செல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருக்கும் நல்  விருந்தாளர் தியாக ராயர். இவர் இல்லத்தில் பாமரர் முதல் பணக்காரர்கள் வரை பலரும் வந்து விருந்துண்டு செல்வது வழக்கம். இந்த விருந்தினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரச குடுபத்தினரும் அடக்கம். 1905ஆம் ஆண்டு வேல்ஸ்  இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ், பின்னர் எட்டாம் எட்வர்ட் ஆகியோர் தியாகராயரின் விருந்தோம்பலில் திளைத்தவர்கள். இரண்டாம் காங்கிரஸ் மாநாட்டின் போது சென்னை வந்த காந்தியடிகள், தியாகராயரின் பிட்டி நூற்பாலை சென்று தறி நெய்து பார்த்திருக்கிறார். தன்  பிள்ளைகள் இருவரை தறிநெசவு  பயிற்சிக்கும் இங்கே அனுப்பியிருக்கிறார்.

வெள்ளத் தலைப்பாகை –வெள்ளை சட்டை-கீழ்பாய்சிக்கட்டிய வெள்ளை வேட்டி , வெள்ளை மேல் துண்டு என எப்போதும் தூய வெள்ளை ஆடைகளையே விரும்பி அணிந்த தியாகராயர் மக்களால் “ வெள்ளாடை வேந்தர்” என்றே அன்பாக அழைக்கப்பட்டார். இந்த வெள்ளாடைக்கும் ஒரு முறை ஆபத்து வந்தது. 1922ஆம் ஆண்டு சனவரி மாதம் 13ஆம் நாள் சென்னைக்கு வருகை தந்த பிரிட்டிஷ் பேரரசின் அரசரை வரவேற்க, அன்றைய சென்னை மாநகராட்ச்சியின் தலைவர் என்கிற முறையில் தியாகராயர் செல்ல வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க செல்வோர் ஆங்கிலேய பாணியில் உடை அணிய வேண்டும் எனும் மரபு அப்போது கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் நம் பண்பாட்டை விட்டுக் கொடுக்க விரும்பாத  தியாகராயர், ஆங்கிலேய பாணியில் உடை அணிய மறுத்து அரசரை வரவேற்க, மாநகராட்சியில் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவரை, அனுப்ப இருந்தாராம். இதை அறிந்த ஆளுநர் வெல்லிங்டன் பிரபு, தியகரயர்தான் அரசரை வரவேற்க  செல்ல வேண்டும் எனச் சொல்லி, மரபுகளை மாற்றி, விதிகளைத் தளர்த்தி இவர் இந்திய உடையிலேயே சென்று மன்னரை வரவேற்க செய்தாராம். மன்னரே வந்தாலும் அதற்காக தன மரபுகளை மாற்றிக் கொள்ளாத மாமனிதர் தியாகராயர்.

ரிப்பன் பிரபு 1881-82இல்  உள்ளாட்சி மன்றங்களை ஏற்படுத்தியபோது, (மாநகராட்சிக் கட்டிடத்திற்கு “ரிப்பன் மாளிகை’ எனப் பெயரிட்டிருப்பதுபொருத்தம்தான்.), வடசென்னை வண்ணாரப்பேட்டை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் பிரதிநிதியாக மாநகராட்சி மன்றம் நுழைந்தார் தியாகராயர். இது நிகழ்ந்தது 1882ல்  அப்போது அவருக்கு வயது முப்பது. பின்னர் தேர்தல் நடந்தபோதும், இவரே வெற்றி பெற்றார். -1882முதல் 1922வரை மாநகராட்சியில் பணியாற்றியபோது இவர் செய்த பணிகள் பலப்பல..  குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் சென்னை நகரம் பெரும் முன்னேற்றம் அடைய முழுமையாக பாடுபட்டார். நாட்டு மருத்துவச்சிகளின் பிரசவ முறையில் சிசு மரணம் அதிகம் நிகழ்வதை அறிந்த இவர், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆங்கிலேய மருத்துவ முறையை அறிமுகம் செய்தார்.

பார்ப்பனீயத்தை எதிர்த்தாரே தவிர, இவர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை. இவரது இல்லத் தாழ்வாரத்தில் நடந்த பள்ளியில் பார்ப்பன மாணவர்கள் வடமொழி கற்றனர், திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்று உறுப்பினரான டி. .எம். நாயர் , மாநகராட்சிக் கூட்டத்தில்,  தெப்பத் திருவிழாவின் போது வறண்டிருந்த  பார்த்தசாரதி கோவில் திருக்குளத்திற்கு மாநகராட்சி செலவில் தண்ணீர் ஏற்பாடு செய்யக் கூடாது என வாதிட்டார். அதை எதிர்த்துப் பேசிய உறுப்பினர் தியாகராயர் , விழாவின் பொது மாநகாராட்சி செலவில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தார். மயிலைத் திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ 10000 நன்கொடை அளித்தவர் தியாகராயர்.

இவர் ஆசைப்பட்டு நிறைவேறாமல் போன திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் ‘கூவம் சீரமைப்பு திட்டம்’ .அந்தக் காலத்தில் பச்சயப்ப முதலியார் ( பச்சையப்பர் கல்வி அறக்கட்டளையை நிறுவியவர்)  கூவத்தில் குளித்துவிட்டுதான் குமரனை வழிபடச் செல்வாராம். ஆனால் தியாகராயர் காலத்திலேயே கூவம் மாசடைந்து விட்டது. கூவத்தை சீரமைத்து பழம் பெருமையை மீட்க இவர் திட்டமிட்டார். மாநகராட்சியிடம் நிதி வசதி இல்லை. அரசும் கை விரித்துவிட்டது. திட்டம் நிறைவேறவில்லை. விளைவு, இன்றும் நாம் கூவம் பக்கம் போகும்போது மூக்கில் விரல் வைக்க வேண்டியுள்ளது.

சமுதாய சீர்திருத்தச் செம்மல் தியாகராயரின் பெருமுயற்சியின் பயனாகவே நீதிக்கட்சி ஆட்சியில் “தீண்டாமை ஒழிப்பு சட்டம்”, “ வகுப்பு வாரி பிரதிநிதித் துவ சட்டம்” போன்றவை நிறைவேற்றப்பட்டன. நெசவுத் தொழிலில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த தியாகராயர், தறியில் புதுமைகள் பல செய்தார். தமிழகத்தில் விசைத் தறியை அறிமுகப் படுத்தியது இவரே. .
அரசியலில் இவரை மிகக் கடுமையாக விமர்சித்த தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிடும்போது “இப்பெரியாரின் வாழ்வு, பின் வருவோர்க்கு பெரிலக்கியம் போன்றது” என்கிறார். இவரது அரசியல் எதிரி சி.பி. இராமசாமி அய்யர் இவரது மறைவின் பொது “ ஒரு தன்னலமற்ற மனிதாபிமாநியை இழந்தோம்” என்றார். 1852 ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் -பிறந்த தியாகராயர் 1925 ஏப்ரல் மாதம் 28 ஐந்து  இடங்களில் ஆம் நாள் இயற்கை எய்தினார். இவர் போன்ற மக்கள் நலம் பேணும் தலைவர்களே தமிழ்நாட்டின் இன்றைய தேவை. 

Tuesday, April 26, 2016

காவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு


-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

சேலம் மாநகரிலிருந்து எட்டு கி.மீ. தென்மேற்கே உள்ள கஞ்ச மலைக்கு யார் அந்தப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே கஞ்சமலை, கஞ்ச-மலை அல்ல. சேலம் மாவட்டம் கனிவளத்திற்கு, அதாவது மாங்கனி வளத்திற்குப் பெயர் பெற்றதென்றால், நம் சேலம் நகரம் கனிம வளத்திற்கு, அதாவது மேக்னடைட் மற்றும் மேக்னசைட் கனிம வளங்களுக்குப் புகழ் பெற்றது. கஞ்சமலையில் மேக்னடைட் எனும் இரும்புத்தாது பெருமளவில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான இரும்புத்தாது - ஹெமடைட். அது இங்கே அதிகம் இல்லை. இந்த மேக்னடைட் தாது Banded Magnetite Quartzite (நம் தமிழில், “பட்டை இரும்புக் கல்”) எனும் பாறையிலிருந்து கிடைக்கிறது.



கஞ்சமலையின் நீளம் சுமார் எட்டு கி.மீ., அகலம் சுமார் மூன்றரை கி.மீ., உயரம்  அங்குள்ள தரைமட்டத்திலிருந்து சுமார் அறுநூறு மீ.  இந்த  மலை முழுவதுமே,  பட்டை இரும்புக் கல்லால் ஆனது அல்ல. வேறு பலவிதமான பாறைகளும் கலந்தே இருக்கின்றன.



புவியியல் அமைப்புப்படி , கஞ்சமலை ஒரு குழிமுக மடிப்பு மலை, அதாவது பாறைகளின் பரப்பு எல்லா மலைகளையும் போல் வெளிப்புறம் சரிந்திருந்தாலும், பாறை அமைப்புகள் உட்புறமாகச் சரிந்துள்ளன, ஒரு தோணியைப் போல. (கூகுள் படத்தில் இரு முனைகளிலும் மடிப்பைப் பார்க்கலாம்). பட்டை இரும்புப் பாறை, மூன்று பெரும் கிடைகளாக மலையின் எல்லாப்பக்கத்திலும்  காணப்படுகிறது  ( கூகுள் படத்தில் கரும் பச்சை நிறத்தில் உள்ளவை).


நம் நாட்டை  ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் முதன்முதலில் பறங்கிப்பேட்டை எனும் இடத்தில்தான் இரும்பு உருக்காலை துவங்கப்பட்டது. பறங்கிப்பேட்டைக்கு போர்ட்டோ நோவோ எனும்  பெயரும் உண்டு. போர்த்துகீசிய  மொழியில் புதிய துறைமுகம் என்று பொருள். இசுலாமியர்கள் முகம்மது பந்தர் என்று அழைப்பார்கள். அங்கே JOSHUA MARSHALL HEATH  எனும் வெள்ளையரின் பெரும்  முயற்சியால்  1830ஆம் ஆண்டு துவங்கப்பட்டு   பின்  1877 ஆம் ஆண்டு வரை POTONOVO IRON WORKS  எனும் பெயரில் இரும்பு  ஆலை நடத்தப்பட்டது. அந்த  ஆலைக்கு வேண்டிய இரும்புத் தாது சேலத்திலிருந்துதான்  கொண்டு செல்லப்பட்டது. மலையைச் சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப் பட்டிருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாகத் தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை.  கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில்  வசதி  இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை எப்படிக் கொண்டு  செல்வது.


ஆச்சரியப்படாதீர்கள். காவேரி-கொள்ளிடம்- வெள்ளாறு  வழியே  பரிசல்களில் கொண்டு  சென்றிருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது ( கே.ஆர். சாகர், கபினி அணை , மேட்டூர் எதுவும் இல்லை அல்லவா.).  ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முந்நூறு கி.மீ. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது, கஞ்சமலை இரும்புத் தாது.  

சேலத்தில் தரத்தில் உயர்ந்த இரும்புத் தாது ஏராளமாக உள்ளது என அக்காலக் குறிப்புகளில் காணப்படுகிறது. பறங்கிப் பேட்டையில் தயாரான இரும்பு இங்கிலாந்தில் மிகவும் விரும்பி வாங்கப் பட்டதாம். இப்போதும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் “ MADE IN PORTO NOVO” என எழுதப்பட்ட இரும்புத்தூண்கள் உள்ளதாகக்  கூறுகிறார்கள். இதை விட முக்கியம் என்னவெனில்,சேலம் இரும்புத் தாதுவிலிருந்து, பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR  மற்றும்   STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில்  பயன் படுத்தப்பட்டது- மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில்  பயன் படுத்தப்பட்டது என்று S.B. JOSHI  எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (pp97)தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

சரி, முடிவாக சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு  சுமார் 75 மில்லியன் டன்கள். மலையைச் சுற்றியும் கீழே விழுந்த தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. 1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து  ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல; உருட்டாலை. இங்கே எந்தக்  கனிமமும் உருக்கப்படுவதில்லை. மாறாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு உருட்டி அனுப்பப் படுகின்றன.


 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________