Wednesday, June 25, 2014

குடதிசை மருங்கில் – 1

- தேமொழி.

1. சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்



ஆசிய நாடுகளின் கலைபொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம்.

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்
பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும் ஆசியக் கலைப் பொருட்கள் பெரும்பாலும் தூரக்கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த கலைப் பொருட்களாகவோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தவையாகவோ இருக்கும்.  ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடிபுகுந்தோரில் பெரும்பாலும் இந்நாடுகளைச் சார்ந்தவர்களாகவே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். 

தெற்காசிய நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலைப்பொருட்கள் மற்ற ஆசிய நாட்டு கலைப்பொருட்களை விட குறைவாகவே இடம் பிடித்திருக்கும்.  ஆசியநாட்டு வழி வந்தவர்களில் தெற்காசியப்பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்ற ஆசிய நாட்டினரைவிட எண்ணிக்கையிலும் அமெரிக்காவில் குறைவு.

இந்த நிலைக்கு மாறாக அதிக  இந்தியக் கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக்  கலை அருங்காட்சியகத்தில் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ‘ஆவ்ரி ப்ரெண்டேஜ்’ (Avery Brundage) என்பவர்.

இவர் 1959 இல் சான்  ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பது. அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த  ஆசியக்  கலை அருங்காட்சியகம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார்.  அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து, நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.  அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்.

மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார்.  அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ  பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் மனம் உவந்து நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை.  இவரது முயற்சியால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல உலகிலேயே  அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது  சான் ஃபிரான்சிஸ்கோவின் ஆசியக்  கலை அருங்காட்சியகம்.  இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு  வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.
இங்கிருக்கும் கலைப்பொருட்கள்;
(1) சீனா
(2) ஜப்பான்
(3) கொரியா
(4)தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோஸ், வியட்நாம், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா)
(5) தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா)
(6) இமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேபாள், பூட்டான், மங்கோலியா)
(7) பாரசீகம் மற்றும் மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்த்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)
என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப் படுத்தப் பட்டுள்ளன.

சிறிய மரகதக் கற்கள் முதற் கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.
இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும்  வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:
(1) புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
(2)ஆசிய நாடுகளுக்கிடையே ஆன கலாச்சார மற்றும் வணிக  பரிவர்த்தனைகள்
(3)ஆசிய நாடுகளில் இடம்பெறும்  நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும் ஆகும்.

இந்தியாவினைக் குறிக்கும் சிறப்பு கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்:
மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India's Royal Courts (2011)]
ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியக் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with 'Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]
இந்திய தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]
போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும்  சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.

(தொடரும்)


Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.


License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)

Thanks to Vallamai: http://www.vallamai.com/?p=30356


themozhi@yahoo.com 

No comments:

Post a Comment