Sunday, June 29, 2014

சிற்பம்/ஓவியம்/ரசனை--மஹாபலிபுரம் 6

போர் மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான் வரலாற்றை வாசிக்கத் தூண்டும் வஸ்துக்கள். புராணங்கள், இதிகாசங்கள், மத வரலாறு, கலைப் படைப்பு என வரலாற்றின் அடுத்த அத்தியாயங்கள் இந்த இரண்டில் ஒன்றைப் பற்றியபடி தான் அடுத்தடுத்து நகர்கின்றன. அதே சமயம் ,

வரலாறு என்பது உண்மை மீது சுதை பூசி, வெள்ளையடித்து, வர்ணம் தீட்டுவது...

*அதிகாரம் கொண்டு சுரண்டிப் பார்த்தால், உண்மையை உயிருடன் மீட்க முடியாது.

*சில சமயம் அந்த உண்மையை மீட்பதாய் சொல்லி,  அவற்றின் மீது SAND BLAST செய்யப் படலாம்

*காலத்தின் கணக்குகளில் எல்லா லேயர்களும் உரிந்து நிர்வாணம் அடைந்து விடும்

#நாம் செய்ய வேண்டியது எல்லாம் 35 மார்க் வாங்கி பாஸாகிவிட வேண்டும் என்பது தான்..

***************************************

கொஞ்சம் பெரிய இடைவெளி தான் மாமல்லை சிற்பங்களைப் பற்றி பேசுவது என்பது என்னைப் பொருத்தவரை எந்த அளவு மகிழ்ச்சி தரக்கூடியதோ, அதே அளவு பொறுப்பினையும் தந்துவிடுகிறது. தவறான விவரனைகள் ஜோடனைகளான வார்த்தைகளிலோ, தவறான குறிப்புகள் அல்லது தரவுகளையோ தந்து செல்லும் கட்டுரையாக இருப்பது மிக ஆபத்தானது. வாசிப்பின் சௌகரியத்திற்காக வரலாறு மட்டுமல்ல தவறான பின்புலத்தோடும், சரியான அளவீடுகள் கொண்டு பார்க்கப்படாத அறிவியல் தகவல்களும் கூட ஒட்டு மொத்தமாக நோக்கத்தை சிதறடித்து விடும்.

அது எப்படி அறிவியல் முடிவுகள்/தகவல்கள் கூட ஒரு கலை விமர்சனம் பற்றிய தீர்ப்புகள்/வரைவுகள்/கருத்துகளுக்கு ஆபத்தாகின்றன என்றால், அது அப்படித் தான்:

 ரோமன் தகவல் களஞ்சியத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் நிறைய அறிவியல் கூற்றுகள், தேற்றங்கள், கண்டுபிடிப்புகள் பொய்த்துப் போயிருக்கும் அல்லது காலாவதியாயிருக்கும். இதற்கு காரணம் அறிவியல் தன்னை பாம்புச் சட்டையைக் கழட்டுவது போல் தன்னிடமிருந்தே தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தேர்ந்த உயர்ரக மற்றும் எளிமைப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அறிவியலை எந்தப் பக்கமும் எளிதில் சாய்த்து விடுகிறது.

சரி, உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?? மாமல்லை சிற்பங்கள் பற்றிப் பேசுவதற்கு எதற்கு இத்தனை சுத்தி வளைப்புகள் என்று கேட்கிறீர்களா??

ஆமாங்க அரசியல் இருக்கு, புரானங்களை இப்படிப் பார்ப்பதற்கு உங்கள் மனம் இடமளிக்கிறதா என்று உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்க ஒரு வழி:

அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றைப் பதிந்து வைப்பதற்கான Toolகள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். . இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் இதிகாசம் மட்டும் புராணங்களை அன்றைய வரலாற்றை தொகுக்கப் பயன்படுத்திருக்கும் கருவியாக நான் பார்க்கிறேன், என்ன அவற்றிற்கு அழகியல்(Aesthetic) மற்றும் கலை(Artistic) முலாம்கள் பூசப்பட்டிருக்கும். என்னளவில் தெளிவாக சொல்ல முடிந்ததெல்லாம் பெரிய புராணம் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவனம் என்று சொல்ல முடியும், ஆனால் இன்றைய அறிவியல் மற்றும் கல்விக் கொள்கைக்கு அவை எதிரானது. நிற்க.. மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள் புராணங்களும், இதிகாசங்களும் முன்வைக்கும் வரலாற்று செய்திகள் இன்றைய கல்விக் கொள்கைகளின் காரணமாகவே நீக்கப் படுகின்றன.

”இது என்ன அபத்தம் கல்வியைச் சாடுகிறாய்?” என்ற கேள்வி வரலாம். பின்நவீனத்துவம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனையான குறியீட்டுத் தன்மை எனும் படிமம் நமது புராண,இதிகாச/பக்தி இலக்கியங்களில் கூட நிறைந்திருக்கிறது. பாரதத்தில் யமுனா நதிக்கரையோர யாதவப் பெண்களுடனே உல்லாசமாக வாழும் கிருஷ்ணன் தன் கையில் வைத்திருக்கும் குழல் மாடு மேயத்தலின் போது பாடுவதற்காக வைத்திருக்கிறான், பலராமர் ஏந்திக் கொண்டிருக்கும் ஏர் உழவனுக்கானது.. ஒரு உழவனும், ஆயரும் சேர்ந்து வாழ்ந்த யமுனா நதிக்கரையின் வாழ்வியலை இது போன்ற ஆயுதங்களைப் பற்றிய அறிவினைக் கொண்டு  தெரிந்து கொள்ளலாம், ஒரு விவசாயம் செழிப்பாக நடைபெற வேண்டுமென்றால் அதற்கு முக்கியப்பங்கு மாடுகளுக்கு தான் இருந்தது என்பது இன்றளவும் கூட உண்மையான விஷயம் தான்.. ஆற்றோரங்களிலே விவசாயம் எனும் தொழில் மூலம் நாகரிகம் அடைந்து விட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக அவர்கள்(க்ருஷ்ண - பலராமன்) காட்டப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அவதாரங்களிலும் ஹீரோக்களின் வதம் செய்யும் ஆய்தங்களைல் கொண்டு அவர்கள் வாழ்ந்திருப்பதாய் நம்பப்படும் காலத்தை நாம் புரிந்து கொள்ள இடமளிக்கிறது.. Symbolism என்பதை நவீன இறக்குமதிச் சிந்தனையாகப் பார்ப்பது எத்தனை கயமைத் தன்மை கொண்டது. தசாவாதாரத்தில் தனது உடல் பலத்தால் முதல் மூன்று அவதாரங்களிலும், நான்காவது அவதாரத்தில் நகங்களாலும் வதம் செய்திருப்பது மிகப் பழமையான  காலத்தை காட்டுகிறது (Pre-Historic Times: Upper Paleolithic to Neolythic), அடுத்து ஞானவதம் (வாமண) அதற்கடுத்த காலம் கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனிடமிருந்து உலோகக் காலம் ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து  வருபவை வில், அம்பு, சக்கரம் என்றெல்லாம் கொண்டு வரும் குறியீடுகள் காலத்தை கண்டரிய உதவும்.

இப்படித் தான் மஹிசாசுரனை வதம் செய்யும் துர்கையின் சக்தியை வியந்து பார்ப்பதோடு அவள் காலத்தின் போர் செய்தியை, இந்த சிற்பத் தொகுதியின் உதவியோடு தெரிந்த கொள்ள இடமிருந்தால் தேடுவதும் /பரப்புவதும்; இல்லா விட்டால் கலை விமர்சனம் செய்வதோடும் நகர்ந்து விடுதல் நல்லது தான். அப்படிப் பட்ட ஒரு முக்கியமான சிற்பத் தொகுதி தான்  மகிஷாசுரமர்த்தினி செய்யும் யுத்தக் காட்சி, இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று தனியாகவே மாமல்லை சென்று திரும்பி வந்தது உண்டு. அதுவும் வெறும் மகிஷாசுர மர்த்தினியின் சிற்பக் காட்சியை மட்டும் பார்த்து விட்டு (சில மணி நேரங்கள்) கிளம்பி வந்துள்ளேன்.

அடுத்தப் பகுதியில் மகிஷியின் சிற்பத் தொகுதியை அருகில் நின்று பார்ப்போம்...



---ஜீவ.கரிகாலன்

Thursday, June 26, 2014

குடதிசை மருங்கில் – 5

- தேமொழி.
 

5. இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்

சூர்யா

அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இந்து தெய்வம் சூரியா ஆகாயத்துடன் தொடர்புடையவர்,  குறிப்பாக சூரியனைக் குறிப்பவர். இங்கு காணப்படும் சிலையில் ஒளிவீசும் இரு பெரிய தாமரை மலர்களைக் கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.  அவரது மேலாடை பக்கவாட்டில் காற்றில் படபடப்பது போல அமைக்கப் பெற்றுள்ளது. 

சூரியாவின் ஒருபுறம் தாடி வைத்த, பிங்கள என அழைக்கப் படும் அவரது எழுத்தர், எழுதுகோலும் மைக்கூடும் வைத்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. சூரியாவின் மறுபுறம் கையில் தண்டமேந்திய தண்டா என்னும் உதவியாளர் உருவம் அமைக்கப் பட்டுள்ளது. தண்டம் என்பதற்குக் கோல் என்பது பொருள்.

ஆராய்ச்சியாளர்கள் சூரிய தெய்வத்தின் தோற்றத்தின் தொன்மையை, சூரிய வழிபாடு பிரபலமான, இந்தியாவின் மேற்கே, தற்கால ஈரான் நாட்டின் பகுதியுடன் தொடர்பு படுத்துவார்கள்.  இதைப் போன்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் உருவாக்கப் பட்ட மேலும் சில சிலைகளும் பாதம் வரை நீண்ட ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. பாதம் வரை நீளும் நீண்ட ஆடையும், காலணிகளும் ஈரான் பகுதியில் வாழ்வோரின் கலாச்சார உடையாகக் கருதப் படுவதால் இவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது.  இச்சிலையில் சூரியாவின் ஆடை உடல் வடிவத்துடன் ஒட்டி அமைத்திருப்பதாகக் காட்டப் பட்டாலும், ஆடையின் கரை பாதத்தின் அருகே அமைந்துள்ளதாக காட்டப் பட்டுள்ளது.


அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இந்து தெய்வம் சூர்யா, அருகே பிங்கள தண்டர்களுடன், இந்தியாவின் பீகார் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 6 – 7 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033


இறைவிகள்

அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

சிதைவிற்கு முன் இந்தக் கற்பாளத்தில் ‘அன்னையர்’ என அழைக்கப் படும் ஏழு இந்துப் பெண் தெய்வங்களின் உருவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆண் கடவுள்களுடன், அவர்களது பெயர்கள் மூலம் இணைத்து அறியப்படும் இந்த இறைவிகள் அந்த ஆண் தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கியவர்கள். அத்துடன் இந்த இறைவிகள் தங்களது துணையான ஆண் கடவுள்களின் ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, அந்த ஆண் தெய்வங்கள் வாகனமாகக் கொண்ட விலங்குகளின் மேலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.


அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

ஏழு தாய் இந்து தெய்வங்களில் நால்வரின் சிலை, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்  பகுதிகளைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 7 – 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. டாக்டர். ஸ்டீபஃன்  எ. ஷெர்வின் மற்றும் மெரில் ராண்டல் ஷெர்வின் (Dr. Stephen A. Sherwin and Merrill Randol Sherwin) அருங்காட்சியத்திற்குப் பரிசாக அளித்த சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029


கருடன்

அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

கருடன் என்னும் புராணக் கடவுளுக்கு மனித உடலும், பறவையின் உடலமைப்பினைப் போல இறகுகள், அலகு, காலில் கூர் நகங்களும் அமைந்திருக்கும். கருடனுக்கு சூரியக் கதிர்களின் சக்தியும், நாகங்களை அழிக்கும் சக்தியும் இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது. இந்திரனின், மரணத்தை நீக்கும்தேவாமிர்தத்தைக் காக்கும் இரு நாகங்களைக் கருடன் கொன்றழித்ததாகவும் கருதப் படுகிறது. பெரும்பாலும், எட்டு நாகங்களை அணியாக அணிந்து, பணிவுடன் மண்டியிட்டு, கரம் கூப்பிய வடிவுடன் கருடனின் உருவம் அமைக்கப் பட்டிருக்கும். ஆதிகால விஷ்ணுவின் கோயில்களின் முன்புறத் தூண்களில் கருடனின் உருவம் செதுக்கப் பட்டிருக்கும். கருடனை விஷ்ணுவின் வாகனமாக இந்துமத வேதங்கள் குறிப்பிடுகிறது.


அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

இந்து தெய்வம் தீரமிகுந்த பறவை-மனித வடிவுடைய கருடன்,  இந்தியாவின் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

ஆகஸ்ட் 25, 2012 இல் துவங்கிய “இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்னும் இந்த  சிறப்புக் கண்காட்சி பிப்ரவரி 25, 2013  ஆம் தேதிவரை ஸான் ஃபிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதால் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு கண்காட்சியைக் காண ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியது.

இந்த சிறப்புக் கண்காட்சியைப் பற்றிய இக்கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது. படங்களுடன் கட்டுரையை வெளியிட இசைவளித்த ஆசிய அருங்காட்சியகத்தினருக்கு, குறிப்பாக அருங்காட்சிய அதிகாரி அமீலியா பன்ச் (Amelia Bunch) அவர்களுக்கு நன்றி.


[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.


 License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)

Thanks to Vallamai: http://www.vallamai.com/?p=31704



themozhi@yahoo.com

குடதிசை மருங்கில் – 4

- தேமொழி.

4. எங்கெங்கு காணினும் சக்தியடா


பார்வதி:

அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார்.  நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு,  பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.


அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036


துர்கை:

அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது.  துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன்,  இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.


அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025


திரிபுரசுந்தரி:

அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த  குணத்தை உடைய தெய்வமாகச்  சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.


அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

காளி/சாமுண்டி:

அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப்  பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும்  இருந்திருக்கக் கூடும்.  இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட  அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம்  மையைப் போன்ற  கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான  முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும்,  எட்டுத்திசையும் அவளது கர்ஜனையால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**

** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம்.  இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.


அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

(தொடரும்)

[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.


License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)

Thanks to Vallamai: http://www.vallamai.com/?p=31497



themozhi@yahoo.com

Wednesday, June 25, 2014

குடதிசை மருங்கில் – 3

- தேமொழி.

3.  மூர்த்திகள்



பிரம்மா:

அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

பிரம்மாவை நான்கு தலைகள் இருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் (பார்வைக்குத் தெரியாமல் பின்புறம் ஒரு தலை அமைந்திருக்கும்).  படைப்பதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருந்தாலும், பிரம்மாவிற்கு மிகக் குறைந்த அளவில்தான் பக்தர்களும் கோயில்களும் இந்துமதக் கலாச்சாரத்தில் உண்டு. படத்தில் காட்டப் படும் இச்சிலை ஒரு சிவன் அல்லது திருமாலின் கோயிலின்  வெளிபிரகாரத்தில் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இதுபோன்று மென்மையாக,  கண்கவரும் வண்ணம் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட பல சிற்பங்கள் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப் பட்டவை. இவ்வகை சிற்பவடிவமைப்பிற்கு உபயோகப் படுத்தப்பட்ட கடினமான கருங்கற்களில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளை செதுக்குவது இயலாத செயலாகும்.


அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

இந்து தெய்வம் பிரம்மா: இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 10-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


விஷ்ணு:

அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

விஷ்ணு இந்துமதத்தின் மிகவும் சிறப்பு பெற்ற தெய்வம். உலகில் நீதியை நிலைநாட்டி காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. உலகைத்  தீய சக்திகள் ஆட்டிப் படைக்கும் பொழுது, மண்ணில் பல வகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார்.  அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும், மனித உருவிலேயே அவதரித்த ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும். விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது  அவருடைய நான்கு கரங்களும் அவற்றில் வழக்கமாக ஏந்திய கதை, சங்கு, சக்கரம் போன்றவைகளும் ஆகும்.


அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

இச்சிலையில் விஷ்ணுவின் இருபக்கங்களிலும் சிறிய உருவங்களில் காட்டப் பட்டிருப்பது அவருடைய மனைவிகள். அவர்களுக்கும் அருகில், மேலும் சிறிய உருவத்துடன் காட்டப் பட்டிருப்பது விஷ்ணுவின் சங்கு சக்கரத்தை சித்தரிக்கும் உருவங்கள், முறையே சங்கு சக்கரத்தை  தங்கள் தலையில் மகுடமாக தரிதுள்ளார்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் மனித உருவில் உள்ள பறவையாக, இறக்கைகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதாக சிற்பத்தின் கீழே வலப்புறம் அலங்காரங்கள் நிறைந்த பகுதியில் காட்டப் பட்டுள்ளது. சிற்பத்தின் வலது மற்றும் இடது மேற்புறங்களில் தேவர்கள் மலர்மாலைகளைக் கையிலேந்தி விஷ்ணுவிற்கு அணிவிப்பதற்காகப்  பறந்து வருவது போலச் செதுக்கப் பட்டுள்ளது.

இந்து தெய்வம் விஷ்ணு, அருகில் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி: பங்களாதேஷ், டாக்காவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 11-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

சிவன்:

அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

இந்தியக் கடவுள் சிலைகளில் சிவனை அடையாளம் காட்ட உதவுபவை அவர் நெற்றியில் உள்ள மூன்றாம் கண், கழுத்திலணியும்  பாம்பு, கையிலேந்திய மண்டை ஓடு, தலையில் முடிந்த கொண்டை போன்ற சிகையலங்காரத்தில் உள்ள பிறை. சிவனைக் குறிக்கும் அனைத்து உருவங்களிலும் இவை யாவும் அமைந்திருக்காது. இங்கு காணும் சிலையில் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அமர்ந்து முனிவர்களுக்கு உபதேசம் செய்யம்  சிவன், தனது  காலடியில் அறியாமையைக் குறிக்கும் குள்ள அசுரனை மிதித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.   உலகில் தோன்றும் மனிதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைவதற்கு வழியைக் கூறி அருளுவது  தட்சிணாமூர்த்தியின் உபதேசமாகும்.  சமஸ்கிரதத்தில் தட்சிணாமூர்த்தி என்பதற்கு ‘தென்திசை நோக்கும்’ என்ற மற்ற ஒரு பொருளும் உண்டு. தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிலை, பெரும்பாலும் அப்பகுதி கோயில்களில் தெற்குப் பிரகாரச் சுவர்களில் இடம் பெற்று இருந்திருக்கும்.


அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

இந்து தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 13 – 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

ஹரிஹரன்:

அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

இந்து மதத்தின் இரு முதன்மை ஆண் தெய்வங்களான விஷ்ணுவும் (ஹரி) சிவனும் (ஹரன்), சில சமயங்களில் இணைந்து ஹரிஹரனாக இருப்பதாகச் சித்தரிக்கப் படுவார்கள். இங்கு காணும் அது போன்ற ஹரிஹரன் சிலையில், மேலிருந்து கீழாக வலப்பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் விஷ்ணுவும் காட்டப் பட்டுள்ளார்கள். வலது பக்க நெற்றியில் சிவனின் பாதி நெற்றிக்கண் காட்டப்படுள்ளது, சிதைந்த வலக்கையில் சிவனின் சூலாயுதம் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இடக்கைகளில், சிதையாத கை ஒன்றில் விஷ்ணு சங்கைப் பிடித்திருபதாகக் காட்டப் பட்டுள்ளது.


அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

இந்து தெய்வம் ஹரிஹரன், இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. காட்சியகம் வாங்கிய சிலைகளின் சேகரிப்பில் உள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

(தொடரும்)

[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:
http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.







License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)

Thanks to Vallamai: http://www.vallamai.com/?p=31139

themozhi@yahoo.com 

குடதிசை மருங்கில் – 2


- தேமொழி.


2. இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்

 









உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்கு சிற்ப வழிபாடு மத அடிப்படையின்  ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டவை  இந்திய தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான் ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சியாக    ஆகஸ்ட் 25, 2012 முதல்  பிப்ரவரி 25, 2013 வரை பார்வைக்கு வைக்கப் பட்டன.  இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின்  காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள்.  வழிபாட்டிற்காக கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

*கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்று தொகுத்து வழங்கப் படுகிறது.

  அருங்காட்சியத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்
இந்து மதக் கோயில்களில்  எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாக கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக்  காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.

இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமிய தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருள்கிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக்  கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள்.  எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம்  இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளை சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக்  கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக  அத்தெய்வத்தை  வழிபடுபவர்கள்.

இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களை தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும்  உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.  தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை.  கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.
பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.

பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்த திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார்.  சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராண கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலை எடுக்கப் பட்டிருப்பார்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ் வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில்  கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.

  கணேசா:

அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

கணேசர் தடைகளை நீக்கும் கடவுள்.  எந்த செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார்.  உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக  வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.


அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிரிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது  கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார்.  உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார்.  பிறகு தவறை உணர்ந்து யானையின் தலையை கணேசருக்குப் பொறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது.  யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாக கருதப் படுகிறது.

இந்து தெய்வம் கணேசர்: இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

(தொடரும்)

[*படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:
http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.


License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)

Thanks to Vallamai: http://www.vallamai.com/?p=30905

themozhi@yahoo.com 

குடதிசை மருங்கில் – 1

- தேமொழி.

1. சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்



ஆசிய நாடுகளின் கலைபொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம்.

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்
பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும் ஆசியக் கலைப் பொருட்கள் பெரும்பாலும் தூரக்கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த கலைப் பொருட்களாகவோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தவையாகவோ இருக்கும்.  ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடிபுகுந்தோரில் பெரும்பாலும் இந்நாடுகளைச் சார்ந்தவர்களாகவே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். 

தெற்காசிய நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலைப்பொருட்கள் மற்ற ஆசிய நாட்டு கலைப்பொருட்களை விட குறைவாகவே இடம் பிடித்திருக்கும்.  ஆசியநாட்டு வழி வந்தவர்களில் தெற்காசியப்பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்ற ஆசிய நாட்டினரைவிட எண்ணிக்கையிலும் அமெரிக்காவில் குறைவு.

இந்த நிலைக்கு மாறாக அதிக  இந்தியக் கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக்  கலை அருங்காட்சியகத்தில் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ‘ஆவ்ரி ப்ரெண்டேஜ்’ (Avery Brundage) என்பவர்.

இவர் 1959 இல் சான்  ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பது. அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த  ஆசியக்  கலை அருங்காட்சியகம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார்.  அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து, நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.  அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்.

மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார்.  அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ  பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் மனம் உவந்து நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை.  இவரது முயற்சியால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல உலகிலேயே  அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது  சான் ஃபிரான்சிஸ்கோவின் ஆசியக்  கலை அருங்காட்சியகம்.  இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு  வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.
இங்கிருக்கும் கலைப்பொருட்கள்;
(1) சீனா
(2) ஜப்பான்
(3) கொரியா
(4)தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோஸ், வியட்நாம், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா)
(5) தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா)
(6) இமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேபாள், பூட்டான், மங்கோலியா)
(7) பாரசீகம் மற்றும் மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்த்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)
என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப் படுத்தப் பட்டுள்ளன.

சிறிய மரகதக் கற்கள் முதற் கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.
இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும்  வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:
(1) புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
(2)ஆசிய நாடுகளுக்கிடையே ஆன கலாச்சார மற்றும் வணிக  பரிவர்த்தனைகள்
(3)ஆசிய நாடுகளில் இடம்பெறும்  நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும் ஆகும்.

இந்தியாவினைக் குறிக்கும் சிறப்பு கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்:
மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India's Royal Courts (2011)]
ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியக் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with 'Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]
இந்திய தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]
போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும்  சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.

(தொடரும்)


Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.


License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)

Thanks to Vallamai: http://www.vallamai.com/?p=30356


themozhi@yahoo.com 

"இயல் திரிந்தும்" "இயல் திரியா"மலும் வாழ்பவர்கள்

-செ.அ.வீரபாண்டியன்-


பழந்தமிழ் இலக்கியங்களை உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் அல்லது அவ்விளக்கங்கங்களின் அடிப்படையில் தமிழில் புலமையுள்ளோர் எழுதிய புத்தகங்கள் மூலம் மட்டுமே அணுகுபவர்களாகவே தமிழார்வளர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

ஆனால் சொற்களால் விவரிக்க முடியாத இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால், தமக்கிருக்கும் தமிழறிவு பற்றிய பயமின்றி, ஆர்வத்துடன் கூடிய உழைப்புடன் துணிச்சலாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள வரிகளை (texts) அணுகலாம். புதையல் தேட தமது பயணத்தைத் தொடங்குபவர்கள், புதையல் வேட்டையின் ஊடேயே வேட்டைக்கான திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து இறுதியில் வெற்றியும் பெறுவார்கள். அது போலவே, பழந்தமிழ் இலக்கியங்களிலும் புதையல் தேடி வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலான 'அனுபவபூர்வ' கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
(http://www.musicresearch.in/categorydetails.php?imgid=84 )

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களின் பொருள் இன்று அதே சொற்களுக்கு உள்ள பொருளுடன் வேறுபட்டிருக்க வாய்ப்புண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக சங்க இலக்கியங்களில் 'கழகம்' என்ற சொல்லுக்கு 'சூதாடும் இடம்' (திருக்குறள் 937) என்பதே பொருளாகும். எனவே திறந்த மனதுடன் ஆர்வத்துடன் ஆராய்ந்தால் உரைகள் வெளிப்படுத்தாத பொருளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்பதையும் இணைப்பில் உள்ள கட்டுரை மூலம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக 'இன்று இசையில் வரும் 'சுருதி' என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் 'அத்தம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்த வழிமுறையும் அக்கட்டுரையில் உள்ளது.

அதே போல் இன்றும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக நான் ஆராய்ந்து வரும் சொற்கள் 'இயல்பு' , 'இனம்' போன்றவையாகும். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்டு பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த சொற்கள் இடம் பெற்றுள்ள பகுதிகள் என்னை மிகவும் ஈர்த்து வரும் பகுதிகளாகும்.

உதாரணமாக 'இயல்பு' என்ற சொல் கீழ்வரும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.
‘ இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை’ -  திருக்குறள் - 47

இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் பற்றி கீழ்வரும் திருக்குறள் விள‌க்குகிறது.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது’  -திருக்குறள்  - 45

இன்று தமிழ்நாட்டில் குடும்பங்கள் பற்றி எனது அறிவு, அனுபவ அடிப்படையில் என்ன 'பண்பும் பயனும்' உள்ளன என்றும் ஆராய்கிறேன். அப்பா, அம்மா, கணவன்,மனைவி, சகோதரன், சகோதரி, மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளில் எந்த அளவுக்கு 'அன்பும் அறனும்' செல்வாக்கு செலுத்துகிறது என்பதும் அந்த ஆராய்ச்சியில் அடக்கம். 'அன்பும் அறனும்' பலகீனமாகி குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனித உறவுகளில் 'லாப நட்டம்' பார்த்து பழகும் 'பண்பும்', அதன் மூலம் கிடைக்கும் 'செல்வம், செல்வாக்கு' ஆகிய பயன்களும் தமிழ்நாட்டு 'இல் வாழ்க்கையில்' 'அதிர்ச்சி தரும்' அளவுக்கு அதிகரித்து வருகிறது. அத்தகைய செல்வாக்கிற்கு அடிமைப்பட்டுள்ள மனிதர்களின் 'இயல்பு' எப்படி இருக்கிறது என்பதும் அந்த ஆராய்ச்சியில் அடக்கம்.

திருக்குறள் 45இல் குறிப்பிடப்பட்ட 'பண்பும் பயனும் ’ இன்றுள்ள சமுகத்தில் மேலேக் குறிப்பிட்ட போக்கில் பெற்று வரும் மாற்றத்தை .’இயல் திரிதல்’ என்று தொல்காப்பியம் (எழுத்து 1:10 ) குறிப்பிடும் சொற்களால் விளக்குவதே சரியாக இருக்கும். 

இந்த காலத்திலும் திருக்குறள் 45 குறிப்பிடும் 'அன்பும் அறனும் உடைய‌ இல்வாழ்க்கை' வாழ்பவர்கள் வணங்குதற்குரிய மனித தெய்வங்களே ஆவர். அவர்கள் தொல்காப்பியம் (எழுத்து 1:20)  குறிப்பிடும் சொற்களின்படி, இல்வாழ்க்கைக்கான 'இயல் திரியா' மல் வாழ்பவர்கள் ஆவர்.

 இயல்பில் திரிவது பற்றி விளங்கிக் கொள்ள, ஒரு சொம்பு பாலில் சில துளிகள் தயிர் சேர்ந்தவுடன் பாலின் இயல்பில் தொடங்கும் 'திரிதல்' எவ்வாறு வளர்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் மிகவும் துணைபுரியும்.

எனக்கு 1960களிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் சமூக அளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கவனிக்கும் வாய்ப்புகள் இருந்தன;இருக்கின்றன. தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மேலேக் குறிப்பிட்ட 'இல்வாழ்க்கைக்கான இயல்பில்' திரிதல் போக்கில் கவனிக்கத்தக்க அளவுக்கு மாற்றங்கள் 1970களில் துவங்கி, 1980 களில் திரிதல் வேகம் அதிகரித்து, 1990 களில் இன்னும் அதிகமாகி இப்போது உச்சக்கட்டத்தை அடைந்து, அதன் அழிவுப் பயணமும் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகளும் வெளிப்படத் தொடங்கிவிட்டன. மத்தியிலும் தனிமனித பலகீனங்கள் உள்ள அரசியல் வாதிகளின் செல்வாக்கில் வளர்ந்து உச்சக்கட்டத்தை, லட்சக்கணக்கான கோடி ஊழல்களில் தொட்டு, அத்தகைய செல்வாக்கிலிருந்து பெருமளவில் விடுப்பட்டவர்களிடம் , ‘புதிய' மத்திய ஆட்சி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முகப்புத்தகத்தில் 'உணர்வு போதை' போக்கிற்கு எதிராக வெளிப்பட்ட கருத்து, இந்துத்வா தொடர்புள்ள முகப் புத்தகத்தில் பாராட்டுதலுடன்  வெளியாகியுள்ளது. சமூகத்திற்கு கெடுதலான வகையில் இயல்பில் திரிந்தவர்கள் தனிமைப்பட்டு பலகீனமாகும் போக்கும் தொடங்கி விட்டது.

சமுகத்திடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் அந்நியமாகாமல் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்வதன் ஒரு பலனே மேலே குறிப்பிட்டதாகும்.


கட்டுரை ஆசிரியர்: செ.அ.வீரபாண்டியன் (pannpandi@yahoo.co.in)
http://musicdrvee.blogspot.in/                        
http://musictholkappiam.blogspot.in/