Monday, December 30, 2013

தனிமை இரக்கமா அல்லது இனிமையா - சிவகாமிப் பாட்டியின் தத்துவக் கீறல்கள்


பேரா மின்னம்பலக் கூத்தன்
(டாக்டர்.நாகராசன் வடிவேல்)

சிவகாமிப் பாட்டி:  பேராண்டி அப்படிக் கணினியில என்னத்தப்பா தோண்டித் தோண்டிப் பாக்குறே

பேராண்டி:  பாட்டி பாரதியாரின் தனிமை இரக்கம் என்ற கவிதையையும் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற சினிமாப் பாட்டும் தோண்டிக்கிட்டிருக்கேன் பாட்டி

பாரதியாரின் தனிமை இரக்கம் பாடல்

குயிலனாய்! நின்னொடு குலவிஇன் கலவி
பயில்வதில் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைந்தால் 

பாவியேன் நெஞ்சம் பகீரெனல் அரிதோ ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் ! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 

வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயல்யென் இயம்புவல் சிவனே
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?

(இப்பாடல் பாரதியாரின் குறிப்புகளோடு மதுரை 'விவேகபாநு ' பத்திரிகையில் 1904ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.)

தனிமையிலே இனிமை காண முடியுமாச் சினிமாப் பாட்டு



பாட்டி:  எங்க கால இளந்தாரியோட அச்சில் ஏறின முதல் கவிதையாச்சே அது.  மனைவியைவிட்டுப் பிரிந்து கல்விக்காகக் காசிக்குப் போய்த் திரும்பிவந்தபிறகு எழுதின விரகதாபம் மிக்க காதல் பாட்டாச்சே பேரா.  ஆனா ஒரு வித்தியாசம் என்னன்னா தமிழ்க் கவிஞர்கள் பொதுவாகப் பொண்டுகதான் பிரிவைத் தாங்கமுடியாமல் நோய்வாய்ப்பட்டு நொந்ததாப் பாடுவாங்க.  இங்கே ஒரு இளைஞர் விரகதாபத்தை வெளிக்காட்டியிருக்கார் பாரு.  தமிழ்நாட்டு ஆண்பிள்ளைகள் திருமணமான மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் போய்விடுவது வழக்கம் என்றாலும் ஏதோ இந்தப் பெண்கள் பிரிந்த கனவனைப் பற்றிமட்டும் கவலைப்படுவதுபோலக் காட்டிப் பெண்களைக் கொஞ்சம் அவர்கள் ஆளுமையை மட்டம்தட்டியிருப்பதைப் பாரு

அதுபோலக் காதலில் பிரிந்தவர்களும் கண்ணீர்வடித்துக்கொண்டே பாடுவது சினிமாவில் சர்வ சாதாரணம்

http://www.youtube.com/watch?v=DWD9Unxdiow 

பேரன்:  அப்படீன்னா பாட்டி தனிமை என்பது கொடுமையானதில்லை அப்படீன்னா சொல்லவர்றீங்க

பாட்டி:  தமிழ்நாட்டில் குமுகக் குடும்ப உறவு ஒரு பெண்ணோ ஆணோ தனித்திருக்க வாய்ப்பளிப்பதில்லை.  பிறப்பிலிருந்து இறப்புவரை ஒரு பெண் மற்றவர்கள் மத்தியில்தான் வாழவேண்டும்.  தனக்கென்று ஒரு தனிமையை அமைத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் வாழவேண்டும். அதேபோல் ஆணும் அலுவல்காரணமாக வெளியே போகும்போதும் குடும்பத்தை விட்டுத் துறவு கொள்ளும்போது மட்டுமே தனிமை கிடைக்கும்.  எனவே தனிமை கொடிது என்ற கருத்து பரவலாக இருந்தாலும் அது சரியல்ல பேராண்டி.

தனிமை இல்லாமல் காதல் வளராது. தனிமை இல்லாமல் உயிரினங்கள் வாழமுடியாதுடா பேராண்டி.  தனியாக இல்லாமல் குழந்தை வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியாது.  தனிமை இல்லாமல் கவிஞனும் கலைஞனும் படைப்பாளியாக ஆகமுடியாது.  ஆகவே தனிமை என்பது அன்பு இல்லாமை அல்ல அன்பின் தோழனே தனிமை பிரிதலும் கூடலும் வாழ்வின் சுழற்சியாகும் ஒன்றில்லாமல் பிரிதொன்றில்லை..

தனியாக இருக்கக் குழுவிலிருந்து பிரியவேண்டியதில்லை.  ஆன்மாவின் குரலுக்குச் செவி சாய்க்கக் கிடைக்கும் கனநேரம் தனிமைக்குப் போதும் அந்தக்கனத்தில் ஒருவன் தன் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்மானிக்க முடியும்.  தனிமையைக் கண்டு அஞ்சி நிற்கவோ மற்றவர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று மருகி நிற்கவோ தேவையில்லை.  நீ தனியாக இல்லாமல் இருந்தால் உன்னைப்பற்றி உணரமுடியாது. அப்போது  தான் யார் என்றே தெரியாத ஒரு வெற்றிடத்தில் ஒருவன் வாழவேண்டிய நிலை உருவாகிவிடும்.

பேராண்டி:  என்ன பாட்டி ஒரே எம்டன் குண்டுமாதிரி தத்துவங்களை எடுத்து வீசறே.  தனியா இருக்கனுன்னா குடும்பத்தையும் உறவையும் பிரிஞ்சு காசிக்கோ இமயமலைக்கு ஓடனும்னு எல்லாரும் சொல்லுறாங்க.  நீ இப்படி எதிர்மாறாச் சொல்லுறியே பாட்டி

பாட்டி: பேராண்டி தனிமை என்பது மனம் சம்பந்தப்பட்டது.  மனப்பழக்கத்தினால் குடும்பத்தில் வாழ்ந்துகொண்டே தனிமையை அனுபவிக்க முடியும்.  அதைத்தான் குடும்பப் பெண்கள் தாங்கள் பெற்ற பயிற்சியால் இப்பவும் செய்துகொண்டிருக்கிறார்கள்

பேராண்டி;  பாட்டி மனம் என்பது ஒரு குரங்கு அல்லவா அதை கட்டுப்படுத்துவது எப்படி


பாட்டி:  மனம் என்பது படம் ஓடும் திரை போன்றது. மனம் ஐம்புலன்களையும் இயக்கும் ஐம்பொறிகள் மூலம் தொடர்ந்து செயல்படக்கூடியது.  படமே ஓடாத வெற்று திரை தனிமையாகாது. ஐம்பொறிகளில் கண், காது வாய் ஆகிய பொறிகளை அடக்கி மனதைக் கட்டுப்படுத்தினால் திரையில் கெட்ட காட்சிகள் தோன்றாது எனவே பொறிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒரு வாதம்,  ஆனால் மனதைக் கட்டுக்குள் கொண்டுவராமல் பொறியைமட்டும் மூடினால் என்ன பயன்.  மனதைக் கட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சி மேற்கொண்டு மனதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதே உண்மையான வாழ்க்கைத் தத்துவம்

பேராண்டி:  மேலை நாட்டு உளவியல் அறிஞர்களும் இதையேதான் சொல்லுறாங்க.  ஆனா மனம் பொல்லாதது.  பிறந்த குழந்தைக்கு அம்மாமேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் அதை அடக்கி அடக்கி அது மனதின் ஆழத்தில் சில பிறழ் உணர்வுகளை வளர்த்துக்கொள்வதே அவனுடைய பிற்கால வாழ்க்கை சிக்கல்களுக்குக்கு அடிப்படை என்று ஃப்ராய்டு என்ற அறிஞர் சொல்லியிருக்கார் பாட்டி.  அதுபோலவே யங் என்ற உளவியலாரும் மனம் கட்டுப்பாடற்றது என்று சொல்லியிருக்கார்

பாட்டி:  போடா போடா பேராண்டி ப்ராடு ஜிங்கு ஜங்குன்னு என்னென்னமோ உளர்றியே.  அதைவிட்டு நம்ம தத்துவங்கள் சொல்றதைக் கொஞ்சம் தெரிஞ்சுக்கோ.  அவய்ங்க ஐம்பொறிகள் ஐம்புலனோட நிறுத்திக்கிட்டாங்க.  நம்ம அறிஞர்கள் ஐம்பொறிகளும் மூடி திறக்கும் கதவுகள் என்றும் அதை இயக்க மூன்று உள்ளுறுப்புகள் இருப்பதாகச் சொல்லியிருக்காங்க.  மனம், புத்தி சித்தம் என்ற மூன்று உள்ளுறுப்புகள் ஐம்பொறிகளை இயக்குவதாக நம் தத்துவங்கள் சொல்லுதுடா பேரா.  மனம் என்பது கட்டுக்குள் இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வினாடிக்கு ஒருமுறை மனத்திரையில் படத்தை ஓட்டிக்கொண்டே இருக்கும்.  புத்தி மட்டுமே நான் யார் என அகந்தையை உருவாக்கி அதற்கேற்பக் காட்சிகளை மாற்றியமைக்கும்.  சித்தம் என்பது அகந்தையை நீக்கி மனிதன் முழுமையை அடைய உதவும்.  இந்த மூன்று உள்ளுறுப்புகளைப்பற்றி உங்க ப்ராடு ஏதாவது சொல்லியிருக்காரா பேராண்டி

பேராண்டி:  பாட்டி இப்புடி வெடுக்குன்னு கேட்டா நான் எப்படிப் பதில் சொல்றது.  கொஞ்சம் டைம் குடு பாட்டி நம்ம அறிஞர்கள் யாராவது வந்து உனக்குப் பதில் சொல்லுவாங்க

பாட்டி.  அப்புடீன்னா சரி.  இந்த மூன்று உறுப்புகளும் சரியா இயங்கப் பயிற்சி வேணும் பேராண்டி.  அந்தப் பயிற்சி குடும்பத்திலும் குமுகத்திலும் எளிதில் கிடைக்கும் பேராண்டி.  குடும்பத்தில் நல்ல சிந்தனைகள் இருக்கவேண்டும் என்று வீட்டில் கடவுள் வைத்து வணங்குவது நம் வழக்கம்.  குடும்பக் கடவுள்முன் தனிமையில் நின்று வேண்டுவது ஒரு அன்றாட பழக்கம் அல்லவா பேராண்டி.  மேலும் மனதைக் கட்டுப்படுத்த நோன்புகள் நியமங்கள் என்று குடும்பத்தில் பல வழிமுறைகள் உண்டு.  அவையெல்லாம் மனதைப் பக்குவப்படுத்தி நல்ல சிந்தனை வளர உதவுகிறது.  விரதம் இருப்பதும் நோன்பு நோற்பதும் பிரசாதமாக இனிப்பு வகைகள் உண்பதும் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது நம் வாழ்க்கைமுறையின் சிறப்புடா பேராண்டி.  மனதை மேலாண்மை செய்யும் பயிற்சியில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுவதும் அதிகத் திறமை உடையவர்களாக இருப்பதும் நம் சமுதாயத்தின் சிறப்பு

பேராண்டி: சரி பாட்டி மனதை அடக்கப் பல வழிமுறைகள் சரி புத்தி பற்றி என்ன தத்துவம் கைவசம் இருக்கு அதையும் கொஞ்சம் சொல்லு பாட்டி

பாட்டி; பேரா புத்தகம் படிப்பது மட்டும் புத்தியை வளர்க்காது.  ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்குதவாது.  சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான கருத்துகளைக் கைவசப்படுத்தி அவ்வப்போது எழும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனே புத்தி.  அந்த அடிப்படையில் பார்த்தால் பெண்களே உண்மையில் ஆண்களைவிட அதிபுத்திசாலிகள்.  ஆனாலும் கனவனை மகிழ்ச்சியில் ஆழ்த்த அவனைவிட தான் மட்டம் என்று காட்டிக்கொள்வதன்மூலம் அவர்கள் புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் மறைத்துக் கொள்கிறார்கள்.  ஒங்க தாத்தா இருக்காரே அவரு எவ்வளவு புத்திசாலி என்று எனக்குத் தெரியாத என்ன?  அவருகிட்ட கொஞ்சம் அறிவுக்குறைவாக இருப்பதாக ஒரு நாடகம்போட்டுத்தானே அவரை  உயர்த்திக்காட்டமுடியும்.  அப்புடித்தானே எல்லாப் பெண்களும் நடந்துக்குறாங்க.

பேராண்டி:  அது சரி.  விட்டா இப்படியே அளவில்லாமல் அளந்துடுவியே பாட்டி

பாட்டி:  பேராண்டி மனத்தளவிலும் புத்தி அடிப்படையிலும் சிந்தனையிலும் பெண்கள் சிறந்தவர்கள்.  அதனாலேயே பெண்வழி சமுதாயங்கள் சிறப்படைந்து விளங்கின.  ஆண்வழி சமுதாயங்கள் பெண்ணை அடக்குவதன்மூலமே தாங்கள் உயர்வுபெறமுடியும் என்று பல கட்டுப்பாடுகளை உருவாக்கிப் பெண்களை அடிமை படுத்தி வாழ்கிறார்கள்.  பெண்கள் எந்த நிலையிலும் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய இடைவெளியில் கிடைக்கும் நேரத்தைக் கொண்டு தனிமையில் தங்கள் மனம் புத்தி சிந்தனையை வளர்த்துக்கொண்டு இந்த வையகத்தை வாழவைக்கிறார்கள்.  நீ சொன்னியே ப்ராடுன்னு ஒருத்தர் குழந்தை அம்மாமேல் ஈர்ப்பு இருப்பதை மறைப்பதால் பல சிக்கல்கள் உருவாகுவதாகச் சொன்னார் என்று சொன்னாயே நம்ம ஊரில் பிள்ளையார் அவங்க அம்மா மாதிரியே ஒரு பெண்ணைத்தான் மணமுடித்துக்கொள்வேன் என்று ஆற்றங்கரயில் குளக்கரையில் மரத்தடியில் பெண்கள் கூடும் இடங்களில் ஒற்றைக் காலில் நின்றார்.  கோவில்களில் பாலினக் கவர்ச்சியை ஊட்டும் சிற்பங்களைத் தாண்டித்தான் இறைவனைத் தரிசிக்க நம்மவர்கள் ;போகிறார்கள்.


நம்ம நாட்டில் மன நோயாளிகள் வக்கிர புத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு காரணம் நாம் தனிமையில் யார் என்ற தேடலைத் தொடர்ந்து மேற்கொண்டு நல்லது எது கெட்டது எது என்று அறிந்து வாழத் தேவையான பயிற்சி கிடைப்பதால் என்பதைப் புரிந்துகொள் பேராண்டி.

தனிமை இனிமையானது தனிமை வெறுமையானதல்ல.  தனிமை அன்புக்குத் தோழன். தனிமை காதலுடன் கைகோர்த்து உலவும் இணை  தனிமை ஒரு உண்மை விளம்ப்பி : .  தனிமையே உன்னை நீ நினைப்பதைவிட அதிக உயரத்துக்கு உன்னை இட்டுச் செல்லும்.கருவி  பயிற்சி இருந்தால் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனிமை காண முடியும்.  இது நம் நாட்டு தத்துவம் பேராண்டி.  புரிஞ்சு நட. நல்வாழ்வு வாழ்வாய்

பேராண்டி:  சரி பாட்டி அப்படியே செய்யுறேன்



2 comments:

  1. பே.மி.கூ! ஜடுகுடு விளையாடினால், பாட்டிக் குட்டிப்பிடுவாள். அதனால் மென்மை ராகம்:

    ' பாட்டி மனம் என்பது ஒரு குரங்கு அல்லவா அதை கட்டுப்படுத்துவது எப்படி'
    பயந்து போய் விட்டேன். யூ மீன்:

    'பாட்டி! மனம் என்பது ஒரு குரங்கு அல்லவா அதை கட்டுப்படுத்துவது எப்படி?'
    அருமையான உரையாடல் . 2014 வாழ்த்துக்கள் நாகராசு.

    ReplyDelete
  2. வணக்கம்.

    1) பாட்டியிடம் ஒரேயொரு ஐய வினா.
    அம்மா என்பது தெய்வ நிலை.
    மனைவி என்பது தன்னில் பாதி நிலை.
    பால்குடி மறந்தபிறகு யாரும் அம்மாவுடன் படுப்பது கிடையாது.
    எல்லாநிலைகளிலும் அம்மா வேறு மனைவி வேறு.
    கூட்டுக் குடும்பத்தில் அம்மா உடுத்திய சேலையை மனைவி உடுத்தமாட்டாள்.
    எந்தவொரு ஆண்மகனாவது அம்மாபோல் மனைவி அமைந்திருக்க வேண்டும் என்று விரும்பியது உண்டா?
    மனிதனே விரும்பாத ஒன்றை, அதுவும் அந்த மூலநாயகனான விநாயகனா விரும்பினான்? அம்மாவைப் போன்று மனைவி வேண்டும் என்று அவனா கேட்டான்?
    இந்தக் கருத்து அடியேனுக்கு ஏற்புடையதல்ல என்பதை இதன்வழியாகப் பதிவு செய்து கொள்கிறேன்.

    2) ஒரு சந்தேகம்!
    எழுத்துப்பிழை இல்லாமல் இந்தப் பதிவு உள்ளதே.
    சொன்னது பாட்டி என்றாலும், எழுதியது (தட்டச்சு செய்தது) யார்? என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

    3) நன்றி.
    தனிமை என்பது வெறுமையானது அல்ல.
    தனிமையே உன்னை உயர்த்தும் என்ற தத்துவத்தை வழங்கிய பாட்டிக்கு நன்றி.

    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete