Monday, October 21, 2013

பரந்தாமனுக்குப் பல்லாண்டு - காப்பியக் கவிஞர் மீனவன்

 காப்பியக் கவிஞர். நா.மீனவன்           
                     
1.
வங்கக்  கடல்வண்ணா  வல்வினைகள்   தாங்கமாற்றி
இங்(கு)எம்  மனத்தில்  இடம்பிடித்தாய்  திருமார்பில்
தங்கத்  திருமகளும்  தானிருக்க  அன்றந்தத்
துங்க  வரைசுமந்த தோளுடையாய்  பல்லாண்டு.

2.
கதிரா  யிரம்போல்க்  காணும்  வயிரமுடி
எதிரே  சுடர்காட்டும்  ஏழுமலைக்(கு)  அதிபதியே
பதியில்  சிறந்ததிருப்  பதிஉறைவாய்  நின்னடியே
கதியாய்  நினைக்கின்றோம்  காத்தருள்வாய்  பல்லாண்டு.

3.
தாயாம்  அலர்மேலு  தானுறையும்  மலர்மார்பா
வாயால்  உனைப்பாடி  வழிவழியாய்த்  தொழுதெழுந்தோம்
மாயா  திருமலைவாழ்  மலையப்பா நின்னடிகள்
ஓயாமல்  சிந்தித்தோம்  உத்தமனே  பல்லாண்டு.

4.
கரியோடு  பரிமாவும்  காலாளும்  தேர்ப்படையும்
உரியானைப்  பாண்டவர்பால்  உள்வர்மம்  உடையானைத்
துரியனைத்  தான்வெல்லத்  துலங்குபரித்  தேரோட்டி
வரிவில்  விசயனையே  வாழ்வித்தாய்  பல்லாண்டு.

5.
கயல்திகழும்  மலைச்சுனையில்  காலையிலே  நீராடி
வயற்கமலம்  போல்விளங்கும்  வண்ணவிழி  அருள்நோக்கால்
துயரகற்ற  வேண்டுமெனத்  தொழுது  பணியுமெங்கள்
மயலகற்றி  அருள்புரிவாய்  மலையப்பா  பல்லாண்டு.

6.
சங்கேந்து  கையுடையாய்  சக்கரமும்  தானுடையாய்
மங்கையலர் மேலு  மகிழ்ந்துறையும்  மார்புடையாய்
கொங்குண்  மலர்வண்டு  கோவிந்தா  என்றழைக்கும்
தங்கத்  திருமுடியாய்  தளிரடிக்கே  பல்லாண்டு.

7.  
ஏதங்கள்  போக்கி  எமையாளும்  வேங்கடவா
போதார்  கமலப்   பொகுட்டுறையும்  திருமகட்கு
நாதா  திருமலைக்கு  நாயகனே  நின்னுடைய
பாதம்   கதியென்று  பணிந்திட்டோம்  பல்லாண்டு.

8.  
சங்கமுடன்  ஆழிஒரு சாரங்க  வில்லெடுத்தோய்
பொங்கெழில்சேர்  தாமரைபோல்  பூத்தவிழிக்  கமலங்கள்
எங்கள்வினை  போயகல  எழுகடல்போல் அருள்சுரக்கப்
பங்கயத்தாள்  பற்றிட்டோம் பல்லாண்டு

9.  
படர்அலைகள்  மேலிருக்கும்  பாம்பணைமேல்  கிடந்தானைத்
தடங்கடலுள்  தான்பாய்ந்து  தனிமறைகள்  காத்தானை
மடங்கலாய்  இரணியன்தன்  மார்பகலம்  கீண்டானை
வடவாலில்  இருந்தானை  வணங்கிடுவோம்  பல்லாண்டு.

10.  
கார்பொலியும்  திருமலைமேல்  காலமெலாம்  இருந்தானை
நீர்பொலியும்  பாற்கடலே  நிலைஎனக்கண்  வளர்ந்தானைத்
தார்மாலை  சூடிவரும்  தாமரைக்கண்  திருமாலைப்
பார்வாழப்  பாடிடுவோம்  பரந்தாமா  பல்லாண்டு.

11.  
நீலமா  முகிலனைய  நிறத்தானே  நெய்விரவு
கோலக்  குழற்கோதை  கொண்டிலகு  மார்புடையாய்
ஆலிலைமேல்  கண்வளரும்  அமுதவாய்ப்  பரம்பொருளே
நாலுமறை  வேங்கடவா  நாயகனே  பல்லாண்டு.

12.
செங்கமலம்  போலச்  சிவந்தவாய்  இதழுடையாய்
மங்கலப்பொன்  மணிமாலை  மார்பிலங்கு  மாயவனே
எங்கள்  குலத்தரசே ஏழேழ்  தலைமுறைக்கும்
இங்குனக்குச்  சரணங்கள்  இனியவனே  பல்லாண்டு.

13.
ஆயர்குலத்(து)  அணிவிளக்கே  அகிலமுழு தாள்பவனே
காயாம்பூ  நிறமுடைய  கார்வண்ணா  உச்சிமலை
தோயும்  முகிலுக்கும்  துணையான  வேங்கடவா
மாயவனே  எழிற்சோலை  மலையழகா  பல்லாண்டு.

14.
நீராழி  உடையுடுத்த  நிலப்பெண்ணாள்  தினம்மருவும்
பேராளா  எங்கள்  பெருமானே  பாண்டவர்க்குத்
தேரோட்டி  உலகுய்யத்  திருவருளைச்  செய்தவனே
ஓராழி  கையுடைய  உத்தமனே  பல்லாண்டு.

15.
போரானைத்  தோலுரித்த பூந்துழாய்  மார்பனே
நாராயணா  திருமலையின்  நாயகனே  செந்திருவாழ்
சீரார்  மணிமார்பா  செழுங்ககமலத்  தாளுடையாய்
ஏராரும்  சோலை  இருந்தருள்வாய் பல்லாண்டு.

16.
சாரங்க  வில்லுடையாய்  சக்கரமாம்  படையுடையாய்
போரரங்கம்  புழுதிபடப்  பொற்றேர்  செலுத்தியவா
தாரம்கொள்  இராவணனைத்  தரைமேல்  கிடத்தியவா
பேரரங்கம்  கிடந்திட்ட  பெரியவனே  பல்லாண்டு.

17.
கற்பகக்கா  தானுடைய  காவலனை  அந்நாளில்
பொற்பழித்த  தானவரைப்  புறங்கண்ட  சேவகனே
வெற்பெடுத்த  இராவணனை  வென்றழித்த  நாயகனே
மற்போர்செய்  தோளுடைய  மாதவனே  பல்லாண்டு.
                                 
18.
முப்பொழுதும்  தவறாமல்  முனிவரெலாம்  தான்வணங்கும்
மெப்பொருளே  திருமலைவாழ்  மேலவனே  நின்மலர்த்தாள்
எப்பொழுதும்  துதிக்கின்ற  எமைக்காக்கும்  ஏழுமலை
அப்பாஉன்  பொன்னடிக்கே  ஆயிரமாம் பல்லாண்டு.

19.
வடமலையை  மத்தாக்கி  வாசுகியை  நாணாக்கி
அடலமரர்  தானவர்கள்  ஆழிகடை  வேளையிலே
சுடரும்பொற்  குடத்தமுதைப்  பங்கிடவே  சோதியென
மடவரலாய்  வந்ததிரு  மலையப்பா  பல்லாண்டு.

 20.
தன்னேரில்  பாரதப்போர்  தான்நடக்கும்  காலத்தில்
மின்னேர்வில்  விசயனுக்கு  மேலான  கீதையுரை
சொன்னவனே  அவனுக்குச்  சோதிமிகு  பேருருவம்
தன்னையே  காட்டிவைத்த தக்கவனே  பல்லாண்டு.                                              

21.
பார்விழுங்கும்  கடலுக்குள்  பன்றியாய்த் தான்பாய்ந்து
போரவுணன்  திறலடக்கிப்  பூமியினைத்  தன்னுடைய
ஓர்மருப்பில்  தானேந்தி  உலகாண்ட  வேங்கடவா
சீர்திகழும்  திருமலைவாழ்  செல்வனே  பல்லாண்டு.

 22.
மன்னுபுகழ்த்  திருவரங்க  மாமணியே  பாய்ந்துவரும்
பொன்னிநதி  அடிதழுவும்  பூவடியாய்  அலர்மேலு
மின்னிடையாள்  நாயகனே  மேலைநாள்  குன்றெடுத்த
இன்னமுதே  கண்ணா  எழிற்சுடரே பல்லாண்டு.

23.
மாமறையும்  முனிவரரும்  மற்றுமுள்ள  தேவர்களும்
பாமரரும்   வந்துபணி  பரந்தாமா  கோபியர்கள்
தாமயங்கக்  குழலூதித்  தண்ணருளைச்  செய்தவனே
கோமகனே  வேங்கடவா  கும்பிட்டோம்  பல்லாண்டு.

24.
கானிடையே  பசுமேய்த்த கரியமா  முகிலனையாய்
வானமரர்  தொழுதேத்த  வண்டரவம்  செய்யலங்கல்
தானணிந்த  மாலவனே  மாமலராள்   நாயகனே
தேனுடைய  மலர்ச்சோலைத்  திருமாலே பல்லாண்டு.

25.
காரார்  திருமேனிக்  காகுத்தன்  எனத்தோன்றிப்
போராரும்  நெடுவேற்  புகழிலங்கை  இராவணனைத்
தேரோடும்  முடியோடும்  திருநிலத்தே  தான்கிடத்தி
ஏராரும்  அமரரைஈ(டு)  ஏற்றியவா  பல்லாண்டு.

26.
சித்திரப்புள்  ஏறிவரும்  சீரங்கா  பணிவார்க்கே
முத்திதரும்  கருநீல  முகில்வண்ணா  உலகளந்த
வித்தகனே  சனகனது  வில்லறுத்த  நாயகனே
தத்துபுகழ்  வேங்கடவா  தளிரடிக்கே  பல்லாண்டு.

27.
திக்குநிறை  அரக்கர்குழாம்  தெருண்டோட  அத்திரங்கள்
மிக்கபெரு  மாரியென  மேல்விடுத்த  சேவகனே
தக்கபுகழ்  வைதேகி  தான்மணந்த  மணவாளா
செக்கர்வான்  எனச்சிவந்த  சேவடிக்கே  பல்லாண்டு.

28.
வம்புலாம்  நற்கூந்தல்  வாட்கண்ணாள்  அலர்மேலு
கொம்பனாள்  தன்மேனி  கூடியவா  கூரியநல்
அம்பனைய கண்ணாள்  அழகுபத்  மாவதியாம்
செம்பொன்னாள்  தனைமணந்த  சேவகனே  பல்லாண்டு.

29.
ஆதிப்பிரான்  நம்மாழ்வார்க்(கு)  அன்றருள்செய்  மால்வண்ணச்
சோதிப்பிரான்  திருக்குருகூர்ச்  சுடரிலங்கு  வல்லியாள்
கோதைப்பிரான்  வந்தீண்டு  குடிகுடியாய்  ஆட்செய்வார்
சாதிப்பிரான்  வேங்கடவா  சாதித்தோம்  பல்லாண்டு.

30.
நாடுவார்க்(கு)  அருள்கின்ற  நம்பியுன்  பாதமலர்
சூடுவார்  நலம்பெறுவார்  சொல்மாலை  புனைந்தேத்திப்
பாடுவார்  பதம்பெறுவார்  பக்தியால்  திருமலையைத்
தேடுவார்  தமைக்காக்கும்  திருப்பதியே  பல்லாண்டு.

31.
வில்லாண்ட  தோள்இராமன் வித்தகனாம்  அனுமனெனும்
சொல்லாண்ட  சுந்தரன்கீழ்ச்  சூழ்ந்திருக்க  வலிமைமிகு
கல்லாண்ட  தோளுடையாய்  காகுத்தா  உனக்கிங்கே
பல்லாண்டு முகில்தோயும்  திருமலையா பல்லாண்டு.

 32.
கோகுலத்தில்  அந்நாளில்  குடிமக்கள் இல்புகுந்து
பாகனைய  மொழிபேசும்  பாவையராம்  ஆய்ச்சியர்சேர்
மாகுடத்துப்   பால்தயிரும்  மற்றிருந்த  வெண்ணெயையும்
மோகமுடன்  அருந்தியவா  முழுமுதலே பல்லாண்டு.

33.
பங்கயங்கள்  வாய்நெகிழப்  படர்ந்தருவி  தாம்முழங்கச்
செங்கயல்கள்  துள்ளிவிழச்  சிறுவண்டு  பறந்துவர
எங்கும்  அழகுபொலி  இயற்கைவளத்  திருப்பதியில்
மங்கலமாய்  இருந்தருளும்  மலையப்பா பல்லாண்டு

34.
சங்கொருகை  ஏந்தியவா  சக்கரமும்  ஏந்தியவா
மங்கையாம்  அலர்மேலு  மகிழ்ந்துறையும்  திருமார்பா
திங்கள்போல்  திருமுகத்தில் தேசுடைய  வேங்கடவா
பொங்குபுகழ்த்  திருமலைவாழ்  புண்ணியனே பல்லாண்டு.

35.
கரியமுகில்  மால்வண்ணா  கஞ்சன்  அனுப்பிவைத்த
கரியழியப்  போர்செய்த  காயாம்பூ  மேனியனே
பெருகிவரும்  பேரின்பப்  பெருவாழ்வு  தரவந்த
திருமலைவாழ்  வேங்கடவா  தெண்டனிட்டேன் பல்லாண்டு.

36.
வண்டாடும்  சோலை  வளைந்தாடும் செடிகொடிகள்
மண்டூகம்  பாய்சுனைகள்  மாலடிகள்  தொடுகற்கள்
கொண்டதொரு  திருமலைவாழ்  கோவிந்தா  கோபாலா
பண்டரக்கன்  தலைஎடுத்த  பரந்தாமா பல்லாண்டு.

37.
மதகளிற்றின்  கொம்பொசித்து  மல்லரையும்  சாய்ப்பித்து
நதிபொன்னி  கால்வருட  நமையாளக்   கண்வளர்வாய்
எதிராச  மாமுனிவர்  ஏந்துபுகழ்த்  திருவரங்கா
கதியான  வேங்கடவா  கற்பகமே  பல்லாண்டு.

38.
பஞசடியாள்  நப்பின்னை  பார்த்திடஏழ்  எருதடக்கி
நஞ்சரவச்  சிரசின்மேல்  நடனங்கள்  ஆடியவா
வெஞ்சிறையில்  பிறந்தவனே  வெவ்வினைகள்  தானகல
நெஞ்சிடையில்  செம்பொருளாய்  நிற்பவனே பல்லாண்டு.

39.
மொய்வண்டு  முகைவிரித்து  முகிழ்த்ததேன்  தனையருந்தி
மெய்மறந்து  தவம்கிடக்கும்  மேலான  திருப்பதியில்
கையாழி  ஏந்தியவா  கமலக்கண்  நாயகனே
அய்யா  மலையப்பா  அரங்கனே  பல்லாண்டு.

40.
கடல்மல்லைத்  தலசயனம்  கச்சியொடு  திருவெக்கா
குடந்தையொடு  விண்ணகரம்  கோலமிகு  திருநறையூர்
படர்வைகைத்  திருக்கூடல்  பாடகம்  திருத்தண்கா
குடிகொண்டு  திருமலைவாழ்  கோவிந்தா  பல்லாண்டு.

41.
திருவிடந்தை  கரம்பனூர்  திருநாகை  கண்ணபுரம்
திருவல்லிக்  கேணியொடு  திருக்கடிகை  திருக்கோழி
திருவில்லி  புத்தூர்  திருமோகூர்  திருமெய்யம்
திருவனந்தை  வாழ்முகிலே  திருப்பதியே  பல்லாண்டு.

42.
ஊரகம்  திருச்சேறை  ஓங்குபுகழ்த்  திருவழுந்தூர்
நீரகம்   சிறுபுலியூர்  திருநந்தி  விண்ணகரம்
காரகம்  கள்வனூர்  திருக்காழி  விண்ணகரம்
சீரகமாய்க்  கொண்டதொரு  செங்கண்மால்  பல்லாண்டு.

43.
செப்பனைய   மார்புடைய  சிற்றிடைசேர்  ஆய்ச்சியர்கள்
எப்பொழுதும்  சூழ்ந்திருக்க  இனியகுழல்  ஊதியவா
முப்போதும்  வானமரர்  முன்வணங்கும்  முதற்பொருளே
உப்பிலியாய்  மலையப்பா  உன்னடிக்கே  பல்லாண்டு.

44.
உலவுதிரைப்  பாற்கடலுள்  உரகமிசைக்  கண்வளர்வாய்
பொலிவுடைய  திருமேனிப்  பூமகளுன்  கால்வருடத்
தலைமுடிகள்  ஆயிரத்தால்  த்ரணிதனைத்  தாங்குகின்ற
நலமிக்க  சேடனுக்கு   நாயகமே  பல்லாண்டு.

45.
போர்ப்பூமி  தானதிரப்  பொற்றேரை  நடத்தியவா
தேர்பூத்த  மாமுகிலே  திருத்துழாய்  நெடுமாலே
பார்காக்கப்  போர்தொடுத்த  பாண்டவர்க்கு  மைத்துனனே
சீர்பூத்த  திருமகளைச்  சேரந்தவனே  பல்லாண்டு.

46.
மின்னியலும்  பொன்மடவார்  மேதகுநல்  ஆய்ச்சியர்கள்
பொன்னாடை  தனைக்கவர்ந்த  புண்ணியனே  மழைகண்ணா
பின்னதோர்  அரியாகிப்  பேரசுரன்  மார்பிடந்த
மன்னாதென்  திருவரங்கா  மலையப்பா  பல்லாண்டு

47.
மன்னுமொரு  குறள்வடிவாய் மாவலியைச் செற்றவனே
அன்னவயல்   திருவாலி  அமர்ந்துள்ள  பெருமாளே
முன்னீர்க்   கடல்கடந்த  முகில்வண்ணா  உன்பெருமை
என்னே  எனப்புகல  என்னுயிரே  பல்லாண்டு.

48.
பூமறைகள்  தானார்த்துப்  புகழ்பாடக்  கண்வளரும்
தாமரையாள்   நாயகனே  தாளால்  உலகளந்த
மாமுகிலே  மழைவண்ணா  மணிக்கயிற்றால்  கட்டுண்ட
தாமோ  தரனே  தனிப்பொருளே  பல்லாண்டு.

49.
தென்னன்  பொதியமலைத்  தேசுடைய  சந்தனங்கள்
மன்னும்  திருமேனி  திருமால்  இருஞ்சோலை
உன்னி  உறையும்  உறங்காத  கண்ணுடையாய்
இன்னமுதப்  பாற்கடலின்  இருநிதியே  பல்லாண்டு.

50.
சீருண்ட  திருமேனிச்  செவ்வாயான்  அன்றந்தப்
பாருண்டு  தாய்காணப்  பார்காட்டி  ஆட்கொண்டான்
நீருண்ட  முகிலனைய   நெடுமேனித்  திருமாலே
தாருண்ட  திருத்துழாய்  தாங்கியவா  பல்லாண்டு.

51.
அரியுருவாய்  இரணியனை  அன்றடர்த்த  நரசிங்கா
பொருதிரைகள்  தானுலவு  புல்லாணிக்  கரையுடையாய்
விரிதிரைசூழ்  இலங்கையர்கோன்  வேறுபட  வில்லெடுத்துப்
பொருதோளாய்  திருமலைவாழ்  புண்ணியனே  பல்லாண்டு.

52.  
செம்பொன்  மதில்சூழ்ந்த  தென்னிலங்கைக்  கோமானின்
பைம்பொன்  முடிதரைமேல்  படரவே  கணைதொடுத்த
நம்பியே  நற்றமிழ்சொல்  நம்மாழ்வார்க்(கு)  அருளியவா
உம்பர்புகழ்  கோவிந்தா உனக்கிங்கே  பல்லாண்டு.

53.  
கங்கைக்  கரைவேடன்  கடல்சூழ்ந்த  காரவுணன்
தங்குமலைக்  கவியரசன்  தமையெல்லாம்  உறவாக்கி
நங்கையாள்  சீதையுடன்  நடந்திட்ட  திருவடியாய்
பொங்குதுழாய்த்  தார்மார்பா  பொன்மலையாய்  பல்லாண்டு.

54.  
பெற்றங்கள்  மேய்த்திட்ட  பெருமானே  நின்னருளால்
சிற்றஞ்  சிறுகாலே  சேவித்தோர்  மனைகளிலே
பொற்றா  மரைமகள்பொன்  பொழியவே  அருளியவா
நற்றாயார்  தேவகியின்  நம்பியே  பல்லாண்டு.

55.  
தேனாரும்  சோலைத்  திருவேங்  கடமலையில்
கானாரும்  துளவக்  கடிபொழில்கள்  சூழ்ந்திலங்க
மீனாரும்  சுனைமலைமேல்  மின்னாழிப்  படையுடையாய்
ஊனிலே  கலந்திருக்கும்  உத்தமனே  பல்லாண்டு.

56.  
ஆளரியாய்த்  தோன்றியவா  ஐவருக்கு  நற்றுணைவா
கோளரியே  மாதவா  கோவிந்தா  மழைக்கண்ணா
தாளடியே  பற்றினோம்  தாமரைவாய்  குழலூத
நாளெல்லாம்  நிரைகாத்த  நாயகனே  பல்லாண்டு.

57.  
தென்புதுவைப்  பட்டன்  திருமகளின்  மலர்மாலை
என்புயத்துக்(கு)  உகந்ததென  ஏற்றணிந்த  திருமாலே
பொன்பயந்த இலக்குமியைப்  பூமார்பில்  சுமந்தவனே
மின்பொழியும்  சக்கரக்கை மேனியினாய்  பல்லாண்டு.

58.  
கொத்தாரும்  பூங்குழற்  கோதையாள்  நப்பின்னை
முத்தாரும்  மார்பம்  முயங்கியவா  பக்தியினால்
ஒத்தார்  அனைவருக்கும்  உதவும்  குணமுடைய
அத்தா  மலையப்பா  அழகனே   பல்லாண்டு.

59.  
நஞ்சுமிழும்  அரவின்மிசை  நடமாடும்  பெருமானே
செஞ்சுடர்சேர்  ஆழியொடு  சிறுசங்கம்  ஏந்தியவா
கஞ்சனது   வஞ்சம்  கடந்தவனே  ஆழ்வார்தம்
செஞ்சொற்  பொருளேநற்  சித்திரமே  பல்லாண்டு.

60.  
அண்டர்  தலைவாநல்  ஆயர்கள்தம்  குலக்கொழுந்தே
தொண்டர்  அடிப்பொடியார்  தூயதமிழ்ப்  பரகாலன்
கண்டும்மைச்  சேவிக்கக்  கைத்தலத்தில்  சங்கேந்திக்
கொண்டெம்மைக்  காக்கும்  குணநிதியே  பல்லாண்டு.                                  
 
61.
செவ்வாய்க்  குழல்கேட்ட  சிற்றிடைநல்  ஆய்ச்சியர்கள்
அவ்வாய்ச்  சுவைகண்ட  அழகுடைய  வெண்சங்கை
எவ்வாறு  இருந்ததென  எண்ணியொரு  வினாக்கேட்ட
கொவ்வையிதழ்  ஆண்டாளைக்  கூடியவா  பல்லாண்டு.

62.  
தாதெல்லாம்   தரைமலியத்  தண்தரைமேல்  நீர்நிறையக்
கோதிலாக்  குயிலினங்கள்  குழல்போல்  இசைபொழிய
மாதரசி  நப்பின்னை  மனத்துக்(கு)  உகந்தவனே
போதராய்  எம்மிடத்தே  பூவண்ணா  பல்லாண்டு.

63.
விண்ணாகிக்  காற்றாய்  விளங்கும்  அனலாகி
மண்ணாகி  எங்கும்  மலிபுனலாய்  ஆனவனே
உண்ணேரும்  ஆவியாய்  உகந்திருக்கும்  பெருமானே
கண்ணே  திருமலைவாழ்  கற்பகமே  பல்லாண்டு.

64.
வண்டாடும்  சோலை  வடவேங்  கடத்தானே
உண்டாய்நீ   மண்ணென்று  கோபித்த  உன்தாயும்
கண்டாள்  உலகனைத்தும்  காட்டுவாய்  உனதென்று
கொண்டாடித்  தொழுது நிதம்  கும்பிட்டோம்  பல்லாண்டு.

65.  
அவம்புரிந்து  வலியிழந்த  அரக்கர்கோன்  தன்னுடைய
தவம்அழித்து   நிறைவாணாள்  தனையழித்து  வைத்தபிரான்
பவமகலச்  சரணமலர்ப்  பாதங்கள்  காட்டுவாய்
உவணத்தாய்  வேங்கடவா  உத்தமனே  பல்லாண்டு

66.  
காலால்  சகடத்தின் கட்டழித்த  பெருமானே
வாலால்  அனல்வைத்த  வலியமகனாம்  அனுமன்
பாலருளைச்  சுரந்திட்ட  பரந்தாமா  மாவலியைக்
காலால்  அமிழ்த்தியவா  கருமணியே  பல்லாண்டு

67.  
சங்குடையாய்   கையிலொரு  சாரங்க  வில்லுடையாய்
கங்கைகமழ்  திருவடியாய்  கருடனாம்  கொடியுடையாய்
அங்குடையாய்  உன்முடிமேல்  அரவிருக்க  மங்கையொரு
பங்குடையான்  மைத்துனனுன்  பரமபதம்  பல்லாண்டு.

68.  
செஞ்சோதித்  தாமரைபோல்  சிவந்திருக்கும்  திருவடியை
நஞ்சூதும்  பாம்பணைமேல்  நங்கைதிரு  கால்வருட
மஞ்சூதும்   நன்மழைபோல்  மகிழ்ந்தருளைப்  பொழிந்துவரும்
எஞ்சோதி  வேங்கடவா  ஏழுமலை  பல்லாண்டு

69.  
கண்ணனே  நெடுமாலே  கவிங்குருகூர்ச்  சடகோபன்
அண்ணலே  தமிழ்மாலை  ஆயிரமாய்ப்  பாடிவைத்த
பண்ணாரும்  பாடலுக்குப்  பரமபதம்  அருளியவா
தண்ணார் கருமேனித்  தாமரையே  பல்லாண்டு.

70.  
மாமலராள்  நப்பின்னை  மணவாளா  திருவடியாம்
பூமலரைத்  தலையேற்றுப்  போற்றினோம்  நின்னுடைய
நாமங்கள்  ஓத  நலமளிக்கும் பெருமானே
கோமுதலாய்க்  கொண்டிட்ட  கோபாலா  பல்லாண்டு.

71.
பாகனைய  சொல்லாள்  பரிவுடைய  யசோதை
வாகாய்த்  தழுவியுனை  வளர்த்தநாள்   அசுரருக்கே
ஆகுலங்கள்  வேளைதொறும்  அருளியவா  அற்றைநாள்
கோகுலத்தைத்  தன்னிடமாய்க்  கொண்டவனே  பல்லாண்டு.

72.
மாறுபகை  நூற்றுவரை  மாமனொடு  அசுரர்களை
நீறுபடச்  செய்தவனே  நிலங்கீண்ட  பெருமானே
ஆறுதலைச்  சிவனாரின்  அன்பான  மைத்துனனே
ஏறுபுகழ்த்  திருப்பதிவாழ்  இனியவனே  பல்லாண்டு.

73.
மாயத்தால்  ஆய்ச்சியரை  மயக்கியவா  பாண்டவரைத்
தாயத்தால்  வென்றவர்கள்  தானழியத்  தேர்நடத்தி
வேயன்ன  தோளி  வியன்நங்கை  பாஞ்சாலி
தூய  குழல்முடிக்கத்  துணையானாய்  பல்லாண்டு.

74.
வார்புனல்சேர்  அருவிநீர்  வழிந்தோடச்  சூரியனார்
தேரேறி  வலங்கொண்ட  திருப்பதிவாழ்  பெருமானே
சீர்பூத்த  தாமரையாம்  சேவடிகள்  காப்பதெனப்
பேர்பாடி  வணங்குகிறோம்  பீடுடையாய்  பல்லாண்டு.

75.
சேலாரும்  கண்ணாள்நற்  சீதைக்காய்  மான்பின்னே
காலோய  ஓடியஎம்  காகுத்தா  மண்பொதிந்த
ஞாலத்தை  அன்றாண்ட  நாயகன்நீ  காப்பென்றே
ஓலமிட்டோம்  திருப்பதியாம்  ஊருடையாய்  பல்லாண்டு.

76.
திருவாலி  நாடன்  திருமங்கை  மன்னன்சொல்
திருமொழிக்கு  மயங்கியவா  திருவாழி  சங்கமுடன்
அருளாழிக்  கடலாகி  அலர்மேலுத்  தாயாரை
ஒருமார்பில்  வைத்திட்ட  உடையவனே  பல்லாண்டு.

77
பூரத்தில்  உதித்தாளை  புகழ்பாவை  நூலோதிக்
காரொத்த  மேனிதிருக்  கண்ணனையே  அடை ந்தாளைத்
தார்சூட்டித்  தந்தவளைத்  தன்னிடத்தில்  கொண்டவனே
பேரரங்கம்  உடையதொரு பெரியவனே  பல்லாண்டு.

78.
தேன்மலர்சேர்  காவிரிசூழ்  தென்னரங்கா  பக்திகொண்ட
பான்மையினால்  யதிராஜர்  பரவிடவே  அருளியவா
மேன்மையால்  நின்னடியை  மேலாக  எண்ணியவர்
வானாடு  பெறவைத்த  வள்ளலே  பல்லாண்டு.

79.
பூந்துழாய்   மார்புடைய  புண்ணியனே  பொன்னாழி
ஏந்துகரம்  உடையவனே  இனியபத்  மாவதியின்
பூந்துகில்மேல்  மனம்வைத்த  போரேறே  மலையப்பா
நா தகவாள்  ஏந்தியநல்  நாயகனே  பல்லாண்டு.

80.
தீதுடைய  கெளரவர்கள்   தீரமிக்க  பாண்டவரைச்
சூதாலே  வென்றவரைச்  சூழ்ச்சியால்  கான்போக்கத்
தூதாய்  நடந்தவர்க்குத்  துணையான  வேங்கடவா
பாதமலர்  தலைவைத்துப் பணிகின்றோம்  பல்லாண்டு.
   
81.
கொல்வித்த  பூதகியைக்  கொல்வித்தாய்  தூதுநீ
சொல்லவந்த  போதன்று  சூழ்ச்சிபல  செய்தார்க்கே
நல்லவழி  காட்டநீ  நல்லபெரு  வடிவெடுத்தாய்
மல்லார்தோள்  திருமலைவாழ்  மலையப்பா  பல்லாண்டு.

82.  
வானளந்த  காலுடையாய்  வார்கடல்போல்  நிறமுடையாய்
கானளந்த  நறுந்துளவக் கவின்மணக்கும் தோளுடையாய்
மீனளந்த  கண்ணுடையாள்  மேலான  அலர்மேலு
தானிருக்கும்  மார்பனே  தாயனையாய்  பல்லாண்டு.

83.  
அவரவர்க்கே  உரியதனை  அளந்தளிக்கும்  பெருமானே
எவர்வரினும்  அவர்பக்தி  இங்குண்மை  ஆனாலோ
உவப்புடனே  அவர்மனத்தின்  உட்பொருளாய்  இருப்பவனே
தவமிக்க  திருப்பதிவாழ்  தனித்தேவே  பல்லாண்டு.

84.  
திருக்கோட்டி  யூர்நம்பி  திகழ்யமுனைத்  துறைவனார்
திருக்கோட்டும்  பெரும்புதூர்த்  திருமகனார்  எதிராசர்
அருட்கோவில்   கொண்டிருக்கும்  அழகதனைக்  காணவைத்தாய்
உருக்காட்டி  வேங்கடத்தில்  உறைபவனே  பல்லாண்டு.

85.  
மதிஇரவி  உடுக்களுடன்  மற்றுமுள்ள  கோள்களுக்கும்
அதிபதிநீ   அல்லாண்ட  மேனியனே  அழகுபத்மா
வதிபதிநீ  அசோதை  வளர்மதலாய்  பரமபதப்
பதிபுரக்கும்  திருமலையே  பரந்தாமா  பல்லாண்டு.

86.  
அதிர்கின்ற  கடல்வண்ணா  அசோதை  மடியிருந்து
மதுரமுலை  அமுதுண்டு  மருதொசித்த  பெருமானே
உதரத்தில்  நான்முகனைத்  தாமரைமேல்  உதிக்கவைத்த
கதிர்முடிசேர்  வேங்கடவா  கருமுகிலே  பல்லாண்டு.

87.  
பங்கயங்கள்  வாய்நெகிழ்ந்து  பனித்துளிபோல்  தேன்சொரியக்
கொங்குண்ணும்  வண்டினங்கள்  குடித்துன்றன்  புகழ்பாட
மங்கை  அலர்மேலு  மகிழ்ந்தணைக்கும  மணவாளா
சங்கேந்தும்  வேங்கடவா  சக்கரமால்  பல்லாண்டு.

88.  
கொத்தார்  குழல்பின்னை  கோவலனே  என்றுன்னை
எத்தாலும்  சேவித்தாள்  இதயத்தில்  உனைவைத்தாள்
நத்தார்  புனலரவில்  நடனமிட்ட  நாரணனே
வித்தாய்  இருக்கின்ற  வேங்கடவா  பல்லாண்டு.

89.  
செங்கைத்  தலத்தாலே  சிறீதரா  நீயன்று
துங்கப்  பரிபொருந்தும்  தூய்தொரு  தேர்நடத்தி
மங்கையாள்  பாஞ்சாலி  மனச்சபதம்  நிறைவேற்றி
எங்களையும்  காத்துவரும்  ஏழுமலை  பல்லாண்டு.

90.    
இரவனைய  நிறமுடையாய்  ஏறேழும்  தழுவியவா
அரவணையாய்  கோபாலா  அசுரர்களின்  கூற்றுவனே
உரவுடைய  தோளாய்  உததியிலே  கண்வளரும்
கரவறியா  வேங்கடவா  கைகுவித்தோம்  பல்லாண்டு.

91    
படஅரவில்.  துயில்கொள்ளும்  பாற்கடலாய்  சீனிவாசா
மடவரலாம்  பாஞ்சாலி  மானத்தைக்  காத்தவனே
உடையவரும்  ஆழ்வாரும்  உவந்துபணி  வேங்கடத்தை
இடமாக  உடையவனே  ஈடில்லாய்  பல்லாண்டு.

92.  
இனியவனே  திருமகளுக்(கு)  ஏற்றதுணை  ஆனவனே
கனிசபரி  தரவுண்ட  காகுத்தா  கைவில்லி
உனைவெல்ல  வருமவுணர் உயிர்வாங்கி  வீடளித்த
பனித்துளவ முடியுடையாய்  வேங்கடவா  பல்லாண்டு.

93.  
ஏர்வளரும்  சோலை  இருந்தழகு செய்துவரப்
பார்வளரும்  மாந்தர்  பலர்வந்து  பணியுமொரு
சீர்கொண்ட   வேங்கடவா  சிலைமலர்ந்த  தோளுடையாய்
கார்கொண்ட  மேனிக்  கடவுள்மால்  பல்லாண்டு.

94.  
திருநெடுமாற்(கு)  அடிமையெனத்  தினம்பணியும்  அடியார்கள்
கருமாலே  மணிவண்ணா  கடல்கடைந்த  மாயவனே
பெருமாளே  மோகினியாய்ப்  பேரமுதம்  பங்கிட்ட
திருமாலே  வேங்கடவா  தெண்டனிட்டோம்  பல்லாண்டு.

95.  
புள்ளின்வாய்  கீண்டோனே  பூதங்கள்  ஐந்தானாய்
கள்ளச்  சகடத்தைக்  காலால்  உதைத்தழித்தாய்
வெள்ளம்போல்  வருமவுணர்  வீயநீ   அம்பெய்தாய்
 உள்ளத்தில்  வேங்கடவா  ஒளியானாய்  பல்லாண்டு.

96.  
கோதை  மணவாளா  கோவலனாய்ப்  பிறந்தவனே
சீதை  திருக்கேள்வா  சிறையெடுத்த  இராவணனால்
வாதையுற்ற  தேவர்களை வாழவைத்த  நாயகனே
தீதகற்றும்  வேங்கடவா  தேன்த்மிழால் பல்லாண்டு

97.
முடியார்   திருமலையின் முதற்பொருளே  முன்பணியும்
அடியார்  படுதுயரம்  அழித்தருளும்  பெருமானே
செடியான  வல்வினைகள்  சேர்த்தழிக்கும்  உயர்கருடக்
கொடியானே  வேங்கடவா   நெடுமாலே  பல்லாண்டு.

98.
தீதுரைத்த  கெளரவர்கள்  தீமைசெயப்  பாண்டவர்க்காய்த்
தூதுரைத்த  கேசவனே  துளவநறுந்  தாருடையாய்
மாதுரைத்த  சொல்லுக்காய்  மாநகரம்  நீங்கியவா
தீதறுக்கும்  வேங்கடவா  திருமலையே  பல்லாண்டு.

99.
கோட்டானைக்  கொம்பொடித்தாய்  குதிரையினை  அடக்கிவைத்தாய்
தாட்டா   மரையாலே  காளிங்கன்  தலைமிதித்தாய்
மாட்டாத  இராவணனை  மண்ணிலே  விழச்செய்தாய்
தேட்டாளா  வேங்கடவா  திருமலையே  பல்லாண்டு.
                                     
100.
வில்லாண்ட  தோளாய்  வியந்துளவத்  தாருடையாய்
எல்லாண்ட  மேனி   இனியதிரு  வேங்கடவா
கல்லாண்ட  மனத்தைக்  கரைத்துநீ  காத்தருள்க
சொல்லாண்ட  செந்தமிழால்  சொல்லிவைத்தேன்  பல்லாண்டு.

நிறைவுற்றது !!
   
                                                                                               

1 comment:

  1. அற்புதமான நூல் படைத்தளித்த காப்பியக் கவிஞர் மீனவனாருக்கும் நேர்த்தியாக நூலைப் பதிவுசெய்துள்ள திருமிகு சுபாவுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    ReplyDelete