Thursday, January 14, 2016

பட்டி நோம்பி

-- பழமைபேசி.


”அட, என்ன பாக்கறீங்க? ஊர்ல மழைங்ளா? ஒரு ஒழவு மழை இருக்குமுங்ளா? பொங்கலூருக்கு வடக்கமின்னா நல்ல மழையின்னு பெரிய பாப்பாத்தியவிங்க ஊட்டுக்காரர், வந்திருந்தவரு சொன்னாரு. இங்க வாசத் தொளிக்குறதுக்கு மூத்த புள்ளியா ரெண்டு அடி அடிச்சிப் போட்டு, தாந்து போச்சுங்க. எதுக்குமு, இந்த தை பொறந்தா ஒரு வழி பொறந்துதானுங்க ஆகோணும்?”

”ஆமாங்க மச்சான். எங்களுக்குமு ஒழவு மழையல்லாம் பேயிலீங்கோ. காட்டுத்தண்ணியே காட்டைவுட்டுப் போகுலீன்னா பார்த்துகுங்க நீங்களே?”

“அது செரீங். தை பொறந்தாச்சின்னா, பட்டி பெருகோணும்; வெள்ளாமை வெளையோணும்; பொங்கல் பொங்கோணும்!! அது மாறாது பாருங்க. அல்லாம் நல்லாத்தான் ஓடி அடையும். என்ன நாஞ்சொல்றது சரித்தானுங்ளே?”

“ஆமாமாங். இப்பெல்லாம் ஆருங் முன்ன மாதர தை நோம்பியெல்லாங் கும்புடுறாங்க? அல்லாம் மாறிப் போச்சு பாருங்!”

“நெம்ப நல்லாவே. இங்க, நாங்க ஒரு நாலஞ்சி பண்ணையத்துக்காரங்க மட்டும் இன்னுமு பழைய மொறைக்கி அல்லாத்தையும் செஞ்சிட்டுதான் வாறம். நம்ம இருக்குற காலத்துக்கும் செஞ்சி போடலாம். அதுக்கப்பொறம் என்னமோ ஆயிட்டுப் போகுது போங்க!”

”பெரிய அமுச்சி இருக்கமுட்டும் நாங்களும் தொட்டி கட்டி, பட்டி மெரட்டிட்டுதா இருந்தமுங்க. அமுச்சி போய்ச் சேந்தவுட்டு, பெரியம்மணிய பெங்களூருக்கு கண்ணாலங்கட்டி தாட்டியுட்டதாச்சிங்? அதுக்குப் பொறகு அல்லாமே நெதானமாய்ப் போச்சுங்!”

”நாம சின்ன வயசுல இருக்கறப்பெல்லாம் ஒரு வாரம் பத்து நாளத்து நோம்பியா இருந்துச்சு. இப்பெல்லாம் ஆரும் மூனு நாள் நோம்பியாக்கோடக் கும்புடுறது இல்லை?!”

“கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்க பழமைய. ஏன் நிக்கிறீங்க? குக்கீட்டுச் சொல்லுங்க மச்சே! வேலை கெடக்கட்டும்; எப்பூஞ்செய்யுற வேலைதான?!”

”அது செரி. கார்த்திகை மாசம் சோதி வெச்ச நாள்ல இருந்தே பட்டி நோம்பிக்கான வேலைகளும் தெரக்கா ஆரமிச்சிரும். சோதியன்னைக்கு சூந்து விளையாடுவோம். வெடிய வெடிய ஆடுவோம். கருது அறுத்து குச்சுக வெச்சிருக்கும். அந்தக் குச்சுகள்ல இருந்து தட்டுக் கத்தைகளை ஒன்னு ஒன்னா எடுத்தாந்து, அதோட மொனையில தீயைப் பத்த வெச்சி வளைச்சி வளைச்சி சுத்துவோம்.

நாலுபேரு அஞ்சு பேருன்னு கூட்டாச் சேந்துட்டு போயி களவாடுவோம். மாங்கா திருடுவோம். தேங்கா திருடுவோம்; ஆகாதவன் கெணத்துக்குள்ள எறங்கி மோட்டாரைக் கழட்டித் தண்ணிக்குள்ள போட்டுட்டு வருவோம். ஊர் வெடலைக காயடிக்காத காளைகளுக்கு எணை ஆச்சுதே? ஆனாலும் அதுல ஒரு நேர்மை இருக்கும். பொண்டு புள்ளைக மேல கை வெக்க மாட்டம். ஏழைபாழைகளுக்கு சகாயமா நடந்துக்குவம்.

சூந்து ஆடி முடிஞ்சு ஊட்டுக்குப் போகும் போது கெழக்க வெளுத்துரும். அந்த நேரத்துக்கும், ஊட்டுக்குப் போயி நாலு அச்சு, அஞ்சு அச்சுன்னு இராகிக் களியோட சுண்டைக்கா வத்தக்கொழம்பு, தூதுவளைச் சாறுன்னு கலந்து கட்டி ஒரு எடுப்பு எடுத்துட்டுதா தூங்கப் போவம்.

அன்னிக்கி பொழுது பம்பலா அப்படி முடியும். அது முடிஞ்ச கொஞ்ச நாள்லயே மார்கழி மாசம் பொறந்திரும். மார்கழி மொதநாள் அன்னிக்கே வடக்க தங்காத்தா கோயலு, ஊருக்குள்ள விநாயகங்கோயல்னு எல்லாக் கோயல்லயும் அன்னாடப்பூசை ஆரமிச்சிரும். ஒவ்வொரு கோயல்லயும் காலையில அஞ்சரையிலிருந்து ஏழு மணி வரைக்குமு, சாயங்காலம் ஆறுல இருந்து ஒம்பது மணி வரைக்குமு பாட்டுப் போட்டியில சாமி பாட்டுக போடுவாங்க. பண்டாரத்தார் ஊட்டு சம்முகம் ரெண்டு வேளையும் பூசை செய்வான்.

ஊர்ல இருக்குற நாய்க்கமாருங்க எல்லாம் பசனை கோயல்ல காலையில அஞ்சு மணியிலிருந்து பசனை பாடுவாங்க. ஆறு மணிக்கு சங்கு சேகண்டி ஊதிட்டு பாடிட்டே ஊர் சுத்தி வருவாங்க. பெரிய சிங்கார் நாய்க்கர் ஆர்மோனியப் பொட்டி, சுப்புராயலு நாய்க்கன் மிருதங்கம், நம்ம பாட்டையன் கஞ்சிரா, நரசிம்ம நாய்க்கரும் காவேட்டி நாய்க்கரும் சால்ரா போடுவாங்க. மித்தவிங்க எல்லாரும் கை தட்டிட்டே பசனைக்கு பின்பாட்டு பாடுவாங்க. கோபால்சாமி நாய்க்கனும் குழித்தோட்டத்து பட்டீசுவரக் கவுண்டனும் நல்லாப் பாடுவாங்க. அந்த ஆதிசேசா, அனந்த சயனாங்ற பாட்டுப் பாடும் போது ஊரே முழிச்சுக்கும். அவிங்க மொத்தம் நுப்பது பேரு. இப்பெல்லாம் எங்க அந்த மாதர பசனை கோசுடியே இல்லை போ. எங்கியோ கோயமுத்தூருகிட்ட வடவள்ளியில இருக்குதுன்னு சொல்லிச் சொல்றாங்க. பீளமேடு இரங்கம்மா கோயல் கோசுடின்னு சொல்லிக்கிறாங்க.

கடைசி நாளன்னக்கி திருப்பாவை முச்சூடும் பாடி, பசனை கோயல்காரங்க ஊருக்குள்ள மெரவனை வருவாங்க. தங்காத்தா கோயல்லயும், புள்ளார்கோயல்லயும் பூசை செய்து அவிசாயங் குடுப்பாங்க. பசனை கோயல்ல மாசம் முப்பது நாளும் சக்கரைத் தளிகையுமு, கடைசி நாளன்னிக்கு கூடா தட்டவடையுங் குடுப்பாங்க.

அந்த முப்பது நாளும் ஊருக்குள்ள அல்லாரும் சாமி கும்புடுறதும், அறுவடைப் பம்பலைப் பாக்கறதும், பட்டி நோம்பிக்கான வேலைகளைப் பார்க்கறதுமா ஒரே தடபுடலா இருக்கும். அல்லாரும் மனசு நெறஞ்சி தாய் புள்ளையா பந்த பாசமா இருக்குறது எப்பன்னு கேட்டா, இந்த மார்கழி ஆரமிச்சி தை நோம்பி முடியுற காலத்தைத்தான் சொல்லோணும்.

பட்டி நோம்பி வாறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடியே சந்தைகளுக்குப் போயி வேணுங்றதை வாங்கிப் போட்ருவாங்க. அல்லாமே நெல்லு குத்தி அரிசி பொடச்சி, பொங்கலுக்குன்னு தனி அரிசி, படைப்புக்குன்னு தனி அரிசி கட்டி வெச்சிருவாங்க. ஊருக்குள்ள அரசாணிக் காய் ஊரெங்கும் பொழங்கும். அங்கங்க ஊட்டு வாசல்ல பூசணிப் பூ வெச்சிக் கோலம் போடுவாங்க. மார்கழி முப்பதும் பொம்பளைப் புள்ளைகளுக்குக் கோலம் போடுறதும் கோயல்களுக்கு மாலை கட்டுறதுதான் வேலை.

பொம்பளைப் புள்ளைகளுக்கு அந்த வேலைன்னா, ஆம்பளைப் பசங்களுக்கு வண்டியப் பழுது பார்த்து வெக்கிறது. கீல் போட்டு இருசுகளைப் பதனம் பன்றது. ஏர்க்கால், பார்ச்சட்டம், மூக்காணி அல்லாத்தையும் மராமத்து செய்யுறதுன்னு வேலை முசுவா இருக்கும். எருதுகளுக்கு இலாடம் போட்டு பருத்திக் கொட்டைப் புண்ணாக்கும் நல்ல அரிசித் தவிடுமாப் போட்டு பாங்காக்குவாங்க.

திமில் இருக்குற காயடிக்காத காளைக் கன்னுகளுக்கு கொம்புக் கவுறு பூட்டுறதும், கழுத்து மணி பூட்டுறதும், கொம்புச்சலங்கை கொழுவுறதும் நடக்கும். இந்த மாதரக் காளைகளை வெச்சிருக்கிற நாங்கெல்லாம் ஒரு மொறப்பாத்தான் ஊருக்குள்ள திரிவோம். எங்களைக் கண்ணு வெக்காத பொம்பளைப் புள்ளைக ஊர்ல கெடையாது.

மார்கழி கடைசி நாள் அன்னிக்கி, பசனை கோயல் சப்பரம் தூக்கிட்டு வந்து ஊருக்குள்ள பசனை பாடி முடிஞ்சதும் காப்புக்கட்டு ஆரமிச்சிரும். ஊட்டுல, தோட்டத்துச் சாளையில இருக்குற பழசு பரட்டை எல்லாத்தையும் கழிச்சிக் கட்டிட்டு செய்யுறதுதான் காப்புக்கட்டு. காப்புக்கட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊடு ஒட்டடை அடிச்சி பூசி வழிக்கிற வேலை ஆரமிச்சிருவாங்க. மொகுடு ஏறிப் பூசுறது, அட்டாலியில ஏறி சுத்தம் செய்யுறதுக்குன்னு நாங்க கொஞ்சப் பேர்தான் இருப்போம். எங்களை எல்லாரும் வந்து கூப்புடுவாங்க. ஒரே கிராக்கிதான் எங்களுக்கு. தெனை மாவும், அரிசி மாவும், கைமுறுக்கும், ஓலைமுறுக்கும், உப்பட்டும்னு எங்களை நெம்ப நல்லாக் கவனிப்பாங்க.

காப்புக்கட்டு அன்னிக்கு மத்தியானத்துல இருந்தே ஊட்டு வாசல் வழிக்கிறதும், களத்து மேட்டுல வழிக்கிறதும்னு பொம்பளைக முசுவா இருப்பாங்க. எளவட்டப் பொடுசுகெல்லாம் ஓடி ஓடிக் கோலம் போட்டு ஊரே ஜாகோன்னு இருக்கும். அந்த தாவணிட் தலப்புல மூஞ்சியத் தொடச்சிக்கிறதும், பாவாடைய கணுக்கால் தெரியுறா மாதர ஏத்தியுட்டுச் சொருகிக்கிறதும், எங்களையெல்லாம் அல்லைல பார்த்துட்டே கோலம் போடுறதும் விட்டேத்தியா வக்கணை பேசுறதும்னு அவிக செய்யுற லொல்லு கொஞ்ச நஞ்சமல்ல போங்க.

தெகோட்டுல இருக்குற பையான் வீட்டு ஆளுக ஒவ்வொரு வீட்டுக்கும் காப்புக்கட்டுக்கு வேண்டியதை எல்லாம் கொண்டாந்து குடுப்பாங்க. காலையில நேரத்துல அவங்க கொண்டார்ற மக்கிரியில, கோலப்பொடியும், அரப்புமு இருக்கும். அவங்கவங்க பண்ணையத்துல இருந்து மாட்டுச்சாணம் முந்துன நாளே வந்திடும் வாசல் வழிச்சுடுறதுக்கு. வழிச்சுட்ட ஈரம் காயம் போறதுக்குள்ளயே அம்மணிகளும் பாப்பாத்திகளும் கோலம் போட்டு உட்றுவாங்க. ஊட்டு கார வாசல், திண்ணையில எல்லாம் அரிசி மாவுக் கோலம் போட்டு உட்றுவாங்க.

மஞ்ச வெயில் வர்றதுக்கும் சித்தங்கூரத்துக்கு முன்னாடி, பையான் ஊட்டு ஆளுக மறுக்காவும் பூளைப்பூவு, புங்கங்கொழுந்து, வேப்பங்கொப்பு, மாவிலை, ஆவரம்பூக் கொத்துன்னு ஊட்டு ஊட்டுக்கும் கொண்டாந்து குடுத்துட்டு போவாங்க. தோட்டங்காட்டுல இருக்கிறவங்க, அவங்கவங்களுக்கு வேண்டியதை அவிங்களே பொறிச்சிக் கொண்டாந்துருவாங்க.

எல்லா தழைகளையுமு வேணுங்ற அளவுக்கு ஒன்னு கூட்டி, மொதல் கொப்பைக் கொண்டு போயி புள்ளார் கோயல்ல வெச்சிக் கட்டிட்டு வருவோம். கூடவே பக்கத்துல இருக்குற ஒன்னு ரெண்டு கோயல்லயும் கட்டிட்டு வந்திருவோம். ஊட்டு எறவாரம், மதில்சுவரு, தோட்டங்காட்டுல இருக்குற பொழிக்கல்லுன்னு எல்லா எடத்துலயும் பூளைப்பூக் கொப்புகளை வெச்சி காப்பு கட்டிட்டு வர இராத்திரி மணி ஏழெட்டு ஆயிரும்.

ஒவ்வொரு ஊட்டுலயும் பெத்து, பொறப்பு, ஒறம்பரைகன்னு ஒரே பம்பலா இருக்கும். ஊட்டுக்கூடு பலகாரம் பணடம் மாத்திக்கிறதும், அங்கங்க உக்காந்து பழமை பேசுறதும் நடக்கும். புள்ளார்கோயல் மைதானத்துல கோலாட்டம், ஒயிலாட்டம், கொட்டுமொழக்கு எல்லாமும் நடக்கும்.

அடுத்த நாள் பெரிய நோம்பி. காலையில வெடியிறதுக்கு முன்னாடியே எழுந்து தலைக்கு வாத்துட்டு, கார வாசலுக்கு அல்லாரும் வந்துருவோம். கார வாசல் நடுப்புல பெரிய அய்யன் கல்லு வெச்சு அடுப்புக் கூட்டுவாரு. உன்ற அக்கா வழிச்சி உட்டு மஞ்சத்தூவி கோலம் போட்டு உடுவா. நானும் உன்ற அக்காளும் கரும்பு, காப்பு கட்டுனதுல மிச்சமான வேப்பந்தழை, ஆவரம்பூவு, மஞ்சக்கொப்பு, துளசிச்செடி, துண்ணூர்ப்பத்திரி எல்லாமும் வெச்சி சோடனை செய்வோம். ஆத்தாவும் அய்யனும் சேந்து பொங்கல் வெப்பாங்க. உன்ற அக்கா பள்ளையம் போடுவா. பொங்கல் பொங்குனவுட்டு, கெழக்க வெளுத்து வர்ற கதிரவனுக்குப் பொங்கல் வணக்கமும் நாட்ராயனுக்கு பள்ளையமும் படைச்சி சாமி கும்புடுவோம். காலையில பொங்கச் சோத்தை உண்டு போட்டு, அல்லாரும் பொறப்புட்டு ஆண்டியூர் காளியம்மன் கோயலுக்கு போயிட்டு வருவோம். கொஞ்ச பேரு திலுமூர்த்தி மலைக்குப் போயிட்டு வருவாங்க. பெரியூட்டு ஆளுக எல்லாம் கெழக்க பழநிக்குப் போயிட்டு வருவாங்க.

பெரிய நோம்பி அன்னிக்கு இராத்திரி முச்சூடும் ஊர்த்தலைவாசல்ல, ஊர்த்தலைவருக்கு மொறை செஞ்சி ஆட்டபாட்டம் நடக்கும். ஒரு பக்கம் கொட்டுமொழக்கு நடக்கும். ஆம்பளை ஆளுகெல்லாம் ஒயிலாட்டம், கோயில்மாடு மிரட்டுறது, சலங்கையாட்டம்னு பல வேடிக்கைகளும் செஞ்சி பராக்கு பார்க்க வெப்பாங்க. பொம்பளையாளுக கும்மியடிச்சி கந்தபுராணம் சொல்லுவாங்க.

வெடிஞ்சி எந்திரிச்சா, பட்டி நோம்பி! பண்ணையம் வெக்கிறவங்களுக்கெல்லாம் இதான் நோம்பி நாளு. ஊர்க்குளத்துல அங்கங்க நின்னு பண்டங்கன்னுகளைக் கழுவியுடுவாங்க. நான் பெரிய வாய்க்கால்ல போயி மாடு கன்னுகளைக் குளிப்பாட்டியுட்டு ஓட்டிட்டு வருவன். கொம்பு சீவி பெயிண்ட் அடிச்சுடுவேன். மொட்டை வண்டிக்கும் பெயிண்டி அடிச்சுடுவேன். சவாரி வண்டிக்கு மழத்தண்ணி ஒழுகாதபடிக்குத் தார் பூசியுடுவோம். போனகிழமைச் சந்தையில வாங்கிட்டு வந்த மொகரைக்கவுறு, மூக்கணாங்கவுறு, கைக்கவுறு, கொம்புச்சூடி, கம்பளிக்கவுறு, கழுத்துச்சங்கு அல்லார்த்தையும் கொண்டாந்து பண்டங்கன்னுகளுக்குப் பூட்டியுடுவோம். காளைகளுக்கு கழுத்து மணியும் கொம்புச்சூடியும் பொருத்தியுடுவோம். இந்த வேலைக ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கும் போது, அய்யனும் ஆத்தாவும் களத்து மேட்டுல எல்லா வேலைகளையும் பார்த்துகிட்டு இருப்பாங்க.

சாய்ங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம், களத்து மேட்டுக்கு மேவறத்தல்லையில இருக்குற வில்வமரத்துக்கடியில அய்யன் பட்டி கட்டியுடுவாரு. ஆத்தாவும் அக்காவும் பாம்புப் புத்துக்கு விளக்கு வெச்சிக் கும்பிட்டுட்டு வருவாங்க. களத்து மேட்டுல இருக்குற கருப்பராயனுக்கு கலயத்துல பொங்கல் வெச்சிக் கும்பிடுவாங்க. கருப்பராயனுக்கும் தாத்தைய்யன் கோயிலுக்கும் பள்ளையம் வெச்சி படப்பும் போட்டுக் கும்பிடுவோம். அதுக்குள்ள இருட்டாயிருந்திருக்கும்.

ஒரு எட்டு மணி வாக்குல அல்லாரும் வில்வமரத்தடிக்கு வந்திருவோம். பண்ணையத்துல வேலை பாக்குற சித்தாள் சின்னமுத்தி, பார்வதி, மாட்டுக்காரன் சின்னான், வேலையாளுக வேலன், கந்தன் அல்லாரும் அவங்கவங்க ஊட்டு ஆளுகளோட வந்திருவாங்க. குருவனும் அமுசாவும் தீப்பந்தம் கொண்டாந்திருவாங்க. ரெண்டு தீப்பந்தம் எரியுற வெளிச்சத்துல வில்வமரமே எரியுற மாதிரி இருக்கும். அல்லையில தேங்கா மட்டைகளை எரிச்சுட்டு தப்பட்டைப் பலகைகளை காய்ச்சிட்டே குளிர் காஞ்சிட்டும் இருப்பாங்க.

அய்யன் கைவாகுல பட்டி தயாரா இருக்கும். களிமண்ணும் மாட்டுச் சாணியும் கலந்து தெப்பக்குளம் கட்டியுட்டு இருப்பாரு. அதுல நெம்ப அழகா ஆவரம்பூவு, மொடக்கத்தான் பூவு, மாவிலை எல்லாத்தையும் குத்தியுட்டு, கார்த்திகை விளக்குகளை அங்கங்க வெச்சிப் பத்த வெச்சிருப்பாரு. கட்டுன தெப்பக்குளம் பூராவும் செஞ்சேரிமலையிலயோ, திருமூர்த்தி மலையிலிருந்தோ கொண்டு வந்த தீர்த்தத்தை வுட்டு நெப்பியிருப்பாரு. குளத்துச் செவுத்துல கார்த்திகை விளக்கு எரியொ, குளத்துக்குள்ள இருக்குற வெங்கச்சாங்கல் சாமிக அப்படியே மின்னும்.

தெப்பக்குளத்தை ஒட்டி முன்னாடியே வெங்கச்சாங்கல்லுல சாமி வெச்சி, அதுக்கு சந்தனம், துண்ணூரு, குங்குமம் எல்லாம் வெச்சி உட்டிருப்பாரு அய்யன். அந்த சாமிக்கு முன்னாடிதா படையல் படைப்பாங்க.

அந்த படையல்ல, பண்ணையத்து ஆளுக அல்லார்த்துக்கும் மனசு நிறைஞ்சு, மனம் போல துணிமணிக வெச்சிருப்போம். ஒவ்வொரு துணிமணிகளுக்கும் மேல பொங்கப்பணம் ஆயிரம், ஐநூறுன்னு வெச்சிருப்போம். அந்த வருசம் வெளைஞ்ச வெளைச்சலைப் பொறுத்து, மூணு பொங்கல், ஆறு பொங்கல், பன்னென்டு பொங்கல்னு வெள்ளாமையப் பொறுத்து அது மாறும். கறந்த பாலைக் கொண்டாந்து பட்டிக்கு முன்னால வெச்சிறுவோம்.

அய்யன் செரின்னு சொன்னவுடனே, பண்ணையத்துல இருக்குற ஆளுக எல்லாரும் தப்பட்டை பலகை, கொட்டு மொழக்குன்னு வாத்தியம் போடுவாங்க. நாங்களும் ஒறம்பரைகளுமா சேந்து களத்து மேட்டுல கும்பிட்டு வந்து, பொங்கல் பொங்கி, தேங்கா பழம் உடைச்சி, பொரி கடலை எல்லாம் வெச்சி சாமி கும்புடுவோம்.

அய்யன் நாலு பேர்த்தை மின்னாடி வரச் சொல்லுவாரு. ஒருத்தர் கையில ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. ரெண்டாவது ஆளு கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. மூனாவது ஆள் கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. நாலாவது ஆள் கையில வாணாச்சட்டி நெறைய பொங்கலும் குடுத்துருவாரு.

இப்ப மூனு பேரும், பண்டங்கன்னுக கட்டி இருக்குற கட்டுத்தாறையச் சுத்தியும் போகோணும். மொத ஆள் கையிலிருக்குற மாவிலைய தூக்குப் போசியில உட்டு எடுத்து, “கை கழுவு பட்டியார் கை கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்த ஆள் அதே மாதர, மாவிலைய போசிக்குள்ள உட்டு எடுத்து, “வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்து வர்ற ஆளு, ”அரசன்னம் பட்டியார் அரசன்னம்”னு சொல்லுவாரு. நாலாவதா வர்ற ஆளு, ஒவ்வொரு பண்டங்கன்னுக்கும் ஒவ்வொரு கவளம் பொங்கச் சோத்தை ஊட்டியுடுவாரு. இப்படி ஒரு விசுக்காவோ, மூனு விசுக்காவோ, இருக்குற பொங்கச் சோத்துக்கு ஏத்தா மாதர மாடு கன்னுகளுக்கு பொங்கச் சோத்தை ஊட்டியுடுவோம்.

கை, கால் மூஞ்சியெல்லாங் கழுவிட்டு வந்து அல்லாரும் கட்டியுட்டு இருக்குற பட்டி மின்னாடி, தீப்பந்தத்து வெளிச்சத்துல உக்காந்துக்குவோம். பண்ணையத்து ஆளுகெல்லாம் தண்ணி வாத்து எடுத்துக் குடுத்த புதுத்துணிகளை உடுத்திட்டு வருவாங்க. அவங்களும் எங்களுக்கு எதுத்தாப்பல உக்காந்துக்குவாங்க. அறுவடை எல்லாம் எப்படிப் போச்சு, அடுத்த வருசம் பண்ணையத்துக்கு ஆரெல்லாம் இருக்கப் போறாங்க, அவங்களுக்கு வருசம் அளக்குறது எவ்வளவு, கூலி எவ்வளவுன்னு பேசுவாங்க. நோம்பி கழிச்சிப் பேசிக்கலாமுங்கன்னும் சொல்லீருவாங்க. ஆனா, மாடு கன்னு பாத்துகுறவங்களை முன்னாடி வரச் சொல்லி குத்தம் குறையிருந்தா மன்னிச்சுக்கப்பா; நீ மனசு நிறைஞ்சாத்தான் பட்டி நெறையும்; எதுனாலும் சொல்லிப் போடுன்னு சொல்லிக் கேட்டு மனசு நிறையப் பண்ணுவாங்க.

அது முடிஞ்சதீமு, கொட்டு மொழக்கு ஆரம்பமாயிரும். முடக்கத்தான் கொடியில பெரிய வடம் செஞ்சி, தண்ணி நெறஞ்சி இருக்குற பட்டிக்கு முன்னாடி ரெண்டு அல்லையிலயும் ரெண்டு பேர் அந்த வடத்தை குறுக்க புடிச்சிட்டு நின்னுக்குவாங்க. இதை கன்னுமெரட்டுன்னு சொல்லிச் சொல்றது. கொட்டு மொழக்கோட, இருக்குற தூக்குப்போசி, இரும்புச்சட்டின்னு கையிக்கு கெடைக்குறதை எல்லாத்தையும் கையில வெச்சிட்டு அடீஅடீன்னு அடிச்சி கொட்டு மொழக்குவாங்க. அந்த கொட்டுமொழக்குக்கு நடுப்புல, பொம்பளையாளுக குலுவை போட, ஆம்பளை ஆளுக “கலகலகலகல”ன்னு மாட்டுக்கன்னை புடிச்சாந்து மிரட்டியுட்டு பட்டிய மிதிக்க வெச்சி அழிச்சுடுவாங்க. மாட்டுக்கன்னும் அந்த வாத்தியம் குலுவை சத்தத்துக்கு மிரண்டு போயி சங்குசங்குன்னு குதி போட்டுட்டு ஓடிப் போகும். ஒரே கொண்டாட்டமா இருக்கும்.

சித்த நேரங்கழிச்சு, வந்திருக்கவங்க அல்லார்த்துக்கும்  பந்தி உடுவாங்க. மொதல் மரியாதை பண்ணையத்துல வேலை செய்யுற ஆளுகளுக்குத்தா. அவிகளை உக்கார வெச்சி, இலையில அரிசி மாவு, தினை மாவுப் பலகாரமெல்லாம் வெச்சிப் பந்தியுடுவாங்க. அப்புறம் ஒறம்பரைகெல்லாம் சேர்ந்து விருந்து உண்டு போட்டு ஊட்டுக்குப் போக மணி காலையில ரெண்டு மூனுன்னு ஆயிரும்.

வெடிஞ்சா, மூக்கரசு நோம்பி. பூநோம்பின்னும் சொல்லுவாங்க. வயசுப் பொண்ணுங்க பையங்கெல்லாம், ஊட்டுப் பலகாரத்தை கட்டுச்சோறா கட்டிகிட்டு ஆண்டியூர் கரட்டுல இருக்குற வழுக்காம் பாறைக்குப் போவாங்க. அங்க இருக்குற வழுக்காம் பாறையில வழுக்கி விளையாடுறது, பன்னாங்கல் விளையாடுறது, கூட்டாஞ்சோறு திங்கறது, ஆலமரத்துல தூரி கட்டி விளையாடுறதுன்னு விதவிதமா பொழுதா வரைக்கும் விளையாடிட்டு வருவாங்க.

நாங்கெல்லாம் சோமவாரப்பட்டியில இருக்குற மாலகோயிலுக்குப் போவம். அங்க, ஆல் கொண்ட மால் திருக்கோயில்னு ஒன்னு இருக்கு. சுத்துபத்து நூத்திப்பத்து கிராமங்கள்ல இருந்தும் பண்ணையத்துக்காரங்க அங்க வருவாங்க. கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டமா இருக்கும். அல்லாரும் அவங்கவங்க மாட்டுப் பாலைக் கொண்டாந்து, ஆல் கொண்ட திருமாலுக்கு ஊத்திட்டுப் போவாங்க. அவங்கவங்க காளை மாட்டுக்கு மணி கட்டி, கொட்டுமொழக்கோட ஆட்டம் போட்டுட்டே கோயலுக்கு வந்து கோயல் திருவமுது ஊட்டு விட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. வண்டி கட்டிட்டு நெறைய சனம் வந்து போகும். கோயல் மைதானத்துல ஆட்டம் பாட்டம்னு வேடிக்கைக நெம்ப இருக்கும். அதுகளைப் பாக்குறதுக்கும் நெறைய சனம் வந்து போகும்.

அன்னக்கி சாயங்காலம், ஊர்க்கிணத்துல வெச்சி பூநோம்பி. ஊர்ப் பொம்பளைங்க எல்லாம் வந்து ஒன்னு கூடி கும்மியடிச்சிப் பாடுவாங்க. பாட்டுப் பாடிட்டே ஊர்வழியில, இட்டேரியில, கோயல் தோட்டம் துறவுன்னு நாலாபக்கமும் பாட்டுப் பாடி, கும்மியடிச்சி, முளைப்பாரி எடுத்திட்டு போவாங்க. ஊர்முச்சூடும் போயி ஆவரம்பூவு, துளசிச்செடி, பொன்னரளி, பூவரளின்னு எல்லாம் பொறிச்சிட்டு வந்து சாமிக்கு சாத்திட்டு இராவு முச்சூடும் பாட்டுப் படிச்சி, கும்மியடிச்சி, விளக்குமாவு எடுத்து திருவிழாவை விழாவாக் கொண்டாடுவாங்க. கொட்டு மொழக்கு, உரிமி மேளம், பம்பை மேளம், சிலம்பாட்டம், இறகாட்டம்னு அதுகளும் ஊருக்குள்ள நடக்கும்.

இப்படியான பூ நோம்பியில மனசு மசிஞ்சு காதல் மலர்றதும் உண்டு. அப்படியான காதல்ல மனசு மசிஞ்ச காத்தவராயன், அவங்க அம்மாவுக்குப் பாடுற பாட்டோட இந்த பொங்கல் பத்தின நம்ப பழமைய முடிச்சிக்கலாமுங்க மச்சே, சரியா? இந்த சொல்றன் கேட்டுகுங்க.

அங்கே கண்டேன் மெய்மறந்தேன்
அழகான மாலையவளை
கண்டு வந்த பூநோம்பிதொட்டு
கண்ணுறக்கம் இல்லையம்மா
படுத்தா உறக்கமில்ல
பாய் போட்டாத் தூக்கம் வருகுதில்லே
பாத்துவந்த வங்கணத்தியவளை
சேத்துக்கூட்டியார விடை கொடம்மா
வாழ்த்தி வரங்குடம்மா
நானும் போயவர்றேனம்மா
பாவை வந்தாப் போதுமம்மா!!”

மாமனும் மச்சானும் விடை பெற்றுக் கொள்கிற வேளையில் ஒரு சேரச் சொல்லிக் கொண்டார்கள், “பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்!!”



 
 
பழமைபேசி
pazamaipesi@gmail.com

தமிழண்ணலின் தமிழ் வாழ்வு (12.08.1928 – 29.12.2015)


- கி. சிவா.


எண்பத்தெட்டாம் அகவைவரை வாழ்ந்து தமிழ் மொழிக்குத் தன்னாலான பல ஆய்வு நூல்களை வழங்கித், தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார், அறிஞர் இராம.பெரியகருப்பன் என்கின்ற தமிழண்ணல். ஆய்வுலகில் ஓர் தமிழரிமாவாகத் திகழ்ந்தார். கவிஞர், புதின ஆசிரியர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல முகங்களைக் கொண்டிருந்தவர். தம்முடைய திறமையால் பல படிநிலைகளைக் கடந்தவர். மொழிப்போர் வீரர். அஞ்சா நெஞ்சினர். ஓயா உழைப்பினர். 24.07.2015 அன்று நானும் என் துணைவியாரும் வீட்டிற்குச் சென்று, நேரில் சந்தித்தபோதுகூட, பக்தி இலக்கியம் தொடர்பான அவருடைய ஆய்வுநூலைத் திருத்திக் கொண்டிருந்தார். “பணியாற்றிய காலத்தில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். இனிமேலாவது பக்தி இலக்கியங்களைப் படிப்போமென்று நினைத்து இந்த நூலை எழுதியுள்ளேன். மீண்டும் சங்க இலக்கியங்கள் முழுமையையும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறாமலேயே போய்விட்டது.
tamizhannal2006 – 2009 ஆண்டுகளில் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆய்வு செய்தபோதும் அங்கேயே பணியாற்றியபோதும் அவருடைய பேச்சைப் பலமுறை கேட்டுள்ளேன். அவரைக் குருவாக மதிக்கும் பேரா. முதுமுனைவர் ச.சு.இராமர்இளங்கோ அவர்கள் இவரை அடிக்கடி அழைத்துவருவார். அண்ணலுடைய பொழிவில் நகைச்சுவை இழையோடும். ஜனசக்தியின் நடுப்பக்கத்தில் நான் எழுதிய “நடிப்பு சுதேசிகளும் நச்சு உணவுகளும்” (25.06.2015) என்ற கட்டுரையை அவரிடம் கொடுத்தபோது (24.07.2015),  அதில் மேற்கோள் காட்டியிருந்த “கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு, இந்நான் கல்லது உணவும் இல்லை” (புறம்.335) என்ற புறநானூற்றுப் பாடலைப் படித்துவிட்டுப், “பொருத்தமான பாடலைத் தேடிப்பிடித்துச் சரியாக எழுதியிருக்கப்பா” என்று மனதாரப் பாராட்டினார். இளையவர்களுடன் இணைந்து பணியாற்ற எவ்விதத்திலும் தயக்கம் காட்டாதவர். பேரா.இ.முத்தையாவுடன் இணைந்து தமிழியல் ஆய்வு என்கின்ற புத்தகத்தைப் பதித்துள்ளதே இதற்கு நற்சான்று.
கல்விப்பயணம்: மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும் திருவையாற்று அரசர் கல்லூரியிலும் பயின்று வித்துவான் (1948) பட்டம் பெற்றார். தன் முயற்சியாகச் சென்னைப் பல்கலையில் இளங்கலைப் பொருளியல் (1948), முதுகலைத் தமிழ் (1961) ஆகிய பட்டங்களைப் பெற்றார். மொழிப்போர் மறவர் பேராசிரியர் சி.இலக்குவனார் மற்றும் இலக்கணச் செம்மல் போராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியார் ஆகியோரின் வழிகாட்டுதலில் “Tradition and Talent in Cankam Poetry” (1969) என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வைச் செய்தார். காரைக்குடியிலுள்ள மீ.சு.உயர்நிலைப் பள்ளியில், தன்னுடைய கல்லூரித் தோழர் கவியரசு முடியரசனாருடன் இணைந்து 13 ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய சங்க இலக்கியப் பயிற்சியை அறிந்த மதுரைக் கருமுத்து தியாகராசர் அவர்கள் தமது தியாகராசர் கல்லூரிக்கு அழைக்க, அங்கு 10 ஆண்டுகள் பணிசெய்தார். 1971இல் பேரா.முத்து சண்முகம்பிள்ளையின் விருப்பத்தின் பேரில் காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இவர் 1988இல் காமராசர் பல்கலைக்கழகத் துறைத்தலைவராக இருந்தபோது, அத்துறை பள்ளியாக (School of Tamil Studies) மாறுவதற்குப் பெரிதும் உழைத்தார். மறைந்த முன்னாள் அமைச்சர்கள் மு.தமிழ்க்குடிமகன், கா.காளிமுத்து முதலிய நாற்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆய்வு நெறியாளராக இருந்துள்ளார். அமெரிக்கா, இலங்கை, சப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்குள்ள தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கும் பணியாற்றியுள்ளார். ‘1989இல் மலேசியத் திராவிடர் கழகம் நடத்திய விழாவிற்குத் தலைமை தாங்கியுள்ளார்’ (thirutamil.blogspot.in).
பெற்ற விருதுகள் / சிறப்புகள்: திரு.வி.க. விருது (1989), கலைமாமணி விருது (2010), நல்லாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது (1995, காமராசர் பல்கலைக்கழகம்), தொல்காப்பியர் விருது (2010-2011, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்), பேரா.இரா.மோகன், நிர்மலாமோகன் ஆகியோர் தமது இலக்கிய இணையர் அறக்கட்டளை சார்பில் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2012, ரூபாய் பத்தாயிரம், நாள்: 27.04.2013, eraeravi.blogspot.in), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2013 - பாரிவேந்தர் பைந்தமிழ் விருது- 5இலட்சம்) எனப் பல விருதுகள் இவரின் தகுதிக்கு அணிசேர்த்துள்ளன. 1981-82இல் பல்கலைக்கழக மானியக்குழு, இவரைத் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்தது. சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகப் பத்து ஆண்டுகள் இருந்துள்ளார். 1985முதல் ஞானபீட விருதிற்குரிய கருத்துரைஞராகப் பல்லாண்டுகள் இருந்துள்ளார். 1996-2001இல் தமிழக அரசால் குறள் பீடத்திற்குத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். தி.மு.க. தலைவர் திரு.மு.கருணாநிதி எழுதிய, தொல்காப்பியப் பூங்கா என்ற நூலை வெளியிடும் விழாவிற்குத் தலைமையேற்றார்.
மொழிப்போர் வீரர்
            1992இல் “தமிழ்ச்சான்றோர் பேரவை” என்ற அமைப்பைத் திருவாளர் நா.அருணாசலம் என்பார் தோற்றுவித்தார். அவ்வமைப்பில் தமிழண்ணலும் இருந்தார். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துதல், தமிழே ஆட்சிமொழியாக வேண்டும், கோவில்களில் செய்யப்படும் அர்ச்சனைகள், சடங்குகள், இசையரங்குகள் ஆகியவற்றில் தமிழே இருக்க வேண்டும், பாராளுமன்றத்தில் தமிழ் நடைமுறை மொழியாக ஏற்கப்பட வேண்டும், தமிழ் படித்தவருக்கு வேலைவாய்ப்பு, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் முதலாய பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 25.04.1999 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்தனர். அந்த அறப்போராட்டத்திற்குச் சிலம்பொலி செல்லப்பன் தலைமையேற்பதாய் இருந்தது. அவர் விலகிக்கொள்ள, தமிழண்ணல் தலைமையேற்றார். கோரிக்கைகளையேற்று நடைமுறைப்படுத்துவதாய், அன்றைய தி.மு.க. அரசின் தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் மு.தமிழ்க்குடிமகன் தெரிவித்தார். அதையடுத்துப் போராட்டப் பந்தலில் தமிழண்ணல் பேசியதாவது, “என் நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் உணர்வுப்பூர்வமாக இங்கே திரண்டிருக்கும் தமிழுணர்வாளர்களே! பட்டினிப் போராளிகளே! உன்னதமான உங்கள் தமிழுணர்வுக்கும் எழுச்சிமிக்க உங்கள் போராட்டத்திற்கும் வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார் (கீற்று.காம்). அறிவாலயம் சென்று தமிழ்க்குடிமகனுடன் கலந்துபேசி நல்லமுடிவு எட்ட வழிவகுத்தார் (முந்தைய நாளில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது). ஆயினும், தன்னை முன்னிறுத்தாமல் உங்களுடைய போராட்டத்திற்கு வெற்றிகிடைத்துள்ளது என்று பேசியுள்ளதால் தமிழண்ணலின் தூய உள்ளம் தெளிவாகத் தெரிகிறது. அரசாணை எண் 117 (3.5.1999)இன்படி, 30.4.1999இல் நீதிபதி மோகன் தலைமையில், தமிழண்ணல், புலவர் இரா.இளங்குமரன், பேரா.ச.முத்துக்குமரன், பேரா.வா.செ.குழந்தைசாமி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் வழிகாட்டுதலில் பொதுமக்கள் விரும்பும் வகையில் கல்விக்கொள்கை வகுக்கப்படுமென்று அரசு அறிவித்தது. இன்றைக்கும் பல கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. ஆகவே, தமிழறிஞர்கள் முன்வைத்துப் போராடிய கோரிக்கைகள் எத்தனை இன்றைக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்று சிந்தித்து, மீண்டும் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டியவர்களாகவே உள்ளோம்.
அஞ்சா நெஞ்சினர் : பொள்ளாச்சி மகாலிங்கனார், அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் முயற்சியில் தொல்காப்பியப் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பு, தமிழுக்குக் கேடானது என்று துணிந்துசொல்லிய தீரமிக்கவர்.
எழுதிய நூல்கள் (பொது - 21)
1.வாழ்வரசி, 2.நச்சுவளையம் (புதினங்கள்), 3.தாலாட்டு, 4.காதல் வாழ்வு, 5.பிறைதொழும் பெண்கள், 6.ஒப்பிலக்கிய அறிமுகம் (மீனாட்சி, 1973), 7.மாணிக்கக் குறள், 8.ஆய்வியல் அறிமுகம் (திரு.இலக்குமணனுடன் இணைந்து), 9.எழுச்சிதரும் எண்ணச் சிறகுகள் (மெய்., 2008), 10.ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு (மெய்., 2008), 11.சிவ வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், 12.வேதமும் ஆகமமும், 13.தமிழில் வழிபாடு - குழப்பமும் விளக்கமும், 14.இறைவன் இறைவி பெயர் மாற்றம், 15.வடமொழியின் செல்வாக்கும் இருக்குவேதத் தோற்றமும், 16.இருக்கு வேத சாரம், 17.யசூர் சாம வேத சாரம், 18.அதர்வ வேத சாரம், 19.சேக்கிழார் திருவுள்ளம் – சண்டீசர் வரலாறு, 20.சேக்கிழார் திருவுள்ளம் – மனுநீதிச் சோழன் வரலாறு (11-20, தமிழ்க் கல்வி, பண்பாட்டு விழிப்புணர்ணவுப் பேரியக்கம், ஏப். 2011, குறுநூல்கள்), 21.உரை விளக்கு (விழிகள், 2011)
உரைநூல்கள் (13)
இலக்கணநூல்கள் (10): 1.தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரை (மணிவாசர், ஆகத்து 1999), 2.சொல்லதிகார உரை (மணி., 15.06.1994), 3.பொருளதிகாரம் உரை பகுதி-1 (செப்.2003), 4.பகுதி-2 (செப்.2003), 5.பகுதி-3 (செப்.2003), 6.நன்னூல், 7.அகப்பொருள் இலக்கணம், 8.புறப்பொருள் வெண்பாமாலை, 9.யாப்பருங்கலக்காரிகை, 10.தண்டியலங்காரம்
சங்க இலக்கியங்கள் (2): குறுந்தொகை (ஏப்.2002, கோவிலூர் மடாலயம்), அகநானூறு 3ஆம் பகுதி (301-400) (கவிஞர் நா.மீனவனுடன் இணைந்து, செப்.2004, கோவிலூர் மடாலயம்)
திருக்குறள்: திருக்குறள் நுண்ணுரை
ஆய்வு நூல்கள் (23)
சங்க இலக்கியம் தொடர்பானவை (13): 1.பரிசில் வாழ்க்கை (பாரிநிலையம், அக்.1956), 2.குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு (மீனாட்சி, மே 1961), 3.சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கியக் கொள்கைகள்) – மீனாட்சி, அக்.1975, இதன் திருத்திய முதற்பதிப்பு, 2003இல் சிந்தாமணிச் செல்வ வெளியீடாக வந்துள்ளது), 4.சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய வகைகள்) – சோலைநூலகம், மார்ச்சு 1978, 5.ஔவையார் (சாகித்திய அகாதெமி, 2008), 6.ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச்சுடர்கள் (மெய்., திசம்.2007), 7.சங்க இலக்கியத் தொன்மைச் சான்றுகள் (நோக்கு, நவம்.2008), 8.செவ்விலக்கியச் சிந்தனைகள் (மெய்., 2008), 9.செம்மொழிப் படைப்பியல் (மணி., 2008), 10.சங்க மரபு (முனைவர்பட்ட ஆய்வேடு, சிந்தாமணிப் பதிப்பகம், அக்.2009, மொ.பெ. பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன்), 11.தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும் (எஸ்.ஆர்.எம்., 2013), 12.The Tainted Spectacles and Faulty vision of Dr.Nagasamy (The Real Status of Tamil and Sanskrit) - S.R.M., 2013, Tr. Dr. K.V.Balasubramaniyan), 13.கபிலர் பாடல்களில் காட்சி உருவகம் (சிந்தாமணிச் செல்வ வெளியீடு, ஆ.இ., குறுநூல்)
தொல்காப்பியம் தொடர்பானவை (8): 1.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்: உள்ளுறை, 2.இறைச்சி (மீனாட்சி, ஏப். 1986), 3.மெய்ப்பாடு (மீனாட்சி, மே 1986), 4.நோக்கு, 5.தொல்காப்பியர் (சாகித்திய அகாதெமி, 1998), 6.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் (உள்ளுறை, இறைச்சி, நோக்கு, மெய்ப்பாடு நான்கும் இணைந்தது. மணி., 2004), 7.தொல்காப்பிய இலக்கிய இயல் (மெய்யப்பன், 2008), 8.தொல்காப்பியர் விளக்கும் திருமணப்பொருத்தம் (எஸ்.ஆர். எம்., 2012)
திருவள்ளுவம் தொடர்பானவை (2): 1.தேடவைக்கும் திருவள்ளுவர் (மெய்., 2008), 2.வள்ளவர் நெறியில் வாழ்வது எப்போது? (மெய்., 2008)
வரலாறுகள் (2)1.புதிய நோக்கில் இலக்கிய வரலாறு (மீனாட்சி, 13ஆம் பதி.1995), 2.உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – தொன்மை முதல் கி.பி.500வரை (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004)
தமிழ்மொழி (15): 1.தமிழை அறிவோம்! தமிழராய் வாழ்வோம்! (மெய்., 2007), 2.தமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி (மெய்., 2008), 3.இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள் (மெய்., 2008), 4.தமிழ்வழிக் கல்விச் சிந்தனைகள் (மெய்., 2008), 5.தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும், 6.பேசுவது போல் எழுதலாமா?, 7. பேச்சுத் தமிழை இகழாலாமா?, 8.பிழை திருத்தம் மனப்பழக்கம், 9.தமிழ் உயிருள்ள மொழி, 10.தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள், 11.தமிழ்த்தவம், 12.உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள், 13.இனிய தமிழ்மொழியின் இயல்புகள், 14.தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?, 15.சொல் புதிது சுவை புதிது.
பதிப்பாசிரியர் (12)
  • தமிழியல் ஆய்வு (இ.முத்தையாவுடன் இணைந்து) – மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1983
  • சங்க இலக்கியங்கள் (முனைவர் சுப.அண்ணாமலையுடன் இணைந்து) – கோவிலூர் மடாலயப் பதிப்பு (11 தொகுதிகள், 2002– 2004, அகம். 3 தொகுதிகள்).
இங்கு, மொத்தம் 74 நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. அவற்றுள் 11 நூல்கள் குறுநூல்கள். பதிப்பாசிரியராயிருந்து 12 நூல்களைக் கொணர்ந்துள்ளார். ஆகமொத்தம் 86 நூல்கள். (இப்பட்டியல் முழுமையானதாய் இருக்குமென்று தோன்றவில்லை.) 2008இல் மட்டும் 11 நூல்கள் வெளியாகியுள்ளன. சிந்தாமணிச் செல்வ வெளியீடு, சிந்தாமணிப் பதிப்பகம், தமிழ்க் கல்வி, பண்பாட்டு விழிப்புணர்ணவுப் பேரியக்கம் என்னும் பதிப்பகப் பெயர்கள் அவருடைய சொந்த வெளியீடுகள். பொது நூல்களில் 10, 11ஐ மட்டுமே நேரில் கண்டேன். 13-20வரையுள்ள நூல்கள் பின்னட்டையில் தரப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்துக் குறிக்கப்பட்டுள்ளது. 15.01.1976இல் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி, மறைமலையடிகள் நூற்றாண்டையொட்டி (15.06.1976), அவர் பெயரில் பிள்ளைத்தமிழ் நூலொன்று எழுதும் போட்டியை அறிவித்தது. அதில் பதின்மூவர் பங்கெடுத்தனர். அப்போட்டியில், மலேசிய நாட்டுப் பினாங்கைச் சேர்ந்த திரு.சி.அன்பானந்தம் முதல் பரிசு பெற்றார். இதில், தமிழண்ணலும் கலந்துகொண்டு நூல் எழுதினார். அந்நூல் அச்சாயிற்றா என்பது தெரியவில்லை. (அன்பானந்தம் எழுதிய நூலை, அக்கல்லூரியே செப்.1978இல் வெளியிட்டுள்ளது.) 
“ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர் அனைவரும் கிரேக்க, இலத்தீன் இலக்கியங்களைப் பயின்ற பிறகே, இலக்கியத்தைப் படைத்துள்ளனர். ஆனால், நமது தமிழில், சிறுகதை, நாவல், கவிதை எழுதுவோர் பலரும் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியை அறவே புறக்கணித்துவிட்டுத் தம் படைப்புகளை எழுதுகின்றனர். ஆகவே, அவர்களது படைப்புகள் ஒளிவீசித் திகழவில்லை. வேரை மறந்து, அடிமரத்தைச் செல்லரிக்கவிட்டால் கிளைகள் காய்ந்து சருகாகுமே தவிர தளிர்க்காது. தமிழராகப் பிறந்த அனைவரும் சங்க இலக்கியத்தில் அறிமுகம் பெற்றாலன்றி, நமது தமிழ் வளர்ச்சியை மேலெடுத்துச் செல்ல முடியாது” (சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான முத்தமிழ் விழாவில், அமெரிக்கன் கல்லூரியில், 10.12.2012 அன்று பேசியது, தினமணி.காம்) என்ற அவருடைய கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
2015ஆம் வருடம் பெருமழைச் சேதத்தோடு, எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் (8.4.15), இசைமேதை எம்.எஸ்.விசுவநாதன் (14.7.15), ஏவுகணை இயலறிஞர் மேதகு கலாம் (27.7.15), சமூகச் சீர்திருத்தச் செயற்பாட்டாளர் பேரா.கல்புர்கி (30.8.15), நடிகர் திலகம் ஆச்சி மனேரமா (10.10.15), கலைமாமணி விக்கிரமன் (1.12.15) எனப்பலர் மறைந்தனர். அவ்வகையில், தமிழுக்குத் தமிழண்ணலின் இழப்பு, பேரிழப்பு. அவரின் எண்ணங்களை ஈடேற்றப் பாடுபடுவோமாக.
நன்றி: www.akaramuthala.in, muelangovan.blogspot.com, ta.m.wikipedia.org, சங்க இலக்கியக் களஞ்சியம் – பேரா.சு.அமிர்தலிங்கம்
- கி.சிவா, ஆய்வாளர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல்





 
 
கி. சிவா,
ஆய்வாளர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
தொலைபேசி:  97517-79791
 

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம்

-- தேமொழி.

இக்கால இந்தியாவின் அரசியலிலும், சமூக அமைப்பிலும் எண்ணற்ற மாற்றங்கள் எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும், வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரையில், ஒரு மாறுதலற்ற தேக்க நிலையில் இந்தியாவின் சமூக வாழ்வு அமைந்திருந்தது என்பதாக கார்ல் மார்க்ஸ் (The British Rule in India – Karl Marx) கருதினார். அதுபோன்றே, இந்தியாவின் நிலையில், பொருளாதார அடிப்படையில் படிப்படியாக புராதனப் பொதுவுடைமை, அடிமையுடமை, நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் எனப் பல நிலைகளைச் சந்தித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட இயலாது என்று மார்க்சிய வரலாற்று ஆசிரியர் டி. டி. கோசாம்பி கருதினர்.

இக்கருத்தைப் பெரியார் தனது கோணத்தில், நமது நாட்டில் இந்தச் சாதீய அடிப்படையிலான அடிமைத்தனம் ஒவ்வொரு அரசகுலத்தின் ஆட்சியிலும், பேரரசுகளிலும்மாறாது, காலம் காலமாக ஊறிப்போயிருப்பதாகக் குறிப்பார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று (1901), சென்னை மாகாணத்தில் நிலவிய சாதீயமானது மனிதர் ஒருவரின் வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை,பெயரை, உடையைத் தீர்மானிக்கிறது என்றே குறித்திருந்தது. இவ்வாறு வாழ்வில் பிறந்ததிலிருந்து, இறப்பதுவரை பிரிக்கவழியின்றி வாழ்வோடு கலந்து ஒருவரது வாழ்வின் போக்கையே தீர்மானிக்கும் நிலையில் புரையோடிப் போயிருந்த பாகுபாட்டையும், சமத்துவமற்ற பேத நிலையையும் அசைத்துப் பார்க்க முற்பட்டவர் தந்தை பெரியார். வரலாற்றுப் போக்கில் பெரியார் புரட்சி செய்த காலம் ஒரு மிக முக்கியமான காலகட்டம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு எழுத்தாளராக … இதழியலாளராக … தனது எழுத்து, உரை ஆகியவற்றால் தமிழக வரலாற்றைப் புரட்டிப்போட்ட பெரியாரை, அறிஞர் அண்ணா, “பெரியார் ஒரு சகாப்தம்; ஒருகாலகட்டம்; ஒரு திருப்புமுனை” என்று புகழ்ந்துரைத்தார். அத்தகைய பெரியாரது கருத்துப் பரப்பல் முயற்சியை மீண்டும் திரும்பிப் பார்க்கும் பொழுது மலைக்க வைக்கிறது.

ஒரு எழுத்தாளராக, இதழியலாளராக போராட்டங்கள் பல சந்தித்து தனது கருத்துகளை, உரைகளை மக்களிடம் தனது பத்திரிக்கைகள் மூலம் கொண்டு சேர்த்த பெரியாரின் பணி வியக்கவைப்பது. தமிழகத்தில் வெறும் 7% மக்களே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அவர்களிலும் 5% பிராமண குல மக்களாகவும் இருந்த காலத்தில், இந்துமதத்தின் ஆணிவேரை அசைக்கும் நோக்கில், சனாதன தர்ம அமைப்பையும், வர்ண முறையையும் தீவிரமாக எதிர்க்கும் கருத்துகள் நிரம்பிய ஏடுகளை, வசதியற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினர் ஓரணா, ஈரணா என்ற விலையையும் கூடப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கும் நிலையை உருவாக்கிய பெரியாரை, அதனால் மக்களின் சிந்தனையில் தெளிவை வளர்க்க விரும்பிய பெரியாரை எழுத்தாளராக, இதழியலாளராக பாராட்டுவது என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராலும் கூட சிறப்பாகச் செய்ய இயலாது.

கொள்கை பரப்பவே பத்திரிக்கை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ காங்கிரசுடன் பெரியார் இணைந்திருந்த மிகக்குறுகிய ஐந்தாண்டு காலகட்டத்தில், 1922 ஆம் ஆண்டு அவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால், கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டார். பெரியாருடன் அவரது தோழரான ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கபெருமாள் பிள்ளையும் சிறையில் அடைபட்டிருந்தார்.சிறைவாழ்க்கையில் இருவரது சிந்தனையில் உதித்தது “குடிஅரசு” என்ற இதழைத் துவக்கும் எண்ணம்.

சிறை வாழ்க்கை முடிந்தவுடன் 1923 ஆம் ஆண்டு ஜனவரி 19 இல் ‘குடிஅரசு’ மற்றும் ‘கொங்குநாடு’ என்ற பெயர்களில் பத்திரிக்கைக்கான பதிவைத் துவக்குகிறார் பெரியார். சுமார் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, 1925 ஆம் மே மாதம் இரண்டாம் நாள், சனிக்கிழமையன்று ஈரோட்டில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தலைமையில் முதல் இதழ் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ‘குடிஅரசு’ வார இதழாக, பெரியார் காங்கிரசில் இருக்கும்பொழுதே குடியரசு அவர் எழுத்தில் வரத்துவங்குகிறது. அதன்பிறகே, சற்றொப்ப ஆறு மாதங்கள் கழித்து காங்கிரசின் காஞ்சிபுரம் மாநில மாநாட்டில், தேவையான உறுப்பினர் எண்ணிக்கைக்கும் அதிக அளவில் ஒப்புதல் பெற்று அவர் முன்வைத்த “வகுப்புரிமை தீர்மானம்” விவாதத்திற்கு ஏற்காமல் நிராகரிக்கப்பட்டு, கட்சி விதிகளுக்கு புறம்பாகப் புறக்கணிக்கப்பட்டதால், கட்சி மேலிடத்தின் மீது சினம் கொண்டு தனது நண்பர்களுடன் வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்குகிறார். ஆகவே, காங்கிரசில் உறுப்பினராக இருந்த காலத்திலேயே தனது கொள்கை பரப்பும் கருவியாக ‘குடிஅரசு’ வார ஏட்டை வெளியிடும் எழுத்தாளராக, இதழியலாளராக பெரியார் இருந்தார். அப்பொழுதே, “ஒவ்வொரு வகுப்பும் முன்னேறவேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்” என்று காங்கிரசில் இருக்கும்போதே முதல் குடிஅரசு இதழில் தனது நோக்கத்தையும் பெரியார் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி யெவர்க்கு மாற்றி
மனத்துள்ளே பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகுந்தானே!

என்று திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ‘குடி அரசை’ ஆரம்பித்து வைத்த போது ஆற்றிய உரைமொழிகள் தொடர்ந்து (தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் – சாமி.சிதம்பரனார்), பெரியாரின் கோணத்தை சாற்றும் விதமாக குடிஅரசு இதழில் வெளிவந்தது.

முதல் இதழின் அட்டையை பாரதியாரின் “சாதிகள் இல்லையடி பாப்பா” மற்றும் “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்” ஆகிய வரிகள் அலங்கரித்தன. பின்னாளில் மேலும் பல திருக்குறள்களும், பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாலும் ” மகாத்மா காந்தி வாழ்க”, “கதர் வாழ்க” போன்ற வரிகளும் மாறி மாறி இடம் பிடித்தன. சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமும், குடிஅரசு இதழின் துவக்கமும் ஒரே ஆண்டிலேயே அமைந்து பெரியாரின் கொள்கை மக்களிடம் சேர்வது என்பது சரியான பாதையில் பயணிக்கத் துவங்குகிறது. பெரியாரின் புரட்சிகர எழுத்தும் பேச்சும் சமுதாய மாற்றத்துக்கான போர்க்கருவிகளாக அமைந்தன.

ஆரம்ப நாட்களிலேயே தங்கபெருமாள் பிள்ளை உடல்நலக் குறைவு காரணமாக ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறார். 1925 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1949 நவம்பர் முடிய வெளிவந்த குடி அரசு வார ஏட்டின் ஆரம்ப நாட்களில், வார இதழின் 12 பக்கங்களையும் பெரியாரே எழுதி வந்ததாய் பெரியார் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பகுத்தறிவுப் பாதையில் அவருடன் பயணித்த திராவிடக் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ம.சிங்கார வேலர், சாமி.சிதம்பரனார், கைவல்யசாமியார், மயிலை.சீனி.வேங்கடசாமி, பாரதிதாசன், ஜீவானந்தம் எனப் பலரும் எழுதியுள்ளனர்.

பெரியார் வரலாற்றைத் தமிழர்களுக்கு படைத்தளித்த சாமி. சிதம்பரனார் பெரியார் பற்றிக் கூறும்போது …

இவர் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் தெரியாது. எழுதுவதில் எழுத்துப் பிழைகளும் மலிந்திருக்கும். சொற் பிழைகள் நிறைந்திருக்கும். ஒருவாக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இவருக்குத் தெரியாது. இவர் எழுதுவதில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிக்கு வேலையில்லை. ‘கிணர்’ ‘வயிர்’ ‘சுவற்றில்’ ‘ஆஷி’ ‘சூஷி’ ‘ஆருதல்’ ‘பொருமை’ போன்ற பிழைகள் தாராளமாகக் காணப்படும். சாதாரணமாகப் பேசுந் தமிழில்தான் எழுதுவார். அதிலும் எழுவாயெங்கேயிருக்கிறது, பயனிலை எங்கேயிருக்கிறது என்று தேடினாலும் சில சொற்றொடர்களில் அகப்படா. ஒரு வாக்கியம் நான்கு முழம் ஐந்து முழம் நீண்டிருக்கும். இவ்வளவுபிழைகள் மலிந்திருந்தாலும் படிப்போரை தன்வசமாக்கும் சக்தி இவர் எழுத்துக்கு மட்டும் தனியாக அமைந்துள்ளது. அது என்ன சக்தி என்று நம்மாற் சொல்லமுடியாது.” (‘தமிழர் தலைவர்’ .ப.169) என்கிறார்.

இதனைப் பெரியாரும் ஒருநாளும் மறுத்ததில்லை. அவர் சிலவேளை ஒரே பத்தியில் அனுகூலம் – அநுகூலம், அன்னியர் – அந்நியர், கட்சி – கஷி, சூழ்ச்சி – சூஷி, முஸ்லீம் – முஸ்லிம், தேசீய – தேசிய என்று மாற்றி மாற்றித் தொடர்ந்து எழுதியும், பேச்சுத் தமிழிலும் எழுதியதை அவரே அறிந்திருந்தாலும், இதற்காக இலக்கணம் கற்கப்போவதில்லை என்று கூறி தான் சொல்ல நினைத்த கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தார்.

பெரியார் பல்வேறு புனைப் பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றில், “சித்திரபுத்திரன்’, ‘பழைய கருப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைப்பெயர்களாகும். இதைத் தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, ஒருநிருபர், நமதுஅரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன் என்ற புனைப் பெயர்களிலும் இவர் எழுதியிருக்கலாம் என்ற பெரியாரியலில் ஆர்வம் கொண்டோர், அவர் எழுதும் முறையை நன்கறிந்த வாசகர்கள் கருதுவதுண்டு.

ஆண்டு, மாதம்,தேதி ஆகியவற்றைக் குறிக்க முறையே ௵, ௴, ௳ என்ற குறியீடுகளும், மேற்படி என்பதைக் குறிக்க ௸ என்ற குறியீடும் , ரூபாய், அணா, பைசா எனும் அன்றைய நாணயமுறைக் கணக்குகளையும் அப்படியே பயன்படுத்தினார். பெரியார் முதல் முதலாக எழுத்துச் சீர்திருத்தத்தை குடி அரசில் அறிமுகப்படுத்த எண்ணி இருந்தாலும், எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது 1935 ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் வெளிவந்த அவரது மற்றொரு பத்திரிக்கையான “பகுத்தறிவு” வார இதழில்தான். எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, இதற்கு முதல் வார (30.12.1934) “பகுத்தறிவு” இதழின் துணைத் தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்…

__________ “இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்யவேண்டி இருந்தாலும் இப்போதைக்கு இந்த சிறுமாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாப்போல் பிரசுரிக்கப்போகும் ‘குடிஅரசு’ பத்திரிகையைப்பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்” __________ (பகுத்தறிவு 30.12.1934, ப.12)

சமூக சீர்திருத்தம் மட்டுமே பத்திரிக்கையின் குறிக்கோள்:
ஒவ்வொரு வாரமும் 10,000 ‘குடிஅரசு’ பத்திரிகைகளை அச்சேற்றினாலும், வருவாய் கிடைக்கக் கூடிய விளம்பரங்களை அதிகம் வெளியிட பெரியார் அதிக ஆர்வம் காட்டியதில்லை. விளம்பரங்களுக்கு அதிக பக்கங்களை ஒதுக்கினால் கருத்துகளை அதிகம் சொல்ல இயலாது போகிறது என்பது பெரியாரின் கருத்து. அதிக பக்கங்களை விளம்பரத்திற்கு ஒதுக்க இயலாது என்ற தனது நிலையை வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் வெளிப்படையாகவே பத்திரிக்கை வாயிலாகக் குறித்து கீழ்வருமாறு அறிவிப்புச் செய்தி அனுப்புகிறார். __________“கொஞ்சநாளைக்கு ‘குடிஅரசு’ 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்களுக்கு அதிகப்படாமல் செய்துவிட்டு, சற்றேறக்குறைய 12 அல்லது 13 பக்கங்களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்கலாம்” __________ (குடி அரசு -23.12.1928), என்று தன்நிலை விளக்கம் அளித்துள்ளார்.

“சமதர்ம அறிக்கை”(Communist Manifesto)யின் முதல்பாகம் மொழிபெயர்க்கப்பட்டு, 1931 ஆண்டு, அக்டோபர் 4 ஆம் நாள் குடிஅரசில் தொடங்கி, அந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள்வரை தொடர்ந்து 5 இதழ்களில் வெளிவந்துள்ளது. இது போன்றே ‘ஜாதியொழிய வேண்டும்’ என்ற தலைப்பில் அறிஞர் அம்பேத்கர் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ‘சமதர்ம அறிக்கை’, ‘ஜாதியொழிய வேண்டும்’ இவையிரண்டும் இந்தியமொழிகளில் தமிழிலும், ஏடுகளில் ‘குடிஅரசி’லும் தான் முதலில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஒன்றே குலம்’ என்பதை வலியுறுத்த குடிஅரசு இதழைத் துவக்கிய பெரியாரிடம், நீதிக்கட்சி நடத்தி வந்த ‘திராவிடன்’ நாளேட்டை அவர்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்ட பொழுது ‘திராவிடன்’ நாளேட்டை நடத்தும் பொறுப்பும் பெரியாரிடம் வந்து சேர்ந்தது.   கொள்கைகளின் படி ‘குடிஅரசு’ பத்திரிக்கை போலத்தான் அதே கொள்கையுடன் ‘திராவிடன்’ நாளேட்டையும் நடத்துவேன், ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒத்துழைக்காமல் விலகிவிடுவேன் என உறுதியாக அறிவித்துவிட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பெரியார்.

நீதிக்கட்சி, தங்கள் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை எடுத்த பொழுது அதை அவர்களது திராவிடன் நாளேட்டிலேயே கண்டித்து எழுதத் துவங்கினார் பெரியார். அதிர்ச்சி அடைந்த நீதிக்கட்சி, ‘திராவிடன்’ நாளேட்டை அவரிடம் இருந்து திரும்பப்பெற்றது. அலர்மேலுமங்கைத்தாயார் எனும் அம்மையாரை ஆசிரியராக அமர்த்தி, ‘திராவிடன்’ நாளேட்டை நீதிக்கட்சி தனது சார்பில் மீண்டும் வெளிக்கொண்டு வந்தபொழுது, “திராவிடன் மதவேறுபாடு, வகுப்புவேறுபாடு காட்டாமல் இனி வெளியிடப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டு, பெரியாரிடம் இருந்து திராவிடன் நாளேடு திரும்பப் பெறப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்தியது. திராவிடன் நாளேட்டுடன் கொண்ட தொடர்பில் பெரியாருக்கு பொருளிழப்பு ஏற்பட்டும், தனது கொள்கைக்குப் புறம்பாக இருந்தால் விலகிவிடுவேன் என்று சொல்லியது போலவே, ‘திராவிடன்’ ஏட்டின் பொறுப்பிலிருந்து விலகினார் பெரியார்.

போராட்டங்களுக்குள்ளான பத்திரிக்கை எழுத்துப்பணி:
பெரியாரின் பத்திரிக்கைகள், பகுத்தறிவு பாசறைகள் மட்டுமல்ல, தமிழக வரலாற்றுப் போக்கையும், அக்கால இந்திய வரலாற்றுப் போக்கையும் படம் பிடித்துக் காட்டுவன. பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம் என்னும் சமூகப்புரட்சியை, அதனோடு தொடர்புள்ள பெரியாரின் பொதுவாழ்வுப் பயணத்தை, அவர் தமிழகத்தில் கொண்டுவந்த சிந்தனை மாற்றத்தைச் சிறந்த முறையில் பதிவு செய்துள்ள ஆவணங்களாகவும் விளங்குகின்றன.

குடிஅரசு :-
குடிஅரசு தொடங்கிய எட்டு ஆண்டுகளில், “இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் எழுதிய தலையங்கத்துக்காக பிரிட்டிஷ் அரசு பெரியார்மீது ‘அரசு துரோகக் குற்றச்சாட்டு’களின் கீழ் வழக்கு தொடர்ந்து, 1933 ஆம் ஆண்டில் ரூ.300 அபராதமும் விதித்து, 9 மாதங்கள் சிறையிலும் அடைத்தது. பெரியாரின் மனைவி நாகம்மாளின் மறைவிற்குப் பிறகு, குடிஅரசின் பதிப்பாளராகப் பொறுப்பேற்ற பெரியாரின் தங்கை கண்ணம்மாளுக்கும்   ரூ.100 அபராதமும், 6 மாத சிறைத் தண்டனைக்கு விதிக்கப்பட்டது. குடியரசு முடக்கப்படலாம் என எதிர்பார்த்த பெரியார் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. குடியரசு தடைப்பட்டால் அதேநாளில் வேறு பத்திரிக்கை வரும் என குடிஅரசில் அறிவிக்கிறார். அறிவித்ததுபோலவே, குடிஅரசு வரவேண்டிய அதேநாளில் ‘புரட்சி’ என்ற பத்திரிக்கையை தடைபடாது வெளியிட்டு விட்டு, அதில், “குடிஅரசை” ஒழிக்கச்செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும்” என்று காரணமும் குறிப்பிடுகிறார்.

பெரியாரின் ‘குடியரசு’ இதழ் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்வதும் தொடர்கதையானது. பெரியார் சிறையிலிருந்த 1933 ஆம் ஆண்டு நவம்பர் 19 லிருந்து ‘குடிஅரசு’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 1935 ஆம் ஆண்டு ஜனவரி 13 லிருந்து வெளிவரத்தொடங்கியது. பிறகு மீண்டும் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 29 இல் நிறுத்தப்பட்டு, மீண்டும்   1943 ஆம் ஆண்டு அக்டோபர் 16 லிருந்து வெளிவரத்தொடங்கி, மீண்டும் 1949ஆம் ஆண்டில் அரசின் ஒடுக்கு முறைக்கு உள்ளானது. மேலும் அரசு ரூ.3000 ஜாமீன் தொகை கேட்கவே, குடி அரசு தொடராமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனாலும் 1925 ஆம் ஆண்டு துவங்கி 1949 ஆம் ஆண்டுவரை ‘குடி அரசு’ தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் தலைமுறைகள் கடந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

புரட்சி:-
குடியரசு ஏடு மட்டுமல்ல, தொடர்ந்து வந்த “புரட்சி”யும் அடக்கு முறைக்கு உள்ளானது, ஆசிரியர் பெயர் பத்திரிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி மீண்டும் வெளியிட்டாளர் கண்ணம்மாள் மீது வழக்கு தொடரப்பட்டு ரூ 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் அடுக்கடுக்காக மூன்று வழக்குகள், ஆயிரக்கணக்கில் அபராதங்களுக்கு மேல் அபராதங்கள் எனத் தொடர்ந்து தீட்டப்பட்டு, சுமார் ரூ. 5,000 க்கும் மேல் பொருளிழப்பில் “புரட்சி” இதழும் வெளிவரமுடியாத நிலையை எட்டியது.

பகுத்தறிவு :-
“புரட்சி’ ஏடு வெளிவரும்போதே ‘பகுத்தறிவு’ எனும் நாளிதழைத்தொடக்கிய பொழுது அதுவும் இரண்டு மாதங்கள் என்ற குறுகியகாலத்தில் முடங்கிப் போனது. ஆனால் அதே பகுத்தறிவை தொடர்ந்து வார ஏடாகவும், பிறகு மாத ஏடாகவும்   ஏறத்தாழ ஒரு நான்கு ஆண்டுகள் நடத்தியுள்ளார் பெரியார். பகுத்தறிவு வார இதழுக்கும், அதன் உண்மை விளக்கம் அச்சகத்துக்கும் இரண்டாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்டவேண்டும் என்று 1935 ஆம் ஆண்டு ஜனவரி 29 இல் அரசு ஆணை பிறப்பித்தது. தடைபட்ட ‘பகுத்தறிவு’ இதழ் பிறகு மீண்டும் 1935 ஆம் ஆண்டு தொழிலாளர் தினமான மே முதல் நாளிலிருந்து பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், பகுத்தறிவு மாத இதழாக வெளிவரத்தொடங்கியது.

விடுதலை :-
‘குடி அரசு’ம் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், நீதிக்கட்சியின் சார்பில் வெளிவந்து நின்று போயிருந்த ‘விடுதலை’ இதழும் ஜூன் 1, 1935 ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை இதழாக வெளிவரத் தொடங்கியது. பிறகு 1937 ஆண்டுமுதல் ‘விடுதலை’ வாரம் இருமுறை பதிப்பு என்பது நிறுத்தப்பட்டு, ‘விடுதலை’ நாளேடாக வெளிவருகிறது

ரிவோல்ட்:-
இவற்றோடு பெரியார் ஆங்கில இதழும் வெளியிட்டுள்ளார். சோவியத் புரட்சி நாளான நவம்பர் 7 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து 1928 ஆம் ஆண்டில், ரிவோல்ட் (Revolt) என்ற ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி 55 இதழ்கள் வரையும் வெளியிட்டுள்ளார்.

‘குடிஅரசு’ இதழையும், சுயமரியாதை இயக்கத்தையும் 1925 ஆம் ஆண்டில் துவக்கி, அவற்றின் உதவியுடன் தனது ‘பகுத்தறிவு கொள்கை’ பரப்பும் இயக்கப் பயணத்தைத் தொடங்கிய பெரியாரின் எழுத்தும், பேச்சும் 1938 ஆம் ஆண்டு காலம் வரை முழுமையான வீச்சோடு தமிழகத்தில் மாறுதல்கள் பலவற்றைக் கொண்டு வந்தன.   அவற்றின் விளைவுகளால் அவரது கருத்துப் போர்க்களங்களான ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ பத்திரிக்கைகள் தொடர்ந்து சந்தித்த அரசின் அடக்குமுறைகளும், இழப்பை ஏற்படுத்தி பத்திரிக்கையை முடக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கில் தீட்டப்பட்ட அபராதத் தொகைகளும், பிணைப் பணம் கட்டச் சொல்லி தடை செய்த அரசின் கெடுபிடிகளும் பெரியாரை அசைக்க முடியாமல், அவரது போராட்டத்தை தீவிரப்படுத்த மட்டுமே செய்தன.

அடக்குமுறைகள் பல எதிர்கொண்டாலும், பத்திரிக்கை நடத்துவதை ஒரு வருவாய் வரும் வாய்ப்பு என்றே கருதாமல், பகுத்தறிவு கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கருவியாகவும் கருதியவர் பெரியார். இதனால் அவர் என்றும் எழுத்துக்காகப் பெறும் சிறைத் தண்டனைகளையும், அபராதங்களையும் துச்சமாக மதித்திருந்தார். தனது கொள்கைகளில் இருந்து பிறழாமலும், விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் இதழ் நடத்திய பெரியார் பத்திரிக்கை துறையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு வியத்தகு மனிதர்தான்.

பெரியார் சந்தேகமற உணர்ந்திருந்தது… எவ்வாறாயினும் தமிழக மக்களை சிந்திக்கத் தூண்டி, அவர்களைப் பகுத்தறிவு சிந்தனைப்பாதையில்   திருப்பிவிட்டால், அவர்கள் மீண்டும் தங்கள் தன்மதிப்புக்கு இழுக்கு தரும் பாதையில் திரும்பிச் செல்லவே வாய்ப்பிருக்காது என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டுமே. தமிழர் உரிமை மீட்பராகப் பெரியார் இதனை அவரது ‘பகுத்தறிவு’ இதழின் தலையங்கத்திலும் குறிப்பிடுகிறார்…

“முடிவாய்க் கூறுமிடத்து. பகுத்தறிவு மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்” (பகுத்தறிவு-தலையங்கம்-26.8.1934)

வாழ்க பெரியாரின் சிந்தனையும் நல்முயற்சியும்.

நன்றி:
சிறகு: http://siragu.com/?p=18458
சிறகு: http://siragu.com/?p=18518
____________________________________________________
கட்டுரைக்கு உதவிய நூல்:
குடிஅரசு 1925, பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி 1 (இரண்டாம் பதிப்பு – 2008)

பார்க்க:
பெரியாரின் குடி அரசு மின்னூல்கள்
http://thfreferencelibrary.blogspot.com/2015/03/blog-post_6.html

தமஅ வெளியீடு # 221 முதல்  தமஅ வெளியீடு # 244    வரை
அறிமுகம் & தொகுதி 1 --- 23
____________________________________________________

படம் உதவி: சுபாஷிணி டிரம்மல்


தேமொழி
தேமொழி

themozhi@yahoo.com