Monday, February 17, 2020

எனது ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள்

          தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவர வேண்டியது ஊர்சுற்றிக்கு மிகவும் அவசியமாகும். உலகம் புரிந்த எந்த வாலிபருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றாமல் இருக்குமா? தம் நரம்புகளில் சூடான ரத்தம் ஓடும் எவரும் தம் வீட்டு மதில் சுவர்களைத் தகர்த்தெரிந்து வெளியில் போக வேண்டுமென்று விரும்பாமல் இருக்கமாட்டார்கள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். இவர்களுடைய முன்னேற்றப் பாதையில் தடைகள் ஏராளம். வெளி உலகத்தின் தடைகளை விட மனிதரின் உள்ளத்தில் தான் அதிக தடைகள் இருக்கின்றன.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்

23.1.2020

          கடந்த சில தினங்களுக்கு முன் காலை 9 மணிக்குக் கடலூரில் ஒரு மகளிர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கைத் தொடக்கிவைத்துச் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். சென்னையிலிருந்து ஒரு வாகன பயணம்; இடையில் தோழி ரேஷலும் இணைந்து கொள்வதாகத் திட்டம். அன்றைய நாள் முழுதும் கடலூரில் செலவிட்டு இரவு திரும்புவதாக எங்கள் பயணத் திட்டம் இருந்தது. கடலூருக்கு என நான் செல்வது இதுவே முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் சென்றிருந்த போது திரும்பிச் செல்லும் பாதையில் கடலூரைக் கடந்து வரும் வாய்ப்பு கிடைத்தது. பண்டைய தமிழக வரலாறு மற்றும் ஐரோப்பியர்கள் வருகையால் ஏற்பட்ட மாற்றம் ஆகிய வரலாற்றுத் தகவல்களை அதிகம் கொண்டிருக்கும் நகரங்களின் வரிசையில் கடலூரும் ஒன்று என்பதை நான் அறிவேன். ஆயினும் நேரில் சென்று பார்த்துவரச் சரியான வாய்ப்பு அமையாத காரணத்தால் ஆவல் இருந்தாலும் அது சாத்திய படாமலேயே தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அந்த குறையை போக்குவதாக இந்த பயணம் அமைந்தது.

          பண்டைய காலம் தொட்டே கடலூர் கடல் வணிகத்திற்கு மிக முக்கியமான ஒரு துறைமுக நகரமாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தாக்கம் இப்பகுதியில் நிலைபெற்றது. ஜெர்மானிய பாதிரிமார்கள் தரங்கம்பாடியை அடுத்து இப்பகுதியில் தங்கள் சீர்திருத்தக் கிருத்துவ மையத்தையும் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார்கள் என்பது வரலாறு.முதலில் கடலூருக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சுக்காரர்கள் பின்னர் அருகாமையில் இருக்கும் பாண்டிச்சேரியில் தங்களது வணிக மையத்தை ஏற்படுத்தி 1674 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினர். 1690ல் கடலூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். 1758ம் ஆண்டு வரை கடலூர் தென்னிந்திய மாவட்டங்களின் தலைநகரமாக பிரித்தானியக் காலனித்துவ அரசின் கீழ் அமைந்திருந்தது. இன்றும் இங்குக் காட்சி அளிக்கும் செயிண்ட் டேவிட் கோட்டையில் தான் அன்று அரசு நிர்வாகம் செய்யப்பட்டது. இது ராபர்ட் கிளைவ் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

          எனக்குக் காலை நேரப் பயணத்தில் சாலையோர கடைகளில் சூடான தேநீர் வாங்கி அருந்துவது மிகப் பிடிக்கும். வாகனம் ஓட்டி தேநீருக்காக நிறுத்தியபோது நாங்களும் இறங்கிக் கொண்டோம். நான் கசப்பாகக் காப்பியும் தேநீரும் அருந்துவதை அறிந்திருக்கும் தோழி ரேஷல் தேநீர் போடுபவரிடம் ஸ்ட்ராங் டிகாக்க்ஷன் போட்டுத் தாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இருவருக்குமே தேநீர் வந்தது. ஆனால் எதிர்பார்த்த சுவை இல்லை. சும்மாவே தேநீர் வாங்கியிருந்தால் சுவையாக இருந்திருக்குமோ என்று பேசிக்கொண்டோம். சில நேரங்களில் இப்படித்தான் நாம் ஏதாவது ஒன்று சொல்லி இயல்பாகவே நன்றாக இருக்கும் ஒன்றை அப்படியே மாற்றி விடும் அனுபவம் ஏற்பட்டு விடுகிறது.

          ஏறக்குறைய மூன்று மணி நேர வாகன பயணம். செங்கல்பட்டு மதுராந்தகம் மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் என ஒவ்வொரு ஊராகப் பார்த்துக்கொண்டே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். வரும் வழியில் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து எங்கள் பயணம் இருந்தது.

          விக்கிரவாண்டி தொடங்கி மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகள் பசுமையாக இருந்தன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் வளமான இயற்கைச் சூழலையும் விவசாய முயற்சிகளுக்கு ஆதாரமாகவும் இருப்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். நான் சென்றிருந்தபோது இப்பகுதியில் கரும்புத் தோட்டங்களில் ஆணும் பெண்ணுமாக மக்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காய்கறிகள் விவசாயம் சாலையின் இருபுறத்திலும் காணக்கூடியதாக இருந்தது.

          முதலில் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிற்பகல் 2 மணி வரை கலந்துகொண்டு, பின்னர் பெரியார் அரசுக் கல்லூரியிலும் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாலை நான்கு வாக்கில் நிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டுக் கொண்டோம். உரை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த சகோதரர் முனைவர் ஜானகி ராஜா ஐரோப்பியர் கால கட்டடங்கள் சிலவற்றைச் சுற்றிக்காட்டத் திட்டமிட்டிருந்தார்.

          முதலில் நாங்கள் வந்தடைந்த இடம் சில்வர் பீச் அல்லது வெள்ளி கடற்கரை. இப்படி ஒரு அருமையான கடற்கரை இங்கே இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விரிவான மணல் நிறைந்த கடற்கரை அழகாகக் காட்சியளித்தது. அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து அங்குக் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பெரியார் அரசு கல்லூரி அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வியைப் பெற மிக முக்கிய அடித்தளம் அமைக்கும் ஒரு கல்லூரி. ஆயினும் சில மாணவர்கள் பாட நேரத்தில்கூட கடற்கரையில் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்ற செய்தி வருத்தம் அளிக்கத் தான் செய்தது.

          சாலையில் மெதுவாக வாகனத்தில் பயணித்துக் கொண்டே கடற்கரையை ரசித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான படகுகள் கண்களைக் கவர்ந்தன. இறங்கி நின்றவாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதே சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

          ராபர்ட் கிளைவ் தங்கியிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த அன்றைய முக்கியத்துவம் பெற்ற  கட்டடம் இன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றது. படிகளில் ஏறி உள்ளே என்ன தெரிகிறது என்று உடைந்த ஜன்னல்கள் வழியாக நானும் ஏனைய தோழர்களும் கவனிக்கத் தொடங்கினோம். உள்ளே ​உள்ளூர் மக்கள் ​சில​ர் தங்கியிருக்கின்றனர் என்பதற்கு​ச்​ சான்றாகப் பாய் படுக்கை​கள்​ ஆங்காங்கே தென்பட்டன.  இந்த பெரிய ​பழம் மாளிகையில் அன்று ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைத் தங்க அனுமதித்திருக்க மாட்டார்கள்​.​ ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உள்ளூர் மக்கள் தற்காலிகமாக இங்கே தங்குகிறார்கள் என்ப​தை ​அப்போதைய ​சூழல் வெளிப்படுத்தியது.

          வெளியே சில பெண்மணிகள் பாய் போன்ற ஒரு பெரிய துணியை விரித்து அதில் ​கடலிலிருந்து பிடித்து வந்திருந்த ​கடல் உணவு வகைகளை எடுத்து​ப்​ போட்டுக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி கையில் வலை நிறையச் சிப்பிகளை​க்​ கடலிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தோம். அவரிடம் போய் அதை அருகாமையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் கண்களும் கவனமும் எனக்குப் படகுத்துறை நோக்கியே இருந்தன.

          படகுத்துறை அருகில் சென்று அங்கிருந்து ராபர்ட் ​கிளைவ் தங்கியிருந்த அந்த​ப்​ பாழடைந்த மாளிகையை​ப்​ பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஆணின் குரல். ​"​அம்மா பார்த்து நடங்க.. விழுந்திட போறீங்க..​"​ என.. ​கரிசனம் நிறைந்த குரல்.

          கடலுக்குச் செல்லவிருக்கும் படகுகளை வர்ணம் பூசி அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள் ஒரு சிலர். ஏனையோர் இளைஞர்கள் ஒருவர் மட்டும் 50 வயது மதிக்கத்தக்கவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ​"​இந்த​ப்​ படகுகளை​ப்​ பற்றிச் சொல்லுங்கள்​,​ எங்கே செல்கின்றன​"​ என விசாரிக்க​த்​ தொடங்கினேன். அவரது வேலையை ​ எனது பேச்​சு தடை செய்கின்ற​து என்ற எந்த கோபமும் ​இல்லாமல் ​​புன்னகையோடு வந்து விளக்க ஆரம்பித்தார்.

          ஒவ்வொரு படகும் அழகாக​த்​ தூய்மை செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அவை இந்த சோழமண்டல கடற்கரை வெளிப்பகுதியில் வடக்கு நோக்கிச் சென்று அங்கு எல்லோரும் ஒன்றுகூடி ஒரு மிகப்பெரிய மீன் பிடிக்கும் கப்பலில் பயணம் செல்வார்களாம். தயாரிப்பு வேலை என்பது சாதாரணமல்ல​.​ மிகுந்த பொருட்செலவு அதில் உள்ளது என்று விரிவாகத் தகவல்களை வழங்கினார். ஒருமுறை கடலுக்குள் செல்லும் மீன்பிடிக்கும் கப்பலில் ஏறக்குறைய ரூபாய் ​6 லட்சத்திற்கான பொருட்கள் இருக்குமென்றும்​,​ மீன் பிடித்துக் கொண்டு வரும் பொழுது அது ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சரக்குகளாக இருந்தால்தான் அவர்களுக்கு அதில் லாபம் காண முடியும் என்றும் விளக்கினார். இவ்வளவு பணச்செலவு ஆகின்ற ​வேலையாக இருக்கின்றதே ​இந்த​ மீன்பிடித்தொழில், என்று நானும் தோழர்களும் பேசிக்கொண்டோம்.​ என்னுடன் வந்த தோழர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையும் கூடுதலாக எனக்கு விளக்கினர்.​ ​​மிகப்பெரிய பொருட்செலவும்​,​ அதேவேளை வருமானமும் தரக்கூடிய ஒரு தொழில் இது என்று நினைத்தபோது இந்த​ப்​ புதிய செய்திகளை அறிந்து கொண்ட மகிழ்ச்சி மனதிலிருந்தது.
 ​
          கடற்கரையோர மீனவர்களது வாழ்க்கை என்பது ​நகர்ப்புற மக்களுக்குத் தூரமான விசயமாகவே இருக்கின்றது. ​ சந்தையில் மீன் வாங்கி சுவையாக மணக்க மணக்கக் குழம்பு வைத்துச் சாப்பிட விரும்பும் நாம் மீன்களைப் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லையே என நினைத்துக் கொண்டேன். நெய்தல் நில வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது​!​
















          படகுகளின் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி அங்குச் சென்றேன். தோ​ழி ரேஷல்  ​​"படகு சவாரி செல்கிறீர்களா​"​ என்று ஆவலைத் தூண்டும் வகையில் கேட்டார். இப்படி யாரும் சொல்லி விட்டால் போதுமே​...​ எனக்குக் கண்டிப்பாகப் போக வேண்டும் என்று மனதில் ஆசை முளைத்து விடும். ​"​இந்த​ப்​ படகில் செல்ல முடியுமா? நீங்கள் வேலையாக இருக்கிறீர்களே​" என்று அந்த மீனவ நண்பரைக் கேட்டேன்​.

          எந்த​த்​ தயக்கமும் இல்லை. ​"​வாங்க அழைத்துக்கொண்டு செல்கிறேன்​",​ என்று சொல்லி எங்களைப் படகில் வரவேற்று ஏற்றுக் கொண்டார். சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த அன்பான அழைப்பை. என்னுடன் தோழி ரேஷல், தம்பி ஜானகிராஜன் உடன்வர அந்த மீனவ நண்ப​ர் தனது உறவினர் ஒரு இளைஞரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ​ஐவராக படகுப் பயணத்தைத் தொடங்கினோம்.

          ​படகின் எந்திரத்தை அந்த இளைஞர் ஆரம்பிக்க, படகு மெல்ல நகரத் தொடங்கியது. ​தமிழ் சினிமாக்களில் வருகின்ற எம்ஜிஆர் பாடல் ​என் ​மனதில் ஒலிக்கத் தொடங்கியது.

                    "ஓடும் மேகங்களே  ஒருசொல் கேளீரோ...."

          முதல் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் ஒரு படகுப் பாடல் மனதில் ஒலிக்கத் தொடங்கியது....

                    "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்"

          பாடல் இனிமை தான்.. ஆனாலும் திரைப்படத்தில் பாடல் காட்சி பயங்கரமானதாயிற்றே... எங்கே.. படத்தில் வருவது போல் படகிலிருந்து நாம் கடலில் விழுந்து அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாதே என்று மனதிற்குள் ஒரு எச்சரிக்கை ஒலி..

          பாடல் ஓடிக் கொண்டிருக்கும் வானொலியை நிறுத்துவது போல மனத்திரையில் ஓடிய பாடல் காட்சியையும் நிறுத்திக்கொண்டேன்.

          படகு சற்று வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. எங்களை அழைத்து வந்த அந்த மீனவ நண்பரும் அவரது உறவினரான அந்த இளைஞனும் எங்களுடன் பேசிக்கொண்டே படகைச் செலுத்திக் கொண்டு வந்தனர். ஒரு நீளமான கம்பு நுனியில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதைக் கொண்டு போய் கடலில் ஒரு இடத்தில் குத்தி நிறுத்தினார். இதுதான் கொடி. இப்படி கடலில் செல்லும் போது நாங்கள் இந்தக் கொடியைக் குத்தி நிறுத்தி விட்டுச் செல்வோம். படகு கடலுக்குள் சென்றிருக்கின்றது என்பதற்கு இது அடையாளமாகும் என்று விளக்கினார்.

          தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று துள்ளிக் குதிக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள். வெள்ளி நிறத்தில் பளிச் பளிச்சென கண்களைக் கவர்ந்தன. உடனே எல்லோரும் புகைப்படம் எடுப்போம் என முயன்றோம்.. ஆனால் கண்களுக்குத் தெரியும் காட்சி புகைப்படக்கருவிக்குத் தெரிவதில்லை. இத்தகைய மீன் துள்ளும் எழில் காட்சிகளைக் கண்களால் நேரில் காண்பதுதான் இதனை முழுமையாக ரசிப்பதற்கு உள்ள ஒரே வழி. அதனை அன்று கண்ணாரக்கண்டு மகிழ்ந்தோம்.

          படகு மீண்டும் சென்று கொண்டே இருந்தது. தோழி ரேஷலுக்கு டைட்டானிக் படம் நினைவுக்கு வந்துவிட்டது. டைட்டானிக் ஹீரோ போல நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிப்போவது இத்தகைய பயணங்களில் தான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

          எங்களை அழைத்து வந்த மீனவ நண்பர் படகு இயந்திரத்தை எப்படி இயக்குவது என எனக்குக் காட்டுவதாகக் கூறி அழைத்தார். அருகில் சென்று அவர் சொல்லிக் கொடுத்த வகையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். தோழி ரேஷல் எங்களிருவரையும் பார்த்துக் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போல படகுப்பயணமா... நீங்கள்தான் எம்ஜிஆர் என்று அந்த மீனவ நண்பரைச் சுட்டிக்கட்டி அவரை கேலி செய்யத் தொடங்க, படகில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அந்த மீனவ நண்பரின் முகமெல்லாம் வெட்கம்.  அந்தக் காட்சியும் சூழலும் நட்பு உணர்ச்சியும் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.

          எங்கள் படகு கடந்து சென்ற பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது, இதுநாள்வரை நான் கண்டிராத ஒரு புது உலகம் போல எனக்குக் காட்சி அளித்தது. நான் கற்பனை செய்து பார்க்காத தமிழகத்தின் ஒரு பகுதி. வானமும் கடலும் நீலமாகக் காட்சியளிக்க, கரையோரத்திலிருந்த எண்ணற்ற படகுகள் வர்ண ஜாலம் காட்டிக்கொண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தன. படகுகளின் பெயர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக, ஆனால் அதே வேளை நாம் அறிந்த பெயர்களாக வைக்கப்பட்டிருந்தன.’ ஸ்ரீசெந்தில்குமரன், ஸ்ரீ முத்துமாரியம்மன், குமரன், மதுரைவீரன், சாந்தி’ என்ற பெயர்களுடன் அண்மைக்கால ’புள்ளிங்கோ’ வரை எனப் படகுகள் அடையாளப் பெயர்களுடன் அழகழகாய் காட்சி அளித்தன.








          கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு அழகிய வர்ணம் தீட்டி அதற்குத் தனித்துவமாக ஒரு பெயரும் சூட்டி தங்களது படகுகளை மிகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றனர் என்பது புரிந்தது. கடற்கரையோர மீனவர்களின் வாழ்க்கையில் படகுகள் மிக உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடற்கரையோர வாழ்க்கை என்பது தனித்துவம் மிக்கது. நெய்தல் நிலப் பண்புகளைக் குறிப்பாகத் தமிழகத்தின் கடற்கரையோர வரலாற்று நிகழ்வுகளை ஆராய வேண்டும் என்ற தீவிரம் என் மனதிற்குள் ஆழ வேரூன்றிக் கிளைவிட்டு விரிய ஆரம்பித்தது.

          வரலாற்று ஆர்வலர்களால் இன்று அதிகம் பேசப்படாத, அறியப்படாத தமிழகத்தின் நெய்தல் நிலப் பகுதியை அறிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பேரலை நாங்கள் சென்ற படகினைத் தாக்கியது. படகின் முன் பகுதியிலிருந்த தம்பி ஜானகிராஜா எழும்பி படகை நனைத்த அலையினால் முழுவதுமாக நனைந்து விட, படகிலிருந்த நாங்களும் அதிர்ந்து போனோம்.

          எங்கள் படகை எதிர்த்துக் கொண்டு எழும்பிய பேரலை முன் பகுதியை முழுமையாக நினைத்துவிட, நாங்கள் அதற்குள் ஒருவழியாகச் சுதாரித்துக் கொண்டு படகில் நின்று கொண்டோம். நான் படகில் சுதாரித்துக் கொண்டு நின்றதைக் கவனித்த மீனவ நண்பர்,  ’நீங்கள் சமாளிக்கும் விதம் சரியான முறைதான்.. எப்படி இப்படித் தான் நிற்கவேண்டும் படகில் என்று தெரியும்’ என ஆச்சரியத்துடன் கேட்டார். நான் அவரைப் பார்த்து பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டேன். இளம் வயதில் உயர்கல்வி முடித்ததும்  நான் மலேசியாவிலிருந்தபோது ஒரு வாரக் காலம் மாணவர்களுக்கான ராணுவ பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது கடலில் பாதுகாப்பாகப் பயணம் செல்லும் சில வழிமுறைகளைக் கற்றிருந்தேன். அது இன்றுவரை மனதில் பதிந்திருப்பதும், ஆபத்தான வேளைகளில் அந்தப் பயிற்சிகள் உடனே நமக்கு கை கொடுப்பதும் இயல்புதானே.

          எங்கள் படகு மேலும் சென்று கொண்டே இருந்தது. அலைகளின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க, திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துத் திரும்பத் தொடங்கினோம். அந்த சமயத்தில் பரங்கிப்பேட்டை மீனவ துறைமுகப் பகுதியைத் தாண்டி மேலும் சற்று தூரம் வந்திருந்தோம். தூரத்தில் கலங்கரை விளக்கமும் கண்களில் தென்பட்டது.








          கடலூரில் கடற்கரையோரத்தில் ஏராளமான மக்கள் வழிபாட்டில் உள்ள ஆலயங்கள் இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்து மாரியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில், பூரணி அம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், வெல்லாரி அம்மன் கோயில் என அங்கிருக்கும் ஒவ்வொரு மக்கள் வழிபடும் கோயில்களுக்கும் சென்று பார்த்து அவற்றின் சிறப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் போதாது என்பது தெள்ளத் தெளிவு.தூரத்திலிருந்து தெரிந்த சில கோயில்களின் கோபுரப் பகுதிகளை மட்டும் பார்த்துக்கொண்டேன்.

          படகுப் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று அலையாத்தி காடுகள் தான். குவியல் குவியலாகக் குட்டி தீவுகளாக இந்த அலையாத்தி காடுகள் அமைந்திருக்கின்றன. ’பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றது’ என்று நான் சொன்னவுடன், படகை அலையாத்திக் காடுகளுக்கு அருகில் கொண்டு சென்று நான் மரங்களைத் தொட்டு ரசித்து மகிழ ஒரு வாய்ப்பினையும் வழங்கினார் அந்த மீனவ நண்பர். படகினை அப்படியே நிறுத்திவிட்டு அங்கேயே படகிலிருந்தபடியே அலையாத்திக் காடுகளை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும்போல் மனதில் கொள்ளை ஆசை எனக்கு. ஆனாலும் நேரம் கடந்து கொண்டே இருந்ததாலும், அன்றே நாங்கள் சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்ற திட்டம் இருந்ததாலும், படகுப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரமும் எனக்கு இருந்தது.

          இத்தகைய இயற்கை வளமும் எழிலும் நிறைந்த கடலூர் பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்காமல் வைத்திருக்கிறார்களே, என்று எனக்கு வியப்பு தான் தோன்றியது. கடலூர் போன்ற வளமிக்க ஒரு ஊரும் உழைக்கும் மக்களும் அழகிய இயற்கையும் ஐரோப்பாவிலும் அல்லது ஏனைய ஆசிய நாடுகளிலும் அமைந்திருந்தால் அதனை இந்நேரத்திற்கு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றி இருப்பார்கள். அதனால் அவ்வூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார மேன்மை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நான் கண்டதோ எதிர்மாறான ஒரு நிலைதான். இது துரதிர்ஷ்டமே!

          எங்கள் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்ற மீனவர் நண்பருக்கு நன்றி கூறிக்கொண்டு, அவரது தொடர்பு எண்ணையும் எடுத்துக்கொண்டு விடைபெற்றுத் திரும்பினோம். கடலூரில் மேலும் சில நண்பர்களைச் சந்தித்து நகர்ப் பகுதியிலும் பயணம் செய்துவிட்டு தம்பி ஜானகிராஜா அளித்த தேநீர் விருந்தையும் சுவைத்துவிட்டு இரவு அங்கிருந்து புறப்பட்டோம். ஒருநாள் பயணம் தான் என்றாலும் கூட கடலூரில் நான் சென்ற படகுப் பயணம், வித்தியாசமான அனுபவமாக, மகிழ்ச்சியளித்த பயணங்களில் ஒன்றாகவே அமைந்தது.

          கடலூரில் அறிந்துகொள்ள இன்னும் ஏராளம் இருக்கின்றது. நிச்சயம் அடுத்த பயணத்தில் படகுப் பயணத்தோடு மக்களோடு மக்களாக அங்கேயே ஓரிரு நாள் தங்கி இருந்து அவர்கள் உணவையும் சுவைத்து, மக்களின் வழிபாட்டு வாழ்வியல் கூறுகளையும், மீனவ மக்களின் தொழில் வாழ்க்கையும் பதிவு செய்ய வேண்டும் என்ற பேரார்வம் எனக்கு இருக்கின்றது.

          இந்த ஊர் சுற்றிப் புராணம் மீண்டும் தொடரும்.. மற்றுமொரு இடத்திலிருந்து..!


"சுயமரியாதை அற்ற எவனும் உயர்தரமான ஊர்சுற்றி ஆக முடியாது. உண்மையான ஊர்சுற்றி முகஸ்துதி விரும்பமாட்டான்‌‌. உலகத்தில் எவரையுமே தன்னைவிடத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர்சுற்றி பெற்றிருக்க வேண்டும். சமநிலை பார்வையும் நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்கவேண்டும்.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்







தொடர்பு: முனைவர் க. சுபாஷிணி (ksubashini@gmail.com)




இலந்தை முள் கோட்டை


இலந்தை முள் கோட்டை 

——   வே.கி. சிவகுமார்


      சுமார் 100 அடி சுற்றளவு 25 அடி உயரம், 10 அடி அகலம் வட்ட வடிவமான கோயிலில் இலந்தை முள் கொண்டு காட்டப்படும் ஒரு கோட்டை!!!

           ஆதியில் ஜெகன் மாதா ஜெயதுர்கா என்றழைக்கப்பட்ட அன்னையின் அம்சமாகக் கருதப்படும் ஆதிசக்க தேவியின் திருக்கோவில் அமைந்த இடங்களில் அந்நியர் நடமாட்டங்களைக் குறைக்கவும் சில நேரங்களில் மனித நடமாட்டமே இல்லாமல் அவ்விடங்களின் புனிதங்கள் களங்கப்படாமல் இவ்வித இலந்தை முள் கூடாரங்கள் அமைக்கப்படுகிறது.

      தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் வாழும் கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்களின் ஆதிகுலதெய்வமாக வழிபடும் சக்கதேவியின் ஆலயங்களைச் சுற்றி இவ்வகையிலான முள்கோட்டைகளை அமைத்து வழிபடுகின்றனர்

      குறிப்பிட்ட நாள் இடை வெளியில் மீண்டும் புனரமைக்கப்படும் இத்தகைய முள்கோட்டைகளில் தவறாது வீட்டிற்கு ஓர் ஆண்மகன் கலந்துகொள்ளவேண்டும் என்ற சட்டதிட்டங்களையும் சில சம்பிரதாய நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.

      ஜக்கதேவியின் அவதாரமான வீரசின்னம்மாள் அம்மனுக்கு உருவ வழிபாடு கிடையாது. கோயிலின் மத்தியில் மண்பானையில் நிறைகுடம் தண்ணீர் வைத்து சிற்றாடை கட்டி, காதோலை, கருகுமணி பாசி அணிவித்து அம்மனாக அலங்கரித்து தீபம் ஏற்றி பூஜைகள் நடக்கும். பூசாரி பிச்சைவேல் பூஜைகளை நடத்துவார்.

      முதலில் ஊர் பொதுப்பொங்கல் வைக்கப்படும். அதையடுத்து வீடுதோறும் ஒரு பொங்கல் வீதம் வைத்து வழிபடுவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தை வரம் நேர்த்திக் கடனாகக் கரும்பு தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபடுவார்கள்.

      தேவதந்துமி ஆகிய மங்கள வாத்தியங்கள் முழங்கப் பக்தர்கள் தெய்வீக கலையான தேவராட்டம் ஆடிக்கொண்டே ஊர் மந்தையிலிருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து கோயிலை வந்தடைவர்.




தொடர்பு: வே.கி. சிவகுமார் (Siva19732001@gmail.com)






சாதியம்


"சொல்லாக்கியன்"



       இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி போன்ற பிரிவினைகளால், உலக மக்கள் முரண்பட்டு நிற்கின்றனர். இத்தகைய சமூக முரண்பாடுகள், பெரும்பாலான பொதுமக்களின் அன்றாட வாழ்வை வலிமையாக ஆக்கிரமிக்கின்றன. எனவே, சிறுபான்மையான மக்கள், அரசு அதிகாரங்களைக் கொண்டு, வெளிப்படையாக நிகழ்த்தும் சுயநல பொருளாதார கொள்ளைகளைக்கூட, பெருவாரியான மக்களால் முழுமையாக காணமுடிவதில்லை. ஒருசிலர் கண்டு, கத்திப்பேசினாலும், சமூகச்சந்தைக் கூச்சலில், தெளிவாகக் கேட்க முடிவதில்லை. சமூகம் முழுமையும் தன்னலமே ஆட்சி செய்கின்ற இக்காலத்தில், பொதுநலம்கூட, சந்தேகக் கண்ணாலேயே பார்க்கப்படுகின்றது.

       உலகின் பல்வேறு மனித இனங்கள் அனைத்தும், ஒரே மனிதக்குழுவின் பரந்து விரிந்தத் தன்மையின் விளைவுதான் என்றும், பல்வேறு மொழிக்குடும்பங்களும், மொழிகளும், ஒரு தாய்மொழியின் தங்கைகளாகத் தோன்றி, நிலத்தின் சூழல் மற்றும் வாழ்க்கைமுறை வேறுபாடுகளுக்கு இணங்க, திரிந்து மாறுபட்டு வந்துள்ளன என்றும், எல்லா மதங்களும், சாரத்தில், அகநிலையில் அல்லது புறநிலையில், இறைமையை அடைவதைப் பற்றியே கூறுகின்றன என்றும், எந்த ஒரு நிலப்பகுதியிலும், வர்க்கத்திலும், சாதியிலும், மக்கள் பிறப்பதோ, வளர்வதோ, வாழ்வதோ, குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்டிருப்பதோ, அவர்களின் சொந்த விருப்பத்தினால் அல்ல, சூழலும் வழக்கமும்தான் என்று மானிடவியல் மூலம் அறிகின்ற போதிலும் இம்முரண்பாடுகள் தொடர்கின்றன, உச்சக் கட்டமாக, பிற இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி ஆகியனவற்றிற்கு எதிரான வன்முறைக்கும், ஏன், அழித்தொழிப்புக்கும்கூட இட்டுச் செல்கின்றன.


    இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் யாவும் தன்னிச்சையாக நிகழ்வன அல்ல. அவ்வமைப்புகளின் தலைமைகள், தங்கள் அடுத்த கட்ட அரசியல் அதிகார இலக்குகளுக்காக, மோதல்களுக்கான கருக்களை உருவாக்கி, வளர்த்து, ஏவிவிடுகின்றன. இம்முரண்பாடுகளில், சாதிய முரண்பாடுகள், தமிழகச் சூழலில், மிகவும் கூர்மையாக உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை, சாரத்தில் தனிப்பட்ட சாதிய அமைப்புகளாக இயங்கி, சாதிய முரண்பாடுகளை உக்கிரப்படுத்துகின்றன. வழக்கம் போல, எல்லா முரண்பாடுகளையும் வளரவிட்டு, பொதுமக்களுக்கு வேடிக்கை காண்பித்துவிட்டு, அதிகார வர்க்கம், தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை, யாரும் கண்டும் காணாதவாறு, முன்னெடுத்துச் செல்கின்றன.  

      சாதி எங்கு, எப்பொழுது தோன்றியது? அதன் அடிப்படை என்ன? அது எப்படி நிலைபெற்றது? அது உளவியல் தன்னியக்கமாய் தொடர்ந்தது எப்படி? சாதியத்தின் அமைப்பு மற்றும் இயங்கியல் என்ன?  அதன் தகவமைப்புகள் எவ்வாறு நிகழ்ந்தன? அதன் இன்றைய நிலை என்ன? இவ்வாறு, சாதியத்தின் முந்தைய வரலாற்றையும் இயக்கத்தையும் அறியாமல், அதை எப்படி எதிர்கொள்வது மற்றும் தீர்ப்பது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

      வரலாறு தானாக உருவாவதில்லை, அது உருவாக்கப்படுகின்றது. ஆக்கமும், ஊக்கமும், இடைவிடாத பல்முனை முயற்சிகளைக் கொண்டே, ஒவ்வொரு வரலாறும் கட்டமைக்கப்படுகின்றது. எதிர்கால வரலாறும், அதற்கு விதிவிலக்கல்ல. சரியான நோக்கமும், திட்டமும், செயல்பாடுகளுமே, புதிய சமுதாய வரலாற்றை நிலையாகவும், உறுதியாகவும் உருவாக்குகின்றன. மீளாய்வும், விமர்சனமும், பொதுநலமும் மாற்றுப் பாதையை நிர்ணயிக்கின்றன. பல்வேறு சாதிய சக்திகளின் இயக்க திசைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளாமல், அவற்றை மாற்றும் முயற்சிகளை உடனடியாகவும் தொடர்ந்தும் பலமுனைகளில் மேற்கொள்ளாமல், சாதிய விடுதலை என்பது சாத்தியமில்லை.

சாதி எங்கு, எப்பொழுது தோன்றியது?
      தமிழகம் மற்றும் தமிழர்களின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு, தொல்காப்பியத்தில் இருந்தே துவங்குகின்றது. தொல்காப்பியத்தின் காலம் மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டு. அதற்கு முன்பே, சிலபல நூற்றாண்டுகள், எழுத்தும் படைப்பும் தமிழில், தமிழகத்திலிருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை என்றாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சி, அங்கு வாழ்ந்தவர்களின் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும், அது நகர நாகரிகமாக இருப்பதாலும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஒத்து இருப்பதாலும், அதன் தொன்மை மிகவும் முற்பட்டதாய் இருக்க வேண்டும்.

      தொல்காப்பியத்தின் எந்த பகுதியிலும், சாதிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. சமூக உறுப்பினர்களைப் பற்றிக் கூறுகையில்;
1. அந்தணர். அவர்களுக்குரிய பொருட்களைக் கொண்டே, அவர்களின் கடமைகள் என்னவாக இருந்திருக்கும் என்று அறியமுடிகின்றது. தொல்காப்பியம், பொருள் அதிகாரம், மரபியல் நூற்பா:
            நூலே கரகம் முக்கோல் மணையே
            ஆயுங் காலை அந்தணர்க் குரிய. [615]

அந்தணரின் முதன்மையான கடமை பழம்நூல்களைக் கற்பதும், புது நூல்களை யாப்பதும், சமூகத்தின் பிற அங்கத்தினருக்கு கற்பிப்பதும் ஆகும். அவர்களின் எளிமையான உடைமைகளாக, தண்ணீர் பாத்திரமும், மூன்று கால்களைக் கொண்ட கைதாங்கியும், தரையிலிருந்து சற்று உயரத்தில் அமர்வதற்கு ஏற்ற மணையும்தான். 

2. அரசர். நேர்மையான அரசாட்சி செய்பவர். அரசரும் அந்தணரைப் போன்று, கல்வி கற்று, யாத்து, கற்பிப்பர்.

3. ஊரின் பெயர், தந்தையின் பெயர், இயற்பெயர், செய்யும் தொழிற்கருவியின் பெயரைக் கொண்டு, எவரும் அத்தொழிலுக்குரியவராய் அறியப்படுவர். சான்றாக, வேலூர் சிவனார் மகன் கந்தன் தச்சர், மேலூர் மாரியின் மகன் காரி கருமார், மாங்காடு கண்ணன் மகன் குமரன் கொல்லர் போன்றோர். போர், இவரது கடமை.

4. தலைமைப் பண்பிற்கு ஏற்றவாறும், செய்யும் சேவைகளுக்கு ஏற்றவாறும்,  பெயரிடப்படுவோர். சான்றாக, தலையாரி, சேர்வை போன்றோர். ஊர்காவல், போர், இவரது கடமை.

5. வைசியன். உணவுப் பண்டங்களை விற்பவர்.

6. வேளாண் மாந்தர். உழுவதும், பிறர்க்கு உணவளிப்பதும் இவர்தம் பணி. தூது செல்வதும், போர் செய்வதும் இவருக்கும் கடமை

7. இழிந்தோர், அதாவது, முற்கூறிய ஆறு அங்கத்தினரின் வழிவந்திருப்பினும், அவரவர்களுக்குரிய கடமைகளை ஆற்றாதவர், சோம்பித் திரிந்தோர் என ஏழு வகைப்படுத்துகின்றார்.

      இவ்வகைப்பாட்டில், சாதியக்கூறுகள் ஏதுமில்லை. திறமை மற்றும் பண்புக்கேற்ற தொழில் மற்றும் சேவையும், அதற்கேற்ற அங்கீகாரமும் கிடைப்பதாய் உள்ளது. பணியோ, கடமையோ அற்று, சோம்பித் திரிந்த இழிந்தோர் மட்டும் சமுதாயத்தில் மதிக்கப்படாதவர்களாய் இருந்துள்ளனர்.

      தொல்காப்பியம் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல், கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள், தமிழகம் மற்றும் தமிழரின் வரலாறு, இருட்டடிக்கப் பட்டிருந்தது. அதன் பெரும்பகுதியானது, களப்பிரர் காலம் எனப்பட்டது. களப்பிரர் ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் எதுவும் இல்லாதபடி, வேரறுக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கல்வெட்டின் மூலம், அந்த இருண்ட காலத்தின் மீது ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.

      பௌத்தர்களும், சமணர்களும் மேலோங்கிய காலம் களப்பிரர் காலம். அதனால்தான், அக்காலத்தில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை அம்மதங்களின் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளன. திருக்குறளும், இருண்ட காலம் எனப்படும் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியதுதான். தமிழைப் பொறுத்து, களப்பிரர் காலம், பொற்காலம். களப்பிரர் காலம், தமிழுக்குப் பொற்காலம் என்றால், தமிழருக்கும் பொற்காலமாகவே இருந்திருக்கும். ஏனெனில், களப்பிரர் காலத்தில் பிரம்மதேய நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் அடிமை வாழ்வே வாழ்ந்துள்ளனர்.

      களப்பிரர்கள் யார்? பிரம்மதேய நிலங்களைக் கைக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் எப்படி வலிமை பெற்று இருந்தனர்? கலிங்கப் போரில் வென்றாலும், அழிவின் கொடுமையைக் கண்டு, அசோகன் பௌத்தம் தழுவினான். தன்னுடைய பெரும்படையைக் கலைத்தான். விரிந்து பரந்து பௌத்தத்தை பரப்பச் செய்தான். ஒரு அணி தெற்கு நோக்கி வந்தது போலும். ஏற்கனவே, சங்கமித்திரையும், மகிந்தனும் இலங்கை சென்றிருப்பர். இலங்கைக்கு நெருக்கமான தமிழகமும், பௌத்தத்தின் ஆளுமையில் இருப்பது சிறந்தது என எண்ணி இருக்கலாம். 

      ஆனால், வடக்கில் போலவே தெற்கிலும், ஆரியர் தம்மைப் பிராமணர்கள் அல்லது அந்தணர்கள் என அழைத்துக் கொண்டு, குறுநில மன்னர்களை தம்வசப்படுத்தி விட்டு, எளிமையாக வாழ்ந்த திணை நில அந்தணர்களைப் புறந்தள்ளினர். மன்னனின் இல்லற சுகத்திற்காக, போர் வெற்றிக்காக, சுவர்க்கப் பதவிக்காக, யாகம், வேள்வி செய்வதாய் கூறி, தாம் வசதியாய் வாழ, பிறர் உழைப்பில் வாழ, பிரம்மதேய நிலங்களை தானமாய் பெற்றனர். அந்நிலங்களில் உழைத்த மக்கள் சுரண்டப்பட்டனர். கல்வி மறுக்கப்பட்டது. வறுமையில் வாடினர். இதைக்கண்ட முன்னாள் கலிங்கத்துப் படையினர், பின்னாள் பௌத்த துறவிகள், மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க முனைந்தனர். அதன் மூலம் தம் மதக்கொள்கைகளையும் பரப்ப முடியும் என்று முடிவு செய்தனர். வடக்கில், ஏற்கனவே, வைதிக மரபிற்கும் பௌத்தத்திற்கும் பெரிய முரண்பாடுகள் இருந்த வரலாறு உண்டு. எனவே, பிரம்மதேய நிலங்கள் அந்தணரிடம் இருந்து பிடுங்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டன. பௌத்த துறவிகளுக்கு பாதுகாப்பாக மாமன்னன் அசோகன் இருப்பதை அறிந்த பிராமணர்களும், குறுநில மன்னர்களும், அவர்களை எதிர்க்கத் துணியவில்லை.

      சுதந்திர உழைப்பு பெருகியது, வளமும் கொழித்தது, வாணிபம் செழித்தது, செல்வம் மிகுந்தது, வாழ்வு இனித்தது, கல்வி பரவலாகியது, உபரியால் கலை, இலக்கியம் பல்கியது. ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின.  பௌத்த மடங்களும், சமண மடங்களும் பெருகின. மதங்களின் அரசு கோலோச்சியது. கேட்பாரற்ற எந்த அதிகாரமும் கேடு என்பதால், பௌத்த சமண மடங்கள் சீரழிந்தன. பெரும்பகுதியான மக்கள் உழைப்பை விடுத்து, துறவு மேற்கொண்டு, நோகாமல், சிறு அளவிலான உழைப்பவர்களைச் சார்ந்து வாழ்ந்தனர். சமுதாய உற்பத்தி குறைந்தது, பகிர்வும் அருகியது. துறவு வாழ்வு விதைத்த, விளைத்த சோம்பலால், வறுமையும், ஏழ்மையும், துன்பமும், குற்றங்களும் மிகுந்தன. திருவள்ளுவம் தோன்றியது. குடும்ப வாழ்வின் மூலமே, துறவின் இலக்கை அடையும் வழியைக் காட்டியது. உழைப்பின் அருமையைப் போற்றியது. அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர், வேளாண் மாந்தர் ஆகியோரின் கடமைகளை வரையறுத்தது. அறம் என்பதன் வடிவத்தையும், அன்பெனும் சாரத்தையும், அனைத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தியது. சமூக இணக்கத்திற்கான பண்புகளையும் ஒழுக்கங்களையும், சமூக அங்கத்தினர்களுக்கு முன்மொழிந்தது. சமநிலைப்படுத்திய, ஒரு புதிய, மாதிரி சமுதாய வாழ்வியலை உருவாக்கினார்.

      பிரம்மதேயங்களை இழந்த அந்தணர்களோ, வடக்கு அல்லது மேற்கு நோக்கிச் சென்றனர்.  "உறுமீன் வருமளவு காத்த" அந்தணர், தமிழகத்தின் அகநிலை தமக்குச் சாதகமாய் இருப்பதை அறிந்து, வடக்கு மன்னர்களைக் கொண்டு போர் தொடுத்தனர். பௌத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்தனர். சமணர்களில் சிலர் கழுமரம் ஏறினர். அந்தணர்கள் மீண்டும் அதிகாரம் பெற்றனர், சமூக அரசாக மாறினர். பிரம்மதேயங்களை மீட்டுக் கொண்டனர். நிலமிழந்து எதிர்த்தவரை எல்லாம் சண்டாளர் என்றனர், பள்ளர், பறையர் என முத்திரை குத்தினர். பின்பும் எதிர்த்தவர்களை, சக்கிலியர் என்றனர், அருந்ததியர் என்றனர். மனுவின் சட்டம், எப்படிப்பட்ட சூழலுக்கும் பலபடி நிலைகளைத் தயாராய் வைத்திருந்தது. திணை நிலங்களில், தொழிலாலும், சேவையாலும் பெயரிடப்பட்டவர்கள் எல்லாம், சாதியின் படிநிலையில் பொருத்தப்பட்டனர், சாதிகளாக்கப்பட்டனர். அகமணமுறை சாதியத்தின்  கருவாக்கப்பட்டது. அது, சமுதாயத்தைச் சங்கிலித் தொடராய் பிளவுபடுத்தியது. பெண்களின் இயங்கு வெளி, வீட்டோடு சுருங்கியது. இயங்குகின்ற சமுதாயத்தில் எழுகின்ற மீறல்கள், சிக்கல்களால், புதுப்புது விதிகள் இயற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, சாதியம், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் உளவியல் இயக்கமாய் தொடர்ந்தது. நியாயம், நீதி என்பன, ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறாய் உருவாகின. சாதியப் பிரிவுகளின் சமூக முரண்பாடுகள், மக்களின் பெரும்பாலான வாழ்வு நேரத்தையும், சமூக உறவுத் தளங்களையும் ஆக்கிரமித்தன. 

      சமூகப் படிநிலையின்  ஏற்றம் மற்றும் இறக்கம் தந்த அற்ப, மாயையான, கற்பிதம் செய்யப்பட்ட உயர்வு மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையுமே அவர்களை இயக்கப் போதுமான உந்துசக்தியாக இருந்தது, வாழ்வின் இலக்காய் தெரிந்தது. எனவே, சமூகம் முழுமையையும் ஆட்டிப்படைத்த, சுரண்டிய சமூகப் பொருளாதார அரசான அந்தணரை எதிர்த்தோ, அரசியல் பொருளாதார அரசான மன்னனை எதிர்த்தோ எந்த செயல்பாடும் நிகழவில்லை. ஒருசில தலைமுறைகளின் இத்தகைய சாதியம் அடிப்படையிலான வாழ்வியல் இறுகி, எல்லா தலைமுறைகளுக்கும், எல்லா படிநிலைகளுக்கும் அதாவது எல்லா சாதியினருக்கும் தொடர்ச்சியான வாழ்வியலாய் மாறிவிட்டது. இதைத் தாண்டிய சிந்தனையே எழவிடாதவாறு, ஒவ்வொரு மனமும் தன் உள்ளழுத்தத்திற்கு ஆட்படுகின்றது. போதாதென்று, தன் மற்றும் பிற சாதியினரின் சமூக அழுத்தமும் சேர்ந்து, சாதியத்தைத் தன்னிச்சையாக இயக்கி வருகின்றது. அந்தணர்கள் சமூகத்தில் வேறு இடங்களுக்கும், உயரத்திற்கும் பெயர்ந்து விட்டனர். ஆனால், சாதிய வன்கொடுமை, அந்தந்த உள்ளூர் சமுதாயத்தில் உள்ள மேல்சாதி மக்களால், கீழ்சாதியினருக்கு எதிராகத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றது. படிக்காமலிருந்தாலும் பரவாயில்லை, உழைக்காமல் சோம்பித் திரிந்தாலும் பரவாயில்லை, சாதியின் படிநிலையில் மாற்றம் வராதவாறு பார்த்துக் கொள்வதே, வாழ்வின் இலட்சியமாகவும், செயல்பாடாகவும், சில உதிரிகளுக்கு இருக்கின்றது. மரபணுவே மாற்றமாகியது போலும். ஒவ்வொரு சமூக உறுப்பினரும், தான் சமூகப்பார்வையில் சிறுமைப்பட்டுவிடுவோமோ எனப் பயந்து, தயங்கி, வெளிப்படைத் தன்மையின்றி வாழ்கின்றார்.                   

      எப்பொழுதெல்லாம், மக்கள் சாதிப்பிரிவினைகளை மறந்து ஒன்று சேர முயல்கிறார்களோ, அப்பொழுதெல்லாம், செயற்கையான பிரச்சனைகளை உருவாக்கி, வளர்த்து, குழப்பத்தை ஏற்படுத்தி, மோதலை ஏற்படுத்தி, அவ்வொற்றுமை குலைத்துவிடப்பட்டது. இதனால், அரசு அதிகாரம் என்பது மக்களை விட்டு வெகு உயரத்தில் நின்றுகொண்டது. திணைநிலங்களில், மன்னனுக்கும் மக்களுக்குமான உறவு நேரிடையாக, நெருக்கமாக இருந்தது. மக்களே மன்னனைக் கேள்விக்குள்ளாக்கினர். மக்களுக்காக, பாதுகாப்பாக, உதவியாக மன்னன் இருந்தான். சாதிய சமூக வாழ்வில், மன்னன் தூரத்தில், உயரத்தில் நிறுத்தப்பட்டான், மக்களும் அந்நியமாக்கப்பட்டார்கள். மன்னனுக்காக, வரிகளுக்காக, வன்முறைகளைத் தாங்கி மக்கள் இருந்தனர், பல நூற்றாண்டுகளாய். 

      பதினேழாம் நூற்றாண்டில் துவங்கிய ஆங்கிலேயர் ஆட்சியில், சாதியம் சற்று தளர்ந்தது. ஆனால், சிறுபான்மையாக இருந்த அவர்களுக்குச் சாதிகளைத் தாண்டிய ஒற்றுமை, அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என எளிதில், விரைவில் அறிந்து கொண்டனர். அவர்கள் நினைத்திருந்தால், விரும்பியிருந்தால், விரைவில் சாதிகளை ஒழித்திருக்கலாம். தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ள, சாதிய அமைப்பை அப்படியே தொடரச் செய்தனர். ஆனால், கல்வி பரவலாக்கப்பட்டது. அது, ஒரு சிலருக்கு விழிப்பைத் தந்தது. சமூக நீதிக்கான போராட்டம் தொடங்கியது. சாதிய வாழ்வில், கூனிக் குறுகிக் குமைந்த உடல்கள், நிமிரத் தொடங்கின. பிறப்பால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை மறுக்கத் தொடங்கினர். கல்வியாலும், செல்வத்தாலும், சமூக மதிப்பு உயர்வதையும் கண்டனர். மக்கள் தொகையில் பாதியான பெண்களும், கல்வி கற்கத் துவங்கினர். சமூக உழைப்பில் பெரும் பங்காற்றத் தொடங்கினர். பெண்கள் உளவியல் அடிப்படையில் விடுதலை அடைந்தனர்.

      இந்தியா விடுதலை அடைந்த பிறகும், சாதியை ஒழிப்பதற்கான சட்டங்கள் தேசிய அளவில் இயற்றப்படவில்லை. தமிழ்நாட்டில், பெரியாரின் சமூக மற்றும் சுயமரியாதை இயக்கத்தின்வழி வந்த, திராவிட முன்னேற்றக் கழகம், சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகளை முழுமையாக முன்னெடுத்துச் செல்லவில்லை. சாதிய ஓட்டுகளைச் சார்ந்து வாழும் அரசியல்வாதிகள், சாதியைச் சங்கங்கள் மூலம் வளர்க்கிறார்களே தவிர, அதை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயாராய் இல்லை. சாதிய தலைவர்கள், தங்கள் நலனையும், தங்களுக்கு மிக நெருக்கமானவர்களின் நலன்களையும் முன்னெடுத்துச் செல்லவே, சாதியச் சங்கங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். தனித்தனி சாதியச் சங்கங்களாய் இருந்து, தங்களை காத்துக் கொள்ள முடியாது. அரசின் ஆதரவு எச்சங்கத்தினருக்கு இருக்கின்றதோ, அவர்களே வலிமை பெறுகின்றனர். தங்களின் இருப்பையும், தலைமையையும், அதிகாரத்தையும் காத்துக்கொள்வதற்காகப் பிரச்சனை எதுவும் இல்லாத காலத்திலும், எப்படியாவது ஒரு மோதலை உருவாக்கி விடுகின்றனர். ஒரு வார்த்தையேகூட, சாதிய மோதலுக்குக் காரணமாகி விடும்போது, எந்த அற்ப காரணம் கொண்டும், சாதியச் சண்டைகளை உருவாக்கி விடமுடியும். ஒற்றைப் பிரச்சனையே பல பிரச்சனைகளாக மாறவும், சங்கிலித் தொடராக நீளவும் முடியும். சாதிய வன்மம், வெடிகுண்டைப் போல் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும்.

தீர்வு:
      எந்த ஒரு முரண்பாடுள்ள சமூகத்திலும், ஒற்றை தத்துவம் மட்டுமே நிலவுவதில்லை. ஒரு சமூகத்தின் பல்வேறு இயக்கங்களுக்கும், அதன்  பன்மையான தத்துவங்களே பின்புலக் காரணிகளாய் அமைகின்றன.  அரசின் வலிமை கொண்ட ஆளுமைமிக்க தத்துவத்தின் முன்பு, பிற தத்துவங்கள் தற்காலிகமாக அடங்கி இருக்கும். ஆனால், சமூக முரண்பாடுகள் முற்றும்போது, அடங்கி இருந்த தத்துவங்கள் வலிமை பெற்று, வீறுகொண்டு எழும். தத்துவம் தன்னுடைய முகத்தை நேரடியாகக் காட்டுவதில்லை. அது அருவத்தன்மை கொண்டதால், கற்றவர்கள் மட்டுமே அதைக் கையாள்கின்றனர். தத்துவமே வெளிப்படையான கொள்கைகளாகவும், அவற்றை அடைவதற்கான பருண்மையான செயல்பாடுகளாகவும் மாறுகின்றது.

      தத்துவம் = த் + அத்து + அம். "த்" என்றால் இருத்தல் அல்லது தேகம். உலகின் இருப்பு அல்லது மெய்யும் மனமும் ஒன்றிய மனிதன். "அத்து" என்பது, "அதன்" எனும் பொருண்மையைக் குறிக்கும், ஒரு சொல்லைச் சார்ந்து இணையும், சாரியை. "அம்" என்றால் தன்மை. எனவே, தத்துவம் என்றால், "உலகின் தன்மை" அல்லது "மனிதனின் தன்மை / இயல்பு" எனப் பொருள் கொள்ளும். உலகின் தோற்றம், அமைப்பு, மாற்றம் ஆகியவற்றைப்பற்றியும், மனிதனின் இயற்கையான இயல்பு என்பதுடன், அவன் அடைய வேண்டிய உன்னத இயல்பைப் பற்றியும், இலக்கை பற்றியும், அதை அடைவதற்கு அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும் தத்துவங்கள் விரித்துரைக்கின்றன.

      வெளி, தீ, காற்று, நீர், நிலம் ஆகிய ஐந்து மூலங்களின் கலவைதான், இவ்வுலகம் என தொல்காப்பியம்கூட கூறியுள்ளது. இது, எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்மொழிவுதான். இவற்றுள் முதன்மையான மூலம், வெளி. வெளியின்றி, எந்த மூலமும் இருக்கக்கூட முடியாது. வெளி என்பது வெற்றிடமா அல்லது வெளிப்படாத நுண்மைப் பொருளின் இருப்பிடமா என்பதுதான் கேள்வி. இன்றைய அறிவியலின் கூற்றுப்படி, இருண்ட ஆற்றல் அல்லது கண்ணுக்குப் புலப்படாத நுண்ணியப் பொருள்தான், அண்டம் முழுமையும் ஊடுருவி உள்ளது. அதுவே வெளியாக உள்ளது. அந்த வெளிதான், புலனாகும் நுண்ணணுத் துகள்களாய் மாறி, கருகொண்ட பொருட்களாய் மாறி, பல பொருட்கள் கலந்து சிக்கலான கருவைக் கொண்டு நுண்ணுயிராக மாறி, பல நுண்ணுயிர்கள் ஒன்று சேர்ந்து, ஐந்து அறிவுகள் வரை கொண்ட விலங்குகளாய் மாறி, ஐந்து புலன்களால் பெறும் அறிவுகளின் முரண்பாட்டைத் தீர்க்க, கருவாக உருவான, ஆறாவது அறிவெனும் மனமுடைய மனிதராயும், பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. திருவள்ளுவரும், அகரம் எனும் எழுத்தே எல்லா எழுத்துகளுமாகி, சொற்களுமாகி பொருண்மை தருவது போல், வெளியை அகமாகக் கொண்ட இறைவனே, முதல் நுண்ணியப் பொருளாகத் தோன்றி, அண்டத்தில் உள்ள எல்லா பொருட்களாயும் மாறி, உயிர்களாயும் தோன்றி, வாழ்வாகவும் உள்ளான் எனக் கூறுகின்றார், தன் முதல் குறளில்:
            அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
            பகவன் முதற்றே உலகு.

      இறைமையே எல்லாமானதால், இறைமைக்குள்தான், இறைமையாகவே, எல்லாமும், எல்லாரும் இருக்கின்றோம். மனித இனம், அண்ட இயக்கத்தின் ஒரு சிறிய பகுதியே. அண்டம், சூரிய மண்டலம், உலகச்சூழல் ஆகியவற்றைச் சார்ந்தே மனித இனம் தன் இருப்பை கொள்கின்றது. உலகமோ, சூரிய மண்டலமோ அழிந்தால், மனித இனமும் சேர்ந்து அழிய வேண்டியதுதான். உலகம் தானாக அழிந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையால், ஆத்திரத்தால் அழிக்காமலிருந்தால் சரி. இன்றைய நிலைமை, நாளை நிலையாமை ஆகிவிடலாம். நேற்று இருந்தது, இன்று இருக்கின்றது என்பதால், நாளையும் இருக்கும் என்ற அனுமானத்தில்தான் மனிதன் வாழ்கிறான். இறப்பு என்பது இயல்பு என அறிந்தும், இறவாமையை எண்ணுகிறான். தான், பிற உயிர்களைவிட, விலங்குகளைவிட தனிச்சிறப்புடையவன் எனக் கருதுகிறான். இயற்கையை தனக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்துக் கொள்வதுபோல், இறப்பு எனும் இயல்பையும் தன்னால் மாற்றிவிட முடியும் என முனைகிறான்.

      மனிதன் தன் அறிவாலும், சிந்தனையாலும், நிலைத்த தன்மையுடையது எதுவென தேடுகிறான். அதுவாகத் தான் மாறினால், தானும் நிலைபெற்று, அழிவின்றி, நிரந்தரமாக இருக்கலாம் என நினைக்கிறான். உடலின் இயக்கத்தையும், புலன்களின் உள்ளீட்டையும், மனத்தின் சலனத்தையும், உயிரின் துடிப்பையும் கடந்த, அப்படிப்பட்ட அகத்தேடலில், முழுமையான அசையாமையில், நுண்ணிய பொருண்மையின் இடையறாத பொழிவை, ஊடுருவுதலை, மெய்யுணர்வாய் உணர்ந்தான். அது அவனுக்கு அனந்தமாய் இருந்தது, ஆனந்தமாயும் இருந்தது. அந்த உணர்வையும் இழந்தவன், பொருண்மையும் ஆற்றலும் சலனமற்று, ஒருமையாய் உறைந்த, நிலைபேறு எய்தினான். புற உலகின் துவக்க நிலையும், இத்தகைய நிலைத்த தன்மையே எனத் துணிந்தான். இதை இறவாமை என்றான், அதை இறைமை என்றான். இறவாமையும் இறைமையும் ஒன்றே என்றான். தானும் இறைமை என்றான்.

      இந்தியாவில் தோன்றிய தத்துவ மரபுகள், சித்தரியம், பௌத்தம், சமணம்,  அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலிய அனைத்தும், இதையே ஒப்பீட்டளவில், காலத்திற்கும், கேட்போருக்கும் ஏற்றவாறு, வடிவங்களை மாற்றி மொழிகின்றன. சாரம் ஒன்றே!

      மேற்கத்திய தத்துவ தேடுதலில், ஜெர்மானியர்கள் தலைமை வகித்தனர். குறிப்பாக, பிரடெரிக் ஹெகல், தத்துவப் புலமையில் தலைசிறந்து விளங்கினார். "பிரபஞ்ச இருப்பின் காரணம், மனிதனின் மூலம், இறைவன் தன்னைத் தானே உணர்ந்து கொள்கிறான்" என்று ஹெகல் கூறினார். மனிதன் தன்னை உணர்வதன் மூலமே, இறைமை தன்னை உணரமுடியும் என்றால், முதலில், மனிதன் தன்னை உணர்வதற்கான சூழல்களை உருவாக்க வேண்டும். அவனுக்கு ஓய்வு நேரம் ஒன்று இருந்தால்தான், அதற்கான முயற்சிகளை அவன் எடுக்க முடியும். அவனுடைய அடிப்படையான வாழ்வுத் தேவைகள் நிறைவேறினால்தான், அவன் மனம் ஒன்ற முடியும். அதனால்தான் காரல் மார்க்சும், உழைப்பாளர்களின், தொழிலாளர்களின் வேலை நேரத்தை, எட்டு மணியாக வரையறுக்கப் போராடினார். விவசாய உற்பத்தியிலும், தொழில் உற்பத்தியிலும், உழைப்பாளர்கள் உயிர்பிழைக்கக்கூட போதாத அளவே கூலிகள் தரப்பட்டது. விளைச்சலும் இலாபமும் இருந்தும், தங்கள் மூலதனத்தைப் பெருக்குவதிலேயே முதலாளிகள் நாட்டம் கொண்டனர். அதற்காக, தொழிலை இயந்திரமயமாக்கி கூலியைக் குறைத்துக் கொண்டே வந்தனர்.  விற்பனைச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல், உழைப்பாளர்களின் ஊதியத்தை மட்டுமே மேன்மேலும் சுரண்டினர். இவ்வாறு கிட்டும் பெரும் உபரி மதிப்பை, முதலாளிகள், ஆடம்பர வாழ்க்கை வாழ்வும், தொழிலை மேலும் இயந்திரமயமாக்கி உழைப்பாளர்களை மேன்மேலும் சுரண்டவுமே பயன்படுத்தினர். எனவே, உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் வேண்டி முன்வைத்துப் போராடினர், உழைப்பாளிகள்.

      நீண்ட நெடிய போராட்டங்கள் மூலம், பல நாடுகளில், எட்டு மணி நேர பணிக்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கனடா உள்பட, பல நாடுகளில், பணிநேரம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை நீடிக்கப்படுகின்றது. ஒரு ஆறுதல், ஒன்றரை மடங்கு ஊதியத்தைத் தந்து, ஈடு செய்து விடுகிறார்கள் அல்லது நீண்ட ஓய்வை அளிக்கிறார்கள். இன்றும் பல நாடுகளில், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் சில நாடுகளில்,   முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இல்லை. உழைப்பாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான போராட்டம் நீண்டது, தொடர்வது.

      எப்படி இருந்த போதிலும், உழைத்து உயிர்வாழ்வது மட்டுமே மனித இலக்கு அல்ல, தன்னை உணர்வது மட்டுமே மனித வாழ்வல்ல. குடும்ப, சமூக வாழ்வையும், துறவு, ஆன்மீக வாழ்வையும் இணைத்து, ஒரு சமநிலைப்படுத்தப்பட்ட வாழ்வியலைத் தருகிறார், திருவள்ளுவர். வாழ்வையும் வாழலாம், தன்னையும் உணரலாம். இதைவிட ஒரு முழுமையான வாழ்வியல் தத்துவம், உலகில் வேறெதுவும் இல்லை.

      இவ்வாறு, வரலாற்றையும், தத்துவத்தையும் அறிந்து கொள்வதன் மூலம், தமக்கு நேர்ந்த சமூகப்படிநிலை செயற்கையானது என்றும், எவரும் எவரையும்விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ பிறப்பில் இல்லையென்றும், பிறப்பின் பயன் வாழவும், தன்னை உணர்தலுமே என்றும் உணரலாம்.

      கல்லாதவரையும், உழைக்காதவரையும் மட்டுமே கீழானவராக உரைக்கின்றார், வள்ளுவர். எனவே, சமூகப் படிநிலையில், கீழானவராக நிறுத்தப்பட்டோர், வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர், கல்வியில் சிறந்து விளங்கி, விவசாயம் மற்றும் தொழில்களில் உழைத்து, செல்வம் பெருக்கி, மனிதப் பண்புகளிலும், குணங்களிலும் சிறந்து, அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்து, நேர்மையாக நடந்து, தேவையெனில் இடங்கள் பெயர்ந்து, ஒழுக்கமுள்ள குடும்ப சமூக வாழ்வை வாழ்ந்து, தன்னை உணர முயல வேண்டும். இதுவே, சாதிய கட்டமைப்பு உதிர்வதற்கான சூழல்கள். இதை நோக்கிய செயல்பாடுகளே, சாதியம் ஒழிவதற்கான முன்னெடுப்புகளாக இருக்க வேண்டும்.


-----










Saturday, February 15, 2020

பல்லவர் காலச் சிற்பக்கலை

பல்லவர் காலச் சிற்பக்கலை

——    துரை.சுந்தரம்



முன்னுரை:
          கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சார்பாக மாதந்தோறும் வரலாறு, பண்பாடு, தொல்லியல், கலை ஆகிய பல்வேறு தலைப்புகளில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தப்படுகிறது. அவ்வரிசையில், 19-07-2019 அன்று திரு. அர.கோபு அவர்கள் பல்லவச் சிற்பங்கள் பற்றி ஓர் உரையினை நிகழ்த்தினார். கணினி மென்பொருள் பொறியாளராய்த் தொழில் அமைந்தாலும் கோயில் சிற்பங்கள் – குறிப்பாகப் பல்லவர் சிற்பங்கள் -  பற்றிய பெருவிருப்புக் காரணமாக அவற்றை நுணுகப் பார்த்து அவற்றின் சிறப்பு நயங்களை எடுத்துரைத்து வருகிறார் என்பது பாராட்டுதலுக்குரியது. அவரை அறிமுகப்படுத்தியவர் கூறியதுபோல, தற்காலத்தே வரலாறு, கலை போன்ற பாடங்களை எடுத்துப் படித்தவர்களைக் காட்டிலும் வேறு துறையில் இருப்பவர் பலர் கலை, வரலாறு ஆகியவற்றில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு அவற்றின் சிறப்புகளைப் பொதுத் தளத்தில் மக்கள் அறியச் செய்கிறார்கள் என்பது உண்மை.  தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை இருப்பது கோபு அவர்களுக்கு ஒரு கூடுதல் கருவி.  மேலும் கிரந்த எழுத்துகளின் பயிற்சி அவருக்கு இருப்பது, கல்வெட்டுகளில் காணப்படும் சமற்கிருத-கிரந்தப் பகுதிகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கும், சிற்பங்களை விளக்கவும் துணையாக அமைகிறது. பல்லவர் சிற்பங்களை அவர்தம் கண்கொண்டு பார்த்துச் சுவைத்த காட்சிகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

மாமல்லையும் காஞ்சியும்:
          பல்லவர் படைப்புகள் என்னும்போது உடன் நினைவுக்கு வருவது மாமல்லையும் காஞ்சியுமே ஆகும்.

மகேந்திர வர்மன்:
          பல்லவ மன்னன் மகேந்திரவர்மனே பல்லவர் கலைப்படைப்புகளில் முதன்மையானவனாகச் சுட்டப்படுகிறான். விசித்திர சித்தன் என்றொரு சிறப்புப் பெயர் அவனுக்கு மிகவும் பொருந்துகிறது. இத்தொடருக்கு, வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் புதுமையாய்ச் சிந்திப்பவன் என்று பொருள். கலையை அவ்வாறுதான் அவன் வெளிப்படுத்தியுள்ளான்.

மண்டகப்பட்டு:
          மண்டகப்பட்டுக் குடைவரைக் கோயிலில் மகேந்திரவர்மன் வெட்டுவித்த கிரந்த எழுத்துகளால் அமைந்த சமற்கிருதக் கல்வெட்டு, விசித்திர சித்தனைக் காட்டுகிறது. 
கல்வெட்டுப் பாடம் வருமாறு:
ஏதத் அநிஷ்டகம் அத்ருமம் அலோஹம் அசுதம்
விசித்ரசித்தந் நிர்மாபித க்ருஹேண
ப்ரஹ்மேஷ்வரவிஷ்ணு லக்ஷிதாயதநம்

          இதன் பொருள், செங்கல், மரம், உலோகம், சுதை ஆகியவை இல்லாமல் விசித்திர சித்தனாகிய நான் பிரம்மா, ஈசுவரன், விஷ்ணு  ஆகிய மூவருக்கும் எடுப்பித்த கோயில் என்பதாகும். 
இஷ்டகம்=செங்கல்; சமற்கிருதத்தில் ஒரு சொல்லை எதிர்மறைப் பொருளாக்குவதற்கு அச்சொல்லுடன் ‘அ’, ‘அந்’ என்னும் முன்னொட்டுகள் சேர்க்கப்படும். எனவே, செங்கல் இல்லாமல் என்பதற்கு, அந்+இஷ்டகம்=அநிஷ்டகம்.  தமிழில் செங்கல்லுக்கு ‘இட்டிகை’  என்னும் ஒரு சொல்லும் வழங்குவதை ஒப்பு நோக்குக. தெலுங்கு மொழியிலும் ’இட்டுக’ என்று வழங்குகிறது.
த்ருமம்=மரம்;  ‘அ’+த்ருமம்=அத்ருமம்; மரமில்லாதது.   
லோஹம்=உலோகம்; ‘அ’+லோஹம்=அலோஹம். உலோகமில்லாமல்.
சுதம்=சுதை (சுண்ணம் அல்லது காரை);  ’அ’+சுதம்=அசுதம். சுதை இல்லாமல்.

          விசித்திர சித்தன், மேற்சொன்ன செங்கல், மரம், உலோகம், சுதை ஆகிய பொருள்களின்றிக் கல்லாலேயே கட்டுவித்த கோயில் என்பது கட்டடக் கலையில் புதுமை. அதுவும் கல்லைக் குடைந்து கட்டியமை மேலும் புதுமை. மண்டகப்பட்டுக் குடைவரையில், வாயிற்காவலர் (துவாரபாலகர்) சிற்பங்களுக்கு மறுதலையாக (பதிலாக) கருடன், மகாகாலன் ஆகியோர் சிற்பங்கள் உள்ளன.

          மகேந்திரவர்மனுக்கு முன்னர், கோயில்கள் செங்கல், மரம், உலோகம், சுதை கொண்டே கட்டப்பெற்றன. மகேந்திரன் முதலில் குடைவரைக் கோயிலைக் கட்டுவித்தான். பின்னர் வந்தவர்கள் கல்லைக்கொண்டு கட்டுமானக் கோயில்கள் எழுப்பினார்கள். அவை, கற்றளிகள் எனப்பட்டன. ஊரகம் கோயிலில் உலகளந்த பெருமாள் (நின்ற கோலம்),  பாடகம் கோயிலில் பாண்டவ தூதப் பெருமாள் (இருந்த கோலம்), வெஃகா கோயிலில் (கிடந்த கோலம்) ஆகிய  இறைத்திருமேனிகள் சுதைச் சிற்பங்களே. இம்மூன்று கோயில்களையும் இணைத்துத் திருமழிசை ஆழ்வார், “நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே” என்று பாடியுள்ளார். காஞ்சியில் உள்ள திரிபுராந்தகேசுவரர் கோயிலும், சிற்பங்களும் செங்கல்லால் அமைந்தன.

மாமண்டூர்:
          காஞ்சிக்கருகில் இருக்கும் மாமண்டூர் குடைவரைக் கோயிலில் மகேந்திரனின் நீண்டதொரு கல்வெட்டு உள்ளது. இதில் மகேந்திரனின் சத்துரு மல்லன், நித்திய விநீதன், சத்திய சந்தன் ஆகிய சிறப்புப் பெயர்கள், அவன் இயற்றிய மத்த விலாசம், பகவத் அஜுகம் ஆகிய நாடக நூல்கள், அவனுடைய அரசி கற்ற இசை நாடகம் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. 


குரங்கணில் முட்டம் - குடைவரைக் கோயில்:
          மாமண்டூருக்கருகிலேயே அமைந்த இன்னொரு குடைவரை – மகேந்திரன் எழுப்பியது -  முற்றுப்பெறாமல் நிற்கிறது.

தளவானூர் - குடைவரைக் கோயில்:
          விழுப்புரம் அருகில் உள்ள தளவானூரில் மகேந்திரனின் குடைவரைக் கோயில் சிவனுக்கு எழுப்பப்பட்ட ஒன்று.  இதில் ஐந்து நாசிகள் அமைந்துள்ளமை சிறப்பானது. நாசிகளின் நடுவில் மனித முகங்கள். இந்த நாசிகளின் கீழே, வாயில் தூண்களின் போதிகைப் பகுதியில் இருக்கும் மகர தோரணம் மிக அழகானது.   (இத்தோரண அமைப்பு தற்கால வளைவு (ARCH)  என்னும் கட்டிட அமைப்புக்கு முன்னோடி எனலாம்.) இதில் உள்ள மகர உருவம், முதலை (மகரம்)யும் சிங்கப்பிடரியும் கொண்ட ஒரு கற்பனை உருவம். மகரம், யாழி போன்றவை சிற்பக்கலையின் உறுப்புகள். 
          இங்குள்ள கல்வெட்டு இதைச் ”சத்துருமல்லேசுவர ஆலயம்”  என்று குறிப்பிடுகிறது. சத்துரு மல்லன் என்பது மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயராகும். உட்புறத்தில் இருக்கும் இரு வாயிற்காவலர் (துவார பாலகர்) சிற்பங்கள் அழகானவை. நின்ற தோற்றத்தில் அவை அமைந்திருப்பினும், உடல் அமைப்பில் ஒரு வளைவு காணப்படுதல் சிறப்புக்குரியது.  இருவரின் உடலிலும் இருக்கும் முப்புரி நூல், நூல் அமைப்பில் இல்லாது துணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ’உள்ளே இருக்கும் இறைவனைச் சென்று பாருங்கள்’ என ஆற்றுப்படுத்துவது போல இச்சிற்பங்களில் ஓர் உணர்ச்சி வெளிப்படுவதைக் காணலாம்.  இங்குள்ள கல்வெட்டுகளைப் பற்றித் தொல்லியல் துறையில் பணியாற்றிய ஆய்வாளர் கி.ஸ்ரீதரன் அவர்கள் கூறும் செய்தி கீழே... (நன்றி :   தினமணி 17-09-2019)

கல்வெட்டுகள்: 
          இக்குடைவரைக் கோயிலில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேற்கு அரைத்தூண் அருகில் காணப்படும் பல்லவ கிரந்த எழுத்தில் அமைந்த கல்வெட்டில் இக்குடைவரைக் கோயிலை "நரேந்திரன்" என்னும் சத்ருமல்லன்" என்னும் அரசனால் இம்மலையின் மேலே சத்ருமல்லேசுவராலயம் என்னும் இக்கோயில் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறது. 

தண்டாநத நரேந்த்ரேண நரேந்த்ரனைஷ காரித :
ஸத்ருமல்லேண ஸைலேஸ்மின் ஸத்ருமல்லேஸ்வ ராலய:
இரண்டாவது கல்வெட்டு இதே செய்தியைத் தமிழில் கூறுகிறது:
ஸ்ரீ தொண்டைநய் தார்வேந்தன்
நரேந்திரப் போத்தரையன்
வெண்பேட்டின் றென்பால் மிக
மகிழ்ந்து கண்டான்
சரமிக்க வெஞ்சிலையான் சத்துரு
மல்லேஸ்வராலய மென்
நரனுக்கிடமாக வாங்கு"
பல்லவர் சிற்பங்களின் தனிச் சிறப்பு என்ன?
          குப்தர்களின் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள் ஆகியன தனிச் சிறப்பு வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கதை சொல்லுகின்ற ஒரு பாங்கு பல்லவர் சிற்பங்களில் அமைந்திருப்பதைக் காணலாம்.  
சிற்பம் கற்க விருப்பமா?
ஓவியம் கற்று வா
ஓவியம் கற்க விருப்பமா?
நாட்டியம் கற்று வா
நாட்டியம் கற்க விருப்பமா?
இசை கற்று வா
இசை கற்க விருப்பமா?
பாடல் கற்று வா
          என்று ஒருவருக்குக் கூறுவதுபோலப் பல்லவர் சிற்பக் கலை அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு.  ஆம். பல்லவர் சிற்பங்களில், நாம் ஒரு சேர பாடல், இசை, நாட்டியம், ஓவியம் ஆகியவற்றை உணர இயலும்.

சீயமங்கலம்:


          சீயமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள, மகேந்திரவர்மன் எழுப்பிய குடைவரைக் கோயிலின் ஒரு சிறப்பு இங்குள்ள ஆடவல்லான் சிற்பம். தமிழகத்தின் முதல் ஆடவல்லான் கற்சிற்பம் இதுதான். ‘புஜங்க த்ரஸ்ஸ’  என்னும் நாட்டியச் சாயலில் இச்சிற்பம் அமைந்துள்ளதாகக் கூறுவர். இங்கு, ரிஷபாந்திகர், ஆடவல்லான் ஆகிய இரு இறைத்திருமேனிகளும் தூண்களில் வடிக்கப்பட்டதால் இறைவன் தூணாண்டார் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள வாயிற்காவலர் (துவாரபாலகர்)  சிற்பங்களும் அழகானவை.

          இங்குள்ள கல்வெட்டு மகேந்திரனின் சிறப்புப் பெயர்களான லலிதாங்குரன், அவனிபாஜன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. கோயிலின் பெயரும் அவனிபாஜன பல்லவேசுவரம் என்பதாகும்.

மகேந்திரவாடி:
          காஞ்சிபுரம் அருகில் உள்ள இன்னொரு குடைவரைக்கோயில். மகேந்திரவர்மனுடையது. மகேந்திர விஷ்ணுகிருஹம் என்னும் முராரி கிருஹம் என்று இக்கோயிலை இங்குள்ள கல்வெட்டு குறிக்கிறது. மாமல்லபுரத்து ரதங்களுக்கு இதை முன்னோடியாகக் கொள்ளலாம்.

வல்லம்:
          வல்லம் குடைவரைக் கோயில் மகேந்திரவர்மன் எடுப்பித்தது அல்ல; ஆனால், அவன் காலத்தது. அவனுடைய மேலாண்மையின் கீழ் இருந்த ஒரு சிற்றரசனின் மகன் எடுப்பித்தது. கல்வெட்டின் பாடம் :
சத்துரும் மல்லன் குணபரன்
மயேந்திரப்போத்தரெசரு அடியான்
வயந்தப்பிரி அரெசரு மகன் கந்தசேன
ந் செயிவித்த தேவகுலம்
          கல்வெட்டு மகேந்திரவர்மனைச் சத்துரு மல்லன் எனவும், குணபரன் எனவும் குறிப்பிடுகிறது. இங்குள்ள மற்றொரு கல்வெட்டு, மகேந்திரனைப் பகாப்பிடுகு என்றும், லளிதாங்குரன் என்றும் குறிப்பிடுகின்றன. 

திருச்சி தாயுமானவர் கோயில் – லளிதாங்குர பல்லவ கிருஹம்:
          திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் வாயில் அருகே லளிதாங்குர பல்லவ கிருகம் என்னும் குகைக் கோயில் உள்ளது. இக்கோயில், மகேந்திரனின் ஒரு சிறப்புப் பெயரான லளிதாங்குரன் பெயரில் வழங்குகிறது. இங்குள்ள தூண் கல்வெட்டுகளில், மகேந்திரனின் கீழ்க்கண்ட சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அபிமுக
அகருண
அநித்யராக
அநுமாந
கங்காதரர் சிற்பம்:
          லளிதாங்குர பல்லவ கிருகத்தில் பாடல் பெற்ற கங்காதரர் சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தில்,  சிவன் ஏன் வழக்கமான ஒரு பிச்சாண்டி உருவத்தில் வடிக்கப்படவில்லை? உடுத்த சிறப்பான ஆடையின்றிப் புலித்தோலை அணிந்திருப்பானே; முடியெல்லாம் சடை சடையாய் இருக்குமே; உடலைச் சுற்றியும் பாம்புகள் சூடியிருப்பானே. இச்சிற்பத்தில், ஏன் நல்ல பருத்தி ஆடை-அரசர் அணிகின்ற நல்ல ஆடை? ஏன் தலையில் கிரீடம்? ஏன் உடலில் அரசரணியும் பொன் அணிகலன்கள்? ஏன் முப்புரி நூல்? மொத்தத்தில் அரசனுக்குரிய ஒரு பெருந்தோற்றம். மகேந்திரன் தன்னையே சிவனாக வடித்ததால் சிவனுக்கு அரசவடிவம் தந்து சிற்பமாக்கியுள்ளான். இதை, இங்குள்ள கல்வெட்டிலும் பொறித்துவைத்துள்ளான். இச்சிற்பத்தில் இன்னொரு அழகு. முடியில் கிரீடம் உள்ளதால், கங்கையைத் தன் ஒற்றை முடியில் தாங்கியுள்ள நிலை. 

சிங்கவரம் குடைவரைக் கோயில்:
          செஞ்சிக்கருகில் இருக்கும் சிங்கவரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கிடந்த கோலத்தில் சிங்கப்பெருமாளுக்கு எடுப்பித்த கோயில். மகேந்திரனின் காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கருவறைச் சுவரில் பெரும் வடிவத்தில் பள்ளிகொண்ட பெருமாள். இங்குள்ள துர்க்கைச் சிற்பம் அழகானது. எளிமையான, அணிகள் எவையுமின்றித் திரிபங்க நிலையில் நிற்கும் துர்க்கையின் கைகளில் சங்கும் ஏவுதற்கு அணியமாயுள்ள நிலையில் சக்கரமும் (பிரயோகச் சக்கரம்) காணப்படுகின்றன.

மாமல்லபுரம்:
          மாமல்லை, பல்லவச் சிற்பக்கலைப் பல்கலைக் கழகமாக விளங்குகிறது எனக் கூறுதல் தகும். தொடக்க எளிமைக்குச் சான்றாய் கொடிக்கல் மண்டபம் முதலாகக் கலைப்பொலிவின் உச்சி நிலையாக வராக மண்டபம் வரை கணக்கற்ற சிற்பத் தொகுதிகள். 

வராக மண்டபம்-வராகச் சிற்பம்:

          இது மகேந்திரவர்மனின் படைப்பு. அத்யந்தகாம பல்லவ ஈசுவர கிருகம் என்று வழங்கும் இக்குடைவரை மண்டபத்தில் உள்ள கல்வெட்டு மகேந்திரனின் 244 சிறப்புப் பெயர்களைக் குறிக்கின்றது. வராகத் திருமேனிச் சிற்பத்தொகுதியில் அழகான கலைக்கூறுகளைக் காணலாம். மனித வடிவத்துக்கு வராகத் தலை. கற்பனையில் நமக்கு அழகு புலப்படாது. ஆனால், சிற்பி இவ்வடிவத்துக்கு அழகைத் தந்துள்ளான். திருமகளைக் கடலரக்கனிடமிருந்து மீட்டு அவளை இரு கைகளில் ஏந்தி நிற்கும் பாங்கு. கால்களில் ஒன்று அரக்கனின் தலைமேல். அரக்கன் கடலரக்கன் எனக் குறிக்க அவன் தலை மேல் நாகத்தலைகள் ஐந்து. 

          நீரைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் நாகத்தையோ, (தாமரை) மலரையோ காட்டுதல் சிற்பம் வடித்தலில் உள்ள மரபு. அரக்கனின் மனைவியும் அரக்கனைப்போலவே கை தொழுது இறைஞ்சுகிறாள். அவள் அருகில் இராஜ குரு. வராக இறைவனின் கைகளில் ஒன்றில் சங்கும் மற்றதில் ஏவுநிலைச் சக்கரமும் (பிரயோகச் சக்கரம்).  இந்த ஏவுநிலச் சக்கரம் பல்லவச் சிற்பங்களின் சிறப்புக் கூறுகளுள் ஒன்று.  வராகருக்கு அருகில் திருமகளை அடுத்துச் சூரியன். வராகருக்கு இடப்புறம் பிரம்மா; அவரருகில் நாரதர். வராக முகத்தின் தலைக்கு நேராகத் தலைக்கிரீடத்தைக் காட்டாமல், வராகத்தின் மூக்குச் சாய்மானத்துக்கேற்பச் சமன் செய்யும் (BALANCING) நிலையில் சாய்ந்தநிலையில் காட்டியுள்ள சிற்பத்திறன் குறிப்பிடத்தக்கது.


வராக மண்டபம்-'கஜலட்சுமி' சிற்பம்:
          திருமகளைக் குளிப்பாட்டும் காட்சியில் அமைந்த சிற்பம். பணிப்பெண்கள் அப்பணியில் ஈடுபட்டிருந்தாலும்,  யானைகளைக் காட்சிப்படுத்தியிருப்பது இங்கு அழகு. ஒரு யானை, தன் துதிக்கையைத் தூக்கி நீர் தெளிக்கும்போது, மற்ற யானை நீர் மொள்ளுதல் அழகான காட்சி.

வராக மண்டபம்-மகிஷாசுரமர்த்தனி சிற்பம்:
          மகிஷாசுரமர்த்தனி – கொற்றவை – இங்கு சமபங்கநிலையில் காணப்படுகிறாள். சிங்கவரம் குடைவரையில் நாம் கண்ட கொற்றவைச் சிற்பம், திரிபங்க நிலையில் உள்ளது.  உடல் வளைவுகளோடு கூடிய நிலை திரிபங்கம்.  வளைவுகளின்றி உடல் நேராக இருக்கும் நிலை சமபங்கம். கொற்றவையின் வலப்பக்கம் அடியவன் ஒருவன் நவகண்டம் கொடுக்கும் நிலையில் தலையை அரிந்துகொள்ளும் தோற்றத்தில் காணப்படுகிறான்.  கொற்றவையின் கையில் இருக்கும் சக்கரம் ஏவுநிலைச் சக்கரம் (பிரயோகச் சக்கரம்) என்பது குறிப்பிடத்தக்கது. கொற்றவையின் தலைக்கு இருபுறமும் சிங்கமும், மானும் பெரிதாக வடிக்கப்பட்டுள்ளதைக் காண்க.

வராக மண்டபம்-உலகளந்தான் சிற்பம்:
          குறுவடிவத்தில் வந்த பிராமணன் நெடிதுயர்ந்த வடிவம் தாங்கி உலகளந்த நிகழ்ச்சியைக் காட்டும் சிற்பம் இது.  உலகளந்த பெருமாள் காலைத் தூக்கும்போது தடுத்த ஒருவன் தூக்கி எறியப்படுகிறான் என்பதைச் சிற்பி அழகுறக் காட்டியுள்ளான். எறியப்பட்டவன் உயரே இருந்து கீழே விழுகிறான். உலகளந்தானின் கால் எட்டிப்போக அதைப் பார்த்த பிரம்மா வியந்துபோகும் காட்சி.

திரிமூர்த்தி மண்டபம்:

          திரிமூர்த்தி மண்டபம், அதன் பெயருக்கேற்ப மூன்று இறைக்கோட்டங்களைக் (கருவறைகளை) கொண்டுள்ளது. முன்மண்டபம் என்னும் அமைப்பு இதில் இல்லை. நடுவில் இருக்கும் இறைக்கோட்டம் அதன் முதன்மைத் தகுதிகொண்டு, சற்று முன்புறம் நீட்டப்பெற்றுள்ளதைக் காணலாம்.  மூன்று கோட்டங்களுக்கும் ஏறிச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடுக்கோட்டத்தில் சிவன்; பக்கக் கோட்டம் ஒன்றில் விஷ்ணு; மற்றொரு பக்கக் கோட்டத்தில் வழக்கமாக இருக்கும் பிரம்மன் இல்லை. இங்கு, பிரம்ம சாஸ்தா என்னும் முருகன் இடம்பெற்றுள்ளார். எனவே, திரிமூர்த்தி மண்டபக் குகை, அதனுள் அமைந்திருக்கும் முருகன் கோட்டத்தால் சிறப்புப் பெறுகிறது. 


          முருகன் இங்கு “பிரம்ம சாஸ்தா”  என்னும் பெயரில் அழைக்கப்பெறுகிறார். இச் சிற்பம் முருகனின் போர்க்கோலம் எனக் கூறப்படுகிறது. சிற்பத்தின் மார்புப் பகுதியில் பெருக்கல் குறியைப்போல் அமைந்த சன்னவீரம் என்னும் அணிகலன்தான் இது முருகனின் போர்க்கோலத்தைக் குறிக்கிறது என்பது ஆய்வாளர் கருத்து. வாயிலில் இருக்கும் காவலர் (துவார பாலகர்) சிற்பங்களில் உள்ள உருவங்கள் வழக்கமானவை அல்ல. வாயிற்காவலராக இங்கு நிற்கும் இருவர் இரு முனிவர்களாவர். மண்டபத்தின் மேற்புறம் நாசிக் கூடுகளும் அவற்றுக்கும் மேற்புறத்தில் சிறு கோயில் வடிவத்தைச் சுட்டுகின்றவகையில் சாலை அமைப்போடு கூடிய விமானங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

          இதே மண்டபத்தில், விஷ்ணுவின் சிற்பத்துக்கருகில் சிறிய கோட்டத்தில் கொற்றவைச் (துர்க்கை) சிற்பம் காணப்படுகிறது. எட்டுக்கைகளுடன் கூடிய கொற்றவை. சங்கு, சக்கரம், வாள், கேடயம், வில், அம்பு ஆகிய படைக்கலன்களைக் கைகளில் வைத்திருக்கிறாள். மற்ற இரு கைகளில் ஒன்று ‘அபய’ முத்திரையிலும், மற்றொன்று தொடையில் இருத்திய நிலையிலும் அமைந்துள்ளன. கால்கள் எருமை அரக்கனின் தலையில் பதிந்துள்ளன. எருமை அரக்கனோடு நடந்த போர் முடியும் தருணத்தில்  அமைந்தது எனக்கருதப்படுகிறது.

நிலத்தின் மீது பாறையில் தலசயனர்:
          மாமல்லையில் காணத்தகும் சிற்பங்களுள் ஒன்று, நிலத்தில் கிடக்கும் பாறையில் விஷ்ணுவின் கிடந்த கோலத்தை வடித்திருக்கும் சிற்பம். தலம், நிலத்தைக் குறிக்கும்; சயனம் (அறி)துயிலைக் குறிக்கும்.

ஆதிவராக மண்டபம்:     
          திருவிடவந்தைக் கோயிலில் ஆதிவராக மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில், வாயிற்காவலராக ஆதிசேடன் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பிரம்மன் சிற்பம் குறிப்பிடத்தக்கது. அவர் தம் இடது கையால் ‘அபய’ முத்திரை காட்டுகிறார். கருடனுக்கு அருள் காட்டும் கருட அநுக்கிரகர் சிற்பம் இங்குள்ளது. அருகில் சிவனும் நந்தியும் காட்டப்பெற்றுள்ளனர். தண்டு முனிவருக்கு நாட்டியம் கற்பிக்கும் காட்சிச் சிற்பமும் இங்குள்ளது.

திருச்சி மலைக்கோட்டை:
          இங்குள்ள சிவனின் சிற்பத்தில் ஆடையில்  புலித்தோல் இல்லை. ராஜ வடிவத்தில் ஆடை, மணிமுடி (கிரீடம்), பூணூல், அணிகலன்கள் ஆகியவற்றோடு  சிவன் வடிக்கப்பட்டுள்ளார். மகேந்திர வர்மன் தன்னையே சிவனாக வடித்துள்ளான் எனலாம்.  இச்சிற்பத்தில் ஒற்றைத் தலைமுடியைச் செதுக்கியுள்ளதைக் காணலாம். 

மாமல்லபுரம்:
          மாமல்லபுரம் அர்ச்சுனன் தவம் சிற்பத்தில்,  நீரைக் குறிப்பால் காட்ட நாகம், தாமரை ஆகியவற்றைச் செதுக்கியுள்ளனர்.





தொடர்பு: 
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.







அமராவதி சிற்பம்

அமராவதி சிற்பம்

 —— ஓவியர் திரு. சந்துரு 


பூ - நாம் - பூ:
நமது உடல், மற்றும் முக பாவங்களால் நமது நிலையை வெளிப்படுத்துகிறோம். ஓவியர்கள் வரைந்த உருவத் தோற்றங்களால் தங்கள் நிலையை வெளிப்படுத்துகிறார்கள்.

படம்-1.

அடிப்படை உருவ அமைப்புகள்.
ஒரு பக்கம், முன் பாகம், பின்பாகம் மற்றும் திரிபு நிலை. இத் திரிபங்க அமைப்பு புதிரான தூண்டலை உள்ளடக்கியது.

நாம் பூவையும், பூ நம்மையும் கவனித்த பொழுது குறித்து ஓவியர்கள் டி இங்ரீஸ் மற்றும் மேனெட் ஆகியோர் தங்களது திரைச் சேலைகளில் பெண் உருவம் அதன் பின்புலம், மற்றும் செய் நேர்த்தி என அதிக வேலை பார்த்திருக்கிறார்கள். அப் பெண்களின் உடல் பகுதியில் குவியும் நமது கவனத்தை அவர்களின் முகக் குறி சிதற அடிப்பதை உணரலாம். இதில் உடலும், முகமும் எதிர், புதிரான தூண்டலை விளைவிப்பவை என அறியலாம்.

காட்சி அமைப்பு - கலா ரசனை:
பலாப்பழத் தோலை உரித்துச் சாப்பிடுவதும், உரிக்காமல் சாப்பிடுவதும் அவ் உயிரினங்களின் இயல்பு மற்றும் சூழல் சார்ந்தவை.

கலா ரசனை:
1. வெகு சனம் -
வடிவேல் பெண் வேடத்தில் (சிற்பம்)
"என்னக் காப்பாத்த யாருமேயில்லையா?"
அந்த சிற்பத்தைப் பார்த்த ரசிக மணி
"கலை அழகே உன்ன நான் காப்பாத்தறேன், நீ தான் ரெண்டு வயதில் காணாமல் போன என் தங்கச்சி".

2. எழுத்தாளி -
"கல்லில் சிற்பி வடித்த சிலையல்ல நீ, பிரம்மன் கண் இமை ஓரத்தில் உதித்த வானவில்லின் வண்ண ஜாலம், ஆ! ஓ!! ஈ!!!. உன்னை வர்ணிக்க என் தாய்த் தமிழில் வார்த்தையில்லை."

3. கலை விமர்சகர் -
இது வேற லெவல், மரபின் தொன்மம், ஒய்ச் சின் னின் ரசவாதம், லிம் பெலவா வின் மூர்க்கம் சந்தித்த புதுமை. இது உயரிய விருது மற்றும் விலைகளுக்கு உரியது.

4. நமது நிலை -
"இடம், பொருள், ஏவல் என்ற வகையில் வீட்டு முற்றத்தில், களிமண்ணைக் கால்களுக்கு இடையில் வைத்து சவட்டி எடுத்து பொம்மை செய்வது."

படம்-2.

அமராவதி சிற்பங்கள் - இடமிருந்து...
1. பெண் உருவம் தனது பின்புறம் காட்டி, உள் நோக்கி மண்டியிட்டு, முகம் வெளிப்புறமாகப் பார்வையாளரை நோக்கி அமைந்துள்ளது. இவ் உருவ அமைப்பு பல சிற்பங்களில் காணக்கிடைக்கிறது.

2. பெண் உருவம் உடல் திரிபங்கமாக, கால்கள் முக்கோணத்தை சுட்டும்படி ஒன்றை குத்து இட்டு,மற்று ஒன்றை மடித்து, உடலும், முகமும் பார்வையாளரை நோக்கி அமைந்துள்ளது. இவ் உருவ அமைப்பை இரு சிற்பங்களில் காணக்கிடைத்தது.

3. பெண் உருவம் முகம் வான் பார்க்க, தரையில் கிடந்து, தலைக்கு மேல் கை கூப்பி, கால்களை மடக்கி விரித்து, திரிபங்கமாக அமைந்துள்ளது. இவ் உருவ அமைப்பு ஒரு சிற்பத்தில் மட்டும் அமைந்துள்ளது.
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்."
     - பாரதி 
இந்த வகையில் சிற்பம் 3ல் உள்ள பெண் உருவம் சற்று இடம் மாறுவேடத்தில்.

அமராவதி சிற்பங்கள் - உருவத் தோற்ற அமைப்பு:
படம்-3. 

இடமிருந்து வலம் ...
பெண் உருவத் தோற்றங்களைக் குறியீட்டு வடிவம் (விசிரிப்பாறை - மௌனம்), கருத்தியல் உருவம் (யோனி தேவதை - ஆற்றல்), மற்றும் யதார்த்த உருவம் (தோரணப் பெண் - அழகு) என வகைப்படுத்தலாம்.

ஓவியங்களில் அமைந்த ஆண், பெண் நிர்வாணத் தோற்றங்களைப் பால் வேறுபாடு, வளமை, பெருமை மற்றும் பாலுணர்வைச் சுட்டுவன என்று பல வகைப்படுத்தலாம். அங்கு இல்லாத வானம், பூமி, மற்றும் கதாப்பாத்திரத்தை பலர்முன் அரங்கேற்றுவது சிறந்த நடிப்பும், யதார்த்த மருவலும், இதுவே கலை அழகும் என்போம். அவ்வகையில் சிற்பம்1ல்(மேல்) உள்ள பெண் உருவ அமைப்பைச் சுழற்றி சிற்பம் 2ல்(கீழ்) உள்ள பெண் உருவை அமைத்தது 'படைப்பு ஊக்கம்' என்பதற்கு நாம் அவ் உருவங்களை வரைந்து பார்த்தோம் என்பதே சாட்சி.

படங்கள் உருவான தருணம்:





 நிறைவாக-நண்பர் தேவதேவன் அவர்களின் கவிதை வரிகள்.
நண்பா,
நீ ஓர் இரவு விளித்திருந்ததில்
அதைப் பார்த்துவிட்டதால்
இரவில் ஓடும் மவுன நதி
என்றாய்
நீ எப்போதும் விழித்திருந்தால்
எப்போதும் ஓடும் நதிதான் அது.




ஆசிரியர் குறிப்பு:
சென்னை ஓவியக் கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் ஓவியர் திரு. சந்துரு 
தொடர்பு:
https://www.facebook.com/chandrasekaran.grusamy




Wednesday, February 5, 2020

தஞ்சை குடமுழுக்கு கவிதை

தஞ்சை குடமுழுக்கு கவிதை

 ——  திருத்தம் பொன்.சரவணன்




அஞ்செழுத் துடையாய் ஆலமர் செல்வ
நஞ்சினை உண்டோய் நமச்சி வாய
நன்செய் யுடன்நல் அறிஞர் சூழ்ந்திடும்
தஞ்சை சிவமே போற்றி

உலகம் காத்திட உண்டாய் நஞ்சினை
அழலது உன்றன் மிடற்றினில் கறையாய்
கறையதைக் கழுவத் துடித்திடும் கரங்கள்
உறையெனப் பொழிந்திடும் பாலே.

கசந்திடும் உணவை யாவரும் உண்கிலர்
விசமென அறிந்தும் விருப்புடன் உண்டோய்
விசத்தின் கசப்பினை நீக்கிட விழைந்தோம்
இசைவுடன் ஏற்பாய் தேனே.

நீரு லாவிய நீள்சடை முடியினை
காரு லாவிய கறைபடு மிடற்றினை
ஏரு லாவிய தஞ்சைப் பெரியோய்
சோரென வார்த்தோம் நீரே.

பொதுநலம் பேணுமார்க் காமம் தடையென
மதுகையின் நீக்கி மோனத் திருந்தோய்
காமன் கணைவிட கடிந்துடன் எரித்தோய்
பாதம் சூட்டுதும் மலரே.





தொடர்பு: திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
http://thiruththam.blogspot.com/