ஆதி இந்தியர்கள்
—— ஆலடி எழில்வாணன்
மனித பரிணாம வளர்ச்சியில் இந்தியத் துணைக்கண்டம் பகுதியை அடிப்படையாகக் கொண்டது “Tony Joseph - Early Indians” என்ற ஆராய்ச்சி புத்தகம். ஆதி இந்தியர்கள் என தமிழிலும் இந்தப் புத்தகம் பலரை ஈர்த்துள்ளது.
எழுத்தாளர் டோனி யோசப் 30+ ஆண்டுகள் பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் (Economic Times, Business world and Business Standard) நிருபராக இருந்து ஆசிரியராக உயர்ந்தவர். தன்னை ஒரு நாத்திகவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் டோனி யோசப். இவருடைய முதல் புத்தகமே உலகப்புகழ் அடைந்தது. பரிணாமம் மற்றும் மரபணு போன்ற தலைப்புகளில் பலர் ஆராய, எழுத மற்றும் வாசிக்க என்பவற்றிற்குத் தானும் ஒரு காரணம் எனப் பெருமை கொள்கிறார் டோனி யோசப்.
அழகாக, உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தப் புத்தகம், பார்த்தவுடன் நம்மைக் கவரும் “never judge a book by its cover” என்பதைப் பொய்ப்பிக்கிறது. 1926- ல் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிலையைப் பற்றிய ஆய்வுகளை, 2300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சுமார் 15 வயது நடனப்பெண், வழக்கத்தைவிட நீளமான கைகள், 24 வளையல்கள், 4 சங்கிலிகள், சிகை அலங்காரம் என அழகாக விவரிக்கிறார்.
“If you want to write, first read” என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் டோனி யோசப். இந்தப் புத்தகத்தில் அவர் மேற்கோள்களாக அடுக்கியுள்ள பல புத்தகங்கள், எழுத்தாளர்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதரத் தரவுகளே இதற்கு சாட்சி. 260+ பக்கங்களுடைய புத்தகத்தில் Bibliography மட்டுமே பத்து+ பக்கங்கள் என்றால் நினைத்துப் பார்க்கவும்.
இந்நாளில் அரப்பா, கீழடி என்ற செய்திகளால் நாம் ஈர்க்கப்பட, அவற்றை எல்லாம் விஞ்சும் வகையில் சுமார் 65000 - 80000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய மத்தியப் பிரதேசத்தில், போபால் அருகில் உள்ள பிம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தில் மனித தடம் உண்டு என ஆய்வுகளின் தரவுகளை அடுக்கி முதல் பந்தில் சிக்சர் அடித்து தூள் கிளப்புவது போல், ஆரம்பத்திலேயே இந்தியாவைப் பற்றிய ஓர் அரிய தகவலைச் சொல்லி "அட" போட வைக்கிறார் டோனி யோசப்.
நல்ல சமவெளியைச் சுற்றிலும் ஏழு மலைகள், நீர்நிலைகள், சிறிய விலங்குகள், பாறைகள், குகைகள் எனப் பல இருக்க, சில குகைகளின் சுவற்றில் மனித கைத்தடங்கள், மேலும் அவற்றில் உள்ள கைகளின் அளவை வைத்து அது ஆண், பெண் அல்லது சிறுவர் என கணக்குகளைச் சொல்லி பிம்பேத்காவை விவரிக்கையில் நாம் ஆச்சரியப்படவில்லை என்றால் குறை நம்மிடமே.
“ பீட்சா (Pizza)”, இது என்ன? என ஒரு காலத்தில் கேட்டவர்கள் நாம். ஆனால் இன்று இது குக்கிராமத்தில் கூட கிடைக்கும் துரித உணவு. நம் இந்தியப் பகுதியின் 65,000 ஆண்டுகளின் மனித பரிணாமத்தை பீட்சாவோடு ஒப்பிடுகிறார் புத்தக ஆசிரியர். மனித பரிணாம ஆரம்பத்தின் பல்லாயிரம் ஆண்டுகளை பீட்சாவின் அடித்தளமாக (crust), கடந்த 10,000 ஆண்டுகளை பீட்சா மீது பரப்பும் தக்காளி குழைவு (sauce) போல, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளை பீட்சா மேல் தூவும் பாலாடைக்கட்டி (cheese) என, கடந்த பல நூற்றாண்டுகளைப் பலவகை உணவுகளை அடுக்குவது (toppings) என எடுத்துரைத்து நம் பரிணாமத்தை பீட்சாவுடன் சுவையாக சொல்லி சிலாகிக்க வைக்கிறார் டோனி யோசப்.
இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த 65,000 ஆண்டுகளுக்கான மனித பரிணாமத்தையும், குறிப்பாக மரபணு ஆய்வுத் தரவுகளாலும் புரியவைக்கிறார். Haplogroup என்ற மரபணு குழுவால் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதனின் பல லட்ச ஆண்டுகளின் பரிணாமத்தை மரபணு அறிவியலுடன் குறிப்பாக mtDNA போன்றவற்றை ஆசிரியர் புரியவைத்தது இந்தப் புத்தகத்தின் வெற்றி.
உதாரணமாக உடல் செரிமானத்திற்கான DNA பற்றி கூறுகையில், ஆரியர்கள் பால் மற்றும் பால் பொருட்களை எளிதாக செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும் திராவிடர்கள் ஆடு, மாடு மற்றும் மீன்களை உண்டு செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும் மரபணு வித்தியாசத்துடன் எடுத்துரைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்பதை உலகமே ஏற்றுக் கொண்ட போதிலும், சமீபகாலம் வரை சீனர்கள் இதனை ஏற்கவில்லை. தங்கள் உருவம், உயரம், சருமம் மற்றும் ரோமத்தின் வித்தியாசங்களை மேற்கோளிட்டு மறுத்தவர்கள், மரபணு ஆய்வின்படி உணர்ந்த பின்னரே ஏற்றனர்.
இது போன்ற ஆச்சரியங்களை மந்திரத்தோடு (Magic) ஒப்பிடுகிறார் டோனி யோசப். அதாவது சிறுவயதில் நாம் மந்திரங்கள் மற்றும் மந்திரவாதிகளை முதலில் ஆச்சரியமாகப் பார்ப்போம். அதன் பின்புலத்தில் உள்ள யுக்திகள் தெரிந்த பின் சற்று தளர்ந்து “அட இவ்வளவு தானா!” என நினைத்து சில நாட்களுக்குப் பிறகு ஆழமாக உற்று நோக்குவோம். இன்றைய கால கட்டங்களில் மரபணு ஆய்வை மனிதன் உற்றுநோக்குகிறான்.
மனித இனத்தின் தொட்டிலாகத் (Cradle of Human Civilisation) திகழ்கிறது ஆப்பிரிக்கா. மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு இடம்பெயர்வு (Migration) அதி முக்கிய காரணியாகிறது. பல ஆய்வாளர்கள் OoA - Out of Africa என்ற கோட்பாட்டை நம்புகின்றனர்.
ஆடு, மாடு போன்றவற்றின் உணவுக்காக மேய்த்தல் தொழிலுடன் இடம்பெயர்வு நடந்துள்ளது. Steppe (Eurasia தென் கிழக்கு ஐரோப்பா) என்ற இடம் சமமான நீர்நிலைகளுடைய, புல்வெளி நிலப்பரப்புடன் மனிதனுக்குத் தோதாக அமைந்திருந்தது. இங்கு தான் வேளாண்மை ஆரம்பித்திருக்க வேண்டும் என டோனி யோசப் ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார். வேளாண்மை வளர வளர மனிதனின் இடம்பெயர்வு குறைய ஆரம்பித்து மக்கட்தொகை மிக வேகமாக உயர்ந்தது. சிலர் இடம்பெயர்வு செய்து இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் அரப்பா நாகரீகத்தைத் தோற்றுவித்தனர்.
மனித இனத்தின் இடம்பெயர்வு ஆப்பிரிக்காவில் தொடங்கி, ஐரோப்பா சென்று, அங்கிருந்து Steppe நிலப்பரப்பு வழியாக ஆசியா முழுக்க வெவ்வேறு திசைகளில் படர்ந்து, அலாச்கா வழியாக வட அமெரிக்கா, பிறகு தென் அமெரிக்கா என பரவி பல லட்ச ஆண்டுகளாக பரிமாணித்து இன்று பூமி முழுவதுமாக தழைக்கிறது.
தெற்காசிய துணைக்கண்டத்தில், பல திசைகளில், பல காலங்களில் இடம்பெயர்வு நடந்துள்ளது என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோளிட்டு நிரூபிக்கிறார் டோனி யோசப். குறிப்பாக அரப்பா நாகரீகத்தைப் (Harappa Civilisation) பற்றி இந்தப் புத்தகம் ஆழமாக அலசுகிறது. கிமு 6000 - ஆவது ஆண்டு காலத்தில் அதிக மக்கட்தொகை கொண்ட பகுதி, நகர நாகரீகம், வேளாண் சிறப்பு, வர்த்தகம், கலை, மொழி என ஏற்றமிக்கதாக விளங்கியது அரப்பா நாகரீகம்.
சாந்தி பாப்பு என்ற தொல்பொருள் ஆய்வாளர், சென்னை அருகே உள்ள அத்திரம்பாக்கத்தில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் பயன்படுத்திய கற்களாலான ஆயுதங்களை ஆதாரத்துடன் நிரூபித்தார்.
பரிணாம வளர்ச்சியால் எப்படி மனிதனின் உடலும், குணமும் காலப்போக்கில் மாறியதோ, அதனைப் போலவே மனிதன் கட்டுப்படுத்திய விலங்குகளின் தகவமைப்பும் (கொம்பு, பற்கள், வால், முடி) மனிதனுக்கு ஏற்றபடி மாறின. இதற்குத் தாவரங்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக விதைகளின் தன்மை, தண்ணீரின் தேவை, வேர்கள் என பல உதாரணங்களை அடுக்குகிறார். பரிணாம வளர்ச்சியால் மனிதனின் இடப்பெயர்வு மிகவும் குறைந்து, ஆயுள் நீடித்து, மக்கள் தொகை பெருகியது. வீரமும், வலுவும் மிக்கவர்களே இடம் பெயர்ந்தனர்.
பல ஆய்வு ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தியர்களை இரண்டாக வகுக்கிறார்கள்
ANI - Ancestral North Indians (மூதாதைய வட இந்தியர்கள்)
ASI - Ancestral South Indians (மூதாதைய தென் இந்தியர்கள்)
மூதாதைய வட இந்தியர்கள் (ANI) Steppe வழியாக அரபு, ஆப்கானிஸ்தான் மற்றும் சிந்து சமவெளி வழியாக வந்துள்ளனர். மூதாதைய தென் இந்தியர்கள் (ASI) கடல் பகுதியை ஒட்டிய அரபிக்கடல் வழியாக தென்னகம் வந்துள்ளனர். இன்றும் வட இந்தியர்களின் மரபணுவில் பால் மற்றும் தானியங்களை உண்டு செரிக்கும் தன்மை கூடுதலாகவும், தென் இந்தியர்களின் மரபணுவில் இறைச்சியை உண்டு செரிக்கும் தன்மை அதிகமாகவும் உள்ளது எனவும் மரபணு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆரிய, திராவிட என இரண்டு நாகரீகங்களும் விவசாயத்தைச் சார்ந்துதான் தழைத்துள்ளன.
நீர்நிலைகளை அமைத்து நீராதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த பகுதி மெசபடோமியாவில் உள்ள ஊருக் பகுதி. வட மற்றும் தென் இந்தியர்கள் இந்தப் பாதையைக் கடந்து வந்துள்ளதால் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். அரப்பா, மெசபடோமியா நாகரீகம் போலவே தெற்கிலும் ஒரு நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இன்று அரப்பாவிலும், கீழடியிலும் மனிதன் நீர் மேலாண்மைக்கான சான்றுகள் பல உள்ளன.
வட மற்றும் தென் இந்தியர்களுக்குள் மரபணு, உருவம், உணவு, உடை எனவாறு வேறுபாடுகள் பலவாக இருந்தாலும், மொழிதான் இவர்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது. அரப்பா மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் என இரண்டு பிரிவுகளாக மொழியால் உருமாறியது. தென்னிந்திய மக்கள் பேசிய மொழி அவர்களாகவே உருவாக்கியிருக்க வேண்டும். இங்கிருந்துதான் பல சொற்கள் இடப்பெயர்ந்துள்ளன. அதே சமயம் வட இந்திய மொழிகள் அதன் இடப்பெயர்வு பகுதிகளில் பேசிய மொழியைத் தழுவி, மருவி புதுப் புது மொழிகளாகத் தோன்றி, பலமொழிகளை வழக்கொழிய வைத்துள்ளதைக் குறிப்பிட்ட பகுதியை இந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதியாக உணர்கிறேன்.
மொழிகளில் திராவிட மொழியின் ஆதிக்கமே உள்ளது என மரபணு ஆய்வு உட்படப் பல ஆய்வுகளை மேற்கோள்களாகக் காட்டுகிறார். இதில் மிக சுவாரசியமானதாக, நாக்கை சுழற்றி பேசும் வார்த்தைகள் (Retroflex consonants) திராவிட மொழியின் தனித்தன்மை என நம்மை நிமிர வைக்கிறார் டோனி யோசப்.
கடந்த 2000 ஆண்டுகளாக ஆரிய மொழியினரின் ஆளுமைகள் வட மொழியை வேத மொழி என்றழைத்து, கடவுளிடம் பேசும் மொழி என நம்பவைத்தனர். இரண்டாம்-மூன்றாம் நூற்றாண்டுகளில், மவுரிய பேரரசு காலத்தில் வேதமொழியாக சமற்கிருதம் இருந்துள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் மட்டுமே இந்தியர்கள் 73 இனக்குழுக்களாக இருந்துள்ளனர். இத்தனை சிறிய இடத்தில் 73 இனக்குழுக்கள் என்பது மிக மிக ஆச்சரியமான ஒன்று. இந்த இனக்குழுக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களாக, ரிக்வேதமென மவுரியர்கள் வகுத்தனர். அவை அப்படியே காலப்போக்கில் சாதிகளாக, படிநிலைகளாக பல நூற்றாண்டுகள் இருந்துள்ளன. சைவ, வைணவ, புத்தமதம், இசுலாம், கிருத்துவ என பல மதங்களின் ஆளுமையிலும் கடவுளிடம் உரையாடும் வேதமொழி என இன்றும் இதன் தாக்கம் உள்ளது.
காந்தி, அம்பேத்கர், மார்கசு மற்றும் பெரியாரின் சிந்தனைகள் கூட இந்தப் படிநிலைகளை இன்னமும் மீட்க முடியவில்லை.
Out of Africa என 60-80ஆயிரம் ஆண்டுகளாக இடம்பெயர்வு, பல திசைகளிலும், பல முறைகளிலும் இடம்பெயர்வு, அரப்பா நாகரீகம், இனக்கலப்பு, பின்னாட்களில் மொழி வேற்றுமை, மொழி ஆளுமை, கடவுள் வழிபாட்டில் மொழி, மதம் என உலகில் வேறெங்கும் இல்லாத படிநிலைகளை இந்தியத் துணைக்கண்டம் பெற்றுள்ளது. பல கலப்புகள் மற்றும் பல பங்களிப்புகளின் கலவையாகவே இன்று இந்தியர் என்ற ஒற்றை குறியீட்டில் உள்ளோம். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் குடியேறியவர்களே!
"YES WE ARE MIGRANTS...."