-- அறம் கிருஷ்ணன்
தேன்கனி கோட்டைக்கு அருகே சந்தனப்பள்ளியில் அரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல் தமிழகத்தில் முதல் முறையாகக் கண்டுபிடிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டைக்கு அருகில் உள்ள சந்தனப்பள்ளி எனும் ஊரில் அரச குலத்தைச்சேர்ந்த பெண்கள் போர் செய்யும்காட்சி கொண்ட நடுகல் தமிழகத்தில் முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தேன்கனிகோட்டையை சேர்ந்த திரு. சுகுமார் கொடுத்த தகவலின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம்கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சீனிவாஸ்இராசு, காமராஜ், சிவக்குமார், முருகேசபாண்டியன் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்ட களஆய்வில் இந்த புதிய நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களான குடிசெட்லு, கொத்தூர், சின்னகொத்தூர், தேர்பேட்டை, உளிவீரனள்ளி, கெலமங்கலம், பைரமங்கலம், பாராந்தூர், தளி, அஞ்செட்டி போன்ற இடங்களில் எல்லாம் குறைந்தது இருபத்தைந்து நடுகல்லாவது இருக்கும். பாரந்தூரில் பாம்பு கடித்து இறந்து போனதற்காக வைக்கப்பட்டுள்ள நடுகல், தேர்பேட்டையில் இருக்கும் யானை குத்தப்பட்டான் கல், பஸ்தியில் இருக்கும் புலிகுத்தப்பட்டான் கல், சின்னகொத்தூரில் இருக்கும் குதிரை குத்தப்பட்டான்கல் என இப்படி பலவகையான நடுகற்கள் இருந்தாலும் இது புதுவகையான நடுகல்லாகும்.
தேன்கனிகோட்டையிலிருந்து பயணித்து இடதுபுறம் திரும்பி பெட்டமுகிலம் போகும் சாலையில் பத்து கி.மீ தூரம் பயணம் செய்தால் சந்தனப்பள்ளி வருகிறது. ஊர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்றுதூரம் தள்ளி இடதுபுறம் திரும்பி விவசாய நிலம் வழியே நடந்து சென்றால் பன்னியம்மன் ஏரிகோடி வருகிறது. இங்குதான் இந்த வகையான நடுகல் இருக்கிறது. கல்வீடு அமைப்பில் செய்யப்பட்ட அமைப்பில் இடதுபுறக் கல்லில் இக்கற்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல் மூன்று பெண்சிற்பங்கள் மூன்று குதிரையின் மீது அமர்ந்துள்ள நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.மூன்று பெண்களின் வலது கரத்தில் சிறிய ஆயுதமும் இடது கரம் மேல்நோக்கி மடிந்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாவது பெண்சிற்பங்களுக்கு மேல் குடைபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு பெண்களும் அரசிக்கு அடுத்த நிலையிலிருந்து போர் செய்பவர்களாக இருக்க வேண்டும்.நடுவில் உள்ள பெண்சிற்பம் அரசியாக இருக்க வேண்டும். அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண்கொற்றக்குடை பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வூரைப் பெண்ணரசி ஆட்சி செய்திருக்க வேண்டும். அப்படி ஆட்சி செய்யும்போது ஏற்பட்ட சண்டையில் இம்மூவரும் இறந்திருக்க வேண்டும். போரில் இறந்து போன இவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்க வேண்டும். மேலும் ஒரு போர் வீரர் வாளும், கேடயத்துடன் முன்வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படைவீரராக இருக்க வாய்ப்பிருக்கிறது. இச்சிற்பங்களின் மேற்புறத்தில் சிறுசிறு கோடுகள் நிறையச் செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது போர் நடந்த இடம் போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு நடுகல்லும் இரண்டு பெண்கள் குதிரையின் மேல் இருப்பதுபோல் சிற்பம் உள்ளது. இன்னொரு வகையில் பார்க்கும்போது விஜயநகரப்பேரரசின் இரண்டாம் கம்பண்ணனின் மனைவி மதுரை விஜயத்தின் போது அரசனின் உடன் சென்று போரில் ஈடுபட்டதுண்டு. அப்படியும் கூட இக்கற்சிலை இருக்கலாம் என்று திரு.வீரராகவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். திரு.Dr. பூங்குன்றன் போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் பலரும் இது நடுகல்வகையைச் சார்ந்ததுதான் என்றும் திரு.தி.சுப்பிரமணியன் அவர்கள் இது சதிக்கல்லாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக கருத்துரைத்தார்.
இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நடுகல்லிலும் ஆண்சிற்பம் வாளோடு நிற்பதும், அருகில் பெண்சிற்பம் நிற்பது போலத்தான் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் மூன்று பெண்சிற்பங்கள் குதிரையின்மேல் அமர்ந்து போர் செய்வது போல் காட்டப்பட்டுள்ளது இங்குதான் முதன் முறையாகக் காணமுடிகிறது. இவற்றைப் பாதுகாக்க தொல்லியல் துறையும் மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும்.
______________________________________________________
அறம் கிருஷ்ணன்
தலைவர்-அறம் வரலாற்று ஆய்வு மையம் ஒசூர்
Krishnan A Krishnan A
https://www.facebook.com/krishnana.krishnana.9
______________________________________________________