--திவாகர்.
திவாகர்
dhivakarvenk@gmail.com
ரோஜாவின் வாசம் பற்றி எழுதினால்தான் தெரியுமா என்ன.. ஆனாலும் எழுதத்தான் வேண்டும்.. விஷயம் இருக்கிறது ஏராளமாக.
ஆனால் அதற்கு முன்னர் யாழ் நூலகத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை, சுமார் ஒரு லட்சம் கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை 1981 ஆம் வருடம் மே மாதத்தில் தீக்கிரையாக்கி அழித்தனர் சில கயவர்கள். தீக்கிரையானது அந்த நூலகக் கட்டடம் மட்டுமல்ல.. அறிவும் ஞானமும் உள்ளடக்கிய காமதேனுவை சுரக்கும் நூல்களும் கூட.
அறிவே தெய்வம் என்பார்கள்;. கல்வியே செல்வம் என்பார்கள்; படித்துக் கொண்டே இருந்து அனுபவிப்பவனால் ஞானியாக முடியும் என்பார்கள்; பெரியோரின் புத்தகங்கள் வருங்கால சமூகத்துக்கு வழிகாட்டி என்பார்கள், அப்படிப்பட்ட செல்வத்தை, அறிவு தரும் தெய்வத்தை, தெளிவு தரும் ஞானத்தை சில தீயசக்திகள் அன்று யாழ்ப்பாணத்தில் அழித்து விட்டனர். யாழ் நூலகம் என்றல்ல, பாரதத்தின் புராதன ஓலைகள் கூட இப்படி ஏராளமாக அழிக்கப்பட்ட சரித்திரங்கள் இங்கே உண்டு. ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்த அமரசிம்ஹர் எனும் பேரறிஞர் மிகச் சிறந்தஞானி எனப் போற்றப்பட்டவர். இவர் எழுத்துகள் வெகு எளிதாக மனனம் செய்யக் கூடிய அளவில் எழுதப்பட்டு ஞானங்களை அள்ளி வழங்கிய நூல்கள். ஆதிசங்கரருடன் ஏற்பட்ட வாதத்தில் தோல்வியுற்ற விரக்தியில் இவர் தாம் எழுதிய பத்தொன்பது நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டாராம். ஆனால் ஆதிசங்கரர் பதறிப்போய் தடுத்து நிறுத்திய முயற்சியால் ஒரே ஒரு நூல் மட்டும் காப்பாற்றப்பட்டது, அதுதான் அமரகோசா எனும் அரிய வடமொழி நூல். இது உதாரணம்தான்..
மொகலாயப் படையெடுப்பால் அழிக்கப்பட்ட பழைய நூல் சேகரிப்புப் பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கவே முடியாது. நூலகங்கள் என ஏற்பட்டதே நூல்களைப் பாதுகாக்கத்தான். ஆனால் மனிதர்களின் அறிவீனத்தால் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றங்களால், கவனிப்பே இல்லாமையால் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூலகங்கள் எத்தனையோ உண்டு. பாரதநாடு பழம்பெரும் நாடு, பாரதத்தில் தோன்றிய ஞானிகள் எத்தனையோ தீபங்களை ஏற்றி உலகுக்கே வழி காண்பித்தார்கள். அந்த ஞான வார்த்தைகள் கூட ஏராளமாக காலத்தின் கோலத்தில் அழிந்து போய்விட்டனதாம்.
ஆனால் அதெல்லாம் ஒரு காலம்.. இன்னும் கேட்டால் ஞான தீபத்தை மிகப் பிரகாசமாக ஏற்றிவைக்க இப்போது கனிந்து வரும் காலம் கூட. மேலை நாடுகளில் பலவித இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் மூலம் நூல் பாதுகாப்புத் தன்மையை இந்த கால மனித சமுதாயம் கண்டுபிடித்துக் கொண்டே வருகிறது. ஆனால் நமக்காக நம் மொழியைக் காக்க அதைப் பயன்படுத்தவேண்டுமே.. அப்படிப் பயன்படுத்தி நூல்களைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது சென்னை தரமணியில் இருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – இப்படிப்பட்ட நூலகம் ஒன்றினை இந்தியாவில் அதுவும் நம் தமிழ் மொழிக்காக தோற்றுவித்த அந்தப் பெரியவர் ரோஜா முத்தையா செட்டியாரை முதலில் தாள் பணிந்து வணங்கவேண்டும். ’கற்க, கசடறக் கற்க’ என்பார் திருவள்ளுவர், ஆமாம்,தமிழ் மொழியைப் பொறுத்தவரை கசடறக் கற்கவேண்டுமானால் ரோஜா மணம் வீசும் இந்த நூலகத் தோட்டத்துக்குதான் வரவேண்டும்.
வாய்ஸ் ஆஃப் வள்ளுவர் குழுமம் தன் முதல் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று திட்டமிட்டபோது திரு பாலா (ஆர். பாலகிருஷ்ணன், ஐஏஎஸ்) இந்த நூலகத்தில்தான் கூடப் போகிறோம் என்ற சொன்னபோது தலைவர் திரு ராஜேந்திரன் (சுங்கத்துறை முதன்மை ஆணையர்) முதற்கொண்டு அனைவரும் ஒருமனதாக வரவேற்றோம். பாலா ஏற்கனவே சில வருடங்கள் தன் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காக இந்தநூலகத்தில் செலவிட்டுள்ளார். இங்கு சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காக தனி அறையே உண்டு. ஏராளமான ‘ரெஃபெரென்ஸ் மெடீரியல்ஸ்’ சேகரித்து வைத்துக் கொண்டு ஆராய்ச்சிக்காக பெரிய உதவி புரிந்து வருகிறது.
தரமணியில் இயற்கை சூழலின் மத்தியில் குளிர்ச்சியான நிலையில் இந்த கட்டடத்தை தமிழக அரசு இரவலாகக் குத்தகை அளவில்தான் முப்பத்து மூன்று வருடங்களுக்குத்தான் தந்துள்ளது. ஆனால் குத்தகை என்ற சொல்லை ஏன் இங்கு பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. தமிழுக்காக தன்னலமில்லா சேவையில் ஈடுபடும் இந்த ஆராய்ச்சி நூலகத்துக்கு இந்தக் கட்டடத்தினைக் கொடையாக அல்லவா தந்திருக்கவேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. இந்தக் கேள்வி ஆட்சியாளர்கள் காதில் விழவேண்டுமென்று விரும்புகிறோம். ஏனெனில் இங்கே பாதுகாக்கப்படுகின்ற முக்கியப் புத்தகங்கள் அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் தமிழகத்தில் என்றல்ல தெற்காசியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்கு நுண்ணிய தொழில்நுட்பம் மூலமாகப் பாதுக்காக்கப்படுகிறது என்பதே தமிழனுக்குப் பெருமை அல்லவா.
முதலில் இந்த நூலகத்தின் சில சாதனைகளை விவரித்து விடுவோம்.
தமிழகத்தில் கிபி 1713 இல் பிரசுரிக்கப்பட்டு வெளியான முதல் தமிழ் நூலின் பிரதி ’அக்கியானம்’ (பைபிளின் ஒருபகுதி தமிழில்) இங்கே பாதுகாக்கப்படுகிறது.
தமிழில் முதன் முதலாக புத்தகத்தில் எழுதப்பட்ட திருக்குறள் பதிப்பு இங்குதான் பாதுகாப்பாக உள்ளது (பதினேழாம் நூற்றாண்டு),
கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துக் கணக்குப் புத்தகம் அப்படியே இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதைப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள்.
சுமார் 20 லட்சம் பக்கங்கள் உள்ள மிகப் பழையப் புத்தகப் பெட்டகங்களை டிஜிடல் மூலமாக எதிர்காலத்துக்காக சேமிக்க வைக்கப்பட்டுள்ளது.
நூல்கள் மட்டுமல்ல, ஓலைச்சுவடிகள், கிராமபோன் ரிகார்ட்கள் கூட இங்கே சேமிக்கப்பட்டு, தக்கமுறையில் நவீன தொழில் நுட்ப வசதிகளோடு இங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது.
பழைய காலத்து உடைந்து போகும் நிலையில் உள்ள புத்தகமா.. கவலை வேண்டாம்.. உடனே இங்கு கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
1713 முதல் தமிழில் எழுதப்பட்ட அத்தனை நூல்களின் பிரதிகள் இங்கு உண்டு. உடைந்து போகுமே என்ற கவலை இல்லாமல் டிஜிடல் மூலமாக நாம் படிக்கமுடியும்,.
இறக்குமதி செய்யப்பட்ட தரமான இயந்திரங்கள் மிகக் கவனமாக கையாளப்பட்டு இங்குள்ள புத்தகங்களையெல்லாம் டிஜிடல் மயமாக்கம் செய்கிறது.
நூலகத்தின் இயக்குநர் திரு சுந்தர் அவர்கள் பழைய நூல் பாதுகாப்புகள் எப்படியெல்லாம் செய்யப்படுகின்றன என்று விளக்கும்போது நாம் சற்று ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். அன்னை தமிழுக்கு, அன்னையின் பிள்ளைகளுக்கு, வருங்கால தமிழ்ச் சமுதாயத்துக்கு இது ஒப்பில்லாத சேவையாக கண் முன்னே படுகிறது. ஒவ்வொரு பழைய நூலையும் அவர் எடுத்துக் காண்பித்தபோதும் சரி, அதைக் கையாளும்போதும் சரி, இதை எழுதியவர்கள் மட்டும் இன்றிருந்தால் அந்த ஆத்மாக்கள் எத்தனை ஆனந்தப்படுமோ என்று வியக்கவும் வைத்தது. அதுவும் உடைந்து சுக்கு நூறாகும் பக்கங்களை பதப்படுத்தி நாம் கையாளும் வகையில் ஒரு புத்தகமாக உருவாக்கி வருகிறார்கள். சுந்தர் குழுவினரின் அயராத உழைப்பு இந்த நூலகத்தை உலகம் முழுதும் உள்ள பேரரறிஞர்களையும் இங்கே எட்டிப்பார்க்க வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஜான் ஹாரிஸ் எனும் இங்கிலாந்து அறிஞர் இவர்கள் திறமையைப் பாராட்டி, ’இந்த வகையான பாதுகாப்பு மிக உயர்ந்த உன்னத நிலையில் உள்ளது, இதே போன்று உலகம் முழுதும் செயல்பட்டால் உலகம் மிக வேகமாக கல்வியில் முன்னேறும்’ என்று தன் கைப்பட எழுதிப் பாராட்டியுள்ளார்.
ஆஹா, இத்தனை உன்னதமான தமிழ்ப்பணியை ஏற்றுச் செய்யும் இந்த நூலகத்துக்கு வரவு எங்கிருந்து என்று கேள்வி கேட்கலாம்..தமிழக அரசாங்கம் கட்டடத்தை மட்டும் கொடுத்து, அதுவும் குத்தகையில் விட்டு விட்டு கையைக் கழுவிக் கொண்டது. சில காலம் முன்பு வரை சிகாகோ பல்கலைக்கழகம் ஆதரித்துவந்தது. இப்போதும் டிரஸ்டி மூலம் சில நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்கின்றன.
ஆனால் சுந்தர் குழுவினரின் முன்னே இருப்பது மாபெரும் மலையளவு வேலைக்கு இந்த பொருளுதவி எல்லாம் சுண்டைக்காய் போலத்தான்.. போதவே போதாது. நூலகத்தின் தேவைகள், வாசகர்களின் வருகையைப் போல நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மென்மேலும் புதிய கருவிகள் மேலை நாட்டிலிருந்து தருவித்துப் பெற வேண்டிய சூழ்நிலையில் பழைய இயந்திரங்களும் மேல்நிலைப்படுத்தும் தேவையும் அதிகரிக்கிறது. உதிரிபாகங்கள் கூட மேலை நாடுகளிலிருந்து தருவிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே உள்ள படிக்கும் இடங்களில் பார்வையாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் இன்னும் அதிகமான வசதிகள் செய்யவேண்டிய நிலை., வெகு முக்கியமாக ஆவணப் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டி ‘கம்பாக்ட் வகை ஸ்டீல் அலமாரிகள் தேவைப்படுகின்றன. இதெல்லாம் ஏதோ சிறிய அளவிதான் இங்கே எடுத்துரைத்துள்ளேன். மேலும் மேலும் தேவைகள் அதிகரிக்கும்போது அதன் சுமைகள் மிகப் பலமாகத்தான் நூலகத்தார் மீது வந்து விழுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இது நூலகம் மட்டுமல்ல. ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கூடமாகத்தான் நாம் பார்க்கவேண்டும். மேலை நாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அவர்கள் அரசாங்கமும் கொடையாளர்களும் தேவையான பொருளுதவியை தாராளமாக வழங்குவதால் மட்டுமே அவர்களால் இந்த புதிய நாகரீக உலகுக்கு ஏற்றவாறு பலவித வசதிகளையும் புதிய கண்டுபிடிப்புகளால் முன்னேற்றம் பெறுகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இந்த வகையில் சேர்க்கப்படத்தான் வேண்டும்.
தமிழர்கள் பொதுவாகவே மிகச் சிறந்த அறிவாளிகள் என்ற பெயரெடுத்தவர்கள். உலகெங்கும் உள்ள ஆராய்ச்சிக்கூடங்களில் தமிழர்களின் உன்னதப் பணி பல சேவைகள் மூலம் வெளிப்படத்தான் செய்கின்றன. உலகெங்கும் உள்ள தமிழர்களில் அறிவுச் செல்வத்தோடு பொருட்செல்வத்தையும் மிக அதிக அளவில் பெற்றவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் இங்கே தமிழ் எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். நம் வருங்காலம் மிகச் சிறப்போடு தமிழை எதிர்நோக்குகிறது என்ற நம்பிக்கையும் பெறுங்கள். அப்படிப்பட்ட தமிழ்ச்சேவை புரியும் இந்த நூலகத்தின் உங்கள் சேவையின் பங்கு என்னவென்று உங்களையே கேட்டுக் கொண்டு அதற்கான விடையயும் அந்த நூலகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிப் பகிர்ந்து கொண்டீர்களேயானால் தமிழன்னை உங்களைப் போன்ற மக்கட்பேறு பெற்றதற்காக பெரும்பாக்கியம் செய்திருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்.
விடைபெறும்போது சுந்தரிடம் சற்று தயக்கத்தோடு கேட்டேன் – என் புத்தகங்களும் இங்கே இருக்கின்றனவா.. அவர் உடனடியாக புன்னகைத்து ஐந்தே நிமிடத்தில் என் புத்தகங்களின் லிஸ்ட் ஒன்றைக் காண்பித்தார். புல்லரித்தது. எத்தனையோ அறிஞர்கள் பேரறிஞர்கள் எழுதிய புத்தகங்களோடு அடியேனின் எழுத்துகளும் கலந்துவிட்டதில் ஆனந்தம், ஒரு பெருமை..
எழுத்தாளர்களின் புண்ணிய பூமி மணம் வீசும் இந்த ஆராய்ச்சி நூலகம் என்றுதான் சொல்லவேண்டும்.. ரோஜா மலருக்குக் கூட வாசத்தின் கால அளவு குறைவுதான்.. ஆனால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாசம் எள்ளளவும் குறையாத வாடா மலர்.. தமிழன்னை தன் கூந்தலில் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட மலர்.
தமிழைப் பாதுகாக்கும் இந்த மலரைத் தக்கபடி பாதுகாப்பது நம் தமிழர்களின் தலையாய கடமை.
நன்றி: வல்லமை
___________________________________________________________
திவாகர்
dhivakarvenk@gmail.com
___________________________________________________________