Tuesday, December 31, 2013

ஜபம் - பார்வதி ராமச்சந்திரன்


கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியில், மன அமைதி என்பது பலருக்கும் கிட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்தப் புனித பாரத மண்ணில் தோன்றிய ஞானியரும், யோகியரும், மஹான்களும், மன அமைதி, நிம்மதி மட்டுமல்லாது, இறைவனின் சந்நிதியையும் சாயுஜ்யத்தையும் அருளும் மிக எளிமையானதொரு வழியை, நமக்குக் காட்டிச் சென்றுள்ளனர். அற்புதமான மார்க்கம் அது. 'ஜபம்' என்ற இந்த ஒற்றை வார்த்தையின் பொருளை முழுமையாகப் புரிந்து கொண்டு, பயன்படுத்துபவர் நிச்சயம் பேறு பெற்றவர்களே!! இது சாமானியர்களும் மனிதப் பிறவியின் பயனை அடைவதற்காக அருளப்பட்ட உன்னத சாதனம்.

பொதுவாகவே ஒலி வடிவங்கள் ஒருவரது மனதிலும் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திறனுடையவை. நேர்மறை மற்றும் எதிர்மறையான  சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று. இசையின் மகத்துவம் அறியாதவர் யார்?. இறை நாமம் அல்லது மந்திரம் சொல்வது, நம் உடலில் நேர்மறையான விளைவுகளைத் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

ஜபம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சின்ன விளக்கம். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை அல்லது  மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்வதே ஜபம்.
 மனதுக்குள் இதைச் செய்வது மானசீக ஜபம் என்றும், தனக்கு மட்டுமே கேட்கும்படி மிக மெதுவாக இதைச் செய்வது 'உபாம்சு' என்றும் பிறருக்குக் கேட்கும்படியான ஜபம், 'உச்சாடனம்' என்றும் கூறப்படுகிறது. லிகித ஜபம் என்பது, நம் இஷ்டதெய்வத்தின் திருநாமத்தை எழுத்தால் எழுதுவது. எழுதும் போது, மௌனம் அனுசரிப்பதும், முழு மன ஈடுபாட்டுடன் செய்வதும் மிக முக்கியம்.

இதில் இறைவனின் திருநாமத்தைச் சொல்வது 'நாம ஜபம்'. குறிப்பாக, ஒரு தெய்வத்துக்கு உரிய மந்திரத்தை, முறையாக, குருவிடம் இருந்து உபதேசம் பெற்று, அவர் காட்டிய வழியில் ஜபிப்பது 'மந்திர ஜபம்'. நாம ஜபத்திற்கு கட்டாயமான நியமங்கள் அவசியமில்லை.   ஆனால், மந்திர ஜபத்திற்கென்று நியமங்கள் உண்டு.

ஜபமானது, யோகத்தில் ஓர் அங்கமாதலால் ஜபயோகம் என்றே அழைக்கப்படுகின்றது. மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், 'ஜபயக்ஞம்' என்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, 'யக்ஞங்களில் நான்  ஜப யக்ஞமாக இருக்கிறேன்'  (யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ) என்று அருளுகிறார்.
சுவாமி சிவானந்தர், 'பகவானையும், பக்தனையும் இணைக்கும் பாலமே ஜபம்' என்கிறார்.

ஜபம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை விவரித்துச் சொல்ல ஒரு ஆயுள் போதாது!!!.  மனம் ஒருமுகப்படுதல் என்பது ஒவ்வொரு செயலின் வெற்றிக்கும் இன்றியமையாதது. அதுவும் ஆன்மீகப் பாதையில் செல்ல விழைவோருக்கு மனமே மூலதனம். ஸ்ரீசாரதா தேவியார், 'ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு, ஒருவரது மனமே அவருக்கு அருள் புரிவதாக இருக்க வேண்டும்' என்று அருளுகிறார். தியானம், தவம், யோகம் அனைத்தும், தூய மனம் வாய்த்தோருக்கு மட்டுமே தனக்கான பாதைகளைத் திறந்து விடுகின்றன. மனம் தூய்மைப்படுவதற்கு, ஒருமைப்பட்ட மனதோடு ஜபம் செய்வது அவசியம்.
தியானம், முதலில் ஜபத்தோடு கூடியதாகச் செய்யப்படுகின்றது. அதன் பின், மெல்ல மெல்ல ஜபம் தானே நின்று, தியான நிலை, நிலைபெறுகிறது.
ஆன்மீக வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வுக்குப் புறம்பானதன்று. தீவிரமான ஒரு எண்ணமோ சிந்தனையோ மனதில் எழுமாயின், மனம் திரும்பத் திரும்ப அதிலேயே அலைபாயாது நிலைபெற்றிருக்கும். அதைப் போல, இயல்பாகவே அலைபாயும் மனது, இறைநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதால்,   மெல்ல மெல்ல அடங்கி, ஒரு புள்ளியில் ஒடுங்குகிறது. மனதில் தோன்றும் எண்ணங்கள், செயல்கள் அனைத்தையும் மனம் உற்று நோக்கத் துவங்குகிறது. இதன் காரணமாக, எண்ணங்கள், செயல்பாடுகள் இவற்றில் ஒரு ஒழுங்குமுறை செயல்படுத்தப்படுகின்றது. அநாவசியமான எண்ணங்களோ, செயல்பாடுகளோ நிகழ்வதில்லை. சாந்தமான, தூய மனமானது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் நேர்மறை சக்தியை வியாபிக்கச் செய்கிறது. இதன்  மிக உச்ச நிலையில், 'தன்னையறிதல்' மிக இயல்பாக நிகழ்கிறது.
தொடர்ந்த ஜபம், ஒருவர், தமது உலகக் கடமைகளை, எவ்விதப் பற்றுதலுமின்றி, அமைதியான முறையில் நிறைவேற்ற நிச்சயம் உதவுகிறது.
நெருப்புக்கு எப்படி தன்னைச் சார்ந்தவற்றை எரிக்கும் தன்மை இருக்கிறதோ அப்படியே இறை திருநாமங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதலுக்கும் ஒருவரது பாவங்களை, கர்ம வினைகளை பஸ்மமாக்கும் தன்மை இருக்கிறது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், " தெரிந்தோ, தெரியாமலோ, தன்னறிவுடனோ, அறிவில்லாமலேயோ எந்த ஸ்திதியிலாகட்டும், ஒருவன் பகவந்நாமத்தை சொல்வானானால் அவனுக்கு அதன் பலன் கிட்டும். தானாகவே விரும்பி ஆற்றுக்குப் போய்க் குளிப்பவனுக்கும், வேறொருவனால் ஆற்றில் தள்ளப்படுபவனுக்கும் அல்லது தூங்கும்போது வேறொருவன் கொட்டிய தண்ணீரில் நனைபவனுக்கும் ஸ்நான பலன் ஒருங்கே ஏற்படுகிறது அல்லவா?" என்று நாம ஜபத்தின் மகிமையைச் சொல்கிறார்.
ஜபம் செய்வோர், அது நாம ஜபமாயினும் சரி,மந்திர ஜபமாயினும் சரி, தமக்கு மட்டுமல்லாது பிரபஞ்சத்துக்கே நன்மை செய்பவர்களாகிறார்கள். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், 'பணம் இருப்பவர், பணத்தின் மூலம் சேவை செய்யட்டும், இல்லாதவர், ஜப தவங்களின் மூலம் சேவை செய்யட்டும்' என்று அருளியிருக்கிறார்.   ஒருவர் தொடர்ந்து ஜபம் செய்யும் போது, அந்த ஜபமானது, மிக அற்புதமான அதிர்வலைகளை அவரிடத்திலிருந்து வெளிப்படச்செய்து, அவரைச் சுற்றிலும் தெய்வீகமான, அவரைக் காண்பவருக்கு அமைதியை ஏற்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குகிறது.
ஸ்ரீமத் பாகவதம் கூறும் அஜாமிள சரிதமும், இறைநாமம் சொல்லுதலின் மகிமையையே பேசுகிறது. இறக்கும் தருவாயில், தன் குழந்தையின் பெயரை, 'நாராயணா' என்று உச்சரித்தவாறே இறந்ததால், அஜாமிளனுக்கு அவன் கர்மவினைகளிலிருந்து விடுதலை கிடைத்தது. ஒரு  முறை , இறைநாமத்தை உச்சரித்ததற்கே இத்தகைய பலன் என்றால், ஜபத்தின் மகிமையை நாம் தெளிவாக அறியலாம்.
'மரா, மரா' என்று உச்சரிக்க ஆரம்பித்த வேடன், வால்மீகி முனிவரானது  இறைநாமத்தின் மகிமையை விளக்கும்  ஒரு உதாரணம்!!..
காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியாரின் திவ்ய சரிதம், ஜபத்தின் மகிமையை விளக்கும் ஒரு நிகழ்வை எடுத்துக் காட்டுகிறது. மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மனின் ஆலயம் பெரும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த போதிலும், ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மஹா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்த்த மேருவுடன் கூடியதாக இருந்த போதிலும், அங்கு, அந்த நற்பலன்களை அடைய வருவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகராகிய மறைதிரு. ஏகாம்பர சிவாச்சாரியார், ஸ்ரீமஹாபெரியவரின் ஆலோசனைப்படி, ஆலயத்தினுள் தீவிரமான ஜப யோக சாதனையில் ஈடுபடலானார். இன்று ஸ்ரீமாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம், கோடிக்கணக்கான பக்தர்களால்  கொண்டாடப்படும்  தலமாகத் திகழ்கிறது. இந்த நிகழ்வு, ஆசுகவி வேலனாரின், 'மாங்காடு காமாட்சி மகிமை' நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறைநாமத்தைச் சொல்வது மட்டுமல்ல, யாரேனும் சொல்வதைக் கேட்பதாலேயே ஒருவர் தமது கர்மவினைகளிலிருந்து விடுபடுகிறார். இதை விளக்கும் ஒரு கதை பிருஹதாரணிய புராணத்திலிருந்து..
பிங்களா என்னும் பெண், முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்தாள். ஒரு நாள், ஒரு திருடன், தான் திருடிய ஒரு கிளியை அவளுக்குப் பரிசளித்தான். அந்தக் கிளி, ஒரு பக்தரின் வீட்டில் வளர்ந்து வந்த கிளி. அது,'ராம ராம' என்று சொல்லப் பழகியிருந்தது. இடைவிடாது, தன் ராம நாம ஜபத்தால் அந்த இல்லத்தையும் பிங்களையையும் புனிதப்படுத்தியது அந்தக் கிளி. இறைநாமத்தின் மகிமையை அறியாதவளாயினும், தன்னை அறியாமல், தன் பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தாள் பிங்களை.
 “எல்லாம் சரி!!!... நாம ஜபத்தின் மகிமை அளப்பரியது. மனதைத் தூய்மைப்படுத்தி, கர்ம வினைத் தளைகளிலிருந்து விடுபட உதவுகிறது. அமைதியான முறையில் நம் கடமைகளைச் செய்தவாறே, இவ்வுலகப் பிரச்னைகளினூடாக நம் வாழ்க்கைப் படகைச் செலுத்த உதவுகிறது. ஆனால் நேரம் வேண்டுமே!!!” என்பவர்களுக்கு, அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் ஒரு அமுத வாக்கே நல்லதொரு பதிலாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு முறை, அன்னையின் ஜபத்திற்கான நேரம் குறித்து, சுவாமி மாதவானந்தர் அன்னையிடம் கேட்ட போது, அன்னை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்..
'என்ன செய்வது மகனே!. நாங்கள் பெண்கள். வீட்டு வேலைகள் எப்போதும் இருக்கின்றன. இவற்றை விடுத்துத் தனியாக ஜபம் செய்ய முடியாதே!.  சமைப்பதற்காக உலை வைக்கிறேன். அரிசி கொதித்து சாதம் ஆகும் வரை ஜபம் செய்கிறேன். பிறகு குழம்பு தயாரிக்க வேண்டும். அது பதமாகும் வரை மீண்டும் ஜபம் செய்கிறேன். சமையல் முடிந்ததும் மீண்டும் ஜபம் செய்கிறேன். இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். நான் வேறு பெரிதாக என்ன ஆன்மீக சாதனை செய்துவிட  முடியும்?' என்ற அன்னையின் மொழிகளே 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'  என்பதை  அழகாக விளக்குகிறது.
தினம் மிகக் குறைந்த அளவு, மிகக் குறைந்த நேரத்தில் செய்யப்படும் ஜபத்தின் மகிமையை, எவ்வளவு சொன்னாலும் அனுபவத்தின்  மூலமே உணர முடியும். நம் தினசரிக் கடமைகளுள் ஒன்றாக ஜபம் செய்வதைச் சேர்க்க‌ முடியுமெனில், நமக்குள்ளும் அற்புதங்களை உணரலாம்!!!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!


புத்தாண்டு பிறக்குது !

சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டு பிறக்குது ! நமக்கு
புத்தாண்டு பிறக்குது !
கடந்த ஆண்டு ஓடுது, ஆயினும்
தடம் இன்னும் இருக்குது !
வித்தைகள் சிறக்கணும் !
வேலைகள் பெருகணும் !
வீணர்கள் தேறணும் !
சித்தர்கள் பிறக்கணும் !
பித்தர்கள் தெளியணும் !
யுக்திகள் கூர்மை ஆகணும் !
சண்டைகள் குறையணும் !
சாதிகள் சேர்ந்து வாழணும் ! ​
சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !
பொ ரி​ உருண்டை ஆச்சு பூத உலகம் !
திறமைகள் ஒன்றாய் வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருகணும்.
மின்சக்தி பெருகி யந்திரம் ஓடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊறணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,  
கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்
பொறுப்புகள் ஏற்கணும் !  

முப்பாலும் கலந்து - துரை.ந.உ.

அறம்



1.
தாண்டவம் வென்றழித்தல்; ஆணவம் கொன்றொழித்தல்;
ஆண்டவம் காணும் வழி
2.
மாத்திரைப் பையோ(டு) இறைதேடிச் செல்லுமந்த
யாத்திரையால் என்ன பயன்

பொருள் 



3.
எதுவும் இணையில்லை என்போர் அறியார்
அதுவும் நிலையில்லை என்று

4.
புரியும் வரைச்சொல் வதைவிடவும் ஒன்றைப்
புரியும் படிச்சொல்லல் நன்று

5.
கரையானைக் கண்டால் உடன்ஒதுக்கு; ஆற்றங்
கரையானைக் கண்டால் ஒதுங்கு

6.
கூட்டல் வகுத்தல் கழித்தல் அறி;அது
காட்டும்;உன் வாழ்வின் வழி

இன்பம் 

மன்னவளே!


7.
​இல்லாமை இல்லாமால் போக்குமோர் மந்திரமுண்(டு);
இல்லாள் எனும்பேர் அதற்கு

​8.
​இணைதுணை யானால் மருந்து;வந்(து) அமைந்த
துணைஇணை யானால் விருந்து


என்னவனே!​

​9.
​மலைபோல் எழுவான்; மழைபோல் பொழிவான்;
அலைபோல்
​இழுப்பான் அவன்

10.
​பாயும் அவன்வேகம் கண்​டால் ​புரளுமாம்
பாயும் பயந்து
​மிரண்டு

பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம் - திவாகர்


திவாகர்

இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோதும் சரி, அதற்குப் பிறகு சுதந்திரமடைந்த இந்தியாவிலும் சரி, வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒன்று மக்களைப் பாடாய்ப் படுத்தியதால் எங்கெல்லாம் வேலை இருக்கின்றதோ எங்கெல்லாம் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றனவோ எங்கெல்லாம் சென்றால் உழைப்பால் பசியை வெல்லலாம் என்று தோன்றியதோ அங்கெல்லாம் மக்கள் மொழி பேதமில்லாமல் குவியத் தொடங்கினர் என்பதை யாரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் இக்கட்டுரை இப்படி சமீபகாலங்களில் நடைபெற்ற மாற்றங்களை விட்டு சற்று ஆழமாக திரும்பிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. முக்கியமாக தமிழர்கள் இடமாற்றம் அதுவும் தமிழ் பேசப்படும் தமிழ் மாநிலத்தை விட்டு பாரதத்தில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் குடியேற்றம் எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆராயப்பட்டு எழுதப்பட்டதாகும்.

உலகிலுள்ள பண்டைய குடி இனங்களில் காலம் காலங்களாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றத்தை தன்னுள் வாங்கிக்கொண்டு அதனால் புத்துணர்ச்சி பெற்று மென்மேலும் பெருமை பெற்று வாழும் குடி தமிழ்க்குடி ஒன்றுதான் என்று மிகத் தைரியமாக சொல்லவேண்டும். தமிழர்களின் தோற்றத்தைக் காலக் கணக்குக் கொண்டு நிச்சயமாகக் கணக்கிடமுடியாது. அவர்கள் எந்தப் பகுதியில் முதலில் தோன்றினார்கள் என்பதையும் நம்மால் இன்னமும் நேர்த்தியாக விளக்கமுடியவில்லை. கடலால் அழிந்த குமரிக்கண்டத்தில் தமிழர்கள் தோன்றினார்கள் என்று பொதுவாக நிறுவப்பட்டாலும், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் மத்தியில் இந்தோனிஷியாவையும் இணைத்துக் காணப்பட்ட பூமி என்று பல தன்னார்வக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும் நிறுவப்படாத செய்திகளை நாம் இக்கட்டுரையில் கொண்டு வரப்போவதில்லை. தற்போதுள்ள தமிழக-கேரள  பூமியே தமிழர்கள் தோன்றிய பூர்வ நிலம் என்ற வழக்கையே தமிழர் சொந்த பூமியாக ஏற்றுக்கொண்டு, இப்படி தம் சொந்த பூமியிலிருந்து பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்த வரலாற்றை மட்டும் கவனிப்போம்.

சங்கத் தமிழ் சொல்லும் குமரிமுனையிலிருந்து திருவேங்கடம் வரை உள்ள நிலப்பரப்பில் ஆதியில் நிலங்களின் தன்மைக்கு ஏற்ப தமிழர்கள் வாழ்ந்தாலும், தங்கள் நாகரீகத்தை தங்கள் சொந்த பூமியிலிருந்து கொண்டே வளர்த்துக்கொண்டும் மேன்மைப்படுத்திக் கொண்டும் வாழ்ந்தாலும் இன்றைய பாரதத்தில் பிற இடங்களிலும் சங்ககாலம் தொட்டே தங்கள் இனப்பெருக்கத்தைக் கொண்டு சென்றார்கள் என்றே சொல்லலாம். அதே போல இன்றைய தென்னக மொழிகளான கன்னடம், தெலுங்கு, துளு (மலையாளத்தையும் தமிழையும் தற்போதைக்குப் பிரித்துப் பார்க்கவில்லை. காரணம் தமிழின் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்ட மொழியாக மலையாளம் உள்ளது) ஆகியவைகளில் தமிழின் வழக்கமான அளவில் பேசப்படும் சாதாரணச் சொற்கள் கலந்து மக்கள் வாயால் பேசப்படும்போதுதான் தமிழர்கள் இங்கெல்லாம் குடியேறி இருக்கிறார்கள் என்பது விளங்கும். இந்தச் சொற்களைப் பற்றி அதிகமான அளவில் கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, துளு நாட்டிலும் (மேற்குக் கடையோர மங்களூர் உடுப்பி போன்ற இடங்கள்) அதே போல தென் கலிங்கநாட்டில் (இன்றைய வடகிழக்கு ஆந்திரா) மக்களால் பேசப்படும் சாதாரண பேச்சு வழக்கில் கூட தமிழுக்கே தனிப்பட்ட உரிமையான பல சொற்கள் அந்தந்த மொழிகளோடு கலந்து விட்டதையும் அவர்களிடத்தில் நாம் பேசும்போது சாதாரணமாகவே அறியலாம். உதாரணத்துக்காக உயரமான மலைக்குடியேற்றத்துக்காக செல்லும் ஆரம்பப்பகுதியை தமிழில் அடிவாரம் என்றழைப்பது சகஜம்தான். இன்றைக்கும் தென் கலிங்கத்து மலைகளின் கீழ்ப்பகுதியை அடிவாரம் அல்லது அடவிவரம் என்றே அழைக்கிறார்கள். இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்டதுதான். தமிழர்கள் எந்தந்த சமயங்களில் இப்படி குடியேற்றம் மாறினார்கள் என்பதை சற்று விளக்கமாகக் கவனிக்கலாம்.

தமிழர்கள், பற்பல ஆண்டுகளாகவே கடும்  உழைப்பாளிகளாகத்தான் இருந்ததாக தமிழர் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன். இன்றைக்கும் கூட கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் கிரானைட் குவாரிகளில் ஏராளமான அளவில் தமிழர் குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இன்றைக்கும் கூட கிரானைட் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கும் கீழை ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது என்பதும் அந்த ஏற்றுமதி பெரிய அளவில் நடைபெற தமிழர்கள்தாம் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதும் எத்தனை பேர் அறிந்தார்களோ நாம் அறியோம். (ஒருவேளை பழைய நாளேடுகளில் கொத்தடிமை மீட்கப்பட்டனர் என்ற சிறு செய்திகள் படித்திருப்போருக்கு இவை ஞாபகம் இருக்கவாய்ப்புண்டுதான்.)
தமிழர்கள் மூன்றுவிதமாக செயல்திறன்களில் சிறந்து விளங்கினார்கள். பண்டைய காலத்தில் இரும்பு உற்பத்தி மிக அதிக அளவில் சக்கரக்கோட்டம் (இன்றைய பல்சார் மாவட்டம், சட்டிஸ்கர் மாநிலம்) என்ற நகரத்தைச் சூழந்த காடுகளில் நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலும் மத்தியிலும் இந்த சக்கரகோட்டத்தில் மிகப் பெரிய இரண்டு யுத்தங்கள் நடைபெற்றன. ராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி 1012-1042) நடைபெற்ற ஒரு யுத்தம் அங்குள்ள இரும்புச் சுரங்கங்கள் சோழர்கள் வசம் முழுமையாக சிக்குவதற்குக் காரணமாக இருந்தது. இரும்பு என்பது மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாக அமைந்து விட்ட காலகட்டத்தில் இந்த இரும்புச் சுரங்கங்களை சோழ அரசே தங்கள் வசம் வைத்திருந்ததற்கான பல ஆதாரங்களை சரித்திர ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகவே கண்டறிந்துள்ளனர். இரும்புச் சுரங்கங்களில் தமிழர்களே வேலை செய்தனர். தமிழர்களே காவல் காத்தனர். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு குலோத்துங்க சோழன் (கி.பி 1070-1120) காலத்திலும் இந்த இரும்புச் சுரங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள இன்னொரு முறை ஒரு யுத்தம் நடந்ததாக  குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியில் ஒரு வரி உள்ளது. ஆனால் காலம் செல்ல செல்ல இந்தச் சுரங்கங்கள் மத்திய இந்தியாவின் உள்ள வேறு பல அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், பிறகு தில்லி சுல்தான்களின் கட்டுப்பாட்டிலும் வந்து விட்டது. ஆனால் பத்து, பதினோராம் நூற்றாண்டில் குடியேறிய தமிழ்த் தொழிலாளக்குடும்பங்கள் நிலையாக அங்கேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்துள்ளனர். வீரர்களுக்குத்தான் எப்போதுமே இடமாற்றம் உண்டாகுமே தவிர தொழிலாளப் பெருமக்களுக்கு ஏது இடமாற்றம். மேலும் ஒரு தொழிலில் தம் திறமையைக் காண்பிக்க முற்பட்டுவிட்டால், அதன் சிறப்புத் தன்மையால் எந்த இடத்தில் தங்கள் தொழிலைச் செய்கிறோமோ அங்கேயே தங்கிவிடும் பழக்கம் எல்லாக் குடியினரிடத்திலும் உண்டு. இப்படியாக கூட்டம் கூட்டமாக அனுப்பப்பட்ட தமிழ்க்குடும்பங்கள்தாம் இன்றைக்கும் பிஜித்தீவி கரும்புத் தோட்டங்களிலும், மலேஷிய ரப்பர் தோட்டங்களிலும், இலங்கை தேயிலைத் தோட்டங்களிலும் வேர்விட்டு மரமாகி ஆலமாகி நின்று விட்டதை யார்தாம் மறுக்கமுடியும். அதே போலத்தான் அன்றைக்கு சக்கரக்கோட்டக் காடுகளிலும் மேலும் வடக்கே நீண்ட கனிமச் சுரங்களிலும் வேலைக்காகச் சென்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

ஆனால் காலம் கொடுமையானது. பின் வந்த காலங்கள் இரும்புக்காக எத்தனையோ போர்களை சந்தித்தன. போர்களை நடத்தியவர்கள் இந்திய சிற்றரசர்கள் மட்டுமல்ல, துருக்கியில் இருந்து வந்து நம்மை ஆண்ட துருக்கர்களும் அதற்குப் பின்னர் வந்த ஐரோப்பியர்களும் கூட. சுரங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் பிழைப்பு அவ்வளவாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அவர்களது பரம்பரை பழக்கவழக்கங்கள் காலத்தால் மாறுபட ஆரம்பித்தன. இந்தக் கலாசார மாற்றம் தமிழனின் வாழ்க்கை முறையையும், மொழியையும் பாதித்தது என்று கூட சொல்லலாம்.

பீஹார், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் தமிழ்க்கடவுளான முருகர் வழிபாடுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. பின்னால் வந்த கதைகள் முருகனை வடநாட்டுக் குமாரசுவாமியாக ஆக்கினாலும் தமிழனின் தலைக் கடவுள் முருகனை என்றும் தமிழர்களின் வாரிசுகள் மறக்கவில்லை என்பதற்கான சான்றுதான் இது. இன்று அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களாக மாறிப்போனாலும் முருக வழிபாடு ஒன்றே அவர்களை இன்னமும் தமிழகத்தின் வேரை மிகப் பலமாக அவர்கள் மனதில் ஊன்றியிருக்கிறது என்று சொன்னாலும் மிகை அல்ல.

அதே போல ஆந்திரத்தில் வேறு வகையான நிலையில் தமிழர்கள் குடிபெயர்ந்தனர். கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஆந்திரம் முழுவதும் போயர்கள் எனும் மலைவாழ் இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்த போயர்கள் மிகவும் உன்னத நிலையில் இருந்ததாக அவர்களைப் பற்றிய சரித்திரம் சொல்கிறது. மேலும் இவர்கள் வடநாட்டில் உள்ள காசியில் வேதம் பயின்று, புரிநூல் தரித்து அவர்கள் வேதக் கொள்கைகளை ஏற்று அவைகளை மலைவாழ் மக்களிடம் பரப்புவதற்குக் காரணமாக இருந்தனர். மடிபோயா என்பவர் மடிசர்மா என்று பெயர் மாறியதற்கான ஆதாரங்களும் ஆந்திர சரித்திரத்தில் உள்ளன. ஆனால் எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளில் வந்த சாளுக்கிய வம்சத்தினர் ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து கீழைச் சாளுக்கியம் என ஆந்திரக் கிழக்குப் பகுதியையும் மேலைச் சாளுக்கியம் என இன்றைய மேற்கு ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரத்தின் தென்பகுதியையும் ஆள ஆரம்பித்தனர். இவர்கள் வேத மதத்தை முறையாகப் பரப்ப கோவில்களை அதிகம் கட்ட ஆரம்பித்தனர். 9ஆம் நூற்றாண்டில் ஐந்து பெரும் சிவன் கோவில்கள் ஆந்திரத்தில் எழுப்பப்பட்டு இன்றும் பஞ்சராமம் ஸ்தலங்கள் என்ற பெயருடன் சிறப்பாக போற்றப்படுகின்றன.

சரி, இவை எதற்காக சொல்கிறோம் என்றால் வேதபாடங்கள் சொல்வதற்கு போயர்கள் ஏற்கத்தக்கவர் இல்லை என்று கீழைச் சாளுக்கிய ராஜாக்கள் அந்த இனத்து மக்களோடு யுத்தம் செய்ததாகவும் கலிங்கம் முதல் இன்றைய ஓங்கோல் வரை நீண்ட நாட்களாக நடந்த சண்டைகளில் போயர்கள் வீழ்த்தப்பட்டதையும் ஏகப்பட்ட செப்புப்பட்டயங்கள் பறைசாற்றுகின்றன. இந்த சமயத்தில் தமிழகம் மட்டுமே கல்வி கேள்விகளில் சிறந்து விள்ங்கியதால் கல்வியறிவு பெற்ற வேத விற்பன்னர்கள் பலர் குடும்பம் குடும்பங்களாக ஆந்திர தேசத்துக்கு அனுப்பப்பட்டனர், என்றும் அவர்களுக்குத் தோதாக ஆங்காங்கே கோவிலக்ள் கட்டப்பட்டு அவர்கள் பராமரிப்பில் நிலங்கள் நிவந்தமாகவும் விடப்பட்டதற்கு செப்புப்பட்டயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.. இன்றைய குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டண  மாவட்டங்களில் இந்தத் தமிழ் அந்தணர்கள் குடியேற்றம் நடந்ததையும் குலோத்துங்கனின் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர்கள் வடநாட்டைச் சேர்ந்த அந்தணர்கள் இல்லை என்றும் சாமவேதம் கற்ற தமிழ் அந்தணர்கள்தாம் என்றும் உறுதி செய்கின்றார். இன்றைக்கும் இந்தத் தமிழர்கள் தங்கள் குடிப்பெயராக ’திராவிட’ என்ற பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழை திராவிடமொழி என்று வடநாட்டார் பல்லாண்டுகளாக எழுதி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த திராவிட குடும்பத்தார் பல்லாயிரக்கணக்கில் ஆந்திராவில் இருந்தும், தம் முன்னோர் அனைவரும் தமிழர்களே என அறிந்தும் தம் மொழியை மட்டும் மறந்துபோயினர்.. இன்று அதற்காக வருத்தப்படும் பல குடும்பங்கள் இங்கு உள்ளன என்றாலும் காலம் எனும் காலன் செய்த கோலம் இது என்று சொல்லலாமா அல்லது முன்னோர்கள் முயலாததால்  காலத்தின் மாற்றத்தில் தமிழ்மொழியை நழுவவிட்டக் கொடுமையை என்று நம் முன்னோர்கள் மீது பழியைப் போடுவோமா?
அதே போல வைணவத்தைப் பரப்புவதற்காக நாதமுனி எனும் வைணவப்பெரியார் – 10ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர், இவர் வைணவமதத்தின் ஆதி குரு எனப்போற்றப்ப்படுபவர். அவர் வைணவ மதத்தைத் தனிப்பட்ட வகையில் பரப்புவதற்காக பல வைணவக் குடும்பங்களை தமிழகத்திலிருந்து ஆந்திரா முழுவதும் அனுப்பி வைத்தார். இப்படி ஒரு வைணவக் குடும்பத்துக்கு நிலம் நிவந்தம செய்யப்பட்டதற்கான இன்றைய பிரகாசம் மாவட்டம் காரம்சேடு வேணுகோபாலசுவாமி கோயிலில் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று எடுத்துக் காட்டுகிறது, இன்றும் ஆந்திரத்தின் கடைக்கோடியில் உள்ள ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் கோயில்களில் கூட இந்த வைணவக்குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களால் தமிழ் பேசமுடியவில்லை என்றாலும், கோயில்களில் தமிழ்ப்பிரபந்தங்கள் பாடுவதை வழக்கத்தில் இன்னமும் வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே போல ஜெயங்கொண்டார் தான் பாடிய கலிங்கத்துப் பரணியில் இன்றைய ஒடிஷா-ஆந்திர எல்லையில் தமிழ்வீரர்கள் கலிங்கத்தோடு நடைபெற்ற போரில் வெற்றி கிடைத்ததும், கலிங்க வீரர்களைத் தேடித் தேடிப் பிடிக்கையில் கலிங்க வீரர்கள் மாறு வேடம் பூண்டு தாம் புத்தர்கள், தாம் தெலுங்கர்கள், தாம் அரவமொழி பேசும் தமிழர்கள் என்று சொல்லித் தப்பித்தனராம். அரவம் என்றால் தமிழ்மொழி என்பதும் அவர்கள் அந்த மண்ணின் மைந்தராக மாறினாலும் அரவமொழியைப் பேசியதால் அரவர்கள் என்றே அழைக்கப்பட்டதாக அந்தச் செய்தி சொல்கிறது. இது பதினொன்றாம் நூற்றாண்டுச் செய்தியாகும்.

வடநாடுகளில் தமிழர் குடியேற்றம் பல நூறாண்டுகளாகவே வணிக நிமித்தமாக நடைபெற்று வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கன்னோசி நகரத்துக்கு ராஜேந்திர சோழர் காலத்தில் சில சிங்களக்குடும்பங்களும், தமிழ்க்குடும்பங்களும் அனுப்பப்பட்டன என்று இலங்கை மஹாவம்சத்தினர் எழுதியுள்ளார்கள். இதற்கு ஆதாரத்தகவல்கள் சோழநாட்டில் உண்டு. ராஜேந்திரர் இலங்கையை முழுவதும் தங்கள் ஆட்சியில் கொண்டு வந்த போது, இலங்கைக்கு கன்னோசி மன்னர் உதவியதாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளன.  இன்றைக்கும் தமிழே அறியாத பீஹார் தமிழர்கள் பாடலிபுத்திரம் என்கிற பாட்னாவிலும் ராஞ்சியிலும் ஏராளமான அளவில் வசித்து வருகிறார்கள்.
வணிகர்கள் குடியேறுவது என்பது காலம் காலமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்தான். தமிழ் வணிகர்கள் ஆந்திரத்தின் வடபகுதியில் குடும்பஙளோடு வசித்ததையும், அப்படி ஒரு குடும்பம் சிம்மாசலம் கோயிலுக்காக ஒரு பெரு நிலத்தில் தோட்டத்தை வளர்த்து, அந்த நந்தவனத்தை நிவந்தமாக (தானம்) அளித்ததையும் ஒரு தமிழ்க்கல்வெட்டு பேசுகிறது. எங்கோ ஆந்திராவில் வடகோடியில் உள்ள இந்தக் கோயில் பற்றிய முதல் கல்வெட்டு கூட தமிழ்தான் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அத்தோடு பெருநிலம் ஒன்றினை ஒரு தமிழ் வணிகன் தானம் செய்தான் என்றால் அவன் இன்னும் எத்தனை பெரிய இடங்களை அந்தச் சமயத்தில் தன் வசத்தில் வைத்திருந்தானோ.. அவனைப் போல பல தமிழ் வணிகர்களும் அங்கு இருந்ததாக திரு பி.சுந்தரம், ஆந்திர பல்கலைக் கழகப் பேராசிரியர் 1963 இல் ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் ஒரு பெரிய கட்டுரையாகவே வடித்திருக்கிறார்.

தமிழர் குடியேற்றம் குழுமங்களாகத்தான் நடைபெற்றன. இந்தக் குழுமங்கள் வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் சங்கங்கள் வைத்து தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டதற்கான உதாரணங்கள் வெகுவாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் தமிழ் வணிகர்கள் கடல்கடந்த வெளிநாடுகளில் எண்பேராயம், ஐந்நூற்றவர் என்று தங்கள் சமூகத்துக்காகவே சங்கங்கள் அமைத்தவை பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் அந்தந்த நாடுகளில் கிடைத்துள்ளன. இந்தியத் திருநாட்டில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ள சங்கங்களைப் பற்றிய பழைய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய பெரிய நகரங்களில் உள்ள தமிழர்கள் எப்போதுமே சங்கம் வைத்துக் கொண்டு காலத்துக்கு ஏதுவாக செயல்பட்டது தெரியவருகிறது.

ஆனாலும் இப்படி பழையகாலத்தில் குடியேறிய தமிழ் மக்கள் தங்கள் வாரிசுகளைப் பற்றியோ, அவர்களுக்கு மொழிப்பற்று கொடுக்காமல் மறைந்தது பற்றியோ நாம் இனியும் பேசிக் கொண்டிராமல் தற்காலத்தில் இப்படி குடியேறும் தமிழ்க் குடும்பங்கள் மறவாமல் தம் பிள்ளைகளுக்கு தேனினும் இனிய தமிழறிவை எப்பாடுபட்டாவது புகட்டவேண்டும். அன்று அப்படிக் குடியேறிய தமிழர்கள் செய்த பிழையை நாமும் செய்யலாமா.. இன்று முனோர்களைச் சுட்டிக்காட்டி தவறு செய்துவிட்டார்களே என்று நாம் சுமத்தும் அவப்பெயர் நாளைய இளையதலைமுறையினரால் நமக்கும் ஏற்படக்கூடாது அல்லவா..

நாவுக்கினிய நம் இனிய தமிழ் மொழியை நம் செல்வங்களுக்குத் தந்து நாம் பெருமை கொள்வோம். இதை இந்தப் புத்தாண்டு உறுதிமொழியாக ஒவ்வொரு தமிழ்க்குடியின் தலைவனும் தலைவியும் மேற்கொண்டால் அதுவே அவர்கள் தம் வாழ்நாளில் மொழிக்குச் செய்த பெரும் சேவையாகும்..

வங்காளத்தின் இராணி பவானி - பவள சங்கரி


பவள சங்கரி திருநாவுக்கரசு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காள நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உரிமையுடன் உச்சரிக்கப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த பெயர் என்றால் அது ராணி பவானி என்பதுதான்.


தன்னுடைய நிர்வாகத் திறன், அரசியல் செல்வாக்கு மற்றும் தாராள குணம்  மூலமாக இன்றும் அந்த மக்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். ரமாகந்தா என்ற ராஜ்ஷாகியைச் சேர்ந்த ஜமீந்தாரின் மனைவி இவர். ஜமீந்தார் ரகுநந்தன் அவர்களின் மகன் தான் ரமாகந்தா. வடக்கு வங்காளத்தின் நட்டோர் சொத்துகளின் நிறுவனரின் தத்துப் பிள்ளை. ரமாகந்தாவின் திறமையற்ற நிர்வாகத்தினால் இவர்கள்  பல சொத்துகளையும் இழக்க நேரிட்டது. 1746ம் ஆண்டில் ரமாகந்தா இறந்த பின்பு, அவருடைய மனைவி, இராணி பவானி தேவி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ஜமீந்தாரினியாக பொறுப்பேற்றார்.  பின்பு   தம் பொறுப்புகளை உணர்ந்து  சொத்துகளையும் காப்பாற்றினார்.   ஒரு பெண் இத்துனை பெரிய பொறுப்பேற்பது நடைமுறையில் அரிதாக இருந்த காலம் அது. இக்காலத்திலும் கூட வெவ்வேறு வடிவங்களில் இது தொடரத்தான் செய்கிறது. ஆனால் ராணி பவானி தேவி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகத் திறமையாக அந்த பிரமாண்டமான சொத்துகளை நிர்வகித்து வந்திருக்கிறார். தன்னுடைய கட்டுப்பாடான தனிப்பட்ட வாழ்க்கை முறைமைகளாலும், மக்கள் மீது கொண்ட இரக்கம் மற்றும் தயாள குணத்தினாலும், அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டார் அவர். வங்காள நாட்டில், கோவில்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் சாலைகள் போன்றவைகள் கட்டுவதன் மூலமாக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். பல்வேறு நீர்த் தொட்டிகள் கட்டுவதன் மூலமாக, மிக முக்கியமான தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.  அத்தோடு பல கல்வி நிறுவனங்கள் கட்டியதன் மூலமாக கல்விப் பணியையும் செவ்வனே கவனித்து வந்திருந்தார்.



ராணி பவானி போக்ரா மாவட்டத்தில், தானா ஆடம்டிகியின், சாட்டின் கிராம் என்னும் இடத்தில் 1715ம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவருடைய வாழ்க்கை சற்று போராட்டம் நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. கணவர் ராமகாந்தா இறந்த 1746ம் ஆண்டிற்கு முன்பே இவர் அந்த சொத்துக்களின் பாதுகாவலராக, சொந்தக்காரராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.  அதற்குக் காரணம் ராணி பவானி தேவியின் நிர்வாகத் திறமையே. கணவர் இறந்த போது அவருக்குத் தாரா என்ற ஒரு மகள் மட்டும் இருந்திருக்கிறார். அவரை ரகுநாத லாகிரி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். சொத்துக்களை நிர்வகிக்கும் பணியையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஆனால் விதிவசத்தால் 1751ம் ஆண்டிலேயே, குழந்தை இல்லாத தம் இளம் மனைவியை விட்டுவிட்டு  திடீரென்று இறந்துவிட்டார் ரகுநாத லாகிரி. அதன் பின் மீண்டும் இராணி பவானி தேவியின் கைகளிலேயே அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தது. மீண்டும் தம் கடுமையான உழைப்பினாலும், நிர்வகிக்கும் திறனாலும் சொத்தை மேலும் பன்மடங்காகப் பெருக்கியுள்ளார். கோடிக்கும் அதிகமாக வருமானம் வரும் வகையில் அதனை செவ்வனே நிர்வகித்திருந்தார். தன்னுடைய 79வது வயதுவரை அதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.



ஆனாலும் பவானியின் வாழ்க்கை முறை மிக எளிமையும், ஒழுங்கு முறை மாறாத ஒன்றாகவுமே இருந்தது. அன்றாடம் விடியலில் தொடங்கும் அவருடைய பொழுது வெகு நேரம் காலை பூஜையில் கழியும்.  அதன் பிறகு பத்து பிராமணர்களுக்குத் தானே சமைத்து அவர்களுக்குப் பரிமாறிவிட்டு தன் காலை உணவு உண்ணவே மதியம் ஆகிவிடும். உடனடியாக அலுவலகம் வந்து அன்றைய நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கானத் திட்டங்களை வகுத்து,  சம்பந்தப்பட்டவர்களுக்கு அப்பணியை இட்டுத் திரும்புவார். பின் மாலை நேரங்களில் கதாகாலட்சேபங்களும், சுலோகங்களும், கேட்பது வழக்கம். அதன் பிறகு அவருடைய நிறுவனத்தின் மேலாளர் வந்து கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த பேச்சு வார்த்தைகளும், மற்ற தொடர்புகள் குறித்தும் பேசி அனுப்புவார். பின் ஆற்றங்கரைக்குச் சென்று மண் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபாடு முடித்து, கொஞ்சம் போல சிற்றுண்டி ஏதாவது உண்டு முடித்து மீண்டும் அலுவலகம் வந்துவிடுவார். இந்த நேரத்தில்தான் பார்வையாளர்களும், குடியிருப்பவர்களும் தங்கள் வேண்டுதல்கள் மற்றும் வருத்தங்களைச் சுமந்தபடி ஆறுதல் தேடி அம்மையாரிடம் வருவது வழக்கம். இவையெல்லாம் முடிய இரவு 10 மணிக்கு மேல் ஆனாலும் அதன் பிறகு குடும்பத்தில் உள்ளவர்களின் நலம் குறித்து விசாரித்துவிட்டே ஓய்வெடுக்கச் செல்வார். காசிக்குச் செல்லும் பெரும்பாலான மலைப்பாதைகளும், ஆன்மீகப் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான பல விடுதிகளும் இராணி பவானி அம்மையார் மூலம் கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வங்காளத்தில், தங்களுக்குச் சொந்தமான, கங்கைக் கரையிலிருக்கும் பல கிராமங்களின் நிலங்கள் ஏழை பிராமணர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பவானிப்பூர் தாரா அம்மன் கோவிலின் புணரமைப்பின் பெரும்பான்மையான பங்கு  இவருடையது.  போக்ரா மாவட்டத்தின் ஷேர்பூர் உபசில்லா எனும் இடத்தில்  பவானிப்பூர் என்ற சக்தி வழிபாட்டுத் தளமான அம்மன் கோவில் அமைந்துள்ளது. இவருடைய  50.42 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான வடிவிலான வீடு, இன்றும்  சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுற்றியிருந்த அகழிகளின் பெரும் பகுதி பூந்தோட்டம் மற்றும் பழத்தோட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.  1795ம் ஆண்டில் இராணி பவானி மறைந்த பின்பு அவருடைய வளர்ப்பு மகன் இராமகிருஷ்ணா இந்தப்பகுதியை ஆண்டு வந்தார்.






எனது இந்தியா:2014 - இன்னம்பூரான்

http://0310301.netsolhost.com/images/Tagore/tagore5.jpg

‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) என்ற தலைப்பில் ஒரு இந்தியர் அந்த நாட்டின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் கொண்டாடப்படுகிறார். அவர் தான் இன்றைய தலை மாந்தர்.

மினூ மஸானி என்ற தேசாபிமானி ‘நமது இந்தியா’ (Our India)  என்ற நூலை 1940ல் எழுதினார். மக்கள் விரும்பிப்படித்த நூல். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு தனது அபிமானங்களில் பல மாற்றங்களைக் கண்ட அவர் ‘இந்தியர்களாகிய நாம்’ (We Indians) என்ற நூலை 1989ல் எழுதினார்.  நானி ஆர்தஷேர் பால்கிவாலா என்ற கீர்த்திமான் ஒரு புகழ் வாய்ந்த வழக்கறிஞர், சிந்தனைச்சிற்பி. கோடீஸ்வரர். வருடந்தோறும் மத்திய அரசின் பட்ஜெட்டை மும்பை பொது மன்றத்தில் அலசுவார். அலை மோதும் கூட்டம். அவருடைய சொத்து முழுதும் சென்னை சங்கர நேத்ராலயாவை அடைந்தது. அவர் ‘மக்களாகிய யாம்’ (We The People) என்ற நூலை 1984ல் எழுதினார். ஒரே மூச்சில் மூன்று நூல்களையும் படித்தால் ‘எனது இந்தியா:2014’ வின் போக்குத் தென்படலாம். இவர்கள் இருவரின் வரலாறும், சிந்தனைகளும் நமக்கு நன்மை பயக்கும். அந்த வழி பயணிப்பதற்கு முன்னால் சில தெளிவுகள் பிறந்தால், அந்த நன்மையின் பயன் அதிகரிக்கும். அதற்கு நாம் 1857க்கு பிறகு பிரிட்டீஷ் ராஜாங்கத்தின் கலோனிய அரசு கோலோச்சியபோது, விடுதலை வீரர்களாகவும், மற்ற வகையிலும் சமுதாயத்தில் பிரமுகர்களாக இருந்தவர்கள் சிலரை பற்றி அறிந்து கொள்வது உதவலாம். பீடிகை முற்றிற்று.

‘எஃகு கட்டுமானம்’ என அறியப்பட்ட இந்தியன் சிவில் சர்வீஸ், இந்திய ரயில்வே, சட்ட அமைப்பு, ராணுவம் ஆகியவை கலோனிய அரசு இந்தியாவுக்கு விட்டுச்சென்ற சொத்து என்று வரலாற்றாசிரியர்களில் பலர் பட்டியலிடுகிறார்கள். அந்த எஃகு கட்டுமானத்துக்கு சிபாரிசு அனுமதியில்லை. அது ஒரு உரிமை. அதில் இடம் பெறுபவனின் திறனாற்றலும், உழைப்பும் தான் படிக்கல்கள். இந்தியாவால் முடிந்த அளவுக்கு அவன் கல்வித்திறனின் மேன்மை இருக்க வேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இளநிலை பட்டம் (arts :மானிட இயல், பொருளியல், மனித நேயம், தத்துவம் போன்றவை) அத்யாவசியம் என்று இதன் அடிப்படை மெக்காலே ரிப்போர்ட். இந்தியன் சிவில் சர்வீஸ்ஸின் ஆளுமையை புரிந்து கொள்ள இந்த ஒரு வரி போதும். ‘...அவர்களது உச்ச நிலை நிர்வாகத்தின் போது பெரும்பாலும் ஆங்கிலேயர்களும், பிரபல ஹிந்துக்களும், சில இஸ்லாமியர்களும் உள்ள ஐ.சி.எஸ்., உலகளவில் என்று சொல்லப்படாவிடினும், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் அதிகார மையம். ஆயிரம் நபர்கள் 30 கோடி மக்கள் மீது ஆட்சி செலுத்தினர். அவர்களின் வாழ்க்கையின் அங்கமாக அமைந்து விட்டனர்...’ .(உசாத்துணை: Dewey, Clive (1993): 3)
ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரிகளில் பலருக்கு ஆய்வுகளில் ஆர்வம் மிகுந்து இருந்தது. இன்றைய தொல்லியல், மானிடவியல், இலக்கிய ஆய்வு, ஆவணப்படைப்பு (District Gazeteers) என்றெல்லாம் கணக்கற்ற அதிகப்படி வேலைகளை இழுத்துப்போட்டுக் கொண்டனர். அடிப்படையில் மக்கள் பரிபாலனத்தில் சோடை போகவில்லை. அவர்கள் சம்பந்தப்பட்டவரை இந்தியா அடிமை நாடு. அந்த கட்டத்துக்குள் மக்கள் நலம் பேணவேண்டும். தற்கால நிலையையும், அவர்களது நிர்வாகத்தையும் எடை நிறுத்தால், இது நன்றாகவே புரியும். அடக்கு முறை, ஜபர்தஸ்து, விடுதலை தாபத்துக்குத் தண்டனை எல்லாம் இருந்தது. ஆனாலும், நம் விடுதலை தாபத்தை அவர்களில் பலர் புரிந்துகொண்டு இயங்கியதும் உண்மை.  சொல்லப்போனால், சர் வில்லியம் வெட்டர்பர்ன் (1859 பரிக்ஷை) 1889லி இந்திய நேஷனல் காங்கிரஸின் அக்ராசனராக இருந்தார். அது ஒரு சகாப்தம். நாம் அவர்களை வெறுக்கவும், நன்றி கூறவும் விஷயங்கள் உளன. மற்றொரு சமயம், காலம் தழைத்தால் அவற்றை கவனிப்போம்.


யார் இந்த ‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) இந்தியர்? அவர் தான் சத்யேந்திரநாத் தாகூர் (1842 -1923). இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து, கடும்போட்டியில் கெலித்து, அந்த ‘எஃகு கட்டுமானத்தில் 1863 ல் நுழைந்த  முதல் ஐ.சி.எஸ். அதிகாரி. 33 வருடங்கள் பம்பாய் மாகாணத்தில் பணி செய்து, சதாரா மாவட்டத்து நீதிபதியாக ஓய்வு பெற்றார். எழுத்தாளராகவும், பன்மொழி வித்தகராகவும், கவிஞராகவும், தத்துவ போதகராகவும் விளங்கிய அவர் ஒரு பெண்ணிய வாதி, சீர்திருத்தவாதி, பிரம்மோ சமாஜ், பிரார்த்தனா சமாஜ் போன்ற முற்போக்கு மையங்களுடன் உறவாடினார். துகாராமின் பக்திபாடல்களான ‘அபங்க’ கவிதைகளை மொழி பெயர்த்தார். தந்தை மகரிஷி தேவேந்திரநாத் தாகூரின் சுயசரிதத்தை எடிட் செய்தார். பெளத்த மதம் பற்றி எழுதினார். இந்தியாவின் முதல் தேசகீதமாகக் கருதப்படும் ‘mile sabe Bharat santan, ektan gaho gaan...’ (பாரத மழலைகளே! கோரஸ் பாடுவோம்...’) என்ற கவிதையையும், மற்றும் பல தேசீய கவிதைகளையும் படைத்த இந்த ஐ.சி.எஸ்.அதிகாரி, தீவிர தேசீயவாதியான பாலகங்காதர திலகரின் கீதா ரகஸ்யத்தை மொழி பெயர்த்தார். இது கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பதவியில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் தற்காலம் எதிர்க்கட்சித்தலைவரின் இலக்கியத்தை மொழி பெயர்க்க முடியுமோ, இந்த மாதிரி. லோகமான்ய திலகர் அவர்களை நாடு கடத்திய கலோனிய அரசு தன்னுடைய இந்த மேலதிகாரியின் கூட்டுறவிலும், தேசீயம் சார்ந்த பணிகளிலும் தலையிடவில்லை. அவர் தன்னுடைய தம்பி குருதேவ் ரவீந்தரநாத் தாகூருடன் இங்கிலாந்து பயணத்தில் கலந்து கொண்டு 1880ல் இந்தியா திரும்பினார். வங்காளத்தில் தன் பணியை செயலாற்றிக்கொண்டிருந்தார்.

இன்னம்பூரான்
01 01 2014

  • சித்திரத்துக்கு நன்றி:http://0310301.netsolhost.com/images/Tagore/tagore5.jpg
  • படத்தில் : ஜ்யோந்திரநாத் தாகூர் அமர்ந்து; வெண்புடவை அவர் மனைவி காதம்பரி.
  • ஐரோப்பிய உடையில்: சத்யேந்திரநாத். தழைந்த புடவையும் டைட் ப்லெளசுமாக, அவர் மனைவி ஞானனந்தினி. அந்த ஆடை அவருடைய டிஸைய்ன். அந்த காலத்தில் மிகவும் பாப்புலர் ஆனது. 
  • உசாத்துணை:
  • http://www.open.ac.uk/researchprojects/makingbritain/content/satyendranath-tagore
  • http://www.oxforddnb.com/view/printable/98035
  • Dewey, Clive (1993). Anglo-Indian attitudes: the mind of the Indian Civil Service. Continuum International Publishing Group. p. 3. ISBN 978-1-85285-097-5.
  • http://en.wikipedia.org/wiki/Satyendranath_Tagore
  • http://iastoppersstory.blogspot.co.uk/2012/05/satyendranath-tagore-first-indian-to.html



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

விஜய வருடப் புத்தாண்டுப் பிறப்பு 2014


                   
அன்புள்ள   மின் தமிழர்களே, என் தமிழர்களே இன் தமிழர்களே
அன்புள்ள நண்பர்களே ,சகோதர சகோதரிகளே,  அறிவிற் சிறந்த ஆன்றோர்களே   பத்தாண்டு காலமாய்  இணையத்திலும்  பிறந்தது முதல் இதயத்திலும்  இருந்து  அன்போடு பழகும் அன்பு உள்ளங்களே புத்தாண்டு கொண்டாட  வாருங்கள்.

2014 ம் ஆண்டு விஜய வருஷம்.  இந்த ஆண்டு நமக்கெல்லாம் நல்ல ஆண்டாய் அமையட்டும்.  நல்விளைவு தனை அளித்து தீவினைதனை தடுக்கும்   நல் வருடப் பிறப்பாய் இவ்வருடம் இருக்கட்டும்.  எல்லா நலன்களையும்,  எல்லா வளங்களையும் வித்யாசமின்றி எல்லோருக்கும் அளிக்கும்   புத்தாண்டாய் 2014 ம் ஆண்டு அமையட்டும்  என்று வேண்டி புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  ,எத்துணையோ பெரியோர்களின் ஆசிகள்,  சிறியவர்களின் வாழ்த்து மடல்கள் அத்துணை வாழ்த்துக்களும் ஆசிகளும்  பொய்யாமோ? நம்பிக்கைதான் வாழ்க்கை ஆனந்தம்..ஆனந்தம்..ஆனந்தமே ” .

காலம் ஒரு அருமையான ஆசிரியன், அந்த ஆசிரியன் கற்றுக்கொடுக்கும் பாடங்களை  உலகத்தில் வேறு யாராலும் கற்பிக்க முடியாது என்பது திண்ணம் . காலம் ஆட்டிவைக்கிறது, நம்மை தூங்க வைக்கிறது,விழிக்க வைக்கிறது, விழ வைக்கிறது , எழ வைக்கிறது. எல்லாச் செயல்களையும் செய்ய வைக்கிறது, நம்மைப் பண்படுத்துகிறது.

கால  ஓட்டம்  ,காலச் சுழற்சி  கனவேகமாய் சுழன்று கொண்டிருக்கிறது.  நிறுத்த முடியாத, மீண்டும்  பெறமுடியாத  காலங்கள்.அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது, மறந்து விடாதீர்கள் இப்போதும்,எப்போதும்  ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமாய், இந்த    நிமிடத்திலிருந்தாவது  ஏற்கெனவே  செய்த தவறுகளைக் களைந்து  இனி செய்யப்போகும்  செயல்களை  இன்னும் சிறப்பாய்  செய்யப் பழகுவோம்.  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இனி  வருங்காலம்  இனிதே அமையட்டும்.  இனிய  புத்தாண்டுக்  காலம் தொடங்கிவிட்டது இனிமையானதாக நம் வாழ்வை மாற்றிக்கொள்ள நாமும் அதனுடன் ஓடுவோம்.  எல்லோருக்கும் நல்ல வாழ்வு அமையட்டும்
பிறந்து வளர்ந்து நினைவு தெரிந்த நாள் முதலாய் புத்தாண்டு வாழ்த்து சொல்ல முன்னோர் கற்றுக் கொடுத்த  முத்தான நல்வழிகள் –வகுத்திட்ட முன்னேற்ற புதுவழிகள் முறையாய்க் கடைப்பிடிப்போம்.

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும்  பல நல்ல மாற்றங்களை நாம் எதிர்பார்க்கிறோம் ,மாற்றங்கள் தேவைதான் மாற்றங்களை ஏற்கும் மனம் நிச்சயமாய் வேண்டும், ஆனாலும் மாற்ற முடியாதவை  என்று பல உண்டு .   பெற்றதாயை பெற்ற தகப்பனை ,பிறந்த பொன்னாட்டை, தாய் மொழியை  மறக்கவும்  மாற்றவும்  முடியாது ,  மாற்றவும் கூடாது, அதேபோல முன்னோர்கள் கணித்த தீர்க்க தரிசனங்களை, மாற்றவும் கூடாது, ஆகவே புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்வோம்.
தாழ்வும் உயர்வும் கலந்ததுதான் வாழ்க்கை,முயற்சியும் ஊக்கமும் நிறைந்ததுதான் வாழ்க்கை.தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்யன் போல்  தளராமல் செய்கின்றோம் முயற்சியும் சுழற்ச்சியுமாய்  முடிவென்ன கண்டோமென யோசித்துப் பார்க்கின்றேன்.வாழ்வும் தாழ்வும் தராசுத் தட்டுகள் போல் உயர்ந்தும் தாழ்ந்தும்  மாறி மாறி  மேலும் கீழுமாய் போய் போய் வருகிறது.
முயற்ச்சிகள் மட்டும் தளராமல் மீண்டும் மீண்டும்  தலையெடுத்து  தன் சுழற்சிப் பாதையிலே  தளராமல் ஒட்டுமிந்த வாழ்க்கை ஓட்டம்.நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால்? இத்துணைநாட்கள் தாக்குப் பிடித்திருக்குமா..?
கை தூக்கிவிட நிச்சயமாய் ஒருவனுண்டு  என்கிற நம்பிக்கை உள்ளத்தில் அகலாமல்  ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆனந்தமாய் ஓடுகிறது வாழ்க்கை ,
” ஆனந்தம் ” என்கிற சொல்லைக் கேட்டாலே நமக்கெல்லாம் எவ்வளவு ஆனந்தம் .  வருகிறது? ஆனந்தம் பரமானந்தம்,என்னும் இரு வார்த்தைகளுக்கிடையே எவ்வளவு பொருள் மாறுபாடு இருக்கிறது தெரியுமா..?   முதலில் ஆனந்தம்  என்னும் சொல்லுக்கு பொருள் என்ன என்பதைச் சற்றே ஆராய்வோம்,

அடுத்தவர்களை ஆனந்தமாக வைத்திருப்பதே நமக்கு உண்மையான ஆனந்தத்தை அளிக்கறது என்று முற்றும் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்,ஆனால் இந்தப்  ப்ரபஞ்சத்தின் ரகசியங்களை, அன்பை, சாத்வீகத்தை, இறையை, மனிதத்தை , சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வமுடைய நம்மைப் போன்றவர்கள்.நினைக்கிறோம்.

அடுத்தவர்களுக்கு துன்பம்  அளித்து அவர்களுடைய நிம்மதியை,ஆனந்தத்தை கெடுக்காமலிருப்பதே ஆனந்தம் தான் என்று என்ணுவோம், உண்மைதான், அது முதல் நிலைதான் , பள்ளியில் பால பாடம் படிப்பதைப் போல, உண்மையான ஆனந்தம் அடுத்தவருக்கு உதவி செய்வதிலும், அடுத்தவர் துன்பம் போக்குதலிலும், அடுத்தவரிடம் இதமாக, பணிவாக, ஆத்மார்த்தமாகப் பேசி அவர்களை நெகிழச்  செய்வதும்.

அவர்களின் மனதின் உள்ளே அன்பெனும் பாதை அமைத்து உள்ளே சென்று அவர்களின் ஆத்மாவோடு நம் ஆத்மாவைக் கலக்கச்செய்வது,அதனால் வரும் சமத்துவத்தினால் ஏற்பட்ட பரிசுத்தமான உள்ளத்தோடு உறவாடி அவர்களின் இதயத்தில் இருக்கும் இறைவனோடு நம் உள்ளத்தில் இருக்கும் இறைவனை கலந்துரையாட விடுவது , மனிதம் தூண்டி, நாமும் அவர்களும்ஒருமித்த நிலையில் இருப்பது இவைதான் ஆனந்தம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து,

நமக்கு எப்போதெல்லாம் உண்மையான ஆனந்தம் வருகிறது என்று பார்த்தால் நம் வாழ்வில் சில நல்ல குறிக்கோளுடன் செயல் படும்போதும், அதேபோல், உலக நலன் கருதும் ஒரு நல்ல ஆன்மீக வாதியை, நாட்டின் மேல் உண்மையான அக்கறை செலுத்தி, அதற்காகப் பாடு படுபவரை, அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு செயல்படுபவரை,பொதுமக்களின் நலன் கருதி செயல் படும்
தலைவர்களை, மனித நேயத்தை மதித்து பாரபட்ஷமில்லாமல் நடந்துகொள்ளும் மனிதாபிமான ஆர்வலர்களை, அனைத்து உயிர்களையும் மதிக்கும்  பெரியோர்களை,தன்னைப்போல பிறரையும் எண்ணி அவர்களின் துன்பத்தைப் போக்க தன்னாலான செயல்களை செய்யும் பலரை,எல்லா மக்களையும் தன் மக்கள் போல் நேசிக்கும் மனிதர்களை இவர்களையெல்லாம் கண்டால் உண்மையான ஆனந்தம் வருகிறது,
சாதாரணமாக உதவி செய்யாவிட்டாலும் ,அடுத்தவருக்கு துன்பம்  விளைவிக்காமல் இயல்பு வாழ்க்கையில் வாழும் பலரைக் கண்டாலும் உண்மையான ஆனந்தம் வருகிறது,இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். \

ஆனால் உண்மையாகவே  நாமும் ஆனந்தமாய் இருந்துகொண்டு அடுத்தவர்களையும் ஆனந்தமாக வைத்திருக்க இந்தப் புதுவருடம் நமக்கெல்லாம் சக்தியை அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ






Monday, December 30, 2013

தனிமை இரக்கமா அல்லது இனிமையா - சிவகாமிப் பாட்டியின் தத்துவக் கீறல்கள்


பேரா மின்னம்பலக் கூத்தன்
(டாக்டர்.நாகராசன் வடிவேல்)

சிவகாமிப் பாட்டி:  பேராண்டி அப்படிக் கணினியில என்னத்தப்பா தோண்டித் தோண்டிப் பாக்குறே

பேராண்டி:  பாட்டி பாரதியாரின் தனிமை இரக்கம் என்ற கவிதையையும் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற சினிமாப் பாட்டும் தோண்டிக்கிட்டிருக்கேன் பாட்டி

பாரதியாரின் தனிமை இரக்கம் பாடல்

குயிலனாய்! நின்னொடு குலவிஇன் கலவி
பயில்வதில் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைந்தால் 

பாவியேன் நெஞ்சம் பகீரெனல் அரிதோ ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் ! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 

வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயல்யென் இயம்புவல் சிவனே
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?

(இப்பாடல் பாரதியாரின் குறிப்புகளோடு மதுரை 'விவேகபாநு ' பத்திரிகையில் 1904ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.)

தனிமையிலே இனிமை காண முடியுமாச் சினிமாப் பாட்டு



பாட்டி:  எங்க கால இளந்தாரியோட அச்சில் ஏறின முதல் கவிதையாச்சே அது.  மனைவியைவிட்டுப் பிரிந்து கல்விக்காகக் காசிக்குப் போய்த் திரும்பிவந்தபிறகு எழுதின விரகதாபம் மிக்க காதல் பாட்டாச்சே பேரா.  ஆனா ஒரு வித்தியாசம் என்னன்னா தமிழ்க் கவிஞர்கள் பொதுவாகப் பொண்டுகதான் பிரிவைத் தாங்கமுடியாமல் நோய்வாய்ப்பட்டு நொந்ததாப் பாடுவாங்க.  இங்கே ஒரு இளைஞர் விரகதாபத்தை வெளிக்காட்டியிருக்கார் பாரு.  தமிழ்நாட்டு ஆண்பிள்ளைகள் திருமணமான மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் போய்விடுவது வழக்கம் என்றாலும் ஏதோ இந்தப் பெண்கள் பிரிந்த கனவனைப் பற்றிமட்டும் கவலைப்படுவதுபோலக் காட்டிப் பெண்களைக் கொஞ்சம் அவர்கள் ஆளுமையை மட்டம்தட்டியிருப்பதைப் பாரு

அதுபோலக் காதலில் பிரிந்தவர்களும் கண்ணீர்வடித்துக்கொண்டே பாடுவது சினிமாவில் சர்வ சாதாரணம்

http://www.youtube.com/watch?v=DWD9Unxdiow 

பேரன்:  அப்படீன்னா பாட்டி தனிமை என்பது கொடுமையானதில்லை அப்படீன்னா சொல்லவர்றீங்க

பாட்டி:  தமிழ்நாட்டில் குமுகக் குடும்ப உறவு ஒரு பெண்ணோ ஆணோ தனித்திருக்க வாய்ப்பளிப்பதில்லை.  பிறப்பிலிருந்து இறப்புவரை ஒரு பெண் மற்றவர்கள் மத்தியில்தான் வாழவேண்டும்.  தனக்கென்று ஒரு தனிமையை அமைத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் வாழவேண்டும். அதேபோல் ஆணும் அலுவல்காரணமாக வெளியே போகும்போதும் குடும்பத்தை விட்டுத் துறவு கொள்ளும்போது மட்டுமே தனிமை கிடைக்கும்.  எனவே தனிமை கொடிது என்ற கருத்து பரவலாக இருந்தாலும் அது சரியல்ல பேராண்டி.

தனிமை இல்லாமல் காதல் வளராது. தனிமை இல்லாமல் உயிரினங்கள் வாழமுடியாதுடா பேராண்டி.  தனியாக இல்லாமல் குழந்தை வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியாது.  தனிமை இல்லாமல் கவிஞனும் கலைஞனும் படைப்பாளியாக ஆகமுடியாது.  ஆகவே தனிமை என்பது அன்பு இல்லாமை அல்ல அன்பின் தோழனே தனிமை பிரிதலும் கூடலும் வாழ்வின் சுழற்சியாகும் ஒன்றில்லாமல் பிரிதொன்றில்லை..

தனியாக இருக்கக் குழுவிலிருந்து பிரியவேண்டியதில்லை.  ஆன்மாவின் குரலுக்குச் செவி சாய்க்கக் கிடைக்கும் கனநேரம் தனிமைக்குப் போதும் அந்தக்கனத்தில் ஒருவன் தன் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்மானிக்க முடியும்.  தனிமையைக் கண்டு அஞ்சி நிற்கவோ மற்றவர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று மருகி நிற்கவோ தேவையில்லை.  நீ தனியாக இல்லாமல் இருந்தால் உன்னைப்பற்றி உணரமுடியாது. அப்போது  தான் யார் என்றே தெரியாத ஒரு வெற்றிடத்தில் ஒருவன் வாழவேண்டிய நிலை உருவாகிவிடும்.

பேராண்டி:  என்ன பாட்டி ஒரே எம்டன் குண்டுமாதிரி தத்துவங்களை எடுத்து வீசறே.  தனியா இருக்கனுன்னா குடும்பத்தையும் உறவையும் பிரிஞ்சு காசிக்கோ இமயமலைக்கு ஓடனும்னு எல்லாரும் சொல்லுறாங்க.  நீ இப்படி எதிர்மாறாச் சொல்லுறியே பாட்டி

பாட்டி: பேராண்டி தனிமை என்பது மனம் சம்பந்தப்பட்டது.  மனப்பழக்கத்தினால் குடும்பத்தில் வாழ்ந்துகொண்டே தனிமையை அனுபவிக்க முடியும்.  அதைத்தான் குடும்பப் பெண்கள் தாங்கள் பெற்ற பயிற்சியால் இப்பவும் செய்துகொண்டிருக்கிறார்கள்

பேராண்டி;  பாட்டி மனம் என்பது ஒரு குரங்கு அல்லவா அதை கட்டுப்படுத்துவது எப்படி


பாட்டி:  மனம் என்பது படம் ஓடும் திரை போன்றது. மனம் ஐம்புலன்களையும் இயக்கும் ஐம்பொறிகள் மூலம் தொடர்ந்து செயல்படக்கூடியது.  படமே ஓடாத வெற்று திரை தனிமையாகாது. ஐம்பொறிகளில் கண், காது வாய் ஆகிய பொறிகளை அடக்கி மனதைக் கட்டுப்படுத்தினால் திரையில் கெட்ட காட்சிகள் தோன்றாது எனவே பொறிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒரு வாதம்,  ஆனால் மனதைக் கட்டுக்குள் கொண்டுவராமல் பொறியைமட்டும் மூடினால் என்ன பயன்.  மனதைக் கட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சி மேற்கொண்டு மனதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதே உண்மையான வாழ்க்கைத் தத்துவம்

பேராண்டி:  மேலை நாட்டு உளவியல் அறிஞர்களும் இதையேதான் சொல்லுறாங்க.  ஆனா மனம் பொல்லாதது.  பிறந்த குழந்தைக்கு அம்மாமேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் அதை அடக்கி அடக்கி அது மனதின் ஆழத்தில் சில பிறழ் உணர்வுகளை வளர்த்துக்கொள்வதே அவனுடைய பிற்கால வாழ்க்கை சிக்கல்களுக்குக்கு அடிப்படை என்று ஃப்ராய்டு என்ற அறிஞர் சொல்லியிருக்கார் பாட்டி.  அதுபோலவே யங் என்ற உளவியலாரும் மனம் கட்டுப்பாடற்றது என்று சொல்லியிருக்கார்

பாட்டி:  போடா போடா பேராண்டி ப்ராடு ஜிங்கு ஜங்குன்னு என்னென்னமோ உளர்றியே.  அதைவிட்டு நம்ம தத்துவங்கள் சொல்றதைக் கொஞ்சம் தெரிஞ்சுக்கோ.  அவய்ங்க ஐம்பொறிகள் ஐம்புலனோட நிறுத்திக்கிட்டாங்க.  நம்ம அறிஞர்கள் ஐம்பொறிகளும் மூடி திறக்கும் கதவுகள் என்றும் அதை இயக்க மூன்று உள்ளுறுப்புகள் இருப்பதாகச் சொல்லியிருக்காங்க.  மனம், புத்தி சித்தம் என்ற மூன்று உள்ளுறுப்புகள் ஐம்பொறிகளை இயக்குவதாக நம் தத்துவங்கள் சொல்லுதுடா பேரா.  மனம் என்பது கட்டுக்குள் இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வினாடிக்கு ஒருமுறை மனத்திரையில் படத்தை ஓட்டிக்கொண்டே இருக்கும்.  புத்தி மட்டுமே நான் யார் என அகந்தையை உருவாக்கி அதற்கேற்பக் காட்சிகளை மாற்றியமைக்கும்.  சித்தம் என்பது அகந்தையை நீக்கி மனிதன் முழுமையை அடைய உதவும்.  இந்த மூன்று உள்ளுறுப்புகளைப்பற்றி உங்க ப்ராடு ஏதாவது சொல்லியிருக்காரா பேராண்டி

பேராண்டி:  பாட்டி இப்புடி வெடுக்குன்னு கேட்டா நான் எப்படிப் பதில் சொல்றது.  கொஞ்சம் டைம் குடு பாட்டி நம்ம அறிஞர்கள் யாராவது வந்து உனக்குப் பதில் சொல்லுவாங்க

பாட்டி.  அப்புடீன்னா சரி.  இந்த மூன்று உறுப்புகளும் சரியா இயங்கப் பயிற்சி வேணும் பேராண்டி.  அந்தப் பயிற்சி குடும்பத்திலும் குமுகத்திலும் எளிதில் கிடைக்கும் பேராண்டி.  குடும்பத்தில் நல்ல சிந்தனைகள் இருக்கவேண்டும் என்று வீட்டில் கடவுள் வைத்து வணங்குவது நம் வழக்கம்.  குடும்பக் கடவுள்முன் தனிமையில் நின்று வேண்டுவது ஒரு அன்றாட பழக்கம் அல்லவா பேராண்டி.  மேலும் மனதைக் கட்டுப்படுத்த நோன்புகள் நியமங்கள் என்று குடும்பத்தில் பல வழிமுறைகள் உண்டு.  அவையெல்லாம் மனதைப் பக்குவப்படுத்தி நல்ல சிந்தனை வளர உதவுகிறது.  விரதம் இருப்பதும் நோன்பு நோற்பதும் பிரசாதமாக இனிப்பு வகைகள் உண்பதும் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது நம் வாழ்க்கைமுறையின் சிறப்புடா பேராண்டி.  மனதை மேலாண்மை செய்யும் பயிற்சியில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுவதும் அதிகத் திறமை உடையவர்களாக இருப்பதும் நம் சமுதாயத்தின் சிறப்பு

பேராண்டி: சரி பாட்டி மனதை அடக்கப் பல வழிமுறைகள் சரி புத்தி பற்றி என்ன தத்துவம் கைவசம் இருக்கு அதையும் கொஞ்சம் சொல்லு பாட்டி

பாட்டி; பேரா புத்தகம் படிப்பது மட்டும் புத்தியை வளர்க்காது.  ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்குதவாது.  சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான கருத்துகளைக் கைவசப்படுத்தி அவ்வப்போது எழும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனே புத்தி.  அந்த அடிப்படையில் பார்த்தால் பெண்களே உண்மையில் ஆண்களைவிட அதிபுத்திசாலிகள்.  ஆனாலும் கனவனை மகிழ்ச்சியில் ஆழ்த்த அவனைவிட தான் மட்டம் என்று காட்டிக்கொள்வதன்மூலம் அவர்கள் புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் மறைத்துக் கொள்கிறார்கள்.  ஒங்க தாத்தா இருக்காரே அவரு எவ்வளவு புத்திசாலி என்று எனக்குத் தெரியாத என்ன?  அவருகிட்ட கொஞ்சம் அறிவுக்குறைவாக இருப்பதாக ஒரு நாடகம்போட்டுத்தானே அவரை  உயர்த்திக்காட்டமுடியும்.  அப்புடித்தானே எல்லாப் பெண்களும் நடந்துக்குறாங்க.

பேராண்டி:  அது சரி.  விட்டா இப்படியே அளவில்லாமல் அளந்துடுவியே பாட்டி

பாட்டி:  பேராண்டி மனத்தளவிலும் புத்தி அடிப்படையிலும் சிந்தனையிலும் பெண்கள் சிறந்தவர்கள்.  அதனாலேயே பெண்வழி சமுதாயங்கள் சிறப்படைந்து விளங்கின.  ஆண்வழி சமுதாயங்கள் பெண்ணை அடக்குவதன்மூலமே தாங்கள் உயர்வுபெறமுடியும் என்று பல கட்டுப்பாடுகளை உருவாக்கிப் பெண்களை அடிமை படுத்தி வாழ்கிறார்கள்.  பெண்கள் எந்த நிலையிலும் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய இடைவெளியில் கிடைக்கும் நேரத்தைக் கொண்டு தனிமையில் தங்கள் மனம் புத்தி சிந்தனையை வளர்த்துக்கொண்டு இந்த வையகத்தை வாழவைக்கிறார்கள்.  நீ சொன்னியே ப்ராடுன்னு ஒருத்தர் குழந்தை அம்மாமேல் ஈர்ப்பு இருப்பதை மறைப்பதால் பல சிக்கல்கள் உருவாகுவதாகச் சொன்னார் என்று சொன்னாயே நம்ம ஊரில் பிள்ளையார் அவங்க அம்மா மாதிரியே ஒரு பெண்ணைத்தான் மணமுடித்துக்கொள்வேன் என்று ஆற்றங்கரயில் குளக்கரையில் மரத்தடியில் பெண்கள் கூடும் இடங்களில் ஒற்றைக் காலில் நின்றார்.  கோவில்களில் பாலினக் கவர்ச்சியை ஊட்டும் சிற்பங்களைத் தாண்டித்தான் இறைவனைத் தரிசிக்க நம்மவர்கள் ;போகிறார்கள்.


நம்ம நாட்டில் மன நோயாளிகள் வக்கிர புத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு காரணம் நாம் தனிமையில் யார் என்ற தேடலைத் தொடர்ந்து மேற்கொண்டு நல்லது எது கெட்டது எது என்று அறிந்து வாழத் தேவையான பயிற்சி கிடைப்பதால் என்பதைப் புரிந்துகொள் பேராண்டி.

தனிமை இனிமையானது தனிமை வெறுமையானதல்ல.  தனிமை அன்புக்குத் தோழன். தனிமை காதலுடன் கைகோர்த்து உலவும் இணை  தனிமை ஒரு உண்மை விளம்ப்பி : .  தனிமையே உன்னை நீ நினைப்பதைவிட அதிக உயரத்துக்கு உன்னை இட்டுச் செல்லும்.கருவி  பயிற்சி இருந்தால் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனிமை காண முடியும்.  இது நம் நாட்டு தத்துவம் பேராண்டி.  புரிஞ்சு நட. நல்வாழ்வு வாழ்வாய்

பேராண்டி:  சரி பாட்டி அப்படியே செய்யுறேன்



இரண்டு திருக்குறட்பாக்களுக்கான புதிய சிந்தனைகள்

கி.காளைராசன்

தெய்வந் தொழாள்? 
(புதிய சிந்தனை)

ஐயன் திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணைநலம்‘ என்ற அதிகாரத்தில்
“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)
என்று குறள் கூறியுள்ளார்.

கணவனை வணங்கும் குணமுடைய பெண், கணவனுக்கும் மேலான தெய்வத்தை வணங்காததற்கான காரணம் என்ன?  என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இக்குறளுக்கு,
தெய்வம் தொழா அள் = தெய்வத்தை வணங்க மாட்டாள்
கொழுநன் தொழுது எழுவாள் = கணவனை வணங்கி எழுந்திருப்பாள்
பெய் எனப் பெய்யும் மழை = மழை பெய்யவேண்டும்  என்று   சொன்னால் மழை பெய்யும்

“தெய்வத்தை வணங்கமாட்டாள், கணவனைத் தொழுது எழுவாள், அவள் ‘பெய்‘என்று சொன்னால் மழை பெய்யும்“ என்பது பொருள்.

பொழுது = அதிகாலை
இடம் = இல்லம்

இவள் ஏன் தெய்வத்தை வணங்கவில்லை? என்பதற்கான காரணத்தை மட்டும் ஒவ்வொரு உரையாசிரியரும்  ஒவ்வொருவிதமாக விளக்கம் கூறியுள்ளனர்.

1) தெய்வத்திற்குப் பதிலாகத் தினந்தினம் காலையில் கணவனை வணங்கி எழுந்திருப்பாள் என்றும்,
2) கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடுவாள் என்றும்,
3) வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் என்றும்,
4) பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி என்றும்,
5) பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் என்றும்
6) தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதுபவள் என்றும்
விளக்கம் கூறியுள்ளனர்.

ஆனால், தெய்வத்திற்குப் பதிலாகக் கணவனை ஏன் வணங்க வேண்டும்?
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கை விட மேலானதாக ஏன் கருத வேண்டும்?
என்பதற்கான காரணத்தை உரையாசிரியர்கள் குறிப்பிடவில்லை.


ஒரு பெண் தெய்வத்தை வணங்கமாட்டாள் என்று திருவள்ளுவரா குறிப்பிடுகிறார்?  இவ்வாறு வள்ளுவன் சொன்னால், எந்தப் பெண்ணும் எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கமாட்டார்களே?

புதிய சிந்தனை
இக் குறளில்,
தெய்வம், பெண், கொழுநன், மழை என்ற பெயர்ச் சொற்களும்,
தொழுதல், எழுதல், பெய்தல் என்ற வினைச் சொற்களும் பயன் படுத்தப் பெற்றுள்ளன.


‘எழுவாள்‘ என்று வினைமுற்று உள்ளதால், இப்பெண் எழுவதற்கு முன் துயில் நீங்கி எழுந்துள்ளாள் என்பது பொருள். துயில் எழுந்த இந்தப் பெண், தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுதுள்ளாள்.
எனவே இவள் அருகிலேயே கணவன் துயில்கொண்டுள்ளான் என்பதும் பொருள். எனவே, இந்தப் பெண் தூங்கி எழுவதற்கு முன்பாகக் கணவனுடன் சேர்ந்து படுத்துள்ளாள் என்பதும் பொருளாகிறது.

இரவில் கணவனுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய பெண் காலையில் எழும்போது தன்னுடைய உடற்தூய்மை கருதித் தெய்வத்தைத்   தொழமுடியாத நிலையில் இருப்பாள். எனவே, தெய்வத்திற்கு அடுத்தநிலையில் உள்ள தன் கணவனைத் தொழுது எழுவாள்.  கணவனைத் தொழுது எழும் இப் பெண்ணின் வயிற்றில் ஓர் உயிர் தோன்றி வளர்கின்றன காரணத்தினால், உலகில் தோன்றியுள்ள  உயிர்கள் எல்லாம் வளர்வதற்குக் காரணமான மழையானது இவளது வேண்டுகோளுக்கு இரங்கும் என்பது பொருளாகிறது.


குறளுக்கான உரை

இரவில் கணவனுடன் ஒன்றாய்ச் சேர்ந்து படுத்திருந்த பெண்ணானவள், காலையில் எழுந்திருக்கும் போது,  அவளது உடற்தூய்மை கருதித் தெய்வத்தை வணங்காமல், தனது கணவனை வணங்கி எழுகின்றாள்.  உலகில் தோன்றியுள்ள
உள்ள உயிர்கள் எல்லாம் வளர்ந்து நன்கு வாழ்வதற்குக் காரணமானது மழை.  இம்மழையானது, இவள் வயிற்றில் தோன்றியுள்ள உயிரும் நன்கு வளர்ந்து வாழும் பொருட்டு, இப் பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பெய்யும் என்பது கருத்து.

புத்தாண்டில் புதிய சிந்தனைகள் பிறக்கட்டும்.
வள்ளுவன் வகுத்த வழியில் வாழ்ந்திடுவோம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


அன்பன்
கி.காளைராசன்
-------------------------
(கற்புக்கரசி கண்ணகி கோவலனுடன் சேர்ந்திருக்காத காரணத்தினால் மழையை வேண்டவில்லை.  மாறாக  அவள் அழைத்தவுடன் அக்கினி வந்தது என்பதும், தனித்திருக்கும் பெண்தெய்வங்களின் ஜடாமுடியானது அக்கினி வடிவத்தில் இருப்பதும் சிந்தனைக்கு உரியன)

வாசிக்கப் பெற்றவை

“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)

கலைஞர் உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

மு.வ உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது,  'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.
Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say,  "let it rain," it will rain.
----------------------------

வாசிக்கப்பெற்ற குறள்கள்

தெய்வம் 43, 45, 50, 55, 619, 702, 1023

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை (43)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

தெய்வத்தா னாகா  தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (619)

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்  (1023)


தொழுதல் 55, 260, 268, 828, 970, 1033

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும் (260)

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும் (268)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து (828)

இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு (970)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர் (1239)


மழை  12, 15,  55,  1239

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை  (12)

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை (15)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் (1239)