தேமொழி
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வம் என்ற சொல்வழக்கினை செயல்படுத்த எங்கெங்கும் கோயில்களை அமைப்பது தமிழர் மரபாக இருக்கிறது. மலை உச்சிகள், கடற்கரைகள், குளக்கரைகள், ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, நடைபாதைகளையும் நாம் விட்டு வைத்ததில்லை.
தமிழக மக்கள் தொன்று தொட்டு வழிபாட்டில் உள்ள தெய்வங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து வந்து பரவிய மதங்களுக்கும் வழிபாட்டிற்காக ஆலயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஆலயங்கள் கலாச்சார மையமாக மட்டுமின்றி மானுடவியலின் பிரதிநிதியாக மனிதர்களின் வாழ்வியல் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. ஓரிடத்தின் கோயில்களின் தன்மையைக் கொண்டு அங்கு வாழும் மக்களை, அவர்களது பின்புலத்தை நாம் அறியலாம். காட்டாக, இந்தியக் கடற்கரையோர நகர்களில் வந்திறங்கிய மேலைநாட்டு கிறிஸ்துவர்களின் தாக்கத்தினாலும் போதனைகளாலும் அம்மதத்தைத் தழுவிய கடல் சார்ந்து வாழ்ந்த மீனவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் அவர்கள் வணங்கும் தேவாலயங்களையும் நாமறிவோம்.
அது போல நம் நாட்டின் மதங்களும் கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ளதை அங்குள்ள புத்த மத வழிபாட்டினாலும், இந்து மதக் கோயில்களாலும் அறிவோம். அவ்வாறு பரவிய இந்துமதத்தின் கோயில்களைக் கொண்டும் அங்கு சென்று வாழ்ந்த இந்தியர்களின், தமிழர்களின் பின்னணியையும் அறியலாம். கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோயில் உருவாகிய காலத்தில் அங்கு வாழ்ந்த இந்தியர்களின் பின்னணி, இக்கால மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் பின்புலம் போன்றவற்றை அவர்கள் வழிபடும் கடவுள்களின் கோயில்களைக் கொண்டும் நாம் அறிந்து கொள்ளலாம்.
மலேசிய கோயில்கள்
தமிழர்களின் சிறுதெய்வங்களும் பெருந்தெய்வங்களும்:
தமிழகத்தின் சமய வளர்ச்சியில் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடபுலத்திலிருந்து வந்து பரவியிருந்த சமண புத்த மதங்கள் மறைந்து, மற்றுமொரு வடபுலத் தாக்கத்தினால் நலிவடைந்திருந்த இந்து மதம் அரசர்களின் ஆதரவு பெற்று மறுமலர்ச்சி அடைந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த பண்டைய வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் உள்ளிழுத்து மறுமலர்ச்சி அடைந்த இந்துமதம் தன்னை உறுதிப் படுத்திக் கொண்டது.
பண்டைய தமிழர்களின் வழிபாடு தங்களது மூதாதையரை தெய்வங்களாக வணங்குவதாக இருந்தது. இந்த ஆதிகால வழிபாட்டுத் தெய்வங்கள் பிற்காலத்தில் சிறுதெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டனர். இந்த மரபு வழி தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புற பாமர மக்களின் பண்பாடாக இருக்கிறது. மாறாக, பெருந்தெய்வங்கள் வேதங்கள் கூறும் புராண தெய்வங்களாவர். சுருக்கமாகக் கூறின், சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களென்றும் அறியப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டின் அடியையொற்றி இவை முறையே நாட்டுப்புற சமயமென்றும், பெருஞ்சமயமென்ற பிரிவுகளாகவும் வழங்கப்பட்டு வருகிறது (முனைவர் ஒ.முத்தையா, தமிழ் இணையக் கல்விக் கழகம்).
கிராமங்களை இருப்பிடமாகக் கொண்டு, நாட்டுப்புற மக்களின் மரபு வழி வந்த சிறுதெய்வங்கள் (1) ஒரு தனிப்பட்ட வீட்டிற்கு உரிய தெய்வமாகவோ, (2) ஒரு குலத்திற்கு உரிய தெய்வமாகவோ (ஒரே மூதாதையர் வழி வந்த குடும்பக்களுக்குரிய), (3) ஓர் இனத்திற்குரிய தெய்வமாகவோ (சாதிப்பிரிவு), (4) ஊர்த்தெய்வமாகவோ அல்லது (5) பெரும்பான்மையோர் வணங்கும் (வெகுசனத் தெய்வம் என்றும் குறிப்பிடப்படும்) தெய்வமாகவோ இருப்பர்.
இச்சிறு தெய்வங்களில் பெரும்பாலோர் பெண்தெய்வங்களாவர். பெண்தெய்வங்களிலும் தாய்தெய்வங்களே அதிகம், கன்னித் தெய்வங்களும் உண்டு. ஆண் தெய்வங்களை விட பெண்தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர், இந்த நம்பிக்கையை "சக்தி இருந்தால் செய், சக்தி இல்லையேல் சிவனே என்று இரு" என்ற பழமொழியின் வாயிலாகவும் அறியலாம் என்கிறார் முனைவர் ஒ.முத்தையா.
வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாகவும், வலிமைக்கும் திறமைக்கும் குறியீடாகவும் போற்றப்படுபவர் பெண் தெய்வங்கள். வணங்கினால் நன்மையும், வணங்காவிட்டால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் வழிபடப்படும் பெண் சிறுதெய்வங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள்.
மழைத்தெய்வமாக, மழை தந்து உயிர்வளங்களைக் காப்பதாகக் கருதப்பெறும் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன் என்ற பல்வேறு பெயர்களிலும் அறியப்படுவதுண்டு. தமிழகம் முழுவதும் மாரியம்மன் வழிபாடு பரவி இருந்தாலும் தென் மாநிலங்களில் மாரியம்மன் வழிபாடு அதிகம்.
சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையாக குறிப்பிடப்படும் காளியம்மனின் கோயில் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறுமளவுக்கு அடுத்துப் பரவலாக வணங்கப் படும் ஒரு தெய்வம் காளியம்மன். வேதங்கள் குறிப்பிடும் கோப ஆவேசம் கொண்டு தீயவர்களைத் தண்டிக்கும் காளியே இந்தக் காளியம்மன் ஆவார். சிறுதெய்வங்களில் ஆண் தெய்வங்கள் சிறுபான்மையினரே. இவர்கள் பெரும்பாலும் காவல் தெய்வங்களாக ஊருக்குப் புறத்தே கோயில் கொண்டிருப்பர். ஊர்த் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வணங்கப் பெறும் ஆண்தெய்வங்களில் (1) முதன்மை தெய்வங்களும், அவர்களுக்கு உறுதுணையான உள்ளோர் பரிவாரத் தெய்வங்களாகக் கருதப்படும் (2) துணைமைத்தெய்வங்களும் உண்டு. முதன்மை தெய்வங்களாக அய்யனார், முனீஸ்வரன், சுடலை மாடன், அண்ணன்மார் சாமி, மதுரைவீரன், கருப்பசாமி போன்ற தெய்வங்கள் வணங்கப் படுகின்றனர். கூடமுடைய அய்யனார், செங்குளத்து அய்யனார், கொக்குளத்து அய்யனார் என்ற பெயர்களில் வணங்கப் படும் ஐயனார் வழிபாடு தமிழக கிராமங்களில் பரவலாக அதிகம் உண்டு. மாயாண்டி, மாடசாமி, சடையாண்டி போன்றோர் துணைமைத் தெய்வங்களாவர்.
குளம் ஏரிபோன்ற நீர்நிலைகளில் அருகில் மிகச்சிறு கோயில்களில், அல்லது ஊருக்கு வெளியே கொடிய ஆயுதங்கள் கையிலேந்தி மண்குதிரை போன்ற வாகனங்களுடன்இருக்கும் சிறுதெய்வங்களின் தோற்றம் அச்சம் தருவதாகவும், உருவத்தில் பெரியவையாகவும் இருக்கும். பூசாரிகள் கொண்டு பூசைகள் நிகழ்த்தி, பலி கொடுத்து வணங்கப்படும் வழிபாட்டு முறைகள் கொண்ட சிறுதெய்வங்கள் என்போர் தோன்றி, வாழ்ந்து, மக்களைக் காத்து, அவர்கள் நலனுக்காக தங்கள் இன்னுயிரை விட்டவர்கள் ஆவர்.
காலப்போக்கில் சிறுதெய்வங்கள் பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வங்களாக மாற்றப்பட்டு பிறகு பெருந்தெய்வங்களின் வடிவமே இவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாட்டுப்புறச் சிறுதெய்வ வழிபாடுகளில் நிகழ்ந்து வரும் இந்த மாற்றங்கள் தெய்வங்களின் மேல்நிலையாக்கம் (sanskritization) எனச் சுட்டப்படுகிறது. காட்டாக, 'மாரியாயி' என்ற சிறுதெய்வம், 'மாரியாத்தா' என்ற பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வமாக மாறுதலடைந்து, பிறகு 'ஸ்ரீகௌமாரியம்மன்' என்ற பெருந்தெய்வமாக மேல்நிலையாக்கப்படுகிறது. அது போன்றே 'காளியாயி' என்ற சிறு தெய்வம், 'காளியாத்தா' என்று மாற்றமடைந்து, பிறகு 'ஸ்ரீகாளீஸ்வரி' என்ற பெயருடன் பெருந்தெய்வமாக பெரும்பான்மையினர் வணங்குவதற்கு மேல்நிலையாக்கம் பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து ஆகம முறை வழிபாட்டைக் கொண்டு வணங்கும் முறைகளும் தொடர்கிறது. பெரிய கோபுரம் உள்ள கோயில்களும் எழுப்பப்பட்டு, பலி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் கோயிலுக்கு புறத்தே நடத்தப்படுகிறது.
அக்கரைச் சீமையின் அம்மன்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் (பரதன் குப்புசாமி, 2006; பார்பரா வெஸ்ட் 2009). இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள் வழிபாட்டிற்காகத் தொன்று தொட்டு பின்பற்றிய கடவுள்களுக்கு கோயில் அமைத்தனர். அதனால் அக்கோயில்கள் தமிழக மண்ணில் பெரும்பான்மையாக அமைந்திருக்கும் சிவன், விஷ்ணு, பார்வதி, மீனாட்சி போன்ற பெருந்தெய்வங்களின் கோயில்கள் போலன்றி, நாட்டுப்புற மக்கள் வழிபட்ட சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் கோயில்களாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது (முனைவர்.சுபாஷிணி , 2013).
இத்தகவலை மேலும் ஆழ்ந்து நோக்க விரும்பி மலேசிய இந்து தெய்வங்களின் கோயில்களின் பட்டியல் விக்கிபீடியாவில் இருந்து தரவிறக்கப்பட்டு, கோயில்களின் தெய்வங்களின் பெயர்கள் கொண்டு பகுக்கப்பட்டது [மலேசிய மண்ணின் வளர்ச்சிக்கு தமிழக இஸ்லாமியர் பெரும்பங்கு ஆற்றியிருந்தாலும், இந்த கட்டுரையின் நோக்கத்தின் காரணமாக அத்தமிழர்களின் பின்புலத்தை அறியத்தரும் அவர்களது வழிபாட்டுத்தலங்களோ தகவல்களோ தவிர்க்கப்பட்டுள்ளது]. இது போன்று தற்கால நிலையினைக் கடந்தகால நிகழ்வுகளின் வரலாற்றுத் தரவுகள் துணை கொண்டு அறிந்து கொள்ளும் ஆய்வு “வரலாற்று ஆய்வு” (Retrospective Observational Study) என்ற முறையாகும்.
மலேசிய கோயில்கள்
தரவுகளின் படி மலேசிய மண்ணில் ஆண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கையும் பெண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிகையும் சம அளவில் அமைந்திருக்கிறது. ஆனால் சிறுதெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 58 விழுக்காடும், பெருந்தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 42 விழுக்காடாகவும் இருக்கிறது. மேலும் ஆழ்ந்து நோக்குகையில் அதிக கோயில்கள் இருப்பது மாரியம்மனுக்கே (30%) என்பது தெரிகிறது. அடுத்தடுத்த இடங்களில் தொடர்ந்து இடம் பெறுபவை முருகன் கோயில்களும் (19%), முனீஸ்வரன் கோயில்களும் (10%), காளியம்மன் கோயில்களும் (10%), பிள்ளையார் கோயில்களும் (7%) ஆகும். உத்தேசமாக, இரண்டு கோயில்களில் ஒன்று சிறு தெய்வங்களின் கோயிலாகவும், மூன்று கோயில்களில் ஒன்று மாரியம்மன் கோயிலாகவும் அமைந்திருக்கிறது. மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்கள் கூட்டாக 40% கோயில்களாக அமைந்து நாட்டுப்புற சிறுதெய்வங்களான பெண்தெய்வங்களின் கோயில்கள் அதிகம் இருப்பது தெரிகிறது. இவற்றோடு 10% முனீஸ்வரன் கோயில்களையும் கணக்கில் கொண்டால் சிறுதெய்வங்களின் கோயில்கள் பாதிக்கும் மேல் பெரும்பான்மையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
தரவுகள் அளிக்கும் இந்துக்கோயில்களின் தகவல்கள், மலேசியாவிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த உழைப்பாளிகளில் பெரும்பான்மையோர் தமிழக கிராம மக்கள் என்ற தகவலையே ஒத்திருக்கிறது. மலேசியாவின் புகழ் பெற்ற, நீண்ட காலமாக வழிபாட்டில் இருக்கும் கோயிலும் கோலாலாம்பூரில் மாரியாம்மன் கோயிலே. கோலாலாம்பூரின் சைனா டவுன் அருகில் இருக்கும் இப்புகழ் மிக்க, பழமை வாய்ந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் 1873 ஆண்டு திரு. தம்புசாமி பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. பிள்ளைக் குடும்பத்தினரின் தனிப்பட்ட இக்கோயில் பிறகு 1920களில் அனைவரும் வணங்கிப் பயன் பெரும் கோயிலாக மாற்றப்பட்டு, தற்பொழுது ஒரு அறங்காவல் குழுவின் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. சிறு செங்கல் கோயிலாக இருந்த இக்கோயில் இடம்மாற்றப்பட்டு 1973 இல் கோபுரம் உள்ள புதிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் நீண்ட காலமாக வழிபடும் இந்துக்கோயிலாக உள்ளது இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் சிறப்பு.
ஆதாரங்கள்:
- பரதன் குப்புசாமி, (BaradanKuppusamy - 24 March 2006). "Racism alive and well in Malaysia". Asia Times.பார்த்த நாள் 27 October 2010. - http://www.atimes.com/atimes/Southeast_Asia/HC24Ae01.html
- பார்பரா வெஸ்ட் (West, Barbara A. - 2009).Encyclopedia of the Peoples of Asia and Oceania, Volume 1.Facts on File inc. p. 486.ISBN 0-8160-7109-8. - http://books.google.com/books?id=pCiNqFj3MQsC&printsec=frontcover&hl=en#v=onepage&q&f=false
- முனைவர்.சுபாஷிணி, மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு, மின்தமிழ், ஜூலை 2013 - https://groups.google.com/forum/#!msg/mintamil/OTs6Tbc7z5E/7kjFBrMAiO4J
- நாட்டுப்புறவியல் மரபுகள்: வழிபாடுகளும், விழாக்களும், முனைவர் ஒ.முத்தையா - http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a06142in.htm - http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614222.htm
- மலேசியா தகவல்கள்: மலேசியா - https://ta.wikipedia.org/s/er மலேசியா இந்துக் கோயில்களின் பட்டியல் (தரவுகளின் நிலவரம் July 12, 2013 படி): https://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Malaysia கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் - http://en.wikipedia.org/wiki/Sri_Mahamariamman_Temple,_Kuala_Lumpur கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் - http://www.malaysiantemples.com/2012/04/maha-mariamman-temple-kuala-lumpur.html
மலேசியா அம்மன் கோயில் காணொளிகள்:
- Documentary - Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 1 - http://youtu.be/s6txzvoXvSI
- Documentary - Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 2 - http://youtu.be/7SDHK9vUME0
மேலும் தகவலுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்கள்:
- Ramstedt, Martin (2004), Hinduism in modern Indonesia, London: Routledge, ISBN 0-7007-1533-9
- Elementary Statistics: Looking at the Big Picture, Nancy Pfenning, 2010, Retrospective observational study on P.49, Cengage Learning, ISBN-10: 0495016527
- படங்கள் உதவி: http://en.wikipedia.org/wiki/File:Sri_Mahamariamman_Temple_2,_central_Kuala_Lumpur.jpg
- http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/45/Mariamman_temple_in_KL.jpg/581px-Mariamman_temple_in_KL.jpg