Sunday, May 26, 2019

ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’


——    தேமொழி





            ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற தலைப்பில், ராகுல சாங்கிருத்யாயனால் இந்தியில் ‘வால்கா சே கங்கா’ என்று எழுதப்பட்ட இந்த நூல் மானுடவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் என்ற தகுதி பெற்றது. இந்த வரலாற்றுப் புனைவில் 20 கதைகளில் மனித சமுதாயத்தின் வளர்ச்சி தொகுக்கப்படுகிறது. இந்நூல் 1943 இல் வெளியிடப்பட்டு பின்னர் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ராகுல சாங்கிருத்தியாயன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதற்காக மூன்றாண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் உருவான நூல் இது. இந்நூலை எழுதியதற்காக சமயப் பழமைவாதிகளால் வசை பாடப்பட்டார். இருப்பினும் மறு ஆண்டே அடுத்த பதிப்பு வெளிவரும் அளவிற்கு நூல் விற்பனையானது. தமிழில் கண. முத்தையா மொழிபெயர்ப்பில் இந்நூல் முன்னரே 1949ல் வெளிவந்து முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புடையது. நூலின் மொழிபெயர்ப்பும் கண. முத்தையா வால் சிறையில்தான் எழுதப்பட்டது. கால்நூற்றாண்டிற்கும் மேல் இந்திப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் என். ஸ்ரீதரன் சமீபத்தில் இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். அது 2016 இல் கவிதா பப்ளிகேசஷன்ஸ் வெளியீட்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. என். ஸ்ரீதரன் பல குறிப்புகளையும் தேடிக்கொடுத்து வாசிப்பை விரிவாக்க உதவியுள்ளார்.

            ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற பெயருடன் உத்தரப்பிரதேச குக்கிராமம் ஒன்றில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். துவக்கப்பள்ளி வரை மட்டுமே முறையான கல்வி கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிதர்’ என்ற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழும் அறிந்து கொண்டார். ராகுல சாங்கிருத்தியாயன் இந்துவாகப் பிறந்து இந்து சமயத் தத்துவங்களை அறிந்தவர். ஆரிய சமாஜத்தின் சுவாமி தயானந்த சரஸ்வதியின் மேல் பற்று கொண்டவர். இலங்கையில் புத்த மதத்தைத் தழுவி புத்த பிக்குவாகவும் தீட்சை பெற்று ராகுல சாங்கிருத்தியாயன் என்று மாறியவர். பெளத்த தத்துவங்களிலும் பாலி மொழியிலும் வல்லுநர். கடவுளை மறுத்தவர், இறப்பிற்குப் பின், மறுபிறவி ஆகியவற்றில் சற்றே நம்பிக்கை கொண்டிருந்து பின்னர் அதையும் துறந்து மார்க்சிய கொள்கையில் ஈடுபாடுகொண்ட பொதுவுடமைவாதியாக இறுதியில் மாறியவர். ரஷ்ய லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராகவும், வித்யாலங்கார இலங்கைப் பல்கலைக்கழகம் இவரைப் பேராசிரியராகவும் பணியாற்றவைத்து தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன. வாழ்நாளின் பெரும்பகுதியைப் பலநாடுகளுக்கும் இந்தியாவில் பல இடங்களுக்கும் பயணம் செய்வதில் கழித்தவர். ‘இந்தி பயண இலக்கியங்களின் தந்தை’யாக அறியப்பட்டு பயணநூலுக்காகச் சாகித்திய அக்காதமி விருதும் (1958), பத்மபூஷன் (1963) விருதும் பெற்றார். பலமொழிகள் அறிந்திருந்தும், அவரது தாய்மொழி போஜ்புரியாக இருந்தும் இந்தியை மட்டுமே தான் அதிகம் எழுதும் மொழியாக வைத்துக் கொண்டவர். நூற்றுக்கும் மேலான நூல்களை எழுதியவர். அவருக்கு இந்திப் பல்கலைக் கழகங்களில் ஒரு இருக்கைகூட அமைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

            இந்தோ-ஐரோப்பியச் சமூகத்தினர் அல்லது ஆரியர் என அறியப்படுவோர் இந்தியாவிற்கு வருகை தந்த வரலாறுதான் இந்த நூலின் பொருண்மை. எகிப்தியமெசபட்டோமிய, சிந்துசமவெளி நாகரிக மக்கள் இந்த ஆரியர் என்ற இனப் பிரிவுக்கும் முன்னரே நன்கு நாகரிகமடைந்தவர். இருப்பினும் இந்தியாவை நோக்கிப் பயணித்த ஆரிய இனத்தின் பரவல் இந்திய வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்கும் நோக்கில் இவர்களை மட்டும் முதன்மைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆரியரின் இப்பயணம் யுரேசிய ஸ்டெப்பி புல்வெளியில், ரஷ்யாவின் தாய் ஆறு என்று அழைக்கப்படும் வால்கா ஆற்றின் கரையில் துவங்கி, இந்தியர்கள் தாய் எனப்போற்றும் கங்கை ஆற்றின் கரையில் நிலை கொள்கிறது. ஐரோப்பியக் கண்டத்திலிருந்து 10,000 கிலோமீட்டர் இடைவெளியைக் கடந்து இந்தியாவில் குடியேறிய இவர்களது வரலாறு தனித்தனியான 20 சிறுகதைகளாக, காலக் கோட்டில் கிமு 6000 முதற்கொண்டு 20 ஆம் நூற்றாண்டுவரை ஒரு 8,000 ஆண்டு காலகட்டத்தை உள்ளடக்கும் வகையில், தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக அமைத்து, கால எந்திரத்தில் பயணிப்பது போலக் காட்சிகளாக நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

            காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கதை மாந்தர் உரையாடல் வழியாக ஒரு வரலாற்று நிகழ்வு கதை வடிவில் உருவெடுக்கிறது. வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த மாற்றங்கள் கதைவடிவில் உருவெடுத்துள்ளன எனலாம். ஒவ்வொரு கதையும் அக்கால மக்களின் நடை, உடை, வாழ்வியல்முறை ஆகியவற்றைக் கண்முன் நிறுத்தும் விதமாகவும், சமுதாய, அரசியல், பொருளாதார, பண்பாட்டின் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் அக்கால வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் சமூகவியல், மானுடவியல், வரலாறு, புவியியல், இலக்கியம் எனப் பல துறைகளையும் நூலின் கரு தொட்டுச் செல்கிறது. ஒரு தலைமுறை என்பது 22-25 ஆண்டுகள் என்ற அடிப்படையில் இத்தனை தலைமுறைக்கு முன்னர் என ஆசிரியர் கதைகளின் துவக்கத்தில் சில இடங்களில் குறிப்பிடுகிறார். குறிப்பாக முதல் கதை சுமார் 361 தலைமுறைகளுக்கு முன்னர் எனக் குறிப்பிடுகிறார். நூல் இரு பாகங்களாகவும், ஒவ்வொரு பாகமும் 10 அத்தியாயங்களும் கொண்டுள்ளது. இரண்டாம் பாகத்திற்குப் பிறகு இன்றைய இந்தியாவில் நாம் படித்த வரலாற்றுச் செய்திகள் கதைகளாக உருமாறியுள்ளன.

முதல் பாகம்:
1. நிஷா (கி.மு.6000)
2. திவா (கி.மு.3500)
3. அமிர்தாஸ்வன் (கி.மு.3000)
4. புருகூதன் (கி.மு.2500)
5. புருதானன் (கி.மு.2000)
6. அங்கிரா (கி.மு.1800)
7. சுதாஸ் (கி.மு.1500)
8. பிரவாஹணன் (கி.மு.700)
9. பந்துல மல்லன் (கி.மு.490)
10. நாகதத்தன் (கி.மு.335)

இரண்டாம் பாகம்:
11. பிரபா (கி.பி.50)
12. சுபர்ண யௌதேயன் (கி.பி.420)
13. துர்முகன் (கி.பி.630)
14. சக்ரபாணி (கி.பி.1200)
15. பாபா நூர்தீன் (கி.பி.1300)
16. சுரையா (கி.பி.1600)
17. ரேக்கா பகத் (கி.பி.1800)
18. மங்கள சிங் (கி.பி.1857)
19. ஸஃப்தர் (கி.பி.1922)
20. சுமேர் (கி.பி.1942)  

            காந்தியின் 1942ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்துடனும் இரண்டாம் உலகப்போர் (1939-1945) நடந்துகொண்டிருக்கும் காலத்தில் நூல் முடிவடைகிறது. நூல் வெளியான காலத்தில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் அச்சு நாடுகள் என்ற ஒரு கூட்டாக ஜப்பானுடன் இணைந்து இன்னமும் போரில் ஈடுபட்டு நேச நாடுகளுடன் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் காலம்.  பெர்ல் ஹார்பர் தாக்குதல் காரணமாக அமெரிக்காவும் போர்க்களத்தில் இறங்கிவிட்ட நேரம் அது. ஆனால், நாகசாகி ஹிரோஷிமா மீது அணுகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டாம் உலகப் போர் இன்னமும் முடிவுக்கு வராத காலகட்டத்தில் வெளியான வரலாற்றுப் புனைவு நூல்.

            நூலின் கருத்துகளிலும், பாத்திரங்களின் உரையாடல்களாக வெளிவரும் கருத்துகளிலும் ராகுல சாங்கிருத்யாயனின் கோணங்கள் வெளிப்படுகின்றன. ஆரியர் வருகையால் வந்த வர்ணாசிரம தர்மம், சாதிப்பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்து அவருக்குள்ள வருத்தம்; புரோகிதர்களும் அரசர்களும் இணைந்து கூட்டாக தங்களுக்குள் ஒருவர் நலனுக்காக ஒருவர் உதவிக்கொண்டு உழைக்கும் எளிய மக்களைச் சுரண்டும் கட்டமைப்பின் மேல் அவருக்குள்ள வெறுப்பு, வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் போன்றவற்றின் துணைகொண்டு வைதீக சமயம் எளியோர் மீது ஆதிக்கத்தைக் கட்டமைத்த அறமற்ற செயல்முறை மீது குமுறல், வணிகம் என்ற போர்வையில் நாட்டு மக்களின், நாட்டின் செல்வ வளத்தை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் தன்னலவாதிகளான வணிகர்கள் மீதும், அயல்நாட்டின் வணிக அமைப்புகள் மேலும் கொண்ட கசப்புணர்வு, பெண்களை அடிமைகளாகவும், விடுதலையற்ற நிலையிலும், உடன்கட்டை போன்ற உயிரையும் பறிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த பெண்ணடிமை அதிகார முறையில் அவர் காட்டிய எதிர்ப்பு எனவும் பல கருத்துக்களை இந்நூல் வழியாக அறிய முடிகிறது.

            அவ்வாறே ராகுல சாங்கிருத்யாயனின் சமய நல்லிணக்க ஆதரவு எண்ணமும், புத்தரின் கொள்கையில் கொண்ட ஈடுபாடும், பொதுவுடைமை கொள்கைக்கு அவருடைய ஆதரவும் கதாபாத்திரங்கள் வழி தெரிவிக்கப்படுகிறது. காந்தி விடுதலைப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றதை மதிப்பவராக இருந்தாலும், ஆதிதிராவிடர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி தேர்தல் இடவொதுக்கீட்டை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்து அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தது, இராட்டையில் நூல் நூற்றல் போன்றவை அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு நிலை என்றும் கருதியதும் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் தனிநாடு என மக்கள் பிரிய விரும்பினால் அவர்கள் கருத்து மதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்திருக்கிறார் ராகுல சாங்கிருத்தியாயன்.

            வரலாற்றைப் பாடமாகப் படிக்காமல், நிகழ்வுகளின் பின்னணியில் கதைகளாகப் படிக்கும் பொழுது வரலாற்றின் தொன்மையும் அதன் தொடர்ச்சியும் தெளிவாகப் புரிகின்றது, போராட்ட நிகழ்வுகளின் காரணங்களும் விளங்குகிறது. இது வரலாறா அல்லது புனைவுக்கதையா என்று வேறுபடுத்திக் காண இயலாத அளவு நூலை எழுதியுள்ள முறை ஆசிரியரின் திறமைக்குச் சான்று. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணம் தோன்றாவண்ணம் மொழியாக்கம் செய்தவரும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் படித்திருக்க வேண்டிய நூல். “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல். இந்நூலைப் படித்து முடித்த பின்னர், இதனை நாம் இத்தனைக்காலம் படிக்காமல் விட்டுள்ளோமே என்று வருந்தவும் வைத்தது என்பதும் உண்மை. எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கலாம்.


நூல்:
வால்காவிலிருந்து கங்கை வரை
இந்தியில் – ராகுல சாங்கிருத்தியாயன் (1943)
தமிழில் மொழியாக்கம் – என்.ஸ்ரீதரன் (2016)
கவிதா வெளியீடு, முதல் பதிப்பு
Rs. 400







தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)




Saturday, May 25, 2019

ஒரு யுத்த காண்டம்


—  ருத்ரா இ.பரமசிவன்



"இன்று போய் நாளை வா"
என்றான் அந்த ராமன்.
இந்த ராமர்களோ
சத்தமில்லாமல்
நியாயத்தோடு
ஒரு யுத்த காண்டம்
இரவோடு இரவாய்
நடத்தி முடித்து
எதிர்க்கட்சி எல்லாம் எதற்கு என்று
அந்த பெட்டிக்குள்ளேயே
நடத்தி முடித்த பட்டாபிஷேகத்தோடு
அல்லவா
வெளிக்கிளம்பியிருக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம்!
அதற்கும்
நம் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

கணிப்பொறிக்குள் விழுந்து
காரணமாகிப்போன
அந்த கள்ளமில்லா பூச்சிகள்
கோடிக்கால் பூதங்களாகும்
காலமும் வரத்தானே போகிறது.

"பிதாவே அவர்களை மன்னியும்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று
தெரிய இயலாத நிலையில் தான்
இன்னும் இருக்கிறார்கள்."

ஜனநாயகம் என்ற
கிரேக்க நாட்டுச் சிந்தனை
இன்னும் இந்த மண்ணில்
காலூன்றவே இல்லையோ?
எழுபது ஆண்டுகளாய்
நான்கு வர்ணம் என்ற‌
குறுகிய தொட்டியில் தான்
நம் மூவர்ணம் எனும் பிரம்மாண்ட‌
ஆலமரத்தை
"போன்சாய்" மரமாய்
குறுக்கி வெட்டிச் சிதைத்து
அழகு பார்த்துக்கொண்டிருந்தோம்.
அது இன்னும் குறுகி
மதவாதிகள் எனும் மந்திரவாதிகளின்
கைவிரல் மோதிரமாய் அல்லவா
மாறிப்போனது.
ஜனநாயகம் எனும்
எங்கள் மூவர்ணத்தாயே!
எங்கள் கண்களின் பார்வையிலிருந்து
நீ
பிடுங்கியெறியப்பட்டாலும்
எங்கள்
சிந்தனை வானத்தின் விடியல் எல்லாம்
உன் வெளிச்சம் தான்.
ஐந்தாண்டு ஒன்றும்
ஏதோ கண்ணுக்கே தெரியாமல்
ஒளிந்து கொள்ளும் ஒளியாண்டு அல்ல.
மக்களின் உரிமைக்குரல் முழக்கம்
எல்லா மூட்டங்களையும்
தவிடு பொடியாக்கும்.
உனக்கு என்றுமே
வெற்றி வெற்றி வெற்றி தான்.
வெற்றி தவிர வேறில்லை!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




என்னைக் கவர்ந்த பாரதியின் கவிதை

— முனைவர் ச. கண்மணி கணேசன்


          பாரதியார்- பெயரைச் சொன்னாலே உள்ளத்தில் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும். எளிய சொல், எளிய நடை, எளிய சந்தம் இவற்றுக்கெல்லாம் மேல் புதிய உத்தி, புதிய செய்தி அடங்கிய சோதி மிக்க நவகவிதை தந்தவர் பாரதியார். அவரது படைப்புகள்- 

                    தூங்கிக் கிடக்கும் மனங்களைத் துடிப்போடு துள்ளி எழ வைக்கும். 
                    சோர்ந்து கிடக்கும் மனங்களைச் சுறுசுறுப்பாக்கித் துயர் கெடுக்கும். 
                    வாடிக் கிடக்கும் மனங்களை வலிவாக்கி ஒளி கொடுக்கும். 

          தேடிப் பார்க்கத் தேவை இல்லை; ஒரு சான்று சொல்கிறேன்; கேட்டுப் பாருங்கள். 

                    "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
                    சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் 
                    வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே 
                    சொல்லடி சிவசக்தி நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"

          இறைவன் மனிதனைப் படைக்கிறான். எப்படிப் படைக்கிறான்? 

                    அழகிய வீணையெனப் படைக்கிறான். 
                    வீணையினின்று எழுவது இனிய நாதம்; இன்ப வெள்ளம்!
                    ஆனால் உலகில் நடப்பதென்ன?

          மனிதனாகிய இனிய வீணை நலங்கெடப் புழுதியில் எறியப்படுவதைப் பார்க்கின்றோம். காவியம் படித்து, நல்ஓவியம் தீட்டி, அறிவுநூல் பல கற்று விளக்கம் பெற வேண்டியவன்; சோர்வினால் சோம்பிக் கிடந்தான் சுதந்திரப் போராட்ட காலத்தில்…

                    நாட்டின் நலத்தில் நாட்டமில்லை; 
                    அதன் ஏற்றத்தில் எண்ணமில்லை; 
                    சுயநலச் சேற்றிலே சுழல்கிறான்; 
                    இலஞ்சப் புழுதியில் புரள்கிறான். 
                    அதனால் தான் வினவுகிறார்- 
'நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' என…

          இந்நிலை மாறவேண்டும். அதைத்தான் சிவசக்தியிடம் வேண்டுகிறார்… என்னவென்று?
                    'வல்லமை தாராயோ இம்மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று..
                    இங்கே தன்னலம் பேசவில்லை; பாரதியின் தாயுள்ளம் பேசுகிறது.

          'சொல்லடி சிவசக்தி' என்று பராசக்தியை அவர் கேட்கும் தொனியைப் பாருங்கள். அந்தக் கேள்வியில் ஒரு உரிமை; 

                    ஆதிசக்தியையே தன் கவிதையால் கட்டிப்போடும் நெருக்கம்; 
                    தன் அறிவில் தான் கொண்ட நம்பிக்கை.
                    அந்த அறிவும் சாதாரண அறிவு அல்ல; சுடர்மிகும் அறிவு. 

ஆம்; 

                    அச்சமெனும் இருளகற்றி மக்கட்சமுதாயத்திற்கே வழிகாட்டும் அறிவு. 
                    மூடநம்பிக்கை எனும் இருளகற்றி மனிதகுலத்திற்கே வழிகாட்டும் அறிவு. 
                    சாதி வேறுபாடெனும் இருளகற்றி மானுடக் கூட்டத்திற்கே வழிகாட்டும் அறிவு.  
                    பெண்ணடிமைப் பேரிருளை அகற்றி பேதையரை மேதையராக்கும் அறிவு. 
                    'சொல்லடி சிவசக்தி' என்று உலகநாயகியையே ஆணையிடும் அறிவு.  
                    அவள் தந்த அறிவை அவளுக்கே மீண்டும் நினைவூட்டும் அறிவு

இத்தகைய அறிவுணர்வும், நம்பிக்கையும் பெருகினால் நாடாளும் பிரதமர் முதல் நாட்கூலி வாங்கும் சாமானியன் வரை அனைவரும் மாநிலம் பயனுற வாழலாம். அதனால் அறியாமை அகலும்;

                    அச்சம் விலகும்;  இல்லாமை நீங்கும்;
                    இன்பம் பெருகும்; உலகம் ஒளிபெறும்;
                    உத்தமர் பெருகுவர்; எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். 

சுடர்மிகும் அறிவுடன் சக்தியை வேண்டிய பாரதியார்;

                    செருக்கினால் நிலைதிரியவில்லை. 
                    ஆணவத்தால் அறிவு பிறழவில்லை. 
                    அச்சத்தால் பின்வாங்கவும் இல்லை.

'நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ' என்று கெஞ்சும் தொனியைக் கேளுங்கள். அந்தக் கெஞ்சலில் ஒரு உருக்கம்; 

                    உன்னுள் நான் அடக்கம்;  
                    உன் விருப்பமே; எண்ணமே; என்செயல் என்ற அடக்கம்;
                    உன்னருள் இன்றேல் உன்மத்தன் ஆவேன் என்ற அடக்கம்;
                    பூமிக்குப் பாரமாய்ப் பொழுதைப் போக்க விடாதே என்ற ஏக்கம். 

          என்ன அற்புதமான கலவை!

                    சுடர் மிகும் அறிவு;
                    அதை மாநிலத்தின் பயனுக்கு அர்ப்பணிக்கும் அறவுணர்வு;
                    ஆனால் அகங்காரத்தில் மூழ்கிவிடாத தெளிவு;
                    தன்னால் முடியுமென்ற நம்பிக்கை;

          நல்லதோர் வீணையாய் மாநிலத்து உயிர்களெல்லாம் பயன்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு- இப்படி இரத்தினச் சுருக்கமாக அத்தனையும் பிழிந்து தரும் படைப்பு.

                    "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ 
                    சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் 
                    வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே 
                    சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"

          இந்த நூற்றாண்டின் மனித இனம் முழுமைக்கும் எடுத்துக் கூறும் தகுதி பெற்ற ஏற்றம் மிகுந்த பாட்டு இது தான். பாரதியின் கவிதை என்றால் களிப்படையா உள்ளமேது? கள்வெறி கொள்ளாத மனமேது?





தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)





Friday, May 24, 2019

ஐயனார்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்



நூலின் ஆசிரியர் - திரு பொன். சந்திரன்
அய்யனார் பதிப்பகம் சென்னை
வெளியீடு 2017

          இந்நூலின் ஆசிரியர் தமிழகத்தில் கிராமங்களின் ஏரி, குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளின் கரைகளில் கோயில் கொண்டுள்ள, பல பிரிவு மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வரும் ஐயனார் யார், அவரின் பிரிவுகள், இருப்பிடங்கள் போன்றவற்றை மேற்கோள்காட்டி இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

          ஆசீவகம் சமயத்தை உருவாக்கிய மற்கலி  கோசாலர் என்பவரே சாத்தன் என்ற முதல் ஐயனார் என்றும் இவர் சங்கப் புலவர் ஆக விளங்கியுள்ளார் என்ற விடயத்துடன் நூல் ஆரம்பமாகிறது. 

          இரண்டாவது ஐயனாராக நந்தவாச்சா என்ற சின்ன ஐயனார், பெருமுக்கல் செல்லும் பாதையில் மலைக்கு முன்பாக இவர் வீற்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

          முத்தியாலீசுவரர் என்ற மூன்றாம் ஐயனாராக  பெருமுக்கல் மலையின் தென்புறச் சரிவில் வேல், ஈட்டி என கோயில் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

          மேலும் ஐயனார் வகுத்த ஒன்பது கதிர் என்பது வானியல், கோளியல் பற்றிய அறிவியலாக இருந்துள்ளது. ஆசீவக கொள்கையான ஊழ் கொள்கை மற்றும் கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், வெண்மை, மிக வெண்மை என்ற ஆறு சாதிகளை மேற்கோள் காட்டியுள்ளார் .

          பாண்டி என்ற சொல் வெள்ளை என்றும் ஐயனாரே என்றும், ஆசீவகத்தில் வெள்ளை பிறப்பு நிலையை அடைந்த துறவியரைக் குறிப்பதாகவும், மதுரை பாண்டி  முனி கோயிலே இதற்குச் சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

          திருப்பத்தூர் ஐயனார் கோயில் கல்வெட்டுகளில் ஐயனாரைத் திருமண் தவமுடைய ஐயனார் என பாண்டியர்கள் குறித்துள்ளார்கள் என்றும், திருமறைக்காடு சிவன் கோயிலில் ஆசீவகத்திற்குரிய அறப் பெயர் சாத்தன், பூரணம், பொற்கலை யோடு உள்ள பூரண காயபர், பார்கவ நாதர் ஆகியோரைக் கொண்ட  ஆசீவக கோவில்களாகக் காட்டுகிறார்.

          பெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கையைத் தெய்வலோகத்தில் தொடங்கும் சேக்கிழார், திருப்பிடவூர் ஐயனார் கோயிலில் முடிக்கிறார். மேலும் அந்த சருக்கத்திற்கு வெள்ளானைச் சருக்கம் எனவும் வெள்ளை யானை அறப்பெயர் சாத்தனுக்கு உரியது என்றும் தெரியப்படுத்துகிறார்.

          சித்தன்னவாசல் மலை அடிவாரத்தில் மூன்று ஐயனார் கோயில்கள் உள்ளன. அங்கு உள்ள  குகை ஓவியத்தில் உள்ள மாங்காய் கொத்து, சாத்தனோடு தொடர்பு உடையது என்றும் அழகர் மலை குகைத்தளம், திருச்சி மலைக்கோட்டை ஐயனார், கஞ்சமலை கலியபெருமாள் ஐயனார், பெரும பெட்டி 5 இலவ மரத்து ஐயனார் போன்ற கோயில்கள் ஆசீவகத்தைச் சேர்ந்தவை  என்று விளக்கியுள்ளார்.

          ஐயனாரின் பிரிவுகள், கரந்தமலை ஐயனார், ஆகாச ஐயனார், பரம ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார் என்று பல்வேறு பெயர்களுடன் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடுகிறார்.

          மேலும் சான்றுகளாக, பள்ளன் கோயில் செப்பேடு, சிங்கம்புணரி கோயில், இலக்கியங்களில் பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, புறநானூறு, பெரிய புராணம், சினேந்திர மாலை மற்றும் ஐயனார் பிள்ளைத்தமிழ் போன்றவற்றை மேற்கோள் காட்டி ஆசீவகம் என்னும் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஐயனார் என்பதை வரலாற்றுச் சான்றுகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.




தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm




Saturday, May 18, 2019

உறவு

 —  ப்ரீத்தி ராஜகோபால்  


பேசும் வார்த்தைகளில் அவதானமாய் இருங்கள்
வீசும் கற்களை விடப் பேசும் வார்த்தைக்கு
வலிமை அதிகம்

நரம்பில்லா நாக்கில் பிறழும் வார்த்தைகள்
ஆலகால விஷத்தை விடக் கொடியது
உயிரோடு கொல்லும்

பல வர்ணங்கள் பூசப்பட்ட பேச்சுக்கள் நம் முகத்திற்கு முன்
முதுகை காட்டி திரும்பினால் சாயம் போன புடவை போல்
உண்மை உருவம் வெளிப்படுகிறது

யோசிக்க மறந்து பேசிய வார்த்தைகள்
மாறாத வடுவாய் என்றும் நெஞ்சில்
மறந்தும் மயங்கிவிடாதே புழச்சிக்கு

ஒற்றை சொல் போதும் உறவு அறுந்துவிடும்
ஓராயிரம் முறை மண்டியிட்டாலும்
ஒட்டவைக்க இயலாது அறுத்த உறவை 



தொடர்பு: ப்ரீத்தி ராஜகோபால்   (rajagopalpreethi04@gmail.com)

காலக் கவிதைகள்

—  திருத்தம் பொன். சரவணன்



மாலைநேரத்து மயக்கம் 

கதிரை மாய்த்தன்று ஓங்கல்
கங்குல் உய்த்தன்று திங்கள்
கண்ணை மூய்த்தன்று கமலம்
வெண்பல் ஏய்த்தன்று தளவம்
குடம்பை சேர்ந்தன்று குறும்பூழ்
மன்றம் ஊர்ந்தன்று மாவும் – மெல்ல என்
உயிரைத் தேய்த்தன்று மாலை.

பொருள்: கதிரவன் பெரிய மலையின் பின்னால் சென்று மறைந்துகொள்ளவும் இருளைக் கிழிப்பதுபோல் நிலவு வெளிப்படவும், நிலவைக் கண்டதும் தாமரைமலர் தனது கண்ணை மூடிக் கொள்ளவும், இதைக்கண்ட முல்லைக்கொடியானது தனது வெண்ணிறப் பற்களைக் காட்டிக் கேலியாகச் சிரிக்கவும், பறவைகள் தங்களது கூடுகளைச் சென்று அடையவும், ஆடுகளும் மாடுகளும் தங்கள் தொழுவத்திற்குத் திரும்பவும் இதோ மாலைப் பொழுது வந்தே விட்டது. என் உயிர் என்னைவிட்டு மெல்லப் பிரியத் தொடங்கி விட்டது. 


நன்றே செய்க ! இன்றே செய்க !!

தோன்றிய இடந்தனைக் காணலும் ஆகா
ஊன்றிய இடந்தனை உணர்தலும் ஆகா
ஞான்றிய உலகிதில் நம்மிடம் எதுவென
சான்றுகள் காட்டுவ நமதுநற் செயலே.

பொருள்: நாம் உருவான இடமான கர்ப்பப்பையினை நாம் காண இயலாது. அதைப்போல நாம் இறந்த பின்னால் நம்மைப் புதைத்து ஊன்றிய இடத்தையும் நம்மால் உணர இயலாது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இப் பூவுலகில் நமக்கான இடம் எதுவென்று நமக்குத் தெளிவாகக் காட்டும் சான்றுகளாக இருப்பவை நாம் செய்யும் நற்செயல்கள் மட்டுமே. ஆதலால் நன்றே செய்க ! அதையும் இன்றே செய்க.!!






தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/






மொழியியல் நோக்கில் பெண்மொழி



  முனைவர் க.பசும்பொன்



            இக்கட்டுரை பெண், ஆண் மொழி வேறுபாடுகளைக் கட்டமைக்க முற்படுகிறது.

            பெண்களின் போராட்டம் சமூகத்தின் சலுகைகளைப் பெற அல்ல. அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற என்ற பார்வை உறுதிப்படுத்தப்படுகிறது. தாய்மை உணர்வோடு வாழ்வதற்கும் தாய்மை கிரீடத்தைச் சுமப்பதற்கான வேறுபாட்டையும் தெளிவுபடுத்துகிறது.

            நான் சரி என்று நம்பிய வரிகளை வெட்டினார்கள். காரணம் பெண்ணுக்கென்று ஒரு மொழி உண்டு என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதில் பலருக்குச் சிக்கல் இருந்ததுதான். ஆனால் இப்பொழுது அவள் தானாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாள். அவள் சிந்தனைக்குச் சொல் வடிவம் கொடுக்க ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை அப்படியே பயன்படுத்த முடியாது அவள் உள்ளுக்குள் உறைந்து மொழியைச் செதுக்கி செதுக்கி அவளால் தான் வெளியே வடிக்க முடியும். மொழி என்பது வெறும் எழுத்துக்களால், சொற்களால் ஆனது மட்டுமில்லை. மொழிக்கு உணர்வு உண்டு. பாலின வேறுபாடுகளைச் சுட்டும் பொதுவான வழக்கமான மொழி வெளிப்பாடுகள் உடலின் பல்வேறு இயக்கங்களையே மையமாகக்  கொண்டுள்ளன. நமது உடலின் தோற்றம், ஆண், பெண் என்பதை வெளிக்காட்டும் விதமாக நாம் செய்பவை, சொல்பவை நமது உடல் சார் அனுபவங்கள் பாலுறவு, விளையாட்டும், சமயமும் கோரும் பிரத்தியேக உடல்சார் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அனுபவங்கள், உடல் மீதான கட்டுப்பாடுகள், ஒழுக்கம் பற்றிய விதிமுறைகள் நியதிகள் ஆகியவற்றை மையமிட்டே பாலினம் சார்ந்த மொழியானது செயல்படுகிறது,  என்கிறார்கள் வ.கீதா மற்றும் கிறிஸ்டி சுபத்ரா.

            மொழியியலில் கிளை மொழி ஆய்வுகள் ஆண் பெண் பேச்சில் வேறுபாடு இருப்பதை எடுத்துரைத்துள்ளன. இவை சாதி, சமயம், வயது, ஆண், பெண் போன்றவற்றில் பேச்சு வழக்கில் வேறுபாடுகளுள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   கடந்த ஐம்பது ஆண்டுகளாக மானிடவியல் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்கள், மற்றும் தத்துவவியல் அறிஞர்கள் ஆண், பெண் பேச்சு வேறுபாடு குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

            இலக்கண மற்றும் ஒலிப்புக் கூறுகளில் ஆண், பெண் பேச்சு வேறுபாடு இருப்பதாக ரொமன்ஸ் மொழி, யானா மொழி, குரேல்வென்ட்ரா மொழி மற்றும் மொல்க்ஜியோன் மொழிகளில் ஆதாரங்கள் இருக்கின்றன என்று (பிரான்சில் எக்கா 1972) கூறுகிறார். பெண் பேச்சில் ஆண்களிடம் வேறுபட்டு சில மொழிக் கூறுகளைப் பயன்படுத்துகின்ற தன்மை அமெரிக்க ஆங்கில மொழியில் டெராய்ட் நீக்ரோ பேசும் பேச்சு (Wolform, 1969), நியூ யார்க்  கிளைமொழி (லேபோ, 1966), இங்கிலாந்து கிளைமொழி (ஃபிசல்சர் 1958), நார்விச் கிளைமொழி (பீட்டர் டிரட்சில்) தேசிய மொழி மற்றும் கேஸ்வவுச்சர் மொழி (கேப்வெல்) ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

            கலிபோர்னியா யானா மொழியில் ஆண் பெண் பேச்சு வேறுபடுகின்றது. யானா மொழியில் இரண்டு வகையான வடிவங்கள் உண்டு. ஒன்று முழு வடிவம் (Full form) மற்றொன்று குறை வடிவம் (Reduced form) முழு வடிவம் மொழிக் கூறை ஆண்களுக்கு ஆண்களிடம் பேசும்பொழுது பயன்படுத்துகின்றனர். குறை வடிவ மொழிக்கூறை பெண்களுக்குள் பேசுகின்றனர்.

            இந்திய ஆசிய மொழியான பெங்காலியில் ஆண்கள் மொழிக்கு முதலில் வருகின்ற ‘ந’ சரத்திற்குப் பதிலாக ‘ல’கரத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். (வார்டு காப் 1986 : 304).

            தமிழகத்தில் மீனவப் பெண்களின் பேச்சு வழக்கில் ஆண்களின் பேச்சு வழக்கிலிருந்து ஒலிப்பு முறை வேறுபட்டு இருப்பதை ராஜகுமாரி (1979) குறிப்பிட்டுள்ளார்.

            ஆதிதிராவிடர் பேச்சு வழக்கிலும் ஆண், பெண் வழக்கு வேறுபாடுகள் காணப்படுவதாக ஆரோக்கியநாதன் (1986) சுட்டிக்காட்டுகிறார். பெண்களின் பேச்சு வழக்கில் ஒருதனியான ஒலியமுத்தமும், வாக்கிய முடிவில் ஏறி இறங்கும் ஒலியமுத்தமும் காணப்படுகின்றன.

            ‘ச’கர ஒலியைச் ‘ச்சகரமாக’ ஒலிப்பது பெண்களின் பேச்சு வழக்கில் அதிகமாகக் காணப்படுகின்றது. சில குறிப்பிட்ட வாக்கியங்களைப் பெண்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று ஆரோக்கியநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

            பெண்கள் மட்டுமே பேசும்மொழி – பெண்ணின் மொழி ஒன்று இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சீனாவில் பெண்கள் தங்கள் அக உணர்வுகளைப் பிற பெண்களுடன், தம் தோழியருடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கே உரிய ஒரு மொழியைப் பயன்படுத்தும் மரபு இருந்தது. இம்மொழி ஆண்களுக்குப் புரியாது. சீன நாட்டில் ஜியாங் யாங் எனும் இடத்தில் இம்மொழி உருவாயிற்று. இதை நுஷூ(Nushu) எனக் குறிப்பிடுகின்றனர்.

            பெண்களின் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ராபின் லேகாப் (1975), மொழியும் பெண்களுக்கான இடமும் என்ற நூலில் பெண்மொழி ஓர் அழுத்தம் இல்லாதது, உடன்பாட்டுக் கேள்விகளை அடிக்கடி கேட்பது, அதிகமான ஆடைகள், அதிக மரியாதைச் சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, மொழியை எளிமையாகச் சரளமாகப் பயன்படுத்த முடியாமை மற்றும் முற்றுப் பெறாத வாக்கியங்கள் அதிகம் இருப்பது போன்ற கூறுகளைக் கொண்டது எனச் சுட்டுகிறார். (எல்.இராமமூர்த்தி, பெண்ணியமும் மொழி நிர்ணயமும் ப.7).

            பேராசிரியர் மீனாட்சி முருகரத்தனம், பழமொழிகளை அதிகம் கையாளுதல், சுற்றி வளைத்துப் பேசுதல், சாடை பேசுதல் போன்றவற்றையும் பெண்ணின் மொழிக் கூறுகள் என்கிறார்.

            சங்க இலக்கியப் பாடல்களில் மூதின்முல்லை என்னும் துறையைச் சார்ந்த பாடல்கள் ஆண்பாற் புலவர்களும் பெண்பாற் புலவர்களும் பாடியுள்ளனர். மொழியியல் அடிப்படையில் இவற்றை ஆராய்ந்த இராமமூர்த்தி பால் வேறுபட்டால் மொழிக் கூறுகள் மாறுபடுகின்றன என்றார். ஆ, உ வின் முடிவுகளாகச் சில பால் பாகுபாடு காட்டும் கூறுகளையும் சுட்டுகிறார்.

சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழியில் வினைமுற்றுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஆண்பாற் புலவர்களின் மொழியில் எச்சங்களின் பயன்பாடு அதிகம் இடம் பெற்றுள்ளன. வினை முற்றுகளில்,
            கெடுக, வெல்க
            களந் தொழிந்த தன்னே
            ஆண்டு பட்டனவே
            பரவும், எய்தும்
என்னும் வியங்கோள் வினைமுற்றுகள் பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களில் உள்ளன. அதே போல பெண்பாற் புலவர்கள் மொழிகளில் தருதல், ஆக்குதல், கொடுத்தல், பெருக்குதல், மூதின் மகளிராதல் போன்ற தொழிற்பெயர்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பார் ரேணுகாதேவி (2013 : 155). எச்சங்கள் பொதுவாக வினையெச்சம், பெயரெச்சம் என இரு வகைப்படும். எச்சங்களின் பயன்பாட்டிலும் வேறுபாடுகள் உள்ளன. பெண் மொழியில் வினையெச்சங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்பாற் புலவர்களால் பெயரெச்சங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

            பெயரடைப் பயன்பாட்டையும் ஒருவித மொழி ஆளுமையுடன் வெளிப்பாடாகக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

            புதுச்சேரி மாநில மீனவர்களின் கிளை மொழியை கட்டுரையாளர் ஆய்வு மேற்கொண்டபோது வெட்டியான் என்ற சொல்லாட்சி பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது தரப்படுத்தப்பட்ட தமிழ்ச் சொல்லாகும். பறையன் என்கிற சொல்லை ஆண்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பெண்கள் இச்சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துகின்றனர்.

            மேளம் (மோளம்), மேடு (மோடு), திண்ணு (துண்ணு), பிள்ளை (புள்ளே) போன்றவை தரப்படுத்தப்பட்ட சொற்கள், அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்கள் தரப்படுத்தப்படாத சொற்கள், மீனவப் பெண்கள் ஆண்களைவிட மேற்குறிப்பிட்ட தரப்படுத்தப்பட்ட சொற்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

            தொள்ளாயிரம் (தூளயிரம்), நல்லவரு (நெல்லவரு), சரியில்லெ (செரியில்லே), கொத்தனாரு (கொலுத்துகாரு), தொடப்பம் (தொடப்பக்கட்டே), மண்ணென்ன (மரஎண்ணெ), அதிகமாகவே (மிச்சமாவே) ஆகிய சொற்கள் தரப்படுத்தப்பட்ட சொற்கள், அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்கள் தரப்படுத்தப்படாத சொற்கள். அடைப்புக் குறிக்கு வெளியே உள்ள சொற்களைப் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

            தரப்படுத்தப்பட்ட சித்தப்பா என்ற சொல்லை பெண்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் நயினா என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

            உண்மெ, அர்சி, ரசம், விவசாயம், குடிசெ, வரிச்செ, தலகானி, பாணகொம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கொம்பேரி மூக்கன், சூரியன், வியாழன், பொதன், சாப்டு போன்ற தரப்படுத்தப்பட்ட சொற்களை ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பெண்கள் பயன்படுத்துகின்றனர். தரப்படுத்தப்பட்ட சொற்களைப் பெண்கள் பேசுகின்றனர் என்ற கருத்தை லெபோ (1966), டிரட்சில் (1974), பொய்தோன் (1989). யுரோவா ; (1989), ஏசுதாசன் (1977) போன்றோர் ஆதரிக்கின்றார்கள்.

            பெண்கள் தரப்படுத்தப்பட்ட சொற்களை 70.59 விழுக்காடும் ஆண்கள் 29.41விழுக்காடும் பயன்படுத்துகின்றனர்.

            பெண்கள் தரப்படுத்தப்பட்ட சொற்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு சமூகச் சூழலில் சொல்லின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.  மீன் விற்பதால் மற்ற சாதியினரோடு பழகும் சூழல் உருவாகிறது. அதனால் தரப்படுத்தப்பட்ட சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

            முடிவாக, ஆண், பெண் பேச்சில் ஒலிப்பில், இலக்கணத்தில், வாக்கியத்தில் வேறுபாடு உள்ளதை அறிய முடிகிறது.



பார்வை நூல்கள்:
1. பஞ்சாங்கம், க., பெண்-மொழி-புனைவு, காவ்யா, பெங்களூர், 1999.
2. பிரேமா, இரா., பெண்ணியம் சொற்பொருள்விளக்கம், ஷான்வி புக்ஸ், பெங்களூர், 2015.
3. ரேணுகாதேவி, வீ, சங்கப் பெண்பாற்புலவர்களின் மொழிநடை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2012.
4. Bodine, Ann, Sex Differentiation in Language. In Barrie Thorne and Nancy Henley. (eds.) Language and Sex: Difference andDominance. 130-151 Rowley, Mass: Newbury House Publishers, 1975.
5. Brouwer, Dedede, Gender Variation in Dutch : A Sociolinguistic Study of Amsterdam Speech. Dordrecht: Foris Publications. 1989.
6. Brouwer, D.M. Gerritsen and D.Dehaan, Speech Differences between Woman and Men: On the Wrong Track? Language in  Society 8:33-50.1979
7. Capell, Studies in Sociolinguistics, Paris, The Hague: Mounton, 1966.
8. Fischer, J.L., Social Influences in the Choice of a Linguistic  Variant, Word 14: 47-56, 1958.
9. Francis, Ekka, Men’s and Women’s Speech in Kurukh, Linguistics, 14:47, 1972.
10. Lonov, W. The Social Stratification of English in New York City,  Washington, D.C., Cal, 1966.
11. ______, Some Sources of Reading Problems for Negro Speakers  of Non-Standard English (Mino). Chicago: Spring Institute of on New Directions in Elementary English, 1966.
12. Mary, R.Hass, Man’s and Woman’s Speech in Koasati. In Dell  Hymns (ed.) Language, Culture and Society. 228. New York:  Harper and Row, 1964.
13. Poynton, Cate, Language and Gender: Making the Difference, Oxford : Oxford University Press, 1989.
14. Trudgill, Peter, Sex Covert Prestige and Linguistic Change in Urban British English Norwich, Language and Society I: 179-195,  1972.
15. Trudgill, P., The Social Differentiation of English in Norwich.  Cambridge: Cambridge University Press, 1974.
16. ______, Sociolinguistics: An Introduction. Haramondsworth:  Penguin, 1974.
17. Vasantha Kumari, T., The Standard Spoken Tamil, In  B.Gopinathan Nair (Ed.) Studies in Dialectology 1, 1. Trivandrum:  Department of Linguistics (Mimeo), 1976.
18. Warhaugh, Ronald. An Introduction to Sociolinguistics, Oxford  Basil Blackwell, 1990 (1986).
19. Wolfram, W., A Sociolinguistic Description of Detroit Negro  Speech. Washington, DC : Centre for Applied Linguistics, 1969.
20. Yesudhason, C., “Tamil Dialects of Kanyakumari District (with  reference to Vilavankodu Taluk)”, Unpublished Ph.D. Dissertation,  Annamalai Nagar : Annamalai University, 1977



நன்றி:  உலகத்தமிழ் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 


முனைவர் க. பசும்பொன்
மேனாள் இயக்குநர், உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை




விளக்குமாறாகும் தாவரங்கள்


 — ஆ.சிவசுப்பிரமணியன்


          தான் வாழும் இருப்பிடத்தை தூய்மையாக வைத்திருப்பது மனித குலத்தின் இயல்பு. வசிக்கும் இடத்தின் தரையில் படியும் தூசி, தண்ணீர், உண்ணும்போது சிதறிய உணவுத் துண்டுகள் ஆகியனவற்றை அகற்றும் பணியை அவன் மேற்கொண்டு வாழ்ந்துள்ளான். இது உயிரினங்களின் இறைச்சியை உண்டு குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தோன்றிவிட்டது எனலாம். தான் வேட்டையாடி உணவாகக் கொண்ட உயிரினங்களின் இறைச்சித் துணுக்குகளையும், எலும்புத் துண்டுகளையும் தான் வசித்த குகைக்குள் அவன் போடவில்லை. அவற்றையெல்லாம் குகைக்கு வெளியில்தான் குவித்து வைத்துள்ளான். இக்குவியலை 'அடிசிலறைக் கழிவுகள்' (கிச்சன் மிட்டன்ஸ்) என்று மானிடவியலார் குறிப்பிடுகின்றனர். இப்பணியை மேற்கொள்ள ஏதேனும் ஒரு கருவியை உருவாக்கி அவன் பயன்படுத்தியிருக்கும் வாய்ப்பு உள்ளது.

          தன் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்திருக்க அவன் உருவாக்கிப் பயன்டுத்திய கருவி, அவனது பொருள்சார் பண்பாட்டியல் (மெட்டீரியல் கல்சர்) வரலாற்றில் ஓர் இடத்தைப் பெறுகிறது.தமிழரது பொருள்சார் பண்பாட்டு வரலாற்றில், இருப்பிடத்தை தூய்மைப்படுத்தப் பயன்பட்ட கருவி ‘விளக்குமாறு’ என்று பொதுவாக அறியப்படுகிறது. இது தவிர ‘துடைப்பம்’, ‘வாரியல்’, ‘பெருக்குமாறு’ என்று வட்டாரத் தன்மை கொண்ட பெயர்களாலும் விளக்குமாறு அழைக்கப்படுகிறது. தமிழ் நிகண்டு நூல்களிலும் விளக்குமாறைக் குறிக்கும் சொற்கள் சில இடம் பெற்றுள்ளன.

          கி.பி. எட்டாவது அல்லது பத்தாவது நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் பிங்கல நிகண்டு (6:587) ‘துடைப்பம், சோதனி மாறு, அலகு வாருகோல்’ என்ற பெயர்களால் துடைப்பத்தைக் குறிப்பிடுகிறது. கி.பி. எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திவாகர நிகண்டு (6:199) ‘சோதினி, மாறு துடைப்பம்’  ஆகும் என்கிறது. இவ்விரு நிகண்டுகளுக்கும் காலத்தால் பிந்தைய சூடாமணி நிகண்டு (7:57) ‘சோதனி, மாறு’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. இவற்றுள் அலகு என்ற சொல் கல்வெட்டுகளில் இடம்பெறுவதுடன் கோவில் பணிகளுடன் தொடர்புடையதாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. அலகு என்ற பெயருடைய விளக்குமாறால் கோவிலைத் தூய்மை செய்வதை அலகிடல் என்று குறிப்பிடும் இடைக்காலக் கல்வெட்டுக்கள், இப்பணி மேற்கொள்வோரை அலகிடுவார் என்றழைக்கின்றன.

          இறைப்பணியின் ஓர் அங்கமாக அலகிடல் இருந்துள்ளது. சைவ சமயத்தில், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகையான நெறிகள் உண்டு. இவற்றுள் சரியை என்பது, ‘உடம்பின் தொழில்களாக நிகழ்வது’ என்று வெள்ளைவாரணார் (2002:724) விளக்கம் தருவார். இதற்கு எடுத்துக் காட்டாக, திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் (631:3) ஒன்றைக் குறிப்பிடுகிறார். (மேலது, 725). அப்பதிகத்தில்  ‘...எம்பிரானுடைய கோயில் புக்கும், புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. பொழுது புலரும் முன் கோயிலை அலகிடல் என்பது, அலகு என்றழைக்கப்படும் துடைப்பத்தால் கோயிலைப் பெருக்கி தூய்மைப்படுத்துவதைக் குறிப்பிடுகிறது.

          கோவிலுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் பொருட்களையும் ‘திரு’ என்ற அடைமொழியிட்டு அழைப்பது மரபு. இதன் அடிப்படையில் அலகு என்பதை திரு அலகு என்று குறிப்பிடும் மரபும் உண்டு. பெருக்குமாறால் (துடைப்பத்தால்) ஒருவனை அடி என்பதை ‘திரு அலகு எடுத்து திருச்சாத்து சாத்து’ என்று பகடியாகக் கூறுவது இம்மரபை அடிப்படையாகக் கொண்டதுதான். மூத்த பெண் தெய்வம் என்ற பொருளில் ஜோஸ்டாதேவி (சேட்டை) என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பெண் தெய்வம் ஒன்றுண்டு. மூத்ததேவி என்பதே மூதேவி என்றாயிற்று என்பர். தொடக்கத்தில் வழிபாட்டிற்குரிய தெய்வமாக இருந்து பின்னர் தூக்கம் சோம்பல் என்பனவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு இழிவான தெய்வமாக இதுமாற்றப்பட்டுள்ளது. மூத்தவள் என்ற பொருளைத்தரும் ‘தவ்வை’ என்ற சொல்லால் திருக்குறள் (167;2) இத்தெய்வத்தைக் குறிப்பிடும். தமிழ்நாட்டின் பழமையான கோயில்கள் சிலவற்றில் இத்தெய்வத்தின் சிலை இடம் பெற்றுள்ளது. இத்தெய்வத்தின் படைக்கலனாக, பெருக்குமாறு அமைந்துள்ளது. ‘வன்படை துடைப்பம்’ என்று பிங்கல நிகண்டு (2:97) குறிப்பிடுகிறது.

இழிவு:
          இப்படித் தொன்மையான எழுத்துப் பதிவுகள் இருப்பினும் இழிவான அடையாளமே விளக்குமாறுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாய்மொழி வழக்காறுகளிலும், மக்களிடையே வழக்கிலுள்ள நம்பிக்கைகளிலும் இது பதிவாகியுள்ளது. தகுதியற்ற ஒருவனுக்குச் செய்யப்படும் சிறப்பைக் குறிப்பிடும்போது ‘வாரியக்(ல்) கொண்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரி’ என்ற சொலவடையைப் பயன்படுத்துவதுண்டு. வாய்ச்சண்டையின்போது ‘உன்னை வாரியலால அடிப்பேன்’ என்று சூளுரைப்பதுண்டு. சிலர் வாரியல் என்ற சொல்லுக்கு முன்பாக ‘பழ’ என்ற அடைமொழியைப் பயன்படுத்துவதுண்டு. இங்கு பழ என்ற சொல் ‘பயன்படுத்திய’ என்ற பொருளை வெளிப்படுத்தும். ஆங்கிலக்காலனிய ஆட்சியின்போது அரசு அலுவலங்களைக் கச்சேரி என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகையில் காவல்நிலையமும் கச்சேரி எனப்பட்டது. காவல்நிலையத்தின் அழைப்பாணையின் பேரில் வாக்குமூலம் கொடுப்பதற்காக அங்குசெல்பவன் படும்பாட்டை

கச்சேரிக்குப் போவானேன்கையக்கட்டி நிற்பானேன்
வாக்குமூலம் கொடுப்பானேன் / சொல்வானேன்
வாரியப்(ல்) பூசை படுவானேன்

என்று சிறுவர் விளையாட்டுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறுது. இப்பாடல் பாடப்பட்ட காலத்தின் சமூக நடப்பியலை இதன் வாயிலாக அறியமுடிகிறது.விளக்குமாறைத் தொட்ட கையைக் கழுவாமல் குழந்தைகளைத் தொடக்கூடாது என்ற நம்பிக்கையும் உள்ளது. அப்படித் தொட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். இதன் அடிப்படையில் விளக்குமாறைப் பயன்படுத்திய பின்னர் கையைக் கழுவிவிட்டே குழந்தையைத் தொடுவர். அடைமழைக் காலங்களில் விடாது மழை பெய்து, மக்கள் தொல்லைக்கு ஆளாகும்போது மழையை நிறுத்தும் வழிமுறையாக விளக்குமாறை எடுத்து வந்து வானத்தை நோக்கி காட்டுவர். அதுபோல, முருங்கை, மா போன்ற மரங்களில் கண்ணேறு படுவதைத் தடுக்கும் வழிமுறையாகச் செருப்புடன் விளக்குமாறையும் கட்டித் தொங்கவிடுவதுண்டு.

          விளக்குமாறு என்ற சொல்லை மையமாகக் கொண்டு தமிழ் ஆசிரியர்களிடம் வாய்மொழி வழக்காறு ஒன்று வழக்கிலுள்ளது. அது வருமாறு:
          ‘பரிதிமாற் கலைஞர்’ என்று அழைக்கப்படும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் மாணர்வகளுக்கு தமிழ் யாப்பிலக்கணம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். யாப்பு (செய்யுள்) உறுப்புக்களாக எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை எனக் கூறிமுடித்தார். உடனே குறும்புக்கார மாணவன் ஒருவன் எழுந்து மிக அடக்கத்துடன், ‘அய்யா தொடைக்கு மேல் என்னவோ?’ என்று வினவினான். அதற்கு ‘விளக்குமாற்றால் விளக்குதும்’ என்று அவர் விடையிறுத்தாராம். இவ்விடையானது, ‘விளக்கும் முறையில் விளக்குவோம்’ என்றும், ‘விளக்குமாறு என்ற வீடு பெருக்கும் கருவியால் அடித்து விளக்குவோம்’ என்றும் இருபொருள் தருவதாய் அமைந்து நகைப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்த ஆய்வு ஒருபுறமிருக்க, விளக்குமாறால் அடிப்பதன் இழிவு குறித்த நம்பிக்கையை இது வெளிப்படுத்தி நிற்கிறது.

காணிக்கைப்பொருள்:
          இப்படி இழிவின் அடையாளமாகக் குறிப்பிடப்படும் விளக்குமாறு வழிபாட்டுக்குரிய ஆலயங்களில் காணிக்கைப் பொருளாகவும் இடம் பெறுகிறது. தமிழ்நாட்டின் சைவ வைணவக் கோவில்களில் இவ்வழக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வடஇந்தியாவில் ஆக்ரா நகரின் நெடுஞ் சாலையில் உள்ள பாடலேஸ்வரர் சிவன்கோவிலில், விளக்குமாறைக் காணிக்கைப் பொருளாக வழங்கும் வழக்கம் நிலவுகிறது. 150 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் சிவலிங்கத்திற்கு காணிக்கையாக, விளக்குமாறு வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தொடர்பாகப் பின்வரும் புராணக்கதை கூறப்படுகிறது:
          இக்கோயிலுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிக்காரி தாஸ் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். செல்வவளம் மிக்க இவர் தோல் நோயால் பாதிக்கப் பட்டார். அவர் உடல் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி உடல்நோவைத் தந்தன. இந்நோய்க்கு சிகிச்சை பெற ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைக் காணச் சென்றார். அவ்வாறு செல்லும்போது தாகம் மீதுற, அதைப் போக்கிக் கொள்ள வழியில் உள்ள ஆசிரமத்திற்குள் சென்றார். அவர் நுழைந்தபோது அங்கிருந்த துறவி ஒருவர் விளக்குமாறால் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த விளக்குமாறானது தவறுதலாக வணிகரின் மீதுபட்டுவிட்டது. உடனே வணிகரின் தோல்நோயும் உடல் வலியும் மறைந்து போயின. இதனால் ஆச்சரியமுற்ற வணிகர் இதற்கான காரணத்தை அவரிடம் வினவினார். தான் தீவிரமான சிவனடியார் என்றும் அவருடைய அருளால் இது நிகழ்ந்திருக்கும் என்றும் அவர் விடையிறுக்க, தங்கக்காசுகள் நிரம்பிய பையொன்றை அவருக்கு வழங்க வணிகர் முன்வந்தார். ஆனால் அந்த எளிய துறவி அதை ஏற்க மறுத்து, அதற்கு மாறாக சிவன்கோவில் ஒன்றைக் கட்டித் தரும்படி வேண்டினார். அதை ஏற்று சிவன் கோவில் ஒன்றை வணிகர் கட்டித் தந்தார்.

          துறவியின் துடைப்பம் பட்டு அவரது தோல் நோய் குணமானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்கும் வழக்கம் உருவாகி இன்று வரை அது தொடர்கிறது. தோல் நோயாளிகள் அதைப் போக்கும் வழிமுறையாக இக்காணிக்கை வழங்கலை மேற்கொள்கிறார்கள். (விக்கிப்பீடியா).

          இவ்வழக்கம் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளதா என்பது தெரியவில்லை. இது இருந்திருக்க வேண்டும் என்று கருதும் வகையில் தமிழ்நாட்டுக் கத்தோலிக்கத் தேவாலயங்கள் சிலவற்றில் காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்கும் வழக்கம் நிகழ்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் என்ற நகரமானது, வடகரை, தென்கரை என இரண்டு பிரிவுகளாக உள்ளது. இதில் வடகரையில் உள்ள ‘பத்திரிசையார்’ (புனித பேட்ரிக்) தேவாலயத்துடன் இணைந்த துணைக்கோவிலாக, புனிதவனத்து அந்தோணியார் ஆலயம் தென்கரைப் பகுதியில் உள்ளது. 1920- இல் கட்டப்பட்டு அகஸ்தினார் என்ற ஆயரால் திருநிலைப்படுத்தப்பட்ட இவ்வாலயத்தின் திருவிழா தை மாதம் நிகழும். உடலில் தோன்றும், பாலுண்ணி மரு, கட்டி என்பனவற்றைக் குணப்படுத்தும் மந்திர சிகிச்சை முறையாக, துடைப்பத்தைக் காணிக்கையாக வழங்கும் வழக்கம் இங்கு நிலவுகிறது.

          குறிப்பிட்ட வகைத் துடைப்பம் என்றில்லாமல் அனைத்து வகையான துடைப்பங்களும் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. காணிக்கைப் பொருளாகப் புதிய துடைப்பத்துடன் வந்து, கோவில் நுழைவாயில் கதவின் அருகில் அதை வைத்துவிட்டு: அந்தோணியாரை வணங்கிச் செல்வர். வீட்டுத் தேவைக்காகத் துடைப்பம் தேவைப்படும்போது, காணிக்கையாக வைக்கப்பட்ட துடைப்பத்தை எடுத்துச்செல்வோரும் உண்டு. இவ்வாறு எடுத்துச் செல்வோர் உரிய விலையைத் தாமாகவே முன்வந்து கோவில் உண்டியலில் போடுவர். சிலர் சந்தை விலையைவிடக் கூடுதலான தொகையைப் போடுவதும் உண்டு. (வின்சென்ட் டிபால், எஃபி, பாஸ்டின், நெல்சன் பெரியகுளம்).

          திண்டுக்கல் அருகில் உள்ள சிறுநாயக்கன்பட்டி பங்கைச் சேர்ந்த தாமஸ்புரம் தேவாலயத்தில் ஏப்ரலில் நிகழும் தோமையார் திருவிழாவின்போது நீண்ட வரிசையில் நின்று காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்குகிறார்கள். சமய வேறுபாடின்றி நிகழும் இந்நிகழ்வில் இக்கோவிலைச் சுற்றியுள்ள பேகம்பூர், நத்தம், குட்டியாம்பட்டி, பித்தளைப்பட்டி, மரியநாதபுரம், ஏ.வெள்ளோடு ஆகிய ஊர்களில் இருந்து திரளான மக்கள் இதில் பங்கேற்கிறார்கள். தரையில் உள்ள குப்பையை விளக்குமாறு பெருக்கித் தள்ளுவது போன்று மனிதர்களின் உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்த இக்காணிக்கை உதவும் என்ற நம்பிக்கை இங்கு வருவோரிடம் உள்ளது. (பணி. ர.ஜார்ஜ், சே.ச.,) தமிழகத்தில் கத்தோலிக்கம் பரவத் தொடங்கியபோது இங்குள்ள சமயம் சார்ந்த சடங்குகளையும், நம்பிக்கைகளையும் தழுவிக்கொண்டது. தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல், முளைப்பாரி வளர்த்தல், உப்பும் மிளகும் கலந்து காணிக்கைப் பொருளாக வைத்தல், உலோகம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட உடல் உறுப்புக்களைக் காணிக்கையாக வழங்கி குறிப்பிட்ட உடல் உறுப்பில் ஏற்பட்ட நோயைப் போக்கிக் கொள்ளலாம் என்று நம்புதல், தென்னை மரக்கன்றைக் காணிக்கையாக வழங்கல், கால்நடையாகக் குறிப்பிட்ட தலங்களுக்குப் பயணித்தல் என அவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் அவர்களது பழைய சமயவாழ்வின் தாக்கத்திற்கு ஆட்பட்டவைதாம். இவ்வாறு பண்பாட்டு வாழ்வில் இருவேறு பண்பாடுகள் இணைவதை பண்பாடு ஏற்றல் (Inpulpration) என்று மானிடவியலாளர் குறிப்பர். தமிழ்நாட்டுக் கத்தோலிக்கத் தேவாலயங்கள் சிலவற்றில் தோல் நோயைப் போக்கிக் கொள்ளும் வழிமுறையாக, துடைப்பத்தைக் காணிக்கையாக வழங்கும் செயலானது, தம் முந்தைய சமய வாழ்வின் எச்சமாக இப்பண்பாடு ஏற்றலை அவர்கள் பின்பற்றி வருவதாகக் கருத இடம் தருகிறது.

விளக்குமாறு வகைகள்:


          இருப்பிடத்தைத் தூய்மைப்படுத்த உதவும் கருவியான விளக்குமாறு ஒரே தன்மைத்தது அல்ல, பயன்படும் வட்டாரத்திற்கு ஏற்ப இதில் வேறுபாடுகள் உண்டு. இது நாட்டார் தொழில்நுட்பத்தின் பொதுக்கூறு. இவ்வேறுபாடு ஒருபக்கம் இருக்க, விளக்குமாறுகள் பலவகையாய் அமைவதன் அடிப்படைக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
          1. தூய்மைப்படுத்த வேண்டிய இடத்தின் இயல்பு
          2. அதன் துணையுடன் அப்புறப்படுத்த வேண்டிய பொருட்களின் இயல்பு
          3. அப்பகுதியில் பரவலாகக் கிடைக்கும் தாவரம்.

          திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் இக்காரணங்களின் அடிப்படையில் பயன் படுத்தப்படும் துடைப்பங்கள் தாவரங்களைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இத்தாவரங்களை இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்கள், மனிதர்கள் பயிர்செய்து வளர்க்கும் தாவரங்கள் என இருவகையாகப் பகுக்கலாம். இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களில் இருந்து புல்லுவாரியல், ஒட்டுப்புல் வாரியல் என இரு துடைப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதர்கள் பேணி வளர்க்கும் தென்னை மரத்தின் ஓலையில் காணப்படும் தென்னை ஈர்க்கு, பனைமரத்தின் குருத்தோலையுடன் இணைந்து காணப்படும், பனை ஈர்க்கு, பனையின் உச்சிப்பகுதியில் இடம் பெற்றுள்ள பீலி என்னும் உறுப்பு ஆகியனவற்றால் துடைப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. பயன்பாடு முடிந்த பருத்திச் செடியின் தண்டுப்பகுதி, கத்தரிச் செடியின் தண்டுப்பகுதி, மஞ்சணத்தி (நுணா) மரத்தின் சிறிய கிளைகள் என்பன விற்பனை நோக்கில் இன்றி பயன்பாட்டு நோக்கில் அவ்வப்போது துடைப்பங்களாக உருவாக்கப்படுகின்றன.

புல்லுவாரியல்:
          புல்லுமாறு என்றும் இதைக் கூறுவர். கரிசல் நிலப்பகுதியில் அறுகம் புல்லைப் போன்று தரையில் படரும் களைச் செடியைப் பிடுங்கிச் செய்யப்படுவதால் இது புல்லுவாரியல் எனப் பெயர் பெற்றுள்ளது. இப்புல்லை வாரியப்புல் என்றும் கூறுவர். போக்குவரத்து இல்லாத காலத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் இப்புல்லைச் சேகரித்துத் துடைப்பமாக ஆக்குவர். சிறார் முதல் முதியோர் வரை இதன் உருவாக்கத்தில் பங்கு பெறுவர். கரிசல் நிலப்பகுதியில் விளையும், கம்பு கேழ்வரகு, சாமை, சோளம், வரகு ஆகிய தானியங்களுக்குப் பண்டமாற்றாக இதை வழங்குவர். மண் தரைகளாலான வீடுகளில் பயன்படுத்த இது உதவும் தன்மையது. இதைப் பயன்படுத்தி தரையைக் கூட்டும்போது சாணியால் மெழுகப்பட்ட மண் தரை கிளறப்படுவதில்லை. உணவருந்தும்போது சிதறிய உணவுப் பொருட்கள் நைந்துபோய், தரையுடன் ஒட்டிக்கொள்வதில்லை. தண்ணீர் தேங்கியுள்ள செங்கல் தரைகளில் இதைப் பயன்படுத்துவது கிடையாது.

ஒட்டுப்புல் துடைப்பம்:          
          மூன்று அல்லது நான்கடி உயரத்திற்கு மெல்லிய தண்டுடன் குப்பைமேடுகளிலும், ஊருக்கு வெளிப் பகுதியிலும் வளரும் புல்வகை ஒன்றுண்டு. இதன் மேல் பகுதியில் குத்தும் தன்மை கொண்ட மெல்லிய மலர் போன்ற ஒரு உறுப்பு உண்டு. இது மனிதர்களின் ஆடையிலும் உயிரினங்களின் தோலிலும் ஒட்டிக்கொண்டு குத்தும் தன்மையது. சீலைப்புல் என்றும் இப்புல்லை அழைப்பர். இது காற்றில் பரவி இப்புல்லின் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இப்புல்லை அறுத்துக் காயவைத்து துடைப்பம் உருவாக்கப்படுகிறது. இப்புல்லின் அடிப்பகுதி துடைப்பத்தின் அடிப்பகுதியாக அமைய உச்சிப்பகுதி துடைப்பத்தின் நுனிப்பகுதியாக அமையும். நுனிப்பகுதி மென்மையாக இருப்பதால் செங்கல் பதிக்கப்பட்ட தரைகளிலும், சிமெண்ட் பூசப்பட்ட தரைகளிலும் படியும் தூசியை நன்கு அப்புறப்படுத்தும் தன்மையது. இதைப் பயன்படுத்தத் தொடங்கும்போது உச்சிப்பகுதியில் உள்ள மலர் போன்ற அமைப்பு தரையில் உதிர்வதுடன், மனிதர்களின் ஆடையில் ஒட்டிக்கொண்டு குத்தி வருத்தும். சற்றுப் பயன்படுத்திய பின்னரே இத்தொல்லையில் இருந்து விடுபட முடியும். ஈரம் படிந்த தரையில் இதைப் பயன்படுத்த முடியாது. தூசியை அப்புறப்படுத்த இது நன்கு உதவும்.

தென்னை ஈர்க்குத் துடைப்பம்:
          தென்னை ஓலையின் நடுவில் உள்ள சிறுகுச்சி போன்ற பகுதி ஈர்க்கு எனப்படும் ஈர்க்கினால் இது உருவாக்கப்படுகிறது. சொரசொரப்பான கல் பதிக்கப்பட்ட தரைகளைப் பெருக்குவதற்கு இது நன்கு உதவும். கல்தரைகளிலும், சிமெண்ட் பூசப்பட்ட தளங்களிலும், குப்பையை அகற்ற மட்டுமின்றி தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவவும் மரப்பொருட்களைத் தண்ணீர் ஊற்றிக் கழுவவும் இது நன்கு பயன்படும். விறகு அடுப்புகள் பயன்பாடு மிகுந்திருந்த பழைய காலத்தில் அடுப்பங்கரைச் சுவர்களும், புகைக்கூண்டின் உட்பகுதியும் புகைபடிந்து கருநிறமாகக் காட்சியளிக்கும். இதன் மீது நீரை ஊற்றி இத்துடைப்பத்தால் அழுத்தித் தேய்த்து கருநிறத்தைப் போக்குவர். ஈரம் காய்ந்த பின்னரே வெள்ளையடிப்பு நிகழும். வீடுகளின் சுவர்களில் இடம்பெறும் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகளின் வலை இவற்றை அகற்றவும், இதன் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்று. அதிக உயரத்தில் இதைப் பயன்படுத்த நீண்ட கம்பின் நுனியில் இதை இறுக்கிக்கட்டி ஒட்டடை குச்சியாகப் பயன்படுத்துவதுண்டு. இன்றும் கூட இது வழக்கில் உள்ளது.

பனை ஈர்க்குத் துடைப்பம்:
          பனையின் உச்சிப்பகுதியில் உருவாகும் வெண் நிறமான குருத்தோலை வளர்ச்சியுற்று பச்சை நிற ஓலையாக மாறும். இந்நிலையில் அதைச் சாரோலை என்பர். தென்னை ஓலையைப் போன்று சாரோலை நடுப்பகுதியில் ஈர்க்கு உருவாகும். சாரேலையின் அகலத் தன்மையைக் குறைத்து ஓலையையும் ஈர்க்கையும் பிரிக்காது துடைப்பம் செய்வர். இதனால் இதில் ஓலையும் ஈர்க்கும் இணைந்து காணப்படும். ஒட்டுப்புல் துடைப்பத்தைப் போன்று தூசி அகற்ற இது பயன்படும். ஆனால் அதைவிட ஓரளவுக்கு ஈரத்தரையில் பயன்படுத்தலாம். என்றாலும் தென்னை ஈர்க்குத் துடைப்பம் போன்று ஈரத்தரையில் பயன்படுத்த முடியாது.

பீலித் துடைப்பம்:
          ஆண் பனையின் உச்சியில் மட்டைகளுக்கு இடையில் பாளை என்ற உறுப்பு உருவாகும். இதைச் சீவியே கள்/பதநீர் எடுப்பர். பாளையின் பாதுகாப்பக் கவசம் போன்று பீலி என்றழைக்கப்படும் ஓர் உறுப்பு உண்டு. இதைக் கொண்டும் துடைப்பம் செய்வர் ‘வாரியப் புல்’ துடைப்பம் போன்று இதன் பயன்பாடு அமையும்.

பிற துடைப்பங்கள்:
          சரளைக்கற்கள் உள்ள நிலப்பகுதியிலும் மாட்டுத்தொழுவங்களிலும் பயன்படுத்த மேற்கூறிய துடைப்பங்கள் பயன்படாது. இந்நிலையில் பருத்தி, கத்திரி ஆகிய செடிகளின் பயன்பாடு முடிந்த நிலையில் அவற்றைப் பிடுங்கி வெயிலில் காயவைத்து, வைக்கோலைப் போன்று சேகரித்து வைப்பர். இவை உயிரினங்களுக்கும் உணவாகப் பயன்படாது. எரிபொருளாக மட்டுமே பயன்படும். இவற்றைக் கொண்டு துடைப்பம் போல் உருவாக்கி சரளைக்கற்களை அகற்றவும் மாட்டுத் தொழுவங்களில் சேரும் சாணம், தீவனக் கழிவுகளை அகற்றவும் பயன்படுத்துவர். இதே பணிகளுக்காக, சோளத்தட்டை, மஞ்சணத்தி (நுணா) மரத்தின் கிளைகள், நொச்சி செடியின் கிளைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்துவதுண்டு. நீர்வளம் மிக்க பகுதிகளில் வளரும் சிலவகையான நீர்க்கோரைகளை அறுத்துக் காயவைத்து துடைப்பம் செய்வதும் உண்டு.


          மொத்தத்தில் தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் துடைப்பங்கள், பயன்படுத்தும் தளம், அகற்றப்பட வேண்டிய கழிவுகள் அவ்வப்பகுதிக்குரிய தாவரங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டு வட்டாரத் தன்மையுடன் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் பயன்பாடு முடிந்த பின்னர், மண்ணில் மக்கி உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. சுற்றுப்புறச் சூழலைச் சீர்குலைப்பதில்லை.





நன்றி: 
உயிர் - மார்ச்-ஏப்ரல் 2019
நாட்டார் வழக்காறு

ஒளிப்படங்கள்:
சோ.தர்மன், முனைவர் ராமர் ரபெல் மத்வெட், பா.வெங்கடேசன், சு.உமாசங்கர், விக்கிபீடியா


பயம்


—  ருத்ரா இ.பரமசிவன்


ஒரு இந்து
ஒரு பயங்கரவாதி
ஒரு தீவிரவாதி
இதெல்லாம் சேர்த்து
யாரைக்கூப்பிடுவது.

"கடவுளே!"
ஆம்
அவனைத்தான்.
பின்னே என்ன?

ராம் ராம் என்று
பஜனை செய்யும்
ஒரு மனிதன் இருந்தான்.
அவனைச் சுட்டுத்தள்ள
ஒரு ராம் வந்தான்.

அவன் ஒரு கொலையாளி
அவன் ஒரு இந்து.
அவன் ஒரு பயங்கரவாதி.
அவன் ஒரு தீவிரவாதி.
ஆனாலும்
அவன் ஒரு கடவுள்
என   
சுடப்பட்டவன்
"ஹே ராம்"
என்று தான் விழுந்தான்.

கடவுளுக்கு
ஈவு இரக்கம் கருணை
எல்லாம் இல்லை.
ஏனெனில்
அவனிடம் "மானுடம்" இல்லை.
எல்லா வேதங்களையும்
வாந்தியெடுத்ததாகச்
சொல்லப்படும் அவனிடம்
அரிது அரிது
மானிடராகப் பிறத்தல் அரிது
என்ற வேதம் அதாவது
அறிவு மட்டும் இல்லை.
இருந்தால் எல்லோரிடமும்
"நான்" தான் இருக்கிறேன்
என்று கீதை சொல்லிவிட்டு
தன்னையே
தற்கொலை செய்வது போல்
இந்த கொலையைச் செய்திருப்பானா?
கேட்டால்
தர்மம் வென்றது என்பான்.
அதர்மமும் அவனுக்குத்
தர்மம் தான்.

கடவுளே
உன்னை "ஈஸ்வர அல்லா" என்று
கூப்பிட்டதற்கா
உன் சங்கு சக்கரங்களைத்
தூர எறிந்துவிட்டு
வெள்ளைக்காரன் கண்ட‌
துப்பாக்கியைத்தொட்டு
தீட்டுப்படுத்திக்கொண்டு
இந்த பயங்கரத்தைச் செய்திருப்பாய்?

கடவுளே
என்று உன்னைக் கூப்பிடக்கூட‌
இந்த தேசத்தில் "பயம்"தான்.
"கடவுளா"
இது என்ன மொழி?
சமஸ்கிருதம் இல்லையே
என்று இவர்களைச்
சுடுவதற்கு
ஒரு அரசாங்கத்தின் உருவில்
ஒரு அவதாரம் எடுத்தாலும்
எடுத்தாலும் எடுப்பாய் நீ.
இந்தக் கடவுள்கள்
எங்களுக்கு வேண்டாம் இனி.





தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)








த்தூ...

 —  வித்யாசாகர்


பனையோலை காலத்தைத்
தமிழாலே நெய்தோரே,
ஒரு பிடி தமிழள்ளி
உயிர்வரைக் குடித்தோரே;

பசுமாட்டு சாணந் தட்டி
பசி நெருப்பைத் தணித்தோரே,
சுரைக்காயில் சட்டிசெய்து
சம தர்மத்தை அளந்தோரே;

மரத்திலும் நதியிலும்
இறையச்சம் கண்டோரே,
கும்பிட்ட படையலையும்
நான்கு காகத்தோடு தின்றோரே;

உண்மைக்கும் வீரத்திற்கும் உயிரை
நன்றியோடு தந்தோரே,
அன்பென்றும் காதலென்றும் சொல்லி
அறத்தால் உயர்ந்தோரே;

எங்கே தொலைத்தீர்
யாரிடம் விற்றீரையா உம்மை ?
எங்கே காற்றில் போனதோ உங்கள்
மாண்பும் அறிவும் அறமும் ?

இருப்பது ஓருடல் ஓருயிர்
அதைச் சாதியால் பிரிப்பீரோ ?
மதத்தால் பிரிந்து
பின் மனிதத்தைக் கொல்வீரோ?

மானுடம் வெறுக்குதய்யா..
மனசு வலிக்குதய்யா..
ஐயோ; நெஞ்சு பதைக்குதய்யா
நித்தம் மரணம் மரணம் உயிர்கள் துடிக்குதய்யா..

எக்குலம் உன் குலம்
இன்று இரத்தக் குளம் ஆகலாமா?
எம் மொழி எவ்வினம் நீ
சாதி பார்த்துச் சாகலாமா?

ஓங்கி ஓங்கி வெட்டுகிறாய்
நீ கால காலத்தின் நீதிக்கு முப்பாட்டன் அறிவாயோ?
நீண்டு நீண்டு முடியா வரலாறு
அதை நீ ஒற்றைச் சாதிக்குள் அடைப்பாயோ?

அடித்தாலே வலிக்கிறதே; நீ அறுக்கிறாயே?
பொறுக்குமா நெஞ்சம்??
உயிரோடு புதைக்கிறாயே எரிக்கிறாயே
சகிக்குமா தாய்மை யுள்ளம் ??

ஆணென்றும் பாராமல்
பெண்ணென்றும் கூசாமல்,
குழந்தை கிழத்தைக் கூட
கொள்ளுதையா உன் சாதி;

மனிதத்தையும் மதிக்காமல்
சமயத்தையும் நினைக்காமல்
கடவுளின் பேர் சொல்லிக்
கொன்று குவிக்குதையா உம் மதம்;

சுட்டுச் சுட்டு வீழ்த்துவாய்
எல்லாம் வீழ்ந்தபின் நாளை
சுடுகாட்டில் அமர்ந்து அழுதால் -
அடங்கிவிடுமா உனது சாதி வெறி ? மத வெறி?

இருப்பவர் சிரிப்பவர் போனபின்
எஞ்சிய பிணக்காட்டில் நாளை
யாரைக்கண்டு அணைப்பாய்
எதன் வழி நாளை பிறப்பாய் ?

காறியுமிழ்கிறது உன் பிறப்பு
உன் பிணத்தின் மீதும் முகத்தின் மீதும்

த்தூ..!!!

தூக்கிக்கொண்டு ஓடு உன் கோபத்தை
நீயில்லா தெருக்களில் மீண்டும் பிறக்கட்டும்
சாதியின்றி மதமின்றி அந்த
பனையோலைக் காலத்தைத் தமிழாலே நெய்தவர்கள்!!



தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)




Saturday, May 11, 2019

வெஸ்ட்மினிஸ்டர் அபே நினைவுச்சின்னத்தில் திருச்சி மலைக்கோட்டை


——    தேமொழி


            பிரித்தானியப் பேரரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் ஒரு சிறந்த அணிகலன் (India, the crown jewel of the British Empire) என இந்தியா பெயர் பெற்றது. இவ்வாறு குறிப்பிட்டவர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli, 1874-81) என்ற இங்கிலாந்தின் பிரதமர். உலக வரலாற்றில், வளங்கள் பல கொண்ட, சிறப்பு மிக்க இந்தியா இங்கிலாந்துக்குக் கிட்டாமலே கைநழுவிப் போயும் இருக்கலாம். இந்தியாவை நவீன போர்க்கருவிகள் உதவிகொண்டு பிரான்ஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று நாம் யாவரும் பிரஞ்சு மொழி பேசும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டவர் தனது ஐம்பதாவது வயதில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தைப் பிரெஞ்சு வணிக அமைப்பின் தாக்குதல்களிலிருந்து காக்கும் பொறுப்பை ஏற்ற மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். இவரே இந்தியாவின் இராணுவத்தை முதலில் கட்டமைத்து உருவாக்கியவர் என்ற பெருமை பெற்றவர். இந்திய ராணுவத்தின் தந்தை என்று ஆங்கிலேயர் இவரைக் குறிப்பிட்டார்கள் (The First English Commander-in-Chief, India – Major-General Stringer Lawrence).

            இவர் உருவாக்கி வளர்த்தெடுத்த கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்புப்படையே பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் இராணுவமாகவும், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் இராணுவமாகவும் ஆனது. இந்தியாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றிக் கொண்டிருந்த பிரஞ்சு ஆளுநர் டூப்ளே (Dupleix) வின் கனவைக் கலைத்து, பிரான்ஸ் நாட்டிலேயே டூப்ளே மதிப்பிழந்து போகும் அளவிற்குத் தக்காணத்தில் அதிரடியாகப் போர்களை இவர் மட்டும் நடத்தியிராவிட்டால் இங்கிலாந்து இந்தியாவில் கால் ஊன்றி இருக்கமுடியாது. நாம் படித்த வரலாற்று நூல்களில் இவர் முக்கியத்துவம் சிறப்பித்துக் கூறப்படவில்லை என்பது மட்டுமல்ல, இங்கிலாந்திலும் இவர் சாதனையை யாரும் சென்ற நூற்றாண்டிலேயே நினைவு வைத்திருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறுதான் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் வரலாற்றை 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நூலாக எழுதி வெளியிட்ட ஜான் பிட்டுல்ஃப் என்பவரும் கருதுகிறார் என்பதை அவர் நூலைப் படிக்கையில் அறிய முடிகிறது. வரலாற்றின் திருப்புமுனையை உருவாக்கிய ஒருவர் ஏனோ யாராலும் அறியப்படாமலே இருந்துவரும் நிலை தொடர்கிறது.

            பிரிட்டிஷ் இந்தியா என்பதன் துவக்கத்தை ராபர்ட் கிளைவ் என்பதிலிருந்தே தொடக்கம் என்றுதான் வரலாற்றில் கூறப்படுகிறது. ஆனால் தனது கீழ் பணியாற்றிய இராபர்ட் கிளைவ் என்ற துடிப்பு மிக்க போர் வீரரை அடையாளம் கண்டதுடன், தக்க வகையில் அவரைப் பயன்படுத்திக் கொண்டவர் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். அவர் இந்தியாவில் தான் நடத்திய போர்களைப் பற்றி எழுதியிருந்தாலும் (‘A Narrative of Affairs on the Coast of Coromandel from 1730 to 1764′ — Stringer Lawrence) தனது பங்களிப்பைப் பெரிதுபடுத்தி விவரிக்க முற்படவில்லை. கிளைவிற்கு அவரது பணியைப் பாராட்டி அரசு வைரம் பதித்த வீரவாளைப் பரிசளித்துப் பெருமைப்படுத்த முற்பட்டபொழுது, கிளைவ் அதனை ஏற்க மறுத்து மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ்சுக்கும் பரிசளித்தாலே தானும் ஏற்றுக் கொள்ளமுடியும் என்று கூறும் அளவிற்குத்தான் அன்றே நிலைமை இருந்திருக்கிறது.


Stringer_Lawrence.JPG


            இவர் பங்களிப்பைப் பாராட்டும் விதத்தில் பதவி உயர்வும் அளிக்கப்படாமல்,  நீண்டகாலம் பணிபுரிந்த அனுபவம் என்ற அடிப்படையில் மற்றொருவரைத் தலைவராக அறிவித்த பொழுது மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் வெறுப்படைந்து அவர் கீழ் ஒத்துழைக்க மறுத்த நிலையும் இருந்துள்ளது. இந்தியாவில் சுமார் இருபது ஆண்டுகள் அவர் பணியாற்றிய காலத்திலேயே இனி இந்தியாவிற்கு வரப்போவதில்லை என்ற வெறுப்பில் எடுத்த முடிவுடன் இருமுறை இங்கிலாந்து சென்று மனம்மாறி பின்னர் மீண்டும் திரும்பி வந்துள்ளார். இறுதியாக 1766இல் பணி ஓய்வு பெற்றுச் சென்று அவர் அங்கு மறைந்திருக்கிறார். காலம் முழுவதும் கிளைவும் இவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்துள்ளார்கள். கிளைவ் செய்த செயல்கள் தகுந்த முறையில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் இவர் கவனமாக இருந்துள்ளார். கிளைவும் இவரை மதித்து இவருக்கு நல்ல ஓய்வூதியம் கிடைக்க அவரால் ஆன வகையில் உதவியிருக்கிறார்.


enlarged2.JPG


            மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் மறைவுக்குப் பிறகு இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தின் வடக்குப் பகுதியில், பெருமைக்குரியவர்களுக்காக நினைவுச்சின்னம் அமைக்கும் இடத்தில் இவருக்கும் ஒரு நினைவுச்சின்னம் கிழக்கிந்தியக் கம்பெனியால் அமைக்கப்பட்டது. வில்லியம் டைலர் என்ற சிற்பி உருவாக்கிய நினைவுச்சின்னத்தில், வெண்மை நிறத்தில் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்சின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு அதன் கீழே ஒரு தேவதையும் ஒரு பெண்ணும் இருபுறத்திலும் அமர்ந்திருக்க, கிழக்கிந்தியக் கம்பெனியின் குறியீடாக அவருக்கு இடப்புறமுள்ள பெண் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்சைச் சுட்டிக் காட்டும்வகையில் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. சிலைக்குக் கீழுள்ள பீடத்தில் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்சிற்குரிய சின்னம் (Coat of arms) பொறிக்கப்பட்டிருக்கும், அதற்கும் கீழே பெண்ணின் முழங்கால் அருகில் உள்ள செவ்வக அமைப்பில் திருச்சி மலைக்கோட்டையின் புடைப்பு உருவம் செதுக்கப்பட்டு அதன் கீழ் “திருச்சினாபோலி” (Trichinopoly) என்று திருச்சிராப்பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது உச்சரிப்புக் குறைபாட்டுடன் அழைக்கப்பட்ட விதத்தில் குறிக்கப்பட்டிருக்கும். இடப்பக்கம் உள்ள தேவதையின் கையில் உள்ள கேடயத்தில் இரண்டாம் கர்நாடகப் போரில் (மே 1753 – அக்டோபர் 1754) மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் ஆர்காட்டு நவாப் மகமது அலிகான் – வாலாஜாவுக்கு ஆதரவாகப் பிரெஞ்சுக்காரர்களுடன் போரிட்டு திருச்சியைக் கைப்பற்றியது குறிப்பிடப்பட்டிருக்கும்.

“Born March 6, 1697; died January 10, 1775”

“For Discipline Established, Fortresses Protected, Settlements Extended, French and Indian Armies Defeated, and Peace Concluded in the Carnatic”

அதற்கும் கீழுள்ள கருப்பு பளிங்கு பீடத்தில்;

“Erected by the East India Company to the memory of Major General Stringer Lawrence in testimony of their gratitude for his eminent services in the command of their forces on the coast of Coromandel from the year MDCCXLVI to the year MDCCLXVI”.

எனப் பொறிக்கப்பட்டுள்ளது.


Stringer_Lawrence-Monument-Wwestminster-Abbey.JPG


            மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் திருச்சியைக் கைப்பற்றி சாந்தா சாகிப் (Chunda Sahib) பின் கதையை முடித்து, பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே வின் ஆதிக்கத்தை வளரவிடாமல் தடை செய்யும் வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய எதிர்காலம் நம்பிக்கை தரும் வகையில் அல்லாமல் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிலை வெறும் நூலிழையில் ஒட்டிக்கொண்டிருந்தது என்பதுவே மறுக்கமுடியாத உண்மை. அந்தச் சூழ்நிலையைச் சற்று விரிவாகவே காண்போம்.

            18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், வடக்கில் மன்னர் ஔரங்கசீப்பின் (கி.பி. 1707) மறைவுக்குப் பிறகு முகலாய பேரரசின் ஆட்சியாளர்கள் திறமை குறைந்தவர்களாக இருந்த காரணத்தால் பல சிற்றரசுகள் தனியாட்சி அரசுகளாக தங்களை அறிவித்துக் கொண்ட காலம் இந்தியாவின் போராட்டங்கள் நிறைந்த காலத்தின் துவக்கம். தக்காணத்தில் மராட்டியர்களுக்கும், தன்னாட்சி அமைத்துக் கொண்ட ஆர்காட்டு நவாபுக்கும் இடையில் அரசுரிமைப் போட்டி. தன்னாட்சி செய்த ஹைதராபாத் நிஜாம் அரச குடும்பத்தில் வாரிசுரிமைப் போட்டி. இக்காலத்தில் வாரிசுரிமைச் சச்சரவுகளே பெரும்பாலான உள்நாட்டுப் போர்களுக்குக் காரணமாகவும் அமைந்தன.

            ஹைதராபாத் நிஜாமிடம் இருந்து 1713 இல் தன்னைவிடுவித்துக் கொண்டு ஆர்காட்டை நவாப் தோஸ்த் அலிகான் ஆட்சி செய்கிறார். மராட்டியர்கள் கி.பி. 1741இல் படையெடுத்து வந்து ஆர்க்காட்டு நவாப் தோஸ்த் அலிகானைக் கொன்று அவருடைய மருமகனான சந்தாசாகிபைச் சிறை பிடித்துச் செல்கிறார்கள். இதுதான் தொடர் போர்களையும், கர்நாடகப் பகுதியில் ஐரோப்பியர் ஊடுருவலையும் துவக்கி வைக்கிறது. தோஸ்த் அலிகானின் மகனும் தொடர்ந்து உறவினர் ஒருவரால் கொலையுண்டு மாண்டு போக, ஹைதராபாத் நிஜாம் அன்வாருதீன் என்பவரை 1744ல் ஆர்காட்டின் நவாப் ஆக்குகிறார்.

           உள்நாட்டுச் சண்டை போதாதென்று வணிகம் செய்ய வந்த பிரெஞ்சு மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனங்களுக்கு இடையிலும் போர் நிகழ்ந்த காலம் அது. ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் இடையூற்றை நிறுத்தச் சொல்லி பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே ஆங்கில அரசின் உதவியை நாடுகிறார். ஆங்கிலேய அரசு நாட்டுக்குள் அவர்களின் கிழக்கிந்திய வணிக நிறுவனம் போரில் இறங்காது. ஆனால், கடலில் வணிக கப்பல்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறிவிடுகிறது. ஆங்கிலேயக் கப்பல்கள் பிரெஞ்சு கப்பல்களைத் தாக்குகிறது. வெறுப்படைந்த டூப்ளே ஆங்கிலேயரின் சென்னை கோட்டையைத் தாக்கி கைப்பற்றுகிறார் (1746). ஆங்கிலேயரிடம் முறையான படை என ஒன்றும், பயிற்சி அளிக்கப்பட்ட போர் வீரர்கள் என்றும் எவரும் இல்லை. அவர்களின் வணிக நிறுவனம், தொழிற்சாலை போன்றவற்றின் காவலுக்காக வைத்திருக்கும் சில ஐரோப்பியக் காவலாளிகளையும், உள்ளூர் காவலாளிகளையும் ஒருவாறு ஒருங்கிணைத்து பிரெஞ்சுப்படையைத் தாக்கி தோல்வி அடைகிறார்கள். ஆர்காட்டு நவாபின் உதவியை நாடுகிறார்கள். அவர் அனுப்பி வைத்த  படையும் பிரெஞ்சுப் படையுடன் போரிட்டுத் தோல்வியடைந்து திரும்பிவிடுகிறது.

            இதனால் ஆர்காட்டு நவாபை தங்கள் எதிரி என அடையாளம் காணுகிறார் டூப்ளே. வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கிறார். ஆனால் ஆஸ்திரிய உரிமைப் போட்டி காரணமாக ஏழாண்டுக் காலம் (கி.பி. 1742-1748) ஐரோப்பாவில் போரில் ஈடுபட்டிருந்த பிரான்சும் இங்கிலாந்தும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு, இருநாட்டு வணிக நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுக்குள் எந்தப் போரிலும் ஈடுபடக்கூடாது, அவரவர் கைப்பற்றிய இடங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அந்த உடன்படிக்கையின்படி பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே சென்னை கோட்டையை ஆங்கிலேயர் வசம் திருப்பி ஒப்படைத்தாலும் வெற்றி பெற்ற படை தன்னிடம் இருக்க உள்நாட்டில் விரிவாக்கம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறார். பிரெஞ்சு நிறுவனம் நல்ல படையையும் அதிக எண்ணிக்கையில் வீரர்களையும் கொண்டிருந்த காலம் அது. இங்கிலாந்து தங்கள் வணிக நிறுவனத்தின் பாதுகாப்பிற்கு ஸ்ட்ரிங்கர் லாரன்சை 1747 இல் இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். கடலூர் அருகே ஆரியங்கோப்பு, தஞ்சையில் தேவிகோட்டை போன்ற சில போர்களுக்குப் பிறகு அவர் 1750 முடிவில் இங்கிலாந்து திரும்பிவிடுகிறார்.

            ஹைதராபாத் நிஜாமின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அரசுரிமைப் போட்டியில் இறங்குகிறார்கள். நசீர் ஜங்கும் ஆர்க்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர். ஆங்கிலேயருக்கு உதவுவதற்காக பிரெஞ்சுப்படையை எதிர்த்த ஆர்க்காடு நவாபுக்கு ஆங்கிலேயர் ஆதரவு இருக்கிறது. பிரெஞ்சு உதவியுடன் பணம் கொடுத்து விடுதலைபெற்ற சாந்தா சாகிப் தனது மாமனார் ஆட்சி செய்த ஆர்க்காடு நவாப் உரிமை தனது என்று கூறி பிரெஞ்சு உதவியுடன் அன்வாருதீன்கானை எதிர்க்கிறார்.

            ஆம்பூரில் நடந்த போரில் 1749இல் அன்வாருதீன் கொல்லப்படுகிறார். சாந்தா சாகிப் தன்னை  ஆர்க்காடு நவாபாக அறிவித்துக் கொள்கிறார். ஆங்கிலேயர் ஆதரவளித்த இருவருமே கொல்லப்படுகிறார்கள். ஹைதராபாத் நிஜாம் என உரிமை கோரிய நசீர் ஜங்கும் கொல்லப்படுகிறார். ஆர்க்காட்டு நவாப் அன்வாருதீன் மகன்களில் ஒருவரும் கொல்லப்படுகிறார். மற்றொருவர் மகமது அலிகான்-வாலாஜா திருச்சிக்குத் தப்பிச் சென்று ஆங்கிலேயர் உதவி கோருகிறார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே ஹைதராபாத் நிஜாமாகவும், ஆர்காட்டு நவாபாகவும் பதவியேற்கின்றனர்.

            ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆர்க்காட்டைக் கைப்பற்றி சாந்தாசாகிபையும் அவரது மகனையும் போரில் தோற்கடிக்கிறார்கள். ஆர்க்காடு நவாபாக யார் பதவி ஏற்பது என்ற வாரிசுரிமைப் போர் திருச்சிக்கு நகர்கிறது.

            மார்ச் 14, 1752 அன்று இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்பட்ட ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ், கிளைவ் தலைமையில் நடக்கவிருந்த போருக்குத் தலைமையை ஏற்றுக் கொள்கிறார். வந்திறங்கிய மூன்றாம் நாளே படையை திருச்சி நோக்கி நடத்திச் செல்கிறார். இரண்டாம் கர்நாடகப் போராகப் பொன் மலைப் போர் (Battle of Golden Rock) என்பது 1753, ஜூன் 26 இல் நிகழ்ந்தது.

            திருச்சியில் ஆங்கிலேயரிடம் புகலிடம் பெற்ற ஆர்க்காட்டு நவாப் மகமது அலிகான்-வாலாஜாவுக்கு ஆதரவாக, தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப் சிங், மராட்டியப் படைத்தளபதி முராரி ராவ், ஸ்ட்ரிங்கர் லாரன்சின் தலைமையில் கிளைவ், டால்ட்டன் போன்ற தளபதிகளைக் கொண்ட ஆங்கிலேயப்படை என யாவரும் திருச்சியை மையமாகக் கொண்டு போரில் ஈடுபட்டனர்.

            ஆர்காட்டு நவாப் பதவிக்கு உரிமை கோரும் சாந்தா சாகிப், ஹைதராபாத் நிஜாம் முசாஃபர் ஜங், மைசூர் அரசின் படைத்தளபதி ஹைதர் அலி, ஆகியோருடன் லா என்ற பிரெஞ்சு தளபதியின் தலைமையின் கீழ் பிரெஞ்சு ஆளுநர் டூப்ளேயின் படை களத்தில் இறங்கியது. அவர்கள் ஆங்கிலேயரின் திருச்சி புறக்காவல் நிலையத்தைத் தாக்கினார்கள்.

            திருவரங்கத்தில் பிரெஞ்சுப்படை பாசறை அமைத்தது. பொன்மலை, காஜாமலை, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் மலை, உய்யக்கொண்டான் திருமலை எனத் திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் அனைத்திலும் ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுப்படைகள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. காவிரியைக் கடந்து வடகரை சென்று பிரெஞ்சுப்படையைச் சுற்றிவளைக்கலாம் என்ற கிளைவின் திட்டத்தை ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் ஏற்று அவரை அனுப்பி வைக்கிறார்.

            காவிரியைக் கடந்து வடகரையில் சமயபுரத்தில் கிளைவ் பாசறை அமைத்து பிரெஞ்சுப்படையைச் சுற்றி வளைக்கிறார். டூப்ளே உதவிக்கு அனுப்பிய பிரஞ்சுப் படையையும் தடுத்து நிறுத்தி அவருடனான தொடர்பையும் துண்டிக்கிறார்கள். போரின் இறுதியில் ஆங்கிலப்படை வெற்றி கொள்கிறது. சரணடைந்து தப்பிச்செல்லப் பேரம் பேச முனைந்த சாந்தா சாகிப் கைது செய்யப்பட்டு, 1752 இல் தஞ்சையின் மராட்டியப் படைத்தலைவரால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார். அவரது உடல் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது.

            ஆங்கிலேயர்கள் மீட்டுத் தந்த ஆர்க்காட்டின் நவாபாக அன்வாருதீன் மகன் மகமது அலிகான் – வாலாஜா 1795 வரை ஆள்கிறார். ஆங்கிலேயப்படை உதவிக்கான செலவைத் திருப்பிக் கொடுக்க வேண்டி, தனக்குப் பாளையக்காரர்கள் மூலம் கப்பமாகக் கொடுக்கப்படுவதில் ஆறில் ஐந்து பகுதி வரியை வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுக் கொடுக்கிறார் ஆர்க்காட்டு நவாப் (அதை ஆங்கிலேயருக்குச் செலுத்த மறுத்த கட்டபொம்மன் போரின் இறுதியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகிறார் என்பது தமிழகம் நன்கு அறிந்த வரலாறு).

            பிரஞ்சு ஆளுநர் டூப்ளே வின் செயல்பாட்டில் நம்பிக்கையிழந்த பிரான்ஸ் அவரைத் திரும்ப அழைத்துக் கொள்கிறது. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் வணிகம் இராணுவ கட்டமைப்பால் இந்தியாவில் விரிவடைகிறது. உள்நாட்டுக் கலகங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒருசில அரசுகளைத் தவிர்த்து, அடுத்து வந்த ஒரு நூறாண்டுக்குள் இந்தியாவின் பெரும்பான்மையான இடங்கள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. இந்தவகையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் திருச்சியில் பிரெஞ்சுப்படைகளை முறியடித்த நிகழ்வே துவக்கம் எனக் கூறலாம்.




References:
• Westminster Abbey – https://www.westminster-abbey.org/abbey-commemorations/commemorations/stringer-lawrence
• Stringer Lawrence, the Father of the Indian Army, John Biddulph, J. Murray, 1901
• The Monthly Review, Volume 46, Ralph Griffiths, George Edward Griffiths, R. Griffiths, 1772
• Historical Sketches of the South of India, in an Attempt to Trace the History of Mysoor, Etc, ‘Volume 1′, Mark Wilks, Higginbotham and Company, 1869
• The chronology of modern India for four hundred years from the close of the fifteenth century, A.D. 1494-1894, James Burgess, 1913
• Stringer Lawrence, by Henry Manners Chichester, Dictionary of National Biography, 1885-1900, Volume 32
• தமிழகத்தில் நடைபெற்ற போர்கள், http://www.tamilvu.org/courses/degree/a031/a0314/html/a0314113.htm



நன்றி:  சிறகு -  http://siragu.com/வெஸ்ட்மினிஸ்டர்-அபே-நினை/



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)