Tuesday, May 7, 2019

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 6

*பகுதி 6  - தொடர்கின்றது.* 

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்


-முனைவர் க.சுபாஷிணி





          இலங்கையின் மன்னர்கள் வரலாற்றில் மகா பராக்கிரமபாகுவின் காலம் பொற்காலமாகும். நாட்டின் இயற்கை வளம் மேம்பட்டதுடன் விவசாயம் அபரிதமான வளர்ச்சியை இம்மன்னனின் காலத்தில் கண்டது. இலங்கையின் செல்வச்செழிப்பும் கலை வளர்ச்சியும் இம்மன்னனின் காலத்தில்தான் விரிவாக்கம் கண்டது.  அத்துடன் இலங்கையிலிருந்து கிழக்காசிய நாடுகள் பலவற்றிற்கும் பௌத்த பிக்குகள் பலர் சென்று பௌத்தம் வளர்த்தனர்.   கிழக்காசிய நாடுகளில் இலங்கையைச் சார்ந்த பௌத்த பிக்குகளின் தாக்கம் என்பது இன்றளவும் மிகத் தெளிவாக நாம் உணரக் கூடியதாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

          மகா பராக்கிரமபாகுவின் மறைவுக்குப் பின்னர் பல அரசர்கள்  இலங்கையின் ஆட்சியைத் தொடர்ந்தனர். நிலையான ஆட்சி என்பது தொடரவில்லை. அந்தக் காலகட்டத்தில், கலிங்க தேசத்தை, அதாவது இன்றைய ஒடிசா மாநிலத்திலிருந்து  கொடூர மனம் கொண்ட இளவரசன் மாகன் என்பவன் 20,000  போர் வீரர்களுடன் இலங்கைக்கு வந்து போரிட்டு இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் புத்தவிகாரைகளை சேதப்படுத்தினான் என்றும் , இந்த கலிங்க மன்னன் தமிழன் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          இந்தக் கலிங்க தமிழ் அரசனான மாகன்,  அந்த சமயம் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனைக் கைது செய்து, அவனது கண்களைப் பிடுங்கி,  சொத்துக்களை அபகரித்து கொள்ளையிட்டான் என்றும் ,அதன் பின்னர் அவன் புலத்தி நகரில் முடி சூடிக் கொண்டு 21 வருடங்கள் கொடுங்கோலாட்சி நடத்தினான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          அவனது ஆட்சியின்போது சிங்கள அரசர்கள் சிலர் ஆங்காங்கே சிறிய சிற்றரசுகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் ஸ்ரீ சங்கபோதி, அதற்குப் பின்னர் பராக்கிரமபாகு, என ஆட்சி  தொடர்ந்தது. 

          அதற்குப் பின்னர் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகின்றது.  எல்லாளன் பற்றி சூளவம்சம் விரிவாக வேறு எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை. துட்டகாமினி என்ற   பெயர் கொண்ட மன்னன்  எல்லாளனுடன் போரிட்டு இலங்கையைக் கைப்பற்றினான். அதற்குப் பிறகு வட்டகாமினி என்பவன் நாட்டை கைப்பற்றி ஆண்டான். ஆனால் பின்னர் ஐந்து தமிழ் ஆக்கிரமிப்பாளர்களிடம் அவன் நாட்டை பறிகொடுத்தான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் தாதுசேனன் என்பவன் நாட்டைக் கைப்பற்றி சில காலம் ஆண்டுவந்தான். அந்தச் சமயம் ஆறு தமிழ் மன்னர்கள் போரிட்டு நாட்டை மீண்டும் பிடித்துக் கொண்டார்கள். அதன் பின்னர் அவர்களை விரட்டிவிட்டு விஜயபாகு என்பவன் நாட்டை ஆட்சி செய்தான்.

          அதன்பின்னர் மாகன், ஜயவாகு என்ற இரண்டு தமிழ் மன்னர்களின் தலைமையில் 40 ஆயிரம் தமிழ் வீரர்களும் கேரள வீரர்களும் இருந்து மன்னர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது. இந்த மன்னர்கள் ஆட்சியில்   நாட்டின் பல இடங்களில் மேம்பாடுகளை உருவாக்கினர் என்றும் சூளவம்சம் செல்கிறது

          ஆச்சரியமாக இன்னொரு செய்தியையும் சூளவம்சம் பதிவு செய்கிறது. 

          இக்காலகட்டத்தில்  இரண்டாம் பராக்கிரமபாகு என்பவன் போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இந்த பராக்கிரமபாகுவின் 11வது ஆண்டுக் காலத்தில் மலாயா நாட்டைச் சார்ந்த சந்திரபானு என்ற ஒரு இளவரசன் இலங்கை மீது படையெடுத்தான் என்றும்,  ”நாங்களும் பௌத்தர்கள்” என அறிவித்துப் பேரிட்டான் என்றும், ஆனால் அவன் பராக்கிரமபாகுவின் வீரர்களால் துரத்தி அடிக்கப்பட்டான் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இது ஏறக்குறைய கிபி 12ஆம் நூற்றாண்டு கால கட்டமாக இருக்கலாம். தோற்று ஓடிப்போன சந்திரபானு சும்மா இருக்கவில்லை.  சந்திரபானு மலாய் வீரர்களையும் பாண்டிய சோழ தமிழ் போர் வீரர்களையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் இலங்கை மீது போர் தொடுத்தான். ஆனால் வெற்றி பெற முடியாமல் அவன் துரத்தி அடிக்கப்பட்டான். பராக்கிரமபாகுவின் ஆட்சி தொடர்ந்தது. இவன் 35 வருடங்கள் ஆட்சி நடத்தினான். அதன்பிறகு அவனது மூத்த மகன் விஜயபாகு அரியணை ஏறினான்.

          விஜயபாகுவின் காலத்தில் இந்தியாவிலிருந்து பாண்டிய மன்னன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் தனது மந்திரியையும்   தளபதிகளையும் அனுப்பி இலங்கையின் மீது போர் தொடுத்தான். பாண்டியனின் படைகள் இலங்கையின் பல பகுதிகளைப் பாழாக்கி   புனித தந்ததாதுவையும் ஏராளமான சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு தமிழ் நாடு திரும்பியது.

          சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜயபாகுவின் மகன் பராக்கிரமபாகு பாண்டிய நாடு சென்று மன்னனிடம் பேசி புனித சின்னங்களை இலங்கைக்கு மீட்டு வந்தான். அவற்றைப் பொலநருவ நகரில் புனித தந்ததாது கோயிலில் பிரதிஷ்டை செய்தான். சில ஆண்டுகள் ஆட்சி செய்து பின் இறந்தான். அதன் பின்னர் மீண்டும் அடுத்தடுத்து சில மன்னர்கள் ஆட்சியிலிருந்தனர்.

          இலங்கையை ஆண்ட மன்னர்களில் பெரும்பாலோர் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களே. ஒரு சில சிங்கள மன்னர்கள் மட்டுமே சைவ நெறியையும் ஆதரித்திருக்கின்றார்கள். அதற்கு உதாரணமாக ராஜசிங்கன் என்பவனைப் பற்றிக் குறிப்பிடலாம். இவன் மாயாதுன்னை என்பவனின் மகன். ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது தந்தையைக் கொன்று ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் தன் தந்தையைக் கொலை செய்து விட்டோமே என்று பயந்து, அந்த பாவத்தை எப்படி போக்குவது என்று பௌத்த முனிவர்களிடம் கேட்க, அவர்கள் கூறிய எந்த பரிகாரமும் அவனுக்குத் திருப்தி அளிக்காத நிலையில், சிவனை வழிபடுகின்ற சைவர்களிடம் பரிகாரம் கேட்க, அவர்கள் சொன்ன பரிகாரம் அவனுக்கு மனதிற்குப் பிடிக்கவே,   அவன் சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டான். உடல் முழுவதும் திருநீறு பூசி சைவனாகி சிவ வழிபாடு செய்யத் தொடங்கினான்.  அதன் பின்னர் பிக்குகள் சிலரைக் கொன்றான். புனிதமான பௌத்த நூல்கள் பலவற்றை எரியூட்டினான்; பௌத்த விகாரைகளை இடித்துத் தள்ளினான்;  பௌத்த பிக்குகள் பலர் பயத்தினால் தங்கள் சின்னங்களைக்  கலைத்து விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் சென்றனர்.  பழி பாவத்துக்கு அஞ்சாத ராஜசிங்கன் பௌத்த மதத்தை இவ்வாறு சீரழித்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது.


-  முனைவர் க. சுபாஷிணி




No comments:

Post a Comment