Thursday, October 15, 2020

"கல்வெட்டுப் படி"

 "கல்வெட்டுப் படி"

- மா.மாரிராஜன் 


வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள சாசனங்களான கோவில் கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட்டனர் நம் முன்னோர். ஒரு அரசன் கோவில் ஒன்றைச் செப்பனிடும் போது, அங்குள்ள பழையக் கல்வெட்டுச் செய்திகளைப் படியெடுப்பார்கள். செப்பனிடும் வேலை முடிந்தபின்பு படியெடுத்த கல்வெட்டுச் செய்தியை மீண்டும் கல்லில் வெட்டுவார்கள்.

" இது ஒரு பழம் கல்வெட்டு " என்ற குறிப்புடன் கல்வெட்டுச் செய்தியைப் பதிவு செய்வார்கள். குடுமியான்மலைக் கோவில் மடப்பள்ளியின் கீழ்புறச்சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு. மதுரைகொண்ட கோபரகேசரியான பராந்தகனின் 33 ஆம் ஆட்சி யாண்டு, அதாவது கி.பி.940 வெட்டப்பட்ட கல்வெட்டு.  

பராந்தகனின் படைத்தளபதியான கொடும்பாளூர் வேளிர் குல சிற்றரசன் பராந்தகன் குஞ்சரமல்லனான வீரசோழ இளங்கோ வேளான் என்பவர் இலங்கையின் மீது படையெடுத்தார். படையெடுப்பு தனக்கு வெற்றியைத் தரவேண்டும் என்று குடுமிநாதருக்கு நில தானம் செய்து வேண்டுகிறார்.

"ஈழ மறிய போகிறேன் "  என்பது கல்வெட்டு வாசகம். நடைபெற்ற ஈழப்போரில் வெற்றியும் பெற்றார். பராந்தகனுக்கு மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரி என்ற விருதுப்பெயரும் கிடைத்தது. இக்கல்வெட்டு சாசனம் குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலில் வெட்டப்பட்டுள்ளது.  இது கி.பி. 940 இல் நடந்த நிகழ்வு.

280 ஆண்டுகளுக்குப்பிறகு. கி.பி.1220ல்,  மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலம். அவனது 4 ஆம் ஆட்சியாண்டில் பாண்டிய நாட்டை மீட்டு, சோழர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் என்று பெரும் புகழ் பெற்ற பாண்டிய மன்னன். இவரது காலத்தில் குடுமியான்மலைக் கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கின. 280 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட பராந்தகனின் கல்வெட்டைப் படியெடுத்து, கோவில் வேலை முடிந்தபிறகு அச் செய்தியை மீண்டும் கல்லில் பதிவு செய்தார்கள்.


"இதில் கல்வெட்டு படியெடுத்துப் படி எடுத்தபடியே வெட்டுகவென்று உடையார் அருளிச் செய்த வெட்டின படியாவது " என்று சாசனம் தொடங்குகிறது. சோழனது கல்வெட்டு சாசனம், பாண்டியனால் புதுப்பிக்கப்பட்டது. 280 ஆண்டுகளுக்கு முந்தைய அதே கல்வெட்டுச் செய்தி மீண்டும் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறாகக் கல்வெட்டுகளைப் போற்றி, படியெடுத்து, பாதுகாத்த நமது வரலாற்று ஆவணங்கள் ..

இன்று .....? கல்வெட்டுக்களைச் சிதைத்தும், சுவரொட்டி ஒட்டியும் ...தொடர்கிறது  அவலம்...


Reference: புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள். No 255

Wednesday, October 14, 2020

தமிழ்நாட்டுச் சமணப்பள்ளிகள் கல்லறைகளா? ஓர் ஆய்வு

தமிழ்நாட்டுச் சமணப்பள்ளிகள் கல்லறைகளா? ஓர் ஆய்வு

முனைவர். சொ.சாந்தலிங்கம், மதுரை


தமிழ்நாட்டில் சமணசமயம் கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே கால் கொண்டுவிட்டது என்று பல முன்னைய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மயிலை சீனி.வேங்கடசாமி தனது சமணமும் தமிழும் என்னும் நூலில் மகாபாரத கண்ணனுக்கும், 22ம் தீர்த்தங்கரான நேமிநாதருக்கும் இடைய உள்ள ரத்த உறவைக் கொண்டு மகாபாரத காலத்திலேயே-அவரது கருத்தின்படி கி.மு.7-8ம் நூற்றாண்டிலேயே சமணம் தென்னகத்திற்கு வந்துவிட்டது என்பார். அவரும் அவருக்குப் பின்னர் நமது சமகாலத்தில் வாழ்ந்து அண்மையில் மறைந்த ஐராவதம் மகாதேவனும் தமிழ்நாட்டில் உள்ள குகைப்பள்ளிகள் எல்லாம் சமண முனிவர்களின் உறைவிடமே என்றும், அவர்களுக்காகத் தங்குவதற்குக் கொடுத்த கற்படுக்கைகளே அங்குள்ள கற்படுக்ககைகள் என்றும் அங்கு வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் எல்லாம்“ சமணம் சார்ந்தவையே என்றும் இவ்வளவு காலமும் பேசியும், எழுதியும் வந்துள்ளனர்.

இக்கருத்துக்களில் அண்மைக்காலமாகச் சிலர் மாறுபட்டு இக்கற்படுக்கைகள் எல்லாம் அதிலும் குறிப்பாகப் பள்ளி என்ற சொல் வரக்கூடிய கல்வெட்டுள்ள படுக்கைகளும், குகைகளும் சமணத் துறவியர் வாழ்ந்த இடங்களல்ல, அவை கல்லறைகளே என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இவர்கள் காட்டும் ஒரே சான்று 2004ம் ஆண்டு வத்தலகுண்டு வட்டம் தாதப்பட்டியில் கிடைத்த ஒரு தமிழ்க் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில்,
    ‘…அன் அடிஓன் பாகல் பாளிய் கல்’
என்ற தொடர் வருகிறது. இந்த ஒரு சான்றை வைத்துக்கொண்டு, இக்கல் ஒரு இறந்து பட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல். நெடுங்கல் என்னும் வகையைச் சேர்ந்தது. பாளிய் என்றும் கல் என்றும் இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வருவதால் பாளிய் என்றால் கல்லறை என்ற முடிவுக்கு வருகின்றனர்.இந்த தவறான முடிவு என்பது அவசரமாக மற்ற கல்வெட்டுகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதே இக்கட்டுரையாளரின் கருத்தாகும்.

‘ஒரு பொருட் பன்மொழி, பல்பொருள் ஒரு சொல்’ என்பது தமிழ் இலக்கணம் காட்டும் செய்தி. அதாவது ஒரு சொல்லுக்குப்பல பொருள்கள் உண்டு என்றும் பல சொற்கள் ஒரு பொருளைக் குறிக்கும் என்பதும் இதன் பொருள். இதன் அடிப்படையில் பள்ளி என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும். பள்ளி என்பதற்கு பள்ளிப்படுத்தல், பள்ளிப்படை என்ற பொருளை மட்டும் எடுத்துக் கொண்டால் அது கல்லறையை, புதைமேட்டைக் குறிக்கும் என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் பள்ளி என்பதினை பள்ளிக்கூடம், பள்ளியறை, பள்ளிக்கட்டி எனப் பல பொருள்களில் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் பயின்று வருவதைக் காணலாம்.பள்ளிச்சந்தம் என்பது சமண பௌத்த பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலமாகும். பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் பல. 

‘மதுரோதைய வளநாட்டு மாடக்குளக் கீழ் மதுரைக் கோயிற் பள்ளியறைக் கூடத்து பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருந்து’  முதலாம் சடையவர்மன் குலசேகரன் ஆணை வழங்கியுள்ளான். அதேபோல்,  ‘மதுரைக் கோயிற் பள்ளியறைக் கூடத்து பள்ளிப்பீடம் மழவராயனில் எழுந்தருளியிருந்து’. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆணை வழங்குகிறான்.இந்தக்கல்வெட்டுத் தொடர்களில் வரும் ‘பள்ளி’ என்னும் சொல் ‘கல்லறை’ என்ற பொருள் தருமா? சிந்திக்க வேண்டும்.கோயில்களில் பள்ளியறை நாச்சியார் என்ற ஒரு அம்மனின் திருவுருவமும், பள்ளியறை என்ற தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளனவே அவற்றின் பொருள் என்ன? தினமும் இரவுகளில் சிவனையும் பார்வதியையும் பள்ளியறையில் பள்ளிப்படுத்துகின்றனரே அதன் நோக்கமென்ன?

மேலும் சமணர் பள்ளிகளில் உள்ள கல்வெட்டுகளில் இடம்பெறும் பல சொற்களையும் கீழே காண்போம்:
  பாளிஈய், பாளிய், (மாங்குளம் தமிழிக்கல்வெட்டுகள்) எண் 1& 2
  பளி இ  -  (கீழவளவு கல்வெட்டு)
  பளி  -  (கருங்காலக்குடி கல்வெட்டு)
  பளிய்  -  (திருமலை கல்வெட்டு)  
  பளி  -  (ஜம்பை கல்வெட்டு)
  பாளி  -  (புகழூா் கல்வெட்டு)
  பளிய்  -  (குடுமியான்மலை கல்வெட்டு)
  பள்ளி  -  (நெகனுார்ப்பட்டி கல்வெட்டு)

மேற்காட்டிய எட்டு சான்றுகளும் ‘பள்ளி’ என்ற சொல்லையே சற்று மாற்றி மாற்றி எழுதப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.  இச்சொல் உள்ள கல்வெட்டுகள் உள்ள இடங்கள் யாவும் இயற்கையாக அமைந்த மலைக்குகைகள். இக்குகைகள் உள்ளே ஒவ்வொரு இடத்திலும் ஒன்றிற்கும் மேலும் அதிகபட்சமாக 80 கற்படுக்ககைகள் (கொங்கற்புளியங்குளம்) வெட்டப்பட்டுள்ளன. இக்குகைகளின் பாறை நெற்றிகளில் மழைநீர் உட்புகாவண்ணம் மழைவடிநீர் கால்கள் (dripledge-காடிகள்) அமைக்கப்பட்டுள்ளன. எனவே இக்காடிகள், பல எண்ணிக்கைகளிலான கற்படுக்கைகள் எல்லாம் கல்லறைகளா? கல்லறைகள் கலைந்துவிடும் என்பதற்காகவா மழைவடிநீர்க் கால்கள் வெட்டப்பட்டன. மாறாகச் சமணத் துறவியர் தங்கியிருந்து அறப்பணிகள் செய்த இடங்கள் என்பதற்குப் பல சான்றுகளை இவ்விடங்களில் அகச்சான்றுகளாகக் காணலாம்.

எடுத்துக்காட்டாக மதுரைக்கு அருகிலுள்ள மாங்குளம் பள்ளியில் அருகிலேயே இரண்டு அறைகளைக் கொண்ட செங்கல் கட்டுமானம் சமகாலத்திலேயே கட்டப்பட்டிருந்ததைத் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு செய்து கண்டறிந்துள்ளது. தரைதள ஓடுகள், கூரை ஓடுகள், அவற்றைப் பொருத்திய இரும்பு ஆணிகள், ௧௧ செங்கல் வரிசையைக் கொண்டசுவர் கட்டுமானம் ஆகியவையும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இக்கட்டுமானம் சமணம் சார்ந்த இல்லறத்தார் வந்து தங்கி அறங்கேட்ட இடங்கள் என்பதே உண்மை. எனவே சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்பள்ளிகளுக்கு அருகிலேயே சிராவகர்க்கள் தங்குமிடமும் இருந்தன என்பது ஒரு சான்று. 

சமணத்துறவிகள் அறிவுதானம், அன்னதானம், அடைக்கலதானம், மருத்துவ தானம் செய்தவர்கள் என்று அறிவோம். அவர்கள் தங்கியிருந்த குகைப் பள்ளிகளில் மருந்து அரைத்தமைக்கான கல்லுவங்கள் இன்றும் கருங்காலக்குடி, ஆனைமலை, திருப்பரங்குன்றம் போன்ற குகைப் பள்ளிகளில் உள்ளமையும் காணலாம். கல்லறைகளில் கல்லுவம் இருக்குமா? சிந்திப்பீர்!

மேலும் இக் குகைப்பள்ளிகள் ‘பாளி’ என்னும் ஒரு சொல்லால் மட்டும் தமிழிக் கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை. பல சொற்களில் பல ஊர்களில் பல காலங்களில் குறிக்கப்பட்டுள்ளன என்பதைக்கீழே உள்ள சான்றுகள் வாயிலாக அறியலாம்.
01.  முழாகை  அரிட்டாபட்டி கல்வெட்டு
02.  முழஉகை  வரிச்சியூர் கல்வெட்டு
03.  உறை  திருவாதவூர் கல்வெட்டு, மேட்டுப்பட்டி கல்வெட்டு
04.  உறையுள்  ஆனைமலைக் கல்வெட்டு
05.  குற (கூரை)  கொங்கற்புளியங்குளம் கல்வெட்டு
06.  கல்கஞ்சணம்  மறுகால்தலைக் கல்வெட்டு
07.  அய்அம்  முதலைக்குளம், கீழக்குயில்குடி கல்வெட்டு
08.  அம கல்  அழகர்மலை கல்வெட்டு
09.  அதிட்டானம்  சித்தன்னவாசல், அயிரமலை, கரூர், தொண்டூர் கல்வெட்டு
10.  கரண்டை  திருமலைக் கல்வெட்டு
11.  கவிய்  முத்துப்பட்டிக் கல்வெட்டு
12.  அறுத்தகல், அறுப்பித்தகல்  புகழூா் (கரூர்) கல்வெட்டு 

மேற்சுட்டிய 12 வகைச் சொற்களும் சமணர்களின் குகைகளில் பொறிக்கப்பட்டவையே. இவையெல்லாம் கல்லறைகளைக் குறிக்கின்றனவா? அல்லது துறவிகள், முனிவர்களின் வாழ்விடங்களைக் குறித்தனவா என்பதை ஆழமாக ஆராய்ந்து அறிக.  இங்கு ‘கரண்டை’ என்னும் தொடரோடு இணைத்துப் பார்த்தால் உண்மைப்பொருள் விளங்கும். 

இவற்றை அரசர்களும், செல்வந்தர்களும் அமைத்துக் கொடுத்தனர் என்று காண்கிறோம். மாங்குளத்தில் நெடுஞ்செழியனின் அதிகாரிகளும் வெள்ளறை நிகமத்தோரும் செய்து கொடுத்துள்ளனர். ஜம்பையில் அதியமானும் கரூரில் (புகழூரில்) சேர இளவலும், மன்னார் கோயிலில் (பள்ளி செய்வித்தான்) பெருங்கூற்றனும் செய்து கொடுத்துள்ளனர் என்றால் இவ்விடங்களில் சமணத்துறவிகள் இறந்துபட்டபின் அவர்கள் கல்லறைகளைச் செய்து கொடுத்தவர்கள் என்று பொருளா?

தமிழகத்தில் மட்டும் இப்படிப்பட்ட குகைகளோ, படுக்கைகளோ இல்லை. வட பகுதியிலும், ஏன் இலங்கையிலும் இந்நிலை இருந்ததை அங்குள்ள கல்வெட்டுகள் காட்டுகின்றன. ‘நல்லூர் மாவட்டம் கண்டகூர்  வட்டம்’ மால கொண்டா என்னும் மலை மேல் ஒரு குகையில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்தில் எழுதப்பட்ட பிராகிருத மொழிக் கல்வெட்டு ஒன்றில்,
‘அருவாறி(ள) குலத்து நந்த செட்டி மகன் சிறிவீரி
செட்டி செய்வித்த குகை’ என்று எழுதப்பட்டுள்ளது. 

கி.மு.377 முதல் 307 வரை இலங்கைத் தீவை ஆட்சி செய்த பண்டுகாயபன் என்னும் அரசன் அநுராதபுரம் நகரில் சோதியன், சிரி, கும்பண்டன் என்னும் (நிகண்ட) சமணமதக் குருமார்களுக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது. 

இதற்கு மேலாக சிலர் மலைக்குகைகள் எல்லாம் சமணம் சார்ந்தது அல்ல என்றும், சமணம் என்ற சொல் சிரமண என்ற சொல்லின் திரிபு என்றும், சிரமண என்னும் சொல்லுக்கு பொதுவாகத் துறவி என்று பொருள் கொண்டு இக்குகைகள் சமணம் தவிர்த்து ஆஜீவகத் துறவிகளுக்கோ அல்ல சைவத் துறவிகளுக்கோ உரியது ஆகலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இக்குகைகள் எல்லாம் ஆஜிவகச் சமயத்திற்கு உரியவை என்று தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் மெய்யியலாளர் திரு.க.நெடுஞ்செழியன் அவர்களின் கருத்தை மறுத்து ஏற்கனவே இக்கட்டுரையாளரால் ஒரு விரிவான கட்டுரை சமூக விஞ்ஞானம் இதழிலும், சித்திரமேழி என்னும் நூலிலும் வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் சமணம் என்னும் நூலிலும் இக்கட்டுரையைப் பார்க்கலாம்.  

மேட்டுபட்டித் தமிழிக் கல்வெட்டு,
‘அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ’ என்றும்
புகழூர் (கரூர்) கல்வெட்டு
‘மூதா அமணன் யாற்றூர் செங்காயபன் உறை’
என்றும்  நேரடியாகவே ‘அமணன்’ என்று கூறிய பின்னரும் அது சமணரைக் குறிக்காது பொதுவான சொல் என்றால் அதற்கு விடையில்லை.

சமகாலத்தில் பாண்டிய நாட்டில் சமணம் இருந்ததா?
கர்நாடகப்  பகுதியிலிருந்து விசாகாச்சாரியர் தலைமையில் வந்த சமணத்துறவியர் குழுவினரே தமிழகத்தில் சமணம் பரவக் காரணமானவர்கள் என்ற ஒரு கருத்து உண்டு. அவர்கள் காலத்தில் மதுரைப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகைகளில் அவர்கள் தங்கவாய்ப்பாக இருந்ததால் அங்கு அவர்கள் தங்கிப் பணியாற்றினர் என்று நெடுங்காலமாக நம்பப்படுகிறது. ஆனால் அண்மையில் சில ஆய்வாளர்கள் சங்க காலத்தில் மதுரைப் புகுதியில் சமணம் இல்லை என்றும் முதலில் தொண்டைநாடு, கொங்கு நாட்டுப் பகுதியில் மட்டுமே சமணம் கால் ஊன்றி கி.பி.4-5ம் நூற்றாண்டளவில் தான் மதுரைப்பகுதியில் சமணம் பரவியதாகவும் கூறிவருகின்றனர். ஆனால் அவர்கள் இப்பகுதியில் 14க்கும் மேற்பட்ட குகைப்பள்ளிகளில் இருக்கும் கல்வெட்டுகளைச் சமணம் சார்ந்தவை என்று ஏற்பதில்லை. அது மட்டுமல்ல சங்க இலக்கியங்களில் உள்ள சான்றுகளையும் அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்களா என்றும் தெரியவில்லை.

‘பூவும்புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வருஉம் அமயமும்
இன்றிவன் தோன்றிய ஒமுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலமும் தாம் முழுதுணரும்
சான்றகொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்தன்ன விட்டுவாயக் கரண்டை’ (மதுரைக்காஞ்சி-474)
என்று மதுரைக்காஞ்சி சமணப்பள்ளிகள் மதுரையிலிருந்தன என்பதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. இதனைப் பொதுவான துறவியர் பள்ளி என்று கொள்ள முடியாத அளவிற்கு

‘குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்’ (மதுரைக்காஞ்சி-474)
இருந்ததை வேறுபடுத்திச் சுட்டுகிறது மதுரைக்காஞ்சி.  இதற்கும் மேலாக அகநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கியக் குறிப்புகளும் சமணப் பள்ளிகள் இருந்தமையைக் கூறுகின்றன.
‘உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல’ (அகநானூறு-123)
‘நீடிய சடையொடு ஆடாமேனிக்
குன்றுறை தவசியர் போல’ (நற்றிணை-141)
என்று பல சான்றுகள் மூலம் சங்ககாலத்திலேயே மதுரைப்பகுதியில் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்தது தெளிவாகும்.

சங்கம் மருவிய காலத்தியதாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் ‘மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செய்வித்த தாபதப்பள்ளியுள் வசிதேவனாரு கோட்டமும்’ என்னும் தொடர் வருகிறது. இங்கு இடம்பெறும் தாபதப்பள்ளியும் வசிதேவனார் கோட்டமும் சமண சமயம் சார்ந்தவை என்பது இதனைப் பதிப்பித்த அறிஞர்களின் கருத்தாகும்.  விக்கிரம ஆண்டு 526 இல் (கி.பி.470 ல்) வச்சிரநந்தி என்னும் சமண முனிவர் மதுரையில் திராவிட சங்கத்தை (திரமிள சங்கம்) நிறுவினார் என்று தா்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியுள்ளதாகக் கூறுவர். 

இதன் பின்னர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் பக்தி இயக்கத்தின் பேரால் ஊா் ஊராய்ப் பாடி வரும் காலத்தில் மதுரைக்கு வருகிறார். அவ்வாறு வரும் போது,
‘ஆனைமாமலை ஆதியாய இடங்களில்
பல அல்லர் சேர்  ஈனர்க்கு எளியேன் அல்லேன்’ (திருஆலவாய்ப் பதிகம் எண்.39)
என்று பாடுவது காணலாம். ஆனைமலையில் கி.பி.ஒன்றாம் நூற்றாண்டு கால அளவிலான தமிழிக் கல்வெட்டுள்ள குகைப்பள்ளியிருப்பதையும் அதனைச் சுற்றிப் பல ஊர்கள் அரிட்டாபட்டி, மாங்குளம், அழகர்மலை போன்ற ஊர்களில் சமணப் பள்ளிகள் இருப்பதும் யாவரும் அறிந்ததே.

‘சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமை சேர் 
கந்து சேனனுங் கனகசேனனு முதலாகிய பெயர் கொள
மந்தி போற்றிருந்தாரியத்தோடு செந்தமிழ்ப்பயனறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அல்லேன் திருவாலவாய் அரன் நிற்கவே’
(பதிகம்-39-பாடம்-03)
‘கனக நந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணமா
சுனக நந்தியும் குணகநந்தியும் பவணநந்தியும்’ (பாடல் -6 பதிகம்-39)
என நந்திகணத்தார், சேனகணத்தார் என்னும் பலபிரிவினரான சமணர்கள் மதுரையிலிருப்பதாகவும் அவர்களைக் கண்டு அஞ்சியவன் நான் அல்ல என்றும் திருஞானசம்பந்தர் பாடுவதைக் காணலாம்.

திருஞானசம்பந்தரின் வரலாற்றை விவரிக்கும் சேக்கிழார் தாம் எழுதிய பெரியபுராணத்தில், 
‘பூழியர்தமிழ் நாட்டுள்ள பொருவில் சீர்பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி
சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு
மூழிநிர் கையிற்பற்றி அமணரே ஆகிமொய்ப்ப’
(பெரியபுராணம்-சம்பந்தர் புராணம்)

என்கிறார்.இங்கு பூழியா் என்பர் பாண்டியரே.பாழி என்றால் குகை என்கிறது தமிழகராதி. அருகர் மேவும் பள்ளிகள், அமணரே ஆகி மொய்க்கின்றனர் மயிற்பீலியோடு திரிகின்றனர் என்னும் பல குறிப்புகளும் நமது அத்துணை ஐயங்களுக்கும் விடைதரவல்லன வாயுள்ளன.

மேலே காட்டப்பட்டுள்ள சங்க இலக்கியச் சான்றுகள், தேவாரப் பாடல் குறிப்புகள், பெரியபுராணச் செய்யுள்களைக் கொண்டு சங்ககாலம் முதல் தொடர்ந்து பக்தி இயக்க காலம் வரை மதுரையிலும், குறிப்பாகப் பாண்டிய நாட்டிலும் சமணம் மிகச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது என்பது விளங்கும். இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்காமல் சமணம் கொங்குநாட்டிலும், தொண்டைநாட்டிலுமே முதலில் கால்கொண்டது என்பார் கூற்றை நாம் மனங்கொள்ளத் தேவையில்லை.

சமணர்களின் தமிழ்த்தொண்டு:
மாங்குளம் தமிழிக் கல்வெட்டுகளில் சில வடசொற்களும், (நிகம, தம்மம், சாலகன் போன்றவை) சில வடவெழுத்துக்களும் ஸ. த3 (ധ) போன்றவையும் கலந்து எழுதப்பட்டுள்ளன. தொல்காப்பியம் கூறும், ‘வடசொற்கிளவி வட எழுத்து ஓரீஇ, எழுத்தொடுபுணர்ந்த சொல்லாகுமே’ என்பதற்கு ஏற்ப மேற்கூறிய எழுத்துக்களும் சொற்களும் கலந்து தொடக்க நிலையில் எழுதப்பட்டுள்ளன. நாளடைவில் பெருமளவில் தமிழ்ச் சொற்களே கல்வெட்டுகளில் கையாளப்பட்டுள்ளன.தமிழகம் வந்த சமண முனிவர்களால் தான் தமிழர்க்கு எழுத்துக்கள் அறிமுகமாயின என்ற கருத்து தற்போது மாறிவிட்டது. புலிமான்கோம்பை கல்வெட்டுகளின் கண்டுபிடிப்புகள், பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு பானை ஓட்டுப் பொறிப்புகளில் உள்ள எழுத்துக்களின் காலக்கணிப்பு ஆகியவற்றைக்கொண்டு இம்முடிவு முற்றிலும் மறுக்கப்பட்டு கி.மு.ஆறாம் நுாற்றாண்டளவிலேயே தமிழ் மக்கள் எழுத்தறிவு பெற்ற சமுகமாக இருந்தனர் என்பது உறுதிப்பட்டுள்ளது. தமிழர்கள் முதலில் குறியீடுகளைப் பயன்படுத்தி, அவற்றின் அடுத்த கட்டவளா்ச்சியாக எழுத்துக்கள் தோன்றின என்பதை வல்லம் அகழாய்வும் மெய்ப்பிக்கின்றது.

இந்த நிலையில் தமிழ் இலக்கண, இலக்கியப் பரப்பில் பெரும் எண்ணிக்கையிலான படைப்புகள் சமணர்களால் ஆக்கப்பட்டன என்று காண்கிறோம்.தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலான பலபடைப்புகளைச் சமணர்களே தமிழுக்குக் கொடையளித்துள்ளனர்.  ஏனெனில் இவர்கள் தாம் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் மொழியில் பேசவேண்டும், எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவராய் இருந்துள்ளனர்.

சமணசமயம் செழித்து வளர்வதற்குக் காரணமாக இருந்தது யாதெனின் அவர்கள் மேற்கொண்டிருந்த மொழிபிரசாரம் ஆகும். சமண சமயத்தார், பௌத்தர்களைப் போலவே, தாங்கள் எந்தெந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த நாடுகளில் வழங்குகிற தாய்மொழியிலேயே தங்கள் மத நூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டுமக்கள் எளிதிலே இந்த மதக் கொள்கைகளை அறிந்து அவற்றைக் கைக்கொள்ளமுடிந்தது. இதனை ஒரு நிகழ்வு மூலம் அறிந்து கொள்ளலாம்.

உச்சயினி தேசத்து அரசனது அவைக்களத்தில் வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும் புகழ்பெற்று விளங்கிய சித்தசேன  திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில் இவரைப் போலவே கல்விக் கடலைக் கரைகண்ட விருத்தவாதி முனிவர் என்னும் சமணத்துறவியும் வாழ்ந்து வந்தார்.இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு வாதம் செய்து தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் பேரவாக் கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பிறகு இவர்கள்  ஒருவரை ஒருவர் காணும் படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத்துணிந்து வாதத்தில் தோற்றவர் வென்றவர்க்குச்  சீடர் ஆகவேண்டும் என்று முடிவு செய்து வாது செய்யத் தொடங்கினர். அவ்வூர் பொது மக்கள் வெற்றி தோல்வியைச் சொல்லும் நடுவர்களாக இருந்தனர்.சித்தசேனர் திவாகரர் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வடமொழியிலேயே வாதம் நிகழ்த்தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடுநின்றவர் முடிவு கூறினர். உடன்படிக்கையின் படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார்.

இதன்பிறகு சித்தசேன திவாகரர், வடநாட்டு மக்கள் பேசிப்பயின்று வந்த அர்த்தமாகதியில் எழுதப்பட்டிருந்த சமணசமய நூல்களை வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) மொழிபெயர்த்து எழுதக் கருதி தமது கருத்தைத் தம் குருவாகிய விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுத்தார். மக்கள் பேசிப்பயின்று வரும் அர்த்தமாகதியில் உள்ள நூல்களை வடமொழியில் எழுதி வைத்துப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளாதபடி செய்வது பெரும் பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தம் ஆசிரியர் சொன்ன உண்மைகளை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டுவரை வாய்பேசாமல் ஊமை போல் வாழ்ந்திருந்தார். 

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தன் நூலான சமணமும் தமிழும் என்பதில் குறித்துள்ள செய்தியின் காலம் நமக்குத் தெரியவில்லை எனினும் சமணர்கள் தாங்கள் பணி செய்த இடங்களில் மக்கள் மொழியைக் கற்றுப் பேசி, எழுதி மக்களோடு பணியாற்றினார்கள் என்பது தெரியவரும். இதற்கு மாறாக தேவபாஷையில் பேசவோ எழுதவோ அவர்கள் உடன்படவில்லை என்பதே அவர்கள் வைதீகத்திற்கும், மநுநெறிக்கும் எதிரானவர்கள் என்பதை விளக்கும். இதன் நீட்சியாகத்தான் தமிழ் மொழிக்குச் சமணர்கள் தந்த இலக்கிய, இலக்கணப் படைப்புகளைப் பார்க்க வேண்டும். கல்வியைப் பொதுமையாக்கியவர்கள் சமணர்கள்.  தமிழர் மரபுப்படி பெண்களுக்கும் கல்வியைக் கொண்டு சென்றவர்கள். கற்ற பெண்களை ‘குரத்திகள்’ என்ற பெயரில் குருவாக ஏற்றவர்கள் என்பதிலிருந்தே அவர்கள் கலகக்காரா்கள் என்பது புலப்படும். மக்களின் பக்கம் நின்று மக்களுக்காக வாழ்ந்தவர்கள் சமணர்கள்.

மேலே சொன்ன கருத்துக்களை ஆராயாது தொடர்ந்து சமணர்களுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை, சங்ககாலத்தில் சமணம் இல்லை, பாண்டிய நாட்டில் சமணம் இல்லை, சமணர் குகைப்பள்ளிகள் எல்லாம் ஆசீவகப்பள்ளிகள் என்று வாதிடுவோரின் அறியாமையைக் கண்டும் அமைதி காப்போம். சித்தன்னவாசலில் தான் ஆசீவகம் துவங்கிய மற்கலி கோசலர்  மறைந்தார். அதுதான் இன்றைய ஏழடிபாட்டம் பள்ளி என்னும் நெடுஞ்செழியன் அவர்களின் கூற்றையும் நாம் புறந்தள்ளத்தான் வேண்டும்.

சித்தன்னவாசல் கல்வெட்டில் வரும் ‘எருமி நாடு குமிழூர் காவிதி’ என்னும் தொடர் குறிப்பிடும் குமிழூர் என்பது மைசூர் பகுதியிலிருந்திருக்க வேண்டும் என்ற கருத்தே இதுவரை இருந்துவருகிறது. 

எருமிநாடு குமுழ்ஊர்  பிறந்த காவுடிஈ
தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்

சித்தன்ன வாசல் கல்வெட்டு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “தமிழ் – பிராமி கல்வெட்டுகள்” நூலில் உள்ள கல்வெட்டுப் பாடமும் குறிப்பும்

ஆனால் திருச்சி நகரத்திலேயே பாலக்கரை-மரக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு இடையில் உள்ள ஒரு பகுதி ‘குமிழூர்’ என்று பெயர் பெற்றுள்ளதாக ஒரு பெயர்ப்பலகையை நான் அண்மையில் அறிந்தேன். எனவே இந்த செய்தி தொடர்பாக இன்னும் கள ஆய்வு செய்து எருமிநாடும், குமிழூரும் திருச்சிப்பகுதியிலேயே இருந்திருக்க வாய்ப்பிருக்குமோ என முடிவுக்கு வரவேண்டும்.

Tuesday, October 13, 2020

மதுரையில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுப்பு

மதுரையில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுப்பு


13 அக்டோபர் 2020மதுரை நெல்பேட்டை அருகே கண்டறியப்பட்டுள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுக்கல்.

மதுரை: மதுரை நெல்பேட்டை அருகே போரில் உயிா்நீத்த வீரன் நினைவாக அமைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரின் மைய பகுதியான நெல்பேட்டையிலிருந்து முனிச்சாலை செல்லும் சாலையின் வலதுபுறமுள்ள அரசமரத்தின் அடியில் சதிக்கல் எனப்படும் நடு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த நடு கல்லை, அப்பகுதி பொதுமக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.

இந்த நடு கல்லை கண்டறிந்த கோயில் கட்டடக் கலை மற்றும் கல்வெட்டாய்வாளா் ப. தேவி அறிவுச்செல்வம், தொல்லியல் ஆய்வாளா் கோ. சசிகலா ஆகியோா் கூட்டாகக் கூறியது:

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளும்போது, முனிச்சாலை பகுதியில் உள்ள நடு கல் எனப்படும் சதிக்கல் கண்டறியப்பட்டது. பழங்காலத்தில் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவா், குலத்துக்காக, நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்பவா்களின் நினைவாக நடு கல் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட இந்த நடு கல், போரில் உயிா்நீத்த வீரனுடன் அவனது மனைவியும் தீயேந்துதல் எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மூலம் உயிரிழந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இது நடு கல் அல்லது சதிக்கல் என்றழைக்கப்படுகிறது.

நீண்ட செவ்வக வடிவ பலகை கல்லில் இரண்டு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் ஆடை அணிகலன்கள் மற்றும் தலைக்கோலம் போன்றவற்றை கொண்டு ஆய்வு செய்தபோது, இது ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்பதும், நாயக்கா் காலத்தைச் சோ்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

போரில் இறந்த வீரன் தனது வலது கையில் ஓங்கிய வாளுடன் காட்சியளிக்கின்றான். இடது கையில் குறுவாளைப் பற்றிக்கொண்டு இடது தொடை மீது வைத்துள்ளான். கால்கள் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளன. வீரன் முகம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. அருகில் அவனது மனைவி உயிா்நீத்த மங்கையாக நிற்கிறாள். இருவருக்கும் இடதுபுறத்தில் பக்கவாட்டு கொண்டையலங்காரம் காட்டப்பட்டுள்ளன.

காதுகளில் குண்டலங்களும், கைகளில் வளைகளும் இருவரும் அணிந்துள்ளனா். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோல பழைமையான நடு கல் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மதுரை நகரின் மைய பகுதியில் நடு கல் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்றனா்.


source - 
https://www.dinamani.com/tamilnadu/2020/oct/13/மதுரையில்-400-ஆண்டுகள்-பழைமைவாய்ந்த-நடு-கல்-கண்டெடுப்பு-3483899.htmlThursday, October 8, 2020

கோயில்களில் கல்லிலே இசைவண்ணம்

கோயில்களில் கல்லிலே இசைவண்ணம் 

-- முனைவர் தி.சுரேஷ்சிவன்


கல்லினைக்  குடைந்து பல கலை வண்ணங்களைக் கண்டவர்கள் தமிழர்கள்.  கல்லினால் பல அரிய சிற்பங்களை, கோயில்களைக் கட்டிய பெருமையில் இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்களுக்குப் பங்கு உள்ளது என்றாலும், தென்னிந்தியா கல் சிற்பங்கள், கல்தூண்கள், கட்டிடங்களில் முன்னோடியாகத் திகழ்கிறது. பாறை என்று குறிக்கப்படும் கல்லில் தமது மதிநுட்பத்தால் பல்வேறு கலைத்திறன் மிக்க சிற்பங்களை உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். குறிப்பாக இசைத் தூண்கள் மிக அரியதாகக் கருதப்படுகிறது.

இசைத்தூண்கள்
பொதுவாக சிற்பிகள் மனதில் உதித்த சிந்தனையைச் சிற்பமாக ஆக்குபவர். உரிய பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பணிகளைச் செய்வது சிற்பிகளின் வேலைத்திறமைகளைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் காணமுடியும். இசைத்தூண்கள் கட்டிடக்கலையின் இரு அம்சமாகவும், அமைவதால் செய்வதற்கும், கேட்பதற்கும் மிக நுட்ப அறிவு இதற்குப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் பாண்டிய நாட்டை சேர்ந்த ஊர்களில் இசைத்தூண்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும்பாலான இசைத்தூண்கள் ஒரே கல்லிலே வடிவமைக்கப்பட்டிருக்கும். பருமன் குறைவான தூண்கள் நான்கு, ஐந்து பருமன் அதிகம் உள்ள இரு தூணைச் சுற்றியுள்ளதாக இவை அமைக்கப்பட்டிருப்பதை நாம் இன்று காண முடியும். தென்னிந்தியாவில் பல்வேறு கோயில்களில் இசைத்தூண்களைக் கொண்ட நாட்டிய அரங்குகளும் உள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் கோயில், அழகர்கோயில், ஆழ்வார்திருநகரி, நெல்லையப்பர் கோயில், தாடிக்கொம்புசுசீந்தரம்ஹம்பி, ஆவுடையார் கோயில் போன்ற இடங்களில் இன்றும் இசைத்தூண்கள் உள்ளன.

கோயில் கட்டடக்கலை மரபு: 
கட்டடக்கலையின் வாயிலாக இரு நாட்டின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் சிறப்பை அறியமுடியும். தமிழக கட்டடக்கலையில் சிறப்பிடம் பெறுவது திருக்கோயில் கட்டடங்களாகும். பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கோயில் கட்டடக்கலையின் தூண்கள் என்பன தொன்மையான கலை வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கின்ற பகுதியாகும். திராவிடக்கலை எனப் பேசப்படும் தமிழகக் கோயில் தூண்களின் அமைப்பு தனித்துவம் உடையது எனக் கருதலாம். திராவிடக் கலையில் 16ம் நூற்றாண்டில் போற்றுதற்குரிய இரண்டு வளர்ச்சி நிலைகள் ஏற்பட்டன. இன்று வெளியமைப்பிலுள்ள கோபுரம் மற்றொன்று உட்பகுதியில் இடம் பெற்ற தூண்களாகும். தமிழகக் கட்டடக்கலை அமைப்பில் போற்றுதலுக்குரிய இருவகைத் தொழில்நுட்பம் தூண் நிர்மாணக் கலையாகும். இதன் அமைப்பும் கலைநுட்பமும் நாயக்கர்களுடைய காலத்தில் சிறப்பு பெற்றன. அத்தகைய கலைத்திறனுடைய படைப்பில் இன்று இசைத்தூண்களாகும்.

மரபில் தோன்றியவை: 
தமிழகத் தூண்களின் அலங்காரமும் வகைகளும் பொதுவாக மரபில் தோன்றியவையாகும். சங்க காலத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. தூண்களில் காணப்படும் சிற்பங்கள், நடனம், இசை, வாத்தியம், அலங்கார சிற்பம், தெய்வத் திருமேனி சிற்பம், ஆண், பெண் சிற்பமென அனைத்தும் பலதரப்பட்ட சைவ, வைணவ கோயில்களில் காண முடிகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல இடங்களில் இசைத் தூண்கள் உள்ளன. வடக்கு கோபுர வாசல் இறங்கிச் செல்லும் இரு புறங்களில் இசைத்தூண்களில் ஸரிகமப என்ற ஐந்து ஸ்வரங்கள் கேட்கும். கோயிலுக்குள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இசைத்தூண்கள் ஏழு ஸ்வரங்களையும் சொல்லும். சுவாமி சன்னதியில் கொடி மரம் உள்ள மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சிற்பத்தின் கீழே ஐந்து சிறிய தூண்கள் இசையைப் பேசுகின்றன. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தாயார் சன்னதியின் மண்டப முன்பகுதியில் இருபுறமும் இசைத்தூண்கள் ஸ ரி க ம என்ற நான்கு ஸ்வரங்களைச் சொல்லுகிறது. அழகர் கோவில் தூண்கள் இத்தகைய  இசையை எழுப்பக் கூடியன. நடுவில் இரு தூணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான தூண்களும் உள்ளன.

48 இசைத்தூண்கள், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னிதியில் உள்ள தூண்கள் மிக அருமையாக இசை எழுப்பக்கூடியன. நடுவில் பெரிய தூணும் அதைச் சுற்றிலும் 48 சிறிய இசைத்தூண்களைத் தட்டினால் இனிய இசையைக் கேட்க முடிகிறது. பாண்டியர் கால கோயிலான ஆழ்வார்திருநகரியில், இரண்டு வகையான இசைத்தூண்கள் உள்ளன. இன்று தட்டும் போது ஒலியெழுப்பக்கூடியது. (இசைத்தூண்களைத் தட்டுவதற்கு மரத்தில் ஆன உருண்டை வடிவ சுத்தி போன்ற அமைப்பில் உள்ள கருவி தேவை), மற்றொன்று, துளை இசைத்தூண்கள். மிக நுட்பமாகக் கையாள வேண்டியவை இரண்டு துளைகள் உள்ள இத்தூணில் வாய் வைத்து ஊதினால் இசை பிறக்கிறது.

திருவாரூரில் உள்ளது போல இங்கேயும் "கல் நாதசுரமும்" உள்ளது. அபூர்வமான வேலைப்பாடுகள்நிறைந்த ஆழ்வார்திருநகரியைப் போலவே சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலிலும் இசைத் தூண்கள் காணக்கிடைக்கின்றன. குணசேகர மண்டபத்தில் வடக்கு பக்கம் 24 சிறிய தூண்களும், தெற்கு பக்கத்தில் 33 சிறிய இசைத்தூண்களும் உள்ளன.

இளைய தலைமுறைக்கு நாம் நேரில் சென்று பார்த்து உணர்ந்து இது போன்ற கலை வடிவங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் சிறிய சுற்றுலா ஏற்பாடு செய்து இசைத்தூண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தலங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது முக்கிய அங்கமாகவே இருந்தது. தற்போது குறைந்து விட்டது. திருக்கோயில் தல யாத்திரை சென்றால் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாகச் சிற்பம், ஓவியம், இசை பற்றிய அறிவு கிடைக்கும்.

கும்பகோணம் தாராசுரம் கோயில் இரு சிற்ப கலைக்களஞ்சியமாக உள்ள இடம். கோயிலின் நுழைவு வாசலில் சிறு மண்டபம் போன்ற வடிவத்தில் இசை படிக்கட்டுகள் உள்ளன. இதில் ஒலி  எழுப்பினால் சங்கராபரணம் எனும் ராகத்தின் ஸ்வர ஸ்தானங்கள் பேசுகின்றன. சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹம்பி என்ற ஊர் கர்நாடகாவில் உள்ளது. முழுவதும் செந்நிற பாறைகள் நிறைந்த இவ்விடத்தில் விட்டல கோயில் ரங்க மண்டபத்தில் 56 தூண்களில் இசை பிறக்கிறது. இப்படி தென்னிந்தியா முழுவதும் சிற்பக்கலைக்கும் கட்டிடக் கலைக்கும் எடுத்துக் காட்டாய் திகழ்கின்றது. மனம் பண்பட கலைகளே உறுதுணை. கண் வழி சிற்பங்களைக் கண்டு ரசித்து செவி வழி இசையைக் கேட்கும் நம் தமிழ் மண்ணின் மரபுகளைப் பாதுகாப்போம்.


முனைவர் தி.சுரேஷ்சிவன்,  செம்மொழி இசைத்தமிழ் அறிஞர். 

நன்றி - தினமலர் 

Monday, October 5, 2020

அறம், தொழில், இல்லம்

அறம், தொழில், இல்லம் 

சி. ஜெயபாரதன், கனடா


வள்ளுவர் 
என் குருநாதர்
வையப் படைப்பாளி
எனக்கு தலைமை
அறவாளி. 

அறநெறி வழிமுறை
புறக்கணிக்கும்
தொழிற் துறை யாவும்
இனிமேல் 
கண்காணிக்கப் பட்டுத்
தண்டிக்கப் படும்.

இல்ல அமைப்பு,
நமக்கு
நல் நடப்பு ஏணி, 
இன்பம், துன்பம் எல்லாம்.
முடிவான
குறிநோக்கு அல்ல
இன்பம் !
பக்க விளைவு அது.

நாடுயர 
நம் வீடுயரும்.
ஒளிநோக்கு என்பது
தனக்கென
முயலா,
பிறர்க்கென முயலும்
பிறவிகள்
உருவாக்குவது.
Friday, October 2, 2020

தமிழும் ஜப்பானிய மொழியும் – சில ஒற்றுமைகள்

தமிழும் ஜப்பானிய மொழியும் – சில ஒற்றுமைகள்

-- முனைவர் இராஜேஸ்வரி செல்லையா

[தமிழுக்கும் ஜப்பானுக்கும் ஆன தொடர்புகள் பற்றி முன்பே சுசுமோ ஓனோ, ஆஷர், பட்டிமன்ற பேச்சாளர் தமிழ்ப் பேரறிஞர் சாலமன் பாப்பையா அவர்களின் மகள் பாலம்மா ஆகியோர் கட்டுரைகளும் நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளனர். அந்நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும்  வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ஜப்பான் மொழியை ரோமா ஜி எனப்படும் ரோமன் எழுத்துக்கள் மூலமாகப் படித்த காரணத்தாலும் தமிழ் வழியே ஜப்பான் மொழியைப் படிப்பது எளிது என்பதை உணர்ந்து அதற்காக ஒரு நூலை உருவாக்கியதாலும் இரு மொழிகளுக்கும் இடையிலான மொழி மற்றும் பண்பாடு தொடர்பான ஒற்றுமைகளை உணர்ந்திருந்ததால் அவை இந்நூலாக உருவெடுத்துள்ளன.] 

பௌத்தமும் தமிழும் 
தமிழ் ஜப்பான் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளுக்கு மூல காரணம் புத்த மதம். இங்கிருந்து  இம்மதம்  ஜப்பானுக்குப் பயணித்த போது துறவிகள் தமிழையும் எடுத்துச் சென்றனர். இங்கு இந்து மத சுலோகங்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பது போலவே அங்கு தமிழ் ஆன்மீக மொழி ஆயிற்று என்பதைக் காஞ்சி என்ற சொல்லே உணர்த்துகிறது. அங்கு போனதும் அங்கிருந்த ஜப்பானிய மொழியைச் செப்பனிடப் புத்த துறவிகளுக்குத் தமிழ் உதவியது. 
ஜப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் கட்டமைப்பில் அதிக அளவில் ஒற்றுமைகள் இருப்பதைக்  காணலாம். காஞ்சிபுரத்திலிருந்து பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக ஜப்பான் மற்றும்  சீனாவுக்குச்  சென்ற பௌத்தத் துறவிகள் மொழியையும் சேர்த்தே எடுத்துச் சென்றனர். தமிழ் மொழியில் இருக்கும் மொழி கட்டமைப்பை அங்கே இருந்த மொழிகளில் சேர்த்துப் புதிய  கட்டமைப்பை உருவாக்கினர். 

காஞ்சி 
ஜப்பானில் பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொற்களைக் குறிக்க பயன்படுத்தும் பல எழுத்துக்கள் சீன எழுத்துக்கள் ஆகும். அந்த சீன எழுத்துக்களை ஜப்பானியர் காஞ்சி என்ற பெயரால் அழைக்கின்றனர். காஞ்சி என்பது நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துவதாகச் சங்க இலக்கியத்தில் புறத்திணையில் ஏழு திணைகளில் ஒன்றாக இடம் பெற்றிருந்தாலும் பௌத்தர்கள் இப்பெயரில்தான் தங்களின் நிலையாமைத் தத்துவத்தைப் பரப்பினர். தமிழகத்தில் பௌத்தர்களின்  இருப்பிடமாக இருந்த ஊர் காஞ்சிபுரம். அவர்கள் வணங்கிய தாரா தேவியை [காமாட்சியைப்] பின்னர் சைவ சமயம் தன்னகப்படுத்திக் கொண்டது.

ஜப்பான் மொழியின் வரி வடிவம் 
ஜப்பான் மொழியில் மூன்று வகையான எழுத்து வகைகள் பின்பற்றப்படுகின்றன. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றை எழுத உதவும் சீன எழுத்துக்கள்  காஞ்சி எனப் பெயர் பெறும். இடைச்சொற்கள் ஜப்பானிய ஒலிப்பு முறையுடன் ஹிரா கானா [hira gana]  என்ற வரி வடிவிலும் இவை இரண்டும் அல்லாத பிறமொழியைச்சொற்களைக் கத்தா கானா [katha gana] என்ற வரி வடிவிலும் எழுதப்படும். 
தமிழில் இலக்கணக்காரர்கள் பிற மொழிச்  சொற்களைத் தமிழ் மரபுக்கேற்ப ஒலிப்பு முறைக்கேற்ப மாற்றுவதைத் தற்சமம், தற்பவம் என்பர். நம்மிடம் மூன்று வரி வடிவங்கள் இல்லாவிட்டாலும் இச் சிந்தனை இங்கிருந்து ஜப்பானுக்குப் போயிருக்க வாய்ப்புண்டு. ஷர்ட் [shirt] எனப்படும் ஆங்கிலச் சொல்லை ஜப்பானிய மொழியில் ஷாத்சு  [shatsu] என்று தம்முடைய ஒலிப்புக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தனர். ரத்னம் என்பதைத் தமிழில்  ரத்தினம் என்றாவது போல ஜப்பான் மொழியில் பிறமொழிச் சொற்கள் ஜப்பான் மொழியின் ஒலிப்புக்கு ஏற்ப மாற்றப்பட்டன. ஜப்பான் மொழியில்  ‘ட’ என்ற ஒலி இல்லாததால் கம்ப்யூட்டர் என்பது ‘கம்ப்யுத்தோ’  எனப்படுகிறது.
உயிரொலிகள் ஜப்பானிலும் ஐந்து மட்டுமே. தமிழில் க,ச,த,ப ஆகிய நான்கு ஒலிகளுக்கும் மாற்று ஒலிகள் உண்டு. இதனை மொழியியலாளர் allo phones என்பர். அதாவது k > g, h, kk, எனப் பல வகையாக ஒலிக்கப்பெறும். க என எழுதப்படும் வரிவடிவத்திற்குப் பக்கம் [pakkam], பகல் [pahal], பங்கம்  [pangam] என kka , ha, ga என்று  மாற்று ஒலி  வடிவங்கள் பேச்சு வழக்கில் உள்ளன. இவற்றை எழுத்தில் நம்மால் வேறுபடுத்திக் காட்ட இயலாது. ஆனால் ஜப்பானிய மொழியில் இதற்காக தனித்தனியாக வரி வடிவங்களை அமைத்தனர். மாற்றொலி  என்பதற்கு அடையாளமாக இவற்றில் மிகச் சிறிய stroke ஐ பயன்படுத்தி வேறுபாடு காட்டுவர். 

குற்றுகரம்
தமிழில் காணப்படும் குற்றியலுகரம் போல பண்டைய மொழிகள் பலவற்றிலும் உயிரொலிகளின் குறுக்கத்தைக்  காணமுடியும் தமிழ் மொழியில் பசு, மாசு போன்ற சொற்களில் வரும் சு ஒலிப்பது போல ‘தெசு’ [இதன் பொருள் ‘இருக்கிறது’] என்ற சொல் ஒலிக்கப்படுகிறது. தெசு என்ற சொல்லில் வரும் ஈற்று உகரம் குற்றுகரமாக ஒலிக்கப்படும். பசு, மாசு போன்ற சொற்களின் ஈற்றுகரம் குற்றியலுகரமாக  ஒலிக்கப்படுவது போல ‘தெசு’வும் ஒலிக்கப்படும். 

மெய்மயக்கம்
தமிழில் உள்ள consonant clusters அல்லது மெய்மயக்கம் போல  ஒரே மெய்யெழுத்து இரட்டித்து அல்லது மெய்யெழுத்து சேர்ந்து  வரும் இயல்பு ஜப்பானிய மொழியிலும் உண்டு. ஜப்பானிய மொழியில் இந்த மெய் மயக்கத்தில் இடம்பெறும் ஒவ்வொரு மெய் எழுத்தையும் ஒரு மாத்திரை அளவுக்கு அழுத்தி ஒலிக்கின்றனர். ஷித்தே மாசு என்றால் தெரியும் என்பது பொருள். இதில் வரும் ‘ஷித்தெ’ என்பது ஒன்று + ஒன்று + ஒன்று என மூன்று மாத்திரை அளவில் ஒலிக்கப் பெறும். 

மூக்கொலிச் சாயல் 
  தமிழில் சொல்லின் ஈற்றில் இடம்பெறும் னகர, மகர ஒற்றுகள் மூக்கொலி சாயலுடன் முடிவு பெறும். இதனை மொழியியலாளர் nasalization என்று குறிப்பிடுவர். இதற்கென ஒரு எழுத்து உண்டு. இது இறுதியில் வரும்போது முழுதாக ன் என்றோ; ம் என்றோ ஒலிக்கப் பெறாது இரண்டுக்கும் இடையிலான ஒரு  ஒலிப்பைப் பெறும். பொதுவாக சொல்லின் இறுதியில் வரும் மெய்யெழுத்துக்கள் மூச்சை அடக்கி நிறுத்துவதால் அத்துடன் ஒரு உயிரொலியைச் சேர்த்து, முழுமையாக மூச்சை நிறுத்தாமல் அரை ஒலியாக மூச்சை விட்டு ஒலிப்பது தமிழிலும் ஜப்பானிலும் பழக்கத்தில் உள்ளது.  
இவை அனைத்தும் இரு மொழிகளிலும் ஒலி அமைப்பில் உள்ள ஒரு சில ஒற்றுமைகள் ஆகும்.  

ஜப்பானிய மொழியில் தமிழ்ச் சொற்கள் 
சுசுமு ஓனோ என்ற ஜப்பானியப் பேரறிஞர் ஜப்பான் மொழியில் சுமார் நான்காயிரம் தமிழ்ச் சொற்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார். இந்தியாவில் நீதிமன்றம், அரசு நிர்வாகம் போன்ற துறைகளில் உள்ள ஆட்சி மொழிச் சொற்களில் உருது மொழிப் பயன்பாடு [தாக்கல், தரப்பு, மகஜர், ஷரத்து] ஏராளமாக உள்ளது. இதற்குக் காரணம் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களின் ஆட்சி மொழி உருதுவாக இருந்ததே ஆகும். அதுபோல ஜப்பானில் பௌத்த மதத்தைப் பரப்பச் சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த புத்த துறவிகள் மதத்தைப் பரப்பும் போது அதிகளவில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினர். 
கட்டமைப்பு வகையில் ஜப்பான் மொழியும் தமிழ் மொழியைப் போலவே ஒட்டுநிலை மொழியாகக் கட்டமைக்கப்-பட்டுள்ளது. இதனை agglutinative language என்று மொழியியலாளர் குறிப்பிடுவர். தமிழில்  பகுதி இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, தேற்றேகாரம், வினா, குறிப்பு போன்றவை ஒன்றினோடு ஒன்று சேர்வது போல ஜப்பானிய மொழியிலும் அமைந்துள்ளது.

பெயர்ச்சொல்லும் வேற்றுமை உருபுகளும் 
தமிழ்மொழியில் பெயர்ச் சொற்களோடு வேற்றுமை உருபுகளான ஐ, ஆல், கு, உடைய, இல், இல் இருந்து, அது போன்றன  தனித்தனியாக வந்து சேரும். அது போலவே ஜப்பான் மொழியிலும் பெயர்ச் சொற்களின் இறுதியில் வேற்றுமை உருபுகள் சேர்க்கப்படும். இவை  ஹிரா கானா என்ற வரி வடிவத்தில் எழுதப்படும்.  தமிழில் முதல் வேற்றுமைக்கு உருபு கிடையாது. ஆனால் ஜப்பான் மொழியில் முதல் வேற்றுமைக்கும் ‘வா’ என்ற  உருபு சேர்க்கப்படும். 
எ-டு
வாதாஷி வா ராஜேசுவரி தெசு. 
[நான் ராஜேசுவரியாக இருக்கிறேன்]

வேற்றுமை உருபுகள் இணைப்பு
பெயர்ச்சொல்லோடு ஓ என்பது செயப்பாட்டு பொருளிலும் நோ என்பது உடைய என்ற பொருளிலும் னி என்பது இடப் பொருளிலும் மோ என்பது உம் என்னும் எண்ணும்மை பொருளிலும் காரா என்பது இடத்திலிருந்து என்று நீங்கல் பொருளிலும் பயன்படும். 
எ-டு
வாதாஷினோ – என்னுடைய 
வாதாஷிமோ  - நானும் 
நிப்பொன் னி – ஜப்பானில்
ஹோன் ஓ   - புத்தகத்தை 

வினைச்சொல் உருவாக்கம்
  தமிழைப் போலவே ஜப்பானிய மொழியிலும் உயர்திணை, அஃறிணை வேறுபாடுகள் உண்டு. ஆனால் எண், இடம், பால் குறிக்கும் விகுதிகள் [png suffixes - person number gender suffixes] கிடையாது. மலையாள மொழியைப் போல அவன் வரும்; அவள் வரும்; அது வரும்; என்பதாகவே வினைச்சொற்கள் ஜப்பானிய மொழியில் அமைந்துள்ளன. 
காயிமாசு – வாங்குகிறேன் வாங்குகிறாய் வாங்குகிறார், 
நோமிமாசு – குடிக்கிறேன், குடிக்கிறாய், குடிக்கிறார், 
ஹனாஷிமாசு – பேசுகிறேன், பேசுகிறாய், பேசுகிறாள்
இயேமாசு  -  சொல்கிறேன், சொல்கிறாய், சொல்கிறார்

வினாவும் வியப்பும்
தமிழைப் போலவே ஜப்பானிய மொழியில் பின் ஓட்டுக்கள் சேர்ந்து வினாப் பொருளையும் வியப்புணர்வையும் தரும். 
எ-டு
காயிமாசு கா? - வாங்குகிறாயா? வாங்குகிறாரா? வாங்குவோமா? 
இயேமாசு கா?  - சொல்கிறாரா? சொல்கிறாயா?  
தமிருகு ஹனாஷிமாசுகா? - தமிழ் பேசுவீர்களா?
கோஹி ஓ நோமிமாசுகா? -  காபியைக் குடிக்கிறாரா? 
தெசு என்ற சொல்லுடனே  இணையும் போது வியப்புச் சொல்லாக மாறும். நாம் தமிழில் அப்படியா என்று சொல்லி வியப்பது போல தெசுனே என்னும் போது அதே வியப்புணர்வு ஜப்பானிலும் வெளிப்படும். 

மதிப்புச் சொற்கள் 
தமிழில் வினைச் சொற்களின் விகுதி ஆளுக்குரிய மதிப்பை உணர்த்திவிடும் ஆனால் ஜப்பானிய மொழியில் அந்த விகுதி இல்லை என்பதால் பெயர்ச் சொல்லோடு சேர்த்து  குதாசாயி அல்லது வினைச் சொல்லோடு த்தெ குதாசாயி என்ற சொல்லைச் சொல்லியே ஜப்பானியர் மரியாதையாக  ஒரு பொருளைக் கேட்டுப் பெற வேண்டும்.
எ-டு [தெ குதாசாயி]
ஹோண் ஓ குதாசாயி – பேனாவைக் கொடுங்கள்
கிப்பு ஓ குதாசாயி      - சீட்டைக் கொடுங்கள் 
எ-டு [த் தெ குதாசாயி]
மிசெத்தெ குதாசாயி  -  பாருங்க  [மிசே – பார்]
ஒகு த்தெ குதாசாயி – அனுப்புங்க [ ஓகே – அனுப்பு]
சுவா த்தெ குதாசாயி – உட்காருங்க [சுவாத்தெ –உட்கார்]

எதிர்மறைச் சொல் வடிவம் 
தமிழில் எதிர்மறைப் பொருளைக் குறிக்க இல்லை என்பது சேர்க்கப்படும். ஜப்பானிய மொழியில் சென் என்பது சேர்க்கப்படும்.
இமாசு என்றால் இருக்கிறது; இமாசென் என்றால் நிகழ் காலப் பொருண்மையில் இல்லை. இமாசென் தேஷித்தா என்றால் இறந்த காலப் பொருண்மையில் இல்லை. இதுவே தேஷித்தா கா என்றால் இல்லையா என்ற எதிர்மறை  இறந்தகாலப் பொருண்மையுடன் வரும். 

எண்ணும்மை 
தமிழில் ஒவ்வொரு பெயருடனும் ‘உம்’ எனும் இடைச்சொல் சேர்த்துத்தான் எண்ணும்மை வரும். ஆங்கிலத்தில் பெயர்களை வரிசைப்படுத்தி விட்டு கடைசிப் பெயருடன் and  சேர்த்தால் போதும். ஜப்பானிய மொழியில் தமிழைப் போல ஒவ்வொரு பெயருடனும் மோ எனும் இடைச்சொல் சேர்க்க வேண்டும்.
எ-டு
சென்சேய் மோ GAKUSEI மோ கிமாசு – ஆசிரியரும் மாணவரும் வருகின்றனர். 
வாதாஷி மோ gare மோ gakusei தேசு – நானும் அவனும் மாணவர்கள்  

உம் எனும் இடைச்சொல்
தமிழில் பயில்வதைப் போல உம் என்னும் இடைச்சொல் ஜப்பானிய மொழியிலும் சுட்டுப் பெயர்களோடு வினா வடிவங்களோடு பெயர்ச்சொற்களோடு எனப் பலவகையிலும் பயின்று வரும். 
எ-டு
நானி மோ அரிமாசென் -- எதுவும் இல்லை.
தாரெ மோ இமாசென் – யாரும் இல்லை.  
கியோ மோ கினோ மோ – நேற்றும் இன்றும். 
ஹோண் மோ என்பித்சு மோ குதாசாயி – பேனாவும் பென்சிலும் கொடுங்க.

எண்ணுப்பெயர்கள் 
தமிழிலிருந்து ஜப்பானிய மொழிக்கு அளித்த அருங்கொடை எண்ணுப்பெயர்கள் ஆகும். ஒன்று இரண்டு, மூன்று என்பதை இச்சி, நி, சான் எனச் சொல்வர். பத்து ஜூ எனப்படும். அடுத்து பதினொன்று வரும்போது 
பதின் ஒன்று - ஜூ இச்சி 
பன்னிரெண்டு – ஜூ நி
பதின் முன்று – ஜூ சான் 
இருபது    - நி ஜூ 
இருபத்தியொன்று – நி ஜூ இச்சி
இருபத்தியிரண்டு – நி ஜூ  நி 
இவ்வாறு எண்ணுப்பெயர்களின் அடுக்கு முறை [arrangement] தமிழைப் போலவே ஜப்பானிய மொழியிலும் அமைக்கப் பட்டுள்ளது. 

சுட்டுப்பெயர்களும் வினாப்பெயர்களும்  
பழந்தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பெயர்களில் அண்மைச்சுட்டு [அ] சேய்மைச்சுட்டு [இ] ஆகியவற்றிற்கு இடையே இடைச்சுட்டு என்ற ஒரு வகையும் காணப்படுகிறது. மலையாளத்திலும் இந்த இடைச்சுட்டான உகரம்  பயன்படுகிறது. ஜப்பானிய மொழியிலும் இந்த மூவகைச் சுட்டுகள் உண்டு. இடைச்சுட்டு என்பது கண்ணுக்குத் தெரிந்த தொலைவில்  உள்ள ஆனால் கைக்கெட்டாத தொலைவில்  உள்ளவற்றைக் குறிக்கிறது.  இவற்றைப் போலவே வினாப் பெயர்களும் உண்டு 
எ-டு
அனோ – அந்த  
கொனோ – இந்த 
சோனோ – இடைப்பட்டது
கோனோ – எந்த ?

அனோ எம்பித்சுவா வாதாஷினோ எம்பித்சு தெசு 
அந்த பென்சில் என்னுடைய பென்சிலாக இருக்கிறது.

அரே –    அது ;  
கோரே – இது ;     
சோரெ  –   இடைப்பட்டது 
தோரே – எது?
தாரே – யார்? 
அசோகோ – அங்கே ; 
கோகோ – இங்கே ;
சோகோ– இடைப்பட்டது
தோகோ? – எங்கே ?

கோகொ னி வா தாரே மோ இமாசென்
இங்கே [இந்த இடத்தில்] யாரும் இல்லை. 

நிறைவு 
தமிழகத்திலிருந்து  சென்ற பௌத்தர்கள் தமிழ் மொழியின் அமைப்பில் ஜப்பான் மொழியின் இலக்கணத்தைக் கட்டமைத்தனர். சங்க இலக்கியத்துக்குரிய  ஐந்திணை,  நிலமும் பொழுதும், கருப்பொருள் பாகுபாடு போன்ற அமைப்புகளும் ஜப்பானின் பழங்கவிதைகளில் காணக் கிடைக்கின்றன. மொழி, இலக்கணம் தவிர்த்து தொழில் அடிப்படையிலான சமூகப் பாகுபாடு, தொழில் வாரியான ஊர்கள் வழிபாடு, பழக்க வழக்கம், நம்பிக்கை போன்ற பல ஒற்றுமைகள் இரு மொழிகளுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே காணப்படுகின்றன.

நன்றி - நெருஞ்சி இதழ்Thursday, October 1, 2020

தேவை ஒரு சாதி ….?

 தேவை ஒரு சாதி ….?

- முனைவர் சாந்தினிபீ


தேவை ஒரு சாதி, ஆம்! உண்டி, உறைவிடம், உடை உள்ளதோ இல்லையோ இன்று வாழத் தேவை ஒரு சாதி. மண்ணில் கண் திறந்து கண்மூடி மண்ணுக்கும், விண்ணுக்கும் செல்ல சாதி தேவை. இன்று கடை நிலை ஊழியராயினும் முடிசூடா மக்கள் தலைவராயினும் வாழ்க்கையில் முந்தி நிற்பது சாதி. பள்ளி முதல் பல்கலைக்கழக வேந்தர் வரை அவசியத் தகுதி சாதியே. அரசியல் மட்டுமா சாதியைக் கேட்கிறது, கொலைக் குற்றவாளிக்கும், கொள்ளை அடித்தலே கொள்கையாகக் கொண்டு விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் உல்லாச பவனி வரவும் தேவைப்படுகிறது சாதி. வாழ்வையும் சாவையும் கூட சாதி, மதமே நிர்ணயிக்கிறது. கிராம பஞ்சாயத்திலிருந்து வட்டம், மாவட்டம் மாநிலம் மத்திய அரசு வரையிலும் ஊடுருவி நாடெனும் வண்டி நகர அவசியமாகும் அத்துணை அமைப்புகளிலும் அச்சாணியாய் உறுதியாக உறுத்தி வரும் இந்த சாதி எங்கிருந்து எப்படி எப்போது வந்தது?

வாருங்கள் வரலாற்றைப் புரட்டுவோம். வேதங்களில் முதன்மையான இருக்குவேதம் சொன்னது வர்ணங்கள்தான் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருப்பு. அதன் மாற்றுப் பெயரே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன். பிரம்மம் என்றால் உயர்ந்த ஆன்மா என்று பொருள். இருக்குவேதத்தின் கடைசி புத்தகமான பத்தாவது புத்தகத்தில் தான் கருப்பு நிறமுடைய (கிருஷ்ண த்வச்) சூத்திர பிரிவு காணப்படுகிறது (உபிந்தர் சிங்-2008). இவர்கள் ஆரியரிடம் அரசு உரிமையைப் போரில் தோற்று அடிமைகளானதால் தசா/தாசி என்பவர்கள். இவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணியாதோர்(அவ்ரதா), யாகங்களைச் செய்யாதவர்கள்(அக்ரது) வேற்று மொழியினர் (ம்ரித்ர வாச) தோற்றத்தால் வேறுபட்டவர்கள் என இருக்குவேதம் இவர்களைப் பற்றிச் சொல்கிறது (உபிந்தர் சிங்-2008).

வடமேற்குப் பகுதியில் தோன்றிய ஆட்சி மாற்றம், மெல்ல நகர்ந்து அன்றையப் பாடலிபுத்திரமான, பீகாரின் பாட்னாவை அடைகிறது. இதற்குக் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகி விடுகிறது. அதற்குள் மற்ற மூன்று வேதங்களும் உரு கொண்டன ( கி.மு 7- ம் நூற்றாண்டு). கங்கை சமவெளியில் எண்ணிலடங்கா தத்துவ ஞானிகள், சாதுக்கள் அன்றும் தவம் புரிந்தவாறு காணப்பட்டனர்.

இந்தியாவின் பல இடங்களில் பல்வேறு இன மக்கள் தங்களுக்கு ஏற்புடைய கருத்தின் அடிப்படையில் வாழ்ந்தனர். பலர் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து ஜனபதா என்னும் குடியரசு நாடுகளாகவும், இனக் குழுக்களாகவும், வேட்டையாடும் சமூகமாகவும், பண்பட்ட நாகரீகத்தைக் கொண்ட படிக்க எழுதத் தெரிந்தவர்களாகவும், கடல் கடந்து வாணிபத்தை நடத்தியும் இட்டார் பெரியோர், இடாதோர் இழி குலத்தோரென்றும், யாதும் ஊரே போன்ற கொள்கையினரும் வாழ்ந்து வந்தனர்.

இதே காலத்தில் கங்கை சமவெளியை ஆரிய வர்தமாக்கிக் கொண்டு மன்னராட்சியும், பிறப்பு இறப்பு என்னும் வாழ்க்கைச் சுற்றிலிருந்து விடுபட யாகங்களும், பலியிடல், வேதங்களை மனனம் செய்து உச்சரித்தல், எண்ணில்லா சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றுதல், பிறப்பால் நிறத்தால் மனித இனத்தை வேறுபடுத்திப் பார்த்தல், போன்ற கருத்துக்களை தன் வாழ்வியலாகக் கொண்டவரும் வாழ்ந்து வந்தனர்.

பிற்கால வேதகாலத்தில் ஆட்சி பரவலுடன் சடங்கு சம்பிரதாயங்களின் கட்டுப்பாடும் கட்டாயமும் வலுத்தது. அக்காலத்தில் விவசாயமும் வணிகமும் கூட அதிகரித்தன. செல்வமும் செழிப்பும் கொழித்தும்  ஆட்சியாளருடனான செல்வாக்கு பெருகியும் சமூக நிலையில் மட்டும் மாற்றம் இல்லாததால் விவசாயிகள், வணிகர்கள் மன அமைதி இழந்தனர். தொழிலுக்குப் பயன்படும் கால்நடைகளைப் பலியிடுதலில் அவர்களின் புலம்பல் அதிகரித்தது. இந்த கட்டத்தில் தான் புத்தரும் மகாவீரரும் தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றனர். இருவரும் நாத்திகம் பேசினர். கடவுள் மறுப்பு கொள்கையுடன், மனிதன் தனது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் முறையாக நடந்தாலே போதும். அதுவே அவனுக்குத் தேவையான விடுதலையை அளிக்கும் என்று நெத்தியடியானது. இதனால் பல ஆட்சியாளர், வணிகர், விவசாயிகள் பிராமணர்களும் இவர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

முதல்பெரும் மகத ராஜ்ஜியத்தை அமைத்த மகதர்களும், நந்தர்களும், பின்னர் வந்த மவுரியர்களும் தொடர்ந்து ஜைன, பவுத்த மதங்களையே பின்பற்றியும் ஆதரித்தும் வந்தனர். இவர்களில் எவரும் தன்னை ஷத்ரியர் என்று அடையாளப் படுத்தவுமில்லை.  தன் பிராமண மதத்தைக் காப்பாற்றத் துணிந்த புஷ்ய மித்திர சுங்கன், மவுரிய வம்சத்தின் மன்னனைக் கொலை செய்து, தன்னையே மன்னனாகவும், அது சுங்க வம்சத்தின் ஆட்சி எனவும் அறிவித்தான். ஆக வருணா சிரம தர்மத்தை ஆட்சியாளரும் மக்களும் மறுத்தனர் என்பது தெளிவு. அடிப்படையில் இந்தியா நாத்திக கொள்கையை விரும்பியது எனக்கூறுவது வரலாறு.

குப்தப் பேரரசு கி.பி 3- 6 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டது. இவர்களும் வாணிபம் செய்யும் வைசியர் அல்லது பிராமணர் என்று காண்கிறோம். இக் காலத்தில் மீண்டும் பிராமணக் கொள்கைகள் தலைதூக்கின. கோயில் கலாச்சாரம் பிராமணர்களுக்கான முக்கியத்துவம், நிலக்கொடைகள் பெருகின. ஒரு குப்த மன்னன் பதவியேற்றால் ஓராண்டிற்கு ராஜசுயயாகம் நடத்தி, கடவுளிடமிருந்து, ஆளும் அங்கீகாரத்தை அந்தணர்கள் பெற்றுத் தந்தனர். கடந்த கால மவுரிய மன்னனின் நிலை குப்தர்களின் மனதில் நீங்கா பயத்தை ஏற்படுத்தியிருக்குமோ? தெரியவில்லை, ஆனால் தொடர்ந்து அந்தணர்களையும், சைவ, வைணவ, புத்த, ஜைன ஆலயங்களுக்குப் பரவலாகக் கொடைகளை வழங்கினர். தங்களைப் பிரம்ம ஷத்ரியர் (பிராமணர்களாக இருந்து ஷத்திரியராக மாறியவர்) என்றழைத்துக் கொண்டனர். அடுத்து வந்த வர்தணர்களோ மீண்டும் பவுத்த ஜைன கொள்கைகளில் நாட்டம் கொண்டனர்.

இதற்கிடையில், சாதிகள் தோன்றி பெருகியது. பெருவாரியான மக்கள் வருணாசிரம தர்மத்தை விட்டு விலகியதால் குப்தர் காலத்தில் தரும சாத்திரங்களும், சூத்திரங்களும் தொகுத்து எழுதப்பட்டன. மகாபாரதமும் இராமாயணமும் கூட தன் அளவில் பன்மடங்காயின. இப்படித் தொகுக்கப்பட்ட பல நூல்களில் மனுசாத்திரமும் அடங்கும். இந்த சட்டங்களைத் தாண்டி தன் மனம் போன போக்கில் வாழ்ந்த மக்களின் தொகையைக் குறைக்க ஒரு சட்டம் மனுவின் புத்தகத்தில் பிறந்தது. தங்கள் சாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொண்டவர்களையும் அவர்களின் வாரிசுகளையும் அனுலோமா, பிரதிலோமா என்று புது சாதிகளை உருவாக்கி, சண்டாளர்கள், தீண்டத் தகாதவர்களெனச் சூத்திரருக்கும் கீழே பல பிரிவுகள் உண்டாக்கினார். இவர்கள் ஐந்தாம் பிரிவினர் (பஞ்சமர்) என்றும் அழைத்தனர். சூத்திரர்களின் எண்ணிக்கை அதிகமானால், அது உயர் சாதியினருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தார் மனு. ஆயினும் ஆட்சியாளர்களும் வெகுஜன மக்களும் இதைப் பெரிதாக் கருதவில்லை போலும்.

சண்டாளர்களைப் பார்த்தாலும், தொட்டாலும் தீட்டு என்று வடமொழி சாத்திரங்கள் சொன்னாலும் வட இந்தியாவில் மன்னர்களாக இவர்கள் ஆட்சி செய்ததை வரலாறு சொல்கிறது. (இவர்களின் தோற்றம் குறித்து பல்வேறு கற்பனைக் கதைகள் சொல்லப் படுகின்றன. பிற்கால நூல்கள் இவர்களை ரஜபுத்திரர்கள் என்றும் சொல்கின்றன). தற்போதைய வட இந்தியப் பகுதியிலுள்ள புந்தேல்கன்ட் பகுதியை மையமாகக் கொண்டு 9-13 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தனர். பழங்குடியினர் வணங்கிய ’மனியா’ எனும் பெண் தெய்வ வழிபாட்டினர். தங்கள் குல தெய்வத்திற்காக மஹோபாவில் கோவில்களைக் கட்டினர். கஜுராஹோ சிற்பங்களையும் தோற்றுவித்தனர். வங்கப் பகுதியைப் பாலர்கள் 8-12 நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். இவர்கள் புத்த மதத்தையே கடைபிடித்தனர். இன்றும் இவர்கள் கட்டிய பல கோயில்கள் வழிபாடின்றி அழிந்து காணப்பட்டாலும் அதில் தெய்வச் சிலைகள் இல்லை. இவை போனதெங்கே? தெரியாது. ஆனால் ஊருக்கு வெளியே இடுகாட்டிலோ சுடுகட்டிலோ உயர்ந்த தாழ்ந்த சாதியினரையும், அரசாண்ட மன்னனையும் அடிமையையும் கோயிலின் கருவறையிலேயே வாழ்ந்தவனையும், கோயிலின் வாசத்தையே அறியாதவனையும் வேறுபாடின்றி ஒரே இடத்திற்கு அனுப்பும் வெட்டியான் என்ன மன்னனின் ஆலோசகராக அரசவையிலா அமர்ந்து இருந்திருப்பான்? அன்றும் அவன் தீண்டத் தகாதவனாகவே மன்னனாலும் கருதப் பட்டிருப்பான்.

ஷத்ரியரே ஆளப் பிறந்தவர் என சாத்திரங்கள் சொன்னாலும், சூத்திரரான நந்தர்களும், மயிலை வளர்ப்பவரான மவுரியரும் பின்னர், பிராமணரும், மூன்றாம் வருணத்தைச் சார்ந்த குப்தர்களும் ஆட்சி செலுத்தினர் என்பது வரலாற்றின் மூலம் வெளிச்சம் பெறுகிறோம். ஆள்பவர் எவராயினும் மன்னனைச் சூழ்ந்து வாழ்பவர்களிலும் ஒதுக்கப் பட்டவர் வாழ்விலும் மாற்றம் நிகழவில்லை என்பது தானே இன்றைய அரசியல் நமக்குச் சொல்லும் பாடம்.

வடமொழி இலக்கியங்களின் கூற்றும், கல்வெட்டுக்களின் கூற்றும் கற்பனைக்கும் நடைமுறைக்குமான இடைவெளியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இப்போது தென்பகுதிக்குப் போவோமா…? சாதவாணர்கள் பவுத்த சமணச் சார்பினர். சங்க காலம் சாதியைக் கடந்தது எனச் சொல்லாமலே தெரிவது. களப்பிரர் பற்றிய உண்மைகள் வலைத்தளங்களில் வலம் வருகின்றன. அவர்கள் பிராமண சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுத்து, சேர, சோழ, பாண்டியரான மூவேந்தரையும் வீழ்த்தியவர்கள். பல்லவர்களோ பிரம்ம ஷத்திரியர் எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. சோழர் கால கல்வெட்டுகளை ஆய்ந்ததில் 16 வகையான சாதிகளின் பெயர்கள் காணக் கிடைத்தாலும், அவற்றில் பெரும்பான்மையானவை தொழிற்பெயர்களே (ஓய்.சுப்பராயலு). கடல் கடந்தால் தீட்டு எனும் தரும சாத்திரங்களின் சட்டங்களை தெற்குப் பகுதியை ஆண்ட எந்த குலத்தைச் சார்ந்த மன்னனும் மதிக்கவில்லை என்பதற்கான சான்றுகள் ஏராளம்.

பிரம்ம ஷத்ரியர் என அறிமுகப் படுத்திக் கொண்ட பல்லவர்கள் புத்த மதத்தைக் கடல் கடந்தே பரப்பினர். ஒய்சாளர்களும், கிழக்கு, மேற்கு சாளுக்கியரும், இராட்டிரகூடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கலிங்க மன்னர்களும் பாண்டியர்களும் கடல் கடந்தே இலங்கையுடன் திருமண, அரசியல் உறவுகளை வளர்த்துக் கொண்டனர். 13 ஆம் நூற்றாண்டில் தென்னகத்தின் பெரும் பகுதியை ஆண்ட காகத்தீயர்கள் தங்களைச் சூத்திரர் என்றும், தூய்மையானவர்கள் என்றும் கல்வெட்டுகளில் புகழ்ந்தனர். கடல் கடந்து இலங்கையுடனும் போர் தொடுத்தனர். ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதா..? கடினமாக உழைத்து எல்லோருக்கும் உணவளித்த விவசாயி வரி கட்ட… கழனியில் கால் பதிக்காத பார்ப்பனனுக்கு வரிச்சலுகை, இலவச நிலம். இது தானே இன்றும் தொடர்கதையாக நீள்கிறது.

விஜயநகர மன்னர்களில் புகழ்பெற்ற கிருட்டிண தேவராயர் எழுதிய ஆமுக்த்தமால்யதாவின் எழுத்துக்களை ஒரு முறை புரட்டுங்கள். ஆழ்வார்களில் தந்தை மகள் உறவுடைய பெரியாழ்வார் ஆண்டாள் இவர்களின் வாழ்க்கையை மையக்கருவாகக் கொண்டது. பிரிவுத் துயரைத் தாங்காது தன் தோழியரிடையே பேசும் ஆண்டாளின் வாயிலாக ஒரு கருத்தைச் சொல்கிறார். இராமாவதாரத்தில் சீதையின் பிரிவுத் துயருக்கு இராமனே காரணம் எனச் சாடுகிறார்.

ஒரு பெண்ணுக்கு தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய உரிமை இல்லையா…? சூர்ப்பணகை தன் விருப்பத்தைத் தானே சொன்னாள். அதற்காக அவளின் காதையும் மூக்கையும் ஏன் வெட்ட வேண்டும். ராமனின் செயலால் தானே இராவணன் சீதையை இலங்கைக்கு எடுத்துச் சென்றான்? சீதையின் பிரிவுத் துயருக்கு ராமனே காரணம் என அன்றைய இராமாயணத்திலும் இன்றைய அரசியலிலும் நாயகனாக நிலைத்திருக்கும் இராமனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் இந்த விஷ்ணு பக்தரான மன்னன் கிருஷ்ணதேவராயர். இருபதாம் நூற்றாண்டின் பெரியார் கூற்றை விமர்சிக்கும் நாம் 16-ம் நூறாண்டின் முடி சூடிய மன்னனின் கேள்விகளை எப்படிப் புரிந்து கொள்வது? ஆட்சி தன் கையிலிருந்ததால் முடிந்தது என்று புரிந்து கொள்ளவா?

வட மொழி சாத்திரங்களின் சட்ட திட்டங்கள் மன்னனை, ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்ற புரிதலில் தவறில்லை என்றே படுகிறது. மனு தர்மம் மன்னர்களின் வாழ்வியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதற்கான அடையாளமாகக் கொள்ளலாம். ஆனால் வட மொழி நூல்கள், வருணாசிரம தர்மத்தைக் காப்பதும் கடைபிடிப்பதும், மன்னருக்கான முக்கிய கடமைகளில் ஒன்றாகவே சொல்கின்றன. எப்படியானாலும், காலம் எதுவாயினும் ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்பதில் மட்டும் மாற்றமில்லை எனச் சொல்கிறது வரலாறு.

வடமொழி சாத்திரங்கள் சொல்லும் முதலாம் இடத்தையும் முக்கியத்துவத்தையும் எழுதாச் சட்டமாகப் பிராமண வர்ணம் பெற்றது, ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போதுதான் என்கிறார் இந்தியவியல் வரலாற்றாளர் சிந்தியா தல்போட் (சிந்தியா தல்போட், 2008, ப-48). அதிகமான எண்ணிக்கையில் பிராமணர்களைக் கணக்கர், எழுத்துப் பணி, ஆவணங்களை எழுதுபவர், ஆட்சியாளர்களின் கட்டளைகளுக்கு அவ்வவ் மொழியில் எழுதுபவர், ஆட்சியாளர்களின் உதவியாளர்கள் போன்ற பல அரசங்க தொடர்புடைய பணிகள் பிராமணர்களுக்குத் தரப் பட்டதும், அத்துடன் கால்நடைகளைப் பராமரிக்கும் ஆயர் சமூகத்தையும், போர்த்தொழில், தற்காப்புக் கலை வளர்த்த சமூகங்களையும் ஆங்கிலேயர்கள் ஒடுக்கியதும் பிராமணர்கள் முக்கியத்துவம் பெற ஒரு முக்கிய காரணம் என்று மேலும் விளக்குகிறார். இந்த 19 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியச் சமூகத்தில் சாதிய முறை முன்பு பெறாத முக்கியத்துவத்தைப் பெற்றது என்பதும் இவரின் கருத்தே.

காலனி ஆதிக்கத்திற்கு முற்பட்ட இந்தியாவின் வரலாற்றைக் கட்டமைக்கப் பிராமண இலக்கியங்கள் (தரும சாத்திரங்கள்) பயன்படாது, மாறாகக் கல்வெட்டுகளே சிறந்த சான்றுகள் என்று தன் கருத்தை அதே நூலில் முன்வைக்கிறார். ஆனால் கல்வெட்டுகள் பெரிதும் கோயில்களுக்கானது, அதன் நோக்கம், அதில் பேசப்படும் மக்கள் என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளல் அவசியம். அவை சமூகத்தின் அத்துணை கூறுகளையும் அடக்கியதா..? என்ற கேள்வியும் எழுகிறது. கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை எவரும் மறுக்க முடியாது. அதே போல் அவற்றின் குறைகளையும் கவனித்தல் முக்கியமல்லவா..?

ஆங்கிலேய ஆதிக்கத்தில் ஆழமான சாதி மத வேறுபாடுகள் சுதந்திர, மக்களாட்சி இந்தியாவில் தான் மேலும் மேலும் வலுப் பெற்று இன்று சாதி நுழையாத இடமே இல்லை என நிறைந்து சமூக சண்டைகள் கொளுத்து நிற்கிறது என்றால் அது உண்மைக்கு மாறாகாது. இன்றும் கோயிலின் வெளிப்பகுதியில் ஓய்வெடுத்ததால் சிலர் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். ஆணவக் கொலைகளின் அடிப்படை சாதியே. உணவாலும் உடையாலும் வேறுபட்டவர்களை வெட்டி வீழ்த்தும் வீரச் சமூகம் என வருங்கால வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கும் நாம் மெத்தப் படித்த மேதாவிகள். வீட்டுக்கு ஒருவர் வெளிநாடுகளில் வசித்தாலும் நாம் சாதிய வேறுபாடுகளை இறுக்கி அணைத்த சென்றுள்ளோம்.ஒரு நோயாளி மருத்துவரை நோக்கி கீழ்சாதியான நீ என்னைத் தொடாதே என்பதும், குடிமைப் பணி அதிகாரிகளையும் விதி விலக்கில்லாது’ உன் சாதி எது?’ என்று அவர்கள் முகத்திலேயே கேட்கும் கருத்துரிமைக் கொண்டவர்கள்.

இன்றைய நடப்பு நாளைய வரலாறு. யாதும் ஊரே, யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறன் தர வாரா….. என்னும் வரிகளைச் சொல்லிப் பெருமைப்படுகிறோமே, வரும் தலைமுறைகளுக்கு நாம் பதித்துச் செல்லும் வரலாற்றுச் சுவடுகளை பின் நோக்கி மறுபார்வை பார்க்க ஏன் மறுக்கிறோம்? நம்மைத் தடுப்பது எது?. மாற்றத்திற்குக் காலம் ஒரு தடை அல்ல. உலகம் நம்மைக் கண்டு பெருமைப் படும் வரலாற்றைப் படைப்போம் என்ற எதிர்பார்ப்புடன் அமைவோம் .சான்றாதாரங்கள்:
1. Upider Singh-A History of Ancient and Early Medieval India
2. Cynthia Talbot -Inscribing the Other, Inscribing the Self: Hindu - Muslim Idetities in Pre-Colonial India  Comparitive Study in Society and History, 47, no-1, 1995
3. Y. Subbarayalu- South India Under the Cholas


Dr.S.Chandnibi
Associate Prof
CAS, Dept of History
AMU, Aligarh-202002
UP State

----