Wednesday, September 30, 2020

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள் 

- கரன் கார்க்கி


ரிப்பன் மாளிகை

செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி நான் என்ன சொல்வது? உங்களுக்கே தெரியும்.  கடந்த உரையாடலில் அதைப் பேசினோம். 

இப்போது சென்னை மாநகராட்சியின் வெள்ளை மாளிகையான மெட்ராசின் அடையாளங்களுள் ஒன்றான ரிப்பன் பில்டிங்கைப் பற்றி பேச மறந்தால் வரலாறு மட்டுமல்ல புவியியலும் நம்மை மன்னிக்காது. 107 வருடப் பழமையான கட்டிடம். இப்போதும்  பாருங்கள், இப்பொழுதுதான் சுரங்கத்திலிருந்து புதிதாக வெட்டியெடுத்த ஒரு வைரத்துண்டு போல மின்னுகிறது. மெட்ராசின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று. 14 அடுக்கு மாடி L.I.Cகட்டிடத்தை அதன் 100 வயதுக்குள் ஒரு நாள் இடிப்பார்கள் .... அது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கூட வலிக்கும். ஆனால் அதே இடத்தில் ஒரு ஐம்பது அடுக்கு கட்டிவிடலாம். அல்லது நூறு அடுக்கு. ஆனால், நம் ரிப்பன் மாளிகை வெறும் மூன்று அடுக்கு மட்டுமே அதன் கோபுரத்துடன் சேர்த்து நான்கு அடுக்கு. அதன் பழமைக்காக மட்டுமல்ல அதன் வடிவமும், வரலாறும் ரிப்பன் மாளிகையை இன்னும் பல நூறு ஆண்டுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பேன். நான் மட்டுமா பழமையான கட்டிடங்களை நேசிப்போர் அத்தனை பேரும் இதையே சொல்வார்கள்.

மேற்கு கிழக்கு மத்திய கட்டிடக்கலை பாணியின் கூடலில் பிறந்த அற்புதப் படைப்பை நாம் பராமரிப்பது மிக அவசியம். ஏனெனில் அது போன்று மக்கள் பயன்பாட்டுக் கட்டிடம் நம்மிடம் வேறொன்று இல்லை. ஒரு ஓவியம் போல, ஒரு மகத்தான புதினம் போல, ஒரு பேரழகுச் சிற்பம்.... நியோ கிளாசிக் பாணி வெள்ளைவெளேர் மாளிகை பூங்கா நகர் ரயில் நிலையத்துக்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை லெவல் கிராசிங் மேம்பாலத்தின் மேல் நின்று நான் அதன் பேரழகை என் பத்து வயதிலிருந்து வேடிக்கைப் பார்க்கிறேன். என் ஆசை இன்னும் தீரவில்லை. தூண்கள் வளர்ந்து மேலெழும் அதன் உச்சி பீடத்தில் சுண்ணாம்புச் சுதையாலான சுருள்களும், இலைகளும் என ஒரு மாயம் அசையும் இனி எப்போதேனும் போனால் பாருங்கள் ஒவ்வொரு சதுரடிக்கும் ஒரு அழகு அசையும் இன்றைக்கு அதைப் போன்று செய்ய நம்மில் அல்லது உலகத்தில் கட்டிடக் கலைஞர்கள் இருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் மக்கள் பயன்பாட்டுக்கான அரசு கட்டிடங்கள் இனி இப்படியான அழகுடன் கட்டப்படுமா? மேற்கத்திய பாணியுடன் முகலாய மற்றும் நம்மூர் பாணி கலந்து செய்த சிற்ப மாளிகை என்றாலும் திட்டமிட்டவன் வெள்ளையனாக இருந்தாலும் அதைச் செய்தது நம்மூர் கறுப்பர்களின் கைகள் தானே? அது சரி வெறுமனே ஒரு கட்டிடத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதனால் இந்தக் கட்டிட பாணி பற்றி ஏன் நாம் தெரிந்து கொள்ளக்கூடாது இன்றோ , நாளையோ நீங்கள் வீடு கட்டும்போது இதில் ஒரு பாணியைப் பின்பற்றி தூண்களோ முகப்போ அமைக்க நீங்கள் உங்கள் பொறியாளரைக் கேட்கலாம். அதற்காகவாவது தெரிந்துகொள்வது அவசியம். அது என்ன கட்டிட பாணி? ஆமாம் பலவித பாணிகள் இருக்கிறது. அதைப்பற்றிச் சின்னதாக நமக்கு அறிமுகமிருந்தால் இப்படியான கட்டிடங்களைப் பார்க்கும் போது உங்களுக்கு அந்த நினைவுகள் வரக்கூடும் ..அது நமக்கு கூடுதல் சுவாரசியமாக இருக்கும் எனக்கு அப்படித்தான் உங்களுக்கும் அப்படித்தானே!

ரிப்பன் கட்டிடம் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும் இந்தோ சாரசெனிக், இந்தோ கோதிக், முகல் கோதிக், நியோ முகல் இந்தோ கட்டிட முறையெனவும் சொல்கிறார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலப் பேரரசில் குறிப்பாகப் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதேச சமஸ்தானங்களில் பொது மற்றும் அரசு கட்டிடங்களைக் கட்ட பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடக் கலை பாணியாகும். இது இந்திய-இஸ்லாமியக் கட்டிடக்கலை, குறிப்பாக முகலாய கட்டிடக்கலை பிரித்தானிய மற்றும் இந்தியப் பாரம்பரிய பாணி, சிலசமயம் கொஞ்சம், இந்தியக்கோயில் கட்டிடக்கலை ஆகியவற்றின் அலங்காரக் கூறுகளைக்கொண்டு உருவானது. சாரசென் என்பது அரபு மொழி பேசும் முஸ்லிம் மக்களைக் குறிக்க ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்.

ரிப்பன் மாளிகையின் சிறப்பம்சம் இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய, ஆகிய மூன்று முக்கியக் கட்டிடக்கலை வடிவங்ககளை அடிப்படையாகக்கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1. கோதிக் கட்டிடக்கலை என்பது ஐரோப்பியக் கட்டிடக்கலையின் ஒரு பாணியைக் குறிக்கும் இப்பாணி தேவாலயங்கள் பேராலயங்கள் போன்றவற்றின் வடிவமைப்புகளோடு தொடர்புடையது. இப்போது நீங்கள் நம் சர்ச் வடிவங்களை நினைத்துக்கொள்ள வேண்டும். சென்னை சாந்தோம் , அன்னை வேளாங்கன்னி, 12 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உருவாகிய இது மத்திய காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது. இதைத் தொடர்ந்தே 15 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை உருவானது. 18 ஆம் நூற்றாண்டளவில் இங்கிலாந்தில் ஆரம்பமான முயற்சிகள், 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவிலும் பரவியது. இது சிறப்பாகச் சமயம் மற்றும் பல்கலைக்கழகக் கட்டிட வடிவமைப்புகள் ஊடாக 20 ஆம் நூற்றாண்டிலும் புழக்கத்திலிருந்தது. இப்போது உங்களுக்கு சென்னை பல்கலைகழகக் கட்டிடம் நினைவுக்கு வரவேண்டும். ஆனால் நாம் அதை இப்போது பேசப்போவதில்லை. 

2. அயனிய ஒழுங்கில் அமைந்த கோயில் எபெசு என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆர்ட்டெமிசு கோயில் ஆகும். இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக விளங்கியது. அயனிய ஒழுங்கில் தூண் ஒரு அடித்தளத்தின் மீது அமைந்திருந்தது. இந்த அடித்தளம் தூண் தண்டை அதைத் தாங்கிய மேடையிலிருந்து பிரித்தது. இத் தூண்களின் போதிகைகள் இரட்டை நத்தையோடு போன்ற சுருள் வடிவம் கொண்டவையாக இருந்தன. 

3. கொறிந்திய ஒழுங்கின் பெயர் "கொறிந்த்" என்னும் கிரேக்க நகரத்தின் பெயரில் இருந்து பெறப்பட்டது . எனினும் இது முதலில் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்பட்டது ஏதென்சு நகரிலே இவ்வொழுங்கு உருவானது எனினும், கிரேக்கர் தமது கட்டிடக்கலையில் இதை மிகவும் குறைவாகவே பயன்படுத்தினர் இவ்வொழுங்கின் தூண்கள் தவாளிகளோடு கூடிய தண்டுகளையும், இலை வடிவம் மற்றும் நத்தைசுருள் வடிவங்களால் அழகூட்டப்பட்ட போதிகைகளையும் கொண்டன. இதை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் புற வடிவத் தூண்களில் நாம் பார்க்கலாம். 

ஆக மேற்சொன்ன இந்த மூன்று முறைகளும் கலந்து கட்டி ரிப்பன் மாளிகையை வடிவமைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறத்தில் அமைந்த இக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது. லோகநாத முதலியார் என்பவரின் ராம்சே கம்பெனியால் இந்திய ரூபாய் 7,50,000 செலவில் இது கட்டப்பட்டது. 1909 டிசம்பர் 11 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1913 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அன்றிலிருந்து சென்னை மாநகராட்சி இந்தக் கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மன்றம் இதற்கு முன்பும் செயல்பட்டுக்கொண்டுதானிருந்தது. இதற்கு முன்பு புனித ஜார்ஜ் கோட்டையில் டவுன் ஹால் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மாநகர் சார்ந்த பணிகள் இட நெருக்கடி மற்றும் தனித் துறையாகச் செயல்படுமளவு நகர விரிவாக்கம் காரணமாக இன்றைய பாரிஸ் பகுதியில் உள்ள எரபாலு தெருவுக்கு மாற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி 1913 வரையிலும் அங்கு தான் செயல்பட்டு வந்திருக்கிறது. பிறகு நகர விரிவாக்கம் கூடிக்கொண்டே போவதால் அதற்கு ஒரு பெரும் கட்டிடம் தேவையெனக் கருதி அதற்காகத் திட்டமிட்டார்கள்.  

இப்படி திட்டம் போடும் போதெல்லாம் இந்த பீப்புல்ஸ் பார்க்கின் மிகப்பெரிய பசுமையான நிலப்பரப்பின் மீது ஆட்சியாளர்களுக்கு அப்படியென்ன ஈர்ப்போ தெரியவில்லை மூர்மார்க்கெட் (இந்தக் கட்டடம் இப்போது இல்லை அந்த இடத்தில் புறநகர் ரயில் நிலைய வண்டிகள் நிறுத்துமிடம் இருக்கிறது) கட்ட நினைக்கும் போதும் அவர்களுக்கு அங்குள்ள இடம் தான் தேவைப்பட்டது, ராணி விக்டோரியாவின் நினைவாக அரங்கு கட்டத் திட்டமிடும் போதும் அந்த இடம் தான் ஆட்சியாளர்களின் நினைவுக்கு வந்தது. மாநகராட்சிக்குக் கட்டிடம் கட்டத் திட்டமிட்ட போதும் அங்கிருந்த இடம் தான் அவர்கள் நினைவிற்கு வந்திருக்கிறது.  நம் ஆட்களுக்கு புறநகர் ரயில் நிலையம் கட்டவும் இந்த இடமே நினைவுக்கு வர அந்த துயரம் நடந்தது பேரழகு பெருமதிப்பான செந்நிற அதிசயமான மூர் மார்க்கெட்டை எரித்து அந்த இடத்தில் கட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு அன்றைய ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டார்கள். 1909 டிசம்பர் 11இல் குளிர் மிகுந்த காலைப்பொழுதில் வைசிராய் மின்டோ மெட்ராஸ் மாநகராட்சிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆங்கிலேய அரசாங்கப் பொறியாளர் ஜி.எஸ்.டி. ஹாரிஸ் கட்டிடத்தை வடிவமைத்தார். இதனை ஒப்பந்தக்காரர் லோகநாதன் என்பவரின் இராம்சே கம்பெனியார் கட்டி முடித்தார்கள். கட்டிட ஒப்ந்தக்காரர் நம் பெருமாள் வழக்கமாகச் சிவப்பு நிறத்தில் கட்டுகிறவர். அதனால் இதை வெள்ளை நிறத்தில் கட்ட இந்த ஒப்பந்தக்காரர் நினைத்தாரோ, அல்லது இந்த நகரத்தைத் தூய்மையாக்கும் தொழிலாளிகள் கறுப்பும், கசடுமாக இருக்கிறார்கள், அதை நிர்வகிக்கப் போகும் இந்தக் கட்டிடமாவது வெள்ளையாக இருக்கட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ. வெள்ளை நிறத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையில், பல இடங்களில் நுட்பமான சுண்ணாம்பு சுதை சிற்பங்களாலானது. செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இதன் நீளம் 252 அடிகள். அகலம் 126 அடிகள். இதில் உள்ள கோபுரத்தின் உயரம் 132 அடிகள் ஆகும். இந்தக் கோபுரத்தில் 8 அடி விட்டமுள்ள கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட 7.5 லட்சம் செலவானது. 1913-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதியன்று அப்போதைய வைசிராய் ஹார்டின்ஜ் திறந்து வைத்தார். 3 ஆண்டுகளில் அந்த அற்புதம் கட்டியெழுப்பப்பட்டது 1913 நவம்பர் 26 இல் நகரின் மிக முக்கியமான மனிதர்கள் 3000 பேர் குழுமியிருக்க பீப்பில் பார்க்குக்கென நிரந்தரமாக இருந்த பாண்டு வாத்தியக் குழுவினர் மாளிகை திறப்பு விழாவுக்கு இசைக்க வான வேடிக்கைகளுடன் கோலாகலமாகத் திறப்பு விழா நடந்துள்ளது. பெயர் தான் ரிப்பன் பிரபு மாளிகையே தவிர அவர் இந்த மாளிகையில் வசிக்கவும் இல்லை, பார்க்கக்கூடவில்லை.

கட்டிடக் காண்டிராக்டர் P.லோகநாதன் அவர்களுக்கு ஊதியமாக 5,50,000 வழங்கப்பட்டது. இன்று இந்த கட்டிடப் பராமரிப்புக்கும் வெள்ளையடிக்கவே பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படுகிறது. அதில் பாதி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை நிருபிக்க யாருக்கும் திறமையில்லை ஆனால் எல்லோருக்கும் உண்மை தெரியும். ஏன்? இந்த மாளிகைக்கு ரிப்பன் பிரபுவின் பெயரை வைத்துக் கட்டிடத்தின் முன்பாக சிலையும் வைத்திருக்கிறார்கள். 

அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ரிப்பன், 10 டவுனிங் தெரு, லண்டன் மாநகரில் பிறந்தார் அவர் பள்ளியோ அல்லது கல்லூரியோ சென்றவரில்லை தனியாகவே கல்வி பயின்றார். அவருக்கு 1870 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அன்றைய நாட்களில் நீதி மன்றங்களில் இந்தியர்களும் நீதிபதிகளாக இருந்திருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்வதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை, இந்த அரை வெள்ளை மற்றும் கறுப்பு நீதிபதிகள் முழு வெள்ளையர்களான நம்மை விசாரித்துத் தண்டனை தருவதா வெட்கக்கேடு அந்த அசிங்கத்துக்குப் பதில் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து நாம் ஊர் திரும்புவதே மேல் என்று வெள்ளை மேட்டிமை உணர்வுள்ள ஆங்கிலேயர்கள் சொல்ல அவர்களுக்கு இங்கிலாந்து, பத்திரிக்கையாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்தச் சூழலில் நிலைமையை சீர் செய்ய ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார் என்றாலும் மனிதர்களிடையே பாகுபாடுகளை விரும்பாத ரிப்பன் பிரபு வெள்ளை மேட்டிமை வெறி கொண்ட வெள்ளையர் மீதான மனக்கசப்பில் தனது இந்தியாவின் வைஸ்ராய் பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இதன் உடனடி விளைவாக வசதி படைத்த மேல்தட்டு இந்தியர்களால் தங்கள் உரிமைகளைக் காத்துக்கொள்ள 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. 

இந்திய நிர்வாகத்தில் இந்தியர்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு. வெள்ளை மேட்டிமை மனப்பான்மை இல்லாத பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர் குறைந்த காலமே இருந்தாலும் இன்றும் நினைவில் கொள்ளும்படி பல ஆக்கபூர்வமானப் பணிகளைச் செய்தவர். இந்தியாவிற்கு இங்கிலாந்து அரசு அனுப்பிவைத்த வைஸ்ராய்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கவர் இந்தியர்களின் பிரச்சினைகளைக் கனிவுடனும், பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை 'ரிப்பன் தி குட் என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்ததாகச் சொல்வார்கள். பிரிட்டிஸ் இந்தியாவின் நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, உள் நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தைத் திரும்பப் பெற்றது, தல சுயாட்சியை அறிமுகப்படுத்தியது, ஆங்கிலேயர் அடாவடியாகக் கைப்பற்றிய மைசூரைத் திரும்பி வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகி தாய்நாடு போனதற்காக மிகவும் வருத்தப்பட்டனர். காரணம் அதிகாரத்திலிருந்தபோது அவர் செய்த மாற்றங்கள் இன்றும் பயன்பாட்டிலிருக்கிறது. இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக்கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார். கி.பி.1882-ல் W.W.ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் உள்ளாட்சி அரசின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.1829 இராஜா ராம்மோகன் ராயுடன் இணைந்து சதி முறையை ஒழிக்கப் பாடுபட்டார்.  கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார். இதனால் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்றஸ்லோகன் உருவானது. அதனால் அந்த மனிதரின் பெயரையும் வைத்து கட்டிடத்திற்கு முன்பாக ஒரு நுட்பமான அவரது சிலையையும் வைத்திருக்கிறார்கள். நல்ல வேளையாக இன்னமும் அந்தக் கட்டிடத்தின் பெயரை நம்மவர்கள்  மாற்றவில்லை. நாம்  இப்படி குறைபட்டுக்கொள்ளக் காரணம் இருக்கிறது. ரிப்பன் மாளிகைக்கு 100 வயதான நாட்களில் மெட்ரோ ரயில் பணிகள் இப்பகுதியில் நடப்பதால் ரிப்பன் கட்டிடத்தில் விரிசலிட்டது இவ்வளவு பாரம்பரியமானதொரு வரலாற்றுக்கட்டிடம் இருக்கிறது அதற்கு பாதிப்பு ஏற்படுமாவென்கிற யோசனை மாநகராட்சி அதிகாரிகளுக்கே இருந்திருக்காது.  மெட்ரோ ரயில் நிர்வாகமே பாதிப்பைச் சரி செய்திருக்கிறார்கள். சென்னை மாநகரின் வெள்ளை மாளிகையான ரிப்பன் மாளிகை கட்டிடம் 2013 இல் நவம்பர் 26ம் தேதியன்று தனது 100 வது பிறந்தநாளினைக் கொண்டாடவில்லை. பாரம்பரியம்மிக்க மாளிகையினை அன்றைய நாளில் வாழ்த்தவும், நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும் ஆட்கள் இல்லாமல் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தது. 100 வது ஆண்டை அறிவிக்கும் வகையில் மின் விளக்குகள் கூட அமைக்கப்படவில்லை பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்று எளிதான காரணத்தைச் சொல்லிவிட்டார்கள் வேறென்ன? இரண்டாவது முறையாகக் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளம் வரை மீண்டும் விரிசல் விழுந்துள்ள நிலையில் அதைச் சரி செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகமே செய்ய முடிவெடுத்தது. குஜராத்திலிருந்து கட்டிடப் பராமரிப்பு நிபுணர்களை வரவழைத்தது. அவர்கள் ஆலோசனை மற்றும் சென்னை ஐஐடி நிபுணர்கள் ஆலோசனையென 7 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட சீரமைப்பு பணி 30 கோடியைத் தாண்டியும் இன்னும் முடிந்ததாகத் தெரியவில்லை ஆனால் பழைய முறையிலான சுண்ணாம்பு ,கடுக்காய், மணல் போன்றவற்றைக்கொண்டு பாரம்பரிய முறைப்படியும், நவீன ரசாயனங்களைப் பயன்படுத்தியும் வேலைகள் நடக்கிறது. அந்தப் பகுதியில் மெட்ரோ பணிகள் முடிவுக்கு வரும்போது தான் ரிப்பன் கட்டிட சீரமைப்பும் முடிவுக்கு வரும் போலத் தெரிகிறது.

ரிப்பன் மாளிகையின் சின்னச் சின்ன துணுக்குகள்: 
325 ஆண்டுகள் வரலாற்றை உடையது சென்னை மாநகராட்சி இதில் 100 ஆண்டுகளாக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு கம்பீரமாக நிற்கிறது கட்டிட கோபுரத்தில் உள்ள கடிகாரம் இது கைகளால் இயக்கக்கூடிய பொறியமைப்பைக் கொண்டது. கால்மணி நேரத்திற்கொரு முறை நான்கு மணி சத்தம் கேட்கும் ஒரு மணி நேரத்திற்கு பதினாறு மணி சத்தம் என நகரம் விழிப்போடிருக்க வேண்டுமென திட்டமிட்டிருப்பார்களோ என்னவோ?? அன்றைய மாநகரச் சின்னமாகக் கடலில் மூன்று பாய்களைக் கொண்ட கப்பல் பயணிப்பதைப் போன்ற குடைவு சித்திரம் அதன் தலைப்பகுதியில் குதிரை மீதேறி வரும் செதுக்கு சித்திரம் கருங்கல்லில் வைத்திருந்தார்கள் 1955 - ல் அதை மாற்றி பாய் சுருட்டப்பட்ட மரக்கலம் அதன் மேல் புலி, வில், மீன் என சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கும் தமிழக சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. 

தரைத் தளத்தில் 16 அறைகள் வருவாய்த்துறை சம்பந்தமான பணிகளைப்பார்க்கிறது. முதல் தளத்தில் 22 தனித்தனி அலுவலகங்களில் சுகாதாரத்துறை இயங்குகிறது. இரண்டாம் தளத்தில் கவுன்சில் சேம்பர் ஐரோப்பிய பாணியாலான மேயர் இருக்கை பக்கவாட்டில் பிரான்ஸ் வடிவ கண்ணாடி சாளரங்கள் கூடத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் மரப்படிகள் என அன்றைய நாளை அவை நினைவுபடுத்தும்படியுள்ளது தரையில் முன்பிருந்த கடப்பா கற்களைப் பெயர்த்து இப்போது புதிதாகச் சலவைக்கற்கள் பதித்திருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்திற்கான செங்கற்களைச் சூளைமேட்டிலிருந்த அன்றைய சூளைகளிலிருந்து வாங்கியிருக்கிறார்கள். சென்னையின் பெரும்பாலான சிவப்பு கட்டிடங்களைக் கட்டிய நம்பெருமாள் அவர்களுக்கு கற்களை வழங்கிய சூளைகள் அங்கிருந்தன.  அதனாலே அதற்கு சூளைமேடு என்ற பெயர் வந்திருக்கிறது. (கொசுறு) 

அந்த அழகிய வெள்ளை மாளிகை ஒரு நாள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தது என் கண்ணில் ஏதாவது சிக்கலா என்று பதட்டமடைய என்னைப் போலவே பலர் வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர் உலக குளுக்கோமா (கண்ணில் ஏற்படும் ஒருவகை குறைபாடு) வாரம் கொண்டாட அப்படி விளக்குகளால் ஒளியூட்டியிருக்கிறார்கள். இன்னொரு நாள் பிங்க் நிறத்தில் ஒளிர்கிறது. கேட்டால் நீரிழிவு நோய் விழிப்புணர்வாம். மூன்று வண்ணத்தில் ஒரு நாள் அன்று குடியரசு தினம் அந்த வெள்ளை மாளிகையில் அதன் வண்ணத்தை மாற்றலாம் வடிவத்தை மாற்ற முடியுமா? அந்த மாளிகை மெட்ராஸின் முகங்களில் ஒன்று. அதை விட முக்கியமானது அந்த வெள்ளை மாளிகையின் கடைநிலை ஊழியர்களின் ஓயாத செயல்பாடுகள் தான் இரவும் பகலும் இந்த நகரை இந்தளவுக்குத் தூய்மையோடு வைத்திருக்கிறது என்பதுடன் நோய் பரவாமல் தடுப்பதும் என என் சிறு வயதில் இரண்டு மாடுகள் குப்பை வண்டிகளை இழுத்துப் போகும் இப்போது மாநகராட்சி நிர்வாகம் பல நவீன உபகரணங்களைக் கொண்டுவந்துள்ளது என்றாலும், கழிவுநீர்த் தொட்டியில் மரணங்கள் நிகழவே செய்கிறது என்பது துயர்மிகு சமூகச் சோகமே. 

அந்தக் கட்டிடம் குறித்த மயக்கம் பற்றி நான் சொல்வதிருக்கட்டும் அந்தச் சாலையின்மையத்தில் ஈவெரா சாலையும், சைடாம்ஸ் சாலையும் (ராசா முத்தையா) சாலையும் சந்திக்கும் சிக்னலில் (சமிக்ஞை) நின்று கிழக்கு நோக்கிப் பாருங்கள் நான்கு வெவ்வேறு அழகிய பிரம்மாண்ட கட்டிட வரிசையின் மயக்கும் தோற்றம் உங்களை அந்த நாட்களுக்கு அழைத்துப் போகும். கொரோனா காலத்தில் அந்தக் காட்சிகள் எனக்கு மிகச் சிறப்பாக வாய்த்தது. 113 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்டிடத்தை சாத்தியமாக்கிய கலைஞர்களுக்கு உழைப்பாளிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள்.
----


“பனையும் முருங்கையும்"- ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்

 “பனையும் முருங்கையும்"- ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்


-- விஜயலட்சுமி


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி பிரிவின் சார்பாக “பனையும் முருங்கையும் - ஊருக்கு ஒரு தோப்பு உருவாக்குவோம்” என்ற நிகழ்ச்சியை 23.9.2020 அன்று நடத்தியது. அந்நிகழ்ச்சியில்  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு (ஆதிந) உயர்நிலைப்பள்ளி, சங்கரலிங்கபுரம்,   மாணவர்கள் பனை மற்றும் முருங்கையை  நட்டு வைக்கும் நேரடி நிகழ்வு நடைபெற்றது. இம்மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து  இயற்கைப்  பாதுகாப்புப்  பணியைச் செய்கின்றனர்.இந்நிகழ்வில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.இயற்கை பற்றிய தங்கள் கருத்துக்களை மாணவர்கள் நேரலையில் பகிர்ந்து கொண்டனர்.  

சங்கரலிங்கபுரம் ஆசிரியர் திருமிகு. சி.மு. பாலச்சந்தர்  ஐயா அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார். முனைவர்.க.சுபாஷிணி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் ஜெர்மனியிலிருந்து வாழ்த்துரை வழங்கினார்.   இந்நிகழ்வில் திருமிகு.ஆனந்தி நெதர்லாந்திலிருந்தும்,  திருமிகு.நாறும்பூநாதன் நெல்லையிலிருந்தும், திருமிகு.ராஜேந்திரம், மேனாள் தலைவர், இலங்கை பனை அபிவிருத்தி மன்றத்திலிருந்தும்  கலந்து கொண்டனர். அவர்கள் பனை பற்றிய தங்கள்  தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.  மேலும்,இந்நிகழ்வில் முருங்கை பற்றிய கருத்துக்களை டாக்டர்.தேவி மதுரையிலிருந்து இணையம் வழியாக மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார்.

தமிழ் என்று சொல்லும் பொழுதும் அல்லது தமிழரின் வாழ்வைப் பற்றிப் பேசும் பொழுதும், பனை மற்றும் முருங்கையை  நாம் மறந்திட இயலாது. பனை அதன் வேரின்  மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கும். பனையிலிருந்து  நுங்கு, பதநீர்,  பனங்கற்கண்டு, பனைமிட்டாய் பனம்பழம் ஆகியவற்றைப்  பெறலாம். இது மட்டுமல்லாமல் பல உயிரினங்களுக்குப் பனை இருப்பிடமாக அமைகின்றது.

திருமிகு. ஆனந்தி அவர்கள் யாழ்ப்பாணத்தின் பனைமரங்கள், பனையின் வேர்கள், ஆண் பனை மற்றும் பெண் பனை அதோடு பறவைகளின் இருப்பிடமாக இருக்கிறது என்பதையும் பனையின் வேறுபட்ட பெயர்களையும் விளக்கினார்.

திருமிகு. நாறும்பூநாதன் அவர்கள் புதிர்களோடு உரையைத்  தொடங்கி வெற்றுப் பனை மரங்களோடு தாம் வளர்ந்தமையையும் பனை மட்டையிலிருந்து ஓலைகளை எடுத்து அதில் எழுத்துக்களைப் பதிவிட்டு முன்னோர்கள் நமக்குத் தந்தமையையும், பனை மரத்தில் ஏறும் முறைகளையும், சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். முனைவர்.க.சுபாஷிணி அவர்கள் கம்போடியாவின் பதநீர் பற்றி சில தகவல்களைக் கூறினார்.திருமிகு. ராஜேந்திரம் அவர்கள் பனையின்  உபயோகங்களையும் பனை தமிழர்களோடு அடையாளமாக இருக்கிறது என்பதையும் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதையும் மிக விரிவாக எடுத்துரைத்தார்.

திருமிகு. நடராஜ் அவர்கள் பனையானது மருந்தாகவும் நெடுங்காலத்துக்கு வைத்திருக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது என்பதை விளக்கினார். திருமிகு.வேலுப்பிள்ளை அவர்கள், பனை அபிவிருத்திக்காகச் செய்து  கொண்டிருக்கின்ற பல செயல்களைத் தொகுத்துரைத்தார்.

முனைவர். தேவி அறிவுச்  செல்வம் அவர்கள் கடந்த வருடம் சங்கரலிங்கம் பள்ளியில் நடத்தப்பட்ட அருங்காட்சியகம் பற்றியும் முருங்கையின் முக்கியத்துவத்தைப்  பற்றியும், அதன்  32 வகைகளையும் பயன்களையும் அதில் அடங்கியுள்ள சிறப்புகளையும்  எளிமையான முறையில் எடுத்துரைத்தார். முனைவர். கட்டளை கைலாசம் அவர்கள் மரங்களோடு தம் வாழ்க்கைமுறை அமைந்தமையையும் மரங்களை  வழிபடுவதையும் முருங்கை கோயிலின் தல விருட்சமாக அமைந்திருப்பதையும் கிராமப்புற பாடல்களில் முருங்கையின் குறிப்புக்கள் வந்திருப்பதையும் முருங்கையைப் பற்றிய புத்தகங்கள் பற்றியும் , பள்ளிக்கு முருங்கை இவருக்கு  வருமானம் தரக்கூடியதொன்றாக அமைந்தது என்பதையும்  கூறினார்.   பங்கேற்பாளர்கள் பலரும் அவரவர் கருத்துக்களைப்  பகிர்ந்தனர்  இவ்வாறாக இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.



மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்!

மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்! 

-  முனைவர் ந. அருள்  
 
இந்நாளில் ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன. ஆண்டுதோறும் சாகித்திய அகாதெமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குள்ளே பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்து ஊக்கம் தருகின்றது.

"மொழி', "பெயர்ப்பு' எனும் இருசொற்களின் இணைவில் தோன்றுவது மொழிபெயர்ப்பு. "மொழியென்பது பேசுவோரின் குரலில் பிறந்து பொருளுடைய அறிகுறிகளாக அமைந்து கேட்போரால் பொருள் உணரப்படும் ஒலிவகை எனலாம். அது பெரும்பாலும் பேசுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாருக்கு இடையே நிகழ்ந்து ஒருவர் உணர்ச்சியையோ கருத்தையோ மற்றவர் உணர்வதற்குப் பயன்படுவது' என்று பேராசிரியர் மு. வரதராசனார் மொழிபெயர்ப்புக்கு விளக்கம் தருகிறார்.

பெயர்ப்பு, பெயர்த்தல், பெயர்ச்சி என்பன பொருள் தொடர்புடைய சொற்களாகும். 

பொது நிலையில் மூலநூலின் முழு உணர்வினையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும், அதிகப்படுத்தாமலும், மாற்றாமலும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலை உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். 

ஆயின், "கூட்டியும், குறைத்தும், சுருக்கியும், விரித்தும் பெயர்த்து அமைப்பதையும் மொழிபெயர்ப்பாகக் கொள்வாரும் உளர்' என்று அறிஞர் மு. கணபதிப் பிள்ளை  "மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்' என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வண்ணமே ஒரு மொழியின் கருத்துகளை மற்றொரு மொழியில் உணர்த்தல் எனும் நோக்கில் மொழிபெயர்ப்பில் இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றனர் எனலாம். மற்றும் பொதுவாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் மொழிபெயர்ப்பாளரின் கருத்துக்கு ஏற்பக் கூடியும் குறைந்தும் வருதலும் இம்மரபினை ஏற்றுக் கொள்கின்றனர் என்ற கருத்துக்கு இடந் தருகிறது.  

உடனடி மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். சில வேளைகளில் சிந்திப்பதற்கு நேரமின்றி மிக விரைவாக மொழிபெயர்க்க வேண்டுவதனால் மொழிபெயர்ப்பாளர் இருமொழிகளிலும் மிகத் திறமையானவராக இருப்பது தேவையானதாகும். இங்கு மூல மொழியினைக் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ மொழிதற்கு வாய்ப்பில்லை. 

மூலமொழியின் கருத்தினின்று மொழிபெயர்ப்பாளர் மாறுபடின் மொழிபெயர்ப்பாளரின் அறியாமையைத்தான் உணர்த்தும். ஒருவர் கருத்தை மற்றொருவர் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இடையிலுள்ள மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்து உதவ வேண்டும் என்பதுதான் உடனடி மொழிபெயர்ப்பின் நோக்கமாகும். தன் விருப்பிற்கு மொழியும் உரிமை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இல்லை.

மூலத்தை வென்ற மொழிபெயர்ப்பு இது என்று கூறும்படியாக எதுவும் இல்லை. பொதுவுடைமைத் தந்தை காரல் மார்க்சின் "மூலதனம்' மலையாளத்தில் நாற்பது மொழிபெயர்ப்புகளும் தமிழில் எட்டு மொழிபெயர்ப்புகளும் இந்தியில் ஒன்பது மொழி பெயர்ப்புகளும் வந்த பிறகும் கூட வாகைசூடிய மொழிபெயர்ப்பு என்று எதுவும் இல்லை. "ஊசியின் காதில் ஒட்டகம்  நுழைவது' என்ற விவிலியத் தொடர் ஒரு பிழையான மொழிபெயர்ப்பு. இப்படிப் பிழையான மொழிபெயர்ப்புகள் பல நிலைத்து விட்டன.

மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெற்ற வெற்றியை வேறு எவரும் பெற்றதில்லை. "எனது நூல்கள் மராத்திய மொழியில் விற்பனையானதை விட, தமிழின் மொழிபெயர்ப்பு நூல்கள்தான் அதிகம் விற்பனையாகி மாபெரும் வெற்றி பெற்றன' என்று வி.எஸ். காண்டேகர் மனமுருகி எழுதினார்.

இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் "விவிலியம்' மொழிபெயர்க்கப்பட்டது. 1774}இல் ஜே.பி. பாப்ரிஷியஸ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டார். 1874}இல் தலைமைச் செயலக மொழிபெயர்ப்பாளர் வி. விசுவநாதப் பிள்ளை ஷேக்ஸ்பியரின் "வெனீஸ் வர்த்தகன்' நூலை முதலில் தமிழில் மொழி
பெயர்த்தவராவார். 

மொழிபெயர்ப்பு என்பது சிக்கலுடையது என்ற கருத்திலேயே மூலநூலின் பொருண்மையை முழுவதுமாக எடுத்து மொழிவது பற்றிக் கம்பர் "வையம் என்னை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இது இயம்புவது யாது எனின், பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே' என்று குறிப்பிட்டார்.

புரட்சிக் கவிஞரின் "மாந்தோப்பில் மணம்' என்ற பாடல் மாந்தோப்பின் நிழலில் நிகழ்ந்த காதல் மணத்தைக் குறிக்கும். இதை "நறுமணம்' என்று மொழி பெயர்த்து விட்டார்கள். பல்லவர் காலத்தில் பெருந்தேவனார் மகாபாரதத்தினைத் தழுவி "பாரத வெண்பா' என்று மொழிபெயர்த்தார். வில்லிபுத்தூராரும் நல்லாப் பிள்ளையும் மகாபாரதத்தைத் தழுவி தமிழில் இயற்றினர்.

நூற்றுக்கு நூறு கல்வி வளமும் நூற்றுக்கு எண்பது பேர் இருமொழிப் புலமையும் நூற்றுக்கு எழுபது பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்புச் செல்வாக்குப் பெறலாம். கதை, நெடுங்கதை, வாழ்க்கை வரலாறு, பயணக் குறிப்புகள் இந்தக் கணக்கில் சேரும். 

சுத்தானந்த பாரதியார் மொழியாக்கம் செய்த "ஏழை படும் பாடு' மிகப் பெரிய ஆர்வத்தை எழுப்பியது. பின்னர் அது திரைப்படமாகவும் வந்தது. வங்கக் கதைகள் பெற்ற வெற்றிக்காக அக்காலத்தில் கதை தேடி கல்கத்தா செல்லாத இயக்குநர்களே இல்லை.

தமிழக அரசு ஆண்டுதோறும் மொழிபெயர்ப்புக்கு மட்டுமே 11 விருதுகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

செப்டெம்பர்  30 - உலக மொழிபெயர்ப்பு நாள்.

கட்டுரையாளர்: முனைவர் ந. அருள் 
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,  தமிழ்நாடு அரசு.


 

Tuesday, September 29, 2020

கவிதை என்ன செய்யும்!!!

கவிதை என்ன செய்யும்!!!

- தீபிகா சுரேஷ்



கவிதை என்ன செய்யும்!!!
கனவு காணச் செய்யும் 
கனவுகள் துரத்தச் செய்யும்

சுயம் உணர்த்தவும் 
சுற்றம் நேசிக்கவும் 
பழக்கும்...

பூக்களோடு சிரிக்கவும் 
புயலோடு பறக்கவும் 
கற்பிக்கும்...

கடமையைக் காதலோடும்
காதலைக் கடமையோடும் காணச்செய்யும்...

கண்ணீருக்கு இறங்கவும்
கடல்கண்டு வியக்கவும்
கற்றுத்தரும்...

வெறும் கவிதை என்ன செய்யும்
உலகிற்கு உன்னை உணர்த்தும்
உனக்கு உலகை உணர்த்தும்....

வேரிலிருந்து பலப்படுத்தவும்
வேரோடு சாய்க்கவும்
நெஞ்சைத் தைக்கும்
ஒரு கவிதை போதும் தானே...





Wednesday, September 23, 2020

பனை மரமே ! பனை மரமே !

பனை மரமே ! பனை மரமே !

-- இரா.நாறும்பூநாதன்


தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில், "பனையும்,முருங்கையும் " பற்றி பேசும் இந்தக் கருத்தரங்கில், பண்பாட்டு ஆய்வாளர் ஐயா ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய " பனை மரமே, பனை மரமே " என்ற நூல் தரும் அரிய செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பனை மரம் என்றவுடன், நமக்கு உடனே நினைவுக்கு வருவது, பள்ளிக்காலத்தில் படித்த பாடல் தான் :
" பனை மரமே பனை மரமே !
  ஏன் வளர்ந்தாய் பனை மரமே !
  நான் வளர்ந்த காரணத்தை
  நானுனக்குச் சொல்லுகிறேன் "
இனிமையான நாட்டுப்புறப்பாடல் அது. இப்போது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை.

அது தவிர, தென் தமிழகத்தில் பயணம் வந்தால், கோடைக் காலங்களில், சாலையோரங்களில் மரத்தடியில், பதநீர், நுங்கு வாங்கி, பனை மட்டையில் ஊற்றிக்குடித்த இன்பமான நினைவுகள் உதட்டோரம் நிற்கும். சிலர் பனம்பழங்களைச் சுவைத்திருக்கக்கூடும். பனை மரம் குறித்து வேறு என்ன செய்திகள் நாம் அறிந்திருப்போம் ?

உலகின் தொன்மையான மரபுகளைக்கொண்ட தமிழ்ச்சமூகத்தில் பனை வகிக்கும் வகிபாகம் முழுவதையும் அறியத்தக்க வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
  • 12  இயல்களில் பனையின் பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
  • 5000  ஆண்டுகளுக்கும் மேலாகப் பனை மரம் என்பது, தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.
  • தமிழக வரலாற்றின் தொன்மை தொடங்கி, கல்வெட்டு,சங்க இலக்கியங்கள், சைவம், கிறிஸ்தவம் காலனியம் ஊடாக, இன்றைய உலகமயம் வரை பனை பற்றிய செய்திகளை முழுமையாய் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
  • 800க்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக்கொண்ட பனைக்கு, நூற்றிற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.
  • தமிழகத்தில் 5.19  கோடி பனைமரங்கள் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் இது 50  விழுக்காடு.
  • தமிழ்நாட்டிலும், தென்மாவட்டங்களில் தான் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முதலிடம்.
ஒரு மரம் என்றால், அது தரும் கனி, மருத்துவ குணங்கள் போன்றவை நம் நினைவுக்கு வரும்.  இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி, தமிழர்களின் பெருமைக்குரிய இலக்கிய நூல்கள் அனைத்தும் பனை ஓலைகளில் தான் எழுதப்பட்டுள்ளன என்பது மிக முக்கியமான செய்தி. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டோடு பனை கொண்டிருந்த தொடர்பை இதைவிட வேறு எப்படிச் சொல்லிவிட இயலும் ?

பனை மரத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் குறிப்பிடத்தக்கதாக தமிழகத்திலிருந்துள்ளதை பல்வேறு கல்வெட்டு ஆதாரங்களைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். சோழர் காலத்தில், ஊரின் எல்லையில் பனை, தென்னை வளர்ப்பதற்கான உரிமையைச் சோழ மன்னர்கள் வழங்கி உள்ள செய்தியும்,  புதிய ஊர்களை உருவாக்கும்போது பனை தொழில் புரிவோரை அப்பகுதியில் குடியேறச் செய்துள்ள செய்திகளும் குறிப்பிடத்தக்கன.

தமிழ்நாட்டின் முக்கிய சாதிகளில் ஒன்றான நாடார் சாதியில், ஒரு பிரிவினர் பனைத்தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.

பனை பற்றிய சில செய்திகள் :
வெப்ப மண்டலத்தில் வளரும் மர வகைகளுள் பனையும் ஒன்று. இதன் விதை, பனங்கொட்டை. செம்மண் நிலத்தில் இருக்கும் பனையின் பதநீர், நுங்கு,பனங்கிழங்கு மிகவும் சுவையாய் இருக்கும். தனி மரமாக இன்றி, கூட்டமாகவே பனை மரங்களைக் காண முடியும்.

பனை மரத்திற்குக் கிளைகள் ஏதும் இல்லை. 50  அடி முதல் 100  அடி வரை பனை மரங்கள் வளரும். பனையின் வயது 100  முதல் 120  வருடங்கள் வரை. மரத்தின் வேர், தூர்ப்பகுதி, மரத்தின் நடுப்பகுதி, காம்பு (மட்டை ), இலை(ஓலை ), சுரக்கும் இனிப்பான சாறு என மரம் முழுமைக்கும் மனிதருக்குப் பயன்படுகிறது.

பனை மரத்தில் நுங்கு கிடைக்கும். நுங்கை வெட்டாமல் விட்டு விட்டால்,அது பழுத்து பனம்பழம் ஆகி விடும். பழம் நன்றாகப் பழுத்து விட்டால், கீழே உதிர்ந்து விடும். பறித்த பனம்பழங்களைச் சாக்கினால் ஒரு வாரம் மூடி வைக்க வேண்டும். பின்பு பழத்தின் சதைப்பகுதியை நீக்க வேண்டும். உள்ளே ஒன்று முதல் மூன்று கொட்டைகள் வரை இருக்கும். இந்த கொட்டைகளை வெயிலில் உலர வைக்க வேண்டும். தேர்வு செய்த கொட்டைகளை, பத்தடி இடைவெளியில் குழி வெட்டி, கொட்டையின் கண்பாகம் கீழ்நோக்கி இருக்கும்படி நட வேண்டும். குழியின் ஆழம் ஒன்று முதல் ஒன்றரை அடி வரை இருக்கலாம். முதல் நான்கு மாதங்களில், பனங்கொட்டையில் உள்ள தவண் என்ற பகுதியை உணவாகக் கொண்டு பனை வளரும்.(இந்த தவண் சாப்பிட ருசியானது). நான்கு மாதம் கழித்து குருத்து போன்ற பனை ஓலை பூமி மீது வெளிப்படும்.இதை " பீலி " என்பார்கள்.  ஓராண்டு கழித்து இரண்டு பீலிகளின் மத்தியில் இன்னொரு பீலி வெளிப்படும். இந்த பருவத்தை, "வடலிக்கன்று " என்பர். தொடர்ந்து 25  ஆண்டுகள் வேகமாய் வளரும். வடலிப்பருவ பனையில், பக்கவாட்டில் தோன்றும் கருக்கு மட்டைகளை வெட்டி அகற்றுவார்கள். வடலிப்பருவம் கடந்து 30  ஆண்டுகள் கழித்து, மரத்தின் உட்பகுதி வலுவடையத் தொடங்கும். இதை வைரம் பாய்தல் என்பர். 90  ஆண்டுகளுக்குப் பிறகு பனையின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாய் குறையும்.

பனையில், ஆண்பனை, பெண்பனை உண்டு. ஆண் பனையில் குரும்பைகள் இருக்காது. எனவே, இதில் நுங்கும், பனம்பழமும் கிடைக்காது.  ஆனால், இதில் உருவாகும் பாளையைச் சீவி, கள், பதநீர் இறக்கலாம். இன விருத்தி செய்ய ஆண் பனை அவசியம். பெண்பனை நுங்கும், பனம்பழமும் தரும். தொடர்ந்து பெற, இம்மரத்தின் பாளையைச் சீவி, கள் அல்லது பதநீர் இறக்காமல் இருக்க வேண்டும்.

பனை மரத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. நெஞ்சணைத்து ஏறுதல், கைக்குத்தி ஏறுதல், இடை கயிற்றால் ஏறுதல், குதித்துக் குதித்து ஏறுதல் எனப் பல வகைகள் உண்டு. இத்தொழிலுக்குத் தேவையான தொழிற்கருவிகள் உண்டு. நெஞ்சுத்தோல், தளைநார்,கால்தோல், முருக்குத்தடி, பாளை அரிவாள், அரிவாள் பெட்டி, கலக்கு மட்டை ஆகியன.

பாதுகாப்பு பெட்டகமாய் திகழ்ந்த பனை :  
ஒரு சுவையான தகவல் ஒன்றை ஆசிரியர் சொல்கிறார். நாயக்கர் ஆட்சிக்குப்பிறகு, தென் மாவட்டங்களில் பல கொள்ளை சம்பவங்கள் நடந்தன. பனை மரங்களின் ஊடாக அமைந்திருந்த குடியிருப்புகள் பாதுகாப்பின்றி இருந்தன. எனவே இப்பகுதி மக்கள், தங்களின் நகை,பணம் போன்றவற்றைப் பனை மரங்களின் உச்சியில் மட்டைகளுக்கிடையில் பாதுகாத்து வந்தனர். குருத்தோலைகளுக்கு இடையில் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்லும் தகவல் வியப்பை அளிக்கக்கூடியது. பனை நார்க்கட்டில், பனை ஓலைப்பெட்டிகள்,கடவாய்ப்பெட்டிகள், பனை விசிறி போன்ற பயன்பாடுகள் நாம் அறிந்த ஒன்று. சிறுவர்கள் விளையாட்டுகளில் காற்றாடி விடுதல் அனைவருமே விளையாடிய ஒன்று.

ஓலை :
தமிழர்கள் எளிய எழுதுபொருளாகப் பனையோலையைப் பயன்படுத்தியது வெளிநாட்டினரை வியப்பூட்டியது. பறித்த பனை ஓலையை உடனடியாக பயன்படுத்த இயலும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு எழுத்தாணி கொண்டு எழுதுவர். இப்போதும் கூட, குமரி மாவட்டத்தில் நாடார் சமூக மக்கள் குழந்தை பிறந்தவுடன் சாதகத்தைப் பனை ஓலையில் தான் எழுதி வருகிறார்கள். ஒரு ஓலையில் எழுதி பலகாலம் ஆகிவிட்டால், அது சிதிலமாகிவிட வாய்ப்புண்டு. எனவே, அதை மீண்டும் நகல் எடுத்து எழுதுவார்கள். நமது தமிழ் இலக்கிய நூல்கள் இப்படிப் பல காலம் நகல் எடுக்கப்பட்டு வந்தாலே பாதுகாக்க முடிந்திருக்கிறது. கம்பராமாயணத்தைப்  படியெடுத்துக்கொடுப்போர் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, நாங்குநேரி, திருக்குறுங்குடி போன்ற வைணவ தலங்களில் 1925  வரை இருந்திருக்கிறார்கள்.

கள், பதநீர் :
கள்ளில் இடம்பெற்றுள்ள போதைத்தன்மையானது, பீரில் உள்ள போதையை விடக் குறைவு தான். கள்ளின் போதைத்தன்மை 7 % வரைதான். ஆனால், அந்நிய நாட்டு மதுவகைகளில் போதைத்தன்மை 43 % வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாளையிலிருந்து வடியும் இனிப்பான சாறு, கள் என்ற பெயரில் மதுவாக மாறுவதைத் தடுத்து உருவாவதே பதநீர் ஆகும். சாறு வடியும் கலயத்தில் சுண்ணாம்பைத் தடவி விட்டால் பதநீராக மாறும். சேகரிக்கப்பட்ட பதநீரை அடுப்பில் காய்ச்சி உருவாக்குவதே கருப்பட்டி. கற்கண்டு தயாரிப்புக்கும் மூலப்பொருளாக விளங்குவது பதநீர் தான் .

தல விருட்சம் : 
தமிழ்நாட்டில் உள்ள திருப்பனங்காடு,திருப்பனந்தாள், திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர், புரவார் பனங்காட்டூர் போன்ற ஊர்களில் பனை மரமே ஸ்தல விருட்சமாக உள்ளது. இவ்வளவு பெருமைகள் இருந்தபோதிலும், சைவக்கோவில்களில் ஒரு உணவுப்பொருளாகக் கருப்புக்கட்டி நுழைய அனுமதியில்லை. மடப்பள்ளிகளில் கருப்பட்டியைப் பயன்படுத்த மாட்டார்கள். புளியோதரையில் பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றலும், தயிர்ச் சாதத்தில் உள்ள மிளகாயும் போர்ச்சுகீசியர்களால் கொண்டுவரப்பட்டவை. பஞ்சாமிர்தத்தில் உள்ள பேரீச்சம்பழமும், ஆப்பிளும் கூட வெளி நாட்டிலிருந்தே வந்தவை. பாரசீகத்திலிருந்து வந்த ரோஜாவிலிருந்தே பன்னீர் எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மண்ணின் பாரம்பரிய இனிப்பான கருப்பட்டியோ விலக்கப்பட்ட பொருளாக முத்திரை இடப்படுகிறது. இதில் உள்ள அரசியல் நோக்கத்தக்கது. கருப்பட்டியின் மூலப்பொருள் கள்ளாகக் கருதியதின் வெளிப்பாடே கோவில்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

பனை ஓலையும், கிறிஸ்தவ மதமும் :
வீரமாமுனிவர், சீகன்பால்கு போன்ற வெளிநாட்டு மிஷனரிகள் ஓலைச்சுவடிகளில் தான் தங்கள் சமய நூல்களை எழுதினர். குருத்தோலை திருநாளில் பனை ஓலைக்குருத்தைப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் உண்டு.

அழிவை நோக்கி பனை மரங்கள் :
பனை மரத்தில் ஏறுவது குறித்த பனையேறி என்ற சொல் கூட இழிவான சொல்லாக மாற்றப்பட்டு விட்டது. கருப்பட்டி, கற்கண்டு தவிர, பதநீரை நீண்டநாட்கள் இருப்பில் வைக்க இயலவில்லை. அதற்கு விரிவான சந்தை இல்லை. செங்கல் சூளைக்காகவும் கட்டிடம் காட்டும் பணிக்காகவும் பனைகள் வெட்டப்படுகின்றன.  

செய்ய வேண்டியவை :
நீர் நிலைகளில் கரை அரிப்பைத் தடுக்க நமது முன்னோர்கள் பனை மரங்களை வளர்த்தார்கள். எனவே, மீண்டும் நாம் பனங்கொட்டைகளை ஊன்றி வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
முதிர்ச்சி அடையாத பனை மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது.
பனங்கிழங்கு மாவு தயாரித்தல், காற்றுப்புகா பெட்டிகளில் நுங்கு, பனம்பழ சாறு போன்றவை அடைத்து விற்பனை செய்யும் வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
குப்பிகளில் அடைத்து பதநீர் விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
கலப்படமில்லாத கள்ளை விற்பனை செய்ய அனுமதிக்கலாம்.
கருப்பட்டியிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளைப் பரவலாக அறிமுகம் செய்தல் வேண்டும்.

இன்னும் பல செய்திகளை இந்த நூலில் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தொகுத்துள்ளார். இன்றைய சூழலில், மிகவும் முக்கிய பனை மரமே பனை மரமே என்ற நூலைக் காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்துள்ளது.




Monday, September 21, 2020

முருங்கை

முருங்கை


——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


தாவரவியல் பெயர் - மொரிங்கா ஒலிபெரா (Moringa oleifera)

குடும்பப் பெயர்- மொரிங்கேசியே (Moringaceae)

இக்குடும்பத்தில் 33 வகைகள் உள்ளன. அதில் 13 வகைகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. முருங்கை மரமானது பூத்துக் காய் காய்க்கும் இருவித்திலைத் தாவரம் ஆகும். இம்மரமானது சுமார் 12 மீட்டர் உயரம் வரை விரைவில் வளரக் கூடியதாகும்.

முருங்கை பெயர்க்  காரணம்:

முறி என்பது ஒடிதல், உடைதல் முறிப்பது எளிதில் உடையக் கூடியதாக இம்மரம் இருப்பதால் முருங்கை எனப் பெயர் வந்ததாகத் தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.இம்மரமானது எளிதில் முறியக் காரணம் இம்மரத்தில் நார் திசுக்கள் காணப்படுவதில்லை. இம்மரத்தின் பூர்வீகம் இந்தியா, இமயமலை அடிவாரத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.   முருங்கை மரமானது 2000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும் கூட வளரக்கூடியது. இம்மரத்திற்குக் குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. இவை விதை மற்றும் குச்சியை ஊன்றி வைப்பதன் மூலம் வளர்கிறது.

வேறு பெயர்கள்:

முருங்கை (தமிழ்) , நுக்கே (கன்னடம்), முனகா (தெலுங்கு), முரிங்கா (மலையாளம்). 

முருங்கை மரத்தில் உள்ள வேதிப்பொருள்கள்:

பீனாலிக் அமிலங்கள், பிளேவனாய்டுகள், குளுக்கோசினோலேட், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்  A,B,C,D,E , கரோட்டினாய்டுகள், ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும்  புரதச்சத்து கொண்டுள்ளது.  

குறிப்பாக பென்சைல் குளுக்கோசினோலேட் அதிக அளவில் வேரிலும்,  குளுக்கோ மோரிஜினின் அதிக அளவு தண்டு, பூ மற்றும் விதையில் காணப்படுகிறது. டேனின் என்ற வேதிப்பொருள் அதிக அளவு முருங்கை மரத்தின் இலையில் காணப்படுகிறது. விந்தணு வளர்ச்சிக்கு உதவும் ஜிங்க் ஆனது 31 மில்லிகிராம் வரை இருக்கிறது. குளுக்கோசினோலேட், ஐசோ தாயோ சயனேட் , கிளைசிரால்_1-9- ஆக்டடிகனோஏட் போன்ற புற்றுநோய்க்கு எதிரான வேதிப்பொருட்களும் முருங்கையில் நிறைந்து காணப்படுகின்றன.

சத்துக்கள்:

ஆரஞ்சில் இருப்பதைவிட ஏழு மடங்கு அதிக அளவு விட்டமின் C யும்,  கேரட்டில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிக அளவு விட்டமின் A யும், பாலில் இருப்பதை விட 17 மடங்கு கால்சியமும், தயிரில் இருப்பதை விட 9 மடங்கு புரதமும், வாழைப்பழத்தில் இருப்பதை விட 15 மடங்கு பொட்டாசியமும், ஸ்பினாச்சில் இருப்பதை விட 25 மடங்கு இரும்புச் சத்தும் முருங்கையில் உள்ளது. மேலும்; ஒரு தேக்கரண்டி அளவுள்ள முருங்கை இலை பொடியில் 14 சதவீதம் புரதம், 40 சதவீதம் கால்சியம், 23 சதவீதம் இரும்பு மற்றும் சிறிதளவு விட்டமின் A உள்ளது.

முருங்கையைப் பற்றிய பழமொழிகள்:

1. வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி. 

2. பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும் 

3. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. 

இலக்கியத்தில் முருங்கை:

அகநானூற்றில் முருங்கை பற்றிய குறிப்பு வருகிறது.

          "சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்குசினை

          நாரில் முருங்கை நவிரல் வான்பூச்

          சூரலம் கடுவளி எடுப்ப"        

                    - மாமூலனார், அகநானூறு.

பொலிவற்ற பாதைகளை உடைய வறண்ட நிலத்தில்,  முருங்கை மரத்தில் ஆடும் கிளைகளிலுள்ள வெள்ளைப் பூக்களைச் சுழற்றியடிக்கும் கடுமையான காற்று மேலெழும்புகிறது.

          "நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், 

          நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை"

                  - சீத்தலைச்சாத்தனார்

முருங்கை பூக்கள் கடும் காற்றில் அடித்து கடலலையின் நீர்த்துளிகள் சிதறுவது போல உதிர்வதாக என்று தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆலங்கட்டி மழைத்துளி போலப் பூக்கள் உதிரும் எனவும்,  நீரில்லா வறண்ட நிலத்தில் உயர்ந்த முருங்கை மரம் வெள்ளிய பூக்களோடு நிற்கும் எனவும்   அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்களில் முருங்கை மரம்  குறிக்கப்படுவதால் பாலை நிலத்திற்குரிய மரம் என்பது தெரிய வருகிறது.  மேலும்,  முருங்கை  பாலை நிலத்து மரம் என்பதைக் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது நூலின் மூலமும் அறிய முடிகிறது. 

          கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை

          நண்ணியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்

          பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)

          இருந்துறங்கி வீயும் இடம்.

                  - திணைமாலை - 91 

மருத்துவப்  பயன்கள்:



இம்மரத்தின் பூ, விதை, வேர், இலை, பட்டை, தண்டு என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.  மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்ட முருங்கையின் மருத்துவப் பயன்களில் சில:

1. இலையில் இருக்கும் பிளேவனாய்டுகள் டைப் 1 டைப் 2 சர்க்கரை நோயைச் சரி செய்வதற்கும் ஆஸ்துமா, மலேரியா, ரத்தக்கொதிப்பைச் சரி செய்யவும், ஐசோதயோ சயனேட் , குவார்செட்டின் என்ற வேதியியல் பொருள்  புற்றுநோயை எதிர்த்தும் 

2. வேர், பட்டையில் இருக்கும் ஆல்கலாய்டுகள் மற்றும் மோரிஜினைன் உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் இதயத்தை வலு சேர்ப்பதாகவும்

3. பூவில் இருக்கும் அமினோ அமிலங்கள் கொழுப்பைக் குறைக்கவும் சிறுநீரக பிரச்சனையைச் சரி செய்யவும்

4. விதையில் இருக்கும் பென் எண்ணை ஹைப்பர் தைராய்டு மற்றும் கவுட் நோயைச் சரி செய்யவும்

5. விதை நெற்றில் இருக்கும் நார்ச்சத்து, ஒலியிக் அமிலம் லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவை கல்லீரல் மற்றும் மண்ணீரலை வலுப்படுத்தவும்

6. முருங்கையில் தனித்துவமிக்க வேதியியல் மூலக்கூறாக குளுக்கோசினோலேட் உள்ளது. இது ஐசோ தயோசயனேட் ஆக மாறி நரம்பு சம்பந்தமான குறைபாட்டினை தீர்க்கவும்

7. விதை நெற்றில் உள்ள நியசிமிசின் மற்றும் குளுக்கோமொரிஜின் என்ற வேதிப் பொருள் புற்றுநோயின் வீரியத்தைக் குறைப்பதாக மருந்தாக்கவியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

8. விதையில் உள்ள 7 ,12 டைமீத்தைல் பென்ஸ் ஆந்ரசீன்  சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கும்

9. இலையில் உள்ள பைட்டோ ஸ்டீரால் எனப்படும் ஸ்டிக்மா ஸ்டீரால், சிட்டோ ஸ்டிரால், கேப்ஸ்டீரால் போன்றவை பிரசவத்திற்கு பின்னான பால் சுரப்பை அதிகப்படுத்துவதாகவும்

10. விதையில் இருக்கும் ஈபாக்சைடு ஹைட்ரோலேஸ் என்சைம்  ஆனது பாலுணர்வைத் தூண்டவும், ஆண்மை குறைபாட்டைச் சரி செய்வதற்காகவும் பயன்படுவதாக மருந்தாக்கியல் துறை மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

முருங்கையின் வேறு பயன்கள்:

சத்துப்  பயிராகவும், இலை மற்றும் விதை விலங்கு தீவனமாகவும், மரப்பட்டையானது நீல நிறச் சாயம் தயாரிக்கவும், வேலியாகவும், உரமாகவும், எரிவாயுவாகவும்  பயன்படுகிறது. விதையானது நீரினை சுத்தம் செய்வதற்காகவும், விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது உணவு மற்றும் கேச தயாரிப்பு பொருள்களில் மணமூட்டியாகப்  பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.



தொடர்பு:

முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,

மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.

devipharm@yahoo.in 

https://www.facebook.com/devipharm


 

Wednesday, September 16, 2020

உன் சிரிப்பு

உன் சிரிப்பு

—  ருத்ரா இ.பரமசிவன்

உன் சிரிப்பு
ஒரு ஒற்றை ரோஜாப்பூவாய்
அன்றொரு நாள்
என் மடியில் வந்து விழுந்தது.
அது முதல்
நான் இந்த வானம்.
அது முதல்
நான் கடலின் அலைகள்.
அது முதல்
எனக்குள்ளே
தமிழின் ஒலி.
உயிரெழுத்து
மெய்யெழுத்தைக்காட்டியது.
இலக்கணத்துள்
இலக்கியம் புதைக்கப்பட்டிருந்தது
இனிமையாய் நெருடியது.
உன் சிரிப்பின் மகரந்த சேர்க்கைக்கு
எத்தனை கருவண்டுகள்
சிறகுகள் கொண்டு
நிழல் போர்த்தியது.
இதன் நுண்மாண் நுழைபுலம்
மெல்ல கிசுகிசுத்தது
காதல் என்று!
ஆர்வம் மிக‌
அந்த ரோஜாப்பூவின்
நிறம் தேடினேன்.
அவை சருகுகளாய் கிடந்தன‌
ஆனாலும்
அந்த சிரிப்பின் உயிர்ப்புடன்.
அத்தனை யுகங்களா கடந்து போயின?
இப்போதும்
அவை என் ரோஜாவின் "ஃபாசில்கள்"




Monday, September 14, 2020

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்

--  முனைவர்  ப.புஸ்பரட்ணம் 
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர்


தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்.
தமிழ்மொழி இலங்கையின் தொன்மையான மொழி. 
“சிங்கள அறிஞர்களே, சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளனர்.” 

“தமிழ் மக்களை வ ழி நடத்துகின்ற தலைமைகளிடையே எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் எந்த முகாந்திரமும் கிடையாது. அதுபற்றிய ஆர்வமோ கொள்கைப் பிரகடனங்களோ கூடக் கிடையாது.”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், வரலாற்றுத்துறை,தொல்லியல்துறைத் தலைவரும், இலங்கையின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான மத்திய கலாச்சார நிலையத்தின் தொல்லியல் பணிப்பாளருமான பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் உரிமை இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

இவர் யாழ்ப்பாணக் கோட்டையின் மீள் புனரமைப்பில் முக்கியமான ஆலோசகராகப் பணிபுரிந்ததோடு, தொல்லியல் தொடர்பான பதினெட்டிற்கும் மேற்பட்ட நூல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளதோடு, வடகிழக்கு இலங்கையின் பல அகழ்வாராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர் .




கேள்வி: 
கிழக்கு மாகாணத்திற்கென உருவாக்கப் பட்டுள்ள தொல்லியல் செயலணி தொடர்பான தங்களின் கருத்து என்ன?

இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலம் தொடக்கம் ஒரு தொல்லியல் திணைக்களம் இயங்கிவருகிறது. அந்தக் காலம் தொடக்கம் ஒரு தொல்லியல் சான்றை அல்லது மரபுச் சின்னத்தைப் பேணிப்பாதுகாக்கின்ற பொறுப்பு அதன் பணிப்பாளர் நாயகத்திற்கே உரியது. அவருடைய மேலாண்மையின் கீழ் உதவிப் பணிப்பாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். அதுபோல கல்வெட்டு, நாணயவியல், வெளியீடுகள் போன்றவற்றிற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர்களும் இருக்கிறார்கள். தொல்லியல் சின்னங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு அல்லது அதற்குச் சேதம் ஏற்படுத்துவதைக் கண்காணிப்பதற்குத் தனியான ஒரு போலிஸ் பிரிவும் இருக்கிறது.

ஆனால் கிழக்கு மாகாணத்திற்கெனத் தனியான ஒரு தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. அது குறித்த எந்தத் தகவலும் எமக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எங்கே செய்யப் போகிறார்கள்? என்னென்ன மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? என்பது பற்றிய எந்த விளக்கமும் இல்லை. அது தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் அது குறித்துச் சொல்ல முடியும். அப்போதுதான் தெரியும் அவர்கள் குறித்தவொரு சமூகத்தின் தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாக்கப் போகிறார்களா? அல்லது பல்லினப் பண்பாடு கொண்ட கிழக்கிலங்கையின் அனைத்து மக்களுடைய மரபுரிமைகளையும் பாதுகாக்கப் போகிறார்களா? என்று. ஆனால் குறித்த செயலணியின் சிங்களவர் ஒரு சிலரால் கிழக்கிலங்கையின் எல்லா சமூகத்தினரதும் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் என்றே கருத்துச் சொல்லப்படுகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி: 
கிழக்குச் செயலணியில் தமிழ் மக்கள் இணைத்துக் கொள்ளப் படாமையை எவ்வாறு பார்ப்பது?

எனக்கும் அதுவொரு ஆச்சரியமான விடயமாகத்தான் தெரிகிறது. இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தில் சிங்கள தொல்லியல் ஆய்வாளர்களும், அறிஞர்களும் பணியாற்றுவதைப் போலத் தமிழ் ஆய்வாளர்களும், அறிஞர்களும் பணியாற்றுகிறார்கள். தென்னிலங்கையின் தொல்லியல் சார்ந்த பட்டப்படிப்புக்களில் தமிழ் மாணவர்களும் கற்றுப் பட்டதாரிகளாக வெளியேறியிருக்கிறார்கள். தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்கள் தமிழ்ப்பட்டதாரிகளை மேற்படிப்புகளுக்காக இணைத்துக் கொள்கின்றன. இந்த நிலையில் கிழக்குச் செயலணியில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப் படாமைக்கான காரணங்கள் என்னவெனத் தெரியவில்லை. காலப்போக்கில் தெரியவரும் என நினைக்கிறேன்.

கேள்வி: 
“கிழக்குச் செயலணியில் சேர்த்துக்கொள்ளத்தக்க நிபுணத்துவம் மிக்க தமிழ்ப் பிரதிநிதிகள் யாரும் இல்லை.” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகிறாரே ?

அப்படி நிபுணத்துவம் மிக்க யாரும் இல்லையென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொன்னதாக நான் பார்க்கவில்லை. ஆனால் செயலணியில் சேர்ப்பதற்குப் பொருத்தமானவர்களைத்தான் தேடிக்கொண்டிருப்பதாக அவர் சொல்லிய செய்தியொன்றை நான் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை ஒரு செயலணி தொடங்குகின்ற பொழுது Terms of Reference என்பது மிக முக்கியமானது. அதாவது என்னென்ன மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கப் போகிறார்கள் அல்லது ஆவணப்படுத்தப் போகிறார்கள்? அது எப்படி மீளுருவாக்கம்  செய்யப்படப்போகிறது? போன்ற விடயங்கள் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இலங்கையிலே பௌத்த மதம் அல்லது பௌத்த பண்பாட்டுக்கு முன்னரே ஒரு தொன்மையான பண்பாடு கொண்ட பல இடங்கள் கிழக்கிலங்கையிலே இருந்தமை அடையாளப்படுத்தப்  பட்டுள்ள ன . அவற்றையெல்லாம் கணக்கில் எடுப்பார்களா? அல்லது குறிப்பிட்ட சில மரபுரிமைச் சின்னங்களை மட்டும் கணக்கில் கொள்வார்களா? எதுவும் தெரியாது. இப்படியொரு நிலையில் அதில் தமிழர்களை இணைந்து கொள்வது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. 

அதேபோல அதனுடைய உருவாக்கம், பின்னணி போன்ற தெளிவின்மையால் நிபுணர்கள் அதில் கலந்துகொள்வதற்குத் தயங்கலாம். அது அமைச்சருக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். “ஏற்கனவே நாள், நட்சத்திரம் பார்த்து மண்டபம் எல்லாம் ஒழுங்கு செய்து அழைப்பிதழ்கள் எல்லாம் கொடுத்து திருமணத்திற்கு ஒரு வாகனத்தில் எல்லோரும் போய்க்கொண்டிருக்கும் போது, வழியிலே இடைமறித்து ஒருவர் ஏறிக்கொள்கையில் கிடைக்கும் மரியாதையும், முன்னுரிமையும் போலத்தான் இந்தச்
செயலணியில் தமிழர்களை இணைப்பது” என்பது. அப்படித் தமிழ் நிபுணர்கள் இல்லையென்று யாராவது கூறினால் அது மிகவும் தவறான கூற்று. இத்தகைய நிலையில் இதில்  பங்குகொள்ள நிபுணர்களுக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். அது அவரவரின் சொந்த நலன், விருப்பு சார்ந்தது.

கேள்வி: 
தமிழர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள் என்ற விடயத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? தமிழர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள் என்பதற்கான வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளாக எதனைக் கருதலாம்?

இலங்கையில் தமிழர்கள் முதலில் வந்தார்களா? சிங்களவர்கள் வந்தார்களா? என்ற பிரச்சினை மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது பாளி மற்றும் தமிழ் இலக்கியங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு சொல்லப்படுகின்ற ஒருவாதம். ஆனால் தமிழ், சிங்கள மக்கள் அனைவருமே இன அடிப்படையில் ஒன்றுபட்ட மக்கள், மொழி பண்பாட்டு அடிப்படையில் வேறானவர்கள் என்பதுதான் தொல்லியல், மானுடவியல், வரலாற்று, மொழியியலாளர்களுடைய கருத்து. விக்னேஸ்வரன் ஐயா சொன்ன கருத்து ஒரு புதிய விடயமல்ல. ஏனென்றால் இவருக்கு முன்பாகவே தென்னிலங்கைச் சிங்கள அறிஞர்கள் பலர் “தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்” என்பதையும், “தமிழ்மொழி தொன்மையான மொழி” என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் குணத்திலக தமிழர்களின் அகழ்வு பற்றிக் குறிப்பிடும் போது “ஆழமாகத் தோண்டிக் கொண்டு சென்றால் அது தமிழர்களுக்குச் சாதகமாகவும், அகலமாகத் தோண்டிக் கொண்டு போனால் அது பௌத்த சிங்களவர்களுக்குச் சாதகமாகவும் அமையும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

அதுபோல மூத்த தொல்லியல் அறிஞர் சேனக்க பண்டாரநாயக்க “விஜயன் யுகத்திற்கு முன்னரே ஒரு வளமான நாகரிகம் இருந்திருக்கிறது. இலங்கை மக்களிடையே உடற்கூற்றியல் வேறுபாடுகள் இல்லை, பண்பாட்டு வேறுபாடுதான் உண்டு. அந்தப் பண்பாட்டு வேறுபாடுகளை விஜயன் வருகைக்கு முன்னரான பண்புகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிடுகிறார். பேராசிரியர் சத்தமங்கள கருணாரத்ன 1962ஆம் ஆண்டு “இலங்கைக்குப் பௌத்த மதத்தோடு சேர்ந்து மொழியும், எழுத்தும் வருவதற்கு முன்னரே தமிழ்நாட்டுக்குரிய எழுத்துவடிவம் செழிப்பாக இருந்திருக்கிறது .” எனக் குறிப்பிடுகிறார். பின்னாளில் இந்தக் கருத்தைப் பேராசிரியர் பெர்ணான்டோ, கலாநிதி ஆரிய அபயசிங்க போன்றவர்களும், சிங்கள எழுத்து நெடுங்கணக்கை ஆராய்ந்த அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இத்தனைக்கும் மேலாகக் கலாநிதி விக்கிரபாகு கரணாரத்தின அவர்களே “தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வீகக் குடிகள்” என்று கூறுகின்றார். அப்படி இருக்கையில் சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வில் இதனை ஒரு விடயமாகச் சொல்லாமல், இலங்கைத் தொல்லியல், எமது கலாச்சாரம், பண்பாடு தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் இதனைப் பேசியிருக்கலாம். மற்றும்படி அவர் சொன்னதில் எந்தத் தவறும் கிடையாது. அதுதான் நிதர்சனமான உண்மை.

கேள்வி: 
கிழக்கு மாகாண மக்களின் தமிழ்த் தேசியம் சார்ந்த நிலைப்பாடு தற்போது எவ்வாறு உள்ளது?

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல பொதுவாக வடக்கு கிழக்கு தழுவியதாகவே தமிழ்த் தேசியத்தில் பாரியளவு சரிவு ஏற்பட்டுள்ளது. எனக்கு நேரடி அரசியலில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. ஆனாலும் இந்தமுறை தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கின்ற போது தமிழ்த் தேசியம் சார்ந்து அதனுடைய வீச்சு வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் தமிழ்த் தேசியம் சார்ந்து பேசும் கட்சிகளுடைய பலவீனம் அல்லது அவர்களின் செயலின்மை தான். தேர்தலில் கொடுக்கப்படுகின்ற வாக்குறுதிகளை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடிவதில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். மக்களும் பல பொருளாதார சிக்கல்கள், பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அவர்களின் மனோநிலையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை அரசியல் ஆய்வாளர்கள்தான் ஆய்வு செய்ய வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியம் பேசுவதில் பல அச்ச நிலைமைகள் உண்டு. ஆனால் வடக்கில் அவ்வாறில்லை. ஆனாலும் வடக்கில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், தமிழ் மக்களை வழி நடத்துகின்ற தலைமைகளிடையே எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் எந்த முகாந்திரமும் கிடையாது. அதுபற்றிய ஆர்வமோ கொள்கைப் பிரகடனங்களோ கூடக் கிடையாது.’ அது தேர்தல் காலங்களில் மட்டுமென்றில்லாமல், சா தாரண நிலைமைகளிலும் அதற்கான ஒரு செயலணியை உருவாக்கி, அவற்றினை நாம் ஆவணப்படுத்திப் பாதுகாக்கலாம். தென்னிலங்கையில் அவர்கள் தங்களது மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகள் என்றில்லாமல் சாதாரண மக்களும் அதில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். அதனைப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொதுநிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால் தமிழ்ப் பாடசாலைகளில் ஒரு பாடசாலையில் கூட அந்தந்தக் கிராமத்தின் வரலாற்று மரபுரிமைச்சின்னங்கள் பாதுகாக்கப்படுவதில்லை. அதுபோல நைனாதீவில் உள்ள ஒரு ஆலயத்தைத் தவிர வேறெந்த ஆலயங்களிலும் இது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாகத் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் விற்பனை செய்யப்படுவதைப் பல இடங்களில் அவதானிக்கிறேன். தென்னிலங்கையில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களை விற்பதற்கென்றே பல கடைகள் உள்ளன. அதற்கான காரணம் இது தொடர்பான விழிப்புணர்வு சாதாரண மக்களிடையே ஏற்படுத்தப்படவில்லை என்பதே எனது கருத்து.



நேர்கண்டவர் - காத்திரன் 
நன்றி: உரிமை - செப்டெம்பர் 13, 2020 

இனவாதம், இனத்தூய்மைவாதம்: நூரம்பெர்க் நகர நாசி கால அடையாளங்கள் சொல்லும் செய்திகள்!

 இனவாதம், இனத்தூய்மைவாதம்: நூரம்பெர்க் நகர நாசி கால அடையாளங்கள் சொல்லும் செய்திகள்! 

 - முனைவர் க.சுபாஷிணி


நூரம்பெர்க் நகரம் - இன்றைய ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் தலைநகரமான மூனிக் நகருக்கு அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒரு நகரம் இது. இன்று ஜெர்மனியின் மிக முக்கிய தொழில் நிறுவனங்களான BMW, SIEMENS, PUMA, ADIDAS, AUDI மட்டுமன்றி Intel, Amazon, Microsoft போன்ற அனைத்துலக நிறுவனங்களும் மையம் கொண்டிருக்கும் ஒரு தொழில் நகரமாக அமைந்திருக்கிறது நூரம்பெர்க் நகரம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செக், சுலோவாக்கியா, புல்காரியா போன்ற நாடுகள் மட்டுமன்றி பண்டைய ஜெர்மனியின் பகுதியாக சில காலங்கள் விளங்கிய ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கும் அருகில் அமைந்த ஒரு நகரம் என்பதும் இதன் சிறப்புகளில் அடங்கும்.

அடோல்ஃப் ஹிட்லர் 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற காலகட்டம். மார்ச் 30ஆம் தேதி அப்போதைய ஜெர்மனியின் அதிபராகப் பதவி ஏற்றிருந்த பவுல் ஃபோன் ஹிண்டன்பெர்க் ஹிட்லரை சான்சலராக நியமித்தார். ஏற்கனவே பவேரியா மாநிலத்தில் 1923 நவம்பர் 8-9, ஹிட்லர் நிகழ்த்திய ஆட்சி கவிழ்ப்பு (The Beer Hall Putsch) நடவடிக்கையினாலும் அவரது படைப்பான Mein Kampf நூலும் அவரை அக்காலகட்டத்தில் மிக உயர்ந்த அதிகாரத்தையும் அசைக்க முடியாத சக்தி என்ற அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தன. 1933 மார்ச் மாதத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி அரசின் ஆட்சி வலுவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தங்கள் கட்சியை நிலைப்படுத்தவும், மேலும் மாபெரும் சக்தியாக விரிவாக்கவும் பல திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தத் தொடங்கியது ஹிட்லர் தலைமையிலான நாசி அரசு.

ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் இந்த நூரம்பெர்க் நகரம் நாசிகளால் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகராகக் காணப்பட்டது. இதற்குக் காரணமும் இருந்தது. இனவாத அரசியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நாசிகளால், ஜெர்மானிய நகரங்களிலேயே பண்டைய ஜெர்மானிய இனக்குழு மக்கள் பெருமளவில் வாழ்கின்ற ஒரு நகரமாக, அதாவது ஜெர்மன் நகரங்களிலேயே மிகவும் ‘ஜெர்மன்` தன்மையுடன் உள்ள நகரமாக இந்த நகர் அவர்களால் அடையாளம் காணப்பட்டது. குறிப்பாக ஹிட்லருக்கு இந்தக் கருத்தாக்கம் இருந்தது. இதன் அடிப்படையில் நாசிகளின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் பெரும் நகரமாக பெர்லின் இருந்தது போலவே இந்த நகரையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உருவாக்க ஹிட்லர் எண்ணினார். இந்தக் கருதுகோள் நாசிகளுக்குப் பிடித்திருந்ததால் நாசிக் கட்சியின் பேரணிகளை நடத்துவதற்கு உகந்த ஒரு நகரமாக இந்த நகரையே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். 1933 முதல் 1938 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாதத்திலும் NSDAP (Nationalsozialistische Deutsche Arbeiterpartei -ஜெர்மன்; National Socialist German Workers' Party -ஆங்கிலம்) கட்சி தனது வருடாந்திர பேரணிகளை நூரம்பெர்க் நகரத்தில் நடத்தியது. இந்த ஒவ்வொரு கூட்டங்களிலும் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராணுவத்தினரின் பல்வேறு வகை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் வீர அணி வகுப்புகளும் இந்தப் பேரணிகளில் முக்கிய அங்கம் வகித்தன.

ஏழ்மை காலத்தில் ஓவியம் வரைந்து விற்ற ஹிட்லர்:
அடிப்படையில் ஹிட்லர் கலையார்வம் மிக்கவர். தனது இளமைக் காலத்தில் ஓர் ஓவியக் கலைஞராக அவர் பயிற்சி மேற்கொள்ள விரும்பினார் என்பதும் ஏழ்மையில் வாடியபோது சாலைகளில் ஓவியங்கள் தீட்டி விற்பனை செய்தார் என்பதும், இன்றைய ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அவர் ஓவியப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதும், அவர் ஓவியப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொண்ட ஓவியங்கள் இன்றும் அந்த தேவாலயத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் வியன்னா செல்லும் சுற்றுப்பயணிகள் பார்க்கவேண்டிய ஹிட்லர் தொடர்பான சின்னங்களின் பட்டியலில் அச்சாலைகளும் ஒரு தேவாலயமும் பட்டியலில் இடம் பெறுகின்றன. ஓவியம் தீட்டுவதைப் போலவே கட்டடக் கலையையும் விரும்புபவராக இயல்பாகவே ஹிட்லர் இருந்தார் என்பதை அவரது ஆட்சிக் காலத்தில் அவர் திட்டமிட்டு உருவாக்கிய கட்டடங்கள் உறுதி செய்கின்றன.

1933ஆம் ஆண்டு அடோஃல்ப் ஹிட்லர் நூரம்பெர்க் நகரை நாசி கட்சியின் பேரணிகளின் நகரமாகப் பிரகடனப்படுத்தினார். நூரம்பெர்க்கில் நாசி கட்சியினர் பேரணிகள் நடத்தத் திட்டமிட்ட இடத்தை உருவாக்கும் பொறுப்பை ஹிட்லர் அவருக்கு மிகவும் பிடித்த கட்டடக் கலைஞரான ஆல்பர்ட் ஸ்பியர் (Albert Speer) என்பவரிடம் ஒப்படைத்தார். மிகப்பெரிய ஒரு மைதானத்தில் இந்தக் கட்டடத்தை அமைக்கத் திட்டமிட்டனர். ஆல்பர்ட் ஸ்பியர் வடிவமைத்து உருவாக்கிய கட்டடங்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கட்டடம் என்று இன்றும் இது அறியப்படுகிறது. 450,000 பேர் அமரக்கூடிய வகையில் மிகப் பிரமாண்டமான ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும் அரங்கம் போன்ற பாணியில் அமைக்கப்பட்ட அரங்க வடிவில் இது உருவாக்கப்பட்டது. நூரம்பெர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் பதினொரு சதுர கிலோமீட்டர் (4.25 சதுர மைல்) அளவில் கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கான தேவையை முன்வைத்து நினைவுச்சின்னங்கள் என்ற சிறப்பைப் பெறும் வகையில் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் பணிகள் 1945இல் நாசி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் நிறைவாக்கி முடிக்கப்படவில்லை. ஆயினும் கட்டப்பட்ட பகுதியில் பெரும்பாலானவை இன்றளவும் நாம் காணக்கூடிய வகையில் உள்ளன. இன்று இந்த அரங்கத்தின் முன் பகுதியில் தான் நூரம்பெர்க் ஆவணப் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஹிட்லரும் நாசி சிந்தனையாளர்களும் எந்த நோக்கத்தை முன் வைத்து இந்த மாபெரும் கட்டடத்தை உருவாக்கினார்களோ அதற்கு நேர் எதிர்மாறாக, இனவாத சிந்தனை எத்தகைய மனித குல அழிவை உருவாக்கும் என்பதற்குச் சாட்சியாக இந்தக் கட்டடம் இன்று காட்சியளிக்கிறது.

நூரம்பெர்க் நகரைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்த அமெரிக்கப் படை:
அமெரிக்கப் படைகள் நூரம்பெர்க் நகரை 1945ஆம் ஆண்டு 17-20 ஏப்ரல் வாக்கில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. ஏப்ரல் 20ஆம் தேதி (ஹிட்லரின் பிறந்த நாள்) அமெரிக்கப் படையின் மூன்றாம் அணி நகரை முற்றிலும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு ஹிட்லரையும் நாசி ஆட்சியையும் துதிபாடும் பெயர்களையும் பெயர்ப்பலகைகளையும் அதிரடியாக மாற்றினர். Adolf-Hitler-Straße என்ற சாலையின் பெயரை மாற்றி President Roosevelt பெயரைச் சூட்டினர்.

நாசி ஆட்சிகளின்போது அதிகாரிகள் நிகழ்த்திய போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில் நட்பு நாடுகளின் விசாரணை நவம்பர் மாதம் 20ஆம் தேதி 1945ஆம் ஆண்டு தொடங்கியது. ஆட்சியிலிருந்த நாசி அரசின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் 24 பேர் இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டு, குறிப்பாகக் கொடூரமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அமைதிக்கு எதிரான செயல்பாடுகள் என்ற அடிப்படையில் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணைகள் 1946ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்து குற்றவாளிகளில் ஒவ்வொருவருக்கும் தண்டனைகள் அவர்கள் குற்றத்துக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டன. இது மட்டுமன்றி மேலும் கூடுதலாக 12 விசாரணைகள் 1946 முதல் 1949 என்ற காலகட்டத்தில் நிகழ்ந்தன. இந்த விசாரணைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, இவை இன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அடிப்படை வரையறையை வழங்கிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

நூரம்பெர்க் நகரில் ஹிட்லர் அமைத்த Reichsparteitagsgelände என்ற இப்பகுதி இன்று நூரம்பெர்க் ஆவணப் பாதுகாப்பகமாக, அதிலும் குறிப்பாக நாசி ஆட்சிக்கால குற்றவியல் சம்பவங்களின் அறிக்கைகள், ஆவணப் புகைப்படங்கள், வீடியோ காணொளிப் பதிவுகளின் தொகுப்புகள் உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கட்டடமாக விளங்குகிறது. இதற்கு ஏறக்குறைய பதினொரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நூரம்பெர்க் நீதிமன்றக் கட்டடத்தில்தான் நாசி அரசியல் குற்றவாளிகளுக்கு எதிரான நட்பு நாடுகளின் விசாரணை நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நட்பு நாட்டுக் கூட்டமைப்பினால் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சோவியத் யூனியன்) அனைத்துலக சட்டம் மற்றும் போர் சட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ராணுவ நீதி விசாரணைகள் 'நூரம்பெர்க் நீதி விசாரணைகள்' (Nuremberg trials) என அழைக்கப்படுபவை. இந்த நீதி விசாரணைகள் நாசி ஜெர்மனி அரசின் அரசியல், ராணுவ, நீதித் துறை மற்றும் பொருளாதாரத் தலைமையின் முக்கிய உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தன. முக்கியமாக ஹோலோகாஸ்ட் மற்றும் பிற போர்க்குற்றங்களைத் திட்டமிட்டு நிகழ்த்தியோருக்கு எதிராக இந்த வழக்குகள் பதியப்பட்டன. இந்த நீதிமன்றக் கட்டடம் 1909இல் இருந்து 1916 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டது. நாசி கால ஆட்சியில் அரசியல் முக்கியஸ்தர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான வழக்கு இங்குள்ள மேற்தளத்தில் உள்ள அறை எண் 600இல் தான் நிகழ்ந்தன.

நீதிமன்ற அறை எண் 600 அறையில் நிகழ்ந்த அனைத்து விசாரணைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று இப்பகுதி அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியகம் 1945 முதல் 1946 வரை நிகழ்த்தப்பட்ட விசாரணைகளின்போது உருவாக்கப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் பகுதியாக உள்ளது. இங்கு அனைத்து ஆவணங்களும் தகுந்த பாதுகாப்புடன் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. விசாரணை நடந்த காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவுகளும் ஒலிப் பதிவுகளும் இங்கே பொதுமக்கள் பார்த்தும் கேட்டும் அவற்றை விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ளன.

1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அனைத்துலக ராணுவ நீதிமன்றத்தின் நான்கு தலைமை வழக்குரைஞர்கள் சார்ந்த குழு 24 பேரை நாசி ஆட்சிக் காலத்தில் கொடூரமான குற்றமிழைத்தவர்கள் என்று அடையாளப்படுத்தி குற்றம் சுமத்தியது. இவர்கள் அனைவரும் நாசி அரசாங்கத்தின் மிகமுக்கிய உயர் பதவிகளை வகித்தவர்கள். இவர்களுள் Hermann Göring (ஹிட்லரின் முக்கிய அதிகாரி), Rudolf Hess (நாசி கட்சியின் துணைத் தலைவர் ), Joachim von Ribbentrop (வெளியுறவு அமைச்சர்), Wilhelm Keitel (ஆயுதப்படைத் தலைவர்), Wilhelm Frick (உள்துறை அமைச்சர்), Ernst Kaltenbrunner (பாதுகாப்புப் படைகளின் தலைவர்), Hans Frank (ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் கவர்னர் ஜெனரல்), Konstantin von Neurath (போஹேமியா மற்றும் மொராவியாவின் ஆளுநர்), Erich Raeder (கடற்படைத் தலைவர்), Karl Doenitz (ரீடருக்குப் பின் கடற்படைத் தலைமை பொறுப்பேற்றவர்), Alfred Jodl (ஆயுதப்படைத் தலைவர்), Alfred Rosenberg (ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குப் பகுதிகளுக்கான அமைச்சர்), Baldur von Schirach (இளம் ஹிட்லர் அமைப்பின் தலைவர்), Julius Streicher (Radical Nazi பதிப்பாளர்), Fritz Sauckel (தொழிலாளர் அமைப்பின் தலைவர்), Albert Speer (ஆயுதப்பகுதி அமைச்சர்), and Arthur Seyss-Inquart (ஆக்கிரமிக்கப்பட்ட நெதர்லாந்துக்கான ஆளுநர்). Martin Bormann (ஹிட்லரின் துணை- இவர் நேரில் இல்லாமலேயே இவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடந்தது) ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாவர்.

ஏறக்குறைய ஒரு வருடம் நடந்த இந்த விசாரணையின் தீர்வாக 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர்களைக் கொண்ட இந்த அனைத்துலக ராணுவ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 12 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; மேலும் நான்கு பேர் 10இல் இருந்து 20 வருட கால சிறைத் தண்டனை பெற்றனர்; நீதிமன்றம் மூன்று பேரை விடுவித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேருக்கும் அடுத்த 15 நாளில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு முடிவானது. ஆனால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சிறையிலேயே குற்றப் பட்டியலில் முதலிடம் வகித்த கோரிங் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மார்ட்டின் போர்மான் ஹிட்லரின் மறைவுக்குப் பின்னர் தப்பித்துவிட்டார் என்பதனால் அவர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமலேயே அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது. இவரையும் தற்கொலை செய்து கொண்ட கோரிங்கையும் தவிர்த்து ஏனையோருக்குக் குறிப்பிட்ட அதே நாளில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையும் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்ட குற்றவாளிகள் பெர்லின் நகரில் உள்ள ஸ்பாண்டாவ் சிறைச்சாலையில் தங்கள் தண்டனை காலத்தைக் கழித்தனர்.

தண்டனை பெறுவதற்கு முன்னரே தப்பித்துச் சென்ற மார்ட்டின் போர்மான் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பிறகு உடனே அங்கிருந்து தப்பித்துச் சென்றார் என்றும், மே மாதம் 2ஆம் தேதி சோவியத் படைகளினால் அவர் பிடிக்கப்பட்டார் என்றும் செய்திகள் உலவுகின்றன. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் கூட சில செய்திகள் கூறுகின்றன. சோவியத் படைகளினால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு மே மாதம் 8ஆம் தேதி அவர் புதைக்கப்பட்டார் என்றும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. 1973 வரை அவரது உடல் கிடைக்கவில்லை என்பதும், ஆனால் 1998ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில் அவர் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையது தான் என்றும் சில செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் அவர் தப்பித்து விட்டார் என்றும் இன்றுவரை எவ்வாறு செய்திகள் உலவிக் கொண்டிருக்கின்றனவோ அதேபோல மார்ட்டின் போர்மானும் தப்பித்திருக்கலாம் என்றும் உறுதிப்படாத செய்திகள் உலவத்தான் செய்கின்றன.

நூரன்பெர்க் விசாரணை (Nuremberg Trial) இந்த நகரத்தின் வரலாற்று நிகழ்வு. இது நிகழ்ந்த அறை எண் 600 (Room No. 600) நாசி கால வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்று. இந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தி நாசி ஆட்சிக் காலத்தைக் காட்டும் பெரும் காட்சிக்கூடமாகவும் அதன் பின்னர் நாசி ஆட்சி வீழ்த்தப்பட்டு நட்பு நாடுகள் ஜெர்மனியைக் கூறு போட்டு ஆட்சியை எடுத்துக் கொண்டு ‘நாட்டாமை’ செய்த காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், காகித ஆவணங்கள், அன்றைய வழக்கிலிருந்த ஒலி நாடாக்கள், சிறு காணொலிகள் என ஆவணப் பாதுகாப்பகம் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

ஹிட்லர் கட்டமைமைத்த நாசி ஆரியச் சிந்தனை ‘ஆரிய இனம் மனிதக் குலத்தில் உயர்ந்த இனம்’ என்ற இனத் தூய்மைவாத சிந்தனையின் அடிப்படையைக் கொண்டது. நாசி சித்தாந்தங்களின் அடிப்படையில் இனக்கலப்பற்ற தூய ஆரிய இனமாக நோர்டிக் ஜெர்மானியர்கள், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்கேண்டிநேவியா (நோர்வே, டென்மார்க், சுவீடன்) ஆகியோர் கருதப்பட்டனர். நாசிகள் எல்லா ஜெர்மானியர்களையும் ஆரியர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெர்மானியர்களில் நோர்டிக் வகையினர் (சராசரி 175 செமீ உயரம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, மெலிந்த உடல், வெளுத்த உடல், பருத்த கன்னங்கள் போன்ற அங்க அடையாளங்கள்) மட்டுமே இவர்களால் தூய ஆரிய இனமாக அடையாளம் காணப்பட்டனர். நாசிக்களின் இனத்தூய்மைவாத கருத்தாக்கங்களை விரிவு படுத்தும் வகையில் தீவிர பிரச்சாரங்களை நாசி அரசு கருவியாகப் பயன்படுத்தியது. வெறுப்பு இனவாத கருத்தாக்கங்களே இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. தூய ஆரிய இனம் மட்டுமே வாழத் தகுதி படைத்த இனம் என்ற வகையிலான தீவிரப் பிரச்சாரங்களை நாசி அரசு முன்னெடுத்தது. தூய ஆரிய இனத்தை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இளம் ஹிட்லர் (Hitler Youth) என்ற அமைப்பினை நாசிக்கள் 1922ஆம் ஆண்டே தொடங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது இனத்துக்காகப் போராடும் பலம் பொருந்திய இளைஞர்களை அதாவது 'ஆரிய சூப்பர்மேன்களை' (Aryan Superman) உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்குப் பயிற்சிகள் அளித்தனர்.

இத்தகைய இனத்தூய்மைவாத சிந்தனை அளிக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் மனிதாபிமானமற்ற இயந்திரங்களாகச் செயல்பட்டதினால் ஏற்பட்ட இழப்பு மிகப் பெரிது. ஹோலோகோஸ்ட் பற்றியும் கொடூரமாகக் கொல்லப்பட்ட யூதர்கள், போலந்து மக்கள், லித்துவானிய மக்களைப் பற்றி அதிகம் பேசும் ஊடகங்கள் கூட உளவியல் ரீதியாக இனப்பிரிவினைவாத சிந்தனையை உள்வாங்கிய மக்கள் ஏனைய இனத்தின் மீது செய்த கொடுரங்களைப் போலவே தமது இனத்திற்குள்ளும் இழைத்த உளவியல் தாக்குதல்களைப் பற்றி அதிகம் பேசவில்லை. இது ஒருபுறமிருக்க, 1945க்குப் பிறகு நட்பு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜெர்மனியின் நிலை பற்றி உலக நாடுகள் அதிகம் பேசுவதில்லை. மாறாக நாசி ஆட்சிக் காலம் பற்றிய செய்திகளே வெளி உலகில் அதிகம் அறியப்பட்ட செய்தியாக அமைகின்றன.

கடந்த 40 ஆண்டுக் கால ஜெர்மனி என்பது ஜெர்மனி எடுத்துக் கொண்டு புதிய பரிணாமம். தொழில் காரணமாக அதிகமான அயலக மக்களின் வருகை, அகதிகளாக இலங்கை உட்படப் பல நாடுகளிலிருந்து போரினால் பாதிக்கப்பட்டோரை அனுமதிக்கும் போக்கு, மிகத்திறந்த மனதுடன் இனப்பாகுபாடின்றி மனித உரிமையைப் பேணும் போக்கு, உலக அரங்கில் மனித உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கும் போக்கு, மிக விரிவான கலப்புமணம் என இன்று உலக அரங்கில் பொருளாதார ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உயர்ந்த நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்கும் சாத்தியத்தை ஜெர்மனிக்கு வழங்கியிருக்கிறது.

இனவாதம், இனத்தூய்மைவாதம் ஆகிய கோட்பாடுகள் மனிதகுல வரலாற்றில் இடம்பெற பொறுத்தமற்றவை ; மனிதகுல மாண்புக்கு எதிரானவை என்பதை உணர்ந்த சமூகமாக இன்று ஜெர்மனி திகழ்கிறது. அந்தத் திறந்த மனதின் வெளிப்பாடுகளாகத்தான் நாசி ஆட்சிக் காலத்தில் தங்கள் ஜெர்மானிய இன மக்கள் வேற்று இனத்தோருக்கு இழைத்த கொடுமைகளை வெளிப்படையாக, எந்த ஒளிவு மறைவும் இன்றி உலகுக்கு உண்மை வரலாற்றை வழங்கும் நோக்கத்துடன் டாஹாவ், அவ்ஷ்னிட்ஸ் வதைமுகாம்களையும் நூரம்பெர்க் நீதிமன்றம், நூரம்பெர்க் ஆவணப் பாதுகாப்பகம், செக் போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், யூத அருங்காட்சியகம் என உண்மை தகவல்களைப் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தியுள்ளது.

பொதுவாக தங்கள் சுயபெருமைகளைத் தண்டோரா போட்டு அறிவிக்கும் சிந்தனைகளுக்கு இடையே, தங்கள் குற்றச்செயல்களை வெளிப்படையாகப் பேசி மனித உரிமைக்கும், மனித நேயத்துக்கும், இனப்பிரிவினைவாதக் கோட்பாடு ஏற்படுத்தக் கூடிய அழிவுகளை அறிந்துகொண்டு அத்தகைய குறுகிய நோக்கம் கொண்ட சித்தாந்தங்களிலிருந்து மீண்டு, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க எடுக்கும் முயற்சியாகவே இந்த வரலாற்றுக் கூடங்கள் திகழ்கின்றன. இன அடையாளப்படுத்துதல், இனப்பிரிவினைவாதச் சிந்தனை, இனத்தூய்மை வாதச்சிந்தனை ஆகியவை மனிதகுல மேன்மைக்கு எந்த நன்மையையும் இதுகாறும் செய்ததில்லை. இனி செய்யப்போவதுமில்லை. வரலாறு நமக்கு இதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


நன்றி: மின்னம்பலம்  

Saturday, September 12, 2020

காலதேவன் வழிபாடு

காலதேவன் வழிபாடு 

-- முனைவர் இராஜேஸ்வரி செல்லையா


            வரலாற்றுக்கு முந்திய காலத்தில், மனிதர்கள் நாகரிகமும் பண்பாடும் பெற்று வாழ்ந்த தென் பகுதியில் காலம் என்ற கோட்பாட்டை இரவு பகல் என்ற பொருளிலும், சூரிய சந்திரர் இணைந்த வடிவிலும் காலம் நகர்ந்துகொண்டே இருக்கும் யாருக்காகவும் நிற்காது என்ற கோட்பாட்டைச் சக்கரமாகவும் உருவகப்படுத்தி வழிபட்டனர். ஒவ்வொருவருக்கும் காலம் முடியும் போது அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கும் அதனை வழங்குவோன் எமன் எனப்பட்டான். [எமன் என்றால் எம்முடையவன்; அவன் உனக்கு எனக்கு என்று பாரபட்சம் காட்டாதவன் எனப் பொருள் கொள்ளலாம். வட மொழியில் இவனை யமன் என்பர்] இவனே நீதிபதி என்றும் இறப்பினைக் கொடுத்து அவரவர் காலத்தை முடித்து வைப்பவன் என்றும் அறியப்பட்டான். காலத்தைக் கணக்கிடுவோன் காலன்;  மரணத்துக்குத்  தூதாக வருபவன் தூதன் என்றும் காலக்கடவுள் இன்னார் இனியார் எனாது தர்மத்தின் படி செயல்படுவான் என்பதால் அவனே தர்மன் என்றும் புரிந்துகொள்ளப்பட்டான்; அவனை எமதர்மன் என்றும் தர்மராஜா என்றும் அழைத்தனர். 

முழு நிலா:
            மண்ணுக்குக் கீழே இருந்து வரும் பாம்பு  இறந்து போன முன்னோராகக் கருதப்பட்டது. கருப்பு நிறமும் அமாவாசையும் இறந்தவர்களுக்கானது. மேலே இருந்து வரும் மழை தேவலோகத்தில் இருந்து வருகிறது அதனை வருவிக்கும் அல்லது அருளும் தெய்வம் மண்மகளைச் சூலுறச் செய்யும் இந்திரன் எனப்பட்டான். புதிய பிறப்புடன் தொடர்புடையவை மேலே இருந்து வருபவை வெண்மை நிறத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டன. ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடிப்பாடிக் களிக்கும் இரவு முழு நிலவின் ஒளி மிகுந்த இரவாக அமைந்தது. பங்குனி, சித்திரை, வைகாசி முழு நிலா  இரவுகள் ஆண்டின் மிகுந்த ஒளி பெற்ற இரவைப் பகலாக்கும் முழு நிலா இரவுகளாகும். பங்குனி முழு நிலா காமனுக்குரிய நாளாகவும் திருமணத்துக்குரிய நாளாகவும் ஆயிற்று. கோயில்களில் நடக்கும் தெய்வத் திருமணங்கள் இதற்குச்சான்றாகும்.. சித்திரை முழு நிலா இந்திர விழாவுக்குரியதாயிற்று. ஆக வெண்மை என்பது மேலே மேலோகம், சுக்கிலம் சுரோணிதம், மகிழ்ச்சி, பிறப்பு ஆகியவற்றின் குறியீடுகள் ஆயின. 

பிறப்பும் இறப்பும்:
            வெண்மை - கருமை, இந்திரன் -  எமன்,  பிறப்பு – இறப்பு என்ற இருமைகள் ஆதி மனிதனின் சமயத்திலும் தொன்மங்களிலும் இருந்து வந்தன. இவை தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடல்கோள்களால் வடக்கே நகர நகர அவர்கள் போய்த் தங்கிய இடங்களிலும் செழித்து வளர்ந்தன. பாகிஸ்தான் மாநிலங்களில் ஒன்றான சித்ரால் என்ற பகுதியில் கைபர் கனவாய் அருகே வாழும் கலஷா எனப்படும் பழைய இனம் இவ்விரு கடவுளரையும் வணங்கி வருகிறது. இவர்கள் ஐயாயிரம் பேர் மட்டுமே. 1989 இல் இங்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்ட ஜோசெல் எல்ஃபின்பின் என்பவர் இவர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இங்குப் படையெடுத்து வந்த திராவிட இனத்தவர் என்கிறார். சர்வன் மற்றும்  ஜக்லவான் என்போர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் இங்கு வந்து குடியேறிய புலம் பெயர்ந்தோர் என்கின்றனர். திராவிடப் பூர்வ குடியினருடன் அலெக்சாண்டரின் வீரர்கள் தங்கிவிட்டதால் அவர்களின் கலப்பினமாக இப்போது மக்கள் இருக்கின்றனர் எனக் கருத இடமுண்டு. ஆனால் அலெக்சாண்டரின் படை வீரர்கள் இங்கு தங்கியதாக ரட்யார்டு கிப்ளிங் எழுதியது  வெறும்  கற்பனை என்றும் கருத்து நிலவுகிறது. [விக்கிப்பீடியா]  

தெற்கிலிருந்து வடக்கே சென்ற இந்திரனும் எமனும்:
            இந்திரனை முழு முதல் ஆரியக் கடவுள் என்று முத்திரை இடாமல் அவன் தென்பகுதியைச் சேர்ந்த திராவிடர்களின் மழைக் கடவுள் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும். நெல் வேளாண்மையில் ஈடுபட்டிருந்த ஆண்டு முழுக்க தண்ணீர் தேவைப்பட்ட ஆற்றங்கரையில் வாழ்ந்த மருதநிலமக்கள் மழைக்காக உருவாக்கிய உருவகப்படுத்திய கடவுள் இந்திரன் ஆவான். திராவிடர்கள் இந்தியாவில் மலை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்ததற்கான சான்றாக அவ்விடங்களில் திராவிட மொழிகள் பேசுவதால் அறிய முடிகிறது. இவர்கள் பிறப்பு இறப்பு என்ற அடிப்படையில் மனித வாழ்க்கையைப் புரிந்துகொண்டு இந்திரனையும் காலனையும் அல்லது எமனையும் வணங்கி வந்தனர். இடையில் வந்து குடியேறிய வந்தேறிகள் இந்திரனையும் எமனையும் மற்றும் இங்கு  வணங்கப்பட்டு வந்த  தெய்வங்களைத் தமக்கேற்ப ஊர் பேர் மாற்றி கதைகள் புனைந்து புதிய வடிவம் அளித்தனர். 

            கடல்கோள் ஏற்பட்ட போது இங்கிருந்து மக்கள் நீந்திச் சென்று கரை ஏறியதாகவும் அதனால் தமது முன்னோர் கடல் மாதாவின் பிள்ளைகள் என்றும் கில்காமேஷ் புராணம் சொல்கிறது. இதனால் அங்கு வழங்கும் எபிரேயம், அரமே, போன்ற செமிட்டிய மொழிகளிலும் திராவிட மொழிகளின் இயல்பைக் காணலாம். [எபிரேய மொழியில் தமிழில் இருப்பதைப் போன்ற வல்லொலி மெல்லொலி அமைப்பு, குற்றியலிகரம் குற்றியலுகரம், புள்ளி எழுத்துகள் போன்றவற்றைக் காண முடியும்]. அங்கும் பிறப்பு இறப்புக்கான கடவுள் உருவகங்கள் பிரிந்திருந்து பின்னர் அவை  இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டதைக் காணலாம். 

பவுத்தத்தில் தொல் தமிழர் கடவுளர் :
            பவுத்த சமயம் மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகம் வந்துவிட்டது. இங்கு அசோகா மாமன்னர் நாகப்பட்டினத்தில் புத்த விகாரைகளை எழுப்பினார். ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பல்லவனேஸ்வரத்தில் பவுத்தர்களின் பாத வழிபாடு நடந்ததற்கான அடையாளம் உள்ளது. ஏழாம் நூற்றாண்டு வரை செல்வாக்குடன் திகழ்ந்தது. கி.பி. 440இல் பிறந்த போதி தர்மர் சீனாவுக்குச் சென்று பவுத்த சமயத்தைப் பரப்பினார். அதன்பின்பு அங்கிருந்து பவுத்தம்  ஜப்பான் கொரியா முதலிய நாடுகளுக்குச் சென்றது. பவுத்த துறவிகளைத் தர்க்கத்தில் வென்ற சங்கரர் இந்திரர் சரஸ்வதி என்ற வெற்றிப்பட்டத்தைப்  பெற்றார். அதன் பிறகு அவர் உருவாக்கிய காஞ்சி சங்கர மடத்தில் பீடாதிபதிகள் இந்திர சரஸ்வதி பட்டத்தோடு புதுப் பெயர் பெற்றனர். சிவன் கோயிலில் இந்திரன் விலக்கப்பட்டான். 

            பவுத்த சமயம் புதிதாகப் பரவிய  இடத்தில் அது வரை அப்பகுதியில் வழிபட்டு வந்த தெய்வங்களைத் தமதாக்கிக் கொண்டது. இந்திரன் எமன் மற்றும் பெண் தெய்வங்கள் பவுத்த சாயலில் பெயர் மாற்றம் பெற்றன. இந்திரன் தேவராஜா எனப்பட்டான் அவனே புத்தருக்கு [ஞானஸ்நானம்] திருமுழுக்குச் செய்வித்தான். இந்திரனை சக்ரா, சக்கா, சாக்கா, என்று பவுத்தர்கள் அழைத்தனர். புத்தரின்  ஒரு பக்கம் இந்திரனும் மறு பக்கம் பிரமனும் இருத்தப்பட்டனர். பிரம்மன், சரஸ்வதி, எமன், குபேரன், வருணன் ஆகியோர் புத்த சமயக் கடவுள்கள் ஆயினர். புத்த சமயம் பெண் தெய்வ வழிபாட்டையும் உடலை யோக சாதனமாகப் பயன்படுத்தும் முறையையும் கற்றுத்தந்தது. இறப்புக்குப் பிந்திய வாழ்வை வலியுறுத்தியது. அதனால் இன்றும் ஒருவர் இறந்து போனால் அவர் சொர்க்கத்துக்குப் போவதற்காகப் புத்த துறவிகளிடம் பணம் கொடுத்து சீட்டுப் பெறும் முறை இருக்கின்றது.  குறுந்தொகைத் தலைவி [292] இரவுக் குறி வந்திருக்கும் தன் தலைவனைக் காணப் போக முடியாமல் தவித்தபடி, இன்னும் உறங்காமல் இருக்கும் தன் தாயை நினைத்து பெண் கொலை செய்த நன்னன் போன, மீண்டு வர முடியாத  கீழான நரகுக்குச் செல்வாள் என்று சபிக்கிறாள். பாடல் எழுதப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நரகங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பிக்கை அதிகரித்திருந்த நிலையை இப்பாடல் உணர்த்துகிறது. ஜப்பானில் மீண்டு வரக் கூடிய நரகம், வர இயலாத நரகம் என்று இரு வகை நரகங்கள் பவுத்த சமய நம்பிக்கையில் உள்ளது. 

எமதர்மன் வழிபாடு:
            எமன் தர்மதேவன் எனப்பட்டதால் அவனது கோயில்கள் தர்மராஜா கோயில்கள் எனப்பட்டன. இந்திரனுக்கு உரிய கோயில்கள் தேவராஜா கோயில்கள் எனப்பட்டன.  மயிலை. சீனி. வேங்கடசாமி  தனது பவுத்தமும் தமிழும் என்ற நூலில் தர்மராஜா கோயில்கள் புத்தர் கோயில்கள் என்கிறார். தாரா தேவி கோயில் பிற்காலத்தில் திரௌபதி கோயில்கள் ஆயின என்கிறார். திரௌபதி சமேத தர்மராஜா கோயில்கள் இன்றும் தாராபுரம் முதலான பல ஊர்களில் இருக்கின்றன. மாமல்லபுரத்தில் உள்ள பாண்டவர் ரதம்  தர்மராஜா கோயில் ஆகும். எமனுக்குக் கோயில் எழுப்பிய இடங்களில் அவனுடன் காலன், தூதன் ஆகியோரும் இடம் பெற்றனர். எமதர்ம வழிபாடு தமிழகத்தில் பக்தி இயக்கத்துக்குப் பிறகு எருமை மீதமர்ந்து வரும் கரிய கொடிய தோற்றமுடைய கடவுளாக உருமாறியது. அதற்கு முன்பு ஒரு தூண் மட்டுமே நட்டு வைத்து வணங்கினர்.

            இன்றும் தென்காசி வட்டத்தில் வல்லம் என்ற ஊரில் ஆதி கோயிலாக காலசாமி கோயில் இருக்கிறது.  மதுரை மாவட்டத்தில் டி. கல்லுப்பட்டி சுப்புலாபுரம் அருகில் நேரக் கோயில் என்ற பெயரில் காலக் கடவுள் கோயில் உண்டு. இவ்விரண்டு இடத்திலும் கீழே அகலமாகவும் மேலே குறுகலாகவும் செல்லும் ஐந்தடி உயரத் தூண் உண்டு. அதன் மேல் பகுதி கூம்பாக இல்லை; தட்டையாக இருக்கும். காலம் நகர்வதைக் குறிக்கும் வகையில் சூரிய சந்திரர் உருவம் பொறித்திருப்பதைக் காணலாம்.  இதுவே ஆதி வடிவம் ஆகும். பின்னர் உருவம் வரைந்தும் சிற்பம் செய்தும் வழிபட்டனர். 

            எமதர்மரை வணங்குவோர் தம் பிள்ளைகளுக்குத் தர்மர், தர்மராஜா, ஏமராஜா, ராஜ- எனத் தொடங்கும் பிற பெயர்களைச் சூட்டுவது மரபு. ஸ்ரீவில்லிப்புத்தூரில் மூன்று இடங்களில் ஏமராஜா கோயில்கள் உண்டு. பெரிய கோயில், நாடார்களின் குலதெய்வமாக கம்மாபட்டி கருப்பட்டி ஊரணி அருகில் இருக்கும் கோயிலும், சென்னா குளம் புதுப்பட்டியில் கோனார்களின் குலதெய்வமாக ஒரு கோயிலும்  உள்ளன. பெரிய கோயிலுக்குள் எமன் தனியாகக் கோயில் உண்டு. [இந்தக் கோயிலில் பணியாரம் வேகும் சூடான எண்ணெய்க்குள் வெறும் கையை விட்டு அரித்து எடுக்கும் அதிசயம் ஆண்டுதோறும் நடக்கும். ஒரு பாட்டி விரதமிருந்து இதைச் செய்வார்.]  நாடார்கள் கோயிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளியன்று ஆண்டு பூஜை நடத்தப்படும். அப்போது பூப்பந்தல், கரும்பு பந்தல் போட்டு வணங்குவர். இவர்கள் உடன்குடியில் இருந்து வடக்கே இடம் பெயர்ந்தவர்கள். உடன்குடியில் இருந்து அழகிய பாண்டியபுரம் வந்து அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தனர். அவ்வாறு வந்த ஏழு குடும்பங்கள் இன்று ஐந்நூறு தலைக்கட்டுகளாக வளர்ந்துவிட்டன. எனவே  இங்கு குடும்பங்கள் பெருகச் செய்த பிச்சமுத்து ஐயாவுக்கும் உள்ளே சிலை உண்டு. எமன், காலன் தூதன், ஐயனார், வன்னியராஜா,  வெண்ணாங்கிழவி என்ற ஆறு பேருக்கும் கோயில் உண்டு.  வெண்ணாங்கிழவிக்கு மட்டும் முறம், காதோலை, கருகமணி, பிச்சி பூ வைத்து வழிபடுகின்றனர். மற்ற தெய்வங்களுக்கு எந்தப் பூவும் சாற்றலாம். 

            பூப்பந்தல் என்பது பவுத்தர்கள் சித்தர்களாகக் காடு மலைகளுக்குள் போய் ஒளிந்து மறைந்து வாழத் தொடங்கிய பிறகு ஏற்பட்ட ஓர்  நேர்ச்சை அல்லது வேண்டுதல் ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எல்லாம் வல்ல சித்தருக்குப் பூப்பந்தல் நேர்ச்சை நடைபெறுவது உண்டு. சைவ வைணவ சமயங்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில் அவர்கள் பவுத்தர்களையும் சமணர்களையும் கடுமையாகத் தண்டித்து அவமானப்படுத்தி  உயிர்க்கொலையும் செய்தனர். இதனால் பலர் மேற்குத்  தொடர்ச்சி மலைகளில் போய் மறைந்து வாழத் தொடங்கினர். இவர்கள் மிகச் சிறந்த காலக் கணிதர்களாக விளங்கினர். விண்மீன்களையும் கோள்களையும்  வெறும் கண்ணால் நோக்கி எதிர்கால நிகழ்வுகளைக் கணித்துக் கூறினர். அவர்களில் பலர் இரசவாதம், ஜோதிடம், மருத்துவம் போன்றவற்றில் சான்றோர்களாகி சித்தர்கள் எனப்பட்டனர். வேறு சிலர் களரி, சிலம்பம், வர்மம், குங்ஃபூ, கராத்தே [பெயர்கள் பிற்காலத்தவை] போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றுப் பெற்று ஆசான்களை உருவாக்கினர். இவர்களின் பாடல்களில் சிவன், முருகன் என்ற பெயர்கள் இடம்பெற்றாலும் அவை புராணக் கடவுளர்களாக இல்லாமல் தத்துவக் கோட்பாடுகளாக விளங்கின. 

புத்தமும் சித்தமும்:
            ஜப்பானுக்குப் பவுத்தம் பரவிய போது அங்கு எழுதப்பட்ட பவுத்த நூல்களின் எழுத்து வடிவம் சித்தம் எனப்பட்டது. சித் என்றால் அறிவு. அறிஞர்கள் எழுதியவை என்ற பொருளில் அந்த எழுத்து வடிவம் சித்தம் எனப்பட்டது.  ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவிலும் சித்தம் என்ற எழுத்து முறை இருந்தது. கியோத்தொவில் இநோஜியில் உள்ள எமன் கோயிலை எம்ம கோயில் என்று அழைக்கின்றனர். ஜப்பானில் ன், ம் ஆகிய இரண்டு ஒலிகளின் கலவையாக ஒரு மெய்யெழுத்து  உள்ளது. மொழியியலில் NASALAISED ENDING என்று சொல்வதற்கு நிகரானது இந்த ‘ன்ம்’ என்ற மூக்கொலி வடிவம். இது மகர ஒலி போல ஈரிதழ் ஒலியாக முற்றுப் பெறாது. எனவே ‘எம்ன்’ என்ற ஒலியுடன் எமன் அங்கு அழைக்கப்படுகிறான். 

காலனும் காலபைரவனும்:
            காலன் சைவ சமய எழுச்சிக் காலத்தில் தமிழகத்தில் பெருங்கோயில்கள் கட்டப்பட்ட சமயத்தில் காலபைரவர் என்ற பெயரில் தென் கிழக்கு மூலையில் தனிச் சன்னிதி பெற்றான். நாய் காலத்தைக் குறிக்கும் குறியீடாக. கால பைரவரின் வாகனமாக இடம் பெற்றது.  [ஜெயமோகன் கதை ஒன்றில் அடிக்கடி நாய் வந்து போவதைப் பற்றி அவரிடம் கெட்ட போது அவர் நாய் காலத்தின் குறியீடு என்றார்]. காலனை வழிபடுவோர் தமது பிள்ளைகளுக்கு காலசாமி, காலம்மாள் என்று பெயர் சூட்டுவர். எமன் [தர்மன்], காலன் என்ற கருத்தாக்கங்கள் தர்மச்சக்கரமாக பவுத்தத்தில் இடம்பெற்றது. அறவாழி என்றும் அழைத்தனர். இந்து சமயத்தில்  சிவ, விஷ்ணு புராணங்கள் எழுதப்பட்ட காலத்தில் சக்கரம் வைணவத்தில் சக்கரத்தாழ்வாராக சமஸ்கிருதத்தில் சுதர்சன் என்ற பெயரில் இடம்பெறலாயிற்று. காலம் இரவு பகல் என்று  மாறி மாறி சுழன்று வருவது போலச் சக்கரமும் சுழன்றுகொண்டே இருக்கும். இதுவும் ஒரு உருவகம்.  திருமோகூரில் சக்கரத்தின் மீது இரண்டு கால்களையும் அகல வைத்து சர்க்கஸில் ஒற்றைச் சக்கரத்தைச் சுற்றிக்கொண்டு வருபவர் போல சக்கரத்தாழ்வாரின் ஒரு புடைப்புச் சிற்பம் பழுதுபட்ட நிலையில் இருப்பதைக் காணலாம். காலச் சுழற்சியைச் சுட்டிக் காட்டும் சிற்ப அமைதிகளில் இதுவும் ஒன்று. ஆதிமனிதனின் காலம் பற்றிய கருத்தாக்கம் சமயங்களின் வாயிலாக எமன் என்றும் சக்கரத்தாழ்வார் என்றும் வளர்ந்தது. 

            காலி, காளி மற்றும் காலன், காளன் ஆகியவற்றுக்குள் வேறுபாடு இல்லை. காளன் எனப்படுவான் இந்திரனின் உதவியாளன் அவன் இந்திராணியை மீட்க உதவினான் என்று புராணக் கதையும் உள்ளது. திபெத்தில் மகா காலன் பெருந்தெய்வமாக வணங்கப்படுகிறான் சைவ வைணவ எழுச்சிக்குப் பிறகு எமனின் பணியைச் சிவனும் கிருஷ்ணனும் புரிவதாகவும் புதிய கருத்தாக்கங்கள் தோன்றின. மும்மூர்த்திகளின்  பணியில் சிவனின் பணி அழித்தல் ஆகும். அதுவே எமனின் பணியும் ஆகும் கிருஷ்ணன் எல்லா உயிர்களும் தன்னில் வந்து அடங்கும் என்றதனால் அதுவும் ஏறத்தாழ எமனின் பணியை எடுத்துக்கொண்டதாக உணரப்படும். 

இந்து சமயத்தில் எமதர்மன் 
            மச்ச, கருட, விஷ்ணு புராணங்களில் எமனை யமன் என்பர். அவனைப் பற்றிய கதைகள் உண்டு. எமனின் தந்தை சூரியன்; தாய் சந்தியா அல்லது சரண்யா [அந்திப்பொழுது]; இவள் விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். யமனுடன் பிறந்த இரட்டைச்  சகோதரி யமி ஆவாள். எமனுக்கு நிறைய மனைவியர் உண்டு. ஐயோ என்பவள் நாட்டுப்புற நம்பிக்கையில் காணப்படுபவள். ஐயோ தவிர ஹேமமாலா, விஜயா, சுசீலா என்று மூன்று மனைவியர் உள்ளதாகப் புராணங்கள் சொல்கின்றன. யமனின் மனைவி பெயர் ஊர்மிளா என்று மகாபாரதம் சொல்கிறது. மேலும் தர்மர் யமனுக்குப் பிறந்தவர் என்று இறப்பையும் தர்மத்தையும் இணைத்துக் குடும்பமாக்கியது. தாகத்தால்  தவித்து தண்ணீர்  தேடி வந்த போது நீர்நிலையைக் காவல் காத்த பூதம் ஒன்று, தான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் மட்டுமே தண்ணீர் தருவேன் என்று சொல்லி நால்வரையும் சாகடித்துவிடும். அதன் பிறகு தர்மர் வந்து அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்வார். அப்போது பூதம் தான் எமன் என்ற உண்மையை அவருக்கு உணர்த்தும். அந்தக் கேள்வி பதில்கள் தத்துவ விசாரமாக இருக்கும்.  கடோபநிடதத்தில் எமன் நசிகேதனுக்கு மரணம் மற்றும் மரணத்துக்குப் பிந்தைய வாழ்வு பற்றி உபதேசிக்கிறான். இவ்வாறு மரணத்தின் மூலம் வாழ்வின் மாற்றவியலா உண்மைகளை எமன் பிறருக்கு உணர்த்தும் ஞானி ஆகிறான்.

தமிழகத்தில் எமதருமனுக்குக் கோயில்கள் 
            சைவ எழுச்சியின் போது சமண பவுத்த கோயில்களின் கடவுளர் நீக்கப்பட்டு அங்கு சிவனுக்கு இடமளிக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த இந்திரன் எமன் பிரம்மன் போன்ற கடவுளர் சிவனால் பாவ விமோசனம் பெற்றதாகக் கதைகள் புனையப்பட்டுப் பரப்பப்பட்டன. திருச்சி தஞ்சை மாவட்டங்களில் பவுத்தம் பரவிச் செல்வாக்குப் பெற்றிருந்ததை அங்குள்ள கோயில்களின் இறைவன் பெயர்களின் வாயிலாகக் காணலாம். அங்கு இந்திரனுக்குக் கட்டப்பட்டிருந்த கோயில்கள் பின்னர் சிவன் கோயில்களாக மாற்றப்பட்டன. தல புராணங்கள் வாயிலாக இந்திரன் சாபம் தீர்த்த கதையைக் கற்பித்து அங்குள்ள சிவன் கண்ணாயிர நாதர் என்று பெயர் சூட்டப்பட்டார். இது போல திருக்கடையூர் சிவபெருமான், காலனை வதம் செய்த காலசம்ஹார மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். திருச்சிற்றம்பலம் என்ற தலத்தில் தனது தவத்தைக் குலைத்த மன்மதனை எரித்து சிவன் பஸ்பமாக்கினார். அங்கு எமனுக்குத் தனிச்சன்னிதி உண்டு. அவனுக்கே முதல் பூஜை நடைபெறும். அது பழைய எமன் கோயிலாக இருந்து பின்னர் சிவபெருமானுக்கு  இடம் அளித்த கோயில் ஆகும். இங்குள்ள தீர்த்தம் எம தீர்த்தம் எனப்படும். அதில் பெண்கள் நீராடுவதில்லை. பரமக்குடி அருகே எமனேஸ்வரம் என்ற தலத்தில் சிவபெருமான் அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். இங்கு  எமனுக்குச் சிவன் அனுக்கிரகம் செய்ததாகத் தல புராணம் கூறுகிறது.. இங்குள்ள தீர்த்தத்துக்குப் பெயர் எம தீர்த்தம். இங்கும் நாய் இல்லாத பைரவரைத் தரிசிக்கலாம். இதுவும் எமனுக்குரிய பழைய கோயில் ஆகும். 

            மார்க்கண்டேயனை உரிய நாளன்று பாசக் கயிற்றை வீசி எமன் பிடிக்க முனைந்த போது அவன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டதால் கயிறு லிங்கத்தின் மீதும் சுற்றியது. இதனால் எமனைச் சிவபெருமான் சபித்தார். இக்கதை எமனை விடப் பெரிய கடவுள் சிவன் என்ற கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தது. இது போன்ற கதைகள் எமனின் முக்கியத்துவத்தைக் குறைக்க உதவின. ஆயினும் நாட்டார் வழக்கில் எமதருமனைக் குலதெய்வமாக வழிபடும் நிலை தொடர்ந்தது. 

தென்கிழக்கு நாடுகளில் எமன் வழிபாடு
            திபெத் நாட்டில் வஜ்ராயன பவுத்தம் பின்பற்றப்படுகிறது. இங்கு எமனை GSINRJE என்ற பெயரால் அழைப்பர். அழிவைத் தருபவன் என்பதால் யமாந்தகன் அல்லது யமாந்தக வஜ்ர பைரவன் என்றும் அழைக்கப்படுகிறான். அசுர முகமும் காலுக்குக் கீழே ஒருவனைப் போட்டு மிதிக்கும் உருவத் தோற்றத்துடனும் இருப்பான். கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலிலும் இதே உருவ அமைப்புடன் எமனைக் காணலாம். சீனாவில் உள்ள ஏராளமான கோயில்களில் எமனுக்குரிய சன்னிதி அல்லது சிலை இருப்பதைக் காணமுடியும். ஜப்பானில்  எமன் என்ற பெயரின் மெய் எழுத்துக்களை முன்பின் ஆக மாற்றி என்ம தென் என்று அழைக்கின்றனர். என்ம ஓ, என்ம தாயி ஓ என்றும் அழைப்பதுண்டு. தாயி என்றால் பெரிய என்பது பொருள். [தாயி புத்சு என்றால் பெரிய புத்தர்]. பெருங்கடவுள் எமன் என்பதையே இச்சொற்கள் குறிக்கின்றன. எமன் பற்றிய தகவல் அங்கு பழைய நூல்களில் காணக் கிடைக்கின்றன. எமன் அங்கும் பாவங்களுக்குத் தண்டனை தரும் நீதிபதியாகப் போற்றப்படுகிறான். 

பவுத்த சமயத்தில் நரகங்கள் 
            பவுத்த சமயம் மரணத்துக்கு பிந்தைய வாழ்வு குறித்து அதிகம் போதித்தது. இறந்த பின்பு உயிர்கள் நரகத்தில் அனுபவிக்கும் தண்டனைகள் குறித்தும் விளக்கின. அடுக்கடுக்கான நரகங்கள் இருப்பதாக அச்சுறுத்தின. நரகங்களின் பொறுப்பாளனாகக் காவலனாக எமதர்மன் இருந்தான். அவன் தர்மத்தின் வழியில் ஆத்மாக்களைத் தண்டிப்பான். ஜப்பானில் புண்ணியாத்மாக்கள் சொர்க்கம் புகும். பாவாத்மாக்கள் குறைவாகப் பாவம் செய்திருந்தால் மேய்தோ [meido] எனப்படும் நரகத்துக்குப் போகும் அங்கு சில காலம் தண்டனை அனுபவித்துவிட்டுப் பின்பு வெளியேறும். நிறையப் பாவம் செய்த ஆத்மாக்கள்  ஜிகோ கு [jigoku] என்ற நரகத்துக்குப் போய் அங்கேயே கிடந்து உழலும்; அதற்கு விடுதலையே கிடையாது. கொரியாவில் நரகத்தை ஜியோக் [jiok] என்றும் வியட்நாமில் dia nguc என்றும் அழைக்கின்றனர். dia nguc என்றால் வியட்நாமிய மொழியில் பூமிச் சிறை என்று பொருள். 

நிறைவு
            பிறப்பு [வழமை] மற்றும் இறப்பு [அழிவு] கடவுளரான இந்திரனும் எமனும் தொல் தமிழர் வாழ்வில் வழிபட்டு வந்த ஆதி கடவுளர் ஆவர். திராவிடர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் இக்கடவுளர் வழிபாடு இருந்தது ஆரியர் வரவுக்குப் பின்னர் இவற்றிற்குப்  புதிய வடிவமும் செயற்பாடும் கொண்ட கதைகள் உருவாயின. இந்திரனும் எமனும் கொடியவராகச் சித்திரிக்கப்பட்டனர்.  இருப்பினும் பழமை மாறாத, மறவாத நாட்டுப்புற மக்கள் தமது குல தெய்வமாக எமனை வாங்கி வருகின்றனர். தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற அச்சத்துடன் மட்டுமே தெய்வ வழிபாடு நடைபெறுகின்றது.  


Wednesday, September 9, 2020

ஆ. கார்மேகக் கோனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து

ஆ. கார்மேகக் கோனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து 

- தேமொழி 

'அறிவு நூல் திரட்டு' (இரண்டு தொகுதிகள்), 'ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்', 'இதிகாசக் கதாவாசகம்' (இரண்டு தொகுதிகள்), 'கார்மேகக் கோனார் கட்டுரைகள்', 'கார்மேகக் கோனார் கவிதைகள்', 'கண்ணகி தேவி', 'காப்பியக் கதைகள்', 'செந்தமிழ் இலக்கியத் திரட்டு' போன்ற நூல்களையும்; மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் ஆராய்ச்சி, மூவருலா ஆராய்ச்சி போன்ற ஆராய்ச்சி நூல்களையும்;  நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும்  எழுதியவரும்; பேராசிரியர் என்றும், ஆசான், செந்நாப்புலவர், சிறப்புரை வித்தகர் என்றும் போற்றப்பட்டவருமான; அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்  கார்மேகக் கோனார்.  

கீழுள்ளது பேராசிரியர்  கார்மேகக் கோனார்.  அவர்கள் எழுதிய   தமிழ்த்தாய் வாழ்த்து:

            தென்னருயிர் போல் வளர்த்த செந்தமிழ்த்தா யேயுனது

            பொன்னடியை யாம்வணங்கிப் புகழ்ந்துநனி வாழ்த்துதுமே

            உலகிலுள்ள மொழிகளுள்ளே உயர்தனிச்செம் மொழியாக

            இலகிமிகச் சீர்படைத்த இருந்தமிழ்த்தாய் வாழ்த்துதுமே

            கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே மொழிகளுள்ளே

            முன்றோன்றியும் மூவா மொழியரசி! வாழ்த்துதுமே

            பல்மொழிகள் தமையீன்றும் பகரும்இளம் பருவநலம்

            அல்காத தமிழ்க்கன்னி அன்னையுன்னை வாழ்த்துதுமே! 


உதவிய தளம்:

கார்மேகக் கோனார் கவிதைகள், பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார், பக்கம் 9 

https://upload.wikimedia.org/wikipedia/commons/0/03/கார்மேகக்_கோனார்_கவிதைகள்.pdf

மற்றும் கருத்து- சி. பா. சே