Friday, September 4, 2020

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

-- முனைவர் ச.பாரதி   




"கடற்படை அனுபவங்கள்" 
- முதல் நாள் சிறப்புரை (31/8/2020):
            "கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்" என்ற முதல் நாள் கருத்தரங்கில், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்ற முனைவர் தேமொழி அவர்கள் நெறியாள்கை செய்தார்.  "கடற்படை அனுபவங்கள்" என்ற தலைப்பில் முதல் நாள் நிகழ்வில் திரு. நரசய்யா அவர்கள் தனது கடற்பயண அனுபவத்தைப் பற்றி நம்மிடம் மிக மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். அவற்றில் 1949 ஆம் ஆண்டு அவர் பயிற்சியில் இணைந்த காலம் தொடங்கி தனது முதல்  கப்பல் பயணமான “நாசகாரி கப்பல்” பற்றியும், தனது முதல் நாள் அனுபவத்தையும் நம்மிடம் பேசலானார். 

            மேலும் அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரப் பணி பற்றியும் நம்மிடம் மிகச் சுவாரசியமாகப் பேசினார்.  அதோடு, ஐ.என்.எசு. விக்ராந்தில் பணியாற்றிய காலகட்டங்களான, 1970-71களில் பாகிசுதானுடன் நடைபெற்ற போரில், அந்நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று, விசாகப்பட்டினத்திலிருந்த இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எசு விக்ராந்தை தகர்க்க வந்தபோது அதை விசாகைக்கு அருகே வைத்து நீரில் மூழ்கடிக்கச் செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் இந்த ஐ.என்.எசு விக்ராந்த் கப்பலை வாங்குவதற்காக இங்கிலாந்து சென்ற இந்தியக் குழுவில் நரசய்யா அவர்களும் இருந்திருக்கிறார் என்பதும் நமக்கு மிக ஆச்சரியமான ஒரு தகவலாகவே இருக்கிறது. 

            விமானந்தாங்கி கப்பல் குறுகிய ஓடுதளத்தில் போர் விமானங்கள் ஏறி இறங்கும் விதம் பற்றி இவர்  பேசும்போது அதனை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.  இதுநாள்வரை நான் அறிந்தது திரு. கடலோடி நரசய்யா என்றாலே "கடல்வழி வணிகம்" என்ற நூலை எழுதியவர் என்பது மட்டும் தான். ஆனால் இன்றைக்கு நான் அறிந்தது ஏராளம்.

"வணிகக் கப்பல்கள் அனுபவங்கள்" 
- இரண்டாம் நாள் சிறப்புரை (1/9/2020)"
         "வணிகக் கப்பல்கள் அனுபவங்கள்" என்ற இரண்டாம் நாள் பயிலரங்கில் திரு. விவேக் அவர்கள் நெறியாள்கை செய்ய,  தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்ற  நிகழ்வானது இனிதே துவங்கியது.

         திரைகடலோடி திரவியம் தேடிய திரு. நரசய்யா அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பல ஆச்சரியமான கடல் வழிப்பயண அனுபவங்கள்  நிகழ்வில் இணைந்த நமக்கு ஒரு மாபெரும் வியப்பினை ஏற்படுத்தியது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

                  முதல்நாள்  உரையின் தொடர்ச்சியாக,  திரு. நரசய்யா அவர்கள் நம்மிடம் அவரின் கடல் வழிப்பயணம் அனுபவத்தினை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தாம் வேலை செய்த பிரம்மாண்டமான கப்பல்கள், கடலில் உள்ள சில  குட்டித் தீவுகள்  என பல்வேறு விதமான பரிணாமங்களில் நமது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

          இவற்றில் குறிப்பாக நம் கப்பல் படைக்கு வெளிநாட்டவரைக் கொண்டே பயிற்சிகள் கொடுக்கப்பட்டவை பற்றியும், பயிற்சித்தளமான ஐ.என்.எஸ். சிவாஜி போர்க்கப்பல்கள் பயிற்சி, ஐ.என்.எஸ். விக்ராந்த் என பல்வேறு விதமான தனது பயிற்சி, அனுபவங்களை இன்று அவர் நம்மிடம் பகிர்ந்தார். இப்படி அவர்  நம்மிடம் தனது  கடல் வழிப்பயணம் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருக்கும் போது தனது சிந்தனை மொழி ஆங்கிலம் என்பதைத் தெரிவித்தார் . 

          சிந்தனை மொழி ஆங்கிலமாக இருந்தாலும் எழுத்து மொழி நமது தமிழாக இருந்து சிறுகதைகளில் துவங்கிய இவரது எழுத்துக்கள், வரலாறுகள் தாண்டி சங்ககாலம், இடைக்காலம், தற்காலம் என அனைத்து விதமான காலங்களையும் தொட்டுச் சென்றுள்ளது என்பது சற்று வியப்பிற்குரியதாகவே உள்ளது. இதில் மிகவும் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் அவர்  எழுதிய முதல் கதையே ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பரிசு பெற்றது தான். இந்த முதல் கதையின் வெற்றியே திரு. நரசய்யா அவர்களுக்கு பல்வேறு விதமான நூல்கள் எழுதுவதற்கு ஒரு ஊக்க ஊற்றாக  இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

         பெரும்பாலான எழுத்தாளர்களை நாம் பார்த்தோமேயானால் ஏதேனும்  ஒரு காலத்தினை எடுத்துக் கொண்டு அது தொடர்பாகத் தனது ஆய்வினை முன்னெடுத்துச் செல்வார்கள். உதாரணமாகத் தற்காலத்தினை எடுத்துக் கொண்டவர்கள் வரலாற்றுக் காலத்திற்குச் செல்வதில்லை வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொண்டவர்கள் தற்காலத்தை நோக்கிச் செல்வதில்லை ஆனால் திரு நரசய்யா அவர்கள் அனைத்து விதமான காலங்கள் பற்றியும் தொடர்ந்து கட்டுரைகளாக எழுதி வருவது மிகவும் போற்றத்தக்க ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. 

"கடலோடியின்  கம்போடியா நினைவுகள்” 
- மூன்றாம் சிறப்புரை (2/9/2020):
            கம்போடியாவின் நினைவுகள் என்ற மூன்றாம் நாள் நிகழ்வில் திரு. இளஞ்செழியன் அவர்கள் நெறியாள்கை செய்ய, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர். சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்றினார்.

            உலகவங்கியால் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கம்போடியாவில் டோன்லே சாப் நதியின் ஆழத்தை அதிகரிக்கவும் அதன் போக்கைச் சரி செய்யவும் அனுப்பி வைக்கப்பட்ட திரு. நரசய்யா அவர்களின் கம்போடியா குறித்த இச்சொற்பொழிவு இங்கிருந்து  துவங்கியது.  

            “கம்போடியா நினைவுகள்” எனும் இந்த சொற்பொழிவின் வாயிலாக, திரு. நரசய்யா அவர்கள் பல்வேறுவிதமான வரலாற்றுச் சான்றுகளை நம்முன் விவரித்து இருப்பது அனைவருக்கும்  அந்த இடத்திற்குச்  சென்று பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவலை ஏற்படுத்தி இருக்கும் என நான் எண்ணுகிறேன்.மேலும்,  இன்னும் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய பல வரலாற்றுச் சான்றுகள் அங்கு சித்தரிக்கப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார்.

            இதுதவிர, கம்போடியாவின் வரலாறும் அது சந்தித்த பலவகையான ஆட்சிக் கூறுகளும், கம்போடியா சந்தித்த கலவரங்களும் என திரு. நரசய்யா அவர்கள் கூறிய பல்வேறு விடயங்கள் நம்மை மிகவும் ஆச்சரியத்தில் இருக்க வைத்தது.

"நாம்  மறக்க மாட்டேமால்" 
- நான்காம் நாள் சிறப்புரை (3/9/2020):
            தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக, கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!  உரைத்தொடரின் நான்காவது நாளில்  " நாம் மறக்க மாட்டேமால்" என்ற தலைப்பின் வாயிலாக உரை  துவங்கியது.  நிகழ்ச்சியைத்  திரு.இளஞ்செழியன் அவர்கள் நெறியாள்கை செய்ய, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்கவுரையாற்றினார்.

            150 வணிகர்களின் பொருட்களை ஒரே கப்பலில் ஏற்றிச் செல்லும் அளவிற்குக் கப்பல் கட்டினான் நம் சங்கத்தமிழன். இதற்குப் பின்னர் வருகின்ற காலங்களில் குறிப்பாக இடைக்காலத்திலும்,  தற்காலத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் சார்ந்த எந்த ஒரு புரிதலும் தேடுதலும் இல்லாது இருந்த நமக்கு, திரு. நரசய்யா அவர்களுடைய இந்த ஐந்து நாள் சிறப்பு உரைத்தொடர்  மூலம்  கப்பற் துறை சார்ந்த ஒரு முழு வடிவத்தினை அறியத் தந்துள்ளதாக நான் நினைக்கிறேன்.

            குறிப்பாக இந்த  உரையில் திரு. நரசய்யா அவர்கள் அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ள, தொல்லியல் சான்றுகள் பலவற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு அவற்றைச் சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டு அவர்  கூறிய விடயங்கள் அனைத்தும் கடல்வழி வணிகம் குறித்த கூடுதல் வெளிச்சத்தினை நம்மிடம் ஏற்படுத்தியது. மேலும் சங்ககாலத்தில் உள்நாட்டு நுகர்வுக்கு என்றும், ஏற்றுமதிக்கு என்றும், பெரிய அளவில் பொருளுற்பத்திகள்  நடைபெற்றது என்பதைப் பல்வேறுவிதமான சான்றாதாரங்களுடன் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளார் திரு. நரசய்யா அவர்கள்.

            அதோடு பொருளுற்பத்திக்கு அடிப்படையான தொழில்நுட்ப அறிவு சங்ககாலத்தில் மேலோங்கியிருந்தது என்பதை நிரூபிப்பதற்காகப் பானை ஓடுகளை எடுத்துக்கொண்டு அதன்மூலம் தனது வாதத்தினை முன்வைக்கிறார் திரு. நரசய்யா அவர்கள்.  மேலும் கொற்கை, முசிறி போன்ற பல்வேறுவித துறைமுகங்களின் வாயிலாகச் சங்ககாலத்தில் பெரிய அளவிலான வாணிகம் எவ்விதம் நடைபெற்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"படைப்புகள்"  
- ஐந்தாம் நாள் சிறப்புரை (4/9/2020):
            ஐந்தாவது சொற்பொழிவு நாளில்  திரு. விவேக் அவர்கள் நெறியாள்கை செய்ய, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷினி அவர்கள் நோக்கவுரையாற்றினார். கடலோடி நரசய்யாவின் நீண்டகால கடற்பயணங்கள், சந்தித்த நிகழ்வுகள், பணியில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், சென்ற நாடுகள், உலக வங்கித் திட்டங்களில் அவரது பங்களிப்பு, அவரது இலக்கிய மற்றும் வரலாற்றுப் படைப்புகள் என ஏராளமான செய்திகளைக் கடந்த ஐந்து நாட்களாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் நடைபெற்ற திரு. நரசய்யா அவர்களின் சொற்பொழிவின் மூலமாக நாம் அறியும் வாய்ப்பு கிட்டியது. 

            கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்! என்ற  சிறப்பு உரைத்தொடரின் ஐந்தாம் நாளன்று திரு நரசய்யா அவர்களின் "படைப்புகள்" எனும் தலைப்பில் சொற்பொழிவு அமைந்தது. அவர் முதலில் எழுதிய 'கடலோடி' எனும் புத்தகத்திலிருந்து,   சிறுகதைகள் (1997), தீர்க்க ரேகைகள் (2003), சொல்லொணாப்பேறு (2004), கடல்வழி வணிகம் (2005), மதராசபட்டினம் (2006), துறைமுக வெற்றிச் சாதனை (2007), ஆலவாய் (2009), கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009), செம்புலப் பெயனீர் (2011) என்று மேலும் பல நூல்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

            இவை  தவிர வரலாறு, தன்வரலாறு, ஆய்வுநூல்கள், சிறுகதைகள் என்று பல இலக்கிய வகைப் பிரிவிலும் தனது இலக்கியப் பங்களிப்பிற்காகத் தமிழக அரசின் விருதுகளும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய நான்கு நூல்களுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது. மிகவும் போற்றத்தக்க ஒரு விடயமாகும்.  நூல்கள் தவிர்த்து இன்றுவரை தனது 80வயதுகளிலும், பற்பல சிறுகதைகளும், நூல் மதிப்புரைக் கட்டுரைகள் எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், இந்து நாளிதழ் என்று பல இதழ்களில் எழுதி அவரது இலக்கிய வாழ்வைத் தொடர்வது நரசய்யா என்ற எழுத்தாளரின் சிறப்பு.

            ஐந்துநாட்களும் பல்வேறுவிதமான அரிய தகவல்களை வழங்கிய திரு நரசய்யா அவர்களுக்கு நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
இணையவழி உரைத்தொடர்  நிகழ்ச்சி
கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!
சிறப்புரை  உரைத்தொடர் (31/8/2020 - 4/9/2020)
யூடியூப்  காணொளிகளாக @ https://www.youtube.com/Thfi-Channel

1. கடற்படை அனுபவங்கள்  - கடலோடி நரசய்யா

2. வணிகக் கப்பல்கள் அனுபவங்கள்

3. கடலோடியின் கம்போடியா நினைவுகள்

4. நாம் மறக்க மாட்டேமால்

5. படைப்புகள்


-----



No comments:

Post a Comment