Wednesday, September 30, 2020

மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்!

மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்! 

-  முனைவர் ந. அருள்  
 
இந்நாளில் ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன. ஆண்டுதோறும் சாகித்திய அகாதெமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குள்ளே பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்து ஊக்கம் தருகின்றது.

"மொழி', "பெயர்ப்பு' எனும் இருசொற்களின் இணைவில் தோன்றுவது மொழிபெயர்ப்பு. "மொழியென்பது பேசுவோரின் குரலில் பிறந்து பொருளுடைய அறிகுறிகளாக அமைந்து கேட்போரால் பொருள் உணரப்படும் ஒலிவகை எனலாம். அது பெரும்பாலும் பேசுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாருக்கு இடையே நிகழ்ந்து ஒருவர் உணர்ச்சியையோ கருத்தையோ மற்றவர் உணர்வதற்குப் பயன்படுவது' என்று பேராசிரியர் மு. வரதராசனார் மொழிபெயர்ப்புக்கு விளக்கம் தருகிறார்.

பெயர்ப்பு, பெயர்த்தல், பெயர்ச்சி என்பன பொருள் தொடர்புடைய சொற்களாகும். 

பொது நிலையில் மூலநூலின் முழு உணர்வினையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும், அதிகப்படுத்தாமலும், மாற்றாமலும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலை உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். 

ஆயின், "கூட்டியும், குறைத்தும், சுருக்கியும், விரித்தும் பெயர்த்து அமைப்பதையும் மொழிபெயர்ப்பாகக் கொள்வாரும் உளர்' என்று அறிஞர் மு. கணபதிப் பிள்ளை  "மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்' என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வண்ணமே ஒரு மொழியின் கருத்துகளை மற்றொரு மொழியில் உணர்த்தல் எனும் நோக்கில் மொழிபெயர்ப்பில் இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றனர் எனலாம். மற்றும் பொதுவாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் மொழிபெயர்ப்பாளரின் கருத்துக்கு ஏற்பக் கூடியும் குறைந்தும் வருதலும் இம்மரபினை ஏற்றுக் கொள்கின்றனர் என்ற கருத்துக்கு இடந் தருகிறது.  

உடனடி மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். சில வேளைகளில் சிந்திப்பதற்கு நேரமின்றி மிக விரைவாக மொழிபெயர்க்க வேண்டுவதனால் மொழிபெயர்ப்பாளர் இருமொழிகளிலும் மிகத் திறமையானவராக இருப்பது தேவையானதாகும். இங்கு மூல மொழியினைக் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ மொழிதற்கு வாய்ப்பில்லை. 

மூலமொழியின் கருத்தினின்று மொழிபெயர்ப்பாளர் மாறுபடின் மொழிபெயர்ப்பாளரின் அறியாமையைத்தான் உணர்த்தும். ஒருவர் கருத்தை மற்றொருவர் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இடையிலுள்ள மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்து உதவ வேண்டும் என்பதுதான் உடனடி மொழிபெயர்ப்பின் நோக்கமாகும். தன் விருப்பிற்கு மொழியும் உரிமை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இல்லை.

மூலத்தை வென்ற மொழிபெயர்ப்பு இது என்று கூறும்படியாக எதுவும் இல்லை. பொதுவுடைமைத் தந்தை காரல் மார்க்சின் "மூலதனம்' மலையாளத்தில் நாற்பது மொழிபெயர்ப்புகளும் தமிழில் எட்டு மொழிபெயர்ப்புகளும் இந்தியில் ஒன்பது மொழி பெயர்ப்புகளும் வந்த பிறகும் கூட வாகைசூடிய மொழிபெயர்ப்பு என்று எதுவும் இல்லை. "ஊசியின் காதில் ஒட்டகம்  நுழைவது' என்ற விவிலியத் தொடர் ஒரு பிழையான மொழிபெயர்ப்பு. இப்படிப் பிழையான மொழிபெயர்ப்புகள் பல நிலைத்து விட்டன.

மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெற்ற வெற்றியை வேறு எவரும் பெற்றதில்லை. "எனது நூல்கள் மராத்திய மொழியில் விற்பனையானதை விட, தமிழின் மொழிபெயர்ப்பு நூல்கள்தான் அதிகம் விற்பனையாகி மாபெரும் வெற்றி பெற்றன' என்று வி.எஸ். காண்டேகர் மனமுருகி எழுதினார்.

இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் "விவிலியம்' மொழிபெயர்க்கப்பட்டது. 1774}இல் ஜே.பி. பாப்ரிஷியஸ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டார். 1874}இல் தலைமைச் செயலக மொழிபெயர்ப்பாளர் வி. விசுவநாதப் பிள்ளை ஷேக்ஸ்பியரின் "வெனீஸ் வர்த்தகன்' நூலை முதலில் தமிழில் மொழி
பெயர்த்தவராவார். 

மொழிபெயர்ப்பு என்பது சிக்கலுடையது என்ற கருத்திலேயே மூலநூலின் பொருண்மையை முழுவதுமாக எடுத்து மொழிவது பற்றிக் கம்பர் "வையம் என்னை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இது இயம்புவது யாது எனின், பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே' என்று குறிப்பிட்டார்.

புரட்சிக் கவிஞரின் "மாந்தோப்பில் மணம்' என்ற பாடல் மாந்தோப்பின் நிழலில் நிகழ்ந்த காதல் மணத்தைக் குறிக்கும். இதை "நறுமணம்' என்று மொழி பெயர்த்து விட்டார்கள். பல்லவர் காலத்தில் பெருந்தேவனார் மகாபாரதத்தினைத் தழுவி "பாரத வெண்பா' என்று மொழிபெயர்த்தார். வில்லிபுத்தூராரும் நல்லாப் பிள்ளையும் மகாபாரதத்தைத் தழுவி தமிழில் இயற்றினர்.

நூற்றுக்கு நூறு கல்வி வளமும் நூற்றுக்கு எண்பது பேர் இருமொழிப் புலமையும் நூற்றுக்கு எழுபது பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்புச் செல்வாக்குப் பெறலாம். கதை, நெடுங்கதை, வாழ்க்கை வரலாறு, பயணக் குறிப்புகள் இந்தக் கணக்கில் சேரும். 

சுத்தானந்த பாரதியார் மொழியாக்கம் செய்த "ஏழை படும் பாடு' மிகப் பெரிய ஆர்வத்தை எழுப்பியது. பின்னர் அது திரைப்படமாகவும் வந்தது. வங்கக் கதைகள் பெற்ற வெற்றிக்காக அக்காலத்தில் கதை தேடி கல்கத்தா செல்லாத இயக்குநர்களே இல்லை.

தமிழக அரசு ஆண்டுதோறும் மொழிபெயர்ப்புக்கு மட்டுமே 11 விருதுகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

செப்டெம்பர்  30 - உலக மொழிபெயர்ப்பு நாள்.

கட்டுரையாளர்: முனைவர் ந. அருள் 
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,  தமிழ்நாடு அரசு.


 

No comments:

Post a Comment