Monday, June 28, 2021

தசையினைத் தீச்சுடினும்...

”உலக வரலாற்றில், ஆணுடை தரித்துப்  போர் புரிந்தமைக்காக உயிருடன் எரிக்கப்பட்ட இளநங்கை, பிரான்சின் ழான்தார்க்”


--புதுவை சிவ இளங்கோ

ழான் ஆணுடை தரித்திருந்தாள். அதுவும் தளபதிக்கான உடை. ஒரு கையில் நீண்ட வாளும், மறுகையில் வெற்றியைக் காட்டும் அடையாளக் கொடியும் கொண்டு குதிரை மீதமர்ந்து உற்சாகமாகப் புறப்பட ஆயத்தமாகி இருந்தாள்.

1-Joan of Arc.jpg

ழானுக்குப் பின்னே பன்னிரெண்டாயிரம் படை வீரர்கள் குதிரைப்படையும், காலாட்படையுமாய்க் காத்திருந்தனர். வீரர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். நமக்குத் தளபதி ஒரு பெண். அதுவும் இளவயதுப்பெண். கிராமத்துப்பெண். இவருடைய தலைமை நமக்கு வெற்றியைத் தருமா என்று ஒரு பக்கம் சில படைவீரர்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில், ‘அவள் மன்னனைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கிறாள்’ என்று சிலரும், ‘அவள் ஆண்டவன் அருள் பெற்றவள்’ என்று சிலரும் சொல்லிக் கொண்டிருந்தனர்.அவளைப் பற்றி அந்தப் படையில் யாருக்கும் முழுமையாகத் தெரியாத போதிலும், அவளுடைய கம்பீரமும், உறுதியும் அனைவருக்கும் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. கறுப்பும், வனப்பும் மிகுந்த, ழான் அமர்ந்திருந்த அந்த ராஜகுதிரை பெருங்குரலெடுத்துக் கனைத்துச் சீறித் துள்ளிக் குதித்தது. திடீரென்று ஏற்பட்ட அதிர்வால் ழான் சற்றே நிலை குலைந்தாலும். ஓரளவு சுதாரித்துக் கொண்டு குதிரையை லகானைப் பிடித்திழுத்து அடக்க முற்பட்டாள். ஆனால் தன் இரு முன்னங்கால்களையும் மிக உயர்த்தி உயரமாக நின்ற குதிரை, அடுத்துத் தாவித் தன் பின்னங்கால்களையும் தூக்கியடித்தது. ராஜகுதிரை அல்லவா? அதுவும் பல போர்க் களங்களைக் கண்டது. அதற்கும் யுத்தத் தந்திரங்கள் ஓரளவு தெரியும். அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாத ழான் தரையில் விழுந்து உருள வேண்டியவளானாள்.

படைவீரர்கள் சிலர் சிரித்த ஒலி கேட்டது. பலர் ஒலி எழுப்பாமல் சிரித்து அடங்கினர். தரையில் விழுந்த ழான் உடனடியாகத் துள்ளி எழுந்தாள். படைவீரர்கள் சிலரின் கண்களில் தெரிந்த கேலியைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், அருகிலிருந்த தேவாலயத்தைக் காட்டிக் கை உயர்த்தியவள், “இக்குதிரையை அக் கோவிலின் அருகேயுள்ள சிலுவைக்கு அழைத்துச் செல்வீராக!” என்றாள்.

அவள் குரலில் இருந்த கண்டிப்பு, நான்கு வீரர்களை முன்வந்து குதிரையைத் தேவாலயத்தை நோக்கிச் செலுத்தச் செய்தது. அங்கே சென்றதும் குதிரை அசைவற்று கற்குதிரை போல் நின்றது. அதன் அருகே வந்த ழான் மிக அனாயாசமாக குதிரை மீதேறி ஓர் அலட்சியப் புன்னகையுடன் படையினரை ஏறிட்டுப் பார்த்தாள். அனைவரின் கண்களிலும் தெரிந்த ஆச்சரியக் குறியைக் கண்ட ழான், ஒரு நிம்மதியுடன் சிலுவைக்கு அருகில் நின்றிருந்த குருமார்களை நோக்கி,  “ஐயன்மீர், இறைவனை வேண்டி அவனது திருவுருவத்தை ஊர்வலஞ் செய்வியுங்கள்” என்று கூறவும், அக் குருமார்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தைக் குதிரையின் காதிலும், வீரர்களுக்கு உரத்தும் அறிவித்து, தங்கள் வாழ்த்தையும் சேர்த்து விடை கொடுக்கும் பாணியில் கையசைத்தனர்.

“முந்துக! முந்துக!” ழானின் குரல் ஓங்கி ஒலித்தது. அனைத்து வீரர்களும் ழான் சொன்ன உற்சாக வார்த்தையை ஒலித்து இசை முழக்க, அப்பெரும்படை ஓர்லீன் நகரத்தை நோக்கி நகரத் தொடங்கியது. படைவீரர்களின் கண்களில் மின்னிய கேலி மாறி பிரமிப்பு குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.

ஓர்லீன், பிரான்சின் முதன்மை பெற்ற ஓர் நகரம். அந்தக் காலத்தில் பிரான்சின் முக்கிய நகரங்களில் ஆங்கிலேயரும் குடியேறி அவரவரும் அந்த மண்ணுக்கு உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தனர். இதனால் பிரெஞ்சுக் காரர்களுக்கும், ஆங்கில நாட்டினர்க்கும் சண்டை துவங்கியது. இச்சண்டையின் உணர்ச்சியினால் பிரான்சு நாட்டிலெங்கும் இரு கட்சியாகப் பிரிந்திருந்தது.  தெருவில் எதிர்ப்படும் இருநாட்டுச் சிறுவர்கள் கூட கல்லால் அடித்துக் கொண்டு சண்டையை வளர்த்தனர். பிரான்சின் கிழக்கே இருந்த சில ஊர்களே பிரான்சின் மன்னனாக முடிசூட இருந்த இளவரசன் சார்லசுக்குத் துணையாய் இருந்தன. ஓர்லீன் நகரமோ தாக்குதலுக்கு ஆளாகிப் பாதி பிரெஞ்சியரிடமும், மீதி ஆங்கிலேயர் வசமும் இருந்தது. இருபகுதிகளுக்கும் இடையில் ஓடிக்கொண்டிருந்த லுவார் என்னும் ஆறு ஒவ்வொரு நாளும் சிவந்து கொண்டிருந்தது.

இந்த ஓர்லீன் நகரை ஆங்கிலேயரிடமிருந்து முழுவதுமாகக் கைப்பற்றத்தான் ழான் தன் படைகளுடன் சினான் என்றும் நகரிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தாள். அவளை அங்கிருந்து படையுடன் அனுப்பி வைத்ததே இளவரசன் சார்லஸ்தான். இதுதான் காட்டுத் தீயாகப் பரவி பிரான்சு எங்கனும் இதே பேச்சாக இருந்தது. ஒரு பெண் போர் செய்வதா? அதுவும் படைத்தளபதி ஆவதா? அதையும் இளவரசனே அங்கீகரிப்பதா? அது எங்ஙனம்? அப்படிப்பட்ட ழான் யாவள்? அவள் எப்படி இருப்பாள்? என்று பலதரப்பட்ட கேள்விகளும், ழானைக் காணும் ஆவலும் பிரான்சு மக்களிடம் மிகுந்து வந்தன. 

ழானுக்கு படையை வழிநடத்திச் செல்வது சாமானியமாய் இருக்கவில்லை. வழியில் கண்ட இடர்ப்பாடுகளே அதிகம். அஞ்சத் தக்க வேண்டியவையாய் வழிகளும், சாலைகளும் இருந்தன. வழியில் அரச சத்திரங்கள் சில இடங்களில் மட்டுமே இருந்தன. மற்ற இடங்களில் திறந்த வெளிகளில் தங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன. ழானின் இளவயதும், ஆணுடையிலும் வெளிப்படும் அவளது பெண்வனப்பும், பன்னிரெண்டாயிரம் வீரர் மத்தியில் தனியொரு பெண்ணாகப் படுத்துறங்குவதும் வேறொரு சூழ்நிலையில் எண்ணிப் பார்க்க முடியாதுதான். ஆனால் இந்தப் படை வீரர்கள் இடையில் ழான் ஒரு புதிராக இருந்தாள். வீராங்கனை, மன்னனே அனுப்பிய மங்கை, தெய்வாம்சம் பொருந்தியவள், மந்திரங்கள் அறிந்தவள் என்று போர் வீரர்கள் பரிமாறிக்கொண்ட வார்த்தைகள் எல்லாம் ழானுக்குக் கவசமாய் காவல் காத்தன.

தன்னைச் சுற்றி அத்தனை காவல் இருந்தாலும், ழான் கண்ணுறங்க வில்லை. வானத்து நட்சத்திரங்களை அவள் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த போது, தான் சிறுமியாக, தன் சொந்த ஊரான டாம்ரிமியில் தூக்கம் வராத ஓர் இரவில் இப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஏசுபிரான் பிறந்த போது தோன்றிய வால் நட்சத்திரம் இப்போது ஏன் தோன்றவில்லை என்று ழான் சிறுவயதில் மிக ஏங்குவாள். எதிரிகள், திருடர்கள், கொள்ளைக் கும்பல் என்று அமைதியான வாழ்வு கேள்விக் குறியாகி இருந்த பிரான்சின் ஒரு குக்கிராமத்தில் வசித்த அவளது பெற்றோர் எதற்கெடுத்தாலும், "தேவனே! அன்னையே! எம்மைக் காப்பாற்றுவீராக!" என்ற சொல்லிய வண்ணம் இருந்தனர். ழானின் எந்தக் கேள்விக்கும் அதே பதில்தான்.

Joan of Arc6.jpg
ழான் சிறுவயதில் ஆடு, மாடு மேய்க்கப் போகும் போதெல்லாம்  வீட்டினருகே இருந்த தேவாலயம் செல்வாள். அவளுக்குள் எழுந்த எல்லாக் கேள்விகளையும் அவள் தேவனிடமே நேரடியாகக் கேட்டாள். எதற்கும் பதிலில்லை. ழானுக்கு அவமானமாய் இருந்தது. சிறிது நாட்களில் சமாதானமாகி அவளே பதில்களைச் சொல்லிக் கொண்டாள். இது அவளுக்கு நிம்மதியைக் கொடுத்தது. எதுவாகினும் தேவன் தனக்குப்பதில் சொல்வதாகவே அவள் நினைத்ததுடன் மற்றவரிடமும் அப்படியே கூறினாள். அவள் அடிக்கடி தேவாலயத்திலேயே அதிக நேரம் கழிப்பதையும், அவளுக்கு தேவன் கனவிலோ, நினைவிலோ சில சேதிகள் சொல்வதையும் அவளுடைய பெற்றோர் பெருமையாகக் கருதினர். அதை அப்படியே ஊருக்கும் சொன்னார்கள்.

இந்நிலையில்தான் அக்கிராமத்தை ஆங்கிலேயக் கொள்ளையர்கள் சூழ்ந்தனர். ஆடுமாடுகள் கொள்ளை போயின. பல வீடுகள் தீக்கிரையாகின. இச்செய்தி கேட்டுப் பக்கத்திலிருந்து பிரெஞ்சு சிறுபடையொன்று அக்கிராமம் வந்து சேர்வதற்குள் கிராமத்தினர் அனைத்தையும் இழந்து விட்டிருந்தனர். ஊரின் பக்கத்தே செல்லும் பெரும்பாட்டையில் செல்லும் வழிப்போக்கர்கள், பிரான்சு படுந் துன்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு  போவதைக் கிராமத்தினர் கேட்டுக் கலக்க முற்றிருந்தனர். சிறு பெண்ணான ழானுக்கு இந்நிலை மிகத் துன்பத்தை அளித்தது. தான் பிறந்து வளர்ந்த, ஓக் மரங்கள் நெருங்கிச் சூழ்ந்த அந்த அழகிய கிராமம் இப்படி அவலமுற்றுச் சிதைந்து கிடப்பதைக் காணச்சகியாமல் தேவாலயம் சென்று முறையிட்டாள். அவள் திரும்ப வரும்போது அவளிடம் ஒரு பதில் இருந்தது. அது அந்தத் தேவனே அளித்த கட்டளையாகவும் இருந்தது.

“ழான் பிரான்சைப் பாதுகாக்கப் பெருமுயற்சி செய்யக் கடமைப் பட்டிருக்கிறாள். இரங்கத் தக்க நிலையிலுள்ள பிரான்சு நாட்டிற்காக ழான் பேருதவி செய்து அதனைக் காக்க வேண்டும்!” என்று தெய்வக் குரல் கட்டளையிட்டிருப்பதாக ஊராரிடம் செய்தி பரவியது. அச்செய்தி அவ்வழிப் போக்கர்கள் மூலமாகப் பல ஊர்களுக்கும் பரவியது. ழானும் பேதை, பெதும்பை  நிலைமாறி மங்கையாக மலர்ந்திருந்தாள். ஆனால் நினைவென்னவோ பிரான்சின் விடுதலை மட்டுமே! 

இது இவ்வாறிருக்கப் பிரான்சின் பல நகரங்களில் இருந்த மந்திரவாதிகளும், குறிசொல்வோரும், “பிரான்சு நகரமானது, ஓக் மரத் தோப்பினின்று வரும் மங்கை ஒருத்தியால் விடுபட்டுப் பாதுகாக்கப்படும்” என்று கூறிவந்தனர். இச்செய்தி அரசர் வரை சென்றடைந்தது. அவ்வாறு குறிப்பிட்ட அடர்ந்த ஓக் மரத்தோப்பு ழானின் கிராமமான டாம்ரிமியே என்றும், ழானே அந்த மங்கை எனவும் செய்தி எங்கும் பரவிக் கொண்டிருந்தது.

இச்செய்தி பக்கத்துப் பெரிய ஊரான வாகுலியர் எனும் நகரத்தில் இருந்த பிரான்சு படைத்தளபதி ராபர்ட் என்பாரின் காதிலும் விழுந்தது. அடுத்த சில நாட்களில் ழான், அத் தளபதி முன் நின்றிருந்தாள். அவளைப் பற்றிய முழு விவரமும் முன்பே கேட்டு அறிந்திருந்த ராபர்ட் அவளிடம், “ம்... நீ என்ன சொல்ல வேண்டுமோ சொல்!” என்றான்.

“ஐயனே! பிரான்சை இப்போதிருக்கும் இக்கட்டில் இருந்து நீக்க எனக்கு தேவன் உத்தரவிட்டிருக்கிறார். நமது இளவரசருக்குத் துணை நின்று, பகையை விரட்டி, இளவரசருக்கு ரீம்ஸ் கோயிலில் புனித நெய் முழுக்குச் செய்வித்து என்னால் முடிசூட்ட வேண்டும் என்பதே என் தேவன் எனக்கிட்ட கட்டளை!”

“உன் தேவன் யாவன்?” “எல்லாம் வல்ல இறைவனே என் தேவன்!” தெளிவான ழானின் இந்தப் பதிலால் குழப்பமடைந்தான் படைத்தளபதி. என்றாலும் மனந் துணிந்து, “இறைவன் எனக்கும் உதவி செய்வாராக” என்று கூறிய ராபர்ட், அரைகுறை மனதுடன் அவளை இளவரசன் சார்லஸ் இருக்கும் நகரமான சினானுக்கு ஏழு போர் வீரர்களுடன் அனுப்பி வைத்தான்.

ஆனால் இளவரசனிடம் பெருந்சோதனையாய்ப் போய்விட்டது. முதலில் இளவரசனைச் சந்திக்கவே பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பல பாதுகாப்பு வளையங்களைக் கடந்து அனுமதி பெற்ற பின்னர் இளவரசன் இருக்குமிடத்தில் நுழைந்த ழான் இளவரசனைக் கண்டுத் துணுக்குற்றாள். “இவனா இளவரசன்! இளவரசனைப் போன்று உடை அணிந்திருந்தாலும் முகத்தில் அந்த மிடுக்கில்லை. இதில் ஏதோ சூதிருக்கிறது.” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட ழான், அக்குழுவில் சாதாரணப் போர் வீரன் உடையில் நின்றிருந்த ஒருவனை நோக்கி வணங்கி, “அரசிளைஞருக்கு இந்த அடியவளின் வணக்கம்” என்றாள்.

Joan of Arc12.jpg
இளவரசனின் நெருங்கிய குழுவினரும், ஆலோசகர்களும் ஆச்சரியம் அடைந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அதோ இளவரசர்’ என்று சுட்டிக் காட்டும் விதமாக இளவரசன் போல் உடையணிந்த ஒருவனைக் காட்டி நின்றனர். ஆனால் ழான் தான் பணிந்திருந்த ஒருவனிடமிருந்து நகராமல், “ஐய! அவன் அரசிளைஞனல்லன்; நீர்தாம் அவன் ஆவீர்!” என்று மேலும் பணிந்து நின்றாள்.

பகட்டு ஆடைகள், படைவரிசை, ஆன்றோர் சொல் அத்தனையும் மீறி தன்னை யாரென்று ழான் கண்டுபிடித்ததை இளவரசன் உள்ளுக்குள் மெச்சினாலும் அவன் கண்களில் முழு நம்பிக்கையில்லை, “என்னதான் கடவுள் கருத்துரைத்து அனுப்பியவளாக இருந்தாலும் ஒரு பெண்ணின் வீரத்தில் பிரான்சு காப்பாற்றப்பட்டால் தன் நாடும், பிறநாடுகளும் எள்ளி ஏளனஞ் செய்ய மாட்டார்களா” என்று நினைத்துக் கொண்ட இளவரசன் கண்களாலேயே தன் அமைச்சர்களுக்குச் சாடை காட்டினான்.

இளவரசனின் அமைச்சர்களும், ஆலோசகர்களும், குருமார்களுமாக நிரம்பியிருந்த அச்சபையினர் ழானின் நோக்கம் பற்றிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினர். எல்லாவற்றிற்கும் ழானிடம் பதில் இருந்தது. அது “பிரான்சைக் காக்கும் தனது இலட்சியம் தேவனின் உத்தரவு” என்பதே! கேள்விக் கணைகளை எழுப்பியோர் களைத்துப் போயினர். இறுதியில் ஒரு குருமார் ஆனவர், “எல்லாம் வல்ல இறைவனே உனக்குப் பேருதவி செய்து ஆங்கிலேயரைப் பிரான்சை விட்டுத் துரத்துவார் என்று நீ சொல்வது உண்மையானால், கடவுளே ஆங்கிலேயரை நம் நாட்டை விட்டுத் துரத்துவார் அன்றோ?” என்று கிடுக்கிப்பிடி போட்டுவிட்டத்  தெம்போடு சபையினரை ஏறிட்டுப் பார்த்தார்.

இதற்கு ழான் என்ன சொல்வாள் என்று ஆவலுடன் அனைவரும் அவளையே பார்த்திருந்தனர். “முயற்சியுடையார்க்கே இறைவன் உதவி செய்வானாகலின், நாம் போர் மேற் சென்றால்தான் தேவன் நமக்கு வெற்றியை அளிப்பார்” என்று குருமார்கள் தேவாலயத்தில் உபதேசம் செய்வது போலும் ழான் சொல்லி முடித்ததும், கேள்வி கேட்ட குருமார் முகம் இறுகிப் போனது.

இத்தனை நேரம் அமைதியாய் இருந்த, கல்வியறிவிற் சிறந்த, மன்னரின் நெருங்கிய உறவினரும் அமைச்சருமான ஒருவர் ழானை நோக்கி, “நீ கேட்டு வரும் தெய்வக் குரலொலி என்ன மொழியிற் பேசுகின்றது?” என்று வினவினார். அவர் எழுத்துக்களை உச்சரித்துப் பேசிய முறை ழானுக்குப் பெருஞ்சிரிப்பை வரவழைத்தது. ஏனையோர்க்கு அவரது மொழியும், ஒலியும் பழகியிருந்தபோதும் இலேசான நகைப் பொலிகள் வரத்தான் செய்தன.

ழான், தன் குறுகுறுப்பு நிறைந்த கண்களால் அவ்வமைச்சரை உற்றுநோக்கிச் சற்றே இளநகையுடன்,  “நீர் பேசும் மொழியை விடச் சிறந்ததான மொழியில் அக்குரலொலி பேசுகின்றது!” என்று பதிலிறுத்ததும், இளவரசனே நகைத்து விட்டான். அங்கிருந்தோர் அனைவரும் அப்பதிலை இரசித்தனர். கேள்விகேட்ட அமைச்சரும் பெருந்தன்மையோடு ழானை நோக்கிப் புன்னகை புரிந்தார். பிறகு கேட்டார். “நீ  தெய்வாம்சம் பொருந்தியவளாக நாங்கள் நம்பும்படி ஏதேனும் புதுமைகள் செய்து காட்ட முடியுமா?” 
“ஐயன்மீர்! புதுமைகள் செய்து காட்ட நான் இங்கு வரவில்லை. என்னைப் போர்க்களத்துக்கு அனுப்புவீர்களானால் நான் எதற்காக அனுப்பப்பட்டேனென்று அப்போதறிவீர்கள்”
ழானின் திட்டவட்டமான, உறுதியான இந்தப் பதில், அவள் இதற்கு மேலும் பதில் சொல்லத் தயாரில்லை என்னும் நிலைப்பாட்டை  உணர்த்தியது.

இதற்கு  மேலும் பொறுத்திராத இளவரசன் தன் திருவாய் மலர்ந்து,  “ழான் தனது இருப்பிடத்துக்குச் செல்லலாம். விரைவில் அழைப்பு வரும்” என்றான். ழானும் இளவரசனை வணங்கி விடைபெற்றுத் தன் இருப்பிடம் திரும்பினாள். அன்றிலிருந்து எப்போது அழைப்பு வரும் என்ற ஒவ்வொரு நாளும்  ஏங்கித் தவித்தபடியே இருந்தாள். ஆனால் அவள் காதுக்கு எட்டிய செய்திகள் அவளுக்குக் கவலையை அளித்தன.

மன்னனின் ஆலோசகர்களும், மதகுருமார்களும், அமைச்சர்களும் ழானின் படைத் தலைமை குறித்துப் பல்வேறு ஐயங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். கிராமத்தில் இருந்து, கல்வி கேள்விகளில் சிறந்திராத ஒரு சிறுபெண், சிக்கலான கேள்விகளுக்கு அனாயாசமாகவும், சில நேரம் கிண்டலாகவும் கூட பதிலளித்தது குருமார்களின் கோபம் வளரக் காரணமாயிருந்தது. எல்லாவற்றை விடவும். தேவனே தன்னிடம் நேரில் சொன்னதாக ழான் கூறியதை அவர்கள் ஏற்கவே மறுத்தனர். தேவனின் காப்பாளர்களாகப் பூமியில் தாங்கள் விளங்கும் போது, தங்களிடம் எதுவுஞ் சொல்லாத தேவன், நேரில் காட்சிகூடக் காட்டாத தேவன், இவள் முன்பு நேரில் வருவதாவது! அதுவும் தங்களுக்குக் கனவில் கூட வராத தேவன்...!

காலந் தாழ்த்து கொண்டே வந்தது. மீண்டும் இளவரசனைக் காண வந்த ழான், இளவரசனிடம், “நான் ஓராண்டுக்கு மேல் சில காலந்தான் இருப்பேன்; ஆதலால் காலந் தாழ்த்த வேண்டாம்” என்று உணர்ச்சி மேலிட வேண்டினாள். இது குருமார்களின் கோபத்தை இன்னும் கிளறியது. ‘இவள் எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பும் கூறுகின்றாள். எனவே இவள் சூனியக் காரியாய் இருக்கக் கூடும்” என்றும் மன்னனின் காதில் ஓதினார்கள். ஓத வந்தவர்கள்தானே?

ஆனால் மன்னனின் முடிவு வேறாக இருந்தது. அவன் அனுப்பிய ஒற்றர்கள், ழானின் சொந்த ஊருக்குச் சென்று அவளைப் பற்றி விசாரித்து அறிந்த சேதிகள் ழானின் ஒழுக்கம், நாட்டுப்பற்று, கடவுள் பக்தி என்று நற்சான்றுகளை அளித்திருந்தன. அதுமட்டுமன்றி, ஓர்லின் நகரம் நாளுக்கு நாள் ஆங்கிலேயர் வசம் ஆகிக் கொண்டிருந்த செய்திகளும் அரசனுக்கு நெருக்கடியைத் தந்தன. 

மன்னர் (இளவரசன்) தீர்மானித்துவிட்டார். ழானின் உடன்பிறந்தார், வேறு சில படைத் தலைவர்கள், படையுடன் ழான் ஓர்லின் நகர் செல்ல ஒப்புதல் அளித்தார். ழானுக்குப், போர் மேல் செல்ல இரும்புச் சட்டை, திறமிக்க குதிரைகள், கூரிய வாள், இவற்றை நேரில் வரவழைத்துக் கொடுத்தார். மேலும் துரைமகன் ஒருவனையும், வேலைக் காரர்களையும், குருமார் ஒருவரையும் எப்போதும் ழானுக்கு உடனிருந்து உதவுமாறு அனுப்பி வைத்தார். தன்னுடைய பங்காக ழான் எடுத்துக் கொண்டது ஒரு கொடியை. அதை அவள் வெற்றிக்கொடி என்று சொன்னாள். அக்கொடியில் அல்லி மலரும், தேவன் உருவமும் வரையப்பட்டிருந்தது. அக்கொடி எப்போதும் அவள் கையில் இருந்தது.

இப்படியாக, மன்னனால் வழியனுப்பப்பட்டுப், புறப்பட்டவள்தான், ஓர்லீன்நகர் செல்லும் வழியில் இதோ இங்கே கூடாரமிட்டுத் திறந்த வெளியில் தங்கியிருக்கிறாள். தூக்கம் வராமல் நட்சத்திரங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ழானின் நெஞ்சினில் இத்தனையும் நிழலாடி மறைந்தன. பழைய நினைவுகளில் இருந்து மீண்டவளின் கண்களில் விடிவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இன்று எப்படியும் ஓர்லின் நகரை அடைந்து விடுவோம் என்ற எண்ணமே அவளுக்குப் பெரு மகிழ்வளிப்பதாக இருந்தது. ழான் உற்சாகக் குரலில் “எழுக வீரர்களே” என ஓங்கிக் குரல் கொடுத்தாள். சிறிது நேரத்தில் படை அங்கிருந்து ஓர்லீன்நகர் நோக்கி நகரத் தொடங்கியது.

ஓர்லின் நகரத்தை அப்படை நெருங்கியபோது ழான் எதிர்பார்த்தது போலவே இருள் கவ்வியிருந்தது. ஆனாலும் ஓர்லின் நகர மக்கள், படையை வரவேற்கவும், தங்கள் படைத் தலைவி ழானை முதன் முதலாகக் காணவும் ஆவலோடு திரண்டிருந்தனர். இருளைக் கிழித்திடத் தீப்பந்தங்கள் மிகுந்திருந்தன. காற்றின் வேகத்தில் தீப்பந்தங்களின் பொறி தெறித்துக் காற்றினூடே பறந்து தங்கள் பங்குக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. இரவின் மடியில் தாலாட்டுப் போல் ‘ழான் வாழ்க’ என்னும் ஒலி நெடுந்தூரம் கேட்டது. ழானின் முகமலரை வெளிச்சத்தில்  காண விரும்பிய சிலர் தீப்பந்தத்தினை அவளை நோக்கிச் சாய்த்தனர்.

Joan of Arc2.jpg

Joan of Arc5.jpg

அனைவரும் பிரமிக்கும் படியான செயல் ஒன்று அப்போது அங்கே நிகழ்ந்தது. காற்றின் ஓங்கிய வீச்சினால்  தீப்பந்தத்திலிருந்து கிளம்பிய ஒரு தீப்பொறி ழானின் கையிலிருந்த கொடியின் ஓரத்தில்  பட்டுத் தீப்பிடித்தது. அப்பொழுதுதான் அனைவரும், ழான் கையில் ஒரு கொடியைப் பிடித்திருப்பதையும், அதில் அல்லி மலரும், தேவனுருவம் பொதிந்திருப்பதையும் கண்டனர். தன் கையில் இருந்த வாளை விடவும் மறுகையில் இருந்த கொடியை உயர்வாய் நினைப்பவளான ழான், கொடி தீப்பற்றியதைக் கண்டவுடன், தன் குதிரையைக் காற்றுக்கு எதிராகத் திருப்பி, கொடியையும் நேர்த்தியாகச் சுழற்றித் தீயை அணைத்துவிட்டாள். பல போர்களைக் கண்ட அனுபவம் வாய்ந்தவள் போல் ழான் செயல்பட்டுத் தீயை அணைத்த விதம், அவளைச் சுற்றியிருந்த படை வீரர்களுக்கும், ஓர்லீன் நகர மக்களுக்கும் பெருவியப்பைத் தந்தது. தகுதியான தலைமையைத் தான் மன்னர் அனுப்பி வைத்ததாக அவர்கள் பெருங்கூக்குரலிட்டு மகிழ்ந்தனர்.

ழானைக் காண ஓர்லின் நகர மக்கள் மட்டும் ஆர்வம் காட்டியிருக்க வில்லை. அந்நகரை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயப் படையினரும், ஆங்கில மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர். படைத்தளபதியாக ஒரு பெண், தங்களை எதிர்த்துப் போரிட வந்த பெண் என்பவையே அவ் ஆர்வத்திற்குக் காரணம். இவையெல்லாம் கண்ட ழான், பிரான்சை விட்டுச் சண்டையின்றி அமைதியாகச் செல்லுமாறு ஆங்கிலேயர்க்குச் செய்தி அனுப்பினாள். அனைவரும் எதிர்பார்த்திருந்த அடுத்த நாள் விடிந்தது. போருக்குத் தயாராய் நின்றிருந்த அந்த நேரத்திலும், “ஆங்கில மக்களே! இவ்விடத்தை விட்டு அகலுங்கள்” என்று இறுதி எச்சரிக்கை விடுத்தாள் ழான்.

ஆனால் இழி சொற்களே அவளுக்குப் பதிலாகக் கிடைத்தன. சண்டை துவங்கியது. ஒரு கையில் கொடியும், மறு கையில் வாளும் ஏந்திய ஓர் ஏந்திழையை ஆங்கிலேயர் வினோதமாகப் பார்த்தனர். நீண்ட அரணை ஒட்டிய கோட்டை ஆங்கிலேயர் வசமிருந்தது. அகழிக்கு மறுபுறம் இருந்த தன் படையினர்க்கு ழான் அகழி வழியாய் இறங்க உத்தரவிட்டுத் தானும் அகழியில் இறங்கினாள். பிரெஞ்சு வீரர்களும் அவர்களுக்குத் துணையாய் வந்த ஸ்காட்லாண்டிய வீரர்களும் அகழியில் குதித்துச் சுவரின் மேல் ஏணிகளைச் சாத்திக் கொத்தளங்களின் மேலேறினர். ஆங்கிலேயர்க்கு ஆச்சர்யம் மிகுந்தது.

“இதென்ன உத்தி! தானாகவே வலிய வந்து அழிவைத் தேடிக் கொள்கிறார்களே! இதுதான் ழானின் போர் அறிவா?” என்று நினைத்து ஏணிமேல் ஏறுவோரைக் கோட்டைச் சுவர்களின் மீதிருந்து சுலபமாக ஈட்டி, அம்பு மூலம் வெட்டிச் சாய்க்க முற்பட்டனர். இந்த நேரம், ழான் தானே தன் கைகளால் ஓர் ஏணியைச் சுவரின் மீது சார்த்தி ஏறிக்கொண்டே தன் வீரர்களை நோக்கிப், “போர் புரியுங்கள்! போர் புரியுங்கள்! இவ்விடம் நம்முடைய தாகும்” என்று பெரங்குரலெடுத்துக் கூவினாள். 
Joan of Arc13.jpg

Joan of Arc11.jpg

அது மந்திரம் போல்  நிகழ்ந்து போனது. ழானின் வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கோட்டை மதில் மேல் நின்றனர். அங்குத் தாக்கத் தயாராக நின்றிருந்த ஆங்கிலேய வீரர்களோ தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். அன்று வெற்றி எளிதானது. ஆனால் அடுத்த நாள் அப்படி இருக்கவில்லை. அடுத்த நாள் வெற்றிக்கு நிறைய விலை கொடுக்க வேண்டி இருந்தது. ழானின்   படை வீரர்கள் சிலர் உயிரிழந்ததோடு, ழானின் தோள்பட்டையிலும் ஓரம்பு ஆழமாகத் தைத்தது. ஆனால் ழானோ, அவ் அம்பை மறு கையால் பிடுங்கியெடுத்து விட்டு, குருதி வழிய வழியத் தொடந்து போரிட்டாள். தங்கள் படைத் தலைவியின் மேல் அம்பு பாய்ந்ததைக் கண்டு திடுக்கிட்டு நின்ற வீரர்கள், அம்பைப் பிடுங்கியெறிந்து தொடர்ந்து போரிட்ட ழானின் வீரம் கண்டு உற்காசமடைந்து மேலும் ஆவேசத்துடன் போர் புரிந்தனர். இதனாலேயே அன்றைய வெற்றியும் சாத்தியமானது.

இவ்வாறான தொடர்ந்து எட்டு நாள் சண்டைக்குப் பிறகு ஆங்கிலேயர் பின் வாங்கி ஓட, ஓர்லின் நகர் முழுவதுமாக பிரெஞ்சுப்படையினர் வசமானது. ழான் வெற்றித் தலைவியானாள். அனைத்து மக்களும், ‘பிரான்சைக் காக்க வந்த காவல் தெய்வமாக’ ழானைப் போற்றினர். ழானின் படையில் சேர்ந்து போரிட வீரர்கள் முண்டியடித்து நின்றனர். போர்ப்படையின் அளவும், வீரமும் கொப்பளிக்க, ழான், பிரான்சை விட்டு ஆங்கிலேயரை முழுவதுமாக விரட்டும் பணியில் தீவிரமானாள்.

ஓர்லின் நகரைத் தொடர்ந்து யார்கோ, பியூழான்சி, மியூன், பாலக், திராய், பாத்தே, ஆகிய நகரங்கள் மீண்டும் பிரெஞ்சுப் படையின் வசமாயின. இத்தனை வெற்றிக் கனிகளோடு இளவரசன் இருக்கும் ரீம்சு கோட்டைக்குத் திரும்பி வந்தாள் ழான். ழானுக்கும், அவள் படைக்கும் வரவேற்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. எல்லாவற்றையும் கடந்து இளவரசனிடம் சென்றாள் ழான். அவனும் அன்புடன் வரவேற்றான்.

Joan of Arc9.jpg

“பிரெஞ்சுப் படைத் தலைமை ஏற்றுப் பெருவெற்றியைக் கொணர்ந்தமைக்கு என் வாழ்த்துகள்” என்றான் இளவரசன்.  “ஐயனே! இறைவன் எனக்கிட்ட கட்டளைகளைப் பெரும்பகுதி முடித்து விட்டேன். ரீம்சு திருக்கோவிலில் தங்கள் முடிசூட்டப்பட வேண்டியது ஒன்று மட்டுமே கடனாய் உள்ளது” என்றாள் ழான். இளவரசன் முகத்தில் புன்னகை அரும்பியதேயன்றிப் பதிலேதும் இல்லை. இந்த வேளையில் இளவரசன் அருகிலிருந்த தலைமைக் குருவானவர், "அரசனுக்கு முடிசூட்டுமாறு தெய்வக் குரலொலி உனக்கு அறிவித்ததா?" என்று கேட்டார்.

அக்குரலில் இருந்த கேலியும், மன்னனின் மௌனப் புன்னகையும் ழானைத் துணுக்குற வைத்தன. ழான் மதகுருவைத் தவிர்த்து மன்னனை ஏறிட்டு ஆழமாகப் பார்த்தாள். அவனும் வாய்திறந்தான். “நீ இச்செய்தியைப் பலர் முன்னிலையில் சொல்ல முடியுமா?” மன்னனின் இந்தக் கேள்வியால் துவண்டு போனாள் ழான். "வெற்றிக் கனிகளைக் காணிக்கை ஆக்கினால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் அதைக் கொணர்ந்தவள் ஒரு பெண் என்பதால் கனிகளும் கசக்குமோ!"  என்று மனதில் ஓடிய ஆதங்கத்தை அடக்கிக் கொண்ட ழான்,  “சொல்ல முடியும்” என்று உறுதிப்படச் சொன்னாள்.

யாரும் பேசாமல் இறுக்கமான அமைதி அங்கே சிறிதுநேரம் நிலவியது. அந்த அமைதியை ழானே உடைத்தாள். “ஐயனே! நீர் மன்னராவது தேவன் கட்டளை வழி என் விருப்பம். என் ஆயுள் நீண்டதல்ல! அதற்குள் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் விறைப்புடன் தன் இருப்பிடம் திரும்பினாள் ழான். மன்னனின் மந்திராலோசனை கூடியது. ழானின் வெற்றியினால் பொறாமை கொண்டிருந்த சில படைத்தலைவர்களும், மதகுருமார்களும் இளவரசனிடம் ழானின் வேண்டுகோளை ஏற்க வேண்டாமென்று மன்றாடி நின்றனர். ஆனால் மக்களின் பேராதரவும், படை வீரர்களின் மதிப்பும் கொண்டிருந்த ழானின் வார்த்தைகளை அறவே ஒதுக்கிவிட முடியவில்லை இளவரசனால். இறுதியில் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளத் தீர்மானித்தான்.

ரீம்ஸ் கோயிலில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மன்னனாக முடி சூடுதலை இதுவரை தள்ளிப் போட்டு வந்த மதகுருவே இளவரசனுக்கு முடிசூட்டி மன்னனாக அறிவித்தார். மன்னனுக்கு அருகில் மகிழ்வோடும், தன் கொடியோடும் ழான் நின்றிருந்தாள். முதல் வாழ்த்தையும் ழானே தெரிவித்தாள். மன்னர் முன் மண்டியிட்டு, “எல்லாம் வல்ல இறைவனின் திருவுளக் குறிப்பு இன்று நிறைவேறியது! அரசர் அமைதியுள்ளவராய் வாழ்க!” என்று ழான் வாழ்த்தினாள். அதனைக் கண்டிருந்த மக்கள் ஆனந்தக் கண்ணீரோடு வாழ்த்தொலியை முழங்கினர். ஆரவாரம் அடங்கியபின் மன்னன், “ழான்! நீ குற்றமற்றவள் என்பதை நானறிவேன். தெய்வமொழியும், வெற்றியும், திருவும் ஒருங்கமைந்த மங்கை நீ! ஆனால் அரசியல் நீ அறியாதது. அதைத் தெரிந்து கொள்வதை விடுத்து நீ உன் சொந்த ஊருக்குச் செல்லலாம். உன் வெற்றிக்குப் பரிசில் தர விரும்புகிறேன்.  கேட்பாயாக!” என்றான்.

தன் பணி தொடர்வதை மன்னன் விரும்பவில்லை என்று ழான் அறிந்து கொண்டாள். மன்னனைச் சுற்றியுள்ள மந்திராலோசனைக் கூட்டமே அதற்குக் காரணம் என்பதையும் புரிந்து கொண்டாள். தான், தன்னை முன்னிறுத்தாமல் தெய்வ வாக்கை முன்னிறுத்தியும், தெய்வத்தின் பிரதிநிதிகளாய்க் காட்டிக் கொள்ளும் மதகுருமார்கள், தன்னைக் கடவுள் பெயராலேயே தூக்கியெறிய  முற்படுவதையும் அறிந்து கொண்டாள். இனியும் மன்னனின் அங்கீகாரத்துக்காகப் போராடிக் கொண்டிருப்பதைவிடச் சொந்த ஊர் திரும்புவதே மேல் என்ற நினைத்தாள் ழான். மக்கள் தன் மீது கொண்டிருந்த அன்பும், நம்பிக்கையுமே தனக்குப் போதும் என்று முடிவுக்கு வந்த ழான், தன் சொந்த மண்ணிற்காவது ஒரு சலுகை பெற்றுத் தருவது தன் கடமை என்றெண்ணி, “தான் பிறந்த சிற்றூர் ஆகிய டாம்ரிமியில் வரி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று கேட்டாள். மன்னர் அறிவித்தார். "அவ்வாறே ஆகட்டும்”. 

“ஐயனே! என் வேண்டுகோள் மற்றொன்றையும் தாங்கள் நிறைவேற்றித் தரவேண்டும்” 
“நீ கேட்பது அளிக்கப்படும். கேட்பாயாக!”
“ஐயனே! நீங்கள் இங்கிருந்து படையோடு புறப்பட்டு பாரீஸ் நகரை அடையும்வரை நானும் உங்களுடன் வர அனுமதிக்கவேண்டும். பாரீஸ் கோட்டையில் நின்று நீங்கள் மக்களுக்கு உரையாற்றுவதை அருகிலிருந்து பார்த்துவிட்டு அத்துடன் நான் என் சொந்த ஊருக்குச் செல்வதற்கும் உத்தரவு தரவேண்டும்”
“நன்று ழான்! பார்கண்டி மன்னன், பாரிஸ் நகரை இன்னும் இரண்டு கிழமைக்குள் நம்மிடம் ஒப்படைக்கத் தூது அனுப்பியிருக்கிறான். ஆகவே நாம் ஒரு கிழமை காலந் தாழ்த்து புறப்பட்டால் பாரீசை அடைவது சரியாக இருக்கும். பாரீசுக்கு நீ என்னோடு வரலாம்!” “மிக்க நன்றி ஐயனே!” ழான் மன்னனிடம் இருந்து விடைபெற்று தன் இருப்பிடம் வந்தாள். 

அவள் மனம் நிறைந்திருந்தது. மன்னனைப் பாரிஸ் நகர் சேர்த்துவிட்டால் தன் பணி பூரணமடைந்துவிடும். பின் தான் கிராமத்திற்குச் சென்று வயல் வெளிகளில், ஓக் மரக் காடுகளில், மரங்களோடு சேர்ந்து விண்ணை அளாவி, நட்சத்திரங்களோடு  பேசியும், சண்டையும் போட்டுக் கொள்ளலாம். தனக்காகக் காத்திருக்கும் ஆடு, மாடுக் கூட்டங்களும், வண்ணத்துப் பூச்சிகளும், பறவைகளும், அவற்றின் அழைப்புகளும், ஆற்றின் சலன ஒலிகளும், தேவாலய மணி ஓசையும்.....  அப்பப்பா! நினைத்தாலே புல்லரித்தன ழானுக்கு. போர்க் கருவிகள் ஓசையும், புலம்பல்களும், அழுகைகளும் இனி இல்லை! இந்த நினைவே சுகமாயிருந்தது ழானுக்கு!

ஆனால் ழான் ஒன்று நினைக்க தேவன் வேறொன்று நினைத்தானோ என்னவோ, நடப்பவையெல்லாம் ழானுக்கு எதிராக மாறின. இரண்டு கிழமைகளுக்குள் பாரீசு நகரை ஒப்படைக்கச் சம்மதித்த பார்கண்டி மன்னன் மேலும் காலம் தாழ்த்தினான். இங்கிலாந்து மன்னர் பொறுப்பில் இருந்த பெட்போர்ட் பாரீசுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தான். வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கும், எப்போதும் ஒரு துரோகி இருப்பதைப்போல் பிரான்சு மன்னன் சார்லசால் பாரீசு நகருக்கு நியமிக்கப்பட்ட பார்கண்டி மன்னன், இங்கிலாந்து படையோடு சேர்ந்து கொண்டு பாரீசை நோக்கி வரும் மன்னன் சார்லசையும், படைத்தலைவி ழானையும்  வீழ்த்தத் திட்டமிட்டிருப்பதையும், அதற்காக  இங்கிலாந்திலிருந்து பெரும்படையைத் திரட்டிக் கொண்டு பெட்போர்டு வந்து கொண்டிருப்பதையும், அதனாலேயே பாரீசை ஒப்படைப்பதில் பார்கண்டி மன்னன் தாமதப் படுத்திவருவதையும் ழான் அறிந்தாள். ஆனந்தமடைந்தாள்! போர் வெறி அல்ல ழானுக்கு! நயவஞ்சக நரிகளைப் போரில் வீழ்த்தி நல்லாட்சி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக கையில் வாள் ஏந்தியவள் தான் ழான்! அது தேவன் அருள் என்பது, ழானே தெரிவித்து, நாடறிந்த செய்தியாக இருந்தது. ஆனால் நயவஞ்சகம் என்பது எதிரிப்படைகளில் மட்டுமல்ல, தன் பக்கத்திலும் உண்டென்பதை அறிந்தபோது, அதையும் மன்னனே கண்டு கொள்ளாதபோது அது என்ன வகையான நியாயம் என்பதை ழான் அறியாதவளாய் இருந்தாள். இதைத்தான் அரசியல் என்று மன்னர் குறிப்பிட்டு, அதை அறியாதவளாய்த் தன்னை மதிப்பிட்டதையும் ழான் இப்போது எண்ணிப்பார்த்தாள். எனவே தான் அரசியலை அறிகிறோமோ இல்லையோ, எதையும் நேருக்கு நேர் சந்தித்து விடுவதென்று தனக்குத் தெரிந்த ஒரே பாதையில் செல்லத் துணிந்தாள் ழான்!

Joan of Arc7.jpg

Joan of Arc4.jpg

மன்னனுக்கு அந்தத் துணிவில்லை, அவர் அரசியல் அறிந்தவர். எனவே பாரிசை நோக்கிப் புறப்பட்ட மன்னர் சார்லசின் பாதையும், படைத் தலைவி ழானின் பாதையும் வேறு வேறாய் அமைந்தன. ழான், பாரீசை வென்றெடுக்கத் தன் படையுடன் பாரிசு நோக்கிச் செல்ல, மன்னனோ அதைவிடப் பெரும்படையுடன் லாயர் நகர் சென்று ஓய்வெடுப்பதிலும், உல்லாசம் காண்பதிலும் உற்சாகமாய் இருந்தான். ழானின் வயது பதினெட்டு. அரசியல் அறியாதவள். நேர்மையும், துணிவுமே அவளது பலம். இங்கிலாந்தின் பெரும்படையைப் பாரீசில் எதிர்க்கத் துணிந்தாள். இது பைத்தியக்காரத்தனம் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் பாரீசு நகர்ப் போரில், “பாரீசை இழந்தோம்” என்று ஆங்கிலேயர் கூக்குரலிடும் வரை. செய்தி கேட்ட பிரான்சு மன்னனே ஆடிப்போனான். ஆங்கிலேயரோ தங்கள் அழிவுக்குக் காரணமான ழானை சைத்தானாக உருமாற்றினார்கள்.

பாரீஸ் யுத்தம் மன்னரின் அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறி ழானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மன்னன் முன் மதகுருமார்களால் தொகுக்கப்பட்டன. இதனை ஏற்ற மன்னன் படைகளைத் திரும்பப்பெற்று ழானைத் தனிமையாக்கினான். இப்போது ழானுக்கு எதிரிகள் ஆங்கிலேயர் மட்டுமல்லர். பிரான்சு மன்னனுக்கு எதிராகச் சதி செய்தவர்கள் என்று தன் வாள் முனையில் வைத்து ழான் யார் யாரைச் சிறையில் தள்ளினாளோ, அவர்கள் இப்போது குற்றம் நிரூபிக்கப் படாதவர்களாக வெளியில் உலவினர். அவர்களில் மதகுருக்களும் இருந்தனர்.  ழானுக்கு எதிரான பிரெஞ்சியர்களும், ஆங்கிலேயர் சொன்ன சூனியக்காரி பட்டத்தினை ழானுக்குச் சூட்டி, அதைப் பரப்புவதில் ஆனந்தமடைந்தனர். ஒரு பக்கம் தீரமிக்க படைத்தலைவி என்று ழானுக்குப் புகழாரம். இன்னொரு பக்கம் சூனியக்காரி என்ற பட்டம். 

Joan of Arc10.jpg

ழான் தனிமைப் படுத்தப்பட்ட இச்சூழ்நிலையில் அவளைக் காட்டிக் கொடுப்பது எளிமையாகப் போய்விட்டது எதிரிகளுக்கு. காட்டிக் கொடுத்தது மட்டுமல்ல; அதற்காகக் கையூட்டும் பெற்றுக் கொண்டு தன்னை ஆங்கிலேயரிடம் அடிமையாக விற்றுவிட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினாள் ழான். ஓர் ஆண்மகன் இப்படி வீரத்தை வெளிப்படுத்தினாலும் கூட, புகழின் உச்சியில், அவனும் சூழ்ச்சியினால் வீழ்த்தப்படுவான். வீரமும், வெற்றியும் கைவசமானால் மட்டும் போதாது. சூழ்ச்சியில் வல்ல நரிகளையும் புறங்காணும் விவேகம் வேண்டும். அதுதான் அரசியல். அது தன்னிடம் சிறிதும் இல்லை. போதாக் குறைக்குப் பெண்ணல்லவா? ஆண்டாண்டுக் காலமாக அடிமை இனமல்லவா? மதங்களும் விரட்டிடும் பிறவியல்லவா? வெற்றியைக் காணிக்கை ஆக்கிக் கடவுள் பெயரால் முடிசூட்டி வைத்தும் மன்னன் மனமிளகவில்லை. தேடாதபோதெல்லாம் வந்த தேவனும் அவன் குரலும் தேடியும் கிடைக்கவில்லை. 

Joan of Arc14.jpg

அடிமைக்குத் தீர்ப்பெழுதும் நாள் வந்தது. இந்தத் தீர்ப்பை எதிரிகள் எழுதுவதைவிடத் துரோகிகள் எழுதினால் சுவைப்பட இருக்குமென்று ஆங்கிலேயர் நினைத்துப் பாரீசின் நீதி சபையில் பிரெஞ்சு மதகுருமார்களின் முடிவுக்கே விட்டுவிட்டனர். முன்பு ழான் ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றிய போது இராஜத் துரோகக் குற்றம் இழைத்ததாக தன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குருவானவர்தாம் இங்கே பாரீசு நீதிசபையின் பரிபாலனர் என்று  அறிய வந்தபோது ழானுக்கு  எல்லாமே விளங்கிவிட்டது. தன்னைத் தேவனும் கைவிட்டு விட்டான் என்பதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியவளாக இருந்தாள் ழான். இனி என்னதான் செய்ய முடியும்? வருவதை எதிர்கொள்ள வேண்டியதுதான்.

ஓர் அடிமை ஆணாக இருந்தால் எத்தகைய சித்திரவதை! அதே அடிமை, பெண்ணாக இருந்தால் எத்தகைய சீரழிப்பு!  இரண்டும்  கேள்விப் பட்டவளாக  ழான் இருந்தாலும்  சூனியக்காரியைத் தொடக்கூட எல்லோரும் பயந்தனர். தனக்குப் பொருத்தமில்லாத ஒரு பட்டம் இப்போது தன் கண்ணியத்தைக் காப்பது கண்டு காய்ந்த உதட்டிலும் ஒரு மென்னகை அரும்பியது ழானுக்கு.

தீர்ப்பு நாளில் மதகுருமார்கள் கேள்விகள் கேட்டே அவளை அயர வைத்தனர். எல்லாவற்றிற்கும் தேவன் கட்டளை என்பதே ழானின் பதிலானது. “எங்கே! இப்போது கட்டளையிடச் சொல்” என்றார்கள். அதை மதகுருமார்களே வேண்டினாலும், தேவன் வரமாட்டான் என்ற நினைப்பு ழானுக்கு இலேசான சிரிப்பை வரவழைத்தது. "என்ன ஆணவம் இவளுக்கு. தேவன் பேரைச் சொல்லித் தந்திரமாகத் தப்பிக்கப் பார்க்கிறாள். தேவன் சொன்னதாக இவள் மன்னனிடம் பொய் கூறி அவரை மயங்க வைத்து விட்டாள். இவள் ஆணுடை தரித்ததும், படைத்தலைமை ஏற்றதும், போர்க்களம் சென்றதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். போரில் இவள் கண்ட வெற்றியெல்லாம் இவளது மந்திர வித்தையே! ஆகவே இவள் சூனியக்காரி என்பதில் சந்தேகமில்லை” என்று கூறிய நீதிச்சபையின் தலைமை மதகுரு,  “ழான்! இதை ஒப்புக் கொள்கிறாயா?” என்றார்.

சபையில் பேரமைதி நிலவியது. ழான் அனைவரையும் ஏறிட்டாள். “இல்லை” என்பதாகத் தலையசைத்து விட்டு மெல்லச் சொன்னாள்.  “என் செயல்கள் தேவனின் கட்டளை. தேவன் என் உணர்வானவன். என்னை உள்ளிருந்து இயக்கியவன். தேவனின் சமூகமே என் சமூகம்” என்றாள். அவ்வளவுதான். பேராரவாரம் கிளம்பியது. இவள் தன்னை தேவனுக்கு நிகராகப் பேசினாள். இவளைத் தேவனது சமூகம் என்று கூறிக் கொள்கிறாள். இவளுக்கு மிகப் பெரும் தண்டனை கொடுங்கள் என்று சிலரும், பலருமாகக் குரல் கொடுக்க, வெற்றிப் புன்னகையுடன் தன் துரோக நட்புகளை நோக்கினார் தலைமைக்குரு.

“மேற்கூறிய குற்றங்களுக்காக ழான் உயிரோடு கொளுத்தப்படுவாள்” தீர்ப்பை முடித்தார் தலைமைக் குரு. பெரும்பாலான மதங்களில் ‘தீர்ப்பு நாள்’ என்று குறிப்பிடப்படுகிறது. அவையெல்லாம் மனித இனம் இவ்வுலகில் நன்மையைச் செய்தால் அவ்வுலகில் சுகம் பெறும்  என்றே சொல்கின்றன. கடவுள்களுக்கும் தீர்ப்பு எழுதப்பட்ட கதைகள் உண்டு. ஆனால் எந்தக் கடவுளும் தீர்ப்பு  வழங்கியதாகத் தெரியவில்லை. ழானும் அப்படித்தான் நம்பினாள். அவளுக்கு விதிக்கப்பட்டது கடவுளின் தீர்ப்பல்ல என்று உறுதியாக நம்பினாள். ஆனால் கடவுளின் பேரால் வந்த தீர்ப்பாயிற்றே! சிரமேல் வைத்து நிறைவேற்ற வேண்டுமல்லவா?

Joan of Arc3.jpg

ழான் ஒரு பெரிய மரக்கட்டையின் அடியில் கட்டப்பட்டிருந்தாள். அந்தப் பட்டமரம் ஊருக்கு மத்தியில் ஒரு மேடான பகுதியில் நாட்டப்பட்டிருந்தது. அவளைச்சுற்றிலும் மரக்கட்டைகளைக் குவித்துக் கொண்டிருந்தனர் மதகுருமார்களின் ஊழியர்கள். சுற்றிலும் மக்கள் குவிந்து கொண்டிருந்தனர். ‘பிரான்சைக் காப்பாற்ற ஓக் மரக் காட்டிலிருந்து வந்த தேவதை’ என்று ஒரு சிலர் கைகுவித்துச் சொன்னார்கள். ‘மாய மந்திரம் நிறைந்த சூனியக்காரி’ என்று ஒரு சிலர் கைகாட்டிக் கூவினர். தீப்பந்தங்கள் நெருங்கி வந்தன. “இனி எதுவும் நிகழப் போவதில்லை. மக்களால் ஒன்றும் செய்ய இயலாது. மன்னனும், தேவனும் செய்யமாட்டார்கள். தேவனே மூன்று நாட்களாகச் சிலுவையில் தொங்கினாரே! நினைவு வந்த போதெல்லாம் ஒவ்வொரு முத்து உதிர்த்தாரே! ‘அறியாமல் இவர்கள் செய்யும் பிழையை மன்னிப்பீராக!” என்று ஒருமுறை கூறினாரே! அவர் என்மீது வைத்த கருணையினால்தான் நான் எதிரிகளை வென்றேன் என்று கூறினேனே! பெண்ணாக இருந்தாலும், கண்ணானது நாடு என்று கருதினேனே! என் வெற்றியை தேவன் வெற்றியாக ஆக்கினேனே! வெற்றியை மட்டும் எடுத்துக்கொண்டு என்னையும் தேவனையும் விட்டு விட்டார்களே! எதிரிகளை வெல்வதில் ஆண் என்ன பெண் என்ன! அரசியல் பிழையாத போதும் ஆண்டவனைத் தவிர்த்து வேறேதும் விழையாத போதும் பெண்ணானது ஒன்றே பிழையோ!” “இல்லை! நீ ஒரு தேவதையானாய்!” தேகம் எங்கும் பரவிய தீக்கங்குகளின் வெம்மையிலும், ‘இது யார் குரல்?’ என்று நினைக்கும் போதில்  ழானின் மண்டை ஓடு தெறித்தது.  ‘ஆ’ என்று மக்களிடம் இருந்து பெருங்குரல் எழும்பியது.

பிரான்சைக் காக்க வந்த தேவதையாக ழான்தார்க் இன்று பிரான்சு நாடெங்கிலும் தேவாலயங்களின் முன்வைத்து வணங்கப்படுகிறாள்! (ழான்தார்க் - ழான் - தெ - ஆர்க் - 1412 -1431 பிரான்சைக் காக்கப் போரிட்டு, ஆங்கிலேயரை வென்ற நிலையில், தன் பத்தொன்பதாவது வயதில் சூனியக்காரி என்று இகழப்பட்டு, நாற்சந்தியில் உயிரோடு தீயிடப்பட்ட பிரான்சு நாட்டு மங்கை. நாட்டைக் காக்க வந்த தேவதையாக இன்று பிரான்சில்  தேவாலயங்களுக்கு முன்பாக சிலையமைத்துப் புனிதராகப் போற்றப்படுபவர். 


குறிப்பு: 
புதுச்சேரி பிரெஞ்சிந்தியாவாக இருந்தபோது இங்குள்ள தேவாலயம் முன்பும் ழாந்தார்க் சிலை கொடியுடன் நிறுவப்பட்டது. மறைமலை அடிகளாரின் மகள் திருமதி தி. நீலாம்பிகையம்மையார், 1933-ம் ஆண்டு எழுதிய, கழகம் பதிப்பித்த, ‘ஐரோப்பிய அருண்மாதர் இருவர்’ என்ற நூலில் ழானின் வரலாற்றுக் குறிப்புகளைத் தரவாகக் கொண்டு இந்நெடுங்கதை இயற்றப்பட்டது.

படங்கள் உதவி - முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. 

”உலக வரலாற்றில், ஆணுடை தரித்துப்  போர் புரிந்தமைக்காக உயிருடன் எரிக்கப்பட்ட இளநங்கை, பிரான்சின் ழான்தார்க்”

முனைவர் சிவ இளங்கோ
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்டா நகர், 
புதுச்சேரி - 605 011
கைப்பேசி: 99940 78907




இறக்கும் எனது மனசாட்சி

-- கி.ரமேஷ்

இறக்கும் எனது மனசாட்சி

அது கொஞ்சம் செத்துக் கொண்டிருக்கிறது:



இரவின் இருளில் சிலநேரம்
என் மனசாட்சியைத்
திரும்பிப் பார்க்கிறேன்
அதற்கு இன்னும் மூச்சிருக்கிறதா என்று.
ஏனெனில் தினமும்
அது மெதுவாய் செத்துக் கொண்டிருக்கிறது.

நவநாகரீகமான ஓரிடத்தில்
ஒருவேளை உணவுக்கு
நான் பணம் கொடுக்கையில்
அங்கு கதவு திறந்துவிடும்
காவலாளியின்
ஒரு மாத ஊதியமாக
அது இருக்கலாம்
அச்சிந்தனையை உடனே விலக்குகையில்

அது கொஞ்சம் சாகிறது.

காய்கறிக் கடையில்
காய்களை வாங்குகையில்
பள்ளி செல்ல வேண்டிய
கடைக்காரரின் பொடியன்
புன்சிரிப்புடன் நிறுத்துப் போடுகிறான்
நான் திரும்பிக் கொள்கிறேன்

அது கொஞ்சம் சாகிறது

வடிவமைத்த உடையை
நான் அணிகையில்
ஊதி வெடிக்கும்
அதன் விலை.
சாலைமுனை சந்திப்பில்
மானத்தை மறைக்கவும் முடியாமல்
கந்தலாடை அணிந்த 
பெண்ணைப் பார்க்கையில்
உடனே கண்ணாடியை ஏற்றி விடுகிறேன்.

அது கொஞ்சம் சாகிறது.

என் குழந்தைகளுக்கு
விலையுயர்ந்த பரிசு
வாங்கித் திரும்புகையில்
வெற்று வயிறுடனும்
கண்களில் பசியுடனும்
அரைகுறை ஆடையணிந்து
சிகப்பு விளக்கு நிறுத்தத்தில்
சிறுவர்கள்
பொம்மை விற்பதைப் பார்க்கிறேன்
கொஞ்சம் பொம்மை வாங்கி
மனசாட்சியை
அமைதிப்படுத்த முயல்கிறேன்
எனினும்

அது கொஞ்சம் சாகிறது.

பள்ளி செல்ல வேண்டிய
மகளை நிறுத்தி
என் வேலைக்காரி 
வேலைக்கு அனுப்பும்போது
அவளைத் திருப்பி அனுப்ப வேண்டுமென
எனக்குத் தெரியும்
பாத்திரங்கள் நிறைந்து 
அசுத்தத் தட்டுக்களுடன்
கிடக்கும் தொட்டியைப்
பார்க்கையில்
சில நாட்கள்தானே என்று
சமாதானப்படுத்திக் கொள்கிறேன்

அது கொஞ்சம் சாகிறது

ஒரு குழந்தையின் வன்புணர்வு
அல்லது கொலையைக் கேட்கையில்
சோகமாகிப் போனாலும்
அது என் குழந்தையில்லையென
அமைதி கொள்கிறேன்
என் உருவைக் கண்ணாடியில்
பார்க்க முடியவில்லை.

அது கொஞ்சம் சாகிறது.

சாதி மத இன வேறுபாட்டில்
மக்கள் மோதிக் கொள்கையில்
காயப்பட்டுப் போகிறேன்
ஆதரவற்றுப் பார்க்கிறேன்
என் நாடு நாசமாகிறதென
எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்
ஊழல் அரசியல்வாதிகளை
குற்றம் சொல்கிறேன்.
என் பொறுப்புக்களிலிருந்து
என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

அது கொஞ்சம் சாகிறது.

என் நகரம்
மூச்சுத் திணறும்போது
புகைமண்டிய நகரத்தில்
மூச்சுவிடுவதே ஆபத்தானபோது
நான் என் காரில்
தினம் பணிக்குச் செல்கிறேன்
ஒரு காரால் என்ன
மாறிவிடும் என
நினைத்துக் கொள்கிறேன்.

அது கொஞ்சம் சாகிறது.

இரவின் இருளில்
என் மனசாட்சியைப்
பார்க்கும்போது
அது இன்னும் உயிருடன் இருக்கிறது
நான் ஆச்சரியமடைகிறேன்.
ஏனெனில் தினம் தினம் நான்
அதை என் கையாலேயே
கொன்று புதைக்கிறேன்.


ஆங்கிலத்தில்:  ரஷ்மி திரிவேதி 
தமிழில்: கி.ரமேஷ்






கரந்தைப் புலவர் கல்லூரி



-- கரந்தை ஜெயக்குமார் 


திருக்குறளும் கம்பராமாயணமும் மதுரையில் ஒருவரிடத்தும் இல்லாத நிலை கண்டு கலங்கிய இராமநாதபுரத்து அரசர், வள்ளல் பாண்டித்துரைத் தேவரால், 1901 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது மதுரைத் தமிழ்ச் சங்கமாகும்.  மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அடியொற்றி, 1911 ஆம் ஆண்டு கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்துள்ள, கந்தப்பச்  செட்டியார் மடத்தில் தோற்றம் பெற்றது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
     
 ∙ 1913 ஆம் ஆண்டிலேயே, நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1919 ஆம் ஆண்டிலேயே, தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி எனத் தீர்மானம் இயற்றியது, கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1921 ஆம் ஆண்டிலேயே, தமிழுக்குத் தேவை, தனியே ஒரு, தமிழ்ப் பல்கலைக் கழகம் எனத் தீர்மானம் நிறைவேற்றியதும் போராடியதும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1923 ஆம் ஆண்டிலேயே, ஆங்கிலேய அரசின், ஐ.சி.எஸ்., பட்டத்திற்குத் தமிழையும் ஒரு பாடமாக ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1937 ஆம் ஆண்டில், பள்ளிகளில் நுழைந்த, கட்டாய இந்தியை எதிர்த்து, முதன் முதலில் தீர்மானம் இயற்றியதும், களத்தில் இறங்கிப் போராடியதும், கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

தமிழும், வடமொழியும் கலந்து பேசும் மணிப்பிரவாள நடையைத் தகர்த்து, தனித் தமிழ் நடையாம், கரந்தை நடையை உருவாக்கியதும், நடைமுறைப் படுத்தியதும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். திரு, திருவாளர், செல்வன், செல்வி, தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள், திருமண அழைப்பிதழ் முதலான எண்ணற்ற தனித் தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.  இவ்வாறு தன் எண்ணற்ற தமிழ்ப் பணிகளால், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும்,  தனித் தமிழின் செழிப்பிற்காகவும், அரும் பெரும் பணிகளை முன்னெடுத்து, வெற்றி வாகை சூடிய போதிலும், நிற்க ஓர் இடம் இன்றி, வாடகை கட்டடத்திலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் காலத்தைக் கழித்தது.
    
இடம் வாங்குதல்:
கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, தோன்றிய நாள் தொடங்கி, நான்கு ஆண்டுகள் வரை, கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில் இயங்கியது. விழாக் காலங்களிலும், திருமண நாட்களிலும், கந்தப்பச் செட்டியார் சத்திரம் வாடகைக்கு விடப்படும்.  இதுபோன்ற நாட்களில், சங்கப் பணிகளைச் செய்வது இயலாத காரியம் ஆகிவிடும்.  பின்னர், 1914 ஆம் ஆண்டில், உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியின் பயனாக, கரந்தை கோவிந்தராஜுலு நாயுடு மற்றும் சுப்பராயலு நாயுடு ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, தர்மாபுரம் உதவி ஆட்சியாளர், வேங்கடசாமி நாயுடு அவர்கள், கரந்தைக் கடைத் தெருவில் அமைந்திருந்த, காலஞ்சென்ற வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமான சத்திரத்தை, ஆறு ஆண்டுகள், வாடகை ஏதுமின்றி, பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினார்.  இருப்பினும் சங்கத்திற்கு என்று சொந்தமான இடம் இல்லாத நிலை, உமாமகேசுவரனாரை வருத்தியது.

அமிழ்தினும் இனிய தமிழ் அன்னைக்கு, வடவேங்கடம் முதல் தென்குமரி இடைப்பட்ட இடங்கள் யாவும் உரியனவாக இருந்தும், கரந்தையம் பதியில் தமிழன்னைக்கு இல்லம் எடுக்க, ஓர் அடி நிலம் கூட சொந்தமாய் இல்லாத நிலையினை எண்ணிய உமாமகேசுவரனார் பெருங் கவலை அடைந்தார். உமாமகேசுவரனாரின் மனக்குறையினைப் போக்க எண்ணிய, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், சங்கத்திற்கு இடம் வாங்குவதற்காக ஒரு பெருந் தொகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்.  சங்கத்திற்கு இடம் வாங்கும் பொருட்டு, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1923ஆம் ஆண்டின் மத்தியில், உமாமகேசுவரனாரை அழைத்துக் கொண்டு, தஞ்சையில் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். இறுதியில் கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, ஒரு பெரும் இடத்தினை வாங்குவதென்று முடிவு செய்தனர்.  அவ்விடம் கரந்தை பாவா மடத்திற்குச் சொந்தமானதாகும். 

பாவா மடத்தினரிடமிருந்து, இவ்விடத்தினை நேரடியாக வாங்குவதற்கு உரிய பொருளில்லாத காரணத்தாலும், மேலும் மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்களையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார் உமாமகேசுவரனார்.  மாபெரும் தமிழ்ப் பணியாற்றிவரும் கரந்தைத் தமிழ்ச் சங்கம், காலூன்ற இடமின்றியும், இடம் வாங்கப் பொருளின்றியும் தவிக்கின்றது. எனவே ஆட்சியாளர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு இடம் வழங்கி உதவிட வேண்டும் என்று, அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  வேண்டுகோள் பலித்தது. 

சென்னை மாகாண சட்டத்துறை செயலாளர் திவான் பகதூர் ராமச்சந்திர ராவ் அவர்களின் உத்தரவிற்கு இணங்க, கரந்தையில் வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, பாவா மடத்திற்குச் சொந்தமான இடம், 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி அரசால் கையகப்படுத்தப்பட்டது.  இவ்விடத்தினை சங்கத்திற்கு வாங்கும் பொருட்டு வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், சங்கத்திற்கு ரூ.1000த்தினை அன்பளிப்பாக வழங்கினார்.  மேலும் அன்றைய தினம் வரை சங்கத்தால் சேமிக்கப்பட்ட தொகை முழுவதும், இந்நிதியுடன் சேர்க்கப்பட்டு, அரசாங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.  அன்றைய ஆங்கிலேய அரசினர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட தொகை ரூ.1,807 மற்றும் 5 அணா மட்டுமே.   அவ்விடத்திற்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையினை  அரசாங்கமே, பாவா மடத்திற்கு வழங்கியது.  இவ்வாறாக, பெத்தாச்சி செட்டியார் அவர்களின் வள்ளல் தன்மையாலும், பல அறிஞர்களின் உதவியுடனும், ஆங்கிலேய அரசாங்கத்தின் மாபெரும் உதவியோடும், ஆதரவோடும், 44,662 சதுர அடி நிலமானது, 1924ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமானது.

1931 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 14 ஆம் நாள், கரந்தை வடவாற்றிற்குத் தெற்கேயும், பழைய திருவையாறு சாலைக்கு கிழக்கேயும் உள்ள, 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய வெற்றிடத்தை ரு.3,400க்கு உமாமகேசுவரனார் விலைக்கு வாங்கினார்.   இவ்விடத்தின் ஒரு பகுதியை, மாணவர்களுக்கு உரிய விளையாட்டிடமாக மாற்றினார்.மீதம் இருந்த, பெரும் பகுதியைத் தோட்டமாக உருவாக்கினார்.  திக்கற்ற மாணவர் இல்லத்தில், தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான காய், கனிகள் இவ்விடத்தே பயிர் செய்யப்பட்டன.

கரந்தைப் புலவர் கல்லூரி:
தமிழ் வளர்ச்சிப் பணிகளையும், கல்வி வளர்ச்சிப் பணிகளையும் தனது இரு கண்களெனக் கருதிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 1916 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியானது தொடங்கப் பெற்றது. தமிழோடு கைத் தொழில்களையும் கற்றுக் கொடுக்கும்படியான கலாசாலைகளை ஏற்படுத்துதலே பயன் விளைவிக்கும் என்று தமிழவேள் உமாமகேசுவரனார் எண்ணினார்.  இக்கல்லூரியில் பயின்று வெளிவரும் மாணவர்கள், அரசு வேலை வாய்ப்புகளை மட்டுமே நம்பியிராமல், சொந்தமாகத் தொழில் செய்து நாட்டை வளமாக்க வேண்டும் என்பதே உமாமகேசுவரனாரின் விருப்பமாகும்.   எனவே எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்பட்ட, இக்கல்லூரியில், நெசவு, நூல் நூற்றல், பாய் முடைதல், மரவேலைகள், நூற் கட்டு, அச்சுத் தொழில் முதலியனவும் கற்றுத் தரப்பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியில் பயின்று, மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்காக, ஒரு தனித் தமிழ்க் கல்லூரியினை நிறுவிட உமாமகேசுவரனார் விரும்பினார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற நாள் தொடங்கி, சங்கத்தை அண்டாது, அணுகாது விலகியிருந்தது செல்வம் மட்டுமே.  போதிய நிதி வசதியின்மையால், உமாமகேசுவரனாரின் கல்லூரிக் கனவானது, ஆண்டுகள் பல உருண்டோடியும் கானல் நீராகவே நீடித்தது.  சற்றும் அயராத உமாமகேசுவரனாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, 1938 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது தனித் தமிழ்க் கல்லூரி ஒன்றினை, கரந்தைப் புலவர் கல்லூரி என்னும் பெயரில் தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது.  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா, 1936 ஆம் ஆண்டே நடைபெற்றிருக்க வேண்டும்.  ஆனாலும் விழா நடத்துவதற்குரிய போதிய நிதி இல்லாத காரணத்தால், சிறுகச் சிறுகப் போதுமான பொருள் சேர்த்து, இரண்டாண்டுகள் கடந்த நிலையில் 1938 ஆம் ஆண்டுதான் கொண்டாடப் பெற்றது.

தொடங்க இருக்கும், கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றத் தகுந்தப் பெரும் புலமை படைத்த ஆசிரியர்கள் பலர், தஞ்சையில் இருந்த  போதிலும், தக்க இளைஞர் ஒருவரையே, இக்கல்லூரியில் பணியமர்த்த எண்ணினார் உமாமகேசுவரனார்.  தனது உற்ற நண்பரான, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் நாவலர் டாக்டர் ச.சோமசுந்தர பாரதியார் அவர்களை அணுகி, தங்கள் மாணவருள் தலைசிறந்த மாணவர் ஒருவரை, கரந்தைக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டினார். நாவலரும்  தன் மாணவர்களுள் தக்காரைத் தேர்வு செய்து, கரந்தைக்குச் சென்று பணியாற்ற அறிவுறுத்தி அனுப்பினார். அம்மாணவர், 1938 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் ஓர் நாள், விடியற்காலை 5.00 மணியளவில், சங்கத் தலைவர் அவர்களை, அவர்தம் இல்லத்தில் சந்தித்தார்.

உமாமகேசுவரனார் அவர்கள், தூய வெண்ணீரு துதைந்த பொன்மேனியராய், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட் பாவை உளமுருகிப் பாடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு மெய்மறந்து நின்றார். சற்று நேரத்தில், புதிய இளைஞர் ஒருவர் தன்முன் நிற்பதைக் கண்ட உமாமகேசுவரனார், முகம் மலர வரவேற்றார். அந்த இளைஞர், சோமசுந்தர பாரதியார் கொடுத்தனுப்பியக் கடிதத்தைக் கொடுத்தார். கடிதத்தினைப் படித்து மகிழ்ந்த உமாமகேசுவரனார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது, தொடங்க இருக்கும் கல்லூரிக்கு, நீங்களே ஆசிரியர். தங்களுக்கு நிறைந்த ஊதியம் கொடுக்கும் நிலையில், சங்கத்தில் பொருள் இல்லை. எனவே இயன்ற அளவு ஊதியம் கொடுப்போம். கல்லூரி வளர, வளர, உங்களுக்கும் வளர்ச்சி உண்டாகும். தற்பொழுது வெள்ளிவிழா மலரின் அச்சுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தாங்கள் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அடுத்து, தனது சிற்றன்னையை நோக்கி, இவர்கள் எப்பொழுது வந்தாலும், தாமதமின்றி உணவு படைத்து, சங்கத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்றார். இவ்வாறு, இப்புது இளைஞரையும், தன் குடும்பத்துள் ஒருவராய் தமிழவேள் இணைத்துக் கொண்டார். இந்த இளைஞர்தான்,  கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல் ஆசிரியர்.  இவர்தான்,  இலக்கிய, இலக்கண நூல்கள் பலவற்றைப் படைத்து, பின்னாளில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராய் அமர்ந்து செம்மாந்தப் பணியாற்றிய பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் .
     
கரந்தைப் புலவர் கல்லூரியின் வளர்ச்சி: 
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.  வெள்ளி விழாவின் இரண்டாம் நாளான 16.4.1938 சனிக் கிழமை காலை 8.00 மணிக்கு தமிழ்ப் பெருமன்றத்தில் கடவுள் வணக்கமும், தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பெற்ற பின் கரந்தைப் புலவர் கல்லூரியின் தொடக்க விழா நிகழ்வுகள் தொடங்கின.  விழாத் தலைவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் அவர்கள், தம் பொருளுரைகளை, அழகுமிகத் திரட்டி கல்லூரியினைத் திறந்து அருளினார்கள்.   அப்போது நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்,
             நன்மா  ணவராகும் வண்டர்  நனிபயின்று
             பன்மாண்  கலைத்தேன்  பருகுமா  -  மன்மாண்
             கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரிப்  பூங்கா
             பரந்தொளிர்ந்து  வாழியரிப்  பார்
எனப் பாடி வாழ்த்தினார்.  கல்லூரிக் கட்டிடத்தில் அலங்கரிக்கப் பெற்று வைக்கப்பெற்றிருந்த, தமிழ் நாட்டுக் கடவுள் முருகன் திருவுருவத்திற்கு வழிபாடு செய்யப் பெற்றது. 

தொடர்ந்து ஞானியாரடிகளும் மற்றவர்களும் வகுப்பறைக்குச் சென்றனர்.  நாதமுனி என்னும் பெயருடைய மாணவர் உட்பட, பத்தொன்பது மாணவர்களுடன் புதிய கல்லூரியின் முதல் வகுப்பானது தொடங்கப் பெற்றது. ஞானியார் அடிகள் அவர்கள், வித்துவான் வெள்ளைவாரணன் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, தமிழ் கற்பிக்கத் தொடங்குமாறு வேண்டினார்.  வெள்ளைவாரணன் அவர்களும், திருக்குறளின் தலைக்குறளாகிய அகர முதல என்னும் அருமைத் திருக்குறளைக் கற்பித்தார்.  அவரைத் தொடர்ந்து ஞானியாரடிகள் அவர்கள் புதிதாக தொடங்கப் பெற்றுள்ள கல்லூரியை வாழ்த்தி, அகரமுதல எனத் தொடங்கும் திருக்குறளின் பருப் பொருளும், நுண் பொருளும் இனிது விளக்கினார்.

தமிழ் வளர்ச்சிக்காகப் பெருந்தொண்டு புரிந்து வரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைக் கண்டு மகிழ்வடைந்த பலரும், கல்லூரியானது தழைத்து வளர, நன்கொடைகளை வழங்கினர்.  திருச்சிராப்பள்ளி திருவாளர் தி.ச. பொன்னுசாமி பிள்ளை என்பார், தாம் நடத்தி வருகின்ற அறக்கட்டளையின் வருவாயினை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் தரும சாசனம் எழுதி வழங்க விரும்புவதாக,  விழா மேடையிலேயே அறிவித்தார். மாணவர்களுக்கு இலவசக் கல்வி, இலவச விடுதி வசதி, இலவச உணவு வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பெற்றன.  கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியின் தலைமையாசிரியரான திரு சிவ. குப்புசாமி பிள்ளை அவர்கள், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேற்பார்வையாளர் பணியினை ஏற்று, தமிழ் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு அயராது பாடுபட்டார்.

தமிழவேள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குடந்தை பாணாதுறை உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தொண்டு செய்து வந்தவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பகுதியில் வரலாற்றுத் துறையில் பல ஆண்டுகள் தொண்டு செய்து ஓய்வு பெற்றவரும், தமிழ் நாட்டின் தலைசிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளருமாகிய திரு சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள், சனிக் கிழமைகள் தோறும், தனது சொந்தச் செலவிலேயே, கரந்தைக்கு வருகை தந்து, கல்வெட்டு பற்றிய விளக்கங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.  தமிழவேளும் தனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டாக்டர் கால்டுவெல் என்னும் மேல்நாட்டு அறிஞரால் எழுதப் பெற்ற, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் அரிய பெரிய ஆங்கில நூலை, மாணவர்களுக்கு மொழிபெயர்த்து தக்க விளக்கங்களோடு போதித்து வந்தார்.

கல்லூரி ஒன்றை நடத்துவது என்றால் போதிய பொருள் வருவாய் வேண்டுமல்லவா?  சங்கத்தை நடத்துவதற்கே போதிய பொருள் இல்லாதபோது, கல்லூரியினை நடத்துவது எவ்வாறு இயலும்?  ஆனாலும் தொடங்கிய பணியினை இடையிலேயே நிறுத்தி விடுவது இழுக்காகிவிடுமல்லவா?  எனவே மனம் தளராத உமாமகேசுவரனார் தமிழ்ப் பெருமக்களுக்குக் கீழ்க்கண்ட ஒரு வேண்டுகோளினை விடுத்தார்:
கரந்தைத் தமிழ்ச் சங்கம் இப்போது தமிழ்நாடு முற்றுமே மதிக்கத்தகும் அரும்பணியை மேற்கொண்டிருக்கிறது.  கரந்தைத் தமிழ்க் கல்லூரி, முதல் வகுப்புடன் அரும்பியிருக்கின்றது.  மேலும் நான்கு வகுப்புகள் நாளடைவில் தோன்றி முற்றுப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறன.  இதன் இன்றியமையாத அங்கங்களாகிய இசை, ஓவியம், மருத்துவம், சிற்பம் போன்ற தொழிற் கலைகளும் ஈண்டு முகிழ்த்துப் பிஞ்சு, காய் கனிகளாகி நற்பயன் நல்க வேண்டும்.  இவ்வெண்ணங்கள் சிறு அளவிலாவது உருப்பெற வேண்டுமானால் நூறு மாணவர்களுக்காவது, உண்டியும், உறையுளும் தருதற்கான மாணவர் இல்லமும், பத்து ஆசிரியர்களாகினும் பணி செய்தற்குரிய வசதிகளும் அமைக்கப்பட வேண்டும்.  ஆண்டு தோறும் ரூபாய் ஐயாயிரத்திற்குக் குறையாத வருவாய் தட்டில்லாது வந்து கொண்டே இருத்தல் வேண்டும்.  இதுபோது தொடங்கியிருக்கும் முதல் வகுப்பில் பத்தொன்பது மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். 

திருச்சி, நெல்லை, கோவை, வட தென் ஆற்காடுகள், ஆய பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர் ஒன்பதின்மர். யாழ்ப்பாணத்து மாணவர் ஒருவர் வருவாரென்று எதிர்பார்க்கப் படுகிறது. மலேயா நாட்டிலிருந்தும் விண்ணப்பம் வந்துள்ளது.  இவர்களின் பன்னிரு மாணவர்கள் சங்கத்தார் அமைத்திருக்கும் இல்லத்தே இருந்தும், ஏனையோர் வெளியே இருந்தும் கல்வி பயின்று வருகின்றனர்.   இதனை உய்த்து நோக்குவோர், இக்கல்லூரி தமிழ் நாட்டிற்கு உரியதெனவும், இதனைப் பேணி வளர்த்தல், தத்தம் கடமை எனவும் தமிழன்பர்கள் கருதுவர் என்று எண்ணுகிறோம்.  தமிழ்ப் புலமையும், தொழிற் கலையும் ஒருங்கே பயிற்றப்படும் கல்வி முறை சாலச்சிறந்த நன்முயற்சியாகும்.  இம்முயற்சி உரம் பெறுவதற்கு, இலக்கிய இலக்கண நூல்களேயன்றிக் கலை நூல்களையும் எளிய விலைக்கு வெளியிடுதல் வேண்டும்.  இத்தகைய பொறுப்புள்ள வேலைகளை மேற்கொள்ளவும், செவ்வனம் இயற்றவும் அறிவாளிகள், செல்வர்கள், அன்பர்கள் ஆகிய அனைவரின் துணையும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.

இவ்வேண்டுகோள் விரும்பியவாறு பலனளிக்கவில்லை. ஆயினும் கல்லூரி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருந்தது.   கல்லூரியானது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தபோது, மேலும் ஓர் ஆசிரியர் நியமனம் செய்யப் பட்டார்.  சங்கத்தின் புகழ்பாடும் நல்ல கவிஞராகவும், தமிழையும் தமிழ் நாட்டு அரசியலையும் அறியாது சோம்பிக் கிடந்த தமிழ் மக்களிடையே, உணர்ச்சி ஊற்றெடுக்கச் செய்யும் வகையில் சொற்பொழிவாற்றும் நாவன்மை உடையவருமாகிய, திரு கோ.வி. பெரியசாமிப் புலவர் அவர்கள் இரண்டாவது விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

பேரிடியாய் விழுந்த தடை:
1940-41 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் பின் மூன்றாமாண்டில் கல்லூரியானது காலடி எடுத்து வைப்பதற்குள், பேரிடியாய் தடை என்னும் உத்தரவு ஒன்று சென்னைப் பல்கலைக் கழகத்தால் பிறப்பிக்கப் பெற்றது. கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க முடியாது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்து விட்டார்.  காரணம். ரூபாய் ஐம்பதாயிரம் தொகையினை இணைப்புக் கட்டணமாய் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது ரூபாய் ஐம்பதாயிரம் பொறுமானமுள்ள சொத்துக்களுக்கு உரிய பத்திரங்களைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும்.  கரந்தைத் தமிழ்ச் சங்கமோ, இரண்டில் எதையுமே நிறைவேற்றும் நிலையில் இல்லை. 

கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று 1924 ஆம் ஆண்டு வாங்கப்பெற்ற 44,662 அடி நிலத்தின் மதிப்பு ரூ.1,807.   1931 ஆம் ஆண்டு வாங்கப் பெற்ற 14 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.3,400.  இரண்டையும் சேர்த்தாலும், இடைப்பட்ட காலத்தில், நிலத்தின் மதிப்பு எவ்வளவுதான் உயர்ந்திருந்தாலும், மொத்த நிலத்தின் மதிப்பும் ரூ.10,000 ஐத் தாண்டாது என்ற நிலை.   ஒரு வருடம் கல்லூரியினை நடத்துவதற்கான, ரூபாய் ஐயாயிரத்திற்கே வழி இல்லாதபோது, ரூபாய் ஐம்பதாயிரத்திற்குச் சங்கம் எங்கே போகும்? எனவே கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதோ, அங்கீகாரம் வழங்குவதோ முடியாது. கல்லூரியினை உடனே மூடுங்கள் என்று சென்னைப் பல்கலைக் கழகம் உறுதியாய் அறிவித்தது.  கரந்தைப் புலவர் கல்லூரி மூடப்பட்டது.   கல்லூரியில் பயின்ற மாணவர்கள் திசைக்கொருவராய் சென்றனர்.  அகப்பட்ட தொழிலில் அமர்ந்தனர் பலர்.  சிலர் வெள்ளத்தில் அகப்பட்டவன் துரும்பைப் பிடித்துக் கரையேறுதல் போல, தனியே கல்லூரியும், ஆசிரியரும் இல்லாவிட்டாலும், தனிமையில் பயின்று தமிழ்க் கலைகளில் அறிஞராயினர்.  சிலர் வேலையின்றித் தவித்தனர். எடுத்த செயலினை, எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் திறன் வாய்ந்த உமாமகேசுவரனார் மட்டும் உள்ளம் தளர்ந்தாரில்லை. 

தமிழ்ப் பெருமக்களை நோக்கி, கரந்தைப் புலவர் கல்லூரிக்குப் போதிய முதற்பொருள் இன்மையால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் ஒப்ப மறுக்கின்றனர்.  தமிழ் நாட்டின் எல்லைக்குள் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளின் வளர்ச்சியைக் கருதி உழைக்கும் கலைக் கூடங்கள் எத்தனை?  அவற்றிற்காகப் பணி செய்து செழுமையுடன் தருக்குற்று வாழும் கணக்கானர் எத்துணையர்?   இந்நிலையில் தமிழ் மொழி ஒதுக்கிடம் பெறுவதும், தமிழ்ப் புலவர்கள் வீணர்கட்கு எளியராய் அஞ்சி வாழ்வதும் இழிவன்றோ?  தமிழ் மக்கள் இப்புலவர் கல்லூரிக்குப் பொருளுதவி புரிந்து தம் கடனாற்றுவார்களாக என மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுத்தார்.  தஞ்சை வட்டக் கழகத் தலைவராக, செல்வாக்குடைய பதவியினையும், சிறந்த வழக்கறிஞர் என்னும் பெயரினையும் பெற்றிருந்த தமிழவேள் அவர்களால், தம்மிடம் ஆதரவு நாடிவரும் செல்வந்தர்களிடமிருந்து, எளிதில் பெரும் பொருளைத் திரட்டியிருக்க முடியும்.  ஆனாலும் அதனைச் செய்தாரில்லை.  அதற்கும் அவரே காரணத்தைக் கூறுகிறார். கேளுங்கள்:  பொய்யும் புரட்டும் உடையவர்களால் பெறும் பொருள், நம் சங்கத்திற்கு வேண்டியதில்லை.  தமிழ் வளர வேண்டும் என்ற விருப்பத்துடன் யாரேனும் ஒரு காசு கொடுத்தாலும் அதனைப் பெரும் தொகையாக ஏற்று மகிழ்வோம் என்றார்.

      சங்கநிதி  பதுமநிதி  இரண்டுந்  தந்து
           தரணியொடு  வானாளத்  தருவ  ரேனும்
      மங்குவார்  அவர்செல்வம்  மதிப்பேம்  அல்லேம்
           மாதமிழுக்  கேகாந்தர்  அல்லராகில்

     அங்கமெலாம்  குறைந்தழுகு  தொழுநோ  யராய்
           ஆவுரித்துத்  தின்றுழலும்  புலைய  ரேனும்
     தங்குபுகழ்ச்  செந்தமிழ்க்கோர்   அன்ப  ராகில்
           அவர்கண்டீர்  யாம்வணங்குங்  கடவு  ளாரே

தமிழ் மக்களிடம் இருமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை.   இப்புலவர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக் கண்டால்தான், எனது இப்பிறவி முழுமைபெறும்.   புலவர் பட்டத்துடன் வெளிவரும் மாணவனைக் கண்ட அடுத்த விநாடியே எனது உயிர் பிரியுமானால் மிகவும் மகிழ்வேன் என்று தமிழன்பர் சிலரிடம் கூறி வருந்திய உமாமகேசுவரனாருக்கு, வெள்ளி விழாவின் போது தனது உறவினரான, திருச்சி தி.ச. பொன்னுசாமி பிள்ளை அவர்கள் தனது அறக்கட்டளையின் வருவாயினை சங்கத்திற்காக எழுதி வைக்க முன்வந்தது நினைவிற்கு வரவே, திருச்சி நோக்கிப் பயணமானார்.

தி.ச.பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளை:
திருச்சி தென்னூரில் வசித்து வந்த செல்வந்தர் திருவாளர் சண்முகம் பிள்ளை அவர்களுக்கு திருமக்களாய் உதித்தோர் மூவர்.  மூத்தவர் ச. முத்துசாமி பிள்ளை, இரண்டாமவர் ச. பொன்னுசாமி பிள்ளை, மூன்றாமவர் தி.ச. பழனிசாமி பிள்ளை ஆவர். திரு தி.ச.பழனிசாமி பிள்ளை அவர்கள் வழக்கறிஞராய் பணியாற்றி பெரும் செல்வம் சேர்த்தவர். இவர் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் காலமானார்.   இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததாலும், மேலும் இவர் தனது இறுதிக் காலத்தில், உயில் எதனையும் எழுதி வைக்காததாலும், இவரது சகோதரர்களே, இவரின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்கள் ஆனார்கள்.  அவர்கள் விரும்பியிருந்தால் சொத்துக்களை இருவரும் பங்கிட்டுக் கொண்டிருக்கலாம்.   ஆனால் அவ்வாறு செய்தார்களில்லை. 

உண்மையின் உறைவிடமாகவும், பெருந்தன்மையின் இலக்கணமாகவும் விளங்கிய இவரது சகோதரர்கள் ச. முத்துசாமி பிள்ளை மற்றும் ச. பொன்னுசாமி பிள்ளை ஆகிய இருவரும் இணைந்து, 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் நாள், தங்களது தமையனாரின் சொத்துக்களை மூலதனமாக வைத்து, அவர் பெயரிலேயே,  தி.ச. பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார்கள்.  ஈஸ்வரன் கிருபையால் எங்களுக்கு வேண்டிய சொத்துக்கள் இருப்பதாலும், எங்களுடைய பிள்ளைகளும் சம்பாதிக்கத் தக்கவர்களாயிருப்பதாலும் காலஞ்சென்ற எங்கள் சகோதரர் பழனிசாமி பிள்ளை, தனக்குப் பின் தன் சொத்துக்களைத் தரும வாசக சாலையும், தரும பள்ளிக்கூடமும் Elementary Education and Industrial School, அதாவது தன்னுடைய பள்ளிக் கூடம் விட்டுப் போகும் பொழுதே  பையன்கள் 4 அணாவாவது சம்பாதிக்கும்படியான கைத் தொழில் ஏதாவதொன்று கற்றுக் கொண்டு போக வேண்டுமென்றும், Non Brahmin Hostel and Scholarship நம்முடைய வகுப்பினர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் யோசித்தார் என்பதனைப் பதிவு செய்து இவ்வறக்கட்டளையினை நிறுவினார்கள்.  இதுமட்டுமா??!!

தங்களுக்குப் பின் இவ்வறக்கட்டளையைப் பராமரிக்க தக்கவர் யார் என்பதைக் குறிப்பிடும் போது, ச. முத்துசாமி பிள்ளை மற்றும் ச. பொன்னுசாமி பிள்ளை ஆகியோரின், கறை படியாத, நேர்மையான பெருந்தன்மையான உள்ளத்தினையும், அவர்கள் தங்கள் தமையனாரிடத்தும், அறக்கட்டளையின் பேரிலும் வைத்திருந்த பற்றும் பாசமும் வெளிப்படுவதைக் காணலாம்.   எங்கள் ஆயுசுக்குப் பிறகு, எங்களில் ச. முத்துசாமி பிள்ளையின் குமாரர்களாகிய பாலசுப்பிரமணியப் பிள்ளை, அருணாசலம் பிள்ளை மற்றும் எங்களில் ச. பொன்னுசாமி பிள்ளையின் குமாரர்களாகிய ரெத்தினசபாபதி பிள்ளை, டி. இராமலிங்கம் பிள்ளை ஆகியோரை எங்களுக்குப் பிறகு தருமங்கள் நடத்திவர நியமிக்கிறோம்.   இந்த வாரிசுகளுக்குப் பின்னால் யாருடைய ஸ்தானமாவது காலியானால், அந்த ஸ்தானத்தை மற்றவர்கள் ஒருமித்து, நம்முடைய குடும்பத்தில் தரும சிந்தனையும் யோக்கியதையும் உள்ளவருமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பதிவு செய்தனர். அறக்கட்டளையினை நிறுவியவுடன், பொன்னுசாமி , முத்துசாமி இருவரும் தரும வாசக சாலையைத் தொடங்கினர்.  பள்ளிக் கூடம், தொழிற் பயிற்சிப் பள்ளியும் நிறுவிட கட்டிடம் கட்ட அஸ்திவாரம் போட்டார்களே தவிர, போதிய வருமானம் இல்லாமையால்,  அக்கல்வி நிறுவனங்களைத் தொடங்க அவர்களால் இயலவில்லை. 

இவ்வறக்கட்டளையில் சொத்துக்கள் இருந்தனவே தவிர, அச்சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைந்த அளவாகவே இருந்தது. மேலும் இவ்வறக்கட்டளையினை நிறுவியவர்களில் ஒருவரான ச.முத்துசாமி பிள்ளை அவர்கள் 23.11.1934 இல் காலமானார்.  இதனால் அறக்கட்டளைப் பணிகளில் பெரிதும் தொய்வு ஏற்பட்டது.  இந்நிலையில்தான், 1938 இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட ச. பொன்னுசாமி பிள்ளை அவர்கள், அறக்கட்டளையின் வருவாயினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். போதிய முதற்பொருள் இன்மையால் சென்னைப் பல்கலைக் கழகத்தார், கரந்தைப் புலவர் கல்லூரியை அங்கீகரிக்க மறுத்ததும், கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு பல்லாற்றானும் முயன்ற தமிழவேள், இறுதியாக திருச்சிக்குப் பயணம் செய்து ச. பொன்னுசாமி பிள்ளை அவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் பயனாக தி.ச. பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையின் குறிக்கோளில் சில மாற்றங்களைச் செய்யவும், அம்மாற்றங்களை அதிகாரப் பூர்வமாக பத்திரப் பதிவு செய்யதிடவும் பொன்னுசாமி பிள்ளை அவர்கள் முன்வந்தார்.  

இதன்படி, ஏழை மாணவர்கட்குத் தொழிலும் கல்வியும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் தம்பி டி.எஸ். பழனிச்சாமி பிள்ளை அவர்களும், எனது அண்ணன் டி.எஸ். முத்துசாமி பிள்ளை அவர்களும், நானும் ஆகிய மூவரும், கொண்டிருந்த எண்ணமாயிருந்தும்,  இதில் கண்டிருக்கும் சொத்துக்களைக் கொண்டே, அதை முடிப்பது முடியாத கருமமாயிருப்பதாலும்,   இதே கருத்துக்களை நிறைவேற்றும் எண்ணத்துடன் தஞ்சாவூரிலுள்ள, கருந்தட்டாங்குடி, தமிழ்ச் சங்கமானது, மாணவர்களுக்கு இல்லங்கள் அமைத்து உண்டி, உறையுள் முதலியன கொடுத்து, தொடக்கக் கல்வியும், தமிழ்ப் புலவர் கல்லூரியும் ஏற்படுத்தி, மாணவர்கட்குத் தொழிற் கல்வியும் பெற, வசதிகள் செய்து நடத்தி வருகின்றமையால், அதன் வாயிலாகவே, எமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் சாலச் சிறந்தது எனக் கருதி,  1.11.1930 இல் நானும், முத்துசாமி பிள்ளையும் எழுதி வைத்த டிரஸ்ட் பத்திரத்தை, இப்போதைய தேவைக்குத் தக்கவாறு மாறுதல் செய்து, இதுமுதல் நடந்து வர வேண்டிய தரும பரிபாலன ஏற்பாடுகளை இதன் மூலமாக எழுதி வைக்கின்றேன் என 1940 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் நாள் திருச்சி பத்திரப் பதிவு அலுவலகத்தில், மாற்றியமைக்கப் பட்ட அறக்கட்டளையானது பதிவு செய்யப்பட்டது.

உயிர் பெற்ற கல்லூரி:
 தி.ச. பழனிசாமி பிள்ளை அறக்கட்டளையில் மாற்றங்கள் செய்து, பதிவு செய்யப்பெற்ற பத்திரத்தின் நகலினை, சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு அனுப்பி, அறக்கட்டளையின் சொத்துக்களையே, ஐம்பதாயிரம் ரூபாய் பொறுமானமுள்ள முதற்பொருளாக ஏற்றுக் கொண்டு, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று உமாமகேசுவரனார் கடிதம் எழுதி வேண்டினார்.  அறக்கட்டளைச் சொத்துக்களை முதற்பொருளாக, ஏற்றுக் கொண்ட, சென்னைப் பல்கலைக் கழகம், 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்தது.  கல்லூரிக்குப் புத்துயிர் வந்தது.

கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல் முதல்வர்:
தி.ச. பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையில் மாற்றங்கள் செய்ததன் மூலம், கரந்தைப் புலவர் கல்லூரிக்கு வேண்டிய முதற்பொருள் கிடைத்து விட்டது.   ஆனாலும் கரந்தைப் புலவர் கல்லூரியானது, முதல்வர் என்று ஒருவரும் இல்லாமலேயே இயங்கி வந்தது.  எனவே முதல்வராக ஒருவரை நியமித்தாக வேண்டும்.  யாரை முதல்வராக நியமிக்கலாம் என்று எண்ணிய உமாமகேசுவரனாரின் மனக்கண் முன், அடுத்த நொடியே தோன்றியவர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களாவார்.  இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், திருச்சியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றி, அவ்வாண்டுதான் ஓய்வு பெற்றிருந்தார். ஒரு நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்வுற்ற நிறைவேற்றுக் கழகக் கூட்ட நாளில், சங்கத்திற்கு நாவலர் வருகை தந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன், சங்கத்திலுள்ள ஒரு வேப்ப மரத்தடியில், நாவலர் வந்து அமர்ந்திருந்தார்.  அப்பொழுது சங்கத்திற்கு வந்த உமாமகேசுவரனார், நாவலரைக் கண்டதும், அருகில் சென்று மார்புறத் தழுவி, கண்ணீர் மல்கத், தங்களைப் பல்லாண்டுகட்கு முன்னரேயே, சங்கத்திற்கு வந்து தமிழ்ப் பணி புரிய வேண்டினேன்.  தங்கட்குரிய பதவி இதுபோழ்து காத்து நிற்கின்றது.  கரந்தைப் புலவர் கல்லூரி சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்றுவிட்டது.  இக்கல்லூரிக்குத் தலைமை தாங்கத் தக்கார், தமிழ் நாட்டில் தங்களையன்றி வேறு யாருளர்?  தாங்கள் தடுத்துரையாது ஏற்றுக் கொள வேண்டும் என உளங் கசிந்துரைத்தார்.

தமிழவேளின் உரையைச் செவிமடுத்த நாவலர், யான் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குமேல் கல்லூரிகளிலேயே நீளத் தொடர்பு கொண்டிருந்தேன். என் வாழ்நாளின் பிற்பகுதியிலும், கல்லூரியிலேயே தொடர்பு கொள்ள வேண்டுமெனத் திருவுளக் குறிப்பிருந்தால் யான் என் செயக் கடவேன்?  தாங்கள் கூறிய மொழிகளைத் தடுத்துரைக்க அஞ்சுகின்றேன்.  சிறிது காலம் யான் நடுக்காவிரிக்குச் சென்று, ஓய்வு பெற்றிருந்து மகிழ்வுறக் காலங் கழிக்க எண்ணி வந்தேன்.  தாங்கள், என்னை வழியில் வளைக்கின்றீர்கள். சில ஆண்டுகள் எனக்கு ஓய்வு தரல் ஆகாதா? என மறு மொழி கூறினார். அதனைக் கேட்ட தமிழவேள், அய்யா அவர்களே தடுத்துரைத்தால், யான் கல்லூரித் தலைவராக யாரைத் தேடிச் செல்வது?  இத்தொண்டிற்கு, உங்களை வேண்டுகிறேன்.  இது குறித்துப் பின்னர் உரையாடுவோம். கூட்டத்திற்கெனக் குறித்த காலம் இதுவாகையால், வாருங்கள் கூட்டத்திற்குச் செல்வோம் எனப் பிணைந்த கையுடன் நாவலரை அழைத்துச் சென்றார். 
செல்லும் வழியில் நாவலர் தமிழவேளைப் பார்த்து. இது என்ன? என்றுமில்லாப் பரிவுடன் இன்று சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் கையை இறுகப் பற்றினார்ப் போலப் பற்றிக் கொண்டுள்ளீர்கள் எனப் புன்முறுவல் தோன்றக் கூறினார்.  அதற்குத் தமிழவேள் பழந்தனம் இழந்ததைப் பெற்றால், யான் பற்றிக் கொள்ளாது விட்டு விடுவேனா? என்றார்.

பின்னர் தமிழவேள், ஆங்குக் குழுமியிருந்த சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பிற நண்பர்கள் முன்னிலையில், நாவலர் நாட்டாரின் புலமைத் திறன், ஆராய்ச்சித் திறன் முதலியவற்றை எடுத்துக் கூறினார். நாவலரும் அக்கணமே கல்லூரி முதல்வர் பொறுப்பை மனமகிழ்வுடன் ஏற்பதாகக் கூறி உமாமகேசுவரனாரின் நட்பிற்குத் தலை வணங்கினார். நாவலர் அவர்கள் 1941 முதல் 1944 வரை நான்காண்டுகள், கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். நான்காண்டுகளும் ஊதியமென்று ஒரு பைசா கூட பெறாமல், உமாமகேசுவரனாரிடத்து கொண்டிருந்த நட்பிற்காகவே பணியாற்றினார்.  பல்கலைக் கழகத்தோடு இப்புலவர் கல்லூரி இணைந்த பிறகு 1942இல் முதல் வித்துவான் புகு முக தேர்விலும், 1943 இல் முதல் முதனிலைத் தேர்விலும், 1945 முதல் இறுதி நிலைத் தேர்விலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாயினர்.  இறுதி நிலைத் தேர்வில் முதன்முதலாகக் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரும் வெற்றி பெற்றனர்.  இவர்களுள் அ.மா. பரிமணம் என்பாரும், அடுத்த சில ஆண்டுகளில், இரா. கலியபெருமாள் என்பாரும், வித்துவான் இறுதி நிலைத் தேர்வில், முதல் வகுப்பில், முதல் தரத்தில் வெற்றி பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கப் பரிசினை வென்றார்கள். ஆனால்,  இப்புலவர் கல்லூரியில் பயின்று வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக்காணும் நாளே என் வாழ்வில் பொன்னாள், அதுவே கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் திருநாள், புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ட அடுத்த நொடியே என் உயிர் பிரியுமானால், அதை விடப் பேரானந்தம் வேறொன்றுமில்லை என்று பலவாறு கனவு கண்டிருந்த உமாமகேசுவரனாரின் வாழ்க்கையில் இயற்கை விளையாடியது. 

ஆம்; வடபுலப் பயணம் மேற்கொண்டிருந்த உமாமகேசுவரனார், தமிழகம் திரும்பாமலேயே, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்த அடுத்த மாதமே,  அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் என்னும் சிற்றூரில் 9.5.1941 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். உமாமகேசுவரனாரின் அயரா முயற்சியால், தளரா உழைப்பால் தோற்றம் பெற்ற, இக்கல்லூரி, சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், தனக்கு என்று, தனியொரு கட்டிடம் இன்றியே, இயங்கி வந்தது. பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே, தஞ்சை நகரப் பெரு வணிகர்களின் முயற்சியால், கல்லூரிக்கெனத் தனியொரு கட்டிடம் கட்டப்பெற்றது.  கரந்தைப் புலவர் கல்லூரி என்பது வெறும் செங்கற்களாலும், மணலாலும் கட்டப்பெற்றக் கல்லூரி அன்று.  தமிழவேள் உமாமகேசுவரனாரின் அயரா உழைப்பாலும், உதிரத்தாலும், உருப் பெற்றக் கல்லூரியாகும். தி.ச. பழனிசாமி பிள்ளை, தி.ச. முத்துசாமி பிள்ளை, தி.ச. பொன்னுசாமி பிள்ளை என்னும் வள்ளல்களின், வள்ளல் தன்மையால் உயிர் பெற்ற கல்லூரியாகும். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், சிவ. குப்புசாமி பிள்ளை, கரந்தைக் கவியரசு, வெள்ளைவாரணனார், பெரியசாமி புலவர் மற்றும் எண்ணற்ற பெயர் தெரியாத தமிழன்பர்களின் உழைப்பால், நன்முயற்சியால் உயர்ந்த கல்லூரியாகும்.

கரந்தைப் புலவர் கல்லூரியும், மாணவர் இல்லங்களும் வளர, செழிக்க, தஞ்சை நகர வணிகர்கள் ஆற்றியுள்ள சேவை அளவிடற்கரியதாகும்.  நாள்தோறும் சங்க அலுவலர்கள், கடைவீதிக்கு ஒரு சாக்குப் பையுடன் செல்வார்கள். தஞ்சை நகர வணிகர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் வருவாயின் சிறு பகுதியை சங்கத்திற்கு அன்பளிப்பாய் வழங்குவார்கள்.  பணமாக மட்டுமல்ல, அரிசியாக, காய் கனிகளாக, மளிகைப் பொருட்களாக, தங்களால் இயன்றதை, ஒரு நாள், இரு நாள் அல்ல, ஒவ்வொரு நாளும் வழங்கி,  வளர்த்த கல்லுரி, இப் புலவர் கல்லூரியாகும். கரந்தையில் மட்டுமல்ல, கரந்தையைச் சுற்றியுள்ள, கூடலூர், குலமங்கலம், அரசூர், அம்மன்பேட்டை, பள்ளியக்கிரகாரம், சுங்கான்திடல், ஆலங்குடி, ஆத்தூர் போன்ற ஊர்களில் சிறு, சிறு அரிசி அரவை ஆலைகள் அதிகமாய் இருந்த காலகட்டம் அது.  அன்றைய நாளில் அறுவடை மூலம் கிடைக்கும் நெல் மணிகளை, பத்தாயம் என்றழைக்கப்படும் சேமிப்பு கலன்களில் சேமித்து வைத்து, அவ்வப்போது உணவிற்குத் தேவைப்படும் அளவிற்கு, நெல்மணிகளை அரைத்து அரிசியாக்கிக் கொள்வார்கள். தஞ்சைப் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து அரிசி அரவை ஆலைகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், ஒரு சாக்குப்பை வைக்கப் பெற்றிருக்கும். தங்களின் இல்லங்களுக்குத் தேவையான அரிசியை அரைத்துச் செல்லும் அன்பர்கள், அந்த அரிசியிலிருந்து, ஒரு கைப் பிடியோ அல்லது ஒரு படி அரிசியையோ, தங்களின் வசதிக்கு ஏற்றவாறு, சங்கத்தின் சார்பில் வைக்கப் பெற்றிருக்கும் சாக்குகளில் அன்பளிப்பாய் அளித்துச் செல்வார்கள்.  சங்க அலுவலர்கள், வாரந்தோறும் அரிசி அரவை ஆலைகளுக்குச் சென்று, சங்கத்தின் சாக்குப் பைகளில் சேர்ந்திருக்கும் அரிசியை, மாணவர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். 

இவ்வாறாகத் தஞ்சையினைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும், இது நமது சங்கம், இது நமது மாணவர்களுக்கான இல்லம், இது நமது மக்களுக்கான கல்லூரி, இச் சங்கம் பாடுபடுவது நமது மக்களுக்காக என்றுணர்ந்து, தங்களது குடும்ப வளர்ச்சியும், சங்க வளர்ச்சியும் வேறுவேறல்ல, ஒன்றே எனக் கருதி உணவிட்டு வளர்த்த கல்லூரி, இப்புலவர் கல்லூரியாகும். தமிழ்ப் பெரியோர்கள், தமிழன்பர்கள், செல்வந்தர்கள், பெரு, சிறு வணிகர்கள் என அனைவரின் தன்னலமற்ற தியாகத்தாலும், உழைப்பாலும், உதிரத்தாலும் வளர்ந்த கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரியாகும்.  இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள், இன்று இவ்வுலகு முழுவதும் பரவித் தமிழ்ப் பணியாற்றி வருகின்றனர்.  அதிலொரு மாணவர், தான் பயின்ற கரந்தையைப் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.

ஏழு வயதில் நான்
இழந்த தாயைப்
பதினெட்டு வயதில்
கரந்தையில் பெற்றேன்.

தமிழ் என்பது – வெறும்
மொழியன்று –
உணர்வு என்று
கற்பித்தது கரந்தை.

கருத்தைச் சுமக்கும்
வாகனமா தமிழ்
இல்லை – அது
தமிழனைச் சுமக்கும்
கர்ப்பம் என்று
கற்பித்தது கரந்தை.

இலக்கணம் என்று
தொல்காப்பியக் கதவு
இங்குத் திறக்கப் படவில்லை
தமிழின் இதயம் என்றே
திறக்கப் பட்டது.

பேராசிரியர்
இராமநாதன் பாடம் நடத்துவார்
ஓடாத வடவாற்று
நதி நரம்பிலும் தமிழ் புரிதல்
நடக்கும்.

பாவலர் ஏறு
கிள்ளி எறியும்
வெற்றிலைக் காம்பும்
தமிழ் சொல்லிக் கொடுக்கும்.

அடிகளாசிரியர்
நாக்கு
சொல் சொல்லாய்
ஆரத்தழுவி நடக்கும்.

பிரபுலிங்கலீலையில்
உற்பத்தியான மாயை
உடம்பெல்லாம்
கற்பனைக் கதகதப்பில்
மூச்சுவிடும்.

வைணவச் சடகோபர்
வைய மாட்டாரா
என்று
வகுப்பறையே ஏங்கும்
ஏனெனில்
வையும்போதும் – தமிழ்ப்
பழமொழிகள் பெய்யும்
அவர் உதடுகள்.

சொல் சுமந்து வராமல்
வகுப்புக்குக்
கல் சுமந்து வருபவர்
கோவிந்த ராசனார்.
வெட்டு என்றால்
அரிவாளைத் தூக்காமல்
கல்வெட்டைத் தூக்குபவர்
அவர்.

இன்றும்
நினைத்தால் பணியாளர்
சாமிநாதன் சரியாக
எனக்குள் வந்து மணியடிக்கிறார்.
எங்கள் தமிழ்ப் பாடங்களில்
ஒருபகுதி சாமிநாதன்.

என்
கவிதைகளில்
கரந்தை மண்தான்
மகரந்தம்.

கரந்தைத் தமிழ்ச்சங்கம்
கண்ட கனவுகளில்
நான் இருந்தேனோ
இல்லையோ
என் நனவுகளில்
எப்போதும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு
வெப்பமாகத்
தகிக்கின்ற மண்.

இந்தக்
கரந்தைத் தமிழ்ச்சங்க
மண்ணில்
ஒரு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
உணவில் சேர்த்துக் கொண்டால்
சொரணை செத்தவர்களும்
பிழைத்துக் கொள்ளலாம்.

கரந்தையை மட்டுமல்ல, தன் பேராசிரியர்களை மட்டுமல்ல, தான் கல்லூரியில் படித்த காலத்தில், கல்லூரி மணியினை அடித்த அலுவலகப் பணியாளர் சாமிநாதனையும் நினைவில் நிறுத்திப் போற்றியவர், எல்லாவற்றிற்கும் மேலாய் கரந்தையைத் தன் தாய்க்கு நிகராய் போற்றிய, இம்மனிதர், யார் தெரியுமா?  இவர்தான் இன்றும் வாழும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களாவார். இவரைப் போலவே, உலகறிந்த எழுத்தாளுமையான சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு பிரபஞ்சன் அவர்களும் இக்கல்லூரியின் மேனாள் மாணவர் ஆவார்.  பாவலர் ஏறு கிள்ளி எறியும் வெற்றிலைக் காம்பும்,  தமிழ் சொல்லிக் கொடுக்கும் என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களால் போற்றப்பெற்ற, புகழப்பெற்ற பாவலர் ச.பாலசுந்தரனார் அவர்களும் இக்கல்லூரியின், மேனாள் மாணவர் ஆவார். திரைப் படத் துறையில் பாடலாசிரியராய் விளங்கிய தஞ்சை ராமையா தாஸ் அவர்களும், திரைப்படத் துறையில் இன்றும் புகழ் பெற்ற வசனகர்த்தாவாக தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்திருக்கும் ஆரூர் தாஸ் அவர்களும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் மாணவர்கள் ஆவர்.

இவ்வாறு எண்ணற்ற தமிழறிஞர்களை உருவாக்கிய இக்கல்லூரியானது, தற்பொழுது தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி எனப் புதுப் பெயரும், புதுப் பொலிவும் பெற்று தமிழோடு, இயற்பியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல்  எனப் பலப் பலப் புதுத் துறைகளோடு இயங்கி வருகின்றது.