Tuesday, July 31, 2018

பெண்மை வாழ்கவென்று...

——    வித்யாசாகர்
பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து
எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து
பாலூட்டி பச்சைமார்பு வெடித்து
பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து
எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே..
எனதுயிர் அம்மாவே!!

தாயாகி மகளுமாகி முதலுமாகி
கடைவரைக் காப்பவளாகி,
கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே
காமம் பிசைந்து;
களங்கமில்லா வாழ்க்கை வாழ
இரண்டாம் வரம் தந்தவளே..
மணம் கொண்டவளே.. என் துணையாளே!!

எனை முழுதாய் விழுங்கி நானாய் தெரிந்தவள்
நானாய் வாழ நல்அப்பனைச் செய்தவள்
பெயரை கடமைக்குச் சேர்க்காமல்
உயிருக்குள் போட்டவள்,
உரிமையைக் கூட யாருக்கோ கொடுப்பதை
எனக்காய் ஏற்றவளே, என் மகளே!!

முத்தத்தால் எனை வளர்த்து முழுமூச்சு
நீ நினைத்து, பித்தென ஆகி என்னால்
பிசைந்த சோற்றோடு பண்புகளூட்டி,
பெற்றவளே தான்போல உன்
பன்மாத தூரத்திலும்
எனைவிட்டகலாத என்னக்காளே, உயிரானவளே!!

அண்ணாவின் அர்த்தத்தில் அப்பாவைச் சேர்த்தவளே
அன்பு அன்பென்று ஈந்து பிறவிப்பிணிக் கொன்றவளே
பொன்னும் பொருளும் கேட்போர் மத்தியில்
அண்ணனை மட்டும் கேட்டவளே,
தாய்மையை முன்பே போதித்தும், என்
தங்கையாய் யானவளே.. பேரன்புத் தங்கையே!!

சுட்டதும் கைவிட்ட இனிப்பல்ல நீ
உயிர் விட்டாலும் மாறாத அறத்தின்
அன்பு நீ,
கண்டதும் கேட்டதும் பார்த்ததுமல்ல;
உடன் வாழ்ந்த உயிர்பூச்சு நீ, உள்ளக்
கோயில் நீ தோழி; உள்ளே சாமியும் நீ தோழி!!

பட்டப்பகலை இருட்டாக்கி
இருட்டின் அழகை உனக்காக்கி, உன்போல்
காணா குருடென்று, இப்பவும்கூட எனையாளும்
எந்தாய் நிலம் போல் என்னுள்
நீக்கமற நிறைந்தவளே
கண்ணுக்குள் காதல் வரைந்தவளே, என்னவளே காதலியே!!

தெய்வம் யார் நீதானென்பேன்
தாயைக் கேட்டால் நீயே என்பேன்
தமக்கை தோழிக்கும் நீயே முதலென்பேன்
ஏற்கவேண்டியதை கற்கப் பணித்தவளே
'அ' எனில் அம்மா என்றவளே
யென் ஆசிரியப் பெரும்பேறே.. குருவே!!

பெண்ணே மொத்தத்தில் உனை
வணங்குதலன்றி வேறென்னச் செய்வேன் ?
“பெண்மை வாழ்கவென்று” புகழாது
பணியென்னக் கேட்பேன்??
தமிழுக்குள் உனையன்றி சிறக்க
சொல்லெங்கே கொய்வேன்? பெண்ணே;

நீயின்றி யில்லை உலகு, நீயே யெம் ஆதி மரபு!!


________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)
Sunday, July 29, 2018

பெண்ணியப் பார்வையில் பதிற்றுப்பத்து - காக்கைப்பாடினியாரின் நோக்கும் பெண்மொழியும்

——    முனைவர் ச.கண்மணி கணேசன்.


முன்னுரை:
சங்ககால அரசியல்நிலையையும், சமூக வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை செய்வன சங்க இலக்கியங்களே. அவற்றுள்ளும்  பதிற்றுப்பத்து  சேர நாட்டிற்கும்,சேரர்  ஆட்சிக்கும் மட்டுமே சிறப்பிடம் கொடுத்துப் பாடப்பட்டது.  அந்நூலில் பெண்மை போற்றப்பட்ட முறையைக் காண்பது கட்டுரையின் நோக்கமாகும். புலவர் எண்மரில் காக்கைப்பாடினியார் மட்டுமே பெண்பாற் புலவராதலால் அவரது பாடுபொருளில் இருக்கும்  தனித்தன்மை சிறப்பாக நோக்கப்படுகின்றது. "தங்களை ஆண்களின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாகக் கருதும் மரபுத் தளையிலிருந்து விலகி வந்தால் மட்டுமே பெண்ணியத்தைப் பெண்களாலும் சரிவர புரிந்து கொள்ள இயலும்" என்று கூறுகிறார் முனைவர் இரா.பிரேமா (பெண்ணியம் -முன்னுரை). இந்த இலக்கணத்துக்கு ஏற்ற இலக்கியமாக காக்கைப்பாடினியாரும் அவரது பாடல்களும் அமைந்திருக்கும் பாங்கினைக் காண்போம்.  

'பெண் எழுத்துக்கள் ' என்ற தலைப்பில் எழுதும் முனைவர் எம் .ஏ .சுசீலா ஆய்வுப்பின்புலம் :    
சேர மன்னர்களின் மனைவியரும், பாரியின் மனைவியும்  பதிற்றுப்பத்துப் பாடல்களில் போற்றப்படுகின்றனர். அப்பாடற்பகுதிகளில் அக்காலப்  பெண்ணியக் கொள்கை பிரதிபலிக்கிறது. ஒரு ஆணின் நோக்கிலும், மொழியிலும் சித்தரிக்கப்படும் பெண்மை; ஒரு பெண்ணின் நோக்கிலும், மொழியிலும் சித்தரிக்கப்படும் பெண்மை இரண்டிற்கும் வேறுபாடு காணப்படுகிறது. பதிற்றுப்பத்துச் செய்திகள் முதன்மை ஆதாரம் ஆக அமைய புறநானூற்றுச் செய்திகள் துணை ஆதாரங்களாக அமைகின்றன. 20ம் நூற்றாண்டு ஆய்வாளர்களின் கருத்துக்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாக அமைகின்றன.பெண்ணிடமிருந்து உற்பவித்துத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் பதிவாகியுள்ள எழுத்துக்கள்; என்ற பொருளை வரையறுத்து புனைகதை இலக்கியத்தை மட்டுமே தன் கட்டுரையில் ஆய்வுப்பொருள் ஆக்கியுள்ளார் (தமிழ் இலக்கியத்தில் பெண்ணியமும் தலித்தியமும் -ப.-1-11) வெள்ளிவீதியாரின் கவிதைகளில் பெண்மொழி பற்றி சு.மலர்விழி கட்டுரை வரைந்துள்ளார்(காவ்யா தமிழிதழ் -ப.29-32). ஒளவையார், வெள்ளிவீதியார் பாடல்களில் இடம்பெறும் பெண்ணியக்கோட்பாடுகளை அரங்க மல்லிகா தொட்டுக் காட்டியுள்ளார் (பெண்ணின் வெளியும் இருப்பும் -'சங்க இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும்'-ப.-8-18).
    
ஆய்வு முறை:
மன்னன் வாழ்வில் அவனது உரிமை மனைவி பெற்ற இடம், அவளது பெருமையின் காரணம் முதலியன, ஆண் வர்க்கத்தின் பார்வையிலும் பெண்வர்க்கத்தின் பார்வையிலும் எவ்வாறு வேறுபடுகின்றன என்று பெண்ணியநோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது.  

மன்னனை அழைக்கும் முறை:
ஒவ்வொரு மன்னனையும் அழைக்கும் முறையில் அவனது உரிமை மனைவிக்குக் கொடுக்கப்படும் சிறப்பிடம் புலப்படுகிறது. மன்னனால் அவன் மனைவிக்கு அடையாளம் கிடைப்பதை விட மனைவியால் மன்னனுக்கு அடையாளம் கொடுக்கப்படுவதையே பதிற்றுப்பத்தில் காண முடிகிறது.
"ஒடுங்கீரோதிக் கொடுங்குழை கணவ"-(பா-14) - குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியது .
"நன்னுதல் கணவ " -(பா-42)- பரணர் கடல் பிறக்கோட்டிய குட்டுவனைப் பாடியது .
"ஆன்றோள் கணவ " -(பா-55)- காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்  ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பாடியது.
"பாவை அன்ன நல்லோள் கணவன் "-(பா-61)- கபிலர் பாரியைச் சுட்டியது.
"சேணாறு நறுநுதற் சேயிழை கணவ"-(பா-65) மற்றும்
"கமழும் சுடர் நுதற் புரையோள் கணவ"-(பா-70)-   கபிலர் செல்வக்கடுங்கோ வாழியாதனைப்  பாடியது.
"சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" -(பா-88) மற்றும்
"வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ" -(பா- 90)- பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடியது.   
இம்மேற்கோள் பகுதிகளில்  மனைவியால்  மன்னனுக்கு அடையாளம் தரப்பட்டுள்ளது.
புறநானூறிலும் இவ்வண்ணமே; 
"செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ"- (பா-3) என்று பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் விளிக்கிறார் .
"அறம் பாடிற்றே ஆயிழை கணவ"- (பா- 34) என்று கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் அழைக்கிறார்.
"ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்"-(பா-138) என்று நாஞ்சில் வள்ளுவனை மருதன் இளநாகனார் குறிக்கிறார்.
மன்னன் மனைவியை அடையாளப்படுத்தும் முறையில் காக்கைப்பாடினியார் கையாளும் பொருள்  மட்டும் வேறுபட்டுக் காணப்படுகிறது .   பெண்ணின் ஆளுமையை முன்னிலைப்படுத்தி மன்னன் மனைவியை 'ஆன்றோள்' என்கிறார். பிற புலவர்கள் எல்லாம் ஐம்புலன்களால் அறியக்கூடிய இன்பங்களோடும், கற்போடும் தொடர்புபடுத்தியே அரச மகளிரைக் குறிக்கின்றனர். அதாவது அப்பெண்களின் கூந்தல், நெற்றி, அழகு, மணம், அணிகலன், கற்பு, கற்பினால் உண்டான புகழ் முதலியவையே ஆண் புலவர்கள் மகளிர்க்குக் கொடுக்கும் அடையாளச் சொற்கள். ஆனால் காக்கைப்  பாடினியாரின்  பெண்மொழி புலனின்பத்திற்கும், காட்சிக்கும்  அப்பாற்பட்டு மனதாலும், அன்றாட வாழ்வியல் அனுபவத்தாலும் அறியக்கூடிய சிறப்பும், அறிவும்  பொருந்திய ஆன்றோளின்  கணவனாக ஆடுகோட்பாட்டுச்சேரலாத- னைச்   சிறப்பிக்கிறது. 
                        
புறத் தோற்றம்:
அரச மகளிரின் புறத்தோற்றமும், அவர்களது ஒப்பனையும்  பதிற்றுப்பத்தில் ஆங்காங்கு இடம் பெறுகின்றன.

விண்ணுலக மங்கையர் சேரன் மனைவிக்கு நிகராதல் வேண்டித் தம்முள் மாறுபட்டு இகலும் அளவிற்கு இமயவரம்பன் மனைவி  மெய்நலம் உடையவள். தலை ஆபரணங்களால் மறைப்புண்டை வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவள். மண்ணி நெய்ப்புற்ற கூந்தல் ஒடுங்கிய செவியில்  வளைந்த குழைகளை அணிந்திருந்தாள் என்று இமயவரம்பனின் மனைவி வருணிக்கப் படுகிறாள்- (பா-14).    
பல்யானைச்செல்கெழு குட்டுவனின் மனைவி மயிர்ச்சாந்து பூசாமலே மணம் மிகுந்த கூந்தலுடையவள்; மழைக்காலத்தில் முல்லை மணம் கமழும் நீண்ட அடர்ந்த கூந்தலுடன், காம்பினின்றும் நீக்கப்பட்ட நீர்ப்பூ போல முகத்தில் சுழலும் கருமையான கண்களுடன், காந்தள் போன்ற கைகளுடன், மூங்கிலை ஒத்த பெரிய தோள்களையும்  உடையவள் ஆவாள்-(பா- 21). 
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி வண்டு மொய்க்கத் தழைத்த கூந்தலையும், காதில் அணிந்த குழைகட்கு விளக்கம் தரும் ஒளி பொருந்திய நெற்றியையும், தான் அணிந்த பொன்னாலான அணிகட்கு விளக்கம் தரும் மேனியையும், அழகிய வளைந்த உந்தியையும் உடையவள்-(பா- 31மற்றும்38). 
ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த மனையில் பாவை போன்ற அழகுடையவளாக பாரியின் மனைவி இருந்தாள்-(பா- 61).  
செல்வக்கடுங்கோ வாழியாதனின் மனைவி- வேளாவிக்கோமான் பதுமன் தேவி இழை அணிந்து எழில் பெற்ற இளமுலையும், மாட்சிமைப்பட்ட வரிகளை உடைய அல்குலையும், அகன்ற கண்களையும், மூங்கிலை ஒத்த  அழகிய தொடியணிந்த பருத்த தோளையும், சேய்மையிலும் மணம் பரப்பும் நறு நுதலையும் கொண்டு; செவ்விய அணிகளையும்  அணிந்திருந்தாள்-(பா- 65மற்றும்70).
அந்துவன் செள்ளை திருமகளைப் போன்றவள். பிறப்பால் மட்டுமே அவளுடன் மாறுபட்டவள்-(பா- 74). ஒளி பொருந்திய நெற்றியை உடைய அவள் நுண்ணிய கருமணலை ஒத்த அடர்ந்த நீளமான கூந்தலை உடையவள். பெருஞ்சேரல் இரும்பொறை வேள்வி செய்த போது புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து அதனை வட்டமாக அறுத்து சுற்றிலும் முத்துக்களையும், அரிய கலன்களையும் கட்டி நடுவே மாணிக்க மணிகளைத் தைத்துத் தோளில் அணிந்திருந்தாள். கூந்தலைச் சுருட்டி முடித்திருந்தாள்-(பா-74).    இளஞ்சேரல் இரும்பொறை மனைவி நீண்ட கண்களை உடையவள். அவளது  ஒளி வீசும்  நெற்றியில் சுருண்ட கூந்தல் விழுந்து அழகூட்டியது. வண்டுகள் மொய்க்கும் கருமையான கூந்தல் மறையும் படியாகத் தலையணியும், வளைந்த குழைகளும்  அணிந்திருந்தாள் (பா-81). தகர நீவிய துவராக் கூந்தல் உடையவள்-(பா-89).
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மனைவி  அசைகின்ற மாலையும், பரந்த தேமலையும் உடையவள் என்கிறார் காக்கைப்பாடினியார். புறநானூறில் ஆவூர்மூலங்கிழார் வாய்மொழியாக இடம்பெறும் கௌணியன் விண்ணந்தாயனின் மனைவியர் சிறு நுதலும், பேரல்குலும் கொண்டு சில சொல்லிற் பல கூந்தலினை உடையவர் என்று வருணிக்கப்படுகின்றனர்(பா-166).
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடலில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் மனைவி - 'அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமோடு பொலிந்த மார்பினை உடையவளாய்க்'  குறிக்கப்படுகிறாள்(பா-198).     
பதிற்றுப்பத்தின் பிற புலவோர் அரச மகளிரை வருணிப்பதற்கும், காக்கைப்பாடினியார் வருணிப்பதற்கும் இடையிலுள்ள வேறுபாடு நோக்கத்தக்கது. மாலையும்  தேமலும் தவிர  வேறெந்தப்  புறத்தோற்ற வருணனையும் காக்கைப்பாடினியார் பாடல்களில் இல்லை-(பா-52). அறிவும் திறமையும் மட்டுமே அவளைப் பற்றிப் பாடத்தக்க பொருட்களாக அவருக்குத் தோன்றியுள்ளது. மேனியின் வெளிப்புற அழகும், ஆபரணங்களும்  ஒரு பொருட்டாக அவருக்குத் தோன்றவில்லை எனலாம். மேனியழகும் அணிகளும் ஒரு பெண்ணின் ஆளுமைக்கு தேவையற்றவையாக ஒதுக்கப்பட்டு விட்டதைக் காணமுடிகிறது.          
பாரிமனைவியைக் குறிப்பிடும் கபிலர் சுருக்கமாக அவள் பாவை போன்றவள் என்று வருணிப்பதன் காரணம் -பாரி சேர மன்னன் அல்லன் . அவன் இறந்தபின் உன்னையே நாடி வந்தேன் என்று பாடும் இடத்தில் பாரிமனைவிக்கு சிறப்பிடம் இல்லை .அதனால் அவளைப்  பற்றிய வருணனை சுருக்கமாகவே அமைகிறது. இதே கபிலர் செல்வக்கடுங்கோவின் மனைவியை வருணிக்கும் போது அவளது அணிகலன், இளமுலை, அல்குல், கண், தோள், நுதல் என மிக விரிவாகப்  பாடியுள்ளார். இவ்வாறு அரச மகளிரின் புறத்தோற்ற வருணனையிலும் காக்கைப்பாடினியாரின் பெண்மொழி தனித்துவத்துடன் காணப்படுகிறது.

அரச மகளிரின் பெருமையாகச் சொல்லப்படுபவை:
கற்பு:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி 'ஆறிய கற்பி'னை உடையவள் (பா-16). சீறுதற்குரிய காரணம் இருப்பினும் சீற்றமுறாது தணிந்தொழுகும் தன்மையுடையவள்; ஆதலால் ஆறிய கற்புடையவளாம்.
 கற்பு அருந்ததி என்னும் செம்மீனுடன் தொடர்புபடுத்தி பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது. 

"விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த 
செம்மீன் அனையள்நின் தொன்னகர்ச் செல்வி" (பா-31)
என்று களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி புகழப்படுகிறாள் .

"காமர் கடவுளும்  ஆளும் கற்பிற் .......சேயிழை "- (பா- 65) என்னும் புகழ்ச்சி  செல்வக்கடுங்கோ வாழியாதன் மனைவிக்குரியது .  வடமீன் எனப்படும் அருந்ததியை ஒத்தவள் என்பதே  பொருள் . 
“பெண்மை சான்று பெருமடன் நிலைஇக் கற்பு இறை கொண்ட "-(பா- 70) மேன்மையுடையவள் என்று பாராட்டுப் பெறுகிறாள் செல்வக்கடுங்கோ வாழியாதனின்  மனைவி. 
"மீனொடு புரையும் கற்பின் வாணுதல் அரிவை "- (பா-89) என்று  இளஞ்சேரல்இரும்பொறையின்  மனைவியைப் பாடும் போதும் அதே ஒப்புமையையும் பொருளையும் காண்கிறோம்.
 
புறநானூற்றிலும், 
"வடமீன் புரையும் கற்பின் மடமொழி 
அரிவை ....................................." - (பா- 122) என காரியின் மனைவி வடமீனொடு ஒப்புமைப் படுத்தப் படுகிறாள்.
"கடவுள் சான்ற கற்பிற் சேயிழை 
மடவோள் ........................" - (பா- 198) என  பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவியும் போற்றப்படுகிறாள்.

அடக்கம் ,இன்சோல், சிரித்த முகம், சுடர்நுதல் மற்றும் அமர்த்த கண்:
"ஆறிய கற்பின் அடங்கிய சாயல் 
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்து பொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற் 
சுடர் நுதல் அசைநடை ......... " -(பா-16) எனும் அடிகளில்  அடக்கம் பொருந்திய மென்மையும் , ஊடல் காலத்திலும் கூட இன்மொழியே கூறி இனிய முறுவல் காட்டும் பெருமையும் உடையவள் என இமயவரம்பன் மனைவி புகழப் பெறுகிறாள்.அத்துடன் அவளது துவர்வாயின் வாலெயிறூறிய நீர் அமிழ்து போல் மகிழ் செய்வது என்று கூடல்காலத்து இன்பத்தைக் கோடிட்டுக் காட்டியவுடன் அவளது பார்வை எப்படிப்பட்டது என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அவளது கண்கள்  உள்ளத்து வேட்கையை ஒளிப்பு இன்றிக் காட்டுவன என்னும் பொருள்படவே 'அமர்த்த நோக்கு' என்ற தொடர் அமைகிறது. அதாவது தன் வேட்கையை வெளிப்படையாகக் காட்ட மாட்டாள் என்பதாம். அழிவில் கூட்டத்து அயரா இன்பம் செறித்தலால் 'சுடர்நுதல்' உடையவள் என்பதாகவும் பழைய உரை கூறுகிறது. கற்புடைப் பெண்ணுக்குரிய இவ்வைந்து பண்புகள் - பெண்ணோடு கூடி இன்புறும்  ஆண் சமூகத்தின்;- மனைவியோடு கூடி இன்புறும் கணவனின்  எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. 
இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவியும்   "பெருந்தகைக் கமர்ந்த மென்சொல் "(பா-81)உடையவளாக போற்றப்படுகிறாள். பெருமை பொருந்திய பண்பிற்கேற்ற மென்மையான சொற்களைப் பேசுபவள் என்பதே பொருள். முற்சுட்டிய இன்சொல்லே இங்கு மென்சொல் என்று குறிக்கப்படுகிறது. அவன்பால் சென்று ஒடுங்கிய அன்பால்; புலத்தற்குரிய காரணங்கள் இருப்பினும் வன்சொல் பேசாதவள் (பா-89). 

நாணமும் மடமும்:
"பெண்மை சான்று பெருமடன் நிலை இக் 
கற்பு இறை கொண்ட ................" - (பா- 70) செல்வக்கடுங்கோவின்  மனைவி பெண்மைக்குரிய நாணமும், மடமும்  பொருந்தியதால் கற்பிற் சிறந்தாள் என்கிறார்  புலவர். இங்கு பெண்மை என்று சுட்டப்படுவது நாணம்; ஏனெனில் தொடர்ந்து இடம் பெறுவது நாற்பண்புகளில் மூன்றாவதாகிய மடம். அறிந்தும் அறியாதது போன்றிருக்க வேண்டியது - ஆண் வர்க்கத்தின் எதிர்பார்ப்பு.

புறநானூறில் வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவியை "மடவோள் "(பா-198) என்றே அழைக்கிறார். 

பிரிவில் உடல் மெலிதலும், கனவில் இன்புறலும்:
கணவன் வினைமேற் சென்று பிரிந்திருக்கும் காலத்தில் இமயவரம்பன் மனைவி பகலில் பிரிவை ஆற்றியிருந்து இரவில் அரிதாகப் பெற்ற உறக்கத்தில் கனவில் பெற்ற சிறு மகிழ்ச்சி காரணமாக உயிர் தாங்கி இருக்கும்  பெருஞ்சால்பு உடையவளாம் (பா- 19). இதனால் உடல்சுருங்கி; பார்ப்பவரெல்லாம் வருந்திப் பேச அதற்கு நாணம் கொண்டாள் என்றும் புகழப்படுகிறாள். இங்கு கணவன் பிரிந்த காலத்தில் மனைவி உடல் மெலிவது பெருமைக்குரிய செய்தி என்பது நோக்கற்குரியது.
இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவி தன் கனவிலும் அவனை விட்டுப் பிரியாது இன்பப் பயனைப்  பெற்றாள்-(பா-89)     

புதல்வர்ப் பெறல்:
மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செள்ளை தன் கருவில் , 
"எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசுதுறை போகிய
வீறுசால் புதல்வற் பெற்ற "  மையால் விதந்து போற்றப் படுகிறாள்-(பா- 74)
பெருஞ்சேரல் இரும்பொறையின் குடிவழி நீடு வாழ்வதன் பொருட்டு; எண்ணப்படுகின்ற பத்து மாதமும் நிறைவடைய, இருவகை (இயற்கை மற்றும்செயற்கை ) அறிவும் அமைந்து; சால்பும், நடுவுநிலைமையும் உளப்பட பிற நற்பண்புகளாகிய அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலியன நிறைந்து; நாடு காத்தற்கு உரிய அரசியலறிவும் பொருந்திய புதல்வனைப் பெற்றாள் என்பர் பழைய உரைகாரர்.   
புறநானூறும் மகப்பேறைக் கற்புடைப் பெண்ணின் பெருமைகளில் ஒன்றாக வரிசைப்படுத்துவதைக் காணலாம்.இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவி "மணிமருள் அவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர்ப்"-(198) பயந்தவளாகப் பெருமைப் படுத்தப் படுகிறாள்.  

மேற்கூறிய விளக்கங்களால்  கற்புடைப் பெண்ணுக்குரிய பண்புகள் இன்னின்ன என்று பதிற்றுப்பத்துப் புலவர்கள் நோக்கில் நம்மால் தொகுக்க முடிகிறது. இங்கே பெண்ணுக்குக் கிடைத்துள்ள அடையாளங்கள் ஆணின் ஆதிக்க மொழியின் புனைவுகள் என்கிறார் முனைவர் க.பஞ்சாங்கம் (பெண்- மொழி -புனைவு -ப.-70) அவையாவன :
1) அடக்கம்
2) இன்சோல்
3) சிரித்த முகம்
4) கணவன் மேல் கொண்ட காதல்வேட்கையை வெளிக்காட்டாமை
5) கணவனோடு அழியாக் கூட்டத்திலும் அயராமை 
6) நாணம்
7) மடமை
8) கணவனைப் பிரியின்  உடல் மெலிதல்
9) பிரிவுக் காலத்தில் கனவில் கணவனோடு மகிழ்தல்
10) ஏற்ற வாரிசாக புதல்வரைப் பெறல்  முதலியனவாம்.

காக்கைப்பாடினியாரின் பெண்மொழி :
பெண்டிருக்குரிய பத்து பண்புகளாக ஏழு புலவர்கள் பாடுவதினின்று மாறுபட்டு காக்கைப்பாடினியாரின் பாடற்பொருள் அமைகிறது. அவர்  ஆண்களின் மதிப்பீடுகளைத் தலைகீழாக மாற்றுகிறார்(பெண்ணெனும் படைப்பு -ப.118). இவரது பாடலில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் விறலிக்குத் தலைக்கை கொடுத்து துணங்கை ஆடியது கண்டு அவன்  மனைவி ஊடல் கொள்கிறாள்.  அவள் பேரியல் அரிவை; அதனால் அவளது பார்வையில் குளிர்ச்சியும் இருந்தது. ஆனாலும் சினத்தால் அவள் விரைந்து நடக்கிறாள். காலில் அணிந்திருந்த கிண்கிணி அச்சினத்தை வெளிப்படுத்தி ஒலித்தது. கரையை அலைக்கும் நீர்ப் பெருக்கால் அசையும் தளிர் போல அவளது உடல் கோபமிகுதியால் நடுங்கியது. தன் கையிலிருந்த சிறுசெங்குவளை மலரை அவன் மீது எறிய ஓங்கினாள். அவன் ' ஈ ' என்று இரந்து நின்றான். அவள் சினம் தணியாமல் 'நீ என்பால் அன்புடையை அல்லை' என்று சொல்லி அகன்றாள். பல எதிரி வேந்தர்களின் வெண்கொற்றக் குடையையும், எயிலையும் தன் கையகப்படுத்திய அவனால் தன் மனைவியின் கையிலிருந்த குவளை மலரைக் கையகப்படுத்த இயலவில்லை(பா-52).
இவர் பெண்பாற் புலவர்; ஆதலின்,  இவரது பாடல்மொழியில் ஆண்களின் எதிர்பார்ப்பு இல்லை. ஊடலில் பெண்கட்கு இயல்பாக எழும் வெகுளியையும், படபடப்பையும் தயக்கமின்றிச் சித்தரிக்கிறார். ஊடும்போது மகளிர் தம் சினத்தை வெளிப்படுத்துவதால் அவர்களது நற்பண்பிற்கு இழுக்கு ஆகாது என்று கூறுவதற்கு ஏற்ப காட்சிப்படுத்துகிறார். இங்கே இன்சொல் இல்லை; இனிய முறுவல் இல்லை;  ஊடலை மறைக்கும் அடக்கம் இல்லை;  நாணம் இல்லை; மடமை இல்லை. குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் மனைவியிடம் இருந்ததாகப் பாடும் 'ஆறிய கற்பு' ஆண்களின் எதிர்பார்ப்பே அன்றி இயற்கை அன்று என்பதை காக்கைப்பாடினியாரின் பெண்மொழி நிறுவுகிறது.   

மதிப்பீடு :
இது காறும் கண்டவற்றான் பதிற்றுப்பத்தைப் பாடியுள்ள ஏழு ஆண்பாற் புலவர்கள் அரச மகளிரைப் போற்றும் போக்கிற்கும்;  பெண்பாற் புலவரான காக்கைப்பாடினியார் போற்றும் போக்கிற்கும் அடிப்படையில் அமைந்துள்ள வேறுபாடு புலப்படுகிறது. பெண்ணை ஐம்புலன் இன்பத்திற்கு  உரிய பொருளாகப் பார்க்காமல் நற்பண்புகளையும்,பிற பெருமைகளையும் முன்னிலைப்படுத்துவது பெண்மொழியாக அமைகிறது. மேனியெழிலைப் பாடுதற்கும்; அலங்காரத்திற்கு சிறப்பிடம் அளிப்பதற்கும்; அதாவது தோற்றச் சிறப்பிற்கும்  பெண்மொழி மிகச் சிறிதளவே இடம் கொடுத்துள்ளது. கற்பிற்குரிய பண்புக்கூறுகளாக ஆண்கள் கூறும்  நாணம், மடமை, அடக்கம், இன்சொல், இனிய முறுவல் ஆகியவற்றை பெண்மொழி ஒதுக்கியுள்ளது. மரபு வழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைத்தெறிவதே பெண்ணியத் திறனாய்வு என்பார் முனைவர் இரா.பிரேமா(மேலது -ப.-87) இக்கட்டுரையில் காக்கைப்பாடினியார் எவ்வாறு பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைக்கிறார் என்று கண்டோம். 

முடிவுரை:
பெண்மை, கற்பு முதலிய கொள்கைகள் ஆண்பாலினரின் எதிர்பார்ப்புக்கேற்ப உருவாக்கப்பட்டவை. நடைமுறை வாழ்க்கையில் அவற்றால் பெண்பாலாருக்கு மிகுந்த சோதனைகள் உண்டாகின்றன. இயற்கையான ஆசைகளையும், உணர்வுகளையும் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட வேண்டிய சூழலை அக்கோட்பாடுகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பற்றிப் பாடும்போது அக்கொள்கைகள் காலாவதியாகி நீர்த்துப் போவதை காக்கைப்பாடினியாரின் பாடல்கள் உணர்த்தியுள்ளன. 1975ம் ஆண்டு ஆனிட் கொலொட்னியன் வெளியிட்ட Critical Inquiry என்ற கட்டுரை பெண் படைப்பாளர்களின் நோக்கையும் ,போக்கையும் இனம்காட்டுதல்; அவர்களது படைப்புகள்  ஆண் படைப்புகளிலிருந்து வேறுபடும் பாங்கை இனம்காட்டுதல் என்ற திறனாய்வுக் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது(இரா.பிரேமா -மேலது-ப.-91).  சங்க இலக்கியத்திலுள்ள ஒவ்வொரு பெண்பாற்புலவரின் பாடல்களையும் இத்தகைய ஆய்விற்கு உட்படுத்தும் போது; பெண்கள் அன்று தொட்டுப் போராடுவது புலப்படும்.                                                                                                                            துணைநூற்பட்டியல்:
இலக்கியங்கள்:- 
1)பதிற்றுப்பத்து - கழக வெளியீட்டு எண் - 523 - முதல் பதிப்பின் மறு அச்சு -2007
2)புறநானூறு - கழக வெளியீட்டு எண் - 438 - முதற் பதிப்பின் மறு அச்சு - 2007
3)புறநானூறு -கழக வெளியீட்டு எண் - 598 - முதற் பதிப்பின் மறு அச்சு - 2007
ஆய்வு நூல்கள்:
4)அரங்க மல்லிகா -பெண்ணின் வெளியும் இருப்பும் -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை .-முதற்பதிப்பு -2008
5)பஞ்சாங்கம்,க.-(மொ.பெ.ஆ.)-பெண்ணெனும் படைப்பு -செல்வன் பதிப்பகம் ,சென்னை.-1994
6)பஞ்சாங்கம் ,க.-'பெண்-மொழி-புனைவு'- காவ்யா பதிப்பகம்,சென்னை .-1999
7)பிரேமா,இரா.-பெண்ணியம்- உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை.-முதற்பதிப்பு -1994
8)தமிழிலக்கியத்தில் பெண்ணியமும் தலித்தியமும் -ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்,மதுரை.-முதற்பதிப்பு -2000

இதழ்:-
9)காவ்யா -தமிழிதழ் -ஏப்ரல் -ஜூன் 2018-சு.சண்முகசுந்தரம் ,சென்னை.
________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)Saturday, July 28, 2018

கவிதையில் பயின்றுவரும் பாவகை

——    வலங்கைமான் இராம.வேல்முருகன்


முன்னுரை:
கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த மொழியான நமதன்னைத் தமிழ்மொழியில் ஆதிகாலந்தொட்டே கவிதைகளில் பாவகைகள் எவ்வாறு அமைந்துவந்தன என்பதையும் தற்போது அவற்றின் நிலை என்ன என்பது பற்றியும் சற்றே ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகக் கொண்டு சங்க காலம் முதல் தற்போதைய காலம் வரை ஒருசில கவிதை நூல்களில் இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்த பாவகைகளை மட்டும் சற்றே விளக்கமாகக் காண்போம்.

சங்ககாலப் பாடல்களில் பாவகைகள்: 
பெரும்பாலான சங்ககால பாடல்களில் ஆசிரியப்பா வகைகளே பயன்படுத்துப்பட்டுள்ளன.  ஆசிரியப்பா அந்தக் காலகட்டத்திலும் தற்பொழுதும் கூட மிக எளிமையாக எழுதக் கைவரும் என்பதாலும் சந்தம் இசை போன்றவை இதற்குத் தேவையில்லை என்பதாலும் இப்பாவகைப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. அகநானூறு புறநானூறு பாடல்களில் காதலானாலும் வீரமானாலும் இப்பா வகைதான் துணைசெய்துள்ளது.  ஆசிரியப்பாவின் அனைத்து வகைகளும், நிலைமண்டில, அறிமண்டில, நேரிசை ஆசிரியப்பா வகைகளே பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன.  ஈரசைச் சீர்களை வைத்து எழுதுவது எளிதாக கைவரப் பெற்றதால் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்.

எட்டுத் தொகை நூல்களில் அகப்பொருள் பாடிய ஐந்து நூல்களில் 13 அடி முதல் 31 அடி வரை உள்ள நானூறு பாடல்களின் தொகுப்பு அகநானூறு எனவும் 9 அடி முதல் 12 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் நற்றிணை எனவும் 4 முதல் 8 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் குறுந்தொகை எனவும் 3 முதல் 5 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் ஐங்குறுநூறு எனவும் தொகுக்கப்பட்டன.  சேரநாட்டரசர் பதின்மரைப் பற்றி பதிற்றுப்பத்தும் சங்க கால மன்னர்கள் சிற்றரசர்களைப் பற்றியும் அவர்களது வீரம் பற்றியும் பாடப்பட்ட நானூறு பாடல்கள் புறநானூறு எனவும் தொகுக்கப்பட்டன.  இவையாவும் ஆசிரியப்பா வகையானாலும் பரிபாடல் கலித்தொகை இரண்டும் இனிய ஓசை நயம் மிகுந்த செய்யுட்களால் ஆக்கப்பட்டவையாகும்.

திருக்குறள்- நாலடியார்:
திருக்குறளில் குறள்வெண்பா பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது உலகறிந்த உண்மை. இரண்டு அடிகளில் உலகை அளந்த ஒப்பற்ற நூலாகத் திருக்குறள் சிறப்பதற்கும் வியப்பதற்கும் குறள் வெண்பாவில் அந்நூல் அமைந்ததும் ஒரு காரணமாகும்.  குறள்வெண்பாவில் சிறந்த ஒரு நூலாகவும் ஈடு இணையற்ற நூலாகவும் திகழும் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் யாதொரு குறள்வெண்பாவில் எழுதப்பட்ட நூலும் இல்லை என்றே சொல்லலாம். வெண்பாவில் எழுதப்பட்ட நாலடியார் போன்ற நூல்களும் சிறப்புற்ற நூல்களே.

சிலப்பதிகாரம்:
இளங்கோவடிகளே செய்யுள் வகைகளில் புதுமை செய்தவர் எனச் சொல்லலாம். அவருக்கு முற்பட்ட புலவர்கள் அகவலையும் வெண்பாவையுமே பெரும்பாலும் கையாண்டு வந்தனர்.அதன்பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் என்ற நிலையில் பெரும்பாலான பாடல்கள் அமைந்திருந்தாலும் அவை ஆவணப்படுத்தப்படவில்லை.  ஆனால் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் புதிய பலவகைச் செய்யுள் வடிவங்களைக் கையாண்டுள்ளார்.  கடற்கரையில் பாடும் இசைப்பாடல்களைக் கொண்ட கானல்வரியிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவற்றிலும் அந்தந்தப் பகுதியில் வழங்கிய நாட்டுப் பாடலிலிருந்தே புதிய செய்யுள் வடிவங்களைத் தந்தார். ஆனால் இதனுடன் இரட்டைக் காப்பியமாகச் சிறப்பிக்கப்படும் மணிமேகலையில் அகவல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பக்திஇலக்கியங்களில் பாவகை:
பிற்காலத்தில் வந்த பக்தி இலக்கியங்களில் இசைப்பாடல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.  திருக்கோயில்களில் இறைவனைப் பாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.  ஒரே மாதிரியான நடையில் அமைந்த மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம் அதற்குப் பின்வந்த பக்தி இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்றால் மிகையாகாது.  ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைப் பாடல்களாகவே அனைவரும் பாடும் வகையில் பாடல்களைப் பதிகங்களாகவும் பாசுரங்களாகவும் எழுதிவந்தனர்.  புதிய இலக்கிய வகைகள் இடைக்காலத்தில் தோன்றின.அவற்றில் பலவகையான செய்யுள்களும் பயன்படுத்தப்பட்டன.  கலம்பகங்களில் வெவ்வேறு வகையான செய்யுள்வகைகள் நிறைந்த நூறு பாடல்கள் இடம்பெற்றன.  அந்தாதி வகையிலும் செய்யுள்கள் யாக்கப்பட்டன.  யமகம் எனும் சொல்லணிகளை அமைத்தும் புலவர்கள் பாடியுள்ளனர்.  பின்னர் பரணி எனப்படும் நூல்வகையில் இரண்டிரண்டு அடிகளாலான தாழிசை எனும் செய்யுள்வகைப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

விருத்தம்:
சீவக சிந்தாமணியில் விருத்தம் என்ற பாவகை பயன்படுத்தப்பட்டது என்றாலும் கம்பராமாயணத்தில் தான் விருத்தம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.  சூளாமணியும் வளையாபதியும் விருத்தப்பாவால் அமையப்பெற்றவையே;  பின்னர் நாயன்மார்களின் வரலாற்றைப் பாடிப்புகழ் பெற்ற சேக்கிழாரும் விருத்தப் பாவகையைத்தான் பின்பற்றியுள்ளார்.  வில்லிப்புத்தூரார் எழுதிய பாரதமும் விருத்தப்பாக்களினால் ஆனதேயாம்.  பின்னர் சந்தப்பாடல்கள் எழுதப்பட்டன.  அருணகிரிநாதர் சந்தப்பாடல்கள் எழுதுவதில் சிறந்து விளங்கினார்.  16 ஆம் நூற்றாண்டில் புகழேந்தி என்பவர் வெண்பாவைப் பயன்படுத்தி நளவெண்பாவைப் படைத்துள்ளார்.  காளமேகப்புலவர் பழைய இலக்கிய மரபை ஒட்டி நூல்கள் எழுதியுள்ளார்.  சிலேடையிற் சிறந்த காளமேகம் வெண்பாவையே பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார்.  பிற்காலத்தில் வந்த தாயுமானவர் இரண்டு அடிப்பாடல்களான கண்ணிப்பாடல்களைப் பாடியுள்ளார்  389 கண்ணிகள் கொண்ட பராபரக்கண்ணி இவர் பாடியதே.

இராமலிங்க அடிகளார்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அனைத்துவகைச் செய்யுள்களுமே கையாளப்பட்டுள்ளன.  இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்களில் அகவற்பாக்கள் விருத்தங்களோடில்லாமல் இசைப்பாடல்களின் வடிவங்களான கும்மி, சிந்து, கண்ணி மற்றும் கீர்த்தனைகளும் காணப்படுகின்றன.  பின்பு  வந்த பெரும்பாலான கவிஞர்கள் இசைப்பாடல்கள் கீர்த்தனைகளையே பாடியுள்ளனர்.

பாரதியார்:
பாரதியார் வந்தபிறகுதான் பாடல்களில் புரட்சியும் வந்தது.  சந்தப்பாடல்களுக்கு முன்னோடி என்றே பாரதியைச் சொல்லலாம்  அருணகிரிநாதர் சந்தப்பாடல்களைப் பாடினாலும் சாதாரணப் பாமரமக்களைச் சென்றடைந்தவை பாரதியின் பாடல்களே.  விருத்தப்பாடல்கள் சந்தப்பாடல்கள் இசைப்பாடல்கள் நொண்டிச்சிந்து என எல்லா வகைப் பாடல்களையும் எழுதிச் சிறந்தவர் பாரதியாரே.  இவருக்குப் பின் வந்தவர்களும் பெரும்பாலும் இவரைப் பின்பற்றியே எழுதிவந்துள்ளனர்.  அறுசீர் எழுசீர் மற்றும் எண்சீர் விருத்தப்பாடல்களையே பெரும்பாலானோர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முடிவுரை:
எந்தவகைப் பாவகையாக இருப்பினும் சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதுவதே சிறந்தது. எனினும் ஒரு கவிஞன் என்பவன் அனைத்து வகைப் பாவகைகளையும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இதுவே தமிழ் மரபை என்றும் காக்கும் வழிகளில் ஒன்றாகும்.
வலங்கைமான் இராம. வேல்முருகன்

Sunday, July 15, 2018

உலகமெங்கும் தமிழுக்குத் திருவிழாக்கள்

வணக்கம்.

2018ம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்து மறுபாதி ஆண்டில் பயணத்தைத் தொடர்கின்றோம். உலகளாவிய தமிழர்களின் செயல்பாடுகளாகத் தமிழ் ஆய்வுகள் தொடர்பான குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் கடந்த சில வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க முயற்சிகளாக இரண்டு நிகழ்வுகளைக் காண்கின்றோம்.


முதலில், இவ்வாண்டு மே மாதம் கம்போடியாவின் வரலாற்றுப் புகழ்மிக்க சியாம் ரீப் அங்கோர் பகுதியில் முதலாம் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது. இங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களா என வந்தோரை வியப்பில் ஆழ்த்தி, வியட்நாம், பாப்புவா நியூகினி, பிலிப்பைன்ஸ், பர்மா, தாய்லாந்து, இந்தோனீசியா எனப் பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில் கம்போடிய அரசின் பிரதிநிதிகளும் கம்போடியப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். ஆண்டுதோறும் தமிழர் ஒன்று கூடும் ஒரு ஆய்வுத்தளத்தை அமைக்கும் முயற்சியாக இந்த மாநாடு திகழ்ந்தது.

அடுத்த நிகழ்வாக நாம் காண்பது இந்த ஆண்டின் மாபெரும் தமிழர் திருவிழாவாகக் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழா. ஏறக்குறைய 5500 பேர் கலந்து கொண்ட இந்த மாபெரும் விழா மூன்று நாட்கள் வர்த்தகம், தமிழர் வாழ்வியல், ஆய்வு, வரலாறு, கலை எனப் பல பரிமாணங்களில் பல்வேறு அரங்குகளில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டு நிகழ்வின் மைய அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோயிலின் வடிவம், மாநாடு நடைபெற்ற அரங்கில் நடுநாயகமாகத் திகழ்ந்தது. முதல் நாள் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கிலும் சரி, பின்னர் மாலையில் தொடங்கப்பட்ட விருந்து நேரப் படைப்புக்கள், மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கிய சிறார்கள், உச்சரிப்புச் சிறப்புடன் பேசி தமது திறனை நன்கு வெளிப்படுத்தினர். அடுத்த தலைமுறையைச் சரியாக உருவாக்குவதுதான் இந்தத் தலைமுறையின் தலையாய கடமை என்பதற்குச் சான்றாக இது அமைந்தது.

மாநாட்டின் ஆரம்ப நாள் தொடங்கி நிகழ்ச்சியில் பறையோசை கேட்டுக் கொண்டிருந்தது. ஆடாத கால்களையும் ஆட வைக்கும் தன்மைகொண்டது அல்லவா பறையிசையும் நடனமும். மேலும் பரதக்கலையில் சிறந்த கலைஞரான நர்த்தகி நடராஜனையும் வரவழைத்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருந்தனர் பேரவை ஏற்பாட்டுக் குழுவினர். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கூத்துக் கலை, நாடகம் எனத் தமிழர் கலைவளத்தின் பல பரிமாணங்களை வந்திருந்தோர் கண்டு மகிழ்ந்தனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு வெற்றியடைந்ததைப் பாராட்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக, கனடா டொரொண்ட்டொ, பாஸ்டன், ஹூஸ்டன் எனத் தொடரவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பும் இவ்விழாவில் வழங்கப்பட்டது. உலகின் பல பாகங்களில் திடமான தமிழ் ஆய்வுகள் தொடர இது வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை இது உறுதி செய்தது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பேரவையின் 32வது விழா பற்றிய கலந்துரையாடல் ஒரு அங்கமாக இவ்விழாவில் அமைந்தது. அரசியல் கலப்பின்றியும் தலையீடு இன்றியும் இது நடைபெறும் எனப் பொறுப்பாளர் பேரா.மருதநாயகம் கூறியது வரவேற்கத்தக்க ஒன்றாகவே கருதுகிறேன். ஒரு அரசியல் தலைமையை அழைத்தால் தான் மாநாடு சிறக்கும் என்ற பார்வையை உடைத்து, இனி தமிழ் ஆய்வுக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் ஆய்வாளர்களால், ஆய்வு நோக்கத்தோடு மட்டுமே முன்னெடுக்கப்படும் முயற்சிகள் பெறுக வேண்டும்.

நெசவாளர்களின் மனிதக்குலத்திற்கான பங்களிப்பான கைத்தறி தயாரிப்புகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தமிழகத்தில் இஸ்லாமிய மரபுகளின் வரலாற்றுப் பதிவுகள், தமிழ் ஆவணப் பாதுகாப்பிற்கான அவசியம், எனத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்புக்களுக்கு பேரவை வாய்ப்பு வழங்கியிருந்தது.

தமிழுக்குத் திருவிழாக்கள் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் எல்லா நாடுகளிலும் நடப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பு. இந்த முயற்சிகள் மேன்மேலும் வளர வேண்டும்; தமிழின் வளத்தை உலகறியச் செய்ய வேண்டும்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி


படம் உதவி: FeTNA FACEBOOK PAGE

வியப்புக்குறிக்குச் சொந்தக்காரர்——    முனைவர் ச.கண்மணி கணேசன்.


இன்று ஜூலை 15...கல்வித் திருநாள் .
பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள்.
என் பிள்ளைமைப் பருவத்தில் ....
அன்று நான் படித்த பள்ளியில் ஆண்டு விழா.
முத்து வெள்ளையும் ரோஸ் பவுடரும் கலந்து கிலிசெரின் உடன்சேர்த்து முகமெல்லாம் பூசிவிட்டு; கண்மைப்பூச்சு ,உதட்டுச் சாயம் எல்லாம் தடவிவிட்டு ஆசிரியர் சென்றுவிட்டார். "யாரும் வெளியே வரக்கூடாது."  இந்த ஆணையை மீற  அந்தக்காலம் எங்களில் யாருக்கும் துணிவு கிடையாது.
பூட்டிய கதவுகளுக்குள்  இருந்துகொண்டே தான் எங்கள்  ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம். கிரீன் ரூமின் ஜன்னல் வழியாக விழா மைதானத்தைப் பார்த்தோம். அந்தக் கருத்த மனிதருடன் ஒரே ஒரு காக்கிச்சட்டை; கையில் கோலுடன். பக்கத்தில் பள்ளிப் பெரிய டீச்சர் ,நிர்வாக உறுப்பினர்கள் மூன்று பேர். புதிதாகக் கட்டிய விடுதியைப் பார்வையிட்டு வரும் அவர்களுக்குப் பின்னால் ..........
கறுப்புப் பூனைப் படையோ ;போலீஸ் பாதுகாப்போ எதுவுமில்லை.
மலர்க்  கிரீடம் இல்லை
மேடை அலங்காரம் இல்லை
கட்  அவுட் தட்டிகள் எதுவும் இல்லை.
பறக்கும் பலூனில் பெயர் போடவில்லை
அலங்கார வளைவு ஒன்று கூடக் காணவில்லை.
நடக்கும் பாதையில் பூமெத்தையும் போடவில்லை .
 பாதையில் வண்டி வாகனம் எதுவும் தடுக்கப்படவில்லை .
வெள்ளைக்கார்களை வேண்டிக்கேட்டு சாரிசரியாய்  முன்னும் பின்னும் ஓடவிட்டுச் சாதிக்கவும் இல்லை.

பாதுகாப்பு கேட்டு ஸ்டண்ட் செய்யாத அரசியல்வாதி
பதவி ஏற்றவுடன் ஃ பாரின் மருத்துவமனைக்குப் பறக்காதவர்
இருண்டு  கிடந்த கிராமங்களில் எல்லாம் ஒளி விளக்கு ஏற்றியவர்.
உள்ளக்கோட்டம் அற்ற உண்மைத் தலைவர்.
தன்னலம் பேணாத தருமத்தின் காவலர்
கண்ணியம் மாறாத கடமை வீரர் 
காந்திவழி நின்ற கதராடை மனிதர்
மதிய உணவு என்னும் மகத்தான திட்டத்தை மாணவர் உலகிற்கு அறிமுகம் செய்தவர்.
ஓராசிரியர் பள்ளியேனும் ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒருங்கு திறந்து வைத்தவர்
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இளைய சமுதாயத்தில் இருக்கக் கூடாது என்று பள்ளிச்சீருடைத்  திட்டத்தைக் கொண்டு வந்த செயல்வீரர்.

இவர் இருந்தபோதும் சரி; இறந்த போதும் சரி; இவர் குடும்பத்தில் சொத்துச் சண்டையே  இல்லை. ஏனென்றால் பினாமியே இல்லை.
இப்படி ஒரு தலைவர் இருந்தார் என்று சொன்னால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னால் யாரும் நம்புவார்களா?ஐயம்  தான்.
இன்று ஞாயிற்றுக் கிழமை. ஆனால் எல்லாப் பள்ளிகளும் பாடம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. விடுமுறை விட்டால் தான் கொண்டாட்டமென்ற நிலை மாறி வகுப்பு நடத்திக் கொண்டாடுகின்றனர். வரவேற்கத் தகுந்த மனமாற்றம்.
நீ பிறந்த வீடும் சரி; அந்தத் தெருவும் சரி; இன்றும் என்றும் அமைதியில் மூழ்கித்தான் மூச்சடக்கி இருக்கிறது.

ஆண்டுவிழா மேடையில் நீ அமர்ந்த அந்த ராஜா சேர் ;அதற்கு நீல நிறத்தில் ஒரு சட்டை தைத்து கைகள், சாய்மானம், இருக்கை  எல்லாம் மூடித்தான் பக்குவமாக வைத்து இருந்தார் தையல் டீச்சர். எங்கள் குழந்தைப்பருவத்து ஆசை ....ஆசிரியர் பார்க்காத நேரத்தில் ஒரு நொடி அந்த சேரில் அமர்ந்து  எழுந்து பெரிய்ய்ய்ய சாதனை புரிந்த மகிழ்ச்சியில் பூரித்து மகிழ்ந்தோம். 


________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)Saturday, July 14, 2018

கொரியாவின் தமிழ்ராணி - மதிப்புரை——    ஜா. கௌதம சன்னா
நூல்:  'கொரியாவின் தமிழ்ராணி'
ஆசிரியர்: பேராசிரியர் நா கண்ணன்
வெளியீடு: ஆழி பதிப்பகம்


இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராகத் தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியகால போக்கு. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஜெர்மானியர்கள் உள்ளிட்ட மேற்கத்திய முன்னோடிகள் இந்திய வரலாற்றினை எழுதும் வாய்ப்பை உருவாக்கினார்கள். இந்தியாவைப் புரிந்து கொள்ளும் நோக்கில் அவர்கள் பார்வையில் எழுதப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு காலப்போக்கில் நவீன இந்திய வரலாற்றின் ஒரு வழக்கமாகவும் பழக்கமாகவும் மாறிவிட்டது. இதன் பலன் என்னவென்றால் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது அதிகாரம் செலுத்தியவர்கள் பார்வையில் பார்க்கு­­ம் ஒரு அதிகாரத்துவ வரலாற்றுப் பதிவு உருவானதும், அந்தப் பார்வைக்கு இந்தியப் படிப்பாளிகளும் பலியானதுதான். இது இந்தியாவிற்கு பெரும் இழப்பு என்பதை அந்த வரலாற்று ஆய்வாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றால் அது மிகையாகாது.

அந்த வரலாற்று இழப்பின் விளைவு என்ன..?

கூர்ந்து நோக்கும்போது, இந்திய வரலாற்றினை எழுதுவதற்கும் புனைவதற்கும் உள்ள இடைவெளியில் எது ஆதிக்கம் செலுத்தும்? நிச்சயமாகப் புனைவுதான். அதுதான் இந்திய படிப்பாளிகளிடம் ஆதிக்கம் செலுத்தும். இது ஒருவகையில் ஒரு தொன்மத் தொடர்பு. இந்த தொன்மத் தொடர்பு வெறும் கற்பனை சார்ந்ததல்ல, அது ஆற்றுப்படுத்தும் மனநிலையைச் சார்ந்தது. இந்த மனநிலை எதைச் சாதித்ததென்றால், நீண்ட காலமாக இந்தியத் துணைக்கண்டம் அந்நியர்களின் அதிகாரப் பிடியில் சிக்கியிருந்தது என்கிற தாழ்வெண்ணமும், ஆங்கிலேயர்கள் காலத்தில் அது உச்சத்திற்குப் போய் விடுதலைப் பெறப்பட்டது என்கிற புரிதலிலும் எழுதப்பட்டு ஆற்றுப்படுத்திக் கொண்டது. இதன் தொடர் விளைவாய், இந்திய வரலாற்றின் திசை பெரும்பாலும் மேற்கு நோக்கியே கட்டமைக்கப்பட்டது அல்லது புனையப்பட்டது. மேற்கத்திய நாடுகளைவிடப் பண்பாட்டிலும், வரலாற்றிலும் சிந்தனைகளிலும் மற்றும் இன்ன பிற அம்சங்களிலும் நாங்கள் மேம்பட்டவர்கள் எனும் போட்டியிலும் போய் முடிந்து. இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவேதான் இது ஒருவகை எதிர் அடிமை மனநிலை என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்த விழைகிறேன்.

எனவே, மேற்கிலிருந்து நாம் இன்னும் விடுதலைப் பெறவில்லை. நீண்டகால அடிமைத்தனத்தின் தொன்மத் தாக்கத்தின் விளைவு ஒரு பக்கம் இருக்கிறதென்றால், இந்தியத் துணைக் கண்டத்தின் சுதந்திரமான சிந்தனைவெளி என்பது இன்னமும் ஒளிப் பொருந்தியதாக, மாண்பு மிக்கதாக விளங்கிக் கொண்டிருக்கும் அந்தத் திசையினை நோக்கி நவீன இந்திய வரலாறு திருப்பியிருக்குமானால் ஒரு வேளை வரலாற்றின் போக்கு மாறியிருக்கலாம். அப்படியானால் அது எந்தத் திசை?

அதுதான் கிழக்கு..!

இந்திய வரலாற்றின் பெருமையும் மாண்பும் பன்னெடுங் காலந்தொட்டுக் கிழக்கில்தான் இருக்கிறது. மேற்கில் இல்லை. ஆசிய சோதி என்று அழைக்கப்பட்ட புத்தர் அந்தப் பெருமையை உருவாக்கியவர். அவரது ஒளி பொருந்திய சுதந்திரமான சிந்தனைப் போக்குகள் அவரின் பின்னடியார்கள் மூலம் கீழைத் தேசங்களுக்கும், மேற்கு தேசங்களுக்கும் போய்ச் சேர்ந்தன. இசுலாம் மற்றும் கிறித்துவ பரவலாக்கங்களினால் மேற்கில் தமது இருப்பைப் பௌத்தம் இழந்துவிட்டது. ஆனால் கிழக்கு எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி தமது பௌத்த அடிப்படையினைக் காத்துக் கொண்டது. அந்தவகையில் இந்தியத் துணைக் கண்டம் வழங்கிய பண்டைக்காலப் பண்பாட்டுக் கொடைகளைப் பேணிக்காத்து வருகிறது. அதில்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் பெருமை இன்னும் கிழக்கில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்திய இந்தியவியல் ஆய்வாளர்கள் என்ன செய்தார்கள்? தமது மேற்கத்திய அடிமைத்தனம் தந்த சிந்தனையினால் கிழக்கு உலகை முற்றாக மறந்தார்கள். அதற்குக் காரணம் நவீன சிந்தனைகள் மட்டுமல்ல, பௌத்தத்தின் மீது சனாதன இந்து சிந்தனையாளர்களுக்கு இருந்த வெறுப்பும் தான் காரணம். விளைவாய் இந்தியாவிற்குக் கிடைக்க வேண்டிய அல்லது கோர வேண்டிய பெருமையை மறந்தார்கள். எனவே வெறுப்பு கட்டமைத்த இந்திய வரலாறு அடிமைத்தனத்தோடு தொடர்கிறது.

இதில் இன்னோர் அம்சம் என்னவென்றால், கிழக்கு நோக்கிய இந்த இந்திய வரலாற்றின் தொடக்கம் புத்தரிலிருந்து ஒரு கதிர் தொடங்குகிறது என்றால் மற்றோர் கதிர் தமிழகத்திலிருந்து தொடங்குகிறது. அல்லது தென் மொழியிலிருந்துதான் தொடங்குகிறது. புத்தர் பேசிய மாகதி மொழி தமிழுடன் நெருங்கியத் தொடர்பிருந்த மொழி என்று தற்காலத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது என்பது ஒரு தற்செயலானதாக இருக்க முடியாது. பௌத்தம் வட இந்தியாவில் அழிக்கப்பட்ட பிறகு அதன் செழுமைமிக்க இலக்கியங்கள் தமிழில்தான் அதிகம் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி பௌத்தத்தின் மிக முக்கிய பிரிவும் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பாலும் பின்பற்றப்படும் ஜென் பௌத்தத்தின் மூலவடிவம் தமிழகத்திலிருந்துதான் போதிதர்மர் மூலமாகப் போய் சேர்ந்தது. இந்த வரலாற்றினை அங்கு இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். போதிதர்மர் தான் தென்கிழக்காசிய நாடுகளின் மிக முக்கிய பானமான தேநீரினை கண்டுபிடித்தவர் என்பதும் கூடுதல் செய்தி. தமிழகத்தின் பௌத்த துறவிகளும், கடலோடி வியாபாரிகளும், கடற்கரையோர பாதசாரி பயணிகளும் பௌத்தத்தினைத் தென்கிழக்காசிய நாடுகள் தோறும் கொண்டுபோய் சேர்த்தார்கள் என்கிற விவரம் எல்லாம் வெறும் வரலாற்றுக் குறிப்புகளல்ல. அது சுதந்திரமான சிந்தனைப் பரிமாற்றத்தினைக் கிழக்கிற்குக் கொண்டுபோய் சேர்த்த வரலாறு. எனவேதான் அது இந்தியாவின் மாண்புமிக்க திசை என்று குறிப்பிடுகிறேன். கெடுவாய்ப்பாக, வட இந்தியர்களின் ஆதிக்கத்திலும், தீவிர இந்து பக்தி கொண்ட பார்ப்பனர்களாலும் எழுதப்பட்ட இந்திய வரலாறு தமிழகத்தின் எல்லா மூல வரலாற்று வளங்களையும் புறக்கணித்தது. அதற்குக் காரணம் இந்தியாவின் பெருமைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் பௌத்தத்தின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பே.

காலங்கள் போய்விட்டன. பழைய மண்டைகள் மரித்து புதிய சிந்தனைகளும் போக்குகளும் உருவாகிவிட்ட இக்காலத்தில், கிழக்கின் மீதான பார்வைகள் மாறத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் பெருமையைக் கிழக்கில் தேடும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் பேராசிரியர் டாக்டர் நா.கண்ணன் அவர்கள் எழுதிய ஆழி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “கொரியாவின் தமிழ்ராணி” எனும் இந்த நூலினைக் காண்கிறேன்.

கொரிய தமிழகத் தொடர்பில் அவர் உருவாக்கியுள்ள ஆய்வு குறிப்புகளின் தொகுப்பாக வெளிவரும் இந்நூல் நல்ல தொடக்கம் என்றே நினைக்கிறேன். ஒரு சுற்றுச்சூழல் அறிவியல் விஞ்ஞானியாக கொரியாவிற்குப் போன நா.கண்ணன் அவர்கள் ஒரு சமூக அறிவியல் விஞ்ஞானியாக மாறிய கதையோடு தொடங்குகிறது இந்த கொரியாவின் தமிழ்ராணி நூல்.

நூலின் உள்ளடக்கம் எளிமையானது. அதே நேரத்தில் வலிமையானது. அது கையாளும் வரலாற்றுக் களம் சவால் நிறைந்தது. கொரியாவின் தொன்மைக்கும் அதன் எழுத்து முறைமைக்கும் தமிழகமே மூலம் என்னும் வரலாற்று உண்மை இந்தியாவின் தொன்மை வரலாற்றின் மீது ஒரு புத்தொளியைப் பாய்ச்சக்கூடியது. தமிழகத்திலிருந்து போன ஒரு பெண் கொரிய அரசனை மணந்து, அதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றையும், கொரிய எழுத்து அமைப்புகளையும் உருவாக்க மூல காரணமாகிறாள் என்பதை தமது ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார் கண்ணன். கொரியாவிற்குப் போன பெண் அயோத்தியிலிருந்துதான் போனாள் என்கிற கட்டுக்கதையை உடைத்து, அந்தப் பெண் தமிழ் பெண்தான் என்பதை நிறுவியதின் மூலம் கிழக்கு திசை நோக்கும் இந்திய வரலாற்றின் விசைக்குப் புத்துயிர் கிடைக்கிறது.

அதே நேரத்தில் இந்தப் புதிய ஆய்வின் மீது எனது சில கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என நினைக்கிறேன். கொரியாவிற்குப் போன பெண் மாமல்லப் புரத்திலிருந்துதான் போயிருக்க வேண்டும் என்கிற கருத்து உடன்பாடானது என்பது போலவே, அப்பெண் ஒரு பௌத்த மதத்தைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். இந்த அனுமானத்தைப் பேராசிரியர் கண்ணன் அவர்களுடன் தொலைப்பேசியில் பேசும்போது குறிப்பிட்டேன். அவரும் அதைப் பற்றின குறிப்புகளை சேர்ப்பதாகச் சொன்னார். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் பெரும் பாய்ச்சல்கள் நிகழும்.

இந்தக் கருத்தை நான் உறுதியாக சொல்லக் காரணம் இருக்கிறது. பண்டைய இந்தியாவில் கடல்தாண்டும் வழக்கம் பார்ப்பனர்கள், சமணர்கள் மற்றும் பெண்களுக்குக் கிடையாது. அதை முதன்முதலில் உடைத்தது பௌத்தம். புத்தர் தமது போதனைகளைக் கொண்டுபோய் சேர்க்க நிலவும் தடைகள் அத்தனையும் உடைத்தார். பெண்கள் - ஆண்கள் என்கிற வேறுபாடுகளின்றி பௌத்த பிக்குகளும் பிக்குணிகளும் அவரது போதனைகளைத் தூர நாடுகளுக்குக் கொண்டு போனார்கள்.

அப்படிப் போன பௌத்த பெண் துறவிகளில் மிக முக்கியமானவர்கள் அசோகரின் மகள் சங்கமித்திரையையும், தமிழகத்தின் மணிமேகலையையும் சிறந்த சான்றுகளாகக் கொள்ள முடியும். அதே நேரத்தில் பௌத்தத்தின் ஒரு பிரிவில் கடவுளாகக் கருதப்படும் அவலோகிதர் மற்றும் அவரது மனைவி தாராதேவி இருவரின் இருப்பிடமும் ”போட்டகலா” என்று கீழை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ”போட்டகலா” என்பதை ”பொதிகைமலை” என்பதை அண்மைய ஜப்பான் தமிழ் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தென்கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் தழைத்தோங்கும் பகுதிகளில் தாராதேவி என்னும் கொன்னிமாவின் சிலைகளைக் காணமுடியும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது கொரியாவிற்குப் போன ஹே ஹிவாங் ஓக் என்னும் தமிழ்ப்பெண் ஏன் ஒரு பிக்குணியாக அல்லது பௌத்த அனகாரிக் பெண்ணாக இருக்கக்கூடாது? அவர் காவிநிற பாய்மரக் கப்பலில் வந்திறங்கினார் என்பதில் பாவிக்கப்படும் நிறமான காவி, பௌத்தத்தின் அடிப்படைக் குறியீடு. அதே போல ஜப்பானிய மொழி வரிவடிவத்தைக் குறிக்கப் பயன்படும் ‘காஞ்சி” என்பது காவியையே குறிக்கும். அதனால்தான் தமிழகத்தின் காஞ்சிவரத்திற்கு அப்பெயர். காயா என வரும் பெயர் தமிழகத்தின் காயலைக் குறிக்கலாம். மேலும், கயா என வரும் பெயர் புத்தர் ஞானம் அடைந்த இடமான ‘கயை” எனத் தமிழில் வழங்கும் கயாவேதான். தற்போது அது புத்தகயா என்றே அழைக்கப்படுகிறது.

எனவே இந்தத் தொடர்புகள் எதேச்சையானதல்ல. அது நீண்டகாலத் தொடர்பின் பதிவுகளே. கொரியாவின் கிம் வம்சம் தமிழகத்திலிருந்து சென்ற அந்த அனகாரிக் பௌத்த பெண்ணால் உருவாக்கப்பட்டது என்று நான் நம்பக் காரணம், பௌத்தத்தில். அனகாரிக்குகள் திருமணம் செய்துகொள்ள தடையேதும் இல்லை என்பதுதான். அனகாரிக் என்னும் பௌத்த நிலை திருமண உறவினை பேணிக்கொண்டே தமது சமயப் பணியினையும் தொடரலாம் என்பதே. அதைப் பௌத்தம் அனுமதிக்கிறது. அதனால்தான் தென்கிழக்காசிய நாடுகள் முழுமைக்கும் பௌத்தம் வேகமாகப் பரவியது.

எனவே, கிம் வம்சத்தின் தொடக்கம் ஒரு தமிழ்ப் பெண்ணால்தான் உருவானது என்று கொரியர்கள் நம்பும் தொன்மம் என்பது ஒரு வரலாற்று உண்மைதான். இந்த உண்மை தமிழகத்தில் நிலை நிறுத்தப்படுமானால், இந்தியாவை மையப்படுத்தி கிழக்கு திசை நோக்கும் வரலாற்றின் திட்டிவாசலாக தமிழகமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும், இந்நூல் குறிப்பிடும் மற்றோர் செய்தி, கொரிய மொழியின் வரி வடிவத்தினையும் அதன் அடிப்படை இலக்கணக் கட்டமைப்பினையும் தமிழ்ப் பெண்ணால் வழங்கப்பட்டது என்பதுதான். இந்தச் சரியானப் பார்வை நிரூபிக்கக் கூடியதே. ஏனெனில் தமிழகத்தில் இருந்த பௌத்த பிக்குகள் பல தமிழ் இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும் எழுதியுள்ளனர். அவர்கள் போய் சேர்ந்த நாடுகளில் அந்தந்த மக்கள் பேசிய மொழியினைக் கற்று, அதற்கான வரிவடிவங்களை உருவாக்கி அதன் மூலம் புத்தரின் கருத்துக்களை நிலைப்பெறச் செய்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே கொரிய மொழி மட்டுமல்ல, பௌத்த தழைத்திருக்கும் நாடுகளின் மொழிக்குரிய வரிவடிவத்தை அவர்கள் உருவாக்கினார்கள். எனவே தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் துணைக்கண்டத்து மக்களும் பெருமைப் படக்கூடிய ஆய்வு முடிபுகள் இவை.

எனவே, முனைவர் நா.கண்ணன் அவர்களின் இந்த நூல் தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைக்கு அணி சேர்க்கும் என் நம்புகிறேன். இந்த நூல் கையாளும் கருத்தின் மீது தொடர்ந்து கவனத்தினைக் குவித்து இழந்த தமது பெருமையினை மீட்டுக்கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன்.
________________________________________________________________________
தொடர்பு: ஜா. கௌதம சன்னா (writersannah@gmail.com)Wednesday, July 11, 2018

திருப்பட்டூர் அய்யனார் கோயில்

——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.முன்னுரை:
அண்மையில், திருச்சி அருகில் அமைந்துள்ள சிறுகனூரில் இருக்கும் ஸ்ரீஇராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் நடந்த கல்வெட்டியல் பயிற்சி நிகழ்வுக்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. ச.பாபு. கல்லூரி உதவிப்பேராசிரியர். தஞ்சைப்பல்கலை வழி தொல்லியல்-கல்வெட்டியல் படித்தவர். முதல் நாள் கல்வெட்டு எழுத்துகள் கற்பித்தலும், அடுத்த நாள், கல்வெட்டு எழுத்துகளை நேரடியாகக் கண்டு படித்தல் முயற்சியும் நடந்தன. சிறுகனூருக்கு அருகிலுள்ள திருப்பட்டூர் அய்யனார் கோயில் கல்வெட்டு எழுத்துகளே நேரடிப் படித்தலுக்குக் களம் அமைத்தன. அவ்வமயம், திருப்பட்டூரில் உள்ள பிற கோயில்களையும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. திருச்சிப்பகுதியில் அமைந்திருக்கும் தொல்லியல்-வரலாறு தொடர்பான இடங்களைப் பார்க்க இதுவே முதல் வாய்ப்பாகவும் இருந்தது. அதன் பகிர்வு இங்கே.

அய்யனார் கோயிலின் முன்புறத்தோற்றம்


திருப்பட்டூர்:
சிறுகனூரிலிருந்து நான்கு கல் (கி.மீ.) தொலைவில் இருக்கும் ஊர் திருப்பட்டூர். இங்கு, பிரம்மபுரீசுவரர் கோயில், அரங்கேற்ற அய்யனார் கோயில், வரதராசப்பெருமாள் கோயில் என்னும் விண்ணகரம், காசி விசுவநாதர் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. அய்யனார் கோயிலில் கல்வெட்டுப்படித்தல் நடைபெற்றதெனினும், முதலில் சென்றுபார்த்தது பிரம்மபுரீசுவரர் கோயிலே. அன்று, கோயிலில் மக்களின் கூட்டமிகுதி காரணமாக வரிசையில் நின்று இறைவனைக் கண்டு வெளிவர மட்டுமே இயன்றது. கோயிலின் கட்டிடக்கலைக்கூறுகளையோ, சிற்பக்கலைக்கூறுகளையோ கண்டு ஒளிப்படம் எடுக்க இயலவில்லை. கோயிலில் கல்வெட்டுகளும் காணப்படவில்லை. பிரம்மனுக்குத் தனிச் சன்னதி என்னும் சிறப்பைக்கொண்டுள்ள ஒரு கோவில்.

திருப்பட்டூர்-அய்யனார் கோயில்:
கல்வெட்டியல் பயிற்சி வகுப்பினை முடித்துக் கல்வெட்டுகளை நேரில் பார்த்துப் படித்தலுக்குத் தெரிந்தெடுத்த இடம் சிறுகனூருக்கு அருகிலேயே இருந்த திருப்பட்டூர் அய்யனார் கோயிலாக அமைந்தது. கோயிலைப் பார்த்ததும் ஒரு வியப்பு. அய்யனார் கோயில் என்னும் பெயரில் ஒரு பெரிய கற்றளியைப் பார்ப்பது இதுவே முதன்முறை. மூன்று நிலைக் கோபுரம். அதையொட்டிச் சுற்றுச் சுவரோடு கூடிய ஒரு தனிக்கோயில். உள்ளே நுழைந்ததும், சிவன் கோயில்களில் நந்தி மண்டபம் இருப்பதுபோல, ஒரு மண்டபம். அதில், ஒரு யானைச் சிற்பம். அழகான சிற்பம். நுண்மையான செதுக்கல் வேலைப்பாடுகள் காணப்படவில்லை. எனினும், உருண்டு திரண்டு மொழுக்கென்று வடிக்கப்பட்ட அழகான சிற்பம். முன்புறத்தோற்றத்தில், உருண்ட தலைப்பகுதி. அதில் மிகுந்த புடைப்பின்றி  ஒரு நெற்றிப்பட்டம் காணப்பட்டது. கண்கள் இருக்கும் பகுதியில், கண்கள் நன்கு செதுக்கப்படவில்லை. யானையின் செவிகள் நன்கு தெளிவாயுள்ளன. வாய்ப்பகுதியில் தொங்கு சதையும், வாயிலிலிருந்து முன்புறமாக வெளிப்படும் தந்தங்களும் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தந்தங்கள் சிறியவை. எனவே, பக்கவாட்டுத் தோற்றத்தில், தந்தங்கள் துதிக்கையின் வடிவப்பரப்பைத் தாண்டாதவாறு காணப்டுகின்றன. யானையின் துதிக்கை, தரையைத் தொடுமளவு உள்ளது. மற்ற கோயில்களின் அமைப்பைப் போல், வாகன மண்டபத்தின் நேர் எதிரே நுழைவாயில் இல்லை. மாறாக, அர்த்தமண்டபத்தின் சுவர்ப்பகுதியே காணப்பட்டது. அதில், கோட்டம் (கோஷ்டம்) என்னும் கோயிலின் கட்டிடக் கூறும், கோட்டத்தின் நடுவில் ஒரு பலகணியும் உள்ளன. இப்பலகணியின் வழியே மூலவரைக் காணுகின்ற வகையில் ஓர் அமைப்பு.   யானையின் முகம் பலகணி வழியாக அய்யனாரைப் பார்த்துக்கொண்டிருக்கும் அமைப்பு. கோயிலின் அதிட்டானப் பகுதி எளிமையானதொன்று. சுற்றுப்பாதையின் தரைப்பகுதியில் சற்றே மறைந்து கீழிறங்கிய நிலையில் அதிட்டானத்தின் கண்டப்பகுதி தெரிந்தது. அடுத்து மேலே, முப்பட்டைக் குமுதமும்,  கண்டம், பட்டிகைப் பகுதிகளும் உள்ளன. ஜகதிப்பகுதி தரையின் கீழ் புதைந்துபோயுள்ளது. சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே, தூண்களும், கோட்டங்களும். கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. எளிமையான வேலைப்பாடு.  கூரைப்பகுதியில், கர்ண கூடுகளும் அவற்றுக்கு மேலே யாளி வரிசை போன்று சதுரக்கற்களின் வரிசையும் காணப்படுகின்றன.

கோயிலின் உள்புறத்தோற்றம் 

யானை வாகனம்


பலகணி

கோட்டம்-அதிட்டானம்-எளிய அமைப்புடன்


கோயில் மூலவர் - அரங்கேற்ற அய்யனார்:
கோயிலில் மூலவராக, அமர்ந்த நிலையில் அய்யனாரும் அவரது இரு புறங்களில் அவரது இரு மனைவியரான பூரணையும், புஷ்கலையும். கோயில் மூலவரான அய்யனார் “அரங்கேற்ற அய்யனார்”  என்னும் பெயர் கொண்டு விளங்குகிறார். இப்பெயர்க் காரணம் பற்றி அறியவரும் செய்திகளாவன:

சுந்தரருடன் திருக்கயிலாயம் சென்ற சேரமான் பெருமாள் நாயனார், திருக்கயிலாய ஞான உலா என்னும் சிற்றிலக்கிய நூலை இயற்றினார்.  இந்த நூலை, ஈசன், மக்கள் அறியும்படி திருப்பட்டூரில் பிறந்த சாத்தன் அய்யனார் என்பவரைக்கொண்டு திருப்பட்டூரில் அரங்கேறச் செய்தார் என்று கருதப்படுகிறது.  இந்த அய்யனாரே அரங்கேற்ற அய்யனார் என்னும் பெயரில் இவ்வூரில் எழுந்தருளியுள்ளார்.

கோயில் கல்வெட்டுகள்:
கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு பகுதிகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரண்டாம் இராசேந்திரன், குலோத்துங்கன் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்குள்ளனவென்று குறிப்புகள் உள்ளன. வழக்கமாக நான் கையாளுகின்ற ஒரு வழியில், மைதா மாவைக் கல்வெட்டு எழுத்துகள் மீது பூசி, ஒரு சில பகுதிகளைப் பயிற்சி மாணவர்க்குப் படித்துக்காட்டினேன். ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டேன்.  அவ்வாறு எடுத்த ஒளிப்படங்களைக் கொண்டு, கல்வெட்டுகளின் பகுதிகளைப் படித்ததில் தெரியவரும் செய்திகள் கீழே:

கல்வெட்டு-1:

கல்வெட்டுப் பாடம்-1
1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள்
2 தேவற்கு யாண்டு 4-வது (தநு) நாயற்று
3 து தசமியும் செவ்வாக்கிழமையும் பெற்[ற]
4 ட கரை இரா[ச]ரா[ச] வளநாட்டுத் திருப்பிட[வூர்]
5 (கா)ன …… சபையும் திருப்பி[டவூர்] ……பிள்……
6 பந் தெற்றி உடைய நாயனார் கோயிற்
7 வரர் ஸ்ரீ மாகேச்0வ[ர] கங்காணி செய்வா
8 [கோ]யிற் கணக்கனுக்கு இந்த கோயிற்காணி
9 [பி]ராமணன் காச்0யபன் மூவாயிரத்தொரு
10 [ம]ணவாள பட்டனேன் வெட்டி
11 [நா]யனார் திருவிளக்கில் செலவிலி சு(ற்ற)……
12 டி விட்ட புறையோம்பியில் மன்றாடி
13 வெம்பனை நான்குடி விற்று போ…..னில் இவன் ஆட்டை
14 க்கு சூலநாழியா[ல்] நெய் நாழி உரியும் நான் கைக்கொண்டு
15 இவ்வாண்டு முதல் குன்றமெறிந்த பெருமாள் கோயிலிலே

கல்வெட்டுச் செய்திகள்:
மேலே காட்டிய கல்வெட்டு வரிகளில் உள்ள ”திரிபுவனச் சக்கரவத்திகள்” என்னும் தொடரிலிருந்து, இக்கல்வெட்டு குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு எனக் கருதலாம். ஆனால் மூன்று குலோத்துங்கர்கள் இருப்பதால் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற அரசன் எந்தக் குலோத்துங்கன் என்பது தெளிவில்லை. ”யாண்டு 4-வது”   என்னும் தொடர் அரசனின் நான்காம் ஆட்சியாண்டைக் குறிப்பது. எனவே, கல்வெட்டின் காலம் கி.பி.  1074, 1137, 1182 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஒன்றாகலாம். எழுத்தமைதியும் 12-ஆம் நூற்றாண்டு எனக்கருதுமாறுள்ளது. தமிழில் உள்ள அறுபது ஆண்டுகளைக் கொண்ட வட்டத்தின் ஆண்டுப்பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை. ஆனால், தமிழ் மாதம், “தநு நா(ஞா)யறு”  என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. தனு ஞாயிறு, மார்கழி மாதத்தைக் குறிக்கும். சோழர் காலக் கல்வெட்டுகளில், மேழம் தொடங்கி மீனம் வரையுள்ள பன்னிரண்டு இராசிப் பெயர்களே சித்திரை தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதங்களைக் குறித்தன.  திருப்பட்டூர், சோழர் காலத்தில்  இராசராசவளநாட்டில் இருந்துள்ளது என்றும், திருப்பட்டூரின் பழம்பெயர் திருப்பிடவூர் என்பதும் கல்வெட்டு வாயிலாக நாம் அறியலாகும். தெற்றி உடைய நாயனார் கோயில் என்பது இந்த அய்யனார் கோயிலைக் குறிப்பதாகலாம். கோயிலுக்கு விளக்கெரிக்கக் கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த நிவந்தத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்ற மணவாள பட்டன் என்பான் மன்றாடி (இடையன்) ஒருவனிடமிருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை நாழி நெய் ஓர் ஆட்டைக்கு (ஆண்டுக்கு)ப் பெற்று விளக்கெரிக்கிறான். நெய்யை அளக்கச் சூல நாழி என்னும் அளவுக்கருவி பயன்பட்டது. இந்த மணவாள பட்டன் கோயிற் காணி (கோயிலில் பூசை உரிமை) உடையவன்.  இவனுடைய கோத்திரம் காச்0யப என்பதாகும். இவனுடைய பெயரில் முன்னொட்டாக வருகின்ற “மூவாயிரத்தொரு” என்பது பிராமணக் குடிக்குழுவினர் பெயர்களுள் ஒன்றைக்குறிக்கும்.  நாலாயிரவன், எண்ணாயிரவன் எனப் பிராமணப்  குடிப்பெயர்கள் பல, கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசேந்திர சோழன் கங்கைக் கரையிலிருந்து சைவ ஆச்சாரியர்களைக் கொணர்ந்து தன் தலைநகரில் குடியேற்றினான். பல்லவர்களும் நர்மதைப் பகுதியிலிருந்து வேதம் வல்லாரைத் தமிழகத்தில் குடியேறச் செய்தனர். அஷ்ட ஸஹஸ்ர, பிருஹத் சரண, வடம ஆகிய பெயர்கள், இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழகத்தில் குடிபுகுந்த பிராமணரைக் குறிப்பனவே. இந்த இடத்தில், உ.வே.சா. அவர்களின் கூற்று நினைவுக்கு வருகிறது. ”என் சரித்திரம்” என்னும் தம் நூலில், “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ரம் என்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப்பிரிவைச் சேர்ந்தவன் நான்.  அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ’எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்கவேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்ட ஸகஸ்ரம் என்ற பெயரே அவர்களுக்கு நிலைத்துவிட்டது” என்று குறிப்பிடுகிறார். சோழர்கால எண்ணாயிரவர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் உ.வே.சா. காலத்திலும் தொடர்ந்து குடிப்பெயரைக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   விளக்கெரிக்கும் இந்நிவந்தத்தை நிறைவேற்றும் செய்தியை மணவாள பட்டன், கோயிலின் நிருவாகத்தாரான ஸ்ரீகார்யம், ஸ்ரீமாகேசுவர கங்காணி, கோயில் கணக்கை எழுதுகின்ற கோயிற்கணக்கன் ஆகியோருக்குத் தெரிவித்துப் பதிவு செய்வதைக் கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டில் வருகின்ற “குன்றமெறிந்த பெருமாள் கோயில்”  எந்தக் கோயிலைக் குறிக்கிறது என்பது தெளிவாகவில்லை.

கல்வெட்டு-2:

கல்வெட்டுப் பாடம்-2
1 ஸ்ரீராஜராஜதேவந் தலை உடை
2 பூர்வபக்ஷ …….. செம்பியதரை[யன்]
3 பெற்ற ரேவதி நாள் …… த்துணைப்பெரு[மாள்]
4 திருப்பிடவூர் நாட்டு தே….. டையான் திருச்சி..
5 பிள்ளையார் (திருவேம்)
6 ஸ்ரீகாரியம் செய்[வார்]
7 செய்வார் தேவகன்மி …
8 உடைய சிவப்பி[ராமணன்]
9 மூவாயிரத்தொருவன் நாயகனான ம..
10 வெட்டினபடியாவது இந்நாய[னார்]
11 சுற்றடை  நெ(யி)ல் நான்கு
12 மன்றாடி பணகுடையான்

கல்வெட்டுச் செய்திகள்:
இக்கல்வெட்டும் மேலே கண்ட முதற்கல்வெட்டுப் போன்றதொன்று எனலாம். கோயிலில் பணி செய்கின்ற தேவகன்மியரில் ஒருவனான, கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் மூவாயிரத்தொருவன் நாயகன், நிவந்தம் ஒன்றை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கல்வெட்டிக்கொடுக்கிறான். நிவந்தம் விளக்கெரிப்பதே ஆகலாம்; ஏனெனில், மன்றாடி பணகுடையான் என்பவன் குறிக்கப்பெறுகிறான். கல்வெட்டில் வருகின்ற ஸ்ரீராஜராஜ தேவந் என்னும் பெயர், இரண்டாம் இராசராசனை அல்லது மூன்றாம் இராசராசனைக் குறிக்கலாம். இவர்களின் ஆட்சியாண்டுகள் முறையே  கி.பி. 1146-1173, 1178-1218. எனவே, கல்வெட்டின் காலம் கி.பி. 12-13 –ஆம் நூற்றாண்டாகலாம்.  திருப்பிடவூர், ஒரு நாட்டுப்பிரிவாகவும் இருந்துள்ளது. செம்பியதரையன் என்பவன் நிவந்தம் அளித்தவன் ஆகலாம். பெயரைக் கொண்டு, இவன் ஓர் உயர் அரசு அதிகாரி எனக்கொள்ளலாம்.

கல்வெட்டு-3:

கல்வெட்டுப் பாடம்-3
1 தலை உடையான் பாமான தேவர் எழுத்து இவை ஆண்மகன் அரசூருடையான் சுந்தரபாண்(டியன் எழுத்து)
2 செம்பியதரையன் எழுத்து இவை மேலை சூருடையான் சேரமான் தோழன் எழுத்து இவை
3 துணைப்பெருமாள் எழுத்து இவை மேலை சூருடையான் சமைய மந்திரி எழுத்து இவை மேலை
4 திருச்சிற்றம்பல வேளான் எழுத்து இ[வை] மருத்தூருடையான் நம்புசெய்வான் எழுத்து
5 இவை எதிர்மலை உடையான் வன்னாவுடையான் இவை ஆண்ம[கன்]சூருடையான்
6 ப்பெருமாள் எழுத்து இவை வந்தலை உடையான் வீரராசேந்திர சோழ வேளான் எழுத்து
7 [இ]வை நல்லூருடையான் தென்னகோன் எழுத்து இவை (ச0டையான் ஆதன்ம ஆழகியான்
8 இவை சிறுவளைப்பூருடையான் ஆவத்துக்காத்தான் எழுத்து இவை குளகானத்துடையான்
9 வல்லவரையன் எழுத்து …உடையான் அஞ்சாதபெருமாள் எழுத்து
10 இவை சாத்தனுடையான் பிச்சாண்டான் [எழுத்து]
11 இவை சாத்தனுடையான் சம்பந்தப்பெருமாள் [எழுத்து]
12 விசையரையன் எழுத்து  இவை உம்பளக்கானத்துடை[யான்  எழுத்து]
13 இவை சாத்தனுடையான் தே(வ)ப்பெ[ருமாள்] எழுத்து இவை மருதத்[தூர்]
14 குளகானத்துடை[யான் எழுத்து]
15 பழனதியரையர் எழுத்து
16 நம்பு செய்வான் எழுத்து ஆதன்ம அழகியான்…

கல்வெட்டுச் செய்திகள்:
கல்வெட்டுகளின் இறுதியில், நிவந்தங்களின் விளக்கமான குறிப்புகளுக்குப் பின்னர், சான்றொப்பம் இடுவோரின் பெயர்கள் பட்டியலாகத் தரப்படும். பட்டியலில் உள்ள பெயர்கள் மிகுதியாகக் காணப்படின் நிவந்தங்கள் பெரிய அளவினையுடையதாகவும், பெரிய அதிகாரிகளின் தொடர்பு கொண்டதாகவும் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு கல்வெட்டின் பகுதியே இது. பலரின் பெயர்களிலிருந்து பெரிய அதிகாரிகள் குறிக்கப்பெறுவதைக் காண்கிறோம். தவிர, பல ஊர்ப்பெயர்களையும் காண்கிறோம். அரசூருடையான், நல்லூருடையான், வந்தலை உடையான், சிறுவளைப்பூருடையான் என்பன ஊர்ப்பெயர் குறித்த ஆள்களின் பெயர்கள். சிறப்பான பகுதி என்னவெனில், ”சாத்தனுடையான்”  என்னும் தொடர் மூன்று பெயர்களில் காணப்படுகிறது. இத்தொடர், ஊர்ப்பெயரைக் குறிப்பதாய்க் காணப்பெறவில்லை. சாத்தன் என்னும் அய்யனாருடன் உள்ள ஏதோவொரு தொடர்பைக் குறிக்கிறது எனலாம். இது ஆய்வுக்குரியது.

கல்வெட்டு-4:கல்வெட்டுப் பாடம்-4
1 செம்பாதியும் இந்த நிலம் அறுவேலியும் விற்றுக் குடுத்துக்கொள்வதான
எம்மிலிசைந்த விலைப்பொருள் ளன்றாடு நற்காசு நூறு இக்காசு நூறும்
ஆவணக்களியே கைச்செல(வ)றக்கொண்டு விடக்கடவோமாகவும்
2 லியுந் நீர்க்கோ(வை)யுட்பட இக்குளமிரண்டும் நத்தத்திற் செம்பாதியும்
விலைக்கற விற்றுப் பொருளறக்கொண்டு விற்று விலையாவணஞ் செய்து
குடுத்தோம் இப்போகழியுடையார்

கல்வெட்டுச் செய்திகள்:
கோயிலுக்கு நிலம் கொடையாக அளிக்கப்படும் செய்தியைச் சொல்லும் ஒரு கல்வெட்டுப் பகுதி. ஊர்ச்சபையினர் நிலத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கோயிலுக்களிப்பதான ஒரு நடைமுறை இங்கு குறிப்பிடப்பெறுகிறது. விலைப் பொருள் நூறு காசுகள் என்னும் இசைவு ஏற்படுகிறது. இக்காசு, இந்நிகழ்வு நடைபெறும் காலத்தே புழக்கத்தில் இருக்கும் காசு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டி “அன்றாடு நற்காசு”  என்னும் தொடர் பயன்படுத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் “IN VOGUE“  என்னும் தொடருக்கு இணையானதாகக் கொள்ளலாம். நிகழ்வின்போது ஆட்சியில் இருக்கும் அரசனைக் குறிக்கவும் இதுபோன்ற ஒரு தொடர் கல்வெட்டுகளில் பயில்வதைக் காணலாம். அத்தொடராவது : “அன்றாள் கோ”.   அதாவது, ஆட்சியில் இருக்கும் அரசன். இது போன்ற நிலவிற்பனை பற்றிய கல்வெட்டுகளில் பயிலும் “ஆவணம்” என்னும் சொல் விலை என்னும் பொருளுடையது. ஆவணக்களி என்பது ஆவணக்களமாகும்; அதாவது ஊரறிய விற்பனை நடைபெறுமிடம். விலையாவணம் என்பது, விற்றதற்கும், விலைப்பொருள் செலுத்தப்பட்டதற்கும் கொடுத்த எழுத்துச் சான்றைக் குறிக்கும். விற்கப்படும் நிலம் ஆறு வேலி அளவுடையது. இரு குளங்களும் நத்தத்தில் பாதியும் இந்த நிலத்தில் அடங்கும். நத்தம் என்பது குடியிருப்புக்கான நிலம். செம்பாதி என்னும் சொல்லாட்சி கருதத்தக்கது. சரி பாதி என்னும் பொருளுடைய இச்சொல்லை மதுரைப்பகுதியில் ஆங்கில வாடை அறியாதோர் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். கல்வெட்டில் காணப்பெறும் ‘போகழியுடையார்’ என்னும் தொடர் குறிப்பது யாரை எனப் புலப்படவில்லை.

கல்வெட்டு-5:கல்வெட்டுப் பாடம்-5
1 பிலவங்க வருஷம் மாசி …. வார்த்தறை புண்ணிய காலத்து கோட்டை
  வங்கிஷத்து சிக்கண நாயக்கர் குமாரர் கெம்பமாயண நாயக்கர் திருப்பிட ஊர்
  மஹாசெனங்களில்
2 நானாகோத்திரத்தில் பேர் விபரத்தில் குடுத்த பட்டையம் நாலுக்கு மேற்படி
  ஊர் நஞ்செய் நிலத்தில் கீழை மதகுப் பாச்சலில் சேத்த இழுவைப்படியால் குழி
  ……. இதுவும் புஞ்செ[ய்] குழி……. இந்த
3 நஞ்செ[ய்] குழி ரெண்டாயிரமும் இயக்கு இட்டு அளந்து நிறுத்தின தாழை 
  ஓடைக்குக் கிழக்கு நாதத்தோணி களருக்கு வடக்குக் கீழை மேட்டு
  வாய்க்காலுக்கு மேற்கு ஏரிகரைக்குத் தெற்கு நான்கு எல்லைக்கு உட்பட்ட
  நஞ்செய்
4 குழி இரண்டாயிரமும் புஞ்செய் குழி இரண்டாயிரமும் முன் நடந்து வருகிற
  தேவதானம் திருவிடை ஆட்டம் பட்டவிறுத்தி பூதானம் நஞ்செய் புஞ்செய்
  இறையிலியும் அனுப்பித்துக் கொள்ளவும் இத்தன்மத்துக்கு அகிதம் பண்ணி
5 னவன் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக்
  கடவன்
6 நஞ்செய்க்கு அளவுகோல் அடி 27 புஞ்செய்க்கு அளவுகோல் அடி 30

கல்வெட்டுச் செய்திகள்:
இக்கல்வெட்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டின் எழுத்தமைதியும், சொல் நடையும் சோழர் காலக் கல்வெட்டுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதைக் காணலாம். விசயநகரப் பேரரசின் ஆட்சியும், அதைத் தொடர்ந்த நாயக்கர் ஆட்சியும் தெலுங்கர்களால் நடத்தப்பெற்றதன் விளைவாகத் தமிழ்மொழி சீர்குலைவுற்றது என்பதை மறுக்கவியலாது. 

சோழர் காலக் கல்வெட்டில் பயின்ற சில சொற்கள் இக்கல்வெட்டில் (நாயக்கர் காலத்தில்) மாற்றம் பெற்றதைக் கீழே காண்க:
யாண்டு, ஆட்டை - வருஷம்
ஊரோம் – மஹாசெனங்கள்
கல்வெட்டு, நிலக்கொடையைக் குறிக்கிறது. நன்செய் நிலம் இரண்டாயிரம் குழி; புன்செய் நிலம் இரண்டாயிரம் குழி. நிலத்துக்கு எல்லைகள் குறிப்பிடப்படுகின்றன. திருப்பட்டுர், திருப்பிடவூர் என்றே நாயக்கர் காலத்திலும் வழங்கிற்று. கல்வெட்டின் காலம் கி.பி.16-17 நூற்றாண்டு எனலாம். தேவதானம், சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும்; திருவிடையாட்டம், விண்ணகரத்துக்கு (பெருமாள் கோயிலுக்கு) அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இவ்விரண்டு வழக்குச் சொற்களும் சோழர் காலந்தொட்டு இருப்பவை. ஆனால், பட்ட விருத்தி என்பது விசயநகரர்/நாயக்கர் காலத்தில் புகுந்தது. வேதம் பயில்வோருக்குக் கொடுத்த கொடை நிலம்.  இந்த நிலக்கொடைக்குக் கெடுதி செய்வோர் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர் என்னும் கருத்து விசயநகரர்/நாயக்கர் காலக் கல்வெட்டுகளில் காணப்படுவது. கல்வெட்டின் இறுதியில், நிலத்தை அளக்கப் பயன்பட்ட அளவுகோலைப்பற்றிய குறிப்பு உள்ளது. நன்செய் நிலத்துக்கு 27 அடி அளவுகோலும், புன்செய் நிலத்துக்கு 30 அடி அளவுகோலும் பயன்பட்டன. சோழர் காலத்தில், 12, 16 அடிக் கோல்கள் பயன்பாட்டில் இருந்தன.  வங்கிஷம் என்பது வம்சம் என்பதன் திரிபு. அகிதம் என்பது தீமையைக் குறிக்கும்.

கல்வெட்டு-6:
கல்வெட்டு-6: நிலைக்கால் -1 
கல்வெட்டுப் பாடம்-6-1 
(நுழைவாயில் கோபுர நிலைக்காலில் காணப்படுவது)
1 ஸ்வஸ்தி
2 ஸ்ரீ இந்த
3 திருக்கோ
4 புரம் எ(டு)
5 ப்பித்தா
6 ந் தெற்றி
7 ஆதித்த
8 னா ந
9      க
10      த்த
11 ப்பிச்ச
12 ன் இது
13 திரு (ஆம்)
14 பபாடி
15 நாட்டா
16 ன் இ
17 த்தந்ம
18 ம் ரக்ஷி
19 த்தாந் உ
20 டைய
21 ஸ்ரீபாத
22 ம் எந்த
23 லை மே
24 லது ||-

கல்வெட்டுச் செய்திகள்:
கோயிலின் வாயிற்புறக்கோபுரத்தின் நிலைக்கால்கள் இரண்டிலும் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் முதல் கல்வெட்டு மேலே குறித்தது. கோபுரத்தை எடுப்பித்தவன் தெற்றி ஆதித்தன் என்னும் …..பிச்சன் ஆவான். தெற்றி ஆதித்தன் என்பது அவனின் இயற்பெயர். ”தெற்றி” என்னும் பெயர் முதல் கல்வெட்டில் காணப்பெறும் இறைவர் பெயருடன் தொடர்புடையது எனலாம். அவனுடைய சிறப்புப் பெயர் தெளிவாகப் புலப்படவில்லை. பிச்சன் என்று முடிகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி, இதன் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டாகலாம் எனக்கருதும் வண்ணம் உள்ளது. ஆம்பபாடி என்னும் ஒரு நாட்டுப்பிரிவும் குறிக்கப்படுகிறது.

கல்வெட்டு-6: நிலைக்கால் -2


கல்வெட்டுப் பாடம்-6-2 
(நுழைவாயில் கோபுர நிலைக்காலில் காணப்படுவது)
1  ஸ்வஸ்தி
2  ஸ்ரீ அரை
3  யன் ராஜ
4  ராஜனான
5  மதுராந்த
6  க இளங்
7  கோவே
8  ளான் |||-

கல்வெட்டுச் செய்திகள்:
இரண்டாம் நிலைக்காலில் உள்ள இக்கல்வெட்டு,  அரையன் ராஜராஜனான மதுராந்தக இளங்கோ வேளான் என்னும் பெயரை மட்டும் கொண்டுள்ளது. நுழைவாயிற் கோபுரம் எடுப்பித்ததில் இவன் பங்கு என்ன என்னும் குறிப்பு கல்வெட்டில் இல்லை.  இப்பெயரில், அரையன் ராஜராஜன் என்பது அவனது இயற்பெயர். மதுராந்தக இளங்கோ வேளான் என்பது சிறப்புப் பெயர். தெற்றி ஆதித்தன், அரையன் ராஜராஜன் ஆகிய இருவருமே அரசு அதிகாரிகளாய் இருந்திருக்க வேண்டும்.

யானைவாகனச் சிற்பமண்டபத்தின் தூண்களிலும், எதிரில் உள்ள பலகணியின் இரு புறங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தெளிவாயில்லை.

முடிவுரை:
கோயிலின் கல்வெட்டுகள் முழுவதையும் படம் எடுத்தோ, படியெடுத்தோ மீண்டும் படித்த பின்னரே, கோயிலைப்பற்றியும், இறைவராக எழுந்தருளியுள்ள அய்யனார் பற்றியும் மேலும் பல செய்திகள் புலப்படும். தற்போது படித்த கல்வெட்டுகளில் அய்யனார் பெயர் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுகள் யாவும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.கல்வெட்டுகளை மாணாக்கருக்குப் படித்துக்காட்டிய பின்னர், அவர்களுக்குப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சிகளை முடித்தோம். கல்வெட்டுகளின் எழுத்துகள், கல்வெட்டுப் பாடங்கள், அவற்றின் செய்திகள் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்த நிலையில் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.சிவலிங்கம் அவர்கள் கல்வெட்டுகளின் அருமையை அறிந்து வியந்து மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சிகளின் போது முழுதும் இருந்து மாணாக்கருக்குச் சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.  நிகழ்வுகளில், புத்த பிக்கு மௌரியர் புத்தா அவர்கள் உடன் இருந்தார். இவர், தென் இந்தியாவில் பௌத்தம் பற்றிய தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டு வருபவர். தம் ஆய்வு குறித்த  நூலொன்றினையும் வெளியிட்டுள்ளார். 


___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.