Monday, July 9, 2018

சதுரங்க பட்டினம் – மலை மண்டலப் பெருமாள் கோயில்



 — து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



சதுரங்க பட்டினம் (சட்ராஸ்) பற்றிய தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பதிவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதில், மலைமண்டலப் பெருமாள் கோயில் வாயில் கதவில் உள்ள கல்வெட்டு ஒன்றின் படத்தை வெளியிட்டு அக்கல்வெட்டின் காலம் 1603 என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  கல்வெட்டு, தமிழிலும் கன்னடம் அல்லது தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. தமிழ்ப்பகுதியில், தமிழ் ஆண்டான ரவுத்திரியும், கன்னடப்பகுதியில் சக ஆண்டு 1662  என்றும் தெளிவாகக் காணப்பட்டது. இவ்விரு குறிப்புகளும் கி.பி. 1740 -ஆம் ஆண்டுக்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றன. எனவே, கல்வெட்டின் காலம், சுற்றுலாத்துறைக் குறிப்பில் உள்ளவாறு கி.பி. 1603 அல்ல என்றும் சரியான ஆண்டு கி.பி. 1740 என்றும் அறியலாயிற்று.





தமிழ்ப்பகுதியின் கல்வெட்டுப்பாடம்:
1 (ஸ்ரீமது) சாலிவாகன சகாற்தம் 16 . . 
2 . . செல்லாநின்ற றவுத்திரி வரு. .
3 (தை) மீ தசமி திங்கள் கிழமை
4 (உ)த்திரட்டாதி நக்ஷத்திரம் . . . (சுப)
5 தினத்தில் கோபுர வாசல் மண்டபம்
6 (ஸ்ரீம)ல மண்டல சுபாமி(யா)ர் கிரு(பா)
7 க்ஷத்துனாலே கட்டி முடிஞ்சுது

தெலுங்கு/கன்னடப்பகுதி:
8 ஸ்வஸ்திஸ்ரீ விஜயோத்புதய சாலிவா(ஹன)
9 (ச)காப்தம் 1662 ஸம்வத்ஸரா. . . .
10 . . . . . . . .. . . . . . . . . . .
11 . . . . . . . .. . . . . . . . . . .
12 . . ஸ்ரீமலமண்டலஸ்வாமி க்ருபாகடா(க்ஷம்)
13 . . . மண்டபம் . . . . . . . . . .

குறிப்பு:  
17-ஆம் நூற்றாண்டில் சதுரங்கப்பட்டினத்தில் வணிகத்துக்காகக் குடியேறிய டச்சுக்காரர்கள் கோட்டை ஒன்றைக்கட்டினார்கள் என்று அறிகிறோம். கி.பி. 1818-இல் ஆங்கிலேயர் இக்கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார்கள். மேலும், சட்ராஸ் கோட்டை வளாகத்தில் காணப்படும் கல்லறைகள் கி.பி. 1620 முதல் கி.பி. 1769 வரையிலான காலகட்டத்தில் எழுப்பப்பட்டுள்ளன. எனவே, கி.பி. 1740 – ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சதுரங்கப்பட்டினம் பகுதி டச்சுக்காரர் வசம் இருந்திருப்பது உறுதியாகிறது.  அதே கால கட்டம், நாயக்கர் ஆட்சி அல்லது பாளையப்பட்டு அமைப்பின் இறுதிப்பகுதியாகவும் இருந்திருக்கக் கூடும். ஏனெனில், கி.பி. 1800 வரை பாளையப்பட்டுகள் தமிழகத்தில் இருந்துள்ளன. கல்வெட்டில் “மல மண்டல சுபாமியார் கிருபா…க்ஷத்துனாலே என்பது தெலுங்கு/கன்னடப்பகுதியிலும் ” ஸ்ரீமலமண்டலஸ்வாமி க்ருபாகடா(க்ஷம்)” என்று எழுதப்பட்டுள்ளது. இத்தொடர், இப்பகுதியில் பாளையப்பட்டு அல்லது அதன் தொடர்ச்சியாக வந்த சிறு மண்டலத் தலைவர்களின் ஆளுகை இருந்திருக்கவேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது என்றும்,  அத்தகைய ஒரு மண்டலத் தலைவரான மலை மண்டலத்தலைவரால் இக்கோயிலின் கோபுர வாயில் மண்டபம் கி.பி. 1740 – ஆம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்றும் முதல்கட்ட ஆய்வுப்பார்வையாகத் தோன்றியது. ஆனால், தொல்லியல் அறிஞர்களின் கருத்தைக் கேட்டறிந்தபோது, பாளையப்பட்டு ஆட்சி நிலவிய காலத்தில், மண்டலத்தலைவர் “மகாமண்டலேசுவரர்” என்னும் பெயரால் அழைக்கப்பட்டார் என்றும், இக்கல்வெட்டில் “மலமண்டலசுவாமி கிருபாகடாக்ஷம்’ என்றிருப்பதால் அத்தொடர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளையே குறிக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தனர். திருப்பதிப்பெருமாள், மலையப்பசாமி என்னும் பெயரைக்கொண்டுள்ளார் என்பதையும் கருதவேண்டும். இக்கருத்தின் அடிப்படையில், கோபுர வாசல் மண்டபத்தை ஆட்சியாளர் எவரும் கட்டுவிக்கவில்லை என்றும் இது, பொது மக்கள் பணியாகவே இருக்கவேண்டும் என்றும் அறிகிறோம்.



பார்வை:  https://tamilnadu-favtourism.blogspot.com/2016/10/malai-mandala-perumal-temple.html




___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.



No comments:

Post a Comment